புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.                  
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

பரிமேலழகர் உரையில் ‘குறிப்பெச்சம்’

முன்னுரை

திருக்குறள் பரிமேலழகர் உரை காலங்கடந்து நிற்பதோடு அறிஞர் பெருமக்களால் சிறப்பாகவும் புகழப்படுகிறது. இத்தகைய பெருமை அதற்குக் கிட்டியிருப்பதற்குக் காரணங்கள் பல. அவற்றுள் ஒன்று அவர் குறட்பாவிற்கு உரை காணும் நெறி. இந்தத் தொடரில் பல முறை சுட்டிக்காட்டியிருப்பதுபோலக் குறட்பாவின் சொற்சுருக்கம் அதாவது குறுகிய கட்டுமானம் அவரைப் பெரிதும் ஈர்த்திருந்தது. ஈர்க்கவே அதனை உற்று நோக்கி உரையெழுதும் நிலை வந்தது. வரவே எழுசீர்களில் அடங்கிய ஒரு சிறுபாட்டு எந்தெந்த வகையில் எல்லாம் பொருட்சுமையைத் தாங்கி நிற்கிறது என்று அவர் எண்ணினார். எண்ணி அந்த வகைகளில் எல்லாம் உரை சொன்னார். குறட்பாவின் ஏழு சீர்களுக்குள் வெளிப்பட நிற்கும் உரை சொல்வார். வள்ளுவர் சொல்ல நினைக்கும் உள்ளக்கருத்தினைக் கண்டுரைப்பார். உவமத்தின் இயல்புகளைப் பொருண்மைக்கு ஏற்றி உவமத்தால் பொருண்மையின் ஆழம் காட்டுவார். இவற்றோடு சொல்லாமல் விடுபட்ட கருத்தினைக் ‘குறிப்பெச்சம்’ என்னும் பெயரால் கண்டறிந்து கூறுவார். அவர் கண்டறிந்து கூறிய ‘குறிப்பெச்சம்’ என்னும் அதனை இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்வதன் மூலம் பரிமேலழகரின உரைத்திறனை அறிய முயல்கிறது.

குறிப்பெச்சம் என்றால் என்ன?

‘எஞ்சியிருப்பது எச்சம்’ என்பது பொதுவழக்கு. ‘வந்த’ என்ற வினைச்சொல் பொருள் முடிவடையாது, தான் முடிவடைவதற்கு இன்னொரு சொல்லை எதிர்பார்த்து நிற்பதைக் காணலாம். எதிர்பார்க்கப்படும் அச்சொல் பெயர்ச்சொல். பெயர்ச்சொல்லை அதனோடு இணைத்தால்தான் பொருள் நிறைவுறும், ‘வந்த பையன்’ என்பதுபோல. எனவே அந்தத் தொடர் முடிவடைய ஒரு பெயர்ச்சொல் எஞ்சியிருக்கிறது. அதனால் அது பெயரெச்சம். ‘வந்து’ என்ற வினைச்சொல் பொருள் முடிவடையாது தான் முடிவடைவதற்கு இன்னொரு சொல்லை எதிர்பார்த்து நிற்பதைக் காணலாம். எதிர்பார்க்கப்படும் அச்சொல் வினைச்சொல். ஒரு வினைச்சொல்லை அதனோடு இணைத்தால்தான் பொருள் நிறைவுறும், ‘வந்துப் போனான்’ என்பதுபோல. எனவே அந்தத் தொடர் முடிவடைய ஒரு வினைச்சொல் எஞ்சியிருக்கிறது. அதனால் அது வினையெச்சம். இந்தத் தெளிவினை உள்வாங்கினால் குறிப்பெச்சம் என்பதை எளிதாகப் புரிந்துக் கொள்ள முடியும்.

  1. ஒரு சொல்லின் குறிப்பால் வேறுசில சொற்களை வருவித்துப் பொருள் முடிப்பது, இது எஞ்சி நின்றதால் எச்சமாயிற்று. எஞ்சுதல் – குறைந்து நிற்றல்.
  2. வெளிப்படையாகவன்றி மறைந்து நின்று வேறொரு சொல்லின் குறிப்பினால் தோன்றும் பொருள்
  3. வெளிப்படையாகச் சொல்லாமல் எஞ்சி நின்ற பொருளை ஒரு சொல்லின் குறிப்பினால் கொள்வது

என்று பலவாறாக இது ஆராயப்படுகிறது. படைப்பாளன் தன் உள்ளத்துக் குறிப்பினைத் தொடர்புடைய பாடலுக்குள் பதிவு செய்ய இயலாத நிலையில் அவன் உள்ளத்துக்குள்ளேயே எஞ்சியிருப்பதால் அது குறிப்பெச்சம் எனப்படலாம். எஞ்சிய குறிப்பு எச்சக் குறிப்பு. இது முன்பின்னாகிக் குறிப்பெச்சம் எனப்படும்.  அதனைக் கண்டறிந்து கூறுவது உரையாசிரியர் கடன். குறிப்பு உள்ளம் சார்ந்தது.  ‘உள்ளக்குறிப்பு’, ‘முகக்குறிப்பு’, ‘சொற்குறிப்பு’ என்பன நோக்குக. வெளிப்படையாக அமைந்தால் அது கருத்து. உள்ளுக்குள்ளேயே அமைந்துவிடுமானால் அது குறிப்பு. அந்தவகையில் திருக்குறள் பரிமேலழகர் உரையில் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் உரையாசிரியர் பரிமேலழகர் குறிப்பெச்சம் பற்றிச் சிந்தித்திருக்கிறார். எனினும் கட்டுரையின் அளவு மற்றும் செறிவு கருதி ஒருசில பாக்களின் உரையைக் கொண்டு அதனை விளங்கக் காணலாம்.

கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரா?

மழலைச்சொற்களின் இனிமையைத் திருவள்ளுவர் எதிர்மறையால் பதிவு செய்கிறார். மழலையின் இன்பத்தை உணர்ந்து அனுபவிக்காதவரே குழலிசையையும் யாழிசையையும் வியந்து போற்றுவர் என்பது குறட்பாவின் சொற்பொருள்.

“குழல் இனிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.” (66)

கேளாதாதவர் இனிமை என மயங்குவர் எனச் சொன்னதன் மூலம் கேட்டிருந்தால் அவற்றினும் இனிதென மழலையைச் சொல்லியிருப்பர் என்பது குறிப்பு. இந்தக் குறிப்புப் பாட்டில் இல்லை. எஞ்சி நிற்கிறது. பரிமேலழகர் அறிந்து சொல்கிறார். ‘குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர் தம் புதல்வருடைய மழலைச் சொல்லைக் கேளாதவர்’ எனப் பொழிப்பெழுதிய பரிமேலழகர் விளக்கவுரையில்,

“கேட்டவர் அவற்றினும் மழலைச் சொல் இனிது என்பர்’ என்பது குறிப்பெச்சம்”

என்று எழுதுகிறார். கேளாதவர் சொல்லியன பாட்டில் உள்ளது. கேட்டவர் சொல்லியிருக்கமாட்டார் என்பது திருவள்ளுவர் குறிப்பு. இது பாட்டில் இல்லாதது. இதனைப் பரிமேலழகர் கண்டுரைக்கிறார்.

தானாக விளையாதா?

விருந்தோம்பலாகிய இல்லற உயர்பண்பினைப் போற்றும் திருவள்ளுவர், அந்தப் பண்பினை உடையவர் வயல்களில் விதைக்க வேண்டிய தேவையில்லை என்பதை ஓகாரத்தால் உணர்த்துகிறார். அந்தப் பாட்டு,

“வித்தும் இடல் வேண்டும் கொல்லோ? விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்” (85)

என்று அமைந்திருக்கிறது. இதற்கு “முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத்தான் மிசைவானது விளைநிலத்துக்கு வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா” என்று பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். முந்தைய இரண்டு பாடல்களையும் இணைத்து ஓரலகாக்கிப் பொருள் முடிவு கூறும் பரிலேழகர், ‘இம்மைப்பயன் கூறப்பட்டது’ என்று எழுதுகிறார். எவை இம்மைப்பயன்.

  1. விருந்தோம்புவானுக்கு வறுமை வராது
  2. (காரணம்) அவன் இல்லத்தில் திருமகள் உறைவாள்.
  3. செய்யவள் இருப்பதனால் வயலுக்கு விதை தேவையில்லை.

என்று விரிவாக எழுதுகிறார்.

‘தானே விளையும் என்பது குறிப்பெச்சம்’

‘விதைக்கவும் வேண்டுமோ’ என வினவிய திருவள்ளுவருக்கு ‘வேண்டா’ என விடையிறுத்த பரிமேலழகர், ‘விளைச்சல் என்ன ஆகும்’ என்னும் கற்பார் வினாவிற்கு இப்படி விடைகூறுகிறார். விதைக்க வேண்டுமோ என்பது திருவள்ளுவர் வினா. வேண்டாம் என்பது பெறப்படும். தானாக விளையும் என்பது திருவள்ளுவர் உள்ளக்குறிப்பாம்.

கோடாதவன் தாழ்வு கேடன்று

‘கேடு’ என்பது நடுவுநிலை தவறாதவன், தவறியவன் என அனைவருக்கும் பொதுவானது. மற்றவர்களுக்குக் கேடு வரின் பிறரால் அது கேடாகவே நோக்கப்பட்டு அனுதாபத்திற்கு ஆளாவர். ஆனால் நடுவுநிலை பிறழாத ஒருவருக்குக் கேடுவரின் அதனைச் சான்றோர் கேடாகக் கொள்ள மாட்டார் என்ற கருத்தினைக்,

“கெடுவாக வையாது உலகம், நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு” (117)

என்னும் குறட்பாவில் எழுதியிருக்கிறார் திருவள்ளுவர். இங்கே கேடு என்பது வறுமையைக் குறிக்கும். திருவள்ளுவர் இதற்கு “நடுவாக நின்று அறத்தின்கண்ணே தங்கினவனது வறுமையை வறுமையென்று கருதார் உலகோர்” என்பது பரிமேலழகர் பொழிப்புரை. இதற்கு இவர் எழுதிய விளக்கவுரையில்,

“செல்வமென்று கொள்ளுவர்’ என்பது குறிப்பெச்சம்.”

என்று பதிவிடுகிறார். ‘பாட்டில் வறுமையென்று கருதார்’ (கெடுவாக வையாது) என்றுதான் இருக்கிறது. அவரும் அவ்வாறே உரையெழுதியிருக்கிறார். ஆனால் விளக்கவுரையில் ‘செல்வமென்று கொள்ளுவர்’ எனத் திருவள்ளுவர் எண்ணி ஆனால் சொல்ல இயலாத அவருடைய உள்ளக் குறிப்பினை எடுத்துக்காட்டுகிறார். ‘வறுமையென்று கருதார்’ என்பதே வள்ளுவர் சொல்லியது. ‘செல்வமென்று கருதுவர்’ என்பது அவர் உள்ளம் தோய்ந்தது. தோய்ந்ததைத் தோண்டித் தருபவர் பரிமேலழகர்.

தேடவேண்டிய செல்வம் செவிச்செல்வம்

செல்வம் இருவகைப்படும். ஒன்று கேள்வியால் வரும் செவிச்செல்வம். மற்றவை பொருளால் வரும் பிறசெல்வங்கள். முன்னது நிலையானது. பின்னவை  நிலையற்றவை. எனவே முன்னதை வற்புறுத்தி எழுதப்பட்டதே ‘கேள்வி’ என்னும் அதிகாரமாகும்.

“செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை” (411)

என்ற பாட்டில் திருவள்ளுவர் செவிச்செல்வத்தைச் ‘செல்வத்துள் செல்வம்’ என்று பாராட்டியிருக்கிறார். இந்தப் பாராட்டை உள்வாங்கிய பரிமேலழகர்,

“ஒருவற்குச் சிறப்புடைய செல்வமாவது செவியான் வரும் செல்வம். அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையாதலான்.”

என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். கற்பாருக்கு எழுகிற வினா ‘கேள்விச் செல்வத்தைப் பாராட்டுவதற்கு ஒரு குறட்பாவா?’ என்பதுதான். திருவள்ளுவர் எதனையோ சொல்லத்தான் நினைக்கிறார். ஆனால் சொல்லாமல் தவிக்கிறார் என்பதுபோல அமைந்திருக்கிறது இந்தப் பாடல். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உரையாசிரியர் பரிமேலழகர் கண்டறிகிறார். அவர் அறிந்ததை அனைவரும் அறியத் தருகிறார்.

“அவற்றை ஒழித்து இதனையே செய்க’ என்பது குறிப்பெச்சம்”

என்ற ஒரு தொடரால் விடுபட்டுப் போனதைப் பொருண்மையோடு இணைத்துக் காட்டுகிறார். ‘செவிச்செல்வம் தலையாயது ஆதலின் அதனையே தேடுக’ என்று அவர் சொல்லவில்லை. ‘தலையாய செல்வம்’ என அடையாளப்படுத்தியதோடு நின்றுவிடுகிறார். அழகர் அதனைக் கண்டறிந்து “அவற்றை ஒழித்து இதனையே செய்க’ எனக் ‘கேள்விச் செல்வத்தைத் தேடுக’ என்னும் வேண்டுகோளைத் திருவள்ளுவர் முன்வைப்பதாக எடுத்து மொழிகிறார். செவிச்செல்வத்தின் பெருமை சொன்னது குறள். அதனைத் ‘தேடுக’ என்னும் வள்ளுவர் உள்ளமறிந்து சொன்னவர் பரிமேலழகர். எஞ்சி நின்ற குறிப்பு இதுதான்.

அறிவில் சிறுகுறை அரசுக்குப் பெருங்கேடு. 

அறியாமை அனைவர்க்கும் பொது. ஆனால் அரசாள்வோர் தம் பக்கல் வைத்துக் கொள்ளும் நபர்களின் அறிவாற்றலைச் சரியாக எடைபோட்டு வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அரச நீதி. ஏதேனும் ஒரு காரணம் பற்றி ஒருவரைத் தெளிய முற்படும் போது நம்பிக்கை அளவுகோல் ஆகிவிடக் கூடாது. காரணம் எல்லாவகையிலும் சிறந்திருப்பார் கூட ஏதோ ஒரு மூலையில் சற்றுப் பிசகியிருப்பார். இந்த உண்மையை,

“அரியகற்றும் ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு” (503)

என்னும் குறட்பாவில் தெளிவுபடுத்துகிறார் திருவள்ளுவர்.

“கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும் நுண்ணிதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது.”

என்பது இப்பாடலுக்கான பரிமேலழகரின் பொழிப்புரை. அறியாமை இல்லாதவர் யாருமிலர் என்பதுதான் பாட்டின் கருத்து. சரி. இதனால் திருவள்ளுவருடைய உள்ளக் குறிப்பென்ன? என்பது பாட்டில் இல்லை. ‘ஆசற்றார் கண்ணும் வெளிறு இன்மை அரிது’ என்பது ஒரு செய்தி. அது அறிவுரை ஆகாது. அரசாள்வார் என்ன செய்யவேண்டும் என்பதைப் பாட்டில் அவர் கூறவில்லை. பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார்.

“காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம்.”

குறட்பாவின் உள்ளடக்கத்தைப் பரிமேலழகர் பாட்டின் கருத்தினை அரசாள்வார்க்கு அறிவுரையாக மாற்றுகிறார். அப்படி மாற்றுவதுதான் திருவள்ளுவர் கருத்தாம். அறியாமை இருந்தே தீரும் என்பதுதான் குறட்பா கருத்து. அதுவும் இல்லாதாரையே தெளிக என்பதுதான் முழுமையான வள்ளுவம்.   முன்னது குறட்பாவில் உள்ளது. பின்னது வள்ளுவரின் திருவுள்ளக் குறிப்பு.

கண் பெற்ற பயன்

‘கண்ணுக்கு மையழகு’ என்பது திரையிசைப்பாடல். ‘கண்ணிற்கு அழகு இரக்கம்’ என்பது சான்றோர் கருத்து. ‘அமைச்சர்க்கழகு அகப்பட்டதைச் சுருட்டுதல்’ என்பது இன்றைய வழக்கு ‘மந்திரிக்கழகு வரும்பொருள் உரைத்தல்’ என்பது அன்றைய அமைச்சறம். சமுதாயம் புறத்தில் வளர்ந்த அளவுக்கு அகத்தில் வளரவில்லை, அதற்கான சூழலும் அமையவில்லை என்பது காலை கறுப்பாக இருக்காது என்பதுபோல உண்மை.

“உளபோல் முகத்து எவன் செய்யும்? அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்”  (574)

என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு இதன் உள்ளடக்கம் தோன்ற,

“கண்டார்க்கு முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது என்ன பயனைச் செய்யும் அளவிறாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்?”

என்று பரிமேலழகர் உரையெழுதியிருக்கிறார். உயிர்கள் மாட்டுக் கண்ணோடி  அதாவது இரக்கம் கொண்டு நோக்காத நிலையில் கண்களால் பயனில்லை.  உடம்பின்கண் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு வினைக்குரியது. அவ்வினை பிறர்நலம் சான்றது. இறைப்பணி நோக்கியது. இது தமிழ்ப்பண்பாடு. “வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும்” என்பது உறுப்புக்களின் பணியை நினைவூட்டும் தேவாரமாகும். ‘தாளை வணங்காத் தலை’ என்பதும் அது. எனவே கண்ணின் பணி உயிர்கள் மேல் இரக்கம் காட்டுதல். அதுவன்றி வாளா இரக்கவுணர்வின்றி இருக்கும் மாந்தர்கள் இருக்கிறார்களே என்றால் அவர்களுக்கு முகத்தில் இருக்கும் உறுப்பு கண் என்ற அளவிலேயே அமைதி கிட்டும். இதுதான் பாடற் கருத்து. ‘முகத்தில் இருக்கிறது’ என்பதைத் தவிர வேறு என்ன பயன் என்பது திருவள்ளுவர் வினா.

‘ஒரு வினையும் செய்யா என்பது குறிப்பெச்சம்’

இது பரிமேலழகர் எழுதும் குறிப்புரை. ‘இருக்கிறது’ என்பதற்கும் ‘செயல்படுகிறது’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. கண்ணோட்டம் என்பது கண்களின் வினை. அதுவில்லாதபோது அது இருப்பதைத் தவிர வேறு எந்தவினையும் செய்யாது என்பது திருவள்ளுவர் குறிப்பு. இந்தக் குறிப்பினைத்தான் பரிமேலழகர் எடுத்து  மொழிகிறார்.

கீழே விழுவதெல்லாம் எழுந்திருக்கவே!

‘ஆகூழ்’, ‘போகூழ்’ என்பவற்றால் வாழ்க்கை சூழப்படினும் முயற்சி என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. ‘முயற்சி மெய்வருத்தக் கூலிதரும்’ என்பது மறை. தன் குஞ்சைக் கொத்தவரும் வான்பருந்தை எதிர்க்கும் திறன் தனக்கு இல்லையாகிலும் எதிர்க்க முயல்வது கோழிக்குப் பெருமை.

“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்த
ஆள்வினை இன்மை பழி” (618)

என்கிற குறட்பாவிற்குப் “பயனைத் தருவதாய விதியில்லாமை ஒருவற்குப் பழியாகாது. அறிய வேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது.” என்னும் பொழிப்புரையால் பாடல் விளக்கம் தருகிறார் பரிமேலழகர். விதியின்மை பழியாகாது. முயற்சி இன்மை பழியாகும் என்பதுதான் குறட்பாவின் பொருண்மை நிலை. வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்? அந்தப் பழியை ஒருவன் ஏற்கலாமா? கூடாது. கூடாது எனின் என்ன செய்தல் வேண்டும். முயல வேண்டும். இது பாட்டில் இருக்கிறதா?. இல்லை இதனைத்தான் ‘குறிப்பெச்சம்’ என்கிறார் பரிமேலழகர்.

‘விடாது முயல்க என்பது குறிப்பெச்சம்’

என்னும் தொடரால் ‘முயற்சியின்மை பழி தரும்’ என நீதிக்கருத்துக்கு அரண் செய்வதைப் போல அதனை வியங்கோள் ஆக்கிக் கூறுகிறார் பரிமேலழகர்.

வீரனுக்கு இணை வேறில்லை

திருக்குறள் காலம் கடந்த கருத்துக்களை உள்ளடக்கியதாக இருப்பினும் தான் தோன்றிய காலத்துச் சித்திரிப்பு என்பதை மறுப்பதால் யாருக்கும் பயனில்லை. வள்ளுவர் படை என்றது விமானப்படையை அல்ல. விமானந் தாங்கிய கப்பற்படையை அல்ல. அன்றைய நாளில் இருந்த நால்வகைப் படைகளைத்தான் அந்நால்வகைப் படையுள்ளும் மூலப்படை சிறந்தது. மூலப்படை என்பது இந்நாள் தரைப்படை யொத்தது. இந்நாளில் ஏனைய படைகளிலும் வீர்ர்கள் இருப்பர். ஆனால் அவர்கள் இயக்கத் துணையாக விமானம் முதலிய கருவிகள் இருக்கும். தரைப்படைக்கு அவ்வாறு கருவிகள் இருக்காது. இன்றைய நாளில் டாங்கி முதலிய கருவிகளும் தரைப்படைப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. படைகளுள் தரைப்படை வீரனைப் பாராட்டுகிறார் திருவள்ளுவர்.

“உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்.
தொல்படைக்கு அல்லால் அரிது” (762)

என்பது குறள். போர்க்களத்தில் மன்னனுக்குத் தளர்ச்சி ஏற்படும்போது அளவால் தான் சிறியதாயினும் தன் துன்பம் நோக்காது மன்னர்க்குப் பேருதவி செய்வதில் ஏனைய படைகளைக் காட்டிலும் தொல்படையே சிறந்தது என்பது பாடற் கருத்து.

“தான் சிறியதாய வழியும் அரசற்குப் போரின் கண் உலைவு வந்தால் தன் மேல் உறுவதற்கு அஞ்சாது நின்று தாங்கும்  வன்கண்மை அவன் முன்னோரைத் தொடங்கி வரும் படைக்கல்லது உளதாகாது.”

என்பது பாடலைப் படம்பிடித்துக் காட்டும் பரிமேலழகர் உரை. இதற்கு,

“மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப் படையுள்ளும் சிறப்புடையது மூலப்படையாகலான் அதனை அரசன் “வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும் கொல்களிறும் மாவும் கொடுத்தளிக்க (பு.பொ.வெ.மா – தும்பை 2)  என்பது குறிப்பெச்சம்.”

என்று அவர் எழுதிய விளக்கவுரையில் திருவள்ளுவரின் உள்ளக் குறிப்பினைக் கண்டறிந்து எழுதுகிறார். தொல்படையாகிய மூலப்படையே மன்னனைக் காப்பாற்றும் என்றால் அப்படைவீரனைத் தாங்குதல் வேண்டும் என்பது வள்ளுவர் குறிப்பாம். எப்படித் தாங்குதல் வேண்டும்? என்னென்ன கொடுத்துத் தாங்குதல் வேண்டும் என்பதை விளக்கவே புறப்பொருள் வெண்பாமாலை பாடலை எடுத்துக்காட்டுகிறார். வீரன் மன்னனைத் தாங்குவான் என்பது குறள்.  அவனை மன்னன் தாங்கவேண்டும் என்பது குறிப்பெச்சம்.

காமத்துப்பாலும் பரிமேலழகரும்

அறத்துப்பால் மற்றும் பொருட்பால் ஆகியவற்றுள் பரிமேலழகர் கண்டறிந்து கூறும் எச்சக் குறிப்புக்கள் நூலாசிரியர் திருவள்ளுவருக்குரியன. ஆனால் காமத்துப்பாலில் பரிமேலழகர் கண்டறிந்து கூறும் குறிப்பெச்சங்கள் தலைமக்களுக்கானவை. காமத்துப்பால் முழுமையும் உளவியல் சார்ந்த பாத்திரங்களால் கட்டமைக்கப்பட்டிருப்பதால் அப்பாத்திரங்களின் உள்ளக் குறிப்பினை அறிந்து கூறும் பரிமேலழகரின் உரைத்திறன் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்ததாகும். ஒருசில குறிப்பெச்சங்களை இங்கே காணலாம்.

கண்ணிலும் உள்ளான் கருத்திலும் உள்ளான்!

கண்முன்னால் இருக்கின்றான் காதலன். ‘அவன் தலைவியை மறந்து போனான்’ என அவனுடைய இயல்பினைத் தோழி பழித்துரைக்க முற்படுகிறாள். அப்போது தலைவி கூறுகிறாள்.

“கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து” (1127)

எம் காதலர் எப்போதும் என் கண்முன்னே இருப்பதாலேயே நாங்கள் கண்ணுக்கு மையிடாமல் இருக்கிறோம். ஏனென்றால் மையெழுதும் அந்நொடிப் பொழுதினும் அவன் மறைந்துவிடக் கூடாது என்பதற்காக என்று தலைவி தனக்குள்ளே கூறிக் கொள்கிறாள்.

“காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான்  கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யோம்  அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து”

என்னும் பொழிப்புரையில் பரிமேலழகர் இதனை விளக்குகிறார். ஆனால் தோழி இயற்பழித்தலைத் தடுத்தற்பொருட்டுத் தலைவி கூறினாள் என்பது பாட்டில் இல்லை. தலைமகளின் அந்த உள்ளக் குறிப்பினைப் பரிமேலழகர் அறிந்து கூறுகிறார் இப்படி.

‘யான் இடையீடின்றிக் காண்கிறவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை? என்பது குறிப்பெச்சம்”

“தலைவன் மறைந்துவிடுவான் என்பதற்காகவே மையெழுதாமல் இருக்கிறேன்” என்பது தலைவி கூற்று. தலைவியைச் சந்திக்க வரவில்லை என்பதனால் இயற்பழிப்பது தோழியின் எண்ணம். அந்த எண்ணம் தவறு என்பதைத்தான் தலைவி வேறு வாய்பாட்டில் (மையெழுதா வாய்பாட்டில்) கூறித் தன் குறிப்பினைத் தெரியப்படுத்துகிறாள் என்பது பரிமேலழகரின் கருத்து.

மேலே கண்ட பாடல் கண்ணைப் பற்றியது என்றால் பின்வரும் பாடல் நெஞ்சம் பற்றியது. பார்வையில் மட்டுமன்று. தலைவன் எப்போதும் தன் நெஞ்சிற்குள்ளேயே நிலைத்திருக்கிறான் என்பது தலைவி கூற்று. அதனை எப்படி வெளிப்படுத்துகிறாள் தெரியுமா?

“நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து” (1128)

மேலே உள்ள பாட்டில் மையெழுதும் நேரத்தில் மறைந்துவிடுவான் என்றஞ்சிய தலைமகள் இந்தப் பாடலில் உள்ளத்தில் (மனசுக்குள் உட்கார்ந்து மணியடிக்கும் தலைவன் என்று கூடச் சொல்லலாம்) இருக்கும் தலைவனுக்கு வெப்பம் ஆகாது என்று கருதி வெப்பமானவற்றை உட்கொள்ளுவதில்லையாம்.

“காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான், உண்ணுங்கால்  வெய்தாக உண்டலை அஞ்சா நின்றேம் அவர் வெய்துறலை அறிந்து”

என்னும் பொழிப்புரையால் இதனைப் பெறவைக்கும் பரிமேலழகர்,

“எப்பொழுதும் எந்நெஞ்சின் கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்.”

என்று எழுதித் தலைவியின் இயற்பழித்தலுக்குத் தடையாணை போடுகிறாள். இந்தப் பாட்டில் என்ன சொல்லுகிறாள்? ‘தலைவன் நெஞ்சிற்குள் இருப்பதால் வெப்பமானவற்றை உட்கொள்ளுவதில்லை’ சரி. சொல்ல வருவதென்ன? ‘நான் எப்போதும் வெப்பமானவற்றை உட்கொள்ளாத நிலையில் அவன் என் நெஞ்சிற்குள்ளேயே இருக்கிறான். அவனை எப்படி நீ பிரிந்தார் என எண்ணி இயற்பழிக்க முயலலாம்?’ என்பதே.

தலைவனோடு களித்தபோது இன்பம் செய்த மாலை தனிமையில் இப்போது துன்புறுத்துகிறது. ‘அந்தப் பிரிவுத் துன்பத்தை ஆற்றியிருக்க வேண்டும்’ என்று ஆறுதல் கூறுகிறாள் தோழி. அந்தத் தோழிக்குத் தலைவி மறுமொழி கூறுகிறாள் இப்படி!

“பனியரும்பி பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்” (1223)

என் தலைவன் என்னருகில் இருந்தபோது என்னைக் கண்டு நடுங்கிய மாலைப் பொழுது, அவன் பிரிந்த இந்த நிலையில் என் உயிருக்கு இறுதி வரவழைக்கும் முறையில் துன்புறுத்த, அத்துன்பம் பொழுதும் வளர்கிறது என்கிறாள் தலைவி. இதனைக்,

“காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கமெய்திப் பசந்துவந்த மாலை இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்குளதாம் துன்பம் ஒரு காலைக்கொருகால் மிக வாராநின்றது”.

என்னும் பரிமேலழகர் பொழிப்புரையால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ‘ஆற்றியிரு’ என்னும் தோழிக்குரிய விடையாக இதனைக் கருத முடியுமா என்றால் முடியாது. ‘இன்பமாக இருந்த மாலை துன்பம் செய்கிறது’ என்பது மட்டுமே தலைவியின் மொழியாக அமைந்திருக்கிறது. மாலை உயிருண்ணும் கூற்றாக வருவதால் தலைவனைப் பிரிந்துத் தன்னால் இருக்க இயலாது என்பதைக் குறிப்பாகச் சொல்கிறாளாம்.

“யான் ஆற்றுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்”

என்னும் தொடரால் பரிமேலழகர் இதனைக் குறிக்கிறார். ‘மாலை செய்யும் கொடுமையால் யான் ஆற்றியிருப்பது அரிது’ என்பது அவள் உள்ளக்குறிப்பு. அந்தக் குறிப்பைத்தான் பரிமேலழகர் வினாவடிவில் பதிவு செய்திருக்கிறார். மாலையின் கொடுமை குறட்பா கருத்து. ஆற்ற இயலாது என்பது தலைவியின் குறிப்பு.

நிறைவுரை

குறட்பாவிற்குக் கிடக்கை நிலை உரைசொல்வது எல்லார்க்கும் பொதுவான இயல்பு. ‘இதனான் இது பெற்றாம்’ என்பது பரிமேலழகர் எழுதிக்காட்டும் அரிய உரைக்கருத்து. ‘இந்தப் பாட்டின் கருத்து என்பது இந்தப் பாட்டினால் அறிந்து கொள்ளும் படிப்பினையைக் குறிக்கும். ‘குறிப்பெச்சம்’ என்பது ‘சொல்ல வேண்டிய ஆனால் சொல்ல முடியாமல் எஞ்சி நிற்கும் கருத்து. இது உரையாசிரியரின் ஊகமாகாது. சொற்கிடக்கையின் இடைவெளியில் உரையாசிரியரின் நோக்கிற்கு மட்டும் புலப்படும் அரிய உண்மை. ‘இதனைச் செய்யமாட்டார்’ என்றால் ‘அதனைச் செய்வர்’ என்பதும் ‘இதனைச் செய்வர்’ என்றால் ‘அதனைச் செய்யமாட்டார்’ என்பதும் ‘அருத்தாபத்தி’ என்னும் அளவையியலைச் சார்ந்ததாகும். கருப்பஞ்சாறு எடுப்பவர்கள் கரும்புச் சக்கையைப் பலமுறை ஆலையிலிட்டுப் பிழிவதுபோலக் குறட்பாவைப் பன்முக உரைநெறிகளால் பிழிந்தெடுத்துத் தரும் ‘கருத்துச்சாறே’ அவர்தம் உரைத்திறனாம்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *