(Peer Reviewed) தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் காட்டும் மரக்காயர்கள் (தென்கிழக்குக் கடற்கரைப் பகுதிகள்)

0

முனைவர் ஆ.ராஜா
அருங்காட்சியகத் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் – 613010

சங்க காலம் தொட்டே கொற்கை, அழகன்குளம் உள்ளிட்ட தமிழக கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் இலங்கை, அரேபியா, இந்தோனேசியா போன்ற கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பினைக் கொண்டிருந்த பகுதிகளாகும். இடைக்காலத்தில் சோழர், பாண்டியர், பிற்கால பாண்டியர், நாயக்கர் ஆகியோர்களும் இக்கடற்கரைப் பகுதிகளில் வணிக நடவடிக்கைகளில் சிறப்புற்று விளங்கினர் என்று இப்பகுதியிலுள்ள கல்வெட்டுகளின் வாயிலாக அறிய முடிகிறது. அந்த வகையில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள நாகூர், நாகப்பட்டினம், சுந்தரபாண்டியப் பட்டினம், வட்டானம், கீழக்கரை, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளிலுள்ள இசுலாமியக் கல்வெட்டுகளின் வாயிலாகவும், இராமநாதபுரம் வட்டாரத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட மரக்காயர் கல்வெட்டிகளின் வாயிலாகவும், குறிப்பாக தென் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மரக்காயர்களின் வரலாற்றுப் பதிவுகள் வாயிலாகவும் இக்கட்டுரை ஆராய்கிறது.

மரக்காயர்கள் கி.பி.17-18ஆம் நூற்றாண்டுகளில் கடற்சார் வணிகத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தனர். குறிப்பாக இடைக்காலத்தைச் சேர்ந்த போர்ச்சுக்கீசிய ஆவணங்கள் இவர்களைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடுகின்றன.1 கி.பி.18ஆம் நூற்றாண்டில் தமிழகக் கடற்கரைப் பகுதியில் குறிப்பாக பாண்டிய நாட்டுத் துறைமுகப் பகுதியில் மரக்காயர்கள் ஆதிக்கம் செலுத்தினர் என்பதைத் தொண்டியில் கிடைக்கப்பெற்ற, கி.பி.1795இல் வெளியிடப்பட்ட மருது பாண்டியரின் கல்வெட்டில் காண முடிகிறது.2 இக்கல்வெட்டில் தொண்டியின் ஆபூப் சகா மரக்காயர் என்பவர் அதிகாரமிக்கவராகக் குறிப்பிடப்பட்டுள்ளமை, மரக்காயர்களின் செல்வாக்கைக் காட்டுகிறது. மரக்காயர்கள் எப்பொழுது தமிழக வணிகத்தில் ஈடுபட்டனர், எப்பொழுது செல்வாக்குப் பெறலாயினர் போன்றவற்றைச் சரியாக கணக்கிடுவது அரிதாக இருக்கிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இடைக்காலத்தில் அஞ்சுவண்ணம் என்ற பிரிவில் இசுலாமியர்கள், குறிப்பாக சோனகர் எனப்பட்ட அரேபிய வணிகர்கள், தமிழகக் கடற்கரையில் இருந்ததை அறிய முடிகிறது. மரக்காயர்கள் என்ற தனிக் குழு அஞ்சுவண்ணத்திலிருந்து தோன்றியவர்களாகவும் இசுலாம் மதம் சார்ந்த மரக்காயர்கள் முதலில் வணிகத்தில் ஈடுபடாமல் மரக்கலங்களைச் செலுத்துகின்ற மாலுமிகளாகச் செயல்பட்டதாகவும் கருத வேண்டும். மரக்காயர் என்ற சொல் ‘மரக்கலநராயர்’ என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகும். அவ்வாறாயின், இவர்கள் முதலில் கப்பல் மாலுமிகளாகத் தங்களது தொழிலைத் தொடங்கியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது என பா.ஜெயக்குமார் கருதுகிறார்.3

பாரூசு துறைமுகத்தைப் பற்றிக் குறிப்பிடும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா அருங்காட்சியகத்தில் உள்ள கி.பி.1088ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்திய தமிழ்க் கல்வெட்டில்4 ‘மரக்கலநாயன்’ என்ற சொல் காணப்படுவது மேற்சுட்டிய கருத்துடன் ஒத்து வருவதால் மரக்கல நாயர்களாக இருந்த மரக்காயர்களின் தாக்கம் வணிகத்தில் இடைக்காலத்திலேயே இருந்ததாகக் கொள்ளலாம். இவ்வாறு, மரக்கலத்தை (கப்பல்களை) இயக்கிய இவர்கள் இடைக்காலத்தில் தாங்களே வாணிபத்தையும் முன்னின்று நடத்தியிருக்க வேண்டும்.

மரக்காயர்களின் செயல்பாடுகள்

கிழவன் சேதுபதி (1678-1710) பெரிய கோட்டையையும் அரண்மனையையும் கட்டி, சேதுநாட்டின் தலைநகரைப் போகலூரிலிருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றினார். செவ்வக வடிவில் 27 அடி உயரமும் 5 அடி அகலமும் 44 கொத்தளங்களுடன் அமைத்தார். இதன் நிர்மாணப் பணியில் பெரிதும் உதவியவர் கீழக்கரை ‘சீதக்காதி மரைக்காயர்’ ஆவார்.5 கீழக்கரையிலுள்ள ஓடக்கரை மசூதிக் கல்வெட்டு ஒன்று இசுமாயிலெவை மகன்கள் கவீது முகம்மது மரைக்காயரும், அவுதில்க் காதிறு மரைக்காயரும் சேர்ந்து பள்ளிவாசல் ஒன்றை கட்டியமையைக் குறிப்பிடுகிறது.6

அதே போன்று கீழக்கரை மற்றும் வேதாளை பள்ளிவாசல்களில் காணப்படுகிற கல்லறைக் கல்வெட்டுகளில் மார்த்தாண்ட மரக்காயர், செல்லக்குட்டி மரைக்காயர், மழமரைக்காயர், பெரியதம்பி மரக்காயர் என்றும் குறிப்பிடுகின்றது7. இவை அங்கிருந்த இசுலாமியர்களின் பெயர்களாகும். பெரும்பாலும் இசுலாமியப் பெயர்களின் பின்னொட்டில் மரக்காயர் என்றும் மரைக்காயர் என்றும் வருவதைக் காண முடிகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உள்ள வீட்டின் திண்ணைச் சுவரில் வெட்டப்பட்டுள்ள கி.பி.1812ஆம் ஆண்டு கல்வெட்டில்  நாகூர் நூர் முகம்மது மரைக்காயர் மகன் முகம்மது அலி மரைக்காயர் என்பவர் வீடு, கடை, திருவாசல், குளம், தோட்டம், ஆகியவற்றைப் பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளமையைச் சுட்டிக் காட்டுகிறது.8

மேலும், கி.பி.1873 ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டுகளின் வாயிலாக குஞ்சு மரைக்காயர் என்பவர் பீர் மண்டபம் கட்டியதையும், நாச்சிக்குளம் உதுமா மரைக்காயர் பேரனும், நல்லதம்பி மரைக்காயர் மகனுமான நகுதா நல்ல சையது மரைக்காயர் என்பவரும் நாகூர் தர்காவில் அமைந்துள்ள வடக்கு மினார் கட்டியதை அறிய முடிகிறது.9

மரக்காயர் கல்லறைக் கல்வெட்டுகள்

மேலும், இவ்வாய்வுக்கு வலுசேர்க்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது, திருவாடானை வட்டத்திலுள்ள வட்டானம் என்ற இடத்தில் மூன்று மரக்காயர் கல்லறைக் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன.10 இக்கல்லறைக் கல்வெட்டுகள் இவ்வூரின் வடக்குப் புறத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ளன. கி.பி.1497ஆம் ஆண்டைச் சார்ந்த முதல் கல்வெட்டானது 62 செ.மீ அகலமும், 56 செ.மீ உயரமும், 16 செ.மீ கனமும் கொண்ட அமைப்புடைய கல்லில் எட்டு வரிகளில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டின் பின்புறத்தில் திருக்கோயில் கட்டமைப்புகளில் அலங்கரிக்கப்பட்டுள்ள வட்ட வடிவத் தாமரையிதழ் வேலைப்பாடு இருப்பதைக் காண முடிகிறது. இக்கல்வெட்டின் மேல்பகுதி இசுலாமியக் கட்டடக் கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கி.பி.1503ஆம் ஆண்டைச் சார்ந்த இரண்டாவது கல்வெட்டு 59 செ.மீ அகலமும், 66 செ.மீ நீளமும், 15 செ.மீ கனமும் கொண்டுள்ள இக்கல்லில் ஒன்பது வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி.1506ஆம் ஆண்டைச் சார்ந்த மூன்றாவது கல்வெட்டு 62 செ.மீ அகலமும், 185 செ.மீ நீளமும், 16 செ.மீ கனமும் உடைய இக்கல்லில் எட்டு வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் அனைத்துமே இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்த மரக்காயர்கள் இறப்புக்குப் பின் அவர்களுக்கு நினைவாக துயில் கொண்ட இடத்தில் வைக்கப்பட்ட கல்லறைக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டகளின் பாடம் பின்வருமாறு:

கல்வெட்டு : 1

படம் : 1. மரக்காயர் கல்லறைக் கல்வெட்டு (கி.பி.1497)

காலம் : ஹிஜிரி 902, பிங்கல = ஜூலை 11, கி.பி.1497 வெள்ளிக்கிழமை. (படம்:1)

  1. முகம்மது நவிக்கு
  2. யாண்டு 901 ஆவது
  3. பிங்கல வருஷம் ஆ
  4. டி மாதம் 13 தியதி
  5. நயினா மரக்காயர்
  6. செகு பூவக்கர் நயினா
  7. வெள்ளிக்கிழமை நா
  8. ளில் மரித்தார்.

கல்வெட்டு : 2

படம் : 2. மரக்காயர் கல்லறைக் கல்வெட்டு (கி.பி.1497) பின்புறம் தாமரை இதழ் வேலைப்பாடு

காலம் : ஹிஜிரி 902, ருத்ரோத்காரி, கி.பி.1503 ஏப்ரல் 20, வியாழக்கிழமை (படம்:3)

  1. முகம்மது நவிக்கு
  2. யாண்டு 908 வது
  3. உதிரொர்காரி வதுஷ
  4. ம் சித்திரை மாதம் 24
  5. தியதி செகுத்துமார் மர
  6. க்காயர் செகுநயினா
  7. வான அரிராசராம
  8. மரகுகாயர் வியா
  9. ழக்கிழமை நா.

கல்வெட்டு : 3

படம் : 3. மரக்காயர் கல்லறைக் கல்வெட்டு (கி.பி.1503)

படம் : 4. மரக்காயர் கல்லறைக் கல்வெட்டு (கி.பி.1506)

காலம் : ஹிஜிரி 911, க்ஸய (Kshaya) கி.பி.1506, வியாழக்கிழமை. (படம்:4)

  1. முகம்மது நவிக்கு
  2. யாண்டு 911 ஆவ
  3. து கிஷய வருஷம் அர்
  4. பசி மாதம் 290 செகு
  5. த்துமான மரக்காய
  6. ர் பீருகுட்டியார் வி
  7. யாழக்கிழமை நா
  8. ளில் மரித்தார்.

மேற்குறிப்பிட்ட கி.பி.1497ஆம் ஆண்டு கல்வெட்டில் ‘நயினா மரக்காயர் செகு பூவக்கர்’ என்றும் கி.பி.1503ஆம் ஆண்டு கல்வெட்டில் ‘செகுநயினாவான அரிராசராம மரக்காயர் பீருகுட்டியார்’ என்றும் பெயரின் பின்னொட்டில் மரக்காயர் எனும் சொல் சேர்த்து குறிப்பிடுவதைக் காண முடிகிறது. இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள மரக்காயர் என்ற சொல், ஆட்பெயரின் பின்னெட்டாக வருவதால் இசுலாம் சமூகத்தினரின் ஒரு பிரிவினராக மரக்காயர்கள் இருப்பர்.

மேற்குறிப்பிட்ட சான்றுகளின் அடிப்படையில் இசுலாமியச் சமயத்தைச் சார்ந்த மரக்காயர்கள், தமிழர்களாகவோ அல்லது தமிழ்மொழி பேசுபவர்களாகவோ இருந்திருக்க வேண்டும் என எண்ணத் தூண்டுகிறது. ஏனென்றால் தமிழகத்தின் தென்மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலுள்ள இவர்கள், தற்போதுவரை தமிழையே தாய் மொழியாகக் கொண்டு பேசி வருகின்றார்கள் என்பதைக் கள ஆய்வுகளின் வாயிலாக அறிய முடிகிறது.

இடைக்காலத்திலேயே மரக்காயர்கள் கடல்சார் வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று, அதன் வாயிலாக பல்வேறு நாடுகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்களாக இருந்திருக்க வேண்டும். இன்றையளவிலும் மரக்காயர்கள் இசுலாமிய சமூகத்தில் பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் என்னவென்று நோக்கும்போது இவர்களின் முதன்மையான தொழிலாக வாணிபம் இருந்து வருகிறது.

மேற்சுட்டிய இசுலாமியர்கள் நவீன காலத்திலும் மரம் வியாபாரம் செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது சிறப்புக்குரியதாகும். ஏனென்றால் மேற்குறிப்பிட்ட முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்திய கல்வெட்டில் குறிப்பிடப்படுகிற மரக்கலநாயர்கள் கி.பி.11ஆம் நூற்றாண்டில் மரக்கலங்களைச் செலுத்துகின்ற மாலுமிகளாக இருந்தமையால் அவற்றை தொடர்ந்து வந்த மரக்காயர்கள் அந்த மரம் சார்ந்த பொருட்களை வியாபாரம் (மரபுசார்ந்த தொழிலாக) செய்து வருவதைத் தற்காலத்திலும் காண முடிகிறது என்பதே சிறப்பு. மேலும், இவர்கள் துணிகள், பட்டுத் துணிகள் மற்றும் வாசனைத் திரவியப் பொருட்கள் போன்றவற்றையும் வியாபாரம் செய்யும் தொழிலையும் செய்து வருகின்றனர் என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவர். இவர்கள் கடலோரப் பகுதிகள் மற்றும் அதன் அருகிலிருந்த நகரங்களில் பிரதானமாக வணிகம்சார் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆதலால்தான் மரக்காயர்கள் இன்றளவிலும் கடற்கரையோரப் பகுதிகளில் வணிகத்தை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதைக் காண முடிகிறது.

கி.பி.14-15ஆம் நூற்றாண்டுகளில் மரக்காயர்கள் இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் தங்களின் குடியேற்றங்களை அமைத்திருந்தனர் என்பதை இப்பகுதியில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. அதேபோன்று கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள நாகூர், நாகப்பட்டினம், சுந்தரபாண்டியப்பட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற பகுதிகளிலும் மரக்காயர்களின் குடியேற்றங்கள் இருந்துள்ளன. இவர்கள் உள்நாட்டிலும், இலங்கை, அரேபியா, இந்தோனேசியா போன்ற அயல்நாடுகளிலும் கடல்சார் வணிகத் தொடர்பினைக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதன் வாயிலாக மரக்காயர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என எண்ணத் தூண்டுகிறது. இவர்கள் வாழ்வின் மேம்பாட்டிற்கு மூலதனமாக அமைந்த வணிகத்தை தங்களின் முதன்மை வாழ்வாதாரமாக கொண்டிருக்க வேண்டும். ஆகவே இனி வரும்காலங்களில் கூடுதலான கள ஆய்வு மேற்கொள்வதன் மூலம் மரக்காயர் சார்ந்த ஆவணங்களைக் கண்டறியும்போது, இவர்களின் குடியேற்றங்கள், செயல்பாடுகள், வணிகம் ஆகியவை குறித்து மிகுதியாக அறிய வாய்ப்பு அமையும்.

சான்றெண் விளக்கம்

  1. Jayaseela Stephen, Portuguese in the Tamil coast, Navaijothi, publishing house, Pondicherry, 1998, PP.116-124.
  2. செ.இராசு, மருதுபாண்டியரின் தொண்டிக் கல்வெட்டு, ஆவணம் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992,ப.16 மற்றும் செ.இராசு, தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, 2007, ப.51.
  3. பா.ஜெயக்குமார், தமிழகத் துறைமுகங்கள் (இடைக்காலம்), அன்பு வெளியீட்டகம், தஞ்சாவூர், ப.192.
  4. எ.சுப்பராயலு, சுமத்ராவில் தமிழ்க் கல்வெட்டுகள், ஆவணம் 4, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1994,பக்.116 – 124.
  5. செ.இராசு, தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, 2007, ப.98.
  6. மேலது, ப.155.
  7. மேலது, பக்.165-167.
  8. மேலது, பக். 54-55
  9. மேலது, பக்.76-78.
  10. வீ.செல்வகுமார், ஆ.ராஜா, சு.இராசவேலு, வட்டானம் கல்வெட்டுகள், ஆவணம் 23, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2012, பக்.162 – 163.

=================================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

கடல் கடந்து வணிகத்தில் ஈடுபட்ட இசுலாமியர் பற்றிச் சில தமிழ் கல்வெட்டுகள் அறியக் கிடக்கின்றன. இவை இவர்கள் தமிழகப் பகுதியில் இருந்து வணிகம் செய்ததற்குச் சான்றாகும். இதில் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர்கள் மரக்காயர்கள். ஆனாலும் மரக்காயர் பற்றிய கல்வெட்டுகள் மிகக் குறைவே.
மரக்காயர்களை பற்றி அதிகக் கல்வெட்டுச் செய்தி இல்லாமையைப் போக்கும் வகையாக திருவாடானை வட்டத்தில் வட்டானம் என்ற இடத்தில் மூன்று மரக்காயர் கல்லறைக் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள செய்தி இதற்குப் புதிய ஒளியைப் பாய்ச்சுவதாக உள்ளது.
இவருடைய இந்தக் கட்டுரை இது காறும் இசுலாமியர் பற்றி  அறியப்படாத செய்திகளை நமக்கு வழங்குவது சிறப்பு. ஆனாலும் ஒரு குறை இசுலாமியர் சோழர் ஆட்சியிலேயே  தமிழகத்தில் இருந்திருந்தாலும் ஆசிரியர் முன்வைக்கின்ற செய்திகள், சான்றுகள், இசுலாமியரை தென் தமிழ்நாட்டவராகவே குறிப்பாக பாண்டிய நாட்டவராகவே அடையாளப்படுத்துகிறது. ஏன்? இது மதுரையில் இசுலாமியர் ஆட்சி சில காலம் நிலைபெற்று இருந்ததனால் ஏற்பட்ட விளைவா?

மரக்காயர்களின் தாய்மொழி தமிழ் எனக் கொள்வதற்கான தரவுகள் எங்கே? இது தொடர்பான கள ஆய்வு விவரங்கள், ஆய்வு நிகழ்த்தியோர், ஆய்வுக்கு உட்பட்டோர், ஆய்வுக் காலம் போன்ற தரவுகள், சான்றுகளைத் தருதல் வேண்டும். ஆய்வாளர் பல இடங்களில் தம் கணிப்புகளை உரிய சான்றுகள் இல்லாமல் அளித்துள்ளார். முன்வைக்கும் ஒவ்வொரு செய்திக்கும் சான்று அளிப்பது, சீரிய ஆய்வு நடைமுறையும் நெறிமுறையும் ஆகும்.

மரக்காயர்களின் வணிகத் தொடர்புகள் பற்றிய பகுதியில் சில நாடுகளை ஆய்வாளர் சுட்டுகிறார். நியூசிலாந்தில் தமிழ் எழுத்தில் இசுலாமிய வணிகர் பெயர் பொறித்த மணி கிடைத்துள்ளதை ஆய்வாளர் கவனித்திருக்கலாம். சுட்டி – https://www.booksfact.com/history/600-years-old-tamil-bell-new-zealand.html

=================================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *