தாமே கல்விகற்ற அறிவியலாளர் – மைக்கேல் பாரடே
-பேரா. சேசா சீனிவாசன்
வரலாற்றில் மிகச் செல்வாக்குப் பெற்ற அறிவியலாளராகவும் (most influential scientist), ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், டெஸ்லா போன்ற உலகத்தரம் வாய்ந்த அறிவியல் அறிஞர்களுக்கு முன்னோடியாகவும், அவர்களுக்கு உந்துசக்தியாகவும் (Inspriation) திகழ்ந்தவர் மைக்கேல் பாரடே என்றால் அது மிகையில்லை.
பாரடேயின் அறிவியல் சாதனைக் கண்டுபிடிப்புகள், அறிவியலின் ஓர் அங்கமாக விளங்கும், இயற்பியல் துறை (Physics) வளர்ச்சிபெறுவதற்குப் பெரிதும் துணைநின்றுள்ளன. இவரின் அரிய கண்டுபிடிப்புகளான மின்காந்தத் தூண்டல் (Electromagnetic Induction), மின்சார விசைப்பொறி (Electric Motor), மின்வேதியியல் (Electrochemistry) ஆகியவை இவரை உலகம் அறிந்துகொள்ள வழிவகைசெய்தன.
பாரடேயின் மின்சாரக் கருவிகளின் கண்டுபிடிப்புகளுக்கு மரியாதை செய்யும் விதமாக, இவரது பெயரை, மின்தேக்கியின் (Electrical Capacitance) அளவீட்டு அலகிற்கு “பாரட்” (Farad) எனச்சூட்டி, உலகம் இவரைக் கொண்டாடிய ஆண்டு 1873. இங்கிலாந்து வங்கி (Bank of England), இவரது நினைவாக £20 பணத்தாளில் இவரின் உருவப்படத்தை 1991ஆம் ஆண்டு வெளியிட்டது. இதனால், பாரடேயும் வில்லியம் சேக்ஸ்பியர் (William Shakespeare), புளோரன்ஸ் நைட்டீங்கேல் (Florence Nightingale), மற்றும் ஐஸக் நியூட்டன் (Sir Isaac Newton) போன்ற மாபெரும் மனிதர்களின் தர வரிசையில் இணைந்தார்.
மேக்ஸ்வெல் என்ற மிகப்பெரிய விஞ்ஞானியும் பாரடேவைப் பற்றிக் குறிப்பிடும்போது, எத்தனை கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தபோதிலும், எப்பொழுதுமே மைக்கேல் பாரடே ஒருவர்தாம் மின்காந்தவியலின் (Electromagnetism) தந்தை என்று புகழாரம் சூட்டியுள்ளார். மின்காந்த விதிகளைப் பற்றிய கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கவில்லையெனில், இத்துறைசார்ந்த பல புதிய அறிவியல் சாதனைகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
மைக்கேல் பாரடேயின் ஆரம்பக் கல்வி:
மைக்கேல் பாரடே 1791ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 22ஆம் தேதி, மார்கரெட் மற்றும் ஜேம்ஸ் பாரடே தம்பதியருக்கு நான்கு குழந்தைகளில், மூன்றாவதாகப் பிறந்தார். மைக்கேலின் குடும்பம் வறுமையில் வாடியதால், அனைவரும் வேலைவாய்ப்பைத் தேடி, இங்கிலாந்து நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர். இலண்டனின் தெருக்களில் வேலைசெய்து வந்த சிறுவன் மைக்கேல் பாரடே, அடிப்படைக் கல்வி சிறிது கற்றபின், வறுமையின் காரணமாய்ப் படிப்பைத் தொடர இயலாததால், உயர்கல்வியைத் தாமே முயன்று கற்றுக்கொண்டுள்ளார்.
தனது பதினான்காம் வயதில், புத்தக ஏடுகள் கட்டும் (Book Binding) மற்றும் புத்தக விற்பனை (Book Selling) செய்யும் நிறுவனத்தில் தொழில்பழகுநராக (Apprentice) வேலைக்குச் சேர்ந்தார் பாரடே. அங்கு அவர்செய்த ஏழுவருடப் பணியில், கிடைத்தற்கரிய பல புத்தகங்களை வாசிப்பதற்கும், அவற்றைப் பயன்படுத்துவதற்கும் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. பாராடேயின் புத்தக நிறுவனத்தின் முதலாளி ஜார்ஜ் ரைபோவும் (George Riebau), பாரடே புத்தகங்கள் வாசிப்பதை ஊக்குவித்தார்.
மைக்கேல் பாரடே படித்த புத்தகங்களில், அவருடைய கவனத்தினை மிகவும் ஈர்த்தது, ஜேன் மார்செட் எழுதிய ’வேதியியல் பாதுகாப்பு விதிகள்’ (Conservations on Chemistry by Jane Marcet) என்ற புத்தகமாகும். பாரடே தன் இருபதாம் வயதில் உலகத்தரம் வாய்ந்த இங்கிலாந்தின் வேதியியலாளர், சர். ஹம்ப்ரி டேவியின் (Sir. Humphry Davy) தொடர் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றார். அத்துணைச் சொற்பொழிவுகளையும் தொகுத்துச் சுமார் 300 பக்க அளவில் தம்முடைய கையினால் எழுதிய கோப்புகளை சர். டேவி அவர்களுக்கு அனுப்பிவைத்தார். இதைப்பெற்ற சர். ஹம்ப்ரி டேவி உள்ளம் குளிர்ந்து பாரடேவிற்குச் சாதகமான பதில் கடிதத்தை அனுப்பினார்.
பாரடேயின் முதற் கண்டுபிடிப்பு:
சர். டேவி அவர்கள் 1813ஆம் ஆண்டில், தம்முடைய ஆய்வுக்கூடத்தில் நைட்ரஜன் III குளோரைடு (Nitrogen trichloride) என்ற வேதிப்பொருளைச் சோதனை செய்து கொண்டிருக்கையில், தம் கண்களை இழந்தார். ஆதலால் மைக்கேல் பாரடேவைத் தம்முடைய ஆராய்ச்சிக்கு உதவியாளராக நிரந்தரப் பணியில் நியமித்தார். இவர்களிருவரும் தங்களுடைய ஆராய்ச்சிக் குழுமத்தின் மாநாட்டு நிகழ்விற்காக, ஐரோப்பாவிற்குப் பயணப்பட்டனர். சர். டேவி அவர்கள் நகைச்சுவையாக பாரடேவைப் பற்றிச் சொல்லும்பொழுது, ”மைக்கேல் பாரடேதான் என்னுடைய பெரிய கண்டுபிடிப்பு” என்று கூறியுள்ளார். அது எவ்வளவு பொருத்தம் என்று நாம் பாராடேயின் இந்தச் சுயசரிதையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகின்றது.
1820ஆம் ஆண்டில் டேனிஷ் நாட்டின் இயற்பியலாளர் ஹான்ஸ் ஓர்ஸ்டெடு (Danish Physicist Hans Orsted) தற்செயலாக ஒரு செப்புக் கம்பியில் செல்லும் மின்சாரத்தின் வழியாகக் காந்த ஊசியைத் திசைதிருப்ப முடியும் என்பதனைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பை மிகவும் போற்றிய பாரடே, அதற்கடுத்த ஆண்டு, அதாவது 1821ஆம் ஆண்டு, மின்சாரத்தினால் இயங்கும் விசைப்பொறியைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்புதான் தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் அன்றாடச் சாதனங்களான, மின்விசிறி, குழாய்கள் (pumps), அமுக்கிகள் (compressors), மின்உயர்த்திகள் (elevators), மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளில் (refregirators) பயன்படுத்தப்படுகின்றது.
மைக்கேல் பாரடேயின் இவ்வளர்ச்சியை அவருடைய வழிகாட்டியான சர். டேவியினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால், பாரடேவை மின்காந்தத் தூண்டல் சார்ந்த ஆராய்ச்சிகள் செய்வதிலிருந்து தடுத்துவந்தார். 1829ஆம் ஆண்டு டேவி இறந்தபின்னர்தான் பாரடேயால் தம் ஆராய்ச்சியைத் தொடரமுடிந்தது. சர். ஹம்ப்ரி டேவி, தமக்குத் துன்பம் விளைவித்துத் தம் ஆராய்ச்சிகளைத் தடுத்தபோதிலும், தம்முடைய அறிவியல் தந்தையாகவே டேவியை மற்றவர்களிடம் கூறிவந்துள்ளார் பாரடே.
மின்காந்தவியல் (Electromagnetism)
மைக்கேல் பாரடே பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மின்காந்தத் தூண்டல் விதியை (Law of Electromagnetic Induction) கண்டுபிடித்தார். இந்தச் சோதனையின் வாயிலாக, இரு செப்புச் சுருள்களில் ஒன்றில் மின்சாரத்தினைப் பாய்ச்சினால் மற்றொரு சுருளில் மின்சாரம் தூண்டப்படும் என்பதைக் கண்டறிந்தார் பாரடே. இவ்விதிப்படி, மின்காந்தத் தூண்டலில் இயங்கும் விசைப்பொறியானது ஐம்பது வருடங்களுக்குப் பிறகே பயன்பாட்டுக்கு வந்தது என்று வரலாற்றுக் குறிப்புகள் பகர்கின்றன.
பாரடேவின் இந்த எளிய சோதனை பிற்காலத்தில் ஸ்காட்டிஷ் நாட்டுக் கணிதமேதையும், இயற்பியலாளருமான (Scottish Physicist and Mathematician) ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்லால் (James Clark Maxwell) ”மாக்ஸ்வெல்-பாரடே சமன்பாட்டு விதியாக” (Maxwell-Faraday Equation) உருவாக்கப்பட்டு, அறிவியல் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சமன்பாட்டைக் கீழே காணலாம்.
E – Electric Field, B- Magnetic Field
மேலே கொடுக்கப்பட்டுள்ள விதி, ஆற்றல் உற்பத்திக்கு (Power Generation) அடித்தளமாக அமைந்த காரணத்தினால், மைக்கேல் பாரடேவை ”மின்சாரத்தின் தந்தை” என்று போற்றுவது சாலச்சிறந்தது.
1834ஆம் ஆண்டு பாரடேவின் மற்றுமொரு கண்டுபிடிப்பாகிய ”மின்னாற்பகுப்பு” (Electrolysis) முறையினால் தொழிற்சாலைகளில் உலோகங்களைப் பிரிக்கவும், ஆற்றலைச் சேமிக்கவும், மின்முலாம் பூசவும், நீரைத் தூய்மைப்படுத்தவும் ஈதொத்த வேறுபல் பணிகளைச் செய்யவும் முடிந்தது. இந்தச் சாதனைக்காக, முறையான பட்டப்படிப்பு இல்லாத பாரடேவுக்கு இங்கிலாந்தின் ராயல் அறிவியல் கழகம் (Royal Institution) வேதியியல் பேராசிரியர் பதவியளித்துக் கௌரவித்தது.
1836ஆம் ஆண்டு மைக்கேல் பாரடே, “பாரடே கூண்டு” (Faraday Cage) என்ற அடைப்பானை உருவாக்கி அதன்மூலம் மின்காந்தப் புலத்தினை முடக்கலாம் எனச் செய்துகாட்டினார். இக்காலத்தில் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் பாரடே கூண்டு, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நுண்ணலைச் சூளையில் (Microwave Oven) உருவாகும் மின்காந்த அலைகளை வெளியே பாயவிடாமல் தடுக்க உதவுகிறது. மேலும் MRI ஸ்கேன் என்று சொல்லக்கூடிய மருத்துவ உபகரணத்திலும் இந்த பாரடே கூண்டு பயன்படுத்தப்படுகிறது.
அறிவியல் ஆராய்ச்சியைத் தவிர வார இறுதி நாட்களில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, இலவச அறிவியல் சொற்பொழிவுகள் நடத்தினார் பாரடே. அதன்மூலம் இளைய சமூகத்தினை அறிவியில்வழிச் சிந்திக்கத் தூண்டினார்.
மைக்கேல் பாரடே தம்முடைய கடைசி நாட்களில், தாம் முதன்முதலில் தொழில்செய்த புத்தக நிலையத்தின் உரிமையாளர், திரு. ஜார்ஜ் ரைபோவிற்கு, தாம் எழுதிய ஒரு புத்தகத்தைக் காணிக்கையாக்கினார். அதில் அவர் குறிப்பிட்டது அப்படியே அதன் தன்மை மாறாமல் ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
“…you kindly interested yourself in the progress I made in the knowledge of facts relating to the different theories in existence, readily permitting me to examine those books in your possession that were in any way related to the subjects occupying my attention.”
முறையான பள்ளிக்கல்வி பெறும் சூழல் வாய்க்கவில்லையெனினும் அறிவியல் துறையில் ஈடுபாடும், அத்துறைசார் அறிவினை நூல்கள் வாயிலாகத் தாமே வளர்த்துக்கொள்ளும் திறனும் இருந்தால் உலகம் போற்றும் உன்னத அறிவியலாளராய் மிளிரமுடியும் என்பதற்கு மைக்கேல் பாரடேவின் வாழ்க்கை சான்றாகின்றது.