ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 8
மீனாட்சி பாலகணேஷ்
முருகப்பெருமான் மீதான இன்னும் சில பிள்ளைத்தமிழ் நூல்களின் நயங்களைப் பார்ப்போமா?
4. காரைநகர் பயிரிக்கூடல் சுப்பிரமணியசுவாமி பிள்ளைத்தமிழ்
இப்பிள்ளைத்தமிழ் அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவரால் இயற்றப்பட்டது. 1987ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இது கடற்புற ஊராகிய காரைநகரின் நடுவே அமைந்த பயிரிக்கூடல் எனும் தலத்தில் நாவல் மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு அமைந்திருக்கும் கோவிலில் எழுந்தருளி பக்தர்கட்கு அருள்புரிந்து வரும் ஸ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானைக் குழந்தையாகப் பாவித்துப் பாடிய நூலாகும்.
பிள்ளைத்தமிழின் இலக்கணத்திற்கேற்ப பத்துப் பருவங்களால் பத்துபாட்டுகளைக் கொண்டு பாட்டுடைத்தலைவனாம் முருகப் பெருமானை வழுத்திப் பாடியுள்ளார் புலவர்.
தாலப் பருவத்து ஒரு பாடல் அழகான தொன்மங்களை விளக்குகிறது. பார்க்கலாமே!
குதிரை வாங்கச் சென்ற மணிவாசகரை ஈர்த்துக் குருந்தமரத்தடியில் அமர்ந்து தனிப்பெரும் குருவாய் அவருக்கு ஞானம் கொடுத்த சிவபிரானுக்கு மதுரமான பிரணவப்பொருளை அவர் செவிக்கு இனிமையாக உரைத்த குருமணி முருகனாவான். வாழ்வை வெறுத்து வானளாவிய திருவருணைக் கோபுர மீதிருந்து குதித்த அருணகிரிநாதரைக் கையிற்றாங்கிக் காப்பாற்றி, “சும்மாவிரு, சொல்லற,” எனப் புகன்ற ஆறுமுகத்தவன் அவன். பயிரிக்கூடலிலுறை முருகனே தாலோ தாலேலோ என்பது பொருள்.
குதிரைக் காகப் பவனிவரும்
கோல வமைச்சன் தனையீர்த்துக்
குருந்தின் கீழே இருந்துதனிக்
குருவாய் ஞானம் கொடுத்தவர்க்கு
மதுரப் பொருளைச் செவியுவக்க
………………………………………
எடுத்துச் “சும்மா விரு” என்ற
ஒருமூன் றருண முகத்தானே
…………………………………..
முதல்வா தாலோ தாலேலோ.
இன்னுமொரு பாடலைக் காணலாமா?
ஒரு அம்புலிப்பருவப்பாடல். குழந்தை முருகனைப் பலவிதமான பழங்களாக உருவகித்துப் பாடுகிறார்.
நமச்சிவாயப் பொருளான நல்லபழம்; ஆனைமுகன் கையில் தாங்கும் பழம். நடராசபதியான சிவபிரான் உவந்திடும் பழம்; உபாசனை செய்யும் அடியார்கள் சுவைக்கும் பழம்; இமயமலை அழகி, கார்த்திகைப் பெண்டிர் கௌரி, சூலினி, இரட்சகி, சங்காரி, ஜனனி, இலிங்கபூஷணி, பராசத்தி ஆகியோர் பாலூட்டியருளும் இன்பக் குழந்தைப்பழம், சமய தத்துவாதீத தனிப்பழம், சதுர்மறை தந்த பழம், கலைத்தேன் பழம், பழமுதிர்சோலை அழகராய் நின்ற பழம், சண்முகப்பழமுமிவனே, இவன்ய்டன் அம்புலீ ஆடவாவே என்கிறார்.
நமசிவயப் பொருளான நல்லபழம் ஆனைமுகன்
நயந்துகை தாங்கும்பழம்
நடராச பதியுவந் திடுபழம் உபாசிக்கும்
…………………………..
சமயதத் துவாதீத தனிப்பழம் சதுர்மறை
தந்தபழம் கலைத்தேன்பழம்
………………………………………….
ஆனந்த வீடுதரும் ஞானக் குழந்தையுடன்
அம்புலீ யாடவாவே.
இன்னும்பல அருமையான பாடல்கள் உள்ளன.
5. சிவசுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்
பறாளை விநாயகப் பெருமான் கோயிலின் வடக்குப் புறமாக அமைந்தது இந்த சிவசுப்பிரமணியர் கோயில். இப்பெருமான்மீது புலவர் வை. க. சிற்றம்பலம் அவர்களால் 1997-ல் இயற்றப்பட்டதே இப்பிள்ளைத்தமிழ்.
பருவத்திற்கு ஒரேயொரு பாடலால் அமைந்த அருமையான பிள்ளைத்தமிழ் இது. ஒரே பாடல் தான் எனினும் சொன்னயமும் பொருணயமும் ஒவ்வொரு பாடலிலும் சிறந்து விளங்குகிறது. காப்புப் பருவத்து ஒரே பாடல் திருமால், சிவபிரான், சிவகாமியம்மை, ஐங்கரன், மற்றும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப மற்ற தெய்வங்கள் அனைவரையும் வாழ்த்தி குழந்தையைக் காக்க வேண்டுகிறது.
செங்கீரைப்பருவத்தின் பாடலொன்று மிக அருமையான பொருத்தமான கருத்துக்களைக் கொண்டிலகுகின்றது. குழந்தை முருகன் சங்குவளையணிந்த கைகளை ஊன்றியபடி செம்பவள வாயில் கனிந்த முறுவலுடன் உல்லாசமாக, கால்களில் கிண்கிணியாட, சிலம்பாடத் தாளூன்றித் தவழுகின்றான். கூடவே ‘கீர் கீரெ’னப் புரியாத மழலை பேசுகிறான். அந்தப் பருவத்து, ஐந்தாறுமாதக் குழந்தைகளின் மொழி நமக்குப் புரியாத மொழி. அதனைக் ‘கீர்’ என்பார்கள். (நல்ல சொற்களைக் கூறுபவர் நல் + கீரர்= நக்கீரர்). இத்தகைய சொற்களின் முன்பு ஒரு மங்கலச் சொல்லையும் சேர்த்துச் செங்கீர், செங்கீரை என்பர். அதனாலும் இப்பருவம் செங்கீரைப்பருவம் எனப்படும். இத்தகைய புரியாத மழலை, “எங்கு நீ, அங்கு நான் என்றும் உன்னுடனிருப்பேன்,” என முருகன் கூறும் சொற்களாக அடியாருக்கு, ஈண்டு புலவருக்குத் தோன்றியுள்ளது மிக அருமை.
சங்குவளைக் கரமூன்றிச்
செம்பவள வாய்கனியச்
சல்லாப வுல்லாசமாய்ச்
சார்ந்தகிண் கிணியாடச்
சூழ்ந்தமணிச் சிலம்பார்ப்பத்
தாளூன்றிக் கீர்கீரென
எங்குநீ அங்குநான்
என்றபடி மழலைமொழி
இசைத்திட அடியெடுக்கும்
…………………………………………
அடுத்து சிறுதேர்ப்பருவப் பாடல். அற்புதமான இறைத்தத்துவத்தை முன்வைக்கிறது. வான், மண், பாதாளம் ஆகிய மூவுலகங்களும் கொண்டு வடிவமைக்கப்பட்டது இப்பிரபஞ்சம் எனும் திருத்தேர். அதன் வட்டமான நடுப்பீடமே பிரணவக்குறியாகும். அதில் வந்தமர்ந்து இருப்பவன் முருகப்பெருமான். அவனுக்கு அடியவர்கள் தங்கள் வினைகள் தீருமாறு வேண்டிக்கொண்டு, தேங்காய் உடைத்து, வேதங்கள் எனும் புரவிகளை ஓட்டுவித்து வீதிவலம் கொண்டு செல்கிறார்கள். அவனும் நானிருக்க பயமேன் என்று கூறி நனவிலும் கனவிலும் நற்காட்சி காட்டித் துணை நிற்கிறான். அத்தகைய முருகனைச் சிறுதேருருட்டியருள வேண்டும் இனிய பாடலிதுவாகும்.
வானுலகு மண்ணுலகும்
வல்லபா தலவுலகும்
வடிவமையுந் திருத்தேரிலே
வட்ட நடுப் பீடமே
பிரணவக் குறியாகி
வந்ததனில் வீற்றிருந்து
பானிலவு திருநீற்றின்
அடியவர்தன் வினையோடப்
பணிந்துதேங்கா யுடைத்து
பகர்வேதப் பரிகடவி
அரிய மணி வீதிவரும்
பாலகும ரேச முருகா
………………………………..
கருத்தாழமும் கொண்ட பாடல்களைக் கொண்ட சிறந்த நூல்.
6. திருநல்லூர் திருமுருகன் பிள்ளைத்தமிழ்
நல்லை எனப்படும் திருநல்லூரானது ஆறுமுக நாவலர் பெருமானின் ஊராகும். இது முருகப்பெருமான் விரும்பியுறையும் சிறந்த ஒரு பதியாகும். திருநல்லூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் இந்நூல் பண்டிதர் சி. கார்த்திகேசு (சேந்தன்) எனும் புலவரால் இயற்றப்பட்டது. இவர் சேந்தன் குழந்தைக்கவிகள் எனும் நூலில் பிள்ளைகட்குரிய பலவற்றையும் பாடியுள்ளார். நல்லை நாற்பது எனும் நூலில் நல்லூர்க் கந்தன்மீது அழகான கீர்த்தனங்களைப் பாடியுள்ளார். இப்பிள்ளைத்தமிழ் நூலும் பல நயமிகுந்த பாடல்களுடன் பொலிவதனைக் கண்ணுறலாம்.
அம்புலிப்பருவப் பாடலொன்றில் முருகனின் சிறப்புகளை அழகுற எடுத்தோம்புகிறார் புலவர். இது தானம் எனும் உபாயத்தில் சேருமெனக் கொள்ளலாம். முருகனின் சிறப்புகளைக் கூறி, இத்தகைய பெருமை படைத்த எம் சிறு முருகனுடன் ஆடவா என விளிக்கும் கூற்றாக அமைந்த பாடல்.
பலகோடி சென்மங்களை எடுத்து எடுத்துக் களைத்தாலும் பார்ப்பதற்கு அரிதானவன் எம் முருகன். பக்தியினால் மட்டுமே அவனையடையலாம்; மற்றபடி பற்றுதற்கு அரிதானவன். நால் கல்நெஞ்சத்தவர் ஆயினும் உள்ளம் கசிந்துருகிக் கந்தா எனக்கூறி, கண்ணீர் பொழிந்து நிற்பதனைக் கண்டால் விரைந்து தனது கருணை எனும் மழையைப் பொழிபவன். பொல்லாத சூரபதுமனின் சுற்றம் உறவு அனைத்தையும் அழித்துப் பொடியாக்கினவன். பின்பு அவன் குற்றங்களை மன்னித்து உயிர்களக் காத்த உயர்ந்த தயாளன். இப்படிப்பட்ட அல்லல் அகற்றிடும் முருகனுடன் விளையாட வாராய் அம்புலியே!அணிநல்லூர் முருகனுடன் ஆடவாராய் அம்புலியே!
பல்கோடி சென்மம் எடுத்தெடுத் திழைத்தும்
பார்ப்பதற் கரிதானவன்
பக்தியாம் ஒன்றினால் பற்றலாம் அன்றிப்
பற்றுதற் கரிதானவன்
கல்லெனும் நெஞ்சினர் ஆயினும் கசிந்துநாம்
கந்தா எனக்கனிந்து
……………………………………………………
பொறுத்தவன் பிழையினுக் கிடுக்கண் தவிர்த்து
பொன்னுயிர் காத்த மேலோன்
………………………………………………..
அம்புலீ ஆடவாவே.
சிற்றில் சிதையேல் என வேண்டும் சிறுமியர் பலப்பல கதைகளை முன்வைக்கின்றனர். புலவரின் கற்பனைவளம் வியக்கத்தக்கதாம். அவற்றுள் ஒன்று இந்தக்கதை! ‘வள்ளியெனும் குறத்தி தினைமாவையும் தேனையும் பிசைந்து உனது வாயில் ஊட்ட, உண்டு நீ களித்ததையும், பின் மானையொத்த அவளுடைய எச்சிலை உண்டு களிக்கும் அழகையும் மற்றும் இவையனைத்தையும் கண்டு மற்றவர்களுக்கு அதனைக் கூறினோமோ? இல்லையே! கூனற்பிறை நெற்றியை உடைய பல சிறுமியர் கூடி, மண்ணைக் குழைத்துச் சேர்த்து, பேசிக்கொண்டு பாடுபட்டுக் கட்டிய சிறிய இவ்வீட்டை நீ உன் காலால் சிதைக்கவேண்டா! அடியாரின் குறைகளைத் தீர்க்கும் மருந்தானவன் அல்லவோ நீ! சிற்றிலைச் சிதைக்காதே’ என வேண்டுகின்றனர்.
கானக் குறத்தி வள்ளியெனும்
கன்னி உவந்து தினைமாவை
கமழுந் தேனிற் பிசைந்துனது
கனிவா யூட்டக் களித்தநீயும்
மானொத் தவளின் மிச்சிலையும்
வாயிற் சுவைக்கும் அழகினையும்
மகிழ்ந்து சுவைத்த ததுகண்டும்
மற்றோர்க் கதனை விண்டோமோ
…………………………………………
வான முயர்புகழ் திருநல்லூர்
வண்ணா சிற்றில் சிதையேல்
மருவு மடியர் பிணிதீர்க்கும்
மருந்தே சிற்றில் சிதையேலே.
ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களில் இவ்வாறு பலப்பல சுவையான பாடல்கள்!
(வளரும்)