திருச்சி புலவர்  இராமமூர்த்தி

 7. விறன்மிண்ட நாயனார் புராணம்

பாடல் 1

விரைசெய்   நறும்பூந்  தொடை  யிதழி வேணி யார்தங் கழல்பரசிப்    
பரசு    பெறுமா    தவமுனிவன்     பரசி     ராமன்     பெறுநாடு
திரைசெய் கடலின் பெருவளனுந் திருந்து நிலனின் செழுவளனும்
வரையின் வளனு முடன்பெருகி மல்கு நாடு மலைநாடு.

பொருள் 

வாசனையுடைய கொன்றை  மாலை தரித்த சடையினையுடைய சிவ பெருமானது திருவடிகளைப் பூசித்துப் பெருந்தவஞ் செய்து, பரசு பெற்ற காரணத்தால் பரசிராமன் எனப் பேர்பெற்ற முனிவன் பெற்ற நாடு;  அலைகளை யுடைய கடலிலே படும் பெருவளங்களும், திருந்து நிலங்களின் செழித்த வளங்களும், மலைகளினுடைய இனிய வளங்களும் ஒரு சேரப் பெருகி மிகுகின்ற நாடாகிய மலை நாடாகும். நெய்தல் ,மருதம், குறிஞ்சி ஆகிய மூவகை நிலவளமும் உடைய  நாடு!

விளக்கம்

விரைசெய் – சுற்றிலும் வாசங் கமழும்படி செய்கின்ற  இதனை நறும் விரை செய் இதழி என மாற்றிக் கூட்டுக. நறும் விரை – மிக்க மணம் – நன்மணம், நறும்-அழகிய என்றுரைப்பாரும், பிரணவம் போன்றிருத்தலால் மந்திரமணம் என்பாருமுண்டு. தொடை இதழி – தொடுத்ததுபோலச் சரமாகப் பூக்குங் கொன்றை. இதழித்தொடை – என மாற்றி மாலையாகத் தொடுத்த கொன்றை என்றுரைப்பினுமாம். இதழி வேணியார் – சிவபெருமான். வேணி – சடை. கொன்றையும் வேணியும் சிவபெருமானுக்கே சிறப்பாயுரிய அடையாளங்கள்.

கழல்பரசிப் பரசுபெறும் மாதவ முனிவன் பரசிராமன் – பரசி – துதித்து – முனிவனது பேர்க்காரணமும், சரிதமும், அவன் பெருமையுங் குறித்தது.பரசு – மழுவாயுதம். பரசிராமன் – பரசும் இராமன் எனவும், பரசுபெற்ற இராமன் எனவும் இருவழியும் சரிதக்குறிப்புப் பெற நின்ற இப்பெயரின் அழகிய ஆட்சியைக் காண்க. தசரதராமனி னின்றும் வேறு பிரித்துணர இம்முனிவனைப் பரசி ராமன் என அடைகொடுத்தே வழங்குவர்.

இவன் பரசுபெற்ற சரிதம்

இம்முனிவன், தனது தந்தையாகிய சமதக்கினி முனிவனைக் கார்த்தவீரியன் கொன்றதற்காகப் பழிவாங்கும் பொருட்டு அவனையும் அவன் மரபினரையும் கொல்வேன் என்று சூள்கொண்டு, சிவபிரானைக் குறித்து மாதவஞ் செய்தான்; சிவனருளினாலே பரசாயுதம் பெற்றான்; அதன் துணையாலே, தான் எண்ணியபடியே அவனைக் கொன்று பழி வாங்கிய மன்னர்களின் இரத்தத்தைக் கொண்டு பிதிர்தருப்பணஞ் செய்து தன் மூதாதைகளை மகிழ்வித்தான் என்பது. இதன் விரிவு காஞ்சிப் புராணம் பரசிரா மீசப்படலத்திற்  காண்க.

பெறு நாடு – இம்முனிவன் வருணனிடமிருந்து பெற்ற நாடு மலை நாடு. இதுவும் ஒரு சரிதங்குறித்தது. புராணங்களுட் காண்க. முன்கண்டவாறு பலரையுங் கொன்றதனால் முனிவனைப் பழிசூழ்ந்தது. அது நீங்குமாறு முனிவன் ஒரு நாடு கண்டு அதனை வேதியர்க்குத் தர எண்ணி மழுவைத் தென்றிசைக் கடலில் வீசினான். வீசவே வருணன் விலக இந்நாடு உண்டாயிற்று; அதனையே மறையவர்க்குத் தந்தனன் என்பது வரலாறு. முனிவன், அரசர்களைக் கொன்று தானே நாடாண்டிருந்து அந்நாடுகளைத் தானம்செய்து, பின் இந்நாடு கண்டு, அதனில் ஆட்சி புரிந்து வேதியர்க்கீந்தனன் என்பதும் வரலாறு.

இவ்வரலாறுகளைப் புராணக்  கதை என்று இலேசாகக் கூறி ஒதுக்கு வாருமுண்டு. இராமாயணமும் பரசிராமனது சரிதமும் பெருமையும் கூறும்.

“ஊழிக் கடை முடிவிற்றனி யுமைகேள்வனை யொப்ப“ என்பது முதலாகப் பலவாற்றானும் இராமாயணத்தில் பாராட்டப்பெற்றது காண்க.

இம்மலை நாடு இன்றைக்கும் பரசிராம க்ஷேத்திரம் என வழங்கி வருவதும், அது (மழைவளம்), நீர்வளம், நில வளம், குடிவளம், மக்கள் ஒழுக்கம் முதலிய பலவாற்றானுஞ், சூழ உள்ள ஏனை நாடுகளினின்று வேறாகத் தனித்தன்மை பெற்று விளங்குவதும், அதனில் வேதியரும், அவரது வைதிக ஒழுக்கமும் நின்று நிலவித் தெளிவாக விளங்குவதும், பிறவும் ஊன்றிக் காண்போர் இச்சரித உண்மையை  உணர்ந்து கொள்வர்.

பரசுபெறு மாதவ முனிவன் பரசிராமன் பெறு நாடு வேணியார் கழல் பரசிப் பரசு பெற்றான் அப்பரசு கொண்டு நாடு பெற்றான். ஆதலின் இன்ன வகையால் நாடு பெற்றான் எனக் குறியாது பெறுநாடு என வாளா கூறினார். அதனாற் பெறும் என வருவிக்க.

திரை செய்கடலின் பெருவளன்- கடல்படு பொருள்களாகிய முத்து முதலிய மணிகளும், உப்பு முதலிய விளை பொருள்களும், மீன் முதலிய உணவுப்பண்டங்களும் பிறவுமாம். இவை மனிதர் விளைவிக்காது தாமாய்க் கடலிலும், கடற் புறத்தும் விளைந்து பெருந் தொகுதியாகப் பெற நிற்பது பற்றிப் பெருவளன் என்றார். திரை செய்கடல் – அலைகளுடைமை கடலுக்குச் சிறப்பிலக்கணமாம்.

“திரைகடலோடியுந் திரவியந்தேடு“ என்றது நீதி நூல். “படுதிரைப்பரவை மீது படர் கலங் கொண்டு போகி“ என்றது காரைக்காலம்மையார் புராணம்.

திருந்து நிலவின் செழுவளன் – இவை மருதநிலத்து விளைபொருள்களாகிய நெல் – வாழை – மா – பலா – தென்னை – முதலிய பெரும்பலன்களைக் குறித்தன. நிலச் செழிப்புடையதும், இப்பலன்கள் மிகுதியும் செழிப்புடன் பெருக உண்டாவதும் மலைநாடு என்பது இன்றைக்கும் தேற்றமாம். வானம் பிறங்கக் காலந் தவறாது பெய்ய, அதுகொண்டே விளைதரும் நாடு இந்நாடேயாம் எனின் அதுவுஞ்சரியே!, இங்கு மலைச்சரிவுகளிலும் நன்செய்விளைவு காண்பது வேறெங்கும் காணாத காட்சியாம். மனிதரால் வயல், ஏரி, வாய்க்கால், அணை முதலிய பலவகையானும் சாதனம்பெற்று அது காரணமாகப் பெறும் விளைவு போலல்லாது, இங்கு நிலமும் மழையும் தாமாகவே திருந்தப் பொருந்திச் செழித்த வளந்தருவன என்பார் திருந்து என்றும், செழு என்றும் கூறினார்.

வரைஇன் வளம் – வரை – மலை. இன் – இனிய, மலைபடுபொருள்களாகிய அகில், சந்தனம், தேன், மணி முதலியன. இவை, மலைகளில் இயல்பின் உண்டாகி இனிமைதருவன ஆதலின் அடைமொழியில்லாது வாளா வரை என்றார். அதனோடு வரைக்குச் சாரியையுமாகிய வளத்திற்கு அடைமொழியுமாகிய இன் என்ற சொல் அமைத்த அழகு காண்க. நாடு, மலைநாடு, ஆதலின் அந்த முதன்மை கருதி வரைக்கு அடையில்லாது கூறினார் எனினுமாம்.

உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு – மலைநாடு எனப் பேர் பெறுதலின் குறிஞ்சித் திணையின் பண்பு ஒன்றே இங்குப்பெருகும் எனவும், நானிலப் பகுதியில் ஏனைத் திணைகளின் பண்பு இன்றாம் எனவும் ஐயம் வருமாதலின், அதனை எதிர்நோக்கி இங்கு ஏனைத் திணைவளமும் பெருகி மிகும் என்றார். மலைகள் மிகுதலால், மிகுதிபற்றி மலைநாடு எனப் பேர் பெறினும், மருதம், நெய்தல் என்ற திணைப் பகுதி வளங்களுமுடைய தென்றார். வரையும் திருந்து நிலனும் பொருந்தக் கூறியதனால் இடைப்பட்ட முல்லையும் உடன்கொள்ளப் பெறுமென்பர்.

திரைசெய்கடல் எனவும், வரையின் எனவும் கூறிய பகுதிகள்போலாது, திருந்து நிலனின் செழு – வளன் என்ற அடைச்சிறப்பால் இவற்றுள்ளே நிலத்து வளமே மிகுந்தது என்ற குறிப்புமாம். இது விரிபொழில்சூழ் என்ற முதனூற்பொருளையும்,

“மனைக்கே புகநீடு தென்றல் வீசும் பொழில்“

என்ற வகைநூற் கருத்தையும் விரித்ததாம். பின்னர்க் கூறும் நகரச் சிறப்பிற்குத் தோற்றுவாய் செய்ததுமாம். கடற்கரையுடையதாய், மலைகள் விரவிய செழிய நிலப்பரப்புடைய நாடு என அதன் அமைப்பும் குறித்தபடி காண்க. மனைகள்தோறும் பொழிலிருத்தலும் இந்நாட்டுக் காட்சியாம்.

பெருகி மல்கும் – ஒவ்வொன்றும் தனித்தனிப் பெருகியும் ஒன்று சேர்ந்து மிக மல்கியும் உள்ளன. கழறிற்றறிவார் நாயனாரும் ஆளுடைய நம்பிகளும் இந்நாட்டினின்றபடி திருக்கயிலைக் கெழுந்தருளினார்களாதலானும், அவர்கள் அங்கெழுந்தருளியதை உபமன்னிய முனிவர் கண்டு முனிவர்களுக்குச் சொல்லிய வரலாற்றில் இப்புராணம் தொடங்குவ தாதலானும, இந்நாட்டைப் பற்றி முதன் முறையாகக் கூற வந்த இந்த இடத்துக் கேற்பச் சுருக்கியும் விரித்தும் நாட்டு வளங்கூறியபடி கண்டுகொள்க. மலை நாட்டுச் சிறப்பின் விரிவு கழறிற்றறிவார் நாயனார் புராணம். வெள்ளானைச் சருக்கம் முதலிய இடங்களிற் காண்க. இவ்வளங்கள் தனித்தனிப் பெருகும் அவ்வவ்விடங்களில் வைத்து இப்பாட்டாற் கூறிய ஆசிரியர், அவை உடன் பெருகி மல்கும் வகையை நகரச் சிறப்பு முடன்கொண்டு வைத்து வரும்பாட்டாற் கூறிய திறமும் காண்க.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *