பல்லழகன் – பகுதி 5
திவாகர்

கோம்டி இன்ஸ்பெக்டர் போவதை எரிச்சலுடன் பார்க்கிறாள். கோபம் கூட வருகிறது.
‘இந்த போலீஸ்காரங்களுக்கே இந்த புத்தி போகாதுதான், அவங்களும் செய்ய மாட்டாங்க. யாரவது ஹெல்ப் பண்ண வந்தா அவங்களையும் பயமுறுத்தி வேலை செய்ய விடமாட்டாங்க.’ ‘சரி விடுங்க கோம்டி.. நீங்க எதிர்வீடுதானா? தெரியாம போயிடுச்சு. இல்லே.. நானே இந்த இடத்துக்கு கொஞ்சம் புதுசு மாதிரித்தான். எப்பவாவது வருவேன்.. இந்த வீட்ல எனக்குத் தெரிஞ்சவங்க ரெண்டு பேர்தான். ஒண்ணு எங்க பெரியப்பா.. இன்னொண்ணு இந்த வீட்ல வேலை செய்யற பொன்னம்மா.. தோட்டத்து பக்கம் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன்.. நம்ம ரவி மாதிரி சென்னைல ஃப்ரெண்ட்ஸ்ன்னு யாரும் எனக்கு இங்கே கிடையாது.. எல்லாரும் எங்கம்மா வழியில உறவுக்கார பசங்கதான்.. எங்க அம்மாவோட அக்கா, தங்கை அதான் என் சித்தி பிள்ளை பெரியம்மா பிள்ளைன்னு ரெண்டு பேர் முரளியும் சுந்தரும் இருக்காங்க. அவங்கதான் இன்னிக்குக் காலைல செண்ட்ரல் ஸ்டேஷன் வந்தாங்க. ஆனா பெரியப்பாவுக்கு நெருக்கமான பசங்க.. அதுல எங்க பெரியம்மா பிள்ளை முரளி கொஞ்சம் கூடவே நெருக்கம். ரொம்ப கலங்கிட்டான் அவன். எனக்கே எப்படி அவனை சமாதானப்படுத்தறதுன்னு தெரியலே..’ ‘அதனாலேதான் நான் உங்களை இந்த வீட்டிலே எப்பவுமே கவனிக்கலே.’ ரவியைப் பார்க்கிறாள். ‘நீ எப்படா வந்தே?’ ‘மத்தியானம் வந்து நேரா எங்க வீட்டுக்குப் போனேன்.. அங்க சாந்தியும் நீயும் விஸா கலக்ட் பண்ண அமெரிக்கன் எம்பாஸி போயிருக்காங்கன்னு அம்மா சொன்னாங்க. உடனே இங்கே கிளம்பி வந்துட்டேன். கல்யாண் வீட்டுக்கு இப்போ வரைக்கும் வந்தது இல்லே. உன் வீட்டுக்கு எதிரேதான்னு கல்யாண் வீடுன்னு அம்மாகிட்ட சாந்தி இன்னிக்கு சொன்னதை எனக்குச் சொல்லி அனுப்பினாங்க. ’அது சரி, கல்யாண், உங்ககிட்ட ஒரு கேள்வி.. இவர் கொலைபட்டு விழறச்சே சப்தம் போடலியா? துப்பாக்கி கிடைச்சதுன்னு டி வில சொன்னாங்களாம்.. அப்படினா கை விரல் ரேகை வெச்சு கொலைகாரனைத் தேடலாமே..’ ‘எங்க பெரியப்பா லைசென்ஸ் துப்பாக்கி வெச்சுருக்கார். சைலன்ஸர் துப்பாக்கி. அதை எடுத்துத்தான் அவன் சுட்டுருக்கான். ஆனா அந்த துப்பாக்கில கைரேகைன்னுப் பார்த்தாங்களான்னு இல்லையான்னு இன்னும் தெரிய வரலே.. துப்பாக்கி கூட எங்க பெரியப்பா அவரோட கையிலதான் இருந்ததுன்னும் ஒரு விரல் ட்ரிக்கர்ல மாட்டிக்கிச்சுன்னும் இன்ஸ்பெக்டர் சொல்லறாரு. கொலைங்கிற கோணத்துல இந்த கேஸைப் பார்த்தா கொலைகாரன் அவர் கையிலே வெச்சுட்டு எஸ்கேப் ஆகியிருக்கான்னு சொல்றாரு. இது பொதுவாவே எல்லா கொலைகாரங்க இந்த மாதிரி கொலைசெய்யறச்சே அப்படி விக்டிம் கையில வெச்சுட்டுப் போவாங்கன்னு இன்ஸ்பெக்டர் சொல்றாரு. அதனாலேதான் இது தற்கொலைன்னு ஒரு சந்தேகம் கிளப்பமுடியும்னு.. ஆனா பெரியப்பா ஒண்ணும் கோழையுமில்லே அதுக்கான காரணமும் இல்லே…” “இல்லை இல்லை… நாம எல்லா கோணத்துலயும் பாக்கணும்தான்..” கோமதி அவனை மறுத்தாள். ‘அப்படியெல்லாம் பாக்கணுங்கிறதுக்கு முன்னாடி மோடிவ் ஏதாவது இருக்கான்னு பார்க்கணும். அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. அவர் ஜாலி மனுஷனாதான் எனக்கும் என் கஸின் கண்களுக்கும் பட்டாரு. எதுக்கும் நாளைக்கு வரப் போகிற போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் நிறைய க்ளூ கொடுக்கணும்னு நினைக்கிறேன்..” “ம்ம்.. இந்த போலீஸ்லாம் இங்க பக்கத்து வீட்டுக்காரர்களை கூப்பிட்டு விசாரிச்சாங்களா?” ‘போலீஸ் கான்ஸ்டபிள் கொஞ்சம் பேரு போனாங்க.. ஆமா உங்க வீடு எதிர்வீடாச்சே.. விசாரிக்க யாரும் வரலியா? ‘ ‘இதோ இப்போ உங்க முன்னாடியே ஒரு கேள்வி கேட்கலை?.. அவ்வளவுதான் இவங்க விசாரணை. இப்படியெல்லாம் விசாரிச்சா போலீஸ் ஒண்ணும் கண்டுபிடிக்க மாட்டாங்க. இப்போ எல்லாம் ப்ரைவேட் இன்வெஸ்டிகேஷன்தான் போலிஸ் விசாரணையை விட பெஸ்ட்னு பேசறாங்களே. சரி. இந்த வேலையை நான் தீவிரமாக எடுத்துச் செய்யறேன்.. நீங்க உங்களை பத்தி சொல்லுங்க..”
அவன் அசையாமல் அப்படியே அவனைப் பார்க்கிறான்.
‘என்னங்க.. உங்களுக்கு வேலை கொடுத்த என்னையே விசாரிக்கிறீங்க. நீங்க இங்கே உள்ளே எல்லாம் பாருங்க.. எங்க பெரியப்பா வெளியில எப்படி இருப்பார்னு விசாரியுங்க. எல்லா கொலைங்களுக்கும் ஏதாவது ஒரு மோடிவ்’ன்னு ஒண்ணு இருக்கணும்.. அந்த மோட்டிவ் என்னன்னு பாருங்க. எனக்குக் கூட சாதாரணமா பாக்கறச்சே ஒண்ணுமே தெரியலேதான். ஆனா உங்க பார்வை ஒரு இன்வெஸ்டிகேடரோட பார்வை.. அதனாலே வித்தியாஸமா ஏதாவது படலாம்.”
கோமதி ஆச்சரியமாகப் பேசினாள்..
“அப்போ இது தற்கொலைங்கிற கோணத்துல கூட நான் கொஞ்சம் ஆராயணும். அதே சமயத்துல ரெண்டு குண்டு வேற வேற இடத்துல பாய்ஞ்சி இருக்குன்னாங்க.. அதையும் பார்க்கணும்..’ ‘ஓ.. ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்கீங்க. ரெண்டு குண்டுன்னு எப்படி தெரியும்..’ ‘என்ன சார்.. அதான் ஊரே பேசுதே.. அத வுடுங்க. உங்களைப் பத்தி சொல்லுங்க.’
கல்யாண் சோகத்துடன் சிரித்தான்.
‘என்னை பத்தி என்னங்க சொல்றது? நான் சுதந்திரமானவன். அப்பா இல்லை அம்மா இல்லே.. எங்க பெரியப்பா மேல அன்பு உள்ளவன். அவரும் அப்படித்தான். ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் மதிப்பும் மரியாதையும் வெச்சிருந்தோம். அவர் இப்போ இல்லே. அவர் சாதாரணமா செத்திருந்தா காலைல அழுதேனே, அத்தோடு போயிருக்கும். அவ்வளவுதான். ஆனா அவரை ஏன் கொலை பண்ணி சாகடிக்கணும்’னு எப்படியும் தெரிஞ்சுக்கணும்னு ஆசை. அப்படி என்ன வெறி அந்த கொலைகாரனுக்கு,, யார் அந்த கொலைகாரன்?’ ‘அது சரி, அவருக்கு ஏதாவது வித்தியாசமான பழக்கம், யாராவது வித்தியாசமான ஃப்ரெண்ட்ஸ், ஏதாவது அவுட்சைட் பிரெஷர், அல்லது யாராவது அடிக்கடி ஃபோன் செஞ்சு பயமுறுத்தறது அல்லது யாரோடையாவது தகராறு, அல்லது சூதாடறது மாதிரி கெட்ட பழக்கம்.. ஏதாவது பெரிய.. நோய்.. இல்லே..?’
அவள் கேள்விகளைத் தடுத்து நிறுத்தினான்.
“நிறுத்துங்க கோம்டி.. இதெல்லாம் கண்டுபிடிக்கறதுக்குதான் உங்களை ஏற்பாடு பண்ணியிருக்கேன்.. நீங்க கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் எனக்குத் தெரிஞ்சிருந்தா நீங்க எதுக்கு? நானே கொலைக்கான காரணம் என்ன, கொலைகாரன் யாருன்னு கண்டுபிடிச்சுடுவேனே..’
அவன் மௌனம் சாதித்துவிட்டு மறுபடியும் பேசினான்.
‘மனுஷன் எனக்குத் தெரிஞ்சு கடைசி வரைக்கும் நோய்’னு ஒரு நாளும் படுத்தது இல்லே. அவரு டாக்டர்கிட்டே போனதா எனக்குத் தெரியலே.. தினசரி அஞ்சு கிலோமீட்டர் நடப்பார்.. ஏன், நேத்திக்குக் கூட காலைலே வாக்கிங்க் போனார்.. கூடவே எங்க முரளியும் நடப்பான். நேத்துதான் அவங்கிட்டே பெரியப்பாவே சொன்னாராம். இந்த தடவை நான் சென்னை வந்தவுடனே அவரோட உயில் என் பேருக்கு எழுதி பதிவு பண்ணிடனும்னு சொன்னாராம்.. சொன்னவர் இன்னிக்கு உயிரோட இல்லை..’ ‘அது எப்படிங்க? உங்க தாத்தா பாட்டி சொத்துதானே இது எல்லாம். அவர் உயில் எழுதினாலும் எழுதாமப் போனாலும் இதெல்லாம் உங்களுக்கு சொந்தம்தானே..’
அவன் மீண்டும் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்
‘எப்படிங்க இவ்வளோ தூரம் விசாரிச்சீங்க.. நீங்க எப்படியும் இந்த கொலைல துப்பு துலக்கறதுன்னு இங்க வரத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டீங்களா?.
சிறிது நேரம் யோசித்தான். பின்னர் அவனே பேசினான்.
‘கரெக்ட்தான்.. முக்காவாசி தாத்தா பாட்டி சொத்து.. மீதி இவரு சுயமா சம்பாதிச்சதுதான். ஆனாலும் நான் இவங்க பணத்தைத் தொடறது இல்லேன்னு முடிவு பண்ணிட்டேனுங்க..’ ‘என்னங்க? ஏன் இப்படி?’ ‘ஏன் பயப்படறீங்க. உங்க ஃபீஸ் கிடைக்குமான்னு பாக்கறீங்களா? இவர்கிட்டே இருக்கற பணத்தை விட என்கிட்டே நிறைய இருக்கு..’
அவன் முதல் முதலாக தெத்துப்பல் தெரிய சிரித்தான்.
‘ஐய்யய்யோ.. நான் அப்படிலாம் யோசிக்கவே இல்லை. நீங்க கொடுக்கற பணத்துக்காக நான் இந்த விசாரணை எடுக்கலை. எனக்கு இது ஒரு விருப்பமான சப்ஜெக்ட்.. இப்போ விசாகப்பட்டினம் வந்தது கூட இந்த மாதிரி ஒரு வழக்குக்காகத்தான்.. என்னடா ரவி.. நீ எதுவும் பேசாம இருக்கே.. ’ ரவி வழக்கமான மூடுக்கு வந்தான்.. ‘அம்மா தாயே.. உன்னோட எனக்கென்ன பேச்சு?. நீயாச்சு, இந்த கேஸாச்சு.. இது ஒரு மர்டர் கேஸ்.. உன்னால எடுத்து விசாரிக்க முடியும். யம்மா.. நேத்துக் காலைல நான் உயிருக்கு பயந்துண்டு அந்த வீடியோவை எடுத்தேனே.. அப்பவே நினைச்சேன்.. உன்னாலே எந்த கேஸையும் ஈஸியா எடுத்துக்கமுடியும். அந்த மாதிரியெல்லாம் தைரியசாலி நீ ஒத்திதான்னு இந்த மடையனுக்குச் சொல்லிடறேன்.. என்னை மட்டும் இந்த கேஸுக்கு உதவி அது இதுன்னு இழுக்காதே.. சொல்லிட்டேன்’. ‘ஓ! அது கூட கொலை வழக்கா? ஐயோ! என்னாங்க நீங்க பயங்கரமான ஆளா இருக்கீங்க..?’ ‘ஐய்யய்யோ.. கொலை வழக்கெல்லாம் இல்லீங்க. ஒரு விவாகரத்து வழக்கு.. இங்கே ஒரு குடும்பம் அங்கே ஒரு குடும்பம்.. அவனோட முதல் மனைவி இங்கத்தான் இருக்கா.. அவளுக்கு சந்தேகம் வந்துச்சு. என்கிட்டே வந்து சொன்னா.. விலாசம் விசாரிச்சேன். நீங்க இப்போ இருக்கற வைசாக் வீட்டு சொந்தக்காரிதான் அவனோட ரெண்டாவது குடும்பம், வீடியோ ஆதாரம் எல்லாம் கொண்டு வந்து இன்னிக்கு அவகிட்டே கொடுத்துட்டேன்.. அவ நிம்மதியா கேஸ் போட்டு விவாகரத்து வாங்கிடுவா.. இப்போ இந்த மாதிரி ரெண்டு கேஸ்ங்க வேற வெயிட் பண்றாங்க, நான் பெண்டிங்க்ல வெச்சிருக்கேன்.. ம்ம்ம்.. கொலை கேஸ்ன்னா நீங்க கொடுத்ததுதான் இன்னிக்குதான் என் முதல் கேஸ். கவலைப் படாதீங்க.. நான் ஒரு டெடிகேடிவ் டிடெக்டிவ்.’
அவன் அவளை வெறித்துப் பார்த்தான்.
‘அப்போ அந்த டெடிகேட்டிவ் டென்டல் பிராக்டீஸ்?.. கஷ்டப்பட்டு படிச்சு டாக்டரேட் வாங்கி இருக்கீங்களே.. க்லினிக் வெச்சிருக்கீங்க,, அது என்னாகும்.?’ ‘அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது.. சரி வரேங்க.. கிலினிக் திறந்து வெக்க சொன்னேன்.. போகணும்..’ “யாராவது நோயாளிகள் வராங்களா என்ன?’ என்று முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் கேட்டான். ‘அதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லே. பல்லு கிளீனிங்னு நிறைய பேரு வருவாங்க. அதுக்குன்னு ஒரு நர்ஸ் வெச்சிருக்கேன்.. அதுலேயே காசு வந்துடும்.. அது பாட்டுக்கு அது போகும்.. இது வீட்டில் முன்னாடி ரூம்லேயே கிளினிக் இருக்கு.. நீங்க எப்ப வேண்டுமானாலும் வரலாம்.. நான் வரட்டுமா?’ என்று சொன்னவள் ரவியைப் பார்த்தாள். ‘டேய்.. போகறச்சே வீட்டுக்கு வந்துட்டு போடா.. சாந்தியும் இப்போ அங்க வருவா..’
அவள் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அவள் போனதும் கல்யாண் காதில் கிசுகிசுக்கிறான்.
‘இவ கையிலே இந்தக் கேஸைக் கொடுத்திருக்கியா.. பயங்கரமான சுறுசுறுப்பு.. நேத்து பாக்கணுமே.. நம்ம வீட்டுக்கார அக்காவை கிடுக்குப்பிடி போட்டு கேள்வி கேட்க அந்தக்கா எப்படா இவகிட்டயிருந்து ஒதுங்கலாம்னு என்னை அடிக்கடிப் பாக்க ஆரம்பிச்சுடுத்து. கல்யாண தேதி, கல்யாணம் எங்க நடந்தது.. உறவுக்காரங்கள்லாம் வந்தாங்களான்னு ரெண்டு மூணு தடவ கேட்டு கன்ஃபர்ம் பண்ணிட்டுதான் வீட்டை விட்டு வெளியே வந்தா..’ ‘நல்லதுதானே.. ‘ ‘என்னடா நல்லது? நாளைக்குள்ள பாரு.. எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி என்னையும் தன்னோட சேர்த்துக்குவா.. நான் வைசாக் போனா மாதிரிதான்..’ ‘நீயும் சேர்ந்திட்டியானா ரொம்ப நல்லதா போச்சு’.
கல்யாண் அந்த சோகத்திலும் சிரித்தான்.
இடம்: காவல் நிலையம்:
அடுத்த நாள் காவல் நிலையத்தில் கல்யாணும் ரவியும் இன்ஸ்பெக்டருடன் அமர்ந்திருந்தபோது இன்ஸ்பெக்டரின் மொபைலுக்கு ஒரு போன் வந்தது. மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர், ‘தகவலுக்கு நன்றி’ என்று சொல்லிவிட்டு மூடினார்.
‘கல்யாண்! இந்த கேஸ் விஷயமா சுமதிங்கற நர்ஸ் பத்தி ஒரு தகவல் கிடைச்சிருக்கு.. நீங்க ரெண்டுபேரும் என் கூட வாங்க போகலாம். ஆனா உங்க பெரியப்பா உறவு எதுவும் காமிக்காதீங்க. சாதாரணமா வாங்க.’
கல்யாண் ரவி இன்ஸ்பெக்டர் மோகன் மூவரும் போலீஸ் காரை எடுத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றனர். பல வீடுகள் கொண்ட ஒரு சிறிய சாலை அது, அவர்கள் போலீஸ் வண்டியை வெகு தொலைவில் நிறுத்திவிட்டு ஒரு வீட்டிற்குச் சென்றார்கள், அங்கு ஒரு வயதான பெண்மணி வராண்டாவுக்கு வெளியே அமர்ந்து சில வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தார், ஆனால் அது சரியாக செவி வரை கேட்கவில்லை. எனினும் உற்றுக் கேட்டான் ரவி.
‘வரலியே இன்னும்னு பார்த்தேன்.. வந்துட்டாங்க.. இந்த இழவோடு இந்தப் பொம்பளை எப்போதும் கஷ்டப்பட்டே இருக்கணும் போல..’
சட்டென ரவி இன்ஸ்பெக்டரைப் பார்த்தான். ‘சார்.. அந்த அம்மா பாவம் சார் ஏதோ வேணும் போல.. நான் அந்தம்மாகிட்ட பேசிண்டிருக்கேன்.. நீங்க ரெண்டு பேரும் உள்ளே போங்க சார்.’
‘சரி மிஸ்டர் ரவி..’
கல்யாண் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. ஆனால் இன்ஸ்பெக்டர் அவளைப் பொருட்படுத்தாமல் அறைக்குள் சென்றார். இருபது இருபத்திரெண்டு வயதுடைய பெண் ஒருவர் சமையலறையிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது, ஆச்சரியத்துடன் போலிஸாரைப் பார்த்தாள்.
‘எதுக்குங்க வந்தீங்க?.. போலீஸ்லாம் வீட்டுக்குள்ள வரலாமா?.. ஊருல என்ன நினைப்பாங்க. சார்.. ஏற்கனவே இங்கே இருக்கற நாங்க மூணு பேரும் பொம்பளைங்க.. இருக்கற வீட்டையும் காலி பண்ணச் சொல்லிட்டா எங்கேன்னு போவோம் நாங்க?’ ‘போலீஸ்ன்னா என்னம்மா ராட்சஸங்களா? விசாரணைக்கோசரம் எங்கே வேணும்னாலும் வரத்தானே வேணும் சுமதி.. அதானே உன்னோட பேரு?’ ‘ஆமா சார்.. உங்களுக்கு என்ன வேணும்? எதைப் பத்தி பேசணும்?’ ‘கந்தசாமியைப் பத்தி’ ‘எந்த சாமி?’ ‘கந்தசாமி… சுமதி.. உங்க வீட்டுக்கு அடிக்கடி வருவரே.. அவரைப் பத்தித்தான்’. ‘கொஞ்சம் இருங்க.. (அவள் பெயரை நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள்) சார் அடிக்கடி இங்கே ஆம்பளைங்க யாரும் வந்தது இல்லே.. நீங்க சொல்றதைப் பார்த்தா ஒருவேளை இவரைச் சொல்றீங்களா.. ஒரு பெரியவர் ஒருத்தர் நாலு மாசம் முன்னாடி இங்கே வந்தார். இரவு நேரமா மாலையான்னு ஞாபகம் இல்லே. என் தங்கைக்கு கொஞ்சம் மூளைப் பிரச்சனை.. அவளுக்கு நிறைய செலவு பண்ணி ஹாஸ்பிடல்ல சேர்த்து குணம் ஆக்கிடலாம். இந்தப் பெரியவர் இந்த மாதிரி விஷயங்களுக்கு நிறைய பணம் கொடுப்பார். தெரிஞ்சவங்கதான் சொன்னாங்க. இத்தனைக்கும் நான் கேட்கலே.. எனக்குச் சொன்னவங்களே அவங்ககிட்டே போயி ஹெல்ப் கேட்டாங்க.. ஓஹோ அவரு பேரு கந்தசாமியா? தெரியாதுங்க.. நோயாளியை பார்க்க வந்தேன்மா ன்னு சொல்லிட்டுப் பார்த்துட்டுப் போயிட்டாங்க.. நான் உதவி கேட்டது உண்மையான்னு சோதனை பண்ணிருக்காருன்னு அப்போ தோணித்து அவ்வளவுதான்.. எனக்கு இவங்க யாரும் உதவி செய்யலைன்னா என்னங்க. தெய்வம் நம்மகிட்டே கூடவே இருந்து எல்லாம் செய்யும்.. அந்த நம்பிக்கைல தான் சொல்றேன். என்னாச்சு சார் அந்த கந்தசாமிக்கு?’
கல்யாண் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இன்ஸ்பெக்டர் மோகன் அவனைப் பார்க்கிறார். மெதுவாக அவன் காதில் பேசுகிறார், ‘என்னய்யா.. பொம்பளை அழகா இருக்குதேன்னு அவளையே உத்துப் பார்க்கறியா?.” கிண்டலாகச் சொன்னவர் மறுபடியும் அந்தப் பெண்ணிடம் கேட்கிறார்.
‘சுமதி.. உனக்கு விஷயம் தெரியாதா? அந்த கந்தசாமியை யாரோ முந்தா நாள் சாயங்காலம் கொலை பண்ணிட்டாங்க.’ அவள் ஆச்சரியப்பட்டாள். ‘கடவுளே’ இது என்ன சார் இப்படிச் சொல்லறீங்க.. அடப் பாவமே.. அவரே வந்தாரு.. ஹெல்ப் பண்றேன்னு சொன்னாரு.. அப்புறம் எந்தத் தகவலும் இல்லே. நாங்களும் மறந்துட்டோம்.. இப்போ அவரு மேல போயிட்டாரா?’ ‘என்னம்மா.. இவ்வளோ ஈஸியா சொல்றே? உனக்கு ஷாக்கிங்கா இருக்கணுமே..’ ‘எனக்கு எதுக்கு சார் ஷாக்கடிக்கணும்..? அன்னிக்கு அரை மணி நேரம் அவரைப் பார்த்திருப்பேன். இருந்தாலும் மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு.’ ‘ஆனா அந்த மனக் கஷ்டம் மூஞ்சில தெரியலியே.. சரி, வேற எந்த விஷயமும் அவரைப் பத்தி உனக்குத் தெரியாதா?’ ‘எந்த விஷயமும்னா?.. புரியலை சார்.. எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்..’
இன்ஸ்பெக்டர் மோகன் சற்று கோபமாக பேசினார்
‘இதோ பாரு சுமதி.. எனக்கு ஒரு செய்தி கிடைச்சது.. கந்தசாமி உனக்கு ஏதோ கெடுதல் பண்ணியிருக்காருன்னு ஒரு இன்ஃபார்மர் சொன்னாரு.. உனக்கு என்ன விஷயத்துல கெடுதல் பண்ணியிருக்கார்னு எனக்குத் தெரியணும்.’
சட்டென்று அழ ஆரம்பித்தாள்.
‘என் சார், எனக்கு அந்த ஆளை அறிமுகமே இல்லைன்னு சொல்லறேன். நீங்க எனக்கும் அந்த கொலைக்கும் லிங்க் பண்ணப் பாக்கறீங்களே.. இது என்ன நியாயம் சார்.. போலீஸ்ன்னா என்ன வேணா சொல்லலாமா சார்?’
கல்யாண் திடீரென்று இடையில் வந்தான்.
‘சார்.. எனக்கும் அப்படித்தான் படறது சார்.. அவங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னும்போது அவங்களை கன்ஃப்யூஸ் பண்ணி ஸ்டேட்மென்ட் வாங்கறது தப்பு இல்லயா சார்..’
“இன்ஸ்பெக்டர் அவனை அனுதாபத்துடன் பார்த்தார். மெதுவாக அவனிடம் பேசினார். ‘என்னய்யா.. பொம்பளைன்னா கொஞ்சம் இரக்கம் காட்டறியா? பார்த்தா தெரியலே இது பொய் சொல்லுதுன்னு.”
கல்யாண் அவளை சமாதானப்படுத்த முயன்றான்.
‘ஏம்மா.. உங்க ஸ்டேட்மென்ட்லாம் வேணாம். ஆனா இந்த விஷயத்துல என்னவெல்லாம் தெரியும்னு கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு கொஞ்சம் உதவியா இருக்கும். அவ்வளவுதான்.’ ‘நன்றி சார், உங்களைப் பாத்தா நல்ல மாதிரியாத்தான் தெரியுது. இருந்தாலும் சொல்றேன் சார்.. எனக்கும் அந்த பெரிய மனுஷனை அரை மணி நேரம் தான் தெரியும்.’ ‘சரிம்மா.. யார் மூலமா இந்தப் பெரிய மனுஷரை பிடிச்சீங்க?’ ‘சார், நான் என் தங்கையை ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு வெளிய காத்திருந்தப்ப ஒரு ஏஜண்டும் இன்னொரு குடும்பமும் அங்கே பேசிண்டு இருந்தாங்க.. பெண் குழந்தைங்க 16 வயதுக்குள்ள இருந்தாங்கன்னா அவங்க ஆபரேஷனுக்கு இந்த மனுஷர் பண உதவி பண்ணறாராம். அந்த குடும்பம் அவங்களுக்காக அன்னிக்கு அவர்கிட்டே போய் ஹெல்ப் கேட்க போறதா சொன்னாங்க. அப்படியே என் தங்கை விஷயத்தையும் சொல்லி ஹெல்ப் கேளுங்க, கிடைச்சா நல்லது.. அதுக்காக உங்க குழந்தை கேஸ் ஐ வுட்டுடாதீங்க.. கடவுள் அருள் இருந்தா என் தங்கைக்கும் கிடைக்கட்டுமே’ அப்படின்னேன்.. அவரு நான் சொன்ன விஷயமெல்லாம் கரெக்டான்னு செக் பண்ணிக்க அன்னிக்கு இங்க வந்தாரு. அவ்வளவுதான். ஆனா இப்படி பொசுக்குன்னு போயிடுவார்ன்னு ஊகிக்கலே.” கல்யாண் இன்ஸ்பெக்டர் ஐ பார்த்தான். மேலும் விஷயம் அறிய அவனை ஊக்கப்படுத்தினார். “கல்யாண்.. நீங்க கேரி ஆன் பண்ணுங்க.. நீங்க பேசிண்டு இருங்க,, எதுவாவது விஷயம் கிடைக்குதான்னு பாருங்க.. நான் இங்க சுத்துவட்டாரத்துல கொஞ்சம் விசாரிக்கறேன்.. இன்ஸ்பெக்டர் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார். அங்கே ரவி அந்த அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து அருகே வந்தார். ‘என்ன மிஸ்டர் ரவி, இவங்களுக்கு ஏதேனும் தெரியுமா?’. இல்லே சார்.. இவங்க இந்த சுத்துவட்டார வீடுகள் இவங்களைக் கொஞ்சம் ஏளனமா பாக்கறாங்களாம்.. இதுல போலீஸ் வேற வந்து விசாரிச்சா எப்படின்னாங்க? ஏதுக்கு ஏளனமாம்? அவங்க வீட்டுல ஒரு சின்னப் பொண்ணுக்குக் கொஞ்சம் மன வளர்ச்சி இல்லையாமே.. ‘ஆமாமா.. சம் டைம் க்ரூயல் மனசு உள்ளவங்கதான் ஜனங்க..’
இருவரும் வெளியே வருகிறார்கள்.
வெளியே இருந்த சிலரிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்தார். கடந்த நாட்களில் ஒரு கருப்பு கார் இந்த சாலையில் வந்து இங்கு நின்றதை யாராவது பார்த்தீர்களா என்று இன்ஸ்பெக்டர் அங்கே அருகில் இருந்தவர்களிடம் கேட்டார்.
ஞாபகம் இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள். அங்கே எதிர் வீட்டுக்காரர்கள் சொன்னார்கள், ‘என் அப்பா கருப்பு கார் மட்டுமே வைத்திருப்பார், ஆனா அவர் ரெண்டு மாதமா அதையே கொண்டு வருவதை நிறுத்திட்டார். ‘என் பொண்டாட்டிக்கு அந்த கருப்பு கார் வேணும்னு அவ டைரக்டா கேட்டதாலே அவர் இங்கே வர்ரது கிடையாது.’
கொஞ்ச நேரம் கழித்தவுடன் கல்யாண் வெளியே வந்து இவர்களுடன் சேர்ந்தான்.
‘சார், அது அப்பாவி பொம்பளை’ன்னு தெரியறது. இவள் ஒரு பிரைவேட் ஹாஸ்பிடலில் நர்ஸா வேலை செய்யறா. தன்னோட தங்கை ஆடிஸ்டிக் பொண்ணுன்னவுடனே குணப்படுத்த எல்லா முயற்சியும் எடுக்குறா. அவ்வளவுதான், இவளைப் பத்தி யார் இன்ஃபார்ம் கொடுத்தாங்கன்னு நான் சொல்லட்டுமா?’ ‘சொல்லுங்க’ ‘இந்தப் பெண்ணுக்கு உதவி பண்றேன்னு முதல்ல ஒரு குடும்பம் சிபாரிசுக்கு வந்ததுன்னு சொன்னீங்க இல்லே. அவங்கதான் போன்ல இவங்க நியூஸ் கொடுத்திருப்பான்.’ ‘நீங்கள் கூறியது கொஞ்சம் சரிதான்.. நாங்க கந்தசாமி உதவி செஞ்ச எல்லா ஆட்களையும் விசாரிச்சிருக்கோம் மிஸ்டர் கல்யாண், அதுல சில விஷயம் கிடைச்சுது. உங்க பெரியப்பா கொஞ்சம் டெஸ்ட் பண்ணி உண்மையானவங்களான்னு பார்த்து அப்புறமா பணம் கொடுப்பாரு. அவர் ஆடிட்டர் இதை ஸ்டேட்மென்ட்ல சொல்லி இருக்காரு. ஆனா இன்னொரு ஆளும் இவளைப் பத்திச் சொன்னான். அதனாலதான் கொஞ்சம் ஹார்ஷா பேசினேன். சரி வாங்க ஸ்டேஷனுக்கு போவோம்.. போஸ்ட் மார்ட்டம் ரிசல்ட் வந்துருக்கும். ஏதாவது தகவல் தெரியுதான்னு பார்ப்போம்.’ ‘சரி சார்.. ஆனா இந்த பொம்பளை கேஸ் ரொம்ப பாவம் சார்.. பதினாலோ பதிமூணோ வயசுள்ள ஆடிஸ்டிக் தங்கை இருக்கு.. நான் பார்த்தேன் எத்தையோ பறிகொடுத்த மாதிரி எல்லாரையும் பாக்கறா.. நல்ல டாக்டர் கிடைச்சு சிகிச்சை பண்ணினா அந்த பொண்ணுக்கு சரியாயிடும்’. ‘உங்களை அப்பவே கவனிச்சேன்.. அந்த பொம்பளையை ஒரு மாதிரியாத்தான் பார்த்தீங்க.. ஜாக்கிரதையா இருங்கப்பா.. பொம்பளை, அதுவும் அவ எப்பிடி எதிர்த்து பேசினா பாரு, உடனே ஒரு அழுகையும் வேற. அவ அழுதுட்டதால நாம இரக்கம் காமிக்க முடியாது மிஸ்டர் கல்யாண். ஆனா எதுக்கு நம்ம ஆளு இந்தப் பொம்பளையைப் பத்தி சரியா விலாசத்தோடு சொல்லணும்? நான் இன்னும் இந்தப் பெண்ணை விசாரணை லிஸ்ட்லயே வெக்கிறேன். மறுபடியும் தேவைப்பட்டா விசாரிக்கலாம்.’ “யார் சார் அந்த இன்ஃபார்மர்.. சொல்லணும்னு அவசியம் இல்லே.. ஒருவேளை கோம்டிகிட்டே சொல்லி இன்னும் ஆழமா என்னால இவகிட்டே அனுப்பி விசாரிக்கமுடியும். லேடீஸ்ங்க்கிறதனாலே கொஞ்சம் விஷயம் ஏதாவது இருந்தா வெளியே வரலாம்”. “இன்ஃபார்மர் பேருதானே.. சொல்லிட்டா போச்சு. மிஸ்டர் முரளி.. உன்னோட கஸின் முரளி.. ரவி ஆச்சரியமாக கேட்டான். ‘இவன் கஸின் முரளியா?’ ‘அவனேதான். அவன் உங்க பெரியப்பாவை இங்கே அழைச்சிட்டு வந்திருக்கான்யா.. திடீர்னு ஞாபகம் வந்தது சார், எதுக்கும் அங்க போயி நீங்க அவளை விசாரிங்க சார்’னு இப்போதான் உன் முன்னாடியே போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கறச்சே என் மொபைல்ல பேசி அட்ரஸ் மெஸேஜ்ல கொடுத்தான்”. “முரளிகிட்டே நானும் பேசறேன் சார்.. என்னை விட பெரியப்பாவை கரைச்சுக் குடிச்சவன். ஆனா நல்லவன் சார். எங்க சொத்து மேல எல்லாம் அவனுக்கு ஆசை இல்லேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.” “போலீஸைப் பொறுத்தவரை எல்லாமே சந்தேகம்தான். முரளி என்ன ஒழுங்கா.. அவனுக்கு ஆசை சொத்துமேலே இல்லேன்னு வெச்சுண்டா கூட அவன் அதிகம் கந்தசாமியோட பழகினான். என்னவேணா நடந்திருக்கும். ஆனா முரளி சுடலேன்னு எனக்குத் தெரியும். அவன் அன்னிக்கு சாயங்காலம் பூரா அவன் ஆபிஸ்லதான் இருந்தான். அதை எல்லாம் விசாரிச்சுட்டோம். ஆனா வெளியாள் வெச்சு கொலை பண்ணி இருக்கலாம்தான்.. என்ன அப்படி பாக்கறே? சான்ஸ் இருக்கா இல்லையா? அந்த சுந்தர், உன்னோட இன்னொரு க்லோஸ் கஸின்.. அவனையும் விசாரிச்சுட்டேன். அவன் ஊரிலேயே இல்லே.. கார்ல புறப்பட்டு அன்னிக்கு நடுராத்திரி வந்தான். எல்லாத்தையும் விசாரிக்கிறோம் கல்யாண்.. எங்கேயாவது எதிலாவது க்ளூ கிடைக்காம போகாது.. பிடிச்சுடுவோம் அந்தக் கொலைகாரனை.’.
தொடரும்
