Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • சூட்டு யுகப் பிரளயம்! மாந்தர் பிழைப்ப தெப்படி?

    சூட்டு யுகப் பிரளயம்! மாந்தர் பிழைப்ப தெப்படி?

    அல்கோர் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பூகோளம் மின்வலை யுகத்தில்
    பொரி உருண்டை ஆனது !
    ஓகோ வென்றிருந்த உலகமின்று
    உருவம் மாறிப் போனது !
    பூகோள மஸ்லீன் போர்வை
    பூச்சரித்துக் கந்தை ஆகுது !
    மூச்சடைத்து விழி பிதுக்க
    வெப்ப யுகப்போர் தொடுக்குது !
    நோய் பற்றும் பூமியைக்
    குணமாக்க மருத்துவம் தேவை !
    காலநிலை மாறுத லுக்குக்
    காரணங்கள் வேறு வேறு !
    கரங் கோத்துக் காப்பாற்ற
    வருவீ ரெனக் கூறு கூறு !
    ஓரிடத்தில் எரிமலை கக்கி
    உலகெலாம் பரவும்
    கரும்புகைச் சாம்பல் !
    துருவப் பனிமலைகள்
    உருகி
    உப்பு நீர்க் கடல் உயரும்!
    பருவக் கால நிலை
    தாளம் தடுமாறிப்
    வேளை தவறி நாள் மாறிவிடும்,
    கோடை காலம் நீடிக்கும்,
    குளிர்காலப் பனிமலைகள்
    வளராமல்
    சிறுத்துப் போகும்
    துருவ முனைகளில் !
    நிலப்பகுதி நீர்மய மாகும் !
    நீர்ப்பகுதி நிலமாகிப் போகும் !
    உணவுப் பயிர்கள் சேத மாகும் !
    மனித நாகரீகம் நாசமடைந்து
    புனித வாழ்வு வாசமிழந்து
    வெறிபிடித் தாடும்
    வெப்ப யுகப் பிரளயம் !

    **************************************

    “கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது.  சூடேறும் பூகோளம் மெல்ல மெல்லச் சூடேறி 129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.”

    ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)]

    “கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும்.  கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டித்திருக்கிறது.  அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார் !  எதிர்பார்த்தை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.”

    கிரிஸ்டொ·பர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]

    “55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் தீவிரச் சூடேற்றம் உண்டாகி மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினம் அழிந்து போயின என்றும், அதே சமயத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் இன்றைய (நவம்பர் 19, 1999) விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது.  அந்த மாதிரி வெப்ப யுகம் “சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது.  அது 10,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை வருகிறது.”

    ஜான் ரோச் [John Roach, Environmental News Network (Nov 19, 1999)]

    “மீதேன் வாயு வெளியேற்றத்துக்கும், வெப்பச் சூடு ஏற்றத்துக்கும் உள்ள உறவு கடற்தளப் படிகைகளை [Ocean Floor Sediments] ஆராய்ந்து கண்ட விளைவுகளை வைத்துத் தீர்மானிக்கப் பட்டது.  அதுவே வெப்ப ஏற்ற விதிக்கு முதல்தர ஆதாரச் சான்று.  வெப்ப ஏற்றம் கடற்படிகையைச் சூடாக்கி திட மீதேனை நீர்த்திடச் செய்து [Hydrated Soild Methane (CH4)] வாயுக் குமிழ்களாய்க் கொப்பளிக்க வைக்கிறது.  மீதேன் வாயு நீரில் கலந்துள்ள ஆக்ஸிஜெனுடன் சேர்ந்து ஏரிகளில் கரிமம் [Carbon] பிரிந்து கரிமச் சுற்றியக்கம் [ Global Exogenic Carbon Cycle] தொடர்கிறது.”

    டோரோதி பாக், ஆய்வாளர், கலி·போர்னியா பல்கலைக் கழகம்

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    சூடேறும் பூகோளம் பற்றி அல் கோர்

    பூகோளம் சூடேறும் என்றால் எதைக் குறிப்பிடுகிறோம் ?

    பூகோளம் என்று நாம் சொல்லும் போது, மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட உஷ்ண நீட்சியில் [Temperature Range] வைத்துக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம்.  அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி சூட்டுப் பிரளயம் நேர்ந்துவிடும்.  வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் யாவும் சிதைந்து, சீர்குலைந்து பூகோளம் செவ்வாய்க் கோள்போல் நீர்மை, ஆக்ஸிஜென், ஹைடிரஜன் இல்லாமல் பாலைவனமாய் வரண்டு போய்விடும் !  சூழ்வெளியில் சேமிப்பாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (கார்பன் டையாக்ஸைடு, மீதேன் போன்ற வாயுக்கள்) பரிதியின் வெப்பத்தை விழுங்கிப் பூகோளத்தின் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன.  ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே.  ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, ஆயில் போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூகோள உஷ்ணம் விரைவாக ஏறுகிறது.

    சமீபத்தில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டுகளாய்ச் சேமிப்பான பனிக்குவிப்பிலிருந்தும் மீதேன் வாயு பேரளவுக் கொள்ளளவில் வெளியேறுவதாகச் சூடேறும் பூகோள எச்சரிப்பாளர் எடுத்துக் கூறியுள்ளார்.  மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்படுகிறது.  பூகோளச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பன் டையாக்ஸைடை விட 23 மடங்கு பெரியது.  உலகில் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் சூடேறும் பூகோளத்தை மெய்யாகக் கருதி ஏற்றுக் கொண்டாலும், அம்மாறுதலை ஒப்புக்கொள்ளாத அறிஞரும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் சூடேறிய பூகோளத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் மெய்யாக உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.

    சூடேறும் பூகோள எச்சரிக்கைகள், மாறுதல்கள், இன்னல்கள் !

    பூகோளம் சூடேறுவதால் ஒவ்வோர் ஆண்டும் காலநிலைக் கோர விளைவுகள் மாறி மாறி விளைந்து வியப்புக்குள் நம்மை ஆழ்த்துகின்றன.  துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் ஏறுவதைக் காண்கிறோம்.  கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகளும், சைக்குலோன்களும், ஹரிக்கேன்களும் எண்ணிக்கையில் அதிகமாகி, பலத்தில் அசுரத்தனமாகிக் கோடான கோடி உலக மக்களுக்குப் பேரின்னல்களை விளைவித்து வருகின்றன.  நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் பயம் வந்துவிட்டது.  மேலும் கீழ்க்காணும் நூதனக் காலநிலைக் கோர விளைவுகள் உலக மக்களைத் துன்புறுத்தி வருகின்றன !

    1.  கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5]   எண்ணிக்கை இரட்டித்துள்ளது.
    2.  கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன.
    3.  குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.
    4.  7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

    மேலும் தொடர்ந்து சூடேற்றம் மிகையாகச் ஏறிச் சென்றால், கீழ்க்காணும் பெருங் கேடுகள் பரவ வாய்ப்புகள் உண்டாகும்.

    1.  அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும்.
    2.  கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம்.
    3.  2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம்.
    4.  2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம்.
    5.  வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம்.
    6.  நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.

    சூடேறும் பூகோளத்தில் எழுகின்ற இந்த பிரச்சனைகளை ஐயமின்றி நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும்.  அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமை நெறியாக உள்ளது.  நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும்.  அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் எப்போது என்று நினைக்கிறீர்கள் ? இப்போதுதான் !

    (தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]  (April 9, 2007)
    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it”   By Al Core (2006)
    2(a)  The Assault on Reason  By Al Gore  (July 2007)
    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)
    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)
    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)
    6.  The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)
    7.  Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)
    8. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

    Share
  • பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள்

    பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள்

    Hoover Dam, USA

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    https://youtu.be/XnPi3FdNBYc

    https://youtu.be/mMUzO1b_q1E

    +++++++++++++

    சென்று போன பொய்யெல்லாம் மெய்யாக
    சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
    வென்று நிற்கும் மெய்யெல்லாம் பொய்யாக
    விழிமயங்கி நோக்குவாய் போ போ போ ….
    (போகின்ற பாரதத்தைச் சபித்தல்)

    மகாகவி பாரதியார்

    ‘பாதுகாப்பான நீர்வளப் பரிமாற்றம், அனைவருக்கும் போதிய சுகாதாரக் கழிவுநீக்க அமைப்புகள் ஆகிய இரண்டைத் தவிர, முன்னேறும் நாடுகளில் மனித உயிர்களைக் காக்கவும், நோய்களைக் குறைக்கவும் தனிப்பட்ட வேறு முறைகள் எவையும் மேன்மையாக இருக்க முடியாது!

    சுத்தமான குடிநீர், குளிப்புநீர், கழுவுநீர், உணவுப்பயிர் வளர்ச்சிக்கு நீர்ப்பாசான வசதிகள் ஆகியவை கிடைக்க வாய்ப்புக்கள் இல்லாததால், உலகில் ஒரு பில்லியன் குடும்பங்கள் பெரும் இடருக்குள் தவித்து வருகின்றன! நாடுகளுக் கிடையே நிலவும் வெறுப்பு உணர்ச்சிகள் மிஞ்சிக் கடினம் ஆவதற்கோ அல்லது தணிப்பாகிப் பிணைப்பதற்கோ நதிகளின் நீர்வளப் பங்கீடுகள் தூண்டுதல் செய்யாலாம். அகிலப் புதுநீர்வள ஆண்டான 2003 உலக அரசுகள், சமூகக் குழுவினங்கள், வர்த்தத் துறைகள், மற்றும் தனியார் துறைகள் யாவற்றுக்கும் திசைகாட்டித் தேவையான நீர்வள ஆக்கவழிகளில் முற்பட முக்கிய அங்கம் வகுக்கும் ‘.

    கோஃபி ஆன்னன், ஐக்கிய தேசப் பேரவை அதிபதி [Kofi Annan, UN Secretary General (2003)]

    ‘நர்மதா நதிப் பள்ளத்தாக்குப் பாமர மக்கள், நடைமுறையில் மெய்யான ஒரு யுத்தத்தில் வாழும் உயிர்களின் உரிமைப் போராகப் போராடி வருகிறார்கள் ‘ மிஸ். மேதா பட்கர் [சமூகப் போராட்டவாதி (1997)]

    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பாரத மக்களின் முதலிரு தேவைகள்

    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பாரத மக்களின் முதல் தேவை நீர்வளத் தேக்கம். இரண்டாம் தேவை மின்சக்தி உற்பத்தி. இவ்விரு முக்கிய அவசரத் தேவைகளுக்கும் இந்தியாவில் இடையூறுகள் இழைத்து, நாட்டு முன்னேற் றத்தைத் தடுத்து, மக்களுக்கு அபாயம் விளைவிக்க முற்படும் எதிர்ப்பாளிகள் இந்தியராயினும், தேசப் பற்றில்லாத பிற்போக்கு அன்னிய மனிதர்களே! இந்திய ஜனப்பெருக்கம் ஒரு பில்லியனைத் தாண்டி, ஆண்டு தோறும் மிகையாகி வருகிற போது, அதே விகித வேகத்தில் வாழ்வு நலப்பெருக்கும் விரிந்திட தற்போது நதியிணைப்பும், நீர்த்தேக்கங்களும் நாடெங்கும் நீர்வளம், நீர்ப்பாசானம் அளிக்கப் போவதைப் பேரணை எதிர்ப்பாளிகள் தடுக்கவும் கூடாது, புறக்கணிப்பதும் தவறு!

    Hoover Dam -2

    இப்போதும், எதிர்காலத்திலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இன்னும் அதிகமான அணை நீர்த் தேக்கங்கள் நதிகளில் அமைக்க வேண்டிய கட்டாயம் நெருங்கி விட்டது! சமூகப் போராட்டவாதிகள் கட்டிவரும் அணைகளைத் தடுப்பதும், கட்டப் போகும் அணைகளுக்கு தடைகள் செய்வதும், நீர்ப் பங்கீடுகளில் உடன்படாமையும் நெறியற்ற, முறையற்ற செயல்கள். முன்னோடியாய் அரசாங்கம் சீரான திட்ட மிட்டாலும், நீதி மன்றங்கள் எத்தனை சட்டமிட்டாலும், இடப்பெயர்ச்சிக் குடியேற்ற அமைப்புகளில் குறைபாடுகள் நேரத்தான் செய்யும்! புகார் பிரச்சனைத் தீர்ப்பு அளிப்புகளில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் திருப்தி செய்வது இயலாத காரியம்! பெரும்பான்மையான இடப்பெயர்ச்சி வேதனைகள் குறுகிய காலத் தவிப்பே! ஆனால் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை என்பது நீண்ட காலத் தவிப்பு! பேரணைகள் கட்டும் போது மக்கள் படும் வேதனைகளை விட, பேரணைகள் இல்லாத போது மாந்தர் படும் நீர்ப் பற்றாக்குறை வேதனைகள் கொடியவை! கொடியவை!! கொடியவை!!!

    கட்டுரை ஆசிரியர்

    மரணமா அன்றி வாழ்வா என்று நெருக்கடி தரும் தண்ணீர்!

    ஐக்கிய நாடுகளின் பேரவை உலகெங்கும் நோக்கி, 21 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாடு, நீர்வள நெருக்கடி, நீர்ப்பாசானக் குறைபாடு ஆகியவற்றைக் கண்டறிந்து கீழ்க்காணும் தகவலை வெளியிட்டிருக்கிறது:

    1. உலகிலே 1.2 பில்லியன் மாந்தர் சுத்தமான குடிநீர் அருந்த வாய்ப்பில்லாது உள்ளனர்.
    2. உலக ஜனத்தொகையில் பாதிப்பேர் (2.4 பில்லியன்), போதிய சுகாதாரக் கழிவுநீக்க வசதிகள் இல்லாமல் இருக்கின்றார்.
    3. துர்மாசு நிரம்பிய நீர் சார்ந்த நோயில், குறைந்தது 3 மில்லியன் மக்கள் ஆண்டு தோறும் மரணம் அடைகிறார்.
    4. கடந்த நூற்றாண்டில் உலகத்தின் பாதிப்பகுதி ஈரடிப்பு நிலங்கள் [Wetlands] அழிந்து சீர்கெட்டுப் போயின.

    2000 ஆண்டு செப்டம்பரில் உலக நீர்வள நிபுணர்கள் ஐக்கிய நாடுகளின் ஆயிரத்தாண்டு கூட்டவையில் ஒன்று கூடி முடிவு செய்தது: 2015 ஆண்டுக்குள் பாதுகாப்பான குடிநீர் வசதிக்கு வாய்ப்பில்லா மாந்தரின் எண்ணிக்கையைப் பாதியாக்குவது.

    2002 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா ஜொகானஸ்பர்கில் நடந்த நீர்வளக் கூட்டவையில் முடிவு செய்தது:

    2015 ஆம் ஆண்டுக்குள் சுகாதாரக் கழிவுநீக்க வசதிக்கு வாய்ப்பில்லாத மக்களின் எண்ணிக்கையும் பாதியாகப் பணி செய்தது.

    இந்தக் குறிக்கோள்களை நிறைவேற்ற முயலும் உலக நாடுகள் ஆண்டுக்கு 30 பில்லியன் டாலரைச் செலவழித்து வருகின்றன.

    பேரணைத் தடுப்புகளில் வேதனை மக்களுக்கே !

    பாரத நாட்டின் பல பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை கோரப் பற்களால் மக்களைக் கடித்துக் கொண்டிருக்கிறது! இன்னலுற்றுக் குருதி சிந்தும் மாந்தர்கள் மாநில அரசாங்கத்தின் கழுத்தை நெரித்துக் ‘குடிநீர் கொண்டுவா ‘ என்று போராட்டம் செய்து வருவது ஒருபுறம்! மாநில அரசாங்கம் மத்திய அரசின் சிரசைத் தடியால் அடித்து, அண்டை மாநில நதி வெள்ளத்தைக் கால்வாய் மூலம் எங்கள் தேக்கத்தில் இணைத்துவிடு என்று மன்றாடுவது மறுபுறம்! இந்தியப் பெரு நதிகளைச் சிறுநதிகளுடன் பிணைத்திட மத்திய அரசு திட்டம் வகுத்தால், நடக்காது என்று எதிர்ப்பதும், தடை செய்வதும் யார் ? மாநில அதிகாரிகள், நிபுணர்கள், பொதுமக்கள்! இடப்பெயர்ச்சி, நில ஒதுக்கம், நிதியீடு, குடியேற்றப் பிரச்சனைகளைக் கைவசம் வைத்துக் கொண்டு, பேரணைகள் தேவையில்லை என்று வட இந்தியாவில் போரிடும் அருந்ததி ராய், மேதா பட்கர் போன்ற போராட்டவாதிகள், நீர்வளப் பற்றாக்குறை பற்றிய எதிர்காலச் சிந்தனை இன்றி எளிய மக்களை தெளிவு படுத்தாமல் இழுத்துக் கொண்டு அரசாங்கம் மீது, ஆவேசமாகப் படையெடுத்து வருவது மறுபுறம்!

    இடப்பெயர்ச்சிக் குடியேற்றப் பிரச்சனைகளை இருதரப்பினருக்கும் உடன்பாடாக ஓரளவு தீர்க்க முடியுமே தவிர, பூரணமாக நிறைவேற்றப் பல்லாண்டுகள் ஆகும்! ஆயினும் அனைத்து மக்களையும் திருப்தி செய்ய இயலாது! முன்னோடித் திட்டமிட்டாலும் குடியேற்ற அமைப்புகளில் குறைபாடுகள் நேரத்தான் செய்யும்! புகார் பிரச்சனைகளில் தீர்ப்பு அளிப்புகள் திருப்தி செய்யவில்லை என்றால், போராட்டத் தலைவியோ அல்லது தலைவரோ அணை வேலைகளைத் தடை செய்யாது, மற்ற வழிகளில் தர்மப் போர் புரிய வேண்டும். கோடிக் கணக்கான ரூபாய்ச் செலவில் வடிவாகி வரும் பேரணையைக் கட்ட விடாமல் தடுப்பது, கால தாமதப் படுத்துவது அரசாங்கத்தைத் தண்டிப்பதாகத் தோன்றினாலும், மெய்யாகப் பார்த்தால் மக்களே மக்களைத் தண்டித்துக் கொள்கிறார்கள்! நதியிணைப்புப் பணி நிறுத்தங்களில் நிதியிழப்பும், கால விரையமும் மத்திய அரசை மட்டு மன்று, மாநில மக்களையும் பாதிக்கின்றன! இறுதியில் நீர்ப் பற்றாக்குறைத் தவிப்பில் தண்டிக்கப் படுவது அரசாங்க மன்று, பாரத மக்களே!

    பேரணைப் போராட்ட அன்னை மிஸ் மேதா பட்கர்

    நர்மதா நதிப் பள்ளத்தாக்குத் திட்டங்களில் இடப்பெயர்ச்சி, இழப்புநிதி ஈடுபாடு, குடியேற்றக் குறைபாடுகளை நிமிர்த்திட, பாமர ஏழைகள் சார்பாக பல்லாண்டுகள் வாதாடிப் போராடித் தர்மப் போர் புரிந்துவரும் பாரத வீராங்கனை மிஸ் மேதா பட்கர். நர்மதா காப்புக் கட்சியைத் [Narmada Bachao Andolan] தோற்றுவித்தவரும், கட்சியின் தலைவியும் அவரே. ‘மேதா அன்னை ‘ என்று விளிக்கப்பட்டுப் பல்லாயிரம் பாமர மக்களின் தர்மப் போர் தலைவியாக நர்மதா நதிப் போராட்டங்களில் பலமுறை கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டு, உலகப் புகழ் பெற்றவர்! 2000-2002 ஆண்டுகளில் அணைகளின் உலகப் பேரவைக் [World Commission on Dams (WCD)] குழுவினரில் இந்தியாவின் சார்பில் ஒருவராகப் பங்கெடுத்து, எளியவரின் இடப்பெயர்ச்சி, புதுக் குடியேற்றப் பிரச்சனைகளை எடுத்துப் பறைசாற்றி யிருக்கிறார். போராட்ட மக்கள் தேசியக் கூட்டுறவு [National Alliance of People ‘s Movements] நிறுவகத்தின் துவக்கவாதியும் அவரே.

    மிஸ் மேதா பட்கர் மொம்பையில் 1954 டிசம்பர் முதல் தேதியில் பிறந்தார். தந்தையார் பாரத விடுதைப் போரில் நேரடியாகப் போராடிப் பின் பாட்டாளிகளின் தொழிற்சங்க வாதியாகப் [Trade Unionist] பணியாற்றியவர். தாயார் சுவதார் [Swadhar] என்னும் பெண்டிர் பேரவையில் பணி புரிபவர். டாடா சமூகவியல் கல்விக் கூடத்தில் [Tata Institute of Social Science] M.A. பட்டதாரியாகப் படித்து, ஐந்தாண்டுகள் பாம்பே அழுக்குத்தெரு குடிசைப் [Slums] பாமர நிறுவனங்களிலும், குஜராத்தில் இரண்டாண்டுகள் பழங்குடி மக்கள் பகுதிகளிலும் சமூகத் தொண்டு செய்தவர். டாடா சமூகக் கல்விக் கூடத்தை விட்டுப் பாதியிலே Ph.D. படிப்பையும் புறக்கணித்து, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசக் குடியானவர், பழங்குடி மாந்தர் குறைகளின் சார்பில் சமூகப்பணி புரிய முழு நேரமும் மூழ்கினார்.

    நர்மதா நதிவள விருத்தித் திட்டங்களில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணை போன்ற பேரணைகளால் புதுக் குடியேற்ற இடப்பெயர்ச்சிக் கட்டாயத்தில் வெளியே தள்ளப்பட்டுத் தவிக்கும் ஆயிரக் கணக்கான பாமர மக்களின் சார்பில், முன்னின்று மாநில அரசாங்கத்துடன் போராடினார். இறுதியில் அணைக்கட்டு அமைப்பு முன்னேற்ற மானதால், குடியேற்றத் தீர்ப்புகள் நிறைவேற முடியாது கைவிடப்பட்டன. பிறகு மேதா பட்கர் சர்தார் சரோவர் பேரணையின் பூர்வீக டிசைன் விதிகளில் முரண்பாடுகளும், குறைபாடுகளும் உள்ளன வென்று எதிர்ப்புப் போராட்டங்கள் [1985-1997] நடத்தி வேலை நிறுத்தம் செய்தார். அதன் பின் உலக வங்கி திட்டத்துக்கு நிதி அளிப்பதை நிறுத்தியது! அடுத்து உச்ச நீதி மன்றத்திற்கு மனுப்போட்டு, சர்தார் சரோவர் பேரணை வேலைகள் அனைத்தையும் முடக்கினார்! பிறகு மாநில அரசு தனி ஆய்வுக்குழு ஒன்றை நியமித்து ஆராய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு, அணைத் திட்டங்களின் டிசைகள் அனைத்தும் மீளாய்வு செய்யப்பட்டன. இறுதியில் உச்சநீதி மன்றம் தீர்ப்பை மாற்றி, அணையின் பணிகள் தொடர்ந்தன.

    மிஸ் மேதா பட்கர் பல வெகுமதிகளையும், அகிலச் சூழ்மண்டலக் காப்புப் பரிசுகளையும் [Deena Nath Mangeshkar Award, Mahatma Phule Award, Right Livelihood Award, Golden Environment Prize, Green Ribbon Award By BBC, Human Rights Defender ‘s Award By Amnesty International] பெற்றுள்ளார்.

    வட அமெரிக்காவிலே மிகப் பெரிய ஹூவர் பேரணை [Hoover Dam]

    இருபதாம் நூற்றாண்டு யந்திர யுகத்தில் மனிதர் படைத்த ஏழு உலக அற்புதங்களில் 1935 ஆம் ஆண்டு அமெரிக்காவிலே கட்டுமானமாகிய பிரம்மாண்டமான ஹூவர் பேரணை ஒன்று! அது கட்டப் பட்டதின் முக்கிய நோக்கம் இரண்டு. 1) கொலராடோ நதியில் நீர்வெள்ளக் கட்டுப்பாடு. 2) 2000 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி. ஹூவர் பேரணை உலகிலே மிகப் பெரிய செயற்கை நீர்த் தேக்கமான மீடு ஏரியில் [Lake Mead] அமைக்கப் பட்டுள்ளது. கொலராடோ நதியில் கட்டப்பட்ட மீடு ஏரியின் பரப்பு: 229 சதுர மைல்! சுற்றளவு: 550 மைல்! பேரணையின் உயரம்: 727 அடி! [70 மாடி உயரம்]. அணைப்பீடம் அமர்ந்துள்ள அடித்தளத்தின் அகலம்: 660 அடி! அணைக்குத் தேவையான காங்கீரிட் கொள்ளளவு: 3.4 மில்லியன் கியூபிக் மீடர்! 1928 ஆண்டு நாணய மதிப்பீடில் 165 மில்லியன் டாலர் நிதிச் செலவில் பேரணையும், நீர்மின்சார நிலையமும் உருவாயின. கொலராடோ மாநிலத்தில் போல்டர் நகரம் ஹூவர் பேரணை கட்டிய ஆயிரக் கணக்கான ஊழியர்களும், அதிகாரிகளும் தங்கிப் பணி புரிவதற்கு அமைக்கப்பட்டது.

    Hoover Dam -1

    நீர்வள விருத்திக்குத் தேவைப்படும் பேரணைகள்

    அகில உலகில் 5000 ஆண்டுகளாக அணைநீர்த் தேக்கங்கள் உறுதியான நீர் வெள்ளப் பரிமாற்றத்தை மக்களுக்கு அளித்து வந்திருக்கின்றன. மழைப் பொழிவுக் காலங்களில் பெருகியோடும் மிஞ்சிய நீர் வெள்ளத்தைச் சேமித்து வைத்துக் கொண்டு, வறட்சிக் காலங்களில் பயன்படுத்திக் கொள்ள அணைகள் உதவுகின்றன! வெள்ளப் பெருக்குச் சேதாரங்களைத் தவிர்க்க அணைகள் துணைபுரியும். நீர்ப்பாசானக் கால்வாய்களில் நீரனுப்பி, நிலங்களில் உணவுத் தானிய வளர்ச்சிகளுக்கு அணைகள் வழி வகுக்கும். தொழிற் சாலைளுக்கும், இல்லங்களுக்கும் மின்சக்தி அளிக்க நீர்மின்சார நிலையங்கள் அமைக்க அணைகள் நீரோட்டமும், நீரழுத்தமும் தருகின்றன. நீர்வழிப் போக்கு வரத்துக்கு அணைகளும், கால்வாய்களும் பளுக்களைத் தூக்கிச் செல்லும் நீர்ப்பாதையாய் பயன்தரும்.

    உலக ஜனப்பெருக்கம் ஆண்டுக்கு 100 மில்லியனுக்கும் மேலாக மிகை யாகி வருகிற போது, அதே வீத வேகத்தில் வாழ்வு நலப்பெருக்கும் விரிய, தற்போது 40,000 பேரணைகள் நீர்வளம், நீர்ப்பாசானம் அளித்து வருகின்றன. இப்போது உலகத்தில் 24 நாடுகள் தமது மக்களுக்குப் போதிய நீர்வளம் அளித்து, ஆதாரமாக இருக்க இயலாத நெருக்கடியில் உள்ளன! ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மாந்தர் பட்டினியாலோ, அல்லது சத்தற்ற சக்கை உணவை உண்டோ உயிர் வாழ்கின்றனர். அநேக நாடுகளில் உணவு தானிய விளைச்சல்கள், நீர்ப்பாசான வசதிகள் மேம்பட்டால்தான் விருத்தி செய்ய முடியும். பூமியின் அடித்தள நீர்ச் சுரங்கங்கள் வற்றிக் குன்றிய தாலும், தேக்கங்களில் நீர் உயரம் கீழானதாலும், அந்த நாடுகளின் தானிய விளைச்சல்கள் குறைந்து கொண்டு வருகின்றன. ஆகவே இப்போதும், எதிர்காலத்திலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இன்னும் அதிகமான அணைகளை நதிகளில் அமைக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளதே தவிர, போராட்டவாதிகள் கட்டும் அணைகளைத் தடுப்பதும், கட்டப் போகும் அணைகளுக்கு முட்டுக்கட்டை இடுவதும் நெறியற்ற எதிர்ப்புகளாய் நிகழ்ந்து வருகின்றன.

    ஒரு நாட்டின் செல்வ வளர்ச்சியை எடைபோட வேண்டுமானால், அதன் தொழிற் சாலைகளையும், உற்பத்திச் சாதனங்களையும், தொழில் சக்கரங்களைச் சுற்றும் மின்சக்தி ஆற்றலின் தகுதியையும் உற்று நோக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் முதன்மையாக ஏராளமான மின்சக்தி ஆற்றல் ஒரு நாட்டில் நிலைத்து இயங்கி வரவேண்டும். பல நாடுகளில் நீர்மின்சார ஆற்றல் மட்டுமே மின்சக்தி பரிமாறி வருகிறது. உலக உற்பத்தியில் 20% பங்கு மின்சக்தியை, நீர்மின்சார நிலையங்களே ஆக்குகின்றன. நீர்மின்சக்தியே உலக மீள்பிறப்பு மின்சார ஆற்றலாய் எல்லாவற்றுக்கும் மிக்கதாக முன்னணியில் இருக்கிறது. இப்போது எடுக்கப் பட்டுள்ள நீர்மின்சக்தி ஆற்றல் போன்று, இன்னும் உலகத்தில் ஆறுமடங்கு நீர்மின்சக்தி எடுக்கப்படும் தகுதி பெற்று எதிர்காலத்தில் பயன்படப் போவதாய் தெரிகிறது. அணைகள் கட்டுவதின் பயன்கள் என்ன ? குடிநீர், தொழிற்துறை நீர்ப் பரிமாற்றம்; வேளாண்மை நீர்ப்பாசானக் கால்வாய்களில் நீரோட்டம்; நீர்வெள்ள அடிப்புக் கட்டுப்பாடு; மின்சக்தி உற்பத்தி; பொழுது போக்குத் துறை விருத்தி; கால்வாய் நீர்ப் போக்குவரத்து வசதிகளில் பளுக் கடத்தல் போன்றவை.

    உலகப் பேரணைக் கூட்டவையின் ஆய்வுரைகள்

    2000 ஆண்டில் ‘உலக அணைகளின் தேர்வுப் பேரவை ‘ [World Commission on Dams] சார்பாக 52 நாடுகள் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் ஒன்று கூடி, உலகிலே உள்ள 125 பேரணைகளைப் பல கோணங்களில் நோக்கி ஆராய்ச்சி செய்து ஒரு பெரும் முடிவறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. அவற்றைக் கூர்ந்து உளவாய்வு செய்ய 100 பங்களிப்பார்கள் அணைகளைப் பற்றி முழுத் தகவல்களை உதவி இருக்கிறார்கள். உலக நாடுகள் அணைப் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட தகவல்களை சுமார் 900 தலைப்புகளில் சமர்ப்பித்துள்ளன. மொத்தம் 154 பேரணைகளின் தகவல்கள் தேர்வுக்கு எடுத்துக் கொண்டதில் 80% பேரணைகளின் அறிக்கைகள் கிடைக்கப்பட்டு, ஒத்துப் பார்க்கப் பட்டன. உலகத் தேர்வுப் பேரவையின் பிரதம குறிக்கோள்: இதுவரை கட்டுப்பட்டு இயங்கிவரும் பூகோளப் பேரணைகளின் பூர்வீகப் பணி நிறைவேற்றம், பாதிப்புகள், பழுதுகள், உடைப்புகள் ஆகியவற்றைத் துருவி ஆராய்ச்சிகள் செய்து, அவற்றின் அமைப்புப் பாணிகளையும், போக்கு நியமங்களையும் [Patterns & Trends] கண்டறிவது. அந்தச் சுற்றாய்வு விளைவுகளில் [Survey Results] பாங்குகள், போக்குகள் இரண்டும் உலக அரங்குகளுடன் கொண்டிருக்கும் இணைப்பு முக்கியமாகத் தெரிந்தது!

    நீர்வளத்தை விருத்தி செய்யத் திட்டமிட வேண்டியவை

    முன்னேறும் நாடுகளில் இன்றும், எதிர்காலத்திலும் நீர்ப்பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய நதிநீர்ப் பங்கீடுகள், நதிநீர்த் தேக்கங்கள், நதிநீர் இணைப்புகள், நதிநீர்ச் சுத்தீகரிப்புகள் நிகழப் போவது தவிர்க்க முடியாதவை! அவற்றைத் தீர்மானம் செய்யும் விவாத அவை யரங்குகளில் எதிர்க்கட்சிகள், சூழ்மண்டலக் காப்பாளிகள், அருந்ததி ராய், மேதா பட்கர் போன்ற சமூகவாதிகள், பூதளவாதிகள் [Geologists], பூகம்ப நிபுணர்கள், பாதிக்கப்படும் மக்களின் பிரதிநிதிகள், நீர்த்துறைப் பொறியாளர்கள், பேரணை, நீர்மின்சக்தி நிலையம், கால்வாய், மலைக்குகை அமைக்கும் பொறிநுட்ப வாதிகள், நிதியுதவும் நிறுவனங்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும். இடப்பெயர்ச்சி, இழப்புநிதி ஈடளிப்பு, புதுக்குடியேற்ற முறைபாடுகளில் முரண்பாடுகள் இல்லாமல் நடந்தேறப் பாதிக்கப்படும் மாந்தர், சமூகவாதிகள், மதவாதிகள், இனவாதிகள், உள்ளூர் கட்சித் தலைவர்கள் போன்றோர் பங்கெடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நதிசார்ந்த திட்டமும், இறுதிவரை ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிக் குழு ஒன்றால் கண்காணிக்கப்பட்டு வர வேண்டும்.

    [கட்டுரை தொடரும்]

    தகவல்:

    1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]
    2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]
    3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]
    4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]
    5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]
    6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]
    7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]
    8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. Saravinda (The Hindu Dec 3, 2002)
    9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]
    10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]
    11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]
    12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]
    13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]
    14 Linking Rivers: Vision or Mirage ? By R. Ramaswamy Iyer, Former Secretary Govt of India Water Resources, Member, Integrated Water Resource Planning, Vision 2020 Committee of Planning Commission (Dec 2002) [www.flonnet.com/].
    15 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]
    [www.thehindu.com/2004/08/31/stories]
    16 Calamity, Chennai ‘s Thirst By: T.S. Subramanian [March 26, 2004]
    17 Case Study of Telugu Ganga Project, India (Water Rights, Conflicts and Collective Action) By: Balaraju Nikku (Doctoral Fellow, Irrigation & Water Engineering Group, Wageningen University Research Centre, Netherlands) [May 2004]
    18 California Canal [www.bsi.vt.edu/welbuam/pictures/irrigation.html]
    19 All American Canal Boulder Canyon Project [www.usbr.gov/dataweb/html/allamcanal.html]
    20 Colorado River Aqueduct, Parker Dam, Central Valley Project By: Cactus Jim [June 2002]
    21 Indian Priest uses Engineering Training to clean up Ganges By Denise Brehm, MIT News, Mass (U.S.A) http://web.mit.edu/newsoffice/tt/1998/dec09/ganges.html [Dec 9, 1998]
    22 India ‘s Ganges A Holy River of Pollution -Clean the Ganges Campaign (Project 130) [Jan 13, 2001]
    23 Sacred Ganges Carries Toxic Pollution By E-Law U.S. Staff Scientist Mark Chernaik [www.elaw.org/news/ebulletin/] (2001)
    24 The Ganges River By: Ashok Dutt M.A. Ph.D. Pofessor of Geography University of Akron, OHIO, U.S.A.
    25 The Tehri Dam Project By: Sudha Mahalingam The Hindu (June 1998)
    26 Tehri Dam, IRN Fact Sheet By: (Oct 2002)
    27 Statement of Supreme Court Ruling on Tehri Dam (Sep 1, 2003)
    28 Questions Surrounded Fatal Tunnel Collapse in Tehri Dam Project By: Saibal Dasgupta (Aug 10, 2004).
    29 Large Dam Construction is a Controversial Issue in India, BBC By: Ram Dutt Tripathi, Lucknow [Dec 8, 2001]
    30 The Greater Comman Good -Article on Gujarat ‘s Sardar Sarovar Dam in Narnada River By: Arundhathi Roy [April 1999].
    31 Untapped Water Resources in Yamuna River Basin By: R.N. Malik (June 26, 2003) [www.tribuneindia.com/2003/20030626/science.htm]
    32 Interlinking of Rivers – Opening the Floodgate of Contradictions By: Sudhirendar Sharma.
    33 River-Linking Plan: India to Go Ahead By: Golap Monir (Sep 26, 2004).
    34 India ‘s Gigantic River Linking Project: Think about the Oceans too! By: Sudhirender Sharma.
    35 River Linking Projects The Need, Earlier Proposals, About the Plan, Financing, Benefits & Implementation.
    36 River Linking Scheme, Central Chronicle By: Pradip Saha [www.centralchronicle.com] (Sep 25, 2004).
    37 R. Rangachari, Nirmal Sengupta, R. Ramaswamy Iyer, Pranab Banerji, and Shekar Singh, – Large Dams: India ‘s Experience, a WCD case study prepared as an input to the World Commission on Dams, Cape Town, http://www.dams.org [November 2000]
    38 Narmada River Dams, India -Evaluation Against World Commission on Dams Guidelines.
    39 Proponents & Critics of Dams Agree to Work Together -World Conservation Union [Apr 11, 1997]
    40 Sardar Sarovar Dam Overflows as Main Canal Ruptures. Earthquake also Registered near Reservoir By: Yogini Khanolkar & Ashish Mandloi [Aug 16, 2004]
    41 Medha Patkar, Goldman Prize Recipient Profile [www.goldmanprize.org/recipients/] [1997]
    42. http://www.newworldencyclopedia.org/entry/Hoover_Dam
    43.  http://www.history.com/topics/hoover-dam
    44.  https://en.wikipedia.org/wiki/Hoover_Dam  [March 22, 2016]

    Share
  • அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும் . . . 3

    அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும் . . . 3

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    கவியரசரின் ஆன்மீக அறிவு அவருக்குக் கிடைத்த சாட்சாத் சரஸ்வதி கடாட்சம் . தனக்குள் தன்னைத்தேடி தானே கற்றுத் தேர்ந்தார். தன் வாழ்க்கை நதி ஓடிய பாதைகள் தன்னை அழைத்துச் சென்ற கல்லும், முள்ளும் நிறைந்த பாதைகளுக்கூடாக தான் பயணித்த பயண அனுபவங்களின் வழி நின்று அதனுள் இருந்த ஆன்மீகத்தை அனைவர்க்கும் அள்ளித் தெளித்தார்.

    அனுபவ ஆன்மீகமே வாழ்வின் உண்மை நிலையை எடுத்துக்காட்ட வல்லது என்பது புரிந்து கொண்ட அனைவராலும் அவற்றை ஒரு திரைப்பட இயக்குனரோ அன்றி நடிகரோ எதிர்பார்க்கும் வகையில் காட்சிகளுக்கேற்ற வரிகளாக்குவது ஒன்றும் இலகுவான காரியமல்ல.

    ஆனால் அதுவே கவியரசருக்கு கைவந்த கலையாயிற்று. “ முன்னோரு காலத்தில் கம்பன் வீட்டில் கனக்கெழுதியிருந்திருப்பேனோ ” என்று கூறி தன்னைத் தானே வியந்த கவியல்லவா கண்ணதாசன் ?

    அவர் பாடல்களுக்குள் புதைத்த அனுபவங்கள் பல தன்னுடைய சொந்த வாழ்க்கை அவருக்குக் கற்றுக் கொடுத்தவை மட்டுமல்ல பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார், பல ஆன்மீக அறிஞர்களுடன் கலந்துரையாடினார். தான் பட்டு அறிந்ததோடு, படித்து அறிந்தவைகளையும், கேட்டு அறிந்தவைகளையும் இணைத்து தனது ஆன்மீக ஞானத்தை வளர்த்துக் கொண்டார் .

    கவியரசர் பாடல்களை மட்டும் அள்ளித் தந்து விடவில்லை அதற்குள் பொருளையும் அல்லவா குவித்து வைத்திருக்கிறார் . அதுவும் காதல் பாடல்களுக்குள் கூட ஏதாவது ஒரு ஓரத்தில் ஆன்மீகக் கருத்தினை சூசகமாக புதைத்து வைப்பதில் வல்லவர் கவியரசர்.

    புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர் தனது பாடல்களில் ஆங்காங்கே ஓரிரு வரிகளுக்குள் ஏதாவது புராண அல்லது இதிகாச சம்பவங்களைப் புதைத்து வைத்து அதைப் படிப்பவர்கள் மனங்களில் அச்சம்பவத்தைப் பற்றி அறியும் ஆவலைத் தூண்டுவதில் வல்லவர் .

    ஏசுகாவியம் எழுதிய அனைத்து மதங்களைக் கடந்த அறிவியல் ஆன்மீகவாதியல்லவா எமது கவியரசர் .

    ஆன்மீகத்தை சாதாரண மக்கள் மத்தியில் ௐௐகொண்டு சென்றவர்களுள் கவியரசர் கண்ணதாசன் ஒரு தனியிடத்தைப் பெறுகிறார். ஆன்மீகம் என்பது மதம் சார்ந்த பக்தியின் அடிப்படையில் ஆரம்பித்திருந்தாலும் ஆன்மாவின் ரகசியத்தைப் புரிந்து கொள்வதே ஆன்மீகம் , அது மதங்களைக் கடந்தது என்பதில் கவியரசர் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சரி இப்போ அவரது பாடல் ஒன்றின் சாரத்தைப் பார்ப்போமா,

    ஆலயமணி எனும் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அமரர் டி.எம்.எஸ் அவர்களின் குரலில் ஒலித்த பாடலுக்கான வரிகளைப் பார்ப்போம்.

    சட்டி சுட்டதடா கை விட்டதடா
    சட்டி சுட்டதடா கை விட்டதடா
    புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
    புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
    நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
    (சட்டி …)

    இங்கே என்ன சொல்ல வருகிறார் கவியரசர் ?

    மனிதனின் சராசரிக் குணம் என்ன ?

    கைகளில் ஒரு சுடுகின்ற சட்டியைப் பிடிக்கிறோம் என்று வையுங்கள் உடனடியாக ஐயோ சுடுகிறதே என்று அதற்குரிய முன்னெச்சரிக்கை எடுப்பவர்கள் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

    எம்மால் சமாளித்து விட முடியும் என்று கைகளில் கொஞ்ச நேரம் சூட்டைத் தாங்கிக் கொள்வோம் பின்பு அந்தச்சூடு தாங்க முடியாமல் கையைப் பொத்துவிடும் போலிருக்கும் போது கைகளை அப்படியே விட்டு விடுகிறோம் .

    அதேபோலத்தான் இப்படத்தில் வரும் கதாநாயகன் பொறாமை எனும் அரக்கக் குணத்துக்கு அடிமையாகி இழக்கக்கூடாதவைகளையெல்லாம் இழக்கிறான். அது அவனது நெஞ்சை எரித்து விடும் போதுதான் அவனுக்கு ஆன்மீக ஞானம் ஏற்படுகிறது.

    நாலுவகையான செயல்களினாலும் பாதிக்கப்பட்டதன் பின்னால் தான் அவனுக்குத் தனக்கும் மேலே ஒரு சக்தியின் ஞாபகம் வருகிறது. இங்கேதான் அவரது அறிவியல் ஆன்மீகம் தெரிகிறது.

    என்ன என்கிறீர்களா ?

    உடனடியாக அவர் இறைவனைப் பற்றி பேச வரவில்லை. நல்லது எது, கெட்டது எது என்பதனைப் பற்றி மனதைச் சிந்திக்கத் தூண்டுகிறார்

    அடுத்துப் பார்ப்போமா ?

    பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
    மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
    ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
    ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
    அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
    (சட்டி …)

    ஆகா ! எப்படி எம்மை ஆன்மீகத்துடன் கொண்டு இணைக்கிறார் ?

    எல்லோருடைய மனங்களிலும் நற்குணங்களும் உண்டு அதே போல் தீயகுணங்களும் உண்டு .

    இதை அழகாக அன்பர் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் குறிப்பிடும்போது அசுர தேவர் யுத்தம், இராமயண யுத்தம், மகாபாரத யுத்தம் எனும் வகையிலான நல்லெண்னங்களுக்கும், தீய எண்ணங்களுக்குமிடையிலான யுத்தமானது மனிதராகப் பிறந்த அனைவர் உள்ளங்களிலும் நிகழ்கிறது நல்லெண்ணங்கள் வெற்றியடைந்தால் நற்செயல்களையும் , தீய எண்ணங்கள் வெற்றிய்டைந்தால் தீய செயல்களையும் புரிகிறோம் என்பார்.

    இதையேதான் அன்று எமது கவியரசர் பாதி மனதில் தெய்வம் இருப்பதாகவும், மீதி மனதில் மிருகம் இரு[ப்பதாகவும் கூறியுள்ளார் போலும். எத்தனை துல்லியமான ஆன்மீக அறிவியல் கவியரசர் உள்ளத்தில் விளையாடியிருக்கிறது பார்த்தீர்களா ?

    அந்த அறிவியல் ஆன்மீகம் கதாநாயகன் உள்ளத்தில் குடியேறிவிட்டதை அழகாக ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா என்று பூடகமாகப் புதைத்து வைத்துள்ளார் கவியரசர்.

    இதோ வருகிறது அவரது அடுத்த அற்புத வரிகள் பார்ப்போம் வாருங்கள் ,

    ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
    ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
    தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
    தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
    மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா
    (சட்டி …)

    மனித மனதின் சஞ்சலங்களுக்கு ஓய்வுண்டா என்ன ?

    குறிப்பாக இத்திரைப்படத்தின் கதாநாயகன் மனதில் சந்தேகப் பேய் ஆரவாரமிடுகிறது. அவனை அதாள பாதாளத்துக்கே கொண்டு செல்கிறது.அச்சந்தேகப் பேயின் ஆரவாரத்தில் அகப்பட்டு பலமான அடிவாங்கியபோது அவனிக்குள் ஆன்மீக ஞானம் குடி கொள்ளத் தொடங்குகிறது.

    எம்மில் பலரும் இம்மாதிரியான அனுபவங்களுக்கூடாகப் பயணித்திருப்போம். அவ்வனுபங்களின் ஆழப்புரிதல் எமக்குத் தேவையான ஆன்மீகத்தை அள்ளி வழங்குகிறது. ஆன்மீகத்தை வெறும் பக்தி மார்க்கமாகவே பார்த்துக் கொண்டிருப்பவர்களின் புரிதல்களுக்கும், அவ்வான்மீகத்தை அறிவியலின் அடிப்படையில் மதங்களைக் கடந்த ஒரு பார்வையைக் கொண்டு அடைந்த புரிதல்களுக்கும் பலமான வித்தியாசம் உண்டு.

    இதனையே கவியரசர் இங்கே உணர வைக்க முற்படுகிறார் போலும்.

    மனதிலுள்ள ஆரவாரப் பேய்கள் ஓடி விட்டது என்றால் ஒலிக்கும் ஆலயமணியின் உண்மை அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்கிறார். ஆலயமணி வெறும் ஆண்டவனை அறிவிக்க ஒலிப்பதல்ல தூய்மையான உள்ளத்தின் வெளிப்பாட்டினை வெளிப்படுத்தும் ஒலியென்கிறார் கவியரசர்.

    அந்த ஒலி அச்சமயத்தில் தர்மத்தை அவனுக்கு அறிவுறுத்துகிறது என்கிறார். தர்மம் என்றால் வெறும் தானம் எனும் ஒரு பொதுவான புரிதலைக் கடந்து வாழ்வின் தார்மீகக் கடமைகளையும் குறிக்கிறது என்கிறாரோ கவியரசர் ?

    அத்தகைய தார்மீகக் கடமைகளைச் சரிவரப் புரிந்து கொண்ட மனதில் சாந்தியைத் தவிர வேறு ஏது குடி கொள்ள முடியும் ?

    சரி இனி இந்தப் பாடலின் ஜீவநாடியான வரிகளைப் பார்ப்போம். இங்கேதான் கவியரசரின் ஆன்மீக ஞானம் கொடிகட்டிப் பறக்கிறது எனலாம்.

    இதோ அந்த வரிகள் ,

    எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா- நான்

    இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
    இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
    (சட்டி …)

    பல வருடங்களாக இந்த வரிகளை மந்திரம் போல மனதினுள் ஒலித்துக் கொண்டிருந்தாலும் அதன் உண்மையான அர்த்ததத்தைப் பற்றிச் சிந்திக்கத் தலைப்படவில்லை.

    அது என்ன “எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா” என்கிறார் கவியரசர் ? அதற்குள் அப்படி என்ன ஒரு பெரிய விடயத்தை உள்ளடக்கியிருப்பார் கவியரசர் என்றே எண்ணத் தோன்றியது.

    என்ன முன்னுக்குப் பின்னான முரணாக இருக்கிறதே ! என்று எண்ணத் தோன்றியது. கவியரசரின் பாடல் வரிகளின் சிறப்பே அது பலரின் பார்வைக் கோணங்களுக்கேற்ப வித்தியாசமான அர்த்தங்களைக் கொடுக்க வல்லது என்பதே !

    அப்படியாக கற்றுக்குட்டியான எனது கோணப்பார்வையில் அதைப்பார்க்க விளைந்தேன்.

    எறும்பின் தோலை உரித்துப் பார்த்தால் அதனுள்ளிருந்து யானை வருவதென்பதெல்லாம் என்ன நடக்கக் கூடிய காரியமா ? அதை உணர்ந்து கொள்ள அதன் அடுத்த வரியைப் பார்ப்பது முக்கியமாகிறது.

    “ நான் இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா ” என்கிறார் கவியரசர்.

    எறும்புத்தோலுக்குள் இருந்து யானை வருவது எப்படி நடக்க முடியாத காரியமோ அதேபோலத்தான் பொறாமை எனும், அழுக்காலும், செல்வந்தன் எனும் மமதையைலும் மூடிக்கிடந்தவனின் இதயத்தோலை உரித்துப் பார்த்தால் அதனுள் ஞானம் வருவது என்கிறார் என்பது இக்கற்றுக்குட்டியின் புரிதல்.

    அதுமட்டுமல்ல ஒரு சிறிய எறும்பின் தோலினுள் யானை ஒளிந்திருக்க முடியுமானால் இந்த அகங்கார இதயம் எத்தனை சிறியதாக இருப்பினும் அதனை உரிப்பது போன்ற தூய்மையை அடைந்தால் அத்தனை பெரிய ஞானத்தை அடைய முடியாதா? என்கிறார் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம் அல்லவா ?

    சரி பிறக்குமுன்னே இருந்த உள்ளம் என்கிறாரே அது என்ன ?

    இங்கேதான் அறிவியல் ஆன்மீகத்தின் ஆழத்துக்கே சென்று விட்டார் எனலாம் . ஆன்மீக அறிவியலாளர்களின் பார்வையில் பிறக்குமுன்னே நாம் ஆன்மாவாக ஆன்ம உலகில் இருக்கிறோம். எமது கர்மவினைகளுக்கேற்ப என்னவிதமான அனனுபவங்களை அடைய வேண்டுமோ அதற்குரிய வகையில் பிறப்பெடுக்க வேண்டி நாமே எமது பிறப்பை தெரிவு செய்கிறோம் என்கிறார்கள்.

    அப்படியாயின் பிறக்குமுன்னே எமது உள்ளம் எப்படி இருந்திருக்கும்? முற்பிறப்பில் நாம் செய்த கர்மவினைகளை நன்கு ஆராய்ந்து எம்மை நாமே புடம் போட்டுக் கொண்ட ஒரு தெளிவான உள்ளம் இருந்திருக்க வேண்டுமல்லவா

    அத்தகைய ஒரு ஆன்மீகத்தெளிவை இப்போது அடைந்து விட்டதாக அவ்வரிகள் சொல்கின்றன என்று எடுத்துக் கொள்ளலாமா ?

    அடுத்துப் பாருங்களேன் ” இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா ” இறந்த பின்னால் வரும் அமைதியா ? அது எப்படி இருக்கும் ?

    செட்டியாரல்லவா? பட்டினத்துச் செட்டி சொன்ன ” செத்தாரைப் போல திரி ” எனும் வாசகமும் , நபிகள் நாயகத்தின் ” இறப்பதற்கு முன்னால் இறந்து விடு ” எனும் வாசகமும் கவியரசருக்கு ஞாபகம் வந்திருக்கும்.

    அறிவியல் ஆன்மீகவியலாளர் என்ன சொல்கிறார்கள் ? எம்மைச்சுற்றி நடப்பவற்றினுள் எம்மை மூழ்க விடாமல் அனைத்தையும் ஒரு சாட்சிக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்கிறார்கள் .

    அதற்குச் சுலமான வழி என்ன ” இறந்த பின் வரும் அமைதியை மனம் இப்போதே அடைந்து விடுவது தானே ” .

    அன்பு வாசக உள்ளங்களே ! இந்த அற்புத வரிகளை யாத்த கவியரசர் ஒரு அறிவியல் ஆன்மீகவாதி என்பதில் எதுவித சந்தேகமும் இருக்க முடியுமா ?

    இந்தப் பாமரனின் கோணப்பார்வையை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    மீண்டும் வருவேன்

    Share
  • இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் கக்கிரபாரா யூனிட்-3 மின்வடத்துடன் சேர்க்கப்பட்டது.

    இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் கக்கிரபாரா யூனிட்-3 மின்வடத்துடன் சேர்க்கப்பட்டது.

    KAPP-3&4:
    Location: Kakarapar near Vyara, Gujarat
    Type or Reactor: Pressurised Heavy Water Reactors (PHWRs)
    Capacity: 2×700 MW
    KAPP-3&4 is India’s first pair of indigenously designed Pressurised Heavy Water
    Reactors (PHWRs) of 700 MW unit size with enhanced safety features, located at
    Kakrapar in Gujarat, where two units of 220 MW PHWRs are already in operation.
    Unit-3 has been successfully synchronized with Grid and is generating infirm
    power. In Unit-4, civil works are completed, installation of major
    equipment/components is completed and balance erection, testing and
    commissioning works are in progress.A major milestone “Hydro test of Primary
    Heat Transport (PHT) system” is completed successfully and further works are in
    progress.
    Overall View of Kakrapar Site Feeder Erection in KAPP

    Kakkrapar – 3 Atomic Power Plant Achieves Criticality on July 22, 2020 in Gujarat India

    Click to access 202212140136279797374RAPP_7_8_english.pdf

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    2020 ஜூலை 22 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் கக்ரபாரா -3 என்னும் புதிய மாபெரும் 700 MWe அணுமின்சக்தி நிலையம் முதல் பூரணத் தொடரியக்கம் புரியத் துவங்கியது. இது கனடாவின் காண்டு [CANDU DESIGN] அணுமின்சக்தி கட்டமைப்பு ஆயினும், இந்தியர் புதிய சாதன, நுணுக்கங்கள், இயக்கங்கள் புகுத்தி நவீனப் பாதுகாப்புச் சுய வடிவ [Indigenous] நிலையமாக டிசைன் செய்து கட்டியுள்ளார். இது பயன்படுத்தும் இயல் யுரேனிய உலோகம், கனநீர் எளிதாகக் கிடைப்பவை. இதே டிசைனில் மகாராஸ்டிரா தாராப்பூரில் கட்டப்பட்டுள்ள இரட்டை யூனிட்டுகள் ஒவ்வொன்றும் 500 MWe மின்சாரத் திறம் உடையவை.

    வெற்றிகரமாக அதே முறையில் இயங்கப் போகும் 700 MWe காண்டு இரட்டை யூனிட்டுகள் ராஜஸ்தான் கோட்டாவில் கட்டப் படுகின்றன. கக்ரபாரா -4 உருவாகி வருகிறது. மற்ற சில மாநிலங்களிலும் சேர்ந்து 12 யூனிட்டுகள் 700 MWe அணுமின் நிலையங்கள் 2017 ஆண்டில் நிதி ஒதுக்குப் பெற்றுள்ளன.

    பூரணத் தொடரியக்கம் [CRITICALITY] என்றால் என்ன ?

    காண்டு அணு உலையில் இயல் யுரேனியம் -238 எரிக்கோலாய் கனநீர்த் தொட்டியில் எழுப்பும் நியூட்ரான்கள், சிறிதளவு உள்ள யுரேனியம் -235 உலோகத்தின் அணுக்களைப் பிளக்கின்றன. ஒரு நியூட்ரான் ஒரு யுரேனிய -235 அணுவைப் பிளந்து வெப்பசக்தியும்,இரு நியூட்ரான்கள் வெளியாகும். இரு நியூட்ரான்கள் இரண்டு யுரேனிய -235 அணுக்களைத் தாக்கி, வெப்ப சக்தியும் 4 நியூட்ரான்கள் உண்டாகும். 2, 4, 8,16, 32, 64 …. என்று பெருக்கு முறையில் நியூட்ரான்கள் பெருகும்.  அத்துடன் வெப்பசக்தி விரைவில் பெருகி, கதிரியக்கக் கழிவுகளும் மிகும். அதாவது நியூட்ரான்களின் எண்ணிக்கை வெப்பசக்தி பெருக்கத்துக்கு அளவு கோலாகிறது.  உருவாகும் நியூட்ரான்கள் சில தப்பி ஓடும். சில கனநீரிலும், கவச உலோகத்திலும் விழுங்கப்படும்.  அத்துடன் அணு உலை நியூட்ரான்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த காட்பியம் கோல்களும் [Cadmium Rods] விழுங்கிக் கோல்களும், [Absorber Rods], உலை நிறுத்தக் கோள்களும் [Shutdown Rods] பயன்படுத்தப் படுகின்றன.

    அணுப்பிளவுத் தொடரியக்கம் [Nuclear Fission Chain Reaction] பூரணத்தொடரி யக்கத்தில் [Criticality]  துவங்குகிறது.  அதாவது அணு உலைத் தொட்டியில் முதலில் தோன்றும் நியூட்ரான்களும், பிளவு செய்யும் நியூட்ரான்களும் சமாக இருக்கும்படி செய்வது.

    அடுத்தது மீறும் தொடரியக்கம் [Super Critical]. உருவாகும் நியூட்ரான்கள் எண்ணிக்கை, பயன்பாட்டு எண்ணிக்கை விட அதிகமாகி வெப்ப சக்தி  மிகுதி ஆவது.  அதுபோல் உருவாகும் நியூட்ரான்கள் குறைந்தால் ஆறும் தொடரியக்கம் [Sub Critical Reaction] வெப்பசக்தி குன்றச் செய்யும்.

    அணு உலையில் உருவாகும் பெரும்பான்மை நியூட்ரான்கள் விழுங்கப் பட்டால் உலை நின்று விடும். [Reactor Shutdown]

    image.png

    தற்போது இந்தியாவில் 23 அணுமின் நிலையங்கள் 6780 MWe உற்பத்தி செய்து வருகின்றன. இந்தியாவின் குறிக்கோள் 2031 ஆண்டுக்குள் 22,480 MWe தகுதியுள்ள அணுமின் நிலையங்கள் கட்ட வேண்டும் என்பதே. அவற்றுள் 12 நிலையங்கள் 700 MWe திறம் கொண்டவையாக இருக்கும். ஒரு 700 MWe யூனிட் கட்ட சுமார் 10 ஆண்டுகள் எடுக்கும். இரட்டை யூனிட் கட்ட நிதிச் செலவு சுமார் 11,500 கோடி ரூபாய். யூனிட் விலை வீதம் : 2.80 ரூ /kwh [2010 நாணய மதிப்பு] அணுமின் நிலையம் விலை : ரூ 8 கோடி/ MWe [2010 .நாணய மதிப்பு.].

    Base Load Power Plant

    Base Load - Load Follow - Peak Load

    Base Load vs Peak Load Power Plants

    Nuclear power plants may take many hours, if not days, to startup or to change their power output. Modern power plants can and do operate as load following power plants and alter their output to meet varying demands. But base load operation is the most economical and technically simple mode of operation. It is primarily due to the fact, they require a long period of time to heat up the nuclear steam supply system and the turbine-generator to operating temperature. From this point of view power plant generally are divided into two basic categories:

    • Base Load Power Plant
    • Load Following Power Plant

    Base Load Power Plant

    Electricity Generation by Source

    In general, nuclear power plants (NPPs) have been considered as base load sources of electricity as they rely on a technology with low variable costs and high fixed costs. This is the most economical and technically simple mode of operation. In this mode, power changes are limited to frequency regulation for grid stability purposes and shutdowns for safety purposes. Different plants and technologies may have differing capacities to power changes on demand.  Base load power plants are generally run at close to maximum output (100% of rated power) continuously (apart from maintenance, refueling outages). During refueling, every 12 to 18 months, some of the fuel – usually one third or one quarter of the core – is replaced by a fresh fuel assemblies. After refueling the reactor is usually started up and operated again at nominal power.

    Although most of nuclear power plants were designed as base load power plants, today, the utilities have had to implement or to improve the manoeuvrability capabilities of their NPPs in order to be able to adapt electricity supply to daily, seasonal or other variations in power demand. It is due to the share of nuclear power in the national electricity mix of some countries has become large, and due to the significant increase renewable energy sources. References:

    1. https://www.npcil.nic.in/writereaddata/CMS/202212140133183171845KAPP_3_4_english.pdf
    2. https://www.npcil.nic.in/writereaddata/CMS/202212140136279797374RAPP_7_8_english.pdf

    தகவல் :

    1. https://indianexpress.com/article/explained/kakrapar-atomic-power-project-third-unit-achieves-first-criticality-india-nuclear-mission-6518946/

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் – 49

    அண்ணாகண்ணன் யோசனைகள் – 49

    இந்தியா இதுவரை காணாத மிகப் பெரிய ரெயில் விபத்து. இத்தகைய துன்பியல் நிகழ்வு எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க என்ன செய்யலாம்? மோதிய முனைகளில் உடல் நசுங்கி, உறுப்புகள் துண்டாகி இறந்தவர்கள் ஒரு புறம் என்றால், மோதிய வேகத்தில் ரயில் சுவர்களில் மோதுண்டு இறந்தவர்களும் பலர் இருக்கக் கூடும். இங்கே தான் எனக்கு ஒரு யோசனை.

    மகிழுந்துகளில் இருப்பது போன்ற காற்றுப்பைகளைத் தொடர்வண்டிகளின் உள்சுவர்களிலும் கூரையிலும் ஒவ்வோர் இருக்கையின் முன்னும் பின்னும் உட்காரும் இடங்களிலும் வைக்கலாம். குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் சென்று மோதினால், உடனே இந்தக் காற்றுப் பைகள் விரியும்படி செய்ய வேண்டும். அப்போது பயணிகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்படாமல் காப்பாற்றலாம். குறைந்தபட்சம், உயிர்ப்பலியைப் பெருமளவில் குறைக்கலாம். இதனைப் பேருந்துகள், விமானங்கள் உள்பட இதர பயணிகள் வாகனங்களுக்கும் விரிவுபடுத்தலாம்.

    Share
  • இடுக்கண் கண்டு அஞ்சாது மிடுக்காய் வாழ்வோம்!

    இடுக்கண் கண்டு அஞ்சாது மிடுக்காய் வாழ்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    ஒரு நாணயத்திற்குத் தலை, பூவென இரு பக்கங்கள் இருப்பதுபோல் மானுட வாழ்க்கையும் இன்பம் துன்பம் எனும் இரு பக்கங்களைக் கொண்டதாகும். இவற்றில் எது எப்போது வரும் என்பது ஊகிக்க இயலாத ஒன்றாகும்.

    2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா கொடுந்தொற்றுகாலச் சூழலை இதற்குத் தக்கதோர் சான்றாய் எடுத்துக் காட்டலாம். இயல்பாய்ச் சென்றுகொண்டிருந்த மனித வாழ்க்கை திடீரென்று முடங்கி, அனைவரும் வீடடங்கி இருக்கும் நிலையை ஒரு தீநுண்மி ஏற்படுத்தும் என்று யாரும் கனவிலும் கருதவில்லை; ஆனால், அப்படியொரு சூழல் ஏற்பட்டது.

    அத்தொற்றின்மீது ஏற்பட்ட அச்சத்தினாலும், அதனைக் கையாளுவது எப்படி என்பது தெரியாத காரணத்தினாலும் சில காலம் செய்வதறியாது திகைத்துப்போயிருந்த மாந்த இனம், அத்தொற்றைத் தடுக்கும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்ததினால் அதிலிருந்து மீண்டுவருவதைக் காண்கின்றோம்.

    இவ்வாறு வாழ்வில் நேரிடும் எதிர்பாராத இன்னல்களையும் அவற்றால் ஏற்படும் இழப்புகளையும் கையாளுவதற்கும், அவற்றிலிருந்து மீண்டெழுவதற்கும் மக்களுக்குச் சில அடிப்படைப் பண்புகள் அவசியமாகின்றன. அவற்றை நம் சங்கப் பாடல்களும், வான்புகழ் வள்ளுவரின் வள்ளுவமும் விளக்கி மக்களுக்கு வழிகாட்டியிருக்கின்றன.

    பக்குடுக்கை நன்கணியார் என்ற சங்கப்புலவர் ஒரு தெருவின் வழியாய்ச் சென்றுகொண்டிருந்தார். அங்கே ஒரு வீட்டில் சாவு நிகழ்ந்ததற்கு அடையாளமாய் நெய்தல் பறை ஒலித்துக்கொண்டிருந்ததனைக் கேட்டார். இன்னும் சற்றுத் தொலைவு சென்றார்; மற்றொரு வீட்டில் திருமணத்திற்குரிய மங்கல முழவு ஒலித்துக்கொண்டிருந்தது.

    கணவனோடு மகிழ்ந்திருக்கும் பெண்கள் மலரணிந்து மங்கலமாய்க் காட்சியளிப்பதையும், கணவனைப் பிரிந்த பெண்கள் தங்கள் மைதீட்டிய கண்களில் நீர்பெருக வருந்தியிருப்பதையும் கண்டார் புலவர். ஒருபுறம் இன்பம் மறுபுறம் துன்பம் எனக் கலந்திருக்கும் வகையில் இவ்வுலகைப் படைத்து, சிலரை அழுது அரற்றவும் வேறுசிலரை மகிழ்ச்சியில் திளைக்கவும் வைத்தவன் பண்பிலாக் கொடியவனாய்த் தோன்றினான் புலவருக்கு.

    இந்த முரண்பட்ட நிலைக்கு என்ன தீர்வு என்று ஆழ்ந்து சிந்தித்தவர், உலகத்தின் இயற்கை இதுதான்; இதனை மனிதர்களால் மாற்றிவிட முடியாது எனும் உண்மையை உணர்ந்தார். ஆதலால், இவ்வுலகில் வாழ்பவர்கள் இன்னாத தன்மை கொண்ட அதன் இயல்புணர்ந்து, அதற்கிடையிலும் இன்பமாய் வாழ்வதொன்றே அதற்கான தீர்வாய் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அதனைத் தம் பாடலிலும் பதிவுசெய்தார்.

    ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
    ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
    புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
    பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
    படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
    இன்னாது அம்மஇவ் வுலகம்
    இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே. (புறம் – 194)

    வாழ்வில் இடுக்கண்ணும் இன்னலும் ஏற்படும்போது அவற்றை எதிர்கொண்டு வெல்வதெப்படி என்பதனை விளக்கி வள்ளுவப் பேராசான் ‘இடுக்கண் அழியாமை’ என்றோர் அதிகாரத்தையே படைத்துள்ளார்.

    ”தடை நேர்கின்ற இடங்களிலெல்லாம் அதற்காகச் சோர்ந்துவிடாமல் வண்டியை விடாமுயற்சியோடு இழுத்துச்செல்லும் எருதைப்போல், துன்பம் வந்த காலத்தில் அதற்காகத் துவண்டுவிடாமல் தொடர்ந்து முயல்பவனுடைய துன்பமானது துன்பமடைவது உறுதி” என்கிறார் வள்ளுவர்.

    மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பா டுடைத்து.
    (குறள்: 624)

    ”செல்வம் வந்தபோது அதன்மீது பற்றுக்கொண்டு அதனைக் காத்தறியாதவர்கள், அச்செல்வம் தம்மைவிட்டு நீங்கித் தாம் வறுமையுற்றபோது ’செல்வத்தை இழந்தோமே’ என்று அல்லற்படுவரோ?” என்று வினவி நம்மைச் சிந்திக்க வைக்கின்றார் மற்றொரு குறளில்.

    அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
    ஓம்புதல் தேற்றா தவர்.
    (குறள்: 626)

    ’செல்வத்தின் இயல்பு சகடக்கால் போல் உருண்டு செல்வதாகும். அஃது ஓரிடத்தில் நிலைத்து நில்லாது’ என்கின்ற நாலடியார் பாடலையும் இங்கே நாம் இணைத்துப் பார்க்கலாம்.

    அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
    சகடக்கால் போல வரும்.
    (நாலடி – 2)

    இடுக்கண் வந்துற்றபோது நாம் உறுதியிழக்காமல் வாழ்வதற்குக் கைக்கொள்ள வேண்டிய மற்றொரு பண்பையும் வலியுறுத்துகின்றார் வள்ளுவர். அதுதான் இன்பத்தை விரும்பாது, இடும்பை மானுட வாழ்வின் இயல்பு என்றுணர்ந்து அதனை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம்.

    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்பம் உறுதல் இலன்.
    (குறள் – 628)

    இன்பநாட்டமே மானுட இயல்பென்பதனால் இடும்பையை வாழ்வின் பகுதியாக ஏற்றுக்கொள்ளும் பண்பென்பது எல்லோர்க்கும் எளிதில் வாய்த்துவிடாது. எனினும், அறிவிலும் வாழ்வியல் அனுபவத்திலும் தேர்ந்தவரான ஐயன் வள்ளுவர் உரைக்கும் இவ்வுயர் பண்பை நாம் வளர்த்துக்கொள்ள முயல்வது நமக்கு நன்மை பயக்கும்.

    உலக வாழ்வில் ஈடுபட்டாலும், தாமரையிலை நீர்போல் அதில் ஒட்டாமல் வாழ்வோர் துன்பப்படுவதில்லை; துயருறுவதில்லை. இதையே ’ஸ்திதப் பிரக்ஞ’ மனநிலை என்றுரைக்கின்றது பகவத் கீதை.

    எனவே, எதிர்பாராத இடுக்கண்ணும் இழப்பும் ஏற்படும்போது, பெறுவதைப் போலவே இழப்பதும் மனித வாழ்வின் இயல்பே எனும் பக்குவத்தையும், தோல்விகள் ஏற்படும்போது துவளாது, பகடுபோல் அவற்றை எதிர்கொண்டு, வெல்லும் ஊக்கத்தையும் பெற்றோமென்றால் கலக்கமுற்றிராது வாழலாம்; மற்றையோர்க்கும் நல்வழிகாட்டியாய்த் திகழலாம்.

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 8

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 8

    மீனாட்சி பாலகணேஷ்

    முருகப்பெருமான் மீதான இன்னும் சில பிள்ளைத்தமிழ் நூல்களின் நயங்களைப் பார்ப்போமா?

    4. காரைநகர் பயிரிக்கூடல் சுப்பிரமணியசுவாமி பிள்ளைத்தமிழ்

    இப்பிள்ளைத்தமிழ் அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவரால் இயற்றப்பட்டது. 1987ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இது கடற்புற ஊராகிய காரைநகரின் நடுவே அமைந்த பயிரிக்கூடல் எனும் தலத்தில் நாவல் மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு அமைந்திருக்கும் கோவிலில் எழுந்தருளி பக்தர்கட்கு அருள்புரிந்து வரும் ஸ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானைக் குழந்தையாகப் பாவித்துப் பாடிய நூலாகும்.

    பிள்ளைத்தமிழின் இலக்கணத்திற்கேற்ப பத்துப் பருவங்களால் பத்துபாட்டுகளைக் கொண்டு பாட்டுடைத்தலைவனாம் முருகப் பெருமானை வழுத்திப் பாடியுள்ளார் புலவர்.

    தாலப் பருவத்து ஒரு பாடல் அழகான தொன்மங்களை விளக்குகிறது. பார்க்கலாமே!

    குதிரை வாங்கச் சென்ற மணிவாசகரை ஈர்த்துக் குருந்தமரத்தடியில் அமர்ந்து தனிப்பெரும் குருவாய் அவருக்கு ஞானம் கொடுத்த சிவபிரானுக்கு மதுரமான பிரணவப்பொருளை அவர் செவிக்கு இனிமையாக உரைத்த குருமணி முருகனாவான். வாழ்வை வெறுத்து வானளாவிய திருவருணைக் கோபுர மீதிருந்து குதித்த அருணகிரிநாதரைக் கையிற்றாங்கிக் காப்பாற்றி, “சும்மாவிரு, சொல்லற,” எனப் புகன்ற ஆறுமுகத்தவன் அவன். பயிரிக்கூடலிலுறை முருகனே தாலோ தாலேலோ என்பது பொருள்.

    குதிரைக் காகப் பவனிவரும்
    கோல வமைச்சன் தனையீர்த்துக்
    குருந்தின் கீழே இருந்துதனிக்
    குருவாய் ஞானம் கொடுத்தவர்க்கு
    மதுரப் பொருளைச் செவியுவக்க
    ………………………………………
    எடுத்துச் “சும்மா விரு” என்ற
    ஒருமூன் றருண முகத்தானே
    …………………………………..
    முதல்வா தாலோ தாலேலோ.
    இன்னுமொரு பாடலைக் காணலாமா?

    ஒரு அம்புலிப்பருவப்பாடல். குழந்தை முருகனைப் பலவிதமான பழங்களாக உருவகித்துப் பாடுகிறார்.

    நமச்சிவாயப் பொருளான நல்லபழம்; ஆனைமுகன் கையில் தாங்கும் பழம். நடராசபதியான சிவபிரான் உவந்திடும் பழம்; உபாசனை செய்யும் அடியார்கள் சுவைக்கும் பழம்; இமயமலை அழகி, கார்த்திகைப் பெண்டிர் கௌரி, சூலினி, இரட்சகி, சங்காரி, ஜனனி, இலிங்கபூஷணி, பராசத்தி ஆகியோர் பாலூட்டியருளும் இன்பக் குழந்தைப்பழம், சமய தத்துவாதீத தனிப்பழம், சதுர்மறை தந்த பழம், கலைத்தேன் பழம், பழமுதிர்சோலை அழகராய் நின்ற பழம், சண்முகப்பழமுமிவனே, இவன்ய்டன் அம்புலீ ஆடவாவே என்கிறார்.

    நமசிவயப் பொருளான நல்லபழம் ஆனைமுகன்
    நயந்துகை தாங்கும்பழம்
    நடராச பதியுவந் திடுபழம் உபாசிக்கும்
    …………………………..
    சமயதத் துவாதீத தனிப்பழம் சதுர்மறை
    தந்தபழம் கலைத்தேன்பழம்
    ………………………………………….
    ஆனந்த வீடுதரும் ஞானக் குழந்தையுடன்
    அம்புலீ யாடவாவே.
    இன்னும்பல அருமையான பாடல்கள் உள்ளன.

    5. சிவசுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்

    பறாளை  விநாயகப் பெருமான் கோயிலின் வடக்குப் புறமாக அமைந்தது இந்த சிவசுப்பிரமணியர் கோயில். இப்பெருமான்மீது  புலவர் வை. க. சிற்றம்பலம் அவர்களால் 1997-ல் இயற்றப்பட்டதே இப்பிள்ளைத்தமிழ்.

    பருவத்திற்கு ஒரேயொரு பாடலால் அமைந்த அருமையான பிள்ளைத்தமிழ் இது. ஒரே பாடல் தான் எனினும் சொன்னயமும் பொருணயமும் ஒவ்வொரு பாடலிலும் சிறந்து விளங்குகிறது. காப்புப் பருவத்து ஒரே பாடல் திருமால், சிவபிரான், சிவகாமியம்மை, ஐங்கரன், மற்றும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப மற்ற தெய்வங்கள் அனைவரையும் வாழ்த்தி குழந்தையைக் காக்க வேண்டுகிறது.

    செங்கீரைப்பருவத்தின் பாடலொன்று மிக அருமையான பொருத்தமான கருத்துக்களைக் கொண்டிலகுகின்றது. குழந்தை முருகன் சங்குவளையணிந்த கைகளை ஊன்றியபடி செம்பவள வாயில் கனிந்த முறுவலுடன் உல்லாசமாக, கால்களில் கிண்கிணியாட, சிலம்பாடத் தாளூன்றித் தவழுகின்றான்.  கூடவே ‘கீர் கீரெ’னப் புரியாத மழலை பேசுகிறான். அந்தப் பருவத்து, ஐந்தாறுமாதக் குழந்தைகளின் மொழி நமக்குப் புரியாத மொழி. அதனைக் ‘கீர்’ என்பார்கள். (நல்ல சொற்களைக் கூறுபவர் நல் + கீரர்= நக்கீரர்). இத்தகைய சொற்களின் முன்பு ஒரு மங்கலச் சொல்லையும் சேர்த்துச் செங்கீர், செங்கீரை என்பர். அதனாலும் இப்பருவம் செங்கீரைப்பருவம் எனப்படும். இத்தகைய புரியாத மழலை, “எங்கு நீ, அங்கு நான் என்றும் உன்னுடனிருப்பேன்,” என முருகன் கூறும் சொற்களாக அடியாருக்கு, ஈண்டு புலவருக்குத் தோன்றியுள்ளது மிக அருமை.

    சங்குவளைக் கரமூன்றிச்
    செம்பவள வாய்கனியச்
    சல்லாப வுல்லாசமாய்ச்
    சார்ந்தகிண் கிணியாடச்
    சூழ்ந்தமணிச் சிலம்பார்ப்பத்
    தாளூன்றிக் கீர்கீரென
    எங்குநீ அங்குநான்
    என்றபடி மழலைமொழி
    இசைத்திட அடியெடுக்கும்
    …………………………………………

    அடுத்து சிறுதேர்ப்பருவப் பாடல். அற்புதமான இறைத்தத்துவத்தை முன்வைக்கிறது. வான், மண், பாதாளம் ஆகிய மூவுலகங்களும் கொண்டு வடிவமைக்கப்பட்டது இப்பிரபஞ்சம் எனும் திருத்தேர். அதன் வட்டமான நடுப்பீடமே பிரணவக்குறியாகும். அதில் வந்தமர்ந்து இருப்பவன் முருகப்பெருமான். அவனுக்கு அடியவர்கள் தங்கள் வினைகள் தீருமாறு வேண்டிக்கொண்டு, தேங்காய் உடைத்து, வேதங்கள் எனும் புரவிகளை ஓட்டுவித்து வீதிவலம் கொண்டு செல்கிறார்கள். அவனும் நானிருக்க பயமேன் என்று கூறி நனவிலும் கனவிலும் நற்காட்சி காட்டித் துணை நிற்கிறான். அத்தகைய முருகனைச் சிறுதேருருட்டியருள வேண்டும் இனிய பாடலிதுவாகும்.

    வானுலகு மண்ணுலகும்
    வல்லபா தலவுலகும்
    வடிவமையுந் திருத்தேரிலே
    வட்ட நடுப் பீடமே
    பிரணவக் குறியாகி
    வந்ததனில் வீற்றிருந்து
    பானிலவு திருநீற்றின்
    அடியவர்தன் வினையோடப்
    பணிந்துதேங்கா யுடைத்து
    பகர்வேதப் பரிகடவி
    அரிய மணி வீதிவரும்
    பாலகும ரேச முருகா
    ………………………………..
    கருத்தாழமும் கொண்ட பாடல்களைக் கொண்ட சிறந்த நூல்.

    6. திருநல்லூர் திருமுருகன் பிள்ளைத்தமிழ்

    நல்லை எனப்படும் திருநல்லூரானது ஆறுமுக நாவலர் பெருமானின் ஊராகும். இது முருகப்பெருமான் விரும்பியுறையும் சிறந்த ஒரு பதியாகும். திருநல்லூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் இந்நூல் பண்டிதர் சி. கார்த்திகேசு (சேந்தன்)  எனும் புலவரால் இயற்றப்பட்டது. இவர் சேந்தன் குழந்தைக்கவிகள் எனும் நூலில் பிள்ளைகட்குரிய பலவற்றையும் பாடியுள்ளார். நல்லை நாற்பது எனும் நூலில் நல்லூர்க் கந்தன்மீது அழகான கீர்த்தனங்களைப் பாடியுள்ளார். இப்பிள்ளைத்தமிழ் நூலும் பல நயமிகுந்த பாடல்களுடன் பொலிவதனைக் கண்ணுறலாம்.

    அம்புலிப்பருவப் பாடலொன்றில் முருகனின் சிறப்புகளை அழகுற எடுத்தோம்புகிறார் புலவர். இது தானம் எனும் உபாயத்தில் சேருமெனக் கொள்ளலாம். முருகனின் சிறப்புகளைக் கூறி, இத்தகைய பெருமை படைத்த எம் சிறு முருகனுடன் ஆடவா என விளிக்கும் கூற்றாக அமைந்த பாடல்.

    பலகோடி சென்மங்களை எடுத்து எடுத்துக் களைத்தாலும் பார்ப்பதற்கு அரிதானவன் எம் முருகன். பக்தியினால் மட்டுமே அவனையடையலாம்; மற்றபடி பற்றுதற்கு அரிதானவன்.          நால் கல்நெஞ்சத்தவர் ஆயினும் உள்ளம் கசிந்துருகிக் கந்தா எனக்கூறி, கண்ணீர் பொழிந்து நிற்பதனைக் கண்டால் விரைந்து தனது கருணை எனும் மழையைப் பொழிபவன். பொல்லாத சூரபதுமனின் சுற்றம் உறவு அனைத்தையும் அழித்துப் பொடியாக்கினவன். பின்பு அவன் குற்றங்களை மன்னித்து உயிர்களக் காத்த உயர்ந்த தயாளன். இப்படிப்பட்ட அல்லல் அகற்றிடும் முருகனுடன் விளையாட வாராய் அம்புலியே!அணிநல்லூர் முருகனுடன் ஆடவாராய் அம்புலியே!

    பல்கோடி சென்மம் எடுத்தெடுத் திழைத்தும்
    பார்ப்பதற் கரிதானவன்
    பக்தியாம் ஒன்றினால் பற்றலாம் அன்றிப்
    பற்றுதற் கரிதானவன்
    கல்லெனும் நெஞ்சினர் ஆயினும் கசிந்துநாம்
    கந்தா எனக்கனிந்து
    ……………………………………………………
    பொறுத்தவன் பிழையினுக் கிடுக்கண் தவிர்த்து
    பொன்னுயிர் காத்த மேலோன்
    ………………………………………………..
    அம்புலீ ஆடவாவே.

    சிற்றில் சிதையேல் என வேண்டும் சிறுமியர் பலப்பல கதைகளை முன்வைக்கின்றனர். புலவரின் கற்பனைவளம் வியக்கத்தக்கதாம். அவற்றுள் ஒன்று இந்தக்கதை! ‘வள்ளியெனும் குறத்தி தினைமாவையும் தேனையும் பிசைந்து உனது வாயில் ஊட்ட, உண்டு நீ களித்ததையும், பின் மானையொத்த அவளுடைய எச்சிலை உண்டு களிக்கும் அழகையும் மற்றும் இவையனைத்தையும் கண்டு மற்றவர்களுக்கு அதனைக் கூறினோமோ? இல்லையே! கூனற்பிறை நெற்றியை உடைய பல சிறுமியர் கூடி, மண்ணைக் குழைத்துச் சேர்த்து, பேசிக்கொண்டு பாடுபட்டுக் கட்டிய சிறிய இவ்வீட்டை நீ உன் காலால் சிதைக்கவேண்டா! அடியாரின் குறைகளைத் தீர்க்கும் மருந்தானவன் அல்லவோ நீ! சிற்றிலைச் சிதைக்காதே’ என வேண்டுகின்றனர்.

    கானக் குறத்தி வள்ளியெனும்
    கன்னி உவந்து தினைமாவை
    கமழுந் தேனிற் பிசைந்துனது
    கனிவா யூட்டக் களித்தநீயும்
    மானொத் தவளின் மிச்சிலையும்
    வாயிற் சுவைக்கும் அழகினையும்
    மகிழ்ந்து சுவைத்த ததுகண்டும்
    மற்றோர்க் கதனை விண்டோமோ
    …………………………………………
    வான முயர்புகழ் திருநல்லூர்
    வண்ணா சிற்றில் சிதையேல்
    மருவு மடியர் பிணிதீர்க்கும்
    மருந்தே சிற்றில் சிதையேலே.

    ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களில் இவ்வாறு பலப்பல சுவையான பாடல்கள்!

    (வளரும்)

    Share
  • 14ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    14ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    வல்லமை மின்னிதழ், 13 ஆண்டுகளை நிறைவுசெய்து 14ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பதின்மூன்று ஆண்டுகளில் வல்லமை, 19,413 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,920 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. தொடர்ந்து பங்களிக்கும் படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் மதிப்பீட்டாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம். அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    2023 ஏப்ரல் 28 அன்று செல்வராஜ் ராமன் என்பார், வல்லமைத் தளத்தில் விடுத்துள்ள பின்னூட்டம் இதோ:

    The contents contained in “vallamai” are of immense value to aspiring students and venturing capitalists. The literary section and the stories being published give much needed impetus to passionate writers and thinkers to spread their “know how” to tamil fraternity. Kudos to “vallamai “

    நமது பணி, பலருக்கும் பயன் தருவதாக அமைவதில் மகிழ்ச்சி.

    முக்கியமான தொடர்கள், கட்டுரைகள், படைப்புகள், தொடர்ந்து வெளிவருகின்றன. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம்.

    ஒரு முக்கியமான திருத்தத்தை இந்த ஆண்டு செய்துள்ளோம். பண்டிகை, திருநாள், பிறந்தநாள், நினைவுநாள் போன்ற தினங்களில் கவிதை ஆக்கங்கள் வருவதுண்டு. இவை செய்யுள் வடிவிலோ அழகியல் கூறுகளுடனோ இருக்கும். ஆனால், கவிதை அம்சத்தை விட, அந்தக் கருப்பொருளின் செய்தி அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கும். இவற்றை இதுநாள் வரை கவிதைப் பகுதியில் வெளியிட்டு வந்தோம். இப்போது ‘நாளாம் நாளாம்’ என்ற தனிப் பிரிவில் வெளியிடத் தொடங்கியுள்ளோம். இது கவிதை என்ற செவ்வியல் வடிவத்திற்கும் இதர நினைவூட்டல் படைப்புகளுக்கும் வேறுபாட்டை உணர்த்தும். மேலும், இவற்றைத் தனித் தனியாக அணுகுவதற்கும் வழிவகை செய்யும்.

    கடந்த ஆண்டு வல்லமையின் செலவினங்களுக்காக நன்கொடை கோரினேன். நண்பர்கள் ஜெயபாரதன், முனைவர் நா.கணேசன், பேராசிரியர் கண்மணி, பேராசிரியர் பெஞ்சமின் லெபோ ஆகியோர் கனிவுடன் அனுப்பிய நன்கொடைகளால் தளம் சீராக இயங்கி வருகிறது.

    வல்லமைக்கு வரும் படைப்புகளை வெளியிடுவதில், முனைவர் சுரேஷ் ரங்கநாதன் பேருதவி புரிந்து வருகிறார். தள நிர்வாகப் பணியை எல்.கார்த்திக் தொடர்ந்து ஆற்றி வருகிறார். இருவருக்கும் நனி நன்றி.

    வல்லமை மின்னிதழை மேம்படுத்த, உங்கள் வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிருங்கள்.

    Share
  • வாடிக்கையாளரை அதிர்ச்சியில் உறையவைத்த பொதுத்துறை வங்கி

    வாடிக்கையாளரை அதிர்ச்சியில் உறையவைத்த பொதுத்துறை வங்கி

    எம். எஸ். லட்சுமணன், காரைக்குடி

    வங்கி வாடிக்கையாளர் விழிப்புணர்வு பதிவு 

    நண்பர்களே சில நாட்களுக்கு முன்பாக காரைக்குடியில் கல்லூரி சாலையில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ள நான் என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கியின் ஏடிஎம் பிரிவிற்கு சென்றிருந்தேன்.

    ஏடிஎம் வழியாக பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம் வரவில்லை. என்னுடைய பாஸ்வேர்டு கொடுத்து, OTP கொடுத்து என அனைத்தையும் கொடுத்த பிறகும் பணம் வெளியாகவில்லை.

    PLEASE CONTACT YOUR BRANCH என்று அதனில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. . மேலும் எனது இணையத்தின் வழியாக (NET BANKING)  வங்கி கணக்கை ஆப்ரேட் செய்ய முயற்சி செய்தபோது, FREEZE ACCOUNT FREEZE என்று வந்தது.

    இதனைத்தொடர்ந்து வங்கியின் மேலாளர் அவர்களை சென்று சந்தித்தேன். தங்களுடைய ஆவணங்கள் எதுவுமே எங்களுடைய வங்கியில் இல்லை. எனவே உங்களது அக்கவுண்ட்டை நாங்கள் FREEZE செய்துள்ளோம். அதுவும் CENTRALIZE ஆக  இதுபோன்று  செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    கடந்த 20 ஆண்டுகளாக நான் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். எனக்கு எந்தவிதமான கடனும் அந்த வங்கியில் இல்லை. அப்படி இருக்கும் பொழுது எனது வங்கிக் கணக்கை பிரீஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

    பலமுறை நான் அவர்களுக்கு ஆவணங்களை நேரில் சென்று கொடுத்துள்ளேன். ஆனால் அவர்களோ சர்வசாதாரணமாக இதுபோன்று ஒரு அதிர்ச்சியான தகவலை என்னிடம் தெரிவித்தார்கள்.

    நான் முக்கியமான ஒரு மருத்துவ செலவுக்காக மருத்துவமனையில் இருந்து தான் ஏடிஎம் மூலம் பணம் எடுத்து கொடுப்பதற்காக சென்று இருந்தேன். ஆனால் இணையத்தின் வழியாகவும் எனது வங்கிக் கணக்கை இயக்க முடியவில்லை. ஏடிஎம்மில் இருந்தும் பணம்  எடுக்க முடியும் முடியவில்லை.

    முக்கியமான மருத்துவ செலவுக்கு கூட எனது அக்கவுண்டில் இருந்து எனது பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக வங்கி மேலாளரை நேரில் சந்தித்து கேட்டேன். மேலாளர் அவர்களோ  மிக அலட்சியமாக ஆயிரக்கணக்கான வங்கிக் கணக்குகளை நாங்கள் இது போல் ஃப்ரீஸ் செய்து உள்ளோம்.என்று கூறினார்.

    தங்களது ஆவணங்கள் எதுவுமே எங்களது வங்கியில் இல்லை. எனவே ஆவணத்தை கொடுங்கள். freeze செய்ததை  எடுத்து விடுகிறோம் என்று தெரிவித்தார் ஆவணம் பலமுறை அந்த வங்கிக்கு நான் நேரில் சென்று கொடுத்துள்ளேன்.

    அந்த ஆவணங்களை என்ன செய்தார்கள் என்பதே தெரியவில்லை.ஆவணங்கள் இல்லாமல்  இருக்க வாய்ப்பில்லை. ஆவணங்கள் இல்லை என்றால் மெயில் வழியாக, மொபைல் வழியாக  எனக்கு ஒரு தகவல் தெரிவித்து , குறிப்பிட்ட நாட்கள் கொடுக்க  கேட்டிருக்கவேண்டும்.

    ஏனென்றால் எனக்கு இணையத்தின் வழியாக அங்கே கணக்கு ஆப்பரேட் செய்யப்படுகிறது. எனவே எனது மெயில் அவர்களிடம் உள்ளது. மேலும் எனது மொபைல் நம்பரும் அவர்களிடம் உள்ளது.

    மொபைல் நம்பரில் ஒரு மெசேஜ் கொடுத்து அல்லது மெயிலில் ஒரு மெசேஜ் கொடுத்து எத்தனை நாளுக்குள் நீங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்திருக்கலாம்.

    ஆனால் அவர்களோ எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் அக்கவுண்ட் FREEZE  செய்து விட்டார்கள்.  இதை நான் ஒரு முக்கியமான வெளியூர் பயணத்தில் இருக்கும்போது ,   குறிப்பாக மும்பை, டெல்லி என்று வேறு மாநிலங்களில் பயணிக்கும் பொழுது , எனது வங்கி கணக்கில் போதிய அளவு பணம் இருந்தும் ,நானே  பணம் எடுக்க முடியவில்லை என்றால் எனது நிலைமை என்னவென்று  யோசியுங்கள்.

    முக்கியமான மருத்துவ செலவிற்கு அன்று என்னால் பணம் எடுத்து செலவுக்கு கொடுக்க இயலவில்லை.  நான் மேலாளரை சந்தித்து மேலாளரிடம் உங்களுக்கு என்ன ஆவணம் வேண்டுமோ அதனை ஈமெயில் வழியாகவும், மெசேஜ் வழியாகவும் எனக்கு தெரிவியுங்கள். நான் அவற்றை எடுத்து வந்து தந்து விடுகின்றேன்.என்று கூறினேன்.

    ஆனால் இப்பொழுது எனது கணக்கை எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் ஃப்ரீஸ் செய்ததை வன்மையாக ஆட்சேபித்து  பதிவு செய்கின்றேன் என்று அவரிடம் கூறினேன்.

    எனவே  எனது கணக்கை தற்பொழுது freeze இல்  இருந்து எடுத்து விடுமாறு  அன்போடு கேட்டுக் கொண்டேன். சில மணி நேரங்கள் அவரிடம் பேசிய பிறகு அவர் எனது கணக்கை ஆக்டிவேட் செய்தார்கள்.

    பலமுறை நான் ஆவணங்கள் கொடுத்தும் அதனை வங்கியின் இணையத்தில் ஏற்றாதது அவர்களுடைய தவறு தானே தவிர  அது எனது தவறு கிடையாது.

    ஆனால் முக்கியமான கட்டத்தில் வங்கியில் முன்பு கொடுத்த ஆவணங்கள்  இல்லை என்பதற்காக கணக்கை freeeze  செய்தது மிகவும் தவறானது  என்பதை பதிவு செய்துவிட்டு வந்தேன்.

    பொதுத்துறை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு உங்களுடைய கணக்குகள் ஃப்ரீஸ் ஆகி இருந்தால் அதனை சரி செய்து கொள்ளுமாறு இந்த தகவலின் மூலமாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    நன்றி

    Share
  • ஆராய்ந்து கொள்வோம் நட்பு!

    -மேகலா இராமமூர்த்தி

    மனித வாழ்க்கை செம்மையாகவும் சிறப்பாகவும் அமைவதற்கு இன்றியமையாதவை இரண்டு. ஒன்று சுற்றம்; மற்றொன்று நட்பு. ஒருவனைச் சுற்றியிருந்து செயற்படுவோர் அனைவரையும் நாம் சுற்றத்தினர் என்ற வகைப்பாட்டில் அடக்கலாம்; எனினும், பெரும்பாலும், அச்சொல் உறவினரைக் குறிக்கும் சொல்லாகவே பயன்பாட்டில் உள்ளது.

    உறவினராகிய சுற்றத்தைப் பொறுத்தவரை நம் தாய் தந்தையரையும், உடன்பிறப்புக்களையும் அத்தை மாமன், பாட்டன், பாட்டி போன்ற ஏனைய சுற்றத்தினரையும் தேர்வுசெய்யும் உரிமை நமக்கில்லை; அஃது இயற்கை நமக்களிப்பது; ஆனால், நம் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கிருக்கின்றது.

    நட்பைப் பொறுத்தவரை அதனைத் தெரிவுசெய்யும் முழு உரிமையும் வாய்ப்பும் நம்மிடமே இருக்கின்றன. எனவே, அவ்வாய்ப்பைச் சரியாகவும் திறம்படவும் நாம் பயன்படுத்தி நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு நமக்கு வழிகாட்டும் வகையில் நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களைத் திருக்குறளில் வகுத்திருக்கின்றார் பொய்யில் புலவராகிய வள்ளுவர்.

    நட்பு:

    நட்பு என்பது நண்பர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிச் சிரிப்பதற்கான பொழுதுபோக்குப் பண்பன்று; நண்பன் நெறிகடந்து செல்லும்போது இடித்துத் திருத்துவதற்கும், ஆடை நழுவுகின்றபோது உடனே அதனைச் சரிசெய்கின்ற கைபோல, நண்பன் துன்பத்தில் இருக்கும்போது ஓடிச்சென்று உதவுவதற்கும் பயன்படும் உண்மையன்பே நட்பு என்கின்றார் வள்ளுவர்.

    நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
    மேற்சென் றிடித்தல் பொருட்டு
    . (நட்பு – 784)

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு
    . (நட்பு – 788)

    அத்தகு நண்பர்களை ஆராய்ந்து கொள்ளவேண்டியதன் அவசியத்தை அடுத்த அதிகாரத்தில் விளக்குகின்றார் அவர். ”நற்பண்புள்ள குடியிற் பிறந்து, தனக்கு ஏற்படக்கூடிய பழிக்கு நாணுபவனே நண்பனாய் இருக்கத் தகுதியானவன்; அவனைப் பொருள் கொடுத்தாவது நட்புச் செய்க” என்று அறிவுறுத்துகின்றார்.

    குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
    (நட்பாராய்தல் – 794)

    நெடுநாளைய நண்பர்கள் பழகிய உரிமை காரணமாகச் சிறு தவறுகளைச் செய்யும்போது அவற்றைப் பொருட்படுத்தாது நட்பினைத் தொடர்க என்று ’பழைமை அதிகாரத்தில் நம்மைத் தெளிவிக்கும் வள்ளுவர், தீய நண்பர்களை இனங்கண்டு ஒதுக்கவேண்டியதன் அவசியத்தைத் ’தீ நட்பு’ அதிகாரத்தில் வலியுறுத்துகின்றார்.

    அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
    தமரின் தனிமை தலை.
    (தீ நட்பு – 814)

    ”போர்க்களத்தில் தன்மீது அமர்ந்திருக்கும் வீரனைத் தள்ளிவிட்டு ஓடும் அறிவற்ற குதிரையைப் போன்று நமக்கு உதவி தேவைப்படும் காலத்தில் உதவாமல் கைவிடும் நண்பர்களைவிடத் தனித்திருப்பதே மேல்” என எண்ணுகின்றது வள்ளுவர் உள்ளம். ”கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு” என இதே கருத்தை நட்பாராய்தல் அதிகாரத்திலும் அவ் அறிஞர் விளம்பியிருப்பது நினைவுகூரத்தக்கது.

    ”It is better to be alone than in bad company” என்று அமெரிக்காவின் மேனாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் குறிப்பிடுவதும் இதனைத்தான்.

    இவ்வாறே உள்ளத்தால் கூடாது வெறும் உதட்டளவில் கூடியிருக்கும் நண்பர்களும் ஆபத்தானவர்களே; விலக்கத்தக்கவர்களே என்கின்றார் வள்ளுவர் தம் ’கூடா நட்பு’ அதிகாரத்தில்.

    வில் வளைந்திருப்பது பணிவுபோல் வெளிப்பார்வைக்குத் தோன்றலாம்; ஆனால், அது வளைந்துகொடுப்பது எற்றுக்கு? அம்பினைப் பூட்டி எதிரியை வீழ்த்துவதற்கு. அஃதொப்ப, நம்முன் பணிவான சொல்லோடு நடந்துகொள்வோரெல்லாம் உண்மையாகவே நம்மைப் பணிகின்றார் என எண்ணினால் அது பேராபத்தில் முடியும்; அவர்தம் தொழுத கையுள்ளும் நம்மைக் கொல்லும் ஆயுதம் மறைந்திருக்கக் கூடும் என்று எச்சரிக்கின்றார் குறளாசான்.

    சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்.
    (கூடாநட்பு – 827)

    தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
    அழுதகண் ணீரும் அனைத்து.
    (கூடாநட்பு: 828)

    நண்பர்களின் இயல்பையும் அவர்களை நாம் தேர்ந்தெடுக்கும் முறைகளையும் வகுத்துரைத்து வள்ளுவம் நமக்கு வழிகாட்டுவதுபோன்றே, அறநூலான நாலடியாரும் பொருத்தமான உவமைகள் வாயிலாய் நண்பர்களின் இயல்பை மூன்றாய்ப் பிரித்து நமக்கு இனம் காட்டுகின்றது.

    நாலடியார் காட்டும் நட்பின் வகைகள்:

    நட்பில் கடைத்தரமானவர்கள் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்கள்; இடைத்தரமானவர்கள் தென்னை மரத்தின் இயல்பை ஒத்தவர்கள்; முதல்தரமானவர்கள் பனைமரத்தைப் போன்றவர்கள் என்கின்றது நாலடியார்.

    எந்த அடிப்படையில் இந்த வகைமை?

    பாக்குமரம் இருக்கின்றதே அது பலன் தரவேண்டுமானால் அதற்கு நிதமும் கவனிப்புத் தேவை; இல்லையேல் பட்டுப்போகும்; அதுபோல் நிதமும் நம்மால் பலனில்லையேல் கடைத்தரமானவர்களின் நட்பும் விட்டுப்போகும். தென்னை மரத்துக்கு நிதமும் கவனிப்புத் தேவையில்லை; ஆனால், அடிக்கடித் தேவை; இல்லையேல் பலன் தராது; அதுபோன்றதே இடைத்தரமானவர்களின் நட்பு. ஆனால், பனை மரம் எப்படிப்பட்டது தெரியுமா? நட்டபோது தந்த கவனிப்பே போதுமானது என்று தானாய் வளர்ந்து பலன்தரும் இயல்புடையது. அதுபோல் ஒருமுறை மனங்கலந்து பழகிவிட்டால் போதும்; இறுதிவரை அந்த நட்பைப் பேணி, நண்பர்களுக்கு உதவியாய் – உறுதுணையாய் இருப்பவர்களே உண்மையான நண்பர்கள்; உயர்ந்த நண்பர்கள் என்கின்றது நாலடியார்.

    கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
    இடையாயார் தெங்கி னனையர் தலையாயார்
    எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே
    தொன்மை யுடையார் தொடர்பு.
    (நாலடி: நட்பாராய்தல் – 216)

    நாலடியார், நட்பில் மூன்று வகையினரைக் காட்டுவதுபோல் கிரேக்கச் சிந்தனையாளரும் – மகா அலெக்சாண்டரின் ஆசானுமாகிய அரிஸ்டாட்டிலும் நண்பர்களை மூன்று வகையினராகப் பிரிக்கின்றார்.

    அரிஸ்டாட்டில் காட்டும் நட்பின் வகைகள்:

    1. மகிழ்ச்சிக்காக நட்புக்கொள்வோர் (Friendships of pleasure/delight)
    2. பயன்கருதி நட்புக்கொள்வோர் (Friendships of utility)
    3. நற்பண்புகளின் அடிப்படையில் நட்புக்கொள்வோர் (Friendships of virtue)

    இம்மூவரையும் எப்படி நாம் அடையாளம் காண்பது?

    மகிழ்ச்சிக்காக நட்புக்கொள்வோர்: இவர்கள், திரைப்படங்களுக்கும் உணவகங்களுக்கும் செல்வதற்கும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் முதலியவற்றுக்கும் துணைவேண்டி நட்புக்கொள்பவர்கள். இவர்களோடு பழகுவதால் நம் கையிருப்பும் கரைந்து, தீய பழக்கங்களுக்கும் நாம் அடிமையாவதுதான் கண்ட பலனாய் இருக்கும்; மற்றபடி வாழ்வின் முன்னேற்றத்திற்கு இவர்களின் நட்பு எள்முனையளவும் உதவாது.

    பயன்கருதி நட்புக்கொள்வோர்:  பணத்திற்காகவோ பதவி முதலிய அதிகாரங்களுக்காகவோ ஒருவரிடம் நட்புக்கொள்பவர்கள் இவர்கள். அலுவலகத்தில் நம்மிடம் பழகுபவர்களில் பெரும்பாலோர்கூட அங்கு நம்மிடமிருந்து கிடைக்கக்கூடிய உதவிகளுக்காகவும் ஆதாயங்களுக்காகவும் பழகுபவர்களே. எனவே, அவர்களையும் இவ்வகையில் அடக்கலாம். நம்மால் பலனில்லை என்றால் நட்பை முறித்துக்கொள்ளத் தயங்காதவர்கள் இவ்வகையினர்.

    நற்பண்புகளின் அடிப்படையில் நட்புக்கொள்வோர்: ஒருவரிடமிருக்கும் நல்ல பண்புகளுக்காகப் பழகுபவர்கள் இவர்கள். இவ்வாறு குணங்களைக் கண்டறிந்து கொள்ளும் நட்பே நல்ல நட்பாகவும் இறுதிவரை நீடிக்கும் நட்பாகவும் இருக்கும். இவர்கள், நண்பன் ஒரு தவறுசெய்யும்போது அதனை இடித்துத் திருத்துவார்கள்; நண்பனுக்குத் துன்பம் என்றால் அதனை நீக்க முயல்வார்கள்; நீக்க இயலாவிட்டால் அதில் தாமும் பங்கெடுத்துக்கொண்டு ஆறுதலளிப்பார்கள். இத்தகு நல்ல நண்பர்கள் கிடைப்பது வரமே!

    இவ்வாறு நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் துணையாயிருக்கும் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், அல்லாதோரை இனங்கண்டு விலக்குதற்கும் வள்ளுவமும் நாலடியாரும் அரிஸ்டாட்டிலின் சிந்தனைகளும் நமக்கு நல்வழிகாட்டுகின்றன. இவற்றின் அடிப்படையில் நண்பர்களை ஆராய்ந்து தேர்ந்தெடுப்போம்; வாழ்வில் உயர்வோம்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:
    1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார்
    2. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி.சு. பாலசுந்தரம் பிள்ளையவர்கள்.
    3. https://en.wikipedia.org/wiki/Nicomachean_Ethics

     

    Share
  • ஓர் இளவரசர் இராஜாவாகிறார்

    ஓர் இளவரசர் இராஜாவாகிறார்

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    2023 மே மாதம் 6ஆம் தேதி பிரித்தானிய நாட்டின் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். எமது வாழ்வில் கூட இது ஒரு முக்கியமான நாளாகிறது.

    ஏன் என்கிறீர்களா ?

    இன்றுதான் நாமனைவரும் ஒரு முடிசூட்டு விழாவினை நேரடியாகப் பார்க்கும், பங்குபற்றும் சந்தர்ப்பம் பெற்றவர்களானோம்.

    இன்று ஓர் இளவரசர் இராஜாவாக உத்தியோகபூர்வமாக முடிசூட்டப்பட்டுள்ளார் . அதுவும் சமீபகால சரித்திரத்திலேயே வயதில் முதிர்ந்த இளவரசர் எனப் பெயர் பெற்ற இளவரசர் சார்ள்ஸ் இன்று தனது 74ஆவது வயதில் மூன்றாவது சார்ள்ஸ் மன்னராக முடிசூட்டப்பட்டுள்ளார் .

    பிரித்தானியா நாட்டின் அரச கட்டிலில் அமர்ந்தவர்களில் அதிக காலம் கோலோச்சியவர் எனும் சரித்திரத்தை ஏற்படுத்தியவர் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் ஆவார்.

    70 ஆண்டுக்காலம் ஆட்சி அரியணையில் அமர்ந்திருந்து விட்டு தனது 96ஆவது வயதில் மரணமடையும் வரை அரசியாக இருந்தவர்.

    இன்று முடிசூட்டப்பட்ட சார்ள்ஸ், தனது நான்காவது வயதில் இருந்து பட்டத்துக்குரிய இளவரசராக தனது அன்னையின் நிழலில் பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    70 வருடகால இளவரசர் அனுபவத்தைப் பெற்ற சார்ள்ஸ், வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்நோக்காமலில்லை.

    இளவயதில் ஒரு பெண்ணைக் காதலித்திருந்தாலும் தனது பெற்றோரின் விருப்பத்தின்படி இங்கிலாந்து இராஜ பரம்பரை வழக்கத்திற்கு உட்பட்டு டயானா அவர்களைத் திருமணம் செய்து வில்லியம், ஹரி எனும் இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையானார்.

    இளவரசர் சார்ள்ஸ் அவர்களுக்கும், இளவரசி டயானா அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகளினால் பல சர்ச்சைகளுக்கு  உட்படுத்தப்பட்ட அவர்களது மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது.

    அதனைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் தனது முன்னைய காதலியுடனும், இளவரசி டயானா டோடி எனும் இஸ்லாமியருடனும் தமது காதல் வாழ்க்கையை நடத்தினர்.

    பாரிஸில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளவரசி டயானா. தனது காதலன் டோடியுடன் மரணத்தைத் தழுவினார்.

    ஏழு வருடங்களின் பின்னால் இளவரசர் சார்ள்ஸ் தனது காதலியான கமிலா பார்க்கர் போல்ஸ் என்பவரை மணமுடித்தார்.

    விவாகரத்து , மறுமணம் என்பது இராஜ பரம்பரையில் சர்ச்சைக்குரிய விடயமாகக் கருதப்பட்டதாலும், இங்கிலாந்தில் அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அது தவறென்று கருதப்பட்டதாலும் இளவரசர் சார்ள்ஸ் மன்னராவது சந்தேகத்துக்கு இடமாயிருந்தபோதும் அதனை ஏற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் வரையறுக்கப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் அவர்களின் இரண்டாவது புதல்வர் ஹரி, கறுப்பினக் கலப்புடைய  அமெரிக்க நடிகை ஒருவரை மணமுடித்தார்.

    ஹரி அவர்களின் திருமணத்தைத் தொடர்ந்து இளவரசர் சார்ள்ஸ் அவர்களின் குடும்பத்தில் ஹரி தம்பதியுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது .

    இளவரசர் ஹரி இராஜ வம்சத்தினால் தனக்குக் கிடைத்த பட்டங்கள் மற்றும் சலுகைகளைத் துறந்து அமெரிக்கா சென்று சாதாரண வாழ்க்கை வாழப்போவதாக அறிவித்து இராஜ குடும்பத்தினின்றும் தன்னை விலக்கிக் கொண்டார்.

    அமெரிக்கா சென்ற ஹரி தம்பதியினர் அங்கு பிரபலமான ஓப்ரா வின்வரி எனும் தொலைக்காட்சி அறிவிப்பாளருக்கு இங்கிலாந்து இராஜ பரம்பரைக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய நேர்காணலை வழங்கினர்.

    இத்தனை பிரச்சனைகளையும் எதிர்கொண்டபடியே தனது பட்டத்துக்குரிய இளவரசரின் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினார் இளவரசர் சார்ள்ஸ்.

    தந்தை எடின்பரோ கோமானைத் தொடர்ந்து இரண்டாவது எலிசபெத் மகராணியாரும் உயிர் நீத்தனர்.

    கடந்த வருடம் தனது அன்னையின் மறைவினையடுத்து பிரித்தானிய நாட்டு இராஜாவாகப் பொறுப்பேற்ற இளவரசர் சார்ள்ஸ் இன்று அதாவது 2023 மே மாதம் 6ஆம் தேதி அதிகாரபூர்வமாக முடிசூட்டிக் கொண்டார்.

    தனது கலாச்சார விழுமியங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் இங்கிலாந்துக்கு நிகர் இங்கிலாந்து என்றே சொல்ல வேண்டும்.

    1953ஆம் ஆண்டு இரன்டாவது எலிசபெத் மகாராணியார் முடிசூட்டும் வைபவத்தின் போது நான் இவ்வுலகத்தில் பிறக்கவில்லை. ஆனால் அது எத்தகைய கலாச்சாரப் பின்னணியில் நடைபெற்றது என்பதைத் தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்ததுண்டு.

    இன்று மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் முடிசூட்டு வைபவத்தைத் தொலைக்காட்சி நேரலை மூலமாகக் கண்டு களிக்கக்கூடிய வசதியுடையவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் .

    மன்னர் சார்ள்ஸ் அவர்களையும் அவரின் இராணியார் கமீலா அவர்களையும் நேரடியாகக் காண்பதற்காக அவர்கள் எவ்வழியாக அவர்களது இல்லத்திலிருந்து வைபவம் நடக்கும் தேவாலயத்துக்கு ஊர்வலமாகச் செல்வார்களோ அவ்வழிதோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வந்து கூடாரமடித்துத் தங்கியது இந்நாட்டு மக்கள் தமது கலாச்சார விழுமியங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தினைப் புலப்படுத்துகின்றது..

    தரைப் படை, ஆகாயப் படை, கப்பற்படை என முப்படைகளைச் சேர்ந்த படை வீரர்களின் அணிவகுப்போடு பொதுநலவாய நாடுகளின் படைத்தளபதிகளின் அணிவகுப்பைத் தொடர்ந்து முடிசூட்டப்படப்போகும் இளவரசர் சார்ள்ஸ் அவரது துணைவியார் இருவரும் அழகிய வேலைப்பாடமைந்த குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

    வைபவம் நடக்கவிருந்த வெஸ்ட் மினிஸ்டர் அபே சார்ச் மண்டபத்தில் அழைக்கப்பட்டிருந்த பொது மக்கள் , சர்வதேச நாட்டுத் தலைவர்கள் , அனைத்து மதத் தலைவர்கள் , முன்னைநாள் பிரதமர்கள் , முக்கியமான பிரஜைகள் எனப் பலரும் திரண்டு மன்னருக்காகக் காத்திருந்தனர்.

    உறவினர்கள் புடைசூழ மன்னரும், அவரது துணைவியாரும் மண்டபத்தில் அவர்களுக்கான ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர்.

    இளவரசர் சார்ள்ஸ் அவர்களின் முடிசூட்டப்படும்போது அமர்ந்திருந்த அரியணை, காலம் காலமாக இங்கிலாந்து அரசர்கள் உபயோகித்த அரியணை என்பது குறிப்பிடத்தக்கது ,

    இதே தேவாலயத்தில் தான் முதன் முதலில் 1066ஆம் ஆண்டு முடிசூட்ட[ப்பட்ட மன்னரான வில்லியம் த கொன்கரர் தொடங்கி இன்றுவரை அனைத்து முடிசூட்டு விழாக்களும் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் இழைக்கப்பட்ட சிம்மாசனம். மிகவும் பிரபலமான தேவாலயப் பாடல்கள் புகழ் பெற்ற இசை வல்லுனர்களின் வழிகாட்டுதலில் அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய குழுவினர்களினால் இசைக்கப்பட்டது .

    இவ்விழாவிற்கு அமெரிக்காவில் இருந்து மன்னரின் இளைய மைந்தன் ஹரி கலந்து கொண்டிருந்தாலும் அவரது மனைவி மெகனும் குழந்தைகளும் கலந்து கொள்ளவில்லை.

    ஆர்ச்பிஷப் ஆப் கண்டபெரி புரொட்டஸ்டண்ட் ஆங்கில சார்ச் இன் தலைமைக் குருவின் முன்னால் முடிசூட்டப்படும் மன்னர்களுக்கு உரித்தான பாரம்பரிய உறுதிமொழிகளை எடுத்த மன்னர் சார்ள்ஸ்க்கு முடுசூட்டப்பட்டு, ராணியார் கமீலாவுக்கும் அவருக்குரிய முடி சூட்டப்பட்டது..

    முடியேற்றப்படும் முன்னால் மன்னரைச் சுற்றி ஒரு திரையிடப்பட்டது. மன்னர் மதச் சம்பிரதாயத்தின்படி இறைவனின் பிரதிநிதியாகத்தான் அங்கு முடிசூட்டப்படுகிறார் என்பதை அறிவிப்பதற்காக தலைமை மதகுருவினால் அவரது தலையில் பரிசுத்த எண்ணெய் வைக்கப்பட்டது, இதன்போது மன்னர் தனது ஆடம்பர அங்கிகளைக் களைந்து வெறும் துணி மட்டுமே அணிந்திருந்தார். இதனைப் பார்வையாளர்கள் காணக்கூடாது என்பதற்காகவே திரைக்குப் பின்னால் நிகழ்ந்தது.

    அவரின் உறுதிமொழிகளின் போது ஒரு சிறுவன் மன்னரை நோக்கி ” நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் ” என்று கேட்டதும் “நீங்கள் எனக்குச் சேவை செய்வதற்காக இங்கு வரவில்லை உங்களுக்குச் சேவை செய்யவே வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார். இதுவும் ஒரு சம்பிரதாய வழக்கமே

    தங்கம், வைரம், வைடூரியம் இழைக்கப்பட்ட முடியைத் தலையில் தாங்கி மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் அமர்ந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

    கிறிஸ்தவ வழிமுறைகளின் படி இவ்வைபவம் நடைபெற்றாலும் முடிசூட்டப்பட்ட மன்னர் அனைத்து மதத் தலைவர்கள் முன்னின்று அவர்களின் மதவழிகளில் ஆசிகளைப் பெற்றது பிரித்தானிய சரித்திரத்தில் முதன்முறையாக இடம்பெற்றது.

    குறிப்பாக, தற்போதைய இங்கிலாந்துப் பிரதமரான ரிஷி சுனாக் இந்து மதத்தைச் சேர்ந்தவராவார். இவர் இவ்வைபவத்தின் போது கிறிகிறிஸ்தவ மதநூலான பைபிளில் இருந்து ஒரு பகுதியைப் படித்தது புதிய மன்னரின் போக்கின் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்ததைப் பலரும் அவதானித்ததைக் கண்டுகொள்ள முடிந்தது.

    மன்னருக்கு முடிசூட்டப்பட்டதை அடுத்து நாட்டுப் பிரஜைகள் தமக்குப் பிடித்திருந்தால் புது மன்னருக்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளும்படி கேட்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இது கட்டாயமாக்கப்படவில்லை .

    முடிசூட்டப்பட்டதை அடுத்து மன்னரும் , ராணியாரும் தங்க ரதத்தில் வைத்து ஊர்வலமாக அவரகளது உத்தியோக வாசஸ்தலமான பக்கிங்காம் பலஸ் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் . அவர்கள் பின்னால் பட்டத்து இளவரசர் வில்லியமும், அவரது மனைவி கேட் மற்றும் அவரது மூன்று குழந்தைகளும் மற்றொரு ரதத்தில் பின்தொடர்ந்தனர்.

    அவர்களைத் தொடர்ந்து இராஜ குடும்பத்தின் உத்தியோகப்பூர்வமான அங்கத்தினர்கள் தொடர்ந்தார்கள்.. குறிப்பாக மன்னரின் தங்கை இளவரசி ஆன் அவர்கள் தனது உத்தியோகப்பூர்வமான அங்கிகளுடன் குதிரையில் அவ்வூர்வலத்தில் கலந்து கொண்டது அழகாக இருந்தது.

    வழிதோறும் மழையைப் பொருட்படுத்தாது சாலையோரங்களில் இலட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று மன்னரை வாழ்த்திக் கோஷமிட்டது இந்நாட்டு மக்கள் தமது பாரம்பரியத்தை எவ்வளவு முக்கியமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டியது.

    தமது உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்ற மன்னரும், இராணியாரும் தமது குடும்ப அங்கத்தினருடன் பால்கனிக்கு வந்து தம்மை வாழ்த்தக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கையசைத்துத் தமது நன்றியறிதலைத் தெரிவித்தார்கள்.

    மன்னருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மரியாதை செய்யும் பொருட்டு வான்படையினர் வானூர்திகளில் ஊர்வலமாகப் பறந்து ஒரு கண்காட்சியை நிகழ்த்தினர்.

    அதைத் தொடர்ந்து தமது மாளிகையின் பின் தோட்டத்தில் மன்னரும் அவர் குடும்பத்தினரும் பாதுகாப்புப் படையினருக்குத் தமது பிரத்தியேகமான நன்றிகளைத் தெரிவித்தார்கள்.

    கிறிஸ்தவ மதத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிறிஸ்தவரான மன்னர் தாம் கிறிஸ்தவ மதத்தின் காவலர் மட்டும் அல்ல இந்நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களின் அனைத்து மதங்களின் பாதுகாவலர் என்பதைப் பல இடங்களில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

    மாணவனாக இந்நாட்டினுள் 48 ஆண்டுகளின் முன்னால் கால் பதித்தேன். எனது உயர் கல்வியை முடித்து, திருமணப் பருவத்தில் புகுந்து இன்று ஒரு பேத்திக்குத் தாத்தாவாக உள்ளேன்.

    என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தில் நான் சந்தித்த மாற்றங்கள் அனைத்திலும் இந்நாட்டின் சட்டதிட்டங்கள் எனக்கு அனுகூலமாக இருந்தனவே தவிர என்றுமே முட்டுக்கட்டையாக இருந்ததில்லை.

    ஜனநாயகம் என்பதன் உண்மை அர்த்தங்களைப் புரிந்துகொள்ள இந்நாட்டு வாழ்க்கை எனக்கு உதவியது, அத்தகைய நாட்டின் பாரம்பரிய தலைவராகக் கருதப்படும் மன்னரின் முடிசூட்டு விழாவின் பார்வையாளராக இருந்தது எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.

    ஆமாம் எங்கோ பிறந்தேன், எங்கோ தவழ்ந்தேன், இங்கே மிதந்தேன். வந்த என்னை வாழவைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்நாட்டின் பிரஜைகளில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

    பல்லாண்டுகள் வாழ்க என்று மூன்றாம் சார்ள்ஸ் மன்னரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

    Share
  • சூளாமணியில் திருநர் சித்திரிப்பு

    முனைவர் கி. அய்யப்பன்
    கெளரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை,
    உ. நா. அரசினர் கல்லூரி, பொன்னேரி- 601204
    பேசி: 9962660279
    மின்னஞ்சல்: agniiyyappan@gmail.com

    முன்னுரை

    தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி சமண சமயக் காப்பிய நூலாகும். இக்காப்பிய நூலைச் சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இயற்றினார். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என அறியலாம். ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே சூளாமணி எனும் இக்காப்பியநூல். இக்காப்பிய நூலில் 12 சருக்கங்கள் 2131 பாடல்கள் உள்ளன. இக்காப்பியம் விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது. இக்காப்பிய நூலில் சமூகத்தில் மாற்றுப்பாலினத்தவரான திருநரைப் (திருநங்கை, திருநம்பி) பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

    ஆய்வு முன்னோடிகள்

    தமிழில் திருநர் தொடர்பான ஆய்வில் முனைவர் வெ. முனிஷ், திருநங்கை பிரியாபாபு,  முனைவர் மு. அருணாசலம், முனைவர் கி. அய்யப்பன் முதலிய பலர் முன்னோடிகளாகத் திகழ்கின்றனர்.

    பால் மருள் சொற்கள்

    உலக மனித உயிர்கள் ஆண், பெண் எனும் இரு பால் பகுப்பில் அமைவது இயல்பாகும். இவ்வாறின்றி, அருகி, மாறுபட்டமையும் மானுடப் பிறவியும் உண்டு. இதனைப் பால் மருள் அல்லது உறுப்பு மருள் எனக் கூறலாம். மன ஊனமாக அறிவு மருள் அமைய உடல் ஊனமாகப் பால் மருள் என்று கூறும் பேராசிரியர் அன்னிதாமசு, மேலும் “அண்ணகன், அண்ணாளன், அல்லி, அலி, அழிதூஉ, ஆண்பெண்ணல்லாதவன், ஆணலி, இடபி, இப்பந்தி, கிலிபம், கிலீபம், கிலீவம், கோஷா, சண்டம், சண்டன், சிகண்டி, தூவரன், நபுங்கிஷம், நபுஞ்சகம், நபுஞ்சகன், நபுஞ்சம், நபும்ஸகம், நாமர்தா, பண்டகன், பெட்டையன், பெண்டகம், பெண்டகர், பெண்டகன், பெண்டர், பெண்டு, பெண்ணலி, பெண்ணைவாயன், பேடர், பேடர்கள்,  பேடன், பேடி, பேடியர், பேடு, பேடுகள், பேதை, மகண்மா, மருள், வசங்கெட்டவன், வண்டரன், வருடவரன், வறடன்”(அன்னிதாமசு, 2004: 117) முதலிய பால் மருள் சொற்களையும் அடையாளம் காட்டுகிறார். இத்தகையவர்கள் சமகாலத்தில் திருநர் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர்.

    பேடி+பேடன்= பேடு

    பால் திரிந்த மக்களும் அவர்களைக் குறிக்கும் சொற்களும் பின்வருமாறாம். “ஆண்மை திரிந்து பெண்மை கொண்டவன் பேடி; பெண்மை திரிந்து ஆண்மை கொண்டவள் பேடன்; இவ்விருவருக்கும் பொதுப்பெயர் பேடு. இம்மூவர்க்கும் பலர்பால் பெயர் முறையே பேடியர் பேடர் பேடுகள் என்பன. புணர்ச்சி உணர்ச்சியில்லாததும் பால் காட்டும் உறுப்பால் ஆணும் பெண்ணுமல்லாததும் அலி. பேடி என்னும் பெயர் பேடிமார் பேடிகள் எனவும் பலர்பால் ஏற்கும்” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- சேனாவரையம், 1956: 7) என்று கழகப்பதிப்பின் குறிப்புரை கூறுகின்றது.

    ஆணலி+பெண்ணலி= அலி

    ஆண்மை திரிந்த பெயராவது பேடி. அச்சத்தி ஆண்மையிற் திரிந்தாரைப் பேடி யென்ப வாகலான். “தெய்வசிலையார் அலி மூவகைப்படும் என்கிறார். ஈண்டு அப்பெயர் பெற்றது அலி யென்று கொள்க. அலி மூவகைப்படும்: ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண்டன்மை இழந்ததூஉம், பெண்ணுறுப்பிற் குறைவின்றி பெண்டன்மைஇழந்ததூஉம், பெண்பிறப்பிற் தோன்றிப் பெண்ணுறுப்பின்றித் தாடிதோற்றி ஆண்போலத் திரிவதூஉமென. அவற்றுட் பிற்கூறியது ஈண்டுப் பேடி எனப்பட்டது” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- தெய்வசிலையார், 1929: 11). “பெண் தன்மையிலிருந்து பிறழ்ந்து ஆண் தன்மையை அதிகம் பெற்றவர்களை அலி என்ற சொல் குறிக்கிறது’ (முனிஷ், 2013: 60)) என்று கூறும் முனிஷின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஏன் எனில் அலி என்பவன், பெண்ணிலும் ஆணிலும் சேராத உறுப்பை உடையவன். இது ஆணலி, பெண்ணலி என இருவகைப்படும். ஆணுருவம் இருந்தால் ஆணலி எனவும், பெண்ணுருவம் இருந்தால் பெண்ணலி என்றும் சொல்வதுண்டு(sambasivampillai, 1931: 125). மேற்கண்டவற்றின் அடிப்படையில், பெண்தன்மையிலிருந்து பிறழ்ந்து ஆண் தன்மை அதிகம் பெற்றவர்களையே அலி என்று கூறும் முனிஷின் கருத்து சரியானவையாகத் தோன்றவில்லை.அவர்களை ஆணலி என்று கூறுவதே சரியானதாகும்.

    அலி= பேடு

    முன் சொல்லப்பட்ட அலி, பேடுக்கான விளக்கங்கள் அடிப்படையில் அலி, பேடு சொற்கள் ஒரே பொருண்மையைக் குறிப்பதாகவே உள்ளதைக் காணமுடிகிறது. ஆணலி+பெண்ணலி= பேடி+பேடன்= அலி,பேடு என்று கூறுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    அரவாணி- திருநங்கை

    அரவாணி என்னும் பெயர் 12-05-1997 அன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பெயரை வைத்தவர் ஆர். இரவி அப்போதைய விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். திருநங்கை எனும் பெயர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்களால் 2006ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அரசியல் சார்ந்த நிலையில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் திருநங்கையர் என்னும் சொல்லை  சமூகத்தில் அடையாளப்படுத்தினார்.

    திருநர்

    இப்பெயர்களும் மாறித் தற்போது ஆணாய்ப் பிறந்து பெண்தன்மை அதிகம் உள்ள பேடியரைத் திருநங்கை என்றும், பெண்ணாய்ப் பிறந்து ஆண்தன்மை அதிகம் உள்ள பேடரை திருநம்பி என்றும் அழைக்கின்றனர். திருநங்கை, திருநம்பி ஆகிய இருவரும் திருநர் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர். இச்சொல் 2010-2011 ஆம் ஆண்டுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    “திருநர்/Transgenderஎன்பவர்கள் தங்களது பிறப்பு ரீதியான பாலும், பாலினத்தன்மையும் மாறுபட்டதாக உணர்பவர்கள். திருநங்கை/Male To Female Transgender (MTF) என்பவர்கள் பிறப்பால் ஆண்பாலும், மன அளவில் பெண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாட்டை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள். இவர்கள் திருநரில் ஒரு பிரிவு. திருநம்பி/Female To Male Transgender (FTM) என்பவர் பிறப்பால் பெண்பாலும், மன அளவில் ஆண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாட்டை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள். இவர்கள் திருநரில் இன்னொரு பிரிவு’’ என்று ஓரினம் என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள இயலுகிறது. மேலும், விக்கிபீடியா, சிருஷ்டி மதுரை ஆகிய இணைய பக்கங்களும் திருநரைப் பற்றி பேசுகின்றன.

    சூளாமணி காப்பியத்தில் திருநர்

    திருநரை சூளாமணி காப்பியத்தில் 775, 1985- ஆவது பாடல்களில் அலி என்றும், 2118- ஆவது பாடலில் பேடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காப்பியத்தில் இந்த மூன்று பாடல்களில் மட்டுமே திருநரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுவதாக அறியலாகிறது.

    பிற உயிரின் துன்பத்தைப் போக்காதவனின் ஆண்மை அலியின் அழகுக்கு ஒப்பானது     

    சூளாமணி காபியமனது பிற உயிர் துன்பப்படுவதைக் கண்டும் அத்துன்பத்தைக் களையாதவனுடைய ஆண்மையை அலி பெற்ற அழகுபோன்றது என்கிறது.

    மன்னுயிர் வருத்தக் கண்டும்
    வாழ்வதே வலிக்கு மாயின்
    அன்னவ ணாண்மை யாவ
    தலிபெற்ற வழகு போலாம் (சூளாமணி, 775)

    இப்பாடல் ஒருவன், பிறவுயிர்கள் இன்னல் எய்துவதைக் கண்கூடாகக் கண்டும், அவ்வருத்தம் போக்க நினைக்காமல் தன் வாழ்க்கையைப் பேணுவதையே உறுதியாக இருப்பான் எனில், அப்படிப்பட்டவன் பெற்றுள்ள ஆண்மைத்தன்மை என்பது பேடி பெற்றுள்ள அழகுக்கு  ஒப்பானது என்கிறது. அதாவது பிறவுயிர் துன்புறுங்கால் எமக்கென்னென் றிருப்போர் ஆண்மை பேடியின் அழகை ஒக்கும். (சூளாமணி, ப. 520) என்கிறது. ஆணிலிருந்து பெண்தன்மை பெற்ற அழகு என்று இப்பாடல் குறிப்பதால் இது திருநங்கையரைக் குறிப்பத்தாக அமைகிறது.

    அலிப்பிறப்பு இயற்கையானது

    சூளாமணி காப்பியத்தில் திருநர் பிறப்பு பற்றிச் சொல்லப்படுகிறது. இயற்கையில் உருவாகும் மருள், குருடு போன்ற ஊனப்பிறப்புகளில் அலிப்பிறப்பும்  ஒன்று.

    அண்ணை யலிகுரு டாதி யவர்களை
    மண்ணுயர் ஞாலத்து மானிட ராகவைத்
    தெண்ணுநர் யாருள ரெல்லா ….(சூளாமணி, 1985)

    என்ற பாடலில் மருள் பேடு குருடு முதலிய பிறப்பினர் ஆகியவர்களை மண் திணிந்துயர்ந்த உலகத்தே மனிதர் என்று கருதுவார்  யாரே இருக்கின்றனர்.(சூளாமணி, ப.1228) என்று கூறுகிறது.

    மேற்காணும் சூளாமணி பாடல் இயற்கையில் உருவாகும் ஊனப் பிறப்புகள் என்று மருள், அலி, குருடுகளை அடையாளப்படுத்துவதைக் காணமுடிகிறது. இப்பாடலில் வரும் அலி என்னும் சொல்லுக்குப் பேடு என்று  கழகப் பதிப்பின் உரைவிளக்கத்தில் கூறப்படுவதைக் காணமுடிகிறது. இதன் மூலமும் அலி, பேடு என்ற சொற்களை ஒரே பொருளை உணர்த்துவதற்குப் பயன்படுத்தலாம் என்பது தெளிவு. தற்காலத்தில்  அலி, பேடு இரண்டு சொற்களையும் திருநர் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடமுடிகிறது.

    திருநர் என்றால் கோழையா?

    திருக்குறள், நாலடியார் போன்ற இலக்கியங்கள் திருநரை வீரமில்லாத கோழையானவர் என்ற பொருளில் பதிவு செய்துள்ளது. அந்த வகையில்  சூளாமணி காப்பியம் திருநரை வீரமில்லாத கோழையானவர்கள் என்ற பொருளில் பதிவு செய்துள்ளதைக் காணமுடிகிறது.

    ஈடிலர் வெகுளி யுள்ளிட்
    டெண்மரை யெறியத் தீயுட்
    பேடுவந் தொன்று பாய்ந்து
    முடிந்தது ……(சூளாமணி, 2118)

    இந்த பாடலில் “தமக்கு ஒப்பில்லாதவராகிய அச்சினம் முதலிய எண்மரைக் கொன்றவுடனே, ஒரு பேடி தன்மேல் விரைந்து வந்து போராற்றி இறந்தொழிந்து”(சூளாமணி, ப.1305 ). தமக்கு ஒப்பில்லாதவராக  அதாவது தனக்கு ஒத்த வீரம் இல்லாத கோழையாக திருநரை பதிவு செய்வதால் இப்பாடலிலும் திருநங்கையரைப் பற்றிய பதிவாகவே காணமுடிகிறது.

    இவ்வாறு சூளாமணி காப்பியத்தில் திருநர் குறித்த பதிவுகளைக் காணமுடிகிறது.

    முடிவுரை

    ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சூளாமணி என்னும் இக்இக்காப்பிய நூல் சமணசமயக் கொள்கைகளைக் கொண்டதாக இருந்தாலும்,  இக்காப்பியம் தோன்றிய காலப் பின்புலத்தின் காரணமாகத் திருநர்கள் சமூகத்தில் மதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

    சூளாமணி காப்பியமனது பிற உயிர் துன்பப்படுவதைக் கண்டும் அத்துன்பத்தைக் களையாதவனுடைய ஆண்மையை திருநர் பெற்றுள்ள அழகுக்கு ஒப்பானது என்றும், மருள், குருடு போன்று திருநர் பிறப்பும் ஒரு இயற்கைப் பிறப்புதான் என்றும்  சொல்கிறது. மேலும், திருநர் வீரமற்ற கோழைகள் என்றும் கூறுகிறது.

    பாடல் எண் 775-இல் அலி என்று வரும் சொல்லுக்கு உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீட்டில் அலியென்றே பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. ஆனால், கழகப்பதிப்பின் உரையானது அலி என்னும் சொல்லுக்கு பேடு என்று உரைவகுத்து விளக்குகிறது. இதன்மூலம் அலி, பேடு இரண்டும் ஒரே பொருளை உணர்த்தும் என்பதை  அறிந்துகொள்ள முடிகிறது.

    பாடல் எண் 1985- இல் வரும் அலி எனும் சொல்லுக்கு உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீட்டில் பேடியென்று பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. ஆனால், கழகப்பதிப்பின் உரையானது அலி என்னும் சொல்லுக்கு பேடு என்று உரைவகுத்து விளக்குகிறது. இங்கு உ. வே. சாமிநாதையர் நூல் நிலையப் பதிப்பில் பயன் படுத்தப்படும் பேடி எனும் சொல் சரியானதாகத் தோன்றவில்லை. ஏனெனில், அலிப் பிறப்பு என்பது ஆண் பிறப்பிலும் பெண் பிறப்பிலும் நிகழும், இப்பதிப்பில் பேடி என்று கூறுவது ஆணிலிருந்து பெண்தன்மையைப் பெறுபவரை மட்டும் குறிக்கும். பாடல் எண் 2118- இல் வரும் பேடு எனும் சொல்லுக்கு  கழகப்பதிப்பின் உரை பேடி என்று பொருள் கொள்கிறது.  ஏனெனில் ஒரு பேடி தன்மேல் விரைந்து வந்து போர் செய்து இறந்தார் என்று கூறுவதின் மூலம் இங்கு ஆண்தன்மையிலிருந்து பெண்தன்மை உடைய ஒருவரைக் குறிக்கும் விதமாக வரும் இச்சொல்லைப் பேடியென்று சொல்வதே  சரி என்று இக்கட்டுரையின் மூலமாக தெரிந்துகொள்ளமுடிகிறது.

    துணைநூற் பட்டியல்

    சூளாமணி மூலமும் உரையும், பாகம்,1, 2,  கழக வெளியீடு. சென்னை,
    சேனவரையம், தொல்காப்பியம்- சொல்லதிகாரம்,1956, கழக வெளியீடு, சென்னை.
    சோமசுந்தரனார். பொ.வே, இராமசாமிப் புலவர். சு.அ.,(உரையாசிரியர்), 1970,
    தெய்வசிலையார் (உரை), தொல்காப்பியம்- சொல்லதிகாரம்,1929, கரந்தை தமிழ்ச்சங்க பதிப்பு, கரந்தை.
    முனிஷ்.வெ., 2013, காலந்தோறும் தமிழ் இலக்கணங்களில் மூன்றாம் பாலினம், சொல்லங்காடி, சென்னை.
    ருக்மிணி தேவி(பதிப்பாசிரியர்), 1954, சூளாமணி, பாகம், 1, 2. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம். சென்னை.
    http://orinam.net/ta/
    http://ta.wikipedia.org/s/1due
    Sambasivampillai, T.v., 1931, Tamil- English Dictionary, The Research Institute of Siddhar’s Institute of Science, Chennai.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘சூளாமணியில் திருநர் சித்திரிப்பு’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடு

    Ø  ‘சூளாமணியில் திருநர் சித்திரிப்பு’ என்னுந் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையில் கட்டுரையின் மையக்கருத்து பற்றிய செய்திகள் இறுதி ஒரு பக்க அளவிலும் அது பற்றிய முன்னுரை ஏனைய பக்கங்களிலும் அமைந்திருப்பது சரியான அமைப்பாகத் தோன்றவில்லை. நெற்றிப் பரப்பில் திலகமாக இருக்க வேண்டிய முன்னுரை நெற்றியையே மறைத்துவிடுகிறது.  

    Ø  திருநங்கை, திருநம்பி என்பவற்றுக்கான பலர்பாலாகத் ‘திருநர்’ என்று கட்டுரையாசிரியர்  பெயர் சூட்டியிருப்பது செயற்கையானதொரு சொல்லாக்கமாகவே தோன்றுகிறது. 

    Ø  ‘பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்’ என்னும் தொல்காப்பிய நூற்பாவை எடுத்துக்காட்டும் ஆசிரியர், ‘பெண்மைவிட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்,  ஆண்மைவிட்டு அல்லது அவாவுவ பெண்பால் இருமையும்  அஃறிணை அன்னவுமாகும்” என்னும் நன்னூல் நூற்பாவையும் சிந்தித்திருக்க வேண்டும்.

    Ø  ஆய்வுக்கட்டுரை ஒன்றில் கருதுகிறேன்’ என்பது போன்ற தற்சார்பான முடிவு கூறுதல் ஏற்புடைத்தன்று. கருதலாம், கருதுவதற்கு இடமுண்டு என்ற தரவுகளின் அடிப்படையில் அமைந்த தற்காலிக ஊகத்தையே வெளிப்படுத்துவதாக அமைதல் வேண்டும்.

    Ø  அலி, பேடு, பேடன், அரவாணி, திருநங்கை முதலியன பற்றிய சொற்களைப் பற்றிய சில செய்திகள் இக்கட்டுரையில் இடம் பெறுவதோடு சூளாமணியில் காணப்படும் மூன்று பாடல்கள் பற்றிய கருத்துரையும் இடம்பெற்றுள்ளதன்றிக் கட்டுரைப் பொருள் பற்றிய எந்தச் சிக்கலும் முன்வைக்கப்பட்டதாகவோ, அந்தச் சிக்கலுக்கு விடைகாண முயன்றதாகவோ கருதுமாறு கட்டுரை அமையவில்லை. 

    Ø  ‘குறைவின்றி பெண்டன்மை’, ‘கோழையாக திருநரை பதிவு’, ‘இந்த பாடலில்’, ‘திருநரை சூளாமணி’, ‘பேடரை திருநம்பி’, ‘ ‘ஆண்மையை திருநர்’, ‘சொல்லை சமூகத்தில்’, ‘ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது’ ‘சொல்லுக்கு கழகப்பதிப்பின்’. மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது, தெய்வசிலையார், கரந்தை தமிழ்ச் சங்க பதிப்பு, முதலிய தொடர்களில் அமைந்துள்ள சந்திப்பிழைகள் தவிர்ப்பதற்குரியன.

    Ø  ‘குறிப்பத்தாக’, ‘காபியமனது’, ‘கூறுவதின்’, ‘இக்இக்காப்பிய’ முதலியன திருத்தத்திற்கும் செப்பத்திற்கும் உரியன.

    Ø  “இச்சொல் 2010-2011 ஆம் ஆண்டுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன”. “திருக்குறள், நாலடியார் போன்ற இலக்கியங்கள் திருநரை வீரமில்லாத கோழையானவர் என்ற பொருளில் பதிவு செய்துள்ளது” என்னுமாறு அமைந்துள்ள பால்வழுக்கள் களைதற்குரியன.

    Ø  “(அன்னிதாமசு, 2004 117) (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- தெய்வசிலையார், 1929: 11). என்றெல்லாம் சான்றெண் விளக்கம் குறிப்பிடுவது ஆய்வு நெறிக்கு ஏற்றதன்று.

    இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் சூளாமணி உட்பட சில இலக்கிய இலக்கணங்களில் காணப்படும் திருநங்கையர் பற்றிய சில செய்திகளை இக்காலத்தாருக்கு அறிமுகம் செய்த அடிப்படையிலும் இலக்கியக் கட்டுரை என்ற பகுதியில் வெளியிடுகிறோம். 

    Share
  • பூதக்கோள் வியாழன் பனிநிலவுக்கு ஈரோப்பிய விண்சிமிழ் ஏவப்பட்டுள்ளது

    பூதக்கோள் வியாழன் பனிநிலவுக்கு ஈரோப்பிய விண்சிமிழ் ஏவப்பட்டுள்ளது

    An Ariane rocket carrying the robotic explorer JUICE takes off from Europe’s spaceport in French Guiana. The European spacecraft has blasted off on a quest to explore Jupiter and three of its ice-encrusted moons. The robotic explorer set off on an eight-year journey Friday. (European Space Agency/The Associated Press)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    2023 ஏப்ரல் 14 ஆம் தேதி  ஈரோப்பியன் விண்வெளி ஆணையகம் [ESA] பூதக்கோள் வியாழன் நோக்கி ஏகி அதன் பனிநிலவு இரண்டை, ஈரோப்பா, கணிமீடு, உளவு செய்ய அனுப்பியுள்ளது. அந்த இரண்டு துணைக்கோள்தான் உயிரின மூலவிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று தேர்வு செய்யப் பட்டவை. ஈசாவின் பூதக்கோள் வியாழன் விண்வெளித் திட்டம் “சூஸ்’  [JUICE] [JUpiter ICy moons Exploration] என்று குறிப்பிடப் படுகிறது.  சூரிய மண்டலத்தில் நமது பூமிக்கு அப்பால்  அவ்விரண்டு நிலவுகளில் தான் உயிரின மூலவிகள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.  ஈசாவின் சூஸ் விண்சிமிழ் 6.6 பில்லியன் மைல்கள் கடந்து 8 ஆண்டுகள் பயணம் செய்து வியாழக் கோளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

     

    Jupiter, with its prominent Great Red Spot, hangs in space with Ganymede. (NASA/ESA and E. Karkoschka/Reuters)

    JUICE is taking a long, roundabout route to Jupiter, covering 6.6 billion kilometres.

    It will swoop within 200 kilometres of Callisto and 400 kilometres of Europa and Ganymede, completing 35 flybys while circling Jupiter. Then it will hit the brakes to orbit Ganymede, the primary target of the 1.6 billion-euro mission ($2.4 billion Cdn).

    Ganymede is not only the solar system’s largest moon — it surpasses Mercury — but has its own magnetic field with dazzling auroras at the poles.

    https://www.nasa.gov/mission_pages/juno/images/index.html
    https://youtu.be/paeuMCN-DdQ
    https://youtu.be/NGQF-Hf5h7Y
    https://youtu.be/NrkF5beDh10

    Share
  • தாமே கல்விகற்ற அறிவியலாளர் – மைக்கேல் பாரடே

    தாமே கல்விகற்ற அறிவியலாளர் – மைக்கேல் பாரடே

    -பேரா. சேசா சீனிவாசன்

    வரலாற்றில் மிகச் செல்வாக்குப் பெற்ற அறிவியலாளராகவும் (most influential scientist), ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், டெஸ்லா போன்ற உலகத்தரம் வாய்ந்த அறிவியல் அறிஞர்களுக்கு முன்னோடியாகவும், அவர்களுக்கு உந்துசக்தியாகவும் (Inspriation) திகழ்ந்தவர் மைக்கேல் பாரடே என்றால் அது மிகையில்லை.

    பாரடேயின் அறிவியல் சாதனைக் கண்டுபிடிப்புகள், அறிவியலின் ஓர் அங்கமாக விளங்கும், இயற்பியல் துறை (Physics) வளர்ச்சிபெறுவதற்குப் பெரிதும் துணைநின்றுள்ளன. இவரின் அரிய கண்டுபிடிப்புகளான மின்காந்தத் தூண்டல் (Electromagnetic Induction), மின்சார விசைப்பொறி (Electric Motor), மின்வேதியியல் (Electrochemistry) ஆகியவை இவரை உலகம் அறிந்துகொள்ள வழிவகைசெய்தன.

    பாரடேயின் மின்சாரக் கருவிகளின் கண்டுபிடிப்புகளுக்கு மரியாதை செய்யும் விதமாக, இவரது பெயரை, மின்தேக்கியின் (Electrical Capacitance) அளவீட்டு அலகிற்கு “பாரட்” (Farad) எனச்சூட்டி, உலகம் இவரைக் கொண்டாடிய ஆண்டு 1873. இங்கிலாந்து வங்கி (Bank of England), இவரது நினைவாக £20 பணத்தாளில் இவரின் உருவப்படத்தை 1991ஆம் ஆண்டு வெளியிட்டது. இதனால், பாரடேயும் வில்லியம் சேக்ஸ்பியர் (William Shakespeare), புளோரன்ஸ் நைட்டீங்கேல் (Florence Nightingale), மற்றும் ஐஸக் நியூட்டன் (Sir Isaac Newton) போன்ற மாபெரும் மனிதர்களின் தர வரிசையில் இணைந்தார்.

    மேக்ஸ்வெல் என்ற மிகப்பெரிய விஞ்ஞானியும் பாரடேவைப் பற்றிக் குறிப்பிடும்போது, எத்தனை கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தபோதிலும், எப்பொழுதுமே மைக்கேல் பாரடே ஒருவர்தாம் மின்காந்தவியலின் (Electromagnetism) தந்தை என்று புகழாரம் சூட்டியுள்ளார். மின்காந்த விதிகளைப் பற்றிய கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கவில்லையெனில், இத்துறைசார்ந்த பல புதிய அறிவியல் சாதனைகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

    மைக்கேல் பாரடேயின் ஆரம்பக் கல்வி:

    மைக்கேல் பாரடே 1791ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 22ஆம் தேதி, மார்கரெட் மற்றும் ஜேம்ஸ் பாரடே தம்பதியருக்கு நான்கு குழந்தைகளில், மூன்றாவதாகப் பிறந்தார். மைக்கேலின் குடும்பம் வறுமையில் வாடியதால், அனைவரும் வேலைவாய்ப்பைத் தேடி, இங்கிலாந்து நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர். இலண்டனின் தெருக்களில் வேலைசெய்து வந்த சிறுவன் மைக்கேல் பாரடே, அடிப்படைக் கல்வி சிறிது கற்றபின், வறுமையின் காரணமாய்ப் படிப்பைத் தொடர இயலாததால், உயர்கல்வியைத் தாமே முயன்று கற்றுக்கொண்டுள்ளார்.

    தனது பதினான்காம் வயதில், புத்தக ஏடுகள் கட்டும் (Book Binding) மற்றும் புத்தக விற்பனை (Book Selling) செய்யும்  நிறுவனத்தில் தொழில்பழகுநராக (Apprentice) வேலைக்குச் சேர்ந்தார் பாரடே. அங்கு அவர்செய்த ஏழுவருடப் பணியில், கிடைத்தற்கரிய பல புத்தகங்களை வாசிப்பதற்கும், அவற்றைப் பயன்படுத்துவதற்கும் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. பாராடேயின் புத்தக நிறுவனத்தின் முதலாளி ஜார்ஜ் ரைபோவும் (George Riebau), பாரடே புத்தகங்கள் வாசிப்பதை ஊக்குவித்தார்.

    மைக்கேல் பாரடே படித்த புத்தகங்களில், அவருடைய கவனத்தினை மிகவும் ஈர்த்தது, ஜேன் மார்செட் எழுதிய ’வேதியியல் பாதுகாப்பு விதிகள்’ (Conservations on Chemistry by Jane Marcet) என்ற புத்தகமாகும். பாரடே தன் இருபதாம் வயதில் உலகத்தரம் வாய்ந்த இங்கிலாந்தின் வேதியியலாளர், சர். ஹம்ப்ரி டேவியின் (Sir. Humphry Davy) தொடர் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றார். அத்துணைச் சொற்பொழிவுகளையும் தொகுத்துச் சுமார் 300 பக்க அளவில் தம்முடைய கையினால் எழுதிய கோப்புகளை சர். டேவி அவர்களுக்கு அனுப்பிவைத்தார். இதைப்பெற்ற சர். ஹம்ப்ரி டேவி உள்ளம் குளிர்ந்து பாரடேவிற்குச் சாதகமான பதில் கடிதத்தை அனுப்பினார்.

    பாரடேயின் முதற் கண்டுபிடிப்பு:

    சர். டேவி அவர்கள் 1813ஆம் ஆண்டில், தம்முடைய ஆய்வுக்கூடத்தில் நைட்ரஜன் III குளோரைடு (Nitrogen trichloride) என்ற வேதிப்பொருளைச் சோதனை செய்து கொண்டிருக்கையில், தம் கண்களை இழந்தார். ஆதலால் மைக்கேல் பாரடேவைத் தம்முடைய ஆராய்ச்சிக்கு உதவியாளராக நிரந்தரப் பணியில் நியமித்தார். இவர்களிருவரும் தங்களுடைய ஆராய்ச்சிக் குழுமத்தின் மாநாட்டு நிகழ்விற்காக, ஐரோப்பாவிற்குப் பயணப்பட்டனர். சர். டேவி அவர்கள் நகைச்சுவையாக பாரடேவைப் பற்றிச் சொல்லும்பொழுது, ”மைக்கேல் பாரடேதான் என்னுடைய பெரிய கண்டுபிடிப்பு” என்று கூறியுள்ளார். அது எவ்வளவு பொருத்தம் என்று நாம் பாராடேயின் இந்தச் சுயசரிதையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகின்றது.

    1820ஆம் ஆண்டில் டேனிஷ் நாட்டின் இயற்பியலாளர் ஹான்ஸ் ஓர்ஸ்டெடு (Danish Physicist Hans Orsted) தற்செயலாக ஒரு செப்புக் கம்பியில் செல்லும் மின்சாரத்தின் வழியாகக் காந்த ஊசியைத் திசைதிருப்ப முடியும் என்பதனைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பை மிகவும் போற்றிய பாரடே, அதற்கடுத்த ஆண்டு, அதாவது 1821ஆம் ஆண்டு, மின்சாரத்தினால் இயங்கும் விசைப்பொறியைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்புதான் தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் அன்றாடச் சாதனங்களான, மின்விசிறி, குழாய்கள் (pumps), அமுக்கிகள் (compressors), மின்உயர்த்திகள் (elevators), மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளில் (refregirators) பயன்படுத்தப்படுகின்றது.

    மைக்கேல் பாரடேயின் இவ்வளர்ச்சியை அவருடைய வழிகாட்டியான சர். டேவியினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால், பாரடேவை மின்காந்தத் தூண்டல் சார்ந்த ஆராய்ச்சிகள் செய்வதிலிருந்து தடுத்துவந்தார். 1829ஆம் ஆண்டு டேவி இறந்தபின்னர்தான் பாரடேயால் தம் ஆராய்ச்சியைத் தொடரமுடிந்தது. சர். ஹம்ப்ரி டேவி, தமக்குத் துன்பம் விளைவித்துத் தம் ஆராய்ச்சிகளைத் தடுத்தபோதிலும், தம்முடைய அறிவியல் தந்தையாகவே டேவியை மற்றவர்களிடம் கூறிவந்துள்ளார் பாரடே.

    மின்காந்தவியல் (Electromagnetism)

    மைக்கேல் பாரடே பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மின்காந்தத் தூண்டல் விதியை (Law of Electromagnetic Induction) கண்டுபிடித்தார். இந்தச் சோதனையின் வாயிலாக, இரு செப்புச் சுருள்களில் ஒன்றில் மின்சாரத்தினைப் பாய்ச்சினால் மற்றொரு சுருளில் மின்சாரம் தூண்டப்படும் என்பதைக் கண்டறிந்தார் பாரடே. இவ்விதிப்படி, மின்காந்தத் தூண்டலில் இயங்கும் விசைப்பொறியானது ஐம்பது வருடங்களுக்குப் பிறகே பயன்பாட்டுக்கு வந்தது என்று வரலாற்றுக் குறிப்புகள் பகர்கின்றன.

     

    பாரடேவின் இந்த எளிய சோதனை பிற்காலத்தில் ஸ்காட்டிஷ் நாட்டுக் கணிதமேதையும், இயற்பியலாளருமான (Scottish Physicist and Mathematician) ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்லால் (James Clark Maxwell) ”மாக்ஸ்வெல்-பாரடே சமன்பாட்டு விதியாக” (Maxwell-Faraday Equation) உருவாக்கப்பட்டு, அறிவியல் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சமன்பாட்டைக் கீழே காணலாம்.

    E – Electric Field, B- Magnetic Field

    மேலே கொடுக்கப்பட்டுள்ள விதி, ஆற்றல் உற்பத்திக்கு (Power Generation) அடித்தளமாக அமைந்த காரணத்தினால், மைக்கேல் பாரடேவை ”மின்சாரத்தின் தந்தை” என்று போற்றுவது சாலச்சிறந்தது.

    1834ஆம் ஆண்டு பாரடேவின் மற்றுமொரு கண்டுபிடிப்பாகிய ”மின்னாற்பகுப்பு” (Electrolysis) முறையினால் தொழிற்சாலைகளில் உலோகங்களைப் பிரிக்கவும், ஆற்றலைச் சேமிக்கவும், மின்முலாம் பூசவும், நீரைத் தூய்மைப்படுத்தவும் ஈதொத்த வேறுபல் பணிகளைச் செய்யவும் முடிந்தது. இந்தச் சாதனைக்காக, முறையான பட்டப்படிப்பு இல்லாத பாரடேவுக்கு இங்கிலாந்தின் ராயல் அறிவியல் கழகம் (Royal Institution) வேதியியல் பேராசிரியர் பதவியளித்துக் கௌரவித்தது.

    1836ஆம் ஆண்டு மைக்கேல் பாரடே, “பாரடே கூண்டு” (Faraday Cage) என்ற அடைப்பானை உருவாக்கி அதன்மூலம் மின்காந்தப் புலத்தினை முடக்கலாம் எனச் செய்துகாட்டினார். இக்காலத்தில் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் பாரடே கூண்டு, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நுண்ணலைச் சூளையில் (Microwave Oven) உருவாகும் மின்காந்த அலைகளை வெளியே பாயவிடாமல் தடுக்க உதவுகிறது. மேலும் MRI ஸ்கேன் என்று சொல்லக்கூடிய மருத்துவ உபகரணத்திலும் இந்த பாரடே கூண்டு பயன்படுத்தப்படுகிறது.

    அறிவியல் ஆராய்ச்சியைத் தவிர வார இறுதி நாட்களில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, இலவச அறிவியல் சொற்பொழிவுகள் நடத்தினார் பாரடே. அதன்மூலம் இளைய சமூகத்தினை அறிவியில்வழிச் சிந்திக்கத் தூண்டினார்.

    மைக்கேல் பாரடே தம்முடைய கடைசி நாட்களில், தாம் முதன்முதலில் தொழில்செய்த புத்தக நிலையத்தின் உரிமையாளர், திரு. ஜார்ஜ் ரைபோவிற்கு, தாம் எழுதிய ஒரு புத்தகத்தைக் காணிக்கையாக்கினார். அதில் அவர் குறிப்பிட்டது அப்படியே அதன் தன்மை மாறாமல் ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    “…you kindly interested yourself in the progress I made in the knowledge of facts relating to the different theories in existence, readily permitting me to examine those books in your possession that were in any way related to the subjects occupying my attention.”

    முறையான பள்ளிக்கல்வி பெறும் சூழல் வாய்க்கவில்லையெனினும் அறிவியல் துறையில் ஈடுபாடும், அத்துறைசார் அறிவினை நூல்கள் வாயிலாகத் தாமே வளர்த்துக்கொள்ளும் திறனும் இருந்தால் உலகம் போற்றும் உன்னத அறிவியலாளராய் மிளிரமுடியும் என்பதற்கு மைக்கேல் பாரடேவின் வாழ்க்கை சான்றாகின்றது.

     

    Share
  • ’தாய்’ தந்த புரட்சிப் படைப்பாளி!

    ’தாய்’ தந்த புரட்சிப் படைப்பாளி!

    -மேகலா இராமமூர்த்தி

    உலகின் மகத்தான இலக்கியப் படைப்பாளிகளுள் ஒருவராய் இன்றளவும் போற்றப்படுபவர் இரஷ்யாவின் மாக்சிம் கார்க்கி (Maxim Gorky). அவர் படைப்பாளி மட்டுமல்லர்; தம் காலத்தின் சமூக அரசியல் அவலங்களுக்கு எதிராகக் கலகக் குரலெழுப்பியவராகவும் இரஷ்யப் புரட்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய போராளியாகவும் விளங்கியவர்.

    கார்க்கியின் இளமைப் பருவமும் செய்த பணிகளும்

    இரஷ்யாவின் நிஸ்னி நவ்கரோட் (Nizhny Novgorod) என்ற ஊரில் மார்ச்சு 28, 1868இல் பிறந்தவர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் (Alexei Maximovich Peshkov) எனும் இயற்பெயர் கொண்ட மாக்சிம் கார்க்கி.  தம்முடைய ஐந்தாவது வயதில் தந்தையை இழந்தார் கார்க்கி; அதன்பின்னர் அவருடைய தாய் மறுமணம் செய்துகொண்டார். அதனால் தாயின் அரவணைப்பும் அவருக்குக் கிட்டவில்லை. எனவே, அருகிலிருந்த கிராமத்தில் வசித்துவந்த தம்முடைய தாய்வழிப் பாட்டி தாத்தா வீட்டில் வளரவேண்டிய சூழல் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு வாய்த்தது. அங்கும் வறுமையான வாழ்க்கைச் சூழலே நிலவியதால் முறையான பள்ளிக்கல்வி என்பது கார்க்கிக்கு ஒருசில ஆண்டுகளே கிடைத்தது.

    சிறுவனாய் இருந்த காலந்தொட்டே உழைத்துப் பிழைக்க வேண்டியவரானார் கார்க்கி. உணவு விடுதிகளில் பாத்திரங்கள் கழுவுவது, இரயில்நிலையத்திலிருந்து வருவோரின் பெட்டி படுக்கைகளைச் சுமப்பது, செருப்புக்கடையில் செருப்புத் தைப்பவருக்கு உதவுவது, ஆலையில் தொழிலாளியாய்ப் பணிபுரிவது, அடுமனையில் உரொட்டி சுடுவோருக்கு உதவுவது எனப் பல்வேறு சிறுவேலைகளைச் செய்துவந்தார் கார்க்கி.

    அவரின் பாலைவன வாழ்வில் சோலையாய் அமைந்தவர் அவரின் பாட்டியார் அகுலினா கஷிரினா (Akulina Kashirina).  சிறந்த கதைசொல்லியாகவும், நாட்டுப்புறப் பாடகியாகவும் விளங்கிய அப்பாட்டியாரால் கார்க்கிக்கும் அத்திறன்கள் கைவரப்பெற்றன. பின்னாளில் கார்க்கி ஒரு சிறந்த எழுத்தாளராக உருவாக இவை அவருக்குப் பேருதவி புரிந்தன என்பதனைக் கார்க்கியின் தன்வரலாற்று நூலின் வாயிலாக நாமறிகின்றோம்.

    வோல்கா ஆற்றில் இயங்கிக்கொண்டிருந்த பயணக் கப்பலில் (Volga Riverboat) வாலுவராக (சமையற்காரர்) பணியாற்றிவந்த மிகைல் அகிமோவிச் (Michaël Akimovich) என்பவருக்கு உதவியாளராய்த் தம்முடைய பதினைந்தாவது வயதில் பணியில் சேர்ந்தார் கார்க்கி. அந்த அறிவார்ந்த வாலுவர் தம்முடைய சிறிய அறையில் ஓர் நூலகமே வைத்திருந்தார்; அங்கிருந்த இலக்கிய நூல்களை அவர் கார்க்கிக்கும் படிப்பதற்குத் தந்து இலக்கியம் படிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே கார்க்கியிடம் வளர்த்திருக்கின்றார். தம்முடைய இடைவிடா வாசிப்புப் பழக்கத்திற்கும் இலக்கியப் பயிற்சிக்கும் படைப்பாக்கத் திறனுக்கும் அவ் வாலுவரின் வழிகாட்டுதலும் அவரளித்த நூல்களும் பெருந்துணையாயின என்று தம்முடைய ’My Childhood’ எனும் ’தன்வரலாற்றுப் புனைவில்’ நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகின்றார் மாக்சிம் கார்க்கி.

    கார்க்கியின் படைப்புகள்

    இயல்பிலேயே இயற்கையை இரசிக்கும் குணமும் கற்பனை வளமும் மிகுந்தவரான கார்க்கிக்குத் தம் பாட்டியாரிடமிருந்து கதைசொல்லும் திறனும், வாலுவரின் உதவியால் இலக்கிய வாசிப்பனுபவமும் கிட்டவே, கார்க்கி எனும் எளிய இளைஞன் ஓர் மகத்தான படைப்பாளியாய் உருவெடுத்தான்.

    மாக்சிம் கார்க்கியின் முதல் கவிதை அவரின் 19ஆவது வயதில் இரஷ்ய இதழொன்றில் வெளிவந்திருக்கின்றது. 1892இல் அவரது முதல் சிறுகதையான ’மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. அக்காலகட்டத்தில் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் எனும் தம் பெயரை மாற்றி, ’மாக்சிம் கார்க்கி’ என்பதனைப் புனைபெயராகக் கார்க்கி வைத்துக்கொண்டார். கார்க்கி என்பதற்கு இரஷ்ய மொழியில் ’கசப்பு’ என்று பொருள். குழவிப் பருவந்தொட்டுத் தாம் வாழ்வில் சந்தித்த அவலங்கள்  கசந்ததனால் அப்பெயரைச் சூட்டிக்கொண்டார் என்று தெரியவருகின்றது.

    கார்க்கி, தாம் எழுதிய புகழ்வாய்ந்த சிறுகதைகளைத் தொகுத்து, ‘படங்களும் கதைகளும்’ (Sketches and stories) எனும் பெயரில் 1898இல் வெளியிட்டார். அவற்றில் சில கதைகள் அவரது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் வேறுசில கதைகள் இரஷ்யாவின் பலவிடங்களுக்கும் அவர் பயணித்தபோது சந்தித்த மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் கருப்பொருளாய்க் கொண்டவை.

    கார்க்கியின் எழுத்துக்கள் அவற்றின் இலக்கிய மொழிநடைக்காகவும் மக்களின் மனவுணர்வுகளைத் துல்லியமாய்க் காட்சிப்படுத்தும் சிறப்புக்காகவும் இரஷ்ய இலக்கிய பண்பாட்டுத் தளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

    கார்க்கியின் முதல் புதினமான ’பாமா கோர்தயேவ்’ (Foma Gordeyev) 1899இல் வெளியாயிற்று. மிகவும் வறிய சூழலில் வளர்ந்த பாமா எனும் இளைஞன் பின்னாளில் புரட்சிகரமான அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டதைப் பேசுபொருளாய்க் கொண்டது இப்புதினம். சமூகநீதி, உழைக்கும் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் ஆகியவற்றை அடிப்படையாய்க் கொண்டு எழுதப்பட்ட இது, இரஷ்ய மக்களின் வரவேற்பைப் பெற்று, தம்மை ஓர் இலக்கிய ஆளுமையாய்க் கார்க்கி நாட்டில் நிலைநிறுத்திக்கொள்ள வழிவகை செய்தது.

    மாக்சிம் கார்க்கிக்குப் புகழ்சேர்த்த படைப்புக்களாகப் பல இருந்தாலும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை: கீழ்த்தட்டு மக்கள் (The Lower Depths) எனும் நாடகம்; தாய் (Mother) எனும் புதினம்; என் குழந்தைப் பருவம் (My Childhood),  இவ்வுலகில் (In the world), என் பல்கலைக்கழகங்கள் (My universities) என மூன்று பகுதிகளாக (trilogy) அவரெழுதிய தன்வரலாற்றுப் புனைவு நூல்கள் ஆகியவை. அவற்றின் உள்ளடக்கம் குறித்துச் சுருக்கமாய்க் காண்போம்.

    கீழ்த்தட்டு மக்கள்

    இந் நாடகம் கார்க்கியால் எழுதப்பட்டு 1902ஆம் ஆண்டு அரங்கேறியது. வீடு வாசலற்ற ஏழைமக்கள் தங்குவதற்காக, 19ஆம் நூற்றாண்டில் இரஷ்யாவில், கட்டப்பட்டிருந்த விடுதியொன்றில் குடியிருப்போரின் வாழ்க்கைப் போராட்டத்தை விவரிக்கின்றது இந்நாடகம். வறுமை, குடிப்பழக்கம், வாழ்வின்மீதான அவநம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டிருந்த கீழ்த்தட்டு மக்களையும் அவர்களை அலட்சியப்படுத்திப் புறக்கணிக்கும் மேல்தட்டினரையும் இந்நாடகம் துல்லியமாய்க் காட்சிப்படுத்தியது. இரஷ்ய இலக்கியத்தின் தரமான படைப்பாகக் கருதப்படுகின்ற இந்நாடகத்தைத் தழுவிப் பல திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் உருவாக்கப்பட்டன.

    தாய்

    மாக்சிம் கார்க்கியின் உலகப் புகழ்பெற்ற புதினம் ’தாய்.’ இது, 1906ஆம் ஆண்டு வெளிவந்தது. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணான பெலகேயா நீலவ்னாவையும் (Pelageya Nilovna) அவள் மகன் பாவெலையும் (Pavel) சுற்றிப் பின்னப்பட்டது இப்புதினம்.

    கணவனை இழந்த கைம்பெண்ணான நீலவ்னா, தன் குடும்பத்தைக் காப்பாற்ற அரும்பாடு படுகின்றாள். ஆலையில் வேலை செய்துவந்த அவள் கணவன் மிகையில் விலாசவ் (Michael Vlasov) மிதமிஞ்சிய குடிப்பழக்கத்தால் குடல்வெந்து இறந்துவிட, தன் மகன் பாவெலை நற்குணமுடையவனாய் வளர்க்க நினைக்கின்றாள் நீலவ்னா. போராட்ட வாழ்க்கையை அவள் வாழ்ந்துவந்த போதிலும் அன்பானவளாகவும், அக்கம்பக்கத்தவர் மதிக்கும் வகையில் நேர்மையும் கடின உழைப்பும் கொண்ட பெண்மணியாகவும் வாழ்ந்து வருகின்றாள்.

    உழைக்கும் தொழிலாள வர்க்கத்தினர் படும்பாட்டையும் அவர்தம் இன்னல்களையும் கண்டு நெஞ்சுநொந்த அவளுடைய மகன் பாவெல், அரசாங்கத்துக்கெதிரான புரட்சி அரசியலில் இறங்குகின்றான். ஒடுக்கப்பட்ட தொழிலாளிகளின் நல்வாழ்வுக்குப் பாடுபடும் பொதுவுடைமைப் போராளிகளின் இயக்கத்தில் இணைகின்றான். தன்னுடைய அர்ப்பணிப்பு உணர்வால் ஒரு கட்டத்தில் அப்புரட்சி இயக்கத்தின் தலைவனாகவும் உயர்கின்றான்.

    தொடக்கத்தில் தன் மகன் பாவெலின் நோக்கத்தையும் செயற்பாட்டையும் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறும் அந்தத் தாய், அவனுக்கு இரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த ஜார் மன்னனால் ஏதேனும் தீங்கு நேருமோவென்று அஞ்சுகின்றாள். பின்பு, மகனின் சித்தாந்தத்தையும் அவன் சார்ந்திருக்கும் இயக்கத்தின் உயர்ந்த நோக்கத்தையும் புரிந்துகொண்டு தானும் அப்புரட்சி இயக்கத்தில் இணைகின்றாள்.

    19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரஷ்யாவின் உழைக்கும் வர்க்கத்தினரின் வறுமை, அவர்களுக்கெதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை, அந்த அடக்குமுறைகளாலும் சர்வாதிகாரத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் சமதர்மச் சமுதாயத்தை மலரச்செய்ய மேற்கொண்ட போராட்டங்கள் ஆகியவற்றை இப்புதினம் மிகையின்றி எதார்த்தமாகப் பதிவுசெய்திருக்கின்றது.

    படைப்பாளிகள் பலரும் கவனிக்கத் தவறும் அல்லது குறிப்பிட மறந்துவிடும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களின் துணிவையும் இடுக்கண் கண்டு அழியாத மனவுறுதியையும் இப்புதினத்தில் கார்க்கி பதிவுசெய்துள்ளமை பாராட்டுக்குரியது.

    புதினத்தின் இறுதியில் அரசாங்கத்துக்கெதிரான தன்னுடைய புரட்சிச் செயற்பாடுகளுக்காகப் பாவெலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றது. மகனின் மரணம் அந்தத் தாயை நொறுக்கினாலும் அதற்காகச் சோர்ந்துவிடாமல் அப்புரட்சி இயக்கத்திலிருந்தபடியே சமூக நீதிக்காகத் தொடர்ந்து போராடுகின்றாள் அவள்.

    பாவெலும் அவனைப் போன்ற புரட்சியாளர் பலரும் செய்த தியாகத்தின் பயனாய் வருங்கால இரஷ்யாவில் சமூகநீதி மலரும்; உழைக்கும் ஏழைமக்களுக்கு நற்பொழுது புலரும் எனும் நம்பிக்கையை விதைத்து நிறைவுறுகின்றது இப்புதினம்.

    தமிழ் உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் இப்புதினம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்புக்களில் திரு. தொ.மு.சி. இரகுநாதன் அவர்களுடையது குறிப்பிடத்தக்க ஒன்று.

    தன்வரலாற்றுப் புனைவு நூல்கள்

    1. என் குழந்தைப் பருவம்: 1913இல் வெளிவந்த இந்நூலில் தம்முடைய தாய், பாட்டி, மாற்றாந் தகப்பன் ஆகியோருடனான தமது உறவு, வறுமை மிகுந்த இளமை வாழ்க்கை, அக்கம்பக்கத்துச் சிறார்களுடனான நட்பு, பள்ளிநாட்கள், புரட்சி இயக்கத்துடனான தம் தொடக்க காலத்தொடர்பு ஆகியவை குறித்த நினைவுகளைப் பதிவுசெய்திருக்கின்றார் கார்க்கி.

    2. இவ்வுலகில்: 1915இல் வெளியான இந்நூல் கார்க்கியின் பதின்மப் பருவம், அவர் செய்த சிறுசிறு வேலைகள், சந்தித்த மனிதர்கள், இரஷ்யாவின் பல பகுதிகளில் அவர் வாழ்ந்த வாழ்க்கை, புரட்சி இயக்கத்துடனான அவரின் நீடித்த தொடர்பு, சமூகத்தில் தமக்கென ஓர் இடத்தைப் பெறுவதற்கான அவருடைய போராட்டம் ஆகியவற்றை ஆவணப்படுத்தியிருக்கின்றது.

    3. என் பல்கலைக்கழகங்கள்: கார்க்கியின் தன்வரலாற்றுப் புனைவு நூல்கள் வரிசையில் இறுதி நூலான இது 1925இல் வெளிவந்தது. இதில் தாம் ஓர் எழுத்தாளராகச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டமை, பிற எழுத்தாளர்களுடனான நட்பு, உலகின் பல நாடுகளுக்கும் பயணித்தமை, இலக்கியம், பொதுவுடைமை குறித்த தம் விமர்சனப் பார்வை, ஓர் எழுத்தாளனின் சமூகக் கடமை, தாம் இரஷ்யாவிலிருந்து வெளியேறி இத்தாலியில் குடியேறியமை எனப் பல்வேறு விசயங்களைப் பேசுகின்றார் கார்க்கி.

    கார்க்கியின் தன்வரலாற்று நூல்கள் இரஷ்ய மாணவர்களுக்கு இலக்கிய வகுப்புகளில் இன்றும் கற்பிக்கப்படுவது இவற்றின் தனிச்சிறப்பையும் இலக்கியத் தரத்தையும் புலப்படுத்துகின்றன.

    கார்க்கியின் அரசியல் வாழ்வும் சந்தித்த சிக்கல்களும்

    இலக்கிய ஆளுமையாக மட்டுமின்றித் தொடக்க காலம் முதலே ஜார் மன்னராட்சிக்கு எதிரான புரட்சியில் இரஷ்ய சமூக சனநாயகத் தொழிற்கட்சியின் (The Bolshevik Party) சார்பில் ஈடுபட்ட போராளியாகவும் விளங்கினார் மாக்சிம் கார்க்கி. 1917இல் போல்ஷெவிக்ஸ், விளாடிமிர் லெனின் (Vladimir Lenin) தலைமையில் மன்னராட்சிக்கு எதிராக நடாத்திய புரட்சியிலும் பங்கேற்றார் அவர். அவ் ஆண்டின் அக்டோபர் புரட்சிக்குப் பின் ஜார் மன்னராட்சி வீழ்ந்துபட்டது.

    மகாகவி பாரதிகூட இப்புரட்சியின் வெற்றியைக் கொண்டாடி,

    ”மாகாளி பராசக்தி உருசியநாட்
       டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே
    ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி
       கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்” என்று பாடியிருப்பதை நாம் நினைவுகூரலாம்.

    அதன்பின்னர் லெனின் தலைமையில் போல்ஷெவிக்குகளின் ஆட்சி இரஷ்யாவில் ஏற்பட்டது. தொடக்கத்தில் கார்க்கிக்கும் லெனின் அரசாங்கத்துக்குமிடையிலான உறவு சுமுகமாகவே இருந்தது. எனினும், படைப்பாளிக்குரிய படைப்புச் சுதந்திரத்தோடு கார்க்கி எழுதியவை லெனின் அரசாங்கத்தால் தணிக்கை செய்யவும் தடைசெய்யவும் பட்டதனால் 1921வாக்கில் லெனினுக்கும் கார்க்கிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. கார்க்கி தம்முடைய போக்கை மாற்றிக்கொள்ளாததால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்; அவரின் செயற்பாடுகள் முடக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரஷ்யாவைவிட்டு வெளியேறி இத்தாலியில் குடியேறினார் கார்க்கி. 1932இல், அப்போது இரஷ்யாவின் தலைமைப் பொறுப்பிலிருந்த, ஜோசப் ஸ்டாலினின் அழைப்பின் பேரில் இரஷ்யாவுக்குத் திரும்பினார் அவர். அதனைத் தொடர்ந்து இரஷ்ய எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக மாக்சிம் கார்க்கி நியமிக்கப்பட்டார்; அவர் பிறந்த இடமான நிஸ்னி நவ்கரோட், ’கார்க்கி’ எனப் பெயர்மாற்றம் பெற்றது.

    ஆனால், ஸ்டாலினுக்கும் கார்க்கிக்குமான உறவும் நன்முறையில் தொடரவில்லை. ஸ்டாலினின் எதேச்சாதிகாரப் போக்கையும் அவருக்கெதிரான கருத்துக்களை வெளியிடுவோரை முகாம்களில் (Gulag camps) அடைத்துச் சித்திரவதை செய்யும் அவரின் முறையற்ற நடவடிக்கைகளையும் தம் எழுத்துக்களில் கார்க்கி கடுமையாக விமர்சித்தார். எனவே, மீண்டும் அவரின் எழுத்துக்கள் தணிக்கைக்கும் தடைக்கும் உள்ளாயின.

    கார்க்கியின் மரணம்

    1936ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிமோனியா காரணமாக மருத்துவ சிகிச்சையில் கார்க்கி இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 18ஆம் நாள் அவரின் மரணம் நிகழ்ந்திருக்கின்றது. அம் மரணம் ஐயத்திற்குரிய ஒன்றாகவும் ஸ்டாலினுக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடுகள் அதிகரித்துவிட்ட நிலையில் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் நிகழ்த்தப்பட்ட ஒன்றாக அஃது இருக்கலாம் என்றும் ஊகங்கள் நிலவுகின்றன. இன்றுவரை விடைகாண முடியாத மர்மமாகவே அது நீடிக்கின்றது.

    அவர் மரணத்தையறிந்து, இரஷ்ய மக்களும் கார்க்கியின் உலகளாவிய வாசகர்களும் படைப்புலக நண்பர்களும் பெருந்துயருற்றனர். அவரின் சவ ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்; அவரின் இலக்கிய, சமூக, அரசியல் பங்களிப்புகள் குறித்த விவாத அரங்குகள் பலவிடங்களிலும் நடத்தப்பட்டன.

    சோசலிச எதார்த்தவாதத்தின் பிதாமகராகக் கருதப்படும் (Father of socialist realism) மாக்சிம் கார்க்கியின் சிந்தனைப்போக்கும், எழுத்துக்களின் தாக்கமும் உலகம் முழுதுமுள்ள எழுத்தாளர்கள் பலரிடமும் காணப்படுகின்றன. சமூகநீதிக்கும் பொதுவுடைமைக்கும் பாடுபட்டவராகவும், தொழிலாளர்களின் நண்பராகவும், காலத்தால் அழியாத அமர இலக்கியங்கள் பல படைத்த எழுத்தாளராகவும் உலக மக்களால் என்றும் நினைவுகூர்ந்து போற்றப்படுவார் மாக்சிம் கார்க்கி.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://en.wikipedia.org/wiki/Maxim_Gorky.
    2. https://www.rbth.com/arts/2014/07/15/the_final_days_of_russian_writers_maxim_gorky_36685
    3. https://theculturetrip.com/europe/russia/articles/maxim-gorky-at-150-12-things-you-need-to-know-about-the-russian-writer/
    4. https://www.hindutamil.in/news/blogs/37091-10.html
    5. https://digital.janeaddams.ramapo.edu/items/show/4942
    6. https://www.britannica.com/biography/Maxim-Gorky

     

    Share