-மேகலா இராமமூர்த்தி

மனித வாழ்க்கை செம்மையாகவும் சிறப்பாகவும் அமைவதற்கு இன்றியமையாதவை இரண்டு. ஒன்று சுற்றம்; மற்றொன்று நட்பு. ஒருவனைச் சுற்றியிருந்து செயற்படுவோர் அனைவரையும் நாம் சுற்றத்தினர் என்ற வகைப்பாட்டில் அடக்கலாம்; எனினும், பெரும்பாலும், அச்சொல் உறவினரைக் குறிக்கும் சொல்லாகவே பயன்பாட்டில் உள்ளது.

உறவினராகிய சுற்றத்தைப் பொறுத்தவரை நம் தாய் தந்தையரையும், உடன்பிறப்புக்களையும் அத்தை மாமன், பாட்டன், பாட்டி போன்ற ஏனைய சுற்றத்தினரையும் தேர்வுசெய்யும் உரிமை நமக்கில்லை; அஃது இயற்கை நமக்களிப்பது; ஆனால், நம் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கிருக்கின்றது.

நட்பைப் பொறுத்தவரை அதனைத் தெரிவுசெய்யும் முழு உரிமையும் வாய்ப்பும் நம்மிடமே இருக்கின்றன. எனவே, அவ்வாய்ப்பைச் சரியாகவும் திறம்படவும் நாம் பயன்படுத்தி நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு நமக்கு வழிகாட்டும் வகையில் நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களைத் திருக்குறளில் வகுத்திருக்கின்றார் பொய்யில் புலவராகிய வள்ளுவர்.

நட்பு:

நட்பு என்பது நண்பர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிச் சிரிப்பதற்கான பொழுதுபோக்குப் பண்பன்று; நண்பன் நெறிகடந்து செல்லும்போது இடித்துத் திருத்துவதற்கும், ஆடை நழுவுகின்றபோது உடனே அதனைச் சரிசெய்கின்ற கைபோல, நண்பன் துன்பத்தில் இருக்கும்போது ஓடிச்சென்று உதவுவதற்கும் பயன்படும் உண்மையன்பே நட்பு என்கின்றார் வள்ளுவர்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தல் பொருட்டு
. (நட்பு – 784)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
. (நட்பு – 788)

அத்தகு நண்பர்களை ஆராய்ந்து கொள்ளவேண்டியதன் அவசியத்தை அடுத்த அதிகாரத்தில் விளக்குகின்றார் அவர். ”நற்பண்புள்ள குடியிற் பிறந்து, தனக்கு ஏற்படக்கூடிய பழிக்கு நாணுபவனே நண்பனாய் இருக்கத் தகுதியானவன்; அவனைப் பொருள் கொடுத்தாவது நட்புச் செய்க” என்று அறிவுறுத்துகின்றார்.

குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
(நட்பாராய்தல் – 794)

நெடுநாளைய நண்பர்கள் பழகிய உரிமை காரணமாகச் சிறு தவறுகளைச் செய்யும்போது அவற்றைப் பொருட்படுத்தாது நட்பினைத் தொடர்க என்று ’பழைமை அதிகாரத்தில் நம்மைத் தெளிவிக்கும் வள்ளுவர், தீய நண்பர்களை இனங்கண்டு ஒதுக்கவேண்டியதன் அவசியத்தைத் ’தீ நட்பு’ அதிகாரத்தில் வலியுறுத்துகின்றார்.

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
(தீ நட்பு – 814)

”போர்க்களத்தில் தன்மீது அமர்ந்திருக்கும் வீரனைத் தள்ளிவிட்டு ஓடும் அறிவற்ற குதிரையைப் போன்று நமக்கு உதவி தேவைப்படும் காலத்தில் உதவாமல் கைவிடும் நண்பர்களைவிடத் தனித்திருப்பதே மேல்” என எண்ணுகின்றது வள்ளுவர் உள்ளம். ”கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு” என இதே கருத்தை நட்பாராய்தல் அதிகாரத்திலும் அவ் அறிஞர் விளம்பியிருப்பது நினைவுகூரத்தக்கது.

It is better to be alone than in bad company” என்று அமெரிக்காவின் மேனாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் குறிப்பிடுவதும் இதனைத்தான்.

இவ்வாறே உள்ளத்தால் கூடாது வெறும் உதட்டளவில் கூடியிருக்கும் நண்பர்களும் ஆபத்தானவர்களே; விலக்கத்தக்கவர்களே என்கின்றார் வள்ளுவர் தம் ’கூடா நட்பு’ அதிகாரத்தில்.

வில் வளைந்திருப்பது பணிவுபோல் வெளிப்பார்வைக்குத் தோன்றலாம்; ஆனால், அது வளைந்துகொடுப்பது எற்றுக்கு? அம்பினைப் பூட்டி எதிரியை வீழ்த்துவதற்கு. அஃதொப்ப, நம்முன் பணிவான சொல்லோடு நடந்துகொள்வோரெல்லாம் உண்மையாகவே நம்மைப் பணிகின்றார் என எண்ணினால் அது பேராபத்தில் முடியும்; அவர்தம் தொழுத கையுள்ளும் நம்மைக் கொல்லும் ஆயுதம் மறைந்திருக்கக் கூடும் என்று எச்சரிக்கின்றார் குறளாசான்.

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
(கூடாநட்பு – 827)

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
(கூடாநட்பு: 828)

நண்பர்களின் இயல்பையும் அவர்களை நாம் தேர்ந்தெடுக்கும் முறைகளையும் வகுத்துரைத்து வள்ளுவம் நமக்கு வழிகாட்டுவதுபோன்றே, அறநூலான நாலடியாரும் பொருத்தமான உவமைகள் வாயிலாய் நண்பர்களின் இயல்பை மூன்றாய்ப் பிரித்து நமக்கு இனம் காட்டுகின்றது.

நாலடியார் காட்டும் நட்பின் வகைகள்:

நட்பில் கடைத்தரமானவர்கள் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்கள்; இடைத்தரமானவர்கள் தென்னை மரத்தின் இயல்பை ஒத்தவர்கள்; முதல்தரமானவர்கள் பனைமரத்தைப் போன்றவர்கள் என்கின்றது நாலடியார்.

எந்த அடிப்படையில் இந்த வகைமை?

பாக்குமரம் இருக்கின்றதே அது பலன் தரவேண்டுமானால் அதற்கு நிதமும் கவனிப்புத் தேவை; இல்லையேல் பட்டுப்போகும்; அதுபோல் நிதமும் நம்மால் பலனில்லையேல் கடைத்தரமானவர்களின் நட்பும் விட்டுப்போகும். தென்னை மரத்துக்கு நிதமும் கவனிப்புத் தேவையில்லை; ஆனால், அடிக்கடித் தேவை; இல்லையேல் பலன் தராது; அதுபோன்றதே இடைத்தரமானவர்களின் நட்பு. ஆனால், பனை மரம் எப்படிப்பட்டது தெரியுமா? நட்டபோது தந்த கவனிப்பே போதுமானது என்று தானாய் வளர்ந்து பலன்தரும் இயல்புடையது. அதுபோல் ஒருமுறை மனங்கலந்து பழகிவிட்டால் போதும்; இறுதிவரை அந்த நட்பைப் பேணி, நண்பர்களுக்கு உதவியாய் – உறுதுணையாய் இருப்பவர்களே உண்மையான நண்பர்கள்; உயர்ந்த நண்பர்கள் என்கின்றது நாலடியார்.

கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
இடையாயார் தெங்கி னனையர் தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே
தொன்மை யுடையார் தொடர்பு.
(நாலடி: நட்பாராய்தல் – 216)

நாலடியார், நட்பில் மூன்று வகையினரைக் காட்டுவதுபோல் கிரேக்கச் சிந்தனையாளரும் – மகா அலெக்சாண்டரின் ஆசானுமாகிய அரிஸ்டாட்டிலும் நண்பர்களை மூன்று வகையினராகப் பிரிக்கின்றார்.

அரிஸ்டாட்டில் காட்டும் நட்பின் வகைகள்:

1. மகிழ்ச்சிக்காக நட்புக்கொள்வோர் (Friendships of pleasure/delight)
2. பயன்கருதி நட்புக்கொள்வோர் (Friendships of utility)
3. நற்பண்புகளின் அடிப்படையில் நட்புக்கொள்வோர் (Friendships of virtue)

இம்மூவரையும் எப்படி நாம் அடையாளம் காண்பது?

மகிழ்ச்சிக்காக நட்புக்கொள்வோர்: இவர்கள், திரைப்படங்களுக்கும் உணவகங்களுக்கும் செல்வதற்கும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் முதலியவற்றுக்கும் துணைவேண்டி நட்புக்கொள்பவர்கள். இவர்களோடு பழகுவதால் நம் கையிருப்பும் கரைந்து, தீய பழக்கங்களுக்கும் நாம் அடிமையாவதுதான் கண்ட பலனாய் இருக்கும்; மற்றபடி வாழ்வின் முன்னேற்றத்திற்கு இவர்களின் நட்பு எள்முனையளவும் உதவாது.

பயன்கருதி நட்புக்கொள்வோர்:  பணத்திற்காகவோ பதவி முதலிய அதிகாரங்களுக்காகவோ ஒருவரிடம் நட்புக்கொள்பவர்கள் இவர்கள். அலுவலகத்தில் நம்மிடம் பழகுபவர்களில் பெரும்பாலோர்கூட அங்கு நம்மிடமிருந்து கிடைக்கக்கூடிய உதவிகளுக்காகவும் ஆதாயங்களுக்காகவும் பழகுபவர்களே. எனவே, அவர்களையும் இவ்வகையில் அடக்கலாம். நம்மால் பலனில்லை என்றால் நட்பை முறித்துக்கொள்ளத் தயங்காதவர்கள் இவ்வகையினர்.

நற்பண்புகளின் அடிப்படையில் நட்புக்கொள்வோர்: ஒருவரிடமிருக்கும் நல்ல பண்புகளுக்காகப் பழகுபவர்கள் இவர்கள். இவ்வாறு குணங்களைக் கண்டறிந்து கொள்ளும் நட்பே நல்ல நட்பாகவும் இறுதிவரை நீடிக்கும் நட்பாகவும் இருக்கும். இவர்கள், நண்பன் ஒரு தவறுசெய்யும்போது அதனை இடித்துத் திருத்துவார்கள்; நண்பனுக்குத் துன்பம் என்றால் அதனை நீக்க முயல்வார்கள்; நீக்க இயலாவிட்டால் அதில் தாமும் பங்கெடுத்துக்கொண்டு ஆறுதலளிப்பார்கள். இத்தகு நல்ல நண்பர்கள் கிடைப்பது வரமே!

இவ்வாறு நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் துணையாயிருக்கும் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், அல்லாதோரை இனங்கண்டு விலக்குதற்கும் வள்ளுவமும் நாலடியாரும் அரிஸ்டாட்டிலின் சிந்தனைகளும் நமக்கு நல்வழிகாட்டுகின்றன. இவற்றின் அடிப்படையில் நண்பர்களை ஆராய்ந்து தேர்ந்தெடுப்போம்; வாழ்வில் உயர்வோம்!

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:
1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார்
2. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி.சு. பாலசுந்தரம் பிள்ளையவர்கள்.
3. https://en.wikipedia.org/wiki/Nicomachean_Ethics

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.