இணையத்தில் தொற்றுநோய் – 1

0

— தேமொழி

சமூக வலைத்தளங்களை சில நேரங்களில் கலக்கும் செய்திகள் வரும்.

தொற்றுநோய் போல பரவுவதால் இதனை ‘It went viral’ அல்லது ‘gone viral’ என்று சொல்லிச் சொல்லி தங்களைக் கவர்ந்த செய்தியை அனைவருக்கும் பலசமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பிக் கொண்டிருப்பது நமது வழக்கம். அதாவது…இப்பொழுது இங்கு நான் பரப்புவது போல என்று வைத்துக் கொள்ளலாம்.

கால்நூற்றாண்டிற்கு முன்னர் இணையம் பரவலாக பயனில் இல்லாதக் காலத்தில் gone viral என்றால் மருத்துவத் தொடர்பான செய்தியாக இருந்திருக்கக் கூடும். ஏதேனும் தீயநோய்க்கு அறிகுறியாக இருந்து, ஆளைப்பிடித்து தனிமைப்படுத்திப் பரவவிடாமல் செய்திருப்பார்கள். இணையச் செய்திகளில் இதெல்லாம் நடக்காது. செய்தி பரவிப் பரவி டிவிட்டர் மூலம் எகிப்து, ஈரான், மால்டோவா போன்ற சில நாடுகளின் புரட்சியாளர்கள் ஒருங்கிணைத்து அவர்கள் நாட்டின் அரசுக்கு எதிராகப் புரட்சிகள் செய்தனர், அவை அந்த நாடுகளின் ஆட்சியை அசைத்துப் பார்த்தன.

ஒசாமா பின் லேடனனைப் பிடிப்பதற்காக அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானில் அதிரடித் தாக்குதலில் இறங்கிய பொழுது வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவுடன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சியுடன் அதை நேரடி ஒளிபரப்பாக பார்த்துக் கொண்டிருந்த பொழுது … உலகில் யாருக்குமே அந்தச் செய்தி தெரியாது.

அபூத்தபாத் (Abbottabad) என்ற அந்த நகரில், ஒசாமா தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் வசித்த, தொலைத்தொடர்பு ஆலோசகராகப் பணிபுரியும் ‘சோஹேப் அத்தர்’ (Sohaib Athar), என்ற 33 வயது இளைஞர், வீட்டிற்கு மேல் பறந்த இராணுவ ஹெலிகாப்டர் ஏற்படுத்திய ஓசை, தொடர்ந்த அதிரடித் தாக்குதல் ஆகியவை வழக்கத்திற்கு மாறாகத் தூங்கவிடாமல் தொல்லை செய்ததால் அதனை டிவிட்டர் வலைத்தளத்தில் நேரடிப் பதிவு செய்து கொண்டிருந்தார் (Sohaib Athar, @ReallyVirtual, https://twitter.com/ReallyVirtual).

“Helicopter hovering above Abbottabad at 1AM (is a rare event).”

“Go away helicopter – before I take out my giant swatter.”

“A huge window shaking bang here in Abbottabad.”

“I hope its not the start of something nasty.”

என்ற செய்திகளாக, நடந்தது என்னவென்றே தெரியாமல் அவர் செய்த பதிவுகளின் முக்கியத்துவம் பின்னர் உணரப்பட்டு ஒரே நாளில் உலகின் புகழ் உச்சிக்குச் சென்றார். டிவிட்டர் வலைத்தளத்தில் அவரைப் பலர் தொடரத் தொடங்கினர். இது போன்று பல செய்திகள் பரவுவதும், நாம் பரப்புவதும் வாடிக்கை.

சமீபத்தில் இணையத்தைக் கலக்குவது ஒரு படம். “பாண்டாவைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்ற கேள்வியுடன் ஸ்னோமேன் கூட்டத்தில் மறைந்திருக்கும் பாண்டாக் கரடியை அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ‘டாடல்ஃப்’ (Dudolf) என்ற புனைப்பெயர் கொண்ட ஓவியர் ‘ஜெர்ஜிலி டூடஸ்‘ (Gergely Dudás), தனது ஃபேஸ்புக் தளத்தில் (https://www.facebook.com/thedudolf/) வரைந்து பதிவிட்ட படம் தொற்றுநோய் போலப் பரவிக் கொண்டிருக்கிறது.

ஸ்னோமேன் கூட்டத்தில் பாண்டாவைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்பது போல “ஆந்தையின் கூட்டத்தில் பூனையைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்ற மற்றொரு படமும் வரைந்து வெளியிட்டுள்ளார் தனது எதிர்பாராத புகழைக் கண்டு மகிழ்ந்த ஓவியர் டாடல்ஃப் அவர்கள்.

விடுமுறை நாட்களில் பொழுதை ஓட்ட இது போன்ற விளையாட்டுகள் மக்களுக்கு உதவுகிறது. அனைவரும் பார்த்து மகிழப் படங்கள் கீழே …

Gergely Dudás

Gergely Dudás2

Picture Courtesy:  https://en.wikipedia.org/wiki/Situation_Room  &  https://www.facebook.com/thedudolf/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *