Category: தொடர்கள்

  • பழகத் தெரிய வேணும் – 41

    பழகத் தெரிய வேணும் – 41

    நிர்மலா ராகவன்

    நேயத்தை உணர்த்தும் இயற்கை

    மனிதருக்கு மனிதர் எத்தனையோ விதங்களில் மாறுபட்டாலும், பிறரை நாடவேண்டியிருக்கும் சூழ்நிலைகள் அமையாமலில்லை.

    அண்மையில் உலகம் முழுவதும் பரவியிருக்கும் தொற்றுநோய் ஒரு நன்மையையும் விளைவித்திருக்கிறது.

    எந்த நாடாவது, `இது என் சொந்தப்பிரச்னை. பிறர் தலையீடு அவசியமில்லை!’ என்று இப்போது முறுக்கிக்கொள்கிறதா? போர், போட்டி, பொறாமை எல்லாமே சற்று ஒதுங்கி உள்ளன.

    `மனிதா, உன் நேயம் எங்கு தொலைந்தது?’ என்று இயற்கை நமக்கு உணர்த்தும் பாடமோ இது?

    எல்லா உயிர்களிடமும் அன்பு வைப்பதே நற்குணமுடைய மனிதர்களுக்கு அடையாளம்.

    எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறது ஒரு பூனை. நாளுக்கு நாள் இளைத்துக்கொண்டே வருவதைப் பார்த்தால், அதற்குச் சரியான ஆகாரம் கிடைக்கவில்லை என்று புரிகிறது.

    `முதலில் ஆரோக்கியமாக, குண்டாக இருந்ததே?’ என்று யோசித்தபோது ஒன்று புரிந்தது.

    குட்டியாக இருந்தபோது, அப்பூனையின் விளையாட்டுத்தனத்தில் சிரித்து மகிழ்ந்து வளர்த்தவர்கள் அதற்கு வயதாகிவிட்டதும், துரத்திவிட்டார்கள்!

    வயதான பெற்றோரையே பராமரிக்க மறுக்கும் உலகமல்லவா இது?

    அண்மையில், ஒரு பொது இடத்தில், `என் பர்ஸ் தொலைந்துவிட்டது. வீடு திரும்ப காசு வேண்டும்,’ என்று முதியவர் ஒருவர் பணம் கேட்டார்.

    (இதே காரணம் காட்டி, ஓர் இளம்பெண் காசு கேட்டபடி இருந்தாள் ஒரு பேரங்காடியில்).

    இவர்கள் குண்டர்களிடம் மாட்டிக்கொண்டவர்களாக இருக்கலாம். அப்பாவி மனிதர்களின் பரிதாபத்தைத் தூண்ட அப்படிச் சொல்லிக்கொடுத்து, அனுப்பியிருப்பார்கள்.

    நாம் பணம் கொடுக்காவிட்டால் என்ன ஆகும்?

    `சம்பாதிக்கத் துப்பில்லையே!’ என்று அடிப்பார்களாம், பட்டினி போட்டு.

    அந்த நிலை ஒரு முதியவருக்கு வரக்கூடாது என்று இரங்கி, சிலர் கைநிறையக் கொடுத்தார்கள்.

    மிருக நேயம்

    எங்கள் வீட்டுப் பூனை தொலைக்காட்சியில் ஏதாவது உணர்ச்சிகரமான காட்சி (சண்டை அல்லது துக்கம்) வந்தால், பின்னணி இசையைப் பொறுக்க முடியாது, என்னை அடிக்கும். அன்பைத்தவிர வேறு எதையும் அறியாத பூனை அது.

    நான் எழுதிக்கொண்டிருந்த கதையில், ஒரு பணிப்பெண் தன் பொறுப்பிலிருக்கும் குழந்தையைக் கொன்று புதைத்துவிடுகிறாள் என்ற கட்டம் வந்தது. துடித்தபடி என்னிடம் வந்தது அந்தப் பூனை. தான் அறியாத, தனக்குச் சம்பந்தமே இல்லாத ஓர் உயிரின் அவலமான நிலை அதன் நுண்ணிய அறிவுக்கு எட்டியிருக்கிறது!

    `ஒண்ணுமில்லேம்மா!’ என்று அதைத் தடவி சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.

    மொழி புரிகிறதோ, இல்லையோ, `பரிவு’ `பச்சாதாபம்’ போன்ற குணங்கள் மிருகங்களுக்கும் புரியும். அவற்றை குருடர்களும் பார்க்க முடியும், செவிடர்களுக்கும் அது கேட்கும்.

    “எனக்கு மனித நேயம் பிடிக்கும். மனிதர்களைத்தான் பிடிக்காது!” என்கிறார் ஐன்ஸ்டீன். அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

    எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மனிதத்தன்மையே இல்லாது நடப்பவர்கள் மலிந்துவிட்ட காலமல்லவா இது!

    வேடதாரிகள்

    தனது சுயரூபத்தை மறைத்து, நாடகம் ஆடுகிறவர்கள் உண்மையில் தைரியசாலிகள் இல்லை.

    `எனக்குக் கடவுள் பக்தி அதிகம்!’ என்று பறைசாற்றுவதுபோல் வெளிப்பகட்டு காட்டுகிறவர் பிறருடைய நன்மைக்காக ஏதாவது செய்கிறாரா என்பது கேள்விக்குறி. (இதனால்தான், `உலகம் ஒரு நாடகமேடை’ என்கிறார்களோ?)

    இத்தகையவரைவிட, `நான் கடவுளை நம்புவதில்லை, எனக்கு மதமெல்லாம் கிடையாது!’ என்று சொல்லிக்கொண்டாலும், சகமனிதர்களுக்காக இரக்கப்பட்டு, பிரதி உபகாரம் எதிர்பாராது தம்மாலான உதவி செய்பவரே மேலானவர்.

    `அசோக சக்கரவர்த்தி சாலைகளில் மரம் நட்டார்’ என்று சிறு வயதில் உருப்போட்டபோது, அச்செய்கையில் என்ன சிறப்பு என்று புரியவில்லை.

    அந்த மரங்கள் அவர் வாழ்நாளிலேயே பெரிதாக வளர்ந்து, அவருக்குப் பயன்படும் என்ற எதிர்பார்ப்பிலா செய்தார்?

    நற்காரியம் செய்யும் துணிச்சல்

    சில சமயம், நல்ல காரியம் செய்யக்கூட யோசிக்க வேண்டியிருக்கிறது, `இதனால் நமக்கு ஏதாவது கெடுதல் விளையுமோ?’ என்று.

    அங்குதான் துணிச்சல் தேவைப்படுகிறது.

    `நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே!’ என்று பேசிப் பேசி என்ன பயன்?

    சவால்களிலிருந்து விலகிவிடுவது எளிது. அவைகளை எதிர்கொண்டால்தான் பலன் கிடைக்கும்.

    கதை

    என் மூன்று வயது மகன் சசியை பாலர் பள்ளியில் துன்புறுத்தினாள் ஆசிரியை ஒருத்தி.

    அதன் விளைவாக, ஏதாவது உரத்த குரல் கேட்டாலே, அச்சத்துடன் இரு காது மடல்களையும் பிடித்துக்கொள்வான். ஓயாது பயந்ததால் உடல் மிகவும் இளைக்க, அவனுடைய தந்தை அந்த ஆசிரியையிடம் கெஞ்சலாகக் கூறினார், ஒன்றுமறியாத அப்பாலகனை அப்படித் தண்டிக்க வேண்டாமென்று.

    அதன்பின், அவளும் அப்படித் தண்டிக்கவில்லை. ஆத்திரத்துடன், அன்றே அவனைக் கழிப்பறையில் தள்ளி, வெளியே பூட்டிவிட்டாள்.

    (அந்த நிகழ்ச்சியை நான் விவரித்தபோது, `நல்லவேளை, என் குழந்தைகளுக்கு இந்தமாதிரி நிகழவில்லை!’ என்ற அற்பதிருப்தி அடைந்தாள் என் சக ஆசிரியை ஒருத்தி.

    அவளுக்குத் துன்பம் வரும்போது பிறர் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது மட்டும் என்ன நியாயம்?

    அவளைப்போன்றவர்கள் எளிதில் மனம் உடைகிறவர்கள். பயந்தாங்கொள்ளிகள்).

    வீடு திரும்பியதும், உணர்ச்சிக்கொந்தளிப்புடன் குழந்தை கூறியது எனக்குப் புரிந்தது.

    விடுமுறை நாட்களிலும், பள்ளிச்சீருடை அணியவேண்டும் என்று அடம் பிடிப்பவன், பள்ளியிலிருந்து திரும்பியதுமே, “யூனிஃபார்ம் ஸ்டுபிட்!” என்று கதறியபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில், “சசி?” என்று மட்டும்தான் கேட்கமுடிந்தது. அப்போதுதான் தெரிவித்தான், “Teacher lock Sashi in the toilet,” என்று.

    பிறகு ஒரு சிறுவன் கூறினான், `சசியை டீச்சர் டாய்லெட்டுக்குள் வைத்துப் பூட்டினாள். நாங்கள் எல்லாரும் அழுதோம்!’ என்று.

    சிறுகுழந்தைகளுக்கு இருக்கும் மன ஒற்றுமை, பச்சாதாபம், வளர்ந்தவர்களுக்கு ஏனோ மறைந்துவிடுகிறது.

    நடந்த அசம்பாவிதத்தைப்பற்றி தினசரிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். எழுதுமுன், பிறர் எச்சரித்தார்கள், அப்பள்ளியை நடத்தும் சீனப் பெண்மணி குண்டர்களைவிட்டு குடும்பத்திற்கு ஏதாவது கெடுதல் விளைவித்துவிடுவாள் என்று. ஆனால், நான் பின்வாங்கவில்லை.

    ஆற்றை நீந்தியே கடக்க ஆரம்பித்தபோது, புறப்பட்ட கரையையே திரும்பித் திரும்பிப் பார்க்கலாமா?

    பிரசுரிக்கிறார்களோ, இல்லையோ, துணிந்து அனுப்பினேன்.

    “எதற்கெல்லாம் அஞ்சக்கூடாது என்ற தெளிவுதான் துணிச்சல்” (கிரேக்க ஞானி பிளேட்டோ).

    பல நாட்கள் கழித்து அது வெளியாகியது. விசாரித்திருப்பார்கள்.

    உடனே அந்தப் பள்ளித் தலைவியை தினசரியின் நிருபர் பேட்டி கண்டார், `அவளுடைய சிரிப்பு மாறவேயில்லை,’ என்ற குறிப்புடன். (நான் எந்தப் பள்ளி என்று குறிப்பிட்டிருக்கவில்லை).

    விரைவிலேயே, பெற்றோரிடமிருந்து நிறையச் சம்பளம் வசூலித்துவந்த அந்த `உயர்ந்த’ பள்ளி மூடப்பட்டது.

    ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி எனக்குக் கிடைத்தது. இல்லாவிட்டால், கேட்பாரின்றி இன்னும் எத்தனை குழந்தைகள் வதைக்கப்பட்டிருப்பார்களோ!

    தம்மைப் பிறர் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் அதைப்பற்றிப் புகார் சொல்லும் குணம் குழந்தைகளுக்குக் கிடையாது. இதுவே வதை செய்பவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது.

    அம்மாதிரி சந்தர்ப்பங்களில்தான் நாம் `காளி அவதாரம்‘ எடுத்து, தமக்கே உதவி செய்துகொள்ள முடியாதவர்களின் பிரச்னைகளில் மூக்கை நுழைக்கவேண்டியிருக்கிறது.

    சசிக்குத்தான் வருத்தம், அம்மாவிடம் ஏன் உண்மையைச் சொன்னோம், தன் வயதையொத்த நண்பர்களுடன் விளையாட முடியவில்லையே என்று.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 28

    கதை வடிவில் பழமொழி நானூறு – 28

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 57

    கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
    பொல்லாத தில்லை ஒருவற்கு – நல்லாய்!
    ‘இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை,
    ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’.

    பழமொழி -‘இழுக்கத்தின் மிக்க இழிவில்லை’, ‘இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’

    அக்கம்பக்கத்து வீடுகள்ல எங்கயோ காலையிலிருந்தே சண்டை. காலங்காத்தால ரம்யமான சேவல் கூவற சத்தத்தக் கேட்டு கண்விழிச்சதுதான் தாமதம். வாசல்ல ஒரே சலசலப்பு. இந்த ஊர்ல இது சகசம்தானேன்னு விட்டுட்டேன்.

    தினமும் பொழப்பில்லாம ரெண்டு பேர் சண்ட போடறதப் பாக்கவே துண்ட கக்கத்துல இடுக்கிக்கிட்டு வந்து நின்னு பாக்கற வெத்துவேட்டுகளுக்கு நடுவுல நானும் ஒண்ணா நின்னு பாக்க விருப்பப்படல.  இது ஒரு விவசாயக் கிராமம்னு சொன்னா கேக்கறதுக்கு நல்லாதான் இருக்கு. ஆனா இந்தத் தெருவுல இருக்கறதுல பாதிபேர் முதலாளி வர்க்கம். அவங்க தன் சொந்த வயல்ல இறங்கி வேலை பாக்க மாட்டாங்க. வெறும் மேற்பார்வை மட்டுந்தான். சாப்பிட்டுட்டு சும்மா உக்காந்து இருக்குற இந்தக் கூட்டந்தான் தினமும் யாரை வம்புக்கு இழுக்கனு உறண்டிகிட்டு நிக்கும். நல்ல வேளை கல்லூரி படிப்புங்கற பெயர்ல வெளியூர் ஹாஸ்டல்ல தங்கி படிக்கறது நல்லதாப் போச்சு. அப்பப்ப இங்க வந்து பொழுதுபோக்க இவங்க நடவடிக்கையப் பாத்துட்டுப் போயிடலாம். இருந்தாலும் இந்த ஊருக்கு நாம ஏதாவது செய்யணும்….. யோசிச்சுக்கிட்டே வீட்டுக்குள்ள நடந்துக்கிட்டு இருந்தேன்.

    அம்மாகிட்ட வாசல்ல என்ன சத்தம்னு கேட்டுத் தெரிஞ்சுக்கலாமா மனசு சொல்லியது. வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு வர அம்மா நான் கேட்டதுக்கு ஒண்ணுமே சொல்லாம குளிக்கக் கிளம்பிட்டாங்க. அதுக்குமேல தொடர விருப்பமில்லாம மொட்டைமாடிக்கு ஏறிப்போனேன். காலைநேர சூரியன் அழகாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தான். பறவைகள் எல்லாம் பிரேக்பாஸ்ட் சேகரிக்க பறந்துக்கிட்டு இருக்கு. எங்க வீட்டு பப்பாளி மரத்துல அணில் கூட ஓட ஆரம்பிச்சிடுச்சு. பக்கத்துவீட்டு அத்தை வத்தல் போடறதுக்காக மேல வந்து பார்வையிடறாங்க. வேட்டித் துணிய விரிச்சு அது பறக்காம இருக்க கல்ல வச்சிட்டு என்னயக் கூப்பிடறாங்க. நானும் சுவர் ஏறிக்குதிச்சு அவங்க வீட்டுப்பக்கம் போறேன்.

    தம்பி திரும்பத் திரும்ப ஏறி இறங்க முடியல. என் கூட வந்து சாமான்கள் எடுத்துக் குடேன்னு சொன்னதால அவங்க கூட போய் காக்காய் விரட்ட கருப்புக் குடை, வத்தல் கூழ கிண்டிவுட ஒரு கரண்டி, தண்ணி மூணையும் நான் எடுத்துக்கிட்டேன். அத்தை சூடானகூழ துணியவச்சு லாவகமா எடுத்துட்டு  மேல ஏறறாங்க. நானும் அவங்க பின்னாலயே போய் சாமான வச்சுட்டு நிக்கறேன். கைய நீட்டச்சொல்லி ஒரு கரண்டி வத்தல் கூழ வாயால ஊதி என்கையில உடறாங்க.

    நான் நக்கி சாப்பிட்டுக்கிட்டே அவங்க வத்தல் போடற விதத்தப் பாத்துட்டு நிக்கறேன். பக்கத்து கம்பத்துல நிக்கற காக்கா பொறாமையோட என்னயப் பாத்துட்டு அவங்க சொந்தத்தையெல்லாம் கத்திக் கூப்பிடுது. இவங்ககிட்டயே கேக்கலாமேனு நினைச்சு கீழ என்ன சத்தம். யார் சண்டபோட்டுக்கிட்டாங்கனு கேட்டதுதான் தாமதம் அத்தை பொலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.

    அத ஏம்பா கேக்கற. நம்ம பக்கத்துவீட்டு அலமுவும் அவளுக்கு அடுத்தவீட்டு செல்லாவும் தான் கத்திக்கிட்டிருந்தாங்க. செல்லா வீட்ல நாலுநாள் முன்ன அவங்க மாமியார் செத்துட்டாங்கல்ல அப்ப பூவெல்லாம் தூவி அமக்களப் படுத்தி தூக்கிட்டுப் போனாங்க.  வாசல்ல பாடையில பிணத்தை வச்சி கட்டறதுக்காக வைக்கல் கயிறு திரிப்பாங்கயில்ல அப்பத்துலேந்து இவங்க வீட்டு வாசல்ல வைக்கல் விழுந்திரிச்சு, பூ விழுந்திரிச்சுனு ஒரே ஆர்ப்பாட்டமாம். பிணத்த தூக்கிட்டுப் போனவுடனே கழுவி உட்ட தண்ணி தன் வீட்டுக் கோலத்த அழிச்சிடுச்சுனு அழுதாளாம். அதுலேந்து அவளுக்கு மனசே சரியில்லயாம். அதனால தினமும் செல்லாவ வாசல் தெளிக்கவுடாம கத்திக்கிட்டே இருக்கா. நாங்களும் சொல்லிப்பாத்தோம்.

    காலையில நான்தான் எதிர்வீட்டு டீச்சரக் கூப்பிட்டு இதுங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம்னு ஆரம்பிச்சேன். என்ன பிரச்சினை அலமுனு டீச்சர் கேட்டவொடனயே ஆரம்பிச்சிட்டா.

    எழவு வீட்டுத்தண்ணி எங்க வீட்டு கோலத்துப்பக்கத்துல தினமும் வரதால எங்க வீட்ல பல பிரச்சினைகள் தொடங்கிருச்சு. வர வர ராத்திரி தூக்கமே வரமாட்டேங்குது. நல்லா சாப்பிட்டுட்டு இருந்த எம்பொண்ணு இப்பயெல்லாம் சரியா சாப்பிடறதேயில்ல. இதெல்லாம் அந்தத் தண்ணிய மிதிச்சதிலேந்துதான் நடக்குது. அதுக்குதான் செல்லாவ பரிகாரம் பண்ணிடுனு சொல்றேன். அவ வீட்டுத் தண்ணி எங்க வீட்டுக்கு வராதபடி நடுமத்தியில மேடுகட்டச்சொல்றேன். அவள் முடிச்சவொடனே செல்லா ஆரம்பிச்சா

    நான் ஏன் மேடுகட்டணும். வானம் பாத்த இந்த பூமியில மழை கொட்டோ கொட்டுனு கொட்டட்டும். எங்க வீட்டு மண்ணயெல்லாம் கரைச்சிக்கிட்டு அவ வீட்டுல கொண்டு சேக்கட்டும்னு சாபம் போட ஆரம்பிச்சா. சண்ட பெரிசா ஆயிடுச்சு. வீட்டு ஆம்பிளைகளும் ஒருத்தருகொருத்தர் திட்டிக்கிட ஆரம்பிச்சாங்க. நிறுத்தறதுக்குள்ள உம்பாடு எம்பாடு ஆகிப்போச்சு.

    பாவம் டீச்சர் ‘இழுக்கத்தின் மிக்க இழிவில்லை’, ‘இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’னு பழமொழி சொல்லிட்டு இந்த மாதிரி ஆளுங்களுக்கு அறிவுரை சொல்லப்போனா நம்மளயும் அவமானப்படுத்தி உட்டுருவாங்கனு வருத்தப்பட்டுட்டுப் போயிட்டாங்க. படிக்காத ஜென்மங்ககிட்ட பேசப்போனது என் தப்புதான். இப்ப பாரு இந்தக் கூழ் முழுக்கயும் போட்டு முடிக்கறதுக்குள்ள வெய்யில் வந்துடும். புலம்பிக்கிட்டே தன் காரியத்தப் பாக்கறாங்க அத்தை.

    அங்க என்னடா பேச்சு. அம்மாவின் குரல் கேட்டுத் திரும்பினேன். அம்மா குளத்துக்குப்போய் துணி துவைச்சு குளிச்சிட்டே வந்துட்டாங்க. துணி காயப் போட மொட்டை மாடிக்கு வந்திருக்காங்க. இதுக்குமேல இங்க நின்னா வசவு விழும். என் வேலையைப்பார்க்க கீழே இறங்கிப்போறேன்.

    பாடல் 58

    முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
    தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்
    ‘இழுகினான் ஆகாப்ப தில்லையே முன்னம்
    எழுதினான் ஓலை பழுது’.

    பழமொழி – ‘இழுகினான் ஆ காப்பதில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுது’

    பொழுது விடிஞ்சாச்சு. இன்னிக்கு எந்தக் கோயிலுக்கு கூட்டிக்கிட்டுப் போகப் போறாங்களோ? ஒருவேளை இன்னிக்கு ஜோசியம் பாக்கப் போகணுமோ?. கடந்த

    ஒரு வருசமா இதுதான் நடந்துக்கிட்டு இருக்கு. இன்னும் கொஞ்சநாள்ல நான் என்ன படிச்சேன்னே மறந்துருவேன் போல. திருச்சியில தங்கி என்ஜினியரிங் படிச்சேன்னு பேரு. அங்கேயும் அம்மா வந்து வீடு எடுத்து சமைத்து போட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்ப என்னடான்னா இந்த சுத்து வட்டாரத்துக்குள்ளயே வேலை தேடிக்கணுமாம். மெட்ராஸ் பக்கம் போகணும்னா அரசாங்க வேலை கிடைச்சாதான்னு சொல்லிட்டாங்க. இங்க கூடி எவ்வளவு முயற்சி பண்ணியும் எம் மனசுக்குப்பிடிச்ச மாதிரி வேலை அமைய மாட்டேங்குது.  ஓரிரண்டு இடத்துல வேலைக்குச் சேந்த பிறகு நான் உட்டுட்டு வந்துட்டேன்னுதான் இந்த ஆர்ப்பாட்டம். இப்ப என் கிரகம் சரியில்லயாம். அதுக்காக கோயில்கோயிலா கூட்டிக்கிட்டு சுத்தறாங்க. ஜோசியக்காரனுக்கு என்ன. அவன் வருமானத்துக்காகத் திரும்பத் திரும்ப வரச் சொல்லி பரிகாரம்னு பெயர்ல ஏதோ பூசை போட்டுட்டு அப்பப்ப ரெண்டு கோயில் பெயரச்சொல்லி இங்க போயிட்டுவந்து என்னயப் பாருங்கனு அனுப்பி உட்டுடறான்.

    யோசிச்சுக்கிட்டே எங்க வீட்டு வாசலில வந்து நிக்கறேன். ஸ்ரீரங்கம் வெள்ளைக் கோபுரம் பக்கத்துல இருக்குது எங்க வீடு. எவ்வளவு அழகான ஊர். ஒரு தடவ காலார நடந்துட்டு வரலாம். காலங்காத்தாலயே எங்கெங்கேயிருந்தோ மக்கள் வர ஆரம்பிச்சிடுவாங்க. ரங்கா ரங்கானு பக்திப் பரவசத்தோட கோயிலுக்குப் போவாங்க. வேடிக்கை பாத்துக்கிட்டே நடந்த என்னய யாரோ கூப்பிடறாங்க.

    என் வயதொத்த பையன்கூட ஒரு ஆண்ட்டி நின்னுக்கிட்டு இருக்காங்க. ரெண்டு பேரும் கழுத்துல துளசி மணிமால போட்டிருக்காங்க. அவங்களுக்குப் பின்னால நிக்கற பஸ்சப் பாத்தா இவங்க இஸ்கான் குரூப்னு தெரியுது. ஆனா இவங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும். யார் இவங்க. யோசிச்சிட்டு இருக்கும்போதே ஏய் சுதர்சனா… உங்க வீடு எங்க இருக்கு. பக்கத்திலதானா. நான் டூர்ல வந்ததால தனியா பிரிஞ்சு வரமுடியாது. உன் ப்ரெண்ட் சாவித்ரி வந்திருக்கானு சொல்லி ரொம்ப பக்கம்னா உங்கம்மாவ சீக்கிரம் கூட்டிக்கிட்டு வாயேன் என்கிறாள்.

    யோசனையோட வீட்டை நோக்கி விருவிருனு நடக்கிறேன். அம்மாக்கு ஆயிரத்தெட்டு பெரெண்ட். காலையிலேந்து ராத்திரி வரை யார் கூடயாவது போன்ல பேசி புலம்பிக்கிட்டேதான் இருப்பாங்க. இவங்க யாரோ.

    விசயத்தைச் சொன்னவொடனேயே அம்மா எல்லாத்தையும் அப்பப்படியே போட்டுட்டு எம் பின்னால வந்துட்டாங்க. எனக்கு எந்த அறிமுகமுமே இல்லாத அந்த ஆண்ட்டி என்னயப் பாத்து

    பாவம் உன் அம்மா. உன்னயப்பத்தி கவலைப் பட்டு எவ்வளவு இளைச்சுப் போயிட்டா. நாள் முழுக்க உன் நினைப்புதான். கொஞ்சம் அம்மாவுக்கு சப்போர்ட்டா இருக்க முயற்சி பண்ணுப்பா என அறிவுரையை உதிர்த்துவிட்டு தன் பையனைப் பார்த்து இவன் கூட கொஞ்சம் பேசி அட்வைஸ் பண்ணுடாங்கறாங்க.

    அவங்க பையன்னு அறிமுகப்படுத்தப்பட்ட நபர் விட்டேத்தியா பேச ஆரம்பிச்சார். கூல் மேன். எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட். ஏதோ இப்போதான் லண்டன்லேந்து வந்து இறங்கினமாதிரி அளப்பறை. எனக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்தது. என்னயப் பாருங்க. நான் டில்லியில கால்சென்டர்ல வேலை பாக்கறேன். நல்ல எக்ஸ்போசர் கிடைக்குதுனு பெருமை வேற அடிச்சிக்கிறாரு.

    பூ  இவ்வளவுதானா. என அந்த நபரை எடை போட்டுவிட்டு அம்மாவப் பாத்துக்கிட்டு நின்னேன்.

    இவனுக்கு விதிச்சது இதுதான்னு இருந்துடவேண்டியதுதான் போல. ஒருவேலையில நிலைச்சு நிக்க மாட்டேங்கறான். நானும் வேண்டாத கடவுள் இல்ல. அவன் விதிய மாத்த இனி படைச்ச கடவுளால கூட முடியாது. . நீயாவது உன் பிள்ளைகூட சந்தோசமா இருனு புலம்பிக்கிட்டு நிக்கறாங்க. அதுக்குமேலயும் கேட்க விருப்பமில்லாம கிளம்பி வந்த நான் ஒரு முடிவோட லெட்டர் எழுதி மேசை மேல வச்சிட்டு என் சென்னை நண்பன் அறிவுரைப்படி அவன் வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்.

    நல்லவேளை எனக்கு அப்டி ஒரு நல்ல நண்பன். விசயத்தச் சொன்ன வொடனேயே  ‘இழுகினான் ஆ காப்பதில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுதுனு பழமொழியே இருக்குடா. எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. நம்ம தலையெழுத்துனு ஒத்துக்கிட்டு அதச் சரிபண்ண அத எழுதின கடவுளமட்டும் கும்பிட்டுக்கிட்டே உக்காந்து இருந்தா எதுவும் சரியாகாது நாமதான் முயற்சிபண்ணணும். நீ முதல்ல கிளம்பி வா. கொஞ்சநாள் உங்கம்மா அழுவாங்க. நல்ல வேலை கிடைச்சப்புறம் முயற்சியால விதியையும் மாத்திடலாம்னு அவங்களுக்குப் புரிஞ்சுடும். அப்டிங்கறான்.

    அவனின் பேச்சைக்கேட்டப்புறம் நான் யோசிச்சேன். நான் நல்லா முன்னேறி திரும்ப வந்தப்புறம் கூட அம்மா அதுக்கும் காரணம் கடவுளும் ஜோசியமும்னு சொல்லுவாங்களோ என்னவோ. சிலபேரைத் திருத்த முடியாது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 104 (விரைசெய்)

    சேக்கிழார் பாடல் நயம் – 104 (விரைசெய்)

    திருச்சி புலவர்  இராமமூர்த்தி

     7. விறன்மிண்ட நாயனார் புராணம்

    பாடல் 1

    விரைசெய்   நறும்பூந்  தொடை  யிதழி வேணி யார்தங் கழல்பரசிப்    
    பரசு    பெறுமா    தவமுனிவன்     பரசி     ராமன்     பெறுநாடு
    திரைசெய் கடலின் பெருவளனுந் திருந்து நிலனின் செழுவளனும்
    வரையின் வளனு முடன்பெருகி மல்கு நாடு மலைநாடு.

    பொருள் 

    வாசனையுடைய கொன்றை  மாலை தரித்த சடையினையுடைய சிவ பெருமானது திருவடிகளைப் பூசித்துப் பெருந்தவஞ் செய்து, பரசு பெற்ற காரணத்தால் பரசிராமன் எனப் பேர்பெற்ற முனிவன் பெற்ற நாடு;  அலைகளை யுடைய கடலிலே படும் பெருவளங்களும், திருந்து நிலங்களின் செழித்த வளங்களும், மலைகளினுடைய இனிய வளங்களும் ஒரு சேரப் பெருகி மிகுகின்ற நாடாகிய மலை நாடாகும். நெய்தல் ,மருதம், குறிஞ்சி ஆகிய மூவகை நிலவளமும் உடைய  நாடு!

    விளக்கம்

    விரைசெய் – சுற்றிலும் வாசங் கமழும்படி செய்கின்ற  இதனை நறும் விரை செய் இதழி என மாற்றிக் கூட்டுக. நறும் விரை – மிக்க மணம் – நன்மணம், நறும்-அழகிய என்றுரைப்பாரும், பிரணவம் போன்றிருத்தலால் மந்திரமணம் என்பாருமுண்டு. தொடை இதழி – தொடுத்ததுபோலச் சரமாகப் பூக்குங் கொன்றை. இதழித்தொடை – என மாற்றி மாலையாகத் தொடுத்த கொன்றை என்றுரைப்பினுமாம். இதழி வேணியார் – சிவபெருமான். வேணி – சடை. கொன்றையும் வேணியும் சிவபெருமானுக்கே சிறப்பாயுரிய அடையாளங்கள்.

    கழல்பரசிப் பரசுபெறும் மாதவ முனிவன் பரசிராமன் – பரசி – துதித்து – முனிவனது பேர்க்காரணமும், சரிதமும், அவன் பெருமையுங் குறித்தது.பரசு – மழுவாயுதம். பரசிராமன் – பரசும் இராமன் எனவும், பரசுபெற்ற இராமன் எனவும் இருவழியும் சரிதக்குறிப்புப் பெற நின்ற இப்பெயரின் அழகிய ஆட்சியைக் காண்க. தசரதராமனி னின்றும் வேறு பிரித்துணர இம்முனிவனைப் பரசி ராமன் என அடைகொடுத்தே வழங்குவர்.

    இவன் பரசுபெற்ற சரிதம்

    இம்முனிவன், தனது தந்தையாகிய சமதக்கினி முனிவனைக் கார்த்தவீரியன் கொன்றதற்காகப் பழிவாங்கும் பொருட்டு அவனையும் அவன் மரபினரையும் கொல்வேன் என்று சூள்கொண்டு, சிவபிரானைக் குறித்து மாதவஞ் செய்தான்; சிவனருளினாலே பரசாயுதம் பெற்றான்; அதன் துணையாலே, தான் எண்ணியபடியே அவனைக் கொன்று பழி வாங்கிய மன்னர்களின் இரத்தத்தைக் கொண்டு பிதிர்தருப்பணஞ் செய்து தன் மூதாதைகளை மகிழ்வித்தான் என்பது. இதன் விரிவு காஞ்சிப் புராணம் பரசிரா மீசப்படலத்திற்  காண்க.

    பெறு நாடு – இம்முனிவன் வருணனிடமிருந்து பெற்ற நாடு மலை நாடு. இதுவும் ஒரு சரிதங்குறித்தது. புராணங்களுட் காண்க. முன்கண்டவாறு பலரையுங் கொன்றதனால் முனிவனைப் பழிசூழ்ந்தது. அது நீங்குமாறு முனிவன் ஒரு நாடு கண்டு அதனை வேதியர்க்குத் தர எண்ணி மழுவைத் தென்றிசைக் கடலில் வீசினான். வீசவே வருணன் விலக இந்நாடு உண்டாயிற்று; அதனையே மறையவர்க்குத் தந்தனன் என்பது வரலாறு. முனிவன், அரசர்களைக் கொன்று தானே நாடாண்டிருந்து அந்நாடுகளைத் தானம்செய்து, பின் இந்நாடு கண்டு, அதனில் ஆட்சி புரிந்து வேதியர்க்கீந்தனன் என்பதும் வரலாறு.

    இவ்வரலாறுகளைப் புராணக்  கதை என்று இலேசாகக் கூறி ஒதுக்கு வாருமுண்டு. இராமாயணமும் பரசிராமனது சரிதமும் பெருமையும் கூறும்.

    “ஊழிக் கடை முடிவிற்றனி யுமைகேள்வனை யொப்ப“ என்பது முதலாகப் பலவாற்றானும் இராமாயணத்தில் பாராட்டப்பெற்றது காண்க.

    இம்மலை நாடு இன்றைக்கும் பரசிராம க்ஷேத்திரம் என வழங்கி வருவதும், அது (மழைவளம்), நீர்வளம், நில வளம், குடிவளம், மக்கள் ஒழுக்கம் முதலிய பலவாற்றானுஞ், சூழ உள்ள ஏனை நாடுகளினின்று வேறாகத் தனித்தன்மை பெற்று விளங்குவதும், அதனில் வேதியரும், அவரது வைதிக ஒழுக்கமும் நின்று நிலவித் தெளிவாக விளங்குவதும், பிறவும் ஊன்றிக் காண்போர் இச்சரித உண்மையை  உணர்ந்து கொள்வர்.

    பரசுபெறு மாதவ முனிவன் பரசிராமன் பெறு நாடு வேணியார் கழல் பரசிப் பரசு பெற்றான் அப்பரசு கொண்டு நாடு பெற்றான். ஆதலின் இன்ன வகையால் நாடு பெற்றான் எனக் குறியாது பெறுநாடு என வாளா கூறினார். அதனாற் பெறும் என வருவிக்க.

    திரை செய்கடலின் பெருவளன்- கடல்படு பொருள்களாகிய முத்து முதலிய மணிகளும், உப்பு முதலிய விளை பொருள்களும், மீன் முதலிய உணவுப்பண்டங்களும் பிறவுமாம். இவை மனிதர் விளைவிக்காது தாமாய்க் கடலிலும், கடற் புறத்தும் விளைந்து பெருந் தொகுதியாகப் பெற நிற்பது பற்றிப் பெருவளன் என்றார். திரை செய்கடல் – அலைகளுடைமை கடலுக்குச் சிறப்பிலக்கணமாம்.

    “திரைகடலோடியுந் திரவியந்தேடு“ என்றது நீதி நூல். “படுதிரைப்பரவை மீது படர் கலங் கொண்டு போகி“ என்றது காரைக்காலம்மையார் புராணம்.

    திருந்து நிலவின் செழுவளன் – இவை மருதநிலத்து விளைபொருள்களாகிய நெல் – வாழை – மா – பலா – தென்னை – முதலிய பெரும்பலன்களைக் குறித்தன. நிலச் செழிப்புடையதும், இப்பலன்கள் மிகுதியும் செழிப்புடன் பெருக உண்டாவதும் மலைநாடு என்பது இன்றைக்கும் தேற்றமாம். வானம் பிறங்கக் காலந் தவறாது பெய்ய, அதுகொண்டே விளைதரும் நாடு இந்நாடேயாம் எனின் அதுவுஞ்சரியே!, இங்கு மலைச்சரிவுகளிலும் நன்செய்விளைவு காண்பது வேறெங்கும் காணாத காட்சியாம். மனிதரால் வயல், ஏரி, வாய்க்கால், அணை முதலிய பலவகையானும் சாதனம்பெற்று அது காரணமாகப் பெறும் விளைவு போலல்லாது, இங்கு நிலமும் மழையும் தாமாகவே திருந்தப் பொருந்திச் செழித்த வளந்தருவன என்பார் திருந்து என்றும், செழு என்றும் கூறினார்.

    வரைஇன் வளம் – வரை – மலை. இன் – இனிய, மலைபடுபொருள்களாகிய அகில், சந்தனம், தேன், மணி முதலியன. இவை, மலைகளில் இயல்பின் உண்டாகி இனிமைதருவன ஆதலின் அடைமொழியில்லாது வாளா வரை என்றார். அதனோடு வரைக்குச் சாரியையுமாகிய வளத்திற்கு அடைமொழியுமாகிய இன் என்ற சொல் அமைத்த அழகு காண்க. நாடு, மலைநாடு, ஆதலின் அந்த முதன்மை கருதி வரைக்கு அடையில்லாது கூறினார் எனினுமாம்.

    உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு – மலைநாடு எனப் பேர் பெறுதலின் குறிஞ்சித் திணையின் பண்பு ஒன்றே இங்குப்பெருகும் எனவும், நானிலப் பகுதியில் ஏனைத் திணைகளின் பண்பு இன்றாம் எனவும் ஐயம் வருமாதலின், அதனை எதிர்நோக்கி இங்கு ஏனைத் திணைவளமும் பெருகி மிகும் என்றார். மலைகள் மிகுதலால், மிகுதிபற்றி மலைநாடு எனப் பேர் பெறினும், மருதம், நெய்தல் என்ற திணைப் பகுதி வளங்களுமுடைய தென்றார். வரையும் திருந்து நிலனும் பொருந்தக் கூறியதனால் இடைப்பட்ட முல்லையும் உடன்கொள்ளப் பெறுமென்பர்.

    திரைசெய்கடல் எனவும், வரையின் எனவும் கூறிய பகுதிகள்போலாது, திருந்து நிலனின் செழு – வளன் என்ற அடைச்சிறப்பால் இவற்றுள்ளே நிலத்து வளமே மிகுந்தது என்ற குறிப்புமாம். இது விரிபொழில்சூழ் என்ற முதனூற்பொருளையும்,

    “மனைக்கே புகநீடு தென்றல் வீசும் பொழில்“

    என்ற வகைநூற் கருத்தையும் விரித்ததாம். பின்னர்க் கூறும் நகரச் சிறப்பிற்குத் தோற்றுவாய் செய்ததுமாம். கடற்கரையுடையதாய், மலைகள் விரவிய செழிய நிலப்பரப்புடைய நாடு என அதன் அமைப்பும் குறித்தபடி காண்க. மனைகள்தோறும் பொழிலிருத்தலும் இந்நாட்டுக் காட்சியாம்.

    பெருகி மல்கும் – ஒவ்வொன்றும் தனித்தனிப் பெருகியும் ஒன்று சேர்ந்து மிக மல்கியும் உள்ளன. கழறிற்றறிவார் நாயனாரும் ஆளுடைய நம்பிகளும் இந்நாட்டினின்றபடி திருக்கயிலைக் கெழுந்தருளினார்களாதலானும், அவர்கள் அங்கெழுந்தருளியதை உபமன்னிய முனிவர் கண்டு முனிவர்களுக்குச் சொல்லிய வரலாற்றில் இப்புராணம் தொடங்குவ தாதலானும, இந்நாட்டைப் பற்றி முதன் முறையாகக் கூற வந்த இந்த இடத்துக் கேற்பச் சுருக்கியும் விரித்தும் நாட்டு வளங்கூறியபடி கண்டுகொள்க. மலை நாட்டுச் சிறப்பின் விரிவு கழறிற்றறிவார் நாயனார் புராணம். வெள்ளானைச் சருக்கம் முதலிய இடங்களிற் காண்க. இவ்வளங்கள் தனித்தனிப் பெருகும் அவ்வவ்விடங்களில் வைத்து இப்பாட்டாற் கூறிய ஆசிரியர், அவை உடன் பெருகி மல்கும் வகையை நகரச் சிறப்பு முடன்கொண்டு வைத்து வரும்பாட்டாற் கூறிய திறமும் காண்க.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 16

    பரிமேலழகர் உரைத்திறன் – 16

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பரிமேலழகர் உரையில் ‘குறிப்பெச்சம்’

    முன்னுரை

    திருக்குறள் பரிமேலழகர் உரை காலங்கடந்து நிற்பதோடு அறிஞர் பெருமக்களால் சிறப்பாகவும் புகழப்படுகிறது. இத்தகைய பெருமை அதற்குக் கிட்டியிருப்பதற்குக் காரணங்கள் பல. அவற்றுள் ஒன்று அவர் குறட்பாவிற்கு உரை காணும் நெறி. இந்தத் தொடரில் பல முறை சுட்டிக்காட்டியிருப்பதுபோலக் குறட்பாவின் சொற்சுருக்கம் அதாவது குறுகிய கட்டுமானம் அவரைப் பெரிதும் ஈர்த்திருந்தது. ஈர்க்கவே அதனை உற்று நோக்கி உரையெழுதும் நிலை வந்தது. வரவே எழுசீர்களில் அடங்கிய ஒரு சிறுபாட்டு எந்தெந்த வகையில் எல்லாம் பொருட்சுமையைத் தாங்கி நிற்கிறது என்று அவர் எண்ணினார். எண்ணி அந்த வகைகளில் எல்லாம் உரை சொன்னார். குறட்பாவின் ஏழு சீர்களுக்குள் வெளிப்பட நிற்கும் உரை சொல்வார். வள்ளுவர் சொல்ல நினைக்கும் உள்ளக்கருத்தினைக் கண்டுரைப்பார். உவமத்தின் இயல்புகளைப் பொருண்மைக்கு ஏற்றி உவமத்தால் பொருண்மையின் ஆழம் காட்டுவார். இவற்றோடு சொல்லாமல் விடுபட்ட கருத்தினைக் ‘குறிப்பெச்சம்’ என்னும் பெயரால் கண்டறிந்து கூறுவார். அவர் கண்டறிந்து கூறிய ‘குறிப்பெச்சம்’ என்னும் அதனை இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்வதன் மூலம் பரிமேலழகரின உரைத்திறனை அறிய முயல்கிறது.

    குறிப்பெச்சம் என்றால் என்ன?

    ‘எஞ்சியிருப்பது எச்சம்’ என்பது பொதுவழக்கு. ‘வந்த’ என்ற வினைச்சொல் பொருள் முடிவடையாது, தான் முடிவடைவதற்கு இன்னொரு சொல்லை எதிர்பார்த்து நிற்பதைக் காணலாம். எதிர்பார்க்கப்படும் அச்சொல் பெயர்ச்சொல். பெயர்ச்சொல்லை அதனோடு இணைத்தால்தான் பொருள் நிறைவுறும், ‘வந்த பையன்’ என்பதுபோல. எனவே அந்தத் தொடர் முடிவடைய ஒரு பெயர்ச்சொல் எஞ்சியிருக்கிறது. அதனால் அது பெயரெச்சம். ‘வந்து’ என்ற வினைச்சொல் பொருள் முடிவடையாது தான் முடிவடைவதற்கு இன்னொரு சொல்லை எதிர்பார்த்து நிற்பதைக் காணலாம். எதிர்பார்க்கப்படும் அச்சொல் வினைச்சொல். ஒரு வினைச்சொல்லை அதனோடு இணைத்தால்தான் பொருள் நிறைவுறும், ‘வந்துப் போனான்’ என்பதுபோல. எனவே அந்தத் தொடர் முடிவடைய ஒரு வினைச்சொல் எஞ்சியிருக்கிறது. அதனால் அது வினையெச்சம். இந்தத் தெளிவினை உள்வாங்கினால் குறிப்பெச்சம் என்பதை எளிதாகப் புரிந்துக் கொள்ள முடியும்.

    1. ஒரு சொல்லின் குறிப்பால் வேறுசில சொற்களை வருவித்துப் பொருள் முடிப்பது, இது எஞ்சி நின்றதால் எச்சமாயிற்று. எஞ்சுதல் – குறைந்து நிற்றல்.
    2. வெளிப்படையாகவன்றி மறைந்து நின்று வேறொரு சொல்லின் குறிப்பினால் தோன்றும் பொருள்
    3. வெளிப்படையாகச் சொல்லாமல் எஞ்சி நின்ற பொருளை ஒரு சொல்லின் குறிப்பினால் கொள்வது

    என்று பலவாறாக இது ஆராயப்படுகிறது. படைப்பாளன் தன் உள்ளத்துக் குறிப்பினைத் தொடர்புடைய பாடலுக்குள் பதிவு செய்ய இயலாத நிலையில் அவன் உள்ளத்துக்குள்ளேயே எஞ்சியிருப்பதால் அது குறிப்பெச்சம் எனப்படலாம். எஞ்சிய குறிப்பு எச்சக் குறிப்பு. இது முன்பின்னாகிக் குறிப்பெச்சம் எனப்படும்.  அதனைக் கண்டறிந்து கூறுவது உரையாசிரியர் கடன். குறிப்பு உள்ளம் சார்ந்தது.  ‘உள்ளக்குறிப்பு’, ‘முகக்குறிப்பு’, ‘சொற்குறிப்பு’ என்பன நோக்குக. வெளிப்படையாக அமைந்தால் அது கருத்து. உள்ளுக்குள்ளேயே அமைந்துவிடுமானால் அது குறிப்பு. அந்தவகையில் திருக்குறள் பரிமேலழகர் உரையில் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் உரையாசிரியர் பரிமேலழகர் குறிப்பெச்சம் பற்றிச் சிந்தித்திருக்கிறார். எனினும் கட்டுரையின் அளவு மற்றும் செறிவு கருதி ஒருசில பாக்களின் உரையைக் கொண்டு அதனை விளங்கக் காணலாம்.

    கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரா?

    மழலைச்சொற்களின் இனிமையைத் திருவள்ளுவர் எதிர்மறையால் பதிவு செய்கிறார். மழலையின் இன்பத்தை உணர்ந்து அனுபவிக்காதவரே குழலிசையையும் யாழிசையையும் வியந்து போற்றுவர் என்பது குறட்பாவின் சொற்பொருள்.

    “குழல் இனிது யாழினிது என்பதம் மக்கள்
    மழலைச் சொல் கேளாதவர்.” (66)

    கேளாதாதவர் இனிமை என மயங்குவர் எனச் சொன்னதன் மூலம் கேட்டிருந்தால் அவற்றினும் இனிதென மழலையைச் சொல்லியிருப்பர் என்பது குறிப்பு. இந்தக் குறிப்புப் பாட்டில் இல்லை. எஞ்சி நிற்கிறது. பரிமேலழகர் அறிந்து சொல்கிறார். ‘குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர் தம் புதல்வருடைய மழலைச் சொல்லைக் கேளாதவர்’ எனப் பொழிப்பெழுதிய பரிமேலழகர் விளக்கவுரையில்,

    “கேட்டவர் அவற்றினும் மழலைச் சொல் இனிது என்பர்’ என்பது குறிப்பெச்சம்”

    என்று எழுதுகிறார். கேளாதவர் சொல்லியன பாட்டில் உள்ளது. கேட்டவர் சொல்லியிருக்கமாட்டார் என்பது திருவள்ளுவர் குறிப்பு. இது பாட்டில் இல்லாதது. இதனைப் பரிமேலழகர் கண்டுரைக்கிறார்.

    தானாக விளையாதா?

    விருந்தோம்பலாகிய இல்லற உயர்பண்பினைப் போற்றும் திருவள்ளுவர், அந்தப் பண்பினை உடையவர் வயல்களில் விதைக்க வேண்டிய தேவையில்லை என்பதை ஓகாரத்தால் உணர்த்துகிறார். அந்தப் பாட்டு,

    “வித்தும் இடல் வேண்டும் கொல்லோ? விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்” (85)

    என்று அமைந்திருக்கிறது. இதற்கு “முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத்தான் மிசைவானது விளைநிலத்துக்கு வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா” என்று பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். முந்தைய இரண்டு பாடல்களையும் இணைத்து ஓரலகாக்கிப் பொருள் முடிவு கூறும் பரிலேழகர், ‘இம்மைப்பயன் கூறப்பட்டது’ என்று எழுதுகிறார். எவை இம்மைப்பயன்.

    1. விருந்தோம்புவானுக்கு வறுமை வராது
    2. (காரணம்) அவன் இல்லத்தில் திருமகள் உறைவாள்.
    3. செய்யவள் இருப்பதனால் வயலுக்கு விதை தேவையில்லை.

    என்று விரிவாக எழுதுகிறார்.

    ‘தானே விளையும் என்பது குறிப்பெச்சம்’

    ‘விதைக்கவும் வேண்டுமோ’ என வினவிய திருவள்ளுவருக்கு ‘வேண்டா’ என விடையிறுத்த பரிமேலழகர், ‘விளைச்சல் என்ன ஆகும்’ என்னும் கற்பார் வினாவிற்கு இப்படி விடைகூறுகிறார். விதைக்க வேண்டுமோ என்பது திருவள்ளுவர் வினா. வேண்டாம் என்பது பெறப்படும். தானாக விளையும் என்பது திருவள்ளுவர் உள்ளக்குறிப்பாம்.

    கோடாதவன் தாழ்வு கேடன்று

    ‘கேடு’ என்பது நடுவுநிலை தவறாதவன், தவறியவன் என அனைவருக்கும் பொதுவானது. மற்றவர்களுக்குக் கேடு வரின் பிறரால் அது கேடாகவே நோக்கப்பட்டு அனுதாபத்திற்கு ஆளாவர். ஆனால் நடுவுநிலை பிறழாத ஒருவருக்குக் கேடுவரின் அதனைச் சான்றோர் கேடாகக் கொள்ள மாட்டார் என்ற கருத்தினைக்,

    “கெடுவாக வையாது உலகம், நடுவாக
    நன்றிக்கண் தங்கியான் தாழ்வு” (117)

    என்னும் குறட்பாவில் எழுதியிருக்கிறார் திருவள்ளுவர். இங்கே கேடு என்பது வறுமையைக் குறிக்கும். திருவள்ளுவர் இதற்கு “நடுவாக நின்று அறத்தின்கண்ணே தங்கினவனது வறுமையை வறுமையென்று கருதார் உலகோர்” என்பது பரிமேலழகர் பொழிப்புரை. இதற்கு இவர் எழுதிய விளக்கவுரையில்,

    “செல்வமென்று கொள்ளுவர்’ என்பது குறிப்பெச்சம்.”

    என்று பதிவிடுகிறார். ‘பாட்டில் வறுமையென்று கருதார்’ (கெடுவாக வையாது) என்றுதான் இருக்கிறது. அவரும் அவ்வாறே உரையெழுதியிருக்கிறார். ஆனால் விளக்கவுரையில் ‘செல்வமென்று கொள்ளுவர்’ எனத் திருவள்ளுவர் எண்ணி ஆனால் சொல்ல இயலாத அவருடைய உள்ளக் குறிப்பினை எடுத்துக்காட்டுகிறார். ‘வறுமையென்று கருதார்’ என்பதே வள்ளுவர் சொல்லியது. ‘செல்வமென்று கருதுவர்’ என்பது அவர் உள்ளம் தோய்ந்தது. தோய்ந்ததைத் தோண்டித் தருபவர் பரிமேலழகர்.

    தேடவேண்டிய செல்வம் செவிச்செல்வம்

    செல்வம் இருவகைப்படும். ஒன்று கேள்வியால் வரும் செவிச்செல்வம். மற்றவை பொருளால் வரும் பிறசெல்வங்கள். முன்னது நிலையானது. பின்னவை  நிலையற்றவை. எனவே முன்னதை வற்புறுத்தி எழுதப்பட்டதே ‘கேள்வி’ என்னும் அதிகாரமாகும்.

    “செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை” (411)

    என்ற பாட்டில் திருவள்ளுவர் செவிச்செல்வத்தைச் ‘செல்வத்துள் செல்வம்’ என்று பாராட்டியிருக்கிறார். இந்தப் பாராட்டை உள்வாங்கிய பரிமேலழகர்,

    “ஒருவற்குச் சிறப்புடைய செல்வமாவது செவியான் வரும் செல்வம். அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையாதலான்.”

    என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். கற்பாருக்கு எழுகிற வினா ‘கேள்விச் செல்வத்தைப் பாராட்டுவதற்கு ஒரு குறட்பாவா?’ என்பதுதான். திருவள்ளுவர் எதனையோ சொல்லத்தான் நினைக்கிறார். ஆனால் சொல்லாமல் தவிக்கிறார் என்பதுபோல அமைந்திருக்கிறது இந்தப் பாடல். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உரையாசிரியர் பரிமேலழகர் கண்டறிகிறார். அவர் அறிந்ததை அனைவரும் அறியத் தருகிறார்.

    “அவற்றை ஒழித்து இதனையே செய்க’ என்பது குறிப்பெச்சம்”

    என்ற ஒரு தொடரால் விடுபட்டுப் போனதைப் பொருண்மையோடு இணைத்துக் காட்டுகிறார். ‘செவிச்செல்வம் தலையாயது ஆதலின் அதனையே தேடுக’ என்று அவர் சொல்லவில்லை. ‘தலையாய செல்வம்’ என அடையாளப்படுத்தியதோடு நின்றுவிடுகிறார். அழகர் அதனைக் கண்டறிந்து “அவற்றை ஒழித்து இதனையே செய்க’ எனக் ‘கேள்விச் செல்வத்தைத் தேடுக’ என்னும் வேண்டுகோளைத் திருவள்ளுவர் முன்வைப்பதாக எடுத்து மொழிகிறார். செவிச்செல்வத்தின் பெருமை சொன்னது குறள். அதனைத் ‘தேடுக’ என்னும் வள்ளுவர் உள்ளமறிந்து சொன்னவர் பரிமேலழகர். எஞ்சி நின்ற குறிப்பு இதுதான்.

    அறிவில் சிறுகுறை அரசுக்குப் பெருங்கேடு. 

    அறியாமை அனைவர்க்கும் பொது. ஆனால் அரசாள்வோர் தம் பக்கல் வைத்துக் கொள்ளும் நபர்களின் அறிவாற்றலைச் சரியாக எடைபோட்டு வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அரச நீதி. ஏதேனும் ஒரு காரணம் பற்றி ஒருவரைத் தெளிய முற்படும் போது நம்பிக்கை அளவுகோல் ஆகிவிடக் கூடாது. காரணம் எல்லாவகையிலும் சிறந்திருப்பார் கூட ஏதோ ஒரு மூலையில் சற்றுப் பிசகியிருப்பார். இந்த உண்மையை,

    “அரியகற்றும் ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு” (503)

    என்னும் குறட்பாவில் தெளிவுபடுத்துகிறார் திருவள்ளுவர்.

    “கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும் நுண்ணிதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது.”

    என்பது இப்பாடலுக்கான பரிமேலழகரின் பொழிப்புரை. அறியாமை இல்லாதவர் யாருமிலர் என்பதுதான் பாட்டின் கருத்து. சரி. இதனால் திருவள்ளுவருடைய உள்ளக் குறிப்பென்ன? என்பது பாட்டில் இல்லை. ‘ஆசற்றார் கண்ணும் வெளிறு இன்மை அரிது’ என்பது ஒரு செய்தி. அது அறிவுரை ஆகாது. அரசாள்வார் என்ன செய்யவேண்டும் என்பதைப் பாட்டில் அவர் கூறவில்லை. பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார்.

    “காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம்.”

    குறட்பாவின் உள்ளடக்கத்தைப் பரிமேலழகர் பாட்டின் கருத்தினை அரசாள்வார்க்கு அறிவுரையாக மாற்றுகிறார். அப்படி மாற்றுவதுதான் திருவள்ளுவர் கருத்தாம். அறியாமை இருந்தே தீரும் என்பதுதான் குறட்பா கருத்து. அதுவும் இல்லாதாரையே தெளிக என்பதுதான் முழுமையான வள்ளுவம்.   முன்னது குறட்பாவில் உள்ளது. பின்னது வள்ளுவரின் திருவுள்ளக் குறிப்பு.

    கண் பெற்ற பயன்

    ‘கண்ணுக்கு மையழகு’ என்பது திரையிசைப்பாடல். ‘கண்ணிற்கு அழகு இரக்கம்’ என்பது சான்றோர் கருத்து. ‘அமைச்சர்க்கழகு அகப்பட்டதைச் சுருட்டுதல்’ என்பது இன்றைய வழக்கு ‘மந்திரிக்கழகு வரும்பொருள் உரைத்தல்’ என்பது அன்றைய அமைச்சறம். சமுதாயம் புறத்தில் வளர்ந்த அளவுக்கு அகத்தில் வளரவில்லை, அதற்கான சூழலும் அமையவில்லை என்பது காலை கறுப்பாக இருக்காது என்பதுபோல உண்மை.

    “உளபோல் முகத்து எவன் செய்யும்? அளவினால்
    கண்ணோட்டம் இல்லாத கண்”  (574)

    என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு இதன் உள்ளடக்கம் தோன்ற,

    “கண்டார்க்கு முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது என்ன பயனைச் செய்யும் அளவிறாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்?”

    என்று பரிமேலழகர் உரையெழுதியிருக்கிறார். உயிர்கள் மாட்டுக் கண்ணோடி  அதாவது இரக்கம் கொண்டு நோக்காத நிலையில் கண்களால் பயனில்லை.  உடம்பின்கண் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு வினைக்குரியது. அவ்வினை பிறர்நலம் சான்றது. இறைப்பணி நோக்கியது. இது தமிழ்ப்பண்பாடு. “வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும்” என்பது உறுப்புக்களின் பணியை நினைவூட்டும் தேவாரமாகும். ‘தாளை வணங்காத் தலை’ என்பதும் அது. எனவே கண்ணின் பணி உயிர்கள் மேல் இரக்கம் காட்டுதல். அதுவன்றி வாளா இரக்கவுணர்வின்றி இருக்கும் மாந்தர்கள் இருக்கிறார்களே என்றால் அவர்களுக்கு முகத்தில் இருக்கும் உறுப்பு கண் என்ற அளவிலேயே அமைதி கிட்டும். இதுதான் பாடற் கருத்து. ‘முகத்தில் இருக்கிறது’ என்பதைத் தவிர வேறு என்ன பயன் என்பது திருவள்ளுவர் வினா.

    ‘ஒரு வினையும் செய்யா என்பது குறிப்பெச்சம்’

    இது பரிமேலழகர் எழுதும் குறிப்புரை. ‘இருக்கிறது’ என்பதற்கும் ‘செயல்படுகிறது’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. கண்ணோட்டம் என்பது கண்களின் வினை. அதுவில்லாதபோது அது இருப்பதைத் தவிர வேறு எந்தவினையும் செய்யாது என்பது திருவள்ளுவர் குறிப்பு. இந்தக் குறிப்பினைத்தான் பரிமேலழகர் எடுத்து  மொழிகிறார்.

    கீழே விழுவதெல்லாம் எழுந்திருக்கவே!

    ‘ஆகூழ்’, ‘போகூழ்’ என்பவற்றால் வாழ்க்கை சூழப்படினும் முயற்சி என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. ‘முயற்சி மெய்வருத்தக் கூலிதரும்’ என்பது மறை. தன் குஞ்சைக் கொத்தவரும் வான்பருந்தை எதிர்க்கும் திறன் தனக்கு இல்லையாகிலும் எதிர்க்க முயல்வது கோழிக்குப் பெருமை.

    “பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்த
    ஆள்வினை இன்மை பழி” (618)

    என்கிற குறட்பாவிற்குப் “பயனைத் தருவதாய விதியில்லாமை ஒருவற்குப் பழியாகாது. அறிய வேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது.” என்னும் பொழிப்புரையால் பாடல் விளக்கம் தருகிறார் பரிமேலழகர். விதியின்மை பழியாகாது. முயற்சி இன்மை பழியாகும் என்பதுதான் குறட்பாவின் பொருண்மை நிலை. வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்? அந்தப் பழியை ஒருவன் ஏற்கலாமா? கூடாது. கூடாது எனின் என்ன செய்தல் வேண்டும். முயல வேண்டும். இது பாட்டில் இருக்கிறதா?. இல்லை இதனைத்தான் ‘குறிப்பெச்சம்’ என்கிறார் பரிமேலழகர்.

    ‘விடாது முயல்க என்பது குறிப்பெச்சம்’

    என்னும் தொடரால் ‘முயற்சியின்மை பழி தரும்’ என நீதிக்கருத்துக்கு அரண் செய்வதைப் போல அதனை வியங்கோள் ஆக்கிக் கூறுகிறார் பரிமேலழகர்.

    வீரனுக்கு இணை வேறில்லை

    திருக்குறள் காலம் கடந்த கருத்துக்களை உள்ளடக்கியதாக இருப்பினும் தான் தோன்றிய காலத்துச் சித்திரிப்பு என்பதை மறுப்பதால் யாருக்கும் பயனில்லை. வள்ளுவர் படை என்றது விமானப்படையை அல்ல. விமானந் தாங்கிய கப்பற்படையை அல்ல. அன்றைய நாளில் இருந்த நால்வகைப் படைகளைத்தான் அந்நால்வகைப் படையுள்ளும் மூலப்படை சிறந்தது. மூலப்படை என்பது இந்நாள் தரைப்படை யொத்தது. இந்நாளில் ஏனைய படைகளிலும் வீர்ர்கள் இருப்பர். ஆனால் அவர்கள் இயக்கத் துணையாக விமானம் முதலிய கருவிகள் இருக்கும். தரைப்படைக்கு அவ்வாறு கருவிகள் இருக்காது. இன்றைய நாளில் டாங்கி முதலிய கருவிகளும் தரைப்படைப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. படைகளுள் தரைப்படை வீரனைப் பாராட்டுகிறார் திருவள்ளுவர்.

    “உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்.
    தொல்படைக்கு அல்லால் அரிது” (762)

    என்பது குறள். போர்க்களத்தில் மன்னனுக்குத் தளர்ச்சி ஏற்படும்போது அளவால் தான் சிறியதாயினும் தன் துன்பம் நோக்காது மன்னர்க்குப் பேருதவி செய்வதில் ஏனைய படைகளைக் காட்டிலும் தொல்படையே சிறந்தது என்பது பாடற் கருத்து.

    “தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின் கண் உலைவு வந்தால் தன் மேல் உறுவதற்கு அஞ்சாது நின்று தாங்கும்  வன்கண்மை அவன் முன்னோரைத் தொடங்கி வரும் படைக்கல்லது உளதாகாது.”

    என்பது பாடலைப் படம்பிடித்துக் காட்டும் பரிமேலழகர் உரை. இதற்கு,

    “மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப் படையுள்ளும் சிறப்புடையது மூலப்படையாகலான் அதனை அரசன் “வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும் கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க (பு.பொ.வெ.மா – தும்பை 2)  என்பது குறிப்பெச்சம்.”

    என்று அவர் எழுதிய விளக்கவுரையில் திருவள்ளுவரின் உள்ளக் குறிப்பினைக் கண்டறிந்து எழுதுகிறார். தொல்படையாகிய மூலப்படையே மன்னனைக் காப்பாற்றும் என்றால் அப்படைவீரனைத் தாங்குதல் வேண்டும் என்பது வள்ளுவர் குறிப்பாம். எப்படித் தாங்குதல் வேண்டும்? என்னென்ன கொடுத்துத் தாங்குதல் வேண்டும் என்பதை விளக்கவே புறப்பொருள் வெண்பாமாலை பாடலை எடுத்துக்காட்டுகிறார். வீரன் மன்னனைத் தாங்குவான் என்பது குறள்.  அவனை மன்னன் தாங்கவேண்டும் என்பது குறிப்பெச்சம்.

    காமத்துப்பாலும் பரிமேலழகரும்

    அறத்துப்பால் மற்றும் பொருட்பால் ஆகியவற்றுள் பரிமேலழகர் கண்டறிந்து கூறும் எச்சக் குறிப்புக்கள் நூலாசிரியர் திருவள்ளுவருக்குரியன. ஆனால் காமத்துப்பாலில் பரிமேலழகர் கண்டறிந்து கூறும் குறிப்பெச்சங்கள் தலைமக்களுக்கானவை. காமத்துப்பால் முழுமையும் உளவியல் சார்ந்த பாத்திரங்களால் கட்டமைக்கப்பட்டிருப்பதால் அப்பாத்திரங்களின் உள்ளக் குறிப்பினை அறிந்து கூறும் பரிமேலழகரின் உரைத்திறன் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்ததாகும். ஒருசில குறிப்பெச்சங்களை இங்கே காணலாம்.

    கண்ணிலும் உள்ளான் கருத்திலும் உள்ளான்!

    கண்முன்னால் இருக்கின்றான் காதலன். ‘அவன் தலைவியை மறந்து போனான்’ என அவனுடைய இயல்பினைத் தோழி பழித்துரைக்க முற்படுகிறாள். அப்போது தலைவி கூறுகிறாள்.

    “கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
    எழுதேம் கரப்பாக்கு அறிந்து” (1127)

    எம் காதலர் எப்போதும் என் கண்முன்னே இருப்பதாலேயே நாங்கள் கண்ணுக்கு மையிடாமல் இருக்கிறோம். ஏனென்றால் மையெழுதும் அந்நொடிப் பொழுதினும் அவன் மறைந்துவிடக் கூடாது என்பதற்காக என்று தலைவி தனக்குள்ளே கூறிக் கொள்கிறாள்.

    “காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான்  கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யோம்  அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து”

    என்னும் பொழிப்புரையில் பரிமேலழகர் இதனை விளக்குகிறார். ஆனால் தோழி இயற்பழித்தலைத் தடுத்தற்பொருட்டுத் தலைவி கூறினாள் என்பது பாட்டில் இல்லை. தலைமகளின் அந்த உள்ளக் குறிப்பினைப் பரிமேலழகர் அறிந்து கூறுகிறார் இப்படி.

    ‘யான் இடையீடின்றிக் காண்கிறவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை? என்பது குறிப்பெச்சம்”

    “தலைவன் மறைந்துவிடுவான் என்பதற்காகவே மையெழுதாமல் இருக்கிறேன்” என்பது தலைவி கூற்று. தலைவியைச் சந்திக்க வரவில்லை என்பதனால் இயற்பழிப்பது தோழியின் எண்ணம். அந்த எண்ணம் தவறு என்பதைத்தான் தலைவி வேறு வாய்பாட்டில் (மையெழுதா வாய்பாட்டில்) கூறித் தன் குறிப்பினைத் தெரியப்படுத்துகிறாள் என்பது பரிமேலழகரின் கருத்து.

    மேலே கண்ட பாடல் கண்ணைப் பற்றியது என்றால் பின்வரும் பாடல் நெஞ்சம் பற்றியது. பார்வையில் மட்டுமன்று. தலைவன் எப்போதும் தன் நெஞ்சிற்குள்ளேயே நிலைத்திருக்கிறான் என்பது தலைவி கூற்று. அதனை எப்படி வெளிப்படுத்துகிறாள் தெரியுமா?

    “நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக்கு அறிந்து” (1128)

    மேலே உள்ள பாட்டில் மையெழுதும் நேரத்தில் மறைந்துவிடுவான் என்றஞ்சிய தலைமகள் இந்தப் பாடலில் உள்ளத்தில் (மனசுக்குள் உட்கார்ந்து மணியடிக்கும் தலைவன் என்று கூடச் சொல்லலாம்) இருக்கும் தலைவனுக்கு வெப்பம் ஆகாது என்று கருதி வெப்பமானவற்றை உட்கொள்ளுவதில்லையாம்.

    “காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான், உண்ணுங்கால்  வெய்தாக உண்டலை அஞ்சா நின்றேம் அவர் வெய்துறலை அறிந்து”

    என்னும் பொழிப்புரையால் இதனைப் பெறவைக்கும் பரிமேலழகர்,

    “எப்பொழுதும் எந்நெஞ்சின் கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்.”

    என்று எழுதித் தலைவியின் இயற்பழித்தலுக்குத் தடையாணை போடுகிறாள். இந்தப் பாட்டில் என்ன சொல்லுகிறாள்? ‘தலைவன் நெஞ்சிற்குள் இருப்பதால் வெப்பமானவற்றை உட்கொள்ளுவதில்லை’ சரி. சொல்ல வருவதென்ன? ‘நான் எப்போதும் வெப்பமானவற்றை உட்கொள்ளாத நிலையில் அவன் என் நெஞ்சிற்குள்ளேயே இருக்கிறான். அவனை எப்படி நீ பிரிந்தார் என எண்ணி இயற்பழிக்க முயலலாம்?’ என்பதே.

    தலைவனோடு களித்தபோது இன்பம் செய்த மாலை தனிமையில் இப்போது துன்புறுத்துகிறது. ‘அந்தப் பிரிவுத் துன்பத்தை ஆற்றியிருக்க வேண்டும்’ என்று ஆறுதல் கூறுகிறாள் தோழி. அந்தத் தோழிக்குத் தலைவி மறுமொழி கூறுகிறாள் இப்படி!

    “பனியரும்பி பைதல்கொள் மாலை துனியரும்பித்
    துன்பம் வளர வரும்” (1223)

    என் தலைவன் என்னருகில் இருந்தபோது என்னைக் கண்டு நடுங்கிய மாலைப் பொழுது, அவன் பிரிந்த இந்த நிலையில் என் உயிருக்கு இறுதி வரவழைக்கும் முறையில் துன்புறுத்த, அத்துன்பம் பொழுதும் வளர்கிறது என்கிறாள் தலைவி. இதனைக்,

    “காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கமெய்திப் பசந்துவந்த மாலை இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்குளதாம் துன்பம் ஒரு காலைக்கொருகால் மிக வாராநின்றது”.

    என்னும் பரிமேலழகர் பொழிப்புரையால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ‘ஆற்றியிரு’ என்னும் தோழிக்குரிய விடையாக இதனைக் கருத முடியுமா என்றால் முடியாது. ‘இன்பமாக இருந்த மாலை துன்பம் செய்கிறது’ என்பது மட்டுமே தலைவியின் மொழியாக அமைந்திருக்கிறது. மாலை உயிருண்ணும் கூற்றாக வருவதால் தலைவனைப் பிரிந்துத் தன்னால் இருக்க இயலாது என்பதைக் குறிப்பாகச் சொல்கிறாளாம்.

    “யான் ஆற்றுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்”

    என்னும் தொடரால் பரிமேலழகர் இதனைக் குறிக்கிறார். ‘மாலை செய்யும் கொடுமையால் யான் ஆற்றியிருப்பது அரிது’ என்பது அவள் உள்ளக்குறிப்பு. அந்தக் குறிப்பைத்தான் பரிமேலழகர் வினாவடிவில் பதிவு செய்திருக்கிறார். மாலையின் கொடுமை குறட்பா கருத்து. ஆற்ற இயலாது என்பது தலைவியின் குறிப்பு.

    நிறைவுரை

    குறட்பாவிற்குக் கிடக்கை நிலை உரைசொல்வது எல்லார்க்கும் பொதுவான இயல்பு. ‘இதனான் இது பெற்றாம்’ என்பது பரிமேலழகர் எழுதிக்காட்டும் அரிய உரைக்கருத்து. ‘இந்தப் பாட்டின் கருத்து என்பது இந்தப் பாட்டினால் அறிந்து கொள்ளும் படிப்பினையைக் குறிக்கும். ‘குறிப்பெச்சம்’ என்பது ‘சொல்ல வேண்டிய ஆனால் சொல்ல முடியாமல் எஞ்சி நிற்கும் கருத்து. இது உரையாசிரியரின் ஊகமாகாது. சொற்கிடக்கையின் இடைவெளியில் உரையாசிரியரின் நோக்கிற்கு மட்டும் புலப்படும் அரிய உண்மை. ‘இதனைச் செய்யமாட்டார்’ என்றால் ‘அதனைச் செய்வர்’ என்பதும் ‘இதனைச் செய்வர்’ என்றால் ‘அதனைச் செய்யமாட்டார்’ என்பதும் ‘அருத்தாபத்தி’ என்னும் அளவையியலைச் சார்ந்ததாகும். கருப்பஞ்சாறு எடுப்பவர்கள் கரும்புச் சக்கையைப் பலமுறை ஆலையிலிட்டுப் பிழிவதுபோலக் குறட்பாவைப் பன்முக உரைநெறிகளால் பிழிந்தெடுத்துத் தரும் ‘கருத்துச்சாறே’ அவர்தம் உரைத்திறனாம்.

    (தொடரும்…)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 40

    பழகத் தெரிய வேணும் – 40

    நிர்மலா ராகவன்

    மனிதனானவன் வைரமாகலாம்

    இருக்கும் நிலையிலேயே இருந்தால், அது மகிழ்வை அளிக்கிறதோ, இல்லையோ, அதனால் ஒருவித பத்திரமான உணர்வு உண்டாகிவிடுகிறது. வேறு பல சௌகரியங்களையும் விட்டுக்கொடுத்தாகவேண்டும். அதனாலேயே, `எதற்காக மாறுவது?’ என்று பலரும் பொறுத்துப்போகிறார்கள்.

    கதை

    ஒரு முறை கப்பலில் போகும்போது அந்தத் தமிழரைச் சந்தித்தேன்.

    தன் பெற்றோரால் மனைவி ரொம்பக் கஷ்டப்படுகிறாள், எப்போதும் பயந்தே நடக்க வேண்டியிருக்கிறது, ஆனால் தனியே பிரிந்து போகவும் பயம் என்றெல்லாம் நான் கேட்காமலேயே தெரிவித்தார்.

    `இப்படிப் பண்ணியிருக்கலாமே’ என்று காலம் கடந்து வருந்துவது என்ன பயனைத் தரும்?

    சில வருடங்கள் கழித்து நான் அவரை மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். நான் முகமன் கூறியபோது, “நீங்கள் என்னை யாரோ என்று நினைத்துப் பேசுகிறீர்கள். நான் உங்களைப் பார்த்ததே இல்லையே!” என்றார்!

    தான் செய்த எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் கண்டனம் என்ற நிலையில் அவரது மனைவியின் உற்சாகம் வடிந்துபோக, தன் இயலாத்தனத்தை அவர்மேல் ஆத்திரம், சந்தேகம் என்று மாற்றியிருப்பாள் என்றுதான் நினைக்கத் தோன்றியது.

    மாறினால் மேலும் பல துன்பங்களை அனுபவிக்க நேருமோ என்ற பயத்தால் பொறுக்க முடியாத நிலையைச் சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் பலரும்.

    வளர்ச்சியால் துன்பம்தான்

    எவ்வித மாற்றமானாலும், அது எளிதாகக் கிடைப்பதில்லை. பதின்ம வயதில் உடல் வளரும்போது பொறுக்க முடியாத நோவெடுக்கும், இல்லையா? நம் மனநிலையை மாற்றிக்கொள்வதும் அப்படித்தான்.

    மேற்படிப்பு அல்லது உத்தியோக நிமித்தம் அயல்நாடு செல்பவர்கள் ஆரம்பத்தில் அதிர்ச்சிக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்று. அப்போது மாறுவதைத் தவிர வேறு வழியில்லை.

    `நீங்க ரொம்ப மாறிட்டீங்க!’ என்று ஆச்சரியத்துடனோ, வருத்தத்துடனோ கூறுபவர் ஒன்று புரிந்துகொள்வதில்லை.

    வாழ்க்கையின் சுழலில் பல புதிய அனுபவங்கள் ஏற்படக்கூடும். அப்போது பிறரைப்பற்றி கொண்டிருந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டு, வித்தியாசமானவர்களையும் ஏற்றால்தான் முன்னேறமுடியும்.

    `ஐயே! இவர்கள் என்ன இப்படி இருக்கிறார்களே!’ என்று நினைத்தால், நம்மிலிருந்து மாறுபட்ட பிறரை நண்பர்களாக ஏற்க முடியாது.

    மனிதனும் வைரமும்

    “பட்டை தீட்டினால்தான் வைரம் ஜொலிக்கிறது. மனிதனும் பல இடர்களைக் கடந்தால்தான் வெற்றி பெற முடியும்” (சீனப் பழமொழி).

    முதுகலைப் பட்டப்படிப்புக்காக அமெரிக்கா போன பலருள் ஒருத்தி லீலா.

    தாய்நாட்டில் கிடைத்த சௌகரியங்களும் மதிப்பும் பிற இடங்களிலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை விளைவித்தது. அங்குள்ள மொழி உச்சரிப்பு, உணவு, கலாசாரம் எல்லாமே புதிதாக இருக்க, கலவரம் உண்டாகியது.

    வெளிநாட்டுக்குப்போய் திரும்புகிறவர்கள் தாங்கள் பேசும் விதத்தையும் ஆடைகளையும் மாற்றிக்கொள்வதை வளர்ச்சி என்று காட்டிக்கொள்வதைப்போல் அவளால் இருக்க முடியவில்லை. அத்தகைய மாற்றம் அர்த்தமற்றது என்று தோன்றிப்போயிற்று.

    திரும்பிப்போவதும் நடக்காத காரியம். உபகாரச்சம்பளம் பெற்று, எத்தனை பேருடைய பொறாமைக்கு ஆளாகி, வந்திருக்கிறாள்!

    `நேரமில்லை என்று சொல்லாதே. தூக்கத்தைக் குறை,’ என்று பல்கலைக்கழக வழிகாட்டி கூற, இரண்டு மணி நேரமாகக் குறைந்தது உறங்கும் நேரம்.

    `எனக்கு ஏன் இத்தனை கஷ்டங்கள்?’ என்ற வருத்தம் அடிக்கடி எழ, `சுயபச்சாதாபம் கூடாது!’ என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டாள் லீலா.

    அதன்பின், இசை, உபயோகமான விஷயங்களைக்கொண்ட புத்தகங்களைப் படிப்பது என்று தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடத் தொடங்கினாள்.

    அவளைப்போல், பழகிப்போன எண்ணங்களையும், செயல்களையும் சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்பவரே வாழ்வில் வெற்றி பெற முடியும்.

    தமது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் துணிச்சல் வெகு சிலருக்குத்தான் அமைந்திருக்கிறது. அத்துணிச்சல் இல்லாதவர்களே பிறரிடம் ஆத்திரப்படுகிறார்கள்.

    அசையாது நிற்க அஞ்சு

    `நான் தவறே செய்யமாட்டேன்!’ என்று யாராவது சொன்னால் அவர்கள் கடவுள் இல்லை. புதிதாக எதையும் முயன்றிருக்கமாட்டார்கள். அவ்வாறு ஒரே இடத்தில் அசையாது நிற்கத்தான் அஞ்சவேண்டும்.

    போகும் வழியில், நம் மனதைக் காயப்படுத்தவென்றே சிலர் இருப்பார்கள். சிறிது காலம் வலிக்கும். எல்லாரையும், எப்போதும் மகிழ்வித்துக்கொண்டே இருக்க முடியாது என்று தெளிந்து, அவர்களைக் கடக்க வேண்டியதுதான்.

    சில சமயம், நாம் செய்தது நன்றாக இல்லை என்று ஒப்புக்கொள்வதற்கு மனோதிடம் வேண்டும். முன்னேற வேறு வழி?

    ஒரு கதை எழுதி அனுப்பிவிட்டு, அது ஏற்றுக்கொள்ளப்படவில்லையே என்று மனம் தளர்வதால் என்ன பயன்?

    என் கதை ஒன்று வெளிவந்ததும், அப்பத்திரிகை ஆசிரியரை ஒருவர் கேட்டிருந்தார்: “நீங்கள் பிரபலமானவர்களின் கதைகளைத்தான் பிரசுரிப்பீர்களா?”

    அதற்கான பதில்: “பிரபலமானவர்களும் ஒரு காலத்தில் ஆரம்ப எழுத்தாளர்களாகத்தான் இருந்திருப்பார்கள். அவர்களுடைய தளராத உழைப்பால் முன்னேறி இருக்கிறார்கள்”.

    `நான் பல வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன்,’ என்றாற்போல் ஒருவர் சிறந்த எழுத்தாளர் என்று ஆகிவிடுமா?

    முன்னேறிக்கொண்டே இருக்க அவர் என்னென்ன வழிகளைக் கடைப்பிடிக்கிறார் என்பது முக்கியம்.

    ஒரு காரியத்தைத் தொடங்கவே பயம். அல்லது, செய்துகொண்டிருக்கும்போதே, `இதை நல்லவிதமாகச் செய்து முடிப்பேனா!’ என்ற அவநம்பிக்கை. இதெல்லாம் பலவீனமானவர்களின் குணம்.

    எது பலம்?

    பலம் என்பது தேக பலம் அல்லது உரத்த குரல் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களே பிறரை வதைக்கிறார்கள். உண்மையில், அவர்கள் பயந்தவர்கள். பிறர் அவர்களுக்குப் பயப்படாது எதிர்த்து நின்றால், `பலசாலிகள்’ பயந்துவிடுவார்கள்.

    கதை

    “எனக்குத் தைரியமே கிடையாது. என் தாயால்தான் நான் இப்படி ஆகிவிட்டேன். நான் எது செய்தாலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பாள்!” என்று புலம்புவாள் மார்கரெட். நன்கு படித்து, உத்தியோகத்தில் அமர்ந்துவிட்ட பின்பும், கடந்தகாலத்திலேயே நிலைத்துவிட்டவள் இவள்.

    என்றோ நடந்ததையே எண்ணி, பிறர்மேல் கொண்ட ஆத்திரம் அடங்காமலேயே இருந்தால் அது அவர்களைப் பாதிப்பதில்லை, நம்மைத்தான் வருத்தும் என்பது மார்கரெட்டுக்குப் புரியவில்லை.

    அதன்பின், `தாயைப்போல் அதிகாரமாக நடப்பவர்கள்’ என்று அவள் கருதிய யாரையும் அவளால் ஏற்க முடியவில்லை. வலுச்சண்டை பிடிப்பாள்.

    கடந்தது கடந்ததாகவே இருக்கட்டுமே!

    எப்போதோ கிடைத்த வெற்றியால் பெருமிதமும், தோல்வியடையும்போது அயர்ச்சியும் அடைந்து, கடந்ததைப்பற்றியே எந்நேரமும் நினைப்பவர்கள் பலர்.

    மாறாக, `உபயோகமாக இன்னும் என்ன செய்யலாம்?’ என்று யோசிப்பவர்களே அடுத்தடுத்து வெற்றி பெறுகிறார்கள்.

    எந்த ஒரு வாழ்விலும் இடர்களோ, துயரமோ இல்லாது இருக்காது. அவர்கள் அதிலேயே மூழ்கிவிடுகிறார்களா, இல்லை, மீண்டு எழுகிறார்களா என்பதைப் பொறுத்துத்தான் வெற்றி- தோல்வி அடங்கியிருக்கிறது.

    கீழேயே கிடக்காது மீண்டும் எழும்போது, முன்பு இருந்ததைவிடச் சற்று மேலே சென்றிருப்போம்!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 103 (தொண்டனார்க்கு)

    சேக்கிழார் பாடல் நயம் – 103 (தொண்டனார்க்கு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல் :

    தொண்டனார்க்கு   இமயப்    பாவை   துணைவனார்   அவர்முன்  தம்மைக்
    கண்டவாறு      எதிரே   நின்று   காட்சிதந்து    அருளி,  மிக்க
    அண்டவா   னவர்கட்கு    எட்டா  அருட்கழல்    நீழல்   சேர
    கொண்டவாறு   இடையறாமல்   கும்பிடும்  கொள்கை  ஈந்தார்.  

    பொருள் :

    சிந்தை செய்த தொண்டனாருக்குப் பார்வதியம்மையார் கொழுநராகிய சிவபெருமான் அவர் முன் பன்னாளும் தம்மைக் கருத்தினில்வைத்துக் கண்டிருந்த வண்ணமே வெளிப்பட அவர் எதிரிலே வந்து காட்சி கொடுத்து அருள்புரிந்து, மிகுந்த தேவர்களுக்கும் எட்டாத தமது அருளாகிய சீபாதநீழல் சேரும்படி அருள் கொடுத்து, இடையறாமற் கும்பிட்டிருக்கும் பேற்றினையும் ஈந்தருளினார்.

    விளக்கம் :

    தொண்டனார் என்ற சீர், இறைவனது  தொண்டராகவே தம்மை  வைத்துச்  சிந்தை செய்தார் ஆகலின். முன்பு ‘கொற்றவன்’ என்றும் ‘புரவலர்’ என்றும் அந்தந்த  நிலைக்கேற்பக்  குறித்த சேக்கிழார்,  இங்குத்   ‘தொண்டனார்’ என்று வழங்கிய அழகும் தகுதியும் காண்க.  தொண்டனார் என்றதற்கேற்ப  இறைவன்  கழல் நிழலிலே   இடையறாமல்  இருந்து கும்பிடும்   சிறப்பை   ஈந்ததும்  காண்க.

    இமயப்பாவை துணைவனார் என்ற தொடர், சிவகாம வல்லியாருடன் வெளிப்பட்டுத் தந்த காட்சியை  விரித்துக் கூறியதைக்   காட்டியது.

    அவர்முன்  தம்மைக்  கண்டவாறு என்ற  தொடர், முன்பு பலகாலமும் சிந்தித்தும், வந்தித்தும்  அகத்தே கண்ட படியே, தில்லையம்பல  வாணரையே  தம் ஆத்மார்த்த  நாயகராக வணங்கியவர்  ஆதலின், அந்த அம்பலவரே  அம்மையுடன் எழுந்தருளிய  சிறப்பைக் காட்டியது. இக்காரணம்  பற்றியே   இங்கே  இடப வாகனம் கூறாது  விட்டார்.

    எதிரே  நின்று  காட்சி  தந்தருளி , என்ற தொடர் முன் உள்ளப் புண்டரிகத்து  உள்ளிருந்து காட்சி தந்தருளினவர், இப்போது அகம்புறம் என்பதின்றி யாங்கணும் விரிந்து நின்று காணுமாறு காட்சி யளித்தருளி. அவ்வாறு – காட்சி தந்தருளியவாறு. “விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்,

    மறைய நின்றுளன் மாமணிச் சோதி யான்
    உறவு கோல்  நட்டு  உணர்வு கயிற்றினான்,
    முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே“,

    “நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் றன்னை“

    “இவனென்னைப்  பன்னாள்  அழைப்பொழி யான்  என்று எதிர்ப்படுமே“

    முதலிய திருவாக்குக்கள்  இதனை  விளக்குகின்றன,

    மிக்க  அண்ட   வானவர்கட்கு  எட்டா  அருள் கழல் ‘’ என்ற தொடர்  மக்கள், தேவர், நரகர் என்னும் மூவகை உயர்திணையிலும் புலமை, ஆயுள், தவம், ஒளி முதலிய பலவற்றாலும் மிகுந்த தேவர்களுக்கும் எட்டமுடியாத கழலைக்  குறித்தது

    அண்ட வானவர் – அண்டங்களாகிய மேலுலகங்களை ஆட்சி புரியும் வானவர்கள். பிரமன் – விட்ணு – இந்திரன் முதலியோர்.

    “ஆரேனுந் தன்னடியார்க்  கணியான்   தன்னை,
    அமரர்களுக்கு   அறிவரிய அளவில்  லானை’’   முதலியவை காண்க.

    கழல் நிழல் – திருவடி வியாபகத்தின் நிறைவே நீழல் எனப்பெறும். பிறவித் துன்பமாகிய வெயிலுக்கு மறைவு தந்து ஆற்றுவிக்கும் நிழல். வெயிலின் வெப்பம்  மாற்றும் நிழல்போலத் துன்பம்  நீக்கி,  இன்பமான குளிர்ச்சி  தருவதனாலே நிழல் என்று  உருவகப்படுத்திப் பேசப்பெறும்.

    “தண்ணிழலாம்பதி“ என்பது சிவஞானபோதச் சூத்திரம்.

    “சுழலார் துயர்வெயில்  சுட்டிடும் போது  அடித்
    தொண்டர் துன்னு, நிழலாவன…..ஐயாற னடித்தலமே“

    என்ற திருவிருத்தத்தில் அப்பர் பெருமான் இவ்வுருவகத்தை முற்றும்  விரித்தருள்வது காண்க. நீண்ட  நிழல், நீழல்  எனப்பட்டது.

    நீழல் சேரக்கொண்டு – திருவருள் வியாபகத்தில் அவர் கலந்திருக்க ஏற்றுக்கொண்டு “முத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு“ என்றபடி ஆடுங் கழலே முத்திநிலையாம். அதனையே அவர் வந்தித்தார்; அதனையே சிந்தித்தார்; ஆதலின் இறைவன் அதனையே அவர் சேரக்கொண்டார் என்க.       

    இடையறாமல் கும்பிடும் கொள்கை – இதுவே சைவ சித்தாந்தத்தின்படி, முத்தியினதிலக்கணமாம். முத்தி நிலையினும் உயிர் இறைவனுக்கு அடிமையேயாகி அவனைக் கும்பிட்டு இன்புற்றிருக்கும் என்பது. “மறக்குமாறிலாத வென்னை“என்ற ஆளுடைய பிள்ளையார் திருத்துருத்தித் தேவாரமும்,

    “பண்டு திருவடி மறவாப் பான்மையோர்“ என்ற ஆளுடைய பிள்ளையார் புராணமும் காண்க. இடைவிடாது. சிந்தித்துக்கொண்டிருத்தல்.

    “குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டேயிருப்பர்“ (சிவஞானசித்தியார்)

    கொள்கை – கும்பிடுதலை உட்கொண்ட நிலை.

    இப்பாடலில் மெய்ப்பொருள்  நாயனார்  தம் செயலால்  கிறைவனின் திருவருளை முற்றவும் பெற்றமையாலே அவர் இறைவியோடு எழுந்தருளி தம் மலரடி நிழலில் என்றென்றும், இடையறாமல்  இருந்து கும்பிடும் சிறந்த  நிலையைப்  பெற்றார்! என்பது  நமக்கு   ஊக்கமும், நம்பிக்கையும் தருகிறது. மெய்ப் பொருள்  நாயனார்  அருள்  வரலாறு  இத்துடன் நிறைகிறது.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 27

    கதை வடிவில் பழமொழி நானூறு – 27

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 55

    வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
    செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் – பொங்கு
    படுதிரைச் சேர்ப்ப! மற்று, இல்லையே, யானை
    தொடுவுண்ணின் மூடுங் கலம்’

    பழமொழி -‘இல்லையே, யானை தொடு வுண்ணின் மூடுங்கலம்’

    சாய் சாய்… என தேநீர் விற்றுக்கொண்டு வரும் சிறுவனைப் பரிதாபமாகப் பார்த்தேன். அங்கிள் என என்னைச் சுரண்டி கூப்பிடும் அவனால் அந்தப் பாத்திரத்தைக் கூட சரியா புடிக்க முடியல. பேப்பர் கப்புகள கக்கத்துல இடுக்கிக்கிட்டு நிக்கறான். எங்கிட்ட வாங்கிக்கோ. அஞ்சு ரூபாதான். இஞ்சி டீ. இரயிலுக்குள்ள இதையே பத்து ரூபா சொல்லுவான். தூய ஹிந்தியில் வாதாடுகிறான்.

    சும்மா குடுத்த பத்துரூபா நோட்ட வாங்கிக்க மறுத்த அவன் நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உழைக்கணும்னு நினைக்கறான். அதனாலென்ன. இரண்டு டீ வாங்கிக்கொண்டு பத்துரூபாய்த் தாளை நீட்டினேன்.

    நியூடில்லி இரயில்நிலையம் முதல் பிளாட்பாரத்திலிருந்து சென்னை செல்லவிருக்கும்  தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரயில் இன்னும் சிறிதுநேரத்தில் புறப்படும். அறிவிப்பைத் தொடர்ந்து பெட்டிக்குள் ஏறினேன். என்னுடையது சைட் பர்த் என்பதால் பெட்டியை இருக்கைக்கு அடியில் நுழைத்துவிட்டு சீட்டில் அமர்ந்தேன். எதிர்சீட்டில் ஆள் இல்லை. அக்கம்பக்கம் நோட்டம்விட ஆரம்பித்தேன்.

    இராணுவஉடையில் நான்கைந்து வீரர்கள் எனக்குப் பின்னாலிருந்த பகுதியில் அமர்ந்திருக்கிறார்கள். மற்றபடி எல்லாரும் குடும்பம் குடும்பமா வந்திருக்காங்க போல. எனக்கு முன்னால் இருந்த ஆறு பெர்த்தையும் வடஇந்தியக் குடும்பம் ஆக்கிரமித்திருந்தது. எந்த மாநிலமோ. இரண்டு ஜோடிகளும் பதினைந்து பதினாறு வயது மதிக்கத்தக்க இரு பெண்குழந்தைகளும் அமர்ந்திருக்கிறார்கள். எந்த குடும்பமா இருந்தா என்ன. எப்படியும் சென்னை போறதுக்குள்ள கண்டுபிடிச்சிடலாம்.

    நீண்ட தொலைவு இரயில் பயணங்களில் நாம கேக்கணும்னே  இல்ல. வந்து ஏறும்போது எல்லாரையும் சந்தேகத்தோடயே பாப்பாங்க. அப்பறம் நேரம் போகப்போக சாதாரணமா பேச ஆரம்பிப்பாங்க. ஒரு இரவு தூங்கி எழுந்தவொடனே ரொம்பவே சுமுகமா பழகிடுவாங்க. இதுதான் இந்த இருபது வருச இரயில் பயணத்துல நான் கத்துக்கிட்ட அனுபவம். ஆனா இப்பயெல்லாம் சின்னப் பசங்க மொபைல விட்டு முகத்த திருப்பறதேயில்ல.

    அந்த வட இந்திய ஜோடிகளை கவனிக்க ஆரம்பிச்சேன். இளஞ்சோடி மகனும் மருமகளும் போல. அந்தப்பொண்ணு புடவைத்தலைப்பால முகத்தை மூடிக்கிட்டே அமர்ந்திருக்காங்க. எதிரில இருப்பவர் மாமனாராத்தான் இருக்கணும். ஒருவேளை பீஹார்காரங்களோ.

    எதேச்சையாக அந்தப் பெரியவரும் என்னயப் பாக்கறார். ஒருசிறு புன்முறுவலுடன் தலையசைக்கிறார். நானும் பதிலுக்கு தலையசைத்து வணக்கம் சொல்கிறேன். இரயில் கிளம்பிவிட்டது. பிளாட்பாரத்தில் அவசரமா ஓடிவந்த ஒரு தமிழ்க்குடும்பம் இரயிலப் பிடிக்கமுடியாம நின்னுட்டாங்க. எந்த டிராபிக்ல மாட்டினாங்களோ. தமிழ்க்குடும்பங்கள் பொதுவா தெற்கு தில்லியில்தான் அதிகமா வசிப்பாங்க. உள்ளே நெய்மணம் தூக்குது. வீட்டில காய்ச்சின நெய் போல. அதுக்குள்ள யாரோ சாப்பாட்டுப்பொட்டலத்த திறந்துட்டாங்க. இதுவே சென்னையிலிருந்து கிளம்புற இரயிலா இருந்தா இலையோட சேர்ந்த இட்லிசட்னி வாசனை வரும். யோசனையுடன் கண்ணை மூடினேன். பழைய ஞாபகங்கள் அலைமோதின.

    சின்ன வயசில கும்பகோணத்துல இருந்தோம். எங்கப்பா அங்க ஒரு ஹோட்டல் நடத்திட்டிருந்தாரு. மொத்த குடும்பமும் அதுக்காக உழைக்கும். அம்மாவும் பாட்டியும் வீட்டிலயே ஆட்டு உரலில இட்லிமாவும் வடைமாவும் அரைச்சு எடுத்துட்டுப் போவாங்க. மணி அய்யர்தான் எங்க ஹோட்டல் சரக்கு மாஸ்டர். ஒத்த ஆளா நின்னு மளமளனு காரியம் பாப்பார். சுடச்சுட இட்லி வடை இலையில பார்சல் பண்ணி ஆபீஸ் போறவங்களுக்குக் குடுப்பாரு. உக்காந்து சாப்பிட நேரமில்லாதவங்க அதை வாங்கிட்டுப்போவாங்க. எனக்கு விவரம் தெரிஞ்சு பதினைந்து வயசு வரை நல்லா ஓடிட்டு இருந்துது. திடீர்னு அப்பாவுக்கு கெட்ட நண்பர்கள் சேர்க்கை அதிகமாயிடுச்சு. தண்ணி அடிக்க ஆரம்பிச்சார். அப்பறம் சீட்டுவிளையாடற பழக்கம் வேற வந்திருச்சு. தினமும் வியாபாரத்தக் கவனிக்காம ஊர்சுத்திட்டு தன்னோட நண்பர்களையும் கூட்டிக்கிட்டு வந்து காசுவாங்காம சாப்பாடு குடுக்க ஆரம்பிச்சார்.

    பாவம் மணி அய்யர். அம்மா, பாட்டி மேல இரக்கப்பட்டு சம்பளம் இல்லாமகூட பலமாசம் வேலை பாத்தாராம். அப்பறம் நகைகள அடகு வச்சு, பாத்திரங்கள வித்து கொஞ்சநாள் நடத்திட்டு வந்தாங்க. அதுவும் முடியாம ஹோட்டல வித்துட்டு துணி தச்சிக்குடுத்து சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க அம்மா. நோய்வந்து அப்பாவும் போய்ச்சேந்துட்டார்.

    அரசுபள்ளியில பணம் கட்டவேண்டியதில்லங்கறதால என்னால படிக்க முடிஞ்சது. அப்பறமும் பலபேர் தயவால கல்லூரிப்படிப்ப முடிச்சிட்டு அரசு உத்தியோகத்துல சேந்தேன். ரிடையர்மென்ட்கு இன்னும் ரெண்டு வருசம்தான் இருக்கு.

    யாரோ என்னைத் தொட்டு எழுப்புகிறார்கள். எதிரில் அந்த வட இந்திய மனிதர் கையில் பூரியுடன் நிக்கறார். பாயி…என அழைத்து தாங்கள் மதுராவிலிருந்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அங்கே பெரிய ஓட்டல் வைத்து நடத்துபவராம். இப்போ சென்னையில் ஆரம்பிக்கறதுக்காக போய்க்கிட்டிருக்காராம். என்னயப் பாத்தவொடனே சொல்லணும்னு தோணிச்சாம். சுத்த பசு நெய்யால செஞ்ச பூரி சாப்பிட்டுப் பாருங்கனு என்கிட்ட குடுக்கறார். இது அவரோட ஹோட்டல்ல குடுக்கற ஸ்பெஷலாம். வாங்கிக்கொண்டு வாழ்த்துக்கள் சொன்னேன். என் அப்பா கூட முன்னால் ஹோட்டல் நடத்தியவர்தான் என அறிமுகப்படுத்தியவுடன் அவர் பார்த்தீர்களா அதனாலதான் உங்களப் பாத்தவொடனே சொல்லணும்னு தோணிச்சு என்று சந்தோஷப்படுகிறார். அவருடைய நோக்கில் என் அப்பா ஏதோ பெரும் சாதனை படைத்தது போலவும் தாமும் அவ்வாறே வெற்றிபெறுவோம் எனவும் நினைக்கிறார் போல.

    இருக்கட்டும். எனக்கு மட்டும்தானே தெரியும் ‘இல்லையே, யானை தொடு வுண்ணின் மூடுங்கலம்’ங்கற பழமொழி. யானையே தொட்டு உண்ணத் தொடங்கிட்டா அதற்கு மூடி மறைத்து வைக்க தகுதியான பாத்திரம்னு ஒண்ணு கிடையாதில்லையா. அதுமாதிரிதான் எங்கப்பா பண்ணின வேலையும்.

    அந்த மனிதர் தன் குடும்பத்தார் கிட்ட என்னயப் பத்திசொல்லிட்டார்போல. எல்லாரும் என்னயத் திரும்பிப்பாக்கறாங்க.

    உலகம் எவ்வளவு வித்தியாசமானது. எல்லா உண்மையையும் எப்பவும் சொல்லணும்னு இல்ல. இந்தக் குடும்பத்துக்கு இப்ப என்னால நம்பிக்கை கிடைச்சிருக்கு. அதனோட பிரதிபலிப்பா அவங்க எல்லார் முகத்திலயும் சந்தோசம். சென்னையில் கால்வைக்கும்போது அவங்க சந்தோசமா நம்பிக்கையோட இறங்குவாங்க. கண்டிப்பா நல்லா உழைச்சு முன்னுக்கு வருவாங்க. கைபேசியில் என் மகள் அழைக்கிறாள். அவளுடன் பேசத்தொடங்குகிறேன்.

    பாடல் 56

    உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
    கற்றானை நோக்கியே கைவிடுக்க – கற்றான்
    கிழவனுரை கேட்கும் கேளான் எனினும்
    ‘இழவன்று எருதுண்ட உப்பு’.

    பழமொழி – ‘இழவன்று எருதுண்ட உப்பு’

    வாங்க மாமா. உக்காருங்கோ. ஊர்ல எல்லாரும் சௌக்கியமா? காபி சாப்பிட்டேளா விசாரிக்கிறாள் விசாலம். ஆமாம். பின்ன நான் வராம எப்படி. இந்த ஆத்துல நடந்த ஒவ்வொரு விசேசத்துக்கும் மொதல்ல நான்தான் ஆஜராவேன். கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள்னு எவ்வளவு விசேசம் எடுத்து நடத்தியிருப்பேன். இப்ப கொஞ்சம் வயசாயிடுத்து அதனால வேத்துமனுசனா முந்தினநாள் வந்து இறங்கறேன். இருந்தாலும் பழக்கதோசம். எல்லாத்தையும் ஒருதடவை பாத்துடறேன். நீ ஒண்ணும் கவலப்படாத. சொல்லிவிட்டு என் கேள்விகள ஆரம்பிச்சேன்.

    என்னம்மா வாத்தியக்காரன் நாதஸ்வரம் எல்லாத்துக்கும் சொல்லியாச்சா. சீர்வரிசை தட்டு தாம்பாளம் எல்லாம் ரெடிபண்ணியாச்சா. ஆட்கள் வர ஆரம்பிச்சாச்சு. சாயங்காலம் மாப்பிள்ளை அழைப்பு.  இன்னும் பன்னீர் சந்தனக்கிண்ணம் வெளியில வைக்கலயேமா.

    நான் சொல்லறத காதுலயே வாங்கிக்காம விசாலம் யாருக்கோ காபி உபசாரம் பண்ணிண்டிருக்கா. எம் முன்னால உக்காந்துண்டிருக்கற பொண்ணரசி என்னயவே பாக்கறா. மரகழண்ட கேசு தானே பேசிக்கறதுனு நினைப்பாளோ. இருக்கட்டும். ஸ்டூல் மேல இருந்த வெற்றிலை சீவலை வாயில போட்டுக்கறேன்.

    சாயங்கால டிபன் என்ன?. வாழக்காய் பஜ்ஜியும், கேசரியும் தானே. அதுல ஒண்ணும் மாறுதல் இல்லயே. நான் பாட்டுக்கு பேசிண்டே போறேன். யாரும் பதில் சொல்ல மாட்டேங்கறீளே. என்ன ஆயிடுத்து இங்க. அதுக்குமேல பொறுமையில்லாம…. வயசானதால யாரும் மதிக்கமாட்டேங்கறா. போல,  விசாலம் என் மூத்த அக்கா பொண்ணுதான்.  என்னயவிட ரெண்டு வயசு சின்னவள். அவள் பேத்திக்குதான் நாளைக்கு கல்யாணம். புலம்பிண்டே வாசப்பக்கம் வந்துட்டேன். விசாலம் பேச்சுக்கே மரியாத இருக்கோ என்னமோ அப்பறம்தானே என் பேச்சக் கேக்கறதுக்கு. இருந்தாலும் வாய் சும்மா இருக்கமாட்டேங்கறது.

    ஏண்டாப்பா. பந்தக்காலக் கண்ணுலயே காணலயேடா. வாசப்பக்கம் ஓலப்பந்தல் போடுவேளா மாட்டேளா. வாழ மரம் எங்கடா?. அதுக்குப்பதில சீரியல் பல்ப மாட்டறேளா. பேஷ் பேஷ்.

    வேல செஞ்சிண்டு நிக்கற நாலு பசங்களையும் யாரோ ஒருத்தன் திட்டிண்டு இருக்கான்.

    வெரசலா லைட் அலங்காரம் பண்ணுடே. ஒரு வீட்டுக்கே இத்தன நேரம் எடுத்தா பெறகு கம்பெனிய இழுத்துமூடிட்டு படுத்து ஒறங்க வேண்டியதுதான். கத்திவிட்டு தள்ளிநின்னு துணிய கொசுவம் மடிச்சிண்டு நிக்கற பிள்ளையாண்டான் கிட்டப் போறான்.

    ஏல துணிய சுருக்குமடிச்சு ஒரு ஆர்ச் போடத் தெரியல. உன்னயெல்லாம் வச்சி  நாளமுன்னயும்…..  என்னவேல செஞ்சு கிழிக்கப் போறேன். உங்க நாலு பேரையும் சொந்தக்காரம்னு நெனச்சி வேலைக்குச் சேத்தது என் தப்பு.

    சொல்லிட்டு என்னையே பாக்கறான்.

    சாமிக்கு எந்த ஊரு. உள்ளூர்ல பாத்ததில்லயே.

    அப்பாடா வந்ததுக்கு ஒருத்தனாவது பேசறானேன்னு நினைச்சு பேச்சு குடுத்தேன். எனக்கு இந்த ஊருதாம்பா. குழந்தேளுக்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்குடுக்கற வர இந்தக் கோவில்ல தான் வேல பாத்துண்டிருந்தேன்.  பதினஞ்சு வருசமா இந்தப் பக்கமே வரல. எம்புள்ள என்னய பாம்பே கூட்டிண்டு போயிட்டான். அங்கதான் இருக்கேன். இப்போ இந்தக் கல்யாணத்த சாக்கு வச்சுண்டு இங்க வந்தேன். எம்புள்ளயும் வந்திருக்கான். அவனுக்குக் கொஞ்சம் டவுண்ல வேலை இருக்குனு என்னய இறக்கி உட்டுட்டுப் போயிட்டான்.

    நீர்யாரு? பந்தல் போடறவரா? இன்னும் வேலயே ஆரம்பிக்கலயே அதான் கேக்கறேன்.

    சாமி. நீங்க பழைய காலத்திலயே இருக்கீங்க. இப்ப யாரும் பந்தல் போட மாட்டாக. தெருவுல பாத்தீரா. தார் ரோடு போட்டிருக்கு. அதனால குழி தோண்டக்கூடாது. இப்பயெல்லாம் கல்யாணம் நடத்திக்குடுக்கறதுக்குன்னு கம்பெனிகள் வந்திருச்சு. அந்தக் கம்பெனி அலங்காரத்துலேந்து சமயல், பூமாலை வரை எல்லாமே செஞ்சு குடுத்துடும். வாசல்ல பன்னீர் சந்தனம்னு சொன்னீகளே அது கூட அவங்களே செஞ்சி போடுவாங்க. இன்னும் ஒருமணிநேரத்துக்குள்ளார  எல்லாத்தையும் வண்டியில கொணாந்து இறக்கி வச்சிருவாக. ஆட்களயும் அவுகளே கூட்டியாந்துருவாக.. பொண்ணுவீட்டு, மாப்பிள்ள வீட்டு சாதிசனத்துக்கு ஒரு சோலியுமில்ல. டென்சன் ஆவாம சந்தோசமா கல்யாணம் அட்டெண்ட் பண்ணுங்க. சொல்லிட்டு ஆர்ச் போடறவன்கிட்ட திரும்பப் போய் கத்திண்டிருக்கான்.

    ஓய் இம்புட்டு நேரம் நீர் இவாள்கிட்ட பேசிண்டிருந்தத நான் கேட்டேன். அந்தப் பிள்ளையாண்டானுக்குதான் வேல சரியாத் தெரியலயே அப்பறம் எதுக்கு கட்டாயப் படுத்தறீர். சொந்தக்காரன்னு நினைச்சு நீர் வேலை குடுத்திருக்கீர். இப்ப உமக்கும் டென்சன். அவனாலயும் வேலை செய்யமுடியல. இதத்தான் முன்ன ‘இழவன்று எருதுண்ட உப்பு’னு பழமொழியா சொல்லுவா. ஒருவேலயப் படிச்சவனுக்கே அந்த வேலயக் குடுக்கணும். எருது உப்பைத் தின்னாலும், அதிக உரமுடையதா உரியவனுக்கு நல்லா உழைக்கும் அதுபோல படிச்சவனும் உழைப்பான் அப்டிங்கறது அதோட அர்த்தம். இனிமேலாவது உம்ம சொந்தக்காரன்னு பாக்காம வேலைய செய்யத் தெரிஞ்சவனுக்கே அந்த வேலையைப் போட்டுக்குடும். அவாளும் சந்தோசமா இருப்பா. நீரும் நிம்மதியா இருக்கலாம்னு சொல்லிட்டுத் திரும்பறச்சே பக்கத்தாத்து கிட்டு அதான் என் பால்ய சினேகிதனப் பாத்தேன். கம்பு ஊனிண்டு நிக்கறான். கொஞ்சநேரம் பழையகதைகளப் பேசலாம். ஆசையோட அவாத்துக்குப் போறேன்.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 15

    பரிமேலழகர் உரைத்திறன் – 15

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

     வள்ளுவர் சொன்ன கதையும் பரிமேலழகர் எழுதிய உரையும்

    முன்னுரை

    தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என்னும் முத்திறத்தன. அதில் யாப்பு, அணி என்பனவற்றைக் கூட்டிய வழக்கு பிற்காலத்தது. எனின் யாப்பு பொருளுக்குள்ளேயே அடங்கும், அது செய்யுள் கட்டுமானம் பற்றயதாதலின். செய்யுளின் உள்ளடக்க உத்தியைத் தொல்காப்பியத்தின் பொருளியல் விளக்குகிறது. எனவே அணி என்பது தமிழ்நெறியாகாது. ‘செய்யுளுக்கு அணி’ என்பது பெண்ணுக்கு அணிகலன் என்பதுபோலப் புற அழகைக் கூட்டுமேயன்றி அகத்துக்கு அழகுதராது. தமிழ்க்கவிதைகளின் வெற்றி அவற்றின் யாப்பில் இல்லை. பொருளில்தான் அடங்கியுள்ளது. யாப்பினால் ஒரு கவிதையோ காப்பியமோ வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அது புலவர்களின் திறங்கூறலாம்.

    “வெண்பாவிற்புகழேந்தி பரணிக்கோர்
    சயங்கொண்டான் விருத்தமென்னும்
    ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா
    அந்தாதிக் கொட்டக் கூத்தன்
    கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
    வசைபாடக் காள மேகம்
    பண்பாகப் பகர்சந்தம் படிக்காச
    லாலொருவர் பகரொ ணாதே.”

    பலபட்டடைச் சொக்கநாதப் புலவரும் மூன்று புலவர்களைத் தவிர மற்றவருக்கான பெருமையை அவர்தம் கவிதைகளின் பொருண்மைக்கு ஏற்றியுரைப்பதைக் காணலாம். எனவே செய்யுளணி என்பது மிகவும் பிற்காலத்தது. தண்டியலங்காரம் செய்த ‘தமிழ்வினை’ அது. உவமம் அணியாகாது என்பதும் அதனைத் தவிர வேறு எதனையும் தமிழ்க்கவிதைகள் செறித்துக் கொள்வதில்லை என்பதும் தனி ஆய்வுக்குரியது. பொருட்பகுதியான உவமத்தைப் பின்னாலே வந்தவர்கள் அணியாக வரித்துக் கொண்டது அவர் விருப்பம் ஆயிற்று. ஆகவே பொதுமக்களாலும் பிறராலும் அவ்வணிகள் புறக்கணிக்கப்பட்டன. அல்லது அணியை முன்னிறுத்தி எழுதப்படும் இலக்கியங்கள் தோல்வி கண்டன. திருவள்ளுவர் காலத்திலோ தொல்காப்பியர் காலத்திலோ அணியிலக்கணச் சிந்தனை தமிழில் இருந்ததற்கான அடையாளம் ஏதுமில்லை. ஆனால் திருக்குறளுக்குத் தாம் எழுதிய உரையில் பரிமேலழகர் பல இடங்களில் அணியிலக்கணத்தைப் பொருத்திக் காட்டுவதைக் காணலாம். அந்த அடிப்படையில் பிறிதுமொழிதல் அணி பற்றிய அழகரின் விளக்கம் விரிவாகவும் ஆய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    பழமொழிகளும் சமுதாயமும்

    சமுதாயத்தின் சாயலே இலக்கியம். அதாவது சமுதாயச் சிந்தனைகளின் நிழல் படியாத இலக்கியம் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்.  சமுதாயச் சிந்தனைகள் என்னும் தொடர் மக்கள் வழக்காறுகளையும் உள்ளடக்கியதே. மொழி மக்களுக்கானது. ‘வழக்கும் செய்யுளும்’ என்பது தொல்காப்பியம். மக்கள் வழக்கில் ஒரு முறை காணப்படுகிறது. அந்த முறை என்னவென்றால் கசப்பான கருத்துக்களையோ இன்றியமையாக் கருத்துக்களையோ நேரடியாகக் கூறின் கேட்பார் மனம் புண்படும் எனக் கருதிக் குறிப்பாகச் சொல்லுவது. பிறரைக் காட்டிச் சொல்லுவது. உவமங்களால் சொல்லுவது என இது பலதிறத்தவாகும். சான்றாகக் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது. இது நெல் மணியைக் காணாதவனுக்குப் பொருந்துமா? ஒரு செயலைச் செய்து முடிக்கும் காலச் சூழல் நிலையாக இருக்காது., தொடராது. எனவே அந்தச் சூழல் அமைகிற அந்தக் குறித்த குறைந்த காலத்திலேயே அதனை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் இந்தப் பழமொழி உணர்த்துகிறது. அன்றிக் காற்றைப் பற்றியும் தூற்றுவதைப் பற்றியும் கூறுவதாகாது. ‘கள்ளன் பெண்சாதி கைம்பெண்’ என்பது ஒரு பழமொழி. ‘மற்றவர் பெண்சாதி கைம்பெண் ஆகமாட்டார்களா?’ என்றால் இல்லை. கள்ளன் திருடுவதையே தொழிலாகக் கொண்டிருப்பதால் கொலை எப்போதும் நிகழலாம். அவன் மனைவிக்கு மங்கல வாழ்க்கை நிலையில்லை. திருடச் சென்ற கணவன் உயிரோடு திரும்புவான் என்பதற்கு உறுதியில்லை. எனவேதான் மனைவியாகவே இருந்தாலும் கள்ளனுக்கு வாழ்க்கைப்பட்டால் விதவையாகவே வாழ வேண்டும்’ என்பதை உணர்த்துகிறது.

    பழமொழியே பிறிது மொழிதலணி

    பிறிது மொழிதல் அணி பற்றிய தண்டியலங்காரக் கருத்து இப்படி அமைந்திருக்கிறது.

    “கருதிய பொருள் ஒத்தது புலப்படுத்தற்கு
    ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டென மொழிப” (தண்டி-52)

    “கருதிய பொருளை மறைத்து, ஆனால் அதனை வெளிப்படுத்தற்குப் பொருத்தமான பிறிதொன்றனைச் சொல்வது ஒட்டு என்னும் அலங்காரமாம்” என்னும் உரை இந்த அணி விளக்கத்திற்கு மட்டுமன்று முந்தைய பத்தியில் கூறப்பட்டிருக்கும் பழமொழிக்கான பொருளுணர்த்தும் பாங்கிற்கும் பொருந்துவதைக் காணலாம். தண்டியலங்கார உரையாசிரியர் இதனை ‘உவமப்போலி’ எனவும் ‘பிறிது மொழிதல்’ எனவும் ‘நுவலா நுவற்சி’ எனவும்  ‘புனைவிலிப் புகழ்ச்சி’ எனவும் அணியின் பிறபெயர்களைக் கூறுகிறார். ‘சுருக்கணி என்பது வீரசோழியம்’ சொல்ல வேண்டியதைப் பிறிதொன்றால் விளக்குவது ஆதலின் பிறிது மொழிதல் ஆயிற்று. ‘சொல்லாமல் சொல்வது’ என்பதால் நுவலா நுவற்சி ஆயிற்று.

    ஆனால் உவமப்போலி என்பது அகப்பொருள் பொருள் புலப்பாட்டு உத்தி. இதனை ‘உள்ளுறை உவமம்’ என்பதும் வழக்கு. இது அகப்பொருளுக்கே உரியது. பிறிது மொழிதல் அணியோ புறப்பொருளுக்கு உரியது. அகத்தில் உவமப்போலியாக இருப்பது புறத்தில் பிறிதுமொழிதல் அணியாகுமா என்பதற்கும் போதிய விளக்கம் பெறுமாறு இல்லை. புறத்திணையில் கருத்துக்களை வெளிப்படுத்துகிற முறையாக புறநிலை வாழ்த்து, வாயுறை வாழத்து, செவியறியுறூஉ என்பன போலப் பல உள்ளன. எனவே பிறிதுமொழிதல் அணியை ‘உவமப்போலி’ என்பது பொருந்தாதாயினும் உள்ளுறை உவமத்தில் பொருளுணரும் பாங்கும் பிறிதுமொழிதலணியில் பொருளுணரும் பாங்கும் ஓரளவு ஒத்திருப்பதால் இதனை ஏற்கலாம்.

    பிறிதுமொழிதல், ஒட்டு, நுவலாநுவற்சி, உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியவையெல்லாம் ‘பழமொழி’ என்னும் மக்கள் வழக்கின் இலக்கிய இலக்கண உருவாக்கங்களே என்பது தள்ளிவிடக் கூடிய கருத்தன்று.

    திருக்குறளில் பிறிது மொழிதல்

    திருக்குறளில் இவ்வாறு பிறிது மொழிதலணியாகக் கருதக்கூடிய பாடல்கள் அமைந்ததற்கு அணியிலக்கணச் சிந்தனை காரணமன்று. முந்தைய பத்திகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கியல் சார்ந்த சிந்தனைகளும் பழமொழிப்  பயன்பாடுகளுமே எனலாம். கடுஞ்சொல்லை விலக்கி இன்சொல்லை முன்னெடுக்கும் திருவள்ளுவர்க்கு இது இயல்பாகவும் இருந்திருக்க முடியும்.  அதனால்தான் ஒட்டுமொத்த திருக்குறள் நூலில் அதாவது ஆயிரத்து முந்நூற்று முப்பது பாடல்களில் வெறும் எட்டு பாடல்களில் மட்டுமே இத்தகைய பதிவுகள் காணக்கிடக்கின்றன. அவையும் பொருட்பாலில் மட்டுமே அமைந்துள்ளதும் நோக்கத்தக்கது.

    எதற்கும் அளவுண்டு எளியர்க்கும் வலிவுண்டு

    ‘நாலாறு கூடினால் பாலாறு’ என்பது பழமொழி. துன்பத்தைப் பாரம் என்பது வழக்கு. ‘மனப்பாரம்’, ‘தலைப்பாரம்’ என்னும் வழக்கு நோக்குக. பாரம் அதிகமானால் மனம் உடையும். பொருள் அளவு மிக, வண்டியின் அச்சும் முறியும். இந்த உள்ளடக்கத்தையும் எடுத்துக்காட்டையும் பொருட்பாலில் வலிமைமிகுந்த மன்னனைப் பார்த்து வள்ளுவர் கூறுகிறார்.

    “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
    சால மிகுத்துப் பெயின்” (475)

    என்று. இந்தக் குறட்பாவிற்கு உரையெழுதிய பரிமேலழகர் “பீலியேற்றிய சகடமும் அச்சு முறியும். அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்” என்னும் பொழிப்புரையில் ‘பொறுக்கும் அளவின்றி’ என்னும் தொடர் பயின்றிருப்பது காண்க.

    “எளியர் என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்க வழி வலியழியும், என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம்.”

    என்று எழுதிக் காட்டுகிறார். எளியவர்க்கு வலிமை குறைவே. ஆனால் அவ்வெளிமையே கூட்டணி அமைத்துக் கொண்டால் எளிமை வலிமையாகும். வலிமை எளிமையாகும். இன்றையக் காலக்கட்டத்து அரசியல் நுட்பத்தை அன்றே திருவள்ளுவர் கண்டுணர்ந்து எழுதியிருப்பதைக் காணலாம். இந்தப் பாடலில் திருவள்ளுவர் மயிற்பீலி மென்மையானது என்பதைச் சொல்லவோ அதனை அளவுக்கதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முரிந்துவிடும் என்பதைச் சொல்லவோ வரவில்லை. இவையெல்லாம் அந்தக் காலத்துச் சமுதாயத்து நடைமுறைகள். அனைவரும் அறிந்த உண்மை. சாதாரண மனிதனுக்குத் தெரிந்த வழக்கியல் உண்மையை வைத்து நாட்டை ஆளும் மன்னனுக்கு அவன்தன் வலிமையின் அளவுணர்த்தும் அறிவுரை என்பதைப் பரிமேலழகர் விளக்கிக் காட்டுகிறார்.

    எதற்கும் எல்லையுண்டு

    ‘கரும்பு இனிக்குதென்று வேரோடும் பிடுங்காதே’, ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பன சிற்றூர் வழக்கு. ‘கொடுக்கிறான் என்பதற்காகத்  தொந்தரவு செய்யாதே’ என்பதைச் சொல்லவந்தவர், சொல்ல வேண்டியதை மறைத்து வேறு வாய்பாட்டில் சொல்லிய பழமொழிகள் இவை. இவை போன்ற பொருள் தரும் பழமொழிக் கருத்தினைத் திருவள்ளுவர்,

    “நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்தூக்கின்
    உயிர்க்கு இறுதியாகி விடும்” (476)

    என்னும் குறட்பாவில் பதிவு செய்திருக்கிறார். “ஒரு மரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார் தம் ஊக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின் உயிர்க்கு இறுதியாகிவிடும்” என்று பொழிப்புரை தரும் பரிமேலழகர்,

    “பகைமேல் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாம் அளவும் சென்று நின்றான். பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவன் உயிர் முடிவிற்கு ஏதுவாம்” என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இதுவும் மேலை அலங்காரமாம்.”

    முந்தைய பாட்டில் தனியொரு பகைவன் எளியன் என்று எண்ணாதே அவனையொத்தார் இணைந்து கொண்டால் தனியொரு வல்லாளன் வலிமை குறைந்தவனாக்கப்படுவான் என்பதைக் கூறிய திருவள்ளுவர் இந்தப் பாடலில் உன் ஊக்கம் பெரிது என்பதற்காகவும் எதிர்ப்பார் யாரும் இல்லை என்பதற்காகவும் அளவு கடந்து போகாதே என்னும் உண்மையைக் கூறுகிறார். ஊக்கம் வினைமுடிக்க உதவ வேண்டும். ஆனால் மனவெழுச்சியால் முந்துறுகிற பொழுது அந்த ஊக்கமே அவனைக் கொன்று விடுகிறது. ‘வினை முடிவிற்கு ஏதுவாகாது உயிர் முடிவிற்கு ஏதுவாம்’ என்னும் சுருங்கச் சொல்லி விளக்கும் அழகரின் உரைத்திறன் சொல்லி மாளாது.

    முதலைக்கு முடிவு தரையில்

    ‘சேற்றிலே புதைந்த யானையைக் காக்கை கொத்தும்’ என்பது பழமொழி! பகைவலிமை அறிந்து செயல்பட வேண்டிய அரசனுக்கு வழிசொன்ன திருவள்ளுவர் கள நிலவரத்தை ‘இடனறிதல்’ என்னும் சொல்லால் அறிவுறுத்துகிறார்.

    “நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற” (495)

    என்னும் குறட்பாவிற்கு “முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின் பிறவற்றையெல்லாம் தான் வெல்லா நிற்கும். அப்புனலின் நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லா நிற்கும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் எழுதிக்காட்டும் விளக்கவுரை அவருடைய நுண்ணியத்தைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

    “மேற்செல்லும் அரசன் பகைவன் நிற்றலாற்றா இடமறிந்து செல்வராயின் அவர்  தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றர் இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரமாம்.”

    “எதிரி நிற்கமுடியாத இடத்தில் தான் நின்று கொண்டு அவன் நிற்க முடியாத இடத்தில் அவனை எதிர்ப்பதே வெற்றி தரும் போர்முறை. மாறாக தான் நிற்கமுடியாத இடத்தில் தான் நின்று கொண்டு உறுதியான இடத்தில் நிற்கும் எதிரியை எதிர்த்தால் நமக்கு எளியராய் இருந்திருக்க வேண்டிய எதிரிக்கு நாம் எளியவர் ஆகிவிடுவோம்” என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர். முதலைக்கு இறுதி தரையில் என்பதை அறிந்து கொண்டு அதனைத் தாக்கியழிப்பதைப்போலப் பகைவர்களை அழிக்க வேண்டுமாம் என்பது வரலாறு. இதனை உள்வாங்கி எழுதும் அழகரின் விளக்கவுரை பலமுறை படித்து இன்புற்று வியக்கத்தக்கதாம்.

    கப்பலுக்குக் கடலே வீதி! தேருக்குத் தெருவே வீதி!

    ‘ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்’ என்பதும் ‘ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்’ என்பதும் தமிழகப் பழமொழிகள். இவையொத்தன இன்னும் இருக்கலாம். இதன் சாரத்தை இலக்கிய மதிப்பீட்டுக்கும் பொருட்பாலின் பொருளடர்த்திக்கும் பயன்படுத்திக் கொள்ளும் திருவள்ளுவரின் சதுரப்பாடு பின்வரும் குறட்பாவில் அறியப்படுகிறது.

    “கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயும் ஓடா நிலத்து” (496)

    “நிலத்தின்கண் ஓடும் கால்வலிய நெடுந்தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா. இனி அக்கடலின்கண் ஓடும் நாவாய்கள் தாமும் அந்நிலத்தின்கண் ஓடமாட்டா” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    ‘மேற்சென்றார் பகைவர் இடங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினை செய்க என்பது தோன்ற நின்றமையின் இதுவும் மேலை அலங்காரமாம்.

    என விளக்கவுரை எழுதியிருக்கிறார். பொழிப்புரையிலேயே அவருடைய நுண்ணியம் வெளிப்படுவதை அறியலாம். கடலோடும் நாவாய் என்பதைக் கொண்டு ‘நிலத்தோடும் தேர்’ என்று எழுதுகிறார். ஓடுதற்குரிய வலிய கால்கள் இருந்தாலும் அவையின்றி நீந்தும் நாவாய் ஆகாது. இதுபோலவே பாய்மரம், பாய், சுக்கான் முதலிய கடல் நீந்தும் கருவிகள் இருந்தாலும் நாவாய் தரையோடும் தேராகாது. ‘ஏற்ற கருவிகளால் வினைசெய்க’ என்பதுதான் திருவள்ளுவர் சொல்லவரும் கருத்து. ‘கப்பலுக்குக் கடலே வீதி’ என்பதும் ‘தேருக்குத் தெருவே வீதி’ என்பதும் தெரியாத பொருளல்ல. தெரிந்த பொருளைக் காட்சிப்படுத்தியதன் நுட்பத்தை உணர்ந்துகொண்டு பரிமேலழகர் எழுதும் பாட்டுக்கு அப்பாற்பட்டு நிற்கும் ஆழமான பொருளை அதிகாரப் பொருண்மைக்கேற்ப இயைபுபடுத்தி உரைக்கும் உரைத்திறன் உணர்க.

    நரிக்கதை சொன்ன நாயனார்

    பாட்டி சுட்ட வடையைக் கவ்விக் கொண்ட காக்கையை நரி ஏமாற்றிய கதையைப் பள்ளியில் படித்தவர்கள் நாம். ஆனால் நரியை அதன் சூழல்பற்றி மதயானையை வெல்லும் என்ற அதன் திறனைப் பாடியிருக்கிறார். இங்கே நரியைப் பாடுவது திருவள்ளுவர் நோக்கமன்று. யானையின் தோல்வியைப் பாடுவதுதான் அவர் நோக்கம். அவர் பாடுகிறார்.

    “காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு” (500)

    இந்தப் பாட்டிற்குப் “பாகர்க்கு அடங்காவுமாய் வேலாள்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை அவை கால் ஆழும் இயல்பிற்றாய சேற்று நிலத்துப் பட்டுழி நரி கொல்லும்” என்று பொழிப்புரை எழுதும் பரிமேலழகர் அந்தப் போர்க்களக் காட்சியை அப்படியே சித்திரித்துக் காட்டுகிறார்.

    பரிமேலழகர் சித்திரித்துக் காட்டும் காட்சி வள்ளுவருடையது. சித்திரிப்பு அழகருடையது. களிற்றின் முகத்தில் ஆட்கள் தொங்குகிறார்கள். எப்படி? அவர்கள் அந்த யானையை எதிர்த்தபோது கையில் வேலைத் தாங்கிய வீரர்கள். அவர்கள் வேலொடு நின்றபோது எதிர்சென்று குத்தித் தூக்கிய யானையின் தந்தத்தில் அவர்கள் தொங்குகிறார்களாம். அத்தகைய வல்லமை உள்ள களிறு.  இது யானையின் ஒரு வகை வீரம். இன்னொரு வீரத்தை ஒரு சொல்லால் திருவள்ளுவர் குறிக்கிறார். அந்தச் சொல் ‘கண்’ என்பது. கண் என்றால் மூங்கில். பாகன் கையில் வைத்திருக்கும் கோல் மூங்கிலால் ஆனது. முகப்பு இரும்பால் நங்கூரம்போல் இருக்கும். எனவே அது அந்தக் கோலுக்கு ஆகி வந்தது ஆகுபெயர். பிறகு அந்தக் கோலைத் தாங்கிய பாகனுக்கு ஆகிவந்ததும் ஆகுபெயர். அதாவது ஒரு பொருளின் இயற்பெயர் மற்றொரு பொருளைக் குறித்து அதுவும் இன்னொரு பொருளைக் குறிக்குமானால் அது இருமடியாகுபெயர். எனவே ‘கண் அஞ்சா களிறு’ என்றால் மூங்கிலால் செய்யப்பட்ட அங்குசத்தைக் கையில் தாங்கிய பாகனுக்கும் அடங்காது என்பது இன்னொரு வீரம். கண்ணஞ்சா களிறு என்றும், வேலாள் முகத்த களிறு என்றும் தனித்தனியும் கூட்டலாம். கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு என ஒரு தொடராகவும் ஆக்கலாம். இவ்வளவு விளக்கமாகப் பரிமேலழகர் சொன்னதற்குக் காரணம் சுருங்கக் கூறிய வள்ளுவரின் களக்காட்சியைச் சித்திரிக்கவும் யானையின் வலிமை கூறவுமே. இத்தகைய யானை அதாவது வட்டமான பெரிய அடிகளையுடைய யானை சேற்று நிலத்தில் சிக்கிக்கொண்டால் அதனின் மிக எளிமையான நரியால் வெல்லப்படும் என்பதாம்.

    “ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயனின்றி மிகவும் எளியரால் அழிவர் என்பது தோன்ற நின்றமையின் இதுவும் அவ்வலங்காரமாம்.”

    பிறிதுமொழிதல் அணியைப் பொருத்தவரையிலும் பள்ளிக்கல்வியில் மாணவர்கள் அறிவது அணியிலக்கணம் என்ற அளவிலேயே. தமிழாசிரியப் பெருமக்களும் அமைதியடைவார்கள். திருக்குறளில் பிறிதுமொழிதலணி வாய்பாட்டில் சொல்லப்பட்டுள்ள அரசியல் நுட்பங்களை அறிந்த மாணவரை நாம் இனிதான் தேடிக் கண்டறிய வேண்டும்.

    வேங்கையைக் கண்டால் வேழத்திற்கும் வேர்க்கும்!

    ‘வெறுங்கை என்பது மூடத்தனம்! விரல்கள் பத்தும் மூலதனம்’ என்பது ஒரு கவிதை வரி. ‘கீழே விழுவதெல்லாம் எழுந்திருப்பதற்காகவே’ என்பது அறிஞர் வாக்கு. ‘சுமக்கும் வரைதான் பாரம். கடக்கும் வரைதான் தூரம்’, ‘கிழக்கு இல்லையெனின் மேற்கு ஏது? தோல்வி இல்லாவிடின் வெற்றி ஏது’ என்பனவெல்லாம் சிந்தனையாளர்களின் கருத்துரைகள். இந்த ஆற்றல் யானைக்குக் கிடையாது. அது தன் பருத்த உடம்பை நம்பும். நீண்ட இரு தந்தங்களை நம்பும். என்ன ஆகும்? அதற்கு இருக்கும் அவ்விரண்டும் இல்லாத புலி சீறினால் பதுங்கும். காரணம் ஊக்கம் இன்மை. நரியிடம் தோற்ற யானை இப்பொழுது புலியிடம் நடுங்குவதை வள்ளுவர் காட்சிப்படுத்துகிறார்.

    “பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின்” (599)

    இந்தக் குறட்பாவிற்கு “எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும் யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கமின்மையான் அஃதுடைய அதற்கு (புலிக்கு) அஞ்சும் என்ற இது. “பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர்” என்பது தோன்ற நின்றமையின், பிறிதுமொழிதல்.”

    என்னும் விளக்கவுரையில் திருவள்ளுவரின் அரசியல் நுட்பங்களை நிரல்படுத்துவதைக் காணலாம். மெய்வலியும் கருவிச்சிறப்பும் காவற்சாகாடு உகைத்தற்கு உதவினும் ‘ஊக்கம்’ தலையாயது. அதனால்தான் திருவள்ளுவர் ‘ஊக்கமுடைமை’ என்பதையும் ‘ஆள்வினை உடைமை’ என்பதையும் பொருட்பாலில் பாடியிருக்கிறார். எல்லாவகையிலும் ஆற்றல் உள்ளவர்கள் தாம் தோற்கமாட்டோம் என எண்ணுவது அரசியலில் இயல்பு. திருவள்ளுவர் அத்தகையோரை எச்சரிக்கும் வகையில் கூறும் அறிவுரைகளை நயமாகக் கூறுகிறார். வழக்கில் சொன்னால் ‘நாசுக்காகக்’ கூறுகிறார் எனலாம்.

    ஆயிரம் கோழைகளும் ஒரு வீரனும்

    ‘ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்’ என்பது பழமொழி. காக்கைகள் ஆயிரம் என எண்ணிக்கையால் ஆயிரம் இருந்தாலும் உயிரற்ற ஒரு கல் அவை அத்தனையையும் துரத்துதற்குப் போதுமானவை. இந்தப் பழமொழியை வைத்து முன்றுரையறையனார் எழுதுகிறார்.

    “மறுமனத்தான் அல்லாத மாநலத்த வேந்தன்
    உறுமனத்தன ஆகி ஒழுகின் – தெறுமனத்தார்
    பாயிரம் கூறிப் படை தொக்கால் என் செய்ப?
    ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்” பழமொழி (165)

    அறிவுடைமை, நீதிநெறி பின்பற்றுதலாகிய ஒற்றுமைத் துணையும் படை, பொருள் முதலிய வேற்றுமைத் துணையும் உடைய மன்னன் தோன்றிய அளவிலேயே பகைவர் அழிவர் என்பது பாட்டின் கருத்தாக அமைந்திருக்கிறது.

    “ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
    நாகம் உயிர்ப்பக் கெடும்” 763

    என்னும் குறட்பாவிற்கு “எலியாய பகை கடல்போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்? அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “வீரர் அல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அவற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம்.”

    என்று விளக்கவுரை தருகிறார். விளக்கவுரையின் இறுதியில் ‘வீரரல்லாதார் பலரினும் வீரனொருவனே ஆடல் நன்று’ என்பதாம் எனப் பொருள் முடிவு கூறுவார். இந்தக் குறட்பாவின் உருவகத்தால் ஈர்க்கப்பட்ட கம்பர் தமது காப்பியத்தில் ‘எலியெலாம் இப்படை அரவம் யானென’ (2312) எனப் பயன்படுத்தியிருப்பது காண்க. ‘எலிக்குப் பாம்பு பகை’ என்பது உலகியல் சார்ந்த உண்மையே. நாகம் விடும் மூச்சுக்கே எலிக்கூட்டம் பறந்துவிடும் என்பதனால் ஆண்மை கொண்ட வீரன் ஒருவனுக்கு ஆண்மையற்ற ஆயிரம் வீரரும் ஈடாகார் என விளக்குகிறார். தனியொரு வீரனைப் பற்றி இவ்வாறு திருக்குறள் சொல்லுதற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார் பரிமேலழகர். அங்கங்களுள் படை சிறந்தது என்பதும் அது தன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதும், அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதும் கூறப்பட்டன என்னும் அவர்தம் விளக்கவுரையே பேருரையாக அமைகிறது.

    செடியை மரமாக நோக்கிய திருவள்ளுவர்

    ‘நகத்தால் கிள்ள வேண்டியதைக் கோடாரிக் கொண்டு வெட்டுகிறான்’ என்பதும் “வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு” என்பதும் தமிழகத்தில் பெருவழக்கு.

    “இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்தவிடத்து” 879

    என்னும் குறட்பாவிற்குக் “களைய வேண்டுவதாய முள் மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக. அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “களையப் படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக. அன்றியே வலிதாய காலத்துக் களையலுறின் நம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல்”

    என்னும் விளக்கவுரையைத் தருகிறார். ‘முள்ளை முள்ளிலே களைந்துவிடு, அதுவளர்ந்தபின் களைய எண்ணினால் எண்ணுகிற உன்கையை அது காயப்படுத்திவிடும் என்பதன்று திருவள்ளுவர் கூறநினைத்தது. ‘கேடுசெய்யும் பகைவர்கள் இவர்கள் என்று அடையாளம் கண்டபின் அவர்களை விட்டுவைப்பது தமக்கே கேடாக முடியும். இது அரசியல் கொள்கை. எனவே அவர்கள் வலிமை குன்றியிருக்கும்போதே அழிப்பதே நெறி. இல்லையாயின் அவர்கள் நம்மால் களைய முடியாத அளவுக்கு வலிமை பெற்று நம்மை அழித்து விடுவார்கள் என்பதாம். ‘இளைதாக’ என்பதற்கேற்ப ‘மெலிதாக’ என்றும் கைகொல்லும் என்பதற்குக் ‘களைவார் கையை’ என எழுவாய் வருவித்தும் எழுதும் பரிமேலழகர் நுண்ணியத்தையும் செடியாக இருக்கிறபோதே அதனை மரமாகக் கண்டு ‘முள்மரம்’ என்று காட்சிப்படுத்திய திருவள்ளுவர் படைப்பாற்றலையும் ஒருசேர எண்ணி மகிழலாம்.

    நிறைவுரை

    அணியிலக்கணச் சிந்தனையில்லாத காலத்தில் திருக்குறள் உருவாக்கம் செய்யப்பட்டது என்னும் கருத்தியலை ஏற்றுக் கொண்டாலே இந்தக் கட்டுரையின் அருமை புரியும். அடுத்து மக்கள் வாழ்க்கையையும் வழக்கையும் இலக்கியப் பதிவுகளில் கொண்டு வரும் முயற்சி திருவள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதையும் அறிதல் வேண்டும். அரசு பற்றிய தனது சிந்தனைகளில் ‘ஆலமரத்தடிக் கதைகளைத்’ திருவள்ளுவர் சொல்லியதற்கு வேறு என்ன காரணம் இருந்திருக்க முடியும்?. ‘வலியறிதலில்’ இரண்டும், ‘இடனறிதலில்’ மூன்றும், ‘உட்பகை’, ‘ஊக்கமுடைமை’, ‘படைமாட்சி’ என்னும் அதிகாரங்களில் அதிகாரத்திற்கு ஒன்றுமாக எட்டுப்பாடல்களில் திருவள்ளுவர் சொல்லியிருக்கும் இயற்கை உண்மைகளுக்குப் பரிமேலழகர் தனது பொருளறிவு (அர்த்த சாஸ்திரம்) சான்ற உரையைத் தந்திருக்கிறார். ‘பழமொழிகளையே திருவள்ளுவர் பாடலாக்கியிருக்கலாம்’ என்பது அனுமானமாகலாம். ஆனால் அதற்குப் பரிமேலழகர் சொல்லியிருக்கும் கருத்துரை அனுமானமன்று. ஆழ்ந்த அரசியல் கருத்துக்கள். கருத்துக்குத்தான் கதை சொல்வார்கள். பரிமேலழகர் கதைக்குக் கருத்துரை தந்திருப்பதுதான் அவருடைய உரைத்திறன்.

    (தொடரும்…)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 39

    பழகத் தெரிய வேணும் – 39

    நிர்மலா ராகவன்

    ஓயாமல் உதவுவது உதவியா, உபத்திரவமா?

    `உலகில் தீயன என்பதே கிடையாது,’ என்று வளர்க்கப்பட்டதால் அரசிளங்குமரனான சித்தார்த்தர் பிணியையும். மரணத்தையும் கண்டபோது, குடும்ப வாழ்வையே வெறுத்துப்போனார் என்று தெளிவுபடுத்துகிறது கௌதம புத்தரின் சரிதம்.

    பல பெற்றோர் ஏன் குழந்தைகளை அப்படி வளர்க்கிறார்கள்?

    அவர்களைப் பொறுத்தவரை, அது அன்பைக் காட்டும் வழி.

    `என்னுடையகுழந்தை!’ என்று உரிமை கொண்டாடும் மனப்பான்மை இன்னொரு காரணம்.

    `யாரும் புத்தி சொல்லாமல், நான் நிறைய தப்பு செய்துட்டேன். நீயும் அப்படிக் கஷ்டப்படக்கூடாது,’ என்பார்கள், கரிசனத்துடன்.

    அப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் மகிழ்ச்சியோ, பயனோ அடைகிறார்களா என்பது வேறு விஷயம்.

    ஓயாமல் உதவுவது உதவியா?

    கதை

    திருமணமாகி பல ஆண்டுகள் கழித்துப் பிறந்த பெண் காஞ்சனா.

    அவள் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, அருமை பெருமையாக வளர்த்த மகள் இரவில் நெடுநேரம் வீட்டுப்பாடம் செய்து, உடலைக் கெடுத்துக்கொள்கிறாளே என்ற ஆதங்கம் அவள் பெற்றோருக்கு.

    “காஞ்சனாவோட அப்பா பள்ளிக்கூடத்துக்குப் போய், `எங்க குழந்தைக்கு அதிகமா வீட்டுப்பாடம் கொடுக்காதீங்க!’ என்று சொல்லிட்டு வந்தார்,” என்று அவளுடைய தாய் என்னிடம் கூறியபோது, அப்பெண்ணின்மேல் பரிதாபம்தான் எழுந்தது.

    உடன் படிக்கும் மாணவிகள் கேலி செய்ய மாட்டார்களா?

    தெரிந்தோ, தெரியாமலோ, சில பெற்றோரே குழந்தைகள் பிறருடன் பழகத் தெரியாமலிருக்க இவ்வாறு வழிவகுத்து விடுகின்றனர்.

    குழந்தை விழுந்துவிடுமே!

    நடக்கப் பழகும் குழந்தை விழாமல் இருக்காது. விழத்தான் செய்யும். இயற்கையே அதற்குப் பாதுகாப்புக் கவசம் அளிக்கிறது, மூளையில்.

    தளர்நடை போடும் குழந்தையின் பின்னாலேயே பதட்டத்துடன் நடக்காது, கண்டும் காணாததுபோல் இருந்தால், அவனும் அதைப் பெரிதுபண்ண மாட்டான். `விழுந்தால் எழுந்திருக்க வேண்டும்!’ என்று புரிந்துகொள்வான்.

    கதை

    டெய்ஸி எங்கு போனாலும் அவளைக் கண்காணிக்க ஒரு காவலரை அமர்த்தியிருந்தார் அவளுடைய தந்தை.

    அவருக்கு உத்தியோக ரீதியில் எதிரிகள் அதிகம். அவர்களால் மகளுக்குக் கெடுதல் நிகழ்ந்துவிடுமோ என்று பயத்தின் விளைவு அது.

    தன்னையொத்த தோழிகள் அனுபவித்த சுதந்திரம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று நொந்துபோனாள் அப்பெண். தந்தைமீது தாளாத கோபம் வந்தது. ஆனால், உண்மை நிலவரமும் புரிந்திருந்ததால், அவரை எதிர்க்க முடியவில்லை.

    அவளுடைய நல்ல காலமோ, கெட்ட காலமோ, தந்தை உத்தியோக நிமித்தம் குடும்பத்துடன் வேறு ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. படித்துகொண்டிருந்த இருபது வயது மகள் தனியாக விடப்பட்டாள்.

    இம்மாதிரி வளர்ந்த இளம்பெண்களுக்கு நல்லவர், கெட்டவர் என்ற வித்தியாசம் புரியாது.

    உலகம் புரியாது வளர்க்கப்பட்டவர்களுடன் நண்பரைப்போல் பழகி, பணத்தையோ, வேறு எதையெல்லாமோ பிடுங்க எத்தனைபேர் காத்திருப்பர்!

    பொறுப்பான பெற்றோர் என்ன செய்திருக்க வேண்டும்?

    அந்தந்த வயதுக்குத் தேவையான அறிவுரையைக் கூறி, அப்படியே தவறிழைத்தாலும் அதை எப்படி நிவர்த்தி செய்வது என்று சொல்லிக்கொடுத்திருக்கலாம்.

    வீட்டைவிட்டு ஓடிப்போன பெண்

    ஸிதி (SITI) என்ற பெண் என்னிடம் சொன்னது இது. பாட்டியிடம் வளர்ந்தவள் அவள்.

    வெளிநாட்டில் வேலை பார்க்கச் சென்ற அவளுடைய தாய் தவறான முறையில் பணம் சம்பாதிப்பதை அறிந்த பாட்டி, பேத்தியும் அப்படிக் கெட்டுவிடக்கூடாது என்று மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டாள்.

    பள்ளிக்கூடம் சென்று திரும்பியவுடன் ஸிதி அவளுடைய அறையில் வைத்துப் பூட்டப்பட்டாள்.

    “பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. அதனால், என்னுடன் படித்த பையனை எங்கள் வீட்டுக்கு வரச்சொல்வேன்,” என்றாள், களங்கமில்லாது.

    “அப்போது பாட்டி உன்னை வெளியில் விடுவார்களா?” என்று கேட்டேன்.

    “இல்லை. அவன் என் குளியலறையிலிருந்த ஓட்டைப் பிரித்துக் கீழே இறங்குவான்!”

    “என்ன செய்வீர்கள்?”

    “சும்மா பேசிக்கொண்டிருப்போம். அவ்வளவுதான்!”

    பேச்சுச் சப்தம் பாட்டிக்குக் கேட்டிருக்காதா!

    `வயதான காலத்தில் இந்தப் பெண்ணை என்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லை,” என்று காவல்துறையினரிடம் முறையிட்டிருக்கிறாள்.

    அவ்வளவுதான். வீட்டைவிட்டு `ஓடிப்போன’ இளம்பெண்களுக்காக இயங்கும் இல்லத்தில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டாள் ஸிதி. அங்கு பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகள் இருந்தார்கள்.

    நான் மேலும் துருவியபோது, நண்பனுடன் உடலுறவெல்லாம் கிடையாது என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

    `பெரிதாக எந்த தவறும் செய்யாது, சிறைபோல் ஓரிடத்தில் அடைபட்டுக்கிடக்கிறாள், பாவம்!’ என்ற வருத்தமும் எழுந்தது. இவள் எங்கே ஓடிப்போனாள்!

    பிற பெண்கள் அவளைப்போல் இருக்கவில்லை. கண்டிப்பாரின்றி, அல்லது தாளமுடியாத கண்டிப்பால், அவர்கள் தம் `சுதந்திர’ப்போக்கைப் பெருமையுடன் விவரிக்க, இவளும் தவறான பாதையில் நடக்கக்கூடும்.

    எல்லா ஆண்களுக்கும் ஒரே ஒரு எண்ணம்தான்

    `எல்லா ஆண்களும் கெட்டவர்கள். அவர்கள் மனதில் ஒரே ஒரு எண்ணம்தான் எப்போதும். யாரையும் நம்பாதே!’ என்று போதித்து வளர்க்கப்படும் பெண்ணுக்கு எந்த வயதிலும் பயம்தான்.

    இதைப்பற்றி அறிய, நான் நம்பகமான என் நண்பரிடம் கேட்டேன்.

    ‘Most men. Not all!” என்றார். (அனேக ஆண்கள் அப்படித்தான். எல்லாரும் கிடையாது).

    பையன்களுக்கும் இதுபோன்ற போதனைகள் உண்டு.

    கதை

    பதினெட்டு வயதில்,  முதன்முதலாகப் பெண்களுடன் சேர்ந்து கல்வி பயிலும் அனுபவம் அந்தப் பையன்களுக்குப் புதிது.

    “எங்களுக்குப் பதினாறு வயதானபோது, பள்ளி ஆசிரியைகள் எங்களை என்னமோ `காமாந்தகாரர்கள்’ என்பதுபோல் பயத்துடன் பார்த்தார்கள். எங்களுக்கு ஒரே ஆத்திரம்,” என்று என் மகளுடன் படித்த மாணவர்கள் கூறினார்கள்.

    `பெண்களுடன் எப்படிப் பழகுவது?’ என்று குழம்பியிருந்த அவர்களுக்கு உறவினர் பையன்களுடன் பழகியிருந்த தோழிகள் தைரியம் அளித்தனர்.

    அவ்வப்போது, அவர்களைப்பற்றி அறிந்திருந்த நான், “தீபாவளிக்கு உன் நண்பர்களை அழை,” என்று நான் மகளிடம் கூற, “அவர்களெல்லாம் பெண்கள் வீட்டுக்கு வரமாட்டார்களே!” என்றாள், சிரித்தபடி.

    “அம்மா அழைக்கச் சொன்னாள் என்று சொல்,” என்று சொல்லிக்கொடுத்தேன்.

    நான் பேயா?

    நாலைந்து பையன்கள் வந்தார்கள். என்னைப் பார்த்ததும் ஒரே நடுக்கம். வரவேற்றுவிட்டு, வேகமாக உள்ளே போய்விட்டேன்.

    ஒரு பையன், “நான் ஒரு பொண்ணோட வீட்டிலே இருக்கேன்னு தெரிஞ்சா, எங்க பாட்டி உயிரை விட்டுடுவாங்க.” என்று சொன்னது காதில் கேட்டது.

    “ஒங்கம்மாவுக்கு நாங்க வர்றது தெரியுமா?” என்றது இன்னொரு குரல்.

    அவர்கள் சென்றபின், “வீட்டுக்கு யார் வந்தாலும், உட்கார்ந்து பேசுவியே?” என்று மகள் சந்தேகம் கேட்டாள்.

    “அந்த பையன்களின் முகத்தைப் பார்த்தாயா? என்னைப் பார்த்ததும், பேயைக் கண்டதுபோல் நடுங்கிவிட்டார்கள்!” என்று சிரித்தேன்.

    `பாதுகாப்பு’ என்ற பெயரில் அநாவசியமான பயங்களைப் புகுத்தி வளர்ப்பதும் தவறுதான்.

    எப்போது நின்று பேசலாம், எப்போது ஓடவேண்டும் என்று அந்தந்த வயதில் சொல்லிக்கொடுக்காவிட்டால், மிரட்சிதான் எழும்.

    பெரியவர்களாக ஆனதும், பெண்களைக் கேலி செய்து, தம் பலத்தை, அதிகாரமாக நிலைநாட்டிக்கொள்கிறவர்கள் முன்பு தாம் அடைந்த பயத்தைப் பிறர்பால் செலுத்த முனைகிறவர்களோ?

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 102 (அரசியல்)

    சேக்கிழார் பாடல் நயம் – 102 (அரசியல்)

    திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

    பாடல் :

    அரசியல்  ஆயத்   தார்க்கும்   அழிவுறும்   காதலார்க்கும்
    விரவிய  செய்கை தன்னை   விளம்புவார்  ‘’ விதியினாலே
    பரவிய  திருநீற்   றன்பு    பாதுகாத்து   உய்ப்பீர் ‘’  என்று
    புரவலர்   மன்றுள்  ஆடும்   பொற்கழல்   நீழல்   புக்கார்.

    உரை :

    தமக்குப் பின் அரசியல் நடத்தும் முறைமையில் வரும் இளவரசர், அமைச்சர் முதலியவர்க்கும், தம்மிடத்துக் காதலால் மனம் வருந்தும் தேவிமார், ஏனைச் சுற்றத்தார் முதலியோர்க்கும், பொருந்திய செய்தியைக் கூறுவாராகி “விதியினாலே பரவப்பெற்ற திருநீற்றினிடத்து வைத்த அன்பினையே சோர்வு வாராது பாதுகாத்து உலகிலே கொண்டு செலுத்தக் கடவீர்“ என்று உறுதி மொழிக் கட்டளையைக் கூறியபின், அரசர், திருமன்றிலே அருட் கூத்தாடு கின்ற பூங்கழலணிந்த எடுத்த திருவடியைச் சிந்தித்திருந்தனர்.

    அடியார் பணி முதலிலும், அரசியலாகிய நாட்டின் காரியம் அதற்குப் பின்னரும், குடும்பப் பொருள் இறுதியிலும் வைக்கற்பாலன என்பது ஆசிரியர் கருத்துமாகும். அரசியல் ஆயத்தாரும் காதலாரும் கொண்டொழுகும்படி அரசர் பணித்ததும் தம் கொள்கையாகிய வேடமே சிந்தித்த லொன்றேயாம் என்பதும் குறிக்க.

    அரசியல் ஆயத்தார் -. அரசும் அங்கமுமாகிய யாவும் இதனுள் அடங்கும். இவற்றின் விரிவு திருக்குறள் முதலிய நீதி நூல்களுட் காண்க.

    அழிவுறுங் காதலார்– தம்மிடத்து வைத்த காதலாற் பரிந்து, தம் நிலைக்கழிந்து, இத்தகைய தலைவரைப் பிரிய நேரிடுகின்றதே யென்று கவலைப்பட்டு அழியும் தேவிமார், மக்கள் முதலிய சுற்றத்தார். ஆயத்தார் – மக்கள் முதலிய சுற்றத்தார் என்றும், காதலார் மந்திரி முதலாயினார் என்று முரைப்பாருமுண்டு.

    விரவிய செய்கை – நடந்த செய்தியையும், இனி நடைபெற வேண்டுவதாய்ப் பொருந்திய செய்தியையும் என்க. விளம்புவார் – எதிர்கால வினையாலணையும் பெயர். சொல்வாராகி. என்று என்பதனோடு முடிந்தது. விதியினாலே – இங்கு நிகழ்ந்த செய்தி விதியின் காரணமாய் விளைந்தது. விதி – “திருவேடத்தை அரனெனத் தொழுக“ என்று ஆகமம் விதித்த விதி. இதனால் இதுவரை நேர்ந்த செய்தி முற்றும் அடங்க ஒரு சொல்லிற் சுருக்கி அறிவித்ததனோடு அமைதியும் கூறியவாறு. நிகழ்ந்தது என்ற வினைமுற்றுத் தொக்கி நின்றது. நியதிப்படி என்றலுமாம். விதியினாலே பரவிய என்று கூட்டி விதிப்படி இதுவரை நான்போற்றி வந்த – என்றுரைத்தலுமாம். நான்- எழுவாய் வருவிக்க. பரவிய – வேதங்களாலே பரவப்பெற்ற  திருநீற்றன்பு பாதுகாத்து உய்ப்பீர் – திருநீறும் ஏனைத் திருவேடமும் எனுமிவற்றில் வைத்த அன்பின் ஒழுக்கத்தைச் சோர்வுபடாமல் காத்து உலகத்திற் செலுத்தி வருவீர்களாக! இதுவே இந்த, முடிவுறும் நிலையில் நான் உங்களுக்குச் சொல்லத்தக்க உறுதிப் பொருள். இஃதொன்றனையே ஆயத்தார், காதலார் என்னும் இருதிறத்தார்க்கும் அரசர் உறுதி கூறியவாறு காண்க. இஃதொன்றினைக் குறிக்கோளாகக் கொண்டொழுகுதலே அனைவர்க்கும் திருவருளின்பம் தரும் என்பது நாயனாரது துணிபாம்.  வேடத்தில்  தலைமை பெற்ற நீற்றினைச் சொல்லவே ஏனைய வேடங்களும் உடன்கொள்ளப் பெறும்.

    என்று – என்று சொல்லி, இவ்வாறு தனது கடமைகள் யாவும் நிறைவேற்றி முடித்துக் கொண்டு, அதன்பின், இறுதியாக. புரவலர் – காத்தலின் வல்லவர் – அரசர். இங்கு இப்பெயராற் கூறியது மேற்கூறிய பற்பலவகைக் கடமைகளையும் பாதுகாக்கும் வழியிற் காத்துநின்றமை குறித்ததாம்.

    மன்றுளாடும் பூங்கழல் – சிற்றம்பலத்திலே அருட்கூத்தாடும் அம்பலவாணனது அழகிய கழலணிந்த திருவடி. ஆடும் கழல்  என்றமையால் எடுத்தபாதம் என்க. இங்கு அரசர் தாம் ஆன்மார்த்தமாய்க் கொண்டு தினமும் பூசித்து வந்த சிற்றம்பலவாணன் திருவடிகளைச் சிந்தித்தார் என்க.

    முன்னர் “தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமா னன்பர்க் காவன வாகும்“ (470) என்றதும், வரும் பாட்டில் “அவர்முன் றம்மைக் கண்டவா றெதிரே நின்று காட்சிதந் தருளி“ என்பதும் காண்க. இவ்வாறே கழறிற்றறிவார் நாயனார் சிற்றம்பலவாணனைத் தினமும் பூசித்துத் திருச்சிலம்பொலி கேட்ட சரிதமும் இங்கு நினைவு கூர்க

    இவ்வுடல் விட்டு உயிர் பிரிந்துபோம் பொழுது இறைவனை நினைத்தல் வேண்டும் சாகும்   காலத்து வரும் எண்ணப்படியே ஒருவன் பின்னர் ஆகின்றான் என்பர்.

    “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைமே லுந்தி, அலமந்த போதா“கிய அப்போது, தனது மரணவேதனையினாலும், அறிவு மயக்கத்தானும், தன்பிரிவு பற்றித் தன் முன்னின்று, தொடர்புடைய பிறர்படுகின்ற துன்பங் காண்பதாலும், பிறவாற்றாலும் இது எளிதிற் கூடுவதன்று. இதுபற்றியே ஒருவன் இறக்குங்காலத்துச் சூழ இருப்பவர் சிந்தனை முகத்திற்றேக்கி அழுதல் முதலியன செய்யாது தேவாரந் திருவாசக முதலிய அருட்பாக்களை ஓதிக்கொண்டிருத்தல் வேண்டுமென்று பெரியோர் கூறுவர். ஆயின் இவ்வாறு ஆவி பிரியும்போது இறைவனை நினைக்கப்பெறுதல் நெடுங்காலம இறைவனை எண்ணி யெண்ணி வேண்டிக்கொண்டதன் பலனாகவே இறைவன் அருளினாற் பெற வேண்டியதொன்றா மல்லது எவரும் அக்காலத்துத் தாமாகச் செய்துகொள்ளத்தக்கதன்று; பிறர்தர வருவது மன்று. இதன் அருமையும் பெருமையும்பற்றியன்றே, கந்தை மிகையாங் கருத்துடையராய், முழுத்துறவுவேந்தராய், இறைவனிடத்துத் தம்பொருட்டு எவ்வரமும்வேண்டாதவராய் உள்ள எமது பரமாசாரிய ஞானமூர்த்திகளாகிய அப்பர் பெருமானும் இவ்வொரு வரத்தினையே பலவிடத்தும் இறைவன்பால் மன்றாடி வேண்டினார்.

    இப்பாடலில்  ‘’விதியினாலே   பரவிய  திருநீற்றன்பு பாதுகாத்து  உய்ப்பீர்!’’  என்று  மெய்ப்பொருள் நாயனார்  கூறியது  மக்களின் மனோநிலையை  அரசன் நன்கறிந்தவன் என்பதைக் காட்டுகின்றது,  திருநீறு பூசிய ஒருவன் அரசரைக்  கொன்றான்  என்பது கேட்ட மக்கள் திருநீறு பூசிய அடியார்கள் பாலும் , அவர்கள் பூசிக்கொண்ட   திருநீற்றின்  பாலும்  குற்றம் கண்டு அத்தகையோர்  அனைவரையும்  வெகுண்டு கொல்லலாம்  என்று எண்ணுகிறான்.  அவ்வாறே  முத்த நாதனை  மக்கள் கொள்ள  முற்பட்டார்கள்.

    ஆம், இந்திரா காந்தியைக்  கொன்றவன்  சீக்கியன் என்பதனால்  மக்கள் சீக்கியரைத் தவறாகக் கருதிப் பல இடங்களில் அவர்களை விரட்டிக் கொன்றனர், அதனால் சீக்கியர்கள் தலைப்பாகையை  எடுத்து, தாடியையும் மழித்துக்  கொண்டார்கள்  என்பதை நாம் நேரில் கண்டோம்;

    அத்துடன்  ராஜீவ் காந்தியை இலங்கைத் தமிழர் குண்டுகளால்  கொன்ற பின்னர் தமிழ்  மக்களையும். தமிழ் நாட்டையும்  சந்தேகக் கண் கொண்டு பார்த்து, குறிப்பாக  இலங்கை மக்கள்  இகழ்ந்தனர்.

    இத்தகைய சூழல் வரக்கூடாது என்று எண்ணிய   மெய்ப்பொருள் நாயனார்  ‘’விதியினாலே  பரவிய   திருநீற்றின்’’  பால்  பற்றுக் கொண்டு அடியார்களை  இகழாது, பாதுகாத்து,   உய்வடையச்  செய்வீர் என்றார்,  இது நாயனாரின் தொலைநோக்குப் பார்வையைப் புலப் படுத்துகிறது. இவ்வண்ணம் செய்யுள் இயற்றிய   சேக்கிழாரின் பாட்டுத்திறமும்  இங்கே  புலனாகின்றது!

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 26

    கதை வடிவில் பழமொழி நானூறு – 26

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 53

    நன்றே ஒருவர்த் துணையுடைமைப் பாப்பிடுக்கண்
    நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் – விண்டோயும்
    குன்றகல் நன்னாட! கூறுங்கால் ‘இல்லையே
    ஒன்றுக்(கு) உதவாத ஒன்று’.

    பழமொழி-  ‘இல்லையே, ஒன்றுக்கும் உதவாத ஒன்று

    ஒருவாரமா மழை கொட்டிக்கிட்டே இருக்கு. கண்டிப்பா அக்கம்பக்கத்து ஊருகள்ல வெள்ளம் வீட்டுக்குள்ள வந்திருக்கும். நம்ம ஏரியாவுலதான் ஏரி, குளம், ஆறு ஒண்ணுமில்லையே. கொஞ்சமா நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கலாம்.  அப்பா சொல்லிக் கொண்டே நடக்கிறார்.

    யாரும் மறந்துகூட டி.வி ய போட்டுராதீங்க. பக்கத்து வீட்ல ஷார்ட்சர்க்யூட் ஆயிடுச்சாம். பொறியியல் பட்டதாரியான சுதன் எனும் என் அன்புச் சகோதரன் அவன் பங்குக்கு அறிவுரை சொல்றான்.

    என்ன வாழ்க்கை. வெளியில கால் வைக்க முடியாது. முழங்கால் அளவு தண்ணி ஓடிக்கிட்டிருக்கு. வீடு முதல் மாடியில இருக்கறதால பால்கனியிலேந்து வெளியில பாக்க முடியுது. அவ்ளோதான். அதுக்குமேல ஒண்ணும் பண்ண முடியல. முடிஞ்சாமட்டும் என்ன பண்ணி கிழிச்சிருக்கப் போறேன். முதுகலை இயற்பியல் படிச்சிருக்கேன்னு பேரு. சரியான வேல எதுவும் இன்னும் கிடைச்ச பாடில்ல. டியூஷன் எடுத்தே வாழ்க்கையைக் கழிச்சுட்டு இருக்கேன். இயற்பியல் எனக்கு விருப்பப்பாடம்னு தேர்ந்தெடுத்துப் படிச்சேன். எப்பவுமே புரிஞ்சு படிச்சாதான் எனக்குப் பிடிக்கும். மார்க் வாங்கறதுக்காக படிக்கற பழக்கம் இல்லாததால கல்லூரியில சீட் கிடைச்சதே பெரும்பாடா ஆயிடுச்சு. ஒருவழியா படிச்சு முடிச்சு வெளியில வந்தப்புறம்தான் உலகமே புரியுது. இங்க எல்லாமே மார்க்கையும் நுழைவுத்தேர்வையும் வைத்துதான் மதிப்பிடறாங்க. அரசாங்க வேலைக்கான நுழைவுத்தேர்வுல எந்தப் பாடத்த முதன்மைப் பாடமா எடுத்துப்படிச்சாதான்  என்ன.  அவங்களோட தேர்வுல வெற்றிபெற்றா போதும். இப்போ வேற வழியில்லாம கோச்சிங் சென்டர் போய் பயிற்சி எடுத்துக்கறேன்.  வர தேர்வுலயாவது வெற்றி பெறணும். தினமும் பக்கத்துல இருக்கற நூலகம் வரை போய் எல்லா செய்தித்தாள்களையும் படிச்சுட்டு வருவேன். இப்போ அதுவும் போச்சு.

    தம்பி தம்பினு பக்கத்து பால்கனி ஆன்ட்டி கூப்பிடறாங்க. கொட்டற மழையில அவங்க கைய அசைக்கறதுதான் தெரியுது. வேற என்ன சொல்லவராங்கனு புரியல. இப்பதான் அந்த ஆன்ட்டி வீட்டயே நல்லா கவனிக்கறேன். எங்க வீட்டுக்கு இடதுபக்கத்துல இருந்தாலும் கொஞ்சம் இடைவெளிவிட்டு அவங்க வீடு இருந்ததால பெரிசா கவனிச்சதில்ல. ஒரு சின்ன பொண்ணு வேற எட்டிப்பாக்குது.

    ஆமாம் என்கிட்டதான் ஏதோ சொல்ல ட்ரை பண்றாங்க. பாத்துக்கிட்டு இருக்கும்போதே ஒரு பெரிய கயிற்றை எடுக்கறாங்க. ஒரு நுனிய அவங்க வீட்டு பால்கனி அழியில கட்டிட்டு மீதமுள்ளதச் சுருட்டி வீசறாங்க. கீழ விழுந்து அது நனையுது. திரும்பவும் என்கிட்ட சைகை காட்டிட்டு சுருட்டி என்னய நோக்கி வீசறாங்க. ஒருவேளை நான் அடுத்த பக்கத்தப் புடிச்சு என் வீட்டு அழியில கட்டணும்னு எதிர்பாக்கறாங்களோ. திரும்பத் திரும்ப எரிந்ததில் மூணாவது தடவை நான் கயிற்றைப் பிடிச்சிட்டேன். அதை எங்க வீட்டு பால்கனி அழியில் கட்டியும் விட்டேன்.

    இப்போ அவங்க தன்வீட்டுப் பக்கத்துல கட்டிய கயிற்றின் நுனியை அவிழ்த்து அதில ஒரு பிளாஸ்டிக் கூடையை நுழைத்து, கயிற்றை மேலையும் கீழையும் அசைத்து அசைத்து அந்தக் கூடையை எங்க வீட்டுப்பக்கம் தள்ளி விடறாங்க.

    ஆர்வ மேலீட்டால் அந்தக் கூடையை கைஎட்டிப் பிடித்து விட்டேன். அதுக்குள்ள ஒரு துண்டுச்சீட்டும் சுடச்சுட கேசரி போட்ட டிபன்பாக்சும்  இருக்கு. அந்த சீட்டுல எங்க வீட்டுல கைக்குழந்தை இருக்கு ஒரு பால் பாக்கெட் இருந்தா போட்டு அனுப்புங்க. தேங்க்ஸ்னு எழுதியிருக்காங்க. நான் நிமிர்ந்து அவங்களப் பாக்கறேன். அதே சிரிச்ச முகத்தோட அந்த ஆன்ட்டி வெயிட் பண்றாங்க.

    அம்மாவிடம் சொல்லி பால்பாக்கெட் போட்டு அந்தக் கூடையை அவர்கள் செய்த முறைப்படியே அசைத்து அனுப்பி வச்சேன்.

    ‘இல்லையே, ஒன்றுக்கும் உதவாத ஒன்றுனு பழமொழிய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்பதான் நேர்ல பாக்கறேன். சும்மா உக்காந்து புலம்பிக்கிட்டு இருக்காம எவ்வளவு அழகா கொடிக்கயிற உபயோகிச்சு வேலைய நடத்திக்கிட்டாங்க சொல்லிக்கொண்டே அம்மா உள்ளே செல்கிறாள்.

    ஆமாம். சரிதான் ஒன்றுக்கும் உதவாத பொருள்னு ஒண்ணு கிடையவே கிடையாது. எனக்குள்  நானே சொல்லிக் கொள்கிறேன். சொல்லிமுடித்தவுடன் எனக்குள் புதுஉற்சாகம் பிறக்கிறது. என்னாலயும் ஏதாவது செய்து சாதிக்க முடியும்னு தோணுது.

    பாடல் 54

    ஆஅம் எனக்கெளி(து) என்றுலகம் ஆண்டவன்
    மேஎம் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
    தோஒம் உடைய தொடங்குவார்க்(கு) ‘இல்லையே
    தாஅம் தரவாரா நோய்’.

    பழமொழி – ‘இல்லையே தாம் தர வாரா நோய்’

    எதற்கெடுத்தாலும் கதை சொல்லும் என் நண்பன் செல்வாவுடன் அவன் சொந்த ஊருக்கு வந்திருக்கேன். இங்கே என்னென்ன கதை சொல்லப்போறானோ. எது எப்படியோ. அவன் சொல்லறதுல உண்மை இருக்கா இல்லயான்னு நாங்க ஆராய்ந்ததே இல்ல. கேக்க சுவாரசியமா இருக்கும். பொழுதும் போகும். ஆனா சில நேரங்கள்ல எப்படா இவன் முடிக்கப்போறான்னு எரிச்சலாவும் இருக்கும். ஆனாலும் இவனுக்குக் கொஞ்சம் கற்பனை அதிகம்தான்.

    நாங்க மொத்தம் ஐந்துபேர் தங்கி இருக்கற அந்த சென்னை வீடு கலகலப்பா இருக்குன்னா அது இவனாலதான். எல்லாரும் வெவ்வேற இடத்துலேந்து வந்திருந்தாலும் வேலபாக்கற தொழிற்சாலை ஒண்ணுங்கறதால சேந்து போக வர முடியுது.

    இப்ப இவன் வற்புறுத்திக் கூப்பிட்டதால நாங்க எல்லாரும் இவன் கிராமத்துக்கு வந்திருக்கோம். பஸ்லேந்து இறங்கினதுலேந்து ஒரே நிசப்தம். நடத்தியே கூட்டிக்கிட்டுப் போறான். இன்னும் எவ்ளோதூரம் நடக்கணுமோ. முன்னாடி காலத்துல இந்த இடமெல்லாம் ஏரியும், குளமுமா இருந்திருக்கும்போல.இப்போ ஒரே பாறையும் மண்ணுமா குண்டும் குழியுமா இருக்கு. பொறுக்க முடியாம செல்வா என்ன அமைதியாவே வறீங்க. என்ன பலத்த யோசனை கேட்டே விட்டேன். கால்வேற வலிக்குது. இன்னும் எவ்ளோதூரம் நடக்கணும்?

    கொஞ்ச தூரந்தான். ஒரு மொட்டக் கல் மண்டபம் தெரியுதுபாருங்க. அதுக்குப் பின்னால அரைகிலோ மீட்டர் தான். சர்வசாதாரணமாய்ச் சொல்லிவிட்டு வீறு நடை போடுகின்றான். எங்களுக்கோ சுத்தமா முடியல. சரி அவன் வாயக்கிளறி டைம்பாஸ் பண்ணலாம்னா அவனும் சத்தமில்லாம நடக்கறான்.

    சரி. அவன் சொன்னதவச்சே ஆரம்பிப்போம். அந்த மொட்ட மண்டபம்னு சொல்றீங்களே செல்வா அது முன்காலத்துல இருந்த அரண்மனை அல்லது கோயிலோட ஒரு பகுதியோ?

    இல்ல இல்ல. அது ஒரு தனி கதை ஆரம்பித்தான் அவன். எங்க ஊர்ல மாயி னு ஒரு நாட்டியக்காரி இருந்திருக்கா. அவ ரொம்ப பேச்சுத்திறமை மிக்கவளாம்.

    அவகூட உல்லாசமா பொழுதுப்போக்கறதுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறமா இந்த மண்டபத்த கட்டியிருந்திருக்காரு ஜமீன்தார்.

    நேர்லயே காட்டறேன். இங்க பாருங்க. கல் தரையில பல்லாங்குழி, தாயக்கட்டம் பாம்புக்கட்டம் எல்லாம் செதுக்கி வச்சிருக்கு. அவங்க ரெண்டு பேரும் விளையாடி பொழுது போக்குவாங்களாம். ஒவ்வொரு முறை தான் தோக்கும்போதும் தன் சொத்துல ஒருபகுதிய எழுதித்தரதா ஜமீன்தார் வாக்கு குடுத்திருந்திருக்கார். கடைசியில அந்தம்மா சாமர்த்தியமா எல்லாத்தையும் எழுதி வாங்கிருச்சு. ஜமீன்தார் பைத்தியமா இந்த மண்டபத்தச் சுத்தி சுத்தி வந்து செத்துட்டாராம். அதனாலதான் இதத் திரும்ப எடுத்துக்கட்டாம பாழடைய உட்டுட்டாங்க. இப்ப கூட ராத்திரி இந்தப் பக்கமா வந்தா ஜமீன்தார் சிரிக்கறமாதிரி சத்தம் கேக்கும்னு சொல்லுவாங்க. ராத்திரி பத்துமணிக்கு மேல யாரும் இந்தப்பக்கம் வரதில்ல.

    அவன்பாட்டுக்கு சொல்லிக்கொண்டே நடந்துக்கிட்டிருக்கான். எங்களுக்கு அடிவயிறு கலக்குது. இவ்ளோ நாள் இவன் சொன்னதையெல்லாம் கதையாத்தான் கேட்டிருக்கோம். ஆனா இந்த மண்டபத்தப் பாத்ததிலேந்து இது உண்மைக்கதையா இருக்குமோன்னு மனசு நம்புது. எப்டியோ இந்த ஜமீன்தார் ‘இல்லையே தாம் தர வாரா நோய்’னு சொல்லப்படற பழமொழி மாதிரி தப்பா வாக்கு குடுத்து துன்பத்த விலைக்கு வாங்கி இருக்கார்.

    வாங்க தம்பிகளா. செல்வாவின் அப்பா எதிரில் வந்து அழைக்கிறார். ஜமீன்தார் பற்றிய நினைவிலிருந்து மீண்டு அவர் பின்னாலேயே செல்கிறோம்.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 14

    பரிமேலழகர் உரைத்திறன் – 14

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சொன்னதும் சொல்ல நினைத்ததும்

    முன்னுரை

    திருக்குறள் அதிகாரப் பொருண்மைகளைப் பகுத்துக் கொண்டு உரைகூறுவது பரிமேலழகர்க்கேயுரிய உரைநெறியாகும். அந்த வகையில் ‘கடவுள் வாழ்த்து’ என்னும் முதல் அதிகாரத்தின் முதற்பாடலை ‘முதற்கடவுளது உண்மை கூறுவதற்கானது’ என்று எழுதுவார். அதாவது ‘கடவுள் என்று ஒருவர் இருக்கிறார்’ என்னும் உண்மையை முதற்பாடல் சொல்லுவதாகப் பரிமேலழகர் கூறுகிறார். ஆனால் பாட்டின் கட்டமைப்பு அவ்வாறாக இல்லை.

    “எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலையுடையன. அதுபோல உலகம் ஆதிபகவன் என்னும் முதலை உடைத்து”

    என்று கருதுமாறே அமைந்துள்ளது. என்ன சிக்கல்? உவமம் சரி. அந்த உவமத்தைப் பொருளோடு பொருத்தினால் உலகம் முன்னதாகவும் கடவுள் பின்னதாகவும் ஆகும். ஆகவே கடவுள் ‘உலகிற்குக் காரணம்’ என்னும் பொருள் கிட்டாது. பிறகு ஏன் திருவள்ளுவர் இவ்வாறு கூறினார்? உவமத்தை விளக்கிவிடலாம். பொருளில் கடவுளாகிய காரணத்தை விளக்க முடியாது. கடவுளால் உண்டாக்கப்பட்ட உலகை வைத்துத்தான் அதற்கான கருத்தாவை அடையாளப்படுத்த முடியும். கிழக்காற்றில் நீர் வருகிறது என்றால் மேற்கே மழை பெய்திருக்கிறது என்னும் அனுமானம் போல! எனவே பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    “காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின் மேல் வைத்துக் கூறினார்”.

    இந்த விளக்கத்தில் கடவுள்தான் உலகினைப் படைத்தார் என்றால் கடவுளின் இருப்பை எப்படி நிலைநிறுத்துவது? அதனால் காரிய காரணமாக ஆராய்கிறார். ஆய்ந்து மேற்கண்ட விளக்கத்தைத் தருகிற பரிமேலழகர், அதனாலேயே உலகம் முன்னாக கடவுள் பின்னாக எனக் கருதுதல் வேண்டா. காரணமாகிய கடவுள்தான் முன்னது என்பதைக் கருத்தாகக் கொள்க என விளக்கம் தருகிறார்.

    ‘கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க”

    என்று எழுதுகிறார். இது குறட்பாவின் கிடக்கை நிலைக்கு மாறுபட்டது. இந்தக் கருத்தினை வள்ளுவர் சொல்ல வருகிறார் என்பது பரிமேலழகரின் அனுமானத்தில் வந்த ஆய்வுண்மை. சொல்லப்பட்ட குறட்பாவின் கருத்தினை மட்டும் கருத்திற் கொள்ளாது உண்மையில் அது சொல்ல வருகிற கருத்தினை உணர்ந்து கொள்வதே ஓதுதலின் பயன் என்பது பரிமேலழகர் எண்ணமாகும். இவ்வாறு குறட்பா ஒன்றாகவும் அது உணர்த்த வரும் கருத்து வேறொன்றாகவும் உள்ள பல இடங்களில் சிலவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

    எமனும் தோற்பான்!

    மரணம் பலவகைப்படும். ‘இயற்கையெய்தினார்’ ‘காலமானார்’ ‘படுகொலை’ ‘பயங்கரக்கொலை’ ‘பரிதாபச் சாவு’ ‘தீக்கிரையானார்’ ‘வெள்ளத்தில் மூழ்கினார்’ ‘விபத்தில் மரணம்’ ‘உயிர் பிரிந்தது’ ‘வீரமரணம்’ என்னும் சொற்களெல்லாம் மரணத்தின் பல சூழல்களையும் தன்மைகளையும் குறிப்பிட்டுக் காட்டும். கொல்லாமையாகிய அறத்தினைப் பின்பற்றி ஒழுகுபவனை உயிர் பறிக்கும் எமன் அண்டமாட்டான் என்பது பின்வரும் திருக்குறளுக்கான பொருள்.

    “கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
    செல்லாது உயிருண்ணும் கூற்று”. (326)

    மேலே சொன்ன சாவுகள் பலவகையாயினும் எமனின் ‘கடமையுணர்வு’ என்ற அளவில் மாறுபாடு ஏதுமில்லை. சாவு எத்தகையதாயினும் அதற்கு விதியைக் காரணமாக்குவது உலகியல். இந்தக் குறளுக்குக்,

    “கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின் மேல் உயிருண்ணும் கூற்றுச் செல்லாது.”

    என்று அழகர் எழுதியிருக்கும் உரையிலும் ‘கூற்றுச் செல்லாது’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ‘கொல்லாமை’ என்பதைக் கொலைக்கு எதிர்நிலையாகக் கருதுகிறாராம் திருவள்ளுவர். அது மேலே சொன்ன மரணங்களுள் கொலைக்கு நிகராம். ஊனுக்குக்காக, உணவுக்காகக் கொல்லப்படுவன அஃறிணை உயிர்களேயானாலும் அவையும் கொலையே என்பதே வள்ளுவர் கருத்தாம். அதனால்தான் அவர் கொல்லாமை என்று பெயர் வைத்தாராம்!. பிற உயிர்களைக் கொல்லாதவனுக்குச் சாவில்லை என்பதுதான் திருக்குறள் சீர்கள் தரும் பொருள். பரிமேலழகர் தனது சிந்தனையால் கொல்லாமை என்னும் சொல் நோக்கி இன்னொரு விளக்கத்தைப் பதிவு செய்கிறார். “உண்பவன் கொலை செய்யாவிட்டால் உண்பவனை எமனும் கொலை செய்யமாட்டான்”

    “இப்பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான். படானாகவே, அடியிற் கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் ‘வாழ்நாள் மேல் கூற்று செல்லாது’ என்றார். செல்லாதாகவே ‘காலம் நீட்டிக்கும். நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து”

    உரையறிஞர் எவர் சிந்தனைக்கும் அவ்வளவு எளிதாக பிடிபட இயலாத கருத்து இது. எமனால் கொல்லப்படான் என்றால் அவனுக்கு மரணமில்லை என்பது பொருளன்று. மரணம் ஒத்திவைக்கப்பட்டு, வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு அக்காலத்துள் ஞானம் பிறக்க, பாவங்களை ஒதுக்கிய நிலையில் உயிர் வீடு பெறும் என்னும் கருத்தைத்தான் இந்தக் குறள் கூறுவதாகப் பரிமேலழகர் கருதுகிறார். மரணம் வராது என்றார் வள்ளுவர். உண்மையில் ஞானத்திற்காக மரணம் வரும் காலம் ஒத்திவைக்கப்படுகிறது என்கிறார் பரிமேலழகர்.

    விலகும் அளவு வேதனையில்லை

    அறத்துப்பாலில் ‘துறவு’ என்னும் அதிகாரம் உலக இன்பங்களைத் துறத்தல் என்பது பற்றிக் கூறுகிறது. துறவறவியலாக இருந்தாலும் பொதுவாகப் பொருளின் மீது வைக்கின்ற பற்றே துன்பத்திற்குக் காரணம் என்பதைக் கூறுகிறது. “ஈட்டல், ஈட்டியவற்றைக் காத்தல் – காத்தவை குறைபடுதல், கெடுதல் ஆகிய அனைத்தும் துன்பம். எனவே இன்பத்திற்காகத் தேடும் பொருள் துன்பத்திற்கு உறைபதியானது” என நாலடியார் கூறுகிறது. திருக்குறளில்,

    “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்” (341)

    என்ற குறட்பா “ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அவன் அப்பொருளால் அப்பொருளால் துன்பம் எய்துதல் இல்லை” என்னும் பொருள் தாங்கி நிற்கிறது. மேலே காட்டிய நாலடியாருக்கு விளக்கமாகப் பரிமேலழகர்,

    “ஈண்டுத் துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும் காத்தலானும் இழத்தலானும் வருவனவும் மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம்.”

    என்று விளக்கமளித்திருக்கிறார். ‘யாதனின்’, ‘அதனின்’ ஆகிய இரண்டு சொற்களையும் இரண்டு முறை பயன்படுத்திய நுட்பம் நோக்கிய அழகர் அவைகொண்டு ஒரு கருத்தினைப் பதிவிடுகிறார். ‘எல்லாவற்றையும் ஒருசேரத் துறத்தல் இயலுமா?’ என்னும் ஐயத்திற்கு ‘அவ்வாறு துறப்பது தலை. இருப்பினும் பற்று வைத்துள்ள பொருட்களில் ஒவ்வொன்றாகத் துறக்க அவ்வொவ்வொரு பொருளாலும் வரக்கூடிய துன்பம் நீங்கும். இதனைத்தான் இந்தக் குறட்பா தனது கருத்தாகக் கொண்டிருக்கிறது என்கிறார்.

    “எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலைமை; அஃதன்றி ஒரொ ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.”

    என்பது பரிமேலழகர் கருத்தாக எழுதிக்காட்டும் தொடர். பற்று வைத்த பொருள்களிலிருந்து அதனை நீக்கினால் அவற்றால் வரும் துன்பங்கள் நீங்கும் என்பது திருக்குறள் முற்றும் துறக்க இயலாதவர் ஒவ்வொன்றாகத் துறந்தாலும் அவற்றான் வரும் துன்பங்கள் நீங்கும் என்பது பரிமேலழகர் கண்ட கருத்து. “யாதனின் நீங்கியான் அதனின் நோதல் இல்லை. யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இல்லை” என்று நிரல்பட ஓதினால் பரிமேலழகரின் நுட்பம் புரியக் கூடும்.

    கெட்டவனை நினைத்தால் நன்மை வருமா?

    ‘கஞ்சா அடித்தே கந்தசாமி செத்தான் தெரியுமா?’ என்று ஒருவர் மற்றொருவருக்கு அறிவுரை கூறினால் அவர் கஞ்சாவிற்கு விளம்பர அலுவலர் அல்லர். கந்தசாமியை உவமமாக்கி உயார்த்துகிறார் என்பதுமன்று. அவர் யாருக்கு அறிவுரை கூறுகிறாரோ அவருக்கு நன்மை தர வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருக்கும், இருக்க வேண்டும். இந்தக் கருத்தியலின் அடிப்படையில் திருவள்ளுவர் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

    “இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
    மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து” (539)

    என்பதே அந்தக் குறட்பா. கடன் வாங்கிக் கந்தசாமி குடிக்கிறபோது ‘குடியால் அழிந்த குப்புசாமியை எண்ணிக்கொள்’ என்பது போல அமைந்த பாடல் இது.

    “அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும்பொழுது முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க”

    என்று பரிமேலழகர் பொழிப்புரை எழுதினார். ‘கெட்டவர்களை எண்ணுக’ எனச் சொல்வது திருவள்ளுவர் நோக்கமன்று. அவர்களை எண்ணினால் மகிழ்ச்சிக்கான காரணங்களால் வரும் ஆணவம் இல்லாது ஒழியும். ஒழியவே அவற்றால் வரும் சோர்வில் மயங்காது தப்பலாம் என்பது கருத்து. மகிழ்ச்சிக்கான காரணங்கள் செல்வம், இன்பம், வீரம் முதலியனவாம். அவற்றால் அழிந்தவர் இரணியன், சூரபதுமன், இராவணன், சச்சந்தன், துரியோதனன் முதலியோர். இவர்கள் எவ்வாறு அழிந்தார்கள் என எண்ணினால் எண்ணுபவர் அந்த மகிழ்ச்சியில் மதிமயங்கார் என்பது கருத்து. இதனைக்,

    “கெட்டாரை உள்ளவே ‘நாமும் அவ்வாறே கெடுதும்’ என்று அதன் கண் மைந்துறார் என்பது கருத்து”

    பிறர் பாட்டை மட்டும் நோக்கப் பரிமேலழகர் பாடியவரின் உள்ளத்தையும் பார்க்கிறார்.

    சோம்பல் மிகக் கெடுதி பாப்பா!

    வினைசெய்யுங்கால் குணங்களின் மாறுபாட்டால் ஏற்படும் சோர்வு பேரழிவை உண்டாக்கும், என்பது அறிந்ததே. அதனால்தான் வள்ளுவர் தொடங்கிப் பாரதி வரைக்கும் அது கண்டிக்கப்படுகிறது. “நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியதும் காண்க. சோம்பலைச் சோம்பலாகவே கருதி அதனைக் கைவிட வேண்டும் என்னும் கருத்தினைப் பின்வரும் குறட்பாவில் வலியுறுத்துகிறார்.

    “மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்” (602)

    இந்தக் குறளுக்குத் “தாம் பிறந்த குடியை மேன்மேல் உயரும் நற்குடியா வேண்டுவார் மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக.” எனப் பொழிப்புரை கூறிய பரிமேலழகர்,

    “நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி நெருப்பை நெருப்பாகவே கருதுக’ என்றாற்போல மடியில் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று  ஒழுகவே தாம் உயர்வர். உயரவே குடி உயரும் என்பார் ‘குடியைக் குடியாக வேண்டுபவர்’ என்றார்.”

    என விளக்கமெழுதிக் காட்டுகிறார். இந்தப் பாட்டில் சோம்பலைச் சோம்பலாகக் கருதுக என்றுதான் இருக்கிறது. இது எப்படி ஒரு நீதியுரைத்ததாகும்? சோம்பலைச் சாதாரணமாகக் கருதாது அதனை (அதனால் வரும் கேடுகளை முன்வைத்து) அதுவாகவே கருதிக் களைய வேண்டும். இல்லாவிட்டால் குடி அழியும் என எச்சரிக்கை செய்கிறார்.

    ‘அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து’.

    ‘நினைக்க’ என்று வள்ளுவர் கூறுகிறார். ‘நீக்காவிட்டால் நின் குடி அழியும்’ என்னும் அவர் கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிகிறார்.

    நம்மையறியாரை நாமறிவோம்

    ‘அமைச்சு’ என்னும் தலைப்பில் அமைந்த அதிகாரம் அமைச்சனது தன்மைகளையும் செயல்களையும் கூற வந்தது. அதில் ஆறாவது பாடலாக அமைந்திருப்பது,

    “மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
    யாவுள முன்னிற் பவை?” (636)

    என்னும் குறுட்பாவாகும். இந்த வினா வடிவத்தில் முடிந்திருக்கும் இதன் உள்ளடக்கம் “அறிவுள்ளவனால் இனங்கண்டு அழிக்க முடியாத எதிரிகள் உண்டா? என்பதே. இதற்கான பரிமேலழகர் பொழிப்புரை இப்படி அமைகிறது.

    “(இயற்கையாகிய) நுண்ணறிவை (செயற்கையாகிய) நூலறிவோடு உடையராய அமைச்சர்க்கு மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை யாவையுள?”

    இந்தப் பொழிப்புரையில் இயற்கையறிவு, செயற்கையறிவு என்னும் அறிவு மூலங்களைச் சுட்டும் பரிமேலழகர் குறட்பாவின் கிடக்கை நிலையிலேயே உரைகாண்கிறார். காணவே வினா வடிவத்திலேயே பொருளும் நிறைவடைந்துவிடுகிறது. வினாவைத் தொடுப்பதா படைப்பின் நோக்கம்? வழிகாட்டுவதுதான் படைப்பின் நோக்கம். “முன்னிற்பவை யாவுள?’ என்னும் வினாவிற்கு ‘ஏதுமில்லையாம்’ என முடித்து விடலாம். ஆனால் பரிமேலழகர் இன்னும் ஒருபடி மேலே சிந்திக்கிறார். சிந்தித்து எழுதுகிறார்.

    பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து.

    ஈரறிவும் கலந்தமைந்த அறிவுடைய அமைச்சர்களுக்கு அவற்றினும் மிக்க நுட்பமுடைய சூழ்ச்சிகள் இல்லாமற் போவதற்குக் காரணம் என்ன என்பதைத் தமது தனிநோக்கினால் கண்டறிந்து எழுதுகிறார். பகைவர் செய்வனவற்றை இவருடைய நுண்ணறிவால் அறியக்கூடுமாம். அறிந்து அவற்றை அழிப்பாராம். பகைவர் அறிய முடியாதவற்றையும் அழிக்க முடியாதவற்றையுமே இவர் எண்ணுவாராம். இதுதான் சொல்ல வந்த அமைச்சர் பெருமையாம். இவர் தரும் இந்த விளக்கத்தினால் தம்முடைய அறிவு நுட்பத்தையே முன்னெடுக்கிறாரேயன்றிப் பகைவர் அறிவு பற்றிக் குறைத்து மதிப்பிடவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

    அடுத்தவர்க்கே வேண்டுமெனின் அமைச்சர்க்கு வேண்டாமா?

    மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் அடக்கத்தைத் திருவள்ளுவர் பேசியிருக்கிறார். வாயைத் தவிர ஏனைய புலன்கள் அவற்றுக்கான பொறிகளையே குறிக்க, ‘வாய்’ என்னும் புலன் நாவையே  குறிக்கும். வாய் பேசாது. நாக்குத்தான் பேசும். மருத்துவர் ‘வாயைத் திற’ என்றால் இரு தாடைகளைத் திறப்பதைக் குறிக்கும். வாயை மூடு என்றாலும் அந்த நிலையே. ஆனால் ஒருவன் பேசுகிறபோது ‘வாயை மூடு’ என்றாலோ ‘நீ வாயைத் திறக்காதே’ என்றாலோ அப்போது அது தாடைகளைக் குறிக்காது. நாவினைத்தான் குறிக்கும். திருவள்ளுவர் ‘நாகாக்க’ என்றாரேயன்றி ‘வாய்காக்க’ என்றார் அல்லர். ‘நாநலம்’ என்றாரேயன்றி ‘வாய்நலம்’ என்றார் அல்லர். நாக்குத்தான் நலன் உண்டு. வாய்க்கு நாற்றந்தான் உண்டு. நாக்கு நாறாது. வாய்தான் நாறும். ‘நாவினால் ‘சுட்ட வடு’ என்றாரேயன்றி ‘வாயினால் சுட்ட வடு’ என்றார் அல்லர். ஆனால் எதிர்மறையில் ‘வாயுணர்வு மாக்கள்’ என்பார். வாயடக்கம் என்பது நாவடக்கமே.

    “நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத்து உள்ளதூஉம் அன்று” (641)

    என்னும் பாடல் ‘சொல்வன்மை’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது. இதற்குப் பரிமேலழகர் எழுதியிருக்கும்,

    “அமைச்சர்க்கு இன்றியமையாக் குணம் ஆவது சான்றோரான் ‘நாநலம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல் அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான்.”

    என்னும் பொழிப்புரை குறட்பாவிலிருந்து வெகுதொலைவு விலகிப்போயிருப்பதைக் காணலாம். ‘நாநலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று’ என்று பொதுவாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. இதுதான் உயிரான உள்ளடக்கம். பரிமேலழகர் இயல், அதிகாரம் ஆகியவற்றையெல்லாம் சீர்தூக்கிச் சொற்களை வருவித்து மிக ஆழமாக உரைகாண்கிறார். இது அமைச்சியலில் இருப்பதால் பொதுவாகச் சொல்லப்பட்ட இப்பாடற் கருத்தினை அமைச்சர்க்கு ஏற்றியுரைக்க விழைகிறார். அதனால்,

    “பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியமையாததாயபின் அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.”

    அழகரின் இந்தத் தொடரை நோக்காவிட்டால் பொழிப்புரையின் முதற்பகுதி விளங்காது. ஏனென்றால் அது குறட்பாவில் சொல்லப்படாத கருத்து. ஆனால் அதுதான் திருவள்ளுவர் சொல்ல வருகிற கருத்து. அமைச்சுப்பணி இல்லார்க்கே இது இவ்வளவு இன்றியமையாது எனின் அமைச்சுப்பணி உள்ளார்க்குச் சொல்ல வேண்டுவதில்லை. அவருக்கு மிக மிக இன்றியமையாதது என்பதையே திருவள்ளுவர் கருத்தாக்கிச் சொல்கிறாராம்.

    இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா?

    காமத்துப்பாலில் அமைந்துள்ள குறட்பாக்களுக்குத் துறைதழுவி உரையெழுதியவர் பரிமேலழகர். அதாவது திருவள்ளுவரை முற்றிலும் மறைத்துத் தலைமக்கள் கூற்றாகவே காட்சிப்படுத்தும் பேராற்றல் அந்த உரைக்கு உண்டு. ‘ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது’ என வரைவுகடாய தோழிக்குச் (தலைவன்) சொல்லியது’ என்னுந் துறையில் அமைந்த பாடல்,

    “வீழும் இருவர்க்கும் இனிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு” (1108)

    என்பதாகும். இந்தப் பாடலுக்குத் தலைமகன் கூற்றாகவே உரையெழுதியிருக்கிறார் பரிமேலழகர். அவன் தோழியிடம் இப்படிச் சொல்கிறான்.

    “நீ சொல்லுகின்றது ஒக்கும். ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம், ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே!”

    திருவள்ளுவரின் திருக்குறளைத் தலைவனுக்காக்கியதே நுண்ணியம். களவொழுக்கத்தில் வந்து சேர்வதும் சேர்ந்து பிரிவதும் துன்பமல்லவா? மணம் செய்து கொண்டால் பிரியாது இருவரும் எப்பொழுதும் முயங்கிக் கிடப்பதை நீ விரும்பவில்லையா? என்பதுபோல் தோழி வினவுகிறாள். அதற்குத் தலைமகன் தோழியின் கூற்றினை அப்படியே உள்வாங்கி “நீ சொல்லுகின்றது ஒக்கும்” அதாவது (நீ சொல்லுவது சரிதான்) என்பதுபோல விடையிறுக்கிறான். பாட்டில் தலைமகன் கூற்று இந்த அளவிற்கே அமைய. இதனால் ‘தலைமகன் கூறவரும் கருத்தென்ன?’ என்பது புலப்படவில்லை. தோழியை வழிமொழிவது அவன் பணியன்று. வரைவுடம்படாது களவொழுக்கத்தை நீட்டிக்கச் செய்வதே அவன் உட்கிடக்கை. அந்த எண்ணத்தைத்தான் பரிமேலழகர் கண்டறிந்து பதிவிடுகிறார் இப்படி.

    “ஈண்டு இருவர் இல்லை. இன்மையான் இஃது ஒவ்வாது என்பது கருத்து”

    ‘நாங்கள் இருவராக இருந்தால் அல்லவா அவ்வாறு இணைய வேண்டும். நாங்கள் ஒருவராகவே நிலைப்பதால் நீ சொல்வது பொருந்தாது’ என்பதைத்தான் இப்படி ‘நீ சொல்லுகின்றது ஒக்கும்’ எனச் சொல்லுகிறானாம்.

    தந்தவள் அவள்! நீக்க வேண்டியவள் நீ!

    தலைவியைச் சந்திக்கும் முன்னர் அவனுக்குக் காதற் துன்பமும் தெரியாது. அது நீக்கும் நெறியான மடலூர்தலும் தெரியாது. ‘இவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன?’ என்று தோழி வினவுகிறாள். தலைமகன் பின்வருமாறு விடைதருகிறான்.

    “தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
    மாலை உழக்கும் துயர்” (1135)

    “மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும் அதற்கு மருந்தாய மடலினையும் முன்னர் அறியேன். இது பொழுது எனக்கு மாலைபோலத் தொடர்ந்த சிறுவளையினை உடையாள் தந்தாள்” என்பதே தலைமகனின் விடையாக அமைகிறது. தோழியின் வினாவிற்கு விடைசொல்வது அன்று தலைமகன் நோக்கம். அந்த நோயினால் ஏற்பட்ட துன்பத்தினையும் அது நீங்கக் கைகொள்ளவிருக்கும் மடலூர்தலையும் தவிர்ப்பதற்குத் தோழி உதவ வேண்டும் என்பதே அவன் உள்ளக்கிடக்கை. “நீ அவளிடம் சென்று என் காமத்துயர் சாற்றி, மடலூர்தலுக்கு முன்பாகவே மணவினை நிகழ ஆவன செய்க’ என்று அவன் கருதுவதைத்தான் இந்தப் பாட்டு சொல்கிறதாம்.

    “இவை அவள் தந்தன வாகலின் நின்னால் நீங்கும்” என்பது கருத்து.’

    என்னும் நுட்பமான உரை பரிமேலழகருடையது. ‘யார் தந்தது என நீ கேட்டாய். தந்தவள் பெயர் சொன்னேன். எனவே நீக்கியருள வேண்டியது நின் கடன்’ எனத் தலைமகன் கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார்.

    நிறைவுரை

    திருவள்ளுவர் சொன்னவற்றை மேம்போக்காக நோக்காது அவர்தம் உள்ளத்தின் ஆழம் காண முயன்றவர் பரிமேலழகர். அந்த முயற்சிகளில் ஒன்றுதான் திருவள்ளுவர் சொன்னது ஒன்றாக இருக்க, அவர் சொல்ல நினைத்ததைக் கண்டறிந்து பந்திவைக்கும் பரிமேலழகர் உரைத்திறன். ‘முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு’ (1274) எனத் தலைவன் தலைவியின் முறுவலை ஆராய்ந்ததைப் போலவே பரிமேலழகர் ஆராய்ச்சி அமைந்திருக்கிறது. தலைவன் கண்டது தலைவியின் காதல் பரிமேலழகர் கண்டது திருவள்ளுவரின் கருத்து. திருக்குறளில் ஏறத்தாழ 60 இடங்களில் பயின்று வந்திருக்கும் இத்தகைய உரைப்போக்கு அழகரின் உரைத்திறனில் ஒரு மணிமகுடமாகவே ஒளிர்கிறது.

    (தொடரும்…)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 38

    பழகத் தெரிய வேணும் – 38

    நிர்மலா ராகவன்

    அன்பைக் காட்டும் வழி: சுதந்திரம் அளிப்பது

    குழந்தைப் பருவத்திலிருந்து மனிதனுக்கு இரு முரணான குணங்கள் இயற்கையிலேயே அமைந்திருக்கின்றன.

    உண்பது, தன் துணியை தானே மடித்து வைத்துக்கொள்வது போன்ற விஷயங்களைத் தாங்களே செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், எதையாவது கண்டு பயந்தாலோ, கீழே விழுந்துவிட்டாலோ, ஓடி வந்து தாயைக் கட்டிக்கொள்வார்கள்.

    சிறுவர்களாக இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா வயதிலும் சுதந்திரமும் வேண்டும், பாதுகாப்பும் வேண்டும்.

    `என் உரிமை!’ என்று முழக்கமிடும் பதின்ம வயதினர் `சுதந்திரம்’ என்று எண்ணுவது தான்தோன்றித்தனமாக நடப்பது.

    அவர்களுக்குச் சகல வசதிகளும் அளித்து, செலவழிக்கப் பணமும் கொடுக்க வேண்டிய பெற்றோர், `இது எப்படி சுதந்திரம் ஆகும்?’ என்று அலுத்துக்கொள்வதில் நியாயம் இருக்கிறது.

    ஒருவர் தன் வாழ்க்கையைத் தானே அமைத்துக்கொள்வதுதான் சுதந்திரம். அது பிறர் அளிப்பதல்ல; சுய முயற்சியால் பெறுவது.

    சில குடும்பங்களில், வயதில் மூத்தவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அங்கு இளையவர்களுக்கு பேச்சு சுதந்திரம் கிடையாது. வேறு விதமாக யோசிப்பதே குற்றம் என்பதுபோல் வளர்க்கப்படுவார்கள்.

    பெண்களுக்கோ! கேட்கவே வேண்டாம்.

    கதை

    கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாள் காவேரி. திருமணமாகி, இரு குழந்தைகளுக்குப் பின் மேற்படிப்பைத் தொடர்ந்து, பட்டங்களும் பெற்றாள்.

    ஆரம்பப் பள்ளி ஒன்றில் அவளை அழைத்தார்கள், தலைமைப் பதவியை ஏற்க.

    மாமியாரோ, `நீ வேலைக்குப் போய்விட்டால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள என்னால் முடியாது,’ என்று திட்டவட்டமாகக் கூறினாள்.

    பெரியவர்களை எதிர்த்துப் பழக்கமில்லாத காவேரி அடிபணிந்தாள்.

    பல ஆண்டுகள் கழிந்தபின், தனக்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்காமல் போய்விட்ட வருத்தம் எழுந்தது. `குழந்தைகளையாவது நல்ல விதமாக வளர்க்க முடிந்ததே!’ என்ற சிறு ஆறுதல் கொண்டாள்.

    அவள் துணிந்திருந்தால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பணிப்பெண்ணை அமர்த்தி இருக்கலாம். இல்லையேல், தனிக்குடித்தனம் போயிருக்கலாம்.

    நம் திறமைக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. ஆனால், பலருக்கும் தானே சிந்திப்பதைவிட, பிறரைத் தொடர்வது எளிது.

    அப்படி அவள் தனிக்குடித்தனம் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

    `பெரியவர்களை விட்டுவிட்டு, உனக்கு அப்படி என்னடி வாழ்க்கை?’ என்று ஆசாரமான அவள் குடும்பத்தாரே பழித்திருப்பார்கள்.

    `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று சுயமாகச் சிந்திக்கவே பயந்தால், வாழ்வில் மகிழ்ச்சியோ, பிடிப்போ இல்லாமல் போய்விடுமே!

    தான் விரும்பியதைப் பிறருக்காக விட்டுக் கொடுத்து, தன் திறமையை முழுவதாக வெளிப்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கமும் கையாலாகாத உணர்வும் மேலிட வாழ்கிறவர்கள் எத்தனை பேர்!

    (நாடு தழுவிய நிலையிலும் இதேதான். நம் கருத்து பிடிக்காவிட்டாலும், `பிழைத்துப் போ!’ என்று நம்மைத் தண்டிக்காது விட்டால், அதுவே சுதந்திரம் என்று மகிழ வேண்டியதுதான்).

    காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட பழக்க வழக்கங்களையோ, எண்ணங்களையோ ஏற்றுக்கொள்ளாது, தன்னம்பிக்கையுடன் நடக்க முயலும் எவருக்கும் கஷ்டங்கள் தவிர்க்க முடியாதவை. அவற்றுக்குப் பொறுப்பேற்கத் தயாராக இருக்கவேண்டும். அதற்கான துணிச்சல் அவசியம்.

    கதை

    அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்.

    அப்போது விரிவுரையாளராக இருந்த மிஸ் சுந்தரவல்லி, “உங்களிடம் படித்த மாணவிகளில் சிறப்பானவள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்?” என்று என் பள்ளித் தமிழ் ஆசிரியை திருமதி கோமளாம்பாளிடம் விசாரித்திருக்கிறாள். (அது தனியார் பள்ளியான கமலாபாய் பெண்கள் பள்ளி. பெங்களூரில்).

    “பத்து வருடங்களுக்கு ஒரு முறைதான் நிர்மலா போன்ற ஒரு மாணவி கிடைப்பாள்!” என்ற பதில் கிடைத்ததாம்.

    மிஸ் சுந்தரவல்லியே இதை என்னிடம் கூறி, “பரீட்சைகளில் நீ அப்படி ஒன்றும் சிறப்பாக எழுதுவதில்லையே! ஏம்மா? தலைவலியா?” என்று போலிப் பரிவுடன் ஒவ்வொரு முறையும் விசாரித்தபோது, எனக்குப் பதிலளிக்கத் தெரியவில்லை.

    பல வருடங்களுக்குப் பின் புரிந்தது, அவ்விரு ஆசிரியைகளுக்கும் இடையே இருந்த வேறுபாடு.

    பள்ளிக்கூடத்தில் எனக்குள் இயற்கையாகவே அமைந்திருந்த எண்ணச் சுதந்திரம் தடை செய்யப்படவில்லை. மாறாக, அது வளரும் விதத்தில் ஊக்கம் அளிக்கப்பட்டது.

    `நான் சொல்லியது மட்டுமல்லாது, பரீட்சைத்தாளில் சுயமாகக் கருத்து சொல்வதற்கு இவளுக்கு என்ன திமிர் இருக்கவேண்டும்!’ என்று ஆத்திரப்பட்டிருப்பாள் மிஸ் சுந்தரவல்லி.

    (பட்டப் பரீட்சையில் நானும், இன்னொரு பெண்ணும் மட்டுமே தமிழில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தோம்).

    கல்வி கற்பதன் நோக்கமே ஒருவர் எதையும் கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வருவதுதான்.

    இது புரியாது, சுயமாகச் சிந்திப்பவர்களை மரியாதை கெட்டவர்கள், கர்வம் கொண்டவர்கள் என்பதுபோல் தண்டித்தால், அது என்ன கல்வி?

    பெண் எழுத்தாளர்களும் சுதந்திரமும்

    ஆண்கள் எப்படி எழுதினாலும் ஏற்கலாம். ஆனால், தமிழ்ப் பெண்களின் எழுத்து ஒரு வரையறைக்குள்தான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி.

    (ஆங்கிலத்தில் எழுதும் பெண்களுக்குப் பூரண எழுத்துச் சுதந்திரம் உண்டு. அவர்களது உள்ளுணர்வை விவரித்தால் அது தவறாகக் கருதப்படுவதில்லை).

    கற்பனை விரியும்போது, அதைத் தணிக்கை செய்யாது, அப்படியே எழுத்தில் வடிக்கும்போதுதான் நிறைவு ஏற்படுகிறது.

    `இது சரியா?’

    `இப்படி எழுதினால், என் பெயர் கெடுமோ?’

    இவ்வாறு கலக்கத்துடன் யோசித்து, ஒவ்வொரு வரியையும் திருத்திக்கொண்டே இருந்தால், நாம் எழுதுவதில் முழு மனத்துடன் ஆழ்ந்துபோக முடியுமா? கதையில்தான் என்ன சுவை இருக்கும்?

    கதைகளில், பெண்கள் முறை தவறி நடக்கிறார்கள் என்பதுபோல் எழுதினால், அந்த எழுத்தாளினியின் நடத்தையில் சந்தேகம் எழுப்புவார்கள்.

    படைத்தவரின் கைவண்ணத்தைவிட்டு, ஒரு கலைஞரையே வேண்டாத விமரிசனத்திற்கு உள்ளாக்குவது பொறாமையால்தான் என்று தெளிந்தால் போதும். துணிச்சல் அதிகரிக்கும்.

    அத்தகையவர்களுக்குப் பயந்து, பிறர் மதிக்கவேண்டும் என்றே ஒவ்வொரு செயலையும் புரிவது, அல்லது ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசுவது என்று பழகிக்கொண்டால், முன்னேறுவது எப்படி?

    என்னைச் சில பெண்கள் கேட்டிருக்கிறார்கள், “ஆண்களின் சில போக்கைக் கேலி செய்து நீங்கள் (ஆங்கிலத்தில்) எழுதுகிறீர்களே! உங்கள் கணவர் கோபிப்பதில்லையா?” என்று.

    எரிச்சலுடன், “நான் – எழுத்தாளர்! எனக்குத் தோன்றுவதை, எனக்குச் சரியென்று படும் விதத்தில் எழுதுகிறேன்,” என்று பதிலளிப்பேன்.

    அன்பும், காதலும்

    வளர்ந்த பிள்ளைகளோ, தம்பதியரோ, ஒருவர் தான் சொல்கிறபடியே நடக்கவேண்டும் என்று அவரைக் கெட்டியாகப் பிடித்திராது அவர் போக்கில் விட்டால், அப்படி அளிக்கும் சுதந்திரத்தையே அன்பு என்பேன்.

    `ஐ லவ் யூ’ என்று வாய்வார்த்தையாகச் சொல்பவர்கள் எத்தனை பேர் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்?

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 25

    கதை வடிவில் பழமொழி நானூறு – 25

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 51

    கட்டுடைத் தாகக் கருமம் செயவைப்பின்
    பட்டுண்டாங்(கு) ஓடும் பரியாரை வையற்க
    தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை ‘இல்லையே
    அட்டாரை ஒட்டாக் கலம்’.

    பழமொழி – இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்

    குடும்பத்தப் பத்தி சரியா விசாரிச்சிட்டுத்தான் முடிவச் சொல்லணும்னு இப்ப எதுக்கு தேவையில்லாம ஒத்தக்கால்ல நிக்கற. எனக்கென்னமோ பாக்க நல்ல குடும்பமாத்தான் தெரிஞ்சாங்க. அப்பா தொடர்ந்து கொண்டே போக இடையில் அம்மா .

    போதும் நிறுத்துங்க. ‘உங்களுக்கு வெளுத்ததெல்லாம் பால்’. என்னால அப்டி யோசிக்க முடியாது. எதையும் நான் நிதானமா யோசிச்சுதான் முடிவெடுப்பேன்.

    நிதானம் நிதானம்னு சொல்லிக்கிட்டு ‘நீ கண்ண மூடிக்கிட்டு உலகமே இருட்டா இருக்கும்னு’ பேசற. இது அப்பா.

    இங்க என்ன பழமொழிக்கு பழமொழி போட்டியா நடக்குது. சண்டபோடும்போதும் சரமாரியா பழமொழியா கொட்டறாங்க. நல்ல தமிழ்ப் பற்றுதான்.  இருக்கட்டும். ஆனா இப்ப பேசிக்கிட்டிருக்கறது என் கல்யாணத்தப் பத்தி. ரெண்டு நாள் முன்ன பொண்ணு பாக்கப் போனோம். எனக்கும் பாக்கறதுக்கு அவங்க நல்லகுடும்பமாத்தான் தெரிஞ்சாங்க. எப்டியிருந்தாலும் அரேஞ்ட் மேரேஜ். அதனால பொண்ணப் பத்தின விவரங்கள் அதிகமா தெரியாது. ஆனா இந்த அம்மா ஏன் அவங்க குடும்பத்தப் பத்தியே பேசிக்கிட்டு இருக்காங்கனு தெரியல. நான் என்ன மொத்த குடும்பத்தையா கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். இருந்தாலும் அம்மா காரணம் இல்லாம சொல்ல மாட்டங்க. என்னன்னு அவங்ககிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். போன எடத்துல யாராவது மரியாதைக்குறைவா பேசினாங்களோ என்னமோ? யோசித்துக்கொண்டே அவர்களின் சண்டையில் இடையில் நுழைந்தேன்.

    அம்மா ஆரம்பித்தாள். உனக்கு எம்மேல நம்பிக்கை இருக்குல்ல. கொஞ்சம் பொறு. நான் நாலுபேர்கிட்ட அந்தக் குடும்பத்தப் பத்தி , அவங்க முந்தின தலைமுறையப் பத்தி நல்லா விசாரிச்சுட்டு எம் முடிவச் சொல்றேன்.

    உட்டா அவங்களோட ஏழு தலைமுறையப் பத்தியும் கேள்வி கேட்ப போல. எரிச்சலுடன் கிளம்பிவிட்டார் அப்பா.

    அவர் கிடக்கிறார். நீ கேளு. அம்மா ஆரம்பித்தாள். இப்டித்தான் முன்னால எங்க ஊர்ல தாத்தாவோட ஒண்ணுவிட்ட தங்கச்சிக்கு ஒடம்பு முடியாமப் போச்சு. அவங்க மொத்த சொத்தையும் எங்க அம்மா பேர்ல எழுதிவைக்கறதாவும் அவங்களக் கடைசி காலம் வரை பாத்துக்கிடணும்னு சொல்லி தாத்தாகிட்ட வந்தாங்க. அப்ப எங்கம்மா படிச்சிக்கிட்டு இருந்தாங்க. எங்க ஊர்ல கோவிந்தன்னு ஒருத்தன் இருந்தான்.  அவனுக்கு குடும்பம்னு ஒண்ணும் இருக்கல. அப்ப தாத்தா இந்த கோவிந்தன அந்த ஆச்சிக்கு தொணையா இருக்கச் சொல்லி பேசி வச்சாரு. அதுக்குத் தகுந்த சம்பள நெல்லையும் அவனுக்கு கொடுத்துட்டு இருந்தாரு. இவனும் ஆச்சி கூடவே ஒத்தாச செஞ்சுக்கிட்டு இருந்தான். ஆச்சிக்கு நிறைய சொத்து. அவளுக்கு பிள்ள குட்டி எதுவும் இல்ல. இந்த கோவிந்தன் கொஞ்சம் படிச்சிருந்ததால அவன நம்பி காடு கழனி பொறுப்ப எல்லாம் ஒப்படைச்சாங்க ஆச்சி.. கொஞ்ச கொஞ்சமா அவங்க சொத்து விவரம் பூராத் தெரிஞ்சுக்கிட்ட அவன் ஆச்சி செத்தபிறகு எல்லாம் தனக்கு வர மாதிரி எழுதி வச்சிக்கிட்டான். தாத்தாகிட்டயும் நல்ல பயலாத்தான் நடிச்சிக்கிட்டிருந்தான். மொதல்ல தாத்தா இறந்துட்டாரு. அப்பறந்தான் அந்த ஆச்சி செத்துச்சு. அவங்க செத்தப்பறம்தான் தெரிஞ்சுச்சு. இவன் மொத்தத்தையும் தம் பேருக்கு மாத்திக்கிட்ட விசயம். எங்கம்மாவுக்கு ஒண்ணும் கிடைக்கல. இந்தக் கதைய எங்கம்மா எங்கிட்ட பலதடவை சொல்லியிருக்காங்க.

    ஓ கேக்க சினிமா கதை மாதிரி இருக்கே. நான் சொல்ல அம்மா கோபத்துடன்

    இது ஒண்ணும் கதையில்ல. நிசம். யாருக்குத்தெரியும் இந்த மாதிரி இன்னொருத்தர் காச ஏமாத்தி அந்தப் பரம்பரையில யாராவது பொழைச்சிருந்தாங்கன்னா அந்தப் பாவம் எல்லாருக்கும்தானே வந்து சேரும். அதனாலதான் நான் விசாரிக்கணுங்கறேன். அம்மா முடிக்க நான் தொடர்ந்தேன்.

    அம்மா இதத்தான் ‘இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்னு’ பழமொழி நானூறு சொல்லுது. ஒருத்தன்கிட்ட காரியத்த ஒப்படைக்கும்போது அதோட பயனை அவனே எடுத்துக்குவான்னு தோணிச்சின்னா அவன்கிட்ட ஒப்படைக்கக் கூடாதுங்கறது அதோட பொருள். கோவிந்தன் மாதிரி ஆள விசாரிக்காம வேலைக்கு வச்சது தாத்தாவோட தப்பு. அதுக்குனு எல்லாரையும் அவனப்போலவே நினைச்சு சந்தேகப்படறது எனக்கு சரியாப் படல. அப்பறம் உன் இஷ்டம். சொல்லிவிட்டு அப்போதைக்கு அந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக நினைத்து கிளம்பினேன்.

    பாடல் 52

    குரைத்துக் கொளப்பட்டார் கோளிழுக்குப் பட்டுப்
    புரைத்தெழுந்து போகினும் போவர் – அரக்கில்லுள்
    பொய்யற்ற ஐவரும் போயினார் ‘இல்லையே
    உய்வதற்(கு) உய்யா இடம்’.

    ‘இல்லையே உய்வதற்கு உய்யா இடம்’

    வந்தே பாரத் விமானத்தில் எவ்வளவு முயற்சித்தும் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. மனம் முழுக்க கவலையுடன் துபாயிலிருந்து நான் இந்தியாவில் இருக்கும் என் குடும்பத்தாருடன் பேச முயல்கிறேன். பேச கேட்க எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும் மனம் ஒருநிலையில் இல்லாதபோது தலையில் இடிவிழுந்தமாதிரி ஒரு உணர்வு. இனிமே எப்போ கிடைச்சு நான் எப்போ போக.. என் தாய் மண்ணை மிதிக்க முடியுமோ என்னவோ. இயலாமை என்னை முழுமையாய் ஆக்கிரமிக்க, கைபேசியை கீழே வைத்துவிட்டு என் முயற்சியைக் கைவிட்டேன்.

    போனவாரம் பேசியபோது மனைவி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இன்னும் நம்ம வீட்டுப்பக்கத்துல கொரோனா தாக்கம் குறைந்த பாடில்லை.நானும் குழந்தைகளும் பத்திரமாதான் இருக்கோம். நம்ம விமல் அண்ணன் அடுத்த சனிக்கிழமை குடும்பத்தோட கிளம்பி வரப்போறதா கேள்விப்பட்டேன். அவங்ககூட சேந்து நீங்களும் புக் பண்ணியிருக்கலாமே. அதன்பிறகு அவள் பேசிய எதுவும் சரியாகக் காதில் விழவில்லை.  ஏதோ ஒப்புக்குப் பேசிவிட்டு கைபேசி இணைப்பைத் துண்டித்தேன்.

    விமல் கூடவா இப்படி. எத்தனைதடவ சொன்னேன். நீ ஊருக்குக் கிளம்பறதா இருந்தா எனக்கும் சேத்து புக் பண்ணுனு. நான் தொழிற்சாலைக்குள் வேலை செய்வதால் முழுநேரம் இணைய இணைப்பு கிடைக்காது. காலை அல்லது மாலை நேரங்களில் தொழிற்சாலைக்கு வெளியேதான் முயற்சிக்க வேண்டும். அதிலும் பல தடங்கல்கள். அதனால தான் விமல், ரவி, மதன் இவங்க மூணு பேர் கிட்டயும் சொல்லிவச்சிருந்தேன்.

    ரவியும் மதனும் போனவாரம் கூப்பிட்டு டேய் திடீர்னு புக் பண்ணிட்டோம். உனக்கும் சேத்து பண்ண டிக்கெட் இல்ல. கிளம்பறோம். பத்திரமா இருந்துக்கோ. சீக்கிரமா இங்கிருந்து கிளம்பிடு என அறிவுரை சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள்.

    இந்த விமல் புக் பண்ணினத என்கிட்ட சொல்லக்கூட இல்ல. மனைவி சொல்லி தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. இவங்ககூடயெல்லாம் இவ்வளவு வருசம் நட்பு வச்சிருந்தத நினைச்சா வெட்கமா இருக்கு. இன்னிக்கு மனசுசரியில்ல. நாளைக்குதான் கூப்பிடணும்.

    இரவு உணவிற்குப் பின் களைப்பில் உறங்கிவிட்டேன்.  அடுத்தநாள் காலை கைபேசியில் மூன்று மிஸ்ட் கால்கள். அதுவும் நண்பன் விமலிடமிருந்து.

    என்ன ஆச்சரியம். ஊருக்குப் போய் சேந்தப்புறம் சாவகாசமா என் நினைப்பு வந்திருக்கு போல. இருந்தாலும் பரவாயில்ல. நான் நல்லவனாவே இருந்துட்டுப் போறேன். ஆனா கூப்பிட்டவுடனே நல்லா திட்டிட்டுதான் பேச ஆரம்பிக்கணும்.

    மனதுள் நினைத்துக்கொண்டே அழைத்தேன். அடுத்தமுனையில் வேறு ஒருவரின் குரல்.

    சார் நீங்க மிஸ்டர் ரகுதானே. என உறுதிப்படுத்திக்கொண்டு நான் பெங்களூரிலிருந்து மருத்துவர் சுதீப் பேசறேன். உங்க நண்பர் விமல் வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாயிடுச்சு. அவருக்கும்  அவருடைய குடும்பத்துக்கும் பலத்த அடிபட்டிருக்கு. அவரோட கைபேசியில உங்களின் எண்தான் எமெர்ஜென்சினு பதிவுசெய்யப்பட்டதால உங்களுக்குத் தகவல் குடுக்கறோம். அவர் முடித்தவுடன்

    பதட்டத்துடன் விமல் இப்போ எங்கே இருக்கிறான். பேசமுடியுமா.

    என் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஒரே பதில். இப்போ எந்த பேஷண்டையும் பேச அனுமதிக்கமுடியாது. மருத்துவமனை முகவரிய உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். பக்கத்தில யாராவது சொந்தக்காரங்க இருந்தாங்கன்னா சொல்லிருங்க. இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் பெருங்குரலெடுத்து அழவேண்டும்போல் தோன்றியது. நேற்றுவரை சுயநலவாதியாய்த் தெரிந்த என் நண்பன் உயிர்காப்பானாய் மாறிப்போயிருந்தான்.

    இதுக்குத்தான் எனக்கு டிக்கெட் புக் பண்ணாம விட்டானா. கடவுளே! அவனையும் குடும்பத்தாரையும் நல்லபடியாகக் காப்பாற்று வேண்டிக்கொண்டே  ரவி மற்றும் மதனின் எண்களை அழைக்க ஆரம்பித்தேன். விமலின் தாயார் ரொம்ப வயதானவர். அவரைத் தவிர அவனுக்கு யாரும் கிடையாது.

    ‘இல்லையே உய்வதற்கு உய்யா இடம்’ என்ற பழமொழி நானூற்றின் பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. நண்பர்கள் கைவிட்டாலும் நல்ல ஊழ் இருந்தால் அவருக்கு எவ்விதமான ஆபத்தும் வராது என்பது இதோட பொருள். என் விஷயத்திலையும் அப்டிதான் நடந்திருக்கு.

    யோசித்துக்கொண்டே அடுத்து செய்ய வேண்டிய வேலைக்கு ஆயத்தமானேன்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 101 (சென்றடி)

    சேக்கிழார் பாடல் நயம் – 101 (சென்றடி)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    சென்றடி  வணங்கி  நின்று  ‘’செய்தவ  வேடங்   கொண்டு
    வென்றவற்   கிடையூ   றின்றி  விட்டனன் ‘’ என்று  கூற ,
    ‘’இன்றெனக்  கையன்  செய்த தியார்   செய்ய  வல்லர்’’ என்று
    நின்றவன்  தன்னை  நோக்கி   நிறைபெருங்   கருணை   கூர்ந்தார்!

    பொருள்

    சென்று அரசரை அடிவணங்கி நின்று கொண்டு, “செய்த தவவேடங் கொண்டதனாலே வென்றவனைக்  காப்பாற்றிக்   கட்டளைப் படி கொண்டுபோய் விட்டனன்“ என்று (தத்தன்) சொல்ல, “இன்று எனக்கு ஐயனாகிய நீ செய்ததுபோல யாவர் செய்யவல்லவர்?“ என்று (அவனுக்கு நன்றி கூறுமுகத்தால) நன்மொழி கூறி, (வணங்கி) நின்றானாகிய அவனை நோக்கி, நிறைந்த பெருங்கருணை கூர்ந்தார் (அரசர்).

    விளக்கம்

    செய்தவ வேடத்தான் , என்ற தொடர் , இயல்பாகத்  திருநீறு  அணியாமல் வஞ்சனையாகச்  செய்து கொண்ட  வேடம்  என்பதையும் , சிவபக்தி மேலிட்ட நாயனாரைப் பொய்தவ வேடத்தினை துணையாகப் போர்த்திக்கொண்டு வென்றவனாகத் தன்னை வியந்து கொண்டவன் முத்தனாதன். பசுத்தோல் போர்த்த  நரி  என்று கருதலாம்; செய்தவ வேடங்கொண்டு வென்றவன் என்ற தொடர், முத்தநாதன் படைகொண்டு  பகைத்திறத்தால்  வெல்ல இயலாமல் , சூழ்ச்சியால் வெல்ல எண்ணி, அவ்வாறே  தான்  நினைந்தசெயலைச்செய்து, வென்றுவிட்டதாகக் கருதிய அவன், உண்மையில்  அரசன்கட்டளையால் அறிந்துகொண்டதைத் தத்தன் இங்கே குறிப்பிட்டான் என்ற பொருள்கொண்டது. அதனால்  வேடத்தால் கருதியது முடித்த முத்தநாதனை  அவ்வேடத்தால் தப்பிப்போக உதவியதாகத் தத்தன் கருதியதால் அரசரிடமும் வென்றவன் என்ற சொல்லையே கூறினான் என்ற   பொருளையும்   குறித்தது.

    இன்று எனக்கு  ஐயன்  செய்தது  யார் செய்ய வல்லார் ?- என்ற தொடர்    

    இன்று – எனக்கு – ஐயன் – செய்தது யார் – செய வல்லார்? –

    இதுபோழ்து அரசர் கூறிய இந்த நன்மொழியில் ஒவ்வொரு சொல்லும் மிகப்பொருத்தமும் பொருளாழமும் உடைமை குறித்தது!. இன்று எனக்கு – நான் வன்மையனாய் அரசியலில் வீற்றிருக்கும் போது அச்சம் – தன்னலம் முதலிய பல காரணங்களால் யாவரும் என் மொழிவழி நிற்பர்; நான் வலியிழந்து குருதி சோர வீழ்ந்து சிறிது போதில் ஆவியும் சோர நின்ற இன்று இச்சமயத்தில் என் மொழிவழி நிற்றல் அரிது; ஐயன் பகைவன் என்று வாளால் எறியலுற்ற உன் கருத்துக்கு மாறான இப்பணியை இன்று சொற்கடவாது இயற்றலினால் நீ பெரியனாயினை; ஐயன் – முன்னிலை குறித்த படர்க்கைச் சொல். பெருமையும் அருமையுங் குறித்தது; தாதனாகிய தத்தனை ஐயன் – என்றது அவன் தம்பாற் செய்து நிறை வேற்றின கடமையின் நன்மைக்காகவும், வேடம் போற்றிய முறையைக் கடைபோகக் காத்த வுதவிக்காகவும் நன்றி பாராட்டிய அருமைப்பாடும் குறித்தது; செய்தது – (சிலர் செய்வேன் என்று சொல்லுவர்; ஆயின் செய்யார்;) நீ சொல்லியபடியே செய்து முடித்தனை; யார்செய வல்லார்? என்ற வினா எதிர்மறை குறித்தது. நீயே செய்ய வல்லாய் என்ற உடன்பாட்டினும், வேறு எவரும் செய்கலார் எனும் எதிர்மறைக்கூற்று உறுதிப்பாடுடையது; யார் வல்லார்? என்ற வினா அதனினும் மிகவும் உறுதி உணர்த்தும் வழக்கு.

    இங்கே  ஷேக்ஸ்பியரின்,  ‘’அந்தோனியும்  கிளியோபாத்ராவும்’’ என்ற நாடகத்தில் போர்க்களத்தில்  தோற்று விடுவோம் என்ற எண்ணத்தில் அந்தோனி  தன் மெய்க்காவலன்  ஈராஸிடம், ‘’அந்நியர் கைவாளால்  சாவதை விடத்  தன்  நாட்டு வீரனால்  கொல்லப் படுவதே நன்று! ஆதலால் ஈராஸ்,   நீ    உடனே வாளை உருவி, என்னைக் கொன்று விடு!’’ என்று ஆணை இடுகிறான். தயங்கிய  ஈராஸ் ஒரு முடிவுடன்  தன்  வாளை  எடுத்து , ‘’என் அரசனின் இறப்பை எப்படித் தாங்குவேன்!’’ என்று மனத்துள் எண்ணி இதோ கொல்கிறேன்! என்று தன்னையே  மாய்த்துக் கொள்கிறான். அந்தோனி  அவன் வீழ்வதைக் கண்டு,  ‘’ஆ!  என்னினும் மும்மடங்கு நேர்மை கொண்ட வீரனே! நீ எனக்கு அறிவுறுத்தும் ஆசான் ஆகி விட்டாய்!’’  என்று போற்றுகிறான் !

    ‘’EROS

    Farewell, great chief. Shall I strike now?

    MARK ANTONY

    Now, Eros.

    EROS

    Why, there then: thus I do escape the sorrow

    Of Antony’s death.

    Kills himself

    MARK ANTONY

    Thrice-nobler than myself!
    Thou teachest me, O valiant Eros!’’

    என்று  போற்றும் உணர்ச்சிகரமான காட்சி,  நம்  நினைவுக்கு வருகிறது!

    என்று – என்று தம் திருவாக்கினாலே அருண்மொழி கூறி; நோக்கி – கண்ணினாலே அருட்பார்வை செய்து; நிறை பெருங் கருணை கூர்ந்தார் – தம்  திருவுள்ள நிறைந்த பெரிய தண்ணருளை அவனிடத்துச் செய்தார்.  இவைமுறையே மொழி, மெய், மனம் என்னும் மூன்று கரணங்களாலும் தத்தனை நாயனார் ஆசீர்வதித்து அருளிய தன்மை குறித்தன. தத்தன் பெற்றது பெரும் பேறன்றோ?

    Share