Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • சிவநெறித் திருக்குறளான திருவருட் பயன்

    சிவநெறித் திருக்குறளான திருவருட் பயன்

    மகாதேவ ஐயர் ஜெயராமமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    சமயம் என்றால் என்ன? சமயம் என்றாலே கடவுள் நெறி பற்றிச் சொல்லுவதா? என்னும் ஐயம் எழுவது இயல்பானதுதான். இதனால் சமயம் என்றால்  என்ன வென்று ஒரு தெளிவு அவசியமாய் வேண்டப்படுகிறது அல்லவா! சமயம் என்றால் “மக்கள் ஆன்மலாபத்தை அடைதற்குரிய வழியைத் தெரிவிப்பதே” என்று சொல்லப்படுகிறது. கடவுள் நெறிபற்றிக் கண்டு கொள்ளாமலே சமயம் என்று சொல்லிக் கொள்ளும் நெறிகளும் காணப்படுகின்றன என்பதும் நோக்கத்தக்கது.

    சமயங்கள் யாவுமே கடவுள் கொள்கையினை ஏற்றுக் கொண்டுள்ளனவா என்பதிலும் தடுமாற்றம் காணப்படுகிறது. சமயங்கள் என்று பெயரளவில் இருந்தாலும் கடவுள் என்னும் சிந்தனையினைத் தொடாதன வாகவும் சமயங்கள் இருப்பதையும் காணமுடிகிறது. கடவுள் கொள்கையினுக்கு முதன்மை கொடுக்காமல் ஓரளவு நிலையில் ஒத்துக் கொள்ளும் சமய ங்களும் இருக்கின்றன. அதேவேளை சமயம்  என்னும் பெயரில் இந்தியாவில் தோற்றம் பெற்ற பெளத்தமோ, சமணமோ கடவுள் என்னும் கருத்தை ஏற்றிடாச் சமயங்களாகவே இருக்கின்றன. தர்க்கம் வேறு. தத்துவம் வேறு. தர்க்கிப்பது என்பதை மூலமாய்க் கொண்டனவே பெளத்தமும், சமணமும். தத்துவத்தை முதன்மைப் படுத்தும் சமயங்கள் நிலை  வேறாய் அமைகிறது. அந்த வகையில் சைவசமயமானது சைவசித்தாந்தம்  என்னும் தத்துவத்தை முழுமையாக்கி கடவுள் நெறியினை வலிமையாக்கி நிற்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.

    உலகில் பிறக்கின்ற உயிர்களின் நிலையினை மையபடுத்தி சமயங்களின் நிலையினை நோக்குதல் அவசியமாகிறது. எல்லாச் சமயங்களுமே உயிரின் இறுதி நிலை என்ன என்பது பற்றி எடுத்துக் கொள்ளுவதில் நாட்டம் உடையனவாக இருக்கின்றன என்பதும் கருத்திருத்த வேண்டியதே. இந்த நோக்கில் பார்க்கின்ற பொழுது; உயிரின் முடிந்த பயன் என்பது “முத்தி” அல்லது  “வீடுபேறு” என்னும் நிலைக்குள் வந்து விடுகின்றன. ஆனால் இதிலும் ஒருமித்த நிலை இல்லை என்றே ஆகிறது. அந்தந்த சமயத்தின் நிலைக்கு ஏற்பவே  இந்த “முத்தி” என்பதும் எடுக்கப்படுகிறது என்பதும் மனங்கொள்ளத்தக்கது.

    இந்த நிலையில் சைவமசமயத்தை உற்று நோக்கும்பொழுது – கடவுள் கொள்கையினை முற்றிலும் முதன்மையாகக் கொண்டே விளங்குகிறது என்பது நோக்கத்தக்கதாகும். எது நடப்பதானாலும், எது நடந் தாலும், எது நடப்பதாக இருந்தாலும் அத்தனைக்கும் கடவுளே காரணம் என்றும் அவனது திருவருளே பெருந்துணை என்றும் அசையாத நம்பிக்கையினைக் கொண்டிருக்கிறது. “முத்தி என்னும் பெரும் பயனானது உயிர் இறைவனது திருவருளை அடைவதுதான்” என்பது சைவத்தின் நிலையாகும். திருவருளினை மையப்படுத்தி சைவசமயம் இருக்கின்ற காரணத்தால் சைவசமயத்தை “திருவருள் நெறி” என்று பெயரிட்டு அழைப்பது மிகவும் பொருத்தமாய் இருக்கும் அல்லவா!

    அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்
    அருளே பிறப்பறுப்ப தானால் – அருளாலே
    மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
    எப்பொருளும் ஆவ தெனக்கு

    காரைக்கால் தந்த தமிழ்ச் செல்வியின் இப்பாடல் இறைவன் திருவருளினைக் காட்டுவதும் நோக்கத் தக்கது.

    திருவருளினைப்பற்றி சித்தாந்த சாத்திரங்கள் யாவுமே விளக்கி நிற்கின்றன. ஆனால் எந்தச் சித்தாந்த சாத்திரங்களும் திருவருள் என்பதைத் தலை ப்பாக்கி அந்தப் பெயரில் இருக்கின்றனவா என்றால் – அந்த நிலையில் ஒன்று மட்டும் தன்னை முன்னிலைப்படுத்தி நிற்பதைக் காணமுடிகிறது, அதுதான் உமாபதி சிவாச்சாரியார் என்னும் அனுபூதிமானால் அளிக்கப்பட்ட மிகவும் பெருமைமிக்க “திருவருட் பயன்” ஆகும். ஒன்றே முக்கால் அடியில் அமைந்த வள்ளுவப் பெருமானின் திருக்குறள் காலத்தால் முந்தியது. கருத்துக்களால் நிறைந்தது. திருக்குறள் அறநெறியினை அள்ளித்தரும் நூல். திருக்குறள் வழியில் பயணித்து அவரின் குறள் வடிவினையே கையாண்டு அருள்நெறியினை வழங்கிடும் வண்ணம் அமைந்ததுதான் திருவருட் பயன். உலகிலே இருக்கின்ற மக்கள் உணரவேண்டிய நெறிகள் இரண்டு. ஒன்று உலகியல் நெறி. மற்றயது மெய்நெறி. இதில் உலகியல் என் பதை பொது நெறி என்றுதான் எடுக்கலாம். ஆனால் மெய்நெறி என்பதைச் சிறப்பு நெறி என்றே எடுத்திடல் வேண்டும். பொது நெறிக்கு திருக்குறள் வாய்த்தது. சிறப்பு நெறிக்கு அதன் வழியில் பயணப்பட்ட திருவருட் பயன் வாய்திருக்கிறது. உமாபதி சிவாச்சாரியார் வள்ளுவருக்கு பிற்பட்ட காலத் தவராய் இருந்த பொழுதும், வள்ளுவரின் வழியில் பயணப்பட்டு சித்தாந்த தத்துவத்தை மிகவும் சிறப்பாக ஒன்றே முக்கால் அடியில் கொண்டுவந்து தந்திருக்கும் ஆற்றலுக்குக் காரணமே அவருக்குக் கிடைத்த ஆண்டவனின் திருவருள் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது. உமாபதி சிவாச்சாரியார் காலத்தில் குறள் வடிவில் இலக்கியம் என்பது காணப்படா நிலையில் திருவருட் பயன்  குறள் வடிவில் வாய்த்திருக்கிறது என்பதும் ஆண்டவனின் கருணையென்றே கருதிட வைக்கிறதல்லவா! திருவருட் பயன் நூலினை “மெய்ந்நெறித் திருக்குறள்” என்று அழைப்பதும் பொருத்தமாய் இருக்கும் அல்லவா!

    குறள் வெண்பாவில் நூலினை ஆக்கிடப் பலருமே முன்வருவதில்லை. அதற்குக் காரணம் நினைத்த கருத்தினையெல்லாம் அத்தனை எளிதாகக் குறள் வெண்பாவில் கொண்டுவந்து காட்டிவிடல் இயலாத தாகும். அப்படிச் சொல்ல முற்பட்டாலும் சொற்சுவையும், பொருட்சுவையும் பொலிந்திடக் குறள் வெண் பாவினைக் கையாண்டு வெற்றி பெற்றவர்கள் என்னும் பொழுது ஒரு சிலரே வருவார்கள். அப்படியான வர்களுள் திருவருட்பயனை அருளிய உமாபதி சிவாச்சாரியார் அமைகிறார் என்பதும் சிறப்பாய் இருக்கிற தல்லவா!

    சைவசிந்தாந்த நூல்களில் மெய்கண்ட தேவரின் சிவஞான போதம் முக்கியமானது. அதுபோல் சிவஞான சித்தியாரும் முக்கியமானது. சிவஞான போதத்தின் வழிநூலே சிவஞான சித்தியாராகும். அப்படி இவை இர ண்டும் இருக்க உமாபதி சிவாச்சாரியார் சிவப்பிரகாசம் என்னும் நூலினை ஏன் படைக்க வேண்டும். என்னும் சிந்தனை எழுகிறதல்லவா? சிவஞான போதத்தை, சிவாஞான சித்தியாரை படித்து அதன் நுட்பங்களை எழுதில் அறிந்து கொள்ளுவது எல்லோர்க்கும் இலகுவானதாக இருக்கவில்லை. இந்த நிலையிலேதான் யாவரும் அணுகும் வகையில் இலகுவாக்க சிவப் பிரகாசம் நூலினை  உமாபதி சிவாச்சாரியார் வழங்கும் நிலை ஏற்பட்டது. சிவப்பிரகாசத்துக்கு உதவியாகவே திருவருட் பயனை அரு ளினார் என்பதும் நோக்கத்தக்கதாகும், திருவருட் பயனினை முதலில் தெரிந்து கொண்ட பின்னர் அது காட்டுகின்ற வழியில் சிவப் பிரகாசத்தைப் பயின்றால் சித்தாந்தப் பொருளினை முட்டினின்றி நன்றாய் விளங்கிடக் கூடிய தாக இருக்கும் என்பது கருத்திருத்த வேண்டிய முக்கிய விடயமாகும். சிவாகமக் கடலைக் கடக்க உதவிடும் மரக்கலம் சிவப்பிரகாசம் என்றால் அந்த மரக்கலத்தை இயக்கிடும் மாலுமியாக அமையப் பெற் றிருப்பதுதான் “திருவருட் பயன்” எனலாம். வள்ளுவத்தை மனமிருத்தி அவர் வழியில் பயணித்து சைவசித்தாந்த கருத்துக்களை வழங்கிட ஆசைப்பட்டார் உமாபதி சிவாச்சாரியார். வள்ளுவர் அறம்.  பொருள், இன்பம் என்னும் அளவில் நின்றுவிட உமாபதி சிவாச்சாரியார் அதற்கு அப்பால் சிந்தித்து “வீடு” பற்றி சொல்லுவதையே குறிக்கோளாக்குகிறார்.

    அந்த நிலையில்தான் திருவருட் பயன் வந்து அமைகிறது எனலாம். வள்ளுவரைப் பின்பற்றி அதிகா ரங்கள் வைக்கிறார். அதிகாரங்க ளுக்குள் வள்ளுவர் பாதையில் பத்துக்குறள் என்பதையும் அமைக்கி ன்றார். ஆனால் அவர் அமைக்கும் குறள்களின் அடிநாதம் மட்டும் வீடு பேற்றினையும் , திருவருள் பற்றி யதுமாகவே அமைகிறது என் பதுதான் மிகவும் முக்கிய நிலையாகும்.வள்ளுவரை விட்டு விட திருவருட் பயன் ஆசிரியருக்கு மனமில்லை. அதனால் தொடக் கத்திலேயே வள்ளுவர் வழியில் தானும் பயணப்ப டுவதையே காணமுடிகிறது.

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு

    என்றுதான் வள்ளுவர் திருக்குறளை ஆரம்பிக்கின்றார். திருவருட் பயன் ஆசிரியரும் அதனைப் பின்பற்றியே

    அகர உயிர்போல் அறிவாகி யெங்கும்
    நிகரில்இறை நிற்கும் நிறைந்து

    என்றே ஆரம்பிக்கின்றார். வள்ளுவர் அகரத்துக்குக் காட்டும் விளக்கத்தில் இறைவன் என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது. ஆனால் இறைவனையும் அவன் திருவருளினையும் மட்டுமே காட்டும் வண்ணமாய் வந்திருக்கும் திருவருட்பயனின் நிலையோ வேறாக நிற்கிறது. அகரத்தை அங்கிங்கு அலைய விடாமல் இறைவனுடன் இணைத்தே இருப்பதுதான் திருவருட்பயனின் தனித்துவம்! அதன் தத்துவம்  என்றும் கொள்ளலாம் அல்லவா!

    வள்ளுவர் உலகியலை உட்பொருளாக்கியபடியால்தான் கூறவந்த யாவற்றையும் பொதுமை நோக்கிலேதான் பார்க்கிறார். அதற்கான வழியிலேதான் அனைவரையும் அழைத்தும் செல்லுகிறார். ஆனால் திருவருட் பயன் ஆசிரியர் வள்ளுவர்வழியில் பயணப்படப் புறப்பட்டாலும் அவரின் உட்கிடை இறை பற்றியதும். இறையினது திருவருள் நிலை பற்றியதுமாகவேதான் நிறைந்திருக்கிறது. வள்ளுவர் எந்த வொரு நிலையிலும் கடவுளின் பெயரினைக் காட்டாமலே திருக் குறளினை அமைத்திருக்கிறார். ஆனால் வள்ளுவர் வழியில் பயணப்பட்ட உமாபதி சிவாச்சாரியாரோ திருவருட் பயனின் காப்புச் செய்யுளிலே ஆனைமுகக் கடவுளைக் கொண்டு வந்து நிறுத்தி விடுவதைக் காணுகிறோம்.

    நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்
    கற்குஞ் சரக்கன்று காண்

    இதற்குக் காரணம் திருவருட் பயன் இறைவனின் திருவருளினை வெளிக்கொணரும் பாங்கில் பயணப்படு வதேயாகும். அந்த வகையிலேதான் திருவருட் பயனின் அதிகார வைப்பு முறைகளும் இருக்கின்றன என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். பதிமுது நிலை, உயிரவை நிலை, இருள்மல நிலை, அருளுறு நிலை, அறியு நிலை, உயிர் விளக்கம், இன்புறு நிலை, ஐந்தெழுத்தருள் நிலை, அணைந்தோர் தன்மை. என்னும் பாங்கில் அத்தனை அதிகாரங்களுமே திருவருளோடு இணைந்தாகவே வீடு பேற்றின் நுட்பத்தை உணர்த் துவதாகவே, தத்துவ தரிசனமாகவேதான் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் வள்ளுவத்தின் போக்கில் இருந்து தனித்துவமாய் திருவருட் பயனை உமாபதி சிவாச்சாரியார் வழங்கியிருக்கிறார் என்பதே உண்மையாகும்.

    சமயபாடத்தைக் கல்வியில் இணைத்து அதனைக் கட்டாய பாட மாக்கிய நாடென்னும் வகையில் இலங்கைத் திருநாட்டைத்தான் குறிப்பிட வேண்டும். அரசாங்கத்தால் சமயபாடம் கல்வி அமைப்பில் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. அவரவர் விரும்பிய சமயபாடத்தைக் கட்டாயம் படித்தே ஆக வேண்டும். அந்த வகையில் இலங்கையில் இருக்கின்ற சைவத்தமிழ் பிள்ளைகள் சைவசமயத்தைக் கற்றிடும் நல்லதோர் வாய்ப்பு வாய்த்திருக்கிறது. அங்கு சமயபாட திட்டத்தில் தோத்திர நூல்களும், சாத்திர நூல்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது. சாத்திர நூல்கள் என்னும் நிலையில் “திருவருட் பயன்” சேர்க்கப் பட்டிருக்கிறது என்பதுதான் இங்கு மிகவும் முக்கியமான செய்தியாகும். இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் தோத்திர நூல்களும், சாத்திர நூல்களும் தோன்றின. அதனை ஆக்கிய மகான்களுமே தோன்றினார்கள். ஆனால் அங்கு சமயபாடம் பாடசாலைகளில் கற்பிக்கப்படுவதே இல்லை என்பது நோக்கத்தக்கது. இதனால் இந்தியத் தமிழ்ப்பிள்ளைகளுக்குக் கிடைக்காத பெருவாய்ப்பு இலங்கை சைவத் தமிழ் பிள்ளைகளுக்கு வாய்திருக்கிறது என்பது இறைவனின் திருவருள் என்றுதான் எண்ணிட வைக்கிறது.

    சைவசித்தாந்தக் கருத்துக்கள் என்றாலே பலரும் தூரவே ஓடி விடுவார்கள். அப்படி ஓடுபவர்களை யெல்லாம் ஓடவிடமால் அருகில் அன்புடன் அரவணைக்கும் பாங்கில் அமையப் பெற்ற சித்தாந்த நூலாக அமையப்பெற்றிருப்பதுதான் திருவருட் பயனின் சிறப்பு என்று சொல்லலாம். சித்தாந்தக் கருத்துக்களை விரித்து உரைக்காமல், சிக்கலாக்கி நிற்காமல், தட்டுமுட்டு இல்லாது இலகுவாய் மனதில் பதியும் வண்ணம், குறைந்த அடியில், நிறைந்த கருத்துக்களை தந்து நிற்பதாய் அமையப் பெற்றிருப்பதுதான் திருவருட் பயன் என்றால் அது மிகையாது.

    நூறு குறட்பாக்களில் சித்தாந்தக் கருத்துக்களைத் தந்து நிற்கும் வகையில் திருவருட் பயன் அமையப் பெற்றிருக்கிறது என்பதும் அதன் சிறப்பினைக் காட்டி நிற்கிறது எனலாம். குறட்பாக்களைக் கையாண்டு கருத்துக்களை வெளிப்படுத்துவதில் வள்ளுவப்பெருமான் வல்லவரே. ஆனால் சித்தாந்தக் கருத்துக்களை குறப்பாவினால் வெளிப்படுத்தும் துணிவு உமாபதி சிவாச்சாரியாருக்கே உரித்தாகியிருப்பதையே திருவருட் பயன் தெளிவுறுத்தி நிற்கிறது. சித்தாந்தக் கருத்துக்களை யாவரும் தெளிவாய் மனதில் இருத்திட வேண்டும் என்னும் நோக்குடன், உவமைகளைக் கையாண்டு, திருவருட் பயனைத் தந்த நிலையினை வியந்து தான் பார்க்க வேண்டி இருக்கிறது எனலாம். வள்ளுவர் பெருமான் எடுத்துக்கொண்ட பொருளுக்கு, அவரின் நோக்குக்கு – வள்ளுவத்தில் உவமைகளைக் கையாழுவது அவ்வளவு கடினமானது அல்ல. ஆனால் சித்தாந்தத்தை காட்டும் வகையில் எழுந்த திருவருட்பயனில் காட்டி அதனையும் அகத்தினுள் அமர்ந்திடச் செய்திட்ட பாங்கினைப் பாராட்டி வியந்திடவே வைத்திட வைக்கிறதல்லவா! உவமைகளைக் கையாண்டதோடு மட்டுமல்லாமல் புதுமைவகை விளக்கத்தினையும் கையாண்டமையும் வியந்து பார்த்திட வேண்டியே இருக்கிறது.

    ஏகன் அநேகன் இருள்கருமம் மாயை இரண்டு
    ஆகஇவை ஆறு ஆதியில்

    என்னும் திருவருட் பயன் குறளில் புதுமையினை உமாபதி சிவாச் சாரியார் புகுத்தியிருக்கிறார். சைவசித் தாந்தப்படி பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களே உள்ளன என்று கொள்ளுவதுதான் வழக்கம். ஆனால் இவரோ ஆறு என்று திருவருட் பயனில் காட்டுவது புதுமை யாக இருக்கிறதல்லவா? ஆறு என்று சொல்லிவிடாமல் அதற்கு விளக்கமும் அந்தக் குறளில் தருவதுதான் சிறப்பாகும். அதாவது; இறைவன், உயிர்கள், ஆணவம் , கன்மம், சுத்தமாயை அசுத்தமாயை, என்று ஆறு என்று காட்டி, இவை அனைத்துமே அனாதியாக உள்ளன என்று கூறி தன்னுடைய புதிய பார்வையினை வெளிப்ப டுத்துவதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    ஊமன்கண் போல ஒளியும் மிக இருளே
    யாம் மன்கண் காணா தவை

    கூகை என்னும் பறவை இங்கே உவமையாகக் காட்டப்படுகிறது. ஆணவமாகிய இருளினை அனைவர் மனத்திலும்பதித்திடக்  கையாண்ட இந்த உவமை புதுமையாய் இருக்கிறதல்லவா? பொருள்களை ஞானக் கண்ணால் காண முடியாத உயிர்களுக்கு ஞான மெல்லாம் அஞ்ஞானம் போலவே தோற்றமளிக்கும். அது எப்படி என்பதை விளக்கிடவே இங்கே கூகை வருகிறது. கூகைக்கு பகலிலும் கண் தெரியாது. பகலில் சூரியனின் வெளிச்சத்தைக் கூட கூகை இருளாகவே பார்க்கும். உவமையின் சிறப்பு தெரிகிறதல்லவா!

    ஒருபொருளும் காட்டாது இருள், உருவம் காட்டும்
    இருபொருளும் காட்டாது இது

    பலரைப் புணர்ந்தும் இருபாவைக்கு உண்டு என்றும்
    கணவற்குத் தோன்றாத கற்பு

    பால்ஆழி மீன்ஆழும் பான்மைத்து அருள் உயிர்கள்
    மால்ஆழி ஆளும் மறித்து

    பரப்பமைந்து கேண்மின் இது பாற்கலன் மேற் பூசை
    கரப்பு அருந்த நாடும் கடன்

    விடம்நகுலம் மேவினும் மேய்ப்பாவகனில் மீளும்
    கடனில் இருள்போவது இவன்கண்

    எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகன்
    தங்குமவன் தானே தனி

    ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனல்
    பானு ஒழியப் படின்

    இங்கே காட்டப்பட்ட திருவருட் பயன் குறள்களை உற்று நோக்கும் பொழுது சிந்தாந்தக் கருத்துக்களை அதாவது சிக்கலான கருத்துக்களை, சிந்தனைகளை இலகுவாக்கிட எடுத்திட்ட புதுமையும், உவமைகளும் புலனாகி நிற்கிறது அல்லவா!

    சித்தாந்த சாத்திரங்களைப் படித்திட நினைப்பார்கள் மிகவும் குறைவு. அதற்குக் காரணம் அவை அமைந்திருக்கும் பாங்கு என்று கூடச் சொல்லலாம். துணையில்லாமல் அவற்றைப் படித்து விளங்குவது என்பது சற்று கடினமாகவே காணப்படுகிறது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இவற்றை எல்லாம் மனதில் இருத்தியே யாவரும் எழுதில் சித்தாந்தத்தை நாடவேண்டும். அதனுள் மூழ்கிட வேண்டும் என்னும் நோக்கில் அமையப்பெற்றிருப்பதுதான் உமாபதி சிவாச்சாரிரியார் என்னும் அனுபூதிமானால் அருளிச் செய்யப்பட்ட “திருவருட் பயன்” என்னும் நூலாகும். படிப்போம்! பயன் பெறுவோம்! பரமனின் அருளினை  உணர்ந்திடுவோம்! பரி பக்குவமும் வந்து வாய்க்கும்!

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 16

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 16

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    முன்னுரை

    படைப்பாற்றல் எல்லாருக்கும் கைவரப் பெறாது. அதனுள் கவிபுனைதல் என்பது இயற்கையாற்றல். கவிபுனைவார் எல்லாருக்கும் புதியன படைக்கும் எண்ணம் வந்துவிடுவதில்லை. எண்ணம் செயலாவதற்குள் எத்தனையோ சூழல்கள்! செயல்வடிவமானாலும் பொருத்தமாக அமைந்துவிடும் என்றும் சொல்வதற்கில்லை. திருவெம்பாவை, திருப்பாவை என்றே கேட்டுப் பழகிய ‘பல தலைமுறைச் செவிகளுக்குள்’ ‘தலைமுறைப்பாவை’ என்ற புதிய தலைமுறைச் சொல் அவ்வளவு எளிதாகச் சென்றுவிடாது. பாவை இலக்கியம் என்றால் அது பக்திநெறியோடு தொடர்புடையது என்னும் கருத்தியல் அவ்வளவு எளிதில் நீர்த்துப் போகாது. மரபின் ஆழம், தாக்கம் அத்தகையது!. வடிவத்திலும் வெளிப்பாட்டு உத்தியிலும் மரபையும் பாடுபொருளில் புதுமையையும் தேக்கித் தமிழினப் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான முன்னோர்களின் பெருமை கூறுதல் என்பதை முன்னெடுப்பதாகப் படைக்கப்பட்டிருக்கும் காப்பியமே தம்பி வசந்தராசன் படைத்துக் காட்டியிருக்கும் ‘தலைமுறைப் பாவை’ என்னும் இலக்கியமாகும். உடம்பின் உள்ளுறுப்புக்கள் பெரும்பாலானவை செயலிழந்து படுக்கையில் கிடக்கும் இந்த வேளையிலும் தம்பி வசந்தராசனின் தலைமுறைப் பாவையைப் படிக்கும் அரிய வாய்ப்பினைத் தமிழ்த்தாய் எனக்கு அருளியிருக்கிறாள்.  தாயின் திருவடி வணங்கி என் அன்புத் தம்பி வசந்தராசனின் தலைமுறைப் பாவையில் நான் சொக்கி நின்ற சுகமான நொடிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

    தொல்காப்பியமும் பாவை இலக்கியமும்

    தொல்காப்பியம் ஒரு கவிதையியல் நூல்! அதனை அறிஞர் பலரும் பழந்தமிழர்களின் வாழ்வியல் நூல் என்று கருதுவது அவர்கள் உரிமை. நுண்ணோக்கு உடையார்க்கு அரிஸ்டாட்டிலின் கவிதையியல் போன்றது அது என்பது எளிதில் புலப்படும். பொருளதிகாரத்தின் பிந்தைய ஐந்து இயல்களை முன்னாக்கிக் கற்றால் எளிதில் தெரிந்து கொள்ளலாம். தொல்காப்பியத்தின் பெருமையே வளமான மக்கள் வாழ்க்கை உணர்வுகளின் வெளிப்பாட்டை நன்கு ஆராய்ந்து செய்யப்படும் இலக்கியங்களைப் பற்றிய ஆய்வினை உலகினில் முதன் முதல் நிகழ்த்தியதுதான்! வரலாற்றுக் குறிப்புக்களைக் கூட ஆவணப்படுத்தத் தெரியாத ஒரு சமுதாயத்தில் அகப்புற வாழ்வியல் கூறுகளை ஒருவன் ஆராய்ந்திருக்கிறான் என்பது வரலாற்றுக்கும் ஆய்வு நெறிக்கும் முரணாகும். தொல்காப்பியத்தின் அமைப்பு முறையே அது ஒரு இலக்கியவியல் நூல் என்பதை நிறுவதற்குப் போதுமானதாகும். எழுத்து, சொல் என ஆராய்ந்த பிறகு அவற்றால் வடிவமைக்கப்படும் இலக்கிய ஆராய்ச்சியே பொருளதிகாரம். பொருளியலுக்கும் வாழ்வியலுக்கும் என்ன தொடர்பு? பொருளியல் என்றால் சொற்களின் ஆராய்ச்சி அல்லவா? உவம இயலுக்கும் வாழ்வியலுக்கும் என்ன நெருக்கம்? செய்யுளியலை வாழ்வியலில் எவ்வாறு பொருத்துவது? பொருளதிகாரப் பதிவுகளில் பழந்தமிழ்ச் சமுதாயக் கூறுகள் நிழல்போல் படிந்திருக்கக் கூடும். அதனாலேயே அது பழந்தமிழர் வாழ்வியல் கூறுகிறது என்பது அவ்வளவு முழுமையான கருதுகோள் ஆகிவிடாது. இத்தகைய சிறப்புடைய தொல்காப்பியத்தில் காணக் கிடைக்காத பாவை பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே மின்னுகின்றன என்பதைப் பின்வரும் சான்றுகளால் அறியலாம்.

    சங்க இலக்கியங்களில் மார்கழி நீராடல்

    மார்கழித் திஙகள் அதிகாலைத் துயிலெழுந்து குளிர்ந்த நீரில் நீராடி இறைவனை வணங்குதல் என்பதைச் சைவமும் வைணவமும் போற்றியுரைக்கும்.  தமிழர் மரபில் இத்தகைய நீராடல் என்பது சங்ககாலம் தொடங்கியே இருந்து வந்தது என்பதனைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கும்.

    “கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்
    பனிப்படு பைதல் விதலைப் பருவத்தை” (பரிபாடல் 11)

    ‘கார்வானம் நீங்க’ என்னும் குறிப்பானது கார்த்திகை மாதத்துக் கனமழை ஓய்ந்தது என்பதனையே குறிப்பதாகும். மார்கழிப் பௌர்ணமி மதியானது முழுமதியாதலால் மறு நிறைந்து காணப்படுகிறது. இந்நிலவினோடு ஆதிரை மீனும் சேர்கிறது. அத்தகைய நன்னாளில் விழா தொடங்குகிறது. ஆதிரை நாளில் தொடங்கும் இவ்விழா முப்பது நாட்கள் நடக்கும். அத்திருநாள் மார்கழிப் பாதியில் தொடங்கித் தைப் பாதியில் நிறைவு பெற்றமையால் ‘தை நீராடல்’ என்றே அழைக்கப்பட்டது, தேவகிக்கு மகனாகப் பிறந்து யசோதைக்கு மகனாக வளர்ந்த கண்ணபிரானைப் போல மார்கழியில் தொடங்கிய நோன்பு தைந்நீராடலோடு நிறைவடையும் காரணத்தால் இரு திங்களுக்கும் பொதுவானது பாவை நோன்பு என்பது பெறப்படும். பெண்கள் அனைவரும்  தைந்நீராடும் பரந்த குளத்திற்குத் தலைவனின் பரத்தமை கொண்ட மார்பினை உவமையாக்குகிறது ஐங்குறுநூறு. .

    “நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
    தைத்திங்கள் தண்கயம் போலப்
    பலர் படிந்துண்ணும் நின் பரத்தை மார்பே” (ஐங். 84)

    இவ்வாறு முதலில் ‘தை நீராடல்’ என்று குறிக்கப்பட்டதே பின்னர் ‘மார்கழி நீராடல்’ ஆயிற்று. கபிலரின் குறிஞ்சிக்கலியில் வரும் பெண் தன் சிறுவயதில் பாவையை வைத்து நோன்பு நோற்றாள். அந்த நோன்பிற்காகப் பிறர் மனையில் சென்று பிச்சையேற்றாள். அதனைச் சமைத்து ஆயத்தாருக்கும் கொடுத்துப் பாவைக்கும் ஊட்டினாள். இவ்வாறு தை நீராடிய பெண்களுள் சிலர் வையை நோக்கி மார்கழி மாதத்தில் உன்னுடைய நீர் மிகத் தெளிவாய் இருக்கும், எனவே நீ நீராடலுக்குத்  தகுதியுடையாய்! என்று கூறினர். மேலும் சிலரோ வையையிடம் காதலரைத் தழுவும் பேறு பெற வேண்டும் என வேண்டி நின்றனர். இன்னும் சிலர் பூவில் விழும் வண்டு அப்பூவினை விட்டு நீங்காததுபோல் எங்கள் தலைவர் எம்மை விட்டு நீங்காது இன்பம் தருவாராக! என வேண்டினர். வேறுசிலர் பெண்களின் ஏழாம் பருவ நிலையாகிய பேரிளம் பெண் பருவத்திலும் இளமையைத் தந்து செல்வத்தையும் தருக என வேண்டி நின்றனர் எனப் பரிபாடலின் பதினொன்றாம் பாடல் விளக்கியுரைக்கும். பாவை விளையாட்டோடு தொடங்கிய இம்மரபு பின்னர் சைவ சமயச்சார்பு பெற்று வளர்ந்ததை அகநானூற்றின் 181 ஆம் பாடல் உணர்த்தி நிற்கும்.

    ‘‘நான்மறை முதுநூல் முக்கட்செல்வன்
    ஆலுமுற்றம் கவின்பெறத் தைஇய
    பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர்
    கைசெய் பாவை துறைக்கண் இருக்கும்
    புகார்”; ( அகம் – 181 )

    சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட பாவை நோன்பிற்கு மழைவளம் பெறுதலும் நல்ல கணவன் அமைதலுமே காரணமாய் அமைந்தன. ஆனால், திருப்பாவையின் பாடல்கள் இறைவனாகிய கண்ணனே கணவனாக வரவேண்டும் என வேண்டுவதாக அமைந்துள்ளது. கண்ணனையே கணவனாக அடையவேண்டும் என ஆயர்குல மகளிர் மார்கழியில் காத்யாயினி தேவியை வேண்டி நோற்பதுவே பாவை நோன்பு எனப் பாகவதம் குறிப்பிடும். அதனையே வைணவ உரையாசிரியர்களும் ஏற்பர்.

    நோன்பு எவ்வாறு நோற்கவேண்டும் என இரண்டாவது பாடலும் நோன்பு நிறைவு பெற்றமைக்குப் பின் நிகழும் செயல்களை இருபத்தேழாம் பாட்டும் குறிப்பிடுகிறது. நோன்பு மேற்கொள்ளப்படும் இடம் பாவைக் களம் எனப்படும். பாவைக்கு நீராட்டுதலை இரண்டு, மூன்றாம் பாடலும் மழை பொழிய வேண்டுவதனை மூன்று, நான்காம் பாடலும் கண்ணன் கணவனாக வரவேண்டும் என்பதனை இருபத்தைந்து, இருபத்தெட்டு, இருபத்தொன்பதாம் பாடலும் விளக்குகின்றன.

    மணிவாசகப் பெருமானும் பாவை நோன்பும்

    மணிவாசகர் திருப்பெருந்துறையில் உறைந்த காலத்து அங்குள்ள பெண்கள் அம்மானை, ஊசல், சாழல் போன்றவற்றை ஆடுதல் கண்டு அவற்றை இறைவன் புகழ்பாடும் பாடல்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் தனக்குக் கிடைத்த சிவானுபவம் உலக உயிர்களுக்குக் கிடைக்கவேண்டும் என எண்ணிச் செய்ததே திருவெம்பாவை என்றும் திருவாலவுடையார் திருவிளையாடற்புராணம் குறிப்பிடுகின்றது. மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் இருந்த காலத்தில் அந்நகரில் இருந்த பெண்கள் எல்லாம் மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு முந்தைய பத்து  நாட்களும் வீடுகள்தோறும் சென்று பெண்களை அழைத்து விடியற்காலத்தில் குளிர்ந்த நீருடைய தடாகத்தில் நீராடினர். அவர்களுடைய செயலைக் கண்ட மாணிக்கவாசகர் திருவெம்பாவையைப் பாடினார். திருவெம்பாவை திருப்பாவையிலிருந்து வேறுபட்டதாகும். தான் பெற்ற சிவானுபவத்தை ஏனைய உயிர்களும் பெற வேண்டும் என்பதற்காகப் பாடப்பெற்றது திருவெம்பாவை. நல்ல கணவனையும் நீங்காத மழையையும் பெறுவதற்காகப் பாடப்பெற்றது திருப்பாவை. இவையே இரண்டுக்குமான அடிப்படை வேறுபாடு. இனி நல்ல கணவனைப் பெற வேண்டிய நிலை வளர்ச்சிநிலை எய்திக் கண்ணனே கணவனாக அமையவேண்டும் என்ற நிலைக்குச் சென்றது திருப்பாவை. இதனை,

    “எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
    மற்றை நம் காமங்கள் மாற்று – ஏலோர் எம்பாவாய் !”

    என்னும் பாசுர வரிகளால் அறியமுடியும். ஆனால் திருவெம்பாவை இதற்கு நேர் எதிரானது. சிவனைக் கணவனாகக் கருதுதல் சைவ மரபன்மையின் சிவனடியார்களுக்கு வாழ்க்கைப்படுவதையே பெண்கள் விரும்பினர். அதற்கான நோன்பே திருவெம்பாவை.

    “உன்னைப் பிரானகப் பெற்ற உன் சீரடியோம்
    உன் அடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
    அன்னவரே எம் கணவர் ஆவார்! அவர் உகந்து
    சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்!”

    என்ற வரிகள் உணர்த்தும். இவ்வாறு சங்க காலத்தில் தை நீராடலாய்த் தொடங்கிப் பின் வந்த காலத்தில் மார்கழி நீராடலாய் மாறியதே பாவை நோன்பின் வரலாறாகத் தெரிகிறது. பாடப்பெற்ற காலமும் உள்ளடக்கமும் நோக்கமும் தொடக்கநிலையிலிருந்தே மாறுபடுவது பாவை இலக்கியத்தில் வியப்பான ஒன்று அல்ல., வெகு இயல்பே என்பது இதனால் நிறுவப்படுகிறது. எனவே திறனாய்வுக்குட்படுத்தப்படும் தலைமுறைப்பாவையின் உள்ளடக்கமோ வடிவக் கட்டுமானமோ மரபு மீறியது என்ற பேச்சுக்கே இடமில்லாது போய்விடுகிறது. இது பற்றிக் கூடுதலான சில தகவல்கள் தொடர்கின்றன.

    பாவை நூல்களின் பட்டியல்

    பாவை இலக்கியத்தைப் பற்றிப் பேராராய்ச்சியை நிகழ்த்தியவர் பண்டிதமணி அவர்களே. தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் அவர்களின் உரைப்பகுதிகளின் அடிப்படையில் அவர் தமது ஆராய்ச்சியைச் செந்தமிழ் இதழில் நிகழ்த்தியிருக்கிறார். தொடக்கக் காலத்தில் பாவைப்பாடல்கள் வாய்மொழி இலக்கியங்களாகவே அமைந்துபோன காரணத்தால் எந்த ஒரு பாவைப்பாடலையும் முழுமையாகப் பெற முடியவில்லை என்னும் கருத்தினை முன்வைக்கிறார்.

    இனிப் பாவைப்பாடல்கள் கலிப்பா வகையைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. நான்கடி முதல் பத்து அடிகளில் இவை பாடப்பெற்றன என்பதையும் பண்டிதமணி விளக்கியிருக்கிறார். கலிவிருத்தமாகப் பாடப்பட்ட இப்பாவை இலக்கியம் பின்னாளில் அதாவது ஆண்டாள், மணிவாசகர் ஆகியோர் இவர்கள் காலத்தில் கொச்சகக் கலி அமைப்பில் எட்டு அடிகளால் நிரம்பிய நூல் வடிவத்தில் அதாவது பதிகமாகவும் பாசுரமாகவும் பாடப் பெற்றிருக்கிறது. புறக்கட்டுமானத்தைப் பொருத்தவரையிலும் திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டு விளங்க, திருவெம்பாவையோ இருபது பாடல்களை மட்டுமே கொண்டு விளங்குகிறது! கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய திருப்பாவை முப்பது பாடல்களும் ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய திருவெம்பாவை இருபது பாடல்கள் மட்டுமே கொண்டிருப்பதும் சிந்தனைக்குரியதாகும். திருப்பாவை, திருவெம்பாவை என்னும் வைணவ மற்றும் சைவ இலக்கியப் பாவைகளைத் தொடர்ந்து தமிழில் பின்வருமாறு தோன்றிய பாவைகள் கிட்டியிருக்கின்றன.

    1. 16ஆம் நூற்றாண்டில் தத்துவராய சுவாமிகள் எழுதிய இரு பாவை நூல்கள்
    2. 1920 அவிரோதநாதர் எழுதிய சமணர் திருப்பாவை
    3. 1954இல் எழுதப்பட்ட முருகன் திருப்பாவை
    4. 1957இல் ஒன்பது துறவிகளால் எழுதப்பெற்ற திருவெம்பாவை
    5. 1962இல் ஆ.மு.வேங்கட்ராமன் எழுதிய மதுரை பரிபூரண விநாயகர் திருவெம்பாவை
    6. 1963இல் கண்ணதாசன் எழுதிய தைப்பாவை
    7. 1965இல் பெருஞ்சித்திரனார் எழுதிய செந்தமிழ்ப்பாவை
    8. 1966இல் கவியோகி சுந்தானந்த பாரதியார் எழுதிய தமிழ் திருவெம்பாவை
    9. 1973இல் கா.மு.ஷெரீப் எழுதிய நோன்புத் திருப்பாவை
    10. இல் காரை இறையடியான் எழுதிய திருவருட்பாவை
    11. 2019இல் துரை வசந்தராசன் எழுதிய தேன்பாவை
    12. 2020இல் வள்ளிமுத்து எழுதிய எழிற்பாவை
    13. 2020இல் வரதராசன் எழுதிய சுறவம்பாவை

    என்று பாவை இலக்கிய நூல்களின் பட்டியல் விரிவடைகிறது. எனினும் இவை எதுவும் ஒன்று போல் மற்றொன்று இல்லை என்பதும் கருத்திற் கொள்ளத்தக்கது. ‘பாவை’ என்ற சொல்லைக் கொண்டு முடிவதினாலேயே இந்த இலக்கியம் ஒரே தன்மையுடையவாயின என்றும் கருதுவதற்கில்லை.

    பா(ர்)வை  பலவிதம்!

    ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்வதற்காகத்’ தொடங்கப் பெற்ற திருப்பாவை நோன்பு மங்கையர் நல்ல கணவனைப் பெறுவதற்கான நோன்பாகவும் அமைந்தது. ‘எம் கொங்கை நின் அன்பர் அல்லால் தோள் சேரற்க’ என்னும் திருவெம்பாவை காண்க. கவிஞர் கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்த வேளையில் எழுதிய நூல் தைப்பாவை. சமயப்பற்றுள்ள குடும்பத்தில் பிறப்பு, சமய நூல்களில் ஈர்ப்பு மற்றும் ரசனை ஆகியன அவரிடம் திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய நூல்களைக் கொண்டு சேர்த்திருந்தது. அவற்றின் யாப்பழகும் ஓசைச் செப்பமும் அவர் மனத்தில் இடம் பிடித்ததன் விளைவாக எழுந்த நூல் தைப்பாவை. திருப்பாவையும் திருவெம்பாவையும் பாவை வடிவமொன்றைச் செய்து அதனை முன்னிலைப்படுத்திப் பாவாய் என அழைத்துத் தோழியர் பாடுவதாக அமைந்திருக்கும். ஆனால் தைப்பாவையில் கவியரசு கண்ணதாசன் தைமகளையே ‘தைப்பாவாய்’ என அழைத்துப் பாடியிருப்பார். தைத்திங்கள் முதல்நாளைத் தமிழர் திருநாள் என்று கொண்டாடும் தமிழர் இயல்பையும் திராவிட இயக்கக் கருதுகோளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழர் மரபு, வேளாண்மை, காதல் வாழ்வு, மூவேந்தர் மாண்பு உள்ளிட்ட பற்பல அம்சங்களைக் கொண்டு தைப்பாவை எனும் நூலை சுவைமிக்க கவிதைகளால் தொடுத்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன். தைமகள் வருகையால் தமிழர்களுக்குரிய எல்லா மேன்மைகளும் கிட்டவேண்டும் என்றும் கன்னியருக்குத் திருமணம் கைகூட வேண்டுமென்றும், மூவேந்தர் மாண்பு துலங்க வேண்டுமென்றும் பற்பல அம்சங்களை இந்நூல் பாடுகிறது.

    “எந்தமிழர் கோட்டத்து இருப்பார் உயிர்வளர
    எந்தமிழர் உள்ளத்து இனிமைப் பொருள்மலர
    எந்தமிழர் கைவேல் இடுவெங் களம் சிவக்க
    எந்தமிழர் நாவால் இளமைத் தமிழ் செழிக்க
    முந்து தமிழ்ப்பாவாய் முன்னேற்றம் தான் தருவாய்
    தந்தருள்வாய் பாவாய் தைவடிவத் திருப்பாவாய்
    வந்தருள்வாய் கண்ணால் வாழ்த்துரைப்பாய் தைப்பாவாய்”

    இப்பாடல் தமிழரின் வாழ்வியல்புகள் பலவற்றையும் சுட்டுகிறது. தைமகள் வருகையால் தமிழர் நலன் மேம்பட வேண்டும் எனும் வாழ்த்தையும் இப்பாடலில் கவியரசர் கூறுகிறார்.

    தலைமுறைப்பாவை கட்டுமானச் சிறப்பு

    எட்டடி கொண்ட கொச்சகக்கலியால் ஏனைய பாவைகள் எல்லாம் அமைந்திருக்க வசந்தராசன் எழுதியிருக்கும் இந்தப் பாவை பத்து அடிகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.

    இந்தப் பாவை முகநூலில் வெளிவந்த போது பின்னூட்டம் இட்ட பேராசிரியர் ஒருவர் ‘முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி எழுதுக’ என எட்டடிக்கு மிகாமல் எழுதவேண்டும் என்று கடடளையிட்டது என் நினைவில் இன்னும் வட்டமிடுகிறது!.

    மானுடம் வளர்ச்சி நோக்கியது. சிந்தனைகளும் சிக்கல்களும் புதியனவாகத் தோன்றும். சான்றாக நான்கடி கொண்டு தனிச்சொல் பெற்று அமைவது நேரிசை வெண்பா என்பது அனைவருக்கும் தெரியும். தனிச்சொல் இல்லாமல் நான்கடியாய் வந்தால் அது இன்னிசை வெண்பா என்பதும் தெரியும். ஆனால் தனிச்சொல் பெற்று மூன்றடியால் வந்தால் அது என்ன பா? இரண்டாம் அடிக்குப் பதிலாக மூன்றாவது அடியில் தனிச்சொல் பெற்று வந்தால் அது என்ன பா? ஒரு நேரிசை வெண்பாவில் கனிச்சீர் வந்துவிடுமானால், அதற்கு ஆயுள் தண்டனை கொடுத்துவிடலாமா? வெண்டளை தவிர்த்துப் பிற தளை வந்துவிடுமானால் அப்போது அது என்ன பா? எத்தனைப் பேருக்கு இது தெரியும்?

    ஏதோ எனக்கு மட்டுந்தான் தெரியும் என்பது போல நான் எழுதுவதாகக் கருதிவிடக்கூடாது, நாம் கவனிப்பதில்லை! அவ்வளவுதான். அதுபோலவேதான் எட்டடிதான் கொச்சகக்கலி வரவேண்டும் என்பது விதியில்லை. அது வழக்கியல் மரபு. பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபின் மாற்றம். இந்த மாற்றம் வலிந்து அமையக்கூடாது. தம்பி வசந்தராசன் தான் எழுதிய பாவை இலக்கியத்தைப் பத்தடிகளால் புனைகிறார் என்றால் சிந்தனை ஓட்டம் அப்படி! செய்திகளின் சாரம் அப்படி! இன்னும் பறையறைந்து சொல்லப் போனால் தலைமுறைப் பாவையின் பாடுபொருள் தமிழிலக்கியம் இதுவரை காணாதது! தற்கால முகநூல் கண்டது!. முற்றிலும் வேறுபட்டதொரு பாடுபொருளை மாறுபட்டதொரு வடிவத்தில் சொல்வதற்குப் படைப்பாளனுக்கு உரிமை உண்டு!

    பத்தடி பாடினாலும் பாலுணர்வு கண்டதில்லை

    கையாலாகாதவன் மரபினைப் பின்பற்ற இயலாமைக்கும் வல்லாளன் படைப்பில் அது மாற்றம் பெறுவதற்கும் வேறுபாடு உண்டு. திருவெம்பாவை உள்ளிட்ட அத்தனைப் பாவைகளும் அவற்றுள் வரும் பெண்கள் வாய்மொழியாக அமைந்தவை. தலைமுறைப் பாவைதான் படைப்பாளன் வாய்மொழியாக அமைந்தவை. ஆம்!. ஓர் ஆண் பாவை பாடியிருக்கிறான்!  கொழுநனோடு கொஞ்சிய பாவைகள் உண்டு!. இஞ்சியையும் மஞ்சளையும் ஏற்றமிகு தமிழையும் பாடிய பாவைகள் உண்டு. இறைவனைப் பாடிய பாவைகள் உண்டு! இறைவனையே கணவனாக வேண்டிய பாவைகள் உண்டு! மழைவேண்டிய பாவைகள் உண்டு! மார்கழியில் தொடங்கித் தையில் முடிந்த பாவைகளும் உண்டு. தம்பி வசந்தராசனின் பாவை தலைமுறைப்பாவை! தன் முன்னோர்களின் பெருமை பேசும் பாவை! தமிழ்ச் சான்றோர்களின் தியாகத்தை எடுத்துரைக்கும் தண்டமிழ்க் காப்பியம்! தான் வாழ வாழ்ந்த தலைமக்களையும் தமிழ் தழைக்க வாழ்ந்த தாளாளர்களையும் தானும் போற்றிப் பிறரையும் போற்றுங்கள் என வேண்டி முரசு கொட்டும் வேறுபட்ட பாவை இந்தத் தலைமுறைப் பாவை!

    வீர முனுசாமியின் வெற்றிப் பரம்பரை

    தலைமுறைப் பாவை என்னுந் தலைப்பு மட்டுமே மரபு சார்ந்தது, கட்டுமானம் கொச்சகக்கலியாக அமைந்தாலும் பத்தடிப் பாவை என்பதால் அதுவும் புதுமையே. தமிழ்க்கவிதை வரலாற்றில் யாரும் சிந்திக்காத ஒரு சமுதாயக்களம். அது ஒரு புதுமை! ஒரு தனிமனிதன் தன் குடும்பம் சார்ந்த முன்னோர்களின் சொத்துக்களுக்கு வாரிசாக வருவதுண்டு. ஆனால் அந்த முன்னோர்களை இனிய இலக்கியத்தில் பாசத்தோடு பதிவு செய்வது வேறு. பெற்றவர்களுக்கு நூலை அர்ப்பணிப்பதோடு இதுவரை முடிந்து வந்த முன்னோர் வணக்கத்தை ஒரு சிற்றிலக்கியத்தின் பாடுபொருளாக ஆக்கி ஒரு மாபெரும் உள்ளடக்கப் புரட்சியைச் செய்திருக்கிறார் வசந்தராசன். அண்ணாமலையான் ஒருவனை மட்டும் பாடுபொருளாகக் கொண்டதுதான் திருவெம்பாவை! கண்ணபிரானை மட்டும் பாடுபொருளாகக் கொண்டதுதான் திருப்பாவை!. ஆனால் தலைமுறைப்பாவையில் பாடுபொருளாக ஒருவர் அல்லர் ஒரு பட்டாளமே இருக்கிறது!.

    “ஈரம்வாழ் நெஞ்சன்! இரும்பையுமே ஈர்த்துவக்கும்
    சோரமே காணாத சொற்கற்பன் ! என்றைக்கும்
    ஊரின் நடுமரம்! உண்ணக் கனிநீட்டும்!
    ஊருணித் தாய்மை! ஒழுகும் மலைமார்பு!
    ஆரத் தழுவுகின்ற அன்பின் பெருங்கடல்!
    சேரன்தன் வில்லம்பாய்ச் செஞ்சொல் மணிதீர்ப்பு!
    ஓரமே போகாத உயராண்மை! தன்நிழலைத்
    தூரம் அனுப்பாத் தொடருச்சி வெங்கதிராம்
    வீர முனுசாமி வெற்றிப் பரம்பரையின்
    தீரம் உரைக்கவந்தேன்!”

    எனத் தொடக்கம் செய்யும் வசந்தராசன் அனைத்து உறவுகளையும் இந்தப் பாவையில் பதிவு செய்திருக்கிறார். தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில்கூடப் பாட்டுடைத் தலைவனாகிய மன்னனின் தாயும் தந்தையும் மட்டுமே (இன்னாருக்கு இன்னார் வயிற்றில் தோன்றியவன் என்பது போல) கொளுவில் குறிக்கப்பட்டிருக்கின்றனர். பக்திப் பொருளைப் பாடினாலும் பாவை என்பது அகம் சார்ந்த இலக்கியம். பாட்டுடைத் தலைவர்களாகப் பலரையும் பதிவு செய்திருப்பதால் ஒருவகையில் புறம் சார்ந்த கையறுநிலையாகவும் கொள்ளலாம். கையறுநிலையில் பெருமையும் இழப்பும் குறிக்கப்படும். இதில் பெருமை மட்டும் குறிக்கப்படுகிறது. பிறப்பினால் மனிதன் என்றாலும் அவனை மனிதன் என ஏற்றுக் கொள்வது மானுடச் சமுதாயம். மானுடச் சமுதாயத்தின் முதல் அறிமுகம் பள்ளி. அந்தப் பள்ளியின் பெருமையைப் பாடுகிறார் கவிஞர்!

    கவிஞன் வரலாற்றை எழுதுவதற்கும் வரலாற்றாசிரியன் கவிதை எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. தலைமுறைப் பாவை கவிஞனால் எழுதப்பட்ட வரலாறு. எனவே கவிமணம் தவிர்க்க இயலாதது. அதனால் வரலாறு தடம் மாறுவதில்லை. மாறாகத் தேசிய நெடுஞ்சாலைப் பூக்களாகக் கவிநயம் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைக் காணமுடிகிறது. ‘மனிதன் இரக்கத்தோடு வாழவேண்டும்’ என்பது கருத்து. ‘ஈரம் தான் வாழ ஒரு இடத்தைத் தேடி அந்த இடமாக முனுசாமியின் நெஞ்சைத் தேடி வாழ்ந்தது’ என்கிறது கவிதை. ஊரின் நடுமரம்! உண்ணக் கனிநீட்டும்! ஊருணித் தாய்மை!’ என்பது வள்ளுவத்திற்கு வசந்தன் எழுதிய கவிதை உரை!. ஓரம் போகாத உயர் ஆண்மையாம்! அடடா! தன் தீர்ப்புக்குக் கட்டுப்படுவர் என்பதனால் கோடிவிடக்கூடாது என்பதை அழகாகப் பாடுகிறார். ‘தன்னிழலைத் தூரம் அனுப்பாத தொடருச்சி வெங்கதிராம்’ என்று பாட்டனின் பண்பைப் பாடுகிறார். உச்சிப்பொழுதுக்கு முன்னும் பின்னும் கதிரவனின் நிழல் சாயும். சரியும்! முனுசாமி உச்சிச் சூரியனாம்! நடுநிலைக்கு இப்படியொரு உருவகம்! உவமம்!

    பள்ளியையும் ஆசிரியர்களையும் பாடும் பாவை

    பாவையரைப் பாட்டுடைத் தலைவராகக் கண்ட காப்பியங்கள் உண்டு. மறவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்ட காப்பியங்கள் உண்டு. தான் படித்த பள்ளியைக் களமாக்கிப் பாடம் சொன்ன ஆசிரியர்களைப் பாட்டுடைத் தலைவர்களாக்கிய புதுமையை வசந்தன் இந்தப் பாவையில் செய்திருக்கிறார். ஒரு நூலைப் படிக்கிறபோது ஏதாவது கிடைக்காதா என்ற ஆர்வம் மேலோங்க அணுக வேண்டும்! ‘இவன் என்ன பாடிவிடப் போகிறான்? இதில் என்ன கிடைத்துவிடப் போகிறது?’ என்னும் மனப்பான்மையோடு அணுகினால் பார்வை மங்கும்! படைப்பில் புகையண்டும். பொங்கலுக்கு வாய்த்த புதுத்துணி என்பது ஆண்டுதோறும் மாறி வரும் ஆசிரியர்களைக் குறித்தது! ஒவ்வொரு பொங்கலுக்கும் புதுத்துணி என்பது குறிப்பு உவமம்! இது சிறுபான்மையாக இருந்தாலும் ஆசிரியர் அனைவரையும் வணங்கி மகிழும் இளைய நெஞ்சுகளின் இளகிய வெளிப்பாடாகக் கொள்ளலாம்! இன்றைக்கு நாம்பேசுகிற மானுடம் மனிதநேயம் எல்லாம் ‘பொதுநலச் சரிகை’ போர்த்திய போலிச் சுயநலம்! தம்பி வசந்தன் எழுதுகிறான் பாருங்கள்!

    “எங்கும் உயர்த்தில் எம் பள்ளி வாரிசுகள்!”

    இவன் அங்கே படிக்கப் போனது ஒரு மாணவனாய் “எம்பள்ளியாம்!” இலக்கணத்தின் தன்மைப் பன்மையை எப்படி இலக்கியமாக்குவது என்ற வித்தை இவனுக்குத் தெரிந்திருக்கிறது! ‘எங்கும்’ என்பது சிற்றூர், மாவட்டம், மாநிலம், நாடு என்பனவற்றைத் தாண்டி உலகளாவிய நிலையில் வாழ்ந்து வரும் மங்கலங் கிழார் பள்ளியில் கற்ற மாணவர் பலரையும் குறித்தது! பள்ளியைக் கற்பித்த கல்வி நிலையமாகக் கருதாது அதனைத் தம் உடைமையாகக் கருதிக் காக்க வேண்டுமென்பார் ‘வாரிசுகள்’ என்றார். வட்டாட்சியரிடம் சென்றால் இதற்கு வாரிசுச் சான்றிதழ் தரமாட்டார் என்பது வசந்தனுக்கும் தெரியும்! செங்கதிராய் எமை மாற்ற திங்களாய்த் தேய்ந்தார்கள் என்னும் கற்பனை அறிவியல் கண் கொண்டு நோக்குவார்க்குப் புலனாகாது. திங்கள் தேய்வதும் இல்லை வளர்வதும் இல்லை என்பது அறிவியல். ஆனால் ‘வளர்பிறை’, ‘தேய்பிறை’ என்பது கதிரவனுக்கு இல்லை.  திங்கள் தேய்வது கற்பனைச் சித்திரம்!. செங்கதிரோன் தேயாது நிலைத்திருப்பதும் கற்பனைச் சித்திரம்!

    “திங்கள் ஒரு புறமும் ஔிர்
    செங்கதிர் ஒரு புறமும்
    தங்கியிருந்திடினும் ஒளி
    தாவுதல் உண்டது போல்”

    என்பார் பாவேந்தர்! திங்கள் தேய்வதற்கு ஒரு காரணத்தைத் தன் குறிப்பாகச் சொல்லுகிறான் கவிஞன்! அந்தக் காரணத்தின் நுண்ணியத்தில் இருக்கிறது கவிதை! ஆசிரியருக்கான இலக்கணத்தை அறிந்தவர்களுக்கு இது புரியும். நிலம்போலச் சகிப்புத்தன்மை, மலர்போல மென்மை, துலாக்கோல்போல நடுநிலை, மலைபோல அறிவுயர்ச்சி இவைகளெல்லாம் அவருக்கான இலக்கண வரையறைகள்! நாங்கள் குளிர்வது உங்கள் புகழ் ஒளி உலகெலாம் பரவவே என்னும் ஆசிரியர்களின் பரந்து பட்ட உள்ளக் குறிப்பைச் ‘செங்கதிராய்’ என்னும் சொல் உணர்த்தியது காண்க. ‘நீங்கள் நிமிரவே நாங்கள் குனிந்தோம்’ என்பது குறிப்பு. கண்டிப்பும் கரிசனமும் துணிவும் கனிவும் கொண்ட வேதியல் கலவையே ஆசிரியர் பணி என்பதைத் ‘திங்களாய்த் தேய்ந்தார்கள் தீயாய் ஒளிர்ந்தார்கள்’ என்னும் தொடரால்  உணரலாம்! இனித் தீயினின்றும் பிறப்பதே ஒளியாதலின் ஒளியைத் தீயாய் ஒளிர்ந்தார் என்றது என்னையெனின், தீ காரணம் ஒளி காரியம். வசந்தன் காரணத்தைக் காரியமாக்கி உரைத்தார்!. ‘சூரியப் பிறைகள்’ என்பார் தமிழன்பன்!. உள்ளடக்கம் சூரியனைப் போல் சுட்டெரிப்பன! அவைபற்றிய பாடல்கள் குறுகிய ஹைக்கூ வடிவம்! அது நிலவுக்குப் பிறை! இரண்டையும் இணைத்துத் தாம் எழுதிய நூலுக்குப் பெயர்வைக்கிறார் தமிழன்பன் ‘சூரியப் பிறைகள்’! தலைப்பே ஒரு கவிதை! இது தமிழன்பனுக்கு மட்டுமன்று, தலைமுறைப் பாவைக்கும் பொருந்தும்!

    ‘பொங்கு புதுப்புனலின் பேரருவிப் பாய்நதியாய்’ என்னும் அடியில் புனல், அருவி, நதி என்னும் பொருட்பெயர்களுக்குப் புணர்த்திக் காட்டியிருக்கும் அடைகள் அழகியல் படைப்பாளனின் அழகியல் உணர்வை வெளிப்படுத்துவனவாம்! இனிப் பொங்கு புனல், பாய்நதி என வினைத்தொகையாய்க் கூறியதனால் எப்பருவக் காலத்தும் வற்றாத நிலையைக் குறித்தது. ‘பேரருவி’ எனப் பண்படை புணர்த்தி நயாகராவைச் சிந்திக்க வைத்திருக்கிறார். ஆசிரியர்தம் கற்பிக்கும் நெறிமுறைக்குக் காட்டப் பட்டிருக்கும் உவமங்கள் திருக்குறளைப் போலப் பத்தினி உவமங்கள்! பொருளாகிய பள்ளி ஆசிரியர்களுக்கு அடைபுணர்க்காது உவமத்திற்கு அடைபுணர்த்த பாங்கு அவர்தம் உணர்ச்சியையும், சரளமான கற்பித்தலையும் உணர்த்துகிறது. நதியாய் என்னும் உவமத்தைப் பள்ளியோடு இணைக்க! ‘பள்ளி’ ஆகுபெயர் மாண்பு ஆசிரியர்க்கன்றிக் கட்டடத்துக்கு ஆகாமையின்! இப்போது படித்துப் பாருங்கள் பள்ளியைப் பாடும் பாங்கினை!

    “தெங்கிளமை நன்றியினைத் தேடிச் சுமக்கின்ற
    நுங்கிளமை நெஞ்சத்தார்! நூல்நிறைக்கும் ஆற்றலென
    எங்கும் உயரத்தில் எம்பள்ளி வாரிசுகள்!
    பொங்கலுக்கு வாய்த்த புதுத்துணிபோல் ஆசான்கள்
    எங்களுக்கு வாய்த்தார்!செங் கதிராய் எமைமாற்ற
    திங்களாய்த் தேய்ந்தார்கள்! தீயாய் ஒளிர்ந்தார்கள்!
    இங்கும் மலையுச்சி ஏராள மாய்ப்படைத்த
    பொங்கு புதுப்புனலின் பேரருவிப் பாய்நதியாய்த்
    தங்குதடை யின்றித் தமிழ்வளர்க்கும் எங்களூர்
    மங்கலங்கி ழார்ப்பள்ளி மாண்பினைக்காண் எம்பாவாய்!”

    பள்ளியைப் பாடுகிறார். தொடர்ந்து அது உருவாக்கிய வாரிசுகளைப் பாடுகிறார்.

    ஊரைத் தாயாகப் பாடிய ஒரே கவிஞன்

    ‘குருவராசப் பேட்டை’ என்பதன் மரூஉ குருவை! பேரிலக்கியத்தில் நாடுகாண் காதை, காடுகாண் காதை என்றெல்லாம் பாடுவார்கள். நாடு, நகர், பாடுவார்கள்! காடு, கரை பாடுவார்கள். படலங்கள் என்னும் பெயரால் பல நூறு பாடல்களைக் கம்பன் பாடியிருக்கிறான். ஆனால் பாவை என்னும் சிற்றிலக்கிய உள்ளடக்கத்தில் தான் பிறந்த மண்ணைத், தன்னை வளர்த்த மண்ணைத், தன்னை உருவாக்கிய மண்ணைப் பாடியவன் வசந்தராசனாகத்தான் இருக்க முடியும் என்பது என் பணிவான அனுமானம். அது மட்டுமன்று. அந்த ஊரின் பெருமைகளை நிரலாகச் சொல்லிக் கொண்டு வந்து உணர்ச்சி மேலிட்டால் பெண்ணாக அதாவது தாயாக உருவகம் செய்திருக்கிற படைப்பாளுமை பெரிதும் மெச்சத் தகுந்ததாகும்.

    “தருமம் வளர்த்தெடுக்கும்! தன்வியர்வை ஊற்றளித்துத்
    திருவை விதைத்திருக்கும்! தென்பொதிகைச் தமிழின்
    அருமை உணர்த்திவைக்கும்!ஆர்ப்பாட்ட மேதுமின்றிப்
    பெருமைப் பயிர்வளர்க்கும்! பேராண்மை நீட்டும்!
    கருமமே கண்ணாகிக் காலத்தின் கைரேகை
    கருவில் பதித்துவைக்கும்! கண்முன்னே கன்னல்
    திருமுறைகள் நூறாய்த் திருப்பதிகம் பாடவைக்கப்
    பெறுகின்ற பேரறிஞர் பேசும் வயிறுடையாள்
    ஒருமுகத்தாள் எங்கள் உயிர்நிறைக்கும் தாய்மண்ணாள்
    குருவை இளநகர்காண்!”                                  

    இந்தப் பாட்டில் ஒவ்வொரு வினைமுற்றுக்கும் இறுதியில் குருவை என்பதை இணைக்க வேண்டும்! சான்றாகத் தருமம் வளர்த்தெடுக்கும் குருவை! திருவை விதைத்திருக்கும் குருவை! என்றவாறு இணைத்துப் பொருள் காணவேண்டும். இப்படிப் பாடிவந்தவர் பேரறிஞர் பேசும் வயிறுடையாள் என்று ஊரை உயர்திணையாக்கிவிடுகிறார். பிறந்த மண்ணைப் பெற்ற தாயாக நோக்குகிறார். பழம்பெரும் ஓர் ஊரை இளநகர் என்று பாடுவது அதன் பெருமை நோக்கி!

    “ஊரின் இருபுறமும்  ஓய்ந்த இருகுளங்கள்!
    தேரின் வடமாய்த் தெருக்கள்!  இவைநடுவே
    சீராய்ப் பிரித்தபடிச் செல்லும் நடுச்சாலை!
    நாரின்பூக் கட்டெனவே நன்றிணைந்த வீடுகள்முன்
    பேரின்பம் பேசும் பெருந்திண்ணை! சூழ்ந்திருக்கத்
    தூரெடுத் தூட்டும்  துணைதொடக்கப் பள்ளி !ஆங்குப்
    பேரெடுத்தப் பேர்கள் பெருங்கூட்டம்!”

    முதன் முதல் எழுதிய பொதுத்தேர்வுக்கான எண் நம்மில் எத்தனைப் பேருக்கு நினைவிருக்கிறது? எண்ணிப்பாருங்கள்! வசந்தராசன் இந்தப் பாவையில் குருவை தொடக்கப்பள்ளி மாணவனாகவே இருக்கிறார். ஓய்ந்த குளமாம்! மக்களும் விலங்குகளும் வாயாடி நீராடி வந்து போகிறவரைக்கும் அது ஓயாத குளம். போனபிறகு அது ஓய்ந்த குளம். திண்ணைப்பேச்சு கேள்விப்பட்டதுண்டு! திண்ணையே பேசிக் கேள்விப்பட்டதுண்டா? குருவராசப்பேட்டை வீட்டுத் திண்ணைகளும் பேசுமாம்! வீட்டுக்கு உரிமையாளரும் விருந்தினரும் வருவாரும் போவாரும் என அனைவரும் அமர்ந்து பேசி மகிழ்கிற திண்ணை அது. ‘இடத்தின் நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது’ என்பார்கள் இலக்கண அறிஞர்கள். குளம் நிறைந்தது என்றால் குளம் நிறையாது நீர்தான் நிறையும். நீரின் தொழில் குளத்தது வினையாகச் சொல்லப்பட்டதுதான் இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது என்பது. இலக்கணம் இலக்கியத்தை இனிமையாக்குவது இப்படித்தான்!

    இளைக்காத் தமிழெடுத்த மங்கலம் கிழார்

    தன் குடும்பப் பரம்பரை பாடும் வசந்தராசன் ஊரைப் பார்க்கிறார். பாடுகிறார். ஐம்பதுகளில் தமிழகத்தில் கல்விப் புரட்சி ஏற்பட்டது. மூடப்பட்ட ஐயாயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் அவ்வட்டாரத்து ஒருவர் மட்டும் தன்னந் தனியே முயன்று முப்பத்திரண்டு பள்ளிகளைத் திறந்திருக்கிறார். ‘அன்ன யாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்பானே பாரதி அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டவர்தான் தலைமுறைப்பாவையின் தலைப்பாத்திரம் மங்கலம் கிழார். தறிநூல் மணக்கும் அந்த வட்டாரத்தைத் தமிழ் நூல் மணக்க வைத்த தமிழ்க்கிழார்.

    “யாத்த தமிழெடுத்து யாவர்க்கும் ஊட்டுதற்கே
    காத்திருந்த பல்கலைக் கல்விக் கழகமாய்
    மாத்தமிழால் மண்மணத்தை மாற்றிவைத்த கூத்தபிரான்!
    ………………………………………………………………………………………………
    சேர்த்துவைத்துப் போராடி செந்தணிகை மண்மீட்ட
    கூர்த்தமதியாளன்! கூடநின்ற போர்த்தலைவன்!
    ஆர்த்துக் குதிக்காத ஆழ நடுக்கடலான்!
    சீர்த்தமதி எங்கள் சீர்மங்கலங் கிழார்”   

    இந்தப் பாடலில் அறிமுகம் செய்யப்படும் மங்கலங் கிழார் திருத்தணிகைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சிலம்புச் செல்வர்தம் பக்கத்துணையாய் இருந்த பண்பாளர்! கூர்த்த மதியாளன் கூடநின்ற போர்த்தலைவன்!’. ‘ஆர்த்துக் குதிக்காத ஆழ நடுக்கடலான்’ என்னும் தொடர் அன்னாருடைய அமைதியான உருவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர். தொடர்ந்து எழுதுகிறார்.

    “வித்தாய் வெடித்து விண்ணோக்கி எழுந்தபடி
    கொத்தாய் தான்காய்க்கும் கொடுமையதன் கோலத்தை
    மொத்தம் ஒழிக்கும் முனைப்புதான் கல்வியெனச்
    சித்தர் கிழாரவரின் சிந்தை குதித்ததனால்
    எத்திக்கும் உண்ண இளைக்காத் தமிழெடுத்துச்
    சத்துண வாக்கினார்! சங்கத் தமிழ்க்கடலின்
    முத்தெடுத்துத் தந்தார்! முழுத்தணிகை முற்றத்தில்
    ஒத்தையாய் உள்நுழைந்து ஊர்பதி னெட்டையும்
    தத்தெடுத்துக் கொண்டு தமிழர்நம் நாட்டுக்குப்
    புத்தாண்டாய் வந்தார்! புகழ்வணங் கெம்பாவாய்!”                                

    பிறவியினால் மனிதன்தான்! ஆனால் சமுதாயத்தில் தோற்றமே ஒருவனை மனிதனாக்கிவிடாது. கற்றவனுக்கும் கல்லாதவனுக்கும் உள்ள வேறுபாட்டினை விலங்கொடு ஒப்பிட்டுக் காட்டும் வள்ளுவம் ஓர்க! இந்த உண்மையை உணர்ந்த கிழார் பதினெட்டு ஊர்களையும் தத்தெடுத்துக் கொண்டாராம். உயர்திணையைத் தத்தெடுப்பதை அறிந்தார்க்கு ஊர்களையே தத்தெடுப்பது புதுமைதானே! அந்தப் புதுமையைத்தான் வசந்தராசன் பாடியிருக்கிறார்.

    தந்தையைப் பாடும் தனையன்

    பாவைகள் பாடும் பாவை இலக்கியத்தில் தந்தையைப் பாடும் தனையனாகக் காட்சியளிக்கிறார் வசந்தராசன்! மன்னர்களையே பாட்டுடைத் தலைவர்களாகப் பாடிவந்த தமிழ்மரபில் தந்தையையும் பாட்டுடைத் தலைவர்களில் ஒருவராக்கி மரபிலும் புரட்சி செய்திருக்கிறார் கவிஞர். கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளத்துக்குச் சொந்தக்காரர் துரைவேலர் என்பதையும் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் வினைமுடிக்கும் வீரராக வாழ்ந்திருக்கிறார் என்பதையும் தமிழ் சொட்டச் சொட்டப் பாடியிருக்கிறார்.

    “துரைவேலர் எந்தையோ தொண்டர்க்குத் தொண்டர்!
    நிறைமனத்தன்! நெஞ்சுக்கு நேராண்மை யாளனவன்!
    திரைபோட்டுப் பேசத் தெரியாத தேன்கிண்ணம்!
    விரைந்து செயலாற்றும் வேல்வீச்சின் வேகம்!
    அரைத்துவைத்த சந்தனத்தை அள்ளித் தெளித்தாற்போல்
    உரைவீச் சிருக்கும்! தமிழ்தெலுங்கு இந்தியெலாம்
    கரைபுரளும்! காதுகளோ தேர்த்திருவி ழாகாணும்!
    குறையாத பேச்சாற்றல் கூட்டத்தைக் கட்டிவைக்கும்!
    தரைகூட மூச்சுவிடத் தத்தளிக்கும்! தாள்நெருக்கும்!
    துரைவேலர் சீர்பாடித் தூள்படுத்து எம்பாவாய்”           

    துரைவேலனார் உரைகேட்கக் கூடுவார்கள் என்பதைத் தரைகூட மூச்சுவிடத் தத்தளிக்கும்! தாள் நெருக்கும்!’ என்ற தொடரால் குறிக்கும் கற்பனைக் கொடுமுடி! ‘சந்தனத்தை அரைத்துத் தெளித்தாற் போல்’ என்னாது ‘அரைத்து வைத்த சந்தனத்தை அள்ளித் தெளித்து’ என்று பாடியது துரைவேலனாரின் புலமைத் தேக்கத்தைக் குறித்தது. கேட்பவர்தம் காதுகளுக்கு வேலனார் பேச்சு தேர்த்திருவிழாவின் ஆரவாரத்தை நினைவூட்டுமாம். ‘காதுகளோ தேர்த் திருவிழா காணும்!’ என்ன அழகிய கற்பனை? இதற்கு முன்னாலேயே,

    “முந்தைத் தலைமுறையின் மூச்சுத் தொடர்ச்சிதான்
    எந்தை துரைவேலர்! இந்திமொழிப் பண்டிதர்! 
    சொந்த முகங்களுக்கும் சொர்க்கமாய் வந்தவர்!
    விந்தையாய்ப் பேசி விளாசும் கருத்தாளர்!
    நொந்த இதயத்தை நேரணைக்கும் தாயாளர்!
    எந்தப் பொதுத்தொண்டும் அல்வாவின் துண்டன்றே
    முந்தி பொறுப்பேற்கும் மூச்சாளர்! தொண்டரவர்
    நொந்தாலும் தன்மானம் தான்நொடிக்காப் பேராளர்
    வந்துதித்த வல்லெழுத்து!  வீறார்ந்த எம்குருவைச்
    சிந்தை குளிரவந்த சீர்மகன்காண் எம்பாவாய்!”                          

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்னுந் தொடர் மூன்று பொருள்களை உள்ளடக்கியதாம். இந்நால்வரும் ஒத்தவர் என்பது ஒன்று. மாதா, பிதா, குரு ஆகிய மூவரும் தெய்வத்திற்கு இணையானவர் என்பது மற்றொன்று. மாதா, குரு, தெய்வம் ஆகிய மூவரும் பிதாவுக்கு இணையானவர் என்றும் குரு என்பவர் மாதா, பிதா, தெய்வத்திற்கு இணையானவர் என்றும் கொள்ளலாம். சிந்தனைகள் இத்தொடர் பயனிலை இல்லாமல் அமைந்ததனால் இத்தகைய சிந்தனைகள் எழுவதைத் தடுக்க இயலவில்லை. இந்தப் பின்புலத்தில் ‘வீறார்ந்த எம்குருவைச் சிந்தை குளிரவந்த சீர்மகன்’ என்ற தொடர் அடர்த்தி கூடுவதைக் காணலாம்!

    தனித்திருந்து வாழும் தவமணி தாய் கன்னியம்மாள்

    பாவை இலக்கியத்தில் பலரையும் பாடியிருக்கிறார் இராசன். அவர்களைப் பாடவேண்டும் என்பதற்காகவே இலக்கியம் செய்திருக்கிறார். அஃறிணை, உயர்திணை எனப் பாடுபொருள் பலவானாலும் தாய் கன்னியம்மாள் ‘தனித்திருந்து வாழும் தவமணியாய்த்’ திகழ்கிறார். தாய் அல்லவா?

    “இந்தக் கவிப்போத் திருந்த குகையாளர்
    விந்தை உழைப்பாளி! வேராய்ப் படர்ந்தெம்மை
    எந்தை உயர்த்த இணையாய்த் தம்குருதி
    தந்த திருவுளம்! தணியாத காருளம்!
    எந்தாய்கன் னி(ய)ம்மாள் கவிதைக் கருவறை!”

    எனத் தாயைத் தானிருந்த குகை என அறிமுகம் செய்த கவிஞர், தமது கவிதைகளுக்கும் அவரே மூலம் என்பதை உணர்த்த கவிதைக் கருவறை என முடித்துக் காட்டுகிறார். மாளாத காதலால் மறுபடியும் பாடுகிறார்.

    “வரிநெய்த பாட்டுக்குள் வந்துவிழும் பாநயம்போல்
    தறிநெய்த தாய்வானம்! தண்ணிலவு கன்னியம்மாள்!
    அறிவாயா என்அன்னை ஆற்றலதன் ஆழுயரம்?
    எரிபசியி னூற்றை இமையிறகால் மூடிவைக்க
    உறிச்சோற்றுப் பாசத்தில் ஊட்டிகுளிர் தோற்றொடுங்க
    விரிவானம்   வெட்க விழுமழையால் விக்கிநிற்கக்
    கறிசோறாய்க் கூழ்கூட கைபட்டால் காட்சிதரும்!
    முறியாத பேருழைப்பின் மூச்சுக்காற் றானவள்தான்
    விரிசிறகின் தாய்ப்பாசம்! வெண்பாவில் நேரிசை!அத்
    திருப்பெயரைச் சொல்லிப்பார்! தித்திப்பாய் எம்பாவாய்!”

    பெருமிதத்தோடு பாடுகிறார்! ‘அறிவாயா என் அன்னை ஆற்றலதன் ஆழுயரம்? நுண்ணியம் தெரிகிறதா? அன்னையின் ஆற்றல் அந்த ஆற்றலின் ஆழம் மற்றும் உயரம்! நுண்பொருளுக்கு நீள அகலம் சொன்ன கவிஞன். இது ஒரு மரபுவழிச் சிந்தனை! காதலுக்கு அளவு சொன்னாள் சங்கத் தலைவி!  ‘நிலத்தினும் பெரிது! வானினும் உயர்ந்தன்று! நீரினும் ஆரளவின்று’ என் தலைவனோடு நான் கொண்ட நட்பு’ என்று. காதலுக்கு அளவு சொன்னாள் அவள். தாய்மைக்கு அளவு சொன்னார் தம்பி வசந்தராசன்! இதுதான் மரபுக் கவிதை! பாசம் நுண்பொருள்! குளிர்ச்சியான பொருள்! பாசம் தணிவிக்கும்! எரியாது! உதகையில் ஆண்டுமுழுதும் குளிரும். தாய்மை எப்போதும்  தண்ணென்று இருக்கும் தமிழ்க்கவிதை உலகில் தட்ப வெப்ப நிலையைத் தாய்ப்பாசத்திற்கு உவமம் கண்டதுண்டா? இயேசு தொட்டார்! பச்சைத் தண்ணீர் பழரசம் ஆனது! கன்னியம்மாள் கைதொட்டுக் கொடுப்பது கூழை! என்ன அதிசயம் அது கறிசோறு ஆகிறதாம்! பேரன் பேத்தி பிறந்த காலத்திலும் பெற்ற தாயின் பெருமை பேசும் பெருங்கவிஞன்! இவன் அன்னையர் தினத்தைப் பாடியவனல்லன்! அன்னையையே பாடியவன்!.

    உறவுகளும் சான்றோரும் ஊர்வாழ உழைத்தோரும்

    தாய், தந்தை, தங்கை, தம்பி, பாட்டன், பாட்டி என உறவுகளைப் பாடியதைத் தொடர்ந்து ஊர்வாழத் தாம்வாழ்ந்த உத்தமர்களைப் பாடுகிறார். ஆசிரியர் குப்புசாமியைப் பாடுகிறார். பாவை இலக்கியத்தில் பள்ளிக்கூட ஆசிரியர் ஒரு பாத்திரம்! தாய்மாமன் குப்புசாமி – அவர் மனைவி வள்ளியம்மாள்! வள்ளியம்மாள் வசந்தராசனின் அத்தை! அந்த அத்தை செய்த நன்றிக்கடனைக் கவித்துவத்தில் பதிவு செயதிருக்கிறார். எப்படி? இப்படி!

    “ஆழ்தமிழ் ஆங்கிலம் அண்டுகிற இந்தியொடு
    சூழ்தெலுங்கு சமஸ்கிருதம் சொக்கவைக்கும் ஆற்றலினால்
    பாழறக் கற்றவர்! பன்மொழி வித்தகர்!
    ஆழ உழுதுழைத்த ஆசிரியர்! குப்புசாமி!
    வாழ்க்கைத் துணையவர்க்கு வள்ளியம்மை அத்தை!என்
    வாழ்க்கைத் துணைக்கு வாய்த்த தகப்பன்தாய்!”

    இந்தப் பாட்டில் நன்றிக் கடன் எங்கே வந்தது? எப்படி வந்தது? குருவராசப்பேட்டை, வளர்புரம், அத்திமாஞ்சேரிப்பேட்டை, மின்னல் நரசிங்கபுரம், அம்மையார்குப்பம், சத்திரவாடா, பொதட்டூர்ப் பேட்டை, மத்தேரி, வங்கனூர், புதுப்பேட்டை, நாராயணவனம், புத்தூர், இராமகிருஷ்ண ராஜுபேட்டை, திருவள்ளூர், சிந்தலப்பட்டடை, மத்தூர், திருவாலங்காடு, பாராஞ்சி  என ஊர்களைப் பாடுகிறார். கருஞ்சட்டை பெரியார் தொடங்கிப் பேராசிரியர் கங்காதரன் வரைத் தமிழ்ச்சான்றோர் ஒவ்வொருவரையும்  பாடிவருகிறவர் ஊர்களையும் தந்தையுடன் பிறந்த வள்ளியம்மாளையும் அவர் கணவர் குப்புசாமியையும் பாடியிருப்பது சரியே! ஆனால் வள்ளியம்மாளின் பெருமையைத் தன் மனைவியைத் தந்த தாய் என்று பாடுகிறார். அதாவது அத்தையை மாமியாக்கிப் பாடுகிறார். தந்தைவழி அத்தை என்பது மூல உறவு. தன் மனைவிக்குத் தாய் என்பது கிளைஉறவு!  தனக்கு மாமி என்பது சல்லி உறவு! மரபு என்பது இதுதான்! ஆணிவேர், கிளைவேர், சல்லிவேர் என்று மரபின் அத்தனை வேர்களையும் பாடுகிறார். இவருடைய மாமனார் குப்புசாமி அத்தையின் கணவர் மட்டுமன்று  தந்தையின் தாய்மாமன் மகன்! இவன் தந்தை என்னோற்றான் கொல்?’ என்பது மட்டுமன்று நன்றி. இவளைப் (என் மனைவியை) பெறுவதற்கு என்ன தவம் செய்தேனோ என்பதும் நன்றிக் கடனே! குறிப்பு மொழி, மனைவிக்குச் சொல்ல வேண்டிய நன்றியை மாமிக்குச் சொன்னதால்!

    குத்து விளக்கான குடும்ப விளக்கு

    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் என்பார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். வசந்தராசன் இல்லாள் சாந்தகுமாரி தம் சித்தத்தைத் தம் குழந்தைகள் மேல் வைத்தாராம்.

    “சித்தமெலாம் மக்களெனும் சீரால் நிறைந்தவளை’’

    என்று பாடுகிறார். சிவன் மீது சிந்தை வைத்தாரை அவர் பாடினார். சிறார்கள் மீது அன்பு காட்டிய இவரை வசந்தராசன் பாடுகிறார். ஏனைய பெருமைகளையெல்லாம் நிரல்படுத்தி இந்த வரியைப் பாட்டின் இறுதியாக அமைத்துக் காட்டுகிறார். அத்தை மகள் என்பதால் உரிமை கொண்டாடும் வசந்தராசன் அந்த அம்மையார் செய்த இல்லறக் கடமைகளை, மாண்புகளாகக் காட்டுகிறார். திருமணத்திற்கு முதல்நாளே தனிக்குடித்தன ஏற்பாடுகளை செய்து முடித்த பிறகே திருமணம் செய்து கொள்ளும் தற்காலத்தில் தன் மாமன், மாமி, நாத்திமார் என அனைவர்தம் தேவையையும் உணர்ந்து தன் இல்லறப் பொறுப்புணர்ந்து செயல்பட்ட சாந்தகுமாரியை இலக்கியத்தின் பாடுபொருளாக்கியது மிகவும் சரியே. குடும்ப விளக்கில் பாவேந்தர் தங்கத்தை இப்படித்தான் படைத்திருக்கிறார். அது ஒரு கற்பனைப் பாத்திரம் எனத் தோன்றாத வண்ணம் பாவேந்தர் செதுக்கியிருப்பார். வசந்தராசனோடு சாந்தகுமாரி வடம் பிடித்த இல்லறத்தேர் மொத்த குடும்பத்தின் மூலஸ்தானத்தில் வந்து நிலைகொள்கிறது.

    “அத்தை மகளென் மொத்த சுக வாழ்வினையும்
    சத்துண வாக்கிய சாந்த குமாரியாள்!
    மொத்த குடும்பத்தின் மூலவர் ஆனவள்!
    தத்தெடுத்த தேபோலென் தாய்தந்தை தங்கையரை
    ஒத்த மனத்தினால் ஓங்கி  உயர்ந்தவள்!
    வித்தைகள் கற்ற வெளிச்ச நதியவள்!
    எத்தனை என்நீளம்! எத்தனை என்ஆழம்!
    அத்தனைக்கும் வித்தாய் அவளாய் இருப்பவளை
    சித்தமெலாம் மக்களெனும் சீரால் நிறைந்தவளை
    எத்திசைக்கும் சொல்ல எழுவீர்நீ ரெம்பாவாய்!”

    மனைவி பெருமையை மற்றவர் அறிதல் வேண்டும் என்று இது பாடப்பெறவில்லை என்பதை உணர்தல் வேண்டும். யாருக்கும் கிட்டாத  இல்லறத்துணை தனக்குக் கிட்டிய ஆனந்தக் களிப்பைக் கொச்சகக்கலியிலே கொண்டு வந்த பூரிப்பு!. சவலை தட்டிப் போன தனது வாழ்வைப் பாசம், பரிவு எனும் சத்துணவு தந்து சவலை போக்கிய மாதரசியாக மனைவியைச் சித்திரிக்கிறார். தற்காலப் படைப்பாளர்களில் சொந்த மனைவியைத், தன் பிள்ளைகளின் தாயை எத்தனைப் பேர் இப்படிப் பாடுகிறார்கள்? பரவசமடைகிறார்கள்? தன்னுடைய மனைவி பெருமையைத் தன் பெருமையாகக் கருதும் பரந்துபட்ட கவிதையுள்ளம் இப்படித்தான் பாடும்! பரநலம் பேணுவதுதானே பாவலர்க்கு அழகு! சத்துணவு தந்த தாயையோ மனைவியையோ நாம் சந்தித்ததுண்டு!. சக வாழ்வையே சத்துணவாக்கிய மனைவியை வசந்தன் காட்டித்தான் நாம் பார்க்கிறோம்! அருமை!

    தமிழ்போல் தழைக்கும் தலைமுறை

    தன்னுடைய தலைமுறையை இருபத்தெட்டுப் பாடல்களால் பாடிய இராசன் தனக்குப் பின்வரும் தலைமுறையை ஒரு பாட்டில் பதிவு செய்திருக்கிறார். மக்கட் செல்வத்தின் மாண்புணரும் ஒரு தமிழ்த் தந்தையின் பாட்டனின் மரபுரிமை மணம் வீசும் பாடல் அது.

    “தங்க மனச்சுரங்கத் தாய்மை இளந்தேவி!
    பொங்கு புனலன்பாய்ப் பாயும் இளங்குமரன்!
    எங்கள் நறவாய் இளம்பா ரதியென்றென்
    சிங்கப் பரம்பரைக்குச் செங்கதி ராய்மூவர்!
    சிங்கம் சிவக்குமார் சீர்நித்யா ரம்யாவாய்
    இங்கிவர்க்கு வாய்த்த இணையர் பெரும்பேறு!
    பொங்கலாய் வாய்த்த பெயர்த்திபே ரன்களெலாம்
    நங்கூரப் பேரன்பாய் தனிஷ்தா பிரசீதா
    தங்கநிறத் தீக்ஷணா தன்வந்த்சாய் இனியாளாய்
    எங்கள் தலைமுறைகாண்! வாழ்த்திடுவீ ரெம்பாவாய்!”

    என்று. மகன் வயிற்றுப் பேரப்பிள்ளைகளே வாரிசுகள் என்பது வரலாறு மற்றும் நடப்பியல் ஆயினும் சட்டத்தின் அடிப்படையில் கவியுள்ளம் என்ற அடிப்படையிலும் மகள் வயிற்றுப் பேரப்பிள்ளைகளையும் மருமகள்களையும் தலைமுறைப் பந்தத்தில் பிணைத்துக் காட்டிய சதுரப்பாடு பெரிதும் பாராட்டத்தகுந்தது. ஏகாம்பரம் வசந்தராசன் ஆனார். அவர் வாரிசுகள் இளந்தேவி, இளங்குமரன், இளம்பாரதி என்று அணிசெய்கிறார்கள். பேரர்களின் பெயர்கள் தமிழகத்துக் காலச்சூழலை ஒளிபரப்புச் செய்கின்றன. இராசன் நினைத்துத் தன் வல்லாண்மையைக் காட்டியிருந்தால் தனித்தமிழ்ப பெயர்களைப் பேரப்பிள்ளைகளுக்குச் சூட்டியிருக்கலாம். உரிமை கொண்ட தலைமுறையின் வாரிசு இவராதலின் தன் வாரிசுகளின் குடும்பங்களை உரிமைக்குழுக்களாக அனுமதித்திருக்கிறார் என்பதை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பாவை இலக்கியம் பிந்தைய தலைமுறையின் தோற்றத்திற்குப் பிறகு என்பதையும் நினைவிற் கொண்டால் இந்த வடமொழிப் பெயர்களின் பயன்பாட்டைத் தவிர்க்க முடியா நிலையை அறிந்து கொள்ளலாம். எனினும் தமிழ் மண், தமிழ் மரபு, தமிழ்ச் சான்றோர், மொழியினத் தொண்டு, இனம் வாழ தனையிழந்தோர் புகழ்பாடும் இந்தக் காப்பியத்தில் இந்தச் சொற்கள் கொஞ்சம் இடமாறு தோற்றப்பிழையாகத்தான் தோன்றுகின்றன.

    “திங்கள் கடல்வானம் தீ காற்று பூமியோடு
    செங்கண் உயிரினத்துச் செல்தடங்கள் உள்ளவரை
    பொங்கு தமிழ்மூச்சுப் பேர்பெருமை பேசுவரை
    எங்கும் அணுக்குள் எதிர்நேர் கூறிருந்து
    அங்கிங் கெனாதபடி அண்டப் பெருவெளியின்
    அங்கம் நிறைத்திருந் தார்க்கின்ற நாள்வரைக்கும்
    சிங்கநிகர்த் தன்மானம் சீர்வானைச் சின்னதாக்கும்
    வங்காத் தலைமகுடம் வாழும் நிறைகுடமாய்
    எங்கள் தலைமுறைகள் இன்னும்பல் லூழிகாலம்
    பொங்கிப் புகழ்ந்தாடப் போற்றிடுவீ ரெம்பாவாய்!”

    என்னும் இறுதிப்பாடல் தொய்வினைத் தூக்கி நிறுத்திவிடுவதை நாம் மறுப்பதற்கில்லை. கற்பனையின் உச்சத்திற்குச் செல்ல முயலும்,

    “திங்கள் கடல்வானம் தீ காற்று பூமியோடு
    செங்கண் உயிரினத்துச் செல்தடங்கள் உள்ளவரை
    பொங்கு தமிழ்மூச்சுப் பேர்பெருமை பேசுவரை
    எங்கும் அணுக்குள் எதிர்நேர் கூறிருந்து
    அங்கிங் கெனாதபடி அண்டப் பெருவெளியின்
    அங்கம் நிறைத்திருந் தார்க்கின்ற நாள்வரைக்கும்”

    என்னும் வரிகள் ஏக்கத்தையும் பெருமிதத்தையும் நம்பிக்கையையும் ஒருசேர வெளிப்படுத்துவதாய் அமைந்து பாவையின் தொடக்கத்திற்கு ஏற்ற முடிவாய் நிறைவு பெறுகிறது. முனிரத்தினத்தின் மகன் வீரராகவன். வீரராகவன் மகன் மாயாண்டி. மாயாண்டி மகன் முனுசாமி. முனுசாமி மகன் துரைவேலு எனப் பெருமித நடைபோடும் குருவராசப்பேட்டை தலைமுறையை இந்தத் தலைமுறைக் கவிஞரும் துரைவேலுவின் மகனுமான மாதவரத்தார் துரை. வசந்தராசன் பாடியிருக்கிறார். தன் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமான முன்னோர்களைப் பாடியதால் நன்றி பாராட்டுதல், மூத்தோர்களை நினைவுகூர்ந்து வணங்கும் சமுதாய நெறிகாட்டல் எனப் பாவைக்குப் புதுத்தடம் காட்டியிருக்கிறார். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிராமல் மாற்றியமைத்த பாடுபொருளால் தமிழ்க்கவிதை உள்ளடக்கத்தின் பரிமாணத்தைப் பெருக்கிக் காட்டிச் சிறந்து திகழ்கிற பாவை நம் தலைமுறைப் பாவை!

    தலைமுறைப் பாவையில் மொழியாளுமை

    கவிதை மொழி இலக்கண மொழியாகவே அமைந்துவிடக் கூடாது. முற்றிலும் கொச்சையாகவும் இருந்துவிடக் கூடாது. வட்டார வழக்குச் சொற்களாகவும் புழங்கிவிடக்கூடாது. இவை மூன்றும் ஏற்ற, பொருத்தமான அளவில் அங்கங்கே கலந்து அமைய வேண்டும். கவிஞனின் மொழியாளுமையை இப்படித்தான் அளவிட முடியும். அளவிட வேண்டும். ‘தன்காயம் தோற்றாமல் சாணகல கொல்லை கட்டி வெங்காய நாத்துவிட்டு வெகுநாளா காத்திருந்தேன்’ என்பார் அழுகணி சித்தர். ‘கண்ணன் மனநிலையைக் கண்டு வரவேணுமடி’ என்றுதான் பாரதியார் எழுதினார். இலக்கணச் சுத்தமாக ‘கண்டு வரவேண்டுமடி’ என எழுதவில்லை என்பது காண்க.

    ‘மந்தையில் மாடு திரும்பையிலே அவள்
    மாமன் வரும் அந்தி நேரத்திலே
    குந்தி இருந்தவள் வீடுசென்றாள் அவள்
    கூட இருந்தாரையும் மறந்தாள்’
    தொந்தி சரியவே வேட்டி கட்டி அவன்
    தூக்கி வந்தானொரு வெல்லக்கட்டி!”

    என்று பாரதிதாசன் குந்தி, தொந்தி என்னும் வழக்குச் சொற்களைக் கையாண்டு கவிதையைச் சிறக்கச் செய்வார். ‘அஞ்சு ரூபாய் நோட்ட கொஞ்ச முன்னே மாத்தி மிச்சமில்லே காசு மில்ல’ என்பது அந்தநாள் அந்தமான் கைதி படப்பாடல்!. ‘கையில வாங்குனேன் பையிலே போடல காசு போன இடம் தெரியலே’’ என்பது பட்டுக்கோட்டையாரின் பாமர வழக்கு. ‘எலந்த பலம்’ கண்ணதாசனின் கொச்சை வழக்கு. தம்பி வசந்தராசன் தனது தலைமுறைப்பாவையில் தலைமுறைத் தமிழைத் தவழவிட்டிருக்கிறார்.

    “காலையிலே பாவு!  கடும்பகலில் சீர்நெசவு!
    மாலை மளிகை! மடியுடன் ஊர்வலம்!
    ஆலைச்சங் கூத அடிநெருப்பைத் தானணைக்கத்
    தோலைச் செருப்பெனவே தேய்த்தபின்தான் தீமுளைக்கும்!
    நாளைய பாவடிக்கு நல்லிடம்நாட் டல்!பின்
    இளைத்த அடுப்பு இறக்கிக் கொடுக்கக்
    களைப்பைக் கழித்தல்! கவலை  உடன்கரைத்தல்!
    கிளையுடன் திண்ணைகளில் கில்லா படித்தல்!
    வேளைகள் இப்படி வேகமாய்க் கரையும்
    காளைகள் ஊரைநீர் காணீரோ எம்பாவாய்!”

    இந்தப் பாடலில் ‘பாவு’ என்பதும் ‘பாவடி’ என்பதும் ‘மடி’ என்பதும் தொழில்சார்ந்த வட்டார வழக்கு. கடும்பகலில் சீர் நெசவு என்பது தகுதி வழக்கு. ‘அடி நெருப்பை தான் அணைக்க’ என்பது கவிதை உருவகம். ‘களைப்பைக் கழித்தல்’ என்பது புதுக்கவிதை! கிளையுடன் திண்ணைகளில் ‘கில்லா படித்தல்’ என்பது வட்டார வழக்கு. குருவராசப் பேட்டையைக் குருவை எனக் குறுக்கியது மரூஉ.

    தலைமுறைப் பாவையில் உவமச் சிறப்பு

    கவிதையை மட்டுமன்று கவிஞனையும் வியப்போடு நோக்க வைப்பது அவன் பயன்படுத்தும் உவமங்களே. பொருள் புலப்பாட்டுக் கருவியாக மட்டுமல்லாது, கவிஞனின் அறிவு, புலமை, கற்பனை, முதலிய பன்முகப் பரிமாணத்தையும் படைப்பாளுமையையும் வெளிப்படுத்தும் கருவியாக உவமம் செயல்படுகிறது.   தம்பி வசந்தராசன் வழக்கம் போல் இந்தப் பாவையிலும் எளிய, அழகான, பொருத்தமான உவமங்களைத் தேவையான இடங்களில் இயல்பாக இணைத்துப் பதிவு செய்திருக்கிறார். அவை தனித்த பார்வைக்குரியவையாதலின் ஒன்றிரண்டு மட்டும் கட்டுரைக்காகச் சுட்டப்படுகின்றன.

    “சேரன்தன்  வில்லம்பாய்ச் செஞ்சொல் மணிதீர்ப்பு!”

    என்று தனது பாட்டனார் தீர்ப்புரையின் நேர்மை பற்றி ஓர் உவமத்தைச் சொல்கிறார். ‘வல்வில் ஓரி விடுத்த கணை குறி தப்புவதில்லை’ என்று சுரதா பாவேந்தர் கவிதைக்கு உவமம் சொல்வார். சேரனின் வில்லிலிருந்து புறப்படும் அம்பு கோணம் பிசகாது., குறி தவறாது செல்வதைப் போலச் சொல்லப்படும் நீதியும் நேராகச் சொல்லப்படும் என்கிறார். மற்றொரு இடத்தில் தன்னைச் சுமந்து பெற்ற தாய் வயிற்றை,

    “இந்தக் கவிப்போத் திருந்த குகையாளர்”

    என்னும் வரியில் ‘குகை’ என உவமித்துக் காட்டித் தன்னையும் கவிப்போத்து என நம்பிக்கை மொழிகிறார். ‘புலிசோர்ந்து போகிய கல்லளை போல’’ என்னும் புறநானூற்றுச் சிந்தனையும் தலைமுறைப்பாவையின் உள்ளடக்கம் போலவே பரம்பரைச் சொத்தாக வசந்தராசனுக்கு அமைந்துவிடுகிறது. ‘ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு’ என்னும் தெரு பற்றிய சங்க இலக்கிய உவமம் அங்குப் பெருவழக்கு. வசந்தராசன்,

    “தேரின் வடமாய்த் தெருக்கள்!”

    என்று பாடிக் குருவராசப்பேட்டை வரைபடத்தைப் பாவை இலக்கியத்தில் பதிவு செய்கிறார். தமிழ்நாட்டில் பெரும்பாலும் தெப்பக்குளம் இல்லாத திருக்கோயில்கள் அரிது. குருவையில் மாணிக்கவாசகர் மடாலயமாகக் கட்டப்பட்டுத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் சொற்பொழிவாற்றிய காரணத்தால் பின்னாள் திரு.வி.க. மாளிகையாக மாறி நிற்கும் கட்டடத்தைப் பாடுகிறார்.!

    “கட்டடக் கல்லும் கனித்தமிழைப் பேசிடவே
    நட்ட நடுவூரில் நங்கூரக் கப்பலெனத்
    திட்டமிட்டுச் செய்த திரு.வி.க. மாளிகை!”

    நட்ட நடுவூரில் என வழக்குமொழியைக் கையாண்ட வசந்தராசன், ‘நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சிய கப்பலாகக் குருவையின் திருவிக மாளிகையை உவமிக்கிறார். மங்கலங்கிழார் உருவாக்கப்பட்டதைத் திட்டமிட்டுச் செய்த திரு.வி.க மாளிகை என மோனை அழகோடு முன்மொழிகிறார்.

    “ஆர்த்துக் குதிக்காத ஆழ நடுக்கடலான்!”

    என்று ஒரு வரி இந்தப் பாவையில் வருகிறது. மிக நுட்பமாக நான் ரசித்து மகிழ்ந்த வரி. கடலில் அலைகள் கரையில் இருக்கும் நடுக்கடலில் அலையிருக்காது. அது அமைதியாக இருக்கும். ‘ஆகுல நீர பிற’ என்பார் திருவள்ளுவர். ஆழமாகிய பக்குவம் இருந்தால் ஆரவாரம் இருக்காது! மையத்தில் நிலை கொண்டது குதிக்காது! ‘சீர்த்தமதி   சீர்மங்கலங் கிழாரு’க்குச் சொல்லப்பட்ட உவமம் இது! கடலுக்கு வந்த அடைச்சொற்களைச் ‘சீர்த்த மதி சீர் மங்கலத்தார்’ என்னும் பொருளோடு இயைபுபடுத்தி நோக்கினால் உவம ஆளுமை புரியக்கூடும்!. ஆண்டுதோறும் தேர்ச்சியடைந்து மேல் வகுப்பு மாறும் மாணவர்கள் தங்களுக்கான புதிய ஆசிரியரை எதிர்நோக்கியிருப்பதும் வந்தவரைக் கண்டு மகிழ்ச்சியடைவதும் அப்பருவப் பேரின்பம்! அழியாப் பெருநினைவு! வசந்தனுக்கும் அவர் நண்பர்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டியதாம்!

    “பொங்கலுக்கு வாய்த்த புதுத்துணிபோல் ஆசான்கள் 
    எங்களுக்கு வாய்த்தார்!”

    என்றெழுதுகிறார். நெசவுத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்ட குருவராசப்பேட்டையில் உழவர் திருநாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது என்பதை உவமவழிப் பதிவு செய்யும் வசந்தராசன், ஒரு பொங்கல் போனால் மறுபொங்கல் வந்தால்தான் புதுத்துணி என்னும் நடப்பியல் உண்மையையும் குறிப்பாகப் புலப்படுத்தியது காண்க.!

    நிறைவுரை

    ஈரோடு தமிழன்பன் எழுதுவார்! “உனக்கும் வாழ்க்கைக்கும் நடுவில் மரணம் இருக்கிறது. உனக்கும் மரணத்திற்கும் நடுவே வாழ்க்கை இருக்கிறது. வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் நடுவே நீ இருக்கிறாய்” என்று. நான் எழுதுகிறேன்! வசந்தராசனுக்கும் வாழ்க்கைக்கும் நடுவே கவிதை இருக்கிறது. வசந்தராசனுக்கும் கவிதைக்கும் நடுவே வாழ்க்கை இருக்கிறது. கவிதைக்கும் வாழ்க்கைக்கும் நடுவே வசந்தராசன் இருக்கிறார். வசந்தராசனுக்கும் வாழ்க்கைக்கும் நடுவே மரபு இருக்கிறது!. மரபுக்கும் வாழ்க்கைக்கும் நடுவே வசந்தராசன் இருக்கிறார். வசந்தராசனுக்கும் மரபுக்கும் நடுவே வாழ்க்கை இருக்கிறது. ‘இமயமே தோற்கும் உயர்தமிழில் சொல்லெடுத்து அமரகவி நெய்ய ஆசையுறும் இவ்வசந்தன்’ எனத் தன் கவிதை இலட்சியத்தைப் பதிவு செய்திருக்கும் வசந்தராசன் ‘மரபுக்கவிதை எது?’ என்பதற்கு மேலும் ஒரு கவிதைப் பதிவைக் கல்வெட்டாய்ப் படைத்திருக்கிறார். “சொல் புதிது! சுவை புதிது! வளம்புதிது! பொருள் புதிது! சோதிமிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மா கவிதை!” ஆம்! அவர் எழுதிய அமர கவி இது! அமர கவிகளுள் ஒன்று இது!

    (தொடரும்…)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 49

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 49

    -மேகலா இராமமூர்த்தி

    இராமன் வானரசேனையோடு இலங்கைக்குள் வந்துவிட்டதை அறிந்த இராவணன், அடுத்துத் தான் செய்யவேண்டியது என்ன என்பதை முடிவுசெய்வதற்கு மந்திராலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அவர்களின் கருத்துக்களைச் சொல்லுமாறு பணித்தான்.

    முதலில் எழுந்தார் இராவணனின் பாட்டனாரான மாலியவான். அவர் இராவணனின் தாய் கேகசியைப் பெற்ற சுமாலியின் உடன்பிறந்தவராவார். இராவணனுக்கு அஞ்சாது அறமுரைக்கும் நல்லோர் மிகச் சிலருள் அவரும் ஒருவர்.

    ”இராவண! நம் தொல்நகரான இலங்கையை அனுமன் அழித்ததைக் கண்டபின்னும், ஆழியை அவர்கள் அணையிட்டுத் தடுத்துள்ளதைக் கண்டபின்னும், அழிவற்ற ஆற்றல்மிகு கரன் தூடணன் போன்ற பகைவரை (இராமன்) அழித்ததைக் கண்டபின்னும், இத்தனையும் செய்தவர்கள் நம் கண்ணெதிரே வந்துவிட்ட பின்னும் இனிச் சிந்தனை செய்ய என்ன இருக்கின்றது?” என்றான் மாலியவான்.

    சுட்டவா கண்டும் தொல்நகர் வேலையைத்
    தட்டவா கண்டும் தாஅற்ற தெவ்வரைக்
    கட்டவா கண்டும் கண்எதிரே வந்து
    விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ.
    (கம்ப: ஒற்றுக் கேள்விப் படலம் – 6792)

    ஏற்கனவே இராமனும் அவனைச் சேர்ந்தோரும் தம் அளப்பரிய போர்த்திறனை நிரூபித்திருப்பதைக் கண்டபின்னரும் அவர்களைப் பகைப்பது நமக்கு வெற்றி தராது; ஆதலால், சீதையை அவர்கள் வசம் ஒப்படைத்துச் சமாதானமாய்ப் போய்விடுவதே நல்லது என்பது மாலியவான் பேச்சின் உட்பொருள்.

    அதுகேட்டுச் சினந்து தன் உதட்டைக் கடித்த இராவணன், ”பகைவரை வெல்ல யோசனை சொல்வதற்காகக் கூட்டப்பட்டிருக்கும் இந்த மந்திராலோசனைச் சபை, பகைவரின் புகழ் பாடிக்கொண்டிருப்பது மிகவும் நன்று; பாட்டா! நீயும் வீடணனைப் போலவே இராமனோடு சேர்ந்து இனிது வாழ்வாயாக! இப்போதே செல்!” என்றான் இகழ்ச்சியோடு.

    ”நன்மை கூறுவது இழிவானது போலும்” என்றெண்ணி வருந்திய மாலியவான் மௌனமானான். அப்போது எழுந்து பேசத்தொடங்கிய சேனைத் தலைவன் பிரகத்தன், இராவணனின் ஆற்றலைப் பலபடப் புகழ்ந்து அவ்வாற்றலை மாலியவான் உணரவில்லை என்று அவனை இடித்துரைத்துக் கொண்டிருந்தபோது, இராமனின் சேனைகளை உளவுபார்க்கச் சென்று அவர்களிடம் சிக்கிப் பின்னர் இராமனால் எச்சரித்து அனுப்பப்பட்ட இராவணனின் ஒற்றர்கள் இருவரும் வந்து சேர்ந்தனர்.

    வந்தவர்கள், வானர சேனையை முற்றாய்க் காணவியலாதபடி அவை எங்கும் பரந்திருந்த பெற்றியையும், வருணனை மருட்டிய இராமனின் தோள்வலியையும் அச்சத்தோடு செப்பினர் இராவணனிடம். அடுத்து, இராமன் சொல்லச்சொன்னபடி இலங்கை நகரச்செல்வம் முற்றாய் நின் தம்பியே பெற்றனன் என்பதையும் அவனிடம் உரைத்தனர். அத்தோடு, குரங்கு வேடத்தில் ஒற்றறியச் சென்ற தாங்கள் குரங்குகள் அல்லர் என்று தெரிந்தபின்பும் தங்களைக் கருணையோடு தப்பிப்போக விட்டான் அந்தக் கொற்றவன் (இராமன்); இதுவே தாங்கள் கொண்டுவந்த செய்தி என்றனர்.

    ஒற்றர்கள் கூறியதைக் கேட்ட இலங்கை வேந்தன், ”இராமனும் அவன் சேனையும் இலங்கைக்குள் வந்துவிட்ட பின்னர்ப் போருக்குப் புறப்படல் அன்றி நாம் செய்யவேண்டிய வேறு செயல்கள் உளவோ?” எனச் சேனைத் தலைவனிடம் கேட்டான்.

    “பகைவர் இருப்பிடத்திற்கே சென்று அவர்களை வென்று திரும்புவதாக முன்பு நாம் உத்தேசித்திருந்தோம்; இப்போது அவர்களே நம் இருப்பிடம் தேடி வந்துவிட்டார்கள் என்பது நமக்கு நன்மையே. நாம் விரும்பியது கிடைக்கப் பெற்றோம்; இது நம் வெற்றியை விடவும் சிறந்தது அன்றோ?” என்றான் சேனைத் தலைவன் பிரகத்தன்.

    ஆண்டுச்சென்று அரிகளோடும் மனிதரை அமரில்கொன்று
    மீண்டுநம் இருக்கைசேர்தும் என்பது மேற்கொண்டேமால்
    ஈண்டுவந்து இறுத்தார் என்னும் ஈதுஅலாது உறுதிஉண்டோ
    வேண்டியது எய்தப்பெற்றால் வெற்றியின் விழுமிதுஅன்றோ.
    (கம்ப: இலங்கைகாண் படலம் – 6814)

    பிரகத்தன் சொற்களை மறுத்து, ”அறத்தின் நாயகனே இராமனாய் வடிவெடுத்து வந்துள்ளான்; இராம இலக்குவரை போரில் வெல்லுதல் இயலாத செயல்; ஏற்கனவே இலங்கையில் பல தீய நிமித்தங்கள் தோன்றுகின்றன; இராமதூதனான அனுமன் தாக்கியதால் இலங்கையின் காவல்தெய்வமான இலங்கிணியும் இங்கிருந்து அகன்றுவிட்டாள்; இராவணா! உன்மீதுள்ள அன்பினால் சொல்லுகின்றேன்! சீதையை விட்டுவிட்டால் உனக்குள்ள தீமைகள் யாவும் விலகிவிடும்” என்று இராவணனுக்கு மீண்டும் நல்லறத்தை எடுத்துரைத்தான் மதியிற் சிறந்த மாலியவான்.

    பாட்டனின் அறிவுரையை அலட்சியம் செய்த இராவணன், ”மூவுலகமும் எதிர்த்தாலும் சீதையின் பொருட்டுப் போர் புரிவதிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன்” என்றான் உறுதிபட.

    இரவுநேர மந்திராலோசனை முடிந்தது. உலகை மூடியிருந்த இரவுவெள்ளம் வடிய மறுநாள் பொழுது விடிந்தது. இலங்கை நகரைக் காணும் விருப்போடு சுவேல மலைமீது ஏறினான் இராமன். சுக்கிரீவனும், வீடணனும் ஏனைய வானரரும் அவனுடன் ஏறினர். அக்காட்சியானது, ஒப்பற்ற இராச சிங்கமொன்று யானைகளும் புலிகளும் சூழக் குன்றேறியது போன்றிருந்தது என்கின்றார் கம்ப நாடர்.

    இலங்கையின் தோற்றப் பொலிவைக் கண்டு வியந்த இராமன், அருகிருந்த இளவல் இலக்குவனிடம், ”அடடா! இந்நகரில் சுடர்கின்ற நவமணிகளின் அற்புத ஒளியைக் காண்கையில் அனுமன் இட்ட தீ இன்னமும் இலங்கை நகரில் எரிந்துகொண்டிருப்பது போன்ற தோற்றத்தைத் தருகின்றது; தங்கள் கூந்தலின் ஈரத்தை உலர்த்துவதற்காகப் பவள மாளிகைகளில் நின்றுகொண்டு மகளிர் தம் கூந்தலுக்கு, மாலை வேளையில், போடும் அகிற்புகையானது பவளமேனியனான சிவன் தன் உடலில் யானையின் தோலைப் போர்த்ததுபோல் இருக்கின்றது” என்றான். 

    இவ்வாறு சிந்தை கவரும் இலங்கையின் விந்தை அழகை இலக்குவனிடம் இராமன் புகழ்ந்துகொண்டிருந்த போதில் வானர சேனையின் அளவைக் காணும்பொருட்டுச் செம்பொன்னாலான கோபுரம் ஒன்றின் உச்சியை அடைந்தான் இலங்கையர்கோன் இராவணன். அரம்பையரும் எண்ணற்ற அரக்க வீரர்களும் அவனைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர்.

    கருவாக நீரினை உட்கொண்ட கருமேகம் எனுமாறு தோரணங்களோடு கூடிய மணிகள் பதித்த கோட்டை வாயில் கோபுரத்தின்மேல் நின்ற இராவணன், நான்மறைகளின் வடிவானவனை, அவற்றின் நாயகனான திருமாலை, அம்மறைகள் முழுதும் அறிய இன்னும் தேடிக்கொண்டிருக்கும் காரணப் பொருளான இராமனை நிமிர்ந்து ஓங்கிய தன் விழிகளால் கண்டான்.

    தோரணத்த மணி வாயில்மிசை சூல்
    நீர்அணைத்த முகில்ஆம் என நின்றான்
    ஆரணத்தை அரியை மறை தேடும்
    காரணத்தை நிமிர் கண்கொடு கண்டான். (
    கம்ப: இராவணன் வானரத் தானைகாண் படலம் – 6876)

    இராமனை முதன்முறையாக இராவணன் இப்போதுதான் தன் விழிகளால் காண்கின்றான். கண்டவுடனே அவனுக்குக் கடும் வெகுளி உண்டானது. தன்னருகில் நின்றிருந்த சாரன் எனும் அரக்கனிடம் சுவேல மலைமேல் இராமனோடு நின்றுகொண்டிருப்போரைப் பற்றிக் கூறுமாறு இராவணன் கேட்க, அவ்வண்ணமே இராமனைச் சுற்றிநின்ற இலக்குவன், சுக்கிரீவன், அங்கதன், இலங்கையை எரியூட்டிய அனுமன், நீலன், மூன்றே நாட்களில் கடலின்மீது அணைகட்டிய நளன், கரடிகளுக்கு அரசனான சாம்பன் என்று ஒவ்வொருவர் பற்றியும் விளக்கமாய் எடுத்துரைத்தான் அவர்களை அறிந்திருந்த சாரன்.

    மீண்டும் நாம் சுவேல மலைக்குத் தாவிச்சென்று அங்கு நிகழ்ந்தவற்றைக் காண்போம்.

    சுவேல மலைமேல் நின்றிருந்த இராமன் வீடணனைப் பார்த்து, ”தொலைவில் கோபுர உச்சியில் நின்றிருப்போர் யாவர் என இயம்புதி!” என்று வினவ, ”அதோ…மலைபோன்ற கோபுரத்தின் மேலேறி தேவருலகத்துத் திலோத்தமை முதலான மங்கையர் கூட்டத்திடையே நிற்கின்றானே அவன்தான் தன் குலத்தில் தோன்றிய சுற்றத்தார் எனும் நாற்றுக்களையெல்லாம் நரகத்தில் நடுவதற்காக நரகத்தைச் சேற்றுழவு செய்து வைத்திருக்கும் இழிசெயல் புரிகின்ற இராவணன்” என்று அண்ணன் இராவணனை அண்ணல் இராமனுக்குச் சுட்டிக் காட்டினான் வீடணன்.

    நாறுதன் குலக்கிளை எலாம் நரகத்து நடுவான்
    சேறுசெய்து வைத்தான் உம்பர் திலோத்தமை முதலாக்
    கூறும் மங்கையர் குழாத்திடைக் கோபுரக் குன்றத்து
    ஏறிநின்றவன் புன்தொழில் இராவணன் என்றான்.
    (கம்ப: மகுட பங்கப் படலம் – 6896)

    வீரனொருவன் வீரர்குழாம் புடைசூழ நிற்றல் இயல்பு.  ஆனால், தன்னை மாவீரன் என்று பறைசாற்றிக் கொள்ளும் இராவணனோ மகளிர்குழாம் புடைசூழ நிற்கின்றான். இதனை வீடணன் சொன்னதன் நோக்கம் அவன் ஒழுக்கத்தின் இழிவை இராமனுக்குப் புலப்படுத்தவே.

    வீடணன் இராவணனை அடையாளம் காட்டியதுதான் தாமதம் கடுங்கோபம் கொண்ட சுக்கிரீவன், சுவேல மலையிலிருந்து இராவணன் எனும் மலைமேல் பாய்ந்தான்; அக்காட்சியானது கனி என்று பரிதியை அனுமனின் தாய் அஞ்சனை சொன்னவுடனே அப்பரிதிக்கனியைப் பறிக்கப் பாய்ந்த அனுமனின் செயலை ஒத்திருந்தது என்று கவிநயம் தோன்றக் காட்சிப்படுத்துகின்றார் கவிச்சக்கரவர்த்தி.

    திடீரென்று தன்னருகில் தோன்றிய சுக்கிரீவனைப் பார்த்து, ”நீ இங்கு வந்த காரியம் என்ன?” என்று இராவணன் கேட்க, வாயால் பதில்கூறாமல் தன் பலத்தையெல்லாம் திரட்டி அவன் மார்பில் ஓங்கிக் குத்துவிட்டான் சுக்கிரீவன். இராவணன் திருப்பித் தாக்க, இருவருக்கும் கடும்போர் தொடங்கியது. ஒருவரை ஒருவர் கடுமையாய்த் தாக்கிக்கொண்டு கட்டிப் புரண்டு அகழியில் வீழ்ந்தனர்.

    இதற்கிடையில் எதிர்பாராவண்ணம் சுவேல மலையிலிருந்து பாய்ந்துசென்ற சுக்கிரீவன் நெடுநேரமாகியும் வரக்காணாது உள்ளம் நைந்தான் தயரத மைந்தன் இராமன். எதிர்முனையிலோ வெற்றி தோல்வி காணவியலாத வகையில் இராவணனும் சுக்கிரீவனும் கடும்போர் புரிந்துகொண்டிருந்தனர். மேலும் போரை வளர்த்தவிரும்பாத சுக்கிரீவன், இராவணனின் மணிமுடியிலிருந்த மாணிக்க மணிகளை அவன் நாணுமாறு தன் வலிமையால் பிடுங்கிக்கொண்டு இராமனை வந்தடைந்தான்.

    எனினும், சீதையைச் சிறைவைத்த இராவணனைக் கொல்லாமல் மீண்டது அவனுக்கு வருத்தமளிக்கவே செய்தது. அதனை வெளிப்படுத்தும் விதமாய், ”அனுமன் தன் வால் வலிமை காட்டி இலங்கையை எரியூட்டி மீண்டான்; நானோ இராவணனை அழித்தொழிக்காது என் கால் வலிமை காட்டி விரைந்து உன்னிடம் மீண்டு வந்திருக்கின்றேன்” என்றான் இராமனிடம் வேதனையோடு.

    அதனை மறுத்த வீடணன், இராவணனின் தலைமிசை உள்ள மகுடத்தினும் உயர்ந்தவை அதில் பதிக்கப்பெற்ற மணிகள்; அம்மணிகளையே பறித்துக்கொண்டு வந்த நீ, இராவணனின் புகழையே பறித்து வந்தவனாவாய்! இதனினும் சிறந்த வீரச்செயலுண்டோ?” என்று பாராட்ட, இராமனும் அதனை ஆமோதித்துச் சுக்கிரீவனைப் பாராட்டினான்.

    மணிமுடியில் மணிகளை இழந்த இராவணன் அளவற்ற அவமானத்தோடு கோபுர உச்சியை விட்டிறங்கித் தன் அரண்மனைக்குச் சென்று பஞ்சணையில் படுத்தான். அப்போது சார்த்தூலன் எனும் ஒற்றன் இராவணனை வந்து சந்தித்தான். அவனிடம், ”நீ வானர சேனை குறித்து ஒற்றறிந்து வந்தவற்றை ஒளிக்காமல் கூறுவாயாக” என்று இராவணன் ஆணையிட,

    ”ஐய! பதினேழு வெள்ளம் சேனையோடு மாருதி மேற்குவாசல் மதிலைச் சூழ்ந்து முற்றுகையிட்டுள்ளான்; கிட்கிந்தை இளவரசன் அங்கதன், பதினேழு வெள்ளம் சேனையோடு தெற்குத் திசை வாயிலில் நிற்கின்றான்; நீலன் என்பவன் பதினேழு வெள்ளம் சேனையோடு கீழ்த்திசை வாயிலருகே உள்ளான்; இராமன் தன் தம்பியோடும் சுக்கிரீவனோடும் வடக்கு வாயிலில் நிற்கின்றான். உன் தம்பியாகிய வீடணனை வாயில்கள்தோறும் சென்று நிலவரங்களை அறிந்து அவ்வப்போது தனக்குத் தெரிவிக்கச் சொல்லியிருக்கின்றான். மொத்தச் சேனைகட்கும் காய்கனிகளை உணவாய் அளிக்க இரண்டு வெள்ளம் சேனை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது” என்றான் சார்த்தூலன். 

    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.
    (குறள்: 517)

    என்ற வள்ளுவத்திற்கிணங்க வானர சேனையில் அவரவர்க்கு ஏற்றவகையில் அவரவர்க்கான பொறுப்புகள் தரப்பட்டிருந்தன என்பதை கம்பநாடர் நமக்கு அறியத்தருகின்றார்.

    சார்த்தூலன் சொன்னதைக் கேட்ட இராவணன், ”ஊழிக்காலத்தே வடவைத் தீ பொங்கியெழுகையில் உலகோர் அழிவதுபோன்ற அழிவை நம் பகைவர்படை நாளை சந்திப்பதை நீ போர்க்களத்தில் பார்ப்பாய்!” என்றான் பற்களைக் கடித்தபடி!

    மீண்டும் மந்திராலோசனை சபையைக் கூட்டிய இராவணன், குரக்குச் சேனை இலங்கையின் நாற்புற வாயில்களையும் வளைத்துள்ளதால் இனி நாம் மேற்செய்ய வேண்டியது என்ன என்று அமைச்சர்களோடு ஆலோசித்தான்.

    நிகும்பன் எனும் அரக்கன் எழுந்து, ”மன்னா! எழுபது வெள்ளம் எனக் கணக்கிடப்பட்ட வானரப் படைகள் நம் இலங்கை மதில்களை வளைத்தது குறித்து மனம் உளைந்துள்ளாய் போலும்! நமது பகைவர் சூடிய உழிஞைப் பூவை அடியோடு அழித்தற்குக் காத்திருக்கும் நொச்சியை உச்சியில் சூடிய கடல்போன்ற உம் இலங்கைப் படை ஆயிரம் வெள்ளம் அளவினது அல்லவோ?” என்றான் கம்பீரமாக.

    எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எயிலை முற்றும்
    தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்
    அழுவநீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே
    உழிஞையைத் துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன்ஊர்.
    (கம்ப: அணிவகுப்புப் படலம் – 6957)

    எயிலை முற்றுகையிடும் வீரர்கள் உழிஞைப் பூவைச் சூடுவதும், எயில் காப்போர் நொச்சிப் பூவைச் சூடுவதும் பண்டைப் போர் மரபாகும். [வெள்ளம் என்பது ஐம்பத்தேழு (ஸ்)தானங்களையுடைய பேரெண் என்பர்.]

    தொடர்ந்து பேசிய நிகும்பன், “மன்னவா! வலிய ஆயுதங்களை ஏந்தி நம்மவர் போர் புரியும்போது தேவர்களே தோற்றோடுவர்; இந்தக் குரங்குகளோ ஆயுதங்கள் பிடித்தலை அறியாது வெறுங்கையில் போர்புரிவை; இவை நம்மை என்ன செய்துவிடும்?” என்றான் ஏளனமாக.

    நிகும்பனின் வாய்வீச்சைக் கேட்ட இராவணனின் தாய்மாமனான மாலி என்பவன், ”ஐயகோ! துயரத்தைத் தரக்கூடிய காமநோய் குலத்தையே அடி வேரோடு வீழ்த்துகின்றதே” என்று வருந்தியபடி, ”இலங்கையை எரியூட்டிய அனுமனுக்குக் கையில் சக்கரம் இருந்ததோ? இராவணன் மகுடத்து மணிகளைப் பறித்துச் சென்ற சுக்கிரீவனிடம் சூலமும் வேலும் உண்டோ? ஆதலால் படைக்கலங்கள் பிடிக்கத் தெரியாதவர்கள் என்று வானரரை இகழ்வதை விடுத்து, சீதையை இராமனிடம் ஒப்படைத்து வானரப் படையிடம் நாம் சரணடைவது நமக்கு நல்லது” என்றான் இராவணனிடம்.

    இராவணன் அவனைக் கடுமையாக நிந்திக்கவே அவன் பேச்சொழிந்தான்.

    அதனைத் தொடர்ந்து, ”அரக்கர் தானைத் தலைவனே பிரகத்தா! இருநூறு வெள்ளம் சேனையோடு கோட்டையின் கீழ்த்திசை வாயிலில் நீ நிற்பாயாக! எமனின் செருக்கடக்கிய மகோதரா! நீ இருநூறு வெள்ளம் சேனையோடு நம் தென்திசை வாயிலில் நிற்பாயாக! இந்திரனின் பகைஞனான இந்திரசித்தே! அனுமனின் ஆற்றல் அறிந்தவனான நீ, இருநூறு வெள்ளம் சேனையோடு மேற்றிசை வாயிலுக்குச் செல்! (அங்குதான் அனுமன் நிறுத்தப்பட்டிருக்கின்றான்!) தேவரை வென்ற விருபாக்கா! குரக்குகளோடு போர்புரிவது உனக்குப் பெருமை தராது; ஆதலால், நீ உன் சேனைகளோடு இலங்கை நகரைக் காவல் புரிவாயாக! இருநூறு வெள்ளம் சேனையோடு இராம இலக்குவர் போருக்குக் காத்திருக்கும் வடக்குக் கோட்டை வாயிலைக் காக்கும் பொறுப்பை நானே மேற்கொள்வேன்!” என்று தன் சேனைகளை அணிபிரித்துப் போருக்கு ஆயத்தம் செய்தான் இராவணன்.

    இராம இலக்குவர் நிற்கும் பகுதிக்கு வேறு யாரையாவது அனுப்பிவிட்டுத் தான் தப்பித்துக்கொள்ள நினைக்காமல் அவர்களைத் தானே எதிர்க்க முடிவுசெய்த இராவணனின் வீரவுணர்ச்சி பாராட்டத்தக்கது; அதுவே தலைவனுக்குச் சிறப்பும் ஆகும்.

    மறுநாள் பொழுது புலர்ந்தது. இராமன் தன் சேனையோடு போருக்குத் தயாராகி இராவணன் வரவை எதிர்பார்த்து வடக்கு வாயிலை முற்றுகையிட்டிருந்தான். நேரம் சென்றுகொண்டே இருந்தது; ஆனால், இராவணன் வரவில்லை.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • ஆத்திகரும் நாத்திகரும் நேசித்த குமரகுருபரர்!

    ஆத்திகரும் நாத்திகரும் நேசித்த குமரகுருபரர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா 

    ஞானிகளின் வரலாறு நமக்கென்றும் பெருவியப்பே.பிறப்பும் வியப்புத்தான். அவர்கள் வாழ்வும் வியப் புத்தான். அவர்களின் செயல்களும் வியப்புத்தான். அவர்களின் ஆற்றலும் வியப்புத்தான். வியப்பினை வரமாக்கி மாநிலத்தில் வந்து சேர்ந்தவர்களாகவே ஞானிகள் விளங்குகிறார்கள். நடந்திருக்குமா என்று ஐயங்கள் எழுந்திடும் வகையில் அவர்களின் வாழ்வையே நாம் உற்று நோக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.அப்படி வியப்புடன் நோக்கும் வண்ணம் ஒருவர் மாநிலத்தில் பிறக்கிறார்.

    அல்லும் பகலும் அனைவரதமும் ஆண்டவனையே அகமிருத்தி வாழ்ந்து வந்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அளவிலா ஆனந்தம் அடைகிறார்கள் பெற்றவர்கள். ஆனால் அவர்களின் அளவிலா ஆனந்தமோ ஒரு மட்டோடு நின்று விடுகிறது. அழகான ஆண்பிள்ளை அம்மா, அப்பா என்று மழலை மொழியால் அழைப்பான் என்று ஆவலுடன் பார்த்திருந்த பெற் றாருக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. ஆசையுடன் பிறந்த ஆண்பிள்ளை பேசமுடியாத பிள்ளையாக இருப்பதைக் கண்டதும் பெற்றவர்கள் பேதலித்தே நின்றார்கள். எந்தக் கடவுளுக்கு விரதம் இருந்து இந்தக் குழந்தையைப் பெற்றார்களோ அந்தக் கடவுளின் சன்னதிக்கே பிள்ளையையும் கொண்டு அழுதபடி ஓடினார்கள். ஆண்டவன் சன்னதியில் குழந்தையைக் கிடத்தி “நீ தந்த குழந்தை பேசாதிருக்கின்றான். அவனைப் பேச வைத்திடு. இல்லாவிடின் நாங்கள் மடிந்து விடுவோம்” என்று பெரும் வேண்டுதலை விடுத்து பக்கமிருந்த கடலை நோக்கி ஓடினார்கள்.

    வைதாரையும் வாழவைப்பவன் முருகன் அல்லவா! அந்த முருகன் சன்னதியில் மனமுருகிடும் அடியாரின் வேண்டுதல் வீணாகிவிடுமா? குரல் கேட்டதும் குமரன் அருள் சுரந்தான். பேசாமல் இருந்த பிள்ளை பேசியது. பேசியதே அந்தப் பரம்பொருளான முருகனைப் பற்றியே ஆகும். ஐந்து வயதுவரை பேசாதிருந்த அந்தப்பிள்ளை அரன் மைந்தனை அகமிருத்தி “திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா” என்னும் அற்புதமான பொக்கிஷத்தை திருவாய் மலர்ந்தருளுகிறது. பிள்ளையின் குரல் காதில் கேட்டதும் அளவிட முடியா ஆனந்தத்தத்துக்கும், ஆச்சரியத்துக்கும் ஆட்பட்ட பெற்ற வர்கள் தங்கருத்தை மாற்றி சன்னிதானதுக்கு ஓடோடோடி வந்தார்கள். கந்தப் பெருமான் “குருபரா” என வழைத்தார் என்பதைக் கேள்வியுற்ற பெற்றவர்கள் அந்தக் குருபரனோடு சேர்த்து , குமரனருளால் பேசுந்திறன் வாய்த் தமையால் “குமரகுருபரன்” என்றே தமது பிள்ளைக்கும் பெயரினைச் சூட்டி பேரானந்தம் அடைந்தார்கள் என்று அறிந்திட முடிகிறது. திருச் செந்தூர் பதியில்த்தான் இந்த அற்புதம் நிகழ்ந்ததாய் குமரகுருபரர் வரலாற்றால் பார்க்க க்கூடியதாக இருக்கிறது. ஐந்து வயதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாதிருந்த பிள்ளை கந்தர் கலி வெண்பா என்னும் தத்துவ நூலினை எப்படித் தந்திருக்க முடியும் என்று ஒரு ஐயம் எல்லோரிடமும் எழத்தான் செய்யும் அல்லவா?

    இங்குதான் ஒரு கருத்தை மனமிருத்துதல் யாவருக்கும் அவசியமாகிறது. மூன்று வயதில் ஒரு குழந்தை அந்த முதல்வனையே காணுகிறது. காணுவதுடன் நின்றுவிடாமல் தமிழ் மழையாகவும் பொழிந்து நிற்கிறது. அதுவும் சாதாரண தமிழ் மழை அல்ல! இனிமைத் தமிழ் மழை! இங்கிதத் தமிழ் மழை! செறிவான தமிழ் மழை! சிந்தனைகள் நிறைந்த தமிழ் மழை! அநதச் சின்னவயதில் எப்படி அந்தக் குழந்தை அப்படிப் பாடியது என்பதையும் இங்கு மனமிருத்திப் பார்ப்பது உகந்ததாய் இருக்கும் அல்லவா? அதைத்தான் முன்னைத்தவம், முன் ஞானம் என்கிறோம். இங்கே ஐந்து வருடங்கள் பேசாதிருந்த பிள்ளை பேசப் புறப்பட்டதும் அதன் வாயிலிருந்து வெளிவந்ததும் தமிழால் ஆகிய தத்துவமே மூன்று வயதில் ஞானம் அன்று ஞானசம்பந்தக் குழந்தைக்கு வாய்த்தது. பேசாதிருந்த பிள்ளைக்கு ஐந்துவயதில் ஞானம் வாய்த்திருக்கிறது.

    ஞானம் என்பது எப்பொழுது யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அப்பொழுதுதான் அது கிடைக்கும் வெளியில் வரும் என்பதுதான் உண்மை நிலையாகும். அப்படித்தான் குமரகுருபரரை நாம் பார்த்திடல் பொருத்தமாய் அமையும். ஐந்து  வயதுவரை மோனத்தில் இருந்திருக்கலாம். மெளனம் என்பதுதான் மிகவும் உயர் நிலையாகும். அந்த மெளனத்தில் அந்தப் பரம் பொருளினையே அகமெண்ணியபடி வாய் பேசாதும் இருந்திருக்கலாம். என்று ஒரு சிந்தனையையும் ஆன்மீகத்தில் திளைத்தவர்கள் தெரிவிப்பதும் நோக்கத்தக்கது. அவ்வாறு அவர்கள் தெரிவிப்பதற்குக் காரணம் குமரகுருபரர் வழங்கிய படைப்புக்கள் எனலாம். இலக்கணம், இலக்கியம், தத்தவம், அறியாதவர், அவற்றைத் தேடி முறைப்படி கற்காதவர் எப்படி – இத்தனை அரியவற்றை ஆக்கினார் எனும் நிலையில் ஆன்மீகத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கு உடன்பாடு சொல்லாமல் இருந்திட முடியாமலே இருக் கிறோம் அல்லவா! இங்குதான் கருவிலே திரு நிறைந்தவராக குமரகுரு பரர் இருந்திருக்கிறார் என்பது புலனாகி நிற்கிறதல்லவா! இப்படியாய் அமைந்தவர்களைத்தான் ஞாவான்கள் என்று அழைக்கின்றோம்.

    வாய்ந்திறந்ததும் வெளிவந்த “திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா” சாதாரணமானது அல்ல. அதனுடைய உட்பொருளினை உற்று நோக்கும் ஆன் மீக ஆளுமைகள் அதனை “குட்டிக் கந்தபுராணம்” என்று உச்சிமேல் வைத்துப் போற்றியே நிற்கிறார்கள் என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். கந்தபுராணத்தை எங்களின் சொந்த புராணம் என்று கொள்ளும் ஒரு வழக்கம் எங்களிடம் நிறைந்தே காணப்படுகிறது. அந்தப் புராணத்துடன் இந்த குட்டிக் கந்தபுராணத்தையும் கருத்திருத்துவதும் சிறப்பாய் இருக்கும் என்று எண்ணுகின்றேன். கந்தர் கலிவெண்பாவில் – திருமுருகாற்றுப்படையினையும் காணலாம். அருணகிரியாரின் திருப்புகழையும் காணலாம் என்று அறிஞர்கள் சொல்லுவார்கள். அத்தனை சிறப்புக்களையும் கொண்டு விளங்குவதால் குமரகுருபரரின் முதல் வெளிச்சமாய் கந்தர் கலிவெண்பா பிரகாசித்துப் பக்தியுலகில் நிற்கிறது என்பதை மனமிருத்தல் வேண்டும். பக்திச்சு வையினையும், தத்துவ செறி வினையும், சொற் சுவையினையும், பொருட் சுவையினையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது என்பதும் நோக்க த்தக்கது. இதனைப் பாராயணம் செய்தால் வந்தவினையும், வருகின்ற வினைகளும் காணாமலே ஓடி விடும் என்பதையும் கருத்திருத்தல் வேண்டும். 

    குமரகுருபரர் ஆன்மீக வாதியாய் இருந்தார். அறநெறி காட்டுபவராய் இருந்தார். சமுதாய சிந்தனை மிக்கவராகவும் இருந்தார். தமிழ் இலக்கியப் பரப்பில் முத்திரை பதித்தவராகவும் இருந்தார். அது மட்டுமன்றி தவநெறியில் உயர்ந்தும் தனி ஒழுக்கத்தில் தலை சிறந்தும் அவர் இருந்திருக்கிறார். அவரின் அளவிட முடியாத ஆற்றல்களை யாவரும் அறியும் வண்ணம் அவரின் ஆக்கங்கள் அனைத்துமே அடையாளமாக இருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான குமரகுருபரர் – தனது குருவைத் தேடியதும், குருவின் ஆணை யின்படி சைவத்தைப் பரப்பிடப் பயணப்பட்டதும் அதற்காக அவர் பட்ட சோதனைகளும், வேதனைகளும் அவரை உயர் ஞானியாகவே பார்க்கும் வண்ணம் ஆக்கி யேயிருக்கிறது.

    மாசிலா மணியான ஒருவர் இவரின் குருவாய் வாய்த்ததே ஒரு சோதனைதான். “உன்னால் பதில் சொல்ல முடியா நிலையில் உன் னை யார் கேள்வி கேட்கிறாரோ, நீ அவ்வேளை சொல்வதறியாது நிற்கிறாயோ அங்குதான் உன் குருவைக் காண்பாய்” என்று அசரீரி அவருக்கு குறிகாட்டி நின்றது. “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள” என்னும் பெரிய புராணப்பாடலின் அனுபவத்தைச் சொல்லு என்று கேட்க அதற்கு உரிய பதிலினைக் கூறவியலாது மெளனித்து நிற்கிறார் குமரகுருபரர். அப்பொழுது அவர் மனத்தில் “கண்டேன் குருவை” என்னும் உணர்வு எழுகிறது. அவரின் அடி பணிகிறார். தொடர்கிறார் அவரிட்ட பணியியை. அந்தக் குருதான் தருமபுர ஆதீனத்தின் தலைமைப் பதவியிலிருந்த மாசிலாமணித் தேசிகராவார்.

    தமிழகத்திலிருந்து வடநாட்டுக்குச் சென்று சைவத்தை நிலை நிறுத்தி, அங்கு சைவத்துக்கென ஒரு மடத்தினை நிறுவியர் என் னும் பெருமையினைப் பெற்றவராக குமரகுருபரர் மட்டுமே விளங்குகிறார், அதுவும் தமிழராக இருந்திருக்கிறார் என்பதை மனமிருத்துவதே  முக்கியமாகும். குமரகுருபரர்  வடநாடு சென்று மடம் அமைத்திட உத்தரவு பெறுவதற்கு அக்காலத்தில் இருந்த இந்துஸ்தானி பேசுகின்ற முகம திய மன்னனனையே நாடும் தேவை இருந்தது. இவருக்கோ இந்துஸ்தானி தெரியாது. அவனுக்கோ தமிழ் தெரியாது. ஆனால் அவனுடைய தாய் மொழியில் சரளமாய் பேசினார் குமரகுருபரர். எப்படி இது நடந்தது. அதனை விளக்கவே “சகல கலா வல்லி மாலை” சான்றாக வந்து நிற்கிறது. சகலகலாவல்லி மாலையினைப் பாடியதும் இந்துஸ்தானி அவர் நாவில் அமர்ந்து விடுகிறது. சகலகலைகளுக்கும் அதிபதியான கலைமகள் கருணையினைப் பெற்று விடுகிறார் குமரகுருபரர். சைவத் தமிழர்களுக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகவே சகலகலா வல்லிமாலையினைப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு பொருளும், உள்ளத்தில் பக்தியின் உணர்வினை, தமிழின் உணர்வினை, இறையின் உணர்வினை, நிச்சயமாகவே எழச் செய்துவிடும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை எனலாம். நவராத்திரி என்றதும் முன்னுக்கு வந்து நிற்கும் பக்திப் பாமாலை சகலவல்லிமாலைதான். அதனை மனமுருகிப் பாடுவதனைச் சகல சைவத்தமிழ் மக்களும் பெருவிருப்பமாக்கியே இருக்கிறார்கள் என்பது கருத்திருத்த வேண்டியதாகும்.

    திருவைகுண்டத்தில் பிறந்த குமரகுருபரரை சிற்றிலக்கிய வேந்தர் என்று பாராட்டுவது உகந்ததாகவே இருக்கும். அந்தளவுக்கு சிற்றிலக்கியத்தில் அவர் முத்திரை பதித்தவராகிறார் என்பதுதான் உண்மை எனலாம். அவரின் படைப்பாக; கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, பாண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மதுரை மீனாட்சியம்மன் குறம், தில்லைச் சிவகாமி அம்மை இரட்டைமணி மாலை, கயிலைக் கலம்பகம், காசித்துண்டி விநாயகர் பதிகம். சிற்றிலக்கியத்துக்கு எத்தனை கொடைகளை வழங்கியிருக்கிறார் என்பதை அவரின் படைப்புகளில் இருந்து பார்த்துவிடக் கூடியதாக இருக்கிறதல்லவா!

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடப்பட்ட நிலையில் மீனாட்சி அம்மனே குழந்தையாய் வந்து அமர்ந்திருந்து கேட்டதாகவும், குமரகுருபரரின் தமிழ்ச் சுவையினைக் கண்டு முத்துமாலையினைக் கழுத்தில் அணிவித்து அருள் பாலித்ததாகவும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. நாத்திகர்கள் இதனை நம்புகிறார்களோ தெரியாது – ஆனால், இறைவனது ஆசியினைப் பெற்ற தமிழ்ப் புலவராக வெளிச்ச மிட்டுக் காட்டப்படுகிறார் என்பதுதான் இங்கு மனத்திருத்த வேண்டிய கருத்தெனலாம். இதனால் இவரை வரகவி என்றும் பார்க்கலாம் அல்லவா! மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழினைப் போற்றாத தமிழ் அறிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு சொற்சுவையும், பொருட்சுவையும் , அருட்சுவையும் இருங்கே அமைந்த பொக்கிஷம் என்றே எண்ண முடிகிறது.

    ” தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறை பழுத்த
    துறைதீந் தமிழின் நறுஞ் சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
    எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே “
    ……… வஞ்சிக் கொடியே வருகவே !
    மலையத்துசன் பெற்ற பெரு வாழ்வே வருக … வருககவே!

    என்னும் பக்தியினைத் தொடும் இப்பாடல் வரிகளை மறக்கத்தான் முடியுமா? இதனைக் கேட்டதுமே உலகாளும் மீனாட்சியே குழந்தையாக சபைக்கு வந்தாளாம்!

    திருக்குறள் பருவத்தே பெற்ற பிள்ளை என்று யாவராலும் ஏற்றிப் போற்றிக் கொண்டாடப்படும் வகையில் குமமரகுருபரர் அகத்தினின்று வெளிவந்த ஆக்கந்தான் “நீதிநெறி விளக்கம்” நூலாகும். குமரகுரு பரரின் சிந்தனை ஓட்டம் எப்படியெல்லாம் பயணப்பட் டிருக்கிறது என்பதற்கு இந்த நூலே பெருஞ்சான் றாகி வந்தமைகிறது.

    நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
    நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் – நீரில்
    எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே
    வழுத்தாது எம்பிரான் மன்று.

    இந்த ஒரு பாட்டே  நீதிநெறி விளக்கம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டி விடுகிறது அல்லவா!

    குமரகுருபரரின் அறச்சிந்தனைகள் மட்டுமல்லாது அவரின் கல்விச் சிந்தனைகளும் கருத்திருத்த வேண்டியனவேயாகும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை என்றே சொல்லலாம். சைவத்தின் காவலனாய் விளங்கினார். தமிழ் இலக்கியத்தில் தனியான இடத்தினைப் பெற்ற வராகவும் விளங்கினார். சமயத்தின் சாறாக இருந்து சரித்திரமாய் ஆகியவராய் இருந்தாலும், சமுதாயச் சிந்தனை மிக்கவராகவும் விளங்கி இருக்கிறார் என்பதும் நோக்கத்தக்கதாகும். சமயத்தில் நிற்பவர்கள் தத்துவங்களைச் சொல்லிவிட்டு நிற்பவர்களாய் இருப்பதைப் பெரும்பாலும் காணுகிறோம். ஆனால் பேசாதிருந்து பின் பேசப் புறப்பட்ட குமரகுருபரரோ தாய்மொழியான தமிழை நேசிக்கிக்கிறார். குருவை நேசிக்கிறார். தமிழ் இலக்கியத்தை நேசிக்கிறார். சமூகத்தை நேசிக்கிறார். நாத்திகர் போற்றும் வகையில் அவர்களின் அகத்தினாலும் நேசிக்கப்படுகிறார். ஆத்திகரும், நாத்திகரும், நேசிக்கும் ஒரு வராக குமரகுருபரர் விளங்கி இருக்கிறார் என்பதுதான் அவரை இன்றுவரை நாங்கள் அனைவருமே போற்றிப் பூசித்து அவருக் கென்று குருபூசை நன்னாளைக் கொண்டாட வைத்திருக்கிறது என்பதுதான் உண்மையாகும்..

    நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
    பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
    கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
    காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.

    தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
    வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
    தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
    காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 

    சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
    நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
    செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
    கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 

    மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
    பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
    விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
    கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே

    Share
  • 13ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    13ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    2022 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 12 ஆண்டுகளை நிறைவுசெய்து 13ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் வல்லமை, 18,606 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,878 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேலான ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் மதிப்பீட்டாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம். அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    முக்கியமான தொடர்கள், கட்டுரைகள், படைப்புகள், தொடர்ந்து வெளிவருகின்றன. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம்.

    கடந்த ஆண்டு வல்லமையின் செலவினங்களுக்காக நன்கொடை கோரினேன். நண்பர்கள் ஜெயபாரதன், முனைவர் நா.கணேசன், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பேராசிரியர் ம.இராமச்சந்திரன் ஆகியோர் கனிவுடன் அனுப்பிய நன்கொடைகளால் தளம் சீராக இயங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கு உரிய கட்டணங்களை அடுத்த மூன்று மாதங்களில் செலுத்த வேண்டியிருக்கும். அன்பர்களின் நன்கொடையை வரவேற்கிறோம்.

    மேலும் நம் (Siteground) வழங்கியுடனான மூன்றாண்டு ஒப்பந்தம், இன்னும் மூன்று மாதங்களில் முடிகிறது. புதிதாக யாரிடம் இந்தப் பணியை ஒப்படைக்கலாம் எனத் தேடி வருகிறோம். தொடர்ந்து நிர்வகிக்கப்படும் வேர்ட்பிரஸ் (Managed WordPress) சேவையைத் தரமாகவும் மலிவாகவும் வழங்கும் நிறுவனங்களை / நண்பர்களைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.

    வல்லமைக்கு வரும் படைப்புகளை வெளியிடுவதில், முனைவர் சுரேஷ் ரங்கநாதன் பேருதவி புரிந்து வருகிறார். தள நிர்வாகப் பணியை எல்.கார்த்திக் தொடர்ந்து ஆற்றி வருகிறார். இருவருக்கும் நனி நன்றி.

    வல்லமை மின்னிதழை மேம்படுத்த, முயன்று வருகிறோம். உங்கள் வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிருங்கள்.

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 48

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 48

    -மேகலா இராமமூர்த்தி

    கடலைக் கடந்துசெல்வதற்கு வழிகாட்டுமாறு வருணனை வேண்டி ஏழு நாட்கள் மந்திரம் செபித்த பின்பும் வருணன் வாராதது கண்டு வெகுண்ட இராமன், சரங்களை மாரியாய்க் கடலின்மீது எய்யத் தொடங்கினான்.

    காலனுக்கு இணையாக விரையும் அவ் அம்புகள் கடல் முழுவதையும் கவ்விக் கொண்டதால் பெரிய நிலமாகிய பூமித்தாய், தான் உடுத்திருந்த நீலவானொத்த துகிலினை நீக்கிப் பூ வேலைப்பாடுகளோடு கூடிய செந்நிறமான கூறை ஆடையைத் தன் உடலில் சுற்றிக்கொண்டவள் போலப் பொலிவோடு காணப்பட்டாள்.

    காலவான் கடுங் கணை சுற்றும் கவ்வலால்
    நீலவான் துகிலினை நீக்கிப் பூ நிறக்
    கோலவான் களிநெடுங் கூறை சுற்றினாள்
    போலமா நிலமகள் பொலிந்து தோன்றினாள்.
    (கம்ப: வருணனை வழிவேண்டு படலம் – 6643)

    திருமணத்திற்கு வாங்கப்படும் கூறைச் சேலை இப்போதும் செந்நிறத்தில் இருப்பது இப்பாடலோடு இணைத்துப் பார்த்து இன்புறத்தக்கது.

    அம்பு மழை பொழிந்த பின்னரும், அதன்விளைவாய்க் கடலில் ஏராளமான உயிர்கள் அழிந்தபின்னருங்கூட வருணன் வரவில்லை. எனவே, பிரமதேவனின் கணையை (பிரம்மாஸ்திரம்) எடுத்து அம்பில் பூட்டினான் இராமன்.

    அதைக் கவனித்த தேவர்கள், கருணை நிரம்பிய இராமன் கோபம்கொண்டு பிரமன் கணையைத் தொடுக்கும் தருணத்திலும் இந்த வருணன் வாராததைக் காண்கையில், இராமனோடு மாறுபாடு கொண்டவர்கள் அரக்கரே அல்லர் என்று கூறித் துன்பமடைந்தனர். இராமனை உணர்ந்துகொள்ளாத வருணனே உண்மையான அரக்கன் எனும் பொருள் இதனுள் தொக்கி நிற்கின்றது.

    பிரமன் கணையை இராமன் தொடுத்ததினால் எங்கும் புகை மண்டிற்று; அதனால், வரும் வழியை அறிய முடியாதவனாய்த் தடுமாறியபடி அழுத கண்களோடு, “அண்ணலே! நீ என்னை அழைத்தபோது இந்தக் கடலின் முடிவில் நான் இருந்தமையால் உன் அழைப்பை அறிய முடியாதவனானேன்” என்று உரைத்தபடி இராம பாணங்கள் உமிழ்ந்த தீயினால் வெந்த உடலோடும் நொந்த மனத்தோடும் இராமன் எதிரில் வந்து தோன்றினான் கடலரசன் வருணன்.

    இராமனைத் தொழுத அவன், பரவியிருக்கும் இருளைப் போக்குகின்ற தெய்வத்தன்மை வாய்ந்த சூரியனையும் பழிக்கும் ஒளிமிக்க மாலையொன்றைத் தனது பெரிய கரத்தால் இராமனுக்கு முன்பு காணிக்கையாக வைத்து, ”சிறியவர்கள் அறியாமையால் தீமை செய்தால் அத்தீமையைக் பொறுத்தருள்வது பெரியவர்களின் செய்கையாகும். ஆயிரம் திருநாமங்களை உடைய தலைவ! அடியேன் உனக்கு அடைக்கலம்!” என்று இராமனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.

    பாய்இருள் சீய்க்கும் தெய்வப் பருதியைப் பழிக்கும் மாலை
    மாஇருங் கரத்தால் மண்மேல் அடியுறையாக வைத்து
    தீயன சிறியோர் செய்தால் பொறுப்பது பெரியோர் செய்கை
    ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான்.
    (கம்ப: வருணனை வழிவேண்டு படலம் – 6661)

    சினந்தணிந்த இராமன் வருணனை நோக்கி, ”யான் உன்னை இரந்து வேண்டியபோது வாராத நீ, சீற்றங்கொண்டு கணை துரந்த பின்பு வந்த காரணமென்ன உரைப்பாய்!” என்று கேட்கவே, ”ஐயனே! உன்மீது ஆணையாகச் சொல்கின்றேன்! சீதைக்கு நேர்ந்த துயர் ஒன்றும் நான் அறிந்திலேன்; ஏனெனில், நான் இப்போது தேவலோகத்திலிருந்து வரவில்லை; ஏழாவது கடலில் சுறாமீன்களுக்குள் நிகழ்ந்த சண்டையை விலக்கப் போயிருந்தேன். அதனால் இடையில் நிகழ்ந்தவை எவற்றையும் அறிந்தேனில்லை” என்றான் வருணன் வருத்தத்தோடு.

    அவன் நிலைகண்டு இரங்கிய இராமன், அது போகட்டும்! இனி நடக்கவேண்டியதைப் பார்ப்போம்! நான் பிரமனின் கணையை வில்லில் பூட்டிவிட்டேன் (வருணன்மீது எய்வதற்காகப் பூட்டப்பட்ட கணையது); அது வீணாதல் கூடாது; அதற்கு இலக்கு யாதென உரை!” என்றான்.

    ”அண்ணலே! மருகாந்தாரம் எனும் தீவு இக்கடல்நடுவே உள்ளது. அங்குள்ள அவுணர்கள் கொடியவர்கள்; உலகையே அழித்துப் புசிக்கக் கூடியவர்கள்; எனக்கும் தீங்குசெய்து வருகின்றனர்; அந்தக் கொடியவர்கள்மேல் உன் பாணத்தைச் செலுத்து” என்று வருணன் புகலவே, அவ்வாறே பிரமன் கணையை அவர்களை நோக்கிப் போக்கினான் இராமன். அவர்களை அழித்துவிட்டு இராமனிடம் மீண்டுவந்தது அப் பகழி.

    ”வருண! அரக்கர்கள் இந்தக் கடலரண் இருக்கும் துணிச்சலில் மகிழ்ச்சிக் கூத்தாடி வருகின்றார்கள்; அவர்களின் மகிழ்ச்சிக்கு முடிவுகட்டும் வகையில் நாங்கள் கடல்கடந்து இலங்கைசென்று சேர வேண்டும்; அதற்கொரு வழிகூறு” என்று கடலரசனிடம் வினவினான் கடல்வண்ணன் இராமன்.

    ”இந்தக் கடலின் ஆழமும் அகலமும் இதன் அரசனான என்னாலேயே அறியவொண்ணாதவை; ஆதலால், இதனை வற்றச்செய்து கடக்கலாம் என எண்ணினால் அதற்கு நெடுங்காலம் பிடிக்கும்; உம் வீரர்களும் தளர்வுறுவர்.

    அதற்கு மாறாகக் கடல்நீரைக் கல்போல் கடினமாக்கி அதன்மீது நடந்துசெல்லலாம் என்றாலோ கடலிலுள்ள எண்ணற்ற உயிர்கள் மடியும்! ஆதலால் எந்தையே! என்னிடம் இட்டது எதுவும் கீழே ஒழுகாவண்ணம் (வீழாமல்) எல்லையில்லாத காலம் நான் ஏந்திக்கொண்டிருப்பேன்; என் தலையின் மீதாக அணை ஒன்றை (சேது) இயற்றி அதன்வழியே இனிதாகச் செல்வாயாக!” என எவ்வுயிர்க்கும் தீங்கு பயவாத யோசனையை வழங்கினான் வருணன்.

    கல்லென வலித்து நிற்பின் கணக்குஇலா உயிர்கள் எல்லாம்
    ஒல்லையின் உலந்துவீயும் இட்டதுஒன்று ஒழுகாவண்ணம்
    எல்லைஇல் காலம்எல்லாம் ஏந்துவென் இனிதின்எந்தாய்
    செல்லுதி சேதுஎன்று ஒன்றுஇயற்றி என்சிரத்தின் மேலாய்.
    (கம்ப: வருணனை வழிவேண்டு படலம் – 6672)

    வருணனின் யோசனையை ஏற்றுக்கொண்ட இராமன், ”குன்றுகளைக் கடலின்மீது அடுக்கி அணை கட்டுவீர்” என்று வானரர்களைப் பணித்தான்; தன் பணி முடிந்ததால் வருணன் இராமனை வணங்கி விடைபெற்றான்.

    யாரிடம் அணைகட்டும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது குறித்துக் குரக்கின அரசனான சுக்கிரீவன், வீடணன், அனுமன், அங்கதன், சாம்பன் முதலிய அறிஞர்களோடு ஆலோசித்து நளன் எனும் வானரனிடம் அப்பொறுப்பை ஒப்படைப்பது என்று முடிவுசெய்து அவனை அழைத்தான். நளன் என்பவன் தேவதச்சனான விசுவகர்மாவின் மகன்.

    சுக்கிரீவனின் அழைப்பை ஏற்று அவனை நாடிவந்த நளனிடம் அணைகட்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு சுக்கிரீவன் பணிக்கவே, நளனும் அதற்கு உடன்பட்டு, ”அரசே! செறிகடலில் சிறப்புற அணைகட்டித் தருவேன்; கடலில் அடுக்குதற்கு மலைகளைக் கொண்டுவருமாறு வானரர்களை ஏவுக!” என்றான். உடனே வானர சேனை அப்பணியில் இறங்கியது.

    பேர்த்தன மலை சில பேர்க்கப் பேர்க்க நின்று
    ஈர்த்தன சில சில சென்னி ஏந்தின
    தூர்த்தன சில சில தூர்க்கத் தூர்க்க நின்று
    ஆர்த்தன சில சில ஆடிப் பாடின.
    (கம்ப: சேதுபந்தனப் படலம் – 6679)

    அவ் வானரங்களில்மலைகளைப் பேர்த்தன சில; பேர்த்தனவற்றை இழுத்தன சில; அம்மலைகளைத் தலைகளில் ஏந்தின சில; அம்மலைகளைக் கொண்டு கடலைத் தூர்த்தன சில; அவ்வாறு தூர்க்கத் தூர்க்க அது கண்டு ஆரவாரம் செய்தன சில; அம்மகிழ்ச்சியால் ஆடிப்பாடின சில.

    மேகத்தை அளாவி நிற்கும் மலைகளைப் பெயர்த்து வானரங்கள் கடலில் எறியவே அவற்றைத் தன் மந்திர வித்தையால் நளன் ஒருவனே தாங்கினான். அச்செயலானது தஞ்சமென வருவோரைத் திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப வள்ளல் தாங்கும் தன்மைபோல் இருந்தது என்கின்றார் சடையர்பால் குன்றிடா அன்பும் குறைந்திடா நன்றியறிதலும் கொண்டவரான கம்பர்.

    மஞ்சினில் திகழ்தரும் மலையை மாக் குரங்கு
    எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே நளன்
    விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில்
    தஞ்சம் என்றோர்களைத் தாங்கும் தன்மைபோல்.
    (கம்ப: சேதுபந்தனப் படலம் – 6682)

    பெரு மலைகளையெல்லாம் அவற்றிலே சுற்றியிருந்த கொடிகளோடும் அவற்றில் வசித்த விலங்குகளோடும் பெயர்த்தெடுத்து வந்த வானரர்கள், அணை கட்ட அவற்றை இடையறாது வழங்கிக்கொண்டே இருந்தமையால் மூன்றே பகலில், திரிகூடமலையில் கட்டப்பட்டிருந்த, இலங்கை நகரை அடைய அணை கட்டிமுடிக்கப்பட்டது. அணை தயாரானது கண்டு மகிழ்ச்சிப் பெருக்கால் வானரர்கள் எழுப்பிய ஆரவாரம் வானைப் பிளந்தது.

    அணை ஐந்து நாட்களில் கட்டி முடிக்கப்பட்டதாக வான்மீகி முனிவர் தம் காவியத்தில் குறிப்பிட, கம்பர் அது மூன்று நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்.

    அணையின் தோற்றமானது ஆதிசேடன் கிடந்தது போலவும், இலங்கையாகிய பெண் தன் கைகளை நீட்டி இராமனை அன்போடு அழைப்பது போலவும், ஆகாய கங்கையே ஆறாய்க் கிடப்பது போலவும், இந்திர வில் போலவும் காட்சியளித்தது.

    அணை கட்டிமுடிக்கப்பட்ட பின்பு சுக்கிரீவன் வீடணன் மற்றுமுள்ள வானரர்கள் இராமனிடம் சென்று நூறு யோசனை நீளமும் பத்து யோசனை அகலமும் கொண்ட அணை கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அச்செய்தியறிந்து நனிமகிழ்ந்த இராமன், வானரர்களை அன்போடு தழுவிக் கொண்டான். அவ் அணையைத் தன் கண்களால் காணவிரும்பி அணையை நெருங்கிய அவன், தன் ஆவியனைய சீதையையே கண்டதுபோன்ற மனநிலை கொண்டான்.

    அடுத்து, அணையின்மீது வானரப் படையின் பயணம் இலங்கையை நோக்கித் தொடங்கியது. அணிவகுப்பின் முன்பகுதியில் அரக்கர் மன்னனாக முடிசூட்டப்பெற்ற வீடணன் செல்ல, பின்பகுதியில் அறநூல்களை ஆய்ந்துகற்ற அனுமன் வர, இளவல் இலக்குவன் பின்தொடரக் கருநிறக் களிறென இராமன் நடந்துசென்றான்.

    நெற்றியின் அரக்கர்பதி செல்ல நிறைநல் நூல்
    கற்றுஉணரும் மாருதி கடைக்குழை வரத் தன்
    வெற்றிபுனை தம்பிஒரு பின்புசெல வீரப்
    பொன்திரள் புயக் கருநிறக் களிறு போனான்.
    (கம்ப: ஒற்றுக் கேள்விப் படலம் – 6750)

    கடலைக் கடந்த வானரர் படை இராம இலக்குவரோடு சுவேல மலையில் தங்கிற்று; அங்கே அனைவர்க்கும் பாடிவீடமைத்துக் கொடுத்தான் நளன். 

    அவ்வேளையில் வானர சேனையின் அளவு, திறன் முதலியவற்றை அறிந்துவருவதற்காக இரு அரக்க ஒற்றர்களை ஏவினான் இராவணன். அவ் ஒற்றர்களும் அரக்க வடிவில் சென்றால் ஆபத்து என்பதனை உணர்ந்து வானர வடிவத்தில் பாடிவீடுகளைச் சுற்றிவந்தபோதில் ஆராய்ச்சிவல்லானான வீடணனால் அடையாளம் காணப்பட்டனர். அவர்களைக் கட்டியிழுத்துச் சென்று இராமன் முன்பாக நிறுத்தி ”இவர்கள் இருவரும் அரக்கரினத்தைச் சேர்ந்தவர்கள்; இராவணனின் ஒற்றர்கள்” என்று அம்பலப்படுத்தினான் வீடணன். 

    அவ் ஒற்றர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் தாங்கள் வானரர்களே என்றும் வீடணனே வஞ்சகன் என்றும் வாதிட்டனர். வீடணன் மந்திரமொன்றைச் செபித்து அவர்களைத் தம் உண்மை உருவுக்குக் கொண்டுவந்த பின்னர்தான் அவர்கள் தாம் இராவணனின் ஒற்றர்கள் என்பதை ஒத்துக்கொண்டனர்.

    தம்முடைய ஒற்றறியும் செயலில் தோல்வி கண்டாலும், எதிரிகள் ஐயங்கொள்ளாத உருவொடும், பார்த்தவரின் கண்களுக்கு அஞ்சாமலும், எவ்விடத்திலும் மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமலும் இருப்பவனே ஒற்றன் எனும் வள்ளுவத்துக்கு ஏற்ப நடந்துகொண்ட இவ் ஒற்றர்களின் துணிச்சலான முயற்சி பாராட்டத்தக்கதே.

    கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
    உகாஅமை வல்லதே ஒற்று.
    (குறள்: 585)

    அந்த ஒற்றர்களை நோக்கிய இராமன், ”எங்கள் படையிருக்கும் இடங்களையெல்லாம் நீங்கள் சுற்றிப் பார்த்துள்ளீர்கள்; எனினும், நான் உங்களை ஆபத்தின்றி இங்கிருந்து போகவிடுகின்றேன். உங்கள் மன்னன் இராவணனிடம் சென்று, ”குறைவிலா தவம்புரிந்து வருகின்ற தையலான சீதை தனிமைச் சிறையில் வாடுமாறு நினைக்கத் தகாத வஞ்சனை புரிந்த அவனுடைய செல்வத்தையெல்லாம் அவன் தம்பியாகிய வீடணன் அடையச் செய்து, இராவணனையும் அவன் சுற்றத்தாரையும் எரிநரகம் எனப்படும் தப்பிவியலாச் சிறையில் வைப்பேன் என்று விளம்புவீர்” என்றான்.  

    தாழ்வுஇலாத் தவத்துஓர் தையல் தனித்துஒரு சிறையில் தங்க
    சூழ்வுஇலா வஞ்சம்சூழ்ந்த தன்னைத்தன் சுற்றத்தோடும்
    வாழ்வுஎலாம் தம்பிகொள்ள வயங்குஎரி நரகம் என்னும்
    வீழ்வுஇலாச் சிறையின் வைப்பென் என்பதும் விளம்புவீரால்.
    (கம்ப: ஒற்றுக் கேள்விப் படலம் – 6782)

    ”நல்லவேளை உயிரோடு தப்பினோம்” என்று எண்ணிக்கொண்டு அங்கிருந்து அகன்றுசென்றனர் இராவணனின் ஒற்றர்கள்.

    மறுபுறத்தில், அந்த இரவுப்பொழுதில், இலங்கை மன்னனான இராவணன் ஒலிக்கின்ற கடலின் அரசனான வருணன் இராமனிடம் அஞ்சிய அச்சத்தையும்; இராமனின் சேனைகள் வலிய கடலில் அணைகட்டிய திறத்தையும், அவ்வணை வழியே இராமன் இலங்கைக்கு வந்துள்ளமையையும் மனத்துள் எண்ணிச் சிந்தித்தவனாய்த் தனித்திருந்தான்.   

    மீண்டும் மந்திராலோசனை செய்யவிரும்பி அறிஞர்களை அழைத்தான். அவர்கள் வந்துசேர்ந்ததும், ”மனிதர் இப்போது நமக்கு அணியர் (அண்மையர்) ஆயினர்; இனி நாம் துணிந்து செய்யவேண்டிய காரியம் யாது?” என்று அவர்களை வினவினான்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

    Share
  • நாமார்க்கும் குடியல்லோம் எனவுரைத்த தமிழடியார்!

    நாமார்க்கும் குடியல்லோம் எனவுரைத்த தமிழடியார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், அவுஸ்திரேலியா

    தமிழ்மொழி மற்றைய மொழிகளிலும் சிறப்பான மொழியாக விளங்குவதற்குக் காரணம், மற்றைய மொழிகளில் இல்லாத ஒரு சிறப்பு தமிழ் மொழியில் இருப்பதேயாகும் என்பது அறிஞர்கள் கருத்தாக இருக்கிறது. அந்தத் தனிச்சிறப்பு எது தெரியுமா அதுதான் “பக்தி இலக்கியம்” ஆகும். உலகின் எந்த மொழியிலும் பக்தி என்பது இலக்கியமாகக் கொள்ளப்படவே இல்லை. ஆனால் தமிழ் மட்டும் தனக்கெனப் பக்தியை இலக்கியம் ஆக்கியே இருக்கிறது. இதனால் தமிழ் பக்தியை அரவணைத்தபடியே பயணப்படுகிறது என்பதை கருத்திருத்தல் அவசியமாகும். பக்தியை இலக்கியம் ஆக்கும் வகையில் தமிழுக்கு வந்து வாய்த்தவர்கள்தான் ஆண்டவனது அடியார்கள் ஆவர். அந்த அடியார்களில் முன்னுக்கு வந்து நிற்பவர் களில் மூத்தவர் காரைக்கால் அம்மையார். அவரின் பின் பக்திப் பெருவெளியில் பயணப்பட இம்மாநிலத்தில் வந்தவர்களாய் அப்பரும் சம்பந்தரும் விளங்குகிறார் எனலாம். இவர்கள் இருவரும் ஒரே காலத்த வராக இருக்கின்ற பொழுதும் – அப்பர் மூத்தவராகவும், சம்பந்தர் இவரின் இளையவராகவும் ஆகி நிற்கிறார்கள்.

    அப்பரும் சம்பந்தரும் கி.பி ஏழாம் நூற்றைண்டைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும், இருவர் வாழ்வும்,  அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களும் வேறுபட்டனவாகவே அமைந்திருந்தன என்பதும் நோக்கத் தக்கது, அப்பர் குடும்பச் சூழல் வேறாயும் சம்பந்தர் குடும்பச் சூழல் வேறாயும் அமைந்தே காணப்பட்டது. ஆனால் பக்தி என்னும் நிலையில் இருவரும் ஒருமித்தே பயணப்பட்டார்கள். அப்படிப் பயணப்பட்ட நிலையிலும் அப்பரின் சிந்தனை, செயற்பாடுகள், சம்பந்தரிலும் வேறுபட்டதாகவே அமைகின்ற ஒரு நிலை தோற்றம் பெற்றது. அதற்கு உரிய காரணம் தான் என்ன என்பதை அறிவது மிகவும் முக்கியமாகும்.

    மருள் நீக்கியார் சைவத்தில் பிறந்து சைவத்தைத்துறந்து சமணம் என்னும் சமயத்தைத் தழுவுகின்றார். மருள் நீக்கியாரின் இளம் மனத்தில் சமணத்தின் கொள்கைகள் சிறந்தனவாகப்பதிகின்றன. சமணரும் இவரை அணைக்கின்றனர். சமண மடத்தின் தலைவராய் ஆகும் அளவுக்கு மருள் நீக்கியார் ஆளுமை வளர்கிறது. மருள் நீக்கியார் என்னும் பெயர் மறைந்து சமண மடத்தின் தலைவராய் “தருமசேனர்” என்னும் புதுப் பெயர் வாய்க்கிறது. நாட்டில் சமணமே அரசபீடத்தாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மருள் நீக்கியாரின் மனம் மாறுகிறது. சமணத்தின் தலைமயைத் தூக்கி எறிந்துவிட்டு தான் பிறந்த சைவத்தில் அவர் சங்கமம் ஆகிறார். சங்கமம் ஆகும் நிலையில் அவர் நெஞ்சம் தமிழைக் கொட்டுகிறது. அதுவும் கவியாய், பக்தியாய், இசையாய் கொட்டுகிறது. எம்பெருமான் சிவனே வியந்து “நாவுக்கரசு” என்று விளிக்கும் அளவுக்கு தமிழ் ஆக்கி நிற்கிறது. மருள் நீங்கியதால் அருள் கிடைக்கிடைக்கிறது. தருமசேனர் சைவம் தளைக்க, தொண்டுகள் சிறக்க, நாவுக்கக்கரசாய் வலம் வருகிறார். வலம் வருகின்ற நாவுக்கரசரை இளையவரான சம்பந்தப் பெருமான் கண்டவுடன் “அப்பரே” என்று அழைக்கின்றார். இறைவன் அழைத்த நாவுக்கரசர் என்னும் பெயரும் சம்பந்தப் பெருமான் அழைத்த அப்பரே என்னும் பெயரும் – சைவத் தமிழ் உலகில் நிலையான, உறுதியான பெயராக நிலைத்தே விட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது.

    அப்பர் பெருமான் வரலாற்றை நோக்கும் பொழுது – அவர் சமயத்தின் வழியிலும் பயணப்பட்டிருக்கிறார். சமூகநீதியின் வழியிலும்  பயணப்பட்டி ருக்கிறார் என்றுதான் மனங்கொள்ள வைக்கிறது. சம்பந்தப் பெருமானின் சமகாலத்தவராக இருந்த பொழுதும், அப்பரின் வாழ்வியல் அனுபங்களும், அவரின் வயதின் முதிர்ச்சியும் அவருக்கென்று தனியான ஒரு இடத்தினையே வழங்கி இருக்கிறது எனலாம்.

    சமணமதத் தலைவராய் இருந்த காரணத்தால் அவரின் புலமை நலம் – ஆளுமை உடையதாகவே அமைந் தது,வடமொழியிலும், தமிழ் மொழியிலும் புலமை உடையவராகவும் இருந்திருக்கிறார். சமண மதத்தாரால் மதிக்கப்படும் நிலையில் அவர் இருந்திருக்கிறார் என்பதும் நோக்கத்தக்கது. அப்படி மதிக்கப்பட்டவர் அந்த மதத்தை விட்டு வெளியில் வருவதும், சைவத்தில் இணைவதும் சம்பந்தருக்குக் கிடைக்காத நிலை எனலாம்.  மதம் விட்டு விடு மதம்மாறியவர் என்று எடுக்துக் கொண்டால் அதில் அப்பர்தான் முன்னிற்கிறார். அப்படி அவர் மனம் மாறியமையமையால் சைவம் மிகச்சிறந்த ஒரு அடியவரை, பேராளுமையை, சிந்தனையாளரைப் பெற்றுக்கொள்ளும் நிலை வாய்த்தது என்பதை கருத்திருத்தல் அவசியமானதாகும். ஏழாம் நூற்றாண்டின் சமய சமூக சூழலில் சம்பந்தருடன் அப்பரின் இணைப்பு அளப்பரும் இணைப்பாகவே அமைந்தது. அப்பரும் சம்பந்தரும் அப்பாவும், பிள்ளையும் போல இணைந்து ஆலயங்கள் தோறும் சென்று அடியார்கள் மனத்தில் பக்தியென்னும் விதையினை ஆழமாக விதைத்திட்டார்கள் என்பதும் நோக்கத்தக்கதாகும். இளமையும் முதுமையும் இணைந்த நிலை சைவ பக்தியுலகுக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்தது என்ப தைக் கருத்திருத்தல் வேண்டும்.

    அப்பர் மதம்மாறிய நிலையில், அவரின் கூட இருந்த சமணர்கள் ஆத்திரம் கொண்டு வெகுண்டெழுந்தார்கள். ஏழாம் நூற்றாண்டில் அரசுகட்டிலில் பாண்டியனும் , பல்லவனும் இருந்தார்கள். அவர்களும் சமணத்தைத் தழுவி அதற்கே ஆதரவும் காட்டி நின்றார்கள். சமணம் என்பது அரசமதமாகவே காணப்பட்டது எனலாம். வெகுண்ட சமணர்கள் அரசனை நாடி , மதம்மாறிய துரோகத்துக்கு உரிய தண்டனையினை அப்பருக்கு வழங்கிட வழி வகுத்தனர். அரசனுடைய அழைப்பாணை அப்பரிடம் போனது. அப்பர் மனம் முழுவதும் எம் பெருமான் சிவனின் நினைப்பே நிறைந்திருந்த காரணத்தால், அரசாணையினை அவர் ஒரு பொருட்டாக எடுக்கவேயில்லை. அரனுக்கு அடியவராய் ஆகிவிட்ட காரணத்தால் அரசினையே எதிர்த்து ;

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே

    என்று அஞ்சாமல் ஏழாம் நூற்றாண்டில் எடுத்துரைத்த தமிழ் அடியவராய் அப்பர் பிரகாசித்து நிற்கிறார். அரசனையே எதிர்த்து தனது அஞ்சாமையை உரைத்த அப்பரின் துணிச்சல் ஒரு சமய, சமூகப் புரட்சியாய் அமைகிற தல்லவா! பிற்காலத்தில் பாரதி “அச்சமில்லை அச்சமில்லை” என்று கர்ஜிப்பதற்கும்  வழி வகுத்தவர் அப்பர் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!

    சம்பந்தருக்கு இவ்வாறான சந்தர்பம் வாழ்க்கையில் வாய்க்கவில்லை. அது மட்டு மல்ல அப்பரின் பின் வந்த எந்த அடியவர்களுக்கும் இப்படியான சந்தர்ப்பம் வரவேயில்லை. இதனால் அப்பரினால் மட்டுமே “நாமா ர்க்கும் குடியல்லோம்” என்று சொல்லும் நிலை வாய்த்துவிட்டது. சமயத்தை மாற்றி வந்த நிலையிலும் அப்பர் உயர்நிலையிலே யாவராலும் பார்க்கப்பட்டார். இதுவும் அப்பரை மற்றவர்களிருந்தும் வேறுபடுத்தியே காட்டி நிற்கிறது.

    தமங்குத் தீங்கு வந்தால் யாவருமே நொந்து போவார்கள். வந்த தீங்கினை வைதே நிற்பார்கள். ஆனால் அப்பர் வித்தியாசமானவராக விளங்குகிறார். அவருக்கு சூலை நோய் வந்தது. பெருந்துன்பப் பட்டார். அப்படிப் பெருந் துன்பத்தை தந்த சூலைநோயினை வையாமல் அதற்கு நன்றியினைச் சொல்லுகிறாரென்றால் அப்பரின் சிந்தனை வித்தியாசாமானதுதானே !

    பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறிஇல் சமண்நீசர் புறத்துறையும்
    அவ் ஆழ்குழியின் கண்விழுந்து எழும் ஆறு அறியாது மயங்கி அவம்புரிவேன்
    மைவாச நறுக்குழல் மாலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்தடையும்
    இவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்கொல்

    இப்படிச் சொல்லுவதற்கு யாரால் முடியும்? அப்பர் ஒருவரால்த்தான் முடியும். அதனால் அவர் உயர்ந்தே நிற்கிறார். சூலை வந்த படியால்த்தான், புன்சமயத்தை விட்டு வெளிவரவும். அறிவானது தெளிவுற்று, நற்பாதை வழி காணவும், உயர்பொருளான அந்தப் பரம்பொருளின் பாதங்களைப் பற்றவும் முடிந்தது என்னும் மனத்தெளிவும் ஏற்பட்டது என்று சொல்லும் அளவுக்கு அப்பர் இருந்திருக்கிறார் என்பது அடியவர்கள் அனைவருக்கும் ஏன் சமூகத்துக்குமே காட்டப்படும் புதுக் கருத்தாய் மலர்கிறதல்லவா!

    சமயத்தில் புரட்சி, சமூகத்தில் புரட்சி என்று அப்பரின் புரட்சிகள் வளர்ந்து கொண்டே போவதைக் காணமுடிகிறது. அரசை எதிர்த்தார். பெரிய அமைப்பாய் அக்காலத்தில் இருந்த சமணத்தையே எதிர்த்து துணிவுடன் உண்ணா நோன்பினைக் கைக்கொண்டு உறுதியுடன் தனது எண்ணத்தை நிலை நாட்டுகிறார். பிற்காலத்தில் அண்ணல் காந்தி உண்ணா நோன்பினைக் கைக் கொள்ளவும், அவரைத் தொடர்ந்து பலரும் பல சந்தர்ப்பங்களில் உண்ணா நோன்பினைக் கைக்கொள்ளவும் முன்னோடியாக அப்பர் விளங்குகிறார் என்பதும் மனங் கொள்ளத்தக்கது.

    துணிவான எணண்ணங்களை மனத்திலே நிறைத்து வைத்தவராய் அப்பர் பெருமான் இருந்திருக்கிறார் என்பதைக் கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். அந்தவகையில் அவரின் எண்ணமாய் மலரும் இக்கருத்து யாவரையும் சற்று திகைப்புடன் திரும்பிப் பார்க்க வைத்திடும் கருத்தாகவே அமைகிறது எனலாம். ஆண்டவன் அடியார்களுக்கு அவர் கொடுக்கும் உயரிய நிலை இங்கே காட்டப்படுகிறது.

    சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
    தரணியொடு வானாளத் தருவ ரேனும்
    மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
    மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
    அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
    ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
    கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
    அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே

    என்னதான் செல்வமும், செல்வாக்கும், உயர்நிலையும் வாய்த்தாலும் ஆண்டவன் அடியவராய் இல்லார் எதுவுமே இல்லார்தான் என்று கூறி – எந்த ஒரு நிலையில் இருந்தாலும் அவர்கள் ஆண்டவனின் அன்புக்கு உரிய வரானால் அவர்களே வணங்கத் தக்கவர்கள் என்று சொல்லும் அப்பரின் சிந்தனை சமயத்தில் தோற்றுவிக்கப்பட்ட புதிய சமூகச் சிந்த னையாக எழுகிறதல்லவா!

    சமணத்தில் பல தத்துவங்கள் இருக்கின்றன. அறநூல்கள் பலவற்றின் ஆசிரியர்களாக சமண ஆளுமைகள் பலர் இருக்கின்றார்கள் என்பதை எவரும் மறுத்துரைத்துவிடல் முடியாது. ஆனால் உலகியல் வாழ்வில் இசையினையும், இல்லறத்தினையும், பெண்களையும், கலைகளையும், அழகினையும், சமணம் ஒதுக்கியது மட்டுமல்ல வெறுப்புடனுமே பார்த்தது. இந்த நிலை அப்பருக்கு உடன்பாடாக அமைவதாக இல்லை. இவை அனைத்தையும் சைவம் அணைத்தே நின்றது. அப்பரும் அவற்றை அகமிருத்தி தன்னுடைய சிந்தனைகளை மலர்ந்திடச் செய்து நின்றார். அதன் ஒரு நிலைதான் இசையோடு உகந்த திருமுறைப்பாடல்களாகும். ஏழாம் நூற்றாண்டில் தமிழ் இசையினைக் காத்திட வந்த பேராளுமையாகவே அப்பர் எழுகின்றார். அவரினால் பக்தி இலக்கியப் பரப்பில் “திருத்தாண்டகம்” என்பது புதுவரவாய் வருகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் தாண்டகத்தை அறிமுகப்படுத்தியவராய் அப்பர் பெருமானே முன்னிற்கிறார். இவரின் இந்த புதிய அறிமுகத்தால் அமைந்த தமிழ் பக்திப் பாடல்கள் இசையுடன் பாடுவதற்கு இயைந்ததாகவே அமைகிறது. அடியவர்கள் இறைவனை ஆராக்காதலுடன் பாடிப் பரவிட இந்த இசையுடன் அமைந்த தாண்டகப் பாடல்கள் கைகொடித்தே நிற்கின்றன. இது அப்பரினால் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் எனலாம். அப்பரின் இப்புது முயற்சியால் அவர் “தாண்டக வேந்தர்” என்று யாவராலும் அழைக்கும் நிலைக்கு ஆளாகியும் விட்டார். அப்பரினால் தமிழ் இசை வெள்ளம் தமிழ்ச் சமூ கத்தில் பெருக்கெடுக்கத் தொடங்கியது எனலாம். இந்தத் தொடக்கமே பின்னாளில் அண்ணாமலைச் செட்டியாருக்கு தமிழிசையில் ஊக்கத்தையும் ஆக்கத்தையும் ஊட்டியிருக்கிறது என்பதும் நோக்கத்தக்கது.

    கையிலே ஆயுதம் ஏந்தி சமயவழி நின்றவரும் அப்பர்தான். அவரின் கையில் உழவாரம் என்னும் ஆயுதம் இருந்தது. இது கொல்லும் ஆயுதம் அல்ல. அருள் தன்னைக் கொள்ளும் ஆயுதமாகவே அமைந்திருந்தது. தொண்டின் மகிமையினை உணர்த்தும் ஆயுதமாக இருந்தது. உழைப்பின் மகிமையினை உணர்த்தும் அடையாளமாகவும் இருந்தது எனலாம். அடியார்கள் வாழ்வில் அப்பரின் உழவாரம் அசையாத ஆன்மீகச் சொத்தாக அமைந்தது எனலாம். என்கடன் பணி செய்துகிடப்பதே என்பதை உணர்த்தி நின்றது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்பதை மிகவும் சிறப்பாக அப்பர் காட்டி, அங்கு சென்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யாவருக்கும் நல்ல பாடத்தைப் போதிக்கும் நல்லாசி ரியனாகவும் விளங்கி நிற்கிறார்.

    “நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
    நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்
    புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
    பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடித்
    தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
    சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
    அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்
    ஆரூரா என்றென்றே அலறா நில்லே.”

    நிலை பெறுவதற்கு அப்பர் காட்டும் இந்த வழி ஆன்மீகத்தில் மிகவும் முக்கிய வழியாகும் என்பதைக் கருத்திருத்தல் வேண்டும்.

    திருவங்கமாலை என்னும் ஒரு புதிய சிந்தனையை அப்பர் எமக்கெல்லாம் தருகிறார். கோவில் வழிபாட்டின் எங்கள் உடலின் முக்கியத்துவத்தை இங்கே அட்டவணைப்படுத்தி கிளிப்பிள்ளைக்குப் பாடம் கற்பிப்பதுபோல் பக்குவமாய் அருமையான பாடல்களாய் தந்து அடியார்களில் முன்னிற் பவராய் அப்பர் ஆகி நிற்கிறார்.மற்றைய அடியார்கள் காட்டாத புது முயற்சி இது எனலாம்.

    தலையே நீ வணங்காய்
    கண்காள் காண்மின்களே
    செவிகாள் கேண்மிங்களோ
    மூக்கே நீ முரலாய்
    வாயே வாழ்த்துகண்டாய்
    நெஞ்சே நீ நினையாய்
    கைகாள் கூப்பித்தொழீர்
    ஆக்கை யாற்பயனென்
    கால் களாற்பயனென்
    உற்றார் ராருளரோ
    உற்றார் ராருளரோ
    உற்றார் ராருளரோ
    உயிர் கொண்டு போம்பொழுது
    குற்றாலத்துறை கூத்தனல்லால்
    நமக்குற்றார் ஆருளரோ

    இவ்வாறு வழிபட வழிகாட்டுவது அப்பருக்குரித்தான புதுக்கருத்தாக பார்க்க வேண்டி இருக்கிறது.

    இனிப்பிறவியே வேண்டாம் என்றுதான் அடியார்கள் பலரின் நிலையாக இருந் தது. ஆனால் அப்பர்மட்டும்  தனக்கு மனிதப் பிறவி வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டும் வித்தியாசமான சிந்தனையுடைய அடியவராய் விளங்குகின்றார்.

    குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
    பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
    இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
    மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

    ஆண்டவனின் அழகான தோற்றப் பொலிவினைக் காட்டி அதனைக் காண் பதற்காகவே இந்த மாநிலத்தில் மனிதப் பிறவி வேண்டும் என்னும் சிந்த னை புதுமையாய் மலர்கிறதல்லவா!

    நமச்சிவாய வாழ்க என்று பிற்காலத்தில் மணிவாசகர் மொழிவதற்கும் அப்பர் வழிகாட்டி இருப்பாரோ என்றும் எண்ணக்கிடக்கிறது.

    சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே

    இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலரும் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே

    நமச்சிவாய என்று சொல்லும் பொழுது என்னதான் இடைஞ்சல்கள் வந் தாலும் அத்தனையும் வந்த இடந்தெரியாமல் மறைந்தே விடும் என்னும் நம்பிக்கையை அப்பர் அகமிருந்து காட்டி நிற்பதும் நல்ல சிந்தனையாக அமைகிறது அல்லவா!

    அடியார்கள் பலர் தமக்கு அதுவேண்டும் இது வேண்டும் என்ற கேட்ட இடத்தில் எந்தப் பொருளுமே கேட்கா நின்றவர் அப்பர் பெருமான் மட்டுமே. அவர் கேட்டது மனிதப் பிறவி ஒன்றை மட்டுமே. அதுவும் அந்தப் பெருமா னைக் கண்களால் காண்பதற்காகவே. ஓடும் செம்பொன்னும் ஓக்க நோக்கு பவராய் அப்பர் இருந்தார். அடியார்கள் பலர் அனுபவிக்காத பல தண்டனைகளுக்கு ஆளானவரும் அப்பரே. சமணர்களால் தூண்டப்பட்ட அரசனின் பல தண்டனைகளைக் கண்ட அடியவராகவும் அப்பரே இருக்கிறார். வாழ்க்கைத் தத்துவங்களை அதாவது நிலையாமை பற்றிய பல கருத்துக்களை எடுத்து மொழிந்த நிலையிலும் அப்பர் முன்னிற்கிறார் எனலாம். அதற்குக் காரணம் அவருக்கு கிடைத்த வாழ்வியல் அனுபவங்களே ஆகும். இன்று அல்ல ல்பட்டு ஆற்றா நிற்கும் பலருக்கும் உகந்த ஆறுதலை, தேறுதலை அளிக்கும் அர்த்தநிறை சிந்தனைகளை அப்பர் தன்னுடைய பாடல்களில் காட்டுகிறார் என்பதை மறுத்துரைத்திடல் இயலாது. அப்பர் என்றால் அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். பற்றற்ற அடியார். ஆனால் பரமனைப் பற்றி நின்ற அடியார். புரட்சியை விதைத்த அடியார். புதுமையைப் புகுத்திய அடியார். “எல்லா உலகமும் ஆனாய்  நீயே” என்று விழித்துரைத்த அடியார். அப்பர் என்பவர் தமிழராய் விளங்கி தமிழையே அகமிருத்தி தமிழினால் இறை புகழைப் பரப்பி தமிழ்ப் பக்தி இயக்கத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறார் என்பதை யாவரும் மனமிருத்துவது அவசியமாகும்.

    விண்ணுளார் தொழுதேத்தும் விளக்கினை
    மண்ணுளார் வினை தீர்க்கும் மருந்தினைப்
    பண்ணுளார் பயிலுந் திருக்கோளிலி
    அண்ணலாரடி தொழுதுய்மினே

    சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
    நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
    உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
    அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே  .

    Share
  • புதுவைப் புயல்!

    புதுவைப் புயல்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண்,  ஆஸ்திரேலியா

    “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா” என்று போற்றப்பட்டவர்தான் எட்டயபுரம் தந்த எங்கள் தமிழின் சொத்து பாரதியார். அவரின் கருத்துக்களை மனமிருத்தி அவரின் பாதையில் பல கவிஞர்கள் பயணப் பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கவிஞரும் பாரதியைப் பார்த்த பார்வைகள் அவரவர் சிந்த னைகளாக மலர்ந்திருக்கின்றன. பாரதியாரின் காலத்தில் கவிமணி தேசிக விநாகம் பிள்ளை இருந்திருக்கிறார். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இருந்திருக்கிறார். பாரதிதாசனும் இருந்திருக்கிறார். கவிமணியின் சிந்தனை வேறாயும், நாமக்கல்லார் சிந்தனை, வேறாயும், பாரதிதாசன் சிந்தனை வேறாகாவுமே அமைந்திருக்கிறது. இவர்கள் மூவருமே பாரதியைப் போற்றியாவர்களாகவே இருந்திருக்கிறார்கள். எட்டய புரத்துத்துப் பாரதிக்கு எட்டவே போகாமல் கிட்டவே நிற்கும் வாய்ப்பு புதுவையில் கால்பதித்த கனகசுப்பு ரத்தினத்துக்கே வாய்த்திருக்கிறது. கனகசுப்புரத்தினத்துக்குத்தான் எட்டயபுரத்து மகாகவி பாரதியின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது. அந்த ஆசீர்வாதம்தான் “பாரதிதாசன்” என்று இன்றுவரை அவரை சமூகத்தில் பார்த்திடக், கொண்டாட, வைத்திருக்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.

    பாரதியையும் புரட்சிக்கவி என்று அழைக்கின்றோம். அவரின் வாரிசாக வாய்த்திருக்கும் பாரதிதாசனையும் அழைக்கின்றோம். இருவரையும் புரட் சியின் வடிவமாகவே பார்ப்பதையே சமூகமும் விரும்பி நிற்கிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும். பாரதி வாழ்ந்த காலமோ முப்பத்தொன்பது ஆண்டுகளேயாகும். ஆனால் பாரதிதாசன் அவரைவிட இருமடங்கு காலம் வாழ்ந்திருக்கிறார். பாரதியின் தாசனாகவே வாழ்ந்திடவே பாரதி தாசன் ஆசைப்பட்டார். அதுவே தனக்கும், தனது வாழ்வுக்கும் மிகவும் பெருமையானது என்றும் கூட அவர் எண்ணியே இருந்தார். பாரதியைப் போலவே அவரும் புதிதாய், புரட்சியாய். சிந்தித்தார். சிந்தித்தவற்றைத் தன்னுடைய படைப்புகள் வாயிலாகச் சமூகத்தில் இடம் பெறவும் செய்தார். பாரதியின் தாசனாய் அவரின் வாரிசாக வாய்த்த பாரதிதாசன் தன்னுடைய காலத்துக்கு ஏற்ப தன்னுடைய சிந்தனைகளை புதிதாய் வெளிப்படுத்தினார் என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது. பாரதியார் வாழ்ந்த காலம் பாரததேசம் அன்னியத்துக்கு அடிமைப்பட்டிருந்த காலம். அவரின் வாரிசாய் வாய்த்த பாரதிதாசன் காலமே சுதந்திரக் காற்றினைப் பாரததேசம் சுவாசித்த காலமாகிவிட்டது. அதனால் தன்னுடைய குருவின் சிந்தனைகளை விட வித்தியாசமாய் சிந்திக்கும் அவசியம் பாரதிதாசனுக்கு அவசியமாய் ஆகிவிட்டது. அதனால் பாரதியின் சிந்தனைப் பாதையில் பயணித்தாலும் , தனக்கென வித்தியாசமான சிந்தனைகளை பாரதிதாசன் வெளிப்படுத்தி நிற்கிறார் என்பதுதான் உண்மை நிலையாகும்.

    தம்முடைய குருவான பாரதியின் பிரிவை முன்னிட்டு பாரதிதாசன்

    நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா
    காடு கமழும் கற்பூரச் சொற்கோ ……
    திறம் பாட வந்த மறவன், புதிய
    அறம் பாட வந்த அறிஞன்

    இவ்வாறு உளமார உரைத்து நின்றாலும் அவரின் சிந்தனையானது மட்டும் பல நிலைகளில் வித்தி யாசமாய் அமைகின்றது என்பதுதான் உண்மையாகும். பாரதி தமிழைப் போற்றுகின்றார். அவரின் வாரிசான பாரதிதாசனும் போற்று கின்றார். பாரதி…

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவது எங்கும் காணோம்”

    என்று உலகத்துக்கு உரத்துத் துணிவுடன் சொன்னவர் என்றவகையில் பாரதி முன்னிற்கிறார் என்பதை எவருமே மறுத்திடல் இயலாது. ஆனால் அவரின் வாரிசாய் வாய்த்த பாரதிதாசனோ வித்தியாசமாய் தனது சிந்த னையை முன் வைக்கிறார்.

    “தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
    தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”

    உலகமொழிகளில் இனிமையானது தமிழென்று குருவானவர் மொழிகின்றார். அவரின் மொழிதல் புதுமை யானதுதான். ஆனால் வித்தியாசமாய் சிந்தித்து தமிழினை உயிர் என்று காட்டுவதும், இன்பத் தமிழ், அமுதம் , என்று காட்டுவதும் பாரதிதாசனின் வித்தியாசமான சிந்தனையாய் வெளி ப்பட்டு நிற்கிறதல்லவா! அமுதம் என்பது நிரந்தராமாய் உயிருடன் வாழப் பண்ணுவதாகும். தமிழும் எம்மையெல்லாம் நிரந்தரமாய் வாழப் பண்ணும் என்னும் சிந்தனை, வியப்பாய் மலர்கிறதல்லவா? பாரதியின் மொழிப்பற்றானது போற்றப் படவேண்டியதே. அன்னிய மொழியான ஆங்கிலத்தை அறவே வெறுத்தார். அன்னை மொழியான தமிழினையே அகத்தில் இருத்தினார். அரியாசனத்தில் அமர்த்தியே பார்த்தார். பாரதி வட மொழியிலும் வல்லமை பெற்று விளங்கினார். அவருக்கு வடமொழியிலும் பற்றிருந்தது. ஆனால் அவரின் வழியில் பயணத்தை ஆரம்பித்த பாரதிதாசனோ முழுக்க முழுக்க தமிழ்மொழிப் பற்றாளராகவே தன் வாழ் நாளெல்லாம் விளங்கினார். வடமொழியினை அவர் ஒதுக்கியே நின்றார். திராவிடமே அவரின் சிந்தையில் நிறைந்து காணப்பட்டது. இது அவரின் வித்தியாசமான சிந்தனை என்றும் சொல்லலாம் அல்லவா!

    குருவான பாரதியின் தமிழ்மொழி பற்றிய சிந்தனையிலிருந்து வித்தியாசமாய் சிந்தனையினைத் தருவ தோடு அதற்காக அவர் பயன்படுத்தும் சொற் கோவைகளும் வித்தியாசமானதாகவே வருகிறது. மரபு யாப் பினைப் பயன் படுத்தினாலும் இங்கு வித்தியாசமாய் சிந்தித்து கூழைக்கூத்தரின் ஆட்டத்தை மனமிருத்தி அதனை ஆட்டத்தோடு கூடிய விதமாய் இசையுடன் பாட க்கூடியவகையில் தமிழையும், தமிழ் சமூகத்தையும் சிந்தித்திந்து அவரால் வழங்கப்பட்ட வித்தியாசமான சிந்தனையாய் இப்பாடல் அமைகிறது.

    திடுகிடும் திடுகிடும் திடுகிடும் திடுகிடும்
    …………………………………………………………………………
    அஃகஃக கும்பிட்றேன் அல்லா ருக்கும்
    அஃகஃக வரிஞ்சலா அமைந்திருங்க
    மக்களெ பெத்த மகரா சருங்க …..

    என்னடா தம்பி?
    ஏண்டா அண்ணா?
    இதோபார் தம்பி எலும்புக்கூடு
    சதையும் இல்லே சத்தும் இல்லை
    ஆமாம் திடுகிடும் அதுக்குப் பேர்என்னா? …
    இந்த மருந்துக்கு என்னா பேரு?
    உள்ளெ தொட்டா உசிரில் இனிக்கும்;
    தெள்ளுதமிழ் தம்பி தெள்ளுதமிழ் இதுதான்!
    இந்த மருந்தே எலும்புக் கூட்டில்
    தடவுறேன் தம்பி அடிமோ ளத்தை!
    திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும்

    சிரித்தது பாரடா செந்தமிழ்க் கூடு!
    விரிந்தது பாரடா அழிந்தநம் நாடு!
    பாடுது பாரடா பைந்தமிழ் நாடு ….
    தாயி மாரே தக்கப்ப மாரே!
    மாயம் இல்லே மந்திரம் இல்லே
    கருத்து வேணும் நம்ப
    வருத்தம் நீங்க தேடணும் வழியே!

    தமிழினமானது எலும்புக்கூடாய் இருக்கிறதாம். அதில் சதையும் இல் லையாம்! சத்துமே இல்லையாம்! அதற்குச் சதையும் சத்தும் தந்து புத்துயிர் ஊட்டவேண்டும் என்னும் வித்தியாசமான சிந்தனையினைக் காட்டும் பாரதிதாசனை வியக்காமல் இருந்திட முடியுமா!

    பாரதி வாழ்ந்த காலம் அடிமையிருள் சூழ்ந்திருந்த காலம். பாரதியின் பார்வை பாரததேசத்தின் அடங்கிலும் பரவியே இருந்தது.பாரதத்தாயை மீட்டிடும் பாங்கில் பாரதியின் சிந்தனை அமைந்திருந்தது. ஆனால் அவரின் வாரிசான  பாரதிதாசன் காலம் அவரின் சிந்தனையினை வேறு விதமாக்கி விட்டது. பாரதியின் வழியில் பயணித்தாலும் அத்தனையையும் ஏற்று நிற்க அவர் விரும்பாதவராய் வித்தியாசமாய் ஒவ்வொ ன்றையும் வெளிப் படுத்துகிறார். அந்த வகையில் ஒட்டு மொத்த இந்தியாவைவிட்டு அவரின் சிந்தனையானது திராவிட மீட்பாய் மாறுகிறது. பாரதி தமிழை, தமிழினத்தைப் போற்றினார். அதற்காக பலவற்றை உரக்கவே சொன்னார். ஆனால் பாரதிதாசனோ திராவிடச் சிந்தனையாளராய், தமிழ்மொழியின் அடையா ளமாய் தனது வித்தியாசமான சிந்தனைகளால் எழுந்து நிற்கிறார்.

    சமய நம்பிக்கையினை, தெய்வ நம்பிக்கையினைப் பாரதி கைவிட விரும்பவேயில்லை. மூட நம்பிக்கை களை எதிர்த்தார். வெறுத்தார். ஆனால் தெய்வம் இருக்கிறது என்பதில் ஆணித்தரமாய் பாரதி வாழ் வெல்லாம் இருந்தார். இந்த இடத்தில் அவரின் வாரிசான பாரதிதாசன் வித்தியாசமாய் சிந்திக்கிறறார். ஆரம்ப த்தில் சக்தியைப் பாடியே பாரதியின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர் பிற்பாடு தெய்வீக சக்தியை விட்டு விட்டு மனித சக்தியையே பாடும் நிலைக்குள் வந்து விடுகிறார். பாரதி நாத்திகர் அல்ல. அவருள் ஆத்தீகம் அமர் ந்தே இருந்தது. ஆனால் வித்தியாசமாய் சிந்தித்த காரணத்தால் பாரதிதாசன் முழுதுமே நாத்திகராய் மாறி அதன் வழியில் பயணப்பட்டு, அது சார்ந்த அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுகின்றவராய ஆகியேவிடுகிறார். இதனால் அவரின் சிந்தனைகள் தன்னுடைய குருவின் சிந்தனைகளிலிருந்து வித்தியா சமாய் புதிய பார்வையினையே காட்டுவதாகவே ஆகியும் விடுகிறது எனலாம்.

    கல்விபற்றிய பாரதியின் சிந்தனையிலும்கூட பாரதிதாசன் வித்தியாசமாகவே தன்னுடைய சிந்தனை களை விதைக்கின்றார். பாரதியின் கல்வி பற்றிய சிந்தனையினை நோக்கும் பொழுது –

    வயிற்றுச் சோறிட வேண்டும் – இங்கு
    வாழும் மனிதருக்கு எல்லாம்
    பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப்
    பாரை உயர்த்திட வேண்டும்

    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆலயம் பதினாயிரம் நாட்டல்
    பின்னருள்ள தருமங்கள் யாவும்
    பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
    அன்னயாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

    வீடுதோறும் கலையின் விளக்கம்
    வீதிதோறும் இரண்டொரு பள்ளி
    நாடுமுற்றிலும் உள்ளவூர்கள்
    நகர்களெங்கும் பலபலபள்ளி
    தேடு கல்வியிலாத தொருவூரைத்
    தீயினுக்கு இரையாக மடுத்தல்

    என்று தன்னுடைய கல்விபற்றிய சிந்தனையைப் பாரதி இப்படிக் காட்டி நிற்கிறார். பெண்களைக் கண்க ளாய் காணும் பாரதி பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்காமல் வெளியில் வந்து கற்று தேர்ந்திட கல்விச் சிந்தினையினை விதைத்தும் நிற்கிறார். புதுமைப் பெண்களாய் பெண்கள் வரவும் அழைப்பினை விடுக் கிறார்.

    பாரதிவழியில் கல்வி பற்றிச் சிந்தித்தாலும் தனக்கே உரித்தான வித்தியாசமான சிந்தனைகளையும் அவர் முன்வைக்கிறார் என்பதுதான் கருத்திருத்த வேண்டிய விடயமாகும். பாரதிபோல் பெண்கல்வியை வலியுறு த்துகின்றார். பாரதியின் பார்வை வேறு . பாரதிதாசனின் பார்வையோ வேறு.

    “கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
    கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்”

    “மகளிரெலாம் கல்வியறி வொழுக்கமுள ராயின்
    மருத்துவமே வேண்டாவாம் பிணிமூப்பு வாரா”

    “கல்வியறிவுடைய பெண்கள்
    திருந்திய கழனி அங்கே
    நல்லறி வுடைய மக்கள்
    விளைவது நவில வேநான்”

    “கல்வியில்லாத பெண்கள்
    களர்நிலம் அந்நிலத்தில்
    புல்விளைந் திடலாம் நல்ல
    புதல்வர்கள் விளைதல் இல்லை”

    “கற்பது பெண்களுக்கா பரணம் – கெம்புக்
    கல்வைத்த நகை தீராத ரணம்”

    “பெற்றநல் தந்தைதாய் மாரே – நும்
    பெண்களைக் கற்கவைப் பீரே
    இற்றைநாள் பெண் கல்வி யாலே – முன்
    நேறவேண் டும்வைய மேலே”

    பெண்கள் கல்வியின் சிந்தனையினைப் பாரதிதாசன் வித்தியாசமாய் வெளிப்படுத்துகிறார். சிறுவர்க்குக் கல்வி, ஆடவர்க்குக் கல்வி, முதியோர்க்குக் கல்வி உடல் ஊனமுற்றவர்க்குக் கல்வி என்று பாரதிதாசனின் புதிய சிந்தனைகள் எழுந்து நிற்கின்றன.

    பொதுவுடமை பற்றிய வகையிலும் பாரதிதாசன் வித்தியாசமாய் சிந்திக்கிக்கிறார்.

    சித்திரச் சோலைகளே – உமை நன்கு
    திருத்தஇப் பாரினிலே – முன்னர்
    எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனர்
    ஓஉங்கள் வேரினிலே

    நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
    நெல்விளை நன்னிலமே – உனக்கு
    எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
    இறைத்தனர் காண் கிலமே

    தாமரை பூத்த தடாகங் களே உமைத்
    தந்த அக் காலத்திலே – எங்கள்
    தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
    சொல்லலோ ஞாலத்திலே

    சோலைகளைப் பார்க்கிறார். வயல்களைப் பார்க்கிறார். தாமரைத் தடாகங்களைப் பார்க்கிறார். அந்தப் பார்வையையினூடாக அதற்காக உழைத்துப் பாடுபட்ட  உழைப்பாளிகளை அவர் மனம் எண்ணுகிறது. இப்படி எண்ணும் எண்ணமேதான் பாரதிதாசனின் புதிய சிந்தனையாக, வித்தியாசமான சிந்தனையாக  இங்கே வந்து நிற்கிறது அல்லவா !

    ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
    உடையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
    ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
    ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ

    சமத்துவத்தை இப்படியாய் சிந்திந்து வித்தியாசமாய் பாரதிதாசனால்த்தான் பார்த்திட முடியும்.

    மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
    காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே

    வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
    தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி

    என்று சமூக சிந்தினையினை சீர்திருத்த நோக்கில் பார்த்து வித்தியாசமான சிந்தனையாக தாலாட்டுப் பாடியவர் என்ற வகையில் பாரதிதாசனை வியந்து பாராட்டியே ஆகவேண்டும்.

    கவித்துவம் மிக்கவர் பாரதிதாசன். கவிதை எழுதினார். நாடகம் எழுதினார். கட்டுரைகள் எழுதினார். நூல்கள் பல எழுதினார். திரையிலும் ஜொலித்து நின்றார். எங்கு சென்றாலும் பாரதிதாசன் என்னும் முத்திரையினைப் பதித்தே நின்றார். மகாகவி பாரதியார் தமிழனினத்துக்கு விட்டுப்போன மகத்தான மூன்று சொத்துக்களானவை குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, “பாரதிதாசன்” என்று எழுத்துலக ஜாம்பவான் கல்கி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு பாரதிதாசன் பார்க்கப்படுவதற்கு முக்கியமான காரணம் எது தெரியுமா அவரிடம் காணப்பட்ட வித்தியாசமான சிந்தனைகளே.

    Share
  • மூங்கில் கண்ணாடி காட்டும் காலம்

    மூங்கில் கண்ணாடி காட்டும் காலம்

    முனைவர் சொ. அருணன்,
    உதவிப் பயிற்றுநர், தமிழ்த்துறை,,
    அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 3.

    (கவிஞர் இரா. மீனாட்சியின் மூங்கில் கண்ணாடி – புதுக்கவிதை நூலை முன்வைத்து…)

    அறிமுகம்

    கவிஞர் இரா. மீனாட்சி சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ காலத்திலிருந்து தொடர்ந்து எழுதி வரும் தமிழின் மூத்த பெண் கவிஞர் ஆவார். கவியரசு கண்ணதாசன், கவிஞர் மீரா. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகிய ஆளுமைகளோடு எழுதத் தொடங்கியவர். எழுத்துப் பணி மட்டுமின்றி, சமூகப் பணியிலும் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது, கவிக்கோ அப்துல் ரகுமான் விருது, திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்ட விருதுகளோடு இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினையும் வென்றவர். தொடர்ந்து எழுத்துக் களத்தில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பவர். அவருடைய 2020ஆம் ஆண்டிற்கான படைப்பாகிய மூங்கில் கண்ணாடி என்னும் நூலிலிருந்து இக்கட்டுரை எழுகிறது.

    கவிதையும் வரையறையும்

    மொழியின் மிகவும் மூத்த குழந்தையாகிய கவிதைக்கு இன்னும் வரையறையை முழுமையாக யாராலும் வடிக்க இயலவில்லை. காலந்தோறும் புதிய புதிய இலக்கண வரையறைகள் கவிதைக்கு வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. காரணம், கவிதை காலத்தின் சாட்சியாக நின்று தன்னை வெளிப்படுத்திக் கொள்வதனாலேயாகும்.

    ‘கவிதை (Poiesis) என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம்’ (Poetry. Oxford Dictionaries. Oxford University Press (2013) என்று ஆக்ஸ்போர்ட் அகராதி உலகக் கவிதை குறித்து விளக்கம் தருகிறது.

    ‘உள்ளத்தின் அடியிலிருந்து வெளிப்படுகிற வேண்டுதலுக்கு ‘மந்திரம்’ என்று பெயர். அது பலிக்கும். ஆனால், அங்கிருந்து பிரார்த்தனை கொண்டு வருதல் எளிதன்று. அது பெரிய ஆழம். உள்ளத்தின். கடலடியை மானுடர் அளந்து பார்த்திருக்கிறார்கள். உள்ளத்தின் அடி காண்பது அதனினும் பலமடங்கு கஷடம். இருந்தாலும் சோர்வு பெற வேண்டா. ஒவ்வொருவனும் உள்ளக் கடலில் இயன்றவரை மூழ்கி அதிலிருந்து பொருள் கொண்டு வரலாம். எத்தனைக் கெத்தனை ஆழத்திலே போகிறாயோ, அத்தனைக்கத்தனை நல்ல முத்துக் கிடைக்கும்’ என்று கவிதைக்கான வரையறையை மற்றொரு முறையில் விளக்குகிறார் மகாகவி பாரதியார். (ஸ்ரீ, சி., சுப்பிரமணிய பாரதி, வேதரிஷிகளின் கவிதை, முன்னுரை.) மேலும்,

    உள்ளத்தில் உண்மைஒளி உண்டாயின்
    வாக்கினிலே ஒளியுண் டாகும்
    வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் –
    கவிப்பெருக்கும் மேவு மாயின்
    பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
    விழிபெற்றுப் பதவி கொள்வார்
    தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
    இங்கமரர் சிறப்புக் கண்டார் (பாரதியார், தமிழ்)

    என்று கவிதையிலேயே கவிதைக்கு வரையறையும் செய்துள்ளார். அதைப் போலவே புதுக்கவிதையைப் பற்றி,

    “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
    சொல் புதிது, சோதி மிக்க
    நவகவிதை, எந்நாளும் அழியாத மஹாகவிதை” (பாரதியார், பாரதியார் கவிதைகள், ஓலைத்தூக்கு)

    புதுமையான விளக்கமும் தருகிறார். இந்த வரையறைகளைப் பின்பற்றியே பின்வந்த கவிஞர்களும் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை யாக்கத் தொடங்கினர்.       கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,

    “உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்
    உருவெடுப்பது கவிதை;
    தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
    தெரிந்து உரைப்பது கவிதை” (கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, எது கவிதை)

    என்று புதுக்கவிதைக்கான விளக்கத்தை எளிய கவிதையாகவே முன்வைக்கிறார். இதுபோன்று பலரும் பலவிதங்களில் கவிதைக்கான வரையறையைச் செதுக்க முற்பட்டுள்ளனர். என்றாலும் அவை காலந்தோறும் புதுமை பெற்றே வந்திருக்கிறது என்பதை இதன்வாயிலாக அறிய முடிகிறது.

    கவிஞர் இரா. மீனாட்சியும் கவிதையும்

    கவிதையின் அடிப்படையாக விளங்குவது கனவு. அந்தக் கனவு, ‘மனித குலத்திற்கு வாய்த்த நல்அமுதம்,’ என்பதனால், ‘அறிவை மத்தாக்கி, மொழியை வாசுகியாக்கி வாழ்க்கைப் பாற்கடலைக் கடைந்தெடுத்து’க் கவிதையை ‘அமுதாய்’ ஆக்க முயன்றேன்’ என்று கவிஞர் இரா. மீனாட்சி தனது கவிதை முயற்சியைக் குறித்துத் தெளிவுபடுத்துகிறார். இந்த முயற்சியில் ஒரு பாற்கடல் கடையும் தொன்மம் தென்படுவதை நாம் உணர்ந்து கொள்ளலாம்..

    மேலும், கவிதை கவிஞருக்கு உணர்வின் ஓவியமாகக் கனவுக் காட்சி தருகிறது. கவிதையை ‘நல்மொழி’ எனவும், ‘யாவர்க்கும் பொதுவான எதிர்காலம்’ எனவும், கவிதையைச் ‘சாவாக்கலை’ எனவும் இவரால் கொண்டாட முடிகிறது.

    கவிஞரும் கால இயற்கையும்

    இயற்கையை மிக இயல்பாய் ஏற்றுக் கொள்வது சாதாரண மனிதர்களின் இயல்பு எனில், இயற்கையைப் பேரதிசயமாய் ஏற்றுப் போற்றுவது கவிஞர்களின் இயல்பு. தான் வாழ்கிற சூழலை அதிலும் தன்னை மட்டும் காணிக்கிற அறிவாளிகளின் மத்தியில் தன்னை மறந்து இயற்கையைக் கவனிக்கிற உணர்வாளர்களின் கவனிப்பு கவிதையாகி விடுகிறது. இதற்குக் கவிதையே நல்ல சாட்சி.

    தன்னுடைய காட்சிகளில் தென்படும் மரம், மரவட்டை, செடி, கொண்டலாத்திப் பறவை, அணில், புல், பூ என யாவுடனும் உறவு கொள்ளும் பெரும்பேறு அந்த உணர்வாளர்களுக்கே கிட்டுகிறது என்றாலும், அதைக் கவிதையாய் மொழிந்து விடுகிறவர்களுக்கே அது வசப்பட்டு விடுவது அதிசயம்தான். கவிஞர் இரா. மீனாட்சியின் கவிதைகளில் அத்தகைய கவிதை இலாகவம் தெற்றெனப் புலப்படுகிறது.

    கவிஞர் இரா. மீனாட்சியைக் குறித்தும் அவர்தம் கவிதைப் பயணம் குறித்தும் கவிஞர் மீரா இப்படி அறிமுகப்படுத்துகிறார்.

    “ஆரோவில் எனும் சர்வதேச நகரில் தம் கணவர் த்வான் வான்மேகனுடன் இணைந்து புதிய மனித சமுதாய அமைப்புப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள இலட்சிய நங்கை இரா.மீனாட்சி. பணம், புகழ், பதவி- இவற்றை விட்டு விலகி சுதந்திரமான சுகாதாரமான சூழலில் வாழும் இவருக்கு வாழ்வின் ரகசியங்களையும் அனுபவங்களையும் பரிந்து கொள்ளக் கிடைத்த ஒரு நல்ல தோழி – கவிதை. நெருஞ்சி, சுடுபூக்கள் என்னும் இருதொகுதிகளுக்குப் பிறகு வெளிவரும் இக்கவிதைகள் ஆத்மாவின் காயங்களுக்கு மருந்தாக அமைபவை.” எத்தனை அருமையான கவிதைப்பிடிப்பு இது.

    மூங்கில் கண்ணாடியும் காலமும்

    கவிதை இயற்கையின் கருவியாக விளங்குவதைப் போலவே  போராட்டத்திற்கான ஆயுதமாகவும் விளங்குகிறது. தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நிற்கும் பாமரர்களின் வாழ்வினில் புதிய வெளிச்சத்தையும் நம்பிக்கையையும் ஏற்றுவது கவிதைதான். கவிஞர் இரா. மீனாட்சி தனக்கான கவிதையையும் இவ்வாறே வரித்துக் கொள்கிறார் என்பதை,

    எங்கெல்லாம்
    யுத்தக் கைகள்
    எம்மக்களின் குருதியைக் குழைத்துப்
    பூசிக் கொள்கின்றனவோ
    எங்கெல்லாம்
    பெண்களின் எல்லா வயதினரும்
    குழந்தைகளும் ஏலாதவர்களும்
    இரும்பு முள்வேலிகளுக்குள்
    வாழ்க்கையைச் சொட்டுச் சொட்டாக
    இழந்து கொண்டிருக்கிறார்களோ
    எங்கெல்லாம்
    எளிய எம் ஆதிமக்கள்
    கொள்கையற்ற ஆதாயக்காரர்களால்
    வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ
    அங்கெல்லாம்
    நம் தாய்மொழிக்கவிதைகள்
    அவர்களுக்கான
    நிழலாகட்டும் நீராகட்டும்
    உணவாகட்டும் உடையாகட்டும்
    உணர்வாகட்டும்
    விட்டுவிடுதலையாகிட
    செம்மொழிச் சிறகுகளாகட்டும் (கவிஞர் இரா.மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, காணிக்கை)

    என்று முன்மொழிந்து கொள்வதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். எல்லாக் காலத்திலும் அழுத்தப்படும் ஆதிக்கத்தின் கொடிய பாதங்களிலிருந்து அப்பாவி மக்களை மீட்டெடுக்கக் கவிதையே சிறந்த காலசாசனம் என்பதனை இந்தக் கவிதை உணர்த்துகிறது.

    அதைப்போலவே மரத்தின் முதுகில் தெரியும் விரிசல் கோடுகள் அதன் வயதினை உணர்த்தும் என்பது அனுபவ வாக்கு. ஆனால், மரத்தை நாற்காலியாகச் செய்த தச்சனின் வயதும் சேர்த்து அந்த நாற்காலியில் புலப்படுவது கவிதை படிவிக்கும் காலம் அல்லவா?

    ஒவ்வொருவரும் இந்த மேசை நாற்காலி
    இணைபற்றிய
    அவரவர் கதைகளைச் சொன்னார்கள்
    எந்தக் காட்டிலிருந்து
    யாரால் மரம்
    வாள்கொண்டு அறுத்துக்கட்டப்பட்டதென
    தாத்தா கூறிச்சென்ற
    தலைமுறை வரலாறு
    முதற்கோட்டிற்கான துவக்கப்புள்ளி
    செய்துகொடுத்த உள்ளூர்த் தச்சனுக்கு
    சிறுகச்சிறுகவே
    கூலிகொடுத்துக் கழித்ததாக
    சித்தப்பா சொன்னபோது
    சுருக்கென தைத்தது என் வர்க்கஉணர்வு (இரா. மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, மேலும் தலைமுறைகள்)

    என்று தலைமுறைகளின் காலத்தைத் துல்லியமாக அளவிடும் கவிதையையும் அவர் வடித்திருக்கிறார். அதே காலத்தை அவர் வண்ணச் சாயலாகவும் கவிதை வழியாக வடித்தெடுத்திருக்கிறார்.

    சர்ச் மணி அழைத்தபோது
    எனது காலம் வெண்கலமானது
    வானத்து வெள்ளை மேகங்கள்
    மெதுவே நகர்ந்தபோது வெள்ளி ஊற்றானது
    செங்கல் தரையில் காலணிகள்
    சப்தித்துச் சென்றபோது மத்தளலயமானது.
    நீங்கள் கதவு திறந்து
    மகிழ்ச்சியைக் கொணர்ந்தபோது
    எனது காலம்
    இளஞ்சிவப்பு ரோஜாவிலிருந்து
    பொன்வண்ண சூரியகாந்திக்குத்
    தாவி அணைத்துக்கொண்டது (இரா.மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, காலச் சாயல்கள்)
    என்னும்போது கவிதையின் காலம் மிகச் சுலபமாகக் கவிஞருக்கு வசப்பட்டு விட்டது புரிகிறது.

    கடவுளும் கவிதையும் காலமும்

    வழிபாட்டின் பலநிலைகளில் இறைவன் தீர்த்தமாடுவதற்காக நீர்நிலைகளை நோக்கிச் செல்லும் மாசிமகத் திருவிழாவினைக் குறித்துப் பல கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற வகையில் இந்தத் தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும். முந்தைய காலங்களில் கட்டை வண்டிகளில் ஊர்வலமாகப் புறப்பட்ட தெய்வத் திருவுருவங்கள் தற்போது கனரக வாகனங்களில் அலங்கார மினனொளி விளக்குகளோடு மிகவும் ஆர்ப்பாட்டமாக ஊர்வலம் போகப் பழகி விட்டன. இதுவும் தீர்த்தவாரியின் ஒரு மாற்றம்தான் என்றாலும், கவிஞர் இரா.மீனாட்சியின் பார்வையில் தீர்த்தவாரி வேறாக அமைவது குறிப்பிடத்தக்கது. அவர்தம் கவிதையில் கடவுளும் கவிதையும் காலமும் ஒருசேரக் கைகோர்த்துத் தீர்த்தவாரி பண்பாட்டுச் சீரழிவாக மாறிவிட்டதை எள்ளி நகையாடத் தவறவில்லை.

    மாசிமகம்
    பௌர்ணமிப் பகலில்
    பல்லக்குகளைக் காணோம்
    யானை குதிரை மிகக்குறைவே
    மாட்டுவண்டிச் சப்பரங்களும்
    அருகிப் போய்விட்டன
    டிராக்டர்களில் அமரவைத்து
    குரலெழுப்பி அழைத்து வந்த
    ஜெனரேட்டர் தெய்வங்கள்
    அவரவர் ஜனங்களுக்குப்
    படியளக்கத் தவறவில்லை
    இரசாயனக் கற்பூரப் புகையயினூடே
    இரசனையுடன் கடைக்கண்ணால்
    ஆசிவழங்கவே செய்தார்கள்.

    அழகழகாய் அலங்கரித்திருந்த
    சாமி மூர்த்தங்களை
    வீதி உலா வரச்செய்த
    வாரிசுதாரர்கள் வீடு வீடாய் வந்து
    மறக்காமல்
    ஆசிவரி வசூலித்துப் போனார்கள்
    நீர்மோரும் பானகமும்
    பகிர்ந்துகொண்டார்கள்.
    விசேஷமாய் எண்ணெய் மணத்தது
    அண்டாக்களில்
    சுண்டல் பிரசாதம்.
    ஆறும் கடலும்
    சாமியும் பக்தர்களும்
    ஒன்றாகக் குளித்தெழுந்த
    சமத்துவ நாள் இதில்
    எங்கள் சந்தோஷங்களை
    வண்ண வண்ண பலூன்களில்
    அடைத்தெடுத்து
    மண் உண்டியல் பரிசு வாங்கி
    மூங்கில் குழல் ஊதி
    ஊருக்கு எடுத்துப்போகிறோம்
    பெரிய ஆண்கள் மட்டும்
    பின்தங்கிவிட்டார்கள்
    அது வேறு தீர்த்தவாரியாம் (கவிஞர் இரா.மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, தீர்த்தவாரியும் குழந்தைகள் நாங்களும்) என்று குழந்தைகளைக் கபளீகரம் செய்து விட்ட மது அரக்கன் உலாவுகிற தீர்த்தவாரியைக் காண்கிறபோது காலத்தின் கோலம் சற்றெனப் புலப்படுகிறது.

    நிறைவாக

    இவ்வாறு கவிதையின் ஒவ்வொரு முடிச்சிலும் காலத்தின் இழையை ஊடுபாவாக இணைத்துப் பின்னியிருக்கும் கவிஞர் இரா. மீனாட்சியின் கவிதையில் பெரும்பாலும் இயற்கை வந்து இயல்பாகத் தழுவிக் கொள்கிறது. ‘என்காலத்துப் பாரதி நான்’ என்று கவிமுண்டாசு கட்டிக் கொண்ட பெண்பாரதியாகவே உலாவரும் அவர், ‘சூடமுடியாத சூரியப் பூவே’ என்று பாரதியை அடையாளம் காட்டுகிறார். அதுமட்டுமின்றி, காலந்தோறும் அடிமைப்படுத்தப்படும் பெண்ணிய வாழ்வினைத் தனது சிறு கவிதையில் வலியோடு படம்பிடித்துக் காட்டுகிற பாங்கு அவருக்கே உரியது. ‘காலுக்குச் செருப்புத்தான் கேட்டேன் – இலாடமடிக்காதீர்கள். சொல்வதற்கு மன்னியுங்கள் வலிக்கிறது’ என்று தனது கவித்தடத்தில் இதுபோன்ற காலத்தடங்களையும் சேர்த்துப் பதிவிட்டிருக்கிற கவிஞர் இரா. மீனாட்சி இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறார். ஔவையார், ஆண்டாள் நாச்சியார், காரைக்காலம்மையார் என்னும் வரிசையில் தன்னையும் ஒரு பெண்கவிஞராக இணைத்துக் கொண்டு அவர் படைக்கும் அற்புதக் கவிதைகள் காலத்தின் சாட்சியாக என்றும் நின்று உலாவட்டும்.

    துணைநூற்பட்டியல்

    1. சுப்பிரமணிய பாரதி, ஸ்ரீ, சி., வேதரிஷிகளின் கவிதை, பாரதி பிரசுராலயம், திருவல்லிக்கேணி, சென்னை, மூ.ப. 1939.
    2. கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, கவிமணி கவிதைகள், முழுத்தொகுப்பு, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தி.நகர். சென்னை – 17, மு.ப. 2003.
    3. கவிஞர் இரா.மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, மு.ப. 2020.
    4. அ.மு.பரமசிவானந்தம், கவிதை உள்ளம், வள்ளியம்மாள் கல்வி அறம், சென்னை, மூ.ப.1978.
    5. மீரா – பாலா, கவிதை ஒரு கலந்துரையாடல், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர், இ.ப.2006.

    Share
  • தொல்தமிழரும் கடவுட்கோட்பாடும்!

    -மேகலா இராமமூர்த்தி

    பண்டைத் தமிழரின் வாழ்வையும் வீரத்தையும் அறிந்துகொள்ள நமக்குப் பெருந்துணை புரிவது சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான புறநானூறு. அதில் தமிழரின் வாழ்வியலைப் பேசும் பாடல்கள் பல உள. எனினும், தமிழன் என்பவன் யார்? அவனுக்கான அடையாளம் என்ன? வழிபாட்டு முறை என்ன? என்பதை விளக்க மாங்குடி கிழார் என்ற புலவர் இயற்றிய புறநானூற்றின் 335ஆவது பாடலையே பலரும் எடுத்தாளுவது வழக்கம். மாங்குடி கிழாரே தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனால் புறநானூறு 72இல் சிறப்பிக்கப்பட்டவரும், அவன்மீது மதுரைக் காஞ்சி பாடியவருமான மாங்குடி மருதனார் ஆவார்.

    மாங்குடியாரின் 335ஆவது புறநானூற்றுப் பாடல் தொல்தமிழரின் வாழ்வியலை அறிந்துகொள்ள எந்த அளவிற்கு உதவுகின்றது என்பதை ஆராய்வோம்.

    அந்தப் பாடல்…

    அடலருந் துப்பின் .. .. .. ..
    குரவே தளவே குருந்தே முல்லையென்று
    இந்நான் கல்லது பூவும் இல்லை
    கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
    சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
                                     

    இந்நான் கல்லது உணாவும் இல்லை
    துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
    இந்நான் கல்லது குடியும் இல்லை
    ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
    ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
                          
    கல்லே பரவின் அல்லது
    நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
    (புறம்: 335 – மாங்குடி கிழார்) 

    அடலருந் துப்பின் (வெல்லுதற்கரிய வலிமையுடைய) என்று தொடங்குகின்ற இப்பாடலில், அதனையடுத்துள்ள இரண்டு சொற்கள் சிதைந்துள்ளன. இரண்டாம் அடியிலிருந்துதான் பாடல் முழுமையாய்க் கிடைக்கின்றது. 

    ”குரவு, தளவு, குருந்து, முல்லை ஆகிய நான்கு மலர்களைத் தவிர வேறு மலர்கள் இல்லை; கரிய அடிப்பகுதியை உடைய வரகு, பெரிய கதிரினை உடைய தினை, சிறுகொடியில் விளையும் எள், புள்ளிகள் நிறைந்த அவரை இவை நான்கினைத் தவிர உணவுப்பொருட்களும் இல்லை; துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற இந்த நான்கல்லாத குடிகள் இல்லை; மனம் பொருந்தாப்  பகைவரின் முன்னே அஞ்சாமல் நின்று அவர் படையெடுப்பைத் தடுத்து, விளங்குகின்ற உயர்ந்த கோட்டினையுடைய யானைகளைக் கொன்றுத் தாமும் விழுப்புண்பட்டு வீழ்ந்து இறந்தவர்களின் நடுகல்லைத் தவிர யாம் நெல்தூவி வழிபடுவதற்கேற்ற வேறு கடவுளும் இல்லை.” என்பது இப்பாடலின் பொருள்.

    இந்தப் பாடலில் பயின்றுவந்துள்ள மலர்கள், உணவுப்பொருட்கள் இவற்றை நோக்கினாலே புரியும் இவை முல்லைநிலத்தைச் சேர்ந்த மலர்களும் ஆங்குவிளையும் உணவுப் பொருட்களும் என்பது. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு அல்லாது வேறு குடியுமில்லை என்று சொல்லப்பட்டிருப்பதிலிருந்து குறிப்பிடப்பட்ட அந்த முல்லைநிலப் பகுதியில் இந்த நான்கு குடியினர் மட்டுமே வாழ்ந்திருந்தனர் என்பதை நாம் உய்த்துணரமுடிகின்றது.

    இந்த நான்கு குடியினரும் போருக்குச் சென்று வெல்வதையும், வெல்ல இயலாதுபோயின் விழுப்புண்பட்டு வீரமரணம் அடைவதையும், போரோடு ஒட்டிய நிகழ்வுகளில் பங்கேற்பதையும் பெருமையாய்க் கருதும் மறக்குடியினர்; அதனால்தான் போரில் இறந்துபடும் தம்மினத்து வீரர்களின் நினைவாய் நடுகல் எழுப்பி, அதில் இறந்தோரின் பீடும் பெயரும் பொறித்து அக்கல்லை வழிபட்டிருக்கின்றனர்; வேறு தெய்வங்களைத் தாம் நெல் உகுத்து வழிபடுவதில்லை என்கின்றனர். (நெல் உகுத்தல் என்பது நெற்பொரியை உகுத்து வழிபடுவதைக் குறிக்கின்றது.)

    இந்தப் பாடலின் திணை: போர் வெற்றியைக் கொண்டாடும் வாகைத் திணை.

    துறை: மூதின் முல்லை. அதாவது மறக்குடியில் பிறந்த ஆடவரேயன்றி அக்குடியில் பிறந்த மகளிரும் மறத்தில் சிறந்துவிளங்குவதைப் பேசுவது இந்தத் துறை.

    இவையனைத்தையும் தொகுத்துப் பார்க்கையில், இப்பாடல் முல்லைநிலத்துச் சிற்றூர் ஒன்றில் வாழ்ந்துவந்த துடியன், பாணன், பறையன், கடம்பன் எனும் நான்கு மறக்குடியினரின் வாழ்வியலைப் பேசுகின்ற பாடல் என்பது தெளிவாய்ப் புலப்படுகின்றது. இவர்களின் குரலாக ’மாங்குடி கிழார்’ இப்பாடலைப் பதிவுசெய்திருக்கின்றார். 

    இந்தப் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல் அன்று தமிழ்நிலத்தில் வாழ்ந்தவர்கள் துடியன், பாணன், பறையன், கடம்பன் எனும் நான்கு குடியினரே; நடுகல் வழிபாடு ஒன்றே தமிழர் வழிபாடு; நெல் உகுத்துப் பிற தெய்வங்களைப் பரவுவது தமிழர் வழக்கமில்லை என்ற முடிவுக்கு வருவது அறிவார்ந்த செயலா? 

    சங்க இலக்கியம் என்று சொல்லப்படுவதைத் ’திணை இலக்கியம்’ என்று குறிப்பிடுவதே பொருத்தமானது என்பார் தமிழண்ணல். ஏனெனில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனத் திணை வகுத்து அவற்றுக்கேற்ற துறைகளும் வகுத்து அவ் இலக்கியம் நமக்குப் பாடல்களை அளித்துள்ளது. 

    குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவர்களும், முல்லை நிலத்தவராக மேற்கண்ட பாடலில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் நான்கு குடியினரும், அவர்களைப் போலவே முல்லைநிலத்தில் வாழ்ந்த ஆயர்களும், மருத நிலத்தவரான உழவர்களும், நெய்தல் நிலத்தவரான பரதவரும், ஆறலை கள்வர்களாகப் பாலைவழிகளில் திரிந்து கொள்ளை கொலைகளில் ஈடுபட்ட எயினரும் தமிழரே.

    குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த காந்தளும், குறிஞ்சியும், வேங்கையும், முல்லை நிலத்தில் மலர்ந்த குரவும், தளவும், குருந்தும், முல்லையும், கொன்றையும், மருத நிலத்தில் தழைத்த தாமரையும், குவளையும், கழுநீரும், நெய்தல் நிலத்தைச் சார்ந்த தாழையும், புன்னையும் இன்னபிறவும் தமிழ்நிலத்து மலர்களே! [தமிழ்நாட்டு மலராக நாம் குறிஞ்சிநிலத்துச் செங்காந்தள் மலரைத்தான் தெரிவுசெய்திருக்கின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.]

    குறிஞ்சிநிலத்துச் சேயோனும், முல்லைநிலத்து மாயோனும், மருதநிலத்தவர் வேந்தன் என்று கொண்டாடிய இந்திரனும், நெய்தல் நிலமக்கள் சினைச் சுறாவின் கொம்பினை நட்டு வழிபட்ட வருணனும் தமிழ்த் தெய்வங்களே! 

    “சினைச்சுறவின் கோடுநட்டு
    மனைச்சேர்த்திய வல்லணங்கினான்…”
    (பட்டினப்பாலை: 86-87)

    இத்தெய்வங்களல்லாது, காடுகிழாள், கானமர் செல்வி, ஐயை என்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட வெற்றித் தெய்வமான கொற்றவையும் மறக்குடியினரால் வழிபடப்பட்டிருக்கின்றாள். இதனைத் தொல்காப்பியத்தின் ’கொற்றவை நிலை’ விளக்குகின்றது. சிலப்பதிகார ’வேட்டுவ வரி’ கொற்றவை வழிபாட்டை விரிவாய்ப் பேசுகின்றது.

    ஐயை கோட்டத்தில் தெய்வம் ஏறப்பெற்ற சாலினி என்ற பெண், “கலையாகிய ஊர்தியில் அமர்ந்த கொற்றவை, தான் கொடுத்த வெற்றிக்கு விலையாக உயிர்ப்பலியை உண்டாலல்லது நும் வில்லிற்கு வெற்றியைக் கொடாள்; எனவே, வழிப்போக்கரின் வளத்தைப் பறித்துண்ணும் மறவர்களே! நீங்கள் கள்ளுண்டு களிக்கும் வாழ்க்கையினை விரும்புவீராயின் கொற்றவைக்கு நேர்த்திக் கடனைத் தாருங்கள்” என்று முழங்குவதை வேட்டுவ வரி காட்டுகின்றது நமக்கு.

    ”கலையமர் செல்வி கடனுணி னல்லது
    சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
    மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
    கட்டுண் மாக்கள் கடந்தரு மெனவாங்கு…”
    (சிலப்பதிகாரம்: வேட்டுவ வரி)

    இவையல்லாமல், ஆல், அரசு, கடம்பு, வேம்பு போன்ற மரங்களையும், நீர்நிலைகளையும் தெய்வம் உறையும் இடங்களாக நம்பித் தொல்குடித் தமிழர் வணங்கினர். நாகங்களை வணங்கும் மரபும் தொன்றுதொட்டு நம்மவரிடம் இருந்தது. இவ்வாறு தமிழர் வழிபாடு விரிந்து பரந்தது; பல்வேறு படிநிலைகளை உள்ளடக்கியது.

    இன்றைய தமிழ்நாட்டுக்குப் பொருந்தும் வகையில் சொல்வதானால்…ஆயிரக்கணக்கில் நம்மிடம் சாதிகள் உண்டு; அதனினும் அதிகமாய் உட்பிரிவுகள் (subsects) உண்டு. ஒவ்வோர் இனத்தாரின் பழக்கவழக்கங்களிலும், உணவு முறைகளிலும், தெய்வ நம்பிக்கைகளிலும் வேறுபாடுகள் உண்டு. எனினும், குறிப்பிட்ட ஒரு சாதியாரை மட்டுமா நாம் தமிழர் என்று அடையாளப்படுத்துகின்றோம்? இல்லையே! அனைத்துச் சாதியாரையும்…ஏன்…தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மதத்தினரையும் தமிழர் என்றுதானே அடையாளப்படுத்தி வருகின்றோம்!

    அதுபோல், வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்தில் வாழ்ந்த அனைத்துத் திணை மாந்தரையும் உள்ளடக்கியதே அற்றைத் தமிழினம்; அவர்கள் அனைவரின் வாழ்க்கைமுறைகளும் நம்பிக்கைகளும் சேர்ந்ததே தமிழர் வாழ்வியல்.

    எனவே, முல்லைநிலத்துச் சிற்றூரைச் சேர்ந்த மறக்குடியினர் சிலரின் வாழ்வியலையும் வீரவழிபாட்டையும் காட்சிப்படுத்தும் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு, அதனை அன்றைய தமிழினத்தையே ஒட்டுமொத்தமாய் அடையாளப்படுத்தும் பாடலாய்ப் பறைசாற்றுவது எப்படிச் சரியாகும்? அது தமிழர் வாழ்வியலின் ஒரு கூறு என்று கருதுவதுதானே பொருத்தமாய் இருக்கும்?

    பன்மொழி பேசுவோரும் பல்லினத்தோரும் வாழும் இந்திய நாட்டை ஒரே நாடு ஒரே மொழி என்று சுருக்க நினைப்பது எப்படித் தவறான செயலோ அதுபோன்றதே பல்வேறு பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்வியலையும் கொண்ட அன்றைய தமிழ்க்குடியினரையும், நேரிய பார்வையோடும் சீரிய சிந்தனையோடும் நோக்காது, ஒரு குறுகிய அடையாளத்துக்குள் அடக்க நினைப்பது!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. புறநானூறு மூலமும் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் உரையும்.
    2. தொல்காப்பியம் மூலமும் உரையும் – கு.வெ.பாலசுப்பிரமணியன்.
    3. புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு – தமிழண்ணல்.
    4. சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும்.
    5. பட்டினப்பாலை மூலமும் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரையும்.

     

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 15

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 15

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    (கவிஞர் திரு தாரமங்கலம் முத்துசாமி அவர்கள் எழுதிய ‘மகரந்தம் தேடும் மலர்கள்’ என்னும் கவிதை நூல் பற்றிய மதிப்பீடு)

    முன்னுரை

    முகநூல் பதிவுகளை ‘மின்னணுப் பதிப்புத் துறை’ எனவும் வழங்கலாம் .எத்தகைய செலவும் இல்லாமல் ஒரு கைப்பேசியின் துணைக்கொண்டே அனைத்துப் படைப்புக்களையும் பதிவிடும் ஒர் அரிய வாய்ப்பினை இன்றைய அறிவியல் நமக்கு கொடையாக்கியிருக்கிறது. அந்தப் பதிவுகளில் ‘கவிதைகள்’ என்னைப் பெரதும் கவர்நதிருக்கின்றன. முகநூல் பதிவுகள் என்ற நிலையிலோ அப்பதிவுகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வநத பிறகோ அவற்றைப் படித்து நான் அடைந்த அனுபவத்தைப் பிறருக்கும் பந்தி வைப்பதில் எனக்கு ஒரு அடக்கமான அமைதி. பதிப்புத் துறையில் முகநூல் செய்து வருகிற பணியினைத் திறனாய்வுத் துறையில் வல்லமையின் துணைகொண்டு நான் செய்து வருகிறேன். அந்த வகையில் முகநூல் கவிஞர்களில் ஒருவரான தாரமங்கலத்தார் என அன்புடன் அழைக்கப்படும் தாரமங்கலம் முத்துசாமி அவர்கள் எழுதிய ‘மகரந்தம் தேடும் மலர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பைப் பற்றிய மதிப்பீட்டினை இங்குப் பதிவு செய்கிறேன்.

    1. உரைநடை செய்யுள் கவிதை ஒரு பார்வை

    தற்காலத்தார் எழுதும் கவிதைகள் பெரும்பாலும் கருவிலேயே சிதலமடைவதற்குக் காரணம் அது கவிதையாக உருப்பெறாததுதான். கவிதை பற்றிய சொல்லாராய்ச்சி நடந்த அளவுக்கு இங்கே கவிதைப் படைப்பு வளரவில்லை. கவிதைக்கும் உரைநடைக்கும் உள்ள வேறுபாடு தெற்றெனப் ;புலப்படுவதுபோல்  கவிதைக்கும் செய்யுளுக்கும் உள்ள வேறுபாடு இன்னும் உணர்ந்து கொள்ளப்படவில்லை. கவியரங்கங்களீல் இரண்டு முறை படிப்பதுதான் கவிதை என்று எழுதப்படாத இலக்கணம் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் அந்த வரிகளில் கவிதை இருப்பதாகவோ அந்த வரிகளில் மட்டுந்தான் கவிதையிருப்பதாகவோ அவர்களாகவே எண்ணிக் கொள்வதுதான். செய்யுள் வடிவம். கவிதை பண்பு. எந்தச் சொற்களையும் செய்யுளாக்கலாம். ஆனால் கவிதைக்குச் சொல்லாட்சி இன்றியமையாத ஒன்று. எந்தக் கருத்துக்களையும் செய்யுளாக்கலாம். அதனால்தான் பழந்தமிழில் மருத்துவம் சோதிடம் வானநூல் முதலியவை எல்லாம் செய்யுள் வடிவத்தில் இருந்தன. இன்றைய ‘மரபுப்பாவலர்கள் பலரும் அறியாத உண்மை இது.  அவைகளெல்லாம் பெரும்பாலும் விருத்தங்களில் அமைந்திருப்பதாலேயே இவர்கள் அவற்றைக் கவிதை என்று ஏற்றுக் கொள்வார்களா? உரைநடையைச் செய்யுள் வடிவத்தில் எழுதிவிடலாம். கவிதை தனித்தன்மை மிக்கது. எதனையும் கவிதையாக நோக்கத் தெரிந்தவனே கவிதையாகச் சொல்லத் தெரிந்தவனே கவிதையாக்கத்தில் வெற்றி பெற முடியும். இந்த ஆற்றல் ஒரு படைப்பாளனுக்கு தினசரி  4 காட்சிகள் என்பதுபோல அமையாது. எப்போது வரும் என்று சொல்லவும். முடியாது. ‘‘தன்னை மறந்த லயம்’ என்பார் மகாகவி. தான் காணும் உலகில் தான் படைத்துக் கொண்ட உலகில் தன் சஞ்சாரத்திற்கேற்பப் படைத்துக் ;காட்டுபவனே படைப்பாளன் ஆகிறான். கவிஞன் ஆகிறான். பொங்கல் வாழ்த்து எழுதுகிறவர் எல்லாம் புரட்சிக் கவிஞர் ஆகிவிடமுடியாது.  உரைநடை என்பது சொற்கோவை. செய்யுள் என்பது சொற்கோவையின் யாப்பு வடிவம். கவிதை என்பது தனித்துவமான அனுபவங்கள் சொற்களில் வெளிப்படுவது. இந்த வேறுபாடு தெரியாதவரைக்கும் செய்யுட்களைக் கவிதை என்று எண்ணுகிற மயக்கம் நிலவிக் கொண்டே இருக்கும்.  இதனை மாற்ற நாசா செய்யும் எந்த முயற்சியும் பலனளிக்காது.

    2. முகநூல் பதிவும் முத்துசாமியும்

    முகநூல் பதிவுகளை மின்னணுப்பதிப்புத்துறை எனத் தொடக்கத்தில் குறிப்பிட்டேன். அதற்கேற்ப நூலாசிரியரே தனது முகநூல் பதிவு அனுபவங்களைக் கவிதையாக்கித்தந்திருக்கிறார்.

    “படிக்க சுவைக்கப் பார்த்து ரசிக்க
    அறிவியல் புதுமை அற்புதல் மகிமை
    ஆட்டம் பாட்டம் அனைத்தும் கொண்டாட்டடம்
    மனதினை ஈர்க்கும் மருத்துவக் குறிப்பு
    தினமும் வெளிவரும் தீந்தமிழ் வணக்கம்!
    ஆடியோ வீடியோ அனைத்தும் கிடைக்கும்
    ஓடிவா என்று உரக்கக் கூவிடும்
    உண்மைச் சங்கம் இலக்கியம் பாட்டு
    இன்னிசை கவிதை கலக்கும் இடமே
    கற்கண்டுமுகநூல் …………..
    வாழ்த்து மகிழ்ச்சி வசைபல இவையெனக்
    கோத்துவிட்டே கும்மாளம் ;அடிக்கும்
    மார்க்கின் முகநூல் சேர்க்கும் அறிவை!

    நல்ல படைப்பாளர்களுக்கு இன்றைய நிலையில் முகநூல் பதிவு என்பது ‘அருட்கொடை’ என்பதுபோல அறிவியல் கொடை எனலாம். பல்பொருள் அங்காடியாகத் திகழும் இந்த முகநூலில் கவிஞர் தாரமங்கலத்தார் எழுதிய கவிதைகள் நூலாக்கப்பட்டு ஒரு சுவைஞன் என்ற முறையில் என் பார்வைக்கு வந்தது. இந்த நூல் கவிதைகளைப் படித்த பிறகுதான் வல்லாளர்களுக்கு மட்டுமன்று வழியின்றித் திகைத்தோர்க்கும் முகநூல் அடைக்கலப் பூங்காவாகியிருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இனிமை! எளிமை! நகைச்சுவை! நளினம்! மொழிஉணர்வு! அழகியல், மனித நேயம் இவை அத்தனைக்கும் முகநூலைக் கொள்கலமாக்கியிருக்கிறார் முத்துசாமி என்பதைப் பின்வரும் சில எடுத்துக்காட்டுக்கள் புலப்படுத்தக்கூடும்.

    2.1. கை மேல் பலன்

    நூற்பதிப்புக்கள் பிறர் கைக்குச் சென்று, படிக்கப்பட்டு அவர்களுக்குரிய பொழுதில் மனநிலைக்கு ஏற்ப சில கருத்துரைகளை நல்கலாம் நல்காமலும் போகலாம். முகநூல் அத்தகையதன்று. இந்த இலக்கியப் பதிவுகள் ஆண்ட்ராய்ட் தொழிற்சாலையின் உடனடி தயாரிப்பாதலின் வாசகர்களின் பின்னூட்டங்கள்; மறுநொடியே பதியப்படுகின்றன. எதிர் மறைக்கருத்துக்களும் பாராட்டுக்களும் கருத்துரைகளுமாக விரியும் அவை படைப்பாளனின் உறக்கத்தோடு ஒத்துப் போவதில்லை. .பின்னூட்டங்களில் காணப்படும் ஜால்ராக்களைவிட, திறனாய்வுக் கருத்துக்கள் பெரிதும் போற்றப்படுகின்றன.

    3. மலர்கள் மாலையான கதை

    உதிரிப்பூக்களாகிய கவிதைகளைத் தொகுத்து மாலையாகத் தொடுத்துக் காட்சிப்படுத்துவதில் முத்துசாமி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார். மரபுக் கவிதைகள் என்ற பெயரில் வாய்பாடுகளையே கவிதையாக எழுதி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் முகநூல் பதிவுகளுக்கு நடுவே இனிய எளிய சந்தங்களால் மக்கள் வாழ்வியல் வடிவங்களைக் கவிதைகளாக்கியிருக்கிறார்.

    பாடுபொருளைப் பொருத்தவரையில் குழந்தைகளைக் கொணடாடுகிறார்.  கூர்வாளையும் பாடுகிறார். தடம் மாறிய தமிழனையும் அவனைத் தலைநிமிர வைக்க முயன்ற பாரதியையும் பாடுகிறார். கண்ணனூர் மாரியம்மனையும் பாடுகிறார், காதலையும் பாடுகிறார். இட்டளியைப் பாடுகிறார். இயற்கையைப பாடுகிறார். இயேசுவையும் பாடுகிறார். சிறு நெல்லியைப் ;பாடுகிறார். சிட்டுக் குருவியைப் பாடுகிறார். வறுமையைப் பாடுகிறார். வண்ணக்கிளியைப் பாடுகிறார். இத்தனைப் பாடல்களையும் எளிய தமிழில் பாடுகிறார். எல்லாவற்றைப் பற்றியும் எல்லாருக்குமாகப் பாடுகிறார்.

    வாய்பாடுகளுக்காகச் சீர்களைத் தேடி, இட்டு நிரப்பும் அவலத்தை இவருடைய பாடல்களில் நான் காணவில்லை. உள்ளத்தில் தோன்றுகின்ற கருத்துக்கள், சிக்கல்கள் முதலியவற்றுக்கான வடிவங்கள் தானே அமைந்துவிடுகின்றன. நாலு வரியிலும் பாடுகிறார். நாற்பது வரிகளிலும் பாடுகிறார். நாட்டார் வழக்கைப் பல பாடல்களில் பல பொருண்மைகளில் பாடி உள்ளங் கவர்கிறார். சமுதாய அவலங்களை ஊடுருவி நோக்கும் இயல்பான கவிஞனுக்கான பார்வை இவருடைய இந்த நூலில் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படும் சிறப்பினைக் காணமுடிகிறது. .

    3.1. தாரமங்கலத்தாரரின் தத்துவச் சிதறல்கள்

    தத்துவப பார்வை இல்லாதவர்கள் கவிஞர்களாகப பரிணமிக்க முடியாது. இது ஒரு கவிதைக் கோட்பாடு. விதை முளைத்து இரு பிளவுக்கு இடையில் துளிர் விடுகிறது. .அந்தத் துளிர் பச்சைதான் என்றாலும் எல்லாப் பச்சைகளையும் போலன்று. தனித்தன்மை மிக்க பச்சை நிறம்.

    “பச்சைக குழந்தைபோல்
    உச்சி மெலிந்த உன்னத இலையே!
    பச்சை நிறமெல்லாம்
    பயணத்தைத் தொடங்கிவைக்கும்!
    சிவப்பு நிறமெல்லாம்
    பயணத்தை முடித்துவைக்கும்’

    இது ஒரு இயல்பான சிந்தனை. குண்டும் குழியுமாகச் சாலைப்பணி நடககிற இடத்தில் செங்கொடி பறப்பதைக் கண்டிருக்கலாம். இத்தகைய காட்சி ஒன்றினை ஒருமுறை கண்ட மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை சொன்னாராம் ‘எங்கே மேடுபள்ளம் இருக்கிறதோ அங்கேயெல்லாம் செங்கொடி பறந்தே தீரும்’ என்று. இதனை திரு.ஜீவபாரதி பதிவு செய்திருக்கிறார். பட்டுக்கோட்டையாரின மனநிலை பச்சைத் தளிரின் பச்சை வண்ணத்தைக் கண்ட முத்துசாமி பாவலருக்கு வந்திருக்கிறது. செம்மை தடுக்கும். பசுமை வழிவிடும்.

    ‘கள்ள உறவில் பிறந்த குழந்தையைக் குப்பைத் தொட்டியில் காண்கிறார் கவிஞர். குழந்தை குப்பையான கதை அது!

    “குப்பையெல்லாம் கூட்டிக் குழிவெட்டிப் புதைத்திடுங்கள்!
    குப்பை உரமாகும் குழந்தை மரமாகும்”

    என்று உருகுகிறார். குழந்தை விதை என்றால் அது விதைக்கப்பட .குப்பையில் வீசப்படக் கூடாது. ‘குழந்தை மரமாகும்’ என்பது தத்துவத்தின் கவித்துவ வெளிப்பாடு

    3.2. தாரமங்கலத்தார் பாடல்களில் கற்பனை

    ‘பண்புடையவர்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருப்பதனால்தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது’ என்பார் திருவள்ளுவர். நம் முத்துசாமியோ உலகம், சுற்றுவதை நிறுத்திவிட்டு ஊறுகாய்க்காக அவரிடம் வந்து அதனை இரக்குமாம்.

    பழைய சோறு போட்டுப் பசுந்தயிரை ஊற்றி
    பிசைந்து உண்ணும் போது பிரியமாய் மாவடுவைப்
    பிட்டு நாவில் வைக்கச்
    சுழலும் உலகமும் சுற்றுவதை நிறுத்தி
    விழையும் வடுவை விருப்பமாய்க் கேட்கும்!

    உயர்வு நவிற்சியாக இருந்தாலும் எளிய அழகான கற்பனை இது. உயர்திணைக்கு மட்டுந்தான் சிரிப்பு உண்டு. அஃறிணை சிரிக்காது. காரணம் தெரியாது. உயர் திணையிலும் சில அஃறிணைகளுக்குச் சிரிக்கத் தெரியாது. பாவலர் எழுதுகிறார்

    மலர்கள் சிரித்தால் பூரிப்பாம்
    மனிதர் சிரித்தால் புன்சிரிப்பாம்!
    மண்மகள் சிரித்தால் பூகம்பம்!
    விண்மகள் சிரித்தால் இடிமுழக்கம்!
    மலைமகள் சிரித்தால் எரிமலையாம்!
    மங்கையர் சிரித்தால் பனிமலையாம்!
    கடல்கள் சிரித்தால் சுனாமியாம்!
    கன்னியர் சிரித்தால் திவாஅலாம்!

    எல்லாப் பொருளின் வினைகளையும் சிரிப்பாகக் கற்பனை செய்யும் கவிஞர் இட்டளியைக் கூடக் கற்பனை செய்கிறார்.

    “உளுந்தும் அரிசியும் உறவு கொண்டதில்
    மலர்நதது இட்லி மணந்தது சட்னி!”

    ஆட்டுக்கல்லில் தனித்தனியாக அரைபடும் அரிசியும் உளுந்தும்  அம்மணிக்கையால் பாத்திரத்துள் கலக்க உறவு கொள்கிறதாம். அதனால் இட்லி வந்ததாம்!

    4. மலர்கள் தேடிய மண் வாசனை

    ‘மகரந்தம் தேடும் மலர்கள்’ என்று நூலுக்குப் பெயர் வைத்திருக்கிறார். அந்த மலர்கள் நுகர்ந்த மகரந்தங்களில் மண்வாசனையும் கலந்திருக்கிறது..   மாபெரும் காப்பியக் கட்டுமானத்தில் ஆங்காங்கே வரிபபாடல்களையும் குரவைப் பாடல்களையும் இணைத்துக் கொண்டு தம் காப்பியத்தைத் தமிழர்தம் நெஞ்சுக்கு நெருக்கமாக்கினார இளங்கோவடிகள். அந்த இலக்கிய உததியைத் தாரமங்கலத்தாரும் பின்பற்றித் தாம் பாடிய கவிதை நூலில் பல பொருண்மைகளை நாட்டுப்புற பாடல் வடிவத்தில் பதிவு செய்திருக்கிறார். தமிழிலக்கிய வடிவங்களில் கவிதைக்குத் தனியிடம் உண்டு. அக்கவிதையுள்ளும் புலவர்களுக்கானவை தனி. கவிதைகளுக்கானவை தனி. வெண்பா> கட்டளைக் கலித்துறை முதலியவை புலவர்களுக்கானவை. தாலாட்டு, தெம்மாங்கு, சிந்து கும்மி இலாவணி முதலியன கவிதைகளுக்கானவை. பிந்தைய வடிவங்களில்தான் தமிழ்க்கவிதைகள் குதூகலித்துக் கும்மாளமிடுகின்றன. கவிதைகளை மகிழ்ச்சிப்படுத்துவதில் தாரமங்கலதத்தார் தனிக் கவனம் செலுத்தியிருக்கிறார்.

    4.1. விறகு சுமக்கும் விதவை

    புரட்சி என்பது சொல்லாமலேயே திட்டமிடப்படாமலேயே வெடிப்பது. கவிஞர் பலர் தாம் எழுதிய கவிதைகளில் ‘இது புரட்சிக் கருத்து’ ‘இது வரை யாரும் சொல்லாதது’ ‘பாடாதது’ என்று தமக்குத்தாமே பாராட்டுப் பத்திரம் படித்துக் கொள்வதை கண்டிருக்கிறோம்!  இது உலக இயற்கை. தம்பி முத்துசாமி இதற்கு மாறுபட்டவர். என்பது இந்தப் பதிவால் விளங்கும். கணவனை இழந்த பெண்களையே நாம் விதவை என்கிறோம். கணவனை இழப்பது என்பது ஒரு ஆணை ஒரு பெண் இழப்பது என்னும் குறுகிய பொருளுக்குரிதன்று. அவனுடைய அன்பை, அரவணைப்பை, பாதுகாப்பை, எதிர்காலக் கனவுகளை அனைத்தும் இழந்துவிடுவதாகத்தான் பொருள். இழப்பன அவையெனின் அவற்றை ஒருத்தி அவன் மறைந்த பிறகுதான் இழக்க வேண்டும் என்பதில்லை. உயிரோடு இருக்கும்போதும் இழக்கலாம். அப்போதே அவள் விதவையாகிவிடுகிறாளாம். இது பாட்டின் உள்ளடக்கத்தில் ஒனிந்து கிடக்கும் புரட்சியான சேதி  கணவன் உயிரோடு இருக்கும்போதே ஒருத்தியை விதவையாகச் சித்திரித்தது தமிழ்க்கவிதையுலகம் காணாதது.

    “கட்டியவன் சரியில்லையே!
    காசு பணமும் தரவில்லையே!
    வெட்டி ஆளா அவனிருக்க
    வெறும் நிலவா நீயிருக்க உன்
    வேதனைக்கு மருந்துமுண்டா சொல்லம்மா? உன்
    விடியலுக்கு வழியுமுண்டா செல்லம்மா?

    என்று அவளையே கேட்கிறார் கவிஞர். இந்தப் புரட்சி சேதிக்குப் பின்னால் நடப்பியல் உலகத்தை மிக நுட்பமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

    “கால்வயிற்றுக் கஞ்சிக்காக
    காலமெல்லாம் உழைச்சுழைச்சு
    கட்டெறும்பா தேயிறியே கண்ணம்மா! உன்
    சாதிசனம் சொந்த பந்தம்
    சல்லிக் காசு கொடுத்ததுண்டா செல்லம்மா?”

    உண்மையல்லவா? இங்கே உறவுகளெல்லாம் சடங்குகளுக்காக!. திருமணத்திற்கும்  சாவுக்கும் ;ஆள்சேர்ப்பதுதான் நடப்பியல் வாழ்க்கை.  சொந்தச் சாதிக்காரனுக்கு எவனும் அவன் துன்பத்தில் கைகொடுப்பதில்லை. மரணப் படுக்கையில் கிடந்தாலும் ‘உடம்பைப் பாரத்துக்க’ என்னும் ஒற்றை வரிகொண்டு ஆண்ட்ராய்ட் போனில் தன் அனுதாபத்தைச் சேமித்துவிடுகிறார்கள்.

    4.2. ஆசை உறவாகுமா? ஆதரவு சோறாகுமா?

    ஆசை உறவாகாது ஆதரவு சோறாகாது’. பள்ளிக்குச் செல்லவேண்டிய பருவத்தில் பாரம் சுமக்கும் குழந்தைகளின் கல்விக்கு உதவும் உறவுகள் இல்லாததை இப்படிப் பாடுகிறார் கவிஞர்.

    “பெற்றவர்கள் கூட இல்லை புரிய மான உறவும் இல்ல!
    உற்றவர்கள் என்று சொல்லி உதவி செய்ய யாருமில்ல!
    கற்பதற்கு வழியுமில்ல! கண்கலங்கி நிற்பதுதான் சதியா?  நான்
    கைபிசைந்த நிற்பதுதான் விதியா?

    என்று சமுதாய நடப்பியலில் காணும் கசப்பான உண்மைகளை நாட்டுப்புற வடிவத்திலேயே பதிவு செய்து காட்டுவது ஒரு வடிவ நுண்ணியம்.

    4.3. கண்ணீர்ப்பால் தந்த தாய்

    நாட்டார் இலககிய வடிவங்களில் ஒப்பாரியும் தாலாட்டும் உள்ளம் உருக்குபவை. கற்பனையும் உணர்ச்சியும் கைகோத்து எக்காளமிடும் அத்தகைய கவிதைகளில் உள்ளம் பறிபோவது புதுமையன்று, தாய் தாலாட்டுப் பாடுகிறாள்

    “கடைப்பால் கொடுத்தால் கால்;வயிறு ரொம்பாதுன்னு
    கண்ணீரால் பால்கொடுத்தேன் கண்மணியே நீயுறங்கு!’”

    உலகியலில் தாய் அழுதுகொண்டு பால் கொடுக்கமாட்டாள். கூடாது, ஆனால் வறுமையின் உச்சம். தாய் அழுதுகொண்டு கொடுப்பதைப் பாடுகிறார் கவிஞர்

    “ஆன்றோர் சபையும் இருக்குது ஐ நா மன்றமும் கிடக்குது!
    அத்தனையும் இருந்துமென்ன அநியாயம்தானே நடக்குது?
    பசிக்கொடுமை தீர வேண்டும் வீட்டிலே  இந்தப்
    பட்டினிச் சாவு மறைய வேண்டும் நாட்டிலே”

    சமுதாயச்சிக்கல்களில் வறுமையும் பசியும் தலையானவை.  அவற்றைப் பாடாத கவிஞனை வரலாறு  தன் கணக்கில் வரவு வைக்காது. முத்துசாமி வரவுவைக்கப்பட்டவர்.!

    5. மலர்கள் தேடும் மழலைகள்.

    மலர்கள் தேடும் மழலைகள் என்னுந் தொடர் தம்பி முத்துசாமி எழுதிய பாடல்களில் குழந்தைப் பாடல்களைக் குறிப்பது. குழந்தைப் பாடல்களில் தமிழிலக்கியம் இன்னும் சவலையாகவே இருக்கிறது என்பது மழலை புரியாது’ என்பதுபோல உண்மை. காரணம் குழந்தைகள் பாடுவது என்பது முழுமையும் கற்பனை. குழந்தைகளுக்கு அறிவைவிடக கற்பனை மிகுந்து நிற்கும். இந்தக் கற்பனையின் பேரளவு படைப்பாளனுக்கு வராது. அவன் தன் உயரத்திலேயே நின்று கொண்டிருப்பான். மகாகவியின் பாப்பாப் பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் எல்லாம் அறிஞர்களின் சிந்தனைக்கே பிடிபடாதவை.  ‘தேம்பி அழுங்குழந்தை நொண்டி’ என்பது குழந்தையின் பிஞ்சு அறிவுக்குப் புலப்படுமா என்ன? குழந்தைப் பாடல்களில் மழலை தவழ வேண்டும். கன்னிமாரா நூலகம் நுழைந்து விடக்கூடாது. படைப்பாளன் தன்னை முன்னிலைப் படுத்துவது அல்ல குழந்தைப் பாடல்கள். மழலையாக மாற வேண்டும். எம்.எஸ்.இராஜேஸ்வரி பாடுவதும் பி.சுசீலா பாடுவதும் ஒன்றாகாது. கவிஞர் பலரும் ஒதுங்கிக் கொள்ளும் இந்தப் பகுதியில் தம்பி முத்துச்சாமி துணிச்சலுடன் இறங்கிச் சில பாடல்களைப் பதிவு செய்திருப்பதே பெரிதும் பாராட்டத்தக்கதாக அமைகிறது. கூடிப்பேசும் குருவிகள் என்னுந்; தலைப்பில் இவர் எழுதியிருக்கும் பாடல் குழந்தைகளுக்கும் இனிக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும்.

    “கூடிப்பேசும் குருவிகளே கொஞ்சிப் பேசுங்க!
    நாடிவரும் தென்றலிடம் நலததைக் கேளுங்க!
    பாடுகின்ற குயிலினமும் உங்கள் பந்தமே!
    ஆடுகின்ற மயிலினமும் உங்கள் சொந்தமே!”

    என்னும் பாடலில் பறவைகளோடு குழந்தைகளைப் பழக வைக்கும் பாங்கும் எலலா உயிர்கள் மேலும் அன்பு காட்ட வேண்டும் என்ற உயரிய பண்பாக்க முயற்சியும் ஒரு சேர வெளிப்படுவது காண்க. பஞ்சவர்ணக்கிளி பற்றி அனைவருக்கும் தெரிந்த பாடல் பச்சைக் கிளியே பறந்துவா! பாலும் சோறும் உண்ண வா! கொச்சி மஞ்சள் பூச வா! கொஞ்சி விளையாட வா!” என்பது. இந்தப் பாடலை இசையமைப்பாளர்கள் குழநதைகளுக்கு வாயில நுழையாத மெட்டுக்களிலெல்லாம் பாடி வதம் செய்திருக்கிறார்கள்.

    “பார்க்க பார்க்க அழகு — எங்கள் பக்கம் வந்து பழகு
    செக்கச் சிவந்த ;அலகு நீ சிறகடித்தால் அழகு!”

    “கொட்டை உனக்குப் பிடிக்குமா அதைக்
    கொண்டு வந்து தரட்டுமா?”

    “மினுமினுக்கும் கிளியக்கா உன்
    மேனியெல்லாம் ஒளியக்கா!”

    தும்பியோடு விளையாடு தம்பி! நீ
    துன்புறுத்த நினைக்காதே தம்பி!

    என்னும் வரிகளில் குழந்தைகளோடு குழந்தையாய்க் கவிஞர் ஒன்ற முயல்வதைக் காணலாம். குழந்தைப் பாடல்களில் பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல் என்னும் இலக்கணவகைச் சொற்களைப் பெரிதும் தவிர்த்து இயற்சொல், திரிசொல் இவற்றோடு வழக்குச் சொற்களையும் கலந்து அமைத்தாலே பாடல்கள் மழலைகளின் நெஞ்சில் பதியும். நினைவில் தங்கும். வாயில் நுழையும் மழலைகள் மகிழும். அன்றிப் புலவன் தன்னுடைய புலமைக்கு வடிகால் தேடினால் பாடல்களையும் புலமையையும் அலமாரியில் அடக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

    “நேசம் உனது வாசம் என் நெஞ்சில் வநது வீசும்!
    வேசம் இல்லாப் பாசம் உன் வியர்வை கலந்து பேசும்!”

    என்ற வரிகளில் சகர வர்கக எதுகைகளைக் கொண்டு குழந்தைகளோடு குழந்தையை  விளையாடி மகிழ்கிறார் கவிஞர்

    6. கலையியல் கவிதைகளில் அழகியல் தொடர்கள்

    சொற்கள் கவிதைகளைச் சிறக்கச் செய்யும். தொடர்கள் நூல்களை நிலைநிறுத்தும். ‘நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் ஆடைவாங்குவதற்காக’ என்னும் ஒரு தொடர் நா காமராசனைப் புதுக்கவிதையின் நாயகனாக்கியது காண்க. ’மந்திரம் போல் சொல் வேண்டும் என்பார் பாரதியார். அதுபோல பல சொற்களைச் சீர்களாக்கிப் பந்திவைத்திருக்கிறார் முத்துச்சாமி.

    6.1. செடிவைக்கும் மலர்கள்

    பள்ளி செல்லும் பெண்பிள்ளைகள் செடிகளை அதாவது நாற்று நடுகிறார்கள். கன்றுகளை நடுகிறார்கள். இதனைக் காணும் கவிஞர் செடிவைக்கும் மலர்கள்’ என்று வண்ணனை செய்கிறார்.

    6.2. தங்க நிற நெருப்பில் தவத்தில் இருந்தவை

    காலைச் சிற்றுண்டியாக இட்டளியும் பொங்கலும் தயாரிக்கிறார்கள். அவற்றுள் பொங்கலில் இடுவதற்கு முந்திரிப் பருப்புக்களை வாணலியில் இட்டு வதக்குகிறார்கள். இந்தக் காட்சி ‘முந்திரி நெருப்பில் தவம் செய்வதுபோல்’ தோன்றுகிறதாம். ‘தங்க நிற நெருப்பில் தவம் செய்யும் முந்திரி’! அடடா! என்ன அழகிய கற்பனை வெளிப்பாடு?

    6.3. வறுமைக்குப் பஞ்சமில்லை

    விருந்தினரைப் போற்ற இயலாத நிலையைத்தான் வறுமையின் உச்சம் என்பார் வள்ளுவர். ‘கொல்வறுமை தாளவில்லை என்பார் ஜீவா. உண்மையில் அந்த வீட்டில் பஞ்சமேயில்லையாம்! எதற்கு? வறுமைக்கு! எவ்வளவு ஆழமான அழகான கற்பனை கலந்த சொற்றொடர்? இதுதான் கவிதை!

    7. மகரந்தம் தேடும் மலர்களில் வடிவக் கோட்பாடுகள்

    முறையாகத் தமிழ் படித்தவர். பட்டங்கள் பல பெற்றவர். யாப்பிலக்கணம் தெரிந்தவர்.  பாவகைகளையும் அவற்றின் இனங்களையும் பகுத்தறிந்தவர். இருந்தாலும் இந்த நூலில் அவற்றை முற்றிலுமாகப் புறக்கணித்து மக்கள் மொழியில் கவிதை எழுதியுள்ளார் முத்துசாமி. இந்தத் துணிச்சல் பட்டுக்கோட்டைக்கு இருந்தது பாவலர் வரதராசனுக்கு இருந்தது. ஜீவாவுக்கு இருந்தது. கே.சி.எஸ..அருணாசலத்திற்கு இருந்தது கொத்தமங்கலம் சுப்பு அவர்களுக்கு இருந்தது. இன்றைக்கு இவருக்கு இருக்கிறது. மக்கள் வாழ்வியல் சிக்கல்களை வரையறுக்கப்பட்ட யாப்புக்குள் கொண்டுவர இடர்ப்படுவதைவிட மக்கள் மொழியிலேயே அவர்களுக்குத் தெரிந்த நடையிலேயே எடுத்துமொழிவதையே தனது வடிவக்கோட்பாடாகக் கொண்டிருக்கிறார் முத்துசாமி. இது இந்த நூலுக்கு மட்டும்!

    சில கருத்துரைகள்

    கவிஞனைப் பாராட்டுவதற்கான கட்டுரையன்று இது. அது என் வேலையுமல்ல. கவிதையின் சுவையனுபவத்தைப் பிறர்க்குப் பநதிவைப்பது பரிமாறுவது அவ்வளவுதான்! அவ்வாறு சுவைக்கிறபோது எல்லாமே இனிபபாகத்தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அந்த வகையில் நூலின் அகப்புறக் கட்டுமானம் பற்றிய சில கருத்துரைகளைப் பதிவிட நேர்கிறது. .

    1. ஆண்ட்ராய்டில் தட்டச்சுச் செய்யப்பட்டு நூல்வடிவமாக்க அச்சுக்கு அனுப்புகிறபோது எழுத்துரு சிறுபான்மை மாறுபடும். எனவே மெய்ப்பு திருத்துகிறபோது தனிக்கவனம் இருந்திருக்க வேண்டும். இந்த நூலில; ‘லி’ என்ற எழுத்தே அச்சடிக்கப்படாமல் அடிக்கோடாகக் காட்சியளிக்கிறது.
    2. வந்த பையன் என்பதுபோலப் பெயரெச்சத்திற்குப் பின்னால் வல்லினம் மிகாது என்பது மிக மிகச் சாதாரண இலக்கணம் என்பதை மெத்த படித்த நூலாசிரியர் கவனததிற் கொள்ள வேண்டும்.
    1. உள்ளடக்கத்தால் சிறக்கும் இந்த நூலின் அட்டைப்படம் அலட்சியமாகக் கையாளப்பட்டிருப்பது வருத்தத்தற்குரியது. பன்முகப் பொருண்மைகளைப் பாடுபொருளாகக் கொண்ட இந்த நூலுக்கு இந்தப் படம் பொருந்தாமல் போகிறது. ஒரு நூலுக்கு அட்டைப்படம் என்பது தாயின் முந்தானை!  தாவணியன்று!

    நிறைவுரை

    பணிக்காலததில் பாடம் நடத்தி பணி ஓய்வு பெற்றவுடன ஓய்வூதியத்தில் ஒளிந்து கொண்டு உலகமும் தெரியாமல் உலகததிற்கும் தெரியாமல் மறைந்த தமிழாசிரியர் பலர். தம்பி முத்துசாமியோ வேறுபட்டுத் திகழ்கிறார்.  தன்னை மனிதனாக ஏற்றுக் கொண்ட தன்னைச் சூழ்நதிருக்கும் சமுதாயத்தை இந்த எழுபது வயதில் அவர் ஏறெடுத்துப் பார்க்கிறார். எழுத்தில் வடிக்கிறார. இதுவே ஒரு சமுதாயப்பணி! நாமும் எதனையாவது இந்தச் சமுதாயத்திற்குச் செய்ய வேண்டும், சொல்ல வேண்டும் என்ற துடிப்பு இந்த நூலின் ஒவ்வொரு பககததிலும் எதிரொலிப்பதை என்னால் உணரமுடிகிறது. நீங்களும் அந்தத் துடிப்பை உணரவேண்டும் என்பதற்காகத்தான் படித்துச் சுவைத்ததைப பந்திவைத்துப் பகிர்ந்திருக்கிறேன். வண்டுகள்; தேட வேண்டிய மகரந்தத்தை மலர்களைத் தேடவைத்திருக்கிறார் முத்துசாமி! நாம் என்ன மலர்களைவிடத் தாழ்ந்தவர்களா?

    (தொடரும்)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 47

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 47

    -மேகலா இராமமூர்த்தி

    தன் அண்ணன் இராவணனால் துரத்தப்பட்ட வீடணன், தன் அமைச்சர்களோடு அண்ணல் இராமனிடம் அடைக்கலம் வேண்டி வந்தபோது, ”அண்ணனுக்குப் பகைவரால் ஆபத்து ஏற்படும் வேளையில் அவனைப் பிரிந்துவருபவனை நம்பக்கூடாது; ஆதலால், வீடணனை ஏற்பது ஆபத்து” என்று ஆலோசனை சொன்னான் அண்ணனை இராமனின் துணையோடு வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றிய சுக்கிரீவன்.

    சுக்கிரீவனின் கருத்தையறிந்த இராமன் அடுத்து சாம்பனின் கருத்தைக் கேட்கின்றான். சாம்பனும், ”வீடணனின் வரவு பொன்மானாக வந்த மாரீசனின் வரவைப் போல் தீமைபயக்கக் கூடியதே; எனவே, அவனைச் சேர்த்துக்கொள்வது நன்றன்று” என்ற தன் கருத்தைத் தெரிவித்தான்.

    சாம்பனைத் தொடர்ந்து நீலனும், ஏனைய அமைச்சர்களும் வீடணனை நம்மவனாகப் பற்றிக் கொள்ளுதல் பழுது (தவறு) எனும் கருத்தையே வழிமொழிந்தனர்.

    இறுதியில் அனுமனின் கருத்தை வினவினான் இராமன். ”உத்தமர்கள் அனைவரும் உரைத்தபின்னர் நானும் விளம்ப வேண்டுமா?” என்று பணிவோடு கேட்டுவிட்டு, ”தூயவர்களாகிய இவர்கள் வீடணனைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் தூயவையே; எனினும், நான் வீடணனைத் தீயவன் என்று ஐயுறமாட்டேன்; அதற்கான காரணங்களை இப்போது உரைக்கின்றேன்” என்று தன் கருத்துக்களை எடுத்தியம்பத் தொடங்கினான் அனுமன்.

    ஐய! உள்ளத்திலுள்ளதைப் பேச்சில் வெளிப்படுத்துவதற்கு முன்பாக மெள்ளத் தம் முகங்களே கூறிவிடும்; வஞ்சகத்தின் விளைவுகள் எல்லாம் நல்ல கருத்தில்லாத, அறியாமையாகிய இருள்நிறைந்த பள்ளம்போன்ற முகத்தில் அல்லாது, (அறிவொளி வீசுகின்ற) வெட்டவெளி போன்ற முகத்தில் வெளிப்பட்டுத் தோன்றுமோ?” என்றான்.

    உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற
    மெள்ளத் தம் முகங்களே விளம்பும் ஆதலால்
    கள்ளத்தின் விளைவுஎலாம் கருத்துஇலா இருள்
    பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ. 
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6452)

    வீடணனின் முகத்தில் கள்ளமில்லை; அறிவின் மாட்சி தெரிகின்றது. ஆதலால், அவன் தீயவனாக இருக்க வாய்ப்பில்லை என்பதே ஈண்டு அனுமன் வெளிப்படுத்தும் கருத்து.

    ”அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
    கடுத்தது காட்டும் முகம்”
    (706) என்ற வள்ளுவரின் குறட்கருத்தைக் கம்பர் இப்பாடலில் எடுத்தாண்டிருக்கக் காண்கின்றோம்.

    வீடணன் நம்மிடம் வந்துசேர்ந்திருக்கும் காலம் சரியானதன்று என்று இராமனுக்குச் சுட்டிக்காட்டி அவனை ஏற்றுக்கொள்ள மறுதலிக்குமாறு வற்புறுத்திய நண்பர்களுக்குப் பதிலளிக்க விரும்பிய மாருதி,

    ”வலிமை மிக்கதான வாலியின் பகையைக் கடந்து நின்றது நின்னுடைய வலிமை; இனி, இலங்கை அரக்கர்கட்கும் அதனால் அழிவு உறுதியாயிற்று என்பதால், தனக்கு மூலம் எனப்படும் துணைவர்களான இராவண கும்பகருணர்களைப் பிரிந்து வருவதை நிறைவேற்றினான் வீடணன். எனவே, அவன் இங்கு வந்துசேர்ந்திருக்கும் காலமும் பொருத்தமானதே” என்றான் அஞ்சனை மைந்தன்.

    காலம்அன்று இவன் வருகாலம் என்பரேல்
    வாலிதன் உறுபகை வலி தொலைத்தலால்
    ஏலும் இங்குஇவர்க்கு இனிஇறுதி என்றலால்
    மூலம்என் துணைவரைப் பிரிவு முற்றினான்.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6455)

    தன்னை இராவணன் கொல்லச் சொன்னபோது அதனைத் தடுத்தவன் இந்த வீடணன்தான் என்பது அனுமனின் நினைவுக்கு வருகின்றது. அதைப்பற்றி இராமன் உள்ளிட்ட அனைவர்க்கும் தெரிவிக்க விரும்பிய அவன்,

    இராவணன் அவையில் கொண்டு நிறுத்தப்பட்ட என்னைக் கொல்லச்சொல்லி இராவணன் ஆணையிட்டபோது இடைமறித்து, “அபலைகளான பெண்களைக் கொல்வதும், வீரமற்ற அறிவிலிகளைக் கொல்வதும், நமது அழிவுக்குரிய செயல்களைச் செய்தார்களெனினும் தூது வந்தவர்களைக் கொல்வதும் தூய செயல் ஆகாது என்று சிறந்த காரணங்களை எடுத்துக்காட்டி என்னைக் காத்தவன் இந்த வீடணன்” என்றான் அனுமன்.    

    மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய
    ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும்
    தூதரைக் கோறலும் தூய்து அன்றாம் என
    ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான்.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6459)

    தொடர்ந்து இராமனிடம் தன் கருத்துக்களை முன்வைத்த சொல்லின் செல்வனான அனுமன்,  

    ”வெற்றி வேந்தனே! தேவர்க்கும் அசுரர்க்கும் பிரமன் முதலாய தேவர்களுக்கும் மேலான மும்மூர்த்திகட்கும் செய்துமுடித்தற்கு அரிய காரியத்தை முடிப்பதற்கு நீ முனைந்து நிற்கின்றாய். தனக்கு ஆபத்து வந்த காலத்தில் அடைக்கலம் என்று உன்னை நாடிவந்த வீடணனை ஐயுற்று நீ ஏற்றுக்கொள்ளாது புறஞ்செல்ல விடுவாயானால், கிணற்றின் சிறிய அளவு தண்ணீரைக் கண்டு கடல் ஐயுற்றதற்கு ஒப்பாகாதோ? என்று வினவினான்.

    கடல்போன்றவனான உன்னைச் சிறு புனலொத்த இந்த வீடணனால் என்ன செய்துவிட முடியும்? இவனைக் கண்டு சந்தேகம் கொள்வது எதற்கு? நற்குணங்களும் நீதியும் வழுவாத இவனைத் தாராளமாக நம்மோடு இணைத்துக்கொள்ளலாம் என்பது வீடணன் குறித்த அனுமனின் நிலைப்பாடு.

    மாருதியின் வார்த்தைகள் இராமனுக்குத் தன் காதுகளில் அமுதம் பாய்ந்தது போன்ற இன்பத்தை நல்கின. ”பேரறிவாளனே! நீ சொன்ன வார்த்தைகள் மிக நன்று!” என அவனைப் பாராட்டிவிட்டு, அனைவரையும் நோக்கி, ”மாருதி சொன்ன கருத்துக்களே சிறந்தவை” என்றுரைத்தான் அழுத்தமாக.

    அதனைத் தொடர்ந்து, அடைக்கலமாக வந்தவனை விடலாகாது என்பதற்குச் சான்றுகாட்டும் விதத்தில், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி மன்னனின் கதை, ஆலகால விடத்தை உண்டு சிவனார் தேவர்களைக் காத்த கதை, அடைக்கலம் எனச் சரணடைந்த யானையை முதலையின் வாயிலிருந்து திருமால் காத்த கதை எனப் பலவற்றை எடுத்துரைத்துத் தன்னை நம்பி வந்தவரை ஒருவன் காக்கவில்லையாயின் அறத்தால் என்ன பயன்? அவன் ஆண்மையால்தான் என்ன பயன்? ஆதலால், வீடணனை ஏற்றுக்கொள்வதால் நன்மையோ தீமையோ எதுவந்தாலும் சரி; அவனை ஏற்றுக்கொள்வது என்று நான் முடிவுசெய்துவிட்டேன் எனக்கூறி, கதிரோன் மைந்தனான சுக்கிரீவனைக் கூப்பிட்டு, ”நீ சென்று வீடணனை என்பால் அழைத்து வா!” என்றான் இராமன்.

    வீடணனை சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று யோசனை சொன்ன சுக்கிரீவனையே வீடணனை அழைத்துவர இராமன் அனுப்பியது நமக்கு வியப்பளிப்பதாய் உள்ளது. பின்னாளில் தன்னை நிராகரிக்கச் சொன்னவன் இந்தச் சுக்கிரீவன் என்பதை வீடணன் அறியும்போது அவனுக்கு சுக்கிரீவன்பால் கோபமும் வெறுப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அதனைத் தவிர்த்துத் தொடக்கம் முதலே இருவரும் நட்பாகப் பழகும் சூழலை ஏற்படுத்திவிட வேண்டும் எனும் நோக்கத்தோடு இராமன் வீடணனை அழைத்துவரச் சுக்கிரீவனைத் தேர்ந்தெடுத்தான் என்று நாம் எண்ணுவதில் தவறில்லை.

    இராமனின் கட்டளையை ஏற்றுச்சென்ற சுக்கிரீவன் வீடணனைக் கண்டான்; இருவரும் ஒருவரையொருவர் அன்புறத் தழுவிக்கொண்டனர். கருநிறத்தவனான வீடணனும் வெண்ணிறத்தவனான சுக்கிரீவனும் தழுவிக்கொண்ட காட்சியானது, இரவும் பகலும் தழுவிக்கொண்டதுபோல் இருந்தது என்கிறார் கற்பனையில் விற்பன்னரான கம்பர்.

    இராமன் வீடணனுக்கு அடைக்கலம் தர விரும்புவதை அவனிடம் தெரிவித்த சுக்கிரீவன், ”என்னுடன் வா நாம் இராமனைப் பணிவோம்” என்றான்.

    உவகையால் கண்கள் பொங்க, உடல் புல்லரித்து நின்ற வீடணன், ”செம்பஞ்சு ஊட்டாமலேயே சிவக்கின்ற மென்மையான பாதங்களை உடைய சீதாதேவியை இராமனிடமிருந்து பிரித்த பாவியும், வஞ்சகனுமான இராவணனுக்கு இளைய தம்பியாகிய என்னை வருக என்றுகூறி அருள்புரிந்தானோ? என்னையும் அடைக்கலம் என்று கருதினானோ? அடியவனாகிய நான் இராமனின் அருளால் தாழ்சடைக் கடவுளாகிய சிவபெருமான் உண்ட நஞ்சானது எவ்வாறு அவர் உண்டதால் சிறந்ததாயிற்றோ அதுபோலச் சிறந்தேன்” என்றான்.

    பஞ்சுஎனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி
    வஞ்சனுக்கு இளைய என்னை வருகஎன்று அருள் செய்தானோ
    தஞ்சுஎனக் கருதினானோ தாழ்சடைக் கடவுள்உண்ட
    நஞ்சுஎனச் சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன். (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6487)


    சுக்கிரீவனின் யோசனைப்படி விரைந்துசென்று இராமனைக் கண்டு வணங்கினான் வீடணன். இராமனும் மகிழ்ந்து அருகிலுள்ள ஆசனத்தில் அவனை அமர்த்தி, ”கடல்சூழ்ந்த இலங்கைச் செல்வத்தை உனக்கே தந்தேன்” என்று கூறிவிட்டு இலக்குவனை அழைத்துத் ”தம்பி இவனுக்கு மகுடம் சூட்டுக” என்றான்.

    ஏன் இலக்குவனை இராமன் முடிசூட்டப் பணித்தான் எனில், சுக்கிரீவன், சாம்பன், மற்றுமுள்ளோரைப் போல் இலக்குவன் வாய்திறந்து வீடணனை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லையே தவிர அவனுக்கும் அதில் உடன்பாடில்லை என்பதை உணர்ந்துகொண்டான் இராமன். அந்த மனநிலையை மாற்றவேண்டும் என்று கருதியே அவனிடம் வீடணனுக்கு இலங்கை வேந்தனாய் முடிசூட்டும் பொறுப்பை அளித்தான் என்கின்றனர் கம்பனில் தோய்ந்தோர்.

    அப்போது வீடணன், ”ஐயனே! அழிவற்ற செல்வமாகிய நின் திருவருளை எனக்கு அளித்தனை; களவுத்தன்மை உடைய அரக்கனாகிய இராவணனுக்கு இளையவனாய்ப் பிறந்த அந்தத் தொடர்பு தீரும்படி, நின் தம்பியாகிய பரதனுக்களித்த திருவடி நிலைகளான (காலணிகள்) மகுடத்தை எனக்கும் சூட்டுக” என்று பணிந்து வேண்டினான்.

    வீடணனின் விநயத்தில் மகிழ்ந்த இராமன், ”குகனோடு சேர்த்து நாங்கள் ஐவர் சகோதரர்கள் ஆனோம்; இது முன்பு நிகழ்ந்தது; பின்பு மேருமலையைச் சுற்றிவரும் சூரியனின் மகனான சுக்கிரீவனுடன் சேர்த்துச் சகோதரர் ஆறுபேர் ஆயினோம். எங்களிடம் உள்ளன்புகொண்டு எம்பால் வந்தவனே! உன்னுடன் சேர்த்து இப்போது சகோதரர்கள் ஏழுபேர் ஆயினோம். புகுதற்கரிய கானக வாழ்வை எனக்குத் தந்து புதல்வர்களால் நிறைந்திருக்கின்றான் உன் தந்தை தயரதன்” என்றான்.

    தயரதனை எந்தை என்றுரைக்காமல் நுந்தை என்று வீடணனிடம் இராமன் உரைப்பது, உண்மையிலேயே அவன் வீடணனைத் தன் உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டுவிட்டான் என்பதன் வெளிப்பாடே.

    குகனொடும் ஐவர்ஆனேம் முன்பு பின் குன்றுசூழ்வான்
    மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த
    அகனமர் காதல்ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்
    புகலருங் கானம்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6507)

    குல, இன வேறுபாடின்றி அனைவரையும் சோதரர்களாக இராமன் ஏற்றுப்போற்றும் பாங்கு, அவனின் பண்பட்ட மனநிலைக்குச் சான்றாவதோடு, “யாவரும் கேளிர்” எனும் கணியன் பூங்குன்றனின் பொன்னடிகளைப் பின்பற்றும் உயர்ந்தவனாகவும் அவனை அடையாளப்படுத்துகின்றது எனலாம்.

    அதன்பின்னர், கடல்சூழ்ந்த இலங்கையின் மதில் முதலிய பாதுகாப்புப் பற்றியும், இராவணன் உள்ளிட்ட அரக்கர்களின் வலிமை பற்றியும், இலங்கையின் படையளவு பற்றியும் வீடணனிடம் முற்றாய்க் கேட்டறிந்தான் இராமன்.

    இலங்கையின் நிலவரம் உரைத்த கையோடு இலங்கை நகரத்தை அனுமன் ஒருவனாகவே எரித்தழித்த திறலையும் அண்ணல் இராமனுக்கு அறியத் தந்தான் இராவணனின் இளவல். அதுகேட்டுப் பூரித்த இராமன், ”இத்துணை வீரச்செயல்கள் நிகழ்த்திய நீ, சீதையைக் கண்டும் அவளை மீட்டுவராமல் அங்கேயே விட்டுவந்தது என் வில்லாற்றலை நான் காட்டவேண்டும் என்பதற்காகவா வீரனே?” என்று கேட்டு அனுமனைப் பாராட்டினான். தன் வீரப் பிரதாபங்களைத் தன் வாயால் சொல்லிக்கொள்வதையோ பிறர் வாயால் கேட்பதையோ விரும்பாத அனுமன் நாணத்தோடு தலைகுனிந்தான்.

    அடுத்து, கடலைக் கடந்து இலங்கை செல்வதற்கான வழியென்ன என்று இராமன் வீடணனைக் கேட்டபோது, கடல்வேந்தனான வருணனை வேண்டி வழி கேட்போம் என்று யோசனை சொன்னான் அவன். அதனையேற்ற இராமன், ”இளமைப் பருவத்தினளான சீதையை இராவணனின் சிறையினின்று மீட்டுவருவதற்குரிய வழியைத் தருக” என வருணனை வேண்டி, வேதநெறிப்படி அடுக்கப்பட்ட தருப்பைப் புல்லில் கருங்கடலைப் பார்த்தபடி அமர்ந்து வருண மந்திரத்தைத் தியானிக்கத் தொடங்கினான்.

    நாட்கள் ஏழு கடந்தும் வருணன் வரவில்லை. இராமனின் தாமரைக் கண்கள் சினத்தால் சிவந்தன.

    ”ஒருவர் எவரிடமும் எதனையும் வேண்டாதவர் என்றாலும், ஒருவர்பால் சென்று ஒன்றை வேண்டுவாராயின் அவ்வாறு வேண்டியவர் சிறுமையிலிருந்து நீங்கமாட்டார். இன்று நான் இலங்கைக்குச் செல்லும் வழியைத் தர வருணனை வேண்டியதை கடல்வேந்தன் மறுத்துவிட்டான்; இது நன்று நன்று!” எனக் கோபத்தால் புகைதோன்ற நகைத்தான் இராமன்.

    ஒன்றும் வேண்டலர் ஆயினும் ஒருவர்பால் ஒருவர்
    சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையின் தீரார்
    இன்று வேண்டியது எறிகடல் நெறிதனை மறுத்தான்
    நன்று நன்றுஎன நகையொடும் புகைஉக நக்கான்.
    (கம்ப: வருணனை வழிவேண்டு படலம் – 6597)

    நாம் எத்துணை உயர்ந்தவராயினும் ஒருவரிடம் சென்று உதவிவேண்டி நின்றால் அவர் முன்பு தாழ்ந்துதான் போகின்றோம் என்று இராமன் உரைத்த கருத்து எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடியதே.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! 14

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! 14

    முனைவர் ச. சுப்பிரமணியன்                                

    துரை. வசந்தராசனின் ‘தேன்பாவை’ — ஓர் அழகியல் பார்வை

    முன்னுரை

    ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை ஆக்கப்பூர்மான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கும் சில எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன. சில நிகழ்வுகளும் நடக்கின்றன. முகநூல் குழுமங்களில் ஓர் இலக்கிய ராஜாங்கத்தையே சிலர் நடத்தி வருகின்றனர். அவருள் தம்பி மாதவரம் பண்ணைக் கவிக்கோ வசந்தராசனும் ஒருவர். வெற்று ஆரவாரங்களில் ஆர்வம் காட்டாத வினோதமான இந்தத் தம்பி தமிழ்நாட்டில் வாழுகின்ற கவிஞர்கள் எழுதும் கவிதைகளுக்குத் தலைமைதாங்கும் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பவர். கவிஞர்களை ஒப்பிடுகிறவர்களுக்கு இந்த உண்மை அவ்வளவாகப் புலப்படாது. என்னைப்போல் முன்பின் அறியாதவர்களின் கவிதைகளை ஒப்பிடுகிறவர்கள்  மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அவருடைய முகநூல் பதிவுகளில் சென்ற 2021ஆம் ஆண்டு வெளிவந்த காதலென்னும் பொருண்மை பற்றிய கவிதைகள் தேன்பாவை என்னுந் தலைப்பில் நூல் வடிவாகி என் பார்வைக்கு வந்தது. அட்டையைப் பார்த்தும் மயங்கினேன் அனைத்தையும் பாரத்தும் மயங்கினேன். அந்த மயக்கம் பித்த மயக்கம் அன்று என்பதையும் பின்னர்த் தெளிந்து கொண்டேன். இருக்கிற காதலியிடம் தோன்றாத காதலை இல்லாத காதலியிடம் தோன்றியதாகக் கற்பனை செய்து கொண்டு எழுதியிருக்கும் இந்தப் பாவியம் வைணவ இலக்கியங்களைப் போல அழகியல் சார்ந்தது., அமைதியானது., ஆரவாரம் இல்லாதது. கற்பனையானது.,காதலைப் பாடுவது!. சுவைத்தனால் அறிந்தேன் நான்! சுவைப்பீர்களேயானால் நீங்களும் அறிவீர்கள்! சொந்தங்களே வாருங்கள்! கவிதைச் சுகம் காண்போம்!

    படித்தவன் எழுதுகிறேன்

    ‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என மணிவாசகரிடம்  திருப்பெருந்துறையுடையார் வேண்டுகோள் விடுத்ததாக ஒரு தகவல் உண்டு. வசந்தராசன் இனி கோவை பாடுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நூல் முன்னுரையில் தம்பி வசந்தராசன் பாடியவன் பேசுகிறேன் என்று எழுதியிருக்கிறார். அதனால் நான் படித்தவன் எழுதுகிறேன். மணிவாசகப்பெருமான் எழுதிய ‘பாவை’ என்பது தனி நூல் அல்ல என்பதும் திருவாசகத்தின் ஒருபகுதியே என்பதும் யாவரும் அறிந்ததே. வைணவத் திருப்பாவை, அதனைத் தொடர்ந்து தோன்றிய சைவத் திருவெம்பாவை ஆகிய இரண்டுமே பாவை இலக்கிய வகைமாதிரிகளில் கோலோச்சுகின்றன. இந்தப் பின்புலத்தில் தம்பி வசந்தராசன் எழுதிய தேன்பாவையால் நான் பெற்ற சுகததை ஊரறிய கடைவிரிப்பது எல்லாருக்கும் உதவக்கூடும் என்னும் நம்பிக்கையில் இந்தக் கட்டுரை விரிகிறது.

    தேன்பாவை பாவை இலக்கியமா?

    ‘பாவை’ என்ற சொல் சங்க இலக்கியத்தைச் சார்ந்தது. ‘யவனர் இயற்றிய வினைமாண் பாவை’ என்பது நெடுநல்வாடை. ‘கொல்லிப் பாவை’ என்பது அகப்புற இலக்கியங்களில் பெருவழக்கு. பாவை மன்றம் என்பது பூம்புகார் கண்டது, நாம் காணாதது. ‘மரப்பாவை’ என்பதை மரப்பாச்சி என்பது உலகியல்.

    “இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண் மா ஞாலம்
    மரப்பாவை சென்று வந்தற்று” (1058)

    “நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர் மருட்டியற்று” (1020)

    என்பன திருக்குறள் பயன்பாடுகள். “தென்தமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து” என்பது சிலப்பதிகாரம். ‘பாவை’ என்பது அறிஞர் மு.வ. எழுதிய ஒரு நாவலின் பெயர். பாவை விளக்கு என்ற பெயரில் திரு. அகிலன் எழுதிய நாவல் பெரும்புகழ் பெற்றுத் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. ‘சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி’ என்பது பவணந்தியாரின் தொடர். அத்தொடரைச் ‘சித்திரப்பாவை’ என்று திரு. அகிலன் தன் நாவல் ஒன்றனுக்குத் தலைப்பாக்கினார். பாவை நோன்பு என்பது அக்கால உலகியலில் மகளிர் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று. மண்ணால் செய்து வைக்கப்பட்ட பாவை உருவைத் தெய்வமாகப் பாவித்து நாடும் தானும் நலிவற்று வாழ வேண்டும் என்பதற்கான வேண்டுதல் நெறிக்குப் பாவை நோன்பு என்று பெயர். இவ்வாறு பன்முகமாக விவரிக்கப்பட்ட பாவை என்ற சொல்லுக்கும் துரை. வசந்தராசனின் ‘தேன்பாவை’ என்ற நூலின் உள்ளடக்கத்திற்கும் எள்ளின் முனையளவும் இயைபில்லை. முள்ளின் முனையளவும் உறவில்லை. இது அவருக்கு மட்டுந்தானா?  இல்லை. எல்லாப் பாவை நூல்களுக்கும் இப்பொருந்தாமை பொருந்தும்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானது.

    ‘எம்பாவாய்’ என்றால் என்ன?

    பாவை இலக்கியங்களைப் படிக்கின்ற எவரும் ‘எம்பாவாய்’ என முடிவதினாலேயே அது பாவை இலக்கியம் எனக் கருதிக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. உண்மையில் பாவை இலக்கியங்களின் தோற்றம் பாவை போன்ற பிரதிமையை வழிபடுவதில் தொடங்கியது. “நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்” என்பது திருப்பாவை. திருவெம்பாவைக்குப் பின்னாலே வந்த இலக்கியங்களில் பாவை நோன்பு என்பது மறக்கப்பட்டுப் ‘பாவாய்’ என்னும் விளியில் முடிந்தால் போதும் என்ற அளவில் வந்து நின்றது. பாட்டின் சுவைக்கும் தலைப்புப் பற்றிய காரண காரிய அறிவிற்கும் தொடர்பில்லை. இருப்பினும் இவ்வாறு முடிந்ததனால் அவ்விலக்கியங்களின் தரவரிசை ஒன்றும் குறைவுபடுவதில்லை. தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் மக்கள் வாழ்க்கைச் சூழலில் அவற்றைப் பின்னனியாகக் கொண்டு தோன்றியவை என்பது அறிஞர் கைலாசபதியின் கருத்தாகும். எனவே எந்த இலக்கியமானாலும் தனிப்பாடலானாலும் அவற்றுள் நாட்டுப்புறவியலின் தாக்கம் தவிர்க்க முடியாமல் இழைந்திருக்கும். சிலப்பதிகாரத்தின் வரிப்பாடல்களும் குரவைப் பாடல்களும் கலித்தொகையின் வள்ளைப் பாடல்களும் இக்கூற்றினை உறுதி செய்யக்கூடும். திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் பயன்படுத்தியிருக்கும் திருச்சாழல், திருக்கோத்தும்பீ, திருப்பொன்னூசல் முதலிய கட்டமைப்புக்கள் எல்லாம் நாட்டுப்புற இலக்கியங்ளின் தாக்கமே என்பதில் ஐயமில்லை. இதே நிரலில் வந்ததுதான் ‘ஏலோர் எம்பாவாய்’ என்பதும். இது சொல்லாராய்ச்சிக்கு உரிய தொடர் அல்ல. தற்போதைய திரைப்பாடல்களில் வரும் ‘ஹோய்’ என்பது போல. ‘ஏலேலங்கடி! ‘ஐலசா’ போன்ற சொற்களும் இத்தகையனவே! இதற்குப் பிறகும் இது பாவை இலக்கியம் என்று சொல்லி மல்லுக்கட்டுகிறபோதுதான் நமக்குச் சங்கடமும் கண்ணீரும் சம அளவில் ததும்பி நிற்கின்றன.

    பாவைகள் பலவிதம்

    ‘பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்’ என்று கண்ணதாசன் பாடியிருக்கிறார். பாவைகளும் அப்படியே! பாவைகளின் உள்ளடக்கத்தைப் பொறுமையாகப் படிததுப் புரிந்து கொண்டால் ‘எம்பாவாய்’ என்ற சொல் ஒலி நிரப்பும் பணிசெய்யும் ஒரு வெற்றசைச் சொல் என்பது தெள்ளத் தெளிவாகிவிடும். நாடும் வீடும் செழிக்கப் பாவையை நோற்றதைப் பாடுவன திருவெம்பாவையும் திருப்பாவையும். தமிழ் ;மரபுகாக்கவும் தைத்திங்களைச் சிறப்பிக்கவும் திராவிட இயக்கச் சிந்தனையாளராக ஒளிர்ந்த கண்ணதாசன் எழுதியது தைப்பாவை. இந்தப் பாடலில்; தைத் திங்களையே பெண்ணாக உருவகம் செய்திருக்கிறார். இதனை அப்படியே பின்னாளில் திரு.வரதராசன் என்பார் ‘சுறவம் பாவை’ என்னும் ‘பாவை’ இலக்கியத்தை எழுதியிருக்கிறார்.  இதுவும் முகநூல் பதிவே. செந்தமிழுக்குக் கேடு வந்தபின்னும் அறியாது விழிமுடித் தூங்கும் மகளிரை எழுப்புவதாக அமைந்த பாவை பாவலர் பெருஞ்சித்திரனார். மார்கழித் திங்களின் காலையெழிலை திரு.வள்ளிமுத்து என்பார்; எழுதிய எழிற்பாவை கரட்சிப்படுத்துகிறது. தம்பி வசந்தராசன் எழுதிய இந்தத் தேன்பாவை கற்பனைக் காதலியை அவள் பேரழகைப் பிற பெண்களுக்கு அறிமுகம் செய்வதாய் அமைந்துள்ளது. இப்படி அமைந்த பல்வகைப பாவை இலக்கியங்களில் திருவெம்பாவை திருப்பாவை தனித்து விளங்குவதப் போலவே பாவலர் பெருஞ்சித்திரனாரின் செந்தமிழ்ப் பாவை தனிதது விளங்குகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

    கட்டுமானச் சிறப்பு

    நாட்டுப்புறவியல் தாக்கத்தின் விளைவாகத் தோன்றியதாதலின் பாவை இலக்கியத்திற்கு அடி வரையறை இருந்ததாகத் தெரியவில்லை. நடப்பியல் மரபு பற்றி இயல் தரவிணைக் கொச்சகக்கலியால் நான்கடிகளால் (இணை) இயற்றப்படும் இந்தப் பாடல்களில் தொடைவிகற்பங்கள் பொதுவாகவே சிறப்பாக அமைந்திருக்கும். தேன்பாவை இலக்கியத்தில் அமைந்திருக்கும் இருபத்தொன்பது பாடல்கள் இரண்டடித் தரவுகளாக எட்டு வரிகள் அமைய, ‘மின்னல் வரியெடுத்து வானம் மடல் எழுதும்’ என்ற ஒரே ஒரு பாடல் ஒன்பது வரிகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. இந்த ஆசிரியர் எழுதிய மற்றொரு வரலாற்றுப் பாவையான தலைமுறைப்பாவை பத்து வரிகளை அதாவது இரண்டடித் தரவுகளாகப் பத்து வரிகள் கொண்டதாக அமைந்துள்ளது. பொதுவாகப் பாக்களின் அடிகளுக்கும் குறிப்பாக அளவடிகளுக்கும் இனிமை சேர்க்கின்ற பொழிப்பு விகற்பங்கள் அதாவது பொழிப்பு மோனை, பொழிப்பு எதுகை முதலியவைகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன எனினும்,

    “கட்பூவில் வண்டமர்ந்து காதல் சிறகெழுதி
    உட்போகும் காற்றால் உயிரெழுதி, யானெழுதும்
    பொற்பூவின் தேனால் மகரந்தக் கூடெழுதி
    விற்பூவை வீசி விளையாடும் தேன்பாவை
    நற்பூவாம் நாசிவழி நாற்றிசையும் வாசித்தே
    எட்பூவாய் என்னை இழுத்துப் பதுக்குகிறாள்!
    எட்பூவில் வண்டமர ஏலுமோ? ஏலுமெனப்
    பொற்பூவாள் காட்டுகிறாள்! போய் காண்நீர் எம்பாவாய்!

    என்னும் பாடலில் முற்றெதுகைகள் உருவகச் சீர்வரிசைகளோடு  உலாவருவதைக் காணமுடிகிறது. சொற்பூவின் தேனாய்க் கவிதைப் பொருள் சிறக்க எழுதும் காதல் மடலில் ‘மகரந்தக் கூடெழுதி’ என்றும் புருவத்தால் பேசுகிறாள் என்பதை ‘விற்பூவை வீசி’ என்றும் செய்திருக்கும் உருவகம் கற்பனையின் எல்லை தொடுகின்றன. இது பற்றி விரிப்பின் பெருகும்.

    மரபிழையும் பாவை

    தமிழ் மரபில் ஆழங்கால்பட்ட கவிஞர்கள் சிலர் புதுக்கவிதை எழுதுவதாகப் புறப்படுவார்கள். ‘பொருள் புதிது’ என அச்சமூட்டி பாரதிக்கு நேரடி வாரிசாவார்கள். பிள்ளையார் பிடிக்க சிவபெருமான் ஆன கதையாக அவர்கள் என்ன எழுதினாலும் மரபு அவர்களையும் அறியாமல் அவர்கள் எழுத்தில் ஒளிந்து கொள்ளும். தம்பி வசந்தராசன் இந்தக் கவிக்குழுவின் புதிய உறுப்பினர். மரபின் இயல்பே அதுதான். அது அறிந்து பதிவது அன்று. அறியாமல் படிவது. திருவள்ளுவர் கண்ட தலைவன் ஊழ்வினை காரணமாகத் தலைவியைக் கண்டு,

    “அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ? கனங்குழை
    மாதர் கொல்? மாலும் என் நெஞ்சு”

    என ஐயுறுகிறான். சேக்கிழார் பெரியபுராணத்தில் சுந்தரமூர்த்தி நாயனார்,

    “கற்பகத்தின் பூம்கொம்போ?
       காமன்தன் பெருவாழ்வோ?
    பொற்புடைய புண்ணியத்தின்
       புண்ணியமோ புயல்சுமந்து
    விற்குவளை பவளமலர்
       மதிபூத்த விரைக்கொடியோ?
    அற்புதமோ? சிவனருளோ?
       அறியேனென் றதிசயித்தார்”

    என்று பரவை நாச்சியாரைக் கண்டு அதிசயித்து நின்றதாகப் பாடுகிறார். ‘பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா?’ என்றும் திரைநாயகன் ஐயப்பட்டதுண்டு. ‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ’ என்றும் அவன் தடுமாறியதுண்டு. அது சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாறு. இவை இயக்குநர் சொல்கிறபடி நடிக்கின்ற கதைநாயகனுக்கு வருகின்ற ஐயம்!  அது சுந்தரமூர்த்தித் திருப்பாவை அன்று. ஆனால் இது தம்பி வசந்தராசன் எழுதிய தேன்பாவை இலக்கியத்தில் அவர் நினைத்திருந்தால் ஐயக்கிளவியை அகற்றியிருக்கலாம். முடியாது. முடியவில்லை. காரணம் அவர் கொண்ட காதல் மரபு சார்ந்தது. தன் கற்பனைக் காதலியைக் கண்டு தானே மனக்கண்ணால் ரசித்துப் பாடுவது. தானே ஐயுறுவது. இந்த மரபின் தாக்கத்தை அவரையும் அறியாமல் இப்படிப் பதிவு செய்திருக்கிறார்.

    “முன்னைத் தவப்பயனோ? மூத்தோர் வினைப்பயனோ?
    தன்னை முழுதீந்து தண்டமிழின் வேர்பாவி
    என்னைக் கவியாக்க ஏற்றும் திருவிளக்கோ?
    கன்னல் கனிமொழியைக் காலத் திருமொழியை
    மின்னும் விழிமொழியை விண்ணளக்கும் பேரெழிலைத்
    தன்னை அழகூட்டித் தானே தருகின்ற
    பொன்னின் புதுநிறத்தைப் பூக்காட்டின் ஊர்வலத்தைக்
    கண்ணில் படம்பிடித்துக் காண்கிலரோ ரெம்பாவாய்!”

    தன்னை முழுதீந்து தண்டமிழின் வேர்பாவி என்னைக் கவியாக்க ஏற்றும் திருவிளக்கோ? என்னும் திராவிட மரபில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வசந்தராசன் “முன்னைத் தவப்பயனோ? மூத்தோர் வினைப்பயனோ?  என்னும் சான்றோர் மரபில் தன்னை இழந்துவிடுவதைக் காண்க. இங்கே தண்டமிழின் வேர் பாவி என்பது திராவிட மரபு. முன்னைத் தவப்பயனோ? மூத்தோர் வினைப்பயனோ என்பது சான்றோர் மரபு. தவப்பயன், வினைப்பயன் ஆகியன இரண்டும் திராவிடவியல் அன்று.

    துள்ளலோடு விளையாடும் சிந்து

    கண்ணதாசன் எழுதிய தைப்பாவையில் எந்த அளவுக்குக் கொச்சகக்கலி மரபு பின்பற்றப்பட்டுள்ளது என்பது ஆராய்வதற்கு உரியது. ‘கலிச்சீர்’ என்று ஒன்று தமிழில் இல்லை என்பதும் காய்ச்சீரின் பிறழ்ச்சியே கலித்தளை என்பதும் அத்தளையால் பெயர் பெறுவதே கலிப்பா என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இலக்கணம் சரியாக அமைந்துவிடுவதாலேயே குறிப்பிட்ட ஒலியும் சந்தமும் அமைந்துவிடும் என்று கருதுவது அவ்வளவு சரியானதன்று. குறிப்பிட்ட ஒலியமைதி கிட்டுவதற்கு அத்தகைய இலக்கண தளையமைதி இன்றியமையாதது என்பதுதான் கருத்து. அமைகின்ற பாட்டுக்குள் இலக்கணம் என்பதுதான் நெறி. இலக்கணத்தால் பாட்டு என்பது கவிதைக்கு முரண். இந்த அடிப்படையில்,

    “வா என்றன இமைகள்; மண்நோக்கின விழிகள்
    தா என்றன இதழ்கள்; தழுவென்றது மேனி
    பார் என்றது பருவம்;படை கொண்டது நாணம்;
    நேர்கின்றது யாதோ..நிலை கொண்டது காதல்.
    தேர்கொண்டொரு தெய்வம் தெரு வந்தது போலே
    ஊர்கின்றவன் மனதில் உழல்கின்றது காமம்;
    சீர்கொண்டவன் எதிரே சிலை கொண்டவள் வந்தாள்
    யார் வென்றனர் அறிவாய்;அறிவாய் தைப்பாவாய்” .

    என்னும் தைப்பாவைப் பாடலை நோக்க வேண்டியதிருக்கிறது. ‘மார்கழிக்குப் பெண்ணாகி மாசிக்குத் தாயாகிப் பேர்கொழிக்க வந்த பெட்டகமே தைப்பாவாய்! என்னும் சந்தத்திற்கும் மேலே காட்டப் பெற்றிருக்கும் பாடலின் சந்தத்திற்கும் உள்ள வேறுபாட்டினை ஓதுவார் உணர்வார்.

    ‘எட்டின் மெலிந்தஇடை! எழுத்தில் ஒளிந்தபொருள்!
    பட்டின் குறைந்தவிழை! பாட்டில் இயைந்தநயம்!
    கொட்டுமழைத் தூறல் குறுக்கில் நடந்தகுடை!
    வெட்டும் விரிமின்னல் வானில் படருகணம்!
    மொட்டின் முதல்விரியின் மோனத்தின் ஓசையெனும்!
    வட்டத் தொடக்கமென வாழும் இடையுடையாள்
    சுட்டும் சுடர்விழியால் சொர்க்கம் திறந்துவைத்துக்
    கட்டி எனையணைப்பாள் !காண்கிலரோ ரெம்பாவாய்?”          (22)

    என்ற இந்த நூலில் காணப்படும் ஒரு பாடல் கொச்சகக்கலிக்குப் புதிய பரிமாணம் சேர்ப்பதாக அமைந்துள்ளதைக் காணலாம். ‘கருவி தொகுதி’ என்பது தொல்காப்பியம். ‘கருவி வானம்’ என்பது சங்க இலக்கியத்தில் பெருவழக்கு.! மின்னல், இடி, மழை என்னும் தொகுதியையுடைய வானம் என்பது பொருள். தொகுதிக்குக் கணம் என்பதும் பெயர். பேய்க்கணம், தேவகணம் என்பது போல. “கொட்டுமழைத் தூறல் குறுக்கில் நடந்தகுடை!  வெட்டும் விரிமின்னல் வானில் படருகணம்!” என்கிறார். காதல் மீதூறும் ஒரு படைப்பில் மரபு சார்ந்த இலக்கணப் பதிவுகளை மிக இலாவகமாகச் செருகியிருக்கிறார் தம்பி இராசன் அவர்கள். முற்றெதுகைகளால் அமைந்த கலியில் கூழை மோனைகளும் இணை மோனைகளும் பொழிப்பு மோனைகளும் கைகோத்து சந்த இசையோடு நடைப்பயணம் புறப்பட்ட அழகை என்னென்பது?

    செந்தமிழ்ப்பாவையும் தேன்பாவையும் 

    அரிமாப் பாவலர் துரை மாணிக்கம் சிறைச்சாலையில் எழுதியது செந்தமிழ்ப்பாவை. இனத்துக்கும் மொழிக்கும் உள்ள கேடு உணராது கண்ணயரும் இளமங்கையரைத் துயிலெழுப்புவதாய் அமைந்த கட்டமைப்பு.

    “காக்கை கரையும்! கடிமுல்லை மொக்கலரும்!
    மேற்கில் மதிகரையும்! கீழ்க்கதிரும் மேலெழும்பும்!
    ஈர்க்குமா றோசை இரையும் தெருவெல்லாம்!
    யாக்கை வளர்ப்பார் தவிர எவர் இப்பொழுதில்
    சேக்கை புரள்வார்? சிறுதுயிலும் கொள்ளுதியே!”

    என்பது செந்தமிழ்ப் பாவையில் ஒரு பாடல். மிக நுண்ணியத்துடன் எழுதப்பட்ட பாடல். காக்கை விழித்துக் கொண்டு கரைகிறது. முல்லை மலர்ந்துவிட்டது (காலையில் முல்லை மலரும் என்பது மயக்கம்). மேற்குத் திசையில் நிலவு கரையும்! கிழக்கில் கதிரவன் கடலின் மேல் எழும்பும்! யாக்கைமேல் பற்றுக் கொண்டு வளர்ப்பாரேயன்றி மொழிப்பற்றும் இனப்பற்றும் கொண்டோர் அவற்றுக்குக் கேடுவந்துள்ள சூழல் கண்டும் உறங்குவார்களா? என்று வினவுகிறாள். இந்தப் பாட்டில் காலைப்பொழுதை ஒருசில வண்ணனைகளால் காட்சிப்படுத்துகிறார் பெருஞ்சித்திரனார். நம் வசந்தராசனோ,

    “கார்மேகம் வெட்கும்! கருமை நிறங்குன்றும்!
    நீரருவி போல்நெளியும்! நின்றபடிக் கீழிறங்கும்!
    நீர்வான் ஒளிப்படகு நீந்தும் நிலவுக்குப்
    போர்வையாய் நின்று புறத்தே கரைகொடுக்கும்!
    தார்மலர்கள் வந்து தவம்செய்தால் நன்மணத்தைச்
    சீராய்க் கொடைகொடுக்கும்! சிந்தாமல் பூப்பறிக்கும்!
    நேராய் வரும்காற்றின் நெஞ்சுக்கும் சிக்கெடுக்கும்
    சீரான கருங்கூந்தல்! சீக்கிரம்காண் எம்பாவாய்!”                                  

    எனப் பாடல் முழுமையும் நிரலாக வண்ணனைகளை அடுக்கிக் காட்டுகிறார். கற்பனை கலந்த காட்சிகள் மனக்கண் முன் விரிகிறபோது அவற்றை நிரல்படக் கோப்பது அரிதான செயல் அன்று. ஆனால் முதலில் காட்சிகள் வரவேண்டும்!

    துள்ளும் சிறுமீன்கள் தோற்றும் அலைவட்டம்
    மெல்லக் கரைதொட்டு மீண்டும் குளம்போகும்!
    புல்லில் பனிசருகும்! பூவும் முகங்கழுவும்!
    கல்லும் குளிர்மேவும் காலுக்கு இதமாகும்!
    வெள்ளம் விழுந்தவளை அல்லி மலரசைக்கும்!
    அள்ளும் பேரழகை அன்பீர் மறந்தீரோ?
    வில்லடியின் கீழிரண்டு மீன்களைத் தான்புதைத்து
    மெல்ல உறங்குதியோ? மீளுமேலோர் எம்பாவாய்

    என்னும் எழிற்பாவையும்

    குயில்கூவிக் கொண்டிருக்கும் கோல மிகுந்த
    மயிலாடிக் கொண்டிருக்கும்! வாச முடையநற்
    காற்று குளர்ந்தடிக்கும்! கண்ணாடி போன்றநீர்
    ஊற்றுக்கள் உண்டு! கனிமரங்கள் மிக்க உண்டு!
    வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு!
    காட்டு மறவர்களும் காதல் மணம் செய்வதுண்டு!
    நெஞ்சில் நிறுத்துங்கள்! இந்த இடத்தைத்தான்
    சஞ்சீவி பர்வதத்தின் சாரல்; என்று சொல்லிடுவார்”

    என்னும் பாரதிதாசன் பாடலும் இங்கே ஒப்பு நோக்கத்தக்கன. இயற்கையோடு வாழ்கின்ற கவிஞர்களுக்குத்தான் இது இயலும். வசந்தனுக்கு இது இயல்பு. இந்த மாதிரியான வண்ணனைக் களங்கள் ஏராளம்! ஏராளம்!

    தேனினும் இனிய தொடர்கள்

    கவிதை இலக்கியப் படைப்புக்களில் குறிப்பாக அக இலக்கியப் பதிவுகளில் காலத்துக்கும் நிற்பன தொடர்கள். இவற்றை அடுத்துக் கற்பனைகள். கற்பனைகள்கூடத் தற்காலிக இன்பத்தையே நல்கும். தொடர்கள் காலத்துக்கும் நிலைத்த இன்பத்தைத் தரும். ‘அன்னை கூறினள் புன்னையது நலனே’ நற்றிணைத்  தொடரும் நீயலது உளரோ என் நெஞ்சமர்ந்தோரே என்னும் ஐங்குறுநூற்றுத் தொடரும் காலத்துக்கும் ;மங்காது! மறையாது! தற்காலத் திரையிசையில் கூட,

    “அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
    உன் அழகைப் பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
    உன்னைத் தேடும்போது இதயம் இங்கு சுகமாகத் தொலைந்ததே”

    ‘உன்னைத் தேடும்போது இதயம் இங்கு சுகமாகத் தொலைந்ததே’ என்னும் தொடர் எண்ணற் கினிக்கும். எடுத்தியம்ப வாயினிக்கும். மனைவியிடம் கணவன் தான் அனுபவித்த இன்பத்தைக் கொஞ்சம் சொல்லலாம். ஆனால் மனைவி அவ்வாறு வெளிப்படச் சொல்ல இயலுமா? இயலாது. ஆனால் சொல்கிறாள். எப்படி?

    ‘பரிமாறும்போது நான் பசியாறினேன்’

    என்கிறாள் மனைவி. இந்தப் பக்குவப் பதிவுகள் எல்லாருக்கும் வந்துவிடாது. ஆபாசத்தை அமுதமாக்கிக் கொள்பவர்களுக்கு அது இயலாது.   வசந்தராசனுக்கு அது கைவரப் பெற்றிருக்கிறது. காதலைக் கற்பனையில் வைத்துப் பாடுவதைவிடத் தொடர்களில் வைத்துக் காட்டுகிற உத்தியில் அவர் தனித்து விளங்குகிறார். வசந்தராசன் தன்னைத்தன் காதலியிடம் தொலைத்துவிடுகிறார்.

    “தொலைந்து விட்டேன் உன்னிடம்நான்! தேடித் தாயேன்!”

    கற்பனையின் ஆழத்தைத் தொடரில் வைத்துக் காட்டும் இந்தச் சதுரப்பாட்டினை அவருடைய பல கவிதைகளில் நான் கண்டிருக்கிறேன். இந்தப் பாவையிலும்,

    “நெஞ்சுக்கும் சிக்கெடுக்கும் சீரான கருங்கூந்தல்”

    என்ற தொடரைக் கையாள்கிறார். சிக்கெடுக்கப்பட வேண்டியது கூந்தல். இங்கே அந்தக் கூந்தல் தன் அழகால் தலைவனின் நெஞ்சைக் சிக்கெடுக்கிறதாம். காதலியைச் ‘சேலைச் சோலையே’ என்பார்கள். வசந்தன் எழில் தவழும் தொடர்களைக் கையாள்கிறார்.

    ‘தாகம் தணிக்க வந்த தாவணிப் பேரருவி’

    உருவகம் என்ற பெயரில் எதனையும் உருவகித்துவிட முடியும். “பாலிருக்கும் கிண்ணம் மேலிருக்கும் வண்ணம் நீ செய்த கோலமில்லையா? என்று கூட உருவகம் செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் கற்பனை நயம் இருக்க வேண்டும். நயத்தை நாற்றுநடும் நாகரிகச் சொற்பயன்பாடு இருக்க வேண்டும். தாகம் தீர தண்ணீர் தேவை! இங்கே தண்ணீர் தலைவி! அவள் அருவி! பேரருவி! மலைகளுக்கு இடையில் விழுகிற அருவி! குற்றாலம் சென்றவர்களுக்குத் தெரியும். இந்த அருவியில் தாவணி அருவியாகிறது. இதுதான் எல்லை! இந்த எல்லைக்கோட்டுக்குள் மிகக் கவனமாகச் சொற்சிலம்பு ஆடுகிறார்.

    “நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே”          

    என்று கணவன் சொல்ல,

    “அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே”

    என்று மனைவி சொல்ல களைகட்டிய காதல் கச்சேரியைக் கண்ணதாசன் நிகழ்த்தியிருந்த காலம் ஒன்றுண்டு. கத்திமேல் நடக்கிற விளையாட்டு! காயம் படாமல் இறங்கிய வெகுச்சிலருள் தம்பி இராசனும் ஒருவர்! ‘தாவணிப் பேரருவி’ என்ற சொல்லால் தண்டகாருண்யத்தையே மறைத்திருக்கிறார். மறைப்பதுதான் அழகு என்னும் மந்தணம் புரிந்தவர்!

    பொங்கு புனலலையாய் தொங்கு நீர் காரருவி
    தங்கும் கதிர்நிலவு தாங்கம் மலைமுகடு
    திங்கள் விழியிரண்டில் கூரம்புக் கேடயங்கள்
    பங்கமிலாப் பல்முத்து வாய்பவத் தேனிதழ்கள்
    தெங்கின்கள் தோற்றோடும் தேறல் இதழ் கன்னம்
    தங்கவைர ஆரமென வானவில் தோரணங்கள்
    நுங்கு கழுத்தொன்றே தாங்குகின்ற அதிசயத்தை
    எங்கினிதான் காண்பீர் நீர்? இயம்பலோர் எம்பாவாய்!

    என்னும்  இராசனின் உள்ளுறை வண்ணனையை

    “இடையின் பின்னழகில் இரண்டு குடததைக் கொண்ட
    புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்”

    என்று காதலியின் பின்னழகைப் பாடுவதோடும்

    “பொன்பகட்டில் வார்த்து வைத்த
    பெண்ணுடலை என்னவென்பேன்?
    மடல் வாழை தொடை இருக்க
    மச்சம் ஒன்று அதிலிருக்க
    படைத்தவனின் திறமையெல்லாம்
    முழுமை பெற்ற அழகென்பேன்”

    என்று காதலியின் தொடைழகைப் பாடுவதோடும் ஒப்பிட்டுப பாரத்தால் வசந்தனின் பண்பாட்டு நுணணியமும் உயரமும் தெளியக் கூடும்.

    உவமச் செல்வர் வசந்தராசன்

    உவமம் பொருள் விளக்கக் கருவி மட்டும் அன்று. படைபபாளனின் முழுமையான ஆளுமையை வெளிப்படுத்துவதில் தலையாய பங்கு வகிக்கும் தனியாற்றல். அவனுடைய உலகியல் பார்வையையும் பரந்துபட்ட இலக்கியப் புலமையையும் ஒரே நேரத்தில் பலப்படுத்தும பேராற்றல் ஒரு கவிஞன் பயன்படுத்தும் உவமங்களுக்கு உண்டு. தம்பி வசந்தராசன் ஓர் உவமச் செல்வராகவே எனக்குக் காட்சி தருகிறார்!

    1. பெண்களுடைய கழுத்துக்குச் சங்கை மட்டுந்தான் உவமம் சொல்லி வந்தார்கள். மிகச் சிலர் ‘பாக்கு மரத்தை’ உவமித்தார்கள். தம்பி வசந்தராசன் ‘நுங்கு கழுத்து என்கிறார். உவமத்தில் கவிதை உறங்குகிற இடம் இது!
    1. கவிராஜன் கதையில் பாரதியின் உடல் இளைத்துப் போனதற்கு வைரமுத்து வெண்பாவின ;ஈற்றடியை உவமித்துக் காட்டுவார். தம்பி வசந்தராசன் காதலிக்கு முன்பாகத் தான் ஒரு ஈற்றசையாக மெலிந்து விடுவதாகப் பதிவு செய்கிறார்.
    1. உள்ளத்தில் உண்மையொளி உணடாயின் வாக்கினிலே வாய்மையுணடாகும என்பார் மகாகவி. தும்பைப்பூவை மனத்திற்குத்தான் உவமித்துப் பாரத்திருக்கிறோம். அந்தத் தூய்மை விழிகளுக்குள் வெளிப்படுகிறதாம். உவமத்திற்கு உவமம். கற்பனைக்குக் கற்பனை!. ‘தும்பை மனவிழிக்குள் தூளிகட்டு எம்பாவாய்’ என்பது தேன்பாவை!
    1. நிலவைப் பெண்ணின் முகத்திற்கு உவமம்; சொல்வது பழந்தமிழ் தொடங்கி நேற்றுவரை நிலைத்துவிட்ட மரபு. ஒட்டுமொத்த பெண்ணின் மெல்லுடலுக்கு உவமம ;சொல்கிறார் வசந்தராசன் ‘‘கிள்ளிவைத்த பால்நிலவு’ நடக்கிற விஷயமா இது?
    1. உடுக்கையை இடைக்கு உவமம் சொல்லியே ஓய்வெடுத்துக் கொண்ட கவியுலகில் எட்டை உவமமாக்கி வளைந்த எட்டை நிமிர்த்திவிடுகிறார வசந்தராசன்! அந்த எட்டுக்கு ஒரு இறுமாப்பு அவளுக்கு உவமம் ஆனதற்காக!
    1. ‘எள்ளின் மேலேறி எழுதும் கண்வினாவின் துள்ளும் தொடர் முற்றாய் தொங்கும் வினாக்குறிகள்’ என்று முகததை உவமக் களஞ்சியமாக்கியிருக்கிறார்!

    தன்னை இழக்க வைக்கும் காதல்

    கடலுக்கு ஏன் நீல நிறம் என்று ஆராய்ந்தவர்களும் வானத்திற்கு ஏன் நீல நிறம் என்று ஆராய்ந்தவர்கள் உண்டு. அவர்கள் விஞ்ஞானிகள். ‘கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ? என்று கடல் நீல வண்ணமானதற்குச் சர்.சி.வி இராமனுக்குத் தெரியாத உண்மையைக் கண்டறிந்து சொன்னவர் கண்ணதாசன். கொஞ்ச நாள் கழித்து அவரே இன்னொரு ஐயத்தையும் கிளப்புகிறார்!

    “நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
    காரணம் ஏன் கண்ணே! உன் கண்ணோ ?”

    வானம் நீலம் பூத்து நிற்பதற்கும் அவள் கண்தான் காரணமாம். ஏற்கனவே தென்றலுக்குள் தேன் வைத்து வியர்த்து நின்ற வசந்தராசன், இங்கே தன் காதலியைப் பார்த்து இப்படி ஐயப்படுகிறார்.

    “சந்தனக் குழம்புக்குள் தென்றலை நீந்த வைத்து
    செந்தமிழில் சொல்லெடுத்துத் தேனில் குழைத்தெடுத்து
    வந்தமரும் வண்டுக்கு வாசல் திறந்து வைக்கும்
    நந்தவனப் பூக்களுக்கும் நாணம் சிவக்க தர
    எந்த லோகத்தில் இருந்து பிறந்தவளோ?”

    என்று தன் காதலியின் பேரழகைத் தற்பெருமையாகப் பாடுகிறார். நாம் பொறாமைப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. என்ன நமக்கெல்லாம் வருத்தம்? கற்பனைக் காதலிக்கே இத்தகைய ஆலாபனை கிட்டியிருக்கிறது என்றால் உண்மைக் காதலி ஒருத்தி கிட்டியிருந்தால் எத்தகைய காதல் காப்பியம் கிடைத்திருக்கும் என்பதுதான்! ‘இந்தப் பாராட்டைக் காதலின் வெளிப்பாடாக மட்டும் கருதாமல் அவர் கவியாற்றின் ஊற்றினைத் திறந்துவிட்டதற்கான நன்றியுணர்ச்சியாகவும் வண்ணனை செய்திருக்கிறார்.

    நிறைவுரை

    உள்ளது கொண்டு உள்ளது புணர்த்தல், உள்ளது கொண்டு இல்லது புணர்த்தல், இல்லது கொண்டு இல்லது புணர்த்தல், இல்லது கொண்டு உள்ளது புணர்த்தல் என இலக்கிய உருவாக்கம் நான்கு வகைப்படும். தம்பி வசந்தராசனின் இந்தத் தேன்பாவை இல்லாத காதலியிடத்துத் தோன்றாத காதலைப் பாடியது ஆதலின் இல்லது கொண்டு இல்லது புணர்த்தலே! பொருளும் படைப்பின் உள்ளடக்கமும் இல்லதாயினும் இலக்கியம் உள்ளதே. புகழைத் தேடுகிறவன் அழிவான். புகழ் அழியாது. படைப்பாளன் மறைவான். அவன் படைப்பு அழியாது. எல்லாப் படைப்புக்கும் இது பொருந்தாது. மக்கள் உள்ளத்தில் அழியாது நிற்கும் படைப்புக்களுக்கே இது பொருந்தும். ‘மானுடக்காதல்’ என்னும் அநித்தியத்தை நித்தியமாக்கி அதனையும் ஒரு பாவையை முன்னிலைப்படுத்தி அவளையொத்த ஒருத்தியிடமே அவளை வண்ணனை செய்து காட்டியிருக்கும் தம்பி துரை. வசந்தராசனின் துணிச்சலும் படைப்பாளுமையும் உறுப்பு வண்ணனை என்னும் ஆபத்தான இலக்கியக் களத்தில் காட்டியிருக்கும் பொறுப்பும் எச்சரிக்கை உணர்வும் மெச்சத்தகுந்தன! பாராட்டும் மேன்மைக்குரியது! தேன்பாவை நூலுக்குச் சாற்றுக்கவி பாடவந்த ஆற்றல்சால் கவிஞர் திரு. ஆரூர் தமிழ்நாடன் இப்படிப் பாராட்டுகிறார்.

    “நான் பார்த்த மாகவிஞன் நல்வசந்த ராசனிடம்
    நாள்கோள்கள் பார்க்காமல் நற்றமிழாள் தோள்சாய்ந்து
    தேன்முத்தும் தந்திடுவாள்”

    என்னும் தம்பி இராசனுக்குரிய அந்தக் கோளறு பதிகத்தை அப்படியே வழிமொழிந்து அவருடைய அசுரத் திறமைக்கு ஓர் அணுவாக இந்தப் பாவையைக் கருதி நாமும் வாழ்த்தி மகிழ்கிறோம்! களங்களும் சொற்களும்  கவலையுடனும் ஏக்கத்துடனும் காத்திருக்கின்றன, தம்பி வசந்தராசனின் பார்வைக்கு! வாழ்த்துக்கள்!

    (தொடரும்)

    Share
  • வீட்டுக் கடனில் வங்கிகளின் உள்குத்து

    எம். எஸ். லட்சுமணன்
    காரைக்குடி 

    கடன் வாங்காதவர்கள் வங்கிச் சட்டத்தின்படி, வட்டி அதிகம் கட்ட வேண்டியவர்கள்.

    ரெபோ ரேட் படி வட்டியைக் குறைக்க மறுக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி.

    வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா? மக்களே உஷார்! உஷார்! பகுதி 2!

    விழிப்புணர்வுப் பதிவு

    நண்பர்களே சமீபத்தில் வீட்டுக் கடன் வாங்கி  ஒரு வருடமாக மீளக்கட்டி வருகின்றேன்.  நான் வீட்டுக் கடன் வாங்கச் செல்லும்பொழுது வங்கி சார்ந்து எனக்கு எந்தவிதமான கடனுமே  இல்லை. இதனால் என்ன நன்மை இல்லாத விஷயம் நடக்கும் என்று நினைக்கின்றீர்களா?  நடந்த விஷயத்தைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும்.

    கடந்த ஓராண்டாக ரெப்போ ரேட் எனப்படும் வங்கி வட்டியானது 6.65 என்றும்,வங்கி வீட்டுக் கடன் 6.5 முதல் 6.65 வரைதான் என்று இருக்கின்றது. தேசியமயமாக்கப்பட்ட பாரத வங்கியில் தற்போது வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கான வட்டி 6.70 மட்டுமே. ஆனால் எனக்கான வட்டியானது 7.30 என்று நடந்துகொண்டிருக்கின்றது .இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு நாள் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு வங்கிக்குச் சென்று, எனது வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்துக் கொடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். வங்கி மேலாளரிடம் இருந்தும், வீட்டுக்கடன் பிரிவு பார்ப்பவரிடம் இருந்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

    ஒரு மாதத்தில் இரண்டு மூன்று முறை நானும் நேரில் சென்று கேட்டேன். எந்தவிதமான பதிலும் இல்லை. மீண்டும் ஒருநாள் வங்கிக்கு நேரில் சென்று நான் அருகில் உள்ள தேசிய  வங்கிக்கு எனது வீட்டுக்கடனை மாற்றினால் 6.50 வட்டியில் கடன்   தருவதாகக் கூறுகின்றனர். எனவே நான் அங்கு செல்கின்றேன் என்று கூறினேன். அதனைக் கேட்டவுடன் வங்கியின் மேலாளர் ஓராண்டாக எந்தவிதமான ஜம்பும்  இல்லாமல் பணத்தைச் செலுத்தி வருகிறீர்கள். எனவே எனது மேலதிகாரிகளிடம் கேட்கிறேன் என்று மூன்று மேலதிகாரிகளிடம் இது தொடர்பான தகவலை என் முன்பே கேட்டார்கள். அவர்களும் வட்டியை 6.80 ஆக மாற்றிக் கொடுக்கலாம் என்றும், அதற்காக படிவங்களில் கையெழுத்துப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும், அதற்கான ரூபாய் 2000 பிளஸ் ஜிஎஸ்டி 360 ரூபாய்க்கான வித்ட்ராயில் சலனும் பூர்த்தி செய்து கையெழுத்துப் பெற்று கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்கள்.

    அன்று இரவு மற்றொரு தேசிய  வங்கியின் மேலாளர் என்னிடம் பேசும்பொழுது, நான் ஏற்கெனவே கடன் பெற்றுள்ள வங்கியிலேயே எனக்கு 6.80 வட்டி  தருவதால் நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டேன் (மிகவும் பெருமையாக).

    ஆனால் நண்பர்களே மறுநாள் மாலை,  எனது வீட்டுக் கடன் வங்கி மேலாளரைச் சந்தித்தேன். அவர்கள் மிக எளிமையாக, சார் சிஸ்டம் மாற்ற விடவில்லை, எனவே உங்களுக்கான வட்டி வீதத்தை மாற்ற முடியாது என்று தெரிவித்துவிட்டார்கள். நானும் மிக வேதனையாக, மன  வருத்தத்துடன் மேலாளர் அவர்களைப் பார்த்து, ஏன் மேடம் நேற்று 3 அலுவலரிடம், உயரதிகாரிகளிடம் பேசினீர்கள். மூவரும் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்கள். நானும் கையெழுத்திட்டு உங்களிடம் கொடுத்து விட்டுத்தான் சென்றேன். சிஸ்டம் என்பதை மனிதர்கள் தான் இயக்குகிறார்கள். எனவே மனிதர்கள் இயக்குவதை நீங்களே சிஸ்டத்தில் மாற்றி எனக்கு வட்டியை மாற்றித் தர வேண்டும் என்று கூறினேன்.

    அவர்களோ எனக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது, உயரதிகாரியிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று போனைப் போட்டு எனக்குக் கொடுத்துவிட்டார்கள். நான் மீண்டும் உயர் அதிகாரியிடம் பேசினேன், அவரோ இல்லை தவறு நடந்துவிட்டது மன்னித்துக்கொள்ளுங்கள் என்று மிக எளிதாக என்னிடம் தெரிவித்தார். எனக்கோ மிகவும் மன வேதனையாகவும் வருத்தமாகவும் இருந்தது. அப்போது வங்கி மேலாளர் என்னிடம், சார் உங்களுக்கு மாற்றினால் எல்லோரும் கேட்பார்கள், எனவே மாற்ற இயலாது என்றும் கூறினார். மீண்டும் மேலாளரைப் பார்த்துக் கேட்டேன்.

    நேற்று ஒரு வங்கியில் 6.50 வட்டி தருவதாகக் கூறினார்கள். நான் அங்கு செல்கிறேன் என்று கூறினேன். அந்த மேலாளர் என்னிடம் இரவு கேட்ட பொழுது, நான் ஏற்கெனவே வீட்டுக் கடன் பெற்றுள்ள வங்கியில் இருந்துகொள்கிறேன் என்று தெளிவாகத்  தெரிவித்துவிட்டேன். இப்போது நான் எப்படி அந்த வங்கியின் மேலாளர் முகத்தில் சென்று முழித்து  மீண்டும் எனக்கு லோன் கொடுங்கள் என்று கேட்பது? நீங்களே ஒரு மேலாளர். தகவல் கூறுங்கள் என்று கேட்டேன். அவரிடம் இருந்து எனக்கு எந்தவிதமான தகவலும் வரவில்லை. மௌனமே பதிலாக வந்தது.

    மீண்டும் என்னுடைய கேள்விகளைத் தயார் செய்து  வங்கியின் சென்னை அலுவலகத்திற்கு குறைதீர் பிரிவுக்கு எழுதினேன். உடனடியாகப் பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் மீண்டும் மெயில் மூலம் தொடர்பு கொண்டதன் தொடர்ச்சியாக, சில நாட்கள் கழித்து அவர்களிடமிருந்து மண்டல மேலாளர், தொலைபேசியில் என்னை அழைத்து, சிஸ்டம் செயல்படவில்லை என்று என்னிடம் தெரிவித்தார்கள். நான் கேட்டேன்,  கோபித்துக் கொள்ளாதீர்கள் மேடம், தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,  சிஸ்டத்தை இயக்குவதே மனிதர்கள் தான். அந்த சிஸ்டத்தில் தவறான ஏதோ ஒரு தகவல் வந்தால் அதனை நீங்கள் உடனடியாகச் செய்து விடுவீர்களா?  உதாரணமாக தூக்கு மாட்டிக்கொள்ளுங்கள் என்றால் உடனடியாக நீங்கள் அதனைச் செய்வீர்களா?  எனவே சிஸ்டம் செய்கிறது என்று கூறுவது தவறான தகவலாகும். அதனை இயக்குவதே மனிதர்கள் தான் என்று தெரிவித்தேன். அவரோ உண்மைதான் ஆனால் எங்களுக்கான பதில் இதுதான் என்று தெரிவித்தார்கள்.

    மீண்டும் நான் அதனை ஆர்பிஐ ஓம்புட்ஸ்மன் மெயில்  கொடுத்தேன். அவர்கள் மீண்டும் ரீபிளையில்  அப்படித்தான் தங்களுக்கு வட்டி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள். நான் கடன் பெறும் பொழுது எனக்கான வட்டி 7.05. ரெப்போ ரேட். நான் கடனே  வாங்காத காரணத்தினால் எனது சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததால் (கடன் வாங்காதவர்களுக்கு சிபில் ஸ்கோர் குறைவு என்று இப்பொழுதுதான்  தெரிந்துகொண்டேன்), வட்டியில் எனக்கு 0.65 சதவிகிதம் சேர்த்திருக்கிறார்கள். 7.70 ஆக இருந்திருக்கின்றது. ரெபோ ரேட் வட்டி 6.65 ஆக மாறும் பொழுது 6.65+0.65=  7.30 ஆக உள்ளது.

    இதனை மாற்றிக் கொடுங்கள் என்று ஆர்பிஐ ஓம்புட்ஸ்மேனிலும் அப்ளை செய்தேன். அங்கும் எனக்குப் பழைய பதில் தான்  கிடைத்தது.  மீண்டும் சென்ட்ரல் கவர்மெண்ட் உள்ள பிஜி போர்ட்டலில்  சென்று அப்ளை  செய்தேன். அங்கும் அவர்கள் மாற்ற இயலாது என்று தெரிவித்து விட்டார்கள். மீண்டும் அப்பீல்  செய்தேன். அதிலும் எனக்கு வட்டியை மாற்ற இயலாது என்று தெரிவித்து விட்டார்கள்.

    எனது முக்கியமான கேள்வி என்னவெனில் புதிதாக வரக்கூடிய வாடிக்கையாளருக்கு 6.70 என்று கொடுக்கும் வங்கியானது, நல்ல முறையில் கடனைக் கட்டிவரும் எனக்கு சிபில் ஸ்கோர் தற்போது அதிக புள்ளிகள் இருக்கும் பொழுது, ஏன் வட்டியைக் குறைக்கக் கூடாது என்பது கேள்வி. எனது நியாயமான இந்தக் கேள்விக்கு கடைசிவரை எனக்குப் பதில் கிடைக்கவில்லை.

    மேலும் மூன்று அதிகாரிகளிடம் பேசிய பிறகு மாற்ற முடியாது என்று மேலாளர் அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். அதற்கான காரணத்தைக் கேட்ட பொழுது வங்கியில் இருந்தோ, ஆர்பியை ஓம்புட்ஸ்மேனிலிருந்தோ, பிஜி போர்ட்டலில் இருந்தோ எனக்குச் சரியான தகவல் கிடைக்கப்பெறவில்லை. இதை அவர்கள் ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பது தான் வேதனையான தகவல். வங்கி அதிகாரிகள் வாய்க்கு வந்தபடி  எதை வேண்டுமானாலும் சொல்கிறார்கள். ஆனால் செயலில் காண்பிக்க மாட்டேன் என்று தெரிவித்து விடுகிறார்கள். எனவே இந்த வங்கியின் வட்டியைக் குறைப்பதற்கு ஏதேனும் வழிமுறைகள் இருந்தால் தாங்களும் தெரிவிக்கவும். இதனைப் படிப்பவர்களும் ஏதேனும் யோசனைகள் இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும். வங்கியில் புகார் அளிக்கும் உச்சம் வரை போராடியும் வங்கி தொடர்பான ஓம்புட்ஸ்மன் கம்ப்ளைன்ட் செய்தும் எனக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை என்பதை இங்கே பதிவு செய்கின்றேன்.

    முடிந்தவரை முயற்சி செய்தேன், போராடினேன். பதிலனுப்பினேன். பலமுறை டோல் பிரீ எண்ணில் தொடர்பு கொண்டேன். மெயில் அனுப்பினேன். அதன் பிறகுதான் எனக்கு இந்தப் பதில்  கிடைக்கப்பெற்றது.  எனவே புதிதாக வருபவர்களுக்கு வழங்குவது போல் எங்களுக்கும், சரியாகக் கடனைக் கட்டி வருபவர்களுக்கும் ரெபோ ரேட் படி, வட்டியைக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    Share
  • வீட்டுக் கடனுக்குக் காப்பீடு எடுக்கிறீர்களா? உஷார்! உஷார்!

    வீட்டுக் கடனுக்குக் காப்பீடு எடுக்கிறீர்களா? உஷார்! உஷார்!

    எம் எஸ் லட்சுமணன்,
    காரைக்குடி

    வீட்டுக் கடன் வங்கியில் வாங்கப் போகிறீர்களா? மக்களே உஷார் ! உஷார்!

    பிராப்பர்டி இன்சூரன்ஸ் எடுக்கப் போகும் முன் கவனமாக இருங்கள் மக்களே !

    10 வருஷ லோனுக்கு 20 வருடம் பிரீமியம் கட்டும் அவலம் !

    விழிப்புணர்வுப் பதிவு

    நண்பர்களே சமீபத்தில் தேசிய மயமாக்கப்பட்ட மிகப் பெரிய  வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுள்ளேன். வீட்டுக்கடன் எனக்கு வட்டி அதிகமாக வருகிறது என்கிற காரணத்தினால் மற்றொரு தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கியில் லோன் மாற்றலாம் என்று முயற்சி செய்தேன். அங்குள்ள மேலாளர் என்னிடம் வீட்டுக் கடனுக்கான லோனை மாற்றும் பொழுது பிராப்பர்டி இன்சூரன்சையும் மாற்றித் தர வேண்டும் என்று கூறினார்.  பிராப்பர்டி இன்ஷூரன்ஸ் தொடர்பான தகவல்களை  எஸ்பிஐ வங்கியில் சென்று கேட்டேன்.

    முன்பே உங்களின் வீட்டிற்கு நகல் வந்திருக்கும் என்று தெரிவித்தார்கள். ஆனால் எனக்கு நகல் வரவில்லை என்று கூறினேன். ஒரு வாரம் என்னை அலைய விட்டு இரண்டு பக்க  நகல்கள் தந்தனர். அதனில் இன்சூரன்ஸ் அலுவலக இடத்தில் முகவரி மட்டுமே இருந்தது. தொடர்பு எண் எதுவுமே இல்லை. மீண்டும் இரண்டு பக்கங்களையும் நன்றாகப் படித்துவிட்டு அதில் உள்ள டோல் பிரீ எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். இன்சூரன்ஸில் உள்ள, எனது முன்பு குடியிருந்த வீட்டின் முகவரியை  மாற்றுவதற்கு முயற்சி செய்தேன்.

    கஸ்டமர் கேரில் 30 நிமிடங்கள் கழித்துத் தான் தொடர்பு கிடைத்தது. அவர்களுக்கு என்னுடைய மெயில் ஐடி மெயில் பண்ணச் சொன்னார்கள். தகவலை ஏன் எனக்குக் காப்பி அனுப்பவில்லை என்று கேட்டேன். அதற்கு உங்களுடைய மெயில் ஐடி அப்டேட் செய்யப்படவில்லை,  மெயில் ஐடி அப்டேட்  செய்திருந்தால் அனுப்பி இருப்போம். கொரோனா காரணமாகத் தபாலில் அனுப்பவில்லை என்றும் தெரிவித்தார்கள் .அதன் தொடர்ச்சியாக பல மெயில்கள் அனுப்பிய பிறகு எனது முகவரி மாற்றப்பட்டது. மீண்டும் எனது பிராப்பர்ட்டி முகவரியும் தவறாக இருந்தது. அதனையும் மாற்ற, பல மெயில்கள் கொடுத்தோம். டோல் பிரீயில் 10 முறை தொடர்பு கொண்டு, விடா முயற்சி செய்து முகவரி மாற்றம் செய்துகொண்டேன்.

    இதற்காக எனக்கு எஸ்பிஐ கடன் பெற்ற வங்கியிலிருந்து எந்த விதமான உதவியும் இல்லாமல் இருந்தது. ஆனால் பிராப்பர்டி  இன்சுரன்ஸ் முழுவதுமே அந்த வங்கியின் வழியாகத்தான் செய்யப்பட்டிருந்தது. எனக்கு இன்சூரன்ஸ் தொடர்பான எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மீண்டும் நான் அறிந்துகொள்ள முயற்சி செய்தபோது வங்கியிலிருந்து எனக்குச் சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. மிகப்பெரிய எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவரி மட்டுமே உள்ளது. தொடர்பு எண்கள் (டோல் பிரீ எண்கள் தவிர) எதுவுமே இல்லாதது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வங்கியைத்  தொடர்பு கொண்டால் மேலாளர் அவர்களோ, இன்சூரன்ஸ் நிறுவனத்தினரை டோல் பிரீ எண் வழியாகத்தான் தொடர்பு கொள்வோம்  என்று தெரிவிக்கிறார்கள். என்ன செய்வது மக்களை ஏமாற்றுவதற்குப் பல்வேறு வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எனது இன்ஷூரன்ஸ் எடுத்துப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சி. நான் 10 ஆண்டுகள் மட்டுமே லோன் போட்டு உள்ளேன். ஆனால் 20 ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார்கள். இதுகுறித்து மேலாளரிடம் கேட்ட போது, மீண்டும் சரியான தகவல் இல்லை.

    இது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக கஸ்டமர் கேருக்கு மெயில்  வழியாகவும், டோல் பிரீ எண் வழியாகவும் பலமுறை பேசிவிட்டேன். மெயில், டோல் பிரீ எனப் பல  போராட்டங்களுக்கு பிறகு வங்கியில் ஒருவர் இதற்கெனத் தனியாக ஏஜென்ட் போல் செயல்படுகிறார் என்ற தகவல் தெரிந்தது. அவர்களுக்கு குழு மேலாளர்  இருப்பதாகவும் அறிந்தேன். அவர்களுக்கு நோடல்  மேலாளர் திருச்சியில் இருப்பதாகவும் அறிந்தேன். இவர்கள் அனைவருக்கும் பலமுறை நான் மெயில்  போட்டு, என்னுடைய தகவலை  நானே பலமுறை டோல் பிரீ எண்ணில் கேட்ட பிறகுதான் தொடர்பிலேயே வருகிறார்கள். அதன் பிறகும் எனக்குச் சரியான தகவல் வழங்கப்படவில்லை.

    10 வருடம் லோன் போட்டு உள்ள எனக்கு 20 ஆண்டுகளுக்கு அவர்களது இன்சூரன்ஸ் செய்துள்ளார்கள். இது தவறு. 20 ஆண்டுகள் உள்ளதைப் பத்தாண்டுகளாக மாற்றிக் கொடுங்கள் என்றால், இல்லை அது முடியாது. நீங்கள் போட்ட பொழுது ஒரு ஸ்கீம் இருந்தது. இப்பொழுது ஒரு ஸ்கீம் இருக்கின்றது. எனவே மாற்ற முடியாது என்று தெரிவித்தார்கள். உங்கள் செயல்பாடு தவறானது, மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டேன். அப்பொழுது நீங்கள் இந்த பாலிசியை குளோஸ் செய்து கொள்ளுங்கள். மீண்டும் புதிதாக ஒரு பாலிசி எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்கள்.

    நானும் இது உங்களின் தவறு. நீங்கள் மாற்றிக்  கொடுங்கள் என்று கேட்டேன். இதற்காக என்னிடம் பலமுறை நான் ஈ மெயில் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொண்ட பிறகு தோராயமாக ஒரு பதில் தருகிறார்கள். நீங்கள் தற்போது குளோஸ் செய்தால் 11,000 மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கிறார்கள். நான் அப்படி கேட்கவில்லை. 20 ஆண்டுகளை 10 ஆண்டுகளாக மாற்றிக்கொடுங்கள் என்றுதான். ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து முறையான பதில் இல்லை.

    எனவே நான்  தற்போது 20 ஆண்டுகள் போட்டுள்ளதால், 23 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி உள்ளேன். இது 10 ஆண்டுகள் என்றால் எனக்கு   11,000 அல்லது  12,000 தான்  வரும். ஆனால் அவர்கள் இதனை அதிகப்படியாக அவர்களாகவே முடிவு செய்து போட்டுள்ளார்கள். இது குறித்துப் பலமுறை கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்டோம். எனக்கு இதுவரை சரியான தகவல் கிடைக்கப் பெறவில்லை. எனவே வீட்டுக் கடனுக்கு இன்சூரன்ஸ் செலுத்தும் போது மிக கவனமாக இருங்கள். வீட்டுக் கடன் பெறும் பொழுது பணம் கொடுக்கும் நிலையில் அவர்களை –  மேலாளர்களை நாம் கடவுளாக நினைக்கின்றோம். எனவே அவர்கள் அதனை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இஷ்டப்பட்ட இடத்தில் நம்மிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு அவர்களாக முடிவுகளை எடுத்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் நமது தலையில் மிளகாய் அரைப்பதற்குத் தயாராக இருக்கின்றனர்.

    எனவே நண்பர்களே, டோல் ப்ரீ என்னை நான் தொடர்பு கொள்ளும்பொழுது 30 நிமிடத்திற்கு மேலாக ஆகின்றது. ஆனால் அவர்களோ ஒரு நிமிடத்தில் நம்மைத் தொடர்பு கொண்டு விடுகிறார்கள். இதுவும் வருத்தமான விஷயம்தான். எனவே நண்பர்களே வீட்டுக் கடன் வாங்கும்போது பிராப்பர்டி இன்சூரன்ஸ் தொடர்பாகத் தெளிவான தகவல்களைக் கேட்டு கொள்ளுங்கள். எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் அவர்கள் உங்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துத் தர உள்ளார்கள்? அது எத்தனை ஆண்டுகளுக்கு எடுக்கின்றார்கள்? எவ்வளவு பிரீமியம்?

    ஏனென்றால் எனது நண்பர்கள் இருவர் இதே எஸ்பிஐயில் லோன் வாங்கி, கட்டி முடிக்கும் பொழுது பிராப்பர்டி இன்சூரன்ஸ்க்குப் பல ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார்கள் என்று தெரிவித்தார்கள். எனவே உங்களது பணம் உங்களது கையில்தான் இருக்க வேண்டும்.  இதில் கொஞ்சம் ஆர்வம் எடுத்து உங்களைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். இதுவரை நீங்கள் இன்சூரன்ஸ் என்ன போடப்பட்டு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளவில்லை என்றால்  வங்கிக்குச் சென்று உங்களது இன்சூரன்சுக்கான சரியான நகலைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது தொடர்பான தகவலைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

    இந்தப் பதிவை நான் தரும் நிலையிலும் எனக்கு இதுவரை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து முழுமையான பதில் இல்லை. நான் அடுத்த கட்டத்துக்கு இதனைக் கொண்டு சென்று முழுமையான பதில் பெறுவேன் என்பதில் உறுதியாக உள்ளேன். இந்தப் பதிவு முழுவதுமாக விழிப்புணர்வுக்கான பதிவு.

    Share