வாழ்க்கை நலம் – 10
குன்றக்குடி அடிகள்
10. அறிவறிந்த மக்கட்பேறு
மங்கலமாகியது இல்லற வாழ்க்கை. சிறந்த இல்லற வாழ்க்கையின் பயன் மக்கட்பேறு. இதனைத் திருக்குறள்,
“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற”
என்று எடுத்துக்கூறி விளக்குகிறது. இந்த உலகில் பல்வேறு பேறுகள் உள்ளன. அவற்றுள் சில பொன், பொருள், போகம், புகழ், மக்கட்பேறு முதலியன. இவை யாவற்றுள்ளும் சிறந்தது மக்கட்பேறு. ஏன்? முன்னே சொன்ன பொன், பொருள், போகம், புகழ் ஆகியவற்றுள் ஒன்றைப் பெற்றாலும் சரி, பலவற்றைப் பெற்றாலும் சரி, வாழ்க்கை முழுமை ஆகாது. அதோடு மானுட இயக்கத்தின் தொடர்ச்சிக்கு அரண் செய்வதாகவும் ஆகாது.
ஆதலால் இல்வாழ்வார் பெறக்கூடிய பேறுகளுள் தலையாயது மக்கட்பேறேயாம். மானுட இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ஆக்கத்திற்கும் துணை செய்வது மக்கட்பேறே. அதோடு தத்துவ இயல்வழி ஒரு உயிர் மானுடப் பிறப்பு எய்தினால்தான் அமர நிலை எய்துகிறது. அதனாலேயே “பெருமவற்றுள் யாமறிவதில்லை” என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூறுகிறார் திருவள்ளுவர்.
“அறிவறிந்த மக்கட்பேறல்ல பிற” என்ற பகுதி, கவனமாகப் படிக்க வேண்டிய பகுதி. இந்தப் பகுதிக்கு உரை ஆசிரியர்கள் எழுதியுள்ள உரைகள் அறிவுக்கு இசைந்தனவாக இல்லை. “அறிவறிந்த” என்றதனால் இறந்த காலமாகிறது. எப்படி ஒரு மகன் அல்லது மகள் பிறக்கும் பொழுதே அறிவு அறிந்த குழந்தையாக இருக்க இயலும்? முடியும்? அப்படியானால் ‘அறிவறிந்த’ என்ற சொல்லை யாருக்கு அடையாகச் சேர்ப்பது? அறிவறிந்த பெற்றோர்களா? அறிவறிந்த மக்களா? பெற்றோர்களுக்குத்தான் ‘அறிவறிந்த’ என்ற சொல்லை அடையாக்க வேண்டும். அறிவறிந்த பெற்றோர்களுக்கு அறிவறிந்த மக்கள் கிடைப்பார்கள். ஆம்! காதல் தூய்மையானது; அறிவார்ந்தது; உறவின் வழியது; தன்னல மறுப்புப் பண்பின் வழியது. காதல் மனையறம் ஒரு நோன்பு. இந்த நோன்பினை அறிவார்ந்த நிலையில் இயற்றுநர் காதல் வாழ்வில் சிறக்கின்றனர். இத்தகையோரே நன்மக்களைப் பெறுகின்றனர். பெற்ற வண்ணம் வளர்த்து, உயர் நிலைக்குக் கொண்டு வருகின்றனர்.
ஆதலால் நன்மக்களை விரும்பும் பெற்றோர் “அறிவரிந்தவர்களாக” இருத்தல் வேண்டும்; வீட்டைப் பல்கலைக் கழகமாக்குபவர்களாய் இருத்தல் வேண்டும். கருவுற்ற காலம் முதல் பிறந்து வளர்ந்து தன் நிலை எய்தும் காலம் வரையில் பொறுப்போடு வளர்ப்பவர்கள். அறிவறிந்த பெற்றோர்கள் அறிந்த பெற்றோர்களாவர்.
அண்ணல் காந்தியடிகள், “சிறப்புப் பொருந்திய வீட்டுக்கு இணையான பல்கலைக்கழகம் இல்லை” என்று கூறியதை எண்ணுக. நல்ல பெற்றோர்களே குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியர்கள். அமெரிக்க குடியரசுத் தலைவர் ஆதம்ஸ், தன்னுடைய கடவுள் பக்தி – அறநெறி பற்று அனைத்துக்கும் தன்னுடைய தாயே காரணம், என்று கூறுகின்றார். மக்களாவதும் – மாக்களாவதும் பெற்றோர்களின் பொறுப்பேயாம்.
ஆதலால், மனையறம் வாழ்வோர் – மகப்பேற்றுக்குரிய வாழ்வு வாழ்வோர் வாழ்வாங்கு வாழ வேண்டும். அறிவறிந்த பெற்றோர்களே அறிவறிந்த மக்களைத் தருகின்றனர் என்பதே வள்ளுவம்.
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
மின்பதிப்பாக்க உதவி: தேமொழி