இடுக்கண் கண்டு அஞ்சாது மிடுக்காய் வாழ்வோம்!

-மேகலா இராமமூர்த்தி
ஒரு நாணயத்திற்குத் தலை, பூவென இரு பக்கங்கள் இருப்பதுபோல் மானுட வாழ்க்கையும் இன்பம் துன்பம் எனும் இரு பக்கங்களைக் கொண்டதாகும். இவற்றில் எது எப்போது வரும் என்பது ஊகிக்க இயலாத ஒன்றாகும்.
2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா கொடுந்தொற்றுகாலச் சூழலை இதற்குத் தக்கதோர் சான்றாய் எடுத்துக் காட்டலாம். இயல்பாய்ச் சென்றுகொண்டிருந்த மனித வாழ்க்கை திடீரென்று முடங்கி, அனைவரும் வீடடங்கி இருக்கும் நிலையை ஒரு தீநுண்மி ஏற்படுத்தும் என்று யாரும் கனவிலும் கருதவில்லை; ஆனால், அப்படியொரு சூழல் ஏற்பட்டது.
அத்தொற்றின்மீது ஏற்பட்ட அச்சத்தினாலும், அதனைக் கையாளுவது எப்படி என்பது தெரியாத காரணத்தினாலும் சில காலம் செய்வதறியாது திகைத்துப்போயிருந்த மாந்த இனம், அத்தொற்றைத் தடுக்கும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்ததினால் அதிலிருந்து மீண்டுவருவதைக் காண்கின்றோம்.
இவ்வாறு வாழ்வில் நேரிடும் எதிர்பாராத இன்னல்களையும் அவற்றால் ஏற்படும் இழப்புகளையும் கையாளுவதற்கும், அவற்றிலிருந்து மீண்டெழுவதற்கும் மக்களுக்குச் சில அடிப்படைப் பண்புகள் அவசியமாகின்றன. அவற்றை நம் சங்கப் பாடல்களும், வான்புகழ் வள்ளுவரின் வள்ளுவமும் விளக்கி மக்களுக்கு வழிகாட்டியிருக்கின்றன.
பக்குடுக்கை நன்கணியார் என்ற சங்கப்புலவர் ஒரு தெருவின் வழியாய்ச் சென்றுகொண்டிருந்தார். அங்கே ஒரு வீட்டில் சாவு நிகழ்ந்ததற்கு அடையாளமாய் நெய்தல் பறை ஒலித்துக்கொண்டிருந்ததனைக் கேட்டார். இன்னும் சற்றுத் தொலைவு சென்றார்; மற்றொரு வீட்டில் திருமணத்திற்குரிய மங்கல முழவு ஒலித்துக்கொண்டிருந்தது.
கணவனோடு மகிழ்ந்திருக்கும் பெண்கள் மலரணிந்து மங்கலமாய்க் காட்சியளிப்பதையும், கணவனைப் பிரிந்த பெண்கள் தங்கள் மைதீட்டிய கண்களில் நீர்பெருக வருந்தியிருப்பதையும் கண்டார் புலவர். ஒருபுறம் இன்பம் மறுபுறம் துன்பம் எனக் கலந்திருக்கும் வகையில் இவ்வுலகைப் படைத்து, சிலரை அழுது அரற்றவும் வேறுசிலரை மகிழ்ச்சியில் திளைக்கவும் வைத்தவன் பண்பிலாக் கொடியவனாய்த் தோன்றினான் புலவருக்கு.
இந்த முரண்பட்ட நிலைக்கு என்ன தீர்வு என்று ஆழ்ந்து சிந்தித்தவர், உலகத்தின் இயற்கை இதுதான்; இதனை மனிதர்களால் மாற்றிவிட முடியாது எனும் உண்மையை உணர்ந்தார். ஆதலால், இவ்வுலகில் வாழ்பவர்கள் இன்னாத தன்மை கொண்ட அதன் இயல்புணர்ந்து, அதற்கிடையிலும் இன்பமாய் வாழ்வதொன்றே அதற்கான தீர்வாய் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அதனைத் தம் பாடலிலும் பதிவுசெய்தார்.
ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னாது அம்மஇவ் வுலகம்
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே. (புறம் – 194)
வாழ்வில் இடுக்கண்ணும் இன்னலும் ஏற்படும்போது அவற்றை எதிர்கொண்டு வெல்வதெப்படி என்பதனை விளக்கி வள்ளுவப் பேராசான் ‘இடுக்கண் அழியாமை’ என்றோர் அதிகாரத்தையே படைத்துள்ளார்.
”தடை நேர்கின்ற இடங்களிலெல்லாம் அதற்காகச் சோர்ந்துவிடாமல் வண்டியை விடாமுயற்சியோடு இழுத்துச்செல்லும் எருதைப்போல், துன்பம் வந்த காலத்தில் அதற்காகத் துவண்டுவிடாமல் தொடர்ந்து முயல்பவனுடைய துன்பமானது துன்பமடைவது உறுதி” என்கிறார் வள்ளுவர்.
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து. (குறள்: 624)
”செல்வம் வந்தபோது அதன்மீது பற்றுக்கொண்டு அதனைக் காத்தறியாதவர்கள், அச்செல்வம் தம்மைவிட்டு நீங்கித் தாம் வறுமையுற்றபோது ’செல்வத்தை இழந்தோமே’ என்று அல்லற்படுவரோ?” என்று வினவி நம்மைச் சிந்திக்க வைக்கின்றார் மற்றொரு குறளில்.
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர். (குறள்: 626)
’செல்வத்தின் இயல்பு சகடக்கால் போல் உருண்டு செல்வதாகும். அஃது ஓரிடத்தில் நிலைத்து நில்லாது’ என்கின்ற நாலடியார் பாடலையும் இங்கே நாம் இணைத்துப் பார்க்கலாம்.
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும். (நாலடி – 2)
இடுக்கண் வந்துற்றபோது நாம் உறுதியிழக்காமல் வாழ்வதற்குக் கைக்கொள்ள வேண்டிய மற்றொரு பண்பையும் வலியுறுத்துகின்றார் வள்ளுவர். அதுதான் இன்பத்தை விரும்பாது, இடும்பை மானுட வாழ்வின் இயல்பு என்றுணர்ந்து அதனை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம்.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். (குறள் – 628)
இன்பநாட்டமே மானுட இயல்பென்பதனால் இடும்பையை வாழ்வின் பகுதியாக ஏற்றுக்கொள்ளும் பண்பென்பது எல்லோர்க்கும் எளிதில் வாய்த்துவிடாது. எனினும், அறிவிலும் வாழ்வியல் அனுபவத்திலும் தேர்ந்தவரான ஐயன் வள்ளுவர் உரைக்கும் இவ்வுயர் பண்பை நாம் வளர்த்துக்கொள்ள முயல்வது நமக்கு நன்மை பயக்கும்.
உலக வாழ்வில் ஈடுபட்டாலும், தாமரையிலை நீர்போல் அதில் ஒட்டாமல் வாழ்வோர் துன்பப்படுவதில்லை; துயருறுவதில்லை. இதையே ’ஸ்திதப் பிரக்ஞ’ மனநிலை என்றுரைக்கின்றது பகவத் கீதை.
எனவே, எதிர்பாராத இடுக்கண்ணும் இழப்பும் ஏற்படும்போது, பெறுவதைப் போலவே இழப்பதும் மனித வாழ்வின் இயல்பே எனும் பக்குவத்தையும், தோல்விகள் ஏற்படும்போது துவளாது, பகடுபோல் அவற்றை எதிர்கொண்டு, வெல்லும் ஊக்கத்தையும் பெற்றோமென்றால் கலக்கமுற்றிராது வாழலாம்; மற்றையோர்க்கும் நல்வழிகாட்டியாய்த் திகழலாம்.