குறளின் கதிர்களாய்…(276)
செண்பக ஜெகதீசன்
பண்புடையார் பட்டுண் டுலக மதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
-திருக்குறள் -996 (பண்புடைமை)
புதுக் கவிதையில்…
பண்புடையாரோடு
பொருந்தி இருப்பதால்தான்
நிரந்தரமாய்
நிலைபெற்றிருக்கிறது உலகம்..
பொருந்தாதிருப்பின்,
வருந்தி
மக்களெல்லாம்
மண்ணினுள் புதைந்து
மாண்டுபோவது உறுதி…!
குறும்பாவில்…
பொருந்தியிருப்பதால் பண்பாளர் தம்மொடு,
புவியது நிலைத்திருக்கும், இல்லையேல் மக்கள்
மாய்ந்திடுவர் மண்ணில் புதைந்து…!
மரபுக் கவிதையில்…
பெருமை மிக்க பண்புடையோர்
பக்கம் நன்றாய்ப் பொருந்தியேதான்
இருக்கும் தன்மை ஒன்றினால்தான்
இவ்வையம் நின்று நிலைக்கிறதே,
உருவினில் பெரிய உலகமதில்
உய்யும் மாந்தர் எல்லோரும்
ஒருங்கே மண்ணில் புதைந்தழிவர்
ஒப்பிலாப் பண்பது இலையெனிலே…!
லிமரைக்கூ..
நின்றிடும் உலகமது நிலையாய்
பண்புடையோ ருடன்பொருந்தி, இலையெனிலழிவர்
மண்ணினுள் மக்கள் விலையாய்…!
கிராமிய பாணியில்…
பண்பிருக்கணும் பண்பிருக்கணும்
மனுசனுக்கு பண்பிருக்கணும்,
ஒலக வாழ்க்கயில
நல்ல பண்பிருக்கணும்..
நெலயா ஒலகம்
நிக்கக் காரணமே
அது
பண்புள்ளவங்கக் கூட
பொருந்தியிருப்பதனால மட்டும்தான்,
இல்லன்னா
ஒலகத்து மக்களெல்லாம்
மண்ணுல பொதஞ்சி
மாண்டு போயிருவாங்க..
அதால
பண்பிருக்கணும் பண்பிருக்கணும்
மனுசனுக்கு பண்பிருக்கணும்,
ஒலக வாழ்க்கயில
நல்ல பண்பிருக்கணும்…!