Category: தொடர்கள்

  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 11.2 (சிற்றில்பருவம்- ஆண்பால்)

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 11.2 (சிற்றில்பருவம்- ஆண்பால்)

    – மீனாட்சி பாலகணேஷ்

    சிறுமிகளின் சிற்றில் விளையாட்டு பல கூறுகளைக் கொண்டதாகும். ‘பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்1,’ எனும் நற்றிணை வரிகள் சிற்றில்பருவ விளையாட்டுப் பலவகைப்பட்டதெனக் கூறாமல் கூறும். பொய்யாக, பாவனையாக, சிறு மணல்வீடுகளைக் கட்டுதல், அதில் தாய்மார்கள் செய்வதுபோல, அடுப்பில் சமையல் செய்து குடும்பத்தோர்க்குச் சோறிடுதல், பாவைகளைத் தமது குழந்தைகளாகப் பாவித்து அவற்றைப் பேணிப் பராமரித்தல், அவற்றிற்கு மணம் பேசுதல், திருமண விருந்து சமைத்தல் ஆகியன இதன்பாற்படும். இனிமையான சிறுமிப்பருவத்தில் உடலுடன் மனமும் வளர்ச்சியடைந்து குழந்தை இளம்பெண்ணாக மாறிக்கொண்டு வருவதன் அடையாளம் இதுவே!

    அரிதாகப் பாடப்பட்ட பெண்பால் பிள்ளைப்பருவங்களாக, சிற்றில் பருவத்தின் பல வடிவங்களை,  சிறுவீட்டுப் பருவம் (சிற்றில் இழைத்தல்), சிறுசோற்றுப்பருவம், பாவைவிளையாடல் பருவம் எனச் சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் கண்டு களிக்கலாம்.

    ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களிலும் இவை பற்றிய கருத்துக்கள், அதாவது பெண்குழந்தைகள் ஆகிய சிறுமியர் சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைத்துப் பாவைகளைக் கொண்டு மணம்பேசி விளையாடுவது பற்றிய செய்திகள் சிற்றில்பருவப் பாடல்களில் விரவிக் கிடப்பதனைக் கண்டோம்;

    மேலும் இனிமையான கருத்துக்கள் சிலவற்றையும் காண்போம்.

    திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் சிறுமியர் முருகனிடம் தங்கள் சிற்றிலை அழித்தல் வேண்டாம் என வேண்டும் பாடல் சுவைவாய்ந்தது.

    “நீ எங்கள் சிற்றிலை அழிப்பதற்காக நாங்கள் வருந்தவில்லை! சிற்றிலை இழைத்த மணலின் சிறு முத்துக்கள் உனது பூம்பாதங்களை உறுத்தி நோகச்செய்யாதோ?

    “பிறை முடித்த சோதியாகிய உன் தந்தை சிவபெருமான் உன்னை ஆசையுடன் எடுத்து முகத்தோடு சேர்த்து அணைத்துத் தோளில் இருத்திக் கொஞ்சிடும்போது உன் உடலிலிருக்கும் புழுதி அவருடைய தோளில் படியாதோ?

    “அனைத்து உலகங்களையும் ஈன்றெடுத்தும் வயது முதிராத இளங்கன்னியாகிய உன் தாய் உன்னைத் தனது மடியிலிருத்திக்கொண்டு ஆசையாக முலைப்பாலை அருத்துவிக்கும்போது உனது கழற்கால்களில் உள்ள சிவந்த சிறு மணற்துகள்கள் (எம் சிற்றிலை நீ சிதைத்தபோது அதில் பதிந்த துகள்) அவள்மீதும் படியாதோ?

    “ஆகவே முருகா! எம் சிற்றிலை நீ சிதைக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று வேண்டுகின்றனராம். இதுவும் ‘சிற்றிலை அழிக்காதே’ என்பதற்காக சிறுமியர் மேற்கொள்ளும் நல்ல உபாயம்!

     தையல் மடவார் இழைத்தவண்டல்
    தன்னை அழிக்கும் அதுக்கல்ல
    தரளம் உறுத்தி உனது பொற்பூந்
    தண்டைத் திருத்தாள் தடியாதோ
    ………………………………………………..
    வையம் அனைத்தும் ஈன்றெடுத்தும்
    வயது முதிரா மடப்பாவை
    மடியில் இருத்தி முலையூட்டி
    வதனத் தணைக்கில் உன்கழற்காற்
    செய்ய சிறுதூள் செறியாதோ
    சிறியேம் சிற்றில் சிதையேலே2’

    திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழில் வேறொரு நயத்தைக் காணலாம். சிறிது அறிவார்ந்த சிறுமிகள் சிற்றிலிழைக்கின்றனர். அதனை அழிக்க வரும் முருகப்பெருமானிடம் சில கேள்விகளை முன்வைக்கின்றனர்: “எம்தந்தை செய்யும் ஐந்தொழில்களில் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அழிப்பதும் ஒன்றாகும்; அதனை யானும் செய்வேன் என நீ இங்குவந்தால், மற்ற நான்கினையும் எவர் செய்வார்கள் எனக் கூறுவாயாக! அழிப்பது இறைவனின் இளைப்பாற்றும் கருணை என்பர்; ஆனால்  உனது அழிக்கும்தொழிலானது எங்களுக்கு மிக்க இளைப்பினைத் தருகின்றது,” எனக்கூறுவர்.

    அழிக்குந் தொழினந் தந்தைதொழி லதனு
    லியானு மதுபுரித
    லறனே யெனின்மற் றொருநான்கு மார்செய்
    தொழிலெங் களுக்குரைத்தி
    கழிக்கு மதுவு மிளைப்பாற்று கருணை
    என்பார தற்குமறை
    கரிநீ யியற்றுன் தொழிறானெங் களுக்கு
    மிகவு மிளைப்பேற்றும்
    …………………………..3‘

    மேலும், “நீ உலகை அழிக்கும் பிரானின் மகனென்று பெருமைபேசி, நாங்கள் வருந்தி இழைத்த எமது சிற்றிலை அழிப்பாய். அப்பிரானின் உயிராகிய அன்னையோ எனில் அண்டம் முழுவதனையும் சிறுவீடாக ஆக்கி மகிழ்வாள்; அவளுடைய மகனான நீ எங்களிடம் சிற்றிலை அழகுறப் படைக்குமாறு கட்டளையிட்டால் தகாதா? பழியுண்டாகுமா என்ன?” எனக் கேட்கின்றனர்.

    மேவியுலக முழுதழிக்கும் விமலன் மகன்யா
    னென் றெளியேம்
    விரும்பி வருந்தி யியற்றுசிறு வீட்டை
    யழிப்பா யனையபிராற்
    காவி யனைய பெருமாட்டி யண்ட
    முழுதும் சிறுவீடென்
    றாக்கி மகிழ்வா ளவண்மகனீ யலையோ
    ……………………………….
    பாவி யேங்கள் சிறுவீட்டைப் படைக்கு
    மாறே பணித்தேகில்
    பழியுண்டாமோ………………….4‘

    இவையனைத்தும் சிறுமியரின் உளநோக்கில் அமைந்த அழகான, சுவையான எண்ணச் சிதறல்களைக் கொண்டமைந்த பாடல்கள்.

    திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ் வேறொரு காட்சியைக் கண்முன் விரிக்கின்றது. சிறுமியர் கூடிப் பாவை விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். தத்தம் பாவைகளுக்கு மணம்பேசி முடித்து, விருந்து படைக்க, சிறுசோறு சமைக்கின்றனர். அப்போது அங்குவரும் சுவாமிநாதனாகிய குமரப்பெருமான் அவர்கள் சிற்றிலை அழிக்க முற்படுகிறான். சிறுமியர் அவனிடம் கூறுவதாக அமைந்த இனியபாடல் கருத்துநயமும் இலக்கியச்சுவையும் பொதிந்து இலங்குகின்றது. தம்பிரான் தோழரான சுந்தரமூர்த்தி நாயனாரின் கதையையும் உரைக்கின்றது.

    “உனது தந்தை ஒருபெண்ணின் மணத்தை முன்பு தடுத்து நிறுத்தினார். புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாரின் மகள் சுந்தரரை மணக்க இருந்ததனைச் சிவபெருமான் தடுத்தார். அந்தப் பாவத்திற்காக கால்களில் கல்லும் மண்ணும் குத்தி உறுத்த, திருவாரூர் வீதிகளில் சுந்தரருக்காகப் பரவையிடம் தூது சென்றலைந்தார். அதனை நீ அறியாயோ? நாங்கள் முயன்று பாவைகளுக்குத் திருமணம் முடிக்க எண்ணும் இவ்வேளையினில் வந்து எங்கள் சிற்றிலைச் சிதைக்கின்றனையே! இந்தப் பாவத்திற்காக எத்தனை பெண்களிடம் கால்கள் வருந்த நீ தூதாகச் செல்ல வேண்டிவருமோ?” எனக் கேட்பதாக அமைந்துள்ளது.

    ‘உந்தை புத்தூர் வருபாவை ஒருத்தி மணத்தை ஒருகால்முன்
    ஒழித்த பவத்தால் இருகாலும் உறுத்த ஆரூர் வீதியெலாம்
    முந்தை யிருளில் நடந்தலைந்த முறைமை யறியாய்ப் பலகாலும்
    முயன்று பாவை பலர்க்குமணம் முடிக்கக் கருதும் வேளையிடை
    வந்து சிதைத்தி யிப்பாவம் மலர்கால் சிவக்க எத்தனைகால்
    மகளிர் பால்நீ தூதாக வருந்தி நடக்கப் புரிந்திடுமோ?5‘ என்பது பாடல்.

    பெண்குழந்தைகளின் விளையாட்டை ஊன்றி நோக்கிய புலவர் பெருமக்களால்தான் இவ்வாறு சுவைபடப் பாடவியலும் எனலாம்.

    சிறுபெண்கள், “சிற்றிலை அழிக்காதே,” என வேண்டுவதாக அமைந்த பாடல்கள் மட்டுமின்றி, ஆன்மீகத்திலாழ்ந்த புலவர் பெருமக்கள், சைவசித்தாந்தக் கருத்துக்களையும் அமைத்துப் பாடல்களை இயற்றியுள்ளனர். சிதம்பர அடிகள் இயற்றியுள்ள திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழில் பலபாடல்கள் இவ்வண்ணம் அமைந்தவை. இந்நூலில் சிற்றிற்பருவம் ஒன்பதாம் பருவமாக அமைக்கப்பட்டுள்ளது.

    மலங்கள் நீக்கப்பட்ட தமது அழகிய மனத்தினை அடியவர்கள் சிறுவீடாகக் கொண்டுள்ளனர். இதில் அன்பு, பொறுமை, ஆசைகளை நீக்குதல் ஆகியவற்றால் அடுப்பினை அமைக்கின்றனர். ஆணவமலமாகிய விறகினில் சிவஞானம் எனும் தீயை மூட்டுகின்றனர்; என்றும் நிலைபெறும் உயிரினைப் பானையாக்கி அதில் பொங்கி வழியுமாறு திருவருள் எனப்படும் உலைநீரை நிரப்புகின்றனர். பெருமைவாய்ந்த சிவானந்தம் எனும் இனிமையான சோற்றினை நாள்தோறும் அதில் சமைக்கின்றனர். என்றென்றும் ஒளியாத தற்போத இருள் அகலுமாறு சகசநிட்டை எனும் விளக்கினை ஏற்றிவைத்து, அவ்வடியவரின் நிலையில் தானும்நின்று அருளுபவன் முருகன். சிற்றில் விளையாடும் கீழ்மையிலிருந்து நீங்கிய உள்ளத்தோரால் புகழப்படும் அவன் உமையின் திருமகன். அவனிடம், அத்தகைய பெருமையும் புகழும் வாய்ந்தவனிடம் தாமிழைத்த சிற்றிலை அழிக்க வேண்டா எனச் சிறுமியர் வேண்டுவதாக அமைந்த பாடலிது.

    ‘அடியார் நிமலத் திருவகத்துள்
    அன்பு பொறுமை யவாவறுத்தல்
    அடுப்பாங் கமைத்து மலக்காட்டத்
    ததிக ஞானக் கனல்மூட்டி
    மடியா திருந்த உயிர்க்கலசம்
    …………………………
    மாறாப் பெருமைச் சிவானந்த
    மதுரச் சோறு தினம்பொங்கி
    விடியாச் சீவ போதஇருள்
    வீய………………6‘ என்பன பாடல் வரிகளாம்.

    சிறுவர்களின் சிற்றில் விளையாட்டினைப் பொருளாக்கி அதனைச் சிவானந்தம் எனும் தேனில் தோயும் அடியவரின் நிலைக்கு உவமையாக்கிக் கூறிய இது அருமையான பாடலாகும்.

    குருந்தமலை வேலாயுதசாமி பிள்ளைத்தமிழின் சிற்றில்பருவத்துப் பாடல்களில், ‘சிற்றிலை அழியேல்,’ எனச் சிறுமியர் வேண்டும்போது, சிற்றிலை அழிக்க முற்படும் சிறுவன் முருகனைத் தெய்வமென அவர்கள் உணர்ந்தமையால், தாம் அவனுக்கு வழியடிமை என்றும், எமது உள்ளத்திற் பொருந்தியிருந்து, எங்களுக்கு நன்னெறியை உணர்த்தி, மாயை, கன்மம் ஆகிய மலங்களை நீக்கி, உள்ளத்தில் குடிகொள்ளும் உருவமாகவும், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட அருவமாகவும் உணர்ந்து வழிபடும்படிக்கு எம்மைத் தடுத்தாட்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுவதாக அமைந்துள்ளது.

    ‘வழி அடியோம் குடி முற்றவும் ஆட்கொண்டருளும் குமரா!7‘ என்றும்,

    ‘…………………………………..கதி
    காட்டி, மாயை கன்மம் அறக்
    கடத்தி, புறத்தில் அகத்தில் இசை
    கண்டம் அகண்டமயம் பொருந்தத்
    திருத்தும் கமலச் சேவடியால்…8,’

    என்றும் அமைந்த பாடல்களைக் காணலாம். தாம் குழந்தையாகக் கண்டு மகிழ்ந்து களிக்கும் இறைவனே தமது முத்திக்கும் வித்தாவான் எனும் பேருண்மையை அறிந்த அடியார்கள் அதனைப் பாடல்களிலும் பதிவுசெய்துள்ளமை உள்ளத்தைத் தொடுவதாகும்.

    வைணவப் பிள்ளைத்தமிழ் நூலாகிய அழகர் பிள்ளைத்தமிழ் காட்டும் சிறுமியர் தங்கள் சிற்றிலை அழிக்கவரும் திருமாலழகனான சிறுவனிடம் உரைப்பது சிந்தைக்கு விருந்தாகின்றது: தெய்வத்தின் திருவடி தீட்சையால், பரிசத்தால் அனைத்துயிர்களும் முத்தி எனும் பெருநிலையினை அடையலாம்.

    “வரிசையாக மணிப்பந்தினையும், பொற்கழங்கினையும் ஆடும் சிறுமியரும், செய்குன்றமமைத்தும், வண்டல் மண்ணையிழைத்தும் பொன்னூசலை உதைத்தும் விளையாடும் இளம்சிறுமியரும், மேலும் அவர்கள் விளையாடும் இடங்களில் தேன்சொரியும் பருத்த குரவமரங்களும், அவரவர்கள் கொல்லைகளில் குதித்துவிளையாடும் ஆவின் இளம்கன்றுகளும், பச்சைக் கிளிப்பிள்ளைகளும் ஆகிய இவையனைத்தும் (சிற்றிலை அழிக்க முற்படும்) உன் பாதத்தூளிபட்டு முத்தியாகிய பெருவீட்டினை அடைந்தால் எங்களுடைய இந்தப் பொய்தல் விளையாட்டு அழிந்து படுமே! தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனை உனது உந்தியில் உற்பவித்த தேவே! எமது சிற்றிலை அழிக்க வேண்டா!” என வேண்டும் கருத்தமைந்த பாடல் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும்.

    கோவை மணிப்பந் தெறிந்தாடும்
    கொடிபொற் கழங்கு பனல்வாவி
    கொட்குங் கிரணச் செய்குன்று
    கொய்பூந் தளவப் பந்தல்வண்டற்
    பாவை யுகைக்கும் பொன்னூசல்
    பராரைக் குரவந் தேன்கொழுக்கும்
    படப்பை குதிக்கு மான்கன்று
    பசும்பொற் கிள்ளைப் பிள்ளையிளம்
    பூவை யிவையுன் பதத்தூளி
    பொதியப் பெருவீ டுறிலடியேம்
    பொய்த லொழியு மலர்வனசப்
    பொகுட்டி லிருக்கு நான்குமுகத்
    தேவைத் திரவுந் தியிலளித்த
    சிறுவன் சிற்றில் சிதையேலே9‘

    பல விதமான தொன்மங்களை இணைத்தும் சிற்றிலிழைப்பதுடன் பொருந்தக்காட்டும் உவமைகள் பெருக அழகான பாடல்கள் புனையப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஒன்றினைக் கண்டு இக்கட்டுரையை நிறைவு செய்வோம்.

    அரும்பாத்தை வேத விநாயகனைிடம் தம் சிற்றிலை அழிக்க வேண்டாமென வேண்டும் சிறுமியர் இன்னொரு புத்திசாலித்தனமான கூற்றை முன்வைக்கின்றனர்.

    “சேரமான் பெருமாள் நாயனார் குதிரைமீதேறிச் சென்று கயிலையை அடையுமுன்பே, சிந்தையுருகிப் பைந்தமிழால் கவிபாடி உன்னை வழுத்திப் பூசிக்கும் மேனிமெலிந்த அவ்வையாரை நீ உன் தும்பிக்கையால் தூக்கியெடுத்துக் கயிலாயத்துச் சேர்த்து மேல்வீடளித்தனை; சிறுமிகளாகிய எங்களுக்கு நாங்கள் பாடுபட்டு இழைத்துள்ள இவ்வீட்டினையாவது அழியாது அளிக்கவேண்டாமோ?’ என்கின்றனராம்.

    ‘சேரற் கிறைவன் வாம்பரிமேற்
    சென்றுகயிலை புகுமுன்னே
    சிந்தை யுருகிப் பைந்தமிழ்நூல்
    செப்பி வழுத்து மப்பொழுது
    வீரத் துதிக்கை கொண்டேந்தி
    மேனி மெலிந்தவ் வையாருக்கு
    மேல்வீ டளித்தாய் சிறுமியர்க்கிவ்
    வீடு மளிக்க வேண்டாமோ?10‘

    இவ்வாறு பலப்பல நயங்கள் நிறைந்த பாடல்களைப் பிள்ளைத்தமிழ் நூல்கள்தோறும் கண்டு, படித்து மகிழலாம்.

    (வளரும்)

                            ______&_______

    பார்வை நூல்கள்;

    1. நற்றிணை
    2. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்- பகழிக்கூத்தர்
    3. திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழ்- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
    4. மேலது.
    5. திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- கு. நடேச கவுண்டர்
    6. திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிதம்பர அடிகள்
    7. குருந்தமலை வேலாயுதசாமி பிள்ளைத்தமிழ்- தவத்திரு கந்தசாமி சுவாமிகள்
    8. மேலது
    9. அழகர் பிள்ளைத்தமிழ்- கவி குஞ்சரம் ஐயர்
    10. அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 65

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 65

    -நாங்குநேரி வாசஶ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    65.சொல்வன்மை

    குறள் 641:

    நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத் துள்ளதூஉம் அன்று

    காரியத்த சாதிக்குத மாரி பேசுததும் ஒரு சொத்து தான். அது மத்த எல்லாச் சொத்தையும் விட ஒசந்தது.

    குறள் 642:

    ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
    காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

    ஒருத்தனுக்கு நல்லதும் கெட்டதும் அவன் பேசுத பேச்சுனால வாரதால சொல்லுத வார்த்தையில கொறையில்லாமப் பாத்துக்கிடணும். 

    குறள் 643:

    கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்

    கேக்குதவங்கள வசப்படுத்தி, கேக்காதவங்களும் கேக்கணும்னு விரும்புத அளவுக்கு பேசுததே சொல்வன்மை.  

    குறள் 644:

    திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
    பொருளும் அதனினூஉங் கில்

    என்ன பேசுதோம்னு உணந்துக்கிட்டு பேசணும். அந்த சொல்வன்மையப் போல அறமும் பொருளும் வேற இல்ல.

    குறள் 645:

    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

    தான் சொல்லுதத செயிக்க வேற சொல்லு இல்லன்னு தெரிஞ்சுக்கிட்ட பொறவு தான் அத சொல்லணும். 

    குறள் 646:

    வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
    மாட்சியின் மாசற்றார் கோள்

    மத்தவங்களுக்குபிடிச்சா மாரி பேசுததும், அவுக பேசுதப்போ கவனிச்சி புரிஞ்சிக்கிடுததும் தான் அறிவாளிங்களோட செயல். 

    குறள் 647:

    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது

    தான் நெனைக்குதத மத்தவங்க ஏத்துக்கிடதாப்போல சொணக்கமில்லாம சொல்லி, துணிச்சக்காரனாவும் இருக்கவன எதித்து யாராலயும் செயிக்க முடியாது.

    குறள் 648:

    விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்

    வகையா இனிக்கப் பேசுதவர் ஏவுத வேலய ஒலகத்தார் உடனடியா கேட்டு நடப்பாங்க. 

    குறள் 649:

    பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
    சிலசொல்லல் தேற்றா தவர்

    தப்பில்லாம கொஞ்சமா பேசி விளங்க வைக்கத்தெரியாதவங்க புரிய வைக்கதுக்காவ நெறையா பேசிக்கிட்டேயிருப்பாக.  

    குறள் 650:

    இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
    துணர விரிந்துரையா தார்

    தான் படிச்சத மத்தவுக விளங்கிக்கிடுத அளவுக்கு எடுத்துச் சொல்லத் தெரியாதவங்க கொத்துக் கொத்தா பூத்திருந்தாலும் வாசனை இல்லாத பூ கணக்கா தான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • சேக்கிழார்  பா நயம் -49

    சேக்கிழார்  பா நயம் -49

    –திருச்சி   புலவர்  இராமமூர்த்தி

    திருவாரூரில்  திருக்கோயில்  வழிபாட்டுக்குத்  தோழியருடன் சென்ற  பரவை  நாச்சியாரைச்   சுந்தரர் கண்டார். பரவை நாச்சியாரின் அழகிய கோலம்  சுந்தரர் உள்ளத்தை மிகவும் ஈர்த்தது. புற்றிடங்  கொண்டாரை வழிபட்டு  மீளும் பொழுது, அவ்வழிபாட்டின்   உடனடிப்  பயனாய்த்  தம்முன்தோன்றிய பேரழகு வாய்ந்த பரவையாரைக் கண்டுமகிழ்ந்தார். அவரைப் போலவே பரவையாரும் கண்டார் , இந்நிகழ்ச்சி,  காண்டல்  என்ற  அகப்பொருள்   துறையைச்  சார்ந்த நிகழ்ச்சியாகும். சுந்தரரின் ஒளிபொருந்திய தோற்றம் பரவையாரை  வியக்கச் செய்தது . இவர்கள்   இருவருக்கும்   இடையில் காதலுணர்வைத்  தூண்டக் காமக்  கடவுளாகிய மன்மதன் நின்றான், என்கிறார்     சேக்கிழார்!

    இறைவன்  திருவருளை   மட்டுமே பெரிதும்   விழைந்து   வழிபட்ட பரவையார் கண்முன்னே  சுந்தரர்   தோன்றிய   காட்சி கண்கொள்ளாத  ஒளியாக விளங்கிப் பரவையாரின்  இயல்பான  அடக்கத்தை மீறி,   அச்சம்,  மடம் , நாணம் , பயிர்ப்பு  என்ற நால்வகை குணங்களையும்   அடக்கி விட்டன!

    தன்முன்னே வியப்பளிக்கும் பேரொளியுடன் தோன்றிய சுந்தரரின்  தோற்றத்தைக்   கண்ட   பரவையார்,  இவர்   செவ்வேள் எனப்படும்முருகனோ? என்று  ஐயுற்றாள்!  பின்னர், தனக்கு   நிகரில்லாத மன்மதவேளோ?  என்றும், வாடாமாலை  அணிந்த விஞ்சையருள் ஒருவனோ? என்றும், மின்னு   செஞ்சடைப்  பெருமானின் அருள்பெற்றவனோ? என்றும்  கருதினாள். இவ்வா றெல்லாம்  என் மனத்தை  ஊசலிடவைத்த இவர்யாரோ?  என நினைத்தாள்

    பரவையாரின்  மனவோட்டங்களை நமக்கு அறிவிக்கும் சேக்கிழார் பாடல்,

    “முன்னேவந்   தெதிர்தோன்றும்  முருகனோ?   பெருகொளியால்
    தன்னேரில்   மாரனோ?  தார்மார்பின்   விஞ்சையனோ?
    மின்னேர்செஞ்   சடையண்ணல்  மெய்யருள்பெற்   றுடையவனோ?
    என்னேஎன்    மனந்திரித்த  இவர்யாரோ ?  எனநினைத்தார்!

    என்பதாகும்.  அவ்வாறு அவர்  எண்ணிய போது,  முதலில் ஒளிபொருந்திய முருகப்பிரானோ, என்றுஎண்ணினாள். முன்பே இருவரை மணந்துகொண்ட முருகப் பிரான்  தன்    பெண்மை நலம் கவரக் காரணம்   இல்லையே!  ஆதலால் , தம்மைக்கவரும்  பொருட்டுத் தனக்கு நிகரில்லாத மன்மதனே  வந்தானோ? என்று எண்ணினாள்.

    இந்திர ஞாலம்போல வந்தருளி, யெவ்வெவர் தன்மையும் தன்வயிற்படுத்துத், தானேயாகிய தயாபர னெம்மிறை“ என்பது விஞ்சையின் இயல்பு. உருத்திரகணிகையராய் அடியவர்க்கு ஆளாம் தன்மையராயினும் இதுவரை எந்த அடியார்பாலும் எய்தாத வேட்கை விளைவித்தமையின் இந்தச்

    சைவவிடங்கு விஞ்சையனோ? என்ற குறிப்பாம். மேலே கண்டவாற்றால் முருகனுமல்லன், மாரனுமல்லன் ; என்னவே இவன் வேறு விஞ்சை வல்லவனோ  என்று அடுத்து நினைந்தார். இதனைத்

    ‘’தன்னேரில்   மாரனோ ?  தார்மார்பின்   விஞ்சையனோ?”

    என்ற அடி   புலப்படுத்துகிறது.

    முன்பே  திருக்கயிலையில்  தான் கொண்ட  பத்தித்திறன்  நினைவுக்கு  வந்தது. அத்தகைய  பக்தியுடைய  என்னையும்  கவர்ந்த இவன் உண்மையில்  மிகுந்த சிவனருள்  பெற்றவன்தானோ   என எண்ணினாள்.  அதனால் என்னை இந்நிலை செய்தலின் அவனருள் பெற்றவனே யாதல்வேண்டும்!  இதனை

    “ மின்னேர்செஞ்   சடையண்ணல்  மெய்யருள்பெற்   றுடையவனோ?”

    என்ற அடி  விளக்குகின்றது.

    இதுவரை திரியாது, நாண் முதலியவற்றை மண் கொள்ளாவகை காத்து, இறைவனிடத்தே செலுத்திய எனது மனத்தையும் கவர்ந்ததே!  இது என்னே ?’’  என்கிறாள் .

    “முருகன் இச்செயலுக் கிசையான். மாரனும் விஞ்சையனுமோ அடியாரிடத்துச் செயல் செய வலியிலர். ஆதலின் அருள் பெற்றுடையார் ஒருவரேயாதல்வேண்டும். ஆயின் இவர் இன்னார் என்ற

    துணிவு பெறமாட்டாமையின் யாரோ? என்றார். ஒரு நாயகனைப் பலர் மணத்தல் இந்நாட்டுத் தொன்றுதொட்டு வந்த நெறியாதலின இத்தலைவி, முன்னே ஒவ்வொரு தலைவியரை மணந்த முருகன் மாரன் முதலிய ஒருவரோ என நினைத்தல் இழுக்காகாது.” என்பது சி.கே . எஸ்  கருத்து

    ‘கற்பகத்தின் பூங்கொம்போ’ என்று நம்பிகள் நினைத்தமைக்கேற்பவே, பூத்தல் ஒழிந்து பாழ்பட்டுக் கிடந்த அதனைப் பூக்கச்செய்தவன் விண் குடியேற்றிய முருகனே யாதலால் முருகனோ என்ற நினைவு பரவையார் மனத்து எதிர் உருவமாய்க் கிளம்பியது. “காமன் பெருவாழ்வு“ எனும்  நம்பிகளின் நினைவு மாரனைப் பரவையார் மனத்திற் புகுத்தியது. நம்பிகள் “பொற்பின் புண்ணியமோ“ என்றமை (சிற்றின்பத்தைப் பேரின்பமாக்கும் புண்ணியமுடையார் விஞ்சையராதலின்) விஞ்சையனோ என்ற கருத்தை விளைத்தது.சிவனருளே என்று நம்பிகள் முடித்தமையே அவர் மெய்யருள் பெற்றுடையவனோ எனுந் தன்மையைப் பரவையார் உள்ளப் பளிங்கிற் பதித்தது. இந்நினைவுகள் முன் இல்லாது, இப்போது பளிங்கிற் பவளம் பதித்ததுபோல மனத்திற் பதித்தமையால் மனந்திரித்த எனப் பெற்றதாம்.அவர் அறியேன் என்றபடி இவர் யாரோ என்றார். ஆயினும் அருள் பெற்றவனே என்ற துணிபுபற்றி இதனை ஐயத்தின் முடிபாக இறுதியிற் குறித்தார்.” என்பதும் அவர்   உரைத்திறன் ஆகும்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 11.1  (சிற்றில்பருவம்- ஆண்பால்) 

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 11.1  (சிற்றில்பருவம்- ஆண்பால்) 

    -மீனாட்சி பாலகணேஷ்

    ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில்  எட்டாவது அல்லது ஒன்பதாவது பருவமாகப் பாடப்படுவது சிற்றில் பருவமாகும்.  

    இச்சிற்றில் பருவத்தில் சிறுமியர் மணலால் கட்டி விளையாடும் சிறுவீடுகளைக் காலால் உதைத்து அழிக்கும் செயலைச் செய்யும் சிறுவர்களின் (குழந்தையின்) விளையாட்டு கூறப்படும். எவ்வாறு சப்பாணிப் பருவம் தெய்வக் குழந்தையின் கைகளின் பெருமையைப் போற்றுகின்றதோ, அவ்வறே சிற்றிற் பருவத்தில் பாட்டுடைத் தலைவனாகிய ஆண் மகவின் கால்களின்/ திருவடிகளின் பெருமையும், உயர்வும் சிறப்பும் போற்றப்படுகின்றதனைக் காணலாம். இது ஆண் மகவின் பதினேழாம் திங்களில் பாடப்படும். இரண்டு முதல் மூன்றாண்டு நிறைந்த ஆண் மகவாகவும் கொள்ளலாம். இன்னும் சிறிது வளர்ந்த குழந்தையாகவும் கொள்ளலாம். ஏனெனில் இத்தகைய செயல்களைச் செய்வதற்கு குழந்தை சிறிது வளர்ந்தவனாகவும், ஓடியாடுபவனாகவும் இருத்தல் வேண்டும்.

    இவ்விளையாட்டு பெரும்பாலும் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரியது. சிறுபான்மையாகச் சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் சிறுமியர் சிற்றிலிழைப்பதனை ஒரு பருவமாகக் குறிப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர். இதுவும் பிள்ளைத்தமிழின் இலக்கணத்திற்கு உட்பட்டதாகும். இதுபற்றி பிறிதொரு கட்டுரையில் காண்போம். 

    சிற்றில் விளையாட்டு எனப்படும் பொய்தல் விளையாட்டு ஆண்-பெண் இருபாலரும் சிலசமயம் இணைந்தும், சில பொழுதுகளில் சிறுவர்கள் சிறுமியர் இழைத்த சிற்றிலை அழித்தும் விளையாடும் விளையாட்டாகும். இது ‘பொய்தல் விளையாட்டு’ எனப்படும். அதாவது, பொய்யாக, பாவனையாக, சிறிய ஒரு மணல் வீட்டினைக் கட்டி, கணவன் – மனைவி குடும்பம் நடத்துவது போன்று பாவனையாக, பொய்யாக, கற்பனையாக,  சிறுமியர் பாவைகளை வைத்து விளையாடுவது. சிறுசோறும் பாவனையாகவே சமைக்கப்படும். 

    கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தில் பொய்தல் விளையாட்டு பற்றிய குறிப்புகளைக் காணலாம். ஆகவே இது காலகாலங்களாகச் சிறுவர், சிறுமியர்களால் விளையாடப்பட்டுவரும் ஒரு விளையாட்டு எனத் தெளிகிறோம்.

    கைதை வேலிக் கழிவாய் வந்து, எம்
    பொய்தல் அழித்துப் போனார், ஒருவர்
    பொய்தல் அழித்துப் போனார், அவர்நம்
    மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர்1. 

    மேலும் சங்க இலக்கியமான பரிபாடலும், ‘ஆடுவார் பொய்தல் அணிவண்டு இமிர்மணல்2,’ என்று சிறுபெண்கள் இழைத்து விளையாடும் சிற்றில்கள் வைகை ஆற்றுமணலை அழகு செய்வதாகக் கூறும்.

    இந்தச் சிற்றில் விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளைக் கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் பாடலொன்றில் விளக்கமாகக் காணலாம். அதில் சிற்றிலிழைத்த சிறுமியர், சிறுசோறாக உண்ணச் சிறுவன் கணேசன் கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களுக்காகக் காத்திருக்கின்றனர். பொய்யாக, மணலையும், சிறுமுத்துக்களையும் பெய்து சிறுசோறு சமைத்த சிறுமியர், மற்ற சிறார்கள் தமது மனைகளிலிருந்து கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களைச் சுவைத்து மகிழ்வர் என்பது கண்கூடு. சிறுவர்களும் இவர்களுடன் சேர்ந்து விளையாட்டிலும், விருந்திலும் பங்கேற்று மகிழ்வர் என்று இப்பாடலின் பொருள்கொண்டு அறியலாம்.

    ஒரு சிறுமியர் கூட்டம்; மண்ணால் சிறுவீடுகட்டி, சிற்றிலிழைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்; மூன்று கற்களை அடுக்கி, ஒரு சிறுமி சிவந்த மாதுளை மலர்களைப் பறித்துவந்து அவ்வடுப்பிலிட்டுப் நெருப்புப் பற்றவைத்தும் விட்டாள். வயதில் சற்றே பெரியவளான மற்றொரு சிறுமி அதன்மீது ஒருசிறு மண்சட்டியை ஏற்றி அதில் நிறைய மணலினையும் இட்டு சோறுசமைப்பதாகப் பாவனை செய்கிறாள். “ஆஹா, வெண்பொங்கலா அக்கா?” என மோப்பம் பிடிக்கின்றனர் மற்ற சிறுமிகள். அனைவருக்கும் பசி வயிற்றை உண்மையாகவே கிள்ளுகின்றது. இப்போது இவர்களுக்கு வேண்டியது எல்லாம் சிறுவர்கள் விரும்பும் விதம்விதமான -உண்மையான- தின்பண்டங்கள்தாம்.

    உடனே ஒருசிறுமி, “அதோ பாருங்களடி! நமது நண்பன் கணேசன் தொலைவில் தொந்தியசைய வருகிறான் பாருங்கள்,” என உற்சாகமாகக் கைகளைத் தட்டியவண்ணம் குதூகலிக்கிறாள். எல்லாரும் அத்திசையையே ஆவலாகப் பார்க்கின்றனர்.

    கணேசனேதான்! மெல்ல ஆடியசைந்து வருகின்றான்; இடதுபக்கம் இடுக்கிக்கொண்டிருக்கும் பாத்திரம் நிறையத் தின்பண்டங்கள்; வலது கையில் பாதி தின்றதொரு பணியாரம். அதனையும் அவசரஅவசரமாகத் தின்றுகொண்டேவருகிறான்! நண்பர்களை வந்தடையுமுன் முடிந்தமட்டும் தன்னிடமுள்ள பணியாரங்களைத் தின்றுவிடவேண்டும் என்ற பேராசை. சிறிது மிகுந்தால், ‘போனால் போகட்டும்,’ என அவர்களுக்குக் கொடுத்துவிடலாம் என்பது அவன் எண்ணம்போலும்!

    ஒருவழியாக அவன் பக்கத்தில் வந்து நிற்கிறான். சிறுமிகள் அனைவரும் ஓடோடிச் சென்று ஆவலுடன் அவனைச் சுற்றிவளைத்துக் கொள்கின்றனர். அவர்கள் பார்க்கப் பார்க்க அவன் பணியாரங்களை வாயிலிட்டு மென்று சுவைக்கிறானே தவிரப் பகிர்ந்துகொள்வதாகக் காணோம்! வாய்த்துடுக்கு மிக்கவளான ஒரு சிறுமி அவனிடம், “கணேசா! தொந்தியை ஆட்டிக்கொண்டு, மெல்ல வருகிறாயே! இன்று நமது விளையாட்டிற்கு நீ பணியாரம் கொண்டுவருவதாகக் கூறியதை மறந்துவிட்டாயோ? நீ சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்தில் மிகுந்ததையாவது எங்களுக்குத் தருவாய் என்று நாங்கள் ஆசையாகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லையா உனக்கு? எங்களுக்குக் கொடுக்காமல் நீயே தின்றுவிடப்போகிறாயா?” என்று கடிந்துகொள்வதுபோலக் கேட்கிறாள்.

    கணேசனுக்கு எப்போதும் சினமே வராது. இன்று என்னவோ உண்டமயக்கம் போலும்! அவர்கள் பாடுபட்டுக் கட்டிவைத்திருக்கும் சிறுமண்வீட்டினைத் தன் காலால் விளையாட்டாக எற்றி உதைக்கிறான்; கூரை பிய்ந்து, ஒருபக்கச்சுவரும் உடைந்துவிழுகின்றது. சிறுமிகளுக்குக் கண்களில் நீர்தளும்புகின்றது.

    “இடையூறுகள் செய்வதில் மன்னன்’ எனும் பெயரை எங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதில் உனக்கு என்ன ஆசையோ கணேசா! ஏன் எங்கள் சிற்றிலைச் சிதைத்தாய்? நீ எவ்வளவு நல்லவன்? எங்களுக்கெல்லாம் பெரியவன்; எங்களிடம் மிகுந்த அன்பு கொண்டவன் அல்லவா? தயவு செய்து எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என்று அவன் கரத்தைப்பற்றிக்கொண்டு கெஞ்சுகின்றனர் அச்சிறுமிகள்.

    பெருத்த வயிறு தயங்கமெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
    பெரும்பண் ணியமு மேந்தியேம்பாற் பேணி வருநின் கரவினைக்கண்
    டருத்தி யொடுநீ யுண்டபரி கலசே டத்தை யடியேங்கட்
    களிக்க வருவாயென்றுவகை யரும்பி வழிபார்த் திருந்தேமை
    வருத்த லழகோ விக்கினஞ்செய் மன்னனெனும்பேர் பேதையரேம்
    மாட்டுத் தெரிப்ப தொருபுகழோ மடவாரூடன் மவுணரென்றும்
    திருத்துங் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
    தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே3

    சிவஞான முனிவர் இவ்வருமையான பிள்ளைத்தமிழை இயற்றியுள்ளார். சிறுவர்களின் விளையாட்டை நுணுக்கமாகக் கண்டு பதிவு செய்ததாக அமைந்த பாடலிது. கடவுளுக்குப் படைத்து எஞ்சியதனை (சேடத்தை) தாம் உண்ண விரும்புவதாகச் சிறுமியர் கூறுவது கணேசன் என்னும் சிறுவனை அவர்கள் கடவுளெனக் கண்டு தெளிந்ததாலும், ஆயினும் அவர்களுடன் அவன் விளையாட வந்ததனால் அவனைத் தங்களுக்குச் சமதையாகப் பாவித்து சண்டைபோடுவதனையும் இப்பாடலில் ஒருசேரக்கண்டு களிக்கலாம்!

    இதே தொனியிலமைந்த இன்னொரு பாடல் குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழில் அமைந்துள்ளது.

    சிறுமியர் சிலர் ஆற்றங்கரை மணலில் சிற்றில் எனப்படும் சிறுவீடுகளைக் கட்டி விளையாடிக் கொண்டுள்ளனர். குறும்புத்தனம் நிறைந்த சிறுவன் ஒருவன் அந்தச் சிறுவீட்டைக் காலால் எற்றி உதைத்து அழிக்க ஓடோடி வருகிறான். தினமும் நடக்கும் நிகழ்ச்சிதான் இது! இன்றும் சிற்றிலை அழிக்க அவன் ஓடோடி வருவதனைக் கண்டு அச்சிறுமியர் அவனிடம் இனிய மொழிகளைப் பேசி, சிற்றிலை அழிக்காமலிருக்க வேண்டுகின்றனர்.

    “உன்னைப் பெற்றெடுக்க உனது தாய் முற்பிறப்பில் பெரிய அரிய தவம் செய்தவளல்லவோ?” என்கிறாள் ஒரு சிறுமி.

    “அவ்வாறு உன்னை முயன்று பெற்றவள், எல்லாத் தெய்வங்களையும் அழைத்து உன்னைக் காப்பாற்ற வேண்டிக்கொண்டும் உள்ளாள்,” இரண்டாமவள்.

    “நீயும் வளர்ந்து முகத்தினை உயர்த்தி நோக்கித் தவழ்ந்து செங்கீரையாடியவண்ணம் (இவ்வாறு குழந்தை தவழுவது செங்கீரையாடுவது எனப்படும்) பொருளற்ற மழலை மொழிகளைப் பேசினாய்,” முதலாமவள். (‘கீர்’ என்றால் தமிழில் சொல் எனவும் ஒரு பொருள் உண்டு. ஆகவே குழந்தை செங்கீரையாடுவதனை, அது பொருளற்ற குதலைமொழி பேசுவதாகவும் கொள்ளுவர்).

    “இவ்வாறு தவழ்ந்துவரும் உனக்குத் தாலாட்டுப் பாடல்கள் பாடி உறங்கவும் வைத்தாள் உன் அன்னை.

    “பின் உன்னைக் குந்தி உட்காரவைத்துக் கரங்களைச் சேர்த்துச் சப்பாணி கொட்டி விளையாடப் பழக்கினாள்,” என் இன்னொருத்தி!

    “உன்னிடம் தனக்கு ‘முத்தம் தா’வென வேண்டினாள். உன்னைக் கூவி அழைத்து “வருக,” எனக் குறுநடை பழகி வருமாறு வேண்டி, கொஞ்சியும் குலவியும் உன்னை எடுத்து அணைத்துக் கொண்டாள்,” எனப் பட்டியலிடுகிறாள் வேறொரு சிறுமி.

    “பின்பு நீ உணவுண்ண மறுத்தபோதெல்லாம் அந்தி சாய்ந்தபின்பு ஆகாயத்தில் வரும் அம்புலியை உனக்கு வேடிக்கை காட்டியும் விளையாட அழைத்தும் உணவூட்டினாள்.

    “இவையனைத்தையும் செய்தவள், ‘குழந்தாய், நீ சென்று ஓடியாடி விளையாடுவாயாக!’ என உன்னைத் தெருவில் விளையாட அனுப்பியும் வைத்தாள். நீ என்னடா என்றால் இங்கு வந்து எமது சிறுவீட்டினை அழிக்க முயல்கிறாய். நாங்கள் இதற்காக உன்னை இங்கனுப்பிய தாயையே நொந்துகொள்ள வேண்டும். உன்னை நொந்து கொள்வது முறைமையல்லவே. நீர்நிலைகளால் சூழப்பெற்ற குறுக்குத்துறை எனும் ஊரின்கண் வாழும் முருகா, எங்கள் சிற்றிலைச் சிதைக்காமல் இருப்பாயாக!” என வேண்டுகின்றனர் சிறுமியர்.

    ‘முந்தித் தவமே புரிந்துன்னை முயன்று பெற்றுக் காப்பாற்றி
        முகமே தூக்கிச் செங்கீரை மொழிந்தே ஆடத் தாலாட்டிக்
    குந்திக் கரத்தால் சப்பாணி கொட்டச் செய்து முத்தமிட்டுக்
        கூவியழைத்து வருகவெனக் கொஞ்சிக் குலவி யெடுத்தணைத்தே
    அந்திப் பொழுதைக் கடந்துவரும் அம்பு லிகாட்டிப் பின்னருனை
        ஆடி நீவா எனமறுகில் அனுப்புந் தாயர் தமைவிடுத்து
    நொந்திங் குன்னைக் குறைகூறல் நேர்மை யாமோ உணர்ந்திதனை
        நீர்சூழ் குறுக்குத் துறைவாழும் நிமலா சிற்றில் சிதையேலே4.’

    பிள்ளைத்தமிழின் முதல் ஏழு பருவங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் தாய்மார்களின் செயலாதலால் சிற்றிலை அழிக்க வரும் சிறுவனைத் தெருவில் விளையாட அனுப்பியதனையும் அதனால் ‘சிறுவன் சிற்றிலை அழித்தாலும், அது தாயின் தவறே’ என அதனையும் அவளுடைய செயலாகத் தாய்மீதே ஏற்றிக் கூறுகிறார் புலவர். பிள்ளைத்தமிழின் எட்டுப் பருவங்களை ஒன்றுடன் ஒன்று கோர்வையாகத் தொடர்புபடுத்திப் பாடியுள்ள புலமை போற்றற்குரியதாம்.

    குமரகுருபரனார் இயற்றிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில், செங்கீரைப் பருவத்தில் சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது. ஆச்சரியமாக இருப்பினும், அழகுதிகழ அமைந்த இப்பாடல், சிறு குழந்தைகளுக்கிடையேயான ஒரு விளையாட்டைப் பாடும் முகமாக, உலகியல், மானுட உளவியல், தெய்வத் தத்துவம், உலக உருவாக்கம் எனும் தொடர்ந்து நடக்கும் பிரபஞ்சத்தின் இயற்கைச் சுழற்சி முதலியனவற்றை உட்பொருளாகக் கொண்டு திகழ்கின்றது.   

    சிறு குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில், ஆண் குழந்தைகள் சிலர் முரட்டுத்தனமான விளையாட்டுகளை விளையாடுவர்.  மற்றக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களை உடைப்பது, அவர்கள் கட்டும் மணல் அல்லது சிறு மண்வீட்டைக் காலால் எற்றி உதைத்துச் சிதைப்பது, அவர்கள் பின்னலைப் பிடித்திழுத்து அவர்களைத் துன்புறுத்துவது என்பன இவற்றுள் சில. 

    உளவியல் ரீதியாக இதைக் காணப் போனால், நாம் வாழும் மானிட சமுதாயத்தை ஆதாரமாகக் கொண்டே இவை நிகழ்கின்றன எனலாம். அன்னையர் சமைப்பது, வீட்டிற்குரிய பணிகளைச் செய்து வீட்டை நன்முறையில் பராமரிப்பது, தமது குழந்தைகளைப் பேணுவது போன்றவற்றை நோக்கியே சிறுமியரும் தாய்மாரின் அடிச்சுவட்டில் சிற்றில் இழைத்து மணல் சோறாக்கி, குழந்தைகளைப் பேணும் விளையாட்டை விளையாடுவர். சிறுவர்களும் தந்தை, அண்ணன் முதலானோர் உடல் வலிமை தேவைப்படும் செயல்களைச் செய்வது போலத் தாமும் செய்ய முயல்வர். இவையே, சிற்றில் சிதைத்தல், சிறுபறை  முழக்குதல், சிறுதேர் உருட்டல், என்ற விளையாட்டுகளாகப் பரிணமித்ததோ என்னவோ! 

    உலகங்களையே சிறிய வீடாக உருவாக்கி விளையாடும் சிறுமியாக மீனாட்சியன்னை உருவகிக்கப் படுகிறாள். இவ்வாறு அவள் பெருமையைப் பேசுமிடத்து, சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. அன்னை உருவாக்கும் அழகிய சிற்றிலையும் ஒருவன் சிதைக்க இயலுமா? அவ்வாறு செய்யத் துணிந்த அவன் யார்? அவன் ஒரே ஒருவன் தான்- அவனே அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்த தலைவனான சிவபிரான்.

    இந்தப் பாட்டைக் கண்டு மகிழலாமா?

    சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எவ்வாறு? முதலில், நெடிய சக்கரவாள மலையை எல்லா உலகங்களையும் வளைத்து நிற்கும் சுவராக அமைக்கிறாள். எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை இந்தச் சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளிவிளக்குகளைப் பொருத்தி விடுகிறாள். முழுதும் எழுந்தெழுந்து மோதும் ஊழிக்கால வெள்ளத்தில் கழுவப்படும் புவனங்களே அவளுடைய பழைய பாத்திரம் பண்டங்கள்; அவற்றை வரிசையாக அடுக்கி வைத்து,  புதுக்கூழான இனிய அமுதத்தைச் சமைக்கிறாள். இவ்வாறு பலமுறை தாயாகிய மீனாட்சி சலிப்பின்றிச் செய்து வருகிறாள்.

    அவற்றை அழித்த வண்ணமாக இருக்கிறான் பித்தனான சிவபிரான். அவன் ஒரு முற்றவெளியான தில்லையில், சிதம்பரத்தில் திரிகின்றவன்; ஊமத்தம்பூவை அணிந்திருக்கும் பெரும் பித்தன்; கூத்தன் அவன் அழித்ததுடன் நில்லாது  மீனாட்சியின் முன் நின்று கூத்தாடுகின்றானாம்! 

    வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர், “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள். அல்லது மேற்காணும் பாடல்களில் கண்டபடி, சினம் கொண்டு கூச்சலிடுவார்கள்; இல்லாவிடில் அழுவார்கள். ஆனால் அம்மை மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்! ‘இவ்வாறு விளையாடுகின்ற ஒப்பற்ற இளமையுடன் கூடிய பச்சைப் பெண்பிள்ளையே! செங்கீரை ஆடி அருளே!’ என வேண்டுகிறார் குமரகுருபரர்.

    சுற்றுநெடு நேமிச் சுவர்க்குஇசைய

    ………………………………..

    இன்னமுதமும் சமைத்து அன்னைநீபன்முறை
    இழைத்திட அழித்தழித்தோர்
    முற்றவெளி யில்திரியும் மத்தப்பெரும்பித்தன்
    முன்னின்று தொந்தமிடவும்

    …………………………………..

    சிற்றில்விளை யாடும்ஒருபச்சிளம் பெண்பிள்ளை
    செங்கீரை ஆடியருளே5

    தாயான மீனாட்சி (பராசக்தி) உலகத்தை அடிக்கடி ஆக்குதலையும் அவற்றைச் சிவபிரான் அடுத்தடுத்து அழித்தலையும் ஆகிய செய்கைகள் சிறுமியர் சிற்றில் இழைத்தலும், சிறுவர்கள் அவற்றை அழித்தலும் ஆகிய செய்கைகளாக உருவகித்துக் கூறப்பட்டன. மானிடப் பெண்கள் வீட்டிற்கு வேண்டியவற்றைச் செய்வது போல, எல்லா உலகங்களையும் படைக்கும் பராசக்தியும் தன் கடமைகளாக இவற்றைச் செய்கின்றாள். அவற்றைத் திரும்பத் திரும்ப அழித்துத் திருவிளையாடல் புரிகிறான் சிவபெருமான். 

    எற்றுபுனல் என்பது அலை மோதும் ஊழிப் பெருவெள்ளமாகும். இதில் அண்டங்களைக் கழுவி எடுத்து அன்னை புதுக்கூழாகிய இன்னமுதைப் படைக்கின்றாள். இவ்வாறாக உலகை உருவாக்குவதையே மீனாட்சி சிற்றில் இழைப்பதாகப் புலவர் கற்பனை செய்கிறார். உன்மத்தம் கொண்டு பித்தனாகிய கூத்தபிரான் மீண்டும் மீண்டும் சிதைக்கிறான். இவ்வாறு உலக உருவாக்கமும் அழிவும் மாறி மாறி வருவது சுட்டப்படுகிறது. அவை மீனாட்சி அம்மையின் சிற்றில் உருவாக்கமாகவும் ஈசனின் சிற்றில் சிதைத்தலாகவும் அமைந்துள்ளன. 

    ஆண்பால் பிள்ளைத்தமிழில் ஒரு தனிப் பருவமாகப் பாடப் பெறும் சிற்றில்பருவம் பெண்பால் பிள்ளைத்தமிழில் செங்கீரைப்பருவத்தில் விளக்கப்பட்டு, சிவபிரானையே இப்பாடலின் பாட்டுடைத் தலைவனாகவும் கொண்டமைந்துள்ளது. குமரகுருபரரின் தெய்வப்புலமை பணிந்தேத்த வேண்டியதாம்.

    இறைவனின் படைத்தலும் காத்தலும் கரத்தலும் அழித்தலும் அருளுதலும் ஆகிய ஐந்தொழில்கள் ஓயாது நடை பெறுவதை  தத்துவ விளக்கமாக இப்பாடல் அழகுறக் காட்டுகிறது. அதுவும் சிவபெருமான் தான் செய்யும் திருவருள் தொழில்களைத் தனது திருமேனியாக விளங்கும் சக்தி மூலமாகவே செய்தருள்கிறான் என்பது மறைபொருளாக விளங்குகிறது.

    இன்னும் சில பிள்ளைத்தமிழ் நூல்களிலும் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. குமரகுருபரனாரின் கருத்தை அவர்கள் வழிமொழிந்திருக்கலாம்.

    சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் (ஆண்பாற்) சிற்றிற்பருவத்துப் பாடலொன்று சிறுபெண்கள் எவ்வாறு ‘பாவனை’யாக, பொய்யாக விளையாடுகின்றனர் என்பதனை நயமுற விளக்குகிறது.

    ‘ஒளி பொருந்திய குளிர்ந்த முத்துக்களாலான அரிசியும், அதற்கு உலைபெய்த நறுந்தேனும் கவிழ்ந்து சிதறாதோ? சமைக்கும் பாண்டமாகப் பயன்படுத்தும் (நந்தின் கடமான) சங்கு உடைந்து போய்விடாதோ? மாதுளைமலர்களைப் பெய்து நாம் அமைத்த உலைத்தீ அவிந்து விடாதோ? பவளக்கொடிகளால் எம் சிறுவீட்டிற்கு நாம் ஆசையாக இட்டுள்ள விளக்கு அணைந்துவிடாதோ? நாங்கள் (பாவைத்)திருமணம் எனக்கூறிச் செய்துவைத்துள்ள பலவகை விருந்து வீணாகப் போகாதோ? (பாவனையாக) முலைப்பாலருந்துவித்து உறங்க வைத்துள்ள எமது மகவு (பாவை) தாமரை போன்ற தனது கண்களை விழித்தெழுந்து தேம்பி அழும் அல்லவோ? ஆகவே எமது சிற்றிலைச் சிதைக்க வேண்டாம்,’ என வேண்டுவதாக அமைந்த பாடல். 

    நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
               நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
    தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
               சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ
    முகைபபுண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
               மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
    திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேம் சிற்றில் சிதையேலே
               சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே.6 

    என்பன பாடல் வரிகள். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழானதனால் சிறுமியர் சிறுவீடு கட்டுவதும், சிறுசோறு சமைப்பதும், பாவை விளையாடலும் (குழமணம் மொழிதல்) ஒருங்கே கூறப்பட்டுள்ளன. இவையே பெண்பால் பிள்ளைத்தமிழில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுப் புலவரின் கற்பனைக்கேற்பப் பாடப்படுகின்றன. இதனைப் பிறிதொரு கட்டுரையில் காணலாம்.

    ___________&____________

    பார்வை நூல்கள்:

    1. சிலப்பதிகாரம், கானல்வரி
    2. பரிபாடல்
    3. கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்- சிவஞான முனிவர்
    4. குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்-
    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    6. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- அந்தகக்கவி வீரராகவ முதலியார்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 64

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 64

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் 

    64.அமைச்சு

    குறள் 631:

    கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்ட தமைச்சு

    ஒரு செயலச் செய்யத்தேவைப்படுத பொருள், ஏத்த காலம், செய்யுத வகை, எல்லாத்தையும் சோதிச்சுப்பாத்து செயல்படுத்துதவன் தான் ஒசந்த அமைச்சர்.  

    குறள் 632:

    வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
    டைந்துடன் மாண்ட தமைச்சு

    செயலுக்கு ஏத்த நெஞ்சுறுதி, மக்களக் காக்குதது, தகுந்த நீதி நூல்களக் கத்துக்கிடுதது ,படிச்சவங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிடுதது, அசராத முயற்சி இந்த அஞ்சும் இருக்கவங்க தான் அமைச்சர்.

    குறள் 633:

    பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
    பொருத்தலும் வல்ல தமைச்சு

    பகையாளிக்கு தோணையா இருக்கவன பிரிக்கதும் , தன் நாட்டுக்கு தொணையா இருக்கவங்களக் காக்குததும், பொறவு பிரிஞ்சவன் திருந்திட்டாம்னா அவனச் சேத்துக்கிடததுலயும் தெறமசாலியா இருக்கவன் தான் அமைச்சர். 

    குறள் 634:

    தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
    சொல்லலும் வல்ல தமைச்சு

    செய்ய வேண்டியதத் தெரிஞ்சுக்கிட்டு அதச் செய்யுததுக்கு ஏத்த வழிமொறையக் கண்டுபிடிக்கதும் தான் நெனைக்குதத துணிச்சலா சொல்லதுதலயும் தெறமசாலிய இருக்கவன் தான் அமைச்சன்.

    குறள் 635:

    அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
    திறனறிந்தான் தேர்ச்சித் துணை

    அறத்தை அறிஞ்சுக்கிட்டு நெறையா படிச்சுபோட்டு அடக்கமா இருந்து செய்யுத முறை தெரிஞ்சு இருக்கவர்கிட்ட தான் கலந்துபேசி முடிவு எடுக்க முடியும்.

    குறள் 636:

    மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
    யாவுள முன்னிற் பவை

    படிச்ச படிப்புக்கு மேல சொந்த புத்திசாலித்தனமும் இருக்கவங்கள எந்த சூது எதித்து நிக்க முடியும்?  முடியாது. 

    குறள் 637:

    செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
    தியற்கை அறிந்து செயல்

    படிச்ச படிப்பால எல்லாந்தெரிஞ்சாலும் ஒலக நடப்ப உணந்துகிட்டு ஏத்தாமாரி செயலச் செய்யணும். 

    குறள் 638:

    அறிகொன் றறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன்

    சொன்னதையும் கேக்காம சொந்த புத்தியும் இல்லாம இருக்க ராசாக்கு அமைச்சன் துணிச்சலா நல்ல யோசனைகளச் சொல்லணும்.  

    குறள் 639:

    பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
    எழுபது கோடி உறும்

    தப்பான வழிமொறையச் சொல்லி வம்புல மாட்டி உடுத அமைச்சன் பக்கத்துல இருக்குதத விட எழுபது கோடி பகையாளிங்க பக்கத்துல இருக்கது எம்புட்டோ நன்மையக் கொடுக்கும். 

    குறள் 640:

    முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
    திறப்பா டிலாஅ தவர்

    எம்புட்டுத் திட்டம்போட்டு செயலத் தொடங்கினாலும் கூறுகெட்டவன் அத அரைகொறையாத் தான் செய்யுவான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • சேக்கிழார்  பா நயம் – 48

    சேக்கிழார்  பா நயம் – 48

    -திருச்சி  புலவர் இராமமூர்த்தி 

    இளம் பருவத்திலேயே  முதிர்ந்த அறிவின் அடையாளங்கள் வெளிப்பட, சுந்தரர்

    கண்முன் தோன்றிய  பரவை நாச்சியாரின் பேரழகு  பற்றியது இப்பாடல். அம்மங்கை நல்லாளைக் கண்டவுடன் இறையருளால் சுந்தரருக்குக் காதலுணர்வு உண்டாயிற்று.

    இந்த உணர்வைக் களவியல் உணர்வு என்று  தொல்காப்பியம் கூறும். இளம்பருவத்தினர் இணைவிழைச்சுக் கொள்வது இயல்பு. பாவேந்தர் பாரதி தாசனர், ‘’காதல் அடைதல் உலகியற்கை!’’  என்றுபாடுவார். இக்காதல் உணர்வு, பிறர் அறிந்துகொள்ள இயலாத நிலையில், இருவருக்கும் இடையே ஏற்படும். இதனைக் ‘களவு’ என்ற இயலாக  இலக்கணம்கூறும். இக்களவியலின் தொடக்க நிகழ்ச்சிகளாகக் காட்சி, ஐயம், தெளிவு, குறிப்பறிதல் ஆகிய நான்கும் நிகழும் ! இதனைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். இதனைத் திருக்குறள் காமத்துப் பாலின்  முதற்குறள் விளக்குகிறது. 

    தலைவன் தலைவியை நெடுந்தொலைவில்  வரும்போதே கண்டுவிடுகிறான். அவன் தான்காண்பது ஓரு தெய்வத்திருவுருவோ? என்றுஎண்ணுகிறான், இதனை ‘அணங்கு கொல்!’  என்றெண்ணி ஐயுறுகின்றான்! பின்னர் தலைவி மேலும் நெருங்கி வரும்போது , சிறந்த உருவுடைதாய்த் தோன்றும் தேர்ந்தெடுத்த மயிலோ? என்பதை, ‘ஆய்மயில் கொல்லோ?’  என்று கருதுகிறான். அதன்பின் மேலும் நெருங்கி வரும்போது, அவள்காதில் அணிந்த குழையாகிய அணிகலனைக் காண்கிறான். அப்படியானால் காதில் நகையை அணிந்து கொண்டு நெருங்கி வருபவள் ‘பெண் தானோ?‘ என்ற  தெளிவற்ற மனநிலை கொள்கிறான்! இதனை, 

    ‘’அணங்குகொல் ,  ஆய்மயில் கொல்லோ  கனங்குழை
    மாதர்கொல்  மாலும்என் நெஞ்சு!’’

    என்ற  திருக்குறள்  படம் பிடித்துக்  காட்டுகிறது! காட்சி, ஐயம்,  தெளிவு ஆகிய மூன்று நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இத்திருக்குறள்  அமைந்து நம்மை வியப்படைய வைக்கிறது!  

    இதனைப் பரிமேலழகர், ‘.எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி ‘அணங்குகொல்’ என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, ‘ஆய்மயில்கொல்’ என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி ‘மாதர்கொல்’ என்றும் கூறினார்.  என்று மேலும்விளக்குவார்! இத்தகைய  காதல் நிகழ்வு சேக்கிழார் சுவாமிகளின்  பாடலில் விளங்குகிறது. 

    இதற்கு முதற்பாடலில் ‘’விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழை யவரைக் கண்டார்!’’ என்றபகுதி இருவர்தம்  கண்ணும் ‘’ கண்ணொடு கண்ணிணை நோக்கு’’ ஒத்ததை நினைவூட்டுகிறது. அப்பாடலில் ‘’நகைபொதிந்து இலங்கு செவ்வாய் விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழையவர்’’ என்றபகுதி,  பரவையாரது இயற்கை செயற்கை என்ற இருவகைத் தெய்வீக அழகுகளையும் காட்சிபெற வைத்தவாறு. நம்பிகள் காட்சிக்குக் கவர்ச்சியுற முதலிற் புலப்பட்டது நகை. அதன் பின்னரே அதற்கிடமாகிய செவ்வாய் தோன்றிற்று. இவை யிரண்டினால் அக்காட்சியை அவர் உள்ளத்தே ஊன்ற வைத்தன மேலே கண்ட வில்லும் வேலும் ஆம். -ஆதலின் இம்முறை வைத்தார். ஊறுசெய்து உறுத்தியன ஆதலின் படையாகக் கூறியவாறு. வில் கைவிட்டகலாது தொழில் செய்வதுபோல் நுதலும் தானிருந்தபடியே செயல் விளைத்தது ஆதலின் வில் என்றார். வேல் உடையாரால் எறியப்பட்டு ஏவப்பட்டாரிடம் போய்ச் செயல் விளைக்கும்; ஆதலின் கண்ணை வேல் என்றார். இங்குக் கண் என்றது கண்ணின் தொழிலாகிய பார்வையை. அந்தக் கண்ணால் பரவையாருங் கண்டாராதலின் (288) “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள், என்ன பயனு மில“ என்ற திருக்குறளிற் கண்டவாறு நிகழ்ச்சி உண்டாயிற்று என்க. இக்காரணம் பற்றியே வரும்பாட்டில் விற்குவளை என ஒரு சேர வைத்து எண்ணியபடியாம்’’ என்ற   சிவக்கவிமணியார் உரையின் ஆழமும் அகலமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இது காட்சி !

    அடுத்து  ஐயம் என்ற  தொடர் நிகழ்ச்சி. பரவையாரின்  அழகிய தோற்றம் சுந்தரர் உள்ளத்தில்  பல்வேறு ஐயங்களை உண்டாக்குகின்றன! முதலில் அவர் தோற்றம்  தேவருலகக் கற்பக மரத்தின் பூங்கிளை போன்று காட்சி தந்தது.அதனைக்  ‘’கற்பகத்தின் பூங்கொம்போ?’’ என்று கருதுகிறார்!  

    கற்பக மரம்  வானுலகைச் சார்ந்தது. மண்ணுலகில் அதன் கிளைமட்டும் வந்ததோ? பரவையார்  வரும்போதே எங்கும் பரவிய நறுமணம் கற்பகப்பூவின் நறுமணமோ? மரக்கிளை என்ற  கருத்து முற்றப் பொருந்தவில்லை எனக்கருத்தினால், அத்தொடரை கற்பு+அகத்து+ இன்+ பூ+கொம்பு என்று பிரிக்கப்பெற்று, கற்பினை  அகத்தே கொண்ட இனிய மலர்க்கொத்து போன்ற மங்கை என்ற தொனிப் பொருள் தோன்றுகிறது ஆகவே இது கொம்போ? பெண்ணோ? என்றஐயம்தோன்றியது!

    அடுத்து பரவையாரை மன்மதன்,  தான் காதல் மலரம்புகளை எய்து சுந்தரரை வசப்படுத்தி   உயர்வாழ்வு அடைதற்கு உரிய வாழ்விடமாகக் கருதி வந்தானோ? 

    என்றகருத்தில் ‘’காமன் தன் பெருவாழ்வோ’’  என்று கருதினார்! மணிவாசகரின் திருக்கோவையாரின், 

     திருவளர் தாமரை, சீர்வளர் காவிகள், ஈசர்தில்லைக்
    குருவளர் பூங்குமிழ், கோங்கு, பைங்காந்தள் கொண்டு ஓங்குதெய்வ
    மருவளர் மாலை, ஓர் வல்லியின் ஒல்கி, அனநடை வாய்ந்து
    உருவளர் காமன்தன் வென்றிக்கொடி  போன்று? ஒளிர்கின்றதே!

    என்ற பாடலில்  உருவளர் காமனின்  வெற்றிக்கொடி போன்று  என்ற உவமை பரவை நாச்சியாருக்கும்  பொருந்துகிறது.இதில் பூங்கொம்பு என்ற தொடரின் பொருளும் இணைகிறது!

    அடுத்து அழகிய புண்ணியங்கள் செய்த புண்ணியத்தின் பயனாக விளைந்த பெரும்புண்ணியமோ? என்று பரவையாரின் தோற்றம் சுந்தரரைக் கருதவைக்கிறது !  அல்லது அழகு என்றபொருளின் பயன்கள் பலவற்றுள் சிறந்த புண்ணியப்பயனோ? என்றுசுந்தரர்கருதுகிறார். புண்ணியம் காட்சிப் பொருள் அல்லவே! அதுவோ,  பெண்வடிவமோ? என்ற ஐயம்தோன்றும் காட்சி இது! இதனை,’’ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ?’’ என்ற பாடல்வரி புலப்படுத்துகிறது. 

    இது நிலத்தில் கால்பதித்து  முளைத்த கொடியோ? இக்கொடியில் வில், குவளை, பவளம், மலர், மதி ஆகியவை பூத்துக் காணப்  படுகின்றனவே? ஒரு கொடி மேகத்தைத் தலையில் சுமந்துகொண்டு வில் , பவளம், மதி ஆகிய வேறுபட்ட பொருள்களுடன், குவளை மலர்களையும்   ஏந்திக்கொண்டு மிகுந்த வாசனை வீசித் தோன்றுவது போல் இருக்கின்றதே! உலகில் இல்லாத கொடியோ? உள்ள பெண்ணோ? என்பது ஐயப் பொருள் தருகிறது! இதனை,

    ‘’புயல் சுமந்து  வில் குவளை பவள மலர் மதி பூத்த  விரைக்கொடியோ?’’  

    என்று   சேக்கிழார்  பாடுகிறார்! ஒருபெண்ணின் மேகம்போன்ற கூந்தல், வில் போன்ற புருவம், குவளை  போன்ற விழிகள், பவளம் போன்ற இதழ்கள், கோங்க மலர் போன்ற கொங்கை, மதி போன்ற நுதல் ஆகியவற்றை உருவகம்  செய்யும் சொல்லாட்சித் திறம் பெற்றது இப்பகுதி! பெண்ணின் அங்கங்கள் இன்று படிப்போருக்கும் காட்சிப்பொருளாக அமைந்தது. அன்று  நேரில் கண்ட போது, சுந்தரர் மட்டுமே உணர்ந்த மலரின் நறுமணம் ‘’ விரைக்கொடி’’ என்ற தொடரில் அமைந்தமை இன்புறத் தக்கது.  

    அடுத்து சுந்தரருக்குப் பெருமிதமும் தரும்ஓர்உள்ள நிகழ்ச்சி கூறப்பெறுகிறது. இதுவரை கண்டறியாத புதுமையை  பரவையார் தோற்றத்தில், சுந்தரர் உணர்ந்தார் . ஆதலால், ‘’அற்புதமோ?’’ என்று கருதினார். அவர் மட்டுமே உணர்ந்த அனுபவம், அது!  இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பெற்று இறைவன் திருவுள்ளப் பாங்கின் வண்ணமே வாழும் சுந்தரருக்கு இக்காட்சியும் இறைவன் திருவருளாகவே  தோன்றியது. ஆதலால் இதனை ‘’ சிவனருளோ?’’ என்றார்.

    இந்நிகழ்ச்சி, ஐயம் என்ற துறையாதலின் ஐயத்தின் இலக்கணமாகிய அறிவும் அறியாமையும் கலந்த உள்ள நிகழ்ச்சியைக் குறிக்கின்றமை உணர்க.   கொம்போ – வாழ்வோ – புண்ணியமோ – 

    கொடியோ – அற்புதமோ – இவற்றில் ஒன்றோ, அன்றி முற்றும் கலந்ததோ, பிறிதோ என்று அறிவும், துணிவுபடாமையின் அறியாமையும், கூடி அறியேன் எனப் பெற்றது. 

    அதிசயித்தார் – இதுவும் அற்புதம் போலவே பெருமிதமும் இன்பமும் கலந்த தொரு உள்ள நிகழ்ச்சியேயாயினும் இன்னதென்று அறிந்து அனுபவிக்கப் பெறும். “அதிசயம் கண்டாமே“ என்ற (திருவாசம்) அதிசயப்பத்து முடிபுகளைக் காண்க. 

    மேலே சொல்லிய கருத்துக்கள் நம்பிகளது உள்ள நிகழ்ச்சிகளாம். மனதுக்குப் புலனாய் அறிந்து உரைக்கப்படுதலின் அதிசயித்தார் என்பதாம்.

    முதலில் தெய்வ மணமும், தெய்வ வொளியும், தெய்வ அழகும் கொண்ட ஒரு பொருள் நம்பிகளது காட்சிக்குட்பட்டது. அதனைக் கொம்போ என்றார். பின்னர் அதன் அழகு மிகுதி நோக்கிக் காமன் வாழ்வோ என்றார். அந்த அழகு வெறுங் கீழ் நிலைப்பட்டதாய்த் தோன்றாமல் புண்ணிய விளைவாய்ப் புலனானமையின். “புண்ணியமோ“ என்றார். இவ்வளவும் நிருவிகற்பமாகிய பொதுக் காட்சியாம். 

    இனி அவ்வாறு மணமும் அழகும் ஒளியும் பிரித்துணர்ந்து இன்னின்னவற்றால் விளைந்தன வென்று கூறுபடுத்தி அறியும் உள்ளநிலை உண்டானபடியால் ‘வில் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ’ என்ற சவிகற்பமாகிய சிறப்புக் காட்சியாயிற்று. இவ்விரண்டினோடு அமையாமையின் அற்புதமாயிற்று. அதன் பின்னர் அவனருளே யன்றி வேறு பற்றுக்கோடு தமக்கின்மையின் முன்னினைவின் குறிப்புத் தோன்றவே சிவனருளோ? என்ற மன நிகழ்ச்சியாயிற்று.

    இவையனைத்தும்  சிவக்கவிமணியாரின் விளக்கம்! இனி முழுப்பாடலையும்  பயின்று பயன் பெறுவோம்!

    கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ? 

    பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து 

    விற் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ? 

    அற்புதமோ? சிவனருளோ? அறியேன் என்று அதிசயித்தார்

    இப்பாடலின்  நயங்கள் அனைத்தும்  எண்ணியெண்ணி மகிழ்தற்கு  உரியன. 

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் 

    62. இடுக்கண் அழியாமை

    குறள் 621:

    இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
    அடுத்தூர்வ தஃதொப்ப தில்

    சங்கடம் வரும்போது கலங்காம சிரிக்கணும். சங்கடத்த எதித்து செயிக்கதுக்கு அதப்போல வேற இல்ல. 

    குறள் 622:

    வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்

    வெள்ளம் வருதது கணக்கா சங்கடம் கரபுரண்டு வந்துச்சின்னாகூட அறிவாளிங்க அதப்பத்தி மனசுக்குள்ளார நெனச்ச நேரத்துலயே அது விலகி ஓடிப்போவும். 

    குறள் 623:

    இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
    கிடும்பை படாஅ தவர்

    சங்கடம் வருதப்போ வருத்தப்படாம இருக்கவங்க சங்கடத்துக்கே சங்கடத்த உண்டாக்கி அதத் தோக்கடிப்பாங்க.

    குறள் 624:

    மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பா டுடைத்து

    கரடுமுரடான பாதையில கூட வண்டிய இழுத்துக்கிட்டு போகுத காள மாடு கணக்கா அசராம முனையுதவனுக்கு வந்த சங்கடம் சங்கடப்பட்டு போவும். 

    குறள் 625:

    அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கட் படும்

    தொடர்ச்சியா ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா சங்கடம் வந்தாலும் மனசு தளராதவனுக்கு அந்தச் சங்கடமே சங்கடப்பட்டுக்கிட்டு போயிடும். 

    குறள் 626:

    அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
    றோம்புதல் தேற்றா தவர்

    சொத்துசொகம் சேரும்போது அதுக்காக சந்தோசப்பட்டு காப்பாத்திவச்சிக்கிடாதவங்க அது கைவிட்டுப்போவும் போது வெசனப்படுவாங்களோ?

    குறள் 627:

    இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
    கையாறாக் கொள்ளாதா மேல்

    ஒடம்பு துன்பத்துக்கு இடமானது னு அறிஞ்சுக்கிட்ட பெரியவங்க துன்பம் வருதப்போ அத துன்பமாவே நெனைச்சுக்கிட மாட்டாங்க.  

    குறள் 628:

    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்ப முறுதல் இலன்

    சந்தோசத்த தேடி அலையாம துன்பத்தையும் சாதாரணமா எடுத்துக்கிடுதவன் மனசு தளர்ந்து சங்கடப்பட மாட்டான்.

    குறள் 629:

    இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்ப முறுதல் இலன்

    சந்தோசம் வார நேரம் ஆட்டம் போடாதவன் சங்கடம் வரும்போது துக்கப்படமாட்டான். 

    குறள் 630:

    இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
    ஒன்னார் விழையுஞ் சிறப்பு

    சங்கடத்த சந்தோசம் னு நெனைக்குத நெஞ்சுரம் உள்ளவங்களுக்கு பகையாளியும் பாராட்டுத பெரும வந்து சேரும். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    62. ஆள்வினை உடைமை

    குறள் 611:

    அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்

    நம்மால முடியுமா னு மன உளச்சல் படுதது கூடாது. மனசு வச்சி முனஞ்சோம்னா அதுக்கு உண்டான தெம்பு தானா வந்துக்கிடும். 

    குறள் 612:

    வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு

    எதச் செஞ்சாலும் முழுக்க செஞ்சு முடிக்கணும். முடிக்கது செரமம் னு பாதில உட்டவங்கள ஒலகமும் விட்டுப்போடும். 

    குறள் 613:

    தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
    வேளாண்மை என்னுஞ் செருக்கு

    விடாம முனஞ்சி செய்யுத ஒசந்த கொணத்துல தான் மத்தவங்களுக்கு ஒதவுத பெருமயான செயல் அடங்கியிருக்கு. 

    குறள் 614:

    தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
    வாளாண்மை போலக் கெடும்

    முயற்சி இல்லாதவன் மத்தவங்களுக்கு ஒதவுதேன்னு சொல்லுதது பேடி தன் கையில வாளத் தூக்கி வீசுததுக்குச் சமானம். 

    குறள் 615:

    இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்

    சுயநலமா இல்லாம தான் ஏத்துக்கிட்ட செயல முடிக்க; விரும்புதவன் தன்னையச் சுத்தி இருக்க எல்லாரோட தொயரத்தையும் போக்கித் தாங்குத தூண் ஆவான்.

    குறள் 616:

    முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்

    காரியத்த முனஞ்சி செய்யுதது செல்வத்தக் கொடுக்கும் அப்டி செய்யாதது வறுமையக் கொடுத்துப் போடும்

    குறள் 617:

    மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
    தாளுளாள் தாமரையி னாள்

    ஒருத்தன் மாச்சப்பட்டாம்னா அதுல மூதேவி வந்து வாழுவா.  காரியத்த முனைஞ்சி செய்யுதப்போ மகாலச்சுமி வந்து தங்கிக்கிடுவா.

    குறள் 618:

    பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
    தாள்வினை இன்மை பழி

    நன்மைய விளைவிக்குத விதி இல்லாம இருக்கது யாருக்கும் குறையா ஆவாது. தெறிஞ்சுக்கிட வேண்டியத தெரிஞ்சுக்கிட்டு முனஞ்சி செய்யாம இருக்கது தான் குறை. .

    குறள் 619:

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்

    விதி நமக்கு ஒதவ முடியாமப் போனாலும் ஒடம்ப வருத்திக்கிட்டு உழச்சோம்னா அதுக்கேத்த கூலி கெடைக்கும்.

    குறள் 620:

    ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
    தாழா துஞற்று பவர்

    மனசு தளராம தொடர்ச்சியா முனையுதவங்க விதியையும் தோக்கடிச்சிடுவாங்க. 

    -அடுத்தாப்லையும் வரும்-

    Share
  • சேக்கிழார்   பா நயம் – 47

    சேக்கிழார்   பா நயம் – 47

    -திருச்சி  புலவர் இராமமூர்த்தி 

    ஒருநாள்  திருவாரூர்  வீதி வழியே தம் சேடியர்களோடு திருக்கோயில் நோக்கிப் பரவையார்  சென்றார். அவர் முன்பு கைலாயத்தில் மலர்களைக்  கொய்து தம் நாயகியாகிய உமையம்மை பூசைக்கு உதவியவர். அதன் தொடர்ச்சியாகத் திருவாரூரிலும் புற்றிடங் கொண்டாருக்கும், அன்னை கமலாம்பிகைக்கும் வழிபாடு செய்யப் பூக்களைப் பறித்து அளித்தார். அவற்றை இறைவியின் நிர்மாலியமாய்த் தலையில் சூடிக்கொண்டார். அதனால் அப்பூக்களின்  தெய்வமணம் ஊரெங்கும் கமழ்ந்தது! 

    இறைவழிபாட்டை  மட்டுமே அவர் தம் அன்றாடக்  கடமையாகக் கொண்டிருந்தார். திருவாரூர்த் தியாகராசப் பெருமானின் திருவுருவைக் கண்ணாரக் கண்டு மகிழ்வதற்காகத் தம் சேடியருடன் மெல்ல நடந்து சென்றபோது சுந்தரர்,  இறைவன் திருவருளினால் பரவை நாச்சியாரைக் காண நேர்ந்தது. அப்போது அவர் திருவடிகளில் சிலம்பும், இடையில் மேகலையும், கூந்தலில் சூடிய மலர்களைச் சூழ்ந்த வண்டுகளும் ஆரவாரம் செய்தன!   

    அவருடைய  பேரழகு மிகப்பேரழகியான கமலாம்பிகைக்குத் திருப்பணி செய்தமையால் தமிழகமே போற்றிப் புகழும் அளவுக்கு ஒளிவீசி விளங்கியது!

    அதனால்  அவள் அழகிய பாதங்களில் அணிந்திருந்த சிலம்புகள், ’’ இவள் பாதங்கள் இந்தப் பாருலகினையே வென்று தம் அடிமைப்  படுத்தி விட்டமையால். இந்த நிலமே இவற்றைப் பணிந்து தாங்குகின்றன!’’ என்று ஆரவாரம்  செய்கின்றன! ஆகவே அவள் பாதங்கள் நிலவுலகையே அடிமைப்படுத்தின! அடுத்து அவளுடய இடை, அழகிய நாகம்போன்ற அல்குலின் மேலே   மணிகள் கட்டிய மேகலைகளை அணிந்து விளங்குகின்றது. ஆகவே அவர் இடையில் அணிந்த மணிமேகலை, ‘’இவள்அழகு கீழே அரவம் திகழும் நாகலோகத்தினை அடிமைப்படுத்தி விட்டது,! என்பதைப் புலப்படுத்தி ஆரவாரிக்கின்றன!  அடுத்து பரவையாரின் கரிய மேகத்தை வென்ற கூந்தலில் சூட்டிக்கொண்ட பூக்களின் மணத்தையும் தேனையும் நுகரும் ஆவலில் வண்டுகள் சூழ்ந்து பறந்து, ரீங்காரிக்கின்றன! வண்டுகள், ‘’ எம் தலைவியின்  கூந்தலின் கருமைக்கு வானத்தின் மேகங்கள் தோற்றுவிட்டன, அதாவது வானுலகே தோற்றுவிட்டது!’’ என்று அறிவிக்கின்றன! 

    மூன்று அங்கங்கள் முறையே மூன்று உலகங்களை வென்றதற்கு அடையாளமாக, மூன்றுபொருள்கள் ஆர்த்தன. மேலும் – நடுவும் – கீழும் உள்ளன மூவுலகங்கள் என்பர். இவையேசுவர்க்க மத்திய பாதலமாம். 

    மூவுலகையும் வெல்லுதலாவது இம்மூன்று உலகத்திலும் இவருக்கு ஒப்பாரும் மிக்காரு மில்லையாதல். தமிழ் நூற்களின்படி இதுவே தலைவியினது இலக்கணமாதலின் இவ்வாறு கூறினார். ஒவ்வோர் உலகை வென்றதற்கு ஒவ்வோர் பகுதி காரணமும் உதாரணமு மாயிற்று!.

    இனிப்பாடலை   முழுவதும் படித்துப் பயில்வோம்.

    “அணி சிலம்பு அடிகள் பார் வென்றடிப் படுத்தனம் என்று ஆர்ப்ப  
    மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அர உலகை வென்ற
    துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற் கழிய விண்ணும்
    பணியும் என்றின வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில்.”

    இதனை   உரையாசிரியர்  மேலும் விளக்குகிறார். பரவையாரது அடிகள் மண்ணை அடிப்படுத்தி மிதித்தற் றொழிலாலும், அல்குல் அரவுலகை அரவரசாகிய நாகத்தினும் மிக்க வடிவினாலும், காஞ்சியில் உள்ளனபோன்ற மணிகள் அரவுகளில் இல்லாமையினாலும், குழல் மேகத்தின் மிக்க நிறத்தாலும் வென்றதை, முறையே, அங்கங்குள்ள சிலம்பும் – காஞ்சியும் – வண்டுகளும் தெரிவித்து ஆர்த்தன என்க. மண் அடிப்பட்டது; விண்பணிந்தது; ஆனால் அரவுலகு உறுதியாய் வெல்லப்பட்டது; ஆதலின் இதைத் தெரிவிக்குமாறு ‘துணிவு கொண்டு காஞ்சி ஆர்க்க’ என்றமை  காண்க.      

    விண் – புண்ணியத்தால் வரும் இன்பானுபவமும், மண் – புண்ணிய பாவங்களால் வரும் மிச்சிரமாகிய கலப்பு அனுபவமும் பெறும் இடங்கள் ஆதலின் இவற்றைக் கீழ்ப்படுத்தலே அமையும். ஆனால் அரவுலகு என்ற கீழுலகம் பாவத்தால் விளையும் துன்பானுபவத்திற்கே உரியதாதலின் அது முற்றும் வெல்லப்பட்டொழிதல் வேண்டும் என்பதுபற்றி “வென்ற துணிவுகொண்டு“ என்றதாம். துணிவுகொண்டு – அடியும் குழலும்போல வெளித் தோற்றாது, அல்குலினது செயல் காஞ்சி யணியின் தன்மையால் அனுமானித்துத் துணியப்படு பொருளாதலும் குறிப்பாம். 

    அடி – அல்குல் – குழல் – பாதாதிகேச வருணனை. மண்ணும் அரவுலகும் அன்றி விண்ணும் என்ற பொருளில்வந்த இறந்தது தழுவிய எச்சவும்மை. சிறப்பும்மையுமாம். பரவையார் என்ற பெண்மணியின் அவதாரத்தால் சிவத்துவம் விளங்க நாகலோகம் தூர்ந்து ஒழியக் காரணமாயிற்று என்ற குறிப்பும் காண்க. இதனால் பரவையார் மறுகுசூழ ஒப்பற்ற இறைவனை  வணங்கப்போந்த நடைச் சிறப்பும், பயனும் கூறியபடி.’’ என்று உரையாசிரியர் விளக்குகிறார்!

    பரவை நாச்சியார்  இறைவனது கருணையால்  நிலவுலகிற்கு அனுப்பப் பெற்றமையால்,  அவருடைய தனிச் சிறப்பு வாய்ந்த தகுதி  இப்பெரிய புராணத்தில் விளங்கும். அதனாலேயே  இறைவன் தம் திருப்பாதங்கள் ஆரூர் வீதியில் படிய, இருமுறை தூது நடந்தார். இப்பாடல்  பரவை நாச்சியார் மற்றைய பெண்களிலும் மேம்பட்டவர் என்பதை சேக்கிழார் பாநயம் புலப்பட

    விளக்குகிறார். பெண்ணின்  பெருமையைப் போற்றும் பகுதி இது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 61

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 61

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் 

    61)  மடி இன்மை

    குறள் 601:

    குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
    மாசூர மாய்ந்து கெடும்

    ஒருத்தன் பொறந்த குடி ங்குத மங்காத விளக்கு அவனோட மாச்சலால(சோம்பல்) ஒளி மங்கி கெட்டுப் போவும். 

    குறள் 602:

    மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்

    குடும்பத்த ஒசத்த விரும்புதவங்க மாச்சப்பட்டு இருக்காம உற்சாகமா முனஞ்சு செயல்படணும். 

    குறள் 603:

    மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
    குடிமடியுந் தன்னினு முந்து

    ஒழிச்சுக்கட்டவேண்டிய மாச்சல தங்கிட்ட வச்சிருக்கவனோட குடும்பம் அவனுக்கு முன்ன அழிஞ்சு போவும். 

    குறள் 604:

    குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
    மாண்ட உஞற்றி லவர்க்கு

    மாச்சப்பட்டு பாடுபாக்காம இருக்கவன் வாழ்க்கையில தப்புதண்டா செய்யுதது அதிகமாயி அவன் குடும்பப் பெரும அழிஞ்சு போவும். 

    குறள் 605:

    நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்

    கெடப்புல போட்டு காரியத்த செய்யுதது, அயத்துப் போகுத கொணம், மாச்சல், அளவுக்கு மீறி ஒறங்குதது இந்த நாலு கொணமும் கெட்டுப்போவணும் னு நெனைக்கவன் ஆசப்பட்டு ஏறுத தோணி ஆவும்.

    குறள் 606:

    படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது

    நாட்ட ஆளுத தலைவனோட ஒறவு தானே வந்து சேந்துக்கிட்டாலும் மாச்சப்பட்டு சும்மா இருக்கவனுக்கு அதனால ஒரு உபயோகமில்ல. 

    குறள் 607:

    இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
    மாண்ட உஞற்றி லவர்

    முனஞ்சி பாடுபாக்காம மாச்சப்பட்டு சும்மா இருக்கவன் வாழ்க்கைல மத்தவங்க இடிச்சுப்பேசி எளக்காரம் செய்யுத நெலமைக்கு வந்துருவான். 

    குறள் 608:

    மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
    கடிமை புகுத்தி விடும்

    மாச்சப்படுதவன் நல்ல குடில பொறந்திருந்தாலும் அந்த கொணம் அவன பகையாளிக்கு அடிம போல ஆக்கி உட்ரும். 

    குறள் 609:

    குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
    மடியாண்மை மாற்றக் கெடும்

    ஒருத்தன் மாச்சல விட்டுப்போட்டாம்னா அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் வந்த குத்தங்கொற வெலகிப் போயிடும்.

    குறள் 610:

    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு

    கடவுள் அடியால அளந்த ஒலகத்தையெல்லாம் மாச்சப்படாம இருக்க ராசா சேந்தாப்ல அடைஞ்சுக்கிடுவான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 60

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 60

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 60

      ஊக்கம் உடைமை

    குறள் 591:

    உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
    உடைய துடையரோ மற்று

    ஊக்கம் உடையவங்க எல்லாம் உடையவங்க.ஊக்கம் இல்லாதவங்க எத வச்சிருந்தாலும் எதுவுமே இல்லாதவங்க தான். 

    குறள் 592:

    உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்

    ஊக்கம் ங்குத ஒரு பொருளத் தவித்து வேற எதையும் நெலையான உடைமை னு  சொல்ல முடியாது. 

    குறள் 593:

    ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தங் கைத்துடை யார்

    ஊக்கத்த கைவசத்துல வச்சிருக்கவங்க செல்வம் கைவிட்டுப் போச்சுதுன்னா கூட வெசனப்பட மாட்டாங்க. 

    குறள் 594:

    ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை

    அசதி இல்லாத ஊக்கம் ஒடயவங்கிட்ட செல்வம் அவன் இருக்க எடத்துக்கு வழி கேட்டுக்கிட்டு போய்ச் சேந்துக்கிடும். 

    குறள் 595:

    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனைய துயர்வு

    தண்ணில இருக்க பூவோட அடிக்காம்போட நீளம் தண்ணியோட அளவ பொருத்து மாறிக்கிடும். அது கணக்கா மனுசன் வாழ்க்கையில ஒசருததும் அவன் மனசுல இருக்க ஊக்கத்தப் பொருத்து தான். 

    குறள் 596:

    உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

    நெனைப்பு பூரா ஒசந்ததாவே இருக்கணும். ஒருக்கா அது நடக்கலேனாலும் நெனைப்ப விட்டுப்போடக் கூடாது. 

    குறள் 597:

    சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு

    ஒடம்பு முழுக்க அம்பு தைச்சாலும் யானை தளராம நிக்கும். அது கணக்கா ஊக்கம் ஒடயவங்க அழிவே வந்துச்சின்னாலும் கலங்க மாட்டாக.

    குறள் 598:

    உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னுஞ் செருக்கு

    அள்ளிக் கொடுக்குத ஊக்கம் இல்லாதவுக தங்கள வள்ளல் னு பெரும பட்டுக்கிடதுதுக்கு வழியே இல்ல. 

    குறள் 599:

    பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின்

    பருத்த ஒடம்பும் கூர்மையா கொம்பும் இருக்க யானை கூட ஊக்கம் இருக்க புலி தாக்கிச்சின்னா பயந்துக்கிடும். 

    குறள் 600:

    உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
    மரமக்க ளாதலே வேறு

    மனசுல உறுதியான ஊக்கம் இல்லாதவங்க பாக்கதுக்கு மனுசங்களா இருந்தாலும் மரங்களுக்கு சமானம் தான்.

    -அடுத்தாப்லையும் வரும்- 

    Share
  • சேக்கிழார் பா நயம் – 46

    சேக்கிழார் பா நயம் – 46

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    ————————————————–

    திருக்கயிலையில் இறைவன் காட்டிய அருட்கருணையால் கமலினிக்குத் திருவாரூரில் பதியிலார் குலத்தில் தோன்றி வளரும் நல்வாய்ப்புக் கிட்டியது. திருக்கயிலையில் தவறான நோக்கமின்றிச் செய்த ‘சிறுகுறையும் நல்லதையே செய்யும்’ என்பதைக் கமலினியார், நாடே போற்றி மதிக்கும் பரவையாராக வளர்ந்த பாங்கு புலப்படுத்தும்.

    சுந்தரரின் மனங்கவர்ந்த மங்கையாக, இறைவனையே தூதராகக் காணும் பேறு பெற்றவராக, திருவாரூரினுள் யாவரும் மதிக்கத்தக்க பெண்ணடியாராக விளங்கும் வாய்ப்பைப் பெற்ற அவர் வணங்கத் தக்கவரே யாவார். இனி அடுத்த பாடலில் பரவையார் பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து இறைவன் சேவடியையே கருதி வளர்ந்த சிறப்பைக் கூறுகிறது.

    தளர் நடைப் பருவம் கடந்து பரவையார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பெற்று வளர்கிறார். அவருடைய அகன்ற சிறு கண்கள் இளம் பெண்மான் குட்டியின் விழிகளைப் போல ஒளிவீசி விளங்குகின்றன. அவருடைய மார்பு சற்றே வளர்ந்து தாமரை மொட்டுப்போலத் திகழ்கின்றன. அவருடைய மொழி தேனுண்ணும் வண்டுகளைப் போல் ஒலிக்கிறது. அவருடைய மெல்லிய இடை , பவளக் கொடிபோல் விளங்குகிறது. அவரது நெற்றி இளம்பிறையின் கொழுந்து போல ஒளி வீசுகிறது. அவருடைய வளைந்த புருவங்கள் காமவேள், மலரம்புகளைஎய்து, மக்களைக் காமத்தில் வீழ்த்துவதற்கான பயிற்சியைக் கற்றுக்கொள்ளும் சிறிய வில்லோ? என்றெல்லாம் பறவையாரைக் காணும் சுற்றத்தாரும், பெரியோரும் போற்றுகின்றனர்.

    இந்தப் பாடலில் மானிளம் பிணை, இளமுகை, இளந்தேன்பதம், இளம் பவளக்கொடி, நிலவின் இளங்கொழுந்து, காமனின் இளையவில் என்ற உவமைகள்,அவரது இளமையையும் , கண், மார்பு,மொழி, இடை,நெற்றி, புருவம் ஆகியவற்றையும் உருவகித்துக் காட்டுகின்றன. அவருடைய அங்கங்களைக் குறிப்பிடாமல் , உவமைகளின் மூலம் அவற்றின் அழகையும் இளமையையும் குறிப்பிடுவது பாடலின் நயத்தைப் புலப் படுத்துகிறது. இனிப் பாடலைப் படித்தறிவோம்.

    “மானிளம் பிணையோ? தெய்வ வளரிள முகையோ? வாசத்
    தேனிளம் பதமோ? வேலைத் திரை இளம் பவள வல்லிக்
    கானிளம் கொடியோ? திங்கள் கதிரிளங் கொழுந்தோ? காமன்
    தானிளம் பருவம் கற்கும் தனி இளந் தனுவோ என்ன.”

    இப்பாடலில் இளம் என்ற சொல், இளமையான என்ற பொருளுடன் எட்டுமுறை அமைந்திருக்கும் அழகினைச் சொற்பொருட் பின்வரு நிலை அணி என்று கூறுவர்! ஆறு அங்கங்களின் இளமையை , இளம் என்ற சொல்லை எட்டுமுறை அமைத்து வருணிப்பது நுட்பமாக உணரத் தக்கது. இந்த ஆறு உறுப்புக்களும் மக்கள் எண்ணுவதை விட மிகவும் இளமையுடன் காட்சியளித்தன, என்று சேக்கிழார் பெருந்தகை நயம்படக் கூறுகிறார்.

    இளம்பெண்ணான பரவை நாச்சியாரின் வளர்ச்சியை அவர்தம் பண்பு நலன்கள் இனிப் புலப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை இப்பாடல் உருவாக்குகின்றது.

    “முதுக்குறைந் தனளே , முதுக்குறைந்தனளே ,
    மலையன் ஓள்வேற் கண்ணி
    முலையும் வாரா முதுக்குறைந்தனளே! ‘’

    என்ற பழம்பாடலை இது நினைவூட்டுகின்றது.

    .

    Share
  • சேக்கிழார் பா நயம் – 45

    சேக்கிழார் பா நயம் – 45

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    —————————————————

    முன்பொரு காலத்தில் கைலாய மலையில் கமலினி, அனிந்திதை ஆகிய இருவரும் பார்வதியன்னை பூசைக்கு மலர் கொய்து தொடுத்தளிக்கும் பணி புரிந்தனர். அவர்களைக் கண்டு தன்னிலை மறந்த சுந்தரரை இறைவன் ‘’மாதர் மேல் மனம் வைத்தனை, ஆதலால் தென்திசையில் பிறந்து, அம்மங்கையருடன் வாழ்ந்து, பின்னர் சிவலோகம் அடைவாய்’’ என்று அனுப்பினார். அவ்வகையில் அப்பெண்களும் தென்னாட்டில் அவதரித்தனர். அவர்களுள் கமலினி என்ற மங்கை, திருவாரூரில் தோன்றிய சிறப்பை இப்பாடல் கூறுகிறது!

    கமலினியார் திருக்கயிலாய மலையில் இறைவிக்கே அணுக்கத் தொண்டு புரியும் பெருமை பெற்றவர். அவர் இம்மாநிலத்தில் பிறந்த நிகழ்ச்சியை அவதரித்ததாகக் கூறும் சிறப்பை உற்று நோக்க வேண்டும். இறைவனைத் தவிர வேறெவரையும் தமக்குப் பதியாகக் கருதாத உயர்குலமாகிய ”பதியிலார் ‘’ குலத்தில் அவர் தோன்றினார்!

    அப்பதியிலார்குலம் என்பது சிவனடியார்களின் வேண்டுகோளால் , பெருந்தவத்தால் கிட்டுவதாகும். இதனை

    “உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
    உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
    அன்னவரே யெம் கணவ ராவார் அவர் உகந்து
    சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்“
    …………………………………………………………………………….
    “எம் கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க
    எம்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க“

    என வரும் திருவெம்பாவைத் திருவாசகங்களிற் காண்க.
    அவர்கள் குலத்தை உருத்திர கணிகையர் குலம் என்பர்.அக்குலத்தவர் அரன் சார்பும், அடியார் சார்பும் உடையவர்கள் ஆதலால் அவர்கள் உயர்ந்த மணிகளுக்கு இணையானவர்! அக்குலத்தார் செய்த நீண்ட தவத்தால் கமலினியார் பிறந்தார். அவருக்கு சாதகர்மம் நாமகரணம் என்ற சாதகம், பெயர் ஆகியன சூட்டும் சடங்குகளை முறையாகச் செய்தார்கள். ஆதலால் கமலினியாருக்குப் பரவையார் என்ற திருப்பெயரைச் சூட்டினர். ‘’முருக வாங்கி கடைய முன் நிற்கும் ‘’ என்ற திருமுறை வாசகத்தின்படி, அவர் பிறந்த நிகழ்வை,

    ‘’கதிர்மணி பிறந்ததென்ன உருத்திர கணிகை மாராம்
    பதியிலார் குலத்தில் தோன்றி ‘’

    என்று சேக்கிழார் பாடுகிறார். உருத்திர கணிகையர் மரபு வேறு, சேரிப்பரத்தையர் மரபு வேறு! இவர்கள் செய்த திருக்கோயிற் பணிகளைப் பின்னாளில் பரத்தையர் கைக்கொண்டனர் என்பது வரலாறு. இதன் விரிவை , காமிகாகமம், ஆசாரிய லட்சணப்படலத்தின் சுலோகங்களில் காணலாம்.

    இச்சை ஞானம் கிரியை என்ற சிவசத்திகள் மூவரின் நூபுரச் சத்தத்திலிருந்து முறையே உருத்திரகணிகை, உருத்திரகன்னிகை, உருத்திரதாசி என்ற மூவகையார் உண்டானார்கள் என்று காமிகாகமம் பேசும். இவர்களது இலக்கணங்களையும் ஒழுக்கங்களையும், இவர்கள் ஆலயங்களில் முறையே செய்யவேண்டிய திருப்பணிகளையும், ஆங்கு விரிவாய்க் காணலாம். உருத்திரகணிகை, மகாமண்டபம் முதல் கருப்பாவரணப்பிராகாரம் வரை திருவலகு திருமெழுக்கு இட்டுப் பஞ்சசூர்ணங்களினால் அலங்கரித்துச், சுத்தமாயிருந்து, பூசை நேரங்களில் தீபங்களை ஏந்தியும், கானம் செய்தும், நிர்த்தனம் செய்தும், உபசரிக்கத்தக்கவள். சுத்தம், மிசிரம், கேவலம் என்ற மூவகை நிர்த்தனங்களிலே சுத்தநிர்த்தனமே உருத்திரகணிகைக்கு விதிக்கப்பெற்றது. ஆசாரியனால் பொட்டு அணியப் பெற்று அவனை நாயகனாகக்கொள்வதும் இவளுக்கு உரியதாம். இன்னும் இவ்வாறே தூர்க்கை இலக்குமி சரச்சுவதி என்ற இவர்களுடைய பாதச் சிலம்பொலியினின்றும் முறையே இராசகணிகை, கிராமகன்னிகை, தாசி என்பவர்கள் உண்டானார்கள் எனவும் இவர்கள் இலக்கணம், கடமை, வாழ்க்கைத் திறம், மரபுவளர்ச்சி முதலியவை இன்ன எனவும் ஆங்கே விரிவாய்க் கூறப்பெற்றுள்ளன.

    இவைபற்றிப் பற்பலவாறு ஆராய்ச்சிகள் எழுந்து பெருமயக்கிற் கிடந்தந்தன. இவ்விருசாராரையு மின்றிப் பெண்கள் தம்மை இறைவன் பணிக்கே ஒப்புவித்துத்துறவுபூண்டுஒழுகியவர்களுமுண்டு. அன்னார் எக்குலத்தாராயினும் ஆகலாம். அவர் மேற்கூறிய இருமரபினருடன் மயங்கியறிதற்பாலரல்லர். முதலிற் பெண்டிர் துறவிகளாயிருந்து, பின்னர் மரபு வளர்ச்சிக்குரிய உருத்திரகணிகையராகி ,அதன்பின் அவர்களே நாளடைவில் பரத்தையர் குலத்தவராயினர் என்று கூறுவாருமுண்டு. இவையெல்லாம் ஒரு கருத்தை வைத்துக் கொண்டு அதற்கேற்பச் செய்திகளைப் பொருத்தி முடிபு செய்யும் தவறான ஆராய்ச்சிமுறையாம். பரத்தையர் சேரியும், பரத்தையிற் பிரிவும் தொல்காப்பியம் முதலிய மிக்க பழந்தமிழ் நூல்களிற் பல்லாயிர ஆண்டுகளின் முன்னரே பேசப்பெற்றன.

    “ஏமப்பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந்,
    தாமேசெல்லுந் தாயரு முளரே“,
    “பரத்தையி னகற்சியிற் பரிந்தோட் குறுகி,
    யிரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோ,
    டுரைத்திற நாட்டங் கிழவோன் மேன“

    என்பன முதலிய தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரங்களையும், அவற்றின்கீழ் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையையுங் காண்க. இவற்றிற் கிலக்கியங்களாகிய திருச்சிற்றம்பலக் கோவையார் முதலியவற்றிற் காணும் பரத்தையிற்பிரிவு முதலிய துறைகளையுங் காண்க.

    ‘உண்மை இவ்வாறாகவும், பண்டைநாளில் இவர்களுக்கு மரபு வளர்ச்சி கிடையாது என்றும், உலக வாழ்விற்குத் தகுதியற்ற பெண்கள் இறைவனையே பதியாகக் கொண்டொழுகினர் என்றும், பின் மற்றும் சிலர் அவர்களோடு கலத்தலாகி உலக இன்பம் துய்த்துக்கொண்டு இறைபணி செய்ய எண்ணினர் என்றும், பின்னாளிற் கோயிற்றலைவர்களின் அடக்குமுறையால் கொடுமைக்கு ஆளாகி நாளடைவில் வேசையராயினர் என்றும் இவ்வாறு எழுந்த ஆராய்ச்சிகள் உண்மை நிலைக்கு மாறானவை என்று காணலாம்.
    இப்பெருமை மிக்க குலத்தில் தோன்றிய பரவையார் உருத்திர கணிகையர் ஆதலால், உருத்திரனுக்கு உரிய திருவாதிரை நன்னாளில் ,சாதம் எழுதுதல், திருப்பெயர் சூட்டுதல் ஆகியவற்றை மேன்மை மிக்க சான்றோர் இயற்றினர். இதனைச் சேக்கிழார்

    ‘’விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற
    மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி.
    ,
    என்று பாடியுள்ளார். இனி முழுப்பாடலையும் பயில்வோம் .

    கதிர்மணி பிறந்த தென்ன உருத்திர கணிகை மாராம்
    பதியிலார் குலத்துள் தோன்றி, பரவையார் என்னும் நாமம்
    விதியுளி விளக்கத் தாலே மேதகு சான்றோர் ஆன்ற
    மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி ‘

    இப்பாட்டில் மதியணி புனிதன் நன்னாள் என்று சிவபெருமானுக்கு உரிய நன்னாளாகிய திருவாதிரை நாளைக் குறித்துள்ளார்.

    “மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
    முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும்
    ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால்
    ஊர்திரைநீர் வேலி உலகு !’’

    என்று இதனை முத்தொள்ளாயிரப் பாடல் கூறுகிறது. சிவபெருமானுக்குத் தோற்றமும் மறைவும் இல்லை. அவரே நாளையும், நட்சத்திரத்தையும் நிலவையும் கதிரவனையும் படைத்தவர்! ஆதலால் சிவபெருமானைத் திருவாதிரை நாளில் தோன்றியவர் என்று ஏதோ ஒருகாரணம் கருதி உலகியல் வழக்கில் உரைப்பர். சிவபிரான் நிலவைச் சடையில் சூடிக்கொண்ட நாள் திருவாதிரை நாளாகஇருக்கலாம்! இதனையே பரவை நாச்சியார் தோன்றிய நாளாகக் கருதியது அவர்தம் காலத்தை வென்ற சிறப்பைக் குறிக்கிறது!!

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.2

    -மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.2
    (ஊசற்பருவம்) 

        

    ‘ஊசல்’ என்பது தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றான ஒரு சிற்றிலக்கியமாக விளங்குவது. எடுத்துக்காட்டுகளாக, பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடிவைத்துள்ள சீரங்க நாயகர் ஊசலையும், அன்னாரின் பெயரரான கோனேரியப்பன் ஐயங்கார் பாடியுள்ள சீரங்க நாயகியார் ஊசலையும் காணலாம். பாடல்கள் ஆசிரிய விருத்தம் அல்லது கலித்தாழிசையால் அமைந்து ‘ஆடிரூசல்’, ‘ஆடாமோ ஊசல்’, ‘ஆடுக ஊசல்’ என ஒன்றால் முடிவுறும்.

    இறைவனை அல்லது இறைவியை அலங்கரித்த ஊசலில் அமர்த்தி, ஆட்டி, பாடித் துதிப்பது நமது ஊசலாடும் உலக வாழ்க்கையிலிருந்து விடுபடவே எனும் கருத்திலமைந்த அழகான பாடல்களை இவ்விலக்கியங்களில் காணலாம்.

    ‘உலகமெனும் பந்தலில் பாசம் என்பதே விட்டத்தைத் தாங்கும் நான்கு கால்களாகவும், அறிவே ஊசற் சங்கிலியை மாட்டுவதற்கான உத்தரமாகவும், இந்திரியங்களே சங்கிலிகளாகவும், எடுத்தபிறவி ஊசற்பலகை ஆகவும், இருவினைகளே ஊசலை ஆட்டுபவராகவும், நரகம், சுவர்க்கம், பூமி ஆகிய இடங்களில் இறங்கி, ஏறி, நிலைபெறுதல் எனச்செய்து தடுமாறி அலைந்து துன்பம் அனுபவிக்கும் இவ்வாழ்வெனும் ஊசலாட்டம் நீங்கும்படி தொண்டர்களுக்கு, அவர்கள் உய்யுமாறு அழகிய மணவாளதாசரும் அவர் பெயரரான கோனேரியப்பன் ஐயங்காரும் சேர்ந்து இந்த திருவரங்கத்து ஊசல் எனும் பிரபந்தத்தினைத் தொகுத்திட்டார்கள்,’ என ஒரு தனியன் உரைக்கின்றது.

    அண்டப் பந்தரில் பற்றுக் கால்களாக
    அறிவு விட்டம் கரணம் சங்கிலிகளாகக்
    கொண்ட பிறப்பே பலகை வினையசைப்போர்
    ……………………………………..
    தொண்டர்க்கா மணவாளர் பேரர்கூடித்
    தொகுத்திட்டார் திருவரங்கத்து ஊசலானே 1.

    திருவரங்கத்து நாயகியார் ஊசலில் இருந்து ஒரு இனிய பாடல், தாயாரின் திருக்கோலம் கண்ட திருவரங்க மணவாளரின் நிலைமையை உரைக்கின்றது.

    ‘கருமுகில் வண்ணனான திருவரங்க மணவாளனுக்கு, கண்கள் களிக்குமாறும், அறிவு சோர்ந்து போகவும், புன்னகை விரியவும், புயங்கள் பூரிக்கவும், முகம் மலர்ந்து காதலினால் உடல் குழைந்து மோகம் மிகவும், சீரங்க நாயகியே, நீ ஊசலாடுக!’ எனப்பாடல் அமைந்துள்ளது நயக்கத்தக்கதாம்.

    காரனைய திருவரங்க மணவாளர்க்குக்
    கண்களிப்ப மனமுருக அறிவுசோர
    மூரலெழப்புள கமுறப்புயம் பூரிப்ப
    முகமலர மெய்குழைய மோகமேற
    ……………………………………………..…
    சீரங்கநாயகி யாராடி ரூசல் 2.

    மேலும் ஊசலாடும்போது என்னவெல்லாம் அணிகள் அசைந்தாடினவென்றும், குடக்கூத்தாடி, கோளராவின் படத்தின்மீதாடி விளையாடும் அப்பரமனைப் பற்றியும், அவனாட்டத்தைப் பற்றியும் அழகுறச் சித்தரிக்கும் பாடல்களும் இதன்கண் உள.

    இத்தகைய சுவையும் இனிமையும் இணைந்தவொரு சிற்றிலக்கியம் பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது அருமையானவொரு செய்தியாகும். தாலாட்டு, அம்மானை ஆகிய பிரபந்த வகைகளும் பிள்ளைத்தமிழின் ஒரு பருவமாக அமைந்துள்ளமை பற்றி அவ்வப் பிள்ளைப்பருவம் பற்றிய செய்திகளில் கண்டோம்.

    ஆக, ஊசலாடுவதென்பது, மகளிரின் பொழுதுபோக்காகவும், வளரும் பெண்மக்களின் விளையாட்டாகவும், இறைவன் இறைவியரைப் போற்றுமொரு வழிபாட்டுக் கூறாகவும் அமைந்து தமிழ்மக்களின் வாழ்வில் இன்றியமையாததொரு இடத்தினைப் பெற்றுள்ளதனை இதன்மூலம் அறியலாம். 

    பிள்ளைத்தமிழ் பாடல்கள் தெரிவிக்கும் செய்திகளைக் காண்போம்.

    ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று உலகதிலுள்ள பலவிதமான மக்களும் வாழுமாறு வடிவம்மையைப் பொன்னூசலாட வேண்டுவது மிகுந்த பொருட்சுவையுடனும் உட்பொதிந்த கருத்துக்களுடனும் விளங்குகின்றது. 

    ‘சொற்களால் கூறப்படும் அறநெறிகள் நிலைத்து வாழவும், அந்தணர்கள் தமது ஆறு தொழில்களை (ஓதல், ஓடுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகியன) வழுவாமல் செய்யுமாறும், தோல்வியடையாத தொண்டர்களும் வணிகர்களும் வாழுமாறும், உழவர்கள் தமது தொழிலை நன்குசெய்து வாழவும், 

    ‘ஏனைய பற்பல குலத்தோரும் வாழ, அறுசமயங்கள் செழித்தோங்க,  மற்ற சமயத்தோர்களும் பக்தி மார்க்கத்தே பதிந்து இனிது வாழவும், 

    ‘உன்னைப்பற்றிய உயர்ந்த எண்ணங்களில் நில்லாது மாறுபடும் அறிவிலிகள் கூட்டமும், கணங்களும் பகைமையும் பொறாமையும் நீங்கி ஒருவரோடொருவர் அன்புகொண்டு வாழவும் (பல மாறுபட்ட மதக்கருத்துக்களை உடைய மக்கள், தமக்குள் சச்சரவின்றி வாழ அன்னையை வேண்டுகிறார் புலவனார்), உனது திருவிழா நாட்களில் பணிவிடைகள் பொலிவாக என்றும் (வாழ) நடக்குமாறும், 

    ‘வடிவுடையம்மையே, பூலோக கயிலாயநாதரான சிவபெருமானுடன் ஒன்றாகக் கலந்த பெண்மணியே, பொன்னூசலாடியருளுக!’

    சொற்பயிலு மறநெறிகள் வாழவந் தணராறு
    தொழிலினொடு வாழவெற்றித்
    தோலாத வரையர்வணி கர்கள்வாழ வுழவுமிகு
    சூத்திரர்கள் வாழவேனை
    ………………………………………….
    காதலொடு வாழநின் றிருவிழாப் பணிவிடை
    கவின்கொண்டு நாளும் வாழ..
    ………………………பூலோக கயிலாயர் பாலேக
    மானபெண் பொன்னூச லாடியருளே3.

    அம்மையின் ஊசலாடலில் அனைத்துலகின் வாழ்வும் இனிதாக அசைந்தாடுகின்றது எனும் அரிய கற்பனை இது!

    அளகாபுரி உமையாம்பிகை பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று, இன்னொருவிதமான கற்பனையை விரிக்கின்றது. பிறப்பு, இறப்பு எனும் ஊசலில் ஆடியாடி அலைவுற்று, நடுக்கமுற்றுத் தவிக்கும் மானிடர் அந்த நடுக்கம் தவிர்த்து களித்து ஆடித்திளைக்கும்படி உனது கடைக்கணில் பிறக்கும் அருள்வெள்ளப்பெருக்கெனும் அலைகளில் உணவு வகைகளைக் குறையாது அளிக்கும் உமையாம்பிகையே, அரமாதர் வரிசையாக நின்று கரங்களில் வளையொலிக்கக் கவரிவீசவும், தேன்கொண்ட மலர்களால் நாத்தழும்பேற நின்று வாழ்த்தவும், நீ பொன்னூசலாடியருளுக,’ என வேண்டிடும் பாடல்.

    …………….செந்நாத்தழும்ப வாழ்த்திச்
    சிந்திக்கு மன்பர்கள் பிறப்பிறப்பெனு மூசல்
    சேர்ந்தாடி யலைவுற்றதா
    லானகம்பந் தவிர்ந்த் தாடித் திளைக்க….
    ……………………………..
    போனகங்குறையா தளிக்குமளகைச் செல்வி
    பொன்னூசலாடி யருளே 4.

    அளகை என்பது அளகாபுரி ஆகிய தஞ்சாவூர் ஆகும். தஞ்சை நெல்வளம் கொழிக்கும் பூமியாதலின் ‘போனகம் குறையாது அளிக்கும் அளகைச்செல்வி’ என அன்னை போற்றப்படுகிறாள்.

    திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடலில் வேறொரு நயமான கருத்தினைக் காணலாம். அம்மையப்பனின் மாதொருகூறாய வடிவினைப் போற்றுகிறார் புலவர். ஊசலில் ஆடுகின்ற அன்னையின் தோற்றம், குளிர்ந்த இளம்பிறையினைச் சூடி, மும்மலத்தை அழிக்கும் சூலத்தைக் கையிலேந்தி, படங்கொண்ட நச்சரவம் பூண்டு, செல்வங்களனைத்தையும் தரும் திருநீறு அணிந்து, பண்களால் இசைக்கப்பெறும் பழம்பாடல்கள் எனப்படும் வேதங்கள் புகழ்கின்ற கழலணிந்த திருவடிகள், சிவந்த பவளமேனி,  ஆகியவற்றை ஒருபுறம் கொண்டு சிவபெருமானுடைய வடிவிலும், மலர்களணிந்த நறுங்குழல், உற்பலம் எனப்படும் நீலோற்பலமலரை ஏந்திய கை, செம்பொன்னாலான அணிகலன்கள், மணங்கமழும் சாந்து, இனிய ஒலியெழுப்பும் காற்சிலம்பு, பச்சைவண்ணத் திருமேனி ஆகியவை மற்றொருபுறம் என (அம்மையை அர்த்தநாரீசுவர வடிவாகக் கண்டு) அடியார்கள் தொழுதிடும்வண்ணம் அரன் எனப்படும் சிவபிரானிடத்தே தெய்வத்தன்மை வாய்ந்து மலர்ந்து கொடிபோன்று விளங்கும் அன்னையே! உனது இத்தகைய வடிவம் எத்துணை அருமையான காட்சி தாயே!  நீ பொன்னூசலாடுக!’ என வேண்டுகிறார்.

    ‘தண்ணிய விளம்பிறை யணிந்தசடை யொருபுறந்
    தகுமலர்க் குழலொருபுறஞ்
    சாற்றறிய மும்மலந் தெறுசூல மொருபுறஞ்
    சந்தவுற் பலமொருபுறம்
    ……………………………………………………..
    பவளமொருபுறம் பச்சைநிற மொருபுறம்
    பார்த்தன்பர் தொழ5……..,’ என்பன பாடல் வரிகள். 

    அம்மையையும் அத்தனையும் ஒன்றாகக் கண்டு புலவர்கள் மகிழ்ந்தனரெனில், சிவபிரானை மட்டும் வழுத்திப் பிள்ளைத்தமிழ் பாடவியலாத குறையை (பிறப்பிலிப் பெருமானான சிவபிரான்மீது பிள்ளைத்தமிழ் பாடப்படாதென்பது இலக்கண மரபு) அவனுடைய பல செயல்களையும் அன்னைமீதேற்றிக் கூறியோ, அல்லது அவனுடைய நடனத்தை விவரித்து அதற்கொப்பக் குழந்தையான அம்மையோ முருகனோ சப்பாணி கொட்டுவதனையும் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் சித்தரிக்கின்றன.

    கடையம் கலியாணியம்மை பிள்ளைத்தமிழில் இத்தகையதொரு நயத்தைக் காணலாம். 

    கரிய மிடற்றில் ஆலகால விடம் துளும்புமாறும், திரிசூலமும் கபாலமும் கரத்தில் அசையவும், கழுத்தில் கிடக்கும் பாம்பானது ஆட்டத்தின் வேகத்தில் நெட்டுயிர்க்குமாறும், சடையில் தங்கியுள்ள கங்கைநதியானது பொங்கிவழிந்திடவும், காலில் சிறிய கிண்கிணிக் கல் எனக்கிடக்கும் அருமறை வேதங்கள் ஒலியெழுப்பவும், பிரபஞ்சத்துள்ள அத்துணை கடவுளர்களும் முடிவுற்றாலும் தான் மட்டும் ஒரு முடிவே இல்லாது ஆனந்த நடமிடுபவன் சிவபிரான். அவனுடைய சிலம்பணிந்த  தாமரைத் திருவடிகளில் அடியார்கள் பணிந்துதொழ, அவர்களுக்கருளும் அச்சிவபிரான் மணமாலை சூட்டும் கற்பகமே! பூங்காமவல்லியே! கல்யாணசுந்தரவல்லியே! பொன்னூசலாடியருளுக!’ எனும் பாடல் சிவபிரானின் நடனத் தோற்றத்தை நயம்பட எடுத்துரைக்கின்றதனைக் காணலாம்.

    ‘கருமிடற்று ஆலந் துளும்பதிரி சூலம்
    கபாலம் கரத்தில் அசைய
    காகோதரபட்ட நெட்டுயிர்ப்பச் சடைக்
    கங்கைநதி பொங்கிவழிய
    ………………………………………………
    அளவற்ற கடவுளர் தம்முடிவினும் ஓர்முடிவின்றி
    ஆனந்த நடம் இயற்றும்6..’ என்பன பாடல் வரிகள்.

    குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்ப்பாடலொன்று உமையன்னையை மக்களின் இருவினைகளைக் களைந்து இன்பமளிப்பவளாக விளக்குகிறது:

    ‘சுத்தம் அசுத்தம் எனப்படும் இரு கொடிய மாயைகளைத் தூண்களாகக்கொண்டு, இருள்போன்ற ஆணவ அகந்தையை விட்டமென அமைத்திட்டு, நாம் செய்த கருமங்களே ஊசற்பலகையைத் தாங்கும் வடங்களாகவும், மாயையே அப்பலகையாகவும், வான்வெளியே ஊசலாடும் இடமாகவும் கொண்டு ஆருயிர்களை பிறப்பு, இறப்பு, நோய் என்னும் மணிகள் இழைத்த அவ்வூசலில் வைத்தாட்டி, தலைவாயிலில் முடங்கிக் கிடக்காது எடுத்து, அணைத்து, பேரறிவினை அளித்து, பின் பரமுத்தியளித்து, ஆனந்தமெனும் அமிழ்தத்தினை அருந்துவித்து உண்மையான தாய்போன்று வளர்க்கும் அன்னைநீ பொன்னூசலாடுக!’ என வேண்டுவதாக அமைந்த பாடலிதுவே.

    சுத்தமு மசுத்தமு மெனப்படுங் கொடுமாயை
    தூணாக விருளாணவந்
    தொடுத்தநெடு விட்டமாக் கருமப் பெரும்பகுதி
    தூக்கிய வடங்களாக
    ………………………………………….
    …………………….பரமுத்தி வீடுய்த்து
    மூவாத வானந்தமாம்
    புத்தமிழ் தருத்திமெய்த் தாயாய் வளர்ப்பவள்
    பொன்னூச லாடியருளே 7…..

    சைவசமயக் கருத்துக்கள், தத்துவ, வேதாந்த விளக்கங்கள் அனைத்தும் இப்பாடல்களில் இழைந்தோடுவதனைக் காண்கிறோம். 

    பிள்ளைத்தமிழ் நூல்கள் விவரிக்கும் பருவங்கள் பத்துப்பத்துப் பாடல்களாக அமைக்கப்படுகின்றன. இவை ஒரு அருமையான இலக்கிய அமைப்பின் பாற்பட்டவையாகும். எடுத்துக்காட்டாக ஊசற்பருவத்தினையே எடுத்துக் கொண்டால், இரண்டு அல்லது மூன்று பாடல்கள் ஊசலின் அமைப்பு, அழகு பற்றியும், அதிலமர்ந்து ஆடும் அன்னையின் சிறப்பு, வடிவு பற்றியும் இருக்கும். அடுத்த சில பாடல்கள் அம்மையின் செயல்கள் பற்றிய தொன்மங்களைக் கூறி மகிழும். பின்வரும் மூன்று முதல் நான்கு பாடல்கள் சந்தநயம் பொருந்தி இருக்கும்; அல்லது குழந்தையாக உருவகிக்கப்படும் அன்னையின் தெய்வத்தன்மையை, அவளுடைய காக்கும் திறத்தை, அருளும் தகைமையை அழகுற விவரிக்கும். அவளைப் போற்றி மகிழும்.

    இவை பேரழகு வாய்ந்து கருத்தைக் கவரும் இலக்கியச்சித்திரம் என ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்! இதுபோன்ற பாடல்களை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் பரவலாகக் கண்டு இரசிக்கலாம். குமரகுருபரரின் கவிதைப் புலமையைக் கண்டு மகிழலாம்.

    பல பிள்ளைத்தமிழ் நூல்கள்; பல அழகிய பாடல்கள்; பல நயங்கள்; இன்னும் ஒன்றினைக் கண்டுபின் இக்கட்டுரையை நிறைவு செய்யலாம்.

    சீர்காழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழின் ஊசற்பருவத்து ஈற்றயல் பாடலில் புலவர் அன்னையின் அனைத்து அடியார்களையும் போற்றி அமைத்துள்ள பாடல் மிகுந்த நயமும் சுவையும் வாய்ந்ததாகும்.

    ‘கரிய இருள் படர்ந்தது எம் பிறவி; அது பிறவிக் கடலைக் கடந்து கரையேற யான் இறுகப் பிடித்த புணை உன் திருவடிகள்; இனிய ஒலியெழுப்பும் கிண்கிணி, சிலம்பு ஆகியவற்றை அணிந்துள்ள அத்திருவடிகளைப் போற்றி, சம்பந்த மாமுனிவன், நீர் நிறைந்த  அலைகடலில் கல்லையே தோணியாகக் கொண்ட நாவுக்கரசர், திருநாவலூரன் ஆகிய சுந்தரர், ஐயன்மீது கொண்ட அன்பினால் இன்பம் எய்திய மாணிக்கவாசகர் முதலாக அருள்மொழி கூறிய பல அறிஞர்கள் ஆகியோர் உரைத்த செம்மைவாய்ந்த தமிழ் மறைகள், ராகமிட்டுப் பாடப்படும் சிவபத்தர்களின் இசை, தெய்வமறை எனப்படும் லலிதா ஆயிரநாமம், அரியாகிய சிம்மத்தின்மீது ஏறிப் பகைவர்களை அழித்த தேவியின் வரலாறான தேவி மாகாத்மியம் முதலானவையும், ‘பொம்பொம்’ என முழங்கும் மங்கலச் சங்கின் ஒலி எங்கும் முழங்கிடவும் நீ பொன்னூசல் ஆடுக!’ என அன்னையை வேண்டுவதாக அமைந்து அன்னையின் அடியார்களைப் போற்றிம்வண்ணம் அமைந்துள்ளது.

    எம்பம் பிருட்பிறவி யலையாழி யேறயான்
    இறுகப் பிடித்த புணையாம்
    இன்குரற் கிண்கிணி சிலம்பலம் பும்பதத்
    திணையில் சம்பந்த முனிவன்
    …………………………………………………
    செம்பம்பு தென்றமிழ்த் திருமுறைகள் பண்ணோடு
    சிவபத்த ரோது மிசையும்
    தெய்வமறை லலிதையா ய்ரநாமம் அரியேறு
    தேவிமான் மியமுதலவும்
    ………………………………………………….
    பூம்புகலி யோம்பிவளர் திருநிலைச்செல்வியே
    பொன்னூச லாடியருளே 9!

    இது போன்ற இன்னும் பல நயமான பாடல்களைப் பல பிள்ளைத்தமிழ் நூல்களில் காணலாம். படித்தும் மகிழலாம்.

    ******************

    பார்வை நூல்கள்:

    1. திருவரங்கத்து ஊசல்- அழகிய மணவாளதாசர். 
    2. திருவரங்கத்து நாயகியார் ஊசல்- கோனேரியப்பன் ஐயங்கார்.
    3. ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்- வித்துவான் கனகசபைத் தம்பிரான்.
    4. அளகாபுரி உமையாம்பிகை பிள்ளைத்தமிழ்- சி. தியாகராச செட்டியார்
    5. உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- சோணாசல பாரதியார்.
    6. கடையம் கலியாணியம்மை பிள்ளைத்தமிழ்- அழகிய திருச்சிற்றம்பல தேசிகர்.
    7. குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்- சிவஞான சுவாமிகள்
    8. சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- கு. நடேச கவுண்டர்.

    _

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

    -மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

      (ஊசற்பருவம்) 

    பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது ஊசல் பருவம். வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த விளையாட்டுகள், ஓடியாடும் சிறுவர் சிறுமியர்களுக்கு மிகவும் விருப்பமானவை. ஊசலில் உட்கார்ந்து கொண்டு, தோழியர் உந்தி விட, காலால் தரையை எம்பி உதைத்து , உயரே உயரே எழுந்து வீசியாடுவது ஊசற் பருவம். இப்பருவம் ஐந்தாண்டிலிருந்து ஒன்பது ஆண்டுகள் வரை நிகழ்வதாகக் கூறப்படும். ஊசலாடி மகிழ்வது பெண்பிள்ளைகளுக்கே உரித்தான ஒரு விளையாட்டு அனுபவம். வளரும் பெண்மக்களுக்கு இது ஆரோக்கியமான உடற்பயிற்சியுமாகும்.

    மயில்கள் தோகைவிரித்து நடனமாடும், குயில்கள் கீதமிசைக்கும் அழகானதொரு மலர்ச்சோலையில் மயில்போன்ற பெண்கள் சிலரும் தமது குயில் குரலில் பாடியவாறு ஊஞ்சல்கட்டி இன்பமாக ஆடுகின்றார்கள். புங்கமரம் ஒன்றின் தாழ்வான கிளையில் வலுவான கொடிகளைக் கொண்டு கட்டிய அழகான ஊ(ஞ்)சல். அதில் அன்றலர்ந்த தாமரை போல அமர்ந்து கால்களால் உதைத்து எழும்பி வீசியாடுகிறாள் ஒரு சிறுபெண். கொடி போன்ற உடலும், நீண்ட கூந்தலும் ஆடைகளும் அணிகலன்களும் உடன்வீசி இயைந்து ஆடுகின்றன. 

    இந்த  இளம்பெண்கள் தமது அரசனைப்பற்றி பெருமையாகப் பாடுகிறார்கள். இவர்கள் பாடுவது ஊசல்வரி; இது சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தீட்டும் காட்சி: 

    ஐந்துபேர் பஞ்ச பாண்டவர்கள்; நூற்றுவரான கௌரவர்கள்; இவர்கள் தமக்குள் பகைகொண்டு பெரும்போர்செய்தபோது, அந்தப்போரில் இருவருடைய படைகளுக்கும் அள்ள அள்ளக்குறையாது உண்பதற்குச் சோற்றினைக் கொடுத்தவன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனும் சேரமன்னனாவான். அவனுக்கு ‘பொறையன்’, ‘மலையன்’ எனும் பெயர்களும் உண்டு. “அவனுடைய பெயர்களைக் கூறி, அவன் புகழினைப்பாடி நாம் ஊசலாடலாமா?” என்று ஒருத்தி தோழிகளைக் கேட்கிறாள். “நமது கருமுகில் போன்ற குழல் காற்றில் அலைந்தாட, அந்தக் கடம்ப நாட்டினை வெற்றிகொண்ட அவனுடைய புகழைப்பாடி ஊசல் ஆடலாமே,” என அடுத்தவள் மறுமொழி கூறுகிறாள். 

    ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த

    போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த

    சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக்

    கார்செய் குழலாட ஆடாமோ வூசல்

    கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ வூசல்1

    இவ்வாறு தங்கள் அரசனான சேரனையும் அவன் பரம்பரையையும் போற்றிப்பாடி மகிழ்ச்சியாகப் பெண்கள் ஊசலாடுகின்றனர். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவிலெடுத்த திருவிழாவில் இவர்கள் இவ்வாறு பாடி ஆடுகிறார்கள்! 

    மனம்மகிழ்ந்து உவகை ஊற்றெடுக்கும்போது, எண்ணங்கள் சிறகடித்து வானில் பறக்கும்போது, ஊசலில் அமர்ந்தாடினால் அது உயரே ஆகாயத்தின் அருகே கொண்டுபோவது போல ஒரு ஆனந்தமான அனுபவம் உண்டாகும். விண்ணை எட்டிவிட்டது போன்றதொரு மயக்கத் தோற்றம்.

    ஊசலைப்போலாடும் தொட்டிலிலோ தூளியிலோ உறங்கவைத்தால் குழந்தை ஆனந்தமாக, அமைதியாக உறங்குகிறது. சிறார்களுக்கு ஊசலாடி விளையாடுவது இன்பகரமான ஒரு அனுபவம். இளம்பெண்களுக்கும் ஊசலாடும்போழ்தில் தங்கள் கனவுகளும், காதல், மணவாழ்வு பற்றிய இனிமையான எண்ணங்களும் உருப்பெற்று, வலுப்பெற்று, நனவாகும் 

    சங்ககால மகளிர் ஆலமரம், வேங்கைமரம், புங்கமரக்கிளைகளில் ஊசல்கட்டி ஆடினார்கள். தினைப்புனம் காக்கும் பெண்கள் தாம் இருக்கும் பரண்மீதே ஊசல்கட்டி விளையாடினார்கள். அவர்கள் காதலர்களும் ஊசலை ஆட்டிவிடுவதற்கென அருகில்வந்து நின்றார்கள். 

    பெண்கள் மரங்கள் இல்லாதபோது இரு வேல்களை நாட்டி, அவற்றிடையே ஒரு கயிற்றைக்கட்டியும் ஊசலாடினார்கள்!

    இவ்வாறு காதல் விளையாட்டுகளிலும், மற்ற திருவிழாக் கொண்டாட்டங்களிலும் பெரும்பங்கு வகித்த ஊஞ்சல் விளையாட்டுகளில் பெண்கள் இறைவன் புகழைப் பாடி மகிழவும் வகைசெய்தவர் மாணிக்கவாசகர். 

    “நாராயணனும் கண்டறியாத இறைவனின் திருப்பாதங்களை எமக்கு அந்த ஈசன் மிக எளிதாகக் காட்டியருளினான். வேல்போன்ற கண்களையுடைய பெண்களே! அந்த உத்தரகோசமங்கை இறைவனின் புகழைப்பாடி பொன்னூசலில் அமர்ந்தாடுவீர்களாக,” என அன்போடும் ஆவலோடும் வேண்டுகிறார். 

    அவருடைய விருப்பப்படியே அவர்களும், “தோழிகளே! ஈசனின் புகழினைப் பாடுகிறோமல்லவா? அப்போது நாம் ஆடும் ஊசலும் அழகு மிகுந்ததாகவும், சிறப்புடையதாகவும் இருக்க வேண்டும். ஆகவே, பவளத்தூண்களைக் கால்களாக நடுவோம்; பருத்த முத்துக்களை இணைத்துக் கோர்த்துக் கயிறாக்கிப் பயன்படுத்துவோம்,” எனத் தோழிகளிடம் கூறுகிறார்கள். ஒருபெண் பொற்பலகை ஒன்றினை அதில் இணைக்க, ஒவ்வொருவராக அதில் ஏறியமர்ந்து பலவிதமாக ஈசன் புகழைப்பாடியாடி மெய்சிலிர்க்கிறார்கள். 

    இந்தத் தத்துவம் மிக எளிதாகப் புரிவது. கோவிலில் தெய்வத்தை வணங்கச் செல்லும்போதும், அரசனைக் காணச்செல்லும்போதும் நல்ல அணிமணிகள், பட்டாடைகளை அணிந்துகொண்டு செல்வதுண்டல்லவா? அதேபோல, இறைவன் பெருமைகளைப் பாடுவோரும் அழகாக உடையணிந்து, அழகான ஊசலில் அமர்ந்து அவனைப் பாடவேண்டும் எனும் ஆவல் இதிலும் விளங்குகிறது. பாடகர்கள் கச்சேரிகளில் அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடைகளில் கண்கவரும் ஆடைகள் அணிந்து அமர்ந்து பாடுகிறார்களல்லவா? அலங்கரிக்கப்பட்ட திருப்பொன்னூசலில் அமர்ந்து இறைவன் புகழைப் பாடுவதும் அப்படிப்பட்டதே!

    சீரார் பவளக்கால் முத்தம் கயிறாக

    ஏராரும் பொன்பலகை ஏறி இனிதமர்ந்து

    நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாய் அடியேற்கு

    ஊராகத் தந்தருளும் உத்தரகோச மங்கை

    ஆராவமுதின் அருள்தாள் இணைபாடி 

    போரார்வேல் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ2.

    திருப்பேரூரில் எழுந்தருளியுள்ள பட்டீசுவரப் பெருமானைக் கண்டு போற்றித் துதித்துவிட்டு வரும் பெண்கள் வழியிலுள்ள ஒரு மலர்ச்சோலையில் விளையாட நுழைகின்றார்கள். வழக்கமாக அவர்கள் ஆடும் ஊசல்கள் அங்கே மரக்கிளைகளிலிருந்து தொங்குகின்றன. சிலர் அவற்றிலேறி வீசியாட முற்படுகிறார்கள். ஆடும் வேகத்தில் அள்ளிமுடித்த நறுங்குழல் அவிழ்ந்து அலைந்தாடுகின்றது; கழுத்திலணிந்த முத்துமாலைகளும் பொன்னணிகளும் ஆடுகின்றன; மலர்ச்சோலையல்லவா? இவர்கள் ஊசலாடும் வேகத்தில் மலர்களில் தேனுண்ணும் வண்டுகளும் எழுந்தும் தாழ்ந்தும் ஆடுவனபோல் காட்சியளிக்கின்றன! விசையாக ஆடுவதால், பிறைபோன்ற நெற்றியில் வியர்வை அரும்பிப் படர்கிறது; தொங்கும் துளைச்செவியானதும் ஆடுகின்றது (அக்காலத்து மகளிர் காதில் பாம்படம் போன்ற பெரிய  அணிகளை அணிவதற்காக, காதுத்துளைகளை நீளமாகத் தக்கை முதலியனவற்றால் வளர்த்துக்கொண்டு அழகு செய்துகொள்வார்கள்; இதனை ‘வடிகாது’ என்பார்கள்). அக்காதிலணிந்த குழைகளும் கூடவே ஆடுகின்றன. கொடியிடையும், கைவளைகளும் ஆடிட, கோலமயில் போலும் பெண்களே நீங்கள் ஊசலாடுவீர்களாக! முத்தைப்பழிக்கும் புன்னகை கொண்டவர்களே! பால்போலும் இனிய சொல் பேசுபவர்களே! பட்டீசர் புகழைப் பாடி ஆடுவீராக!” எனப்பாடிய வண்ணம் ஒருவரை ஒருவர் ஊசலில் ஊக்கியபடி இவர்கள் ஊசலாடும் அழகு நமது கண்முன் காட்சியாகத்தோன்றி மகிழ்விக்கிறது. இறைவனின் அல்லது அரசனின் புகழைப்பாடும் ஒருவகைச் சிற்றிலக்கியம், பலவிதமான பாடல்வகைகளைக்கொண்டு, கலம்பகம் எனப்பெயர் பெற்றது. நடேசகவுண்டர் இயற்றியுள்ள திருப்பேரூர்க் கலம்பகத்தில் உள்ளதுதான் இந்த அழகான ஊசற்பாடல்:

    ஏலநறுங் குழலாட மாலை யாட

    இமிர்ந்தினவண் டாடமதி நுதல்வே ராடச்

    சாலவடி காதாடக் குழைக ளாடத்

    தளர்ந்துகொடி யிடையாட வளைக ளாடக்

    கோலமட மயிலனையீ ராடீ ரூசல்

    குளிர்முத்த மணிநகையீ ராடீ ரூசல்

    பாலனைய மொழிமடவீ ராடீ ரூசல்

    பட்டீசர் பேர்பாடி யாடீ ரூசல்3.

    இதில் ஊசலாடும்போது உண்டாகும் இன்பமும்,  இன்னும் என்னவெல்லாம் பெண்களுடன் ஊசலாடும், எனவும் அழகுற விளக்கப்பட்டுள்ளன.  அழகான இளம்பெண்கள் ஊசலில் ஆடுவதைக் கண்ட கவிஞர்கள் அன்னை தெய்வத்தின் மீதான பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஊசல்பருவத்தை இணைத்துப்பாடி மகிழ்ந்தனர். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து இலக்கியச்சுவையும், பக்திரசமும் ததும்ப, அன்னை ஊசலில் ஆடுவதனாலேயே உலகங்கள் இயங்குகின்றன எனும் பிரபஞ்ச இயக்கத் தத்துவத்தினைக் குமரகுருபரனார் ஊஞ்சல் விளையாட்டுடன் இணைத்துக்கூறும் நயம் மிக அருமையானது:

    ‘மீனாட்சியாகிய இளமங்கை சுவைமிகுந்த பாடல்களை அமுதம் ஒழுகப் பாடியபடி பொன்னூசலில் ஆடுகின்றாள். அதனைக் கேட்ட சிவபிரான் மகிழ்ந்து தனது திருமுடியை அசைக்கின்றார்; அவருடைய முடிமீது பாம்புகளுக்கெல்லாம் அரசனான ஆதிசேடன் உள்ளான்; உலகங்களையெல்லாம் தாங்கும் அவனுடைய தலையும்  இதனால் அசைகின்றது. தலையசைந்தால் தலைமீதுள்ள உலகங்களும் அசைய வேண்டியதுதானே! அகில சராசரங்களும் அசைந்தாடுகின்றன; சொக்கநாதரின் திருவழகிற்கு இணையான கொடிபோன்ற இவள் ஊசலில் அசைந்தாடுவதனால் அண்டமும் அண்டபகிரண்டமும் ஆடுவதைப் போலத் தோன்றுகிறது,’ எனும் பாடல் நம்மை நெகிழ வைக்கிறது. 

    ‘சேர்க்குஞ் சுவைப்பாடல் அமுதொழுக ஒழுகுபொன் 

                திருவூசல் பாடியாடச் 

    சிவபிரான் திருமுடிஅசைப்ப 

          ……………………. தம்மனையசைந் 

     தாடலால் அண்டமும் அகண்டபகி ரண்டமும் 

      அசைந்தாடு கின்றதேய்ப்ப4 ‘

    தாம் எப்போதும் அகக் கண்ணில் கண்டு மகிழும் அன்னை மீனாட்சியின் திருவூசல் காட்சியில்  குமரகுருபரருக்கு இந்த அண்ட சராசரமே அசைந்து ஆடுவது போலத் தோன்றுகிறது; அருள் பெற்ற தமது தெய்வவாக்கினால் இதனை அழகுற விவரிக்கின்றார்: 

    அரசியின் ஊஞ்சலல்லவா? அதன் கால்கள் சிறந்த ஒளியுடைய பவளத்தால் செய்தவையாம்; பொங்கிப் பெருகி ஒழுகும் ஒளியையுடைய வைரங்களால் விட்டம் அமைந்துள்ளதாம்;  குளிர்ச்சி பொருந்திய செழித்த நிலவொளி பெருகி விழுந்தது போன்ற ஒளி பொருந்திய முத்து வடங்களைக் கட்டியுள்ளனர். ‘தண்’ணென்ற பௌர்ணமி இரவில் சந்திரனின் கிரணங்கள் ஊடுருவி அழகு செய்வது போல அவை தோன்றுகின்றன. மாணிக்கப் பலகையால் செய்த இருக்கையும் ஒளி வீசுகின்றது; எத்தனை அள்ளினாலும் திரும்பவும் பெருகி  நிறைந்து வழிந்து ஒளி பொங்குகின்ற அருண ரத்தினப் பலகையாம் அது!

    ‘ஒள்ளொளிய பவளக் கொழுங்கால் மிசைப்பொங்கும்

    ஒழுகொளிய வயிர விட்டத்து

    ஊற்றும் செழுந்தண் நிலாக்கால் விழுந்தனைய

    ஒண்தரள வடம் வீக்கியே5…‘ என்கிறார்.

    ‘இத்தகைய அற்புதமான ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகின்ற உன் தோற்றம் தாயே, அந்தச் சூரிய மண்டலத்தில் வளர்கின்ற அரிய பெரிய சுடர் ஆகிய ஒளியை ஒத்திருக்கிறதே!’ என நெகிழ வைக்கிறார் புலவர்.

    ‘தன்’னை வென்று பரம்பொருளில் ஆழ்ந்து விட்ட பெரியோருக்கு அனைத்தும் இறை மயமாகத்தான் தெரியும்! ஆதி சங்கரரும் ‘உத்யத்பானு ஸஹஸ்ரகோடி ஸத்ருசாம்6,’ என்று மீனாட்சியின் ஒளிமயமான தோற்றத்தைப் போற்றியுள்ளார். உதிக்கின்ற ஆயிரம் கோடி சூரியர்களின் காந்தி பொருந்தியவளாம் அண்ட சராசரங்களுக்கும் முதல்வியான நம் அம்மை! இவள் குடியிருக்குமிடம் எதுவென்று தாம் உணர்ந்ததை எளியவர்களாகிய நமக்கும் விளக்குகிறார் குமர குருபரர். 

    உள்ளத்தில் திருவருள் நிரம்பியதால் அடியார்கள் ஆனந்தச் செருக்கு நிறைந்து விளங்குகின்றனராம்! தெய்வப் பேரருளை உணர்ந்தமையால், அதனால் விளைந்த பரமானந்த அலைகள் பொங்கும் கடலில் அவர்கள் மூழ்கித் திளைக்கின்றனர். ‘தெள்ளு சுவையமுதம் கனிந்த ஆனந்தத் திரைக்கடல் மடுத்து உழக்கும் செல்வச் செருக்கர்கள்7,’ என இத்தகைய அடியார்களைப் பெருமைப் படுத்துகின்றார். திருவருள் செல்வத்தினால் மெய்யடியார்களுக்கும் செருக்குண்டாகுமாம்! 

    ‘இறுமாந்திருப்பன் கொலோ, ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச் 

    சிறு மான் ஏந்தி (சிவபிரான்) தன் சேவடிக் கீழ்ச் சென்று அங்கு 

    இறுமாந்திருப்பன் கொலோ8,’ என திருநாவுக்கரசரும் இறைவனடியில் பணிந்து பெற்ற பேரருள் செல்வத்தால் தாம் இறுமாப்பு அடைந்ததைப் பாடியுள்ளார்.

    இத்தகைய அடியார்களின் மனத்தாமரையில் நெகிழ்ந்த  பூம்பஞ்சணையில் குடியிருக்கிறாள் மீனாட்சியன்னை. இங்ஙனம் இவள் இங்கு குடியிருப்பதனை உலகத்தினருக்கு அறிவிப்பது போல, அவர்கள் ஓதுகின்ற வேதம் எனப்படும் பறவைகள் ஒலியெழுப்புகின்றன. அன்னையும் அத்தனும் வேதத்தின் உட்பொருள்; ஆகவே, ஆகமப் பொருளாகி நிற்பவள் இவள் என்கிறார் குமரகுருபர அடிகளார்.

    இதனை முற்றுணர்ந்தவர்களாக, ‘பழ வேதமாய் அதன் முன்னுள்ள நாதமாய் விளங்குமிந்த வீரசக்தி வெள்ளம்9,’ என்று மகாகவி பாரதியார் கூறுகிறார்.

    ‘நானாயோகி முனீந்த்ர ஹ்ருந்நிவஸதீம்10 (யோகிகளும் முனிவர்களும் ஆகியோரின் நெஞ்சத் தாமரையில் உறைபவள்)’ என ஆதி சங்கரரும் கூறியுள்ளார்.

    ‘இவ்வாறு அடியார்களின் மனமாகிய தாமரையில் உறைபவளே, சுந்தரவல்லியே, பொன்னூசலில் ஆடியருளுக! 

    ‘…………………….பழையபாடல்

    புள்ளொலியெழக் குடிபுகுந்த சுந்தரவல்லி

    பொன்னூசல் ஆடியருளே

    புழுகுநெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்தகொடி

    பொன்னூசல் ஆடியருளே11.!’ என்பது பாடல்.

    பொன்னூஞ்சலில் அமர்ந்துள்ள தடாதகையின் திருக்கோலத்தை மனக்கண்ணில் கண்டு மேலும் பாடுகிறார் புலவர்: “தேரிலேறிய போர்க் கோலத்தில் உன்னைக் கண்ட சிவபிரானின் உள்ளத்தில் முதலில் சினம் பொங்கியெழுந்தது! ஆனால் உனது அழகுத் திருக்கோலத்தைக் கண்டு சினத்தீ தணிந்து உள்ளத்தில் பற்றி எரியும் காமக்கனல் வளர்ந்து எழுந்தது! அந்தத் தீயின் கொழுந்து போன்றது அவரது சிவந்த சடை. உன்மேல் கொண்ட காதலால் அவர் உள்ளம் உருகியது போலவே, அவர் கையிலிருந்த வில்லான பொன்மேருவும் உருகியோடியது! (வில் அவர் கையை விட்டு நீங்கியது). அவர் முடியிலிருக்கும் சந்திரனும், அவர் ஏறும் காளைவாகனத்தின் மணி ஓசையும் அவர் கொண்ட காதல் நோயால் அவருக்கு மிகுந்த துன்பத்தைத் தந்தன!” என்கிறார்.

    இன்னும் கூறுகிறார்: “அழகான மேகத்தின் நீலமும் கருநிறமும் பொருந்திய கழுத்தை உடைய அப்பெருமான், உன்னைப்  போரில் எதிர்த்து வருந்தினார் அம்மையே! நீ அவர் மேல் கண்களாகிய அம்புகளைக் கரிய புருவங்களாகிய வில்லிலிருந்து செலுத்தினாய்; ஒரு கையில் போருக்கு வில்லையும் வளைத்து ஏந்தி நின்ற உந்தன் அழகுக் கோலத்தில் ஐயன் மயங்கினார்; அந்தப் போர்க்கோலமே உனக்கு திருமணக் கோலமான பெண்ணே, பொன்னூசலாடியருளுக,” என்கிறார்.

    ‘கண்கணை துரக்கும் கரும்புருவ வில்லொடொரு

    கைவில் குனித்து நின்ற

    போர்க்கோலமே திருமணக் கோலமான பெண் 

    பொன்னூசல் ஆடியருளே,’ என்பன பாடல் வரிகளாகும்.

    அன்னை ஊசலாடும்போது சுற்றும் புடை சூழ நிற்கும் இனிய தோழியரில் சிலர் பாடல்களை இசைக்கின்றனர்; இன்னும் சிலர் பரிகாசச் சொற்களைப் பேசி கேலி செய்கின்றனர். உயிர்த் தோழியான திருமகள், தரையைக் காலால் உந்தி உயர்ந்தெழும் ஊஞ்சலில் அமர்ந்துள்ள மீனாட்சியின் தாமரைத் திருவடிகளைப் பார்க்கிறாள்; வளைந்த பிறைத் தழும்பு அதில் தெரிகிறது. “வாணி, இதைப் பாரடி! என்ன இது இவள் மலரடியில், வலம்புரிச் சங்க ரேகையோ?” என்று கூவிப் பரிகசித்து முத்துப்பல் தோன்றச் சிரிக்கின்றாள்; ஊடல் காலத்தில் சிவபெருமானின் திருமுடியிலுள்ள பிறைநிலா அழுந்தியதால் வந்த தழும்பல்லவா அது? தோழியர் முகங்களில் குறும்புப் புன்னகை விகசிக்கின்றது! மீனாட்சிக்கு நாணம் மிகுகிறது. வணங்காத அவள் முடிக்கு அப்போது அந்த நாணம் ஒரு வணக்கத்தை வழங்குகின்றதாம்.

     ‘……………………மலர்மகள் அம்மை 

    உள்ளடிக் கூன்பிறை தழீஇ 

    மல்கும் சுவட்டினை வலம்புரிக் கீற்றிது கொல் 

    வாணி என்று அசதியாடி 

    மணிமுறுவல் கோட்ட12‘ என்பன பாடல் வரிகள். அசதியாடல் என்றால் பரிகசித்தல் எனப் பொருள். 

    குமரகுருபர அடிகளாரின் கவிநயமும் பொருள் நயமும் மிகுந்த பாடல், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற செந்தமிழ்ச் சொல்லோவியத்தின் நிறைவுப் பாடலாக அமைந்துள்ள பாடல், ஊசற் பருவத்தின் பத்தாவது பாடல், அன்னையின் பாதாதி கேச வர்ணனைப் பாடலாக அமைந்துள்ளது. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற தெய்வச் சிற்றிலக்கியத்திற்குத் திலகம் போன்று இப்பாடல் திகழ்கிறது.

    இரு திருவடிகளிலும் அணிந்துள்ள மென்மையான ஒலி எழுப்புகின்ற கிண்கிணியான சதங்கையும், முறையீடு செய்வது போன்று ஒலிக்கின்ற பரல்களையுடைய சிலம்புகளும் அணிந்த அம்மையின் மென்மையான மலர் போலும் திருவடிகளில் தேவரும் மூவரும் பணிந்து கிடக்கின்றனர். இவர்களுடைய முடிகளிலுள்ள கிரீடங்கள் அவர்கள் பணியும் போது அன்னையின் மெல்லிய திருவடிகளை அழுத்தி வருத்துகின்றன. இதனால் தான் திருவடிகளின் சார்பாகச் சிலம்புகள் வருத்தத்தை வெளியிட்டு முறையீடு செய்கின்றனவோ?

    ‘இருபதமும் மென்குரல் கிண்கிணியும் முறையிட்டு

    இரைத்திடும் சுரிச்சிலம்பும்13′

    காப்பிட்டு, செங்கீரையாடி, தாலாட்டி, சப்பாணி கொட்டி, முத்தம் தந்து, குறுநடை நடந்து, அம்புலியோடு ஆடி, அம்மானை விளையாடி, வைகை நீரிலாடி மகிழ்ந்து, அழகு பொங்க வளர்ந்து இன்று பொன்னூஞ்சலில் ஆடி நிற்கும் அன்னையின் திருவழகைக்கண்டு உள்ளம் பூரிக்கின்றது.

    ‘தடாதகையின் மென்மையான கொடி போன்ற இடையானது இற்றுப் போகுமே என்று அவ்விடையில் அணியப்பட்டுள்ள மேகலை இரங்கிப் புலம்புகின்றது. பொற்சரிகையால் சித்தரிக்கப்பட்ட பட்டாடை இவளுடைய சிறந்த மெல்லிடையை அலங்கரிக்கின்றது. மேலாடையும் ஒட்டியாணமும் அணிந்து சிவந்த கையில் பசுங்கிளியை ஏந்தி இருக்கிறாள்! இவளது அழகிய மார்பகங்களை முத்தாலாகிய மேலாடை அலங்கரிக்கின்றது. ஈசன் அணிவித்த மங்கலத் திருநாண் அதன் மீது திகழ்கின்றது. அழகு பொங்க நின்று அருளைப் பொழியும் நிலவு போன்ற திருமுகம்; முகமாகிய மதியினின்று  நிலவின் நீண்ட கிரணங்கள் போல அரும்பி வரும் புன்சிரிப்பும் கொண்டவள் இப்பெண்மணி,’ எனப் படிக்கும்பொழுதில் நமது கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகுகின்றது.

    இன்னும் மேலே போய் ‘சொல்லும் பொருளும் என நடமாடும் இறைவருடன் புல்லும் பூங்கொடி’யான அம்மை மீனாட்சியை வர்ணிக்கிறார் குமரகுருபர அடிகளார். ‘ஞானமாகிய ஆனந்தம் என்னும் கடலில் மூழ்கியவள் இவள்,’ என்கிறார் . அதாவது ஞானமே வடிவாகிய சிவபிரானுடன் இரண்டறக் கலந்தவள் என்பது பொருள். காளிதாசர் ‘ரகுவம்ச’த்தில், ‘வாகர்த்தா இவ சம்ப்ரக்தௌ14‘ எனச் சொல்லையும் பொருளையும் போலப் பார்வதியும் பரமேஸ்வரனும் இணைபிரியாதவர்கள் என்பார்.

      ‘இத்தகைய பெருமை பொருந்திய தாயே! காதிலணிந்துள்ள மகரக் குழைகளுடன் கயல்மீன்களாகிய கண்கள் போர்செய்கின்ற ஒப்பற்ற அழகு பூத்த சுந்தரவல்லியே! பொன்னூசல் ஆடியருளுக; புனுகு எனப்படும் நறுமண நெய் பூசியிருக்கும் சொக்கநாதரின் திருவடிவிற்குப் பொருத்தமான கொடி போன்ற பெண்ணே! பொன்னூசல் ஆடியருளுகவே,’ எனப் பாடி வாழ்த்தி நூலை நிறைவு செய்கின்றார்.

    ‘……………………ஞான

    ஆனந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொடு

    அமராடும் ஓடரிக்கண்

    பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி

    பொன்னூசல் ஆடியருளே

    புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக் கொத்தகொடி

    பொன்னூசல் ஆடியருளே16.‘

    அடுத்த பகுதியில் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்கள் காட்டும் நயங்களைக் கண்டு மகிழலாம்.

    ***************

    பார்வை நூல்கள்

    1. சிலப்பதிகாரம்- ஊசல்வரி- இளங்கோவடிகள்
    2. திருவாசகம்- திருப்பொன்னூசல்- மாணிக்கவாசகர்
    3. திருப்பேரூர்க் கலம்பகம்- கு. நடேச கவுண்டர்
    4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    6. மீனாட்சி பஞ்சரத்தினம்- ஆதிசங்கரர்
    7. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    8. தேவாரம்- திருநாவுக்கரசர்.
    9. பாரதியார் பாடல்கள்- சுப்ரமணிய பாரதியார்
    10. மீனாட்சி பஞ்சரத்தினம்- ஆதிசங்கரர்
    11. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    12. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    13. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    14. ரகுவம்சம்- காளிதாசன்
    15. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்

     

     

     

    _

     

    Share