குறளின் கதிர்களாய்…(309)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(309)

ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து
வேந்தனும் வெந்து கெடும்.

– திருக்குறள் -899 (பெரியாரைப் பிழையாமை)

புதுக் கவிதையில்...

ஆற்றல் மிக்க
சிறந்த கொள்கையுடன்
ஒழுக்கமுடைய பெரியோர்
சினந்திடும் நிலை வந்தால்,
காரணமாயிருந்த நாடாளும்
காவலனும் இடையில்
தன் ஆட்சியை இழந்துத்
தானும் அழிவான்…!

குறும்பாவில்...

கொள்கைப் பிடிப்புடைப் பெரியோர்
கோபம்கொண்டால் காரணமான கொற்றவனும்
அரசிழந்துத் தானும் அழிவான்…!

மரபுக் கவிதையில்...

அறிவோ டாற்றல் நல்லொழுக்கம்
அனைத்து மொன்றாய்க் கொண்டேதான்
நெறியோ டொழுகும் பெரியோரும்
நெருப்பாய் கோபம் கொண்டாலே,
பொறியா யதற்குக் காரணமாம்
பொல்லா மன்ன னரசுடனே
நெறியே யில்லாக் கோனவனும்
நிலைக்கா தழிந்தே போவாரே…!

லிமரைக்கூ..

கொள்கையுட னொழுகும் பெரியோர்
கோபம் கொள்ளும் நிலைவந்தா லழிவர்
காரணமாம் அரசதற் குரியோர்…!

கிராமிய பாணியில்...

தப்புசெய்யாத தப்புசெய்யாத
தன்னவிடப் பெரியவங்ககிட்ட
தப்புசெய்யாத
எப்பவுமே தப்புசெய்யாத..

கொள்கயோட நல்லொழுக்கம்
கொண்ட பெரியவுங்க
கோவப்படாமப் பாத்துக்கணும்,
கோவப்பட்டால் அதுக்குக்
காரணமானவன் ராசாண்ணாலும்
ராச்சியமும் நெலயில்லாம அழிஞ்சி
அவனும் அழிஞ்சியே போவான்..

அதால
தப்புசெய்யாத தப்புசெய்யாத
தன்னவிடப் பெரியவங்ககிட்ட
தப்புசெய்யாத
எப்பவுமே தப்புசெய்யாத…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.