சூளாமணியில் திருநர் சித்திரிப்பு
முனைவர் கி. அய்யப்பன்
கெளரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை,
உ. நா. அரசினர் கல்லூரி, பொன்னேரி- 601204
பேசி: 9962660279
மின்னஞ்சல்: agniiyyappan@gmail.com
முன்னுரை
தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி சமண சமயக் காப்பிய நூலாகும். இக்காப்பிய நூலைச் சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இயற்றினார். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என அறியலாம். ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே சூளாமணி எனும் இக்காப்பியநூல். இக்காப்பிய நூலில் 12 சருக்கங்கள் 2131 பாடல்கள் உள்ளன. இக்காப்பியம் விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது. இக்காப்பிய நூலில் சமூகத்தில் மாற்றுப்பாலினத்தவரான திருநரைப் (திருநங்கை, திருநம்பி) பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.
ஆய்வு முன்னோடிகள்
தமிழில் திருநர் தொடர்பான ஆய்வில் முனைவர் வெ. முனிஷ், திருநங்கை பிரியாபாபு, முனைவர் மு. அருணாசலம், முனைவர் கி. அய்யப்பன் முதலிய பலர் முன்னோடிகளாகத் திகழ்கின்றனர்.
பால் மருள் சொற்கள்
உலக மனித உயிர்கள் ஆண், பெண் எனும் இரு பால் பகுப்பில் அமைவது இயல்பாகும். இவ்வாறின்றி, அருகி, மாறுபட்டமையும் மானுடப் பிறவியும் உண்டு. இதனைப் பால் மருள் அல்லது உறுப்பு மருள் எனக் கூறலாம். மன ஊனமாக அறிவு மருள் அமைய உடல் ஊனமாகப் பால் மருள் என்று கூறும் பேராசிரியர் அன்னிதாமசு, மேலும் “அண்ணகன், அண்ணாளன், அல்லி, அலி, அழிதூஉ, ஆண்பெண்ணல்லாதவன், ஆணலி, இடபி, இப்பந்தி, கிலிபம், கிலீபம், கிலீவம், கோஷா, சண்டம், சண்டன், சிகண்டி, தூவரன், நபுங்கிஷம், நபுஞ்சகம், நபுஞ்சகன், நபுஞ்சம், நபும்ஸகம், நாமர்தா, பண்டகன், பெட்டையன், பெண்டகம், பெண்டகர், பெண்டகன், பெண்டர், பெண்டு, பெண்ணலி, பெண்ணைவாயன், பேடர், பேடர்கள், பேடன், பேடி, பேடியர், பேடு, பேடுகள், பேதை, மகண்மா, மருள், வசங்கெட்டவன், வண்டரன், வருடவரன், வறடன்”(அன்னிதாமசு, 2004: 117) முதலிய பால் மருள் சொற்களையும் அடையாளம் காட்டுகிறார். இத்தகையவர்கள் சமகாலத்தில் திருநர் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர்.
பேடி+பேடன்= பேடு
பால் திரிந்த மக்களும் அவர்களைக் குறிக்கும் சொற்களும் பின்வருமாறாம். “ஆண்மை திரிந்து பெண்மை கொண்டவன் பேடி; பெண்மை திரிந்து ஆண்மை கொண்டவள் பேடன்; இவ்விருவருக்கும் பொதுப்பெயர் பேடு. இம்மூவர்க்கும் பலர்பால் பெயர் முறையே பேடியர் பேடர் பேடுகள் என்பன. புணர்ச்சி உணர்ச்சியில்லாததும் பால் காட்டும் உறுப்பால் ஆணும் பெண்ணுமல்லாததும் அலி. பேடி என்னும் பெயர் பேடிமார் பேடிகள் எனவும் பலர்பால் ஏற்கும்” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- சேனாவரையம், 1956: 7) என்று கழகப்பதிப்பின் குறிப்புரை கூறுகின்றது.
ஆணலி+பெண்ணலி= அலி
ஆண்மை திரிந்த பெயராவது பேடி. அச்சத்தி ஆண்மையிற் திரிந்தாரைப் பேடி யென்ப வாகலான். “தெய்வசிலையார் அலி மூவகைப்படும் என்கிறார். ஈண்டு அப்பெயர் பெற்றது அலி யென்று கொள்க. அலி மூவகைப்படும்: ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண்டன்மை இழந்ததூஉம், பெண்ணுறுப்பிற் குறைவின்றி பெண்டன்மைஇழந்ததூஉம், பெண்பிறப்பிற் தோன்றிப் பெண்ணுறுப்பின்றித் தாடிதோற்றி ஆண்போலத் திரிவதூஉமென. அவற்றுட் பிற்கூறியது ஈண்டுப் பேடி எனப்பட்டது” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- தெய்வசிலையார், 1929: 11). “பெண் தன்மையிலிருந்து பிறழ்ந்து ஆண் தன்மையை அதிகம் பெற்றவர்களை அலி என்ற சொல் குறிக்கிறது’ (முனிஷ், 2013: 60)) என்று கூறும் முனிஷின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஏன் எனில் அலி என்பவன், பெண்ணிலும் ஆணிலும் சேராத உறுப்பை உடையவன். இது ஆணலி, பெண்ணலி என இருவகைப்படும். ஆணுருவம் இருந்தால் ஆணலி எனவும், பெண்ணுருவம் இருந்தால் பெண்ணலி என்றும் சொல்வதுண்டு(sambasivampillai, 1931: 125). மேற்கண்டவற்றின் அடிப்படையில், பெண்தன்மையிலிருந்து பிறழ்ந்து ஆண் தன்மை அதிகம் பெற்றவர்களையே அலி என்று கூறும் முனிஷின் கருத்து சரியானவையாகத் தோன்றவில்லை.அவர்களை ஆணலி என்று கூறுவதே சரியானதாகும்.
அலி= பேடு
முன் சொல்லப்பட்ட அலி, பேடுக்கான விளக்கங்கள் அடிப்படையில் அலி, பேடு சொற்கள் ஒரே பொருண்மையைக் குறிப்பதாகவே உள்ளதைக் காணமுடிகிறது. ஆணலி+பெண்ணலி= பேடி+பேடன்= அலி,பேடு என்று கூறுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
அரவாணி- திருநங்கை
அரவாணி என்னும் பெயர் 12-05-1997 அன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பெயரை வைத்தவர் ஆர். இரவி அப்போதைய விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். திருநங்கை எனும் பெயர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்களால் 2006ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அரசியல் சார்ந்த நிலையில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் திருநங்கையர் என்னும் சொல்லை சமூகத்தில் அடையாளப்படுத்தினார்.
திருநர்
இப்பெயர்களும் மாறித் தற்போது ஆணாய்ப் பிறந்து பெண்தன்மை அதிகம் உள்ள பேடியரைத் திருநங்கை என்றும், பெண்ணாய்ப் பிறந்து ஆண்தன்மை அதிகம் உள்ள பேடரை திருநம்பி என்றும் அழைக்கின்றனர். திருநங்கை, திருநம்பி ஆகிய இருவரும் திருநர் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர். இச்சொல் 2010-2011 ஆம் ஆண்டுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
“திருநர்/Transgenderஎன்பவர்கள் தங்களது பிறப்பு ரீதியான பாலும், பாலினத்தன்மையும் மாறுபட்டதாக உணர்பவர்கள். திருநங்கை/Male To Female Transgender (MTF) என்பவர்கள் பிறப்பால் ஆண்பாலும், மன அளவில் பெண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாட்டை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள். இவர்கள் திருநரில் ஒரு பிரிவு. திருநம்பி/Female To Male Transgender (FTM) என்பவர் பிறப்பால் பெண்பாலும், மன அளவில் ஆண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாட்டை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள். இவர்கள் திருநரில் இன்னொரு பிரிவு’’ என்று ஓரினம் என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள இயலுகிறது. மேலும், விக்கிபீடியா, சிருஷ்டி மதுரை ஆகிய இணைய பக்கங்களும் திருநரைப் பற்றி பேசுகின்றன.
சூளாமணி காப்பியத்தில் திருநர்
திருநரை சூளாமணி காப்பியத்தில் 775, 1985- ஆவது பாடல்களில் அலி என்றும், 2118- ஆவது பாடலில் பேடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காப்பியத்தில் இந்த மூன்று பாடல்களில் மட்டுமே திருநரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுவதாக அறியலாகிறது.
பிற உயிரின் துன்பத்தைப் போக்காதவனின் ஆண்மை அலியின் அழகுக்கு ஒப்பானது
சூளாமணி காபியமனது பிற உயிர் துன்பப்படுவதைக் கண்டும் அத்துன்பத்தைக் களையாதவனுடைய ஆண்மையை அலி பெற்ற அழகுபோன்றது என்கிறது.
மன்னுயிர் வருத்தக் கண்டும்
வாழ்வதே வலிக்கு மாயின்
அன்னவ ணாண்மை யாவ
தலிபெற்ற வழகு போலாம் (சூளாமணி, 775)
இப்பாடல் ஒருவன், பிறவுயிர்கள் இன்னல் எய்துவதைக் கண்கூடாகக் கண்டும், அவ்வருத்தம் போக்க நினைக்காமல் தன் வாழ்க்கையைப் பேணுவதையே உறுதியாக இருப்பான் எனில், அப்படிப்பட்டவன் பெற்றுள்ள ஆண்மைத்தன்மை என்பது பேடி பெற்றுள்ள அழகுக்கு ஒப்பானது என்கிறது. அதாவது பிறவுயிர் துன்புறுங்கால் எமக்கென்னென் றிருப்போர் ஆண்மை பேடியின் அழகை ஒக்கும். (சூளாமணி, ப. 520) என்கிறது. ஆணிலிருந்து பெண்தன்மை பெற்ற அழகு என்று இப்பாடல் குறிப்பதால் இது திருநங்கையரைக் குறிப்பத்தாக அமைகிறது.
அலிப்பிறப்பு இயற்கையானது
சூளாமணி காப்பியத்தில் திருநர் பிறப்பு பற்றிச் சொல்லப்படுகிறது. இயற்கையில் உருவாகும் மருள், குருடு போன்ற ஊனப்பிறப்புகளில் அலிப்பிறப்பும் ஒன்று.
அண்ணை யலிகுரு டாதி யவர்களை
மண்ணுயர் ஞாலத்து மானிட ராகவைத்
தெண்ணுநர் யாருள ரெல்லா ….(சூளாமணி, 1985)
என்ற பாடலில் மருள் பேடு குருடு முதலிய பிறப்பினர் ஆகியவர்களை மண் திணிந்துயர்ந்த உலகத்தே மனிதர் என்று கருதுவார் யாரே இருக்கின்றனர்.(சூளாமணி, ப.1228) என்று கூறுகிறது.
மேற்காணும் சூளாமணி பாடல் இயற்கையில் உருவாகும் ஊனப் பிறப்புகள் என்று மருள், அலி, குருடுகளை அடையாளப்படுத்துவதைக் காணமுடிகிறது. இப்பாடலில் வரும் அலி என்னும் சொல்லுக்குப் பேடு என்று கழகப் பதிப்பின் உரைவிளக்கத்தில் கூறப்படுவதைக் காணமுடிகிறது. இதன் மூலமும் அலி, பேடு என்ற சொற்களை ஒரே பொருளை உணர்த்துவதற்குப் பயன்படுத்தலாம் என்பது தெளிவு. தற்காலத்தில் அலி, பேடு இரண்டு சொற்களையும் திருநர் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடமுடிகிறது.
திருநர் என்றால் கோழையா?
திருக்குறள், நாலடியார் போன்ற இலக்கியங்கள் திருநரை வீரமில்லாத கோழையானவர் என்ற பொருளில் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் சூளாமணி காப்பியம் திருநரை வீரமில்லாத கோழையானவர்கள் என்ற பொருளில் பதிவு செய்துள்ளதைக் காணமுடிகிறது.
ஈடிலர் வெகுளி யுள்ளிட்
டெண்மரை யெறியத் தீயுட்
பேடுவந் தொன்று பாய்ந்து
முடிந்தது ……(சூளாமணி, 2118)
இந்த பாடலில் “தமக்கு ஒப்பில்லாதவராகிய அச்சினம் முதலிய எண்மரைக் கொன்றவுடனே, ஒரு பேடி தன்மேல் விரைந்து வந்து போராற்றி இறந்தொழிந்து”(சூளாமணி, ப.1305 ). தமக்கு ஒப்பில்லாதவராக அதாவது தனக்கு ஒத்த வீரம் இல்லாத கோழையாக திருநரை பதிவு செய்வதால் இப்பாடலிலும் திருநங்கையரைப் பற்றிய பதிவாகவே காணமுடிகிறது.
இவ்வாறு சூளாமணி காப்பியத்தில் திருநர் குறித்த பதிவுகளைக் காணமுடிகிறது.
முடிவுரை
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சூளாமணி என்னும் இக்இக்காப்பிய நூல் சமணசமயக் கொள்கைகளைக் கொண்டதாக இருந்தாலும், இக்காப்பியம் தோன்றிய காலப் பின்புலத்தின் காரணமாகத் திருநர்கள் சமூகத்தில் மதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
சூளாமணி காப்பியமனது பிற உயிர் துன்பப்படுவதைக் கண்டும் அத்துன்பத்தைக் களையாதவனுடைய ஆண்மையை திருநர் பெற்றுள்ள அழகுக்கு ஒப்பானது என்றும், மருள், குருடு போன்று திருநர் பிறப்பும் ஒரு இயற்கைப் பிறப்புதான் என்றும் சொல்கிறது. மேலும், திருநர் வீரமற்ற கோழைகள் என்றும் கூறுகிறது.
பாடல் எண் 775-இல் அலி என்று வரும் சொல்லுக்கு உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீட்டில் அலியென்றே பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. ஆனால், கழகப்பதிப்பின் உரையானது அலி என்னும் சொல்லுக்கு பேடு என்று உரைவகுத்து விளக்குகிறது. இதன்மூலம் அலி, பேடு இரண்டும் ஒரே பொருளை உணர்த்தும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
பாடல் எண் 1985- இல் வரும் அலி எனும் சொல்லுக்கு உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீட்டில் பேடியென்று பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. ஆனால், கழகப்பதிப்பின் உரையானது அலி என்னும் சொல்லுக்கு பேடு என்று உரைவகுத்து விளக்குகிறது. இங்கு உ. வே. சாமிநாதையர் நூல் நிலையப் பதிப்பில் பயன் படுத்தப்படும் பேடி எனும் சொல் சரியானதாகத் தோன்றவில்லை. ஏனெனில், அலிப் பிறப்பு என்பது ஆண் பிறப்பிலும் பெண் பிறப்பிலும் நிகழும், இப்பதிப்பில் பேடி என்று கூறுவது ஆணிலிருந்து பெண்தன்மையைப் பெறுபவரை மட்டும் குறிக்கும். பாடல் எண் 2118- இல் வரும் பேடு எனும் சொல்லுக்கு கழகப்பதிப்பின் உரை பேடி என்று பொருள் கொள்கிறது. ஏனெனில் ஒரு பேடி தன்மேல் விரைந்து வந்து போர் செய்து இறந்தார் என்று கூறுவதின் மூலம் இங்கு ஆண்தன்மையிலிருந்து பெண்தன்மை உடைய ஒருவரைக் குறிக்கும் விதமாக வரும் இச்சொல்லைப் பேடியென்று சொல்வதே சரி என்று இக்கட்டுரையின் மூலமாக தெரிந்துகொள்ளமுடிகிறது.
துணைநூற் பட்டியல்
சூளாமணி மூலமும் உரையும், பாகம்,1, 2, கழக வெளியீடு. சென்னை,
சேனவரையம், தொல்காப்பியம்- சொல்லதிகாரம்,1956, கழக வெளியீடு, சென்னை.
சோமசுந்தரனார். பொ.வே, இராமசாமிப் புலவர். சு.அ.,(உரையாசிரியர்), 1970,
தெய்வசிலையார் (உரை), தொல்காப்பியம்- சொல்லதிகாரம்,1929, கரந்தை தமிழ்ச்சங்க பதிப்பு, கரந்தை.
முனிஷ்.வெ., 2013, காலந்தோறும் தமிழ் இலக்கணங்களில் மூன்றாம் பாலினம், சொல்லங்காடி, சென்னை.
ருக்மிணி தேவி(பதிப்பாசிரியர்), 1954, சூளாமணி, பாகம், 1, 2. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம். சென்னை.
http://orinam.net/ta/
http://ta.wikipedia.org/s/1due
Sambasivampillai, T.v., 1931, Tamil- English Dictionary, The Research Institute of Siddhar’s Institute of Science, Chennai.
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
‘சூளாமணியில் திருநர் சித்திரிப்பு’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடு
Ø ‘சூளாமணியில் திருநர் சித்திரிப்பு’ என்னுந் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையில் கட்டுரையின் மையக்கருத்து பற்றிய செய்திகள் இறுதி ஒரு பக்க அளவிலும் அது பற்றிய முன்னுரை ஏனைய பக்கங்களிலும் அமைந்திருப்பது சரியான அமைப்பாகத் தோன்றவில்லை. நெற்றிப் பரப்பில் திலகமாக இருக்க வேண்டிய முன்னுரை நெற்றியையே மறைத்துவிடுகிறது.
Ø திருநங்கை, திருநம்பி என்பவற்றுக்கான பலர்பாலாகத் ‘திருநர்’ என்று கட்டுரையாசிரியர் பெயர் சூட்டியிருப்பது செயற்கையானதொரு சொல்லாக்கமாகவே தோன்றுகிறது.
Ø ‘பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்’ என்னும் தொல்காப்பிய நூற்பாவை எடுத்துக்காட்டும் ஆசிரியர், ‘பெண்மைவிட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால், ஆண்மைவிட்டு அல்லது அவாவுவ பெண்பால் இருமையும் அஃறிணை அன்னவுமாகும்” என்னும் நன்னூல் நூற்பாவையும் சிந்தித்திருக்க வேண்டும்.
Ø ஆய்வுக்கட்டுரை ஒன்றில் கருதுகிறேன்’ என்பது போன்ற தற்சார்பான முடிவு கூறுதல் ஏற்புடைத்தன்று. கருதலாம், கருதுவதற்கு இடமுண்டு என்ற தரவுகளின் அடிப்படையில் அமைந்த தற்காலிக ஊகத்தையே வெளிப்படுத்துவதாக அமைதல் வேண்டும்.
Ø அலி, பேடு, பேடன், அரவாணி, திருநங்கை முதலியன பற்றிய சொற்களைப் பற்றிய சில செய்திகள் இக்கட்டுரையில் இடம் பெறுவதோடு சூளாமணியில் காணப்படும் மூன்று பாடல்கள் பற்றிய கருத்துரையும் இடம்பெற்றுள்ளதன்றிக் கட்டுரைப் பொருள் பற்றிய எந்தச் சிக்கலும் முன்வைக்கப்பட்டதாகவோ, அந்தச் சிக்கலுக்கு விடைகாண முயன்றதாகவோ கருதுமாறு கட்டுரை அமையவில்லை.
Ø ‘குறைவின்றி பெண்டன்மை’, ‘கோழையாக திருநரை பதிவு’, ‘இந்த பாடலில்’, ‘திருநரை சூளாமணி’, ‘பேடரை திருநம்பி’, ‘ ‘ஆண்மையை திருநர்’, ‘சொல்லை சமூகத்தில்’, ‘ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது’ ‘சொல்லுக்கு கழகப்பதிப்பின்’. மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது, தெய்வசிலையார், கரந்தை தமிழ்ச் சங்க பதிப்பு, முதலிய தொடர்களில் அமைந்துள்ள சந்திப்பிழைகள் தவிர்ப்பதற்குரியன.
Ø ‘குறிப்பத்தாக’, ‘காபியமனது’, ‘கூறுவதின்’, ‘இக்இக்காப்பிய’ முதலியன திருத்தத்திற்கும் செப்பத்திற்கும் உரியன.
Ø “இச்சொல் 2010-2011 ஆம் ஆண்டுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன”. “திருக்குறள், நாலடியார் போன்ற இலக்கியங்கள் திருநரை வீரமில்லாத கோழையானவர் என்ற பொருளில் பதிவு செய்துள்ளது” என்னுமாறு அமைந்துள்ள பால்வழுக்கள் களைதற்குரியன.
Ø “(அன்னிதாமசு, 2004 117) (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- தெய்வசிலையார், 1929: 11). என்றெல்லாம் சான்றெண் விளக்கம் குறிப்பிடுவது ஆய்வு நெறிக்கு ஏற்றதன்று.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் சூளாமணி உட்பட சில இலக்கிய இலக்கணங்களில் காணப்படும் திருநங்கையர் பற்றிய சில செய்திகளை இக்காலத்தாருக்கு அறிமுகம் செய்த அடிப்படையிலும் இலக்கியக் கட்டுரை என்ற பகுதியில் வெளியிடுகிறோம்.
very nice