Category: பொது

  • சுனாமி நினைவுதின அஞ்சலிக் கவிதை!

    –முனைவர். து. சந்தானலெட்சுமி

    டிசம்பர் 26.2004 ஞாயிற்று கிழமை
    ஞாயிறு உதயம்!
    வாரம் முழுவதும் உழைத்துக் களைத்தவர்கள் உறக்கத்தில்…
    ஓய்வே இல்லாதவர்கள் தம்கடமையில்…
    பெண்டிர் தத்தம் பணியில்…
    சுற்றுல்லாப் பயணிகள் உல்லாசத்தில்…
    இப்படி ஆயிரமாயிர மனிதர்கள் ஆயிரமாயிரம் சிந்தனைகளோடு
    தத்தம் பணிகளைத்தொடர
    இயற்கையோ தம் நீண்டநாள் பசியைத்தீர்க்க எண்ணியது.

    யாருக்குத்தெரியும்… இயற்கையின் கோரப்பசி?
    பசியைத்தீர்க்கப்
    பேரலையாக உருவெடுத்தது…
    ஆழிப்பேரலையாக!

    அள்ளிச்சென்றது அனைத்துஉயிர்களையும்
    துள்ளிவிளையாடிய விளையாடியச்சிறுவர்களை
    மண்ணுக்குள் புதைத்தது
    கொஞ்சுமொழிபேசும் மனிதர்களைக் கொன்றுகுவித்தது!

    இங்குமட்டுமா? உலகெங்கும்
    ஆம்!
    “சாறுகொண்டு கரும்பின் கோதுவீசுவார்போல”
    சாதிமதம்மொழிகடந்து
    உயிர்களை உறிஞ்சிவிட்டு
    உடல்களை வீசிஎறி்ந்தது!

    ஆங்காங்கே ஓலங்கள்…
    நினைத்தாலே மனம்நடுங்கும் அந்நாளில்
    விலைமதிப்பில்லா உயிர்களை
    அலைகளின் பசிக்கு
    உணவாய் அளித்த அனைவருக்கும் அஞ்சலி!
    எங்கள் கண்ணீர் அஞ்சலி!

     

     

    Share
  • இணையத்தில் தொற்றுநோய் – 1

    — தேமொழி

    சமூக வலைத்தளங்களை சில நேரங்களில் கலக்கும் செய்திகள் வரும்.

    தொற்றுநோய் போல பரவுவதால் இதனை ‘It went viral’ அல்லது ‘gone viral’ என்று சொல்லிச் சொல்லி தங்களைக் கவர்ந்த செய்தியை அனைவருக்கும் பலசமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பிக் கொண்டிருப்பது நமது வழக்கம். அதாவது…இப்பொழுது இங்கு நான் பரப்புவது போல என்று வைத்துக் கொள்ளலாம்.

    கால்நூற்றாண்டிற்கு முன்னர் இணையம் பரவலாக பயனில் இல்லாதக் காலத்தில் gone viral என்றால் மருத்துவத் தொடர்பான செய்தியாக இருந்திருக்கக் கூடும். ஏதேனும் தீயநோய்க்கு அறிகுறியாக இருந்து, ஆளைப்பிடித்து தனிமைப்படுத்திப் பரவவிடாமல் செய்திருப்பார்கள். இணையச் செய்திகளில் இதெல்லாம் நடக்காது. செய்தி பரவிப் பரவி டிவிட்டர் மூலம் எகிப்து, ஈரான், மால்டோவா போன்ற சில நாடுகளின் புரட்சியாளர்கள் ஒருங்கிணைத்து அவர்கள் நாட்டின் அரசுக்கு எதிராகப் புரட்சிகள் செய்தனர், அவை அந்த நாடுகளின் ஆட்சியை அசைத்துப் பார்த்தன.

    ஒசாமா பின் லேடனனைப் பிடிப்பதற்காக அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானில் அதிரடித் தாக்குதலில் இறங்கிய பொழுது வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவுடன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சியுடன் அதை நேரடி ஒளிபரப்பாக பார்த்துக் கொண்டிருந்த பொழுது … உலகில் யாருக்குமே அந்தச் செய்தி தெரியாது.

    அபூத்தபாத் (Abbottabad) என்ற அந்த நகரில், ஒசாமா தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் வசித்த, தொலைத்தொடர்பு ஆலோசகராகப் பணிபுரியும் ‘சோஹேப் அத்தர்’ (Sohaib Athar), என்ற 33 வயது இளைஞர், வீட்டிற்கு மேல் பறந்த இராணுவ ஹெலிகாப்டர் ஏற்படுத்திய ஓசை, தொடர்ந்த அதிரடித் தாக்குதல் ஆகியவை வழக்கத்திற்கு மாறாகத் தூங்கவிடாமல் தொல்லை செய்ததால் அதனை டிவிட்டர் வலைத்தளத்தில் நேரடிப் பதிவு செய்து கொண்டிருந்தார் (Sohaib Athar, @ReallyVirtual, https://twitter.com/ReallyVirtual).

    “Helicopter hovering above Abbottabad at 1AM (is a rare event).”

    “Go away helicopter – before I take out my giant swatter.”

    “A huge window shaking bang here in Abbottabad.”

    “I hope its not the start of something nasty.”

    என்ற செய்திகளாக, நடந்தது என்னவென்றே தெரியாமல் அவர் செய்த பதிவுகளின் முக்கியத்துவம் பின்னர் உணரப்பட்டு ஒரே நாளில் உலகின் புகழ் உச்சிக்குச் சென்றார். டிவிட்டர் வலைத்தளத்தில் அவரைப் பலர் தொடரத் தொடங்கினர். இது போன்று பல செய்திகள் பரவுவதும், நாம் பரப்புவதும் வாடிக்கை.

    சமீபத்தில் இணையத்தைக் கலக்குவது ஒரு படம். “பாண்டாவைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்ற கேள்வியுடன் ஸ்னோமேன் கூட்டத்தில் மறைந்திருக்கும் பாண்டாக் கரடியை அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ‘டாடல்ஃப்’ (Dudolf) என்ற புனைப்பெயர் கொண்ட ஓவியர் ‘ஜெர்ஜிலி டூடஸ்‘ (Gergely Dudás), தனது ஃபேஸ்புக் தளத்தில் (https://www.facebook.com/thedudolf/) வரைந்து பதிவிட்ட படம் தொற்றுநோய் போலப் பரவிக் கொண்டிருக்கிறது.

    “ஸ்னோமேன் கூட்டத்தில் பாண்டாவைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்பது போல “ஆந்தையின் கூட்டத்தில் பூனையைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்ற மற்றொரு படமும் வரைந்து வெளியிட்டுள்ளார் தனது எதிர்பாராத புகழைக் கண்டு மகிழ்ந்த ஓவியர் டாடல்ஃப் அவர்கள்.

    விடுமுறை நாட்களில் பொழுதை ஓட்ட இது போன்ற விளையாட்டுகள் மக்களுக்கு உதவுகிறது. அனைவரும் பார்த்து மகிழப் படங்கள் கீழே …

    Gergely Dudás

    Gergely Dudás2

    Picture Courtesy:  https://en.wikipedia.org/wiki/Situation_Room  &  https://www.facebook.com/thedudolf/

    Share
  • கண்ணாடி பார்ப்பவள்…!

    -கவிஜி

    நீ கடந்த மரங்கள்
    எனை
    உதிர்க்கின்றன…

    ***

    வளையலுக்குள்
    மாட்டிக் கொண்ட
    விளிம்புகளில்
    நான் உடையப் போகும்
    வட்டம்…

    ***

    உன் கனவுக்குள்
    தூக்கம் இன்றி அலைகிறது
    திடுக்கென விழித்துக் கொண்ட
    என் இரவு…

    ***

    அறை முழுக்க வானவில்…
    வரையத் துவங்கினாள்
    கண்ணாடி பார்ப்பவள்…

    Share
  • பொம்மைகளின் காடு!

    -கவிஜி

    புலி, கரடி, சிங்கம்,
    குரங்கு, மான்
    காட்டு நாய், மயில்
    எனப் பல விலங்குகளிடையே
    ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும்
    ‘சே’
    என்னை அவன்
    காட்டுக்குள் அனுமதிக்க
    மறுத்தான்….
    எவ்வளவு கெஞ்சியும்
    அனுமதிக்காத அவன்,
    கடைசியாக உதிர்ந்த
    யோசனையில் ஒரு முயல்
    பொம்மையை
    வாங்கிக்கொண்டு வந்த
    என்னைச்
    சிரித்துக் கொண்டே
    உள்ளேசெல்ல அனுமதித்தான்…
    முயல் பொம்மையை
    அவன் கூட்டத்தில்
    சேர்த்துக் கொண்ட பாங்கில்
    எங்கள் வீட்டு முகப்பறை
    ஓர் அடர்ந்த காடாகத்தான்
    தெரிந்தது…!

     

     

    Share
  • மார்கழி மணாளன் 4  அழகர் கோயில்    

    க. பாலசுப்பிரமணியன்

    9312761a-f371-4a49-b924-148c711fdcae

    அழகுக்கு அழகு சேர்க்கும் கள்ளழகா !

    அலைமகளும் நிலமகளும் துணைசேர

    குதிரைமேல் பவனிவந்து குறைகேட்டுக்

    கூடலுக்கும் அழகு சேர்க்கும் கூடலழகா  !

     

    மண்டூகர் தவமேற்று மனமிரங்கி

    விண்ணுலகம் காட்டிய மாதவனே !

    மலை நடுவே நூபுரகங்கை தந்து

    கல்லிலும் நீர்சுரக்கும் கள்ளழகா !!

     

    சீர்கொண்டு வந்த தங்கைக்குச்

    சிவனோடு மணம் முடிந்ததென்று

    சினத்தோடு  சீரெல்லாம் வைகையிலே

    சிதறவிட்ட ஸ்ரீமன் நாராயணா !

     

    சுந்தரத் தமிழில் சுவையோடு நக்கீரன் பாட

    சுவைத்து அருளிட்ட  சுந்தரராஜா !

    சோலையிலே சுந்தரவல்லி கைபிடித்து

    சோகமெல்லாம் நீக்கிடும் ஸ்ரீதரனே !

     

    ஆழ்வார்கள் பலரோடு ஆண்டாள் குரல்கேட்டு

    ஆனந்தநிலையிலே அருள்தரும் அமரா !

    கருப்பண்ணசாமிக்குக்  கருணை காட்டிக்

    கள்ளர் குலம்காத்த கார்மேகப் பெருமானே !

     

    மயிலோடு விளையாடும் மருகன் அருகில்

    குயில்பாட்டுப் பாடும் குறத்தியர் மலையினில்

    குணக்குன்றாய் நீ நின்றாய் குறைதீர்க்க

    குரல்கேட்டு உடன் வருவாய் கோவிந்தா !

     

    தவமொன்றும் நானறியேன் தரணியில்

    தனதாக யாருமில்லை புவியினில் !

    தாயாகத் தனயனாக நீ!  தோழனாகத்

    தோள் கொடுப்பாய் தூயவனே  தாமோதரா !

     

     

     

    Share
  • மார்கழி மணாளன்  -3  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  

    க.பாலசுப்பிரமணியன்

     f2bc8a78-423d-446a-a113-0094a4f2ee11

    குழலூதும் கண்ணனவன் வெண்ணை திருடும் கள்வனவன்

    கோதையர் தலைவனவன் கோவினத்தின் மன்னனவன்

    பாவங்கள் அழித்திடவே  தர்மங்கள் வாழ்ந்திடவே

    பாஞ்சஜன்யம் கையெடுத்தான் பார்த்தனுக்கு சாரதியாய்!

     

    ஆண்சிங்கம் போல் அவன் தோற்றம்

    ஆயிரம் ஆதவன் அவனில் அடக்கம்

    அங்கம் முழுதும் அமைதியே ஒளிரும்

    அகிலம் அனைத்தும் அவனைத் துதிக்கும் !

     

    போர்முனையில் அவன் முகத்தில் புன்னகை

    தேர்முனையில் அவன் தர்மத்தின் நம்பிக்கை

    சொந்தம்கண்டு சோர்வடைந்தான் தனஞ்ஜெயன்

    சொந்த மில்லையிது மாயையென்றான் மாதவன் !

     

    விண்ணிலும் மண்ணிலும் வேதங்கள் நான்கிலும்

    விளையும் பயிரிலும் உயிரிலும் உணர்விலும்

    நீரிலும் நெருப்பிலும் காற்றிலும் கதிரிலும்

    அண்ட சராசரங்கள் அனைத்திலும் நானே !

     

    நீயும் என்னுள் நின் நினைப்பும் என்னுள்

    நின் செயலும் வரும் பயனும் என்னுள்

    அண்ணன் தம்பி உறவுகள் அறுத்து

    கண்ணன் பாதங்களில் கவலைகள் விடுவாய் !

     

    காலமும் கடமையும் என்னுள் மறையும்

    காரணம் அறிந்தால் மனிதனும் தேவன் !

    கடமையைச் செய்வாய் விளைவினை விடுவாய்

    கண்ணன் மொழிந்தான்  கருணை பொழிந்தான் !

     

    அல்லிக்கேணியிலே அச்சுதன் தோற்றம்

    அமரர்கள் வாழ்த்தும் அற்புதக் கோலம் !

    ஆசையை அறுத்த பாச நெஞ்சங்களில்

    ஆதவன் ஒளியாய் அருள்வான் சாரதி !!

     

     

     

    Share
  • காத்திருக்கும் மக்களின் குரல் கேட்கவில்லையா?

     அண்மையில் தமிழகத்தில் பெய்த அடைமழை ஏற்படுத்திய சேதங்களுக்காகவும், உயிரிழப்புகளுக்காகவும் தெலுங்குப் பாடகர்கள் இணைந்து பாடி வெளியிட்டுள்ள அருமையான வரிகளைக் கொண்ட உதவி கோரும் பாடல் இது.

    தமிழில் – ஜெயக்குமார் ஸ்ரீநிவாசன்

    பகிர்வு: – எம்.ரிஷான் ஷெரீப்

    ***

    இவைகள் தண்ணீரா இல்லை கண்ணீர்த் துளிகளா? நம்மை மூழ்கடிக்கும்போது இதை எப்படி எதிர்கொள்வது?

    நீர் மேலிருந்து கீழ்வரை விழுங்கிவிடுவேன் எனச் சொல்லும்போது எப்படி எதிர்கொள்வது?

    உயிர்கள் எல்லாம் இழக்கப்படும்போது சப்தமின்றி (நமக்கு நாமே) சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோமா?

    இறந்தவர்களுக்கான தீ மூட்டலினால் மனதில் ஏற்படும் பாரத்தை சுமந்துகொண்டு சூனியத்தை திட்டிக்கொண்டிருக்கப்போகிறோமா?

    அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தைத் தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

    ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கிப் பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்கள் ஆக்ரோஷம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா?

    மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..
    மனது வைத்து (எல்லோரும்) வாருங்கள்,
    இதைப் பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்.
    உயிர்களின் மதிப்பு உங்களுக்குத் தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையில், நீங்கள் உங்கள் கையைக் கொடுக்க மாட்டீர்களா?

    ஒவ்வொரு கணத்தையும் ஒரு யுகமாகக் கழிக்கும் உதவிக்காகக் காத்திருக்கும் மக்களின் குரல் கேட்கவில்லையா?

    இரவும் பகலுமாக இருட்டும் கஷ்டமுமாக இருக்கும் இவர்களுக்குக் கஷ்டத்தை நீக்க விளக்காக நீங்கள் வாருங்கள்.
    அவர்களை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.
    அவர்களுக்குச் சுவாசம் தாருங்கள்.
    கோரமான வெள்ளத்தில் நசுக்கப்பட்டோருக்கு உதவச் செல்கையில் அவர்களுக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தருவோம்.

    கண்களில் கடல்போன்ற நீருடன் நகரத் தெருக்களில் பசியால் அலறும் சப்தம் உனக்கு கேட்கவில்லையா?

    நம்பிக்கையையே அழித்துவிட்ட வெள்ளத்திலிருந்து உதவிகோரி அழைப்பதை நீ பார்க்கவில்லையா?

    குழந்தைகளின் எதிர்காலம் பாழாகாமல் பார்த்துக்கொள்ளும் உன் பொறுப்பை நீ செய்.

    இருளே கவிந்தாலும் திசைகள் மாறுவதில்லை, (பாதிக்கப்பட்டோருக்கு) வருடும் நம்பிக்கையாய் நீ அத்திசையை நோக்கி எழு.

    மனிதன் மனிதனுக்கு உதவி.
    மனிதன் மனிதனுக்குத் தைரியம்.
    மனிதர்கள் ஒன்றாக இணைந்திருந்தால் கடவுள் (நமக்காக) கீழிறங்க மாட்டாரா?

    நான் அன்று! நாம் என்று நாம் அனைவரும் ஒன்றென்று உதவி தேவைப்படுபவனுக்காக (பிறருடன் கைகோர்த்து) ஒன்றிணைந்து நடக்கும் ஒருவன் வெறும் மனிதனல்லன், அவன் தெய்வம்!

    சினிமா நட்சத்திரங்களுக்கும் நம்மைப்போலவே மனது உண்டு, அவர்களும் கஷ்டத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

    சினிமா நட்சத்திரங்களும் நீயும் நானும் ஒன்றே, நாம் என்றே சொல்லி ஆதரவுக்குச் சேர்ந்து நிற்கின்றனர்.

    ஒவ்வொரு கிராமத்திலும் தொழில் செய்வோரும், கற்றவர்களும் கொடையாளிகளாக இன்று உருமாறி இருக்கின்றனர். உங்களின் சிறு கொடையும் நமது உதவியை அன்புடன் செய்ய இயலும்.

    அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தைத் தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

    ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கிப் பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்கள் ஆக்ரோஷம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா?

    மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..
    மனது வைத்து (எல்லோரும்) வாருங்கள்,
    இதைப் பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்.
    உயிர்களின் மதிப்பு உங்களுக்கு தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையில், நீங்கள் உங்கள் கையைக்கொடுக்க மாட்டீர்களா?

    காணொளி இங்கே
    https://www.youtube.com/watch?v=VJc1cuq-lfY

     

    Share
  • எல்லாமே கணக்குதாங்க….. !

    பவள சங்கரி

    கி.மு. 569ல் கிரேக்கத்தின் சமோஸ் தீவில் பிறந்தவர் பித்தகோரசு  (Pythagoras of Samos). நரம்பிசைக் கருவியான மகர யாழ் இசைப்பதில் வல்லவரான இவர் இசைஞர் மட்டுமல்ல கவிஞரும்கூட. கணிதம், தத்துவஇயல், வானியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கி.மு. 535 ம் ஆண்டு வாக்கில் சாமோஸ் தீவிலிருந்து எகிப்து சென்ற பித்தகோரசு, அங்கு ஆயகலைகளைக் கற்றார்.

    apg

    2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பித்தகோரசின் நம்பிக்கைகள் மற்றும் உயரிய தத்துவங்கள் இன்றளவிலும் நம் வாழ்க்கைக்கு இயல்புடையதாகவே இருப்பது ஆச்சரியம்தான் இல்லையா…

    உலகில் அனைத்துமே எண்கள்தான். கணிதமே அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் அடிப்படை. வடிவியல் கணிதப் படிப்பின் உயர் வடிவம். கணிதம் மூலமாக இந்த பூவுலகை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

    மூளையில் உறைவதுதான் ஆன்மா. அழிவில்லாத அது ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிருக்கு என மாறி பிறப்பறுத்து தூய்மை
    அடைகிறது. கணிதமும், இசையும் மட்டுமே ஆன்மாவை தூய்மைப்படுத்த வல்லவை.

    இந்த எண்களுக்கும் ஆளுமை, பண்புகள், வலிமை, பலவீனங்கள் போன்ற அனைத்தும் உண்டு என்கிறார்.

    இந்த பிரபஞ்சம், ஆண்-பெண், , வெப்பம்-குளிர்ச்சி, ஈரப்பதம்-வறட்சி, ஒளி-இருள், மென்மையானது-கனமானது, வேகமானது-மெதுவானது
    என எதிர்மறைகளின் இடைச்செயல்பாட்டை (interaction of opposites) பொறுத்தது.

    சிந்திக்கத்தக்கவை அல்லவா.

    Share
  • தெய்வ தரிசனம்: 06. நாராயணா என்னும் நாமம்

    தெய்வ தரிசனம்

    06. நாராயணா என்னும் நாமம்

    images
    (குறும்பா)

    நாராய ணாவென்னும் பேரினிலே
    வேராக உள்ளிருக்கும் சீரினிலே
    . ஏறிநிற்கும் பொருளெல்லாம்
    . ஊறிநிற்கும் அருளெல்லாம்
    ஆராயப் புகுவோமிப் பாவினிலே. … 1

    நரவென்னும் சொற்பொருளாய் ஆன்மாவாம்
    நரத்தினின்று வருவதெலாம் நாராவாம்
    . அயனமெனில் இருப்பிடமாம்
    . வியனுலகின் பிறப்பிடமாம்
    உருவத்தின் உள்ளீடாய் நாரணனாம். … 2

    நரம்தந்த வெளியீடே வான்வெளியாம்
    விரிகாய வெளியீடாய்த் தான்வளியாம்
    . காற்றதுவே தீயாகி
    . நீராகி நிலமாகும்
    நரம்விளைத்த பேரதுவே நாராவாம். … 3

    நாரமதே நாரணனின் உறைபொருளாம்
    காரணோத கம்சொல்லும் மறைபொருளாம்
    . அஞ்சுபூதம் இயல்தனியே
    . அப்புவெனும் பெயரிலினிலே
    பேரணவும் படைப்பாகும் இறைபொருளாம். … 4

    [பேர்-அணவும் = பெயர் பொருந்தும்]

    உயிருள்ள உருவுள்ளே நாரணனே
    உயிரற்ற உருவுள்ளே நாரணனே
    . உயிருள்ளதோ இல்லாததோ
    . பெயருள்ளதோ இல்லாததோ
    பெயரற்ற உள்ளமைதி நாரணனே. … 5

    நீராடும் போதினிலே நாமமென
    நாராய ணன்நாமம் சேமமென
    . எட்டெழுத்து மந்திரமே
    . கட்டுமனம் தந்திடுமே
    வேரோடும் செய்கையெலாம் ஏமமென. … 6

    [ஏமம் = களிப்பு, இன்பம்]

    நாரணனின் நினைவுவரும் இறுதிமூச்சே
    வேரறுக்கும் பிறப்பென்றே உறுதியாச்சே
    . கருமமுறும் சோதனையோ
    . கருமமறு சாதனையோ
    சீரிதுவே உயிரொன்றின் அறுதியாச்சே. … 7

    ஓம்நமோ நாராய ணாயவென்றே
    போம்வினைப் பாராய ணமாமென்றே
    . எட்டெழுத்து மந்திரமே
    . உட்டுளையாய் வந்துறினே
    நாம்மேன்மை கொள்வதற்கா தாயமென்றே. … 8

    [உட்டுளை = உள்+துணை]

    –ரமணி, 12/11/2015, கலி.26/07/5116

    *****

     

    Share
  • “ஆறு படை அழகன்” — (1)

    க.பாலசுப்பிரமணியன்

    arupadai

    வேலழகா!  உந்தன் விழியழகா ?

    கோலழகா?  உந்தன் கொடியழகா ?

    பேரழகா! உந்தன் பெயரழகா ?

    சொல்லழகா!  சொல்லின் சுவையழகா?

     

     

    பாலழகா? பன்னீர் மணமழகா?

    பஞ்சாமிர்த சுவையழகா ?

    பூவழகா!! கொன்றைப்பூவழகா !!

    பூசிய நெற்றித் திருநீரழகா !

     

     

    போரழகா? போரில் கொண்ட சினமழகா?

    சினமழிந்து நின்ற சோலையழகா ?

    அலையழகா! செந்துரக்கடலுறை அழகா !!

    மலையழகா? மலை நின்ற நிலையழகா??

     

     

    அன்னை தந்த சக்தி வேலழகா?

    அப்பனுக்கு நீ சொன்ன பொருளழகா?

    அவ்வையிடம் கேட்ட பாட்டழகா??

    அடியார்தம் கொண்ட அன்பழகா?

     

     

    முத்தமிழழகா! மூவிரண்டு முகமழகா?

    முன்வினை தீர்க்கும் அருளழகா ?

    முக்காலும் உந்தன் நினைவழகா?

    முருகாவென்று உருகும் மனமழகா?

     

     

    சொல்லழகா,  பேரழகா!!

    வேலழகா, உந்தன் விழியழகா??

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல் (2)

    க. பாலசுப்பிரமணியன்

    education

    கருவும் கற்றலும் – சில உண்மைகள்

    தாயின் வயற்றில் கருவாக இருக்கும் பொழுதே கற்றல் என்ற செயல் ஆரம்பித்து விடுகிறதா என்பதை பல நாடுகளிலே ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஒரு தாய் கருவுற்ற எட்டாம் வாரத்திலிருந்தே வெளிச் சூழ்நிலைக்கு ஏற்ப அந்தக் கருவின் அசைவுகள் இருப்பதாக மனோதத்துவ விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர்.

    இதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய பல நாடுகளில் கருவாக இருக்கும் நிலையில் கற்றல்- புரிதல் பற்றிய ஆராய்ச்சி செய்ய தனியான மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன   (Department of pre-natal Cognitive Psychology )

    டேவிட் சம்பெர்லைன்  என்ற மனோ தத்துவ விஞ்ஞானி கூறுகின்றார். ” ஒரு சமுதாயத்தில் வன்முறைகளைப் பின்பற்றுவோர்களுடைய  செயல்களை அவர்கள் கருவில் இருக்கும் போது போதிய ஊட்டச்சக்திகள் இல்லாமை, கவனக்குறைவுகள் மற்றும் வளர்ந்த குடும்பச் சூழ்நிலைகளின் அடிப்படியில் ஊகிக்கமுடியும் ”

    “மேலும் இளம் பிராயத்தில் பெற்றோர்களோடு பாசமின்மை, பெற்றோர்களை விட்டுப் பிரிந்து இருத்தல் போன்ற காரணங்களால் பல பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் நினைக்கின்றனர்.”

    தன்னுடைய தாயாரின் குரலை ஒரு கரு கிட்டத்தட்ட பதினாறு வாரங்களில் அடையாளம் கண்டு கொள்கிறது  இருபத்தி ஏழாவது வாரத்தில் குழந்தையின் பிரதிபலிப்புக்கள்  தாயின் குரலின் குணாதிசயங்களை உணர்ந்து வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.  அது மட்டுமல்ல, அந்தக் கரு தன் தாயின் உணர்வு   நிலைகளையும் (emotional state ) அடையாளம் கண்டு கொள்கிறது.

    ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் கருவாக இருந்த நிலையில் தாய் பார்த்த ஒரு ஹாலிவுட் படத்தின்   ஒலிகளையும் குரல்களையும் கேட்ட குழந்தை, பிறந்து சில வாரங்களில் அதே படத்தை போட்டபொழுது கருவில் காட்டிய அதே அசைவுகளைக் காட்டியதாகவும் கண்டுபிடிக்கப் பட்டது.

    சாரா பில்லே என்ற ஓர் விஞ்ஞானி தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் கருவாக இருக்கும் பொழுது மூளையில் வளர்ச்சி  பெற்றோர்களின் மனநிலை மற்றும் உணர்வு நிலைகளால் அதிகம் பாதிக்கப் படுகிறது என்று கூறுகின்றார்.  அன்பான, அமைதியான சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிகச் சிறப்பாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

    ஆகவே, கற்றல் என்ற ஒரு செயல் கருவுற்ற காலம் முதல்  துவங்குகின்றது.

    கருத்தரித்த காலத்தில் ஒரு தாய் படும் வேதனைகளும் துயரங்களும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறைவான மூளை வளர்ச்சி, வயதுக்கு தகுந்த அளவு மூளை வளர்ச்சி இல்லாமல் இருத்தல், மூளைக் கோளாறுகள்  போன்றவைகளை கருத்தரித்த காலத்தில்  நடந்த நிகழ்சிகளோடு இணைத்து  பார்த்தால் பல உண்மைகள் வெளிப்படும் என்றும் விஞ் ஞானிகள் கூறுகின்றனர்.

    அதே போல, பெற்றோரிடமிருந்து சில திறன்களையும் குழந்தைகள் கற்றுக் கொள்ளுகின்றனர். கருவுற்ற காலத்தில் இசை போன்ற பல கலைகளில் நாட்டம்  உடையவர்களுடைய குழந்தைகளைக்கு மூளை வளரும் நேரத்திலேயே இதில் ஈடுபாடு ஏற்படுவதாகவும் ஆகவே பிறந்த பின் அவற்றில் சுலபமாக நாட்டம் ஏற்பட்டு விடுவதாகவும் சொல்லுகின்றனர்.

    ஆகவே, மகளிருக்கு கருவுறும் காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம். ஒரு சந்ததியின் தலை எழுத்தை நிர்ணயிக்கத் தயாராகும் காலம்.

    பல நுண் கருவிகள் மூலம் தாயின் வயிற்றில் ஒரு கரு காட்டும் உணர்வுகள் படம் பிடிக்கப் பட்டிருக்கின்றன. கருவாக இருக்கும் நிலையிலேயே  முகத்தில் உணர்வுகளைக் காட்டும் குழந்தைகளின் படங்களைக் கண்டால் அந்த நிலையைப் பேணிப் பராமரிக்கும் தேவையை நாம் உணர முடிகின்றது .

    ஆகவே, பெற்றோர்கள் குழந்தை உருவாகும் நிலையில் அன்பு, அமைதி மற்றும் ஆக்கபூர்வமான சூழ்நிலை உருவாக்குதல் மிக அவசியம்.

    Share
  • மரபின் மைந்தன் முத்தையாவின் வலைதளம்

    அன்பினிய நண்பர்களே,

    mm

    www.marabinmaindan.com எனும் பெயரில், மரபின் மைந்தன் முத்தையாவின் வலைதளம்தொடங்கப்படுகிறது. இதன் தொடக்கவிழா 07.11.2015 சனி மாலை 6.30 மணிக்கு கோவை ராம்நகரிலுள்ள விஜய் பார்க் இன் ஹோட்டலில் உள்ள வெங்கடேஷ் மஹாலில் நிகழ்கிறது.

    எழுத்தாளர்,பேச்சாளர், சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,கவிஞர், பத்திரிகையாளர் என்று பன்முக பரிமாணங்கள் கொண்டவர் திரு.மரபின்மைந்தன் முத்தையா.இவரது படைப்புகள் நிகழ்ச்சிகள் பயிலரங்குகள் புத்தகங்கள் வலைப்பதிவுகள் உரைகள் காணொளிகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் காண்கிற விதமாக www.marabinmaindan.com என்னும் பெயரில் வலைதளம் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நிகழ்கிறது.

    இவ்விழாவிற்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தலைமை வகிக்கிறார்.கோவை ஶ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமதி எஸ்.மலர்விழி, வலைதளத்தை தொடங்கி வைக்கிறார்.ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு.ம,கிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார்.

    mm1

    பாலரிஷி ஶ்ரீ விஸ்வசிராஷினி ஆசியுரை வழங்குகிறார். எழுத்தாளர் வண்ணதாசன் சிறப்புரை ஆற்றுகிறார்.வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாவட்ட செயலாளர் திரு.வி.பி.குமார், கோவை மாவட்ட அமைப்பாளர் திரு,கோவை ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

    திரு.நா.வெங்கடேஷ் வலைதள விளக்கம் வழங்குகிறார். முன்னதாக வெற்றித் தமிழர்பேரவையின் கோவை மாவட்ட அமைப்பாளர் திரு. மு. முருகன் வரவேற்புரை வழங்குகிறார்.நமது நம்பிக்கை மாத இதழின் உதவி ஆசிரியர் திரு.சிவக்குமார் பழனியப்பன் நன்றி நவில்கிறார்.

    விழா நிகழ்ச்சிகளை செல்வி.அகிலா தொகுத்து வழங்குகிறார்

    Share
  • தமிழ் மொழியின் சொல்வளம்!

    பவள சங்கரி 

    ஒரு பொருளின் தன்மைக்கேற்ப அப்பொருளின் பெயரைக் குறிக்க பல சொற்கள் பயன்படுத்துவது நம் மொழியின் தனிச்சிறப்பு. இது வேறு எந்த மொழியிலும் காணமுடியுமா என்பது ஐயமே… உதாரணமாக,

    இலை என்று எடுத்துக்கொண்டோமானால் அதற்கு எத்தனை வகைப் பெயர்கள் பாருங்கள்…

    நெற்பயிர் இலைகள் – தாள்
    கருப்பஞ்செடி இலைகள் – தோகை
    தென்னை, பனை மர இலைகள் – ஓலை
    தாழை இலைகள் – மடல்
    காய்ந்த இலை – சருகு
    சில வகை இலைகளை – தழை என்கிறோம்..

    அதேபோல் செடியில் தோன்றும்போது பூ – அரும்பு என்றும், மலர் மலர்ந்து வருங்கால் அது ‘போது’ என்றும், விரிந்த நிலையில் மலர் என்றும் அழைக்கிறோம்.

    மலராத பூவையோ, மொட்டு, அரும்பு, மொக்கு, முகை என்று பலவாறு அழைக்கிறோம்…

    பூவிலிருந்து காய் வரும்போது அதை, ‘பிஞ்சு’ என்றும், முதிர்ந்த பிஞ்சை காய் என்றும், பழுக்கும் பருவத்தில் செங்காய் என்றும், முற்றிலும் பழுத்த பின்பு பழம், கனி என்றும் கூறுகிறோம். ‘பிஞ்சு’ வகைகளில், ’குரும்பை’, ‘வடு’, ‘மூசு’, ‘கச்சல்’ என்று செடிகளின் வகைக்கேற்ப மாறுபடும்.. எடுத்துக்காட்டு:

    வாழைப்பிஞ்சு – கச்சல்
    மாங்காய் பிஞ்சு – வடு
    தேங்காய் பிஞ்சு – குரும்பை
    இளங்காய் – மூசு

    Share
  • வாழ்க இந்தியா!

    பவள சங்கரி

    ‘மூடீஸ்’ (Moodys) என்பது ஒரு அகில உலக பொருளாதார ஆய்வு நிறுவனம். இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி வெளிநாடுகளின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் பாதிப்பு இன்றி இந்தியா தன்னுடைய சுய பொருளாதார முன்னேற்றம் மூலமாக, 2015 – 2016 ம் ஆண்டில், ஜி 20 நாடுகளின் முதன்மையாக 7.75 சதவிகித பொருளாதார வளர்சியை அடையும் என்று அறிவித்துள்ளது. இதற்கு இந்தியாவின் சுய பொருளாதார முன்னேற்றமே காரணம் என்கிறது இந்த ஆய்வறிக்கை. துருக்கி, இந்தோனேசியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைவிட இந்தியா பல வகையில் வளர்ச்சி எல்லையை அடையப் போவதும் உறுதி என்கிறது இந்த ஆய்வறிக்கை. மேலும் நம் இந்திய அரசின் உறுதியான பொருளாதாரக் கொள்கைகளின் பலனாக பண வீக்கம் முற்றிலும் கட்டுக்குள் வரும் என்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்கிறது இந்த நிறுவனம். அமெரிக்காவின் பொருளாதார நிலையும், சீனாவின் பொருளாதார வீழ்ச்சியும் கூட நம் இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது என்பதும் மிகவும் மகிழ்ச்சியான செய்தி..

    Share
  • அவன்,அது,ஆத்மா (35)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 35

    டாக்டர். ஆ. சங்கரநாராயணன்

    amvஅவனுக்கு நெருங்கிய நண்பர்களில் சங்கரும் ஒருவன். அவனைவிட மூன்று வயது மூத்தவன். அவனுடைய வீட்டிருக்கு அருகில் இருக்கின்ற ஆதிவராக மாமாவின் மூத்த மகன். முழுப் பெயர் ஆ. சங்கரநாராயணன். அவன் அனேகமாக சங்கரின் வீட்டில்தான் விளையாடிக் கொண்டிருப்பான். சங்கரின் தம்பி ரகுவும் அவனுக்கு நண்பன். ஒரு முறை அவனும், சங்கர், ரகு, கபாலி இன்னும் சிலருமாக சங்கரின் வீட்டு நடையில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, சங்கரின் அம்மாவழித் தாத்தா அவனைப் பார்த்து,” நீ யாராதுப் பையன்” என்று கேட்டார். அப்பொழுது அங்கு வந்த சங்கரின் அம்மா கல்யாணி மாமி ,” அப்பா…இவனும் என்னோடு கொழந்தைதான்…இவனோடு அம்மா என்னோடு தோழி…இவன் பேரு கண்ணன்” என்று சொன்னாள். கல்யாணி மாமி, ” இவனும் என்னோடு கொழந்தை” என்று சொன்ன அந்த அன்பான வார்த்தை இன்னும் அவனுக்கு இதயத்தில் இருக்கிறது. கிராமத்து மனிதர்களிடம் இருக்கும் அன்பு கள்ளம் இல்லாதது.

    சங்கர் சிறுவயது முதலே நல்ல படிப்பாளி. விளையாட்டிலும் திறமைசாலி. வானொலிப் பெட்டியில் ஹிந்திப் படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே தன்னுடைய பாடங்களைப் படிக்கக் கூடிய கவனம் சங்கருக்கு இருந்தது. அப்பொழுது “ஆராதனா” என்ற ஹிந்தித் திரைப்படம் வந்த சமயம். சங்கர் வானொலியில் “ரூப்புதேரா மஸ்தானா” பாடலைக் கேட்டு ரசித்தபடி “இப்படி ஒரு டுயூன்” தமிழ்ல இருக்கா” என்றான். அவனுக்கு இந்திப் பாடல்கள் புரியாது. ஆனால் அதன் இசை பிடிக்கும். “தமிழ்ல எம்.எஸ்.வி. பாட்டு பிரமாத மாக இருக்கும்” என்று அவன் தமிழுக்குக் கொடிபிடித்தான்.

    ஒரு முறை அவனுக்கும் சங்கருக்கும் சண்டை வந்து, சங்கர் அவனை அடித்து விட்டான். அப்பொழுது அங்கிருந்த சங்கரின் அப்பா ஆதிவராக மாமா சங்கரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். எல்லோருக்கும் முன்னால் அவர் அப்படி அடித்ததில் சங்கருக்கு அவமானமாகப் போய்விட, கோபித்துக் கொண்டு வீட்டின் உள்ளே ஒட்டியே போனவன்தான். நீண்ட நேரமாகியும் சங்கரைக் காணவில்லை. வீட்டு வேலைக் காரர்களும் தேடினார்கள். யார் கண்ணிலும் அகப்பட வில்லை. எல்லோருக்கும் கவலையாகி விட்டது. அவனுக்கு அம்மா,” எல்லார் கூடவும் சண்டை போடராய்…இப்ப பாரு ஒன்னால சங்கர் எங்க போனான்னே தெரியலை..” என்று அவனைச் சத்தம் போட்டாள். சந்தியாகாலம் இருட்டும் வேளை சங்கர் மெதுவாக மாடியில் இருந்து இறங்கி வந்தான். மாடியில் ஒரு தொட்டி போன்ற ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டிருந்ததாகச் சொன்னான். மறுநாள் காலையில் அவனும், சங்கர், ரகு, கபாலி, சுரேஷ் நண்பர்கள் சூழ ஆத்தங்கரைக்குக் குளிக்கச் சென்றனர்.

    சங்கருக்கு கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அதனால் “கல்லிடை கிரிக்கெட் கிளப்” ( K.C.C ) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினான். தெருவில் உள்ள நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். சங்கரின் வீட்டு வாசலில் மூன்று “ஸ்டெம்ப்”களை நட்டு கிரிக்கெட் விளையாட்டு மிக மும்முரமாக நடக்கும். ஸ்டெம்ப், பேட், பந்து எல்லாமே சங்கரும், ரகுவும் வாங்கி வைத்திருந்தார்கள். சங்கர் பந்து வீசும் பொழுது “கமெண்ட்ரி” சொல்லிக்கொண்டே இருப்பான். பந்து, மட்டையில் படுவதற்கு முன்பே ,” he is out..he is out” என்று கத்திக் கலக்குவான். அந்த பயத்திலேயே பாதிபேர் “அவுட்” ஆகிப் போவார்கள். ஒரு முறை என்.ஆர். (இப்பொழுது மும்பையில் ராமசுப்ரமணிய சாஸ்திரிகள்) “பேட்டிங்”. சங்கர் ஓடியே வந்து பந்தை வீசியபடி ” he is out..he is out” என்றான். ,” சங்கர்.. என்னப்பா …பந்தே இன்னும் வல்லை…அதுக்குள்ளே நான் அவுட்டா…” என்று என்.ஆர். கேட்டதும் எல்லோரும் சிரித்து விட்டனர். சங்கரின் பழக்கத்தில்தான் அவனுக்குக் கொஞ்சம் கிரிக்கெட் வாசனை அடித்தது. கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், பட்டோடி, சந்திரசேகர் போன்ற கிரிக்கெட் வீரர்களின் சாகசங்களை சங்கர் சொல்லி அவன் ரசித்திருக்கிறான். சங்கரின் வீட்டு வானொலியில் நண்பர்களுடன் அவனும் கிரிக்கெட் கமெண்டரி கேட்கும் பழக்கம் இருந்தது. சங்கரின் அப்பாவுக்கும் கிரிக்கெட் கமெண்டரி கேட்பதில் ஆர்வம் உண்டு. கிரிக்கெட் விளையாடும் பொழுது நண்பன் கபாலியை “கபிடலி” என்றுதான் ஆதிவராக மாமா அழைப்பார். ஒரு தெருவுக்கும், இன்னொரு தெருவுக்கும் போட்டி வைத்து பயிற்சி எல்லாம் தருவான். தோல்வி என்றால் அவனுக்குக் கோவம் வந்து விடும். எதிலுமே ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணம் சங்கருக்கு இயற்கையாகவே இருந்தது.

    சங்கர் கல்லூரிப் படிப்பை முடித்து மும்பையில் B. A. R .C.ல் விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்தான். அணு உலையில் வேலை. நாட்டின் பாதுகாப்பிற்கான பணி என்ற பெருமையோடு வேலை செய்து நற்பெயர் எடுத்தான். அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, “டாக்டர். ஆ. சங்கரநாராயணன்” ஆனான்.

    அணு உலையில் வேலை செய்ததால், இறைவனின் படைப்பின் ரகசியத்தை அணு அணுவாக உணர முடிந்தது என்றும், எல்லாம் அந்த “சித்தி விநாயகர்” செயல் என்றும் சங்கர் சொல்லுவான். இசையில் உள்ள ஆர்வத்தால் “வயலில்” வாசிக்கக் கற்றுக் கொண்டான். நேரம் கிடைக்கும் பொழுது தன் வீட்டில் வாசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். சங்கரின் குடும்பமே இசையில் வளர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். சங்கீதக் கலாநிதி வேதாந்த பாகவதரின் சகோதரர் ஸ்ரீ ராமலிங்க பாகவதரின் சீடர்கள்தான் சங்கரின் அப்பா, சித்தப்பா, அத்தை, சகோதரிகள் எல்லோரும். மாட்டு வண்டி அனுப்பி, ஸ்ரீ ராமலிங்க பாகவதரை அழைத்து வந்து தன் வீட்டில் அவரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டவர்கள். தீக்ஷிதரின் நவாவர்ண கிருதிகளை ஸ்ரீ ராமலிங்க பாகவதர் பாடி கேட்க வேண்டும். அத்தனை ஈர்ப்பு அதிலே இருக்கும். பாகவதர் பாட்டு கற்றுத் தரும் பொழுது பல நாள்கள் அவனும் தன் காது குளிர அந்த இசையைக் கேட்டிருக்கிறான். சங்கரின் கோமு அத்தையும், சகோதரிகள் சுதா, வசு எல்லோருமே நன்றாகப் பாடுவார்கள்.

    இரண்டு வருடங்கள் முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் துடிப்போடு விஞ்ஞானியின் உணர்வோடு சங்கர் வாழ்வது அவனுக்குப் புரிகிறது. சமீபத்தில் ஒரு “வாக்கிங் ஸ்டிக்” தயாரித்திருப்பதாகவும், அது முக்கியமாக வயதானவர்களுக்கு, அதிலும் நினைவு மறதி உள்ள முதியவர்களுக்காகவே வடிவமைத்ததாகவும் சொன்னான். அந்த “வாக்கிங் ஸ்டிக்” கைப்பிடியில் ஒரு “மைக்ரோ சிப்” வைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் அந்த முதியவர்களின் இருப்பிடத்தை எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும் என்றும், அதன் உரிமையைத் தான் வைத்திருப்பதாகவும் சொன்னான். விரைவில் ஒரு நல்ல நிறுவனம் மூலம் அதைத் தயாரிக்க வேண்டும் என்றும் அவனிடம் சொன்னது பெருமையாக இருந்தது.

    ஒருநாள் மகாகவி பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, செல்வக் களஞ்சியமே” என்ற வரிகளைப் பாடிக்காட்டி, “செல்வக் களஞ்சியம் ..என்றால் என்ன தெரியுமோ கண்ணா…அன்பு. குழந்தைகள் அன்பின் செல்வக் களஞ்சியங்கள். எடுக்க எடுக்கக் குறையாத அன்பு குழந்தைகளிடம்தான் இருக்கிறது. அதைத்தான் பாரதியார் “செல்வக் களஞ்சியமே” என்றார்” என்று சங்கர் சொன்னது அவன் மனத்தைத் தொட்டது.

    அவனுக்கு நண்பன் டாக்டர். ஆ.சங்கரநாராயணனும் அன்பில் செல்வக் களஞ்சியமே….

    22.10.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share