சம்ஸார பங்க நிர்மக்ன சமுத்தரண பண்டிதா

6

-கவிநயா

 

உலகத்தில் பிறந்தமைக்காக மகிழ்ச்சி கொண்டு, உலக வாழ்வைத் திருப்திகரமாக அனுபவித்து வாழ்பவர்கள் மிகச் சிலரே. அதற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம்.

அவர்கள் பற்றை விட்டு முற்றும் துறந்தவர்களாக இருக்கலாம். அல்லது உலகம் மாயை என்று இயல்பாகவே புரிந்து கொண்டவர்களாக இருக்கலாம். அல்லது இன்பமும் துன்பமும் பாதிக்காமல் தாமரை இலைத் தண்ணீரைப் போல வாழக் கற்றவர்களாக இருக்கலாம். அல்லது ஆழமான மனக் காயங்களால் பாதிக்கப்படாதவர்களாக, பூர்வ ஜென்ம புண்ணியத்தால் இன்பங்களே மேலோங்கி, இன்பத்தையே அதிகமாக அனுபவிப்பவர்களாகவும் இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும், பலருக்கும், “போதும் இந்த வாழ்க்கை”, என்ற எண்ணம் வாழ்வில் ஓரிரு முறைகளாவது தோன்றி விடுகிறது என்பதே உண்மை. அப்படித் தோன்றினாலும் என்ன பலன்? அந்தக் குறிப்பிட்ட துயரம் தரும் காலம் முடிந்த பின், திரும்பவும் சில இன்பங்களை அனுபவிக்கும் போது, முன்னர் அனுபவித்த துன்பம் எல்லாம் மறந்து விடுகிறது. வாழ்க்கை எவ்வளவு இனிமை என்ற எண்ணம் கூட ஏற்பட்டு விடுகிறது. இந்த மாய விளையாட்டுக்குக் காரணகர்த்தாவும் அன்னைதான்.

ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி”, என்பார் பட்டர்.  “மத்தேறு ததிக் கிணை வாழ்வடையேன்”, என்பது லலிதா நவரத்ன மாலை. மத்தினால் தயிரைக் கடையும் போது அந்தத் தயிரானது அதற்குள் அகப்பட்டுக் கொண்டு, எப்படி இப்படியும் அப்படியுமாகச் சுழல்கிறதோ, அப்படி என்னுயிரும் இந்த உலக வாழ்வில் அகப்பட்டுக் கொண்டு உழல்கிறது என்கிறார்கள், இந்த மகான்கள்.

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே

மீண்டும் பிறப்பு. மீண்டும் இறப்பு. மீண்டும் தாயின் கருப்பையில் உறக்கம். இந்தச் சுழற்சியைக் கடப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது. அருள் கூர்ந்து எனைக் காப்பாய் கோவிந்தா என்கிறார், ஆதிசங்கரர்.

அந்த கோவிந்தனே மனிதனாக அவதாரம் எடுத்த போது எத்தனையெத்தனை துன்பங்களை அனுபவித்தான்! சீதா பிராட்டியோ மாந்தர்களைப் போலவே மனந் தளர்ந்து உயிரை மாய்த்துக் கொள்ளவும் துணிந்து விட்டாள். பிறப்பென்று எடுத்து விட்டால் தெய்வங்களுக்கே விதி விலக்கில்லாத போது நாமெல்லாம் எந்த மூலைக்கு? இதனை எடுத்துக் காட்டத்தான், ஸ்ரீ ராமகிருஷ்ணரும் ஸ்ரீ ரமணரும் போன்ற மகான்களும்  துன்பங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டு, அதே சமயம் இறைவனிடம் மனதைச் செலுத்தி, வாழ்ந்து காட்டினார்கள்.

இன்பம், துன்பம் இரண்டிலும் அகப்பட்டுக் கொண்டு சுற்றிச் சுற்றி வந்தாலும், இந்தப் பிறவிச் சுழற்சிக்கும் முடிவு உண்டு என்பது தெரிய வேண்டுமே… தெரிந்தாலும் அந்த முடிவு எனக்கும் வேண்டும் என்ற ஏக்கம் வேண்டும். அந்த முடிவை அடைய என்னதான் வழி என்று தேட வேண்டும். அந்தத் தேடல்தான் அன்னையின் பாதத்தில் கொண்டு விடும்.

இப்படிப்பட்ட தேடலுக்கு வழி வகுப்பதுதான் இத்தனை கோடிப் பிறவிகளின் நோக்கமே. ஒவ்வொரு ஜீவனும் இந்த நிலையை ஏதோ ஒரு பிறவியில் அடைந்தே தீரும் என்பது பெரியோர்களின் வாக்கு.

தெய்வத்தின் குரல்” முதல் பாகத்தில் ஸ்ரீ மஹா பெரியவர் சொல்கிறார்:

“ஆசைகள் அத்தனை அனர்த்தத்துக்குக் காரணம். ஆசைதான் காமம் என்பது. ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால் குரோதம், சோகம் எல்லாம் உண்டாகின்றன. காமத்தில் பிறப்பு உண்டாகிறது. குரோதத்தால் நம்மை நாமே கொன்று கொள்கிறோம். எனவே ஜனன மரணத்திலிருந்து விடுபட வேண்டுமானால் நம்மைக் காமமும் குரோதமும் அண்ட விடக்கூடாது. மழை ஜலம் உள்ளே புகவொட்டாமல் நல்ல டஃபேடோ குடைத்துணி காப்பாற்றுகிறது. அதை வாட்டர் ப்ரூஃப் என்கிறோம். இதே மாதிரி நமக்குக் காம ப்ரூஃபாக, க்ரோத ப்ரூஃபாக ஒரு கவசம் இருக்கிறதா என்றால், இருக்கிறது.  அம்பாளின் கிருபைதான் அந்தக் கவசம்.

அன்னை பராசக்தி, ஒரு பெருங் கருணைக் கடல். அவளைக் கருணா ரஸ சாகரா என்று வர்ணிக்கிறார்கள், வாக் தேவதைகள். அவ்யாஜ கருணா மூர்த்தி அவள். காரணமே இல்லாமல் கருணை செய்பவளுக்கு, நாம் ஒரு காரணத்தையும் கொடுத்து விட்டால், பிறகு கேட்கவா வேண்டும்? “அம்மா”, என்று தன் கன்று அழைத்து விட்டால், ஐந்தறிவுள்ள பசுவே ஓடோடி வரும் என்றால், தன் குழந்தைகளின் கதறலைக் கேட்டு அந்தத் தெய்வத் தாய் வராமல் இருப்பாளா, என்ன?

பிறப்பு, இறப்பு என்ற சுழற்சிக்குள் சிக்கிக் கொண்டு ஜீவன்கள் படும் அவஸ்தையைச் சுலபத்தில் தீர்ப்பவளாம், அம்பிகை. லலிதா த்ரிசதியும், அவளை “ஏகைச்வர்ய ப்ரதாயினி”, அதாவது உண்மையான ஒரே செல்வமாகிய முக்தியை அளிப்பவள் என்று போற்றுகிறது. சம்சாரம் என்னும் சேற்றுக்குள் மூழ்கித் தத்தளிப்பவர்களைக் கரையேற்றுவதில் மிக்க சாமர்த்தியம் வாய்ந்தவள் அவள் என்கிறது, லலிதா சகஸ்ரநாமம். “சம்ஸார பங்க நிமக்ன சமுத்தரண பண்டிதா”.

ஆகையால் அவள் பாதங்களை இறுகப் பற்றிக் கொண்டு இந்தச் சம்சாரப் புதை குழிக்குள்ளிருந்து விடுதலை அடைவோம்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

படத்துக்கு நன்றி: http://blaufraustein.wordpress.com/

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “சம்ஸார பங்க நிர்மக்ன சமுத்தரண பண்டிதா

 1. அன்பு கவிநயா அம்பாளின் கவசம் பற்றி அழகாக  எழுதியிருக்கிறீர்கள் உண்மைதான் சம்சார சாகரத்தில் உழன்று தவிக்கும் பலருக்கும் அம்பாளின் லலிதா சஹஸ்ர நாமம்  ஒரு பெரிய கவசம்   

 2. //அன்னை பராசக்தி, ஒரு பெருங் கருணைக் கடல். அவளைக் கருணா ரஸ சாகரா என்று வர்ணிக்கிறார்கள், வாக் தேவதைகள். அவ்யாஜ கருணா மூர்த்தி அவள். காரணமே இல்லாமல் கருணை செய்பவளுக்கு, நாம் ஒரு காரணத்தையும் கொடுத்து விட்டால், பிறகு கேட்கவா வேண்டும்? “அம்மா”, என்று தன் கன்று அழைத்து விட்டால், ஐந்தறிவுள்ள பசுவே ஓடோடி வரும் என்றால், தன் குழந்தைகளின் கதறலைக் கேட்டு அந்தத் தெய்வத் தாய் வராமல் இருப்பாளா, என்ன?…
  //ஆஹா அருமையான வரிகள்! அம்பாள் படமும் நெஞ்சை அள்ளுகிறது!

 3. அருமையாக, நிறைவாகத் தந்திருக்கிறீர்கள். பிறவிப் பெருங்கடலிலிருந்து நம்மைக் காக்க வல்லது அம்பிகையின் திருவடிகளே. அம்பிகையின் ஆயிரம் நாமங்களின் மகிமை அளவிடற்கரியது.  ‘ சம்ஸார பங்க நிர்மக்ன சமுத்தரண பண்டிதா’, ‘பந்த மோசனீ’ ஆகிய திருநாமங்களைத் திரும்ப, திரும்ப மனதிற்குள் உச்சாடனம் செய்வதால், பற்றற்ற மனநிலை சித்திக்கும் என்பது கண்கூடு. பகிர்விற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

 4. அன்பினிய விசாலம் அம்மா, ஷைலஜா அக்கா, மற்றும் பார்வதி, உங்கள் அனைவரின் வருகையும், வாசிப்பும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி!

 5. கட்டுரை மிகவும் சுவையாக உள்ளது.
  லலிதா ஸஹஸ்ர நாமமும்,
  லலிதா த்ரிசதியும் பல இடங்களில்
  ஒன்று போல இருக்கின்றன.
  லலிதா த்ரிசதி ஆங்கிலத்தில்
  விளக்கத்துடன் –

  http://lalitatrishati.org/Shri_Vidya-lalita_trishati.pdf

  தேவ்

 6. மிக்க நன்றி தேவ் ஐயா. லலிதா த்ரிசதிக்கான சுட்டிக்கும் மிகவும் நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *