Category: பத்திகள்

பத்தி

  • இங்கிலாந்திருந்துஒருமடல்!…..(58)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் !

    இதோ அடுத்தொரு மடல் உள்ளத்தின் உதிர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்காக உங்கள் முன்னே.

    இன்றைய உலகம் நாகரீக மிக்கதொன்றாக , நவீன விஞ்ஞான வளர்ச்சிகளின் அதியுச்சியை நோக்கி அதி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

    மக்களிடையேயும் , நாடுகளிடையேயும் காணப்பட்ட பொருளாதர சமனற்ற நிலை இவ்விஞ்ஞான வளர்ச்சியினால் வேகமாகக் கரைந்து கொண்டு போகிறது .

    சமுதாயங்களில் காணப்படும் கொடுமையான வறுமை எனும் நிலைக்கு இவ்விஞ்ஞான வளர்ச்சி உதவும் எனும் நம்பிக்கை பலரின் மனதில் வியாபித்திருந்தாலும் அதற்கான வலுவான சான்றுகள் இன்னும் பெரும்பான்மையாகக் காணப்படவில்லை .

    சரி , எதற்காக இந்தப் பீடிகை ? சக்தியின் மடல் எதை நோக்கிய பார்வைக்கு எம்மை அழைத்துச் செல்கிறது எனும் கேள்வி உங்கள் மனதில் எழுவது இயற்கையே !

    மனித சமுதாயத்தின் முன்னேற்றத்தின் அளவுகோல் என்ன ? என்பதே இவ்வாரம் நான் உங்கள் முன்னால் தொடுக்கும் வினா .

    சமுதாய முன்னேற்றம் எனும் போர்வையினால் கலாச்சார அடித்தளத்தை அசைத்துப் பார்ப்பது சரியா ?

    ஒருவர் ஆத்திகராக இருப்பதோ அன்றி நாத்திகராக இருப்பதோ அவர்களின் தனிமனித சுதந்திரம் என்பதை நான் மறுக்கவில்லை .

    அதே சமயம் இத்தனிமனித சுதந்திரம் எனும் கோஷத்திற்கு எல்லையென்பதே கிடையாதா ? என்பதே என்னுள் விளையும் கேள்வி .

    இன்று மேலைத்தேசங்களில் மட்டுமல்ல கீழைத்தேசங்களிலும் இந்த ” ஓரினச் சேர்க்கை ” அல்லது ” தன்னினச் சேர்க்கை ” என்பது அதாவது ஆங்கிலத்தில் ” Gay relationship “ அன்றி ” Homosexual relationship “ எனும் வகையிலான உறவுமுறை சமுதாயத்தின் ஒரு அங்கமாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது எனலாம் .

    இது சரியா ? தவறா ? என்பதல்ல எனது வாதம் . இங்கேயுள்ள ” தனிமனிதச் சுதந்திரத்தை ” நான் உள்வாங்கிக் கொள்கிறேன்.

    ஆனால் தனிமனிதச் சுதந்திரம் எனும் பெயரில் கால காலங்களாகப் பராமரிக்கப்பட்டு வந்த கலாச்சார மையங்களின் அடிப்படை விதிகளை மாற்றியமைக்க முயல்வது எற்றுக் கொள்ளப்படக் கூடியதல்ல என்பது எனது கருத்து .

    இந்த வாரம் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஒரு சர்ச்சைக்குரிய விடயம் சட்டமாக்கப் படுவதற்குரிய நடவடிக்கை அநேகரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது.

    அது என்ன என்கிறீர்களா ?

    ஒரு ஆணும் மற்றொரு ஆணும் அன்றி ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணும் காதல் வயப்பட்டு ஒன்றாக வாழ்வது இயல்பான செயல் என்று அங்கீகரிப்பதற்காக கடந்த லேபர் அரசாங்கத்தினால் ” சமூக ஜோடி (Civil Partnership) “ எனும் சட்டம் அமூலாக்கப்பட்டது . இதன்மூலம் தம்பதியராக வாழும் ஒரு ஆணுக்கும் ,பெண்ணுக்கும் சட்டத்தின் மூலம் என்ன உரிமைகள் இருக்கிறதோ அதே உரிமை இவோரினத் தம்பதியினருக்கும் உண்டு என்று வரையறுக்கப்பட்டது .

    இதைத் தனிமனித உரிமை என்பதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன் .

    ஆனால் இப்போது இத்தகைய ஓரினத் தம்பதியினர் சர்ச்சிலோ அன்றி மற்றைய மதக் கலாச்சார மையங்களிலோ ஆண்-பெண் தம்பதியினரைப் போல திருமணம் செய்து கொள்ளலாம் என்பதைச் சட்டமாக்கும் முயற்சியில் தற்போதைய கூட்டணி அரசாங்கம் இறங்கியுள்ளது .

    இது ஏதோ என் மனதைக் கொஞ்சம் கலக்குகிறது . ஆத்திக நம்பிக்கையினால் கண்மூடித்தனமான கருத்தை நான் கொண்டிருக்கிறேன் என்பது அல்ல இதன் காரணம் .

    சரியோ , தவறோ ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு கோட்பாடு உண்டு . இவற்றிற்கு அந்தந்த மதத்தில் வலுவான பின்னனிகள் உண்டு. இவற்றில் சிலவற்றை மூட நம்பிக்கை என்று சொல்வதின் பின்னால் உள்ள நியாயங்கள் எனக்குப் புரிகிறது.

    ஆனால் அவற்றின் அதிமுக்கியமான அடிப்படைக் கொள்கைகளை தனிமனிதச் சுதந்திரம் எனும் பெயரில் அசைத்துப் பார்க்க விழைவது அம்மத நம்பிக்கை கொண்டவர்களின் தனிமனித சுதந்திரத்தைத் தாக்காதா ?

    “ ஓரினத் தம்பதியர் ” எனும் வாழ்க்கை முறையை இன்றைய சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளும் அதே சமயம் சமூக முன்னேற்றம் , கால மாற்றம் எனும் பெயரில் சமூகக் கட்டமைப்பின் அத்திவாரத்தை ஆட்டிப்பார்ப்பது பயங்கரமான ஒரு செயல் என்பது என் தனிப்பட்ட கருத்து .

    இன்றைய காலகட்டத்தில் இத்தகைய விவாதங்கள் நடைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது . எத்தகையதோர் சமுதாயக் கட்டமைப்பை எமது சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லப் போகிறோம் எனும் கேள்விக்கு இவ்விவாதங்கள் இன்றியமையாதவையாகின்றன .

    எமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறதா ? இல்லையா ? என்பதை அறுதியாக எவராலுமே நிரூபிக்க முடியாது . எவ்வளவுக்கெவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியியால் இயற்கையின் பல நிகழ்வுகளுக்கு நாம் விளக்கத்தை அளித்தாலும் மற்றொரு பக்கத்தில் எம்மால் விளக்க முடியாத நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.

    விஞ்ஞானம் எனும் பெயரால் , பகுத்தறிவு எனும் விளக்கத்தால் இயற்கையின் அழிவைத் துரிதப்படுத்தும் பல செயல்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.

    ஆனால் அதே சமயம் மதங்களின் பெயரால் , ஆத்திகத்தின் போர்வையில் பல மூடத்தனமான செயல்களும் நிகழ்ந்து கொண்டு தானிருக்கின்றன.

    நன்மைக்கும் , தீமைக்கும் , ஆக்கத்திற்கும் , அழிவிற்கும் , ஆத்திகத்திற்கும் ,நாத்திகத்திற்கும் இடையே ஒரு பொதுவான நிலைப்பாட்டில் புரிந்துணர்வை ஏற்படுத்தி கலாச்சாரக் கட்டமைப்பில் முக்கிய அடிப்படை அறிவான காரணிகளைப் பாதுகாத்து வாழ்வது அவசியம்.

    இல்லையெனில் மனித வாழ்க்கைக்கும் விலங்கு வாழ்க்கைக்கும் வித்தியாசம் அற்றுப் போய்விடும்.

    தனிமனிதச் சுததிரம் அவசியம் தான் ஆனால் அதற்கும் ஒரு எல்லை வகுத்துக் கொள்வது அவசியம் இல்லையெனில் தனிமனிதச் சுதந்திரத்தின் பெயரால் கொலைகளும் , கொள்ளைகளும் கூட நியாப்படுத்தப்படத் தொடங்கி விடும் .

    கலிகாலத்தில் இதுவெல்லாம் சகஜமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 31

    இன்னம்பூரான்

    சில நிமிடங்களுக்கு முன் இந்திய நாளிதழ்களில் தணிக்கைத்துறையின் தலைவராக (ஸீ.ஏ.ஜி.) திரு. சஷிகாந்த் சர்மா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படப்போவதாக ஹேஷ்யம் வலுத்து வருகிறது. உலக குடியரசுகளில், குறிப்பாக, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா போன்ற நாடுகளில், இந்தப் பொறுப்பேற்க தகுதி பெற்ற நபரை தேர்வு செய்ய ஜனநாயக மரபுகள் உண்டு. இந்தியா மட்டும் விதி விலக்கு. பிரதமர் செய்யும் தேர்வு மட்டும் செல்லும். கிட்டத்தட்ட 40 வருடங்களாக, இந்திய தணிக்கைத்துறையை புறக்கணித்துத்தான், இந்த தேர்வு நடைபெறுகிறது. 150 வருடங்களாக கட்டுக்கோப்புடன் காக்கப்படும் அந்த துறையின் உத்யோகஸ்தர்களின் சுதந்திர/நடுநிலை/அச்சமும் சிபாரிசும் விலக்கிய அணுகுமுறை தான் அதற்குக் காரணம். ஓணான் தான் வேலியை தாங்கும் என்ற மனப்பான்மை மற்றொரு காரணம்.

    எனினும், சில நிமிடங்கள் முன்னால் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியது போல, இது வரை வெளி இடங்களிலிருந்து உள்புகுந்தத் தலைமையை தணிக்கைத்துறை வசீகரித்து விட்டது, தன் வசம் இழுத்துக்கொண்டது என்பதும் வரலாறு மறக்காத உண்மை. அந்த இதழ் கூறுவதை, அதன் வாசகத்திலேயே, இங்கே:

    ‘…But, given the kind of fierce independence that CAG and his officers from the Indian Audit and Accounts Service have enjoyed all these years, it is tough to see the organisation meekly becoming a silent bystander to government’s misdeeds. In fact, it wouldn’t be surprising if Sharma hogs the limelight as the face of an aggressive and fiercely independent CAG…’

    அதாவது, வரப்போகும் தலைமையும் அவ்வாறு ஆகர்ஷிக்கப்பட்டு, இன்றைய தலைவர் திரு.வினோத் ராய் போல, கடைசியாக தணிக்கைத்துறையிலிருந்து வந்த திரு. அர்தேந்து பக் க்ஷி மாதிரி சுதந்திரமாகத் தொண்டு செய்தால், அது வியப்பைத் தராது.

    ததாஸ்து என்று சொல்லி, நாம் திரு.வினோத் ராய் அவர்களை வாழ்த்தி விடை கொடுப்போம். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆரூடம் பலிக்கட்டும், ஹேஷ்யம் பலித்து விட்டால்.

    இன்னம்பூரான்

    Hindu Update: One hour ago: (8.46 P.M. I.S.D)

    ‘…Defence Secretary Shashi Kant Sharma was on Tuesday named as the new Comptroller and Auditor General of India (CAG). The 1976 Bihar cadre officer will succeed Vinod Rai, who superannuates on Wednesday after five and a half years of eventful tenure as the head of the Constitutional financial watchdog.
    “The President of India has appointed Shashi Kant Sharma, IAS, as the Comptroller and Auditor General of India, in terms of Article 148 (1) of the Constitution of India,” the Finance Ministry said in a statement.
    Mr. Sharma, who holds a masters degree in political science from the University of York, will be taking over charge of the CAG from May 23, 2013, it said. He will be administered the oath of office by President Pranab Mukherjee on Thursday. Like Mr. Rai, Mr. Sharma too has served as Secretary in the Department of Financial Services. The CAG is appointed for a term of six years or till the incumbent attains the age of 65 years, whichever is earlier. CAG audit reports on 2G spectrum and coal block allocations during Rai’s tenure triggered a number of controversies and raised the hackles of the government, besides bringing in the concept of presumptive loss in audit.
    *
    The last sentence is not factually correct. This announcement was unduly delayed, if a robust practice of yesteryears is considered.
    Innamburan
    21 05 13

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 72 (20.05.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி
    (49)

    இன்று எமைப் பிரிந்து சென்ற காதலர்
    அன்று அன்புடன் சொல்லிச் சென்றார்
    ‘உனைப் பிரியேன்’ என்று;
    அந்தச் சொற்கள் தருகின்ற நிழலதனில்
    தங்கியே ஏங்கியே நானும் வாழ்கிறேன்.

    மாலைப்பொழுதே!
    நீயோ தனித்திருந்து வருந்தி வாழும்
    என்னுயிரைக் கவர்ந்திட
    எனைச் சூழ்ந்து கொள்கிறாய்!
    இங்ஙனம் எமைத் துன்புறுத்தும் நீதானும்,
    கோட்டையதன் உள்ளே
    வலிமையற்றிருக்கும் வேந்தனவன்
    மதிலின் புறத்தே சூழ்ந்து நிற்கும்
    பகை வேந்தனுக்கு
    என்னதான் உறவு உடையாயோ!

    (50)

    பகல் செய்யும் கதிரவன் மேற்குக் கடல்புரத்தில்
    மறைந்து விட
    பலருக்கும் துன்பம் தரும்
    காமநோய் அதிகரிக்கச் செய்கிறாய் நீ
    மயக்கத்தயுடைய மாலைப்பொழுதே!

    நின் கொடுமைதான் காணச் சகியாமல்
    நிலமகளும் கண் மூடிக்கொண்டனள்;

    நீ மட்டும் வந்திடுவாய் ஆயின்,
    எம் தலைவர் வாராதிருப்பார் ஆயின்,
    யாம் மட்டுமின்றி இவ்வையமே
    இங்ஙனம் துன்புறுமன்றோ..
    மாலையே! நீ வாழ்வாயாக!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/d011/d0111/html/d0111111.htm

    Share
  • மனாலியில் ஒரு கோயில்!…

    விசாலம்

    இந்த வேனில் காலத்தில் பலர் ‘மனாலி’ என்ற  ஊரை சுற்றுலாவுக்காகத்தேர்ந்தெடுப்பார்கள்.

    அத்துடன் ஆன்மீகப்பிரியர்களும் இந்த இடத்திற்கு வருவார்கள். நல்ல குளுமையான இடமாகவும்   இயற்கை  அழகை அள்ளி வீசிக்கொண்டிருப்பதாலும்   அமைதியான இடமாகவும் உள்ளதால் பலரும்   இங்கு வருகின்றனர் .பனியில்  சறுக்கும்  விளையாட்டும் இருப்பதால் இளைஞர்களும்  இங்கு விரும்பி வருகின்றனர்  இந்த இடத்தில்  தான் “ஹிடிம்பா” என்னும் கோயில்  இருக்கிறது.

    நாம் “இடும்பி “என்று அழைக்கும் அரக்கித்தான் இந்த ஹிடிம்பா.   இவள் தான் ஹிடம்ப் என்ற அரசனின்  சகோதரி . இந்த “ஹிடம்ப்’என்பவன் தான் நாம் சொல்லும் இடும்பன், வடநாட்டில் ‘ஹிடம்ப்” ஹிடிம்பா என அழைக்கிறார்கள்.

    இதன் புராணக்கதையைப் பார்க்கலாம்

    அரக்கு மாளிகையில் தங்கிய பாண்டவர்கள் தாங்கள் கௌரவர்கள் சூழ்ச்சியால் எரிக்கப்போகும் சதி தெரிந்தவுடன்   அங்கிருந்து தப்பி  இமயமலைப்பக்கம்  போனார்கள்  ஆனால் அவர்கள் போன இடமோ  இடும்பன் என்ற அரக்கன்  அரசாளும் இடம் .  இடும்பனுக்கு நர வாசனை மூக்கில் தெரிய   தன் சகோதரியை வந்திருக்கும் நரர்களைப்பிடித்து வர உத்தரவிட்டான்

    இடும்பியும் அங்குச்செல்ல பீமன்  அவள் கண்ணிற்பட்டான் . பீமனை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது காதலிக்கவும் தொடங்கினாள் ஆகையால் அழகிய பெண் போல் தோற்றம் கொண்டு  அவனிடம் அணுகி தன் காதலை வெளிப்படுத்தினாள். பீமனும் அவள் விருப்பத்திற்குச்சம்மதித்தான் அரண்மணையில் இடும்பன் பொறுமையிழந்தான். வெகுநேரமாகியும்  இடும்பி வராததால் அவளைத்தேடியபடியே போனான், பீமன் அவனைப்பார்த்தான், இடும்பனுக்கும்  பீமனுக்கும்  போர் மூண்டது .

    அரக்கனைக்கொன்ற பீமன்  இடும்பியை  மணந்தான் .அவர்களுக்கு அழகான மகன் பிறந்தான்.     அவனே கடோத்கஜன்.

    அக்ஞாதவாசம் இருந்ததால் பீமன் அந்த நாட்டைவிட்டுப்போக நேர்ந்தது .அந்த நாட்டிற்கு இடும்பி அரசியானாள் கடோத்கஜன்  வளர்ந்து  ராஜ்யத்தை ஆளும் திறமைப்பெறும் வரை  அவனை நன்கு வளர்த்தாள்.

    பின் நாட்டை தன் மகன் கடோத்கஜனிடம் ஒப்படைத்துவிட்டு காட்டிற்குத்தவம் செய்யப்போனாள்.

    கண்ணன் மகாபாரதப்போரின் போது கடோத்கஜனைப் பாரதப்போரில் இணைக்க நினைத்தார் ஆகையால்  இடும்பியிடம்  சென்றார்.

    இடும்பனின் சகோதரியே பீமனின் மனைவியே நான் தக்கத்தருணத்தில் உன் மகன் கடோத்கஜனை ப்பாரதபோருக்கு அழைத்துச்செல்வேன். நீ அவனை அனுப்பி வைக்க வேண்டும்.

    “கிருஷ்ணா . தாங்கள் கேட்டு நான் மறுப்பதா? அவசியம் அனுப்பிவைக்கிறேன்”

    “இடும்பி நீ இனிமேல் அரக்கியாக இல்லாமல் தெய்வமாக ஆகி விடுவாய். எல்லோரும் உன்னை பூஜிப்பார்கள்”  என்று சொல்லியபடியே அவளை வாழ்த்தினார் .கண்ணன்.

    போரில்  தன் உயிரைக்கொடுத்து  அர்சுனனைக்காத்த  கடோத்கஜன்  மிக உயர்ந்த ஸ்தானத்தில்  நின்றான்  நீங்காத புகழும் பெற்றான்

    இடும்பியும்  பல காலங்கள் தவம் செய்து தெய்வநிலை அடைந்தாள், பின்  அவளுக்காக கோயிலும்  எழுந்தது.

    அங்கிருந்த குலு அரசர்கள் அவளுக்கென்று கோயிலும் கட்டினார்கள். அவர்களது குலதெய்வமாக இடும்பி விளங்குகிறாள்

    எந்த முக்கிய விஷயமானாலும் இடும்பியுடம் உத்தரவு பெற்றபின்னேதான் அங்கிருக்கும்  மக்கள் காரியத்தை ஆரம்பிக்கிறார்கள் . முன்பு மன்னன் முடிசூடும் முன்  இடும்பியின்  உத்தரவைப் பெற்றே பட்டாபிஷேகம்  நடைப்பெறமுடியும்  .

    இந்தகோயிலுக்கு மனாலி அடைந்து  பின் மலைப்பாறையில் இரண்டு கிமீ ஏறி நடக்க   இடும்பியின் கோயில் வந்து விடும்  .

    சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் இந்த மனாலி.

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (12)

    பவள சங்கரி

    அந்த அனுபவத்திற்கு உங்களால் நன்றி சொல்ல முடியும்போது மட்டுமே அது உண்மையான மன்னிப்பு என்பதாகிறது.
    – ஓப்ரா வின்ஃப்ரே

    ‘நன்றி’ என்ற மந்திரச் சொல்!

    அன்றாடம் நாம் படுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து, மீண்டும் இரவு தூங்கப்போகும் வரை நம் பொழுது சரியாக கழிவதற்கு எத்தனையோ பேருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நம்மைப் படைத்த இயற்கை அன்னையிலிருந்து, நம் வீட்டுக் கழிவுகளை அப்புறப்படுத்தும் கடைநிலை சுகாதார ஊழியர் வரை எத்தனையோ பேருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அந்த நன்றியை மனதார வாய்விட்டு சொல்லும்போது ஏற்படுகிற நிம்மதியே அலாதிதான். ‘கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பார் கம்பர். கடன்பட்ட நெஞ்சத்தின் வேதனைக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை. நன்றிக் கடனும் ஒரு வகையில் இதையேச் சாரும். அந்த நன்றியை பாரபட்சம் இன்றி, முழு மனதுடன், முகமலர்ச்சியுடன் அளித்துப் பார்த்தால் அதன் சுகமே தனிதான். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அடுத்த மேசையில் ஒரு கணவனும் மனைவியும் தங்கள் ஐந்து வயது குழந்தையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்து பில் வந்தவுடன் கணவர் அதற்குரிய பணமும், அந்த பரிமாறுபவருக்கு உரிய சிறிய ஊக்கத் தொகையும் சேர்த்து வைத்துவிட்டுக் கிளம்புகிறார். ஆனால் அந்தக் குழந்தை பெற்றோருடன் கிளம்பாமல் காத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் எவ்வளவு கூப்பிட்டும் தங்களுக்குப் பரிமாறிய அந்த ஊழியர் அடுத்த மேசையில் இருப்பவர்களுக்கு வேண்டியதைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வரும்வரை காத்திருந்து, ‘தேங்க்ஸ் அங்கிள், பை’ என்று மிக யதார்த்தமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியபோது அந்த ஊழியரின் முகத்தில் 1000 வாட்ஸ் விளக்கு எரிந்தது என்னவோ உண்மைதான். ஊக்கத் தொகையாக தந்தை வைத்த அந்தப் பணத்தைக் காட்டிலும், குழந்தை மனதார நன்றி என்று சொன்ன அந்த வார்த்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியைக் கண்டபோது அத்தனை நாட்கள் நாங்கள் செய்யத் தவறிய விசயத்தை உணர்ந்தோம். இப்பொழுதெல்லாம் அப்படி நன்றி சொல்லும்போது மனதிற்குள் ஒரு நிம்மதி வருவதை உணர முடிகிறது. நாம் எத்தனையோ பெரிய அறிஞராகவோ அல்லது உயர் பதவி வகிப்பவராகவோ இருக்கலாம். நமக்காக ஒரு துரும்பை எடுத்துப் போட்ட மிகச் சாதாரண மனிதராக இருந்தாலும் அவருக்கு நன்றி சொல்லும் கடமையை சரிவர செய்வதால் நம்முடைய கௌரவம் ஒருபடி உயருமே தவிர அதனால் எந்த பாதிப்பும் வந்துவிடாது. மனித மனம் தம்முடைய சின்னச் சின்ன செயல்களுக்குக்கூட அங்கீகாரம் தேடும் இயல்புடையது. அந்த வகையில் ‘நன்றி’ என்ற இந்த சிறிய வார்த்தை பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது என்பது அன்றாட வாழ்வில் நாம் காணும் யதார்த்தம்.

    மன பாரத்தைக் குறைக்கும் ‘மன்னிப்பு’

    பழைய சுமைகளில்
    திணறிக் கொண்டிருக்கிற மனம்
    புதிதாய் ஒன்றைக் காண்பது
    சாத்தியமல்ல.
    ஜே. கிருஷ்ணமூர்த்தி

    வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதர் என்று இதுவரை ஒருவர் பிறந்திருக்க முடியாது. தவறு செய்வது இயற்கை. ஆனால் அந்தத் தவறுக்காக வருத்தம் கொள்ளாமல் இருப்பது மேலும் தவறு செய்ய தூண்டக்கூடியது. இயந்திரமாக வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கும்போது நாம் செய்த சிறு தவறுகளோ அல்லது அதன் பின் விளைவுகளோ நம் கண்ணில் படுவதில்லை. ஆனால் ஓய்ந்து உட்காரும்போது என்றோ செய்த அந்த சிறிய தவறின் பாதிப்பு ஏதோ ஒரு உருவில் வந்து உறுத்தலாம். அன்று அதனைச் சரிக்கட்ட நினைத்தாலும் அது முடியாமல் போகலாம்….. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி செய்த தவறை எண்ணி வருந்தி ‘மன்னிப்பு’ என்ற ஒரு சொல்லை சம்பந்தப்பட்டவரிடம் உடனே உதிர்ப்பதுதான். அதன் பிறகு காட்சிகள் மாறலாம் அல்லது மாறாமலும் போகலாம். ஆனாலும் நம் அகம் குற்ற உணர்வால் வேகாமலாவது இருக்கக்கூடும். அகம் குளிர ஆரம்பித்தால் புறப்பணிகள் தொய்வில்லாமல் போகும் அல்லவா. செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதால் சுய கௌரவம் ஒரு நாளும் பாதிக்காது. மாறாக அது நல்ல பண்பின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். எதிராளியின் கோபம் பஞ்சாய்ப் பறக்கும் வாய்ப்புகளும் அதிகம். நம்மைவிட உயர்ந்தவர்களோ அல்லது தாழ்ந்தவர்களோ எவராக இருப்பினும் நாம் ஒரே விதமாக நடந்து கொள்வதிலேயே நம் சுதந்திரமும் அடங்கியிருக்கிறது.

    நாம் நம் அக வாழ்க்கையில் சில நல்ல தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், புற வாழ்க்கையில் விரும்பத்தக்க மாற்றங்கள் தானே வந்தமையும் அல்லவா?

    படத்திற்கு நன்றி:

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(57)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    கைவிரல்களின் வளைவுகள் உங்கள் நலத்தினை அறியும் வரிகளை விதைத்திடும் வகையில் வரைந்திடும் இம்மடலுடன் உங்கள் முன்னே !

    காலச் சக்கரத்தின் சுழற்சியினூடாக வாழ்க்கைத் தேர் விரைவாக அகவைகள் எனும் பாதையினூடாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

    இப்பயணம் வெவ்வேறு கால கட்டங்களினூடக பயணித்துக் கொண்டிருப்பதால் அக்காலகட்டத்தின் தேவைகளுக்கேற்ப மனிதனது தேடல்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன.

    இன்றைய இந்தச் சூழலிலே மனிதர்களின் வாழ்வில் அவர்களால் கணிக்கப்படும் பல விடயங்களின் அடிப்படை உடமைகளிலேயே தங்கியுள்ளது.

    ஒவ்வொரு மனிதரது தேவைகளும் வித்தியாசப்படுகிறது. அவரவருடைய பார்வைகளுக்கேற்ப அவர்களுடைய தேவைகளின் முக்கியத்துவம் வரிசைப்படுத்தப்படுகிறது.

    இது மாற வேண்டும், மனிதர்கள் பொருளாசையில் இருந்து விடுபட வேண்டும்.வாழ்வின் நிலையாமையை உணர்ந்து இவ்வாசைகளில் இருந்து தம்மை அந்நியப் படுத்தி வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பல ஆன்மீகவாதிகள் ,பல ஆன்மீக கருத்துக்கள் காலத்துக்குக் காலம் மனித சமூகங்களுக்கிடையில் பரவிக் கொண்டே வந்திருக்கின்றது,, வருகின்றது.

    ஆனால் இவை எந்த வகையில் யதார்த்தமானவை என்பதைச் சிறிது நோக்கினால் மிகவும் வியப்பான விளக்கங்கள் எம் மனங்களை அலைக்கழிக்கும் என்பதுவே உண்மை.

    மனிதர்களுடைய ஆசைகளின் வித்தியாசங்களின் அடித்தளத்திலேதான் உலகத்தின் பொருளாதாரம் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

    மனித சமூகம் இத்தகைய பொருளாசைகளிலிருந்து என்றுமே தம்மை அந்நியப்படுத்திக் கொள்ள முடியாது எனும் நம்பிக்கையே இவுலகத்தின் பொருளாதர வளர்ச்சியின் மீதான நம்பிக்கையின் வலிமைக்கு ஆதாரமாகிறது.

    உலகத்தின் இயக்கம் நன்ம்மை, தீமை ஆகிய இரண்டு நிகழ்வுகளினாலுமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

    உலகில் உள்ள அனைவருமே புத்தர்களாகி விட்டால் இன்று புத்தர் எனும் ஒருவரினது அதியுயர் போதனைகளை நாம் போற்றிக் கொண்டிருக்க முடியாது.

    அதே போல உலகில் உள்ள அனைவருமே துரியோதனர்களாக இருந்து விட்டால் பாஞ்சாலிக்கு நடந்த அநீதியின் மூலம் வாழ்க்கையின் தர்மத்தை நாம் போதித்துக் கொண்டிருக்கவும் முடியாது.

    ஒவ்வொரு மனங்களிலேயும் நன்மைகளும் தீமைகளும் குடி கொண்டிருக்கிறது.நன்மையின் கை ஓங்கியவர்கள் நன்மை செய்பவர்களாகவும், தீமையின் கை ஓங்கியவர்கள் தீமை புரிபவர்களாகவும் உருவகம் பெறுகிறார்கள்.

    வாழ்க்கையின் வெற்றிக்கு வழி உண்மையான உழைப்பே. இந்த உண்மையான உழைப்பை மூலதனமாகக் கொடுத்த யாருமே தம் வாழ்வில் தோற்றதாகச் சரித்திரமே இல்லை.

    என்ன இதை எவ்வாறு உன்னால் அடித்துக் கூற முடிகிறது ? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுவது எனக்குப் புரிகிறது.

    வாழ்வின் “வெற்றி” என்பதன் உண்மையான அர்தத்தைப் புரிந்து கொண்டால் என் வாதத்திலுள்ள ஆணித்தரமும் புரியும். வெறும் பணமும், உடமையாயுள்ள பொருட்களும் மட்டும் ஒருவருடைய வாழ்வின் வெற்றிக்குச் சான்றுகளல்ல.

     நான் எனது இளமையான வயதில் (18) இங்கிலாந்துக்குள் கால் பதித்தவன். எமது பின்புல நாடுகளில் பணி புரிந்த அனுபவமற்றவன் ஆனால் இங்கிலாந்தில் எனது உழைப்பின் அனுபவத்தின் அடிப்படையில் பல உண்மைகளை உள்வாங்கிக் கொண்டவன்.

    பெரும்பான்மை வெள்ளை இனத்தவர் நிறைந்த நாட்டிலே தாய்மொழியல்லாத ஆங்கிலத்தை நன்கு பேசக் கற்றுக் கொள்ள வேண்டிய காட்டாயத்தின் நடுவில் எனது புலம்பெயர் வாழ்வினை ஆரம்பித்தவன்.

    ஆங்காங்கே வெள்ளை இனத்தவருள் சில காடையர் மத்தியில் நிறவேற்றுமை காரணமாக சில தாக்கங்களைக் கண்டேனேயொழிய உண்மையான உழைப்பிற்கு அவர்கள் கொடுத்த மரியாதையைக் கண்கூடாக கண்ட அனுபவம் எனக்குண்டு.

    பேராசைகளின் வழி குறுக்கு வழியில் செல்வந்தர்களாகும் எண்ணம் கொண்டு அலையும் பேர்வழிகள் இகத்தினில் என்றுமே இருக்கத்தான் போகிறார்கள். அதே போல இப்பேராசைகளின் வழி நடந்தால் இறுதியில் அடையப் போகும் அழிவுகளை வாழ்வின் நிலையாமையின் உதாரணங்களின் மூலம் விளக்கும் ஆன்மீகச் சித்தர்களும் இருக்கத்தான் போகிறார்கள்.

    இவர்கள் இரண்டுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் எனும் தண்டவாளத்தில் தான் உலகம் எனும் ரயில் தனது பயணத்தைத் தொடரப் போகிறது. இவற்ரில் ஒன்று இல்லையென்றாலும் உலகின் பயணம் ஆட்டம் கண்டு விடும்.

    இவை இரண்டுக்கும் நடுவே தாமரை இலைமேல் உருளும் தண்ணீர்த்த துகளைப் போல வாழப் பழகிக் கொள்ளும் திறமை கொண்டவர்கள் தமது வாழ்வை அமைதியாக வாழ்ந்து விடுவார்கள் என்பதுவே உண்மையாகும்.

     மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டி உணவுமுறையும்: டயபடிஸ் 3

    செல்வன்

    டயபடிஸ் ஏன் வருகிறது என்பதற்கான விளக்கம் எளிமையானது.

    நாம் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனும் நிலையை அடைந்தவுடன் டயபடிஸ் நம்மை வந்தடைகிறது.

    நம் உணவில் நாள் தவறாமல் சர்க்கரை சத்து சேர, சேர இன்சுலினின் தேவையும் அதிகமாகிறது. இன்சுலின் நம் உணவில் உள்ள சர்க்கரையை கொழுப்பாக மாற்றி நம் உடலில் சேகரிக்கும்படி செல்களுக்கு கட்டளை பிறப்பிக்கிறது. உடலால் 2 நாள் தேவைக்கு மேலான குளுகோசை சேமிக்க முடியாது. ஆனால் ஏராளமான அளவு கொழுப்பை உடலால் சேர்க்க இயலும். ஆனால் தினமும் இன்சுலின் பிறப்பிக்கும் இந்த உத்தரவுக்கு கட்டுபடும் நம் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனும் நிலையை அடைகிறது. இந்த சூழலில் இன்சுலினின் கட்டளையை ஏற்று சர்க்கரையை கொழுப்பாக்க உடல் மறுக்கிறது. உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

    உடலை சொல்பேச்சு கேட்க வைக்க நம் பேன்க்ரியாஸ் மேலும் அதிகமான அளவில் இன்சுலினை சுரக்கிறது. ஒரு கட்டத்தில் தன்னால் இயன்ற அளவு அதிகபட்ச இன்சுலினை பென்க்ரியாஸ் சுரக்கிறது. ஆனால் அந்த அளவு அதிக இன்சுலினயும் எதிர்க்கும் ஆற்ரலை உடல் பெறுகிறது. அதனால் நாம் செயற்கையாக ஊசிமூலம் இன்சுலினை ஏற்றும் நிலைக்கு ஆளாகிறோம்.

    உணவில் உள்ள சர்க்கரை அளவை குறைத்தால் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் மிக குறைந்துவிடும். டயபடிஸ் வரும் வாய்ப்பும் குறையும்.

    இது குறித்து நிகழ்த்தபட்ட ஆய்வு ஒன்று கூறுவதாவது

    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15047685

    ஆய்வு நிகழ்த்தபட்டது கனெக்டிகட் பல்கலைகழத்தில்

    குண்டாக ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் 13 பெண்கள் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கபட்டனர். இரு பிரிவுகளாக பிரிக்கபட்டனர். ஒரு பிரிவு நம் மருத்துவர்கள் பைந்துரைக்கும் குறைந்த கொழுப்பு உணவை உட்கொண்டது. இன்னொரு பிரிவு குறைந்த சர்க்கரைசத்து நிரம்பிய உணவை உட்கொண்டது. இரு குழுவினரும் ஒரு நாளைக்கு 500 காலரி மாத்திரமே உண்ண பணிக்கபட்டனர். 1 மாதம் முழுக்க இப்படி முக்கால் பட்டினி டயட்டை அவர்கள் மேற்கொண்டனர்.

    1 மாதம் கழித்து முடிவுகள் ஒப்பிடப்பட்டன.

    உயர்கொழுப்பு உணவை உண்ட பெண்களின் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அளவு குறைந்த கொழுப்பு சத்து நிரம்பிய உனவை உண்ட பெண்களைன் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அளவை விட குறைந்தது கண்டுபிடிக்கபட்டது. அதாவது உயர்கொழுப்பு, குறைந்த சர்க்கரை சத்து நிரம்பிய உணவு 1 மாதத்தில் அதை உண்ட பெண்களின் உடலின் இருந்த இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைத்தது. ஆக வெறும் ஒரே மாதத்தில் இந்த பெண்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை ஜீரணம் செய்ய அவர்களுக்கு குறைந்த இன்சுலினே போதும் என்ற நிலை உருவானது.
    இன்னும் பல ஆய்வுகளை எழுதலாம்.

    ஆனால் அவற்றின் முடிவுகள் பெரிதும் மாறுபடுவது இல்லை.

    சர்க்கரை சத்து உள்ள உணவுகள் கெடுதல். இயற்கையான கொழுப்பு நிரம்பிய உணவுகள் உடலுக்கு நன்மையளிப்பவை.

    இதை தான் பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஏன் இன்னும் டயபடிஸ் பேஷன்டுகளுக்கு சர்க்கரைசத்து நிரம்பிய உணவுகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகின்றன?

    அமெரிக்க டயபடிஸ் அசோசியேஷன் உண்மையில் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையை குணமாக்க ஆலோசனை கூறுகிறதா அல்லது அவர்களை நிரந்தரமாக சர்க்கரை நோயிலேயே இருக்க வைக்க ஆலோசனை கூறுகிறதா என்பது பலசமயம் பிடிபடுவது இல்லை.

    உதாரணமாக அந்த சங்கம் கூறுவது

    “உங்கள் உடல் சர்க்கரையை குளுகோசாக எளிதில் மாற்றிவிடும்

    உடலில் உள்ல குளுகோஸ் லெவெலை விரைவில் ஏற்றும் சக்தி படைத்தது கார்போஹைட்ரேட் நிரம்பிய உணவுதான்

    எத்தனைகெத்தனை அதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடுகிறீர்களோ அத்த்னைக்கு அத்தனை உங்கள் உடலில் சர்க்கரை லெவெல் ஏறும்

    நீங்கள் அதிகம் உண்னவேன்டிய உணவுகள் கார்போஹைட்ரேட் நிரம்பிய ரொட்டி, அரிசி, பாஸ்டா போன்ற உணவுகளே..”

    எதாவது புரிகிறதா?

    எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

    சர்க்கரை உண்பதால் சர்க்கரை நோய் வரும் என சொல்லிவிட்டு சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை நிரம்பிய உணவுகளை பரிந்துரைப்பது ஏன்?

    எனக்கு புரியவில்லை

    உங்களுக்கு புரிகிறதா?

    (அடுத்த பகுதியில் நிறைவுறும்..)

    —
    செல்வன்
    www.holyox.blogspot.com

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 71

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

     

    “முகம் இல் வரி”
    “காமம் மிக்க கழிபடர் கிளவி”
    (46)

    நாரையே! நாரையே!
    எம் கானலிடத்தே வந்துதான் அடையாதே!
    கரையில் அடித்து
    அதை உடைக்கின்ற அலைகளையுடைய
    கடல் பகுதி சார்ந்த
    எம் தலைவனுக்கு
    நீ எம் காதல் நோயை
    உரைக்கவே இல்லை.
    எனவே,
    இனி எம் கானலில் வந்துதான் அடையாதே!

    கட்டுரை
    மாதவி பண்ணுப் பெயர்த்துப் பாடத் தொடங்குதல்

    (47)

    அங்ஙனம் கோவலன் பாடியது போலவே
    பாடல்கள் பாடிமுடித்தனள் மாதவி;
    பின்னர் தன் மென்காந்தள் மென்விரல்களால்
    கைக்கிளையைச் சுருதியாகக் கொண்டு
    இன்னிசையுடைய செவ்வழிப்பாலை என்னும்
    இசையதனை எழுப்பி
    முறைப்படி பாடினள் மாதவி;
    அதற்குப் பின்பு
    வேறொரு பண்ணையும் பாடத் தொடங்கினள்.

    முகம் இல் வரி
    தலைவி மாலைபொழுது கண்டு கூறுதல்

    (48)

    மாலைப் பொழுதே!
    நெய்தல் நில மக்களுக்குரிய
    ‘விளரி’ எனும் இனிய பாலைப்பண்ணை
    யான் யாழ் மீட்டிப் பாடுங்கால்,
    இளி நரம்பைத் தடவுவதற்குப் பதிலாக
    கைக்கிளை எனும் நரம்பைத் தடவும் வண்ணம்
    எனக்குத்தான் மயக்கத்தைத் தந்துவிட்டாயே!
    இங்ஙனம் பகைநரம்பு
    எனை மீட்டவைக்க வல்ல நீ
    என் உயிரை மாய்க்கவும் வல்லாய்!
    ஆதலால்,
    என் உயிரினைக் கொண்டு சென்று வாழ்வாயாக!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html<http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html>

    படத்துக்கு நன்றி:
    http://blondesearch.ru/index.php?key=Raja_Ravi_varma_paintings&page=1

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)

    பவள சங்கரி

    விட்டுக் கொடுத்தல் என்னும் வேதம்!

    அனைத்து சமரசமும் கொடுத்துப் பெறுவது என்ற அடிப்படையில் இயங்குவது, ஆனாலும் அடிப்படையில் எந்த கொடுக்கல், வாங்கலும் இருக்க முடியாது. எந்த சமரசமும் சரணடைவதையையே அடிப்படையாகக் கொண்டது. காரணம் இவையனைத்தும் கொடுப்பதில் மட்டுமே உள்ளதேயன்றி எடுப்பதில் அல்ல…
    மகாத்மா காந்தி

    சில உறவுகள் நாம் விரும்பி ஏற்பது, சில உறவுகள் நாம் பிறக்கும்போதே தானாகவே அமைவது. பல நேரங்களில் உடன் பிறந்தவர்கள், பெற்றவர்கள் என்று தானாக அமைந்த உறவுகளின் மன வேறுபாடுகளைக்கூட அனுசரித்துப் போகும் நமக்கு, நாமாக விரும்பி ஏற்றுக் கொள்ளும் உறவுகள் மற்றும் நட்புகளின் சிறு தவறுகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை. ஒரு கை ஓசையாக இருக்கும் பிரச்சனைகள் வெகு விரைவிலேயே நீர்த்துப் போய்விடுவதும் கண்கூடு.

    வங்கியில் காசோலையைக் கொடுத்து ஞாபகக் குறியையும் பெற்றுக் கொண்டு காத்திருக்கும் வேளையில் இருக்கையின் மறு முனையில் எனக்குத் தெரிந்த பெண் ஒருவரைப் பார்த்தேன். அவர் முகத்தில் ஏனோ ஒரு வாட்டம் தெரிந்தது. இரண்டு வருடமாகக் காதலித்தவரை சமீபத்தில்தான் பெரும் போராட்டத்திற்குப் பிறகு மணந்து கொண்டவர். இருவரும் கணினித் துறையில் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அவர் அருகில் சென்று நலம் விசாரித்தேன். ‘ஏதோ இருக்கிறேன்’ என்பது போல பதில் வந்தது. கணவரும் மற்றும் குடும்பத்தாரும் நலமாக இருக்கிறார்களா என்று விசாரித்தேன். அதற்கும் ஒற்றை வரியில் பதில் வந்தது. ஏதோ உடல் நலக் கோளாறாக இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. காரணம் அவர் எப்பொழுதும் கலகலவென பேசிக்கொண்டிருப்பவர். அடுத்தடுத்து எங்கள் இருவரின் ஞாபகக் குறி (டோக்கன்) எண்ணையும் அறிவிக்கவும் இருவரும் ஒன்றும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். மரத்தடியில் நிறுத்தியிருந்த தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுக்கப் போனவரை நெருங்கி, எடுத்த எடுப்பில் ‘கணவரிடம் ஏதும் பிரச்சனையா’ என்றேன் மனம் கேட்காமல். இதை சற்றும் எதிர்பாராதவர், என் கண்களை உற்று நோக்கியவாரு ஒரு நிமிடம் யோசித்தவர், வண்டியை நிறுத்திவிட்டு மீண்டும் மரத்தடிக்கே வந்தார். பின்னாலேயே சென்ற நான் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன் அவர்கள் திருமணத்திற்கு நானும் என்னால் ஆன முயற்சியை செய்த உரிமையுடன்.

    ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. ஆனால் வீட்டில் நிம்மதி இல்லாதலால் ஆபிசில் வேலை சரியாக பார்க்க முடியவில்லை’.

    ‘என்ன அப்படிப் பிரச்சனைன்னு நான் தெரிந்து கொள்ளலாமா’ என்றேன்.

    சற்று தயங்கியவர், மளமளவென கொட்ட ஆரம்பித்துவிட்டார். “அவர் கொஞ்சமும் அனுசரித்துப் போக மாடேங்கிறார். என்னமோ அவர் மட்டும் வேலைக்குப் போவது போலவும், நான் வீட்டில் நிம்மதியாக இருப்பது போலவும், எதற்கெடுத்தாலும் என்னையே அதிகாரம் செய்கிறார். ஏதோ நான் அவரோட அம்மா மாதிரியும், இவருடைய தேவைகள் அனைத்தையும் நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். என்னைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை, வீட்டு வேலைகளை பங்கிட்டுச் செய்யத் தயங்குகிறார். நான் அவமானப்படுத்தப்படுவது போல உணருகிறேன். இதனாலேயே ஆபிசிலும் வேலையை சரியாகச் செய்ய முடியவில்லை” என்றார்.

    ‘அவ்வளவுதானா, இன்னும் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? உன்னை சரிவர கவனித்துக் கொள்வதில்லையா அவர்?’ என்றேன் நிதானமாக.

    உடனே சட்டென்று, ‘அப்படியெல்லாம் இல்லை. என்மேல் உயிரையே வைத்திருக்கிறார். நான் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் தவித்துப் போய்விடுவார்’ என்றார்.

    நானும், ‘நீ முன்னால் சொன்ன அனைத்தையும் அப்படியே அவர் கோணத்திலிருந்து, அவர் சொல்வதாக நினைத்துப் பாரேன், அவரிடம் மனம் விட்டுப் பேசினாயா?’ என்றேன்.

    சற்று நேரம் அமைதியாக யோசித்தவர், ‘ஆமாம் அவரும் என்னை இப்படி நினைக்கலாமே.. ஆனால் ஒரு நாளும் இப்படியெல்லாம் அவர் என்னை திட்டுவதற்கு நினைத்துக்கூடப் பார்த்ததில்லை’ என்றவர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். சட்டென கண்ணில் நீர் கலங்க ‘நான் தான் தவறு செய்துவிட்டேனோ. அவருடைய சுபாவம் அதுதான் என்பதைப் புரிந்து என் ஈகோவை கொஞ்சம் விட்டுக் கொடுத்து, அவரிடம் என் நிலையை மெல்ல மெல்லப் புரிய வைத்திருக்க வேண்டும். என் மேல் இத்தனை அன்பு வைத்திருப்பவர் என் சிரமத்தையும் புரிந்து கொள்வார். நான் எப்படி யோசிக்காமல் போனேன்’ என்று கூறியவாறு கண்களை துடைத்துக் கொண்டவரின் முகத்தில் தெளிவைக் காண முடிந்தது. விட்டுக் கொடுக்கும் அந்த மனோபாவம் வந்த மறு நொடியே அவர் மனத்திலிருந்த குழப்பம் நீங்கி, நிம்மதி பிறந்தது தெரிந்தது. கட்டாயம் இனி அவர் மன நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுகிற மாற்றம் அவருடைய வாழ்க்கையை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.

    ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் ஒரு எல்லைக்கோடு அவசியம் தேவைப்படுகிறது. மனிதருக்கு மனிதர் அது வித்தியாசப்படலாம். அதனை உணர்ந்து அந்த எல்லையை மீறாமல் நடந்து கொள்வதே, குடும்பத்தில் நல்ல அமைதியான சூழலை ஏற்படுத்தக்கூடியது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால் வாழ்க்கையில் அமைதி நிலைத்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. நாம் உண்மையாக அன்பு செலுத்துபவரிடம் அதிகக் கோபம் காட்டவோ அல்லது வெறுப்பை உமிழவோ இயலாது. கோபத்தினால் ஏற்படும் விவாதமும், விதண்டாவாதமும், அந்த அன்பின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும். நாம் அன்பு செலுத்துபவர் நம்மீது தேவையில்லாத கோபத்தை வெளிப்படுத்தும்போது, இடையில் ஒரு நொடி அவர் நம்மீது அன்பு மழை பொழிந்த அந்த இனிய தருணங்களை நினைவில் கொண்டுவந்தால் போதும். அந்த சூழலே நொடியில் மாறிவிடும். பின்பு மெல்ல அவர் கோபப்பட்டதன் சூழலைக் கேட்டறிந்து அதற்கான உபாயம் மூலம் நம்மால் முடிந்த அளவிற்கு அதனைத் தீர்க்கப் பார்க்கலாம்.  இந்த  இடத்தில் நமக்கு வேண்டியதெல்லாம் ‘நான்’ என்ற அந்த எண்ணம் மறைந்து நாம் என்ற உணர்வு மேலிடல்தான்.  இது அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும். இந்த உணர்வே அவர்தம் கோபத்தையும், வேகத்தையும் குறைக்க முயலலாம். ஆக, நெருங்கிய உறவோ, நல்ல நட்போ எதுவாயினும் அடிப்படையான அந்த அன்பு பலப்பட வேண்டுமாயின் விட்டுக் கொடுத்தல் என்ற அந்த வேதத்தை கடைபிடிப்பதே சிறந்த யுக்தியாகும்.

    படங்களுக்கு நன்றி:

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 30

    இன்னம்பூரான்


    இன்றைய ஊடகங்களில் பலவற்றை ஊன்றி படித்தேன், ஒரு முட்டுக்கட்டையும் இன்னொரு முட்டுக்கட்டையும் மோதிக்கொள்வது போன்ற மாயத்தோற்றம் அளிக்கும் சுவாரசியமான நிகழ்வை அவை விமர்சித்த அழகை (இது வஞ்சப்புகழ்ச்சி என்று சொல்லாமலே புரியும்!) கண்டு. ஊடகம் என்றாலே அவர்களுக்கு வாசகர்களை தட்டி எழுப்பவேண்டும், சுட்டி அளித்து, கட்டித் தழுவவேண்டும்; ஆருஷி மர்டர் கேஸ் என்றால், உடனடி ஆஜர். உச்ச நீதிமன்றம்/ஆடிட் மவராஜன் என்றால், சுவையான தகவல் நாடி, வபையான செய்திகளை கோட்டை விடவேண்டும். சர்குலேஷனும், சந்தாவும் கூடினால் போதும். இந்த குறையை நீக்குவது வெளி நாட்டு ஊடகங்கள் என்பது, இன்றைய எகானமிஸ்ட் இதழில் வெள்ளிடைமலை.

    கனம் கோர்ட்டார் தீர்ப்புகளையும், ஆடிட் ரிப்போர்ட்களையும் ஊடகங்கள் சரிவர புரிந்துகொள்வதில்லை; துலாக்கோல் ஆய்வு செய்து, அவற்றின் சாராம்சங்களை அளிப்பது இல்லை என்ற கவலை எனக்கு பல வருடங்களாக உண்டு. வால்டர் லிப்மென் என்ற பிரபல இதழியல் வல்லுனர் ஊடகங்கள், மக்களின் கருத்துக்களை உருவாக்கும் பணியை நடுவு நிலையிலிருந்து, பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றார். நம் ஊடகங்கள் அதை மறந்து விட்டன என்று தான் பல நாளிதழ்களில், இன்றைய நிகழ்வறிக்கை தோற்றுவிக்கிறது.

    அது என்ன? ஒரு பன்னாட்டு நிறுவனமும், இந்திய நிறுவனமொன்றும் சம்பந்தப்பட்ட பங்கு விற்பனை விவகாரத்தில் மத்திய அரசும், அதனுடைய பெட் ரோலிய கம்பெனியும் (ஓ.என்.ஜீ.சீ) எடுத்த முடிவின் மீது ஆடிட்டர் ஜெனெரல் குறை கண்டுள்ளார். அது தவறு. மத்திய அரசு செய்தது தான் சரி. தணிக்கத்துறை சொல்வது எல்லாம் வேதவாக்கு அன்று. தணிக்கை அறிக்கையை நாடாளுமன்றம் விவாதிக்கும். பொதுக்கணக்குக் கமிட்டி அலசும். பிறகு, அமைச்சரகம் சொல்வதை ஏற்றுக்கொண்டு, நாடாளுமன்றம் தணிக்கை அறிக்கையை நிராகரிக்கக்கூடும் என்று கனம் உச்சநீதி மன்றத்தில் இன்று சொல்லிவிட்டார்கள். டும்! டும்! என்று ஹூங்காரத்துடன் தொடங்கி, ஆடிட்டுக்கு சம்பந்தமில்லாத ஒரு பொது நலவழக்கு இது, தணிக்கைத்துறையின் செயல்பாடுகளை கனம் கோர்ட்டார் விமரசிக்கவில்லை என்பதையெல்லாம் அடக்கி வாசித்தது, வால்டெர் லிப்மென் என்ற இதழியல் பிதாமகனின் அரிச்சுவடிக்கு முரண்.
    சரி. கனம் கோர்ட்டார் சொன்னது தான் என்ன என்று அறிய உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பைப் படித்தேன். அன்றாடம் தீர்ப்புகள் வெளி வந்து விடுவது ஒரு பெரிய ஆறுதல்.

    அருண் குமார் அகர்வால் என்ற விண்ணப்பதாரரின் பொது நலவழக்கு (ரிட் பெட்டிஷன் 69/2012) மீது இன்று (09 04 2013) நீதிபதிகள். திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் & தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பில், தள்ளுபடி செய்யப்பட்டது. விண்ணப்பத்தில் தணிக்கை அறிக்கை சான்றாகக் கூறப்பட்டிருந்தது. 46 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில், முதல் 36 பக்கங்களில் தணிக்கை அறிக்கை பற்றிய பேச்சே இல்லை. அரசு எடுத்த முடிவுகள் பற்றி ய சாட்சியம், ஆவணங்கள், இரு தரப்பு வாதங்கள், அரசியல் நடைமுறைகள், பொருந்தும்/பொருந்தாத முன்னைய தீர்ப்புகள் பற்றி விவரமான, தெளிவான அலசல்கள் தான் இடம் பெற்றன. அடுத்த பத்து பக்கங்களில், ஆடிட்டர் ஜெனரல் பற்றி அரசியல் சாஸனம் கூறுவது, நாடாளு மன்றத்தின் மேலாண்மை, ஆடிட் வரலாறு, வல்லுனர்களில் கருத்து எல்லாவற்றையும் விலாவாரியாக அலசி, தொகுத்து அளித்து விட்டு, நான்கு வாக்கியங்களில், தணிக்கை அறிக்கையின் மீது நாடாளும் மன்றத்துக்கு உள்ள மேலாண்மையை கோர்ட்டார் ஸ்வீகரிக்கலாகாது என்பதை விளக்கும் போது, ஆடிட் கூற்றை வேதவாக்காக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றாலும், இந்திய அரசியல் சாஸனம் அமைத்த தணிக்கைத்துறையின் அறிக்கையின் மதிப்பை குறைத்து எடை போடக்கூடாது; அதே சமயம் எதிர்வாதங்களில் நியாயம் இருந்தால் அதை புறக்கணிப்பதும் சரியல்ல என்று தீர்ப்பு கூறுகிறது. இதையே தான் தணிக்கைத்துறையும் ஒவ்வொரு அறிக்கையிலும் முன்னெச்சரிக்கையாக, பல வருடங்களாக தாக்கல் செய்து வருகிறது. இந்த வழக்கில் தணிக்கைத்துறை ஒரு கட்சிக்காரர் இல்லை. அதனால், இந்த விளக்கம் அளிக்க அவர்களுக்குத் தருணம் கிட்டவில்லை.

    இந்த தீர்ப்பில், மற்றும் பல வகைகளில் முக்கியமானது.
    அரசு தீர்மான கட்டங்கள் துல்லியமாக அலசப்பட்டுள்ளன;
    நடைமுறை சாத்தியங்கள் அழகாக விவாதிக்கப்பட்டுள்ளன;
    ஆடிட் வரலாறு நிரல் நிறையாக கொடுக்கப்பட்டுள்ளது;
    குறிப்பிடப்பட்ட பழைய தீர்வுகள் மிகவும் தேவையானவை;

    இன்றைய காலகட்டத்தில் -கர்நாடக தேர்தல் முடிவுகள், ஜேபிஸி வில்லங்கம், ஸீபீஐ வில்லங்கள் – இது மேலும் ஆய்வு செய்ய வேண்டிய ஆவணம்.
    வாசகர்களுக்கு ஆர்வம் இருக்கும் பக்ஷத்தில், ‘கனம் கோர்ட்டார் அவர்களே!’ என்ற தொடரில் அவற்றை பற்றி எழுதுவதாக உத்தேசம். பார்க்கலாம்.

    உசாத்துணை:

    http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=40390


    சித்திரத்துக்கு நன்றி:

    http://1.bp.blogspot.com/-vcKSHYj-3lc/TfM1y3C05wI/AAAAAAAAAFg/A-HNd614QXk/s1600/SUPREME+COURT+AND+PRIVACY+RIGHTS.jpg


    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(56)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய மடல் மூலம் எனது அன்பான வாழ்த்துக்கள்.

    புரியாத பல புதிர்கள், புதிதான பல வினாக்கள் புலர்ந்து மனதில் அபல அசைவுகளை நிகழ்த்துவதுண்டு.

    நான் எனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது எனது காரில் உள்ள வானொலியில் நடந்த கருத்தாடலைச் செவிமடுத்தேன்.

    அதன் சாரம் என் உள்ளத்தில் பல விடையறா வினாக்களை விதைத்தன. நாம் இலகில் எந்த நாட்டில் வாழ்கிறோம் என்பது அல்ல எங்கு வாழ்ந்தாலும் எம் வாழ்வை எம்முறையில் வாழ்கிறோம் என்பதுவே முக்கியம்.

    குழந்தைகள் எந்த நாட்டிலும் சரி, எந்த சமூகத்திலும் சரி ஒரே மதிரியான உணர்வுகளுக்குள்ளாக்கப் படுகிறார்கள் .தமது குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்ளாத பெற்றோர் இருப்பது அபூர்வம்..

    ஒரு குழந்தையின் எதிர்காலத்தை சரியான வகையில் வழிநடத்துவதற்கு அந்தக் குழந்தைக்கான கல்வியறிவே முக்கியமானது. அக்கல்வியறுவைப் புகட்டுவதர்குக் காரணமான ஆசிரியர்கள் அக்குழந்தையின் எதிர்காலத்தை வகுப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

    அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் எத்தகைய மதிப்பைக் கொடுக்கிறார்கள் ? இது ஒரு ஆழமான கேள்வியே !

    சரி, இனி நான் வானொலியில் செவிமடுத்த அந்தக் கருத்தாடலுக்கு வருவோம். அதன் சாரம் இதுதான்,

    இங்கிலாந்திலே உள்ள பாடசாலை மாணவை ஒருவரின் தாயர் அவருக்கு அம்மாணவியின் தலைமை ஆசிரியரால் கொடுத்தனுப்பப்பட்ட கடிதத்தைப் பற்றிக் கொண்ட ஆவேசத்தைப் பற்றியதுவே !

    சரி எதற்காக அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது என்று நினைக்கிறீர்கள்?

    அம்மாணவியின் வயது 11 வயது. இங்கிலாந்திலிலுள்ள பாடசாலைகளில் மாண்வர்களின் கல்வித் தராதரத்தை நிர்ணயிப்பதற்காக “கல்வித் தராதர நிர்ணயிப்புப் பரீட்சை (Scholastic Assessment Test – SAT) @ என்றழைக்கப்படும் பரீட்சை 11 வயது மாணவர்களுக்கும் நடத்தப்படும்.

    இப்ப்ரீட்சையில் அதி சித்தி எய்தும் மாணவர்களின் விகிதாசாரப்படி பாடசாலைகளும் வரிசைப் படுத்தப்பட்டு அட்டவணைப்படுத்தப்படும்.

    இப்படியான பரீட்சையொன்றில் தோன்றப்போகும் 11 வயது மாணவியின் மூத்த சகோதரிக்காக ஒரு பிறந்தநாள் விழாவைத் தாயார் ஏற்பாடு செய்திருந்தார். இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்ட நாள் அப்பரீட்சைக்கு முந்திய மாலையாகும்.

    சரி இதர்கும் அம்மாணவியின் தலைமை ஆசிரியருக்கும் என்ன சம்மந்தம் ? உங்கள் கேள்வி புரிகிறது.

    அவ்விழாவிற்கு இம்மாணவியின் சில நண்பர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்தச் செய்தி அத் தலைமை ஆசிரியரின் காதுக்கு எட்டியதும் அவர் அம்மாணவியின் தாயாருக்கு ஒரு கடிதம் னௌப்பியிருக்கிறார்.

    “உங்களுடைய மகளின் பரீட்சைக்கு முந்திய மாலை இப்படியான ஒரு விழாவை ஏற்படு செய்து உங்கள் மகளையும் அவர்களது நண்பர்களையும் அழைத்திருப்பது வேதனைக்குரியது.இதைத் தாங்கள் ரத்துச் செய்ய வேண்டும்” எனும் வேண்டுகோளை இக்கடிதத்தின் வாயிலாக விடுத்திருந்தார்.

    இம்மாணவியின் தாயாருக்கோ பொத்துக் கொண்டு வந்து விட்டது கோபம்.

    என்னுடைய மகளின் பிறந்தநாள் வாழ்த்தை இஅரத்துச் செய்யச் சொல்லிக் கேட்பதற்கு இவர் யார்? என்னை என்ன கையாலாகாத தாயார் என்று எண்ணி விட்டாரா? என்று கோபம் கொண்டு ரகளை செய்திருக்கிறார்.

    இவ்விடயத்தில் அத் தலைமை ஆசிரியர் நடந்து கொண்ட முறையா ? அன்றி அத் தாயார் நடந்து கொண்ட முறை சரியா என்பதுவே அவ்வானோலியிக் கருத்தாடலின் கரு..

    குழந்தைகளின் மாணவப் பருவம் என்பது பொன்னான பருவமாகும். இப்பருவத்திலே இவர்களின் மனங்களிலே ஏற்படும் நிகழ்வுகளின் தாக்கம் அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கியமானதாகி விடுகிறது.

    இப்பருவத்திலே பிள்ளைகள் தமது இல்லங்களிலே பெற்றோர்களுடன் கழிக்கும் நேரத்தோடு ஒப்பிடும் வகையில் அதிக நேரத்தை பாடசாலிகளில் மற்றைய மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் செலவிடுகிறார்கள்.

    ஆசிரியர்களும் இம்மாணவர்களின் நலன்களிலே பெற்றோர்களுக்கு இணையான வகையில் அக்கறை கொள்வது அவசியம்.

    அப்படிப் பார்க்கையில் இத் தலைமை ஆசிரியர் அம்மாணவியின் நலன் குறித்து அம்மாணவியின் தாயாருக்கு வலியுறுத்தியது எப்படித் தவறாக முடியும் என்பது ஒரு சாராருடைய கருத்து.

    தன் குழந்தையின் நலனில் ஒரு தாய்க்கு இருக்கக் கூடிய அக்கறையை விட ஒரு தலைமை ஆசிரியருக்கு அதிக அளவில் எப்படி அக்கறை இருக்க முடியும் ? தன்னுடைய பாடசாலை தர அட்டவணையில் மேலிடத்தைப் பெற வேண்டும் எனும் அக்கறையினால் அத்தாய்ய்ய்ய்யைக் கட்டுப்படுத்த முயல்கிறார் என்கிறார்கள் ஒரு சாரார்.

    சரி எது எபடியாக ஆவது இருந்து விட்டு போகட்டும்.

    தன்னுடைய பாடசாலை உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு அதிக அளவிலான மாணவர்கள் அதிக புள்ளிகள் எடுத்துச் சித்தியெய்த வேண்டும் என்று அத்தலைமையாசிரியர் அம்மாண்வியை அதிக புள்ளிகள் எடுக்கும் வகையில் தூண்டுவாராக இருந்தால் அத்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹு அம்மாணவிக்கும், அம்மாணவியின் தாயாருக்கும் நன்மையாகத் தானே முடியும் ?

    மாணவர்களுக்கு நாமளிக்ககூடிய செல்வங்களில் அதியுயர்வானது கல்விச் செல்வம் ஒன்றேதான். ஏனேனில் அதை யாராலும் எப்போதும் அவர்களிடமிருந்து பறித்து விட முடியாது .

    பெற்றோர்களும், ஆசிரியர்களும் இணைந்தால் தான் மாணவர்களின் வாழ்க்கை ஒளிமயமானதாகும். பெற்றோர்கள் ஆசிரியர்களை இடையூறாக நோக்குவதோ அன்றி ஆசிரியர்கள் பெற்றோர்களை இடையூறாக நோக்குவதோ ஒரு மாணவ பருவக் குழதைக்க்கு ஆரோக்கியமாக அமையாது.

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • பாரதியின் வேத முகம் – 10

    சு. கோதண்டராமன்

    தேன் வந்து பாயுது காதினிலே

    பாரதியின் பிரபலமான பாட்டு, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்பது. நாவால் சுவைக்க வேண்டிய தேன் காதிலே பாய்ந்தால் அதன் இனிமையை அனுபவிக்கமுடியுமா என்று எண்ணுகிறோம்.

    ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்று ஒரு பாடல். வாக்கு காதினால் உணரப்படுவது. இதில் கண்ணால் காணக் கூடிய ஒளி எங்கிருந்து வந்தது என்று நமக்குச் சந்தேகம் வருகிறது.

    குழந்தைக் கதை என்ற தலைப்பில் ஒரு கதை- பாரதி எழுதியது. பெயர் தான் குழந்தைக் கதை. விஷயம் என்னவோ கனமானது தான், முதல் உலகப் போரைப் பற்றியது. அதில் ஒரு வரி, மேலே பருந்துகளும் கருட பக்ஷிகளும் வட்டமிட்டு வெயிலைத் தின்று கொண்டுலாவின, என்று வருகிறது. வெயிலையாவது தின்பதாவது.

    இப்படிப் பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றி மாற்றிச் சொல்வது, ஒரு கவித்வ உத்தி மட்டுமல்ல. அதன் பின்னணியில் ஒரு பெரிய தத்துவம் உள்ளது.

    பாரதியின் பதஞ்சலி யோக சூத்திர விளக்கத்தைப் பார்ப்போம். யோக சாஸ்திரப்படி, வெளியில் தெரியும் கண் காது முதலான பொறிகளால் நாம் காட்சி கேள்வி முதலான அனுபவம் பெறுவதில்லை. மாறாக, சித்தமே காண்கிறது, கேட்கிறது, வாசனை, தொடு உணர்ச்சி, சுவை ஆகியவற்றை அறிகிறது. சித்தம் செயல் படாமல் இருக்கும் போது பொறிகள் தம் வேலையைச் செய்தாலும் அது நம் அறிவுக்கு எட்டுவதில்லை. மாறாக, சித்தம் ஆனந்த நிலையில் இருக்கும் போது இந்த எல்லா அனுபவங்களும் பொறிகள் இல்லாமலே கூட நிகழும்.

    இதை விளக்குவது அவருடைய ஞானரதம் என்னும் கட்டுரை. கந்தர்வ லோகத்தில் பாரதி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அனுபவத்தை அவருடைய வார்த்தைகளிலேயே கேட்போம்.

    கந்தர்வ லோகத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னை அறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி ரமணீயமான ஸங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினை உடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று, அது சரியான உவமை ஆகமாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக் கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இது என்ன ஒலி, எங்கிருந்து வருகிறது என்று யோசித்தேன். எனது அறிவிற்குப் புலப்படவில்லை.

    இந்த இனிய ஒலி என்னைப் பரவசப்படுத்துகிறதே, அது எங்கிருந்து வருகிறது என்றேன். மேலே பார் என்றனள். நீல வானத்தில் சந்திரன் தாரகைகளிடையே கொலு வீற்றிருக்கக் கண்டேன்.

    அவருடைய கிரணங்கள் என்றாள்.

    சந்திர கிரணங்களா, சந்திர கிரணங்களுக்கும் இந்த மனோகரமான தொனிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன்.

    சந்திர கிரணங்களுக்கு இந்த இனிய ஓசை இயற்கை. அது இந்த உலகத்தில் நன்றாகக் காதில் விழுகிறது. உங்கள் மண்ணுலகத்திலே ஜனங்களுடைய செவியில் விழுவது கிடையாது. ஆனால் அங்கே கூட அருமையான கவிகளின் செவியில் இந்த ஓசை படும் என்றாள்.

    இவ்வாறு பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றிச் சொல்வதற்கு வேத ஆதாரம் உண்டா? உண்டு. யஜுர் வேதம் 1.1.5.11 ‘ஒளியுள்ள சொற்களைச் சொல்லுக’ என்கிறது. நம்மைப் போன்ற சாமானியர்கள் சொல்லின் ஒலியை மட்டுமே அறிவோம். ரிஷிகள் அதன் ஒளியையும் அறிந்திருந்தார்கள். மருத்துகள் (புயற் காற்று) சூரியனைப் போலப் பிரகாசிக்கிறது என்கிறது ரிக் வேதம் 1.64.2. இன்னும் நிறைய உண்டு.

    வேத ரிஷிகளைப் போல் பாரதியின் சித்தமும் எப்பொழுதும் பரம்பொருளின் நினைவிலேயே, ஆனந்த நிலையில் தோய்ந்திருந்தது. அதனால் அவருக்குப் புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் சாத்தியமாயிற்று. தீக்குள் விரலை வைத்த போது நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் கிடைத்தது. காற்றுத் தேவனின் உடல் வயிர ஊசி போல ஒளி வடிவமாகக் காட்சி தந்தது.

    Share
  • பிக்கோலிம் புளுகு – 3

    தேமொழி

    (தொடர்ச்சி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.

     

    இப்ரம்பூர் மோதல்:

    தங்கள் பேரரசின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க விரும்பிய மராட்டியர்கள் அது குறித்து கோவாவின் ஆட்சி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பினர். ஆனால் அவ்வதிகாரிகள் அதற்கு உடன்பட மறுத்தனர் [9] [10]. அத்துடன் ஒரு கால கட்டத்தில் போர்சுக்கீசியர்கள் தங்களது கடற்படையை வடக்கு நோக்கி நகர்த்தி, கோலாப்பூர் பகுதியினை ஊடுருவி நோவா கான்கியுஸ்டாஸ் பகுதியில் உள்ள மராடியர்களை விரட்டியடிக்கவும் எண்ணினர். ஆனால் இந்த எண்ணத்தை அவர்கள் நிறைவேற்றத் தயங்கியதற்கு இருந்த ஒரே காரணம், இது மராட்டியர்களுக்கு வெறுப்பை ஏற்றி அவர்களை டச்சுக்காரர்களுடன் கூட்டணி அமைக்கச் செய்து, அந்தக் கூட்டணி போர்ச்க்கீசியர்களுக்கெதிராக மாறி அவர்களுக்கேப் பாதகம் ஏற்படுத்தக் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வினால்தான் [12].

    மோதலின் முதல் துவக்கம் ஏற்பட்டது பேர்நேம் பகுதியில் உள்ள சிறிய ஊரான இப்ரம்பூரில். இப்ரம்பூர் முக்கிய சாலை வழித்தடங்களுக்கும் சப்போரா (Chapora River) ஆற்றுப் பகுதியிலும் அமைந்திருந்தது. போர்ச்சுக்கீசியப் படைகள் இப்ரம்பூரில் குவிக்கப்படுவதாக பிக்கோலிம் பகுதியில் இருந்த மராட்டியர்களுக்குத் தவறான தகவல் கிடைக்கிறது [9]. ஆனால் உண்மையில் அந்த சமயத்தில் போர்ச்சுக்கீசியப் படைகள் எல்லையில் இருந்து வெகு தொலைவில் இருந்த ‘அலோர்னா’ (Alorna Fort) கோட்டைப் பகுதியில்தான் இருந்தது [13].

    மராட்டியர்கள் தங்கள் நாட்டின் எல்லையைக் கடந்து குதிரைப்படையை இப்ரம்பூருக்கு உளவு பார்க்க அனுப்பி வைத்தனர் [9]. ஆனால் போர்சுக்கீசியப் படை அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி அங்கு இல்லாது போனாலும், போர்ச்சுக்கீசியர்கள் படை அவ்விடத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கக்கூடும், எனவே இப்ரம்பூரை கண்காணிப்பது அவசியம் என்று மராட்டியப் படைத் தளபதி கருதினார். பிக்கோலிம் மற்றும் பேர்நேம் பகுதியின் போர்சுக்கீசியப் படைகள் ‘மேனுவல் டி எலாமினோஸ்’ (Manuel de Elaminos) தலைமையின் கீழ் வழிநடத்தப் பட்டது. இப்டைத் தளபதிக்கு மராட்டியர்கள் இப்ரம்பூரில் நுழைந்து விட்ட தகவல் கிடைத்தது. மராட்ரடியர்களின் ஊடுருவல் தகவல் கோவாவில் உள்ள வாஸ் கோட காமா நகருக்கும் அறிவிக்கப்பட்டது [13]. இத்தகவல் அறிந்ததும் போர்ச்சுக்கீசியர்கள் அலோர்னா கோட்டையினை பாதுகாப்பில்லாத நிலையில் விட்டு விட்டு இப்ரம்பூருக்கு படையை நகர்த்தி அங்கிருக்கும் மராட்டியர்களைத் தாக்க முடிவு செய்தனர் [13].

    ஆகஸ்ட் 1640 ஆம் ஆண்டு நடந்த போர்ச்க்கீசியத் தாக்குதல் விரைவாகவும் திறம்படவும் நடத்தப்பட்டது. இப்ரம்பூருக்குச் செல்லும் மேற்கிலும் வடக்கிலும் இருந்த இரு முக்கிய வழித்தடங்களும் சூழ்ந்து கொள்ளப்பட்டது. நகருக்கு அதிக சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் பொருட்டு காலாட்படைகளையே அடுத்தடுத்து அனுப்பி போர்ச்சுக்கீசியர்கள் போரை நடத்தினர். காலாட்படையினறுக்குச் சிறிய சேதம் ஏற்பட்ட நிலையில், மராட்டியர்கள் குவித்திருந்த சேனையின் அளவைக் கண்டதும் போர்சுக்கீசியர்கள் பின்வாங்கத் தொடங்கினர் [9]. போரில் தங்கள் கை மேலோங்கியிருப்பதை உணர்ந்த மராட்டியர்கள் போர்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டைக்கு செல்லும் வழியில் விரட்டியடிக்க முடிவெடுத்தனர் [9]. மராட்டியர்களின் குதிரைப்படை பின்வாங்கிய போர்ச்சுக்கீசியர்களின் காலாட்படையை மேலும் எல்லையையிலிருந்து துரத்தியது. தொடர்ந்த போரின் காரணமாக இப்ரம்பூரின் வடதிசைப் பாதுகாப்பில் இருந்த போர்ச்சுக்கீசியப் படைகள் மேற்குப் பகுதியில் நடைபெறும் போரில் உதவி புரிய வரவழைக்கப் பட்டனர் [9].

    ஆனால் ஒப்பிடும்பொழுது அளவில் மிகக்குறைவாக இருந்த வடதிசையின் போர்ச்சுக்கீசியப் படை, இப்ரம்பூரில் இருந்து முன்னேறிய மராட்டியக் காலாட்படைகளினால் தடை செய்யப் பட்டது [9]. அதனால் முதல் நாள் போரின் இறுதியில் இரு துருப்புகள் மட்டுமே எஞ்சின, இழப்புகளும் குறைவாகவே இருந்தது. அத்துடன் மேற்குப் பகுதியின் போர்சுக்கீசியப் படை கையாண்ட புத்திசாலித்தனமான போர் நடவடிக்கைகளினால் ஒரு ஒழுங்கு முறையில் கட்டுப்பாட்டுடன் அவர்களால் பின்வாங்க முடிந்தது [9]. ஆயினும், போரின் தீவிரமும், மராட்டியச் சேனையின் பெரும்பான்மை பலமும் போர்சுக்கீசியர்களால் உடனடியாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அத்துடன், இம்ரம்பூர் மக்கள் மராட்டியப் படைகளை ஆதரித்ததுடன் அவர்களது படைகளையும் பலப்படுத்திக் கொள்ள உதவியுள்ளனர் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலைக்குப் போர்சுகீசியர்கள் தள்ளப் பட்டனர். இந்துக்கள் பெரும்பானையாக வசிக்கும் இப்ரம்பூர் போன்ற மற்ற பிற எல்லைப்புற ஊர்களுக்கும் இம்பரம்பூர் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் நம்பத் தொடங்கினர் [14].

    தொடர்ந்து இரண்டு நாட்களாக அலோர்னா கோட்டையினை நோக்கி மராட்டியர்கள் விரட்டிய பின்பு கோவாவின் வாஸ் கோடா காமா பகுதியிலிருந்த போர்ச்சுக்கீசியப் படை போர்ச்சுக்கீசியர்களின் உதவிக்கு வந்து சேர்ந்தது [9]. இதனால் ஏற்பட்ட சமஅளவுள்ள படை பலத்தினால் போர்ச்சுக்கீசியர்களுக்கு மராட்டியர்களை எதிர்த்து நிற்கும் திறன் ஏற்பட்டது. அடுத்த நாள் மேற்கொண்ட திறமையான நடவடிக்கைகளினால் இருபடைகளும் ஒன்றை ஒன்று முன்னேறவிடாதவாறு முடக்கப் பட்ட நிலை ஏற்பட்டது. அடுத்து தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் நிகழவில்லை. இருதரப்பினரும் தேவையற்ற, ஆபத்து நிறைந்த வழிகளை மேற்கொண்டு இழப்புகளை அதிகப்படுத்தும் நிலையினைத் தவிர்க்க விரும்பினர் [9]. இருதரப்பினரும் தற்காப்பிற்காக மட்டுமே தாக்குதலை நடத்த முயன்றனர். போரின் முதல் இரு துவக்க நாட்களில் மராட்டியப் படை ஏற்படுத்திய சேதங்கள் போர்ச்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டையினை நோக்கி பின் வாங்க வைத்திருந்தது. ஆனால் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு பின்வாங்குதல் நிறுத்துப் பட்டிருந்தது. தனது திறமையான குதிரைப்படையினை கையாண்ட விதத்தின் மூலம் போர்ச்சுக்கீசியர்களைத் தாக்காமல் அவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே மராட்டியப் படை தடை செய்தது [9].

    ஜூலை மாதத்தின் துவக்கத்தில், இம்பர்ம்பூரில் இருந்து வெகு தொலைவிற்கு நகர்த்தப் பட்டு விட்ட காரணத்தினால், போர்ச்சுக்கீசியர்கள் பீரங்கிகளை போரில் உபயோகப் படுத்த தங்கள் மேலிடத்தின் அனுமதியைப் பெற்றனர். பீரங்கித் தாக்குதல் மராட்டியக் காலாட்படையினை செயலிழக்கச் செய்ய உதவியது, ஆயினும் இத்தாக்குதலினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறைவே. தொடர்ந்த பீரங்கித் தாக்குதல் மராட்டியக் குதிரைப் படைகளைக் குறிவைத்தது. இதனால் சுடப்படக்கூடிய தாக்குதல் எல்லையிலிருந்து மராட்டியப் படைகள் பின்னடைந்தன [9].

    மராட்டியர்கள், அலோர்னா கோட்டையின் அருகாமையை விட்டு விலகி, மீண்டும் ஒருங்கிணைத்து, சாலையின் தென்திசையில் இருந்து வேகமாக முன்னேறித் தாக்கி எதிரியின் பீரங்கிப் படையைச் சிதறடித்து அவர்களுக்கு பேரிழப்பை உருவாக்கத் திட்டமிட்டனர் [9]. போர்ச்சுக்கீசியர்களின் கைவசம் இருந்த உயர் தொழில்நுட்ப போர்க்கருவிகளுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் தங்களது போர்த் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு மராட்டியப் படைகள் தள்ளப்பட்டன.

    மராட்டியர்களின் போர்த்திட்டத்தைப் புரிந்து கொண்ட போர்ச்சுகீசியர்கள் விரைவில் தங்களது படைகளைப் பல பிரிவுகளாக்கி புதிய வேகத்துடன் முன்னேறிய மராட்டியப் படையினை எதிர்த்துத் தாக்கினர். இத்தாக்குதல் முறையினை சற்றும் எதிர்பாராத மராட்டியப் படை, எதிர் தாக்குதலில் நிலைகுலைந்து மேலும் தென் திசையை நோக்கி, சப்போரா ஆற்றினை நோக்கி நகர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது [9].

    சப்போரா ஆற்றினை அடைந்த மராட்டியக் குதிரைப் படை, மராட்டிய எல்லைக்குள் பின்வாங்கி தந்திரமாக போர்ச்சுக்கீசியப் படையினை அவர்களது பாதுகாப்பான கோவா பகுதியில் இருந்து நகரச் செய்து தங்களது மராட்டிய எல்லைக்குள் இழுக்க நினைத்தனர். ஆனால் போர்ச்சுகீசியப் படையோ சப்போரா ஆற்றினை நோக்கி முன்னேறுவதைத் தவிர்த்தனர் [9]. ஜூலை மாதத்தின் முடிவில் மராட்டியப் படைகள் தங்கள் எல்லைக்குள் ஒருங்கிணைந்தன. அலோர்னா கோட்டையினைப் பலப்படுத்திய பிறகு, ஆல்பெர்ட்டோ பின்ட்டோவின் தலைமையின் கீழ் போர்ச்சுக்கீசியப் படைகள் சப்போரா ஆற்றின் வடக்கில் பரவலாக நிலைகொண்டு தங்களது நிலையினை நன்கு பலப்படுத்திக் கொண்டனர் [11].

    (தொடரும்)

    படம் உதவி:
    அலோர்னா கோட்டை – http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg

    ______________________________________

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    [12] Thompson op cit. p 211.
    [13] Thompson op cit. p 212.
    [14] Thompson op cit. p 206.
    [15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
    [16] Thompson op cit. p 215.
    [17] Thompson op cit. p 219.

    Further reading
    Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
    Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
    Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 70

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    **
    *(43)*
    **
    *”சாயல் வரி”
    “மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் அல்லது ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி
    இயற்பழிக்க, தலைமகள் இயற்பட மொழிதல்”*

    தாழையை வேலியாகக் கொண்ட
    இக்கழியில்
    முன்னர் ஒருவர் வந்திருந்தார்;
    நாம் விளையாடிய
    பொய்தல் விளையாட்டை
    மறக்க வைத்துச் சென்ற அவர்
    நம் மையல் கொண்ட
    மனத்தைவிட்டு நீங்கி அகல்வாரல்லர்.

    *(44)*

    கடற்கரைச் சோலையை
    வேலியாகக் கொண்ட
    இக்கழியில்
    முன்னர் ஒருவர் வந்திருந்தார்;
    ‘நீ அருள்செய்வாய்” என்று
    வேண்டி நின்றிருந்த அவர்
    நம் மான் ஒத்த பார்வையை
    மறப்பாரல்லர்.

    *(45)*

    நேற்றைய நாளில்
    அன்னம் தன் துணையுடன்
    விளையாடக் கண்டிருந்தார் ஒருவர்.
    அதனையே நோக்கி நின்றிருந்த அவர்,
    பொன்னிறத்தில் நம் மேனிமீது
    படர்ந்திட்ட பசலை போல
    நம்மை விட்டு நீங்குவாரல்லர்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html<http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html>
    படத்துக்கு நன்றி:
    http://www.gunathamizh.com/2011_06_06_archive.html

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (10)

    பவள சங்கரி

    இரசனையில் செல்வந்தராகவும், பொறாமையிலிருந்து விடுதலை பெற்றவராகவும், அடுத்தவரின் நன்மைகளைக் கொண்டாடுபவராகவும், இல்லாத மற்றும் இரக்கமற்ற வேளையிலும் இன்னும் நெருக்கமான பெருந்தன்மையுடனான இருதயத்தினாலான அன்பு – இவை அனைத்துமே பணத்தினால் வாங்க முடியாத பரிசுகள்.
    ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் (1850 – 1894)

    தயங்காமல் வழங்கவேண்டிய உற்சாகமான பரிசு!

    தத்தித் தத்தி முதல் அடி எடுத்து வைக்கும் குழந்தையைப் பார்த்தவுடன் யாருடைய குழந்தை என்ற பாரபட்சமில்லாமல் ‘ஆகா, அருமையாக நடந்துவிட்டாயே. நீ பெரிய ஆளாகிவிட்டாயே என் செல்லமே…’ என்றெல்லாம் மனமார பாராட்டத் தோன்றும். அந்தக் குழந்தையும் அதனைப் புரிந்து கொண்டு பெருமையாக அடுத்த அடியை எடுத்து வைக்க முயலும். அந்த சின்னச்சின்ன பாராட்டுகள் மூலமாகவே குழந்தை ஒவ்வொரு காரியமாக செய்து வளர்ந்து வருகிறது. வளர்ந்த பிறகும் மனிதர்களிடம் இந்த எதிர்பார்ப்பு அப்படியே நிலைத்துவிடுகிறது. பாராட்டுகளுக்கும், புகழுக்கும் பெருவிருப்பம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். நம்முடைய அந்த மனம் திறந்த நேர்மையான பாராட்டும் அவருக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அது யதார்த்தமான நல்லெண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. இதனால் மனமும் இலகுவாகி நம் பணியையும் உற்சாகத்துடன் கவனிக்க வழிவகுக்கிறது. அடுத்தவர்களின் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அதிகரிக்கும் விதமாக எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நாம் செய்யும் இந்த சிறிய காரியம் அவருடைய நல்லலெண்ணத்தை முழுமையாக சம்பாதித்துக் கொடுத்துவிடுகிறது. ஆக நம் சூழலுக்கு ஏற்றவாறு நம்மைச் சுற்றியுள்ள நம் சக மனிதர்களிடம் நம்மைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துவதன் மூலம் நம்மைச் சுற்றியும் நல்ல விசயங்கள் நடந்து நம் வெற்றிப் பாதையை சீரமைப்பதையும் உணர முடியும்.

    கடந்த காலத்தில் நடந்துபோன தவறுகளை இறுகப் பிடித்துக்கொண்டு குற்ற உணர்ச்சியிலிருந்து மீளாமல் தவிப்பது நம்மில் பலரின் இயல்பாகாவே இருக்கிறது. தவறே செய்யாத மனிதன் என்ற ஒருவன் இந்த உலகில் பிறந்திருக்கப் போவதில்லை. சின்னச் சின்ன தவறுகளே நம்மைப் புடம் போட்ட பொன்னாக ஆக்குகிறது. செய்த தவறையே திருத்திக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பது மட்டுமே நிம்மதியைக் குலைக்கக்கூடியது. குற்ற உணர்ச்சியை ஒதுக்கி விட்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் நம் மனதைச் செலுத்துவது அறிவார்ந்த செயல்.

    கடந்த காலம் என்பது உடைந்த பானை
    எதிர் காலம் என்பது மதில் மேல் பூனை
    நிகழ் காலம் என்பது கையில் வீணை

    மீட்க முடியாத கடந்த காலத்தை எண்ணிக் கொண்டிருப்பதை விட்டு, என்ன நடக்கப் போகிறது என்று உறுதியாக தெரியாத எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையையும் அளவாக நிறுத்தி, சுகமான இராகங்களை இசைக்கக் கூடிய வீணையான நிகழ் காலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சுகமாக வாழலாமே. சில நேரங்களில் நம் உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போல அன்பான மனைவிக்கு சிடுமூஞ்சியான கணவனோ அல்லது அமைதியான கணவனுக்கு அதிரடியான மனைவியோ வாய்ப்பதும் உண்டு. இது போன்ற நேரங்களில் எதிர்மறையான அவர்களின் செயல்களைப் பொருட்படுத்தாமல், தவிர்த்து வந்தாலே நாளடைவில் அவர்களே சலிப்படைந்து தங்களுடைய எதிர் வினைகளை குறைத்துக் கொள்ளக் கூடும். அதை விடுத்து ஒவ்வொன்றிற்கும் எதிர்வாதம் செய்வது என்று ஆரம்பித்தால் நம் வாழ்நாளில் பெரும் பகுதி அதிலேயே கழிந்துப் போவதோடு நம் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு காரியத்தையும் நிதானமாகவும், மகிழ்ச்சியுடனும், செய்யும் வழமையை மேற்கொண்டாலே நம் அகம் குளிர்ந்து முகம் பொலிவுறும் என்பதில் ஐயமில்லை அல்லாவா? அகத்தின் அழகுதானே முகத்தில் தெரியும்?

    படத்திற்கு நன்றி:

    http://1.bp.blogspot.com/-_RbK8VLphH4/UOm42iJPH2I/AAAAAAAAAC0/FWP9rRUUZqY/s1600/inspirational-quotes-5.jpg

    Share