கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 49

-மேகலா இராமமூர்த்தி
இராமன் வானரசேனையோடு இலங்கைக்குள் வந்துவிட்டதை அறிந்த இராவணன், அடுத்துத் தான் செய்யவேண்டியது என்ன என்பதை முடிவுசெய்வதற்கு மந்திராலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அவர்களின் கருத்துக்களைச் சொல்லுமாறு பணித்தான்.
முதலில் எழுந்தார் இராவணனின் பாட்டனாரான மாலியவான். அவர் இராவணனின் தாய் கேகசியைப் பெற்ற சுமாலியின் உடன்பிறந்தவராவார். இராவணனுக்கு அஞ்சாது அறமுரைக்கும் நல்லோர் மிகச் சிலருள் அவரும் ஒருவர்.
”இராவண! நம் தொல்நகரான இலங்கையை அனுமன் அழித்ததைக் கண்டபின்னும், ஆழியை அவர்கள் அணையிட்டுத் தடுத்துள்ளதைக் கண்டபின்னும், அழிவற்ற ஆற்றல்மிகு கரன் தூடணன் போன்ற பகைவரை (இராமன்) அழித்ததைக் கண்டபின்னும், இத்தனையும் செய்தவர்கள் நம் கண்ணெதிரே வந்துவிட்ட பின்னும் இனிச் சிந்தனை செய்ய என்ன இருக்கின்றது?” என்றான் மாலியவான்.
சுட்டவா கண்டும் தொல்நகர் வேலையைத்
தட்டவா கண்டும் தாஅற்ற தெவ்வரைக்
கட்டவா கண்டும் கண்எதிரே வந்து
விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ. (கம்ப: ஒற்றுக் கேள்விப் படலம் – 6792)
ஏற்கனவே இராமனும் அவனைச் சேர்ந்தோரும் தம் அளப்பரிய போர்த்திறனை நிரூபித்திருப்பதைக் கண்டபின்னரும் அவர்களைப் பகைப்பது நமக்கு வெற்றி தராது; ஆதலால், சீதையை அவர்கள் வசம் ஒப்படைத்துச் சமாதானமாய்ப் போய்விடுவதே நல்லது என்பது மாலியவான் பேச்சின் உட்பொருள்.
அதுகேட்டுச் சினந்து தன் உதட்டைக் கடித்த இராவணன், ”பகைவரை வெல்ல யோசனை சொல்வதற்காகக் கூட்டப்பட்டிருக்கும் இந்த மந்திராலோசனைச் சபை, பகைவரின் புகழ் பாடிக்கொண்டிருப்பது மிகவும் நன்று; பாட்டா! நீயும் வீடணனைப் போலவே இராமனோடு சேர்ந்து இனிது வாழ்வாயாக! இப்போதே செல்!” என்றான் இகழ்ச்சியோடு.
”நன்மை கூறுவது இழிவானது போலும்” என்றெண்ணி வருந்திய மாலியவான் மௌனமானான். அப்போது எழுந்து பேசத்தொடங்கிய சேனைத் தலைவன் பிரகத்தன், இராவணனின் ஆற்றலைப் பலபடப் புகழ்ந்து அவ்வாற்றலை மாலியவான் உணரவில்லை என்று அவனை இடித்துரைத்துக் கொண்டிருந்தபோது, இராமனின் சேனைகளை உளவுபார்க்கச் சென்று அவர்களிடம் சிக்கிப் பின்னர் இராமனால் எச்சரித்து அனுப்பப்பட்ட இராவணனின் ஒற்றர்கள் இருவரும் வந்து சேர்ந்தனர்.
வந்தவர்கள், வானர சேனையை முற்றாய்க் காணவியலாதபடி அவை எங்கும் பரந்திருந்த பெற்றியையும், வருணனை மருட்டிய இராமனின் தோள்வலியையும் அச்சத்தோடு செப்பினர் இராவணனிடம். அடுத்து, இராமன் சொல்லச்சொன்னபடி இலங்கை நகரச்செல்வம் முற்றாய் நின் தம்பியே பெற்றனன் என்பதையும் அவனிடம் உரைத்தனர். அத்தோடு, குரங்கு வேடத்தில் ஒற்றறியச் சென்ற தாங்கள் குரங்குகள் அல்லர் என்று தெரிந்தபின்பும் தங்களைக் கருணையோடு தப்பிப்போக விட்டான் அந்தக் கொற்றவன் (இராமன்); இதுவே தாங்கள் கொண்டுவந்த செய்தி என்றனர்.
ஒற்றர்கள் கூறியதைக் கேட்ட இலங்கை வேந்தன், ”இராமனும் அவன் சேனையும் இலங்கைக்குள் வந்துவிட்ட பின்னர்ப் போருக்குப் புறப்படல் அன்றி நாம் செய்யவேண்டிய வேறு செயல்கள் உளவோ?” எனச் சேனைத் தலைவனிடம் கேட்டான்.
“பகைவர் இருப்பிடத்திற்கே சென்று அவர்களை வென்று திரும்புவதாக முன்பு நாம் உத்தேசித்திருந்தோம்; இப்போது அவர்களே நம் இருப்பிடம் தேடி வந்துவிட்டார்கள் என்பது நமக்கு நன்மையே. நாம் விரும்பியது கிடைக்கப் பெற்றோம்; இது நம் வெற்றியை விடவும் சிறந்தது அன்றோ?” என்றான் சேனைத் தலைவன் பிரகத்தன்.
ஆண்டுச்சென்று அரிகளோடும் மனிதரை அமரில்கொன்று
மீண்டுநம் இருக்கைசேர்தும் என்பது மேற்கொண்டேமால்
ஈண்டுவந்து இறுத்தார் என்னும் ஈதுஅலாது உறுதிஉண்டோ
வேண்டியது எய்தப்பெற்றால் வெற்றியின் விழுமிதுஅன்றோ. (கம்ப: இலங்கைகாண் படலம் – 6814)
பிரகத்தன் சொற்களை மறுத்து, ”அறத்தின் நாயகனே இராமனாய் வடிவெடுத்து வந்துள்ளான்; இராம இலக்குவரை போரில் வெல்லுதல் இயலாத செயல்; ஏற்கனவே இலங்கையில் பல தீய நிமித்தங்கள் தோன்றுகின்றன; இராமதூதனான அனுமன் தாக்கியதால் இலங்கையின் காவல்தெய்வமான இலங்கிணியும் இங்கிருந்து அகன்றுவிட்டாள்; இராவணா! உன்மீதுள்ள அன்பினால் சொல்லுகின்றேன்! சீதையை விட்டுவிட்டால் உனக்குள்ள தீமைகள் யாவும் விலகிவிடும்” என்று இராவணனுக்கு மீண்டும் நல்லறத்தை எடுத்துரைத்தான் மதியிற் சிறந்த மாலியவான்.
பாட்டனின் அறிவுரையை அலட்சியம் செய்த இராவணன், ”மூவுலகமும் எதிர்த்தாலும் சீதையின் பொருட்டுப் போர் புரிவதிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன்” என்றான் உறுதிபட.
இரவுநேர மந்திராலோசனை முடிந்தது. உலகை மூடியிருந்த இரவுவெள்ளம் வடிய மறுநாள் பொழுது விடிந்தது. இலங்கை நகரைக் காணும் விருப்போடு சுவேல மலைமீது ஏறினான் இராமன். சுக்கிரீவனும், வீடணனும் ஏனைய வானரரும் அவனுடன் ஏறினர். அக்காட்சியானது, ஒப்பற்ற இராச சிங்கமொன்று யானைகளும் புலிகளும் சூழக் குன்றேறியது போன்றிருந்தது என்கின்றார் கம்ப நாடர்.
இலங்கையின் தோற்றப் பொலிவைக் கண்டு வியந்த இராமன், அருகிருந்த இளவல் இலக்குவனிடம், ”அடடா! இந்நகரில் சுடர்கின்ற நவமணிகளின் அற்புத ஒளியைக் காண்கையில் அனுமன் இட்ட தீ இன்னமும் இலங்கை நகரில் எரிந்துகொண்டிருப்பது போன்ற தோற்றத்தைத் தருகின்றது; தங்கள் கூந்தலின் ஈரத்தை உலர்த்துவதற்காகப் பவள மாளிகைகளில் நின்றுகொண்டு மகளிர் தம் கூந்தலுக்கு, மாலை வேளையில், போடும் அகிற்புகையானது பவளமேனியனான சிவன் தன் உடலில் யானையின் தோலைப் போர்த்ததுபோல் இருக்கின்றது” என்றான்.
இவ்வாறு சிந்தை கவரும் இலங்கையின் விந்தை அழகை இலக்குவனிடம் இராமன் புகழ்ந்துகொண்டிருந்த போதில் வானர சேனையின் அளவைக் காணும்பொருட்டுச் செம்பொன்னாலான கோபுரம் ஒன்றின் உச்சியை அடைந்தான் இலங்கையர்கோன் இராவணன். அரம்பையரும் எண்ணற்ற அரக்க வீரர்களும் அவனைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர்.
கருவாக நீரினை உட்கொண்ட கருமேகம் எனுமாறு தோரணங்களோடு கூடிய மணிகள் பதித்த கோட்டை வாயில் கோபுரத்தின்மேல் நின்ற இராவணன், நான்மறைகளின் வடிவானவனை, அவற்றின் நாயகனான திருமாலை, அம்மறைகள் முழுதும் அறிய இன்னும் தேடிக்கொண்டிருக்கும் காரணப் பொருளான இராமனை நிமிர்ந்து ஓங்கிய தன் விழிகளால் கண்டான்.
தோரணத்த மணி வாயில்மிசை சூல்
நீர்அணைத்த முகில்ஆம் என நின்றான்
ஆரணத்தை அரியை மறை தேடும்
காரணத்தை நிமிர் கண்கொடு கண்டான். (கம்ப: இராவணன் வானரத் தானைகாண் படலம் – 6876)
இராமனை முதன்முறையாக இராவணன் இப்போதுதான் தன் விழிகளால் காண்கின்றான். கண்டவுடனே அவனுக்குக் கடும் வெகுளி உண்டானது. தன்னருகில் நின்றிருந்த சாரன் எனும் அரக்கனிடம் சுவேல மலைமேல் இராமனோடு நின்றுகொண்டிருப்போரைப் பற்றிக் கூறுமாறு இராவணன் கேட்க, அவ்வண்ணமே இராமனைச் சுற்றிநின்ற இலக்குவன், சுக்கிரீவன், அங்கதன், இலங்கையை எரியூட்டிய அனுமன், நீலன், மூன்றே நாட்களில் கடலின்மீது அணைகட்டிய நளன், கரடிகளுக்கு அரசனான சாம்பன் என்று ஒவ்வொருவர் பற்றியும் விளக்கமாய் எடுத்துரைத்தான் அவர்களை அறிந்திருந்த சாரன்.
மீண்டும் நாம் சுவேல மலைக்குத் தாவிச்சென்று அங்கு நிகழ்ந்தவற்றைக் காண்போம்.
சுவேல மலைமேல் நின்றிருந்த இராமன் வீடணனைப் பார்த்து, ”தொலைவில் கோபுர உச்சியில் நின்றிருப்போர் யாவர் என இயம்புதி!” என்று வினவ, ”அதோ…மலைபோன்ற கோபுரத்தின் மேலேறி தேவருலகத்துத் திலோத்தமை முதலான மங்கையர் கூட்டத்திடையே நிற்கின்றானே அவன்தான் தன் குலத்தில் தோன்றிய சுற்றத்தார் எனும் நாற்றுக்களையெல்லாம் நரகத்தில் நடுவதற்காக நரகத்தைச் சேற்றுழவு செய்து வைத்திருக்கும் இழிசெயல் புரிகின்ற இராவணன்” என்று அண்ணன் இராவணனை அண்ணல் இராமனுக்குச் சுட்டிக் காட்டினான் வீடணன்.
நாறுதன் குலக்கிளை எலாம் நரகத்து நடுவான்
சேறுசெய்து வைத்தான் உம்பர் திலோத்தமை முதலாக்
கூறும் மங்கையர் குழாத்திடைக் கோபுரக் குன்றத்து
ஏறிநின்றவன் புன்தொழில் இராவணன் என்றான். (கம்ப: மகுட பங்கப் படலம் – 6896)
வீரனொருவன் வீரர்குழாம் புடைசூழ நிற்றல் இயல்பு. ஆனால், தன்னை மாவீரன் என்று பறைசாற்றிக் கொள்ளும் இராவணனோ மகளிர்குழாம் புடைசூழ நிற்கின்றான். இதனை வீடணன் சொன்னதன் நோக்கம் அவன் ஒழுக்கத்தின் இழிவை இராமனுக்குப் புலப்படுத்தவே.
வீடணன் இராவணனை அடையாளம் காட்டியதுதான் தாமதம் கடுங்கோபம் கொண்ட சுக்கிரீவன், சுவேல மலையிலிருந்து இராவணன் எனும் மலைமேல் பாய்ந்தான்; அக்காட்சியானது கனி என்று பரிதியை அனுமனின் தாய் அஞ்சனை சொன்னவுடனே அப்பரிதிக்கனியைப் பறிக்கப் பாய்ந்த அனுமனின் செயலை ஒத்திருந்தது என்று கவிநயம் தோன்றக் காட்சிப்படுத்துகின்றார் கவிச்சக்கரவர்த்தி.
திடீரென்று தன்னருகில் தோன்றிய சுக்கிரீவனைப் பார்த்து, ”நீ இங்கு வந்த காரியம் என்ன?” என்று இராவணன் கேட்க, வாயால் பதில்கூறாமல் தன் பலத்தையெல்லாம் திரட்டி அவன் மார்பில் ஓங்கிக் குத்துவிட்டான் சுக்கிரீவன். இராவணன் திருப்பித் தாக்க, இருவருக்கும் கடும்போர் தொடங்கியது. ஒருவரை ஒருவர் கடுமையாய்த் தாக்கிக்கொண்டு கட்டிப் புரண்டு அகழியில் வீழ்ந்தனர்.
இதற்கிடையில் எதிர்பாராவண்ணம் சுவேல மலையிலிருந்து பாய்ந்துசென்ற சுக்கிரீவன் நெடுநேரமாகியும் வரக்காணாது உள்ளம் நைந்தான் தயரத மைந்தன் இராமன். எதிர்முனையிலோ வெற்றி தோல்வி காணவியலாத வகையில் இராவணனும் சுக்கிரீவனும் கடும்போர் புரிந்துகொண்டிருந்தனர். மேலும் போரை வளர்த்தவிரும்பாத சுக்கிரீவன், இராவணனின் மணிமுடியிலிருந்த மாணிக்க மணிகளை அவன் நாணுமாறு தன் வலிமையால் பிடுங்கிக்கொண்டு இராமனை வந்தடைந்தான்.
எனினும், சீதையைச் சிறைவைத்த இராவணனைக் கொல்லாமல் மீண்டது அவனுக்கு வருத்தமளிக்கவே செய்தது. அதனை வெளிப்படுத்தும் விதமாய், ”அனுமன் தன் வால் வலிமை காட்டி இலங்கையை எரியூட்டி மீண்டான்; நானோ இராவணனை அழித்தொழிக்காது என் கால் வலிமை காட்டி விரைந்து உன்னிடம் மீண்டு வந்திருக்கின்றேன்” என்றான் இராமனிடம் வேதனையோடு.
அதனை மறுத்த வீடணன், இராவணனின் தலைமிசை உள்ள மகுடத்தினும் உயர்ந்தவை அதில் பதிக்கப்பெற்ற மணிகள்; அம்மணிகளையே பறித்துக்கொண்டு வந்த நீ, இராவணனின் புகழையே பறித்து வந்தவனாவாய்! இதனினும் சிறந்த வீரச்செயலுண்டோ?” என்று பாராட்ட, இராமனும் அதனை ஆமோதித்துச் சுக்கிரீவனைப் பாராட்டினான்.
மணிமுடியில் மணிகளை இழந்த இராவணன் அளவற்ற அவமானத்தோடு கோபுர உச்சியை விட்டிறங்கித் தன் அரண்மனைக்குச் சென்று பஞ்சணையில் படுத்தான். அப்போது சார்த்தூலன் எனும் ஒற்றன் இராவணனை வந்து சந்தித்தான். அவனிடம், ”நீ வானர சேனை குறித்து ஒற்றறிந்து வந்தவற்றை ஒளிக்காமல் கூறுவாயாக” என்று இராவணன் ஆணையிட,
”ஐய! பதினேழு வெள்ளம் சேனையோடு மாருதி மேற்குவாசல் மதிலைச் சூழ்ந்து முற்றுகையிட்டுள்ளான்; கிட்கிந்தை இளவரசன் அங்கதன், பதினேழு வெள்ளம் சேனையோடு தெற்குத் திசை வாயிலில் நிற்கின்றான்; நீலன் என்பவன் பதினேழு வெள்ளம் சேனையோடு கீழ்த்திசை வாயிலருகே உள்ளான்; இராமன் தன் தம்பியோடும் சுக்கிரீவனோடும் வடக்கு வாயிலில் நிற்கின்றான். உன் தம்பியாகிய வீடணனை வாயில்கள்தோறும் சென்று நிலவரங்களை அறிந்து அவ்வப்போது தனக்குத் தெரிவிக்கச் சொல்லியிருக்கின்றான். மொத்தச் சேனைகட்கும் காய்கனிகளை உணவாய் அளிக்க இரண்டு வெள்ளம் சேனை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது” என்றான் சார்த்தூலன்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (குறள்: 517)
என்ற வள்ளுவத்திற்கிணங்க வானர சேனையில் அவரவர்க்கு ஏற்றவகையில் அவரவர்க்கான பொறுப்புகள் தரப்பட்டிருந்தன என்பதை கம்பநாடர் நமக்கு அறியத்தருகின்றார்.
சார்த்தூலன் சொன்னதைக் கேட்ட இராவணன், ”ஊழிக்காலத்தே வடவைத் தீ பொங்கியெழுகையில் உலகோர் அழிவதுபோன்ற அழிவை நம் பகைவர்படை நாளை சந்திப்பதை நீ போர்க்களத்தில் பார்ப்பாய்!” என்றான் பற்களைக் கடித்தபடி!
மீண்டும் மந்திராலோசனை சபையைக் கூட்டிய இராவணன், குரக்குச் சேனை இலங்கையின் நாற்புற வாயில்களையும் வளைத்துள்ளதால் இனி நாம் மேற்செய்ய வேண்டியது என்ன என்று அமைச்சர்களோடு ஆலோசித்தான்.
நிகும்பன் எனும் அரக்கன் எழுந்து, ”மன்னா! எழுபது வெள்ளம் எனக் கணக்கிடப்பட்ட வானரப் படைகள் நம் இலங்கை மதில்களை வளைத்தது குறித்து மனம் உளைந்துள்ளாய் போலும்! நமது பகைவர் சூடிய உழிஞைப் பூவை அடியோடு அழித்தற்குக் காத்திருக்கும் நொச்சியை உச்சியில் சூடிய கடல்போன்ற உம் இலங்கைப் படை ஆயிரம் வெள்ளம் அளவினது அல்லவோ?” என்றான் கம்பீரமாக.
எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எயிலை முற்றும்
தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்
அழுவநீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே
உழிஞையைத் துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன்ஊர். (கம்ப: அணிவகுப்புப் படலம் – 6957)
எயிலை முற்றுகையிடும் வீரர்கள் உழிஞைப் பூவைச் சூடுவதும், எயில் காப்போர் நொச்சிப் பூவைச் சூடுவதும் பண்டைப் போர் மரபாகும். [வெள்ளம் என்பது ஐம்பத்தேழு (ஸ்)தானங்களையுடைய பேரெண் என்பர்.]
தொடர்ந்து பேசிய நிகும்பன், “மன்னவா! வலிய ஆயுதங்களை ஏந்தி நம்மவர் போர் புரியும்போது தேவர்களே தோற்றோடுவர்; இந்தக் குரங்குகளோ ஆயுதங்கள் பிடித்தலை அறியாது வெறுங்கையில் போர்புரிவை; இவை நம்மை என்ன செய்துவிடும்?” என்றான் ஏளனமாக.
நிகும்பனின் வாய்வீச்சைக் கேட்ட இராவணனின் தாய்மாமனான மாலி என்பவன், ”ஐயகோ! துயரத்தைத் தரக்கூடிய காமநோய் குலத்தையே அடி வேரோடு வீழ்த்துகின்றதே” என்று வருந்தியபடி, ”இலங்கையை எரியூட்டிய அனுமனுக்குக் கையில் சக்கரம் இருந்ததோ? இராவணன் மகுடத்து மணிகளைப் பறித்துச் சென்ற சுக்கிரீவனிடம் சூலமும் வேலும் உண்டோ? ஆதலால் படைக்கலங்கள் பிடிக்கத் தெரியாதவர்கள் என்று வானரரை இகழ்வதை விடுத்து, சீதையை இராமனிடம் ஒப்படைத்து வானரப் படையிடம் நாம் சரணடைவது நமக்கு நல்லது” என்றான் இராவணனிடம்.
இராவணன் அவனைக் கடுமையாக நிந்திக்கவே அவன் பேச்சொழிந்தான்.
அதனைத் தொடர்ந்து, ”அரக்கர் தானைத் தலைவனே பிரகத்தா! இருநூறு வெள்ளம் சேனையோடு கோட்டையின் கீழ்த்திசை வாயிலில் நீ நிற்பாயாக! எமனின் செருக்கடக்கிய மகோதரா! நீ இருநூறு வெள்ளம் சேனையோடு நம் தென்திசை வாயிலில் நிற்பாயாக! இந்திரனின் பகைஞனான இந்திரசித்தே! அனுமனின் ஆற்றல் அறிந்தவனான நீ, இருநூறு வெள்ளம் சேனையோடு மேற்றிசை வாயிலுக்குச் செல்! (அங்குதான் அனுமன் நிறுத்தப்பட்டிருக்கின்றான்!) தேவரை வென்ற விருபாக்கா! குரக்குகளோடு போர்புரிவது உனக்குப் பெருமை தராது; ஆதலால், நீ உன் சேனைகளோடு இலங்கை நகரைக் காவல் புரிவாயாக! இருநூறு வெள்ளம் சேனையோடு இராம இலக்குவர் போருக்குக் காத்திருக்கும் வடக்குக் கோட்டை வாயிலைக் காக்கும் பொறுப்பை நானே மேற்கொள்வேன்!” என்று தன் சேனைகளை அணிபிரித்துப் போருக்கு ஆயத்தம் செய்தான் இராவணன்.
இராம இலக்குவர் நிற்கும் பகுதிக்கு வேறு யாரையாவது அனுப்பிவிட்டுத் தான் தப்பித்துக்கொள்ள நினைக்காமல் அவர்களைத் தானே எதிர்க்க முடிவுசெய்த இராவணனின் வீரவுணர்ச்சி பாராட்டத்தக்கது; அதுவே தலைவனுக்குச் சிறப்பும் ஆகும்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. இராமன் தன் சேனையோடு போருக்குத் தயாராகி இராவணன் வரவை எதிர்பார்த்து வடக்கு வாயிலை முற்றுகையிட்டிருந்தான். நேரம் சென்றுகொண்டே இருந்தது; ஆனால், இராவணன் வரவில்லை.
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.