உழைப்பால் உயர்ந்த சாதனையாளர் – புக்கர் டீ வாஷிங்டன்
-மேகலா இராமமூர்த்தி
சிறந்த கல்வியாளராகவும், சீர்திருத்தவாதியாகவும், நாவன்மை மிக்க சொற்பொழிவாளராகவும், அனைத்திற்கும் மேலாகக் கருப்பின மக்களுக்காக அமெரிக்காவிலுள்ள அலபாமாவில் டஸ்கீகீ பல்கலைக்கழகத்தை (Tuskegee University, Alabama) நிறுவிய அறிஞராகவும் விளங்குபவர் புக்கர் டீ வாஷிங்டன் (Booker T. Washington) எனும் மாமனிதர்.
1856இல், ஆப்பிரிக்கக் கருப்பினத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவரின் மகனாக வெர்ஜீனியாவில் பிறந்தார் புக்கர். அக்காலக்கட்டம், ஆப்பிரிக்கக் கருப்பினத்தவர் அமெரிக்காவில் அடிமைகளாய் அல்லலுற்ற காலக்கட்டமாகும். ஒரு வசதியான வெள்ளையர் குடும்பத்துக்குச் சமையல்வேலைகள் செய்து பிழைத்துவந்தார் புக்கரின் தாயார். புக்கரோடு பிறந்தவர்கள் இருவர். அவ்விருவரோடும் தாயோடும் பதினாறு அடி நீளமும் பதினான்கு அடி அகலமும் கொண்ட சிறிய அறையில் வசித்துவந்தார் புக்கர்.
பிள்ளைப் பருவத்திலேயே கடுமையான அடிமை வேலைகள் பலவற்றைச் செய்யவேண்டிய கட்டாயம் புக்கருக்கு ஏற்பட்டது. உண்பதற்கே நல்ல உணவில்லாமல் பலவேளைகளில் பசியால் வாடியது அவரது குடும்பம். முரட்டுச் சணலால் ஆன சட்டையையே அவர் அணிந்திருந்தார்; அவர் மட்டுமன்று அக்காலத்தில் அடிமைகள் அனைவருமே சணலால் ஆன சட்டைகளையே அணிந்திருந்தனர். அந்தச் சட்டை உடலில் உராயும்போது ஏற்படும் துன்பம் நூறு குண்டூசிகள் உடலில் குத்துவதுபோன்ற வேதனையை அளிக்கவல்லது.
இத்துன்பங்கள் எல்லாவற்றையும் போக்கிய நன்னாளும் வந்தது. ஆம்! 1863இல் அடிமைகள் அனைவரும் விடுதலையடைந்தார்கள். புக்கர் இருந்த வெர்ஜீனியா தோட்டத்து அடிமைகளும் தளையினின்று விடுபட்டார்கள். அந்த மகிழ்ச்சியில்,
“ஆடுவோமே பள்ளு பாடுவோமே; ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட்டோமென்று” என அவர்கள் மகிழ்ச்சியில் ஆடினார்கள்; பாடினார்கள். ஆனாலும் அந்த மகிழ்ச்சி சற்று நேரத்திலேயே வடியத் தொடங்கியது. காரணம், தங்களையும், தங்கள் குழந்தை குட்டிகளையும் இனி எப்படிக் காப்பது என்ற கவலை அவர்களைச் சூழ்ந்ததேயாகும்!
அவ்வேளையில் புக்கரின் சிறிய தந்தையார், புக்கர் குடும்பத்தினரைத் தாம் வசித்துவந்த மேற்கு வெர்ஜினீயாவிலிருந்த, மால்டன் (Malden) என்ற ஊருக்கு அழைத்தார். அங்கே இவர்கள் சென்றதும், தாம் வேலைபார்த்துவந்த உப்பு உலைக்களத்தில் (salt furnace) புக்கரையும் அவருடைய சகோதரர்களையும் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.
புக்கருக்கு இளம் பருவந்தொட்டே படிப்பதில் பெருவிருப்பம் உண்டு. தாயின் உதவியோடு முதற் பாடப்புத்தகம் ஒன்றைப் பெற்றார் அவர். அதனைத் தாமே எழுத்துக்கூட்டிப் படிக்கவும் பழகிக்கொண்டார்.
அப்போது கருப்பினத்தார்க்கென்று கல்விநிலையம் ஒன்று அமைக்கவேண்டும் என்ற எண்ணம் ஊராரிடையே உண்டாயிற்று. தற்செயலாக ஒஹையோவிலிருந்து (Ohio) வந்திருந்த கல்விகற்ற ஒருவரை ஆசிரியராகக் கொண்டு கல்விநிலையம் தொடங்கப்பட்டது.
ஊரில் பலரும் கல்விகற்றபோதினும் புக்கரின் சிறிய தந்தையார் புக்கரைக் கல்விக்கூடத்துக்கு அனுப்ப மறுத்துவிட்டார். புக்கர் பள்ளிக்குச்சென்றுவிட்டால் உப்பு உலைக்களத்திலிருந்து அவர் பெற்றுவரும் கூலி நின்றுவிடும் என்ற எண்ணமே அதற்குக் காரணம். ஆயினும் உலைக்கள வேலையைக் காலை ஒன்பது மணிவரை பார்ப்பது பிறகு பள்ளிக்குச் செல்வது என்றோர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு மிகுந்த சிரமத்துக்கிடையே உலைக்களப் பணி, கல்விகற்கும் பணி இரண்டையும் சமாளித்துவந்தார் புக்கர்.
பள்ளிக்குச் சென்றபோது அவருக்கு வேறொரு சிக்கல் ஏற்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் இரண்டு பெயர் இருக்கத் தமக்கு மட்டும் புக்கர் என்ற ஒரே ஒரு பெயர் இருப்பதைக் கருதிச் சங்கடப்பட்ட அவர், பதிவேட்டில் எழுதப்படும் சமயத்தில் தம்முடைய பெயரைப் ’புக்கர் டீ வாஷிங்டன்’ என்று சேர்த்துச் சொல்லிவிட்டார்; அந்தப் பெயரே பிறகு அவருக்கு நிலைத்துவிட்டது.
உப்பு உலைக்களத்தில் வேலைபார்த்துவந்த புக்கரை, நிலக்கரிச் சுரங்கத்தில் வேலைபார்க்கப் பணித்தார்கள். அச்சுரங்க வேலை மிகவும் கடினமானதும் உயிருக்கு ஆபத்தானதும் கூட. அவ்வேலையையும் சிலகாலம் அவர் செய்துவரலானார். புக்கரைப் போலவே கருப்பினச் சிறுவர்கள் பலர் அந்தச் சுரங்கவேலைகளைச் செய்துவந்தார்கள். அவர்களின் எதிர்கால நல்வாழ்வே இதனால் பாழாகிவருதைக் கண்டார் புக்கர்.
தனது குறிக்கோளுக்கு எவ்வித முட்டுக்கட்டையும் இன்றி முன்னேற அனுமதிக்கப்படுகின்றான் ஒரு வெள்ளையினச் சிறுவன். ஆனால் அம்முட்டுக்கட்டைகள் ஆப்பிரிக்கக் கருப்பினத்தவர்க்கு இருப்பதனால் அவ்வினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் வாழ்வில் நினைத்த வகையில் முன்னேற முடியவில்லை என்றெண்ணி வருந்திய புக்கர், எதிர்காலத்தில் தாம் செயற்கரிய செயல்கள் செய்து நற்பெயர் பெறுவதோடு தம் இனத்தாரையும் பெருமிதமும் பேரூக்கமும் அடையச் செய்யவேண்டும் எனும் உறுதிபூண்டார்.
சுரங்கத்தில் அவர் வேலைபார்த்துவரும் பொழுது ஒருநாள் ஒரு செய்தியைக் கேள்வியுற்றார். ஹேம்ப்டன் (Hampton) என்ற ஊரில் கருப்பினத்தவருக்காக ஒரு பள்ளி அமைக்கப்படுகிறதென்றும் அந்தப் பள்ளியில் சேரும் ஏழை மாணாக்கர் ஏதேனும் ஒரு வேலைசெய்து தம் உணவுக்கு வேண்டிய பணத்தை முழுவதுமோ பாதியோ பெற்றுவிடமுடியும் என்றும், அங்கேயே மாணாக்கர் ஏதேனும் தொழிற்கல்வியையும் பெறக்கூடும் என்றும் அறிந்ததிலிருந்து அவர் சிந்தை அக்கல்விக்கூடத்துக்குச் சென்றுவிட்டது. 1872ஆம் ஆண்டு புக்கர் ஹேம்ப்டனுக்குப் புறப்பட்டார்.
அங்கேசென்று சேர்வதற்குப் போதிய பணமில்லாத நிலையில் தம் கையிலிருந்த சொற்பப் பணத்தில் சிறிது தூரம் குதிரை வண்டியிலும், சிறிது தூரம் நடந்தும், சிறிது தூரத்தைப் பிறரது உதவியாலும் கடந்து ஒருவழியாக ஹேம்ப்டன் வந்துசேர்ந்தார் புக்கர். தம்மைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளுமாறு தலைமையாசிரியர் முன்பு சென்று நின்றார் அவர். புக்கரை ஏற இறங்கப் பார்த்த அந்த அம்மையார், அவரைச் சேர்த்துக்கொள்கிறேன் என்றோ சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்றோ எதுவும் சொல்லாமல் காலந்தாழ்த்தி வந்தார்.
பிறகு அவரைச் சேர்த்துக்கொள்வதற்கு ஒரு தேர்வு வைக்கப்பட்டது. புக்கரை எழுதப் படிக்கச் சொல்லியோ, எண்ணச் சொல்லியோ அத்தேர்வில் கேட்கப்படவில்லை. தலைமையாசிரியராக இருந்த அம்மையார் ஒரு துடைப்பத்தைக் கொடுத்துப் புக்கரைப் பெருக்கச் சொன்னார். தமக்குத் தெரிந்த வேலையைப் பணித்தமைக்காகப் பேருவகை எய்தினார் புக்கர். அறையின் அனைத்துப் பகுதிகளையும் அருமையாகச் சுத்தப்படுத்தினார். வந்துபார்த்த அம்மையார் அறையின் தூய்மையைக் கண்டு மகிழ்ந்து நீ பள்ளிக்கூடத்தில் சேரலாம் என்று புக்கருக்கு அனுமதி கொடுத்துவிட்டார். புக்கர் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் ஏது?
அங்கே பயிலும் காலத்தில் ஆம்ஸ்ட்ராங் (Armstrong) எனும் நல்லுள்ளம் படைத்த ஆசிரியரோடு பழகும் வாய்ப்புக் கிட்டியது புக்கருக்கு. சொற்பொழிவாற்றும் கலையிலும் புக்கர் பயிற்றுவிக்கப்பட்டார். ஹேம்ப்டனில் இருந்த சொற்போர்ச் சங்கத்தில் சனிக்கிழமைதோறும் ஏதேனும் ஒரு பொருள்பற்றி விவாதம் நடைபெறும். புக்கரும் அதில் தவறாது கலந்துகொள்வார்.
ஹேம்ப்டன் கல்விக்கழகத்தில் அவர் பயின்றுகொண்டிருந்த காலத்திலேயே அவருடைய அருமைத் தாயார் இறந்துபோனார். அது தாளமுடியாத துக்கத்தை அவருக்கு அளித்தது.
1875 ஜூன் மாதத்தில் புக்கர் டீ வாஷிங்டனின் ஹேம்ப்டன் கல்வி முற்றுப்பெற்றது. சிறப்பாகத் தேறிப் பட்டம்பெற்றார் அவர். அதன்பிறகுச் சிற்றுண்டிச் சாலை ஒன்றில் பணியாளராகச் சேர்ந்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு தம் ஊராகிய மால்டனுக்குச் சென்ற புக்கர், அங்கிருந்த கருப்பின மக்களுக்கான பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பகல்நேரப் பள்ளிக்கூடமேயன்றி இரவுப்பள்ளிக்கூடம் ஒன்றும் அவரது முயற்சியால் நிறுவப்பட்டது. அப்பள்ளியின் வாயிலாகப் மாணவர்கள் பலர் கல்விபெற்றனர்.
1878இல் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள வேலேண்ட் செமினரியில் (Wayland Seminary) 8 மாதங்கள் கல்விபயின்று திரும்பினார் புக்கர்.
அவ்வேளையில் புக்கருக்கு ஆம்ஸ்ட்ராங்க் என்ற தம்முடைய ஆசானிடமிருந்து உவகையளிக்கும் கடிதமொன்று வந்துசேர்ந்தது. ஹேம்ப்டன் கல்விக்கழகம் வந்து அவ்வாண்டின் பட்டதாரிகளுக்குப் புக்கர் நல்லுரை வழங்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆறு ஆண்டுகளுக்குமுன் துடைப்பத் தேர்வில் தேர்ச்சியடைந்தபின் அவரைச் சேர்த்துக்கொண்ட அதே கல்லூரி இப்போது அவரைப் பட்டமளிப்பு விழாவில் மாணாக்கர்களுக்குச் சிறப்புரையாற்ற அழைத்தமை பெருமைக்குரிய செயலே அல்லவா? அதற்கிசைந்த புக்கர் அங்கே சென்று ’வெற்றிபெறுகின்ற ஆற்றல்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார்.
அதைத்தொடர்ந்து ஹேம்ப்டன் கல்லூரியிலேயே அவர் ஆசிரியராகப் பணிபுரியவேண்டும் என்றும் ஆம்ஸ்ட்ராங்க் வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தட்ட இயலாது ஏற்றுக்கொண்ட புக்கர், தொடக்கத்தில் அங்கே 75 சிவப்பிந்தியர்களுக்குப் பாடம் நடத்தினார். சிறிது காலத்திலேயே இரவுநேரக் கல்விக்கூடம் ஒன்றையும் ஆம்ஸ்ட்ராங் ஆரம்பித்து அதிலும் பாடம் கற்பிக்க புக்கரைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறே புக்கரும் பாடம் கற்பித்து வரலானார்.
இப்பணிகளை புக்கர் மேற்கொண்டிருந்த காலத்தில் ஆம்ஸ்ட்ராங் அவரைப் பிறிதொரு பணியை ஒப்புக்கொள்ள இயலுமா என்று கேட்டார். அலபாமா மாகாணத்தில் கருப்பினத்தவருக்குக் கல்விக்கூடம் ஒன்றை ஏற்படுத்த அரசாங்கத்தார் ஆண்டொன்றுக்கு இரண்டாயிரம் டாலர்கள் அளிக்க ஒப்புக்கொண்டிருந்தார்கள். அவ்வூரார் சிலர் ஆம்ஸ்ட்ராங்குக்குக் கடிதம் எழுதித் தமக்குக் கல்வி கற்பிக்க ஒரு வெள்ளையரைக் குறிப்பிடுமாறு கேட்டிருந்தனர். கருப்பினத்தைச் சேர்ந்த ஆசிரியர் கிடைப்பது அரிது எனும் எண்ணத்திலேயே அவர்கள் அவ்வாறு கேட்டிருந்தனர். ஆம்ஸ்ட்ராங்க் புக்கரது பெருமையையும் திறனையும் தெரிவித்து அவரை அழைத்துக்கொள்ளச் சம்மதமா என்று அவர்களைக் கேட்டபோது அம்மக்கள் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டனர். இதனை அறிந்த புக்கரும் அலபாமாவிலுள்ள டஸ்கீகீ எனும் ஊருக்குப் போய்ச்சேர்ந்தார். பள்ளிக்கூடக் கட்டடம் ஒன்று இருக்கும் எனும் எதிர்பார்ப்போடு அங்கே சென்றவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அங்குக் கட்டடம் ஏதுமில்லை. ஆனால் படிக்கும் வேட்கைகொண்ட மக்களைக் கண்டார் புக்கர். எனவே அவர்களுக்குக் கற்பிக்கும் ஆர்வம்கொண்டவராகப் பள்ளிக்கு இடம் தேடினார். அங்கே பழைய மாதா கோவிலுக்கு அருகே இடிந்த சந்தைக்கூடம் ஒன்று இருப்பதைக் கண்டார். முறையான கட்டடங்கள் பள்ளிக்கென்று எழுப்பப்படும்வரை அந்த இடிந்த சந்தைக் கூடத்தையே கல்விக்கூடமாகப் பயன்படுத்த முடிவுசெய்தார்.
அரும்பாடுபட்டுப் புக்கரும் அவரோடு உடன்பணியாற்றிய ஒலிவியா என்ற அம்மையாரும் கல்விக்கூடம் கட்ட நிதி திரட்டலானார்கள். இப்படிப் பல செல்வந்தர்கள், நல்லுள்ளம் படைத்தோர் ஆகியோருடைய நன்கொடைகளின் உதவியால் கட்டப்பட்ட முதல் மண்டபம் போர்ட்டர் ஹாலாகும் (porter hall). போர்ட்டர் என்பவர் அதற்குப் பெரும்பொருள் கொடுத்தமையால் அவர் பெயர் அதற்குச் சூட்டப்பெற்றது.
1882ஆம் ஆண்டு பேன்னி ஸ்மித் (Fannie Smith) என்ற பெண்ணை புக்கர் மணந்துகொண்டார். போர்ஷியா (Portia) என்ற மகவை ஈன்ற அவர், ஈராண்டுகளில் தம் கணவரையும் குழந்தையையும் விட்டு விண்ணுலகு ஏகினார்.
கல்விக்கூடத்துக்கு மேலும் கட்டடங்கள் கட்டப் பொருளுதவி தேவைப்பட்டபோது ஆம்ஸ்ட்ராங்கின் யோசனையின் பேரில் புக்கர் வட மாநிலங்கள் பலவற்றில் டஸ்கீகீ கல்விக் கூடம் அமைப்பதற்கு உதவிகோரிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்; அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
டஸ்கீகீயில் இடிந்துகிடந்த சந்தைக்கூடத்தில் மழைபெய்யுங் காலத்தில் மாணவன் ஒருவன் குடைபிடிக்கப் புக்கர் கல்வி கற்பித்துவந்த காலம் மாறி, அழகான கட்டடத்தில் ஆசிரியர் பலர் அமைதியோடு கற்பிக்கும் காலமும் வந்தது. அலபாமா அரசாங்கம் முதலில் அளித்த இரண்டாயிரம் டாலர்கள் பிறகு மூவாயிரமாயிற்று. மேலும் பல இடங்களிலிருந்தும் நிதியுதவி கிடைத்தது.
1863ஆம் ஆண்டு, நாநலம் மிக்கவரான புக்கரை அட்லாண்டாவைச் சேர்ந்த கிறித்தவத் தொண்டரது மாபெருங்கூட்டமொன்றில் உரையாற்ற அழைத்தார்கள். கருப்பரும் வெள்ளையரும் ஒற்றுமையாய் இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி புக்கர் ஆற்றிய உரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
புக்கரைப் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த அமைப்புகளும் சொற்பொழிவாற்றத் தொடர்ந்து அழைத்தவண்ணம் இருந்தன. அவருடைய சொற்பொழிவுகள் உயிரோட்டமும், உண்மையும், தேர்ந்த சொற்களும் கொண்டவையாக அமைந்தமையால் அனைவரையும் கவர்ந்தன.
1896ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி ஹார்வார்டு பல்கலைக்கழகத்தார் கௌரவ முதுகலைப் பட்டத்தை (master of arts) புக்கருக்கு அளித்துச் சிறப்பித்தார்கள்.
1899ஆம் ஆண்டு புக்கருக்கு வியப்பளிக்கும் வகையில் பாஸ்டன் (Boston) எனும் ஊரைச் சேர்ந்த சிலர் அவர் ஐரோப்பா சென்று சிலகாலம் ஓய்வெடுத்துக் கொள்வதற்கான நிதியைத் திரட்டி அளித்தனர். அதையேற்றுப் புக்கரும் ஐரோப்பாவின் சில நாடுகளுக்குச் சென்றார். இலண்டன் சென்ற அவருக்கு விண்ட்சர் மாளிகையில் (windsor castle) விக்டோரியா மகாராணியாரோடு விருந்துண்ணும் அரிய வாய்ப்புக் கிட்டியது.
கருப்பினச் சமூகத்தின் அறியாமை எனும் முகமூடியை அகற்ற டஸ்கீகீ எனும் கல்விக்கழகத்தை நிறுவி, கல்வியிலும் கைத்தொழிலிலும் அவர்களைத் திறன்மிக்கவர்களாக்கி, அவர்கள் வாழ்வில் அறிவொளியேற்றிய அருஞ்சாதனையாளரான புக்கர் டீ வாஷிங்டன் 1915ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் நாள் தமது 59ஆவது அகவையில் உயிர்நீத்தார்.
அடிமையாய்ப் பிறந்து, வறுமையில் வளர்ந்து, பல்வேறு இடுக்கண்களைச் சந்தித்த சூழலிலும், தம் அயரா உழைப்பால் தாமும் உயர்ந்து தம்மின மக்களையும் உயர்த்திய உத்தமர் புக்கர் டீ வாஷிங்டனின் அரும்பணிகள் என்றும் போற்றத்தக்கவை!
*****
கட்டுரைக்கு உதவியவை:
https://en.wikipedia.org/wiki/Booker_T._Washington
https://www.history.com/topics/black-history/booker-t-washington
https://www.britannica.com/biography/Booker-T-Washington