மார்கழி மணாளன் 10 ஆயர்பாடி -ஸ்ரீ நவமோகன கிருஷ்ணன்
க. பாலசுப்பிரமணியன்
இளநீல மயில்பீலி இனிதே தலைசூடி
இளம்பச்சை பட்டொன்று இடுப்பில் கட்டி
இளவேனில் மாலையிலே இனிய குழலூதி
இளமைக்குப் பொலிவூட்டி இடையன் நடந்தான் !
இளஞ்சிவப்புப் பொட்டங்கே எழுகின்ற கதிரவனோ?
இமையிரண்டும் ஓங்கி உயர்ந்த மாமலையோ?
இதமான கீதங்கள் இதழசைவில் இறங்கிவர
இவையனைத்தும் அவன் கருவிழிகள் தேடிவிடும்!
ஊதாப்பூ சேலையுடுத்தி ரோஜாப்பூ ராதை
கொத்தாகப் பூக்களைத் தலையில் சூட்டி
மத்தாப்பூ சிரிப்புடனே கண்ணனைத் தேடி
தப்பாமல் நடந்தாள் கால்தடங்கள் மேலேறி.!
கோலிரண்டைக் கையேந்திப் பாவைகள் ஆட
கோலமயில் ராதையுடன் கோகுலனும் ஆட
கைவண்ணம் கால்வண்ணம் கண்வண்ணம்
வான்மின்னும் தாரகைகள் நிழல் வண்ணம் !
சல் சல்லென்று சலங்கைச் சத்தம் ஒலிக்க
சில்லென்ற காற்றும் சற்றே மயங்கியே நிற்க
கோகுலத்தில் கொண்டாட்டம் என்றென்றும்
கண்டாயோ கண்டாயோ ராசலீலை என்னுயிரே !
தோளினிலே துவளும் ஒரு துளசிமாலை
தோதாக ஆடிவர பிருந்தாவனப் பாதை !
குழலிலிருந்து பிறக்கின்ற அவன் நாதம்
கோகுலமென்ன, கூடிநின்று மூவுலகும் ஆடும் !
கோகுலமோ கோவர்தனமோ இது வைகுந்தமோ,?
கோவினங்கள் யாதவனைத் தேடிவந்த தேவர்குலமோ ?
கோவிந்தன் கால்பட்டால் கோகுலமும் வான்வளமோ?
கோலாட்ட வாழ்க்கையிது ! கோகுலனோடு ஆடிவிடு !