நிர்மலா ராகவன்

ஓயாமல் உதவுவது உதவியா, உபத்திரவமா?

`உலகில் தீயன என்பதே கிடையாது,’ என்று வளர்க்கப்பட்டதால் அரசிளங்குமரனான சித்தார்த்தர் பிணியையும். மரணத்தையும் கண்டபோது, குடும்ப வாழ்வையே வெறுத்துப்போனார் என்று தெளிவுபடுத்துகிறது கௌதம புத்தரின் சரிதம்.

பல பெற்றோர் ஏன் குழந்தைகளை அப்படி வளர்க்கிறார்கள்?

அவர்களைப் பொறுத்தவரை, அது அன்பைக் காட்டும் வழி.

`என்னுடையகுழந்தை!’ என்று உரிமை கொண்டாடும் மனப்பான்மை இன்னொரு காரணம்.

`யாரும் புத்தி சொல்லாமல், நான் நிறைய தப்பு செய்துட்டேன். நீயும் அப்படிக் கஷ்டப்படக்கூடாது,’ என்பார்கள், கரிசனத்துடன்.

அப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் மகிழ்ச்சியோ, பயனோ அடைகிறார்களா என்பது வேறு விஷயம்.

ஓயாமல் உதவுவது உதவியா?

கதை

திருமணமாகி பல ஆண்டுகள் கழித்துப் பிறந்த பெண் காஞ்சனா.

அவள் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, அருமை பெருமையாக வளர்த்த மகள் இரவில் நெடுநேரம் வீட்டுப்பாடம் செய்து, உடலைக் கெடுத்துக்கொள்கிறாளே என்ற ஆதங்கம் அவள் பெற்றோருக்கு.

“காஞ்சனாவோட அப்பா பள்ளிக்கூடத்துக்குப் போய், `எங்க குழந்தைக்கு அதிகமா வீட்டுப்பாடம் கொடுக்காதீங்க!’ என்று சொல்லிட்டு வந்தார்,” என்று அவளுடைய தாய் என்னிடம் கூறியபோது, அப்பெண்ணின்மேல் பரிதாபம்தான் எழுந்தது.

உடன் படிக்கும் மாணவிகள் கேலி செய்ய மாட்டார்களா?

தெரிந்தோ, தெரியாமலோ, சில பெற்றோரே குழந்தைகள் பிறருடன் பழகத் தெரியாமலிருக்க இவ்வாறு வழிவகுத்து விடுகின்றனர்.

குழந்தை விழுந்துவிடுமே!

நடக்கப் பழகும் குழந்தை விழாமல் இருக்காது. விழத்தான் செய்யும். இயற்கையே அதற்குப் பாதுகாப்புக் கவசம் அளிக்கிறது, மூளையில்.

தளர்நடை போடும் குழந்தையின் பின்னாலேயே பதட்டத்துடன் நடக்காது, கண்டும் காணாததுபோல் இருந்தால், அவனும் அதைப் பெரிதுபண்ண மாட்டான். `விழுந்தால் எழுந்திருக்க வேண்டும்!’ என்று புரிந்துகொள்வான்.

கதை

டெய்ஸி எங்கு போனாலும் அவளைக் கண்காணிக்க ஒரு காவலரை அமர்த்தியிருந்தார் அவளுடைய தந்தை.

அவருக்கு உத்தியோக ரீதியில் எதிரிகள் அதிகம். அவர்களால் மகளுக்குக் கெடுதல் நிகழ்ந்துவிடுமோ என்று பயத்தின் விளைவு அது.

தன்னையொத்த தோழிகள் அனுபவித்த சுதந்திரம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று நொந்துபோனாள் அப்பெண். தந்தைமீது தாளாத கோபம் வந்தது. ஆனால், உண்மை நிலவரமும் புரிந்திருந்ததால், அவரை எதிர்க்க முடியவில்லை.

அவளுடைய நல்ல காலமோ, கெட்ட காலமோ, தந்தை உத்தியோக நிமித்தம் குடும்பத்துடன் வேறு ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. படித்துகொண்டிருந்த இருபது வயது மகள் தனியாக விடப்பட்டாள்.

இம்மாதிரி வளர்ந்த இளம்பெண்களுக்கு நல்லவர், கெட்டவர் என்ற வித்தியாசம் புரியாது.

உலகம் புரியாது வளர்க்கப்பட்டவர்களுடன் நண்பரைப்போல் பழகி, பணத்தையோ, வேறு எதையெல்லாமோ பிடுங்க எத்தனைபேர் காத்திருப்பர்!

பொறுப்பான பெற்றோர் என்ன செய்திருக்க வேண்டும்?

அந்தந்த வயதுக்குத் தேவையான அறிவுரையைக் கூறி, அப்படியே தவறிழைத்தாலும் அதை எப்படி நிவர்த்தி செய்வது என்று சொல்லிக்கொடுத்திருக்கலாம்.

வீட்டைவிட்டு ஓடிப்போன பெண்

ஸிதி (SITI) என்ற பெண் என்னிடம் சொன்னது இது. பாட்டியிடம் வளர்ந்தவள் அவள்.

வெளிநாட்டில் வேலை பார்க்கச் சென்ற அவளுடைய தாய் தவறான முறையில் பணம் சம்பாதிப்பதை அறிந்த பாட்டி, பேத்தியும் அப்படிக் கெட்டுவிடக்கூடாது என்று மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டாள்.

பள்ளிக்கூடம் சென்று திரும்பியவுடன் ஸிதி அவளுடைய அறையில் வைத்துப் பூட்டப்பட்டாள்.

“பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. அதனால், என்னுடன் படித்த பையனை எங்கள் வீட்டுக்கு வரச்சொல்வேன்,” என்றாள், களங்கமில்லாது.

“அப்போது பாட்டி உன்னை வெளியில் விடுவார்களா?” என்று கேட்டேன்.

“இல்லை. அவன் என் குளியலறையிலிருந்த ஓட்டைப் பிரித்துக் கீழே இறங்குவான்!”

“என்ன செய்வீர்கள்?”

“சும்மா பேசிக்கொண்டிருப்போம். அவ்வளவுதான்!”

பேச்சுச் சப்தம் பாட்டிக்குக் கேட்டிருக்காதா!

`வயதான காலத்தில் இந்தப் பெண்ணை என்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லை,” என்று காவல்துறையினரிடம் முறையிட்டிருக்கிறாள்.

அவ்வளவுதான். வீட்டைவிட்டு `ஓடிப்போன’ இளம்பெண்களுக்காக இயங்கும் இல்லத்தில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டாள் ஸிதி. அங்கு பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகள் இருந்தார்கள்.

நான் மேலும் துருவியபோது, நண்பனுடன் உடலுறவெல்லாம் கிடையாது என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

`பெரிதாக எந்த தவறும் செய்யாது, சிறைபோல் ஓரிடத்தில் அடைபட்டுக்கிடக்கிறாள், பாவம்!’ என்ற வருத்தமும் எழுந்தது. இவள் எங்கே ஓடிப்போனாள்!

பிற பெண்கள் அவளைப்போல் இருக்கவில்லை. கண்டிப்பாரின்றி, அல்லது தாளமுடியாத கண்டிப்பால், அவர்கள் தம் `சுதந்திர’ப்போக்கைப் பெருமையுடன் விவரிக்க, இவளும் தவறான பாதையில் நடக்கக்கூடும்.

எல்லா ஆண்களுக்கும் ஒரே ஒரு எண்ணம்தான்

`எல்லா ஆண்களும் கெட்டவர்கள். அவர்கள் மனதில் ஒரே ஒரு எண்ணம்தான் எப்போதும். யாரையும் நம்பாதே!’ என்று போதித்து வளர்க்கப்படும் பெண்ணுக்கு எந்த வயதிலும் பயம்தான்.

இதைப்பற்றி அறிய, நான் நம்பகமான என் நண்பரிடம் கேட்டேன்.

‘Most men. Not all!” என்றார். (அனேக ஆண்கள் அப்படித்தான். எல்லாரும் கிடையாது).

பையன்களுக்கும் இதுபோன்ற போதனைகள் உண்டு.

கதை

பதினெட்டு வயதில்,  முதன்முதலாகப் பெண்களுடன் சேர்ந்து கல்வி பயிலும் அனுபவம் அந்தப் பையன்களுக்குப் புதிது.

“எங்களுக்குப் பதினாறு வயதானபோது, பள்ளி ஆசிரியைகள் எங்களை என்னமோ `காமாந்தகாரர்கள்’ என்பதுபோல் பயத்துடன் பார்த்தார்கள். எங்களுக்கு ஒரே ஆத்திரம்,” என்று என் மகளுடன் படித்த மாணவர்கள் கூறினார்கள்.

`பெண்களுடன் எப்படிப் பழகுவது?’ என்று குழம்பியிருந்த அவர்களுக்கு உறவினர் பையன்களுடன் பழகியிருந்த தோழிகள் தைரியம் அளித்தனர்.

அவ்வப்போது, அவர்களைப்பற்றி அறிந்திருந்த நான், “தீபாவளிக்கு உன் நண்பர்களை அழை,” என்று நான் மகளிடம் கூற, “அவர்களெல்லாம் பெண்கள் வீட்டுக்கு வரமாட்டார்களே!” என்றாள், சிரித்தபடி.

“அம்மா அழைக்கச் சொன்னாள் என்று சொல்,” என்று சொல்லிக்கொடுத்தேன்.

நான் பேயா?

நாலைந்து பையன்கள் வந்தார்கள். என்னைப் பார்த்ததும் ஒரே நடுக்கம். வரவேற்றுவிட்டு, வேகமாக உள்ளே போய்விட்டேன்.

ஒரு பையன், “நான் ஒரு பொண்ணோட வீட்டிலே இருக்கேன்னு தெரிஞ்சா, எங்க பாட்டி உயிரை விட்டுடுவாங்க.” என்று சொன்னது காதில் கேட்டது.

“ஒங்கம்மாவுக்கு நாங்க வர்றது தெரியுமா?” என்றது இன்னொரு குரல்.

அவர்கள் சென்றபின், “வீட்டுக்கு யார் வந்தாலும், உட்கார்ந்து பேசுவியே?” என்று மகள் சந்தேகம் கேட்டாள்.

“அந்த பையன்களின் முகத்தைப் பார்த்தாயா? என்னைப் பார்த்ததும், பேயைக் கண்டதுபோல் நடுங்கிவிட்டார்கள்!” என்று சிரித்தேன்.

`பாதுகாப்பு’ என்ற பெயரில் அநாவசியமான பயங்களைப் புகுத்தி வளர்ப்பதும் தவறுதான்.

எப்போது நின்று பேசலாம், எப்போது ஓடவேண்டும் என்று அந்தந்த வயதில் சொல்லிக்கொடுக்காவிட்டால், மிரட்சிதான் எழும்.

பெரியவர்களாக ஆனதும், பெண்களைக் கேலி செய்து, தம் பலத்தை, அதிகாரமாக நிலைநாட்டிக்கொள்கிறவர்கள் முன்பு தாம் அடைந்த பயத்தைப் பிறர்பால் செலுத்த முனைகிறவர்களோ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.