எங்கே வந்தாய் சந்நியாசீ?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
எங்கே வந்தாய் சந்நியாசீ?
எங்கே போகிறாய் சந்நியாசீ?
ஓடும் ஆறும், வீசும் காற்றும்,
விரிந்த விண்ணும், பறக்கும் புள்ளும்
உந்தன் தோழர்கள் சந்நியாசீ.
உதிரும் இலைகள் உன் உணவானால்
ஓடும் நதியும் உன் நீராகும்.
அமர்ந்த இடமே ஆசனமாய்,
அயர்ந்த இடமே சயனமதாய்
உருளும் வாழ்க்கையில் ஒட்டாமல்
மருளும் போக்குகள் தட்டாமல்,
வேடிக்கை பார்த்துப் போவாய் நீ!
வினோத உலகிது சிரிப்பாய் நீ!
நண்பர்கள் இல்லை
பகைவர்கள் இல்லை
ஞாயிறு தருகின்ற பாடம் இது.
புன்மைகள் இல்லை
பொறாமைகள் இல்லை
நீலவானத்தின் நீதி இது.
விருப்பும் இல்லை
வெறுப்பும் இல்லை
வீழும் மழையின் அன்பு இது.
போகின்றவரையில் போய்க்கொண்டே இரு.
போகின்றபோது வருவது எது?
எங்கே வந்தாய் சந்நியாசீ?
எங்கே போகிறாய் சந்நியாசீ?
————————————————————————
படத்துக்கு நன்றி – https://www.maxpixel.net