கதை வடிவில் பழமொழி நானூறு – 1
நாங்குநேரி வாசஸ்ரீ
பழமொழி
உண்பதற்குச் சுவையாகவும் உடல் வளத்திற்கு ஏற்றதாகவும் பழம் விளங்குவதுபோல கேட்பதற்கு இனிமையாகவும் அறிவுக்கு வளம் சேர்ப்பதாகவும் உள்ள அரிய வாக்குகளே ‘பழமொழிகள்’ என்கிறார் புலியூர்க்கேசிகன் அவர்கள். தமிழினத்தின் செம்மையான நல்வாழ்விற்கு உதவும் அறிவொளி விளக்கங்களாகப் பழமொழிகள் அமைந்து விளங்குகின்றன.
பழமொழி நானூறு
பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. இந்நூலை இயற்றியவர் தென்பாண்டி நாட்டின் சீர்மிகு பழம்புலவருள் ஒருவரான முன்றுறை அரையனார். இதில் அக்காலத்தே வழக்கிலிருந்த நானூறு பழமொழிகளை அவர்தொகுத்து வழங்கியுள்ளார். ஒவ்வொரு பழமொழியையும் சொல்லி, அதன் அடிப்படையில் ஒரு நீதியை விளக்க ஒவ்வொரு செய்யுளாக, மொத்தம் நானூறு செய்யுட்கள் அமைத்து முதலிரண்டு அடிகளில் தாம் சொல்லக் கருதுகின்ற உண்மையையும், செய்யுளின் இறுதியில் அதற்கேற்றதும் அவ்வுண்மையை வலியுறுத்துவதுமான பழமொழியை அமைத்தும், இந்நூலை அவர் இயற்றியுள்ளார்..
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பழமொழிக்கும் நவீனவிளக்கம் தர முயற்சித்து எழுதும் எனது ஒருபக்கப் புனைக்கதைகளை இனி தொடர்ந்து வாசியுங்கள்.
பாடல் 1 (கடவுள் வணக்கம்)
பாடல் 2
மிக்க பழிபெரிதும் செய்தக்கால், மீட்டதற்குத்
தக்கது அறியார், தலைசிறத்தல், – எக்கர்
அடும்பு அலரும் சேரப்ப! ‘அகலுள்நீ ராலே
துடும்பல் எறிந்து விடல்‘.
பழமொழி- அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்
நாதன் அமெரிக்காவிலிருந்து வந்தாச்சு. எல்லாருக்கும் ஏதேதோ வாங்கிக் கொண்டுவந்தான். என்னைய அவன் கண்டுக்கக் கூட இல்ல. ஆச ஆசயா தாத்தா னு கூப்பிட்டு காலச்சுத்தி விளையாடின பையன் படிச்சு பெரிய மனுசனா அமெரிக்கா போயிட்டு வந்தவொடனே தாத்தாவ மறந்துட்டான் போல. சரி பரவாயில்ல. நான் போகவேண்டிய கட்டதானே. எதையும் எதிர்பாக்கக்கூடாது. மனதிற்குள் புலம்பிக்கொண்டே சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார் கோபி தாத்தா.
என்ன தாத்ஸ் ரொம்ப வேல போல வந்து பாதி நாள் கழிஞ்சுபோச்சு. கண்டுக்கவே மாட்டேங்குற. கதை சொல்றத நிறுத்திட்டயா. ஆரம்பித்தான் பேரன்.
அட போடா. எல்லாரும் பெரிய மனுசங்க ஆயிட்டீங்க. நான் சொல்லற கதையக் கேக்க யாரு இருக்கா. தாத்தா சலித்துக்கொண்டார்.
தாத்தா இதக் கையில வச்சிக்கிட்டு கதை சொல்லுங்க. இது பேரு ரெபக்கா எனப்.பந்து போன்ற இயந்திரத்தைக் கையில் கொடுத்தான் பேரன். கதை முடிந்தவுடன் ரெபக்கா அதுக்கு ஏத்த பழமொழியச் சொல்லும் என்றவுடன் தாத்தா சந்தோஷமாகக் கதை சொல்லத் தொடங்கினார்.
நான் சின்னவனா இருக்கும்போது இந்த ஊரில அரவிந்தன்னு ஒருத்தர் இருந்தார். அவர் மகன் என்னோட நண்பன். நானும் அவனும் தினமும் ஆத்தங்கரைக்குப் போய் விளையாடுவோம். பள்ளிக்கூடம் முடிஞ்சவொடனே வீட்டுக்கு நடந்து வர வழியில தினமும் மரத்து மேல ஏறி உக்காருவோம் ஆல மரக் கிளைகள் மேல ஏறி உக்காந்து பாத்தா ஊர் முழுக்க எங்க காலடியில இருக்குற மாதிரி தோணும். வெகுதொலைவில் தினமும் அவன் அப்பா ஒருசிலரோடு வயக்காட்டு மூலையில் ஏதோ செய்து கொண்டிருப்பது தெரியும். பாருடா எங்கப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு நாள் பூரா உழைக்கறார்னு சொல்லுவான். கொஞ்ச நாள்ல அரவிந்த் சைக்கிள் வாங்கிட்டான். அப்புறம் மெதுமெதுவா அவனோட உடைகளும் மாறிச்சு. டேய் நாங்க பணக்காரங்க ஆயிட்டோம்டா என அவன் எல்லாருக்கும் கம்மர்கட், தேன்மிட்டாய் எல்லாம் வாங்கிக்குடுக்க ஆரம்பிச்சான். அப்போதான் ஒருநாள் எங்க தமிழ் வாத்தியார் அவனக் கூப்பிட்டு
தம்பி உங்கப்பா சாராயம் காய்ச்சி தப்பான வழியில பணம் சம்பாதிக்கிறார். நீ படிக்கிற பிள்ளதானே. மெதுவா உங்க அப்பாகிட்ட எடுத்து சொல்லுனு சொன்னார்.
அவனும் அவன் அப்பா கிட்ட சொன்னான். அப்புறம்என்ன நடந்ததுதெரியுமா. அவன் அப்பா அவன்கிட்ட நாம நம்ம குலதெய்வம் கோயிலுக்கு ஒரு மண்டபம் கட்டிவிட்டுட்டா எல்லாக் குத்தத்தையும் சாமி மன்னிச்சிரும்னு சொல்லிட்டாரு. அவரும் கடைசி வர திருந்தல. கெட்ட வழியில சம்பாதிச்ச காசுல வியாபாரத்தத் தொடங்கின என் நண்பனும் உருப்படல. இதுதான் கதை.
ரெபக்கா ஆரம்பித்தது. அரவிந்தனோட செய்கை குட்டி அகலுக்குள்ள குதிச்சு தண்ணி துளும்பி வெளிய வர மாதிரி குளிக்கப்போறேன்னு ஒருத்தன் சொல்லுகிற மாதிரி தான். எப்படி அது சாத்தியமில்லையோ அப்படித்தான் அவன் செய்த பெரும் பாவத்தைத் தொலைக்க கோவிலுக்கு மண்டபம் கட்டறதும். இதத்தான் முந்தைய காலத்துல அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல் னு பழமொழியா சொல்லுவாங்க. ரெபக்காவின் பழமொழியைக் கேட்ட தாத்த உற்சாகமானார்.
பாடல் 3
தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள்
தொக்க வகையும் முதலும் அதுவானால்
‘மிக்க வகையால் அறஞ்செய்க!‘ எனவெகுடல்
‘அக்காரம் பால்செருக்கும் ஆறு‘.
பழமொழி – அக்காரம் பால் செருக்கும் ஆறு
பேருந்தின் சன்னலோர இருக்கை மனதுக்கு இதமாகத்தான் இருந்தது. முகத்தில் ஓங்கி அடிக்கும் காற்று, அதில் மிதந்து வரும் விதவிதமான ஒலிகள், நறுமணங்கள் எல்லாம் சுகம். ஆனால் பயணம் முழுசும் மனசு உறுத்திக்கிட்டேதான் இருக்கு. ஒருவேள உண்மையில நான் தப்பு செஞ்சிட்டேனோ. தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கும் நான் கடந்த இரண்டு மாதத்துல ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காம கடினமா உழைச்சு சம்பாதிச்ச காச எடுத்துக்கிட்டு ஊருக்கு போறேன். அதுல அந்தப் பக்கத்து இருக்கை பெரியவருக்கு என்ன பிரச்சினையோ.
மனம் முழுக்க சந்தோசமா நண்பர்களோட எப்படி மூணுநாள் ஊரச்சுத்தலாம்னு யோசிச்சிக்கிட்டே வரும்போது கடுப்பக் கிளப்பி விட்டுட்டாரு. எரிச்சலக் கெளப்பிட்டு எப்டி அசந்து தூங்குறாரு பாரு. பார்க்கப் பார்க்க கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஐந்து மணி நேரப் பிரயாணத்தில் நான்கு மணி நேரம் கழிந்துவிட்டது. இன்னும் ஒருமணி நேரம் தான். ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம். அப்புறம் இவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். மனதைச் சமாதானப் படுத்திக்கொண்டேன்.
வீட்டிற்கு போய்ச் சேர்ந்தவுடன் மனது பொறுக்காமல் அப்பாவிடம் அந்தப் பெரியவரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். இதுக்கு எதுக்குப்பா இவ்வளவு வருத்தப்படற. இதத்தான் முந்தைய காலத்துல அக்காரம் பால் செருக்கும் ஆறு னு பழமொழியா சொல்லுவாங்க. நீ நேர்மையான முறையில உழைச்சு பணம் சம்பாதிச்சிருக்க. அந்தப் பெரியவரு பிச்சைக்காரனுக்கு பத்து ரூபாய் போட முடியாதா உன்னாலானு உன்னயத் திட்டி இருக்காரு. போதாதுக்கு தானதருமம் செஞ்சா நல்லதுனு உபதேசம் பண்ணிக்கிட்டே வந்திருக்காரு. அவரு உன்னயத்திட்டியிருக்க வேண்டியதில்ல. இருந்தாலும் அவர் பேச்சக் கேட்டு நீ தானம் பண்ணியிருந்தேன்னா அது சுவையான பால் கூட வெல்லம் கலந்துதுன்னா எப்படி அதோட சுவை அதிகரிக்குமோ அதுமாதிரி உன் பெருமையக் கூட்டுமே தவித்து குறைக்காது.