இங்கிலாந்திருந்துஒருமடல்!…..(58)
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள் !
இதோ அடுத்தொரு மடல் உள்ளத்தின் உதிர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்காக உங்கள் முன்னே.
இன்றைய உலகம் நாகரீக மிக்கதொன்றாக , நவீன விஞ்ஞான வளர்ச்சிகளின் அதியுச்சியை நோக்கி அதி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
மக்களிடையேயும் , நாடுகளிடையேயும் காணப்பட்ட பொருளாதர சமனற்ற நிலை இவ்விஞ்ஞான வளர்ச்சியினால் வேகமாகக் கரைந்து கொண்டு போகிறது .
சமுதாயங்களில் காணப்படும் கொடுமையான வறுமை எனும் நிலைக்கு இவ்விஞ்ஞான வளர்ச்சி உதவும் எனும் நம்பிக்கை பலரின் மனதில் வியாபித்திருந்தாலும் அதற்கான வலுவான சான்றுகள் இன்னும் பெரும்பான்மையாகக் காணப்படவில்லை .
சரி , எதற்காக இந்தப் பீடிகை ? சக்தியின் மடல் எதை நோக்கிய பார்வைக்கு எம்மை அழைத்துச் செல்கிறது எனும் கேள்வி உங்கள் மனதில் எழுவது இயற்கையே !
மனித சமுதாயத்தின் முன்னேற்றத்தின் அளவுகோல் என்ன ? என்பதே இவ்வாரம் நான் உங்கள் முன்னால் தொடுக்கும் வினா .
சமுதாய முன்னேற்றம் எனும் போர்வையினால் கலாச்சார அடித்தளத்தை அசைத்துப் பார்ப்பது சரியா ?
ஒருவர் ஆத்திகராக இருப்பதோ அன்றி நாத்திகராக இருப்பதோ அவர்களின் தனிமனித சுதந்திரம் என்பதை நான் மறுக்கவில்லை .
அதே சமயம் இத்தனிமனித சுதந்திரம் எனும் கோஷத்திற்கு எல்லையென்பதே கிடையாதா ? என்பதே என்னுள் விளையும் கேள்வி .
இன்று மேலைத்தேசங்களில் மட்டுமல்ல கீழைத்தேசங்களிலும் இந்த ” ஓரினச் சேர்க்கை ” அல்லது ” தன்னினச் சேர்க்கை ” என்பது அதாவது ஆங்கிலத்தில் ” Gay relationship “ அன்றி ” Homosexual relationship “ எனும் வகையிலான உறவுமுறை சமுதாயத்தின் ஒரு அங்கமாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது எனலாம் .
இது சரியா ? தவறா ? என்பதல்ல எனது வாதம் . இங்கேயுள்ள ” தனிமனிதச் சுதந்திரத்தை ” நான் உள்வாங்கிக் கொள்கிறேன்.
ஆனால் தனிமனிதச் சுதந்திரம் எனும் பெயரில் கால காலங்களாகப் பராமரிக்கப்பட்டு வந்த கலாச்சார மையங்களின் அடிப்படை விதிகளை மாற்றியமைக்க முயல்வது எற்றுக் கொள்ளப்படக் கூடியதல்ல என்பது எனது கருத்து .
இந்த வாரம் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஒரு சர்ச்சைக்குரிய விடயம் சட்டமாக்கப் படுவதற்குரிய நடவடிக்கை அநேகரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது.
அது என்ன என்கிறீர்களா ?
ஒரு ஆணும் மற்றொரு ஆணும் அன்றி ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணும் காதல் வயப்பட்டு ஒன்றாக வாழ்வது இயல்பான செயல் என்று அங்கீகரிப்பதற்காக கடந்த லேபர் அரசாங்கத்தினால் ” சமூக ஜோடி (Civil Partnership) “ எனும் சட்டம் அமூலாக்கப்பட்டது . இதன்மூலம் தம்பதியராக வாழும் ஒரு ஆணுக்கும் ,பெண்ணுக்கும் சட்டத்தின் மூலம் என்ன உரிமைகள் இருக்கிறதோ அதே உரிமை இவோரினத் தம்பதியினருக்கும் உண்டு என்று வரையறுக்கப்பட்டது .
இதைத் தனிமனித உரிமை என்பதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன் .
ஆனால் இப்போது இத்தகைய ஓரினத் தம்பதியினர் சர்ச்சிலோ அன்றி மற்றைய மதக் கலாச்சார மையங்களிலோ ஆண்-பெண் தம்பதியினரைப் போல திருமணம் செய்து கொள்ளலாம் என்பதைச் சட்டமாக்கும் முயற்சியில் தற்போதைய கூட்டணி அரசாங்கம் இறங்கியுள்ளது .
இது ஏதோ என் மனதைக் கொஞ்சம் கலக்குகிறது . ஆத்திக நம்பிக்கையினால் கண்மூடித்தனமான கருத்தை நான் கொண்டிருக்கிறேன் என்பது அல்ல இதன் காரணம் .
சரியோ , தவறோ ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு கோட்பாடு உண்டு . இவற்றிற்கு அந்தந்த மதத்தில் வலுவான பின்னனிகள் உண்டு. இவற்றில் சிலவற்றை மூட நம்பிக்கை என்று சொல்வதின் பின்னால் உள்ள நியாயங்கள் எனக்குப் புரிகிறது.
ஆனால் அவற்றின் அதிமுக்கியமான அடிப்படைக் கொள்கைகளை தனிமனிதச் சுதந்திரம் எனும் பெயரில் அசைத்துப் பார்க்க விழைவது அம்மத நம்பிக்கை கொண்டவர்களின் தனிமனித சுதந்திரத்தைத் தாக்காதா ?
“ ஓரினத் தம்பதியர் ” எனும் வாழ்க்கை முறையை இன்றைய சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளும் அதே சமயம் சமூக முன்னேற்றம் , கால மாற்றம் எனும் பெயரில் சமூகக் கட்டமைப்பின் அத்திவாரத்தை ஆட்டிப்பார்ப்பது பயங்கரமான ஒரு செயல் என்பது என் தனிப்பட்ட கருத்து .
இன்றைய காலகட்டத்தில் இத்தகைய விவாதங்கள் நடைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது . எத்தகையதோர் சமுதாயக் கட்டமைப்பை எமது சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லப் போகிறோம் எனும் கேள்விக்கு இவ்விவாதங்கள் இன்றியமையாதவையாகின்றன .
எமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறதா ? இல்லையா ? என்பதை அறுதியாக எவராலுமே நிரூபிக்க முடியாது . எவ்வளவுக்கெவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியியால் இயற்கையின் பல நிகழ்வுகளுக்கு நாம் விளக்கத்தை அளித்தாலும் மற்றொரு பக்கத்தில் எம்மால் விளக்க முடியாத நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.
விஞ்ஞானம் எனும் பெயரால் , பகுத்தறிவு எனும் விளக்கத்தால் இயற்கையின் அழிவைத் துரிதப்படுத்தும் பல செயல்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.
ஆனால் அதே சமயம் மதங்களின் பெயரால் , ஆத்திகத்தின் போர்வையில் பல மூடத்தனமான செயல்களும் நிகழ்ந்து கொண்டு தானிருக்கின்றன.
நன்மைக்கும் , தீமைக்கும் , ஆக்கத்திற்கும் , அழிவிற்கும் , ஆத்திகத்திற்கும் ,நாத்திகத்திற்கும் இடையே ஒரு பொதுவான நிலைப்பாட்டில் புரிந்துணர்வை ஏற்படுத்தி கலாச்சாரக் கட்டமைப்பில் முக்கிய அடிப்படை அறிவான காரணிகளைப் பாதுகாத்து வாழ்வது அவசியம்.
இல்லையெனில் மனித வாழ்க்கைக்கும் விலங்கு வாழ்க்கைக்கும் வித்தியாசம் அற்றுப் போய்விடும்.
தனிமனிதச் சுததிரம் அவசியம் தான் ஆனால் அதற்கும் ஒரு எல்லை வகுத்துக் கொள்வது அவசியம் இல்லையெனில் தனிமனிதச் சுதந்திரத்தின் பெயரால் கொலைகளும் , கொள்ளைகளும் கூட நியாப்படுத்தப்படத் தொடங்கி விடும் .
கலிகாலத்தில் இதுவெல்லாம் சகஜமோ ?
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.facebook.com/sakthi.sakthithasan