சிவராமன் (சிறுகதை)

பாஸ்கர் சேஷாத்ரி
சில விஷயங்களைப் பேச வேண்டும் என்றான்.
எங்கே போலாம் எனக் கேட்டேன்
நாளைக்கு மீட் பண்ணலாம் என்றான்
வேணாம். நான் முட்டி வலி டாக்டரைப் பார்க்கணும். இன்னிக்கே வேணும்னா பார்க்கலாம் என்றேன் .
கொஞ்சம் யோசித்து, சரி ஆறு மணிக்கு பழைய வுட்லண்ட்ஸ் வா என்றான்.
முன்னை விட ரொம்ப மெலிந்து இருந்தான் அவன் தோள் பையைச் சரி செய்துகொண்டே நடந்து வந்தான்.
என்னாச்சு உன் ஸ்கூட்டர்.
கை காட்டி காண்பித்தான்.
சீக்கிரம் விக்கணும். பழையபடி ஒரு டிவிஎஸ் பிப்டி செகண்ட் ஹாண்ட்ல வாங்கணும்.
ஏன்டா அவனவன் பெரிய வண்டி வாங்குவான் . நீ என்ன இப்படி சொல்ற?
என் நிலைக்கு எல்லாமே சொகுசு தான்.
புரியல என்றேன்
என்னாச்சு என்றேன்.
நல்ல வேலை, உனக்கென்ன?
இப்ப எல்லாம் போச்சு
என்ன?
தப்பு பண்ணிட்டேன்டா . ஏதோ ஆசைப்பட்டு லஞ்சம் வாங்கிட்டு இன்னிக்கு கேஸ் நடக்குது விஜிலன்ஸ்ல மாட்டிண்டேன். இப்ப சர்விஸ்ல இல்லை. சாலரி இல்லை. இன்னும் ஒரு வருஷம் தான் சர்விஸ்.. சபலம் பெரிய கொடுமை .
பணம் எதனா வேண்டுமா.
ஆமாண்டா.
எங்கிட்ட ரெண்டாயிரம் இருக்கு, வச்சுக்க.
எனக்கு இரண்டு லட்சம் வேண்டும்.
டேய், என்னடா கேக்குற? கேஸ் நடத்தவா?
இல்லை நான்தான் பணம் வாங்கியது உண்மைன்னு சொல்லிட்டேன்.
இந்த பணம் நான் சீட்டு சேர்த்த பணம்.
வந்தவங்க எல்லாத்தையும் அள்ளிண்டு போயிட்டாங்க…
சீட்டு போட்டவங்க பிரஷர் தாங்க முடியல.
சாரி என்றேன்.
சரி, கிளம்பறேன் என்றான்.
என்னடா அவ்வளவு அவசரம்.
இல்லடா உடனே பணம் புரட்டணும்
நான் கிளம்பறேன்.
நிறைய பேசணும்னு சொன்ன?
இதைத் தாண்டி வேறேதும் முக்கியம் இல்லை இப்ப.
அப்ப ரெண்டாயிரம்.
வேணாண்டா.
என்னடா இவ்வளவு நேர்மையா இருக்கற நீ எப்படிறா கைநீட்டின?
பதில் சொல்லவில்லை . ஒரு கணம் பலவீனம் இப்ப அனுபவிக்கிறேன்.
எவ்வளவுடா வாங்கின.
மூனு லட்சம்.
தோளைத் தட்டி நான் கிளம்பறேன் என்றான்
அப்ப கேஸ்.
என்னைக் கைது செய்யறதுக்கு ரெண்டு வாரம் தான் இருக்கு. நேரம் இல்லை. பை என்றான்.
எனக்குப் பேச்சு வரவில்லை.
சிவா என்றேன். குரல் எழும்பவில்லை. அவன் கிளம்பிவிட்டான்.
ஒரு காபி குடிக்கலாம் என்றேன்.
அடுத்த வாட்டி என்றான்.
காலை ஒரு சேனலில், தேனாம்பேட்டை அருகே குடிநீர் லாரி மோதி நேற்று இரவு எட்டு மணியளவில் சிவராம் என்ற அரசு ஊழியர் மரணம் என்று செய்தி வந்தது.
முதலில் வந்த சிந்தனை –
நல்ல வேளை பணம் ஏதும் கொடுக்கல.
பின்னால் வந்த இன்னொன்று.
ஒரு வேளை நாளை அவனைச் சந்தித்து இருக்கலாமோ?