அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும் . . . 3
சக்தி சக்திதாசன்
லண்டன்
கவியரசரின் ஆன்மீக அறிவு அவருக்குக் கிடைத்த சாட்சாத் சரஸ்வதி கடாட்சம் . தனக்குள் தன்னைத்தேடி தானே கற்றுத் தேர்ந்தார். தன் வாழ்க்கை நதி ஓடிய பாதைகள் தன்னை அழைத்துச் சென்ற கல்லும், முள்ளும் நிறைந்த பாதைகளுக்கூடாக தான் பயணித்த பயண அனுபவங்களின் வழி நின்று அதனுள் இருந்த ஆன்மீகத்தை அனைவர்க்கும் அள்ளித் தெளித்தார்.
அனுபவ ஆன்மீகமே வாழ்வின் உண்மை நிலையை எடுத்துக்காட்ட வல்லது என்பது புரிந்து கொண்ட அனைவராலும் அவற்றை ஒரு திரைப்பட இயக்குனரோ அன்றி நடிகரோ எதிர்பார்க்கும் வகையில் காட்சிகளுக்கேற்ற வரிகளாக்குவது ஒன்றும் இலகுவான காரியமல்ல.
ஆனால் அதுவே கவியரசருக்கு கைவந்த கலையாயிற்று. “ முன்னோரு காலத்தில் கம்பன் வீட்டில் கனக்கெழுதியிருந்திருப்பேனோ ” என்று கூறி தன்னைத் தானே வியந்த கவியல்லவா கண்ணதாசன் ?
அவர் பாடல்களுக்குள் புதைத்த அனுபவங்கள் பல தன்னுடைய சொந்த வாழ்க்கை அவருக்குக் கற்றுக் கொடுத்தவை மட்டுமல்ல பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார், பல ஆன்மீக அறிஞர்களுடன் கலந்துரையாடினார். தான் பட்டு அறிந்ததோடு, படித்து அறிந்தவைகளையும், கேட்டு அறிந்தவைகளையும் இணைத்து தனது ஆன்மீக ஞானத்தை வளர்த்துக் கொண்டார் .
கவியரசர் பாடல்களை மட்டும் அள்ளித் தந்து விடவில்லை அதற்குள் பொருளையும் அல்லவா குவித்து வைத்திருக்கிறார் . அதுவும் காதல் பாடல்களுக்குள் கூட ஏதாவது ஒரு ஓரத்தில் ஆன்மீகக் கருத்தினை சூசகமாக புதைத்து வைப்பதில் வல்லவர் கவியரசர்.
புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர் தனது பாடல்களில் ஆங்காங்கே ஓரிரு வரிகளுக்குள் ஏதாவது புராண அல்லது இதிகாச சம்பவங்களைப் புதைத்து வைத்து அதைப் படிப்பவர்கள் மனங்களில் அச்சம்பவத்தைப் பற்றி அறியும் ஆவலைத் தூண்டுவதில் வல்லவர் .
ஏசுகாவியம் எழுதிய அனைத்து மதங்களைக் கடந்த அறிவியல் ஆன்மீகவாதியல்லவா எமது கவியரசர் .
ஆன்மீகத்தை சாதாரண மக்கள் மத்தியில் ௐௐகொண்டு சென்றவர்களுள் கவியரசர் கண்ணதாசன் ஒரு தனியிடத்தைப் பெறுகிறார். ஆன்மீகம் என்பது மதம் சார்ந்த பக்தியின் அடிப்படையில் ஆரம்பித்திருந்தாலும் ஆன்மாவின் ரகசியத்தைப் புரிந்து கொள்வதே ஆன்மீகம் , அது மதங்களைக் கடந்தது என்பதில் கவியரசர் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இப்போ அவரது பாடல் ஒன்றின் சாரத்தைப் பார்ப்போமா,
ஆலயமணி எனும் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அமரர் டி.எம்.எஸ் அவர்களின் குரலில் ஒலித்த பாடலுக்கான வரிகளைப் பார்ப்போம்.
சட்டி சுட்டதடா கை விட்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
(சட்டி …)
இங்கே என்ன சொல்ல வருகிறார் கவியரசர் ?
மனிதனின் சராசரிக் குணம் என்ன ?
கைகளில் ஒரு சுடுகின்ற சட்டியைப் பிடிக்கிறோம் என்று வையுங்கள் உடனடியாக ஐயோ சுடுகிறதே என்று அதற்குரிய முன்னெச்சரிக்கை எடுப்பவர்கள் குறைவு என்றே சொல்ல வேண்டும்.
எம்மால் சமாளித்து விட முடியும் என்று கைகளில் கொஞ்ச நேரம் சூட்டைத் தாங்கிக் கொள்வோம் பின்பு அந்தச்சூடு தாங்க முடியாமல் கையைப் பொத்துவிடும் போலிருக்கும் போது கைகளை அப்படியே விட்டு விடுகிறோம் .
அதேபோலத்தான் இப்படத்தில் வரும் கதாநாயகன் பொறாமை எனும் அரக்கக் குணத்துக்கு அடிமையாகி இழக்கக்கூடாதவைகளையெல்லாம் இழக்கிறான். அது அவனது நெஞ்சை எரித்து விடும் போதுதான் அவனுக்கு ஆன்மீக ஞானம் ஏற்படுகிறது.
நாலுவகையான செயல்களினாலும் பாதிக்கப்பட்டதன் பின்னால் தான் அவனுக்குத் தனக்கும் மேலே ஒரு சக்தியின் ஞாபகம் வருகிறது. இங்கேதான் அவரது அறிவியல் ஆன்மீகம் தெரிகிறது.
என்ன என்கிறீர்களா ?
உடனடியாக அவர் இறைவனைப் பற்றி பேச வரவில்லை. நல்லது எது, கெட்டது எது என்பதனைப் பற்றி மனதைச் சிந்திக்கத் தூண்டுகிறார்
அடுத்துப் பார்ப்போமா ?
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
(சட்டி …)
ஆகா ! எப்படி எம்மை ஆன்மீகத்துடன் கொண்டு இணைக்கிறார் ?
எல்லோருடைய மனங்களிலும் நற்குணங்களும் உண்டு அதே போல் தீயகுணங்களும் உண்டு .
இதை அழகாக அன்பர் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் குறிப்பிடும்போது அசுர தேவர் யுத்தம், இராமயண யுத்தம், மகாபாரத யுத்தம் எனும் வகையிலான நல்லெண்னங்களுக்கும், தீய எண்ணங்களுக்குமிடையிலான யுத்தமானது மனிதராகப் பிறந்த அனைவர் உள்ளங்களிலும் நிகழ்கிறது நல்லெண்ணங்கள் வெற்றியடைந்தால் நற்செயல்களையும் , தீய எண்ணங்கள் வெற்றிய்டைந்தால் தீய செயல்களையும் புரிகிறோம் என்பார்.
இதையேதான் அன்று எமது கவியரசர் பாதி மனதில் தெய்வம் இருப்பதாகவும், மீதி மனதில் மிருகம் இரு[ப்பதாகவும் கூறியுள்ளார் போலும். எத்தனை துல்லியமான ஆன்மீக அறிவியல் கவியரசர் உள்ளத்தில் விளையாடியிருக்கிறது பார்த்தீர்களா ?
அந்த அறிவியல் ஆன்மீகம் கதாநாயகன் உள்ளத்தில் குடியேறிவிட்டதை அழகாக ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா என்று பூடகமாகப் புதைத்து வைத்துள்ளார் கவியரசர்.
இதோ வருகிறது அவரது அடுத்த அற்புத வரிகள் பார்ப்போம் வாருங்கள் ,
ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா
(சட்டி …)
மனித மனதின் சஞ்சலங்களுக்கு ஓய்வுண்டா என்ன ?
குறிப்பாக இத்திரைப்படத்தின் கதாநாயகன் மனதில் சந்தேகப் பேய் ஆரவாரமிடுகிறது. அவனை அதாள பாதாளத்துக்கே கொண்டு செல்கிறது.அச்சந்தேகப் பேயின் ஆரவாரத்தில் அகப்பட்டு பலமான அடிவாங்கியபோது அவனிக்குள் ஆன்மீக ஞானம் குடி கொள்ளத் தொடங்குகிறது.
எம்மில் பலரும் இம்மாதிரியான அனுபவங்களுக்கூடாகப் பயணித்திருப்போம். அவ்வனுபங்களின் ஆழப்புரிதல் எமக்குத் தேவையான ஆன்மீகத்தை அள்ளி வழங்குகிறது. ஆன்மீகத்தை வெறும் பக்தி மார்க்கமாகவே பார்த்துக் கொண்டிருப்பவர்களின் புரிதல்களுக்கும், அவ்வான்மீகத்தை அறிவியலின் அடிப்படையில் மதங்களைக் கடந்த ஒரு பார்வையைக் கொண்டு அடைந்த புரிதல்களுக்கும் பலமான வித்தியாசம் உண்டு.
இதனையே கவியரசர் இங்கே உணர வைக்க முற்படுகிறார் போலும்.
மனதிலுள்ள ஆரவாரப் பேய்கள் ஓடி விட்டது என்றால் ஒலிக்கும் ஆலயமணியின் உண்மை அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்கிறார். ஆலயமணி வெறும் ஆண்டவனை அறிவிக்க ஒலிப்பதல்ல தூய்மையான உள்ளத்தின் வெளிப்பாட்டினை வெளிப்படுத்தும் ஒலியென்கிறார் கவியரசர்.
அந்த ஒலி அச்சமயத்தில் தர்மத்தை அவனுக்கு அறிவுறுத்துகிறது என்கிறார். தர்மம் என்றால் வெறும் தானம் எனும் ஒரு பொதுவான புரிதலைக் கடந்து வாழ்வின் தார்மீகக் கடமைகளையும் குறிக்கிறது என்கிறாரோ கவியரசர் ?
அத்தகைய தார்மீகக் கடமைகளைச் சரிவரப் புரிந்து கொண்ட மனதில் சாந்தியைத் தவிர வேறு ஏது குடி கொள்ள முடியும் ?
சரி இனி இந்தப் பாடலின் ஜீவநாடியான வரிகளைப் பார்ப்போம். இங்கேதான் கவியரசரின் ஆன்மீக ஞானம் கொடிகட்டிப் பறக்கிறது எனலாம்.
இதோ அந்த வரிகள் ,
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா- நான்
இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
(சட்டி …)
பல வருடங்களாக இந்த வரிகளை மந்திரம் போல மனதினுள் ஒலித்துக் கொண்டிருந்தாலும் அதன் உண்மையான அர்த்ததத்தைப் பற்றிச் சிந்திக்கத் தலைப்படவில்லை.
அது என்ன “எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா” என்கிறார் கவியரசர் ? அதற்குள் அப்படி என்ன ஒரு பெரிய விடயத்தை உள்ளடக்கியிருப்பார் கவியரசர் என்றே எண்ணத் தோன்றியது.
என்ன முன்னுக்குப் பின்னான முரணாக இருக்கிறதே ! என்று எண்ணத் தோன்றியது. கவியரசரின் பாடல் வரிகளின் சிறப்பே அது பலரின் பார்வைக் கோணங்களுக்கேற்ப வித்தியாசமான அர்த்தங்களைக் கொடுக்க வல்லது என்பதே !
அப்படியாக கற்றுக்குட்டியான எனது கோணப்பார்வையில் அதைப்பார்க்க விளைந்தேன்.
எறும்பின் தோலை உரித்துப் பார்த்தால் அதனுள்ளிருந்து யானை வருவதென்பதெல்லாம் என்ன நடக்கக் கூடிய காரியமா ? அதை உணர்ந்து கொள்ள அதன் அடுத்த வரியைப் பார்ப்பது முக்கியமாகிறது.
“ நான் இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா ” என்கிறார் கவியரசர்.
எறும்புத்தோலுக்குள் இருந்து யானை வருவது எப்படி நடக்க முடியாத காரியமோ அதேபோலத்தான் பொறாமை எனும், அழுக்காலும், செல்வந்தன் எனும் மமதையைலும் மூடிக்கிடந்தவனின் இதயத்தோலை உரித்துப் பார்த்தால் அதனுள் ஞானம் வருவது என்கிறார் என்பது இக்கற்றுக்குட்டியின் புரிதல்.
அதுமட்டுமல்ல ஒரு சிறிய எறும்பின் தோலினுள் யானை ஒளிந்திருக்க முடியுமானால் இந்த அகங்கார இதயம் எத்தனை சிறியதாக இருப்பினும் அதனை உரிப்பது போன்ற தூய்மையை அடைந்தால் அத்தனை பெரிய ஞானத்தை அடைய முடியாதா? என்கிறார் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம் அல்லவா ?
சரி பிறக்குமுன்னே இருந்த உள்ளம் என்கிறாரே அது என்ன ?
இங்கேதான் அறிவியல் ஆன்மீகத்தின் ஆழத்துக்கே சென்று விட்டார் எனலாம் . ஆன்மீக அறிவியலாளர்களின் பார்வையில் பிறக்குமுன்னே நாம் ஆன்மாவாக ஆன்ம உலகில் இருக்கிறோம். எமது கர்மவினைகளுக்கேற்ப என்னவிதமான அனனுபவங்களை அடைய வேண்டுமோ அதற்குரிய வகையில் பிறப்பெடுக்க வேண்டி நாமே எமது பிறப்பை தெரிவு செய்கிறோம் என்கிறார்கள்.
அப்படியாயின் பிறக்குமுன்னே எமது உள்ளம் எப்படி இருந்திருக்கும்? முற்பிறப்பில் நாம் செய்த கர்மவினைகளை நன்கு ஆராய்ந்து எம்மை நாமே புடம் போட்டுக் கொண்ட ஒரு தெளிவான உள்ளம் இருந்திருக்க வேண்டுமல்லவா
அத்தகைய ஒரு ஆன்மீகத்தெளிவை இப்போது அடைந்து விட்டதாக அவ்வரிகள் சொல்கின்றன என்று எடுத்துக் கொள்ளலாமா ?
அடுத்துப் பாருங்களேன் ” இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா ” இறந்த பின்னால் வரும் அமைதியா ? அது எப்படி இருக்கும் ?
செட்டியாரல்லவா? பட்டினத்துச் செட்டி சொன்ன ” செத்தாரைப் போல திரி ” எனும் வாசகமும் , நபிகள் நாயகத்தின் ” இறப்பதற்கு முன்னால் இறந்து விடு ” எனும் வாசகமும் கவியரசருக்கு ஞாபகம் வந்திருக்கும்.
அறிவியல் ஆன்மீகவியலாளர் என்ன சொல்கிறார்கள் ? எம்மைச்சுற்றி நடப்பவற்றினுள் எம்மை மூழ்க விடாமல் அனைத்தையும் ஒரு சாட்சிக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்கிறார்கள் .
அதற்குச் சுலமான வழி என்ன ” இறந்த பின் வரும் அமைதியை மனம் இப்போதே அடைந்து விடுவது தானே ” .
அன்பு வாசக உள்ளங்களே ! இந்த அற்புத வரிகளை யாத்த கவியரசர் ஒரு அறிவியல் ஆன்மீகவாதி என்பதில் எதுவித சந்தேகமும் இருக்க முடியுமா ?
இந்தப் பாமரனின் கோணப்பார்வையை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மீண்டும் வருவேன்