குறளின் கதிர்களாய்…(452)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(452)
அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புதல் தேற்றா தவர்.
-திருக்குறள் – 626 (இடுக்கண் அழியாமை)
புதுக் கவிதையில்…
செல்வம் வந்து
சேர்ந்த போது,
பெற்றோம் இதுவெனப்
பற்றுடன் அதனைப்
பிறர்க்குக் கொடுக்காமல்
பேணிப் பாதுகாக்கும்
இயல்பே இல்லாதோர்,
வறுமை வந்து
வாட்டும் போது
இழந்தோம் என்றே
இடர்ப்பட மாட்டார்…!
குறும்பாவில்…
செல்வம் தம்மிடம் சேரும்போது
பெற்றோமெனப் பற்றுடன் சேர்த்து வைக்காதோர்,
வறுமையில் இல்லையென இடர்ப்படார்…!
மரபுக் கவிதையில்…
தேடிச் செல்வம் வரும்போதில்
திரண்ட ஆசை கொண்டேதான்
நாடி யதன்மேல் பற்றுடனே
நம்பிக் காக்க விருப்பில்லார்,
வாடி நிற்க வைத்துவிடும்
வறுமை வந்த போதினிலும்
கூடித் துன்பம் வந்தாலும்
கொடுமை யென்றே இடர்ப்படாரே…!
லிமரைக்கூ…
செல்வத்தின் மீதே பற்று
கொண்டது சேரும்போது விரும்பாதோர் வருந்தாரே
வறுமையில் இடரினைப் பெற்று…!
கிராமிய பாணியில்…
போவாத போவாத
தொவண்டு போவாத,
துன்பத்தக் கண்டு
தொவண்டு போவாத..
காசுபணம் சேரும்போது
அதுல ஆசவச்சி
அடுத்தவுங்களுக்கும் குடுக்காம
சேத்து வைக்கக்
கொஞ்சமும் விரும்பாதவன்,
வறும வந்து
துன்பம் வந்தாலும்
தொவண்டு போகமாட்டான்..
அதால
போவாத போவாத
தொவண்டு போவாத,
துன்பத்தக் கண்டு
தொவண்டு போவாத…!