Category: தொடர்கள்

  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-33

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-33

    தி. இரா. மீனா

    இலத்தேய சோமய்யா

    ’இலத்தேய சோமய்யன’ என்பது இவரது முத்திரையாகும்.

    “காயகம் எதுவாக இருப்பினும் தன்காயகமெனக் கருதி
    குரு இலிங்கம் ஜங்கமத்தின்  முன்வைத்து
    பிரசாதம் அர்ப்பணித்து. மிஞ்சியதை எடுத்து
    நோயால் வருந்தி, வலியால் கதறி
    மூச்சு நின்றால் இறந்து போ, இதற்கேன் கடவுளின் உதவி,
    பாபு இலத்தேய சோமனே?“

    வசனபண்டாரி சாந்தராசா

    இவர் கல்யாண் நகரத்தைச் சேர்ந்த சரணர்கள் இயற்றிய வசனங்க ளைத் தொகுத்து வைத்த வசன நூல் காப்பகத்தின் [வசன பண்டாரா] மேற்பார்வையாளராக இருந்தவர். வசனங்களை எழுதிக் கொள்வதும், சேகரிப்பதும், பாதுகாப்பதும் இவரது காயகமாக இருக்க வேண்டும். அந்தணராக இருந்த இவர் பசவேசரின் தொடர்பிற்குப் பிறகு சரணரானார் என்று கூறப்படுகிறது. ’அலோக்கனாத சூன்ய கல்லினொளகாத’ இவரது முத்திரையாகும்.

    “மலத்தை அப்புறப்படுத்தலாமே தவிர
    மும்மலங்கள் அல்லாததை அகற்றுவதா ஐயனே?
    பேசமுடியுமேயன்றி சிவனை அறிய முடியுமா ஐயனே?
    பணியாற்ற முடியுமேயன்றி பகைவருடன் சேரமுடியுமா ஐயனே?
    போர் வகையைப் பேசமுடியுமேயன்றி போரிட முடியுமா ஐயனே?
    சொல் சேர்த்துப் பாடம் சொல்பவர் சிவனை அறிவாரோ?
    இச்சொல்லின் சொல்லுக்கஞ்சி
    அலோகநாத சூன்ய கல்லொளகே ஆனேன் கேளாய்”

    வீரகொல்லாளா

    இவர் இயற்பெயர் காட்டகூட்ட. இவரின் காயகம் ஆடு மேய்ப்பது. ’வீர பீரேஸ்வர’ இவரது முத்திரையாகும்.

     “கல் இலிங்கமல்ல, உளியின் முனையில் உடைந்தது
    மரம் கடவுளல்ல, தீயில் கருகியது
    மண் கடவுளல்ல, நீரில் கரைந்தது.
    இத்தனையும் அறிகின்ற அறிவு கடவுளல்ல
    ஐம்பொறிகளுட்பட்டு ஆற்றலிழந்தது
    எஞ்சிய மகாலிங்கம் யாதெனில்
    கண்டவர்களோடு கொண்டாடாமல்
    கொண்ட ஒழுக்கத்தில் மற்றொன்றுடன் இணையாமல்
    நம்பிக்கை பெற்று நிற்பதால் நிஜலிங்கமன்றி
    மற்றது மற்றதை அறியா நிலையில் நின்றவனே
    சர்வாங்கலிங்கன் வீரபீரேஸ்வரலிங்கத்துக்கு ஆட்பட்டவன்

    வேதமூர்த்தி சங்கண்ணா

    ’லலாம பீம சங்கமேஸ்வர இலிங்க’ இவரது முத்திரையாகும்.

    “பொழுதறிந்து குரலெழுப்பும் சேவலுக்கு எத்தகைய அறிவது?
    இனிப்பின் இடமறியும் எறும்புக்கு எத்தகைய அறிவது?
    தானுண்ணாமல் குட்டியைக்காக்கும் பன்றிக்கு எத்தகையஅறிவது?
    இத்தகு உயிரின் வித்தைகள் எல்லாம் ஞானத்துள் அடங்கும்
    அறிந்து நடப்பவன் வேதம் அறிந்தவனாவான்
    அறிந்து நடப்பவன் சாத்திரத்திற்கு உறவாவான்
    அறிந்து நடப்பவன் புராண நற்பேற்றினன்
    அறிந்து நடப்பவன் ஆகமங்களின் செல்வன்
    ஐந்தெழுத்து ஆறெழுத்திற்கு இதுவே நிலையாம்
    உலகின் மூலமானவனை அறிந்து
    சோஹம் கோஹம் அறிந்து [தானெனும் செருக்கு
    அவ்வுண்மையை மகாலிங்க உடலென உறுதி செய்து
    பேசி நடக்க முடிந்தவனே வேதமறிந்தவன் காணாய்
    லலாம பீமசங்கமேஸ்வர இலிங்கமான அடியான்“

    வைத்திய சங்கண்ணா

    ’மருள சங்கர பிரிய சித்தராமேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

    “வாழைக்கு விளைச்சல் ஒன்றே; பக்தனுக்குப் பேச்சொன்றே
    பற்றற்று மீண்டும் பற்றினால் செத்த நாயின் நாற்றமது
    நித்தியக் கடன் தவறி, மீண்டும் நற்செயலாற்றி
    தீவழி நடந்து மீண்டும் செல்வம் கொடுத்து
    உயர்பக்தரிடம் தவறு திருத்திக் கொண்டேனெனும்
    அந்தணரைக் கண்டால்
    மருளசங்கர பிரியன் சித்தராமேஸ்வரன்
    இலிங்கமானாலும் சேர விரும்ப மாட்டான்“

    சங்கர தாசிம்மையா

    ’நிஜகுரு சங்கரதேவ’ இவரது முத்திரையாகும்.

    “சாதுவான மான், காகம், குயில் போலிருக்க வேண்டாமோ?
    வீணே அலைந்து திரியும் நீசரின் மாசினைப் பாராய்
    பகலிரவென அலைபவரைக் கண்டு அருவருப்பானேன்
    அறிந்தால் சரணர், மறந்தால் மனிதர்
    குப்பைக் கூளங்களை ஊர்தோறும் சுமந்து விற்கின்ற
    காவி உடுத்தியவரை விரும்பான் நிஜகுரு சங்கரதேவன்“

    சிவநாகமய்யா

    ’நாகப்பிரிய சென்ன ராமேஸ்வரன்’ இவரது முத்திரையாகும்.

    “உடலில் இலிங்கமிருக்க ஈனரோடிணையக் கூடாது
    உடலில் இலிங்கமணிந்த பிறகு
    இலிங்க முதன்மையோடு செயல்பட வேண்டுமேயன்றி
    அங்கத்தை முதன்மையாக்கக் கூடாது
    இலிங்கமொடு உறவாகி அங்கத்தை முன்னிலைப்படுத்துவோர்
    இலிங்கத்துக்கு தூரமய்யா நாகப்பிரிய சென்னராமெஸ்வரனே.”

        [தொடரும்]

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 1

    பரிமேலழகர் உரைத் திறன் – 1

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    விலங்குகளும் வித்தகரும் ஒன்றா?

    முன்னுரை

    காலத்தால் முற்பட்டிருப்பது எப்படி பெருமையோ அப்படியே காலத்தால் பிற்பட்டிருப்பதுமாகும். தடந்தெரியாத் தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் தடங்காட்டினார் என்றால் பின்னாலே வந்த நச்சினார்க்கினியர் அத்தடத்தைச் செப்பனிடும் வாய்ப்பினைப் பெற்றார். பெறவே அப்படிச் செப்பனிடுவதற்குரிய பன்னூல் அறிவு பெறும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது. அதனால் தொல்காப்பியம், பத்துப்பாட்டு முதலிய நூல்கள்மேல் கூடுதல் ஒளி பாய்ந்தது. திருக்குறள் உரையாசிரியர்கள் பதின்மரில் இறுதியானவர் பரிமேலழகர். அதனால் தன்னுடைய முன்னோடிகள் எழுதிய ஒன்பது உரைகளையும் நோக்கியறியும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அவருக்குக் கிட்டிய அந்த வாய்ப்பு ஏனையோருக்குக் கிட்டவில்லை. அது இயற்கை நியதி. கிட்டிய அந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றைக்கும் நிமிர்ந்து நிற்கும் குன்றா(க) உரையெழுதினார் பரிமேலழகர். அன்னாருடைய உரையருமையைத் துளித் துளியாகப் பதிவிடுவது நலம் பயக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொடர் வடிவமைக்கப்படுகிறது.

    விளக்கத்திற்குரிய குறட்பாவும் அதிகாரப் பொருண்மையும்

    திருவள்ளுவர் மெய்யுணர்தலை அறத்துப்பால் துறவறவியலிலும் அறிவுடைமையைப் பொருட்பால் அரசியலிலும் வைத்த காரணம் பற்றிய ஆய்வு பின்னாளில் தொடரும். ‘கல்லாமை’ என்னும் அதிகாரத்தில் இறுதிக் குறட்பாவாக அமைந்த,

    “விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
    கற்றாரோடு ஏனை யவர்” 1

    என்னும் குறட்பாவின் உரை அருமையே இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது. பரிமேலழகரின் குறளுரையருமையைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் அதிகாரம் ‘கல்லாமை’ என்னும் பெயர் தாங்கியது என்பதை நோக்க வேண்டும். ‘கல்லாமை’ என்பது ‘கற்றலைச் செய்யாமை’ என்னும் தொழிலைக் குறித்தது. ஆனால் அவ்வதிகாரத்தில் அமைந்துள்ள பத்துக் குறட்பாக்களும் கல்லாமையாகிய தொழிலைப் பற்றிப் பேசாது கல்லாமையினால் வரும் இழிவை, அதாவது கல்வியில்லாதவன் சமுதாயத்தில் படும் மானக்கேடுகளையும் துன்பங்களையும் குறிப்பனவாகவே அமைந்துள்ளன. சுருங்கச் சொன்னால் அதிகாரத் தலைப்பு தொழிலைக் குறிப்பதாக அமைய அதிகாரப் பொருண்மையோ அதனால்வரும் இழிவுகளைத் தொகுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. அதாவது கல்லாமை கற்றலைச் செய்யாமையான் வரும் இழிவு என ஆகுபெயராய் நின்றது. குறட்பாக்களை முற்றோதிய பரிமேலழகர் இந்த நுட்பத்தைப் புரிந்து கொண்டு,

    “அஃதாவது (கல்லாமை) கற்றலைச் செய்யாமை என்றது, அதனின் ஆய இழிபினை” 2

    என்று சொல் விளக்கம் தருகிறார். அதிகாரத்தின் சொற்பொருள் விளக்கத்திலேயே பரிமேலழகரின் ‘உரைத்தாண்டவம்’ தொடங்கிவிடுவதைக் காணலாம்.

    பரிமேலழகரின் உரை விளக்கம்

    இந்தக் குறட்பாவைப் பரிமேலழகர் வழக்கம் போல் சீர்பிரித்து உரை கூறியிருக்கிறார். “விலங்கொடு மக்கள் அனையர்” என்னும் தொடருக்கு “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்” (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்” என்னும் தொடருக்கு விளங்கிய நூலைக்கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்”3 என்னுமாறு அவருடைய சீர் பிரிப்பும் பொழிப்புரையும் அமைந்திருக்கிறது. பரிமேலழகர் தம் உரைப்பகுதியில் யாண்டும் பதவுரை கூறும் வழக்கமிலர் என்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது.

    கட்டுரையாளர் விளக்கம்

    மேற்கண்ட பத்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உரைப்பகுதியில் அடைப்புக்கள் கொடுக்கப்பட்டிருப்பது பரிமேலழகர் தாம் கொண்ட கருத்திற்கேற்ப வருவித்துக் கொண்ட தொடர். இதற்கான தொடர் குறட்பாவில் இல்லை. பாட்டில் உவமங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான கருத்தியலைத்தான் பரிமேலழகர் இப்படிப் பதிவிட்டிருக்கிறார்.

    குறட்பாவின் அமைப்புச் சிக்கல்

    குறட்பாவில் விலங்கொடு மக்களை ஒப்பிட்டிருக்கும் முதற்பகுதிக்கு இணையாகக் ‘கற்றாரோடு ஏனையவர்’ என்னும் மறுபகுதி தரப்பட்டுள்ளது. குறட்பாவில் உள்ள இவ்வண்ணமே நிரல்படுத்தினால் ‘விலங்கொடு’ என்பதற்கு ‘கற்றாரோடு’ என்பதும் ‘மக்கள்’ என்பதற்கு ‘ஏனையவர்’ (கல்லாதவர்) என்பதும் பொருத்தமாக்க வேண்டியதிருக்கும். அப்படி அமைத்தால் பாட்டின் பொருள் இப்படி அமைந்துவிடும்.

    “விலங்கொடு மக்கள் இணையாவார். (அதுபோலக்) கற்றவர் கல்லாதவரோடு இணையாவார்” என்று அமைந்து ‘கற்றவர் விலங்குகள்’ என்றும் ‘கல்லாதவர் மக்கள்’ என்றும் பொருள்படும்”

    இப்படி அமைந்தால் அதிகாரப் பொருண்மையாகிய கல்லாமையது இழிவு சுட்டாததோடு முரண்பட்ட பொருளையும் தந்துவிடும் என்பதை அறியலாம்.

    நிரல் நிறை – பொருள்கோளா? செய்யுளணியா?

    நிரல்நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்னும் நான்குவகைப் பொருள்கோளை மட்டும் தொல்காப்பியம்,

    “அவற்றுள் நிரல்நிறை தானே
    வினையினும் பெயரினும் நினையத்தோன்றி
    சொல்வேறு நிலைஇப் பொருள் வேறு நிலையல்” 4

    என்னும் நூற்பாவில் ஆராய்ந்திருக்கிறது. செய்யுள் தொடர்பான இந்த ஆராய்ச்சி சொல்லதிகார எச்சவியலில் நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனி, இதற்கு அடுத்த நிலையில் ஆற்றுநீர், மொழிமாற்று, நிரல்நிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டு கூட்டு, அடிமறி மாற்று எனப் பொருள்கோளை எட்டாக ஆராய்ந்திருக்கும் நன்னூலார் ‘நிரல்’ என்பதைப்,

    “பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
    வேறு நிரல்நிறீஇ முறையினும் எதிரினும்
    நேரும் பொருள்கோள் நிரனிறை நெறியே” 5

    என்னும் நூற்பாவில் ஆராய்ந்திருக்கிறது. இந்த நூற்பாவில் தான் ‘எதிர்நிரல் நிறை’ என்னும் தொடர் பயின்று வந்துள்ளது. இந்த எதிர்நிரல் நிறையணியை (கட்டுரைப் பொருள் விளக்கத்திற்கு மட்டுமாதலின் நேர்நிரல்நிறை விளக்கம் கட்டுரையாளரால் தவிர்க்கப்படுகிறது) விளக்க வந்த சங்கர நமசிவாயர்,

    “ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார்? வெஃகாவும்
    பாடகமும் ஊரகமும்  பஞ்சரமா – நீடியமால்
    நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
    மன்றுஆர் மதிற்கச்சி மாண்பு? 6

    என்னும் வெண்பாவை எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த வெண்பாவில் வெஃகா, பாடகம், ஊரகம் என்னும் மூன்று பெயர்களும் நின்றான் இருந்தான் கிடந்தான் என முறைமாறி நிற்க, இவற்றை பெயர்ப்பயனிலைகளும் வினைப் பயனிலைகளுமாய் நின்ற எதிர் நிரல் நிறை என எழுதுகிறார். 7 வெஃகாவில் கிடந்தான், பாடகத்தில் இருந்தான், ஊரகத்தில் நின்றான் என்னும் பொருத்தத்தை இதே வெண்பாவை எடுத்துக்காட்டி உரையெழுதும் தண்டியலங்கார உரையாசிரியர் சுப்ரமணிய தேசிகர் ‘நிரலே நிறுத்தி மாற்றிப் பொருள் கொள்வது’ என எழுதியமைகிறார். தண்டியலங்காரத்தில் ‘எதிர் நிரல்நிறை’ அல்லது ‘மயக்க நிரல்நிறை’ என்னும் சொல்லாட்சிகள் பயிலப்பட்டிருப்பதாக அறியக் கூடவில்லை. இன்றியமையாக் கருத்து என்னவெனின் நன்னூலில் பொருள்கோள். தண்டியலங்காரத்தில் பொருளணி.

    யாப்பருங்கலக் காரிகை நூலாசிரியர், ‘பொருள்கோள்’ என ஒருசொல் உரைத்து ஒழிய, உரையாசிரியர் குணசாகரரோ “நிரல்நிறை மொழி மாற்றம், சுண்ணமொழி மாற்றம், அடிமொழி மாற்றம், பூட்டுவிற் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள்கோள், அளைமறி பாப்புப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள் என எட்டு வகையாக ஆராயப்படும் என உரையெழுதி,

    “நிரனிறை இரண்டு வகைப்படும் பெயர் நிரல் நிறை, வினை நிரல்நிறையும் என” 8

    அதன் வகைகளைப் பதிவு செய்திருக்கிறார். காரிகையாசிரியர் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களைப்போல இதுபற்றி ஏதும் கூறவில்லை. நிரல்நிறை அணிகளுக்கு எடுத்துக்காட்டுக்களைக் காட்டும் குணசாகரர்,

    “இனி முறை நிரல் நிறை, எதிர் நிரல் நிறை, மயக்க நிரல்நிறை, மிகையெண் நிரல்நிறை, குறையெண் நிரல் நிறை என்று கொள்வாரும் உளர்” 9

    என்றும் கூறுகிறார். இங்கே இவர் காட்டிய இத்தனை நிரல் நிறைகளுக்கும் பொதுவாக இரண்டு பாடல்களை மட்டும் காட்டியதோடு பொருள்கோளைப் பற்றிய குணசாகர் தனது விளக்கத்தை முடித்துக் கொள்கிறார்.

    அணியிலக்கணம் ஆராயும் வடமொழிச் சார்பு நூலான தண்டியலங்காரத்தில் நிரல்நிறை என்பது செய்யுளுக்கான பொருளணியாகவே கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.

    “நிரல்நிறுத்து இயற்றுதல் நிரல் நிறை யணியே” 10

    என்னும் அணியிலக்கண நூற்பாவிற்கு உரையெழுதிய தேசிகர்,

    “சொல்லையும் பொருளையும் நேரே நிறுத்தி நேரே பொருள் கொள்வது நிரல் நிறையணி என்னும் அலங்காரமாம். நிரல் நிறுத்துதல் என்னாது ‘இயற்றுதல்’ என்றமையின் மொழிமாற்றிப் பொருள் கொள்வதூஉம் கொள்க” 11

    என்று நூற்பாவிற்கு உரையெழுதி அவ்விரண்டற்கும் பின்வரும் நேரிசை வெண்பாக்களை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

    “காரிகை மென்மொழியால் நோக்கால் கதிர்முலையால் வார்புருவத்தால் இடையால் வாய்த்தளிரால் – நேர் தொலைந்த
    கொல்லி வடிநெடுவேல் கோங்கரும்பு விற்கரும்பு
    வல்லி கவிர்மென் மலர்” 12

    என்னும் வெண்பாவில் மென்மொழி, நோக்கு, கதிர்முலை, புருவம், இடை, வாய் எனப் பொருட்களை முன்னர் நிறுத்தி, அவற்றுக்கு நிரலாகக் கொல்லிப்பண், நெடுவேல், கோங்கரும்பு, கரும்புவில், கொடி, மலர் என உவமங்களைப் பின்னர் நிறுத்தி, நேர் நிரல் நிறை என விளக்கம் தருகிறார்.13 அதாவது பொருளின் நிரலுக்கு ஏற்ப (வரிசைக்கு ஏற்ப) உவமங்களின் நிரலும் அமைவதால் இது நேர் நிரல் நிறை அணி என்று பெயராம். இனி,

    “ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார்? வெஃகாவும்
    பாடகமும் ஊரகமும்  பஞ்சரமா – நீடியமால்
    நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
    மன்றுஆர் மதிற்கச்சி மாண்பு?”14

    என்னும் (சங்கர நமசிவாயர் காட்டிய அதே) வெண்பாவில் வெஃகா, பாடகம், ஊரகம் என்னும் காஞ்சித் திருப்பதிகளில் வீற்றிருக்கும் பெருமாளின்  கோலங்கள் நின்றான், இருந்தான், கிடந்தான் எனக் கூறப்பட்டுள்ளன. இது முந்தைய திருப்பதிகளில் எழுந்தருளியிருக்கும் கோலங்களுக்கு முரணானது. இவை வெஃகாவில் கிடந்தான், பாடகத்தில் இருந்தான், ஊரகத்தில் நின்றான் என இருந்திருக்க வேண்டும். இவ்வாறு சொற்களை மாற்றி நிரலாக வைத்துப் பொருள் காண்பதற்கு ‘மொழிமாற்றிப் பொருள் கொள்வது’ என உரையாசிரியர் தேசிகர் எழுதுகிறார்.

    தண்டியலங்கார உரை மயக்கம்

    தண்டியலங்காரம் அணியிலக்கணம் கூறும் நூல் என்பது தெரியும். தலைப்பிலும் பொழிப்புரையிலும் அணி, அலங்காரம் என்னும் சொற்கள் பயின்று வந்துள்ளன. சொற்களை மாற்றி உரைகாண்கையில், ‘மொழிமாற்றிப்பொருள் கொள்வதூஉம் கொள்க’ 15 என்னும் குறிப்போடு அமைந்துவிடுகிறதேயன்றி அதற்கொரு அணிப்பெயர் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் தண்டியலங்காரத்தைப் பொருத்தவரையில் ‘நிரல்நிறை’ என்பது ஓர் அணிவகை எனவும் அது நிரலாகவும் மாறுபட்டும் அமையும் என்பதுமாகிய இரண்டு கருத்துக்கள் பெறப்படுகின்றன. மயக்க நிரல்நிறை அணி பற்றிய அல்லது பொருள்கோள் பற்றிய எந்தக் கருத்தினையும் தண்டியலங்காரத்தினின்றும் பெற இயலவில்லை.

    நிரல்நிறை அணி பற்றிய சில வரையறைகள்

    தொல்காப்பியம், நன்னூல், காரிகை, தண்டியலங்காரம் ஆகிய நூல்களிலிருந்து கிட்டிய மேற்கண்ட தரவுகளால் பொருள்கோள் அல்லது அணி பற்றிய பின்வரும் கருத்துக்கள் வரையறுக்கப்படுகின்றன.

    • தொல்காப்பியம் நான்குவகைப் பொருள்கோளை மட்டும் ஆராய்கிறது. அணியிலக்கண ஆராய்ச்சி அங்கே இல்லை.
    • நன்னூல் ஒன்பது வகையாகப் பொருள்கோளை ஆராய்ந்திருக்கிறது.
    • காரிகையாசிரியர் ‘பொருள்கோள்’ என ஒரு சொல்லை மட்டும் குறித்து அணி பற்றி ஏதும் கூறாத நிலையில் உரையாசிரியர் குணசாகரர் ‘பொருள்கோள்’ என்பதற்கான விளக்கத்தை எட்டு வகையில் ஆராய்ந்திருக்கிறார்.
    • தண்டியலங்காரத்தில் பொருள்கோளைப் பற்றி ஏதுமில்லை. உரையாசிரியர் நிரல் நிறையணியை இரண்டாகப் பகுத்தாராய்ந்திருப்பதோடு அது நிறைவடைகிறது.
    • மயக்க நிரல்நிறை என்பது பற்றிய குறிப்போ விளக்கமோ மேற்கண்ட எந்த நூல்களிலும் எந்தப் பகுதியிலும் ஆராயப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

    இவற்றிலிருந்து ‘நிரல் நிறை’ என்பது பெரும்பாலும் பொருள்கோள்களில் ஒன்று என்பதும் அதனை அணியாகவும் அணியிலக்கணமுடையார் வரித்துக் கொள்கிறார்கள் என்பதும் மயக்க நிரல்நிறை பற்றிய எந்தக் குறிப்பையோ விளக்கத்தையோ இந்த நூல்களில் இருந்து பெறவியலவில்லை என்பதும் பெறப்படுகின்றன.

    நிரல் நிறை அணி – திருவள்ளுவரும் அழகரும்

    பழந்தமிழ் இலக்கணம் வல்லார்க்கு அணியிலக்கணம் உடன்பாடன்று என்பதும் தொல்காப்பியம் அணியிலக்கணம் பற்றி ஏதும் கூறவில்லை என்பதும் உவமத்தையும் அது பொருட்பகுதியாகவே கருதியிருக்கிறது என்பதும் உரையாசிரியர்களில் சேனாவரையரே அவ்விலக்கணச் சுவையுடையார் என்பதும்  ஆய்வறிஞர்களால் கண்டு வெளிப்படுத்தப்பட்ட ஆய்வு முடிவுகளாகும்.  திருக்குறளுக்கும் இக்கொள்கை பொருந்தும். அணியிலக்கணப் பயன்பாடு பல்கிப் பெருகிய பிற்காலத்தைச் சார்ந்த உரையாசிரியர்கள் பழந்தமிழ் நூல்களை அணியழகோடு நோக்கி உரையெழுதுவதை ஓர் உரைநெறியாகக் கொண்டதன் காரணமாகப் பரிமேலழகரின் உரைகளில் அணியிலக்கணக் குறிப்புக்கள் விரவியுள்ளன. அந்த வகையில்,

    “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது” 16

    என்னும் குறட்பாவிற்கு,

    “ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டல் ஆகிய அறத்தினையும்  உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும்…….நிரல் நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகாவழி இல்லறம் கடைபோகாமையின் அன்புடைமை பண்பாயிற்று. அறனுடைமை பயனாயிற்று.” 17

    என விளக்கம் தருகிறார். இந்த விளக்கத்தில் அன்பும் அறனுமாகிய பண்புகள் எதனுடைய உடைமையெனின் அது இல்லறத்தின் உடைமை என்பது பரிமேலழகரின் நுண்ணியம். இதனை ‘இல்லறம் கடைபோகாமையின்’ என்னும் சொல்லால் குறித்தமை நோக்குக. இந்த விளக்கத்தில் பரிமேலழகர் ‘நிரல் நிறை’ எனக் குறிப்பதோடு அமைந்துவிடுகிறாரேயன்றி ‘அணி’ என்னும் சொல்லைத் தவிர்த்துவிடுகிறார். இந்த நெறி பல குறட்பாக்களின் இவர் உரைகளில் பரவலாகக் காணப்படுகின்ற ஒன்றாகும். “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை” 18 “இனமென்னும் ஏமப்புணை’ என்ற ஏகதேச உருவகத்தால்” 19 என்பன காண்க. இதனால் அவர் ‘அணி’ என்னும் சொல் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிடுகிறார் என்பது பொருளன்று. வேறு சில இடங்களில் முழுமையாக ‘அலங்காரம்’20 என்றே கூறுவதையும் காண முடிகிறது.

    பரிமேலழகர் காட்டும் மயக்க நிரல்நிறை

    ‘குறட்பாவின் அமைப்புச் சிக்கல்’ என இக்கட்டுரையில்  தொடக்கப்பகுதியில் முன்னெடுத்த கருத்துக்களின் மேல் கற்பார் கவனம் ஈர்க்கப்படுகிறது.

    “விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
    கற்றாரோடு ஏனை யவர்” 21

    என்பது குறட்பா. இந்தக் குறட்பா,

    “விலங்கொடு மக்கள் அனையர்
    கல்லாதவரோடு கற்றவர்”

    என்னுமாறு அமைந்திருந்தால் சிக்கல் எழுந்திருக்காது. முதலடியின் பொருண்மைக்கும் அடுத்த அடியின் பொருண்மைக்கும் முரண் நிலவுவதும் முன்பே சுட்டப்பட்டது.

    “விலங்கொடு மக்கள் அனையர்” என்னும் தொடருக்கு “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்”  (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்” என்னும் தொடருக்கு விளங்கிய நூலைக்கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்”

    என்னுமாறு அவருடைய சீர் பிரிப்பும் பொழிப்புரையும் அமைந்திருக்கிறது. இந்தப் பொழிப்புரையில்தான் அவர் ‘மயக்க நிரல்நிறை’ என்பது பற்றிச் சிந்தித்திருக்கிறார். முறையாக நின்றால் நிரல். முறைமாறி நின்றால் மயக்க நிரல். பாட்டின் அமைப்பு எங்கே மயக்கம் நிலவுகிறது? கருத்தில்! அது பற்றி இரண்டாது பத்தியில் ஆராயப்பட்டுள்ளது. எனவே அந்த மயக்கத்தை ஒரு புதிய கோணத்தில் கண்டு நீக்குகிறார் பரிமேலழகர். எது அந்தப் புதிய கோணம் என்றால், “தீயதை நோக்க நல்லதன் நன்மை எவ்வளவு உயர்ந்ததோ நல்லதை நோக்கத் தீயதன் தீமை அத்தனை தாழ்ந்தது! இந்த உயர்வும் தாழ்வும் ‘அத்தனை’ என்னும் அளவு சார்ந்தது. இப்போது பரிமேலழகர் உரையை நோக்கினால் ‘மயக்கநிரல்நிறை’ என்பதை எவ்வளவு நுட்பமாக விளக்கியிருக்கிறார் என்பது புரியக் கூடும்.

    “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்”  (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்”22

    எனவே மயக்கம் பொருள்களின் ஒப்பீட்டில் இல்லை. நன்மை, தீமை என்னும் அளவில் இருக்கிறது. முதல் ஒப்பீடு நன்மை. பின்னதில் அந்த ஒப்பீட்டு அளவு தீமை. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால்,

    “விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு நல்லவர்களோ அவ்வளவு நல்லவர்கள் படித்தவர்களை நோக்கப் படிக்காதவர்கள்! என்னும் கருத்தியலை (குறள் நிரலில் இப்படித்தான் ஐயம் எழும்) பரிமேலழகர் மடைமாற்றம் செய்கிறார் “இல்லை இல்லை! அவ்வளவு நல்லவர்கள் இல்லை அவ்வளவு தீயவர்கள்! என்று. இப்போது புரிகிறதா?

    எனவே மயக்க நிரல் நிறை என்றால் பொருள் மயக்கத்திற்குக் காரணமான நிரல்நிறை எனக் கருத முடியும்.

    நுண்ணியத்தின் மறுவடிவம் பரிமேலழகர்

    இந்தக் குறட்பாவிற்குத் தாம் எழுதிய பொழிப்புரைக்குச் சிறப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். நிதானம், பொறுப்பு, கூரிய நோக்கு, இலக்கண இலக்கியப் புலமை அத்தனையும் அந்த விளக்கத்தில் பொதிந்திருப்பதைக் காணலாம். அவர் விளக்கவுரை இப்படி அமைந்திருக்கிறது.

    “இலங்கு நூல் சாதிப்பெயர். விளங்குதல் – மேம்படுதல். விலங்கின் மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணே யாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர் அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால் அவர் மக்கட் பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது” 23

    விளக்கவுரையில் ஒளிந்திருக்கும் பரிமேலழகரின் உரையாளுமை

    • குறட்பாவில் ‘மக்கள்’ என்பது பன்மையாக, ‘விலங்கு’ என்னும் ஒருமைப் பயன்பாடு ஏலாதாதலின் அதற்கேற்ப ‘விலங்கு’ என்பதைச் சாதியொருமை என்கிறார். ‘விலங்குகளோடு மக்கள்’ என இருக்க வேண்டுமாம்.
    • ‘கற்றார்’ என்பது பன்மையாயிருக்க ‘நூல்’ என்னும் ஒருமைப் பயன்பாடு ஏலாதாதலின் அதற்கேற்ப ‘நூல்’ என்பதைச் சாதியொருமை என்கிறார். ‘நூற்களைக் கற்றார்’ என இருக்க வேண்டுமாம்.
    • மக்களாகிய பிறப்பே அதற்குரிய சிறப்பாகிவிடாது. மக்களாகிய சுட்டு நிகழ்வதற்குரிய காரணத்தைக் கொண்டால் மட்டுமே அவர் மக்கள் எனக் கருதப்படுவர். “மக்களாகிய சுட்டு யாதன் கண் நிகழும் அது மக்கட்சுட்டு” 24 எனச் சேனாவரையர் எழுதும் உரைப் பகுதியைக் கவனத்திற் கொண்டால் ‘மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணேயாதலின்” என்னும் பரிமேலழகர் உரையின் சிறப்பு அறியலாம்.
    • கற்றல் நிகழ்ந்தாலேயொழிய மானுடத்தால் பயனில்லை என்பார் (கற்றலின் பேரெல்லை பிற உயிர்களின் மேல் அன்பாதலின்) “இதனால் அவர் மக்கட் பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது” என்றார்.
    • நூல்களுக்கு இருக்க வேண்டிய அழகுகள் பத்து. அவை “சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல்” 25 என்னும் தொடக்கத்தன. அத்தகைய அழகுடைய நூற்களையே பயில வேண்டும் என்பார் ‘விளங்குதல்’ என்னும் சொல்லுக்கு மேம்படுதல் என உரைகாண்கிறார். ‘இலங்குநூல்’ என்பதற்கு ‘விளங்கிய நூல்’ எனச் சொற்பொருள் (பதசாரம்) எழுதி ‘விளங்குதல்’ என்பதற்கு ‘மேம்படுதல்’ என உரைகாணும் நுண்ணியம் காண்க. மேம்பாடு நூலுக்கென்று உணர்க.

    நிறைவுரை

    ஏற்ற தரவுகளைக் கொண்டு இதுகாறும் செய்யப்பட்ட ஆய்விலிருந்து ‘நிரல்நிறை’ பற்றிய இலக்கணம் ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்து வருகிறது என்பதும் அது பெரும்பாலும் பொருள்கோள் வகையில் ஒன்றாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது என்பதும் அப்பொருள்கோளும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஆசிரியன்மார்களால் ஒவ்வொரு வகையான எண்ணிக்கையில் ஆராயப்பட்டு வந்துள்ளது என்பதும் நிரல் நிறை என்பது பெயர் நிரல்நிறை, வினை நிரல்நிறை என்னும் இரண்டான பகுப்பிற்கும் ‘நேர்நிரல்நிறை, எதிர் நிரல்நிறை’ என்னும் வரையறைக்கும் ஆளாகியிருக்கிறது என்பதும் மயக்க நிரல்நிறை பற்றிய எந்தக் குறிப்பும் எந்த இலக்கண நூலிலும் தெளிவாக இல்லாத சூழலில் அது பற்றிய நுண்ணிய சிந்தனை பரிமேலழகருக்கு அமைந்திருந்தது என்பதும் அந்த நுண்ணியத்தாலேயே ஆய்வுக்குரிய ‘விலங்கொடு மக்கள் அனையர்’ என்னும் குறட்பாவின் பொருள் துலக்கம் பெறுகிறது என்பதும்” ஓரளவு புலனாகலாம். பரிமேலழகர் உரையை மறுக்கின்ற வல்லாளர் பலர் உளர். ஆய்வுக்குரிய இந்தக் குறட்பாவின் நுண்ணியத்தை உணர்வார் பரிமேலழகரின் உரைப்பேராற்றலை உணரலாம்.

    (தொடரும்)

    சான்றெண் விளக்கம்

    1. திருவள்ளுவர்                           திருக்குறள்                                                      கு.எண். 410
    2. பரிமேலழகர்                            மேலது உரை
    3. மேலது
    4. தொல்காப்பியர்                     தொல்காப்பியம் எச்சவியல்            நூ.எண். 887
    5. பவணந்தியார்                         நன்னூல்                                                               நூ.எண். 414
    6. சங்கர நமசிவாயர்               மேலது உரை
    7. மேலது
    8. குணசாகரர்                                 யாப்பருங்கலக்காரிகை உரை      கா.எண். 58
    9. மேலது
    10. தண்டி                                                 தண்டியலங்காரம்                                       நூ.எண். 67
    11. சுப்பிரமணிய தேசிகர்      மேலது உரை
    12. மேலது
    13. மேலது
    14. மேலது
    15. மேலது
    16. திருவள்ளுவர்                                திருக்குறள்                                                             கு.எண். 45
    17. பரிமேலழகர்                                 மேலது உரை
    18. மேலது                                                                                                                                                கு.எண். 1
    19. மேலது                                                                                                                                                கு.எண். 306
    20. மேலது                                                                                                                                                கு.எண். 475
    21. திருவள்ளுவர்                               திருக்குறள்                                                                கு.எண். 410
    22. பரிமேலழகர்                                 மேலது உரை
    23. மேலது
    24. சேனாவரையர்                           தொல்.சொல். உரை                                          நூ.எண். 1
    25. பவணந்தியார்                             நன்னூல்                                                                        நூ.எண். 13

    துணைநூற் பட்டியல்

    1. அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ
    சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    2. குணசாகரர் (உ.ஆ.) யாப்பருங்கலக்காரிகை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    3. சுப்பிரமணிய தேசிகர் தண்டியலங்காரம் உரை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1963

    4. தண்டி தண்டியலங்காரம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1963

    5. திருவள்ளுவர் திருக்குறள் – பரிமேலழகர் உரை
    வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
    உமா பதிப்பகம், சென்னை – 600 001
    முதற்பதிப்பு – 2009

    6. தொல்காப்பியர் தொல்காப்பியம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    7. பரிமேலழகர் (உ.ஆ.) திருக்குறள் உரை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    8. பவணந்தியார் நன்னூல்
    உலகத் தமிழாராயச்சி நிறுவனம்
    தரமணி, சென்னை
    முதற்பதிப்பு – 1999

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 21

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 21

    மீனாட்சி பாலகணேஷ்

    (பாவை விளையாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பாவைகளை வைத்து, அவற்றைத் தமது குழந்தைகளாகப் பாவித்து அவற்றிற்குப் பாலருத்துவித்தும், நீராட்டியும், உணவூட்டியும், உறங்கவைத்தும் சிறுமியர் விளையாடுவது வழக்கம். இவையனத்தும் உளவியல் தொடர்பான நிகழ்வுகள். சிறுமியின் உடலுடன் உள்ளமும் வளர்ந்து வருங்காலை, அன்பான குடும்பங்களில் தாய்மார் செய்வதுபோன்றே, சிறுகுழந்தைகளை அவள் சீராட்டுவது போன்றும், தனது விளையாட்டுப்பாவைகளை சிறுகுழந்தையாகப் பாவித்து ஏழெட்டு வயதுச்சிறுமி விளையாடுவாள். அவளுடைய அன்றாட வாழ்வின் இன்றியமையாத செயல்கள் இவை! வளர்ந்து, ஆடிக்களித்து, பருவமங்கையாகி, களவும் கடிமணமும் புரிந்து வாழப்போகும் பெண்மையின் உணர்வுகள் விழித்தெழுந்து உள்ளத்தில் வேரூன்றும் சிறுபருவம். தங்கமதலையரை ஈன்றெடுத்து அமுதூட்டி நன்மக்களாக வளர்க்கப் போவதன் முன்னோட்டம் இதுவல்லவா?

    இதனைக் ‘குழமணம் மொழிதல்’ என்ற ஒருசெயலை மட்டுமே வைத்து ஒரு பருவமாகக் கூறியுள்ளது பிங்கலநிகண்டு. அதாவது, தமது பாவைகளுக்கு மணம்பேசி முடித்து, அதனை நிகழ்த்தி, விருந்துண்டு மகிழ்வது எனும் பிள்ளை விளையாட்டே இதுவாகும். மேற்கூறிய அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய செய்திகளாதலின் இதனுள் அடங்கும் என நாம் கொள்ள வேண்டும். ‘உலா’ எனும் சிற்றிலக்கிய இலக்கணப்படி, 4-8 வயது சிறுமி பேதை எனப்படுவாள். ‘அவளுக்குரியதே சிற்றில் விளையாட்டும் அதன் பல அங்கங்களும்,’ என்பது தமிழ்த்தாத்தா உ. வே. சா. அவர்கள் கூற்று1.

    பாவைகள் பலவகைப்படும். பாவைநோன்புக்கான பாவைகள் ஆற்றுமணலினால் செய்யப்படும் என அறிகிறோம். ஆனால் இது பாவை விளையாட்டு. சிறுமியர் தம் கையாலெடுத்துச் சீராட்டிப் பாலூட்டி, உறங்கவைக்க பாவைகள் உறுதியாக இருக்க வேண்டுமன்றோ? இவை சிவந்த சந்தனமரத்தினால் செய்யப்படும். ‘மரப்பாச்சி’ என்று கூறுவர். இவற்றிற்குச் சிறுமியர் ஆடைகள் உடுத்தி, தாம் வேண்டும்விதம் அழகுசெய்து விளையாடுவர். இன்றும் இப்பொம்மைகள் புழக்கத்தில் உள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இவை இல்லாதபோது, பாவைகள் பழந்துணிகளாலும் தென்னோலையாலும் செய்யப்படுவதும் உண்டு.

    ‘பாவைவிளையாடல்’ என்பதனை ஒரு பருவமாக மூன்று பாடல்களுடன் நாம் காண்பது நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றியுள்ள தில்லைச்சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஒன்றில் மட்டுமே ஆகும். ஆயினும் பாவை விளையாடலின் தொடர்பான கூற்றுக்களை மற்றுமுள்ள பல பிள்ளைத்தமிழ் நூல்களில் பல பருவங்களில் குறிப்பிடக் காண்கிறோம். சிலவற்றை இங்கு நினைவுகூர்தல் நன்மை பயக்கும்.

    சேயூர் முருகன் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்தில் தமது சிற்றிலை அழிக்க முற்படும் சிறுவனான குமரப்பெருமானிடம் அச்சிற்றிலை இழைத்த சிறுமியர் வேண்டுவதாக அமைந்ததொரு பாடல்:

    “நாங்கள் உலைப்பெய்து சமைத்த உணவு, அதனை வைத்த பெரும் சிப்பிகள் (நந்தின் கடம்), அடுப்பென எரியும் மாதுளைமலர்கள் ஆகியன அழிந்துபடுமே!

    “நாங்கள் திருமணம் என்று கூறிக் கொண்டுவந்த சிறுவிருந்தும் வீணாகிப் போகாதோ?”

    ஆண்பாற் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்தில் நாம் கண்டதொரு காட்சியின்படி (இத்தொடரின் பாகம் 8.1) இவர்கள் உலையேற்றிச் சமைப்பது ஒரு பாவனை விளையாட்டே. பாவைத் திருமண விருந்திற்கு அவரவர்கள் இல்லங்களிலிருந்து தாய்மார்களிடமிருந்து உண்மையான சுவையூறும் தின்பண்டங்களை முறைவைத்துக்கொண்டு பெற்று வருவர்; பகிர்ந்துண்ணுவர் என அறிகிறோம். (எம் தலைமுறையைச் சேர்ந்த பெண்மணிகள் தம் பிள்ளைப்பருவத்தில் இவ்விளையாட்டை விளையாடியிருப்பதனால் அறிவர்!!)

                 நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
                       நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
             ………………………………………………………………….. அடியேம் வதுவையெனச்
                       சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ2

    அடுத்த வரிகள் பெண்குழந்தையின் கவனிக்கும், உய்த்துணரும் திறனை நமக்கு உணர்த்துகின்றன. தம் தாய்மார்கள் பச்சிளம் குழவியர்க்கு முலைப்பால் அருத்துவிப்பதனைக் கண்டிருக்கும் இவர்கள் தாமும் தம் பாவைகளுக்கு அவ்வாறு செய்ய முற்படுகின்றனர். முகைப்புண்டரிகம் எனும் தாமரைமொட்டுக்களை இன்னும் வளர்ச்சியடையாத தம் மார்பில் கட்டிக்கொண்டு (உரம் பிணித்து), அதனை முலை என்று பாவித்துக்கொண்டு பாவைகளுக்குப் பாவனையாக முலைப்பால் கொடுக்கின்றனர். ஐந்தாறு வயதுச் சிறுமியரின் உய்த்துணரும் திறன் வியக்கத்தக்கதாம். ‘சிற்றிலைச் சிதைத்தால் இவ்வாறு பால்கொடுத்துப் பின் உறங்கவைத்த அக்குழவி கண்விழித்தெழுந்து அழாதோ?’ எனவும் கேட்கின்றனர்.

                முகைப்புண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
                       மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
             திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
                       சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே2.

    திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ் சிற்றிற்பருவப்பாடல் இன்னொரு நயத்தை விரிக்கின்றது. திருமணம் என்பது ‘ஆயிரங்காலத்துப் பயிர்’ எனப் பெரியோர் கூறுவதனைக் கேட்டுள்ள சிறுமியர், தாமியற்றும் பாவை மணமும் ‘பலவாறு முயன்று அலைந்து திரிந்து’ நடத்தும் மணவினை என்பதாகக் கூறுவது வியப்பையும் நகையையும் ஒருசேரக்கூட்டுகின்றது.

    “உன் தந்தையான சிவபிரான் முன்பு புத்தூரைச் சேர்ந்த பாவை ஒருத்தியின் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய காரணத்தால் பின்னொருநாள் இருகால்களும் நோகும்படி, திருவாரூர் வீதியெங்கும் இரவில் பலமுறை நடந்தலைந்ததனை நீ அறியாயோ?”

    புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் மகளுடனான சுந்தரரின் திருமணத்தைத் தடுத்து, அவரைத் தன்னடிமையாக்கி ஆட்கொண்டான் சிவபிரான். பின்பு அந்த சுந்தரருக்காகவே, அவரிடம் பிணக்கு கொண்ட அவருடைய மனைவியாகிய பரவை நாச்சியாரிடம் பலமுறை திருவாரூர் வீதிகளில் திரிந்தலைந்து தூது சென்றான் அவ்வீசன். இதனைச் சிறுமிகள், ‘அவன் முதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய பாவத்திற்காகத்தான் இங்ஙனம் திரிந்தலைந்தான்,’ என்று கூறுகின்றதாகப் புலவர் அமைத்துள்ள நயம் வியக்கத்தக்கதாம்.

    “அதுபோன்று நீயும் எம் பாவையின் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவையாயின், உன் மலர்ப்பாதங்கள் நோகும்வண்ணம் எத்துணை பெண்களிடம் தூதாக நடக்க வேண்டிவருமோ?” எனவும் இகழ்ச்சியாகக் கூறுகின்றனர்.

                ‘உந்தை புத்தூர் வருபாவை ஒருத்தி மணத்தை ஒருகால்முன்
                       ஒழித்த பவத்தால் இருகாலும் உறுத்த ஆரூர் வீதியெலாம்
             முந்தை யிருளில் நடந்தலைந்த முறைமை யறியாய்ப் பலகாலும்
                       முயன்று பாவை பலர்க்குமணம் முடிக்கக் கருதும் வேளையிடை
             வந்து சிதைத்தி யிப்பாவம் மலர்க்கால் சிவக்க எத்தனைகால்
                       மகளிர் பால்நீ தூதாக வருந்தி நடக்கப் புரிந்திடுமோ3?’ என்பது பாடல்.

    மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்து இனிய பாடலொன்று பாவைவிளையாட்டின் மற்றுமொரு சுவையான காட்சியைக் கண்முன் விரிக்கின்றது.

    தமது சிற்றிலை அழிக்க ஓடோடிவரும் சிறுவனான தென்பேரைநாதனிடம் சிறுமியர் கைகூப்பி வேண்டுகின்றனர்: “அன்பாக அணைத்து, முலைப்பால் ஊட்டி, புனலில் நீராட்டி, அருமையாகக் கண்களுக்கு மையிட்டு அலங்கரித்து, ஆரங்களை அணிவித்து, பட்டாடை உடுத்தி வைத்துள்ள என் மகவுக்கு (பாவைக்கு) உனது திருப்பெயரையே சூட்டுவேன். தயவுசெய்து எமது அழகான சிற்றிலை அழிக்கவேண்டாம்,” என்கின்றனர்.

                அன்போடணைத்து முலைகொடுத்தின்
                      னமுதூற்றறிருக்கும் புனலாட்டி
             அருங்கட் கடைக்கஞ் சனமெழுதி
                       ஆரந் திருத்திப் பட்டுடுத்தி
             உன்பே ரிடுவே னென் குழவிக்கு4
                       …………………………….

    வீட்டுப் பெரியவர்கள் பெயரையோ தெய்வங்களின் பெயரையோ சிறுகுழந்தைகளுக்கு இடும் வழக்காற்றை இச்சிறுமிகள் கண்டு உணர்ந்துள்ளனர் என்பது இதனாற் புலனாகின்றது அல்லவோ?

    பெண்குழந்தைகளின் விளையாட்டை ஊன்றி நோக்கிய புலவர் பெருமக்களால்தான் இவ்வாறு சுவைபடப் பாடவியலும்!

    இதுபோன்று பலவிதமான நயமிகுந்த பாடல்கள் இவ்விலக்கியம்தோறும் விரவிக் கிடப்பதனைக் காணலாம்.

    இனி பாவைவிளையாடல் எனும் பருவத்தில் உள்ள பாடல்களைக் கண்டு களிப்போமா?

    தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழினை இயற்றியவர் ஒரு சக்தி உபாசகர். அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவரான அவருக்கு அன்னை சிறுமியாய் விளையாடும் விளையாட்டுக்கள் அனைத்துமே அகக்கண்ணில் அவளுடைய திருவிளையாடல்களாகக் காண்கின்றன.

    தெய்வங்களின் பாவைகள், மானிடர் வடிவங்கள், விலங்குகள், கடலில்வாழும் உயிர்கள் இவற்றின் பாவைகள், பறவைகளின் பாவைகள், தரையில் ஊர்ந்துசெல்லும் புழுபூச்சிகளின் பாவைகள், மரம், செடி, கொடி எனும் அனைத்துப் பாவைகள் என ஓரறிவு உயிர்முதல் ஐந்தறிவு, ஆறறிவு படைத்த உயிர்கள்வரை அனைத்துமே பராசக்தி தன் விளையாட்டிற்காக உருவாக்கி வைத்துள்ள பாவைகளாம். இந்தப்பாவைகளை எல்லாம் எண்பத்து நான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களில் இவளே செய்கிறாளாம்.

              “வல்ல தெய்வப் பாவை மானிடப்
                       பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
             மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
                       மருவு பறவைப் பாவையும்
             ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும் (ஒல்லை- விரைவு)
                       பாவையும் உறும் தாவரப் பாவையும்
              ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப் (ஒருபொறி- ஓரறிவு)
             பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்5
    …………………………………………” என்பன பாடல் வரிகள்.

    இப்பாடலில் உட்கருத்தாகப் பரிணாம வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் பொதிந்துள்ளதனைக் காணலாம். ஓரறிவு படைத்த உயிர்களான புல், மரம் ஆகிய தாவரப் பாவைகள், ஈரறிவுயிர்களான சிப்பி, கிளிஞ்சல் ஆகிய கடல்வாழ் உயிரினங்கள், மூவறிவு படைத்த உயிர்களான ஊர்ந்து செல்லும் எறும்புகள் முதலியனவும், நான்கறிவு கொண்டவையான நெளிந்து ஊர்ந்து செல்லும் சிலவகைப் புழுபூச்சியினங்களும், ஐந்தறிவு கொண்ட உயிர்களான பறவை இனங்களும், பஞ்சபூதங்களாலான உடல்களில் ஒன்றன்பின் ஒன்றாகப் படைக்கப் பட்டிருப்பதனை பாடல் வரிசைக்கிரமமாக விளக்குகிறது. மானிடர் ஆறறிவு படைத்த உயிர்களாகக் கருதப்படுவர்.

    இவற்றை அன்னையின் விளையாட்டாகக் கொள்வது அடியார்களின் நோக்கு. ‘இயற்கை நிகழ்வு’ என நாம் பல காலங்களாகப் பயின்றுவரும் பரிணாம வளர்ச்சி எனும் அறிவியல் சிந்தனை, அவ்வியற்கையையும் இயக்கும் இறைத்தத்துவமாக அடியார்கள் சிந்தையில் பதிந்துள்ளது என்பதனை நாம் கண்டு சிந்திக்கத்தக்கதாகும்.

    அடுத்துக்காணும் பாடலில் அன்னையை இளம் சிறுமியாகக் கண்டு மகிழ்வார் புலவர். சிறுமியர் விளையாடும் சிற்றில் எனும் சிறுவீடமைத்தல், சிறுசோறடும் விளையாட்டு, பாவைவிளையாட்டு ஆகியன அழகிய இப்பாடலில் ஒருசேரக் கூறப்பட்டுள்ளன.

    மணமாகாத இளமைப்பருவத்தில் சிறுமியர் சிலபொழுது தமக்குள் ஒருவரையொருவர் மணப்பெண் – மணவாளன் என்று முறைப்படுத்திக்கொண்டு மணமாலை சூட்டி திருமணச் சடங்கு செய்து விளையாடுவர். பின்பு தோழியர் புது மணப்பெண்ணுக்குச் சட்டுவம் பிடித்துச் சமையல்செய்யப் பழக்கித் தருவர்! பின்பு, ஒரு சிறுமகவைப் பிள்ளையாக்கி வைத்து அழும் அப்பிள்ளையின் அழுகையை நிறுத்தி, சேலையால் கட்டிய தூளியில் (ஏணையில்) இட்டுத் தாலாட்டவும், ‘நீ அழவேண்டா’ என்று கையிலெடுத்துப் ‘பால் உண்ணுக’ என்று முத்தமிட்டும், பிறர்காணாதபடி மறைவாக மார்பிலணைத்து முலைப்பால் கொடுத்தும் (கொடுப்பதுபோல் நடித்தும்), அதற்காக நாணங்கொண்டு தலைகவிழ்ந்தும் நிற்கும்வண்ணம் நீ பொற்பாவைகளைவைத்து விளையாடுக! என வேண்டும் பாடல்.

                கன்னியில் மணற்சிற்றில் விளையாடும்போது
                       முக்கண்ணி நீ தேவியெனவும்
             கடவுள் மணவாளனென மணமாலை
                       சூட்டவும்……………………..
             …………………………………………..
             ……………………………… ஊறுபால்
                       உண்ணுக என மணிவாயில் முத்தமிட்டு
             மார்பத்து எடுத்து அனைத்தும் பால்
                      கொடுத்து அயலின் மற்று நாணிக் கவிழ்த்தும்
             ………………………………………
             பரம சிவகாம சுந்தரி அம்மை
                      இனிய பொற்பாவை விளையாடி அருளே6!

    இதில் பொய்தல் விளையாட்டின் அனைத்துச் செயல்களையும் அழகுற விவரித்துள்ளதனைக் காணலாம்.

    இம்மூன்று பாடல்களில் ஒன்று பரிணாம வளர்ச்சி தொடர்பான இறைத் தத்துவத்தினையும், இன்னொன்று சிறுமியர் விளையாட்டைப் பூரணமாக அதன் சிறுநிகழ்வுகளுடன் சுவைபடவும் விவரிக்கின்றது. மூன்றாம் பாடலில் புலவரின் கவிதைத் திறனையும் அது பொதிந்துதரும் பல இனிய செய்திகளையும் கண்டு களிக்கலாம்.

    பாவை எனும் சொல்லை இப்பாடலில் திரும்பத்திரும்ப ஒன்பதுமுறை பயன்படுத்தி வெவ்வேறு கருத்துக்களைக் கூறுகின்றார்.

    உலகிற்குத் தலைவியாக விளங்கும் அம்மையான இவள் பாம்புகளாலான அணிகளையும், செம்பொன் நவமணிகளால் இழைத்த மாலைகளையும் அணிந்து விளங்கும் பாவை!

    உலகங்கள் அனைத்தையும் ஒருசேர ஆளவந்த பாவை!

    கிட்டுவதற்கே அரிதான குடிலை எனப்படும் பிரணவ மந்திரம் உலகத்தோருக்குக் கிடைக்கும்படி அருள் செய்யவந்த பாவை!

    உலக அதிசயம் எனக் கூறப்படும் கொல்லிப் பாவையும் இவளே!

    (கொல்லிப்பாவை என்பது அதிசயமானதொரு செய்தி! நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் உறையும் இக்கொல்லிப்பாவை ஒரு பெருநிலையான தெய்வமாவள். கொல்லிமலைக் குடவரையில் விளங்கும் இப்பாவைபற்றி கொங்குமண்டல சதகம் எனும் நூலில் சுவையானதொரு விளக்கம் காணலாம்).

    வணங்கிப் போற்றத்தக்கதொரு தெய்வப்பாவை!

    பல உயிர்களுக்கும் வீடுபேற்றை அருளக்கூடிய தாயாகிய சித்திரப்பாவை!

    விந்து, மோகினி, மான் எனக் கூறப்படும் சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி எனப்படும் மாயைகள் ஊழிக்காலத்தில் தன்னுள் அடங்கிவிடும் ஆதாரமான பாவை.

    மெய்ப்பொருளான தெய்வத்தைப் பரவி வழிபடுபவர்களும், பாடுவோரும்  அடைகின்ற சித்தி, முத்தி ஆகியவற்றின் வடிவான பொற்பாவை!

    ‘சிவகாமசுந்தரி அம்மையே, நீ பலவகையான பொற்பாவைகளை வைத்து விளையாடியருளுக!’ என வேண்டும் பாடலிது.

                  ‘நாடரும் சருப்பப்பூண் அணி செம்பொன்
                       மாலையுடன் நவமணி அணிந்த பாவை
             …………………………………………………….
                       …… குவலயத்து அதிசயம் எனாக்
             கொல்லியம் பாவையும் கும்பிடும் பசும்
                       பாவை குலவு பல்லுயிர்கட்கு எல்லாம்
             வீடருள் நற்றாய் எனும் சித்திரப்பாவையும்
                       ………………………………………..
             பாடவந்தவர் சித்தி முத்தி வடிவான
                       பொற்பாவை விளையாடி அருளே7!
             ……………………………………………………’ என்பது பாடல்.

    இவ்வாறு பொய்தல் விளையாட்டின் பல கூறுகளும் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களாகப் படைக்கப்பட்டது தமிழின் தனிச் சிறப்பன்றோ?

    இனித் தொடர்ந்துவரும் பகுதிகளில் பெண்குழந்தைகளின் மற்ற விளையாட்டுகளைக் காணலாம்.

    (தொடரும்)

    பார்வை நூல்கள்:

    1. சேறைக் கவிராச பிள்ளை- வாட்போக்கியுலா- முன்னுரை

    2. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்

    3. நடேச கவுண்டர்- திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்

    4. மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்

    5, 6, 7. நல்லதுக்குடி கிருட்டிணையர் – தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-பாவை விளையாடல் பருவம்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 5

    கதை வடிவில் பழமொழி நானூறு – 5

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 11

    அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்
    பிறிதினால் மாண்டது எவனாம்? – பொறியின்
    மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
    ‘
    அணியெல்லாம் ஆடையின் பின்‘.

    பழமொழி-  அறிவு ஆடை போன்றது!

    புது ப்ளசர்காரெல்லாம் வந்துநிக்கு. யாரும் பெரிய ஆளுங்க வந்திருக்காவளோ. இங்ஙன பண்ணயார் வீட்டுக்கு வாராம தெருமுக்குல ஏன் நிக்கு. ஏன் தாயி ஏதும் சேதி தெரியுமா. கேட்டுக்கொண்டே வந்தாள் வெள்ளைச்சீலை ஆச்சி.

    நம்ம ஊருக்கு புது ஜட்ஜம்மா குடி வந்திருக்காங்களாம். இங்கேருந்து தான்தினம் டவுண் கோர்ட்டுக்கு போயிட்டு வருவாக போல. நம்ம பெட்டிக்கட கணேசு மாமா தம்பி மக தான் அந்த ஜட்ஜம்மானு பேசிக்கிறாக. அதனால பண்ணையாருக்கு மறுப்பு ஒண்ணும் சொல்லமுடியல.போல. இனி ஒவ்வொருமட்டம் ஊர்ப்பஞ்சாயத்துல தீர்ப்புகொடுக்கையிலயும் யோசன பண்ணிக் குடுக்கணும். ஏதும் தப்புகிப்பு வந்திச்சு முன்னமாதிரி இல்ல. அந்தம்மா நம்மளப்பாத்து சிரிப்பாச் சிரிச்சுபோடும். என்னதாயி நான்சொல்லறது. இது ஆச்சி.

    அட போங்க ஆச்சி. நம்ம பண்ணயாரு அவுகளக் கலந்து முடிவெடுப்பாரோ என்னவோ. விடியக்காலையில நமக்கெதுக்கு இந்த வம்பு. அதுவும் பண்ணையார்வீட்டு நெலவாசல் முன்ன நின்னுக்கிட்டு. யாரும் பாத்துற கீத்துற போறாக. போய் மாட்டுத் தொளுவத்தச் சுருக்க  தூத்து சுத்தம் பண்ணுங்க.  நான் நாலுவீட்டுலேந்து உளுந்தும் அரிசியும் களைஞ்சுஊத்தின கழனித்தண்ணி எடுத்துட்டு வாரேன். அடிக்குத வெயில்லமாட்டுக்கு நாக்கு ஒலந்து போவுமில்ல. பேசுகிற ஜோரில் ஆச்சியும் பேத்தியும் பண்ணையாரின் சம்சாரம் வீட்டு நடைக்கதவின் பின்னால் நிற்பதைக் கவனிக்கவில்லை.

    சொல்லிவைத்தார்ப்போல் சிறிதுநேரம் கழித்து வீட்டுக்குள் வந்த பண்ணையாரும் லட்சுமி ஒரு நல்ல சேதி. இனிமே பஞ்சாயத்துல என் வேல சுளுவா முடியும். நம்ம கணேசு தம்பி மவ நீதிபதியாம்ல.  அதுகிட்டதான் பேசிட்டு வாரேன். என்னா சூட்டிப்பு. புள்ள பாக்கவும் லட்சணமா இருக்கு. சொல்லுதசொல்லு ஒண்ணொண்ணுலயும் தைரியம் தெரியுதே. பண்ணையார் சொல்லிக்கொண்டே போக மனைவி லட்சுமிக்கு அடிவயிறுகலங்கியது.

    இத்தன நாள் போடாம வச்சிருந்த காசு மாலயும் இனி தெனைக்கும் போடணும். கழுத்தோட ஒட்டி ஒரு அட்டியலும், மொகப்பு வச்ச நாலு வடம் சங்கிலியும் தெனைக்கும் போட்டாப் போதும்னு இந்த மனுசன் சொன்னதால மிச்சத்த உள்ளார வச்சேன். இம்புட்டு நாளும் என்னய என்வீட்டு மகாலட்சுமினு சொன்னவுக இன்னிக்கு வேற ஒரு செருக்கிய லட்சணமா இருக்கானு சொல்லுதாக. இன்னும் என்னேன்ன நடக்குமோ.

    கோத்துவாங்கின கோபுரம் பார்டர் பட்டுச்சீலயத்தான் இனி தெனைக்கும் கட்டிக்கிடணும். தீர்மானித்தவுடன் கொஞ்சம் மன அழுத்தம் குறைந்தது.

    எல்லாத்தையும் நான் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். வெத்தலைச்சீவலை மென்றுகொண்டே பண்ணையாரின் அம்மா தன்பங்குக்கு ஏற்றி விடுகிறாள்.

    பஞ்சாயத்துப்பிரச்சினைய பெத்த ஆத்தா எங்கிட்ட எப்பமும் பேசி இருப்பானா அல்லது உங்கிட்டதான் சொல்லியிருப்பானா. இப்பம் வந்த செருக்கி பஞ்சப்பொழப்பு பொழைக்குதமாரி பருத்திப்பொடவ கட்டிக்கிட்டு இணுக்குத் தோடு காதுல மாட்டியிருக்கா. அவளுக்கு என்ன பவுசுனு இவன் பின்னால போறான். நீ ஒண்ணும் கவலப்படாததாயி நம்ம பள்ளிக்கூட வாத்தியார்கிட்ட இன்னைக்கு பேசுதேன். பஞ்சாயத்துக்கு என்ன பிரச்சினை வந்தாலும் எங்கிட்டயும் சொல்லச்சொல்லுதேன். நம்மளும் அந்தப் பிரச்சினைக்கு முடிவு எடுத்து பொறவு எம்மவன்கிட்ட சொல்லலாம்.  நேரடியா இப்பஞ்சொன்னா சரிப்பட்டு வராது.

    பள்ளிக்கூட வாத்தியார் அழைக்கப்பட்டு நிலைமை விளக்கப்பட்டது. தலையெழுத்து இந்த வீட்ல வந்து நான் மாட்டிக்கிட்டேன். ‘அணியெல்லாம் ஆடையின் பின்‘ அப்டின்னு பழமொழி சொன்னா இந்த ரெண்டு பெரிய மனுஷிகளுக்கும் புரியவா போகுது. அந்தம்மா படிச்சவங்க. அவங்களுக்கு அறிவால பெரும.  ஆடைக்கு மேல நக நட்ட அணிஞ்சாதானே அதுக்கு அழகு. அறிவும் ஆடை மாதிரிதான். அது இல்லாத இவங்ககிட்ட இப்போ இதச் சொன்னா உசிரோட வீடுபோய்ச் சேரமுடியாது. இப்ப என்ன சொல்லிச் சமாளிக்கலாம். துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு கீழே உட்கார்ந்துயோசிக்க ஆரம்பித்தார் வாத்தியார்.

    பாடல் 12

    தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
    பரியாதார் போல இருக்க! – பரிவுஇல்லா
    வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே,
    ‘
    அம்பலம் தாழ்க்கூட்டு வார்‘.

    பழமொழி- அம்பலம் தாழ் கூட்டுவார்

    என்ன தீபா காபி டம்ளர் வச்சு ஒருமணிநேரம் ஆச்சு. இன்னும் குடிக்காம அப்டி என்ன அந்த கம்ப்யூட்டர்ல. படிக்குற காலத்தில தான் என்ன சொன்னாலும் கேக்காம நாள் முழுக்க இது முன்னாடி உக்காந்திருந்த. இப்ப வேலைக்குப் போகும்போதும் அப்டியேதான்னா இது சரியில்ல. நாலு பேர் பாத்தா என்ன நினைப்பாங்க. அம்மாவின் பேச்சு நீண்டுகொண்டே போனது.

    அம்மா அந்த நாலுபேர்னுசொன்னியே அவுங்க தொல்லதான் தாங்கமுடியல. நின்னா குத்தம் ஒக்காந்தா குத்தம். எல்லாத்துலயும் குறை கண்டுபிடிக்கறாங்க. இது நான்.

    நான் சொன்னத வச்சே என்ன மடக்கிடு. நான் சொன்ன நாலு பேரும் அக்கம்பக்கத்து வீட்டு மனுசங்க. தலையெடுக்காம கம்ப்யூட்டரையே பாக்கற உனக்கு அவங்களப்பத்தி என்ன தெரியும். ஒருநாள் கூட நீ அவுங்ககிட்ட பேசினது கிடையாது. சும்மா என்னய வம்புக்கு இழுக்காத. சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள் அம்மா.

    எண்பது வீடுகள் கொண்ட நாங்கள் வசிக்கும் அந்தச் சிறிய சொசைட்டியில் போனவாரம்தான் முகநூல் குழுமம் ஒன்று ஆரம்பித்தோம். அவரவர்களின் பிரச்சினைகளை எளிதாகப் பகிரவும் அதை எப்படி நிவர்த்தி செய்வது என்பதைக் கலந்தாலோசிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட அக்குழுவில் வீட்டிற்கு ஒருநபர் கட்டாயம் இணைய வேண்டும் என நானும் பக்கத்து பிளாக் உமாவும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றுவிட்டோம். இப்போது என்னவென்றால் புது பிரச்சினை. தினமும் ஒவ்வொருவரும் ஏகப்பட்ட செய்திகளைப் பகிருகிறார்கள். வாசித்தால் உருப்படியாக ஒன்றுமில்லை.

    எ பிளாக் நாய் சி பிளாக்கில் சிறுநீர் கழித்துவிட்டது அதற்காக பதினைந்து பேர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மற்றொருவர் தங்கள் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்காக அழைப்பிதழ் அனுப்புகிறார். சுகன்யா ஆன்ட்டி மீந்துபோன சப்பாத்தியில் பக்கோடா எப்படிச்செய்வது என புதுவித ரெசிபியை நேற்றுஇரவு பகிர காலையில் சலீம் அங்கிள் கடும் கண்டனம் தெரிவித்து நாங்கள் மீந்த சப்பாத்தியை நாய்களுக்குப் போட்டு விடுவோம். எங்களுக்கு உங்கள் ஆலோசனை தேவையில்லை என எழுதியதால் அவரைப்பற்றிய பலரின் கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளது. இடையில் என்னையும் உமாவையும் கண்டித்து நீங்கள் செய்திருக்கும் இந்த வேலையால் அமைதியாக இருந்த இந்த சொசைட்டியில் பிரச்சினைகள்தான் அதிகரித்துள்ளன. இதற்கு நீங்கள் இருவரும் பொறுப்பேற்று விளக்கம் சொல்லியே ஆகவேண்டும் என்கிறார்கள். இதை எப்படிச் சரிசெய்வது புரியவில்லை. முதலில் அம்மாவிற்கு விளக்கிச் சொல்லவேண்டும். இன்றுமுழுவதும் இதில் வேலை இருக்கும். இந்தக்குழுமத்திற்கென வரையரைகளையும் கட்டுப்பாடுகளையும் உருவாக்கவேண்டும்.

    அம்மாவை அழைத்து அனைத்தையும் சொன்னேன்.

    நிதானமாக அம்மா ஆரம்பித்தாள். மற்றவர்களின் நன்மைக்காக என்று நினைத்து நீங்கள் செய்யும்போது அதைப் புரிந்துகொள்ளாதவர்கள் பழிதூற்றத்தான் செய்வார்கள். எல்லாருக்கும் விளக்கமளித்துக்கொண்டே இருந்தால் எதற்காகத் தொடங்கினீர்களோ அந்நோக்கம் நிறைவேறாமலேயே போய்விடும். அவர்களின் வாய்க்கு நீங்கள் பூட்டுபோடவே முடியாது. இதைத்தான் நம்ம தாத்தாபாட்டி அம்பலம் தாழ் கூட்டுவார்னு பழமொழியாச்சொல்லுவாங்க. அதோட பொருள் ஊர்வம்ப அடக்க முயற்சிசெய்யறது ஊர்ப் பொதுவிடத்த பூட்டுபோட்டு காவல் காக்கறதுக்கு சமானம்னு. ரெண்டுமே முடியாத காரியம். எல்லாத்தையும் மறந்துட்டு உன் காரியத்தப் பாரு. அம்மா ஊக்கமளித்தாள்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 25

    பழகத் தெரிய வேணும் – 25

    நிர்மலா ராகவன்

    (நல்லதையே நினைக்கலாமே!)

    ‘நான் சரியாகவே படிக்கவில்லை. பரீட்சையில் பாஸாகப் போவதில்லை,’ என்று சொன்னால், தேவதைகள் ‘ததாஸ்து!’ என்று வாழ்த்தி, அது பலிக்கும்படிச் செய்துவிடுமாம். அதனால் என்ன பேசுவது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

    நம் எண்ணம்போல் எதுவும் நடக்கும் என்றால், நல்லதையே நினைப்போமே! மனமும் அமைதியாக இருக்கும்.

    ஆனால், எப்போதுமே மகிழ்ச்சியாகவோ அமைதியாகவோ காணப்பட வேண்டும் என்பதும் நடக்கிற காரியமல்ல. அவ்வப்போது கோபம், வருத்தம், ஏமாற்றம் எல்லாம் எழத்தான் செய்யும். ஆனால், இந்த உணர்ச்சிகள் ஒருவரை எப்போதுமே அலைக்கழித்துக் கொண்டிருப்பதுதான் தவறு.

    கதை

    ஓய்வுபெற்ற ஒருவர், “போன மாதம் விளக்குக்காசுக்கான ரசீது முதலிலேயே வந்துவிட்டதே! இந்த மாதம் இன்னும் வரவில்லையே! மின்சாரத்தை வெட்டி விடப்போகிறான்!” என்று வீட்டிலுள்ளவர்களை நச்சரிப்பார். அதனால் உடன் இருப்பவர்களையெல்லாம் தொல்லைப்படுத்துகிறார்.

    ஓரிரு நாட்கள் தாமதமாகும் என்று அவருக்குத் தெரியாதா, என்ன!

    விளக்கிச்சொன்னாலும் புரிந்துகொள்ள மறுப்பார். பொழுது போயாக வேண்டுமே! தனது அதிகாரத்தை வேறு எப்படித்தான் காட்டிக்கொள்வது!

    அவரைப் போன்றவர்களுக்கு எதிர்மறை எண்ணங்களால்தான் பலம்.

    யோசித்துச் செயல்படுவது

    நாம் எதையாவது பேசுமுன்னரோ, எழுதுமுன்னரோ, நம் கருத்தால் பிறருக்கு ஏதாவது பயன் இருக்கிறதா, யாரையாவது நோகடிக்கிறோமா, அவசியமானதா என்றெல்லாம் சற்றே யோசிக்க வேண்டுவது அவசியம்.

    கதை

    ஓர் ஆங்கில தினசரியில் இந்தியப் பாரம்பரியக் கலைகளின் விமரிசகராக நான் பணிபுரிந்தேன்.

    நான் அப்பொறுப்பை ஏற்கத் தயங்கியபோது, “நீங்கள் நேர்மையானவர்!” என்று, அப்பகுதியின் ஆசிரியை நான் எவ்வளவு கடுமையாக எழுதினாலும் அதை அப்படியே பிரசுரிப்பாள்.

    ஒரு முறை, புகழ்பெற்ற ஒரு நடனக் கலைஞர் நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தபோதே, மேடையில் மல்லாக்க விழுந்துவிட்டார். சமாளித்து எழுந்தபோது, அவர் முகம் வெளிறியிருந்தது.

    உண்மையாகவே இருந்தாலும், இதைப்பற்றி நான் எழுதியிருந்தால் ஆயிரக்கணக்கானோர் அதைப் படித்துவிட்டு, அவரைப் பற்றி ஏளனமாகப் பேசிச் சிரிக்க வழி வகுத்தவளாவேன். பரதக்கலை நாட்டில் பரவ எவ்வளவோ முயற்சிகள் எடுத்திருந்தவரின் மனம் நோகும்.

    விமரிசனம் தினசரியில் வெளியாகும் நாள்வரை அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும்!

    அவருடைய நிலை குலைந்ததைப்பற்றி நான் மூச்சு விடவில்லை. அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்.

    குறை கூறினால் கோபம்

    முன்னுக்கு வருபவர்கள் மாறத் தயாராக இருப்பவர்கள். தம் குறைகளைப் பிறர் எடுத்துச்சொல்லும்போது, அதிலிருக்கும் உண்மையை ஆராய்ந்து பார்த்துவிட்டுத் தம்மைத் திருத்திக்கொள்வார்கள். ஆனால், இத்தகையவர்களை அபூர்வமாகத்தான் காணமுடிகிறது.

    நாம் யார்மீதாவது குற்றம் கண்டுபிடித்தால், அது சரியானதாகவே இருந்தாலும், விரோதம் பாராட்டுகிறவர்கள்தாம் அதிகம்.

    கதை

    சமீபத்தில் ஒரு தொகுப்பிலுள்ள கதைகளுக்கு விமரிசனம் எழுதவேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது.

    “உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன். இப்படிப் பட்டும்படாததுமாக எழுதுகிறீர்களே!” என்று தொகுப்பாசிரியை என்னிடம் குறைப்பட்டார்.

    சிறுவர்களைக் கண்டித்தால் மாறலாம். ஆனால், நாற்பது வயதுக்குமேல் ஆனவர்களை மாற்றுவது கடினம்.

    அவரவர் வாழ்க்கைப் பின்னணி, அனுபவம் இவற்றைக்கொண்டுதான் எழுதுகிறார்கள். அவர்கள் கதை, தற்காலத்திற்கு ஒவ்வாத கருவைக் கொண்டிருக்கலாம். அதை லேசாகச் சுட்டிவிட்டுப் போகவேண்டியதுதான்.

    இல்லாவிட்டால், ‘தாறுமாறாக எழுதியிருக்கிறாளே! தான் ரொம்ப நன்றாக எழுதுவதாக எண்ணமோ?’ என்று குமைவார்கள்.

    சிந்தனையை மாற்று

    ‘உன்னால் முடியாது!’ என்று பிறர் சொல்வது நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க, செய்ய ஆரம்பித்த காரியத்தில் கவனம் குறைந்துவிடும்.

    பிறகு என்ன! தோல்விதான்.

    எதிர்மறைச் சிந்தனைகள் எழுகையில், அவற்றை நேர்மறையாக மாற்றுவது ஒரு நல்ல உத்தி.

    பிறரது பயமுறுத்தலை நம்பி, ‘என்னால் முடியாது!’ என்று பயந்து விலகுவதைவிட, அவர்கள் சொல்வதை அலட்சியப்படுத்தலாமே! நம் திறமை நம்மைவிடப் பிறருக்கு அதிகம் தெரியுமா?

    ‘என்னால் முடியும். எங்கு ஆரம்பிக்கலாம்?’ என்று கேட்டுக்கொண்டால், அச்சத்தை விளைவிக்கும் காரியத்தை ஆரம்பிக்கும் துணிவு பிறக்கிறது.

    எதிர்மறையான ஆசிரியர்கள்

    பல சிறுவர்கள் தம் முன் உட்கார்ந்து, தாம் சொல்வதைக் கேட்கும் நிலையில் இருப்பதால் ஆசிரியர்களுக்குப் பெருமிதம் ஏற்படும்.

    கதை

    கடந்த ஜூன் மாதம் சீனாவில் நடந்த சம்பவம் இது.

    பள்ளி முடிந்ததும் ‘விசேட வகுப்பு’ என்று நடத்தி, அதற்காகப் பணமும் வசூலித்திருக்கிறாள் ஓர் ஆசிரியை.

    அப்போது, பத்து வயதுச்சிறுமி ஒருத்தி எழுதிய கட்டுரையில் பல பகுதிகளை அடித்துவிட்டு, கண்டபடி திட்டியிருக்கிறாள்.

    எப்படி எழுதவேண்டும், திருத்த வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை.

    மனமுடைந்த அம்மாணவி பள்ளிக்கூடத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள்.

    ‘ஒரே குழந்தை’ என்று அருமையாக வளர்த்திருப்பார்கள். ஆசிரியையின் கடுமையான வார்த்தைகளை அச்சிறுமியால் ஏற்கமுடியாமல் போய்விட்டது.

    அறிவுக்கூர்மை இல்லாதவர்களை மட்டம் தட்டி, அதனால் தாம் உயர்ந்துவிட்டதாக எண்ணுகிறவர்கள் இத்தொழிலுக்கு வரலாமா?

    ஆசிரியர்களை விடுங்கள். பெற்றோர் சிலரே குழந்தைகளை இப்படித்தானே நடத்துகிறார்கள்!

    கதை

    முன்கோபியான சந்தானம் ஐம்பது வயதுக்குள் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் சண்டை போட்டுவிட்டு, பதவியிலிருந்து விலகினார்.

    ஓரிரு வருடங்கள் கழிந்தது. `நான் எதற்கும் லாயக்கில்லாதவன்!’ என்று தோன்றிப்போக, அச்சிறுமை உணர்ச்சி பதின்ம வயதான முரளியிடம் திரும்பியது.

    “நீயும் என்னை மாதிரி உருப்படாதவனாக ஆகப்போகிறாய்!” என்று மந்திரம்போல் தினமும் சொல்ல ஆரம்பித்தார்.

    ‘என்னைப்போல் ஆகிவிடாதே!’ என்று கூறியிருந்தாலும் பிரயோசனமில்லை. எதிர்மறையான அறிவுரைகளால் பயனிருக்காது.

    அத்தந்தை தன்னைப் பற்றியே நினைத்து மருகாது, மகனுடைய படிப்பில் அக்கறை காட்டி இருக்கலாம்.

    மகன் நல்ல நண்பர்களுடன் பழகுகிறானா, விளையாட்டுகளில் ஈடுபட்டு, உடலை ஆரோக்கியமாகவும், மனத்தைத் தெளிவாகவும் வைத்திருக்கிறானா என்று கண்காணித்திருக்கலாம்.

    தன் முன்மாதிரியான தந்தை சொல்வதை அப்படியே நம்பினான் முரளி. சுயநம்பிக்கையை இழந்ததால், பிறருடன் சரிசமமாகப் பழகவே முடியாது போயிற்று.  அவன் எல்லாவற்றிலும் தோல்வியே அடைந்தபோது, “நான்தான் அப்போதே சொன்னேனே!” என்று பெருமைப்பட்டுக்கொண்டார் சந்தானம்.

    முரளிக்கு நேர் எதிர் என் மாணவன் அமீர். “போன வருடம் எங்கள் வகுப்பிற்கு எல்லா இன ஆசிரியைகளும் வந்தார்கள். இப்போது நீங்கள் மட்டும்தான்!” என்று குறையுடன் சொல்வான்.

    அமீர் மட்டும் பிற மலாய் மாணவர்களிடமிருந்து வித்தியாசமாக — அறிவுடன் பணிவுமாக — இருந்தான்.

    அதிசயப்பட்டு விசாரித்தபோது, “என் தந்தை தினமும் கேட்பார், பள்ளிக்கூடம் எப்படி இருந்தது, மகிழ்ச்சியாக இருந்தாயா என்று. எல்லாரையும் மதித்து நடந்துகொள் என்று கூறுவார்,” என்றான்.

    அமீரின் தந்தைக்கு வாழ்க்கையில் இடர்களே இருந்திருக்காதா?

    அவற்றையே எண்ணி, தன்னுடையது மட்டுமின்றி தன்னை நம்பியவர்களின் வாழ்க்கையையும் பாழடிக்காத நல்ல மனிதர் அவர்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 4

    கதை வடிவில் பழமொழி நானூறு – 4

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 9

    எந்நெறி யானும் இறைவன்தன் மக்களைச்
    செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் – அந்நெறி
    மான்சேர்ந்த நோக்கினாய்! – ஆங்க ‘அணங்காகும்
    தான்செய்த பாவை தனக்கு‘.

    பழமொழி –  ‘அணங்காகும் தான் செய்த பாவை தனக்கு

    என்னப்பா உன் ரிடையர்மெண்ட் வாழ்க்கை எப்படிப் போகுது. கேட்டுக் கொண்டே வருகிறான் என் நண்பன் பாலன்.

    உனக்கென்ன. வீடு வாசல் எல்லாம் வாங்கியாச்சு. துபாய்ல வேல பாத்ததால அடுத்த தலைமுறைக்கும் சேத்து சொத்து சேத்திருப்ப. எங்கள மாதிரியா. நானும் மெய்யப்பனும் அடிக்கடி உன்னயப் பத்தி பேசறதுண்டு. நானும் இந்த மாசமே ஓய்வு எடுத்துறலாம்னு இருக்கேன். பொண்ணுக்கு வரன் பாத்து நல்ல எடத்துல கல்யாணம் பண்ணிக்குடுக்கணும். அவ்வளவுதான் அப்பறம் என் கடமை முடிஞ்சிடும். உங்க ரெண்டு பேருக்கும்தான் பசங்க. அவங்க நல்லா செட்டில் ஆனா தான் கல்யாணம் பண்ணமுடியும். ஆமா. உம் பையன் எங்க. உள்ளூர்லதான் வேலயா. இல்ல அவனயும் உன்னய மாதிரி வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிச்சிட்டியா.

    அவனின் அடுக்கடுக்கான கேள்விகளை என்னால் சமாளிக்க முடியவில்லை. நல்ல வேளை என் மனைவி காபியுடன் வந்துவிட்டாள். பேச்சு கொஞ்சம் திசைமாறும்.

    அவளின் பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின் மீண்டும் தொடர்கிறான்.

    உன் மனைவிக்கு உடம்பு சரியில்லயா. ஏன் ரொம்ப சோகமா இருக்காங்க.

    இனிமேல் முடியாது. சொல்லிவிட வேண்டியதுதான்.

    கொஞ்சம் நீ அமைதியா இருந்தா நான் சொல்றேன். ஆரம்பித்தேன். நான் துபாய்ல போய் நல்லா சம்பாதிச்சது என்னவோ உண்மைதான். என் பையன் சின்னவயசில என்ன கேட்டாலும் வாங்கி அனுப்புவேன். என் மனைவியும் வேலைக்குப் போய்க்கிட்டிருந்ததால அவன் நினைச்சதெல்லாம் நடந்தது. கல்லூரிக்குப் போக ஆரம்பிச்சவொடனே நண்பர்களோட சேந்து ஊதாரித்தனமா செலவழிச்சு ஊர்சுற்ற ஆரம்பித்தான். வீட்ல நாங்க சரியா கண்காணிக்க முடியாததால எங்ககிட்ட பல பொய்களச் சொல்லிச்  சமாளிச்சான். கடைசியில போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிட்ட அவனக் கல்லூரிய விட்டு நீக்கிட்டாங்க. அப்போதான் எங்களுக்கு உறைத்தது. அதோட விளைவு இப்போ நானும் எம் மனைவியும் சம்பாதிச்சது போதும்னு முடிவுக்கு வந்து வேலைய விட்டுட்டு அவனுடைய மறுவாழ்வுக்காக போராடிட்டு இருக்கோம். உள்ளதான் படுத்துட்டு இருக்கான். போய்ப் பாரு.

    அவனைப் பார்த்துவிட்டு வந்தஎன் நண்பனின் கண்களில் கண்ணீர்.

    நேத்தைக்குத் தான் நான் மெய்யப்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். அவனுடைய மகனப்பாத்த பிறகு நான் சொன்ன அதே பழமொழிய இப்பவும் சொல்றேன்.

    ‘அணங்காகும் தான் செய்த பாவை தனக்கு’ என்பதுதான் அந்தப் பழமொழி. ஒரு சிற்பிக்குஅவன் தன் கையால செஞ்ச சிலையே ஒருநாள் அவனுக்கு முன்ன வணங்குற தெய்வமா நிக்குமாம். அணங்குங்கறதோட இன்னொரு பொருள் பேய் அப்டின்னும் கேள்விப்பட்டிருக்கேன்.  எதுக்குச் சொல்றேன்னா நாம நம்ம பிள்ளைகள எப்படி வளக்கறோமோ அப்படித்தான் அவங்க வளருவாங்க. ஏதோ எம் மனசுல பட்டதச் சொன்னேன். தப்பா எடுத்துக்காத.

    நேத்தைக்கு மெய்யப்பன் எம்பிள்ளை எனக்கு தெய்வம் மாதிரி. எம் மனைவிக்கு திடீர்னு நோய் வந்தப்போ கூட கவலைப்படாதீங்க அப்பா நான் இருக்கேன்னு ஆறுதலா இருந்தான். இப்போ என்னையும் மனைவியையும் ஒருகுறைவுமில்லாம உக்காத்தி வச்சு சோறு போடறான்னு பெருமையாச் சொன்னான். குறைந்த வருமானம்னாலும் மெய்யப்பன் கூடவே இருந்து கண்காணிச்சு தம் பிள்ளைய நல்லா வளத்ததினால அவன் சமூகத்திலஇருக்கற நல்லது கெட்டத எளிதா தெரிஞ்சிக்க முடிஞ்சது. பாவம் உன் பையனால அதத் தெரிஞ்சுக்க முடியாம கெட்டநண்பர்கள நம்பி ஏமாந்துட்டான். இனியாவது அவன நல்ல முறையில பாத்துக்கோ. என நண்பன் அறிவுரை கூறி எழுந்துசென்றபின் அவன் கூறியபழமொழியை அசைபோடத் தொடங்கினேன்.

    எவ்வளவு உண்மை. நல்லவேளை இந்தமட்டும் என் மகன்தப்பித்தானே. இனிமேல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிவெடுத்தேன்.

    பாடல் 10

    தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
    அமரா(து) அதனை அகற்றலே வேண்டும்
    அமையாகும் வெற்ப! ‘அணியாரே தம்மைத்
    தமவேனும் கொள்ளாக் கலம்‘.

    பழமொழி – ‘அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்‘

    உங்கப்பா எங்கடா. கேட்டுக்கொண்டே உள்ளே நுழைகிறார் என் சித்தப்பா.

    வாங்க வாங்க. நானும் அவரத்தான் எதிர்பாத்துட்டு இருக்கேன். போஸ்ட் ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு இதோ வந்துடறேன்னு போனவரு. மூணு மணிநேரம் ஆச்சு இன்னும் வரக்காணல. வண்டியிலதான் போயிருக்கார். நானே மணிகிட்ட சொல்லிவிடணும்னு நெனச்சேன். அவன் வேற நாளைக்கு தமிழ் பரீட்சைனு படிச்சிட்டு இருக்கான். உங்கண்ணனுக்கு போனா போன இடம். வந்தாவந்த இடம். நேரங்காலமே கெடையாது. கொஞ்சம் ஒரு எட்டு சைக்கிள் எடுத்துட்டுப்போயி பாத்துட்டு வந்திருங்களேன்.

    அம்மா கேட்டுக்கொண்டதிற்கிணங்க சித்தப்பா எழுந்துபோய் விட்டார். நான் படிக்க ஆரம்பிச்சேன். முதல்ல பழமொழிகளப் படிச்சிருவோம். தீர்மானித்துப் படிக்க ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் அப்பாவும் சித்தப்பாவும் வந்து விட்டார்கள். இனி படிச்சாமாதிரிதான். அம்மாவோட பஞ்சாயத்து தொடங்கிடும். கொஞ்சநேரம் வாயப்பாத்துட்டுதான் படிக்கத் தொடங்கணும்.

    என்னவாம் உங்கண்ணனுக்கு. அம்மா ஆரம்பித்தாள்

    முதல்ல கொஞ்சம் தண்ணி குடுங்க. அண்ணன் பாவம் அரை கிலோமீட்டர் நடந்தே வந்துட்டாரு. அப்பறம்தான் நான் சைக்கிள்ல கூட்டிக்கிட்டு வந்தேன்.

    ஒரு சொம்பு தண்ணியக் குடித்தவுடன் அப்பா பேச ஆரம்பித்தார்.

    வேலையெல்லாம் அப்பவே முடிஞ்சிபோச்சு. திரும்பலாம்னு நெனைக்கும்போது நம்ம சந்தானத்தப் பாத்தேன். பஸ் பிரேக்டவுண் போல. குடும்பத்தோட வெயில்ல நின்னுட்டு இருந்தான். என்ன ஏதுன்னு கேக்கலாம்னு நிப்பாட்டினேன்.

    அண்ணே உங்கள மாதிரி நல்லவங்களப் பாக்கறது கஷ்டம். அப்டி இப்டினு புகழ ஆரம்பிச்சிட்டான். கேக்க பெருமயா இருந்திச்சு. அவன் மனைவியும் நின்னுக்கிட்டு இருந்ததால வற்புறுத்தி என் வண்டியக் குடுத்து எடுத்துட்டுப்போ நான் பஸ் புடிச்சு வந்துப்பேன்னு சொல்லிட்டேன். அப்புறந்தான் ஞாபகம் வந்துச்சு. போஸ்ட் ஆபீஸ் பியூன்

    ஐயா கடனா ஒரு நூறு ரூபாய் இருந்தா கொடுங்க. நான் எல்லார்கிட்டயும் கேக்க மாட்டேன். உங்களப் பாத்தவொடனே கேக்கணும்னு தோணிச்சுன்னான். சரி வண்டியிலதானே வந்திருக்கோம்னு இருந்தநூறு ரூபாயையும் அவன்கிட்ட குடுத்துட்டேன். அதான் நடந்து வந்திட்டு இருந்தேன். ரெண்டுகிலோமீட்டர் தூரங்கறதால நேரமாகிப்போச்சு.

    கேட்டுக்கொண்டே இருந்த அம்மா புலம்ப ஆரம்பித்தாள்.

    கேக்கணுமா உங்கண்ணனுக்கு. யாரும் முகத்துக்கு நேரா புகழ்ந்தாப் போதுமே. கட்டியிருக்குற வேட்டியக்கூட அவுத்துக்குடுக்கத் தயங்க மாட்டாரு. அவ்ளோ தாராளம்.

    இவருக்கு எப்டித்தான் புத்தி சொல்றதோ தெரியல.

    அம்மா அது வேற ஒண்ணுமில்லம்மா.  அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்‘ங்கற பழமொழிமாதிரி.

    அட போடா. நீ வேற படிச்சத ஒப்பிச்சிக்கிட்டு அம்மா அங்கலாய்க்கிறாள்.

    நான் படிச்சத ஒப்பிக்கலம்மா. அந்தப் பழமொழியோட பொருள் தன்னோடதுதான்னாலும் பொருத்தமில்லாத நகைய யாராவது அணிவாங்களா.. அப்டித்தான் நாம நல்லவங்களா இருந்தாலும் அடுத்தவங்க முகத்துக்கு நேராப் புகழ்ந்தாங்கன்னா அதுக்காக சந்தோசப்படக்கூடாது. அத மனசுலேந்து நீக்கிட்டு என்னசெய்யணும்னு யோசிக்கணும். இல்லையினா பிரச்சினை தான் வரும்.

    அம்மாவும் அப்பாவும் என்னை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

    பலே பலே. நாளைக்குப் பரீட்சைக்கு நல்லா படிச்சிருக்க போல சித்தப்பா பேச்சை திசைதிருப்புகிறார்.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-32

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-32

    தி.இரா.மீனா

    மோளிகே  மாரய்யா

    காஷ்மீர நாட்டு மன்னன்.இயற்பெயர் மகாதேவ பூபாலன். மனைவி கங்காதேவி. பசவேசரின் பெருமைகளைக் கேட்டு அரசாட்சியைத் துறந்து இருவரும் கல்யாண் வருகின்றனர். இவர்கள் மாரய்யா–மகாதேவி  என்ற பெயரில் விறகுக் கட்டு விற்கும் காயகம் மேற் கொண்டு சரணர்களாக வாழ்கின்றனர். ’நிக்களங்க மல்லிகார்ஜூன’ எனபது இவரது முத்திரையாகும்.

    1.  “ நீரின்றேல் தாமரையை யாரறிவார்?
    நீரின்றேல் பாலினை யாரறிவார்?
    என்னையன்றி உன்னை யாரறிவார்?
    உனக்கு நான், எனக்கு நீ
    உனக்கும் எனக்கும் வேறொரு உறவுண்டோ?
    நிக்களங்க மல்லிகார்ஜுனனே”

    2. “ஈர விறகை நெருப்பில் வைத்தால்
    இயல்பாய்த் தீப்பற்றுமோ உலர்கட்டை போல
    இதுபோல காமுகர்க்குக் கிடைப்பானா
    சத்தியத்தின் சிவனும் நிக்களங்க மல்லிகார்ஜூனனே“

    3. “ஞானம் அறியும் வரை அர்ச்சனை வேண்டும்
    புண்ணியம் அறியும்வரை பூசை வேண்டும்
    தன்னையறியும்வரை விரதம் வேண்டும்
    காலம் கடமை ஞானம் உணர்வென
    தானுள்ள வரையில் வழிபட வேண்டும்
    தன்னை மறந்து கடவுளை நினைத்த பின்னர்
    நிர்வாணம் அடைவோருக்கு எப்போதும் பயமில்லை
    நிக்களங்க மல்லிகார்ஜூனனே“

    4. “ஆகமமறிய வரவு செலவறிய வேண்டும்
    சாத்திரமறிய மரணமறிய வேண்டும்
    புராணமறிய போக்கிரி நட்பு நீங்கவேண்டும்
    இதையறிந்து சித்தம் தெளிவில்லாமல் நன்மையில்லை
    நிக்களங்க மல்லிகார்ஜூனனே“

    5. “முன்னோர் வசனம் பார்த்துச் சொல்வதில் என்னபயன்
    தன்போல வசனமில்லை; வசனம்போல் தானில்லை
    சொல்லில் அத்வைதம் பேசிச் செயலில் இழிந்தால்
    சரணர் புகழ்வாரோ ?சொல்லும் செயலும் மாசுபடின்
    குரு.இலிங்கம், ஜங்கமம்,பாசோதகம் ,பிரசாத
    திருநீறுஉருத்திராட்சம்,உயர் ஐந்தெழுத்து அவருக்கில்லை
    வெற்றுப் பேச்சில் பிரம்மம் பேசுபவரைப் புகழ்வதில்லை
    நிக்களங்க மல்லிகார்ஜூனன்“

    6. “கல்மண் மரத்தில் கடவுள் உண்டென
    எவ்விடத்தும் பேசுகின்ற மனிதர்களே கேளுங்கள்
    அவற்றை அங்கங்கே வைத்த ஆற்றலின் அடையாளமன்றி
    புலன் கடந்தவன் அறியான்
    மனவடிவம் எங்குள்ளதோ அங்கிருப்பான்
    நிக்களங்க மல்லிகார்ஜூனன்“

    7. “நிலம் தலையாரியினுடையதெனில் கள்வன் நுழைவானோ?
    சர்வலிங்கமுடையவனுக்கு அர்ப்பணமற்றதுண்டோ?
    நிக்களங்க மல்லிகார்ஜூனனே.”

    இராயசதா மஞ்சண்ணனின் புண்ணியஸ்திரி இராயம்மா

    இவர் பசவேசருக்கு மிக நெருங்கியவரும், வசனகாரருமான ‘இராயசதா மஞ்சண்ணரின் மனைவி.’ அமுகேஸ்வரலிங்க’ என்பது இவரது முத்தி ரையாகும். அமுகே இராயம்மாவின் இயற்பெயராகவும் அது இருப்பது குறிப்பிடத்தக்கது.

    “பயிற்சிக் கூடத்திலின்றி போர்க்களத்தில் கோலிருக்குமா?
    விரதம்சடங்குகள் இல்லறத்தானுக்கன்றி பக்தனுக்குண்டோ?
    விரதம் தவறி உடலெடுத்த தீயோனுக்கு முக்தியில்லை
    அமுகேஸ்வர இலிங்கத்தில்“

    இராயசதா மஞ்சண்ணா

    இவர் பசவேசரின் கடிதப் போக்குவரத்தில் உதவியவர். இராயம்மா இவரது மனைவி. ’ஜாம்பேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

    1. “ஆயுதமுனை தாக்குமுன்னால் தடுத்து விட்டால்
    ஆயுதமென்ன செய்யும்?
    நாகம் தீண்டுமுன்னர் பிடித்து விட்டால்
    நஞ்சென்ன செய்யும்?
    மனம் கெடுமுன்னர் பரதத்துவத்தில் திளைத்து விட்டால்
    ஐம்புலன்கள் என்ன செய்யும் ஜாம்பேஸ்வரனே“

    2. “எழுதி அழித்தால் அவ்வெழுத்து நன்றல்ல என்பேன்
    அறிந்து மறந்தால் அறிவு குறையுடையதென்பேன்
    செத்த பின்பு சமுத்திரமும் ஒன்றே, கையளவு நீரும் ஒன்றே
    ஜாம்பேஸ்வரனே“

    ரேவண சித்தய்யாவின் புண்ணிய ஸ்திரி ரேக்கம்மா

    இவர் ரேவண சித்தய்யாவின் மனைவி.பூமாலை கட்டிச் சிவனுக்குத் தரும் காயகம் இவருடையதாகும். ’ ஸ்ரீகுரு சித்தேஸ்வர’ இவரது முத்திரையாகும்.

    1. “இலிங்கத்துக்குப் புறம்பானவன் ஒழுக்கமற்றவன்
    பற்றுறுதியற்றவன் குருலிங்கம் ஜங்கமரைக் கொன்றவன்
    புனித நீர் பிரசாதம் பழிப்பவன்
    திருநீறு உருத்திராட்சம் இகழ்பவரைக் கண்டால்
    ஆற்றலிருப்பின் கொல்வது  இன்றேல்
    கண்ணும் காதும் மூடிச் சிவநாமம் செபிப்பது
    இயலாதெனில் இடம்விட்டு ஒதுங்குதல்
    இதுவும் ஆகாதெனில் கொடிய நரகில் வீழ்த்துவான்
    ஸ்ரீகுரு சித்தேஸ்வரன்“

     [தொடரும்]

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 3

    கதை வடிவில் பழமொழி நானூறு – 3

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 7

    வன்சார்(பு) உடையர் எனினும் வலிபெய்து
    தஞ்சார்(பு) இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ
    மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
    ‘
    அஞ்சுவார்க் கில்லை அரண்‘

    பழமொழி-  ‘அஞ்சுவார்க்கு இல்லை அரண்‘

    காலைச் செய்தி பாத்தீங்களா. இன்னிக்கு தலைநகர்ல நம்ம தலைவருக்கு சிலை வைக்கறாங்களாம். பெரிய விழா ஏற்பாடு ஆகியிருக்காம். எல்லாரும் பேசிக்கிடறாங்க.

    பஞ்சாயத்துத் திண்ணையில உக்காந்து மாசாணம் சொல்றான். தலைவர் தலைவர்னு உசிர உட்டுட்டுத் திரிஞ்சீங்க. அவருடைய ஆத்மார்த்தமான தொண்டர்னு பெயர் வேற. உங்களுக்கு அழைப்பு வரலியா. நக்கலாகக் கேட்டுக்கொண்டே வந்தாள் என் மனைவி.

    தலைவர் செஞ்ச உயிர்த் தியாகத்துக்கு அவருக்குசிலை வைத்து மரியாதை பண்ணறாங்க. அதுக்கென்ன. நல்ல விசயம்தானே. வெளியில் சொன்னாலும் மனசு அசை போடத் தொடங்கியது.

    சில நேரங்களில் வெளியில் நிசம் போலப் பேசப்படும் பல செயல்களுக்கான உண்மை வேறாக இருக்கும். ஒருவிதத்தில் இதுவும் அப்படித்தான். நான் தலைவர் கூடவே இருந்ததால அவரப் பத்தி நல்லாத் தெரியும். என்ன நடந்தது என் மனம் பின்னோக்கிச் சென்றது.

    பத்து நாளா மக்கள் காய்ச்சல் பீதியில கலங்கியிருந்தாங்க. தலைவர் கண்டுக்கவே இல்ல.. அது என்னமோ காக்கா எச்சத்தால பரவற தொற்றுநோய் போல.. வேகமா பரவிட்டு வந்தது. ஒருநாள் போலத் தலைவருக்கு அந்த வேலை இந்த வேலைனு சொல்லி சமாளிச்சுப் பாத்தோம். கட்சிக்காரங்க நாங்க மட்டும் போய்ச் சமாதானம் பேசினா ஊர் சும்மா இருக்குமா. ஓட்டு வாங்கற சமயத்துல மட்டும் ஒரு இண்டுஇடுக்கு உடாம உங்க தலைவர் அத்தன இடத்துக்கும் வருவாரே இப்போ இந்தக் காய்ச்சலுக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்னு குடைந்து தள்ளிட்டாங்க. சாலை மறியல் வேற பண்ண ஆரம்பிச்சாங்க. காய்ச்சல் வந்தவங்க உடல் வலியாலஅவதிப்பட்டாங்களே தவிர எந்தவித உயிர்ச்சேதமும் இல்ல. விவசாயிகள் நிறைஞ்ச இந்த ஊர்ல வயலுக்குப் போக முடியாம ஆனதால மக்களுக்குக் கோபம். கடைசியில ஒருவழியா தலைவர ஒத்துக்க வச்சி அரசு ஆஸ்பத்திரியில நேர்ல நோயாளிகளச் சந்திக்க வச்சோம்.

    அதுக்குமுன்ன அவர் பண்ணின ஆர்ப்பாட்டம் இருக்கே அப்பப்பா. டாக்டர வீட்டுக்கு வரச் சொல்லி முதல் முறையா அந்த தொற்றுவியாதி எப்படிப் பரவுதுனு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த கையுறை எல்லாம் வாங்கி அணிச்சிக்கிட்டுதான் மருத்துவமனைக்கே வந்தார். அங்க அவரப் பாத்த சந்தோசத்துல ஒருத்தன் ஓடி வந்து கட்டிப்பிடிச்சுக்கிட்டான். அத எதிர்பாக்காத அவர் எங்க தனக்கும் அந்தவியாதி தொற்றிக்கிடுமோன்னு பயந்து அந்த பயத்துலயே நெஞ்சடைப்பு ஏற்பட்டு உயிர உட்டுட்டார்.

    அவர் மனைவி எங்களைக் கூப்பிட்டு பயத்துல அவர் உயிர விட்டதா சொல்ல வேண்டாம்னு கேட்டுக்கிட்டதால பரவுகிற வியாதி பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி செய்யப்போன இடத்தில் காய்ச்சல் தொற்றி தன் உயிரைத் தியாகம் செய்தார் எனப்பரப்பினோம். இவரக் கட்டிப்பிடிச்சுக்கிட்டவன் இன்னும் உயிரோடதான் இருக்கான். எல்லாருக்கும் காய்ச்சலும் குணமாகிட்டுவருது.  ஆனா இவர் மட்டும் தியாகிங்கற பெயரோட கொண்டாடப்படறாரு.

    யோசனையிலிருந்த மீண்ட நான் எல்லாம் தெரிஞ்ச என் மனைவிகிட்ட பேச ஆரம்பிச்சேன். உனக்குத்தான் தெரியுமே என்ன நடந்துச்சுன்னு. இவரப் போல கோழைகளுக்குத்தான் ‘அஞ்சுவார்க்கு இல்லை அரண்‘ ங்கற பழமொழியே இருக்குபோல. போருக்குப்பயந்தவனப் பாதுகாப்பா இரும்புக்கோட்டைக்குள்ள வச்சாலும் அவன் தன் பயத்துல செத்துருவாங்கறதுதான் அதோட அர்த்தம்.

    என்னமோ போங்க நீங்களாச்சு உங்க தலைவராச்சு. அவர் புண்ணியத்துல இன்னிக்குஒரு பழமொழி தெரிஞ்சுக்க முடிஞ்சுச்சு. சொல்லிவிட்டு வெளியேறினாள் என் மனைவி.

    பாடல் 8

    தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
    வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்
    நோயின்(று) எனினும் ‘அடுப்பின் கடைமுடங்கும்
    நாயைப் புலியாம் எனல்‘.

    பழமொழி- அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல்‘

    என்ன குட்டியம்மா சோகமா இருக்கீங்க. புதுசா குடிவந்த அம்மாகிட்ட ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தீங்க போல. என்ன சொன்னாங்க. கேட்டுக்கொண்டே அவளருகே சென்றேன்.

    ஆமாம். சரிதான். நல்லாப் பேசறாங்க. எனக்குக் கூட நெறைய பயனுள்ள அறிவுரைகள் சொன்னாங்க. உங்க பள்ளிக்கூடத்துலதான் வேல பாக்கறாங்களாமே. பெரிய பதவி போல. பள்ளி ஆசிரியையான நான் சுதாரித்துக்கொண்டேன். அப்படியா. எங்க அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க பாக்கலாம்.

    நான் வேண்டாம்னு சொல்லச்சொல்ல தலைமை தாங்கற தகுதி உங்களுக்குத்தான் இருக்குன்னு  சாதாரண ஆசிரியரா அந்தப் பள்ளியில சேர்ந்த என் தலையில தலைமைப் பொறுப்பக் கட்டி விட்டுட்டாங்க. என் படிப்ப மதிச்சு ஒருத்தர் கொடுக்கும்போது வேண்டாம்னா சொல்லமுடியும். ஏத்துக்கிட்டேன். இப்போ வேலைச்சுமையால அவஸ்தப் படறேன்.

    உன் தோழி சுகன்யாகூட எங்க பள்ளியிலதான் வேல பாக்கறாங்க. அவுங்க சாதாரண ஆசிரியர்தான். நல்லா மரியாதயா இருப்பாங்க. இந்த மாதிரி நெறைய சொன்னாங்க.

    அடப்பாவி இப்படியா சொன்னா. மேல சொல்லு. உற்சாகப்படுத்தினேன்.

    அவங்களக் கேக்காம கீழ உள்ளவங்க வேலயே பண்ணமாட்டாங்களாம். அவங்களோட மாணவர்களும் அவங்கள உற்சாகப்படுத்த தினமும் ஏதாவது பரிசு குடுத்துக்கிட்டே இருப்பாங்களாம்.  பல விஷயங்களுக்குமுடிவு எடுத்து அவுங்களுக்கு தினமும் தலையே சுத்துமாம். பாவம். கஷ்டமான வேலையில்ல. பரிதாபப் பட்டாள் என் தோழி குட்டியம்மா.

    இவ்வளவுநாள் நீ கேக்காததால என் வேலையப்பத்தி சொல்லல. இப்போ சொல்றேன். எங்க பள்ளி பாலர் பள்ளி. அதுல மொத்தமே நாற்பத்தைந்து குழந்தைகள்தான் படிக்கறாங்க. ஒவ்வொரு வகுப்பிலும் பதினைந்து குழந்தைகளுக்கு இரண்டு ஆசிரியர்கள். இந்த அம்மா போனவருசம்தான் சேர்ந்தாங்க. குழந்தைங்க புது ஆசிரியரக் கண்டா பழகமாட்டாங்க இல்ல. அதனால போன வருசம் முழுசும் இந்த அம்மா அந்த வகுப்புல குழந்தைகளுக்கு உதவியா தாள்கள வெட்டறது, ஒட்டறது, வகுப்புக்கு மத்தியிலகொடி கட்டி அதில குழந்தைகளோட வேலைகள அலங்காரமாத் தொங்கவிடறது இப்டி பண்ணிட்டிருந்தாங்க.

    இந்த வருசம் குழந்தைகள் அவங்ககிட்ட பழகிட்டதால வகுப்பு எடுக்க உடறாங்க. அதத்தான் அந்தம்மா தலைமைப் பதவிங்குது. கூடவேலபாக்கற இன்னொரு ஆசிரியையும் இவுங்களும் கலந்தாலோசிச்சு அன்னிக்கு பலூன் வரையச் சொல்லணுமா, இல்ல ஆப்பிள் படம்வரைஞ்சு குடுத்து கலர் பண்ணச் சொல்லணுமா போன்ற முடிவுகள எடுப்பாங்க. இதத்தான் பொறுப்பான முடிவுகள் அப்டிங்குது.. எல்லா சின்னப் பிள்ளைகளும் எத வரைஞ்சாலும் உடனே டீச்சருக்கோ,அம்மாவுக்கோ குடுப்பாங்க. ஏன் உன் குட்டி தினமும் கார்ட் பண்றேன்னு குட்டி குட்டியாபேப்பரக் கிழிச்சு கலர் பண்ணுதுனு நீ சொல்லமாட்டியா. அதத்தான் அந்தம்மா மாணவர்கள் தரும் பரிசுங்குது.

    அடப்பாவி. இதுல வேற அந்தம்மா நீங்க படிச்சுட்டு இப்டி வீட்ல சும்மா இருக்கக் கூடாது. என்னய மாதிரி வீட்டயும் பொறுப்பா பாத்துக்கிட்டு வெளியிலயும் போய்ப் பழகுங்க. இல்லையின்னா கொஞ்ச நாள்ல உங்க வீட்டுக்காரரும், பொண்ணும் மதிக்க மாட்டாங்கன்னு சொன்னதாலதான் சோகமா வந்தேன். நல்ல வேள உங்களப்பாத்து உண்மயத் தெரிஞ்சுக்கிட்டேன்.

    அடப் போங்க குட்டியம்மா. இந்தம்மா மாதிரி தற்பெரும பேசிட்டுத்திரியறவங்க நெறையபேர் இருக்காங்க. ஆனா அவுங்க பேச்ச நம்பி புகழறாங்களே அது அடுப்பங்கரையில முடங்கி கெடக்கற நாயப் பாத்து புலின்னு சொல்ற பொய்ப் புகழ்ச்சிக்குச் சமானம். அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல்‘ அப்டிங்கற பழமொழிய நீங்க பள்ளிக்கூடத்துல படிச்சதில்லையா என்ன எனக் கேட்டுவிட்டு குட்டியம்மாவுக்குப் புரிய வைத்த சந்தோஷத்தில் நான் கிளம்பினேன் அங்கிருந்து..

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 2

    கதை வடிவில் பழமொழி நானூறு – 2

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 4

    உள்ளூர் அவரால் உணர்ந்தாம் முதலெனினும்
    எள்ளாமை வேண்டும் இலங்கிழாய்! – தள்ளாது
    அழுங்கல் முதுபதி ‘அங்காடி மேயும்
    பழங்கன்று ஏறாதலும் உண்டு‘.

    பழமொழி:  அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு

    காலையிலேயிருந்து பக்கத்துவீட்டுல ஏதோ சலசலப்பு. அப்பா மகனோட குரல் உரத்துக் கேக்குது. ஏதோ விவாதம் போல. நான் இந்த வீட்டுக்குக் குடிவந்தப்போ பக்கத்துவீட்டு ஜெயந்துக்கு ஆறு வயசு. நாதன் என்ற என்னோட பெயரைச் சுருக்கி நாத் அங்கிள் அப்டின்னு கூப்பிட்டுக்கிட்டு எங்க வீட்லயே கெடையா கெடப்பான்.  சாக்லேட்லேந்து ஐஸ்கிரீம் வரைக்கும் எது வேணும்னாலும் சிபாரிசுக்கு என்கிட்டதான் வருவான். அப்பறம் வளந்து பெரிய பையன் ஆனவொடனே எப்பவாவது பேசறதோட சரி. இருந்தாலும் பாசம் உட்டுப்போகாதில்ல.

    இன்னிக்கு என்ன பிரச்சினையோ கத்திக்கிட்டு இருக்கான். பெரிய மனுசன் ஆயிட்டதால கண்டிப்பா என்னய சிபாரிசுக்குக் கூப்பிடமாட்டான். அதுக்காக அவனுக்கு ஒரு பிரச்சினைனா நான் போய் பாக்க வேண்டாமா. இருந்தாலும் அப்பா மகன் விவகாரம். கொஞ்சநேரம் வாசல்ல நின்னு ஒட்டு கேட்டுட்டு உள்ள போறேன். மனதுள் தீர்மானித்தேன்.

    நான் சாப்ட்வேர் என்ஜினியர் ஆயிட்டதால வெளிநாடு போய்தான் வேலபாக்கணும்னு என்னப்பா கட்டாயம். இவ்ளோ நேரம் சொல்லியும் உங்களுக்குப் புரிய மாட்டேங்குதே. அதான் உள்ளூர்லயே கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி நல்லா சம்பாதிக்கறேன்னு சொல்றேனே. எல்லாம் உங்க நல்லதுக்குத்தான். இது ஜெயந்த்.

    ஓ இவ்வளவுதானா. வேறெதுவும் குடும்பப் பிரச்சினை இல்லை. நான் உள்ளே நுழைந்தேன். அங்கிள் நீங்களே எங்கப்பாவோட நியாயத்தக் கேளுங்க ஜெயந்த் ஆரம்பித்தான். அவன் அப்பா இடைமறித்து நீங்களே சொல்லுங்க சார். மொதமொதல்ல சின்னதா கடை போட்டு வியாபாரம் பண்ணி எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி இப்ப இவன நல்ல படிப்பு படிக்க வச்சிருக்கேன். இவனாவது வெளிநாடு போய் நாலு காசு சம்பாதிக்கட்டும்னு பாத்தா திரும்பவும் இங்கயே என்னய மாதிரி வியாபாரம்தான் பண்ணுவேங்கறான்.

    ஜெயந்த் தொடர்ந்தான். அங்கிள். எங்கப்பாவோட கடை பக்கத்துலயே கம்ப்யூட்டர் சென்டர் ஆரம்பிச்சு நடத்தறேன்னு நான் சொல்றேன். நான் படிச்சபடிப்பு கண்டிப்பா துணை நிக்கும். பக்கத்துலயே ரெண்டு காலேஜ் இருக்கு. அதனால பிராஜக்ட் பண்ண அவங்க எல்லாரும் வருவாங்க. மெதுமெதுவா முன்னேறி எங்கப்பாவோட வியாபாரத்தையும் பெரிசுபடுத்தி நானும் முன்னேற முடியுங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்க கொஞ்சம் அப்பாவுக்கு எடுத்துச் சொல்லுங்க. அப்பாவத் தனியா உட்டுட்டுப் போயி பணம் சம்பாதிக்கிறதுல எனக்கு விருப்பமில்ல. அவர் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாரு என்றான்.

    என்ன சார் நீங்க. உங்க பையன் எவ்வளவு பொறுப்பா பேசறான். அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு ன்னு கேள்விப்பட்டதில்லையா. கடைத்தெருவுல மேய்ந்த பழைய கன்றுதானேன்னு நினைக்காம ஒருநாள் பெரிய எருதா வளந்தவொடனே சிறப்பு பெரும்னு நினைக்கணும்.  வருமானம் நிறைய வராதுனு நினைக்கறீங்களா இல்ல சின்னப்பையன் வியாபார நெளிவுசுளிவு தெரியாம வளத்துட்டேன்னு குறைச்சு எடைபோடறீங்களா தெரியல. உங்க பையன நம்பி அவன் போக்குலவிடுங்க. வெளிநாட்டுக்குப் போயி கைகட்டி மாசச் சம்பளம் வாங்கற சாதாரண ஆளா இல்லாம ஒருநாள் உங்க பெயர் நிலைக்குற அளவு வியாபாரத்துல பெரிய புள்ளியா வளந்து காட்டுவான். சொல்லிவிட்டுப் பெருமையுடன் நகர்ந்தேன் நான்.

    பாடல் 5

    கருந்தொழிலர் ஆய கடையாயர் தம்மேல்
    பெரும்பழி யேறுவ பேணார் – இரும்புன்னை
    புன்புலால் தீர்க்கும் துறைவ! மற்று ‘அஞ்சாதே
    தின்பது அழுவதன் கண்‘.

    பழமொழி: அஞ்சாதே! தின்பது அழுவதன் கண்

    இன்னிக்கு பொழுது விடிஞ்ச நேரமே சரியில்ல போல. நம்பிக்கையோட இருந்தேன். சற்குணம் ஐயாவுக்கு நல்ல தீர்ப்பு கொடுப்பாங்கன்னு. எல்லாம் தலைகீழா முடிஞ்சு போச்சு. டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருந்த நண்பன் முருகனிடம் என் ஆதங்கத்தைத் தொடர்ந்தேன்.

    கண்ணு முன்ன ஐயா தலைகுனிஞ்சு நடந்து போகறதப் பாக்க சகிக்கல. மாடசாமி பொல்லாதவன்தான். ஆனா இவ்ளோ பொல்லாதவன்னு இன்னிக்கு நீதிமன்றத்துல தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

    என்ன சேதி. ஒண்ணும் பிடிபடல. சார்வாள் வருத்தமா இருக்கீங்கன்னு மட்டும் புரியுது. விஷயம் அறியும் ஆர்வத்தில் முருகன்.

    நான் தொடர்ந்தேன். அவசரத் தேவைக்காக மாடசாமிகிட்ட சற்குணம் ஐயா வட்டிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வாங்கியிருக்காரு. எழுதி வாங்காததனால அவன் இஷ்டத்துக்கு வட்டிய ஏத்தி எவ்வளவு பணம் அடைச்சாலும் அத வட்டிக்கணக்குலயே வரவு வச்சிருக்கான். இரண்டு லட்சம் வரை குடுத்த பிறகும் இன்னும் அசல் குடுக்கணும்னு சொன்னதால ஐயா நீதிமன்றத்துக்கு போக முடிவு எடுத்துட்டாரு. கெட்டவனுக்குத் தப்பு பண்ண கசக்கவா செய்யும். அவன் நீதிமன்றத்துல பொய்சாட்சி சொல்ல வச்சி, பொய்யான தாள்கள ஆதாரமாக் காட்டி ஜெயிச்சிட்டான். இருந்தாலும் ஐயா நேர்மை என்னைக்குமே தோற்காது. நான் மேல் முறையீடு செய்யப்போறேன்னு சொல்லிட்டு குனிஞ்சதலையோட வெளிய வந்தார். பாக்கவே பாவமா இருந்திச்சு தெரியுமா. .

    சார்வாள் காட்டுல விலங்குகள் வேட்டையாடும்போது தங்களால கொல்லப்படற மிருகங்கள் வேதனையால கத்தறதப் பாத்து மனசு மாத்திக்கிடுதா என்ன. அதப் பாத்து பயப்படாம கொன்னு சாப்பிடுது இல்ல. அது மாதிரி தான் மாடசாமி மாதிரி கெட்டவங்களும் எத்தன பழி பாவம் வந்தாலும் பயப்படாம மேல மேல கெடுதலத்தான் செய்வாங்க. முன்ன இதுக்கு அஞ்சாதே! தின்பது அழுவதன் கண் அப்டின்னு ஒரு பழமொழியே இருந்திச்சு. என் வருத்தத்துக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் முருகன்.

    பாடல் 6

    தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
    ஆற்றும் துணையும் அறஞ்செய்க! – மாற்றின்றி
    ‘
    அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து
    துஞ்ச வருமே துயக்கு‘.

    பழமொழி: அஞ்சும் பிணி, மூப்பு, அருங்கூற்று உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு

    அந்தக் குளத்துல குளிக்கிறவளப் பாத்தியா. அவளப் பாத்தா பைத்தியம் மாதிரி தோணுதா உனக்கு.  சவீதா என்னிடம் கேட்கிறாள்.

    கோடை விடுமுறைக்கு அவளின் சொந்த ஊர் வந்திருக்கிறோம். எவ்வளவு அழகான ஊர். எங்கு பார்த்தாலும் பசுமை. பெரிய ஆலமரங்களைக் கரையெங்கும் கொண்ட கம்பீரமான குளம். சுற்றிப் பார்க்கலாம் என்று வந்தோம். பக்கதிலிருந்த அரசமரத்தடிப் பிள்ளையாரைச் சுற்றி வந்து ஈரப்புடவையுடன் ஒரு சில பெண்கள் கற்பூரம் ஏற்றி வைத்து கும்பிடுவதைப் பார்த்துக்கொண்டு நின்ற எனக்கு சவீதாவின் அந்தக் கேள்வி முதலில் புரியவில்லை.

    ஆமாம். அங்கு குளத்துப் படியில உக்காந்திருக்கற வயசான அம்மாவுக்கு என்ன ஆச்சு. கால நீட்டி உக்காந்து எதையோ மண்ணவச்சு தேச்சிக்கிட்டிருக்காங்க. கிட்ட போய்ப் பாக்கலாமா. அப்போதுதான் அவளைக் கவனித்த நான் சவீதாவிடம் கேட்டேன்.

    போச்சு போ. இவ்ளோ நேரம் அவ தன்னோட காசு மாலை, ஒட்டியாணம், வளையல், சங்கிலினு ஒண்ணோண்ணா தேச்சாளே அதப் பாக்கலியா. எல்லாத்தையும் கழுவி அங்க இருக்கு பாரு அந்த சொம்புக்குள்ள வச்சிட்டா. இப்போ அதோட மூடிய தேச்சிட்டிருக்கா. இது தினமும் நடக்கற விஷயம்.

    இந்தஅம்மா இந்த ஊரு பெரிய பண்ணையார் மனைவி. சின்ன வயசா இருக்கும்போது பண்ணையார் நிறைய தான தருமம் செய்வாராம். அது இந்த அம்மாவுக்குப் பிடிக்காது. அதனால புதுப் புது நகையா செஞ்சு மாட்டிக்குமாம். வயித்துப் பசின்னு வந்தவங்களுக்குக் கூட சோறு போட மனசில்லாம தனக்கு அளவுக்கு அதிகமா புடவைகள் வாங்கிக் குவிக்குமாம். ஏன் இப்படிச் செய்யற. உங்கிட்டதான் வேணுங்கிற அளவு நகைநட்டு இருக்கில்லனு பண்ணையார் கடிஞ்சு சொன்னா, அனுபவிக்கிற காலத்துல நல்லா அனுபவிச்சிட்டு வயசாகி மேல போறதுக்குமுன்ன இல்லாதவங்களுக்குக் குடுத்து புண்ணியத்தத் தேடிக்குவேன்னு சொல்லுமாம்.

    பண்ணையார் மேல போயி பத்து வருசம் ஆச்சு. அதிர்ச்சியில இந்த அம்மாவுக்கு புத்தி பேதலிச்சுப் போச்சு. பிள்ளகுட்டி எதுவும் இல்ல. சொத்து முழுக்க ஊர்ப் பஞ்சாயத்து எடுத்துக்கிச்சு. நகை மேல உள்ள பைத்தியத்துல இந்த அம்மா தர மாட்டேன்னு சொன்னதால உட்டு வச்சிருக்காங்க. மேல பாத்தியா ரெண்டு பேர் காவலுக்கு நிக்கறாங்க. இவுங்க காலத்துக்குப் பிறகு தன்னப்போல இந்த நகைகளெல்லாம் ஊர்ப் பஞ்சாயத்துக்குப் போயிடும்.

    சின்ன வயசுல நாம படிச்ச பழங்காலப் பழமொழி ‘அஞ்சும் பிணி, மூப்பு, அருங்கூற்று உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு என்பதற்கு உதாரணம் தான் இந்த அம்மா. அருமையான இந்த மனிதப் பிறவியில முடிந்த போதெல்லாம் தருமம் செய்யணும். கடைசி காலத்துல தருமம் செஞ்சிக்கலாம்னு ஒதுக்கி வச்சா அந்த வேளையில தருமம் செய்யமுடியாதபடி புத்தி மழுங்கிப்போனாலும் போகும் அப்டிங்கறத இவுங்கள மாதிரி உள்ள மனுச சன்மங்க புரிஞ்சுக்கிறதேயில்ல.

    உண்மைதான் இவங்களத் திருத்த நம்மளால என்னசெய்யமுடியும்னு யோசிக்கலாம். யோசித்துக்கொண்டே வீடுநோக்கி நடந்தோம் இருவரும்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 1

    கதை வடிவில் பழமொழி நானூறு – 1

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பழமொழி

    உண்பதற்குச் சுவையாகவும் உடல் வளத்திற்கு ஏற்றதாகவும் பழம் விளங்குவதுபோல கேட்பதற்கு இனிமையாகவும் அறிவுக்கு வளம் சேர்ப்பதாகவும் உள்ள அரிய வாக்குகளே ‘பழமொழிகள்’ என்கிறார் புலியூர்க்கேசிகன் அவர்கள். தமிழினத்தின் செம்மையான நல்வாழ்விற்கு உதவும் அறிவொளி விளக்கங்களாகப் பழமொழிகள் அமைந்து விளங்குகின்றன.

    பழமொழி நானூறு

    பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. இந்நூலை இயற்றியவர் தென்பாண்டி நாட்டின் சீர்மிகு பழம்புலவருள் ஒருவரான முன்றுறை  அரையனார். இதில் அக்காலத்தே வழக்கிலிருந்த நானூறு பழமொழிகளை அவர்தொகுத்து வழங்கியுள்ளார். ஒவ்வொரு பழமொழியையும் சொல்லி, அதன் அடிப்படையில் ஒரு நீதியை விளக்க ஒவ்வொரு செய்யுளாக, மொத்தம் நானூறு செய்யுட்கள் அமைத்து முதலிரண்டு அடிகளில் தாம் சொல்லக் கருதுகின்ற உண்மையையும், செய்யுளின் இறுதியில் அதற்கேற்றதும் அவ்வுண்மையை வலியுறுத்துவதுமான பழமொழியை அமைத்தும், இந்நூலை அவர் இயற்றியுள்ளார்..

    கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பழமொழிக்கும் நவீனவிளக்கம் தர முயற்சித்து எழுதும் எனது ஒருபக்கப் புனைக்கதைகளை இனி தொடர்ந்து வாசியுங்கள்.

    பாடல் 1 (கடவுள் வணக்கம்)  
    பாடல் 2

    மிக்க பழிபெரிதும் செய்தக்கால், மீட்டதற்குத்
    தக்கது அறியார், தலைசிறத்தல், – எக்கர்
    அடும்பு அலரும் சேரப்ப! ‘அகலுள்நீ ராலே
    துடும்பல் எறிந்து விடல்‘.

    பழமொழி- அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்

    நாதன் அமெரிக்காவிலிருந்து வந்தாச்சு. எல்லாருக்கும் ஏதேதோ வாங்கிக் கொண்டுவந்தான். என்னைய அவன் கண்டுக்கக் கூட இல்ல. ஆச ஆசயா தாத்தா னு கூப்பிட்டு காலச்சுத்தி விளையாடின பையன் படிச்சு பெரிய மனுசனா அமெரிக்கா போயிட்டு வந்தவொடனே தாத்தாவ மறந்துட்டான் போல. சரி பரவாயில்ல. நான் போகவேண்டிய கட்டதானே. எதையும் எதிர்பாக்கக்கூடாது. மனதிற்குள் புலம்பிக்கொண்டே சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார் கோபி தாத்தா.

    என்ன தாத்ஸ் ரொம்ப வேல போல வந்து பாதி நாள் கழிஞ்சுபோச்சு. கண்டுக்கவே மாட்டேங்குற. கதை சொல்றத நிறுத்திட்டயா. ஆரம்பித்தான் பேரன்.

    அட போடா. எல்லாரும் பெரிய மனுசங்க ஆயிட்டீங்க. நான் சொல்லற கதையக் கேக்க யாரு இருக்கா. தாத்தா சலித்துக்கொண்டார்.

    தாத்தா இதக் கையில வச்சிக்கிட்டு கதை சொல்லுங்க. இது பேரு ரெபக்கா எனப்.பந்து போன்ற இயந்திரத்தைக் கையில் கொடுத்தான் பேரன். கதை முடிந்தவுடன் ரெபக்கா அதுக்கு ஏத்த பழமொழியச் சொல்லும் என்றவுடன் தாத்தா சந்தோஷமாகக் கதை சொல்லத் தொடங்கினார்.

    நான் சின்னவனா இருக்கும்போது இந்த ஊரில அரவிந்தன்னு ஒருத்தர் இருந்தார். அவர் மகன் என்னோட நண்பன். நானும் அவனும் தினமும் ஆத்தங்கரைக்குப் போய் விளையாடுவோம். பள்ளிக்கூடம் முடிஞ்சவொடனே வீட்டுக்கு நடந்து வர வழியில தினமும் மரத்து மேல ஏறி உக்காருவோம் ஆல மரக் கிளைகள் மேல ஏறி உக்காந்து பாத்தா ஊர் முழுக்க எங்க காலடியில இருக்குற மாதிரி தோணும். வெகுதொலைவில் தினமும் அவன் அப்பா ஒருசிலரோடு வயக்காட்டு மூலையில் ஏதோ செய்து கொண்டிருப்பது தெரியும். பாருடா எங்கப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு நாள் பூரா உழைக்கறார்னு சொல்லுவான். கொஞ்ச நாள்ல அரவிந்த் சைக்கிள் வாங்கிட்டான். அப்புறம் மெதுமெதுவா அவனோட உடைகளும் மாறிச்சு. டேய் நாங்க பணக்காரங்க ஆயிட்டோம்டா என அவன் எல்லாருக்கும் கம்மர்கட், தேன்மிட்டாய் எல்லாம் வாங்கிக்குடுக்க ஆரம்பிச்சான். அப்போதான் ஒருநாள் எங்க தமிழ் வாத்தியார் அவனக் கூப்பிட்டு

    தம்பி உங்கப்பா சாராயம் காய்ச்சி தப்பான வழியில பணம் சம்பாதிக்கிறார். நீ படிக்கிற பிள்ளதானே. மெதுவா உங்க அப்பாகிட்ட எடுத்து சொல்லுனு சொன்னார்.

    அவனும் அவன் அப்பா கிட்ட சொன்னான். அப்புறம்என்ன நடந்ததுதெரியுமா. அவன் அப்பா அவன்கிட்ட நாம நம்ம குலதெய்வம் கோயிலுக்கு ஒரு மண்டபம் கட்டிவிட்டுட்டா எல்லாக் குத்தத்தையும் சாமி மன்னிச்சிரும்னு சொல்லிட்டாரு. அவரும் கடைசி வர திருந்தல. கெட்ட வழியில சம்பாதிச்ச காசுல வியாபாரத்தத் தொடங்கின என் நண்பனும் உருப்படல. இதுதான் கதை.

    ரெபக்கா ஆரம்பித்தது. அரவிந்தனோட செய்கை குட்டி அகலுக்குள்ள குதிச்சு தண்ணி துளும்பி வெளிய வர மாதிரி குளிக்கப்போறேன்னு ஒருத்தன் சொல்லுகிற மாதிரி தான். எப்படி அது சாத்தியமில்லையோ அப்படித்தான் அவன் செய்த பெரும் பாவத்தைத் தொலைக்க கோவிலுக்கு மண்டபம் கட்டறதும். இதத்தான் முந்தைய காலத்துல அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல் னு பழமொழியா சொல்லுவாங்க. ரெபக்காவின் பழமொழியைக் கேட்ட தாத்த உற்சாகமானார்.

    பாடல் 3

    தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள்
    தொக்க வகையும் முதலும் அதுவானால்
    ‘
    மிக்க வகையால் அறஞ்செய்க!‘ எனவெகுடல்
    ‘
    அக்காரம் பால்செருக்கும் ஆறு‘.

    பழமொழி – அக்காரம் பால் செருக்கும் ஆறு

    பேருந்தின் சன்னலோர இருக்கை மனதுக்கு இதமாகத்தான் இருந்தது. முகத்தில் ஓங்கி அடிக்கும் காற்று, அதில் மிதந்து வரும் விதவிதமான ஒலிகள், நறுமணங்கள் எல்லாம் சுகம். ஆனால் பயணம் முழுசும் மனசு உறுத்திக்கிட்டேதான் இருக்கு. ஒருவேள உண்மையில நான் தப்பு செஞ்சிட்டேனோ.  தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கும் நான் கடந்த இரண்டு மாதத்துல ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காம கடினமா உழைச்சு சம்பாதிச்ச காச எடுத்துக்கிட்டு ஊருக்கு போறேன். அதுல அந்தப் பக்கத்து இருக்கை பெரியவருக்கு என்ன பிரச்சினையோ.

    மனம் முழுக்க சந்தோசமா நண்பர்களோட எப்படி மூணுநாள் ஊரச்சுத்தலாம்னு யோசிச்சிக்கிட்டே வரும்போது கடுப்பக் கிளப்பி விட்டுட்டாரு. எரிச்சலக் கெளப்பிட்டு எப்டி அசந்து தூங்குறாரு பாரு. பார்க்கப் பார்க்க கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஐந்து மணி நேரப் பிரயாணத்தில் நான்கு மணி நேரம் கழிந்துவிட்டது. இன்னும் ஒருமணி நேரம் தான். ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம். அப்புறம் இவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். மனதைச் சமாதானப் படுத்திக்கொண்டேன்.

    வீட்டிற்கு போய்ச் சேர்ந்தவுடன் மனது பொறுக்காமல் அப்பாவிடம் அந்தப் பெரியவரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். இதுக்கு எதுக்குப்பா இவ்வளவு வருத்தப்படற. இதத்தான் முந்தைய காலத்துல அக்காரம் பால் செருக்கும் ஆறு னு பழமொழியா சொல்லுவாங்க. நீ நேர்மையான முறையில  உழைச்சு பணம் சம்பாதிச்சிருக்க. அந்தப் பெரியவரு பிச்சைக்காரனுக்கு பத்து ரூபாய் போட முடியாதா உன்னாலானு உன்னயத் திட்டி இருக்காரு. போதாதுக்கு தானதருமம் செஞ்சா நல்லதுனு உபதேசம் பண்ணிக்கிட்டே வந்திருக்காரு. அவரு உன்னயத்திட்டியிருக்க வேண்டியதில்ல. இருந்தாலும் அவர் பேச்சக் கேட்டு நீ தானம் பண்ணியிருந்தேன்னா அது சுவையான பால் கூட வெல்லம் கலந்துதுன்னா எப்படி அதோட சுவை அதிகரிக்குமோ அதுமாதிரி உன் பெருமையக் கூட்டுமே தவித்து குறைக்காது.

    Share
  • ஹைட்ரஜனும் முட்டாள்தனமும்

    ஹைட்ரஜனும் முட்டாள்தனமும்

    நிர்மலா ராகவன்

    பழகத் தெரிய வேணும் – 24

    “முட்டாள்தனமாக நடப்பவர்களுக்கு மரண தண்டனை என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால், உலகத்தில் மக்கள்தொகை வெகுவாகக் குறைந்துவிடும்,” என்று அபிப்ராயப்படுகிறார் ஒரு புத்திசாலி.

    ஒரு துணுக்கு

    மாணவன்: நான் அரசியல்வாதியாகப் போகிறேன்.

    ஆசிரியர்: பின்னே ஏண்டா பள்ளிக்கூடத்துக்கு வருகிறாய்?

    ஓயாமல் பேசும் ஒரு பெண்ணைக் கேட்டேன், “ஏன் இப்படிப் பேசிண்டே இருக்கே?”

    “அப்போதான் மூளை வளரும்!”

    அறிவார்த்தமாகப் பேசுவதும், முப்பது வயதாகியும், தன் குரலைக் கேட்பதே ஆனந்தம் என்பதுபோல் அர்த்தமில்லாமல் பேசுவதும் ஒன்றாகிவிடுமா?

    பலர் கூடியிருக்கும் இடத்தில் நிறையபேர் இப்படித்தான் பேசுகிறார்கள். பிறர் சொல்வதைச் சரியாகக்கூடக் காதில் வாங்காவிட்டாலும், ஒன்று சேர்வதாலேயே பலம் கிடைக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட புத்திசாலிகள் இவர்கள்.

    “உலகில் அதிகமாகக் காணப்படுவது ஹைட்ரஜனும் முட்டாள்களும்தான்,” என்று சொல்லி வைத்திருப்பது இதற்காகத்தானோ?

    தம்மைப்போல் இல்லாதவர்கள் முட்டாள் என்று நம்புகிறவர்கள் ஆபத்தானவர்கள்.

    எங்கள் பள்ளிக்கூடத்திற்குப் புதிதாக வந்த ஆசிரியை நோரய்னியின் கதையைக் கேட்போமா?

    தினம் தவறாது, ஏதோ ஒருவித மலாய் கேக் வாங்கிவந்து, பிற ஆசிரியைகளுக்கு விநியோகம் செய்வாள்.

    ‘இவளுக்கு எதற்காக நன்றிக்கடன் படவேண்டும்!’ என்று நான்மட்டும் வாங்க மறுத்துவிடுவேன்.

    தன் தாராள சிந்தனையையும், பிறரிடம் தனக்கு எவ்வளவு அன்பு என்றும் காட்டிக்கொள்ள வேண்டுமாம்!

    அவள் திட்டம் பலித்தது. மற்றவர்கள் எல்லாரும் அவளை உயர்ந்த இடத்தில் வைத்து, அவளுக்குக் கட்டுப்பட்டார்கள்.

    போகப் போக, அவள் குணம் புரிந்தது.

    யாராவது அவள் கூறிய கருத்தை ஏற்காவிட்டால் அவர்களுடன் பேச மறுத்து, முறுக்கிக்கொள்வாள். தான் சொல்வது தவறு என்று தெரிந்தும், அதை ஏற்க மறுப்பாள்.

    வீண்விவாதம் செய்வது இவளைப் போன்றவர்களுக்குப் பிடித்த வேலை. (உண்மையைவிட அதிகமாகத் தன்னை நேசிப்பதாலோ?)

    என்னிடம் முறையிட்டாள் ஒருத்தி.

    “நீங்கள்தான் அவளைப் புரிந்துகொள்ளாது, ஒரேயடியாகக் அவளைக் கொண்டாடினீர்கள்!” என்று சுட்டிக்காட்டினேன்.

    நோரய்னியின் பெயருக்குப்பின் தந்தையின் பெயர் ‘வெள்ளை’ என்று மலாயில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவளுடைய தந்தை ஜப்பானியர் என்று என்னிடம் கூறியிருந்தாள்.

    ஆச்சரியப்பட்டு, “இந்நாட்டில் மலாய்ப்பெண்கள் ஜப்பானியரை மணந்தார்களா?” என்று மூத்த சரித்திர ஆசிரியை ஒருத்தியிடம் ரகசியமாகக் கேட்டேன்.

    “இல்லை. ஆசைநாயகியாகத்தான் இருந்தார்கள்!” என்ற பதில் கிடைத்தது.

    முறை தவறிப் பிறந்திருக்கிறோமே என்ற வருத்தமோ என்னவோ நோரய்னிக்கு.

    ‘சக ஆசிரியைகளின் மகிழ்ச்சியை எப்படிக் குலைப்பது?’ என்று யோசனை போக, அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தாள்.

    பள்ளியில் அடிக்கடி மாறும் ஒவ்வொரு தலைமை ஆசிரியையும் வலியப்போய் நட்புகொள்வாள். அப்போதுதானே பிறரைப்பற்றிய வம்பு மேலதிகாரிக்குப் போகும்?

    ஒரு முறை, நான் ஏதோ பேசும்போது, அவள் பக்கம் கண்ணைக் காட்டினார்கள், ‘பத்திரம்!’ என்று எச்சரிக்கை செய்வதுபோல்.

    நான் உரக்கவே, “கிடக்கிறாள்! பயந்தாங்கொள்ளி!” என்று அலட்சியமாகக் கூற, பக்கத்தில் உட்கார்ந்திருந்த நோரய்னி குறுகிப்போனாள்.

    அவளுக்கு ஐம்பது வயதிருக்கும். வயதானால் அழகு குறையலாம், ஆனால் முட்டாள்தனம் என்னவோ மாறுவதில்லை.

    நோரய்னி முட்டாளா, தீயகுணம் படைத்தவளா, பரிதாபத்துக்கு உரியவளா?

    எல்லாரும், எப்போதும் தான் சொன்னபடியே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில், உண்மையான அன்பைத் தேடத் தெரியாத முட்டாள்.

    தன்னை ஏன் எல்லாரும் ஒதுக்குகிறார்கள் என்று புரிந்துகொள்ளும் அறிவற்றவள்.

    புறம் பேசி, பிறரைப் பிரச்னையில் மாட்டிவிட்டபோதோ..!

    முட்டாள்தனமும் மூடநம்பிக்கைகளும்

    ‘ராகு காலத்தில் விமானம் புறப்படுகிறது. கண்டிப்பாக, ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்!’ என்று எண்ணிக் கலங்கியபடியே பயணிக்கிறார் ஒருவர்.

    அவர் போகுமிடத்தில் பத்திரமாகக் கொண்டு சேர்த்துவிடுகிறது விமானம். கெட்டது நடக்கும் என்று எதிர்பார்த்து, அவர் கொண்ட கலக்கம்தான் அவர் எதிர்பார்த்த விளைவு.

    கருமை நிறம்

    கருமை நிறம்கொண்டு பிறந்துவிட்ட மனிதர்கள் மட்டும் ஒதுக்கப்படுவதில்லை. கறுப்புப் பூனைகளும்தான்.

    கடந்த பதின்மூன்று வருடங்களில், ஆறு கறுப்புப் பூனைக்குட்டிகளை யார் யாரோ கொண்டு வந்து எங்கள் வீட்டருகே விட்டிருக்கிறார்கள். நாங்கள் அவைகளை அன்புடன் பராமரிக்க, எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக வளையவரும்.

    சின்னா என்ற பெண்பூனை என் மடியில் உட்காரும், நான் சொன்னதைக் கேட்கும். நான் பேசுவதிலிருந்து தானும் கொஞ்சம் பேசக் கற்றுவிட்டது.

    சற்றுப் பெரிதாகி, சறுக்கி விழுந்துவிட்டதால், “மடியில ஒக்கார்றியா?” என்று நான் கேட்டபோது, “ஏனாம் (வேண்டாம்)” என்று முனகியது.

    அன்பும் கட்டுப்பாடும்

    கதை

    ராகினி படிப்பில் சோடையில்லை. அது போதாதா? பதினாறு வயதான தன்னை ஏன் இன்னும் கட்டுப்படுத்துகிறாள் தாய் என்ற ஆத்திரம் எழுந்தது அவளுக்குள்.

    பள்ளித்தோழிகளுடன் சேர்ந்துகொண்டு, ‘சுதந்திரம்’ என்ற பெயரில் மனம்போன போக்கில் நடந்தாள்.

    இருபது வயதானபோது, டிஸ்கோவிற்குப் போவது, மது அருந்துவது, ஆண்களுடன் தகாத முறையில் பழகுவது என்று அவளுடைய சுதந்திரப்போக்கு விரிந்தது. இதையெல்லாம் விதவைத் தாய் கடுமையாகக் கண்டிக்க, வீட்டைவிட்டு வெளியேறினாள்.

    அவளுடைய பள்ளித்தோழி, ஈ லெங், வேலை நிமித்தம் தனியாக கோலாலம்பூரிலேயே தங்க நேரிட்டது. (அவளுடைய பெற்றோர் வேறு ஊரில் இருந்தார்கள்).

    இத்தோழியுடன் தங்கி, இருவருக்கும் சேர்த்துச் சமைக்கையில், சுதந்திரமாக உணர்ந்தாள் ராகினி.

    பல வருடங்களுக்குப்பின், அவளுடைய மகளுக்கும் பதின்ம வயதானபோதுதான் அவளுக்குத் தன் தாய் காட்டிய கண்டிப்பின் காரணம் தெளிவாகியது. தான் இப்போது மகளின் பாதுகாப்புக்காக கவலைப்படுவதுபோல்தானே அன்று அம்மாவும் கவலைப்பட்டிருப்பாள்!

    ‘முட்டாள்தனமாக, வயதான அம்மாவைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டு, எங்கோ போய் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்துவிட்டேனே!’ என்று மிகவும் வருந்தினாள்.

    ஆனால், அவளது மன்னிப்பை ஏற்க அம்மா உயிருடன் இல்லை. கடைசிவரை, மகளுடன் வந்து தங்க விரும்பாது, தனியாகவே வாழ்ந்தாள்.

    பலருக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்று புரிவதில்லை.

    கதை

    படிப்பில் அக்கறையே காட்டாது இருந்த ஒரு மாணவனிடம், “நீ படிக்காவிட்டால் நல்ல வேலை கிடைக்காதே! பணத்துக்கு என்ன செய்வாய்?” என்று நான் கேட்டபோது, “அப்பா கொடுப்பார்!” என்றான்.

    “உனக்குக் கல்யாணமாகி, குடும்பம் பெருகிவிட்டால்?”

    “அப்போதும் அப்பா கொடுப்பார்”.

    இந்த இருவரில் யார் முட்டாள்? அப்பாவா, மகனா?

    மகன் எந்தக் காலத்திலாவது தன் சொந்தக்காலில் நின்றாகவேண்டும் என்று புரிந்துகொள்ள விரும்பாது, அவன் தன்னையே சார்ந்திருக்கும்படி செய்யும் அப்பாதான்.

    சுயநலமான சுதந்திரம்

    ஃப்ளூ காய்ச்சல் பரவாதிருக்க எல்லாரும் முகமூடி அணியவேண்டும் என்ற அதிகாரபூர்வமான ஆணை பிறந்தது. இன்றல்ல. 1918-ல்! ஸான் ஃபிரான்சிஸ்கோவில்.

    ‘எங்களுடைய தனிப்பட்ட உரிமையைப் பறிக்கிறீர்கள்!’ என்று 4,500 பேர் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.

    தங்களுடன் பிறரையும் ஆபத்துக்கு ஆளாக்குகிறோம் என்று புரிந்து நடக்காதவர்களை என்னவென்று சொல்ல!

    தற்போது, இப்படிப்பட்ட ரகளையெல்லாம் இல்லை. மனிதர்கள் புத்திசாலியாகிவிட்டார்களோ?

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31

    தி. இரா. மீனா

    மும்மடிக்காரியேந்திர

    மும்முடிக்காரி என்ற பெயரால் இவர் அரசராக இருந்திருக்கலாமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ’மகாகன தொட்டதேசிகார்ய குரு பிரபுவே’ என்பது இவரது முத்திரையாகும்.

     1. “பக்தியெனும் பாலை மனதுள் உறையவைத்து
    அதிலிருந்த கெட்டியான தயிரை
    உடலென்னும் பாத்திரத்தில் நிரப்பி
    தத்துவமென்னும் மத்தால் கடைந்து
    இலிங்கமென்னும் வெண்ணெய் தெரிய அதையெடுத்து
    ஞானக் கனலில் பக்குவப்படுத்தி
    இயற்கை மணத்துள் விளங்கும் நெய்யைப் பருகும்
    ஆற்றலால் ஆன்மா இலிங்கமானது பாராய்
    மகாகன தொட்ட தேசிகார்ய குருபிரபுவே“

    2. “பகலிருக்க இருளுண்டோ?
    இருளிருக்கப் பகலுண்டோ?
    விழித்திருக்க உறக்கமுண்டோ?
    துன்பமிருக்க இன்பமுண்டோ?
    தாங்கள் காட்சியளிக்க நான் காட்சியளிப்பேனோ?
    நான் காட்சிதர தாங்கள் காட்சி தருவீரோ?
    நீங்களிருக்க நானில்லை நானிருக்கத் தாங்களில்லை
    மகாகன தொட்ட தேசிகார்ய குருபிரபுவே“

    மெரேமிண்டய்யா

    ‘ஐகட்ட தூரராமேஸ்வர இலிங்கா’ இவரது முத்திரையாகும்.

    1. “அங்கத்திலிருந்து அங்கை வந்தாய்
    அங்கை இருந்து அகமேன் வாராய் ஐயனே ?
    நீ கேட்டு நான் பாடேன் செவி வாய் வலியன்றோ ஐயனே
    எக்காலும் உனக்கு இறப்பில்லை எனக்கும் பிறப்பில்லை
    அடங்காது உன்னுடல் சுருங்காது என்மனம்
    செயலென்னும் பாசியில் சிக்கி
    உயர்வறியாமல் தடுமாறுகிறேன்
    ஐகடத்துக்குப் புகலிடம் சொல்வாய்
    ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கமே“

    2. “உணவாசைக்கு ஒழுக்கம் கெட்டு
    ஐம்புலனாசைக்குப் பற்றினை விட்டு
    அனைவரின் நட்பால் ஏமாற்றம் தொட்ட
    வினைப்பயனின் உடலுடையோர்க்குண்டோ உயர்பக்தி
    ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கம் அறியும் வரையில்?”

     3. “சத்திரியன் சூத்திரன் வைசியன் பிராமணனெனும்
    தொழில் எதுவானாலும்
    ஆற்றுவதில் பொய்யாமை வேண்டும்
    சிவனின் எழுத்தது, பசுபதியின் நிலையது
    ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கமது.”

    4. “தன்னைத் தானறியின் தன்னறிவே குரு
    தானே இலிங்கம், தன்னுறுதியே ஜங்கமம்
    இவ்வகை மூன்றும் ஒன்றாயின்
    ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கமாம்.”

    மேதர கேதய்யா:

    கூடை பின்னுவது இவரது காயகம். ’கவரேஸ்வர’ இவரது முத்திரையாகும்.

    1. “பக்தனுக்கு இன்பமும் ஒன்றே,துன்பமும் ஒன்றே,
    வறுமை செல்வம் இரண்டும் ஒன்றே,
    நினைக்காதிருந்தால் சரணருக்கு அதுவே கேடு
    ஜங்கமனென உறுதியெடுத்து,
    தன்னெதிரில் பிறரை அழிப்பதற்குத்
    தன்னுடலைக் காப்பாற்றினால்
    அன்றே தீர்த்தப் பிரசாதத்திற்கு தூரம், கவரேஸ்வரனே”

    2.  “முதலில்லாமல் இலாபமுண்டோ?
    எதிர்பார்ப்பின்றித் தேர்வுண்டோ?
    குருவின்றி இலிங்கமுண்டோ?
    இப்படி,பொய்யான வாக்குறுதிக்கு வெட்கினேன் கவரேஸ்வரனே“

    மைத்துன ராமய்யா

    ஆந்திர மாநிலதைச் சேர்ந்த இவர் அப்பாவியான இயல்புடையவர். கல்யாண் நகர் வந்து சரணர்களோடு கலந்து தன் அறியாமையால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தவர். சிவ -பார்வதியைத் தன் அக்கா மாமனாக எண்ணி ’மைத்துனன் ராமையா’ என்று தன்னை அழைத்துக் கொண்டதாகச் செய்தியுண்டு. ’மகாலிங்க சென்னராம’ இவரது முத்திரையாகும்.

    1. “சரணர் வரவுகண்டு
    சிரம்தாழ்த்திக் கரம் குவிக்கவேண்டும்
    சரணமெனில் மனம் ஒப்பாது
    அன்றைய இன்றைய பயன், இலாபம், பக்தியறியாமல்
    சரணமெனில் உள்ளம் ஒப்பாது.
    செல்வரென நம்பியும் நம்ப இயலாமலும்
    மகாலிங்க சென்னராமேஸ்வரன் என்னைப் பார்த்துநகைக்கிறான்.”

    மோளிகே மகாதேவி

    காஷ்மீர் அரசபரம்பரையைச் சேர்ந்த மாரய்யா மோளிகே மகாதேவி தம்பதி பசவேசரின் சித்தாந்தத்தால் கவரப்பட்டனர். தங்கள் வசதியான வாழ்க்கையைத் துறந்துவிட்டுக் கல்யாண் வந்தனர். பசவேசரைச் சந்தித்தனர். மரச்சாமான்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு தங்களால் இயன்றவரை சிவசாரணர்களுக்கு உணவுபடைத்து அன்புகாட்டி வாழ்ந்தனர். ‘என்னையப்பிரியா இம்மாடி நிக்கலங்க மல்லிகார்ஜுனா’ இவரது முத்திரையாகும்.

    1. “அம்பெய்தியவரை அறிவேன்
    எய்த அம்பு திரும்பும்படி செய்தவரையறியேன்
    வழிபாடு செய்தவரையறிவேன்
    வழிபாட்டு இலிங்கம் அங்கத்தில் ஊடுருவியதறியேன்
    சொல்லுக்குச் செயல்,செயலுக்குச் சொல்லெனும்
    இவ்விரண்டும் ஒன்றானவரையறியேன்
    இவ்விரண்டும் சித்தியடைந்து சித்தானந்தமானால்
    என்னய்யப் பிரியன் இம்மடி நிக்களங்க மல்லிகார்ஜூனன்
    ஞானச் செயலில் உறுதியுடையோனுக்கன்றி
    பிறருக்கு அருள்வதில்லை”

    2. “பூமியின் ஆதரவின்றி தண்ணீர் இருக்குமா?
    மண்ணின் அடிப்படையின்றி விதை முளைவிடுமா?
    முயற்சியின்றித் திறன் பெறமுடியுமா?
    அறிவாற்றலின்றி அறிவுபெற முடியுமா?
    செயல்படுதலும் அறிவும் இணையானவை
    இதுதான் கட்டமைப்பின் அடிப்படை
    என்னையப்பிரியன் இம்மடி நிக்களங்க மல்லிகார்ஜுனா”

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)

    சேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    கொண்டு வந்து மனைப்புகுந்து  குலாவு பாதம் விளக்கியே
    மண்டு  காதலின்  ஆச  னத்திடை  வைத்த  ருச்சனை செய்தபின்
    உண்டி  நாலுவி  தத்தில்  ஆறுசு  வைத்தி   றத்தன   ஒப்பிலா
    அண்டர்  நாயகர்  தொண்டர் இச்சையின்  அமுது செய்ய அளித்துளார்

    உரை

    அவர்களைத் தமது மனைக்குள்ளே, அழைத்துக் கொண்டு வந்துபுகுந்து, குலவுகின்ற அவர்களது திருவடிகளை விளக்கி, மிகுந்த ஆசையினாலே ஆசனத்தில் எழுந்தருளுவித்து, அருச்சித்து, அதன்பின் நான்கு விதத்தில் இயன்ற ஆறுசுவை யுணவுகளையும், ஒப்பில்லாத சிவபெருமான் அடியவர்கள்  இச்சையில் அமுது செய்தருளுமாறு கொடுத்துள்ளார்.

    விளக்கம்

    ‘’கொண்டு வந்து மனைப்புகுந்து குலாவு பாதம் விளக்கியே’’ என்ற அடி, அடியாரைத்தம் இல்லத்துக்கு  அழைத்துக் கொண்டு வந்து அவர்தம் திருப்பாதங்களை நீரிட்டு அலம்புதலைக் குறித்தது. இதனை  பாத்தியம் என்ற  வரவேற்பு  நிகழ்ச்சியாகும்.

    குலாவு பாதம் – மோட்ச சாதனமாகக்   கொண்டாடப்பெறுகின்ற பாதம்  விளங்குகின்ற பாதம் என்றலுமாம். இறைவனைப் பூசையில் எழுந்தருளச் செய்யும் போதும், அடியார்களுக்கு விருந்தளிக்கும் போதும்   பாத்தியம் அர்க்கியம் – ஆசமனம் – அருச்சனை முதலியன வழிபாட்டின் அங்கங்களைக் கடைப்பிடித்தல். இவை  சிவபூசைக்குரியவை  அடியார் பூசையாகிய மாகேசுவர பூசைக்குமாம்.இவை சோடசோபசார மென்பர். அடியார்க் கமுதளிக்கும் பூசையிற் பாதம் விளக்கும் நியதியும் அது காரணமாகப் பெற்றபேறும் திருப்பெண்ணாகடத்துக் கலிக்கம்ப நாயனார் சரிதத்திற் கூறப்பெறும்.

    இப்பாடலின் ‘’மண்டு காதலின்’’ என்ற தொடர், நூல்களில் விதித்தபடி இயற்றுவது என்றமட்டில் அமைந்துவிடாது மனத்திலே மிக்கெழுந்த ஆசையினாலே என்பதைக் குறித்தது.

    ‘’உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத்திறத்தினில் – நாலு  விதத்திலும் ஆறுசுவைத் திறத்திலும் இயன்ற உண்டி என்க. நாலு வித உண்டி – உட்கொள்ளும் வகைக்குத் தக்கவாறு உண்டி நான்கு வகையாகப் பிரிக்கப்படும். அவை – உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன என்பவையாம்.

    ஆறுசுவை – கைப்பு, புளிப்பு, இனிப்பு,துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்பவை. மருந்துநூல் முறைப்படி உடற்கூற்றின் பற்பல தாதுக்களின் சத்துக்களுக்கும் பலவேறு வகைச் சுவைகள் வேண்டப் பெறுவன என்பர். உடல் நலத்துக்கேற்ற உணவு வகைகளை அன்புடன் சமைத்து ஆசையுடன் இடுதல் வேண்டும்.

    ‘’ஒப்பில்லாத தொண்டர் இச்சையின்‘’ என்ற தொடர் ஒப்பில்லாத நாயகர் தொண்டர் எனவும், ஒப்பில்லாத   தொண்டர் எனவும்,  ஒப்பிலா இச்சை எனவும் கூட்டி  மூவகை  உரை  பெற்றது.

    தம்மிச்சையின்படி உணவிடாமல், தொண்டர்களின் விருப்பம், மனப் பக்குவம், மூப்பு ஆகியவற்றுக்கு  ஏற்ப,   அவர்கள்  தமது இச்சையின்படி அமுதுசெய்ய என்று பொருள். தொண்டர்களது இச்சையிலே நாயகர்நின்று விருந்தோம்பும் படி என்றலுமாம். நாயகரும் தொண்டரும் அமுதுசெய்ய என்றும்  பொருள் தரும். இச்சையின்படி அமுதுசெய்ய  அளித்தலாவது – அவ்வவரும் வேண்டியன வேண்டியவாறே பெற்றுண்ண அளித்தல். அளிந்துளார் – அன்புடன் கொடுத்து அவரன்புக்கு ஏற்ப  உளராயினார் என்றது குறிப்பு.

    இப்பாட்டால் அடியார்களை உபசரித்து மாகேசுவர பூசை  செய்யும் முறை கூறப்பெற்றது. முன்பாடலில் கூறிய ‘’ஈரமென் மதுரப்பதம் பரிவெய்த முன் உரைசெய்த பின்’’  செய்யவேண்டுவன இவை என்க. இன்றைக்கும் மாகேசுவர பூசைகளிலே இத்திருப்பாட்டினையே பெரும்பாலும் ஓதித் துதித்துப் பூசிக்கும் வழக்கமும் காண்க. இவ்வாறு பூசிக்கப்பெற்ற அடியார்களான மாகேசுவரர்கள் செய்யும் ஆசீர்வாதமும் அதன் பயனும்  அடுத்த பாடலில் கூறினார்.

    மல்கி எழுகின்ற சீரினைச் செய்யும் இப்பூசைக்குரியயாப்பாக ஆசிரியர் இப்பகுதியை எழுசீர் விருத்தத்தாற் பாடியருளிய அழகும் காண்க.

    Share
  • நாலடியார் நயம் – 40

    நாலடியார் நயம் – 40

    நாங்குநேரி வாசஸ்ரீ

    40. காம நுதலியல்

    பாடல் 391

    (தலைமகற்கு வாயிலில் நேர்ந்த தோழி தலைமகள் புலவிநீங்கச் சொல்லியது)

    முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி
    உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; – வயங்கு ஓதம்
    நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
    புல்லாப் புலப்பதோர் ஆறு..

    கடலலைகள் நில்லாமல் மோதும் நீண்ட
    கழிகளின் குளிர்கரையுடை அரசனே!
    கணவனுடன் புணராவிடின் பசலை படரும்
    காதல் சுவையற்றுப்போகும் ஊடிவருந்தாவிடின்,
    கூடிப்பின் ஊடுதலே காதல் நெறி.

    பாடல் 392

    தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம்
    விம்ம முயங்கும் துணையில்லார்க்கு – இம்மெனப்
    பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
    நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

    தம்மால் விரும்பப்பட்ட தலைவரின் மாலை
    தரித்த அழகிய மார்பைப் பூரிக்கத் தழுவும் அத்
    தலைவரைப் பிரிந்த மகளிர்க்கு, ‘இம்’ எனும்
    தொனியுடன் மேகம் நீரைப் பொழிய
    திக்குகளெல்லாம் எழும் அவ்வோசை
    தீய சாப்பறையை ஒத்திருந்தது.

    பாடல் 393

    (தலைமகன் சொல்ல உடன்படாமையைத் தலைவற்குத் தோழி சொல்லியது.)

    கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
    மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
    கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
    இம்மாலை என்செய்வ தென்று.

    வருந்தி வேலைசெய்யும் கம்மாளரும்
    வேலையை நிறுத்திக் கருவிகளை எடுத்து
    வைக்கும் மயக்கம் தரும் மாலையில் மலர்களை
    வகையாய் ஆய்ந்தெடுத்து மாலையாய்த் தொடுத்து
    வைத்து தலைவன் இல்லா மகளிர்க்கு இம்மாலை
    வழங்கும் பயன்தான் என்ன? எனக் கலங்கி அழுதாள்.

    பாடல் 394

    (வினைமுற்றி மீண்ட தலைமகன் பாகன்கேட்பச் சொல்லியது)

    செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர்
    மெல்விரல் ஊழ்தெறிய விம்மித்தன் – மெல்விரலின்
    நாள்வைத்து நங்குற்றம் எண்ணும்கொல், அந்தோதன்
    தோள்வைத்து அணைமேற் கிடந்து.

    சூரியன் மறையும் மாலை நேரம் கண்டு வருந்தி
    செவ்வரி பரந்த கண்களின் நீரை மெல்விரலால்
    எடுத்தெறிந்து விம்மி அழுது தன் மெல்விரலால்
    எமைப் பிரிந்த நாட்களைக் கணக்கிட்டுப்
    படுக்கையில் தன் தோளையே தலையணையாய் வைத்துப்
    படுத்து நான் வராத குற்றத்தை எண்ணுவாளோ?

    பாடல் 395

    (தலைமகன் தானுற்றதைப் பாங்கற்குச் சொல்லியது)

    கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
    பின்சென்றது அம்ம சிறுசிரல்; – பின்சென்றும்
    ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
    கோட்டிய வில்வாக்கு அறிந்து.

    எம் தலைவியின் கண்களைக் கயல் மீனென
    எண்ணிப் பின்தொடர்ந்த சிறிய மீன்கொத்தி
    வகையாய் ஊக்கத்துடன் முயன்றும் ஒளிரும்புருவத்தை
    வில்லின் வளைவென எண்ணியதால் கொத்தாமல்
    விட்டுச் சென்றது அவ்விடம் நீங்கி.

    பாடல் 396

    (மகளைப் போக்கிய தாய் இரங்கியது)

    அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ
    பரற்கானம் ஆற்றின கொல்லோ; – அரக்கார்ந்த
    பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று
    அஞ்சிப் பின்வாங்கும் அடி.

    செவ்வாம்பல் போலும் வாயும் அழகிய இடையுமுடைச்
    சிறு மகள் செம்பஞ்சுக்குழம்பைப் பாதத்தில் பஞ்சினால்
    தடவினும் மெல்ல எனச் சொல்லி பின்னுக்கு இழுப்பாள்
    அப்பாதங்கள் பரற்கற்கள் நிறை பாலை வழியின்
    ஆறாக்கொடுமையை எவ்வாறு தாங்கும்?

    பாடல் 397

    (தலைவன் பிரிவாற்றாத தலைவி நிலைமையைத் தோழி கூறியது.)

    ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
    மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
    மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்
    கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து..

    ஓலையில் எழுதும் கணக்கரின் ஓசை
    ஒழியும் மாலை நேரம் தலைவன் பிரிதலை
    நினைத்து மாலையைக் கழற்றி வீசியெறிந்து
    நல்லழகிய கொங்கைகளில் பூசிய சந்தன
    நறுங்குழம்பை உதிர்த்துத் துன்புற்று அழுதாள்.

    பாடல் 398

    (உடன்போக்குப் பொருந்தின தலைமகள் தோழிக்குச் சொல்லியது)

    கடக்கருங் காலத்துக் காளைபின் நாளை
    நடக்கவும் வல்லையோ என்றி; – சுடர்த்தொடீஇ
    பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே
    கற்றான் அஃதூரும் ஆறு.

    ஒளிவீசும் வளையல் அணிந்தவளே!
    கடந்து போவதற்கு அரிய பாலை வழியில்
    காளையொத்த நின் காதலனுடன் நாளை நடந்து
    கடக்கும் ஆற்றல் உடையாயோ? எனக்
    கேட்கின்றாயோ? ஒருவன் குதிரையைப் பெறும்
    பொழுதே அதில் ஏறிச்செல்லும் முறையையும்
    பயில்பவனாவான் எனவே காதலனைப்
    பின் தொடர்தல் அரிதன்று.

    பாடல் 399

    (இஃது மகளைப் போக்கிய தாய் கவலைப்பட்டுச் சொல்லியது)

    முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
    இலக்கணம் யாதும் அறியேன் – கலைக்கணம்
    வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
    பூம்பாவை செய்த குறி.

    முலைக்காம்பும் முத்துமாலையும் உடல்
    முழுதும் அழுந்தும்படி தழுவிக்கொண்டதன்
    காரணம் யாதையும் அப்போது யான் அறியேன்
    காதலனுடன் மான்கூட்டம் புலிக்கு அஞ்சும்
    பாலை வழியில் எனைப் பிரிந்து செல்லத்தான்
    பாசமாய்த் தழுவிக்கொண்டாளோ?

    பாடல் 400

    (தலைவி தன் பிரிவாற்றாமையைத் தோழியோடு சொல்லியது)

    கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
    என்ஈன்ற யாயும் பிழைத்ததென் – பொன்னீன்ற
    கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின்
    பாங்கனார் சென்ற நெறி.

    மன்மதனை முழுதும் எறிக்காது விட்ட
    முக்கண்ணனாம் சிவனும் தன்கூட்டில்
    பொரித்த குயில்குஞ்சைக் கொத்தாமல்
    பாதுகாப்பாய் வளர்த்த காகமும்
    சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த
    சர்ப்பமும் தன்னைப் பெற்றபோதே
    கொல்லாது விடுத்த தன்தாயும் ஒரு
    குற்றமும் செய்யவில்லை, எனக்குக்
    குற்றம் செய்தது பொருள் தேடத்
    தலைவன் பிரிந்த வழியே.

    Share
  • நாலடியார் நயம் – 39

    நாலடியார் நயம் – 39

    நாங்குநேரி வாசஸ்ரீ

    39. கற்புடை மகளிர்

    பாடல் 381

    அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன
    பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் – விரும்பிப்
    பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்
    நறுநுதலாள் நன்மைத் துணை.

    பெறுதற்கரிய கற்பினையுடை இந்திராணியையொத்த
    பெரும்பெயர் பெற்ற மகளிரேயாயினும்
    தன்னைச் சேர நினையும் ஆசையால்
    தன்பின்னே ஆடவர் நில்லா முறையில்
    தம்மைக்காக்கும் நல்லொழுக்கமுடையாளே
    தம்கணவனுக்கு நல்மனைவி.

    பாடல் 382

    குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்
    கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
    கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
    மாதர் மனைமாட்சி யாள்.

    குடத்துத் தண்ணீரைக் காய்ச்சிக்குடிக்கும்
    கொடும் வறுமை வரினும் பருகினால்
    கடல் நீரே வற்றுமளவு சுற்றத்தார் வரினும்
    கடமையாகிய குணத்தை ஒழுக்கமாகக்
    கொண்ட இன்மொழி பேசும் பெண்
    கொண்ட இல்வாழ்விற்க்கு மேலானவள்.

    பாடல் 383

    நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
    மேலாறு மேலுறை சோரினும் – மேலாய
    வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின்
    இல்லாள் அமர்ந்ததே இல்.

    சுவர்கள் இடிந்தமையால் நால்பக்கமும் வழியாகி
    சிறியதாகி எப்புறமும் கூரையின் மேலிருந்து
    மழைநீர் வீழினும் இல்லற நெறியில் வல்லவளாய்
    மேன்மைமிகு கற்புடன் ஊர்புகழத் திகழும்
    மனைவியுடை இல்லமே சிறந்த இல்..

    பாடல் 384

    கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
    உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; – உட்கி
    இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
    மடமொழி மாதராள் பெண்.

    அன்புடைக் கண்ணுக்கு இனியவளாய் கணவன்
    ஆசையுறுமாறு அலங்கரித்துக்கொள்பவளாய்
    அச்சம் உடையவளாய் ஊர்ப்பழிக்கு நாணுபவளாய்
    அன்புக்கணவனுடன் சமயமறிந்து ஊடல் கொண்டு
    அவன் மகிழுமாறு ஊடல்நீங்கி இன்பந்தரும்
    அக்கபடமில்லாப் பேச்சுக்களுடையவளே நற்குலப்பெண்.

    பாடல் 385

    எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்
    அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; – எஞ்ஞான்றும்
    என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்
    பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.

    நாளும் எம் கணவர் எம் தோளைத் தழுவி
    நீங்கினும் முதல் நாளின் நாணம் போலவேயின்றும்
    நாணம் கொள்கின்றோம் என்றிருக்க பொருளாசையால்
    நாணமின்றிப் பலரின் மார்பைப் பொதுமகளிர் எப்படி
    நாடித் தழுவுகின்றனரோ?

    பாடல் 386

    ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
    வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; – தெள்ளிய
    ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
    நாணுடையாள் பெற்ற நலம்.

    நல்ல கொடையுள்ளம் கொண்டவனின் செல்வம்
    நுண்ணறிவாளன் கற்றகல்வி போல் பயன்
    நல்கும் எல்லோருக்கும்,  நாணமிகு பெண்ணின்
    நல்லழகோ தெளிந்த அறிவுடையோன் கைக்கூர்வாள்
    நெருங்குதற்கு அரியதுபோல் அரியதாம்.

    பாடல் 387

    கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
    ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; – ஒருங்கொவ்வா
    நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
    என்னையும் தோய வரும்.

    தாழ்ந்த கருங்கொள்ளையும் உயர் செங்கொள்ளையும்
    தராதரமின்றி பணத்துக்கு ஆறுமரக்காலென வாங்கினானொரு
    சிற்றூரான் அதுபோல் எம்மோடு ஒப்பில்லா அழகிய
    சிறு நெற்றியுடைப் பொதுமகளிரைத் தழுவிய மலைமார்பன்
    குளிக்காது என்னையும் தழுவ வருகின்றான்.
    (தூணி- நான்கு மரக்கால், பதக்கு-  இரண்டு மரக்கால், தூணிப் பதக்கு- ஆறு மரக்கால்)

    பாடல் 388

    கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
    அடிபைய இட்டொதுங்கிச் சென்று – துடியின்
    இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்
    வலக்கண் அனையார்க்கு உரை.

    கொடிய சொற்களைக் கூறாதே பாணனே!
    காரணம் நாங்கள் தலைவனுக்கு உடுக்கையின்
    இடப்புறம்போல் பயனற்று உள்ளொம், அச்சொல்லை
    இங்கிருந்து விலகிச்சென்று உடுக்கையின் வலப்பக்கம்
    போலும் அவருக்குப் பயன்தரும் பொதுமகளிருக்குச் சொல்!

    பாடல் 389

    சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது
    ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; – தீப்பறக்கத்
    தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
    நோக்கி இருந்தேனும் யான்.

    கோரைப்புல் பறித்த இடத்தில் நீர்சுரந்த
    குளிர்வயல்சூழ் ஊரிலுள்ள எம்தலைவன் மேல்
    ஈ பறந்தாலும் கண்டு வருந்தியவள் நான்
    இப்போது தீப்பொறி எழுமாறு பொதுமகளிரின்
    கொங்கைகள் மோதப்பெற்று சந்தனம்
    கலைந்த தலைவனின் மார்பைப் பொறுமையோடு
    கண்டு கொண்டிருப்பவளும் நானே.

    பாடல் 390

    அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
    பெரும்பொய் உரையாதி, பாண; – கரும்பின்
    கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால்
    இடைக்கண் அனையார்க்கு உரை.

    மலரும் அரும்புகள் நிறை
    மாலைகள் அணிந்த தலைவன்
    எமக்கு அருள்புரிவாரெனும் பொய்யை
    எப்போதும் சொல்லாதே பாணனே!
    நல்ல கரும்பின் கடைக் கணுக்களுக்கு
    நிகரானவர் யாம், ஆதலில் கரும்பின்
    இடைக்கணுக்களை ஒத்த பரத்தையிடம்
    இப்பேச்சைப் போய்ச் சொல்!

    Share