ஏடுகாத்த ஏந்தல் – சி. வை. தாமோதரனார்
-மேகலா இராமமூர்த்தி
தமிழ்நூல்கள் பதிப்புக் குறித்த காலத்தைக் கணித்திருக்கும் ஆய்வாளர்கள், 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியை உ.வே. சாமிநாதையர் காலம் என்றும் மூன்றாய்ப் பிரித்துள்ளனர்.
பதிப்புத்துறைக்குத் தொண்டாற்றிய இம்மூன்று அறிஞர்களுக்கிடையில் நெருங்கிய தொடர்பும் இருந்திருக்கின்றது. உ.வே.சா. தம்முடைய 33ஆவது அகவையில் தாமோதரம் பிள்ளையைச் சந்தித்திருக்கின்றார். அப்போது அச்சுத்துறை அவருக்கு மிகவும் புதிது. தாமோதரம் பிள்ளையின் சந்திப்புதான் தமக்கு அச்சிடும் ஊக்கத்தை அளித்தது என்பதை உ.வே.சா.வே 1887இல் வெளியிட்ட தம்முடைய சீவக சிந்தாமணி முதற்பதிப்பு முன்னுரையில் பின்வருவாறு குறிப்பிடுகிறார்:
”சீவகசிந்தாமணி நூலையும் உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்தற்கு விருப்பமுடையேன் ஆயினும் இவற்றை விரைவில் பதிப்பித்து பிரகடனம் செய்யும்படி யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் பலமுறை என்னைத் தூண்டினமையால் விரைந்து அச்சிடத் துணிந்தேன்” என்கிறார்.
இவ்வாறு பதிப்புத்துறையின் முன்னோடிகளில் ஒருவராய்த் திகழ்ந்த பெருமைக்குரியவரான சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள், இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவநாதப் பிள்ளை, பெருந்தேவி இணையரின் திருமகனாய், 1832ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் பிறந்தார்.
தம் தந்தையாரிடத்திலேயே வாக்குண்டாம், நன்னெறி முதலிய நீதி நூல்களையும், திவாகரம், உரிச்சொல் நிகண்டு போன்ற ஏனைய நூல்களையும் பயின்றார். அதே காலக்கட்டத்தில் தமிழ் மீதிருந்த விருப்பத்தால் தம் இருப்பிடத்துக்கு அருகிலிருந்தவரும் அக்காலத்துச் சிறந்த தமிழ் வித்துவான்களில் ஒருவருமான முத்துக்குமார நாவலரிடத்து நைடதம், இராமாயணம், பாரதம், கந்தபுராணம் முதலிய நூல்களுக்குப் பாடம் கேட்டும், இலக்கணப் பயிற்சியில் ஈடுபட்டும் வந்தார். தம் ஆசான் முத்துக்குமார நாவலரிடத்துத் தாம் கொண்ட பெருமதிப்பின் காரணமாகப் பிற்காலத்தில் தாம் பதிப்பித்த தொல்காப்பியத்தின் ஆசிரிய வணக்கத்தில்,
”கற்றறி வில்லாக் கடையனேன் தனக்கு
நற்றமிழ் கொளுத்திய நாவலன் சுன்னை
முத்துக் குமார வித்தகன் அடியிணை
சித்தத் திருத்தி…” என்று போற்றியிருப்பது தாமோதரனாரின் குருபக்திக்கு அருஞ்சான்றாய்த் திகழ்கின்றது.
தமிழ்க்கல்வியோடு, மேனாட்டு ஆங்கிலக் கல்வியிலும் புலமைபெற விரும்பிய தாமோதரனார் தெல்லிப்பளை(Tellippalai) அமெரிக்க மிஷன் பள்ளியில் சேர்ந்து பயின்றார். சைவராகப் பிறந்த சி.வை.தா., ஆங்கிலக் கல்வி பெறுவதற்காகக் கிறித்தவராக மதம் மாறினார். மேனாட்டு கல்வி அக் காலத்தில் கிறித்தவர்களுக்கே கற்பிக்கப்பட்ட நிலையில், தாமும் மதம் மாறி அக்கல்வியைப் பெற்றிருக்கின்றார். கிறித்தவராக மாறியபோது அவருடைய பெயர் C.L.W. Kingsbury என்பதாகும். பின்னர், ஆறுமுக நாவலரின் செல்வாக்கால் மீண்டும் சைவ சமயத்துக்கு மாறி, தாமோதரம் பிள்ளையாகவே நிலைத்தார் என்று அறிகின்றோம்.
ஆங்கிலத்தில் உயர்கல்வியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். அங்குக் கணிதம், தமிழ், ஆங்கிலம், தத்துவம், தருக்கம் போன்ற பாடங்களில் முதல் மாணவராய் விளங்கினார் அவர். தம்முடைய 20ஆவது வயதில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கோப்பாயிலிருந்த பள்ளியில் பிள்ளையவர்கள் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அக்காலத்திலேயே குமரகுருபரர் எழுதிய ‘நீதிநெறி விளக்கம்’ எனும் நூலின் உரையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலிருந்த பெர்சிவல் பாதிரியார் தாமோதரம் பிள்ளையின் தமிழ் அறிவைக் கேள்விப்பட்டு அவரைச் சென்னைக்கு அழைத்து தினவர்த்தமானி எனும் இதழின் ஆசிரியராக்கினார். அவ்விதழைச் சிறப்பாக நடாத்திய தாமோதரனார், அதில் தனித்ததொரு வசனநடையைக் கையாண்டார். ஆங்கிலேயர்கள் சிலருக்கும் அச்சமயத்தில் அவர் தமிழ்க்கல்வி கற்பித்துவந்தார். அதனையறிந்த ஆங்கில அரசு, இன்று மாநிலக் கல்லூரி என்றழைக்கப்படும் அன்றைய சென்னை இராஜதானிக் கல்லூரியில் தமிழாசிரியராக அவரை நியமித்து மகிழ்ந்தது.
பிறகு கள்ளிக்கோட்டை அரசினர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது தாமோதரம் பிள்ளைக்கு. அப்பள்ளியில் பணியாற்றியபோது அவர் பல சீர்திருத்தங்கள் செய்து நிர்வாகத் துறையிலும் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்கு அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளர் (Auditor) பதவியும், அப்பதவியில் காட்டிய திறமையினால் விசாரணைக்கர்த்தர் (Superintendent) பதவியும் வந்துசேர்ந்தன.
எப்பணியை மேற்கொண்ட போதினும் தமது ஓய்வு நேரங்களில் பழைய நூல்களை ஓலைச்சுவடிகளில் விடாது பயின்றுவந்தார் தாமோதரம் பிள்ளை. அச்சுவடிகள் ஓரம் சிதைந்தும், இதழ் ஒடிந்தும், சீரழிந்து மிருந்தன. அச்சுவடிகளைச் சீராக்கி அச்சேற்றிப் பதிப்பிக்க வேண்டியது தம் தலையாயப் பணி என்று கருதினார் பிள்ளை. ஏற்கனவே தம் இருபதாம் அகவையில் நீதிநெறி விளக்கத்தை அச்சிட்டு வெளியிட்டிருந்தமையால், அவருக்கு இப்பணி சுமையாகத் தோன்றவில்லை. எனினும் எந்நூலையும் நாவலரவர்கள் பரிசோதித்தலே நன்றெனக் கருதி அவருக்கே பிள்ளை உதவிசெய்து வந்தார்.
இந்த நெருங்கிய தொடர்பால் நாவலர் பரிசோதித்தளித்த தொல்காப்பியச் சொல்லதிகாரத்தைத் தம் பெயரில் 1868இல் வெளியிட்டார் தாமோதரம் பிள்ளை. தொல்காப்பியத்தைத் தாம் பதிப்பித்த காரணத்தை விளக்கவந்த தாமோதரம் பிள்ளையவர்கள்,
”பன்னீராயிர வருஷ காலத்தின் மேற்பட நிலைபெற்றோங்கித் தமிழுக்கோர்த் தனிச்சுடர்போலப் பிரகாசித்துவரும் தொல்காப்பியமும், தற்காலத்து இலக்கணம் கற்போர் அனைவரும் அதன் வழித்தோன்றிய சிற்றிலக்கணங்களையே கற்று அம்மட்டோடு நிறுத்திவிடுதலால், எழுதுவாரும் படிப்பாருமின்றிப் பழம் பிரதிகளெல்லாம் பாணவாய்ப் பட்டும், செல்லுக் கிரையாகியும் சிதைபட்டுப் போக, யாவராயினும் ஒருவர் வாசிக்க விரும்பியவழியும் கிடைப்பது அருமையாகி விட்டது. தமிழ்நாடனைத்திலுமுள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச்சிலவே. அவையும் மிக்க ஈனஸ்திதி அடைந்திருப்பதால் இன்னும் சில வருடத்துள் இறந்துவிடுமென்று அஞ்சியே அதனை லோகோபகாரமாக அச்சிடலானேன்” என்று குறிப்பிடுகின்றார்.
1871ஆம் ஆண்டு பி.எல் தேர்வில் வெற்றிபெற்றார் தாமோதரம் பிள்ளை.
1879இல் ஆறுமுக நாவலர் காலமானார். அன்னாரின் மறைவு தாமோதரம் பிள்ளையவர்களைப் பெரிதும் பாதித்தது என்பதை நாவலரைப் போற்றி அவர் எழுதியிருக்கின்ற இரங்கற்பா நமக்கு, அங்கை நெல்லியென, அறியத்தருகின்றது.
”நல்லைநகர் ஆறுமுக நாவலர்பி றந்திலரேற்
சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
ஏத்துபுரா ணாகமங்க ளெங்கேப்ர சங்கமெங்கே
ஆத்தனறி வெங்கே யறை.”
நாவலரின் மறைவுக்குப்பின் இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிள்ளையவர்கள் அரசுப்பணியிலிருந்து விலகி முழுநேரமும் தமிழ்ப்பணிகளுக்கே செலவிடலானார்.
வீரசோழன் என்றழைக்கப்பட்ட விக்கிரம சோழன் காலத்தில் அவனுடைய கீழ்ப்பொன்பற்றியூரைச் சிற்றரசு புரிந்த புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியத்தைப் பெருந்தேவனார் உரையோடு, பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து, 1881ஆம் ஆண்டு தஞ்சாவூர் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரது சென்னை வித்தியாவர்த்தனி அச்சுக்கூடத்தில் பதிப்பித்தார்.
வீரசோழியத்தைப் பதிப்பித்து அறிஞர் பலரின் பாராட்டைப் பெற்ற தாமோதரம் பிள்ளை, அதற்கு அடுத்த ஆண்டான 1882இல் தணிகைப் புராணத்தின் மூலத்தைப் பதிப்பித்தார். திருவாவடுதுறை ஆதினத்துக் கச்சியப்ப முனிவர் அருளிச்செய்த இப்புராணம், திருவாவடுதுறை ஆதீனத்து மகா சந்நிதானம் சுப்பிரமணிய தேசிகரின் அனுமதியோடு பிள்ளையவர்களால் அச்சிடப்பட்டது. அதே ஆண்டிலேயே இறையனார் அகப்பொருளை நக்கீரர் உரையுடன் பதிப்பித்தார் தாமோதரனார். இந்நூலின் உரை மிகவும் அழகுடைத்தாய்ப் பண்டைக்கால உரைநடைக்குச் சிறந்ததொரு சான்றாய்த் திகழ்ந்துவருகின்றது.
சென்னையிலிருந்து திருக்குடந்தை நகருக்கு 1885ஆம் ஆண்டு சென்று, தமிழ் நூல்களைச் சேகரித்தும் பரிசோதித்தும் வந்த சி.வை.தா., தொல்காப்பியப் பொருளதிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு, பல்வேறு பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து, சென்னை ஸ்காட்டிஷ் அச்சகத்தில் அதே ஆண்டு பதிப்பித்தார்.
பொருளதிகாரப் பதிப்புரையால் தாமோதரம் பிள்ளையவர்களுக்கு அதிக அளவில் பொருளிழப்பு ஏற்பட்டிருக்கின்றது. அதனை ஈடுகட்ட எண்ணி, இந்து நாளேட்டிலும் மற்றொரு விண்ணப்பப் பத்திரத்திலும் ஆங்கிலத்தில் விளம்பரம் செய்தார் அவர். அவற்றைக் கண்ணுற்ற தமிழறிஞர் பலர், தாமோதரம் பிள்ளையவர்களுக்குப் பொருளுதவி புரிய முன்வந்தனர். இதனால் ஊக்கமடைந்த அவர், மேலும் சில நூல்களைப் பதிப்பிக்கத் தொடங்கினார். தொல்காப்பியப் பரிசோதனைக்காகப் பிரதிகள் தேடியபோது ஆறுமுக நாவலரின் கலித்தொகை பிரதியொன்று அவர் கைக்குக் கிட்டியது. அதன் பெருமையினை யுணர்ந்து எவ்வாறாயினும் அதனைப் பதிப்பிக்க எண்ணியிருந்தார்.
தொண்டைமான் புதுக்கோட்டை மகாராஜாவின் மந்திரியாகிய அ. சேஷைய சாஸ்திரியவர்கள், தாமோதரம் பிள்ளை பழம்பெரும் நூல்களைப் பதிப்பிப்பதில் மேற்கொண்டுள்ள இடர்களையும் பொருளிழப்பையும் கண்டு அவரிடம் மிக்க அன்புடையவராய், சங்ககாலப் பேரிலக்கியங்களுள் ஒன்றைப் பதிப்பிக்கப் பொருளுதவி செய்வதாக ஒப்புக்கொண்டு அவ்வாறே உதவினார். அதனடிப்படையில் ’கற்றறிந்தார் ஏத்தும் கலி’யை, பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து ஸ்காட்டிஷ் அச்சகத்தில் பதிப்பித்தார் சி.வை.தா.
’குட்டித் தொல்காப்பியம்’ என்று சிறப்பிக்கப்பட்ட, திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்ட ’இலக்கண விளக்கம்’ எனும் நூலை 1889ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார்.
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாய்க் கருதப்படும் தோலாமொழித் தேவர் எழுதிய சூளாமணியை 1889இல் பதிப்பித்தார் தாமோதரனார்.
பிள்ளையின் அரிய பதிப்புப் பணிகளால் கவரப்பட்ட அன்றைய சென்னை அரசு, 1875இல் அவருக்கு ’இராவ்பகதூர்’ எனும் உயரிய பட்டமளித்துச் சிறப்பித்தது.
1897ஆம் ஆண்டு அகநானூற்றைப் பதிப்பிக்கும்பொருட்டுப் பரிசோதித்துக்கொண்டிருந்தபோது தாமோதரம் பிள்ளையவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆகையால் அந்நூலின் இரண்டாம் பகுப்பான ’மணிமிடைபவளம்’ வரையே அவரால் பரிசோதித்துப் பதிப்பிக்க முடிந்தது.
தாமோதரம் பிள்ளையவர்கள் பல அரிய பெரிய தமிழ்நூல்களைப் பதிப்பித்ததோடல்லாமல் தாமும் சில நூல்களை எழுதி வெளியிட்டிருக்கின்றார்.
கட்டளைக் கலித்துறை, சைவ மகத்துவம், ஆறாம் வாசகப் புத்தகம், ஏழாம் வாசகப் புத்தகம், நட்சத்திர மாலை, ஆதியாகமக் கீர்த்தனம், வசன சூளாமணி, விவிலிய விரோதம், காந்த மலர் அல்லது கற்பின் மாட்சி முதலியன அந்நூல்கள்.
தமிழறிஞர் உலகம் தாமோதரம் பிள்ளையின் சிறந்த தமிழ்த் தொண்டினைப் பாராட்டி, ‘செந்தமிழ்ச் செம்மல்’ என்ற பட்டத்தை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தது. பதிப்புச் செம்மலாக மட்டுமன்றித் தமிழாசிரியராக, நீதியரசராக இன்னும் தாம் தோன்றிய துறைகளிலெல்லாம் புகழொடு தோன்றிய சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் 1901ஆம் ஆண்டு சனவரி முதல்நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
“பிள்ளையவர்கள் இயற்றிய நூல்கள் இன்று மறக்கப்பட்ட போதினும், பனை ஓலையில் இருந்த பழந்தமிழ் ஏடுகளைப் பெருமுயற்சியுடன் படித்து முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்ட அவருடைய அரிய தொண்டு மறக்கப்படவில்லை” என்று தமிழறிஞர் மு. வரதராசனார், தாமோதரம் பிள்ளையின் தமிழ்ப்பணியைப் போற்றியுள்ளமை நினைவுகூரத்தக்கது.
“பதிப்புப் பணியிலும், அதனையொட்டிய மூலப்பாடத் திறனாய்விலும் (Textual Criticism) சி.வை.தாமோதரம்பிள்ளை மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்” என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் சி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து, நிலையம் கோலியவர் உ.வே.சா.” எனத் தமிழ்ச் சான்றோர் இம்மூவரின் தொண்டையும் மதிப்பீடு செய்திருப்பது பொருத்தமாகவே இருக்கின்றது.
“தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்ற எவர்
தாமோ தரம் உடையார்” என்று அவருடைய தமிழ்ப்பணியைச் சுவைபடப் பாராட்டியுள்ளார் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர்.
பண்டைய இலக்கிய நூல்கள் பலவற்றை மீட்டெடுத்துத் தந்த பெரும் பேராசிரியரும், தென்னகக் கலைச்செல்வருமான உ.வே.சா.வை நாம் மறவாமல் போற்றுவதுபோலவே, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம் முதலிய அருமையான இலக்கண நூல்களையும், கற்றறிந்தார் ஏத்தும் கலி, சொற்சுவைமிகு சூளாமணி, அகமினிக்கும் அகநானூறு என அற்புதமான இலக்கிய நூல்களையும் முதன்முதலில் பதிப்பித்து, தமிழ் ஏடுகாத்த ஏந்தலான ஈழத்துத் தாமோதரனாரின் அரும்பணியையும் நன்றியோடு நினைவுகூர்ந்து போற்றுதல் தமிழ்மாந்தர் தம் கடனாகும்.
கட்டுரைக்குத் துணைநின்றவை:
- சி_வை_தமோதரம்_பிள்ளை_வாழ்வும்_பணியும்.pdf
- https://ta.wikipedia.org/wiki/சி._வை._தாமோதரம்பிள்ளை
- https://www.dinamani.com/editorial-articles/2009/jul/05/பதிப்புச்-செம்மல்-சிவைதாமோதரம்-பிள்ளை-35204.html