கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 48

0

-மேகலா இராமமூர்த்தி

கடலைக் கடந்துசெல்வதற்கு வழிகாட்டுமாறு வருணனை வேண்டி ஏழு நாட்கள் மந்திரம் செபித்த பின்பும் வருணன் வாராதது கண்டு வெகுண்ட இராமன், சரங்களை மாரியாய்க் கடலின்மீது எய்யத் தொடங்கினான்.

காலனுக்கு இணையாக விரையும் அவ் அம்புகள் கடல் முழுவதையும் கவ்விக் கொண்டதால் பெரிய நிலமாகிய பூமித்தாய், தான் உடுத்திருந்த நீலவானொத்த துகிலினை நீக்கிப் பூ வேலைப்பாடுகளோடு கூடிய செந்நிறமான கூறை ஆடையைத் தன் உடலில் சுற்றிக்கொண்டவள் போலப் பொலிவோடு காணப்பட்டாள்.

காலவான் கடுங் கணை சுற்றும் கவ்வலால்
நீலவான் துகிலினை நீக்கிப் பூ நிறக்
கோலவான் களிநெடுங் கூறை சுற்றினாள்
போலமா நிலமகள் பொலிந்து தோன்றினாள்.
(கம்ப: வருணனை வழிவேண்டு படலம் – 6643)

திருமணத்திற்கு வாங்கப்படும் கூறைச் சேலை இப்போதும் செந்நிறத்தில் இருப்பது இப்பாடலோடு இணைத்துப் பார்த்து இன்புறத்தக்கது.

அம்பு மழை பொழிந்த பின்னரும், அதன்விளைவாய்க் கடலில் ஏராளமான உயிர்கள் அழிந்தபின்னருங்கூட வருணன் வரவில்லை. எனவே, பிரமதேவனின் கணையை (பிரம்மாஸ்திரம்) எடுத்து அம்பில் பூட்டினான் இராமன்.

அதைக் கவனித்த தேவர்கள், கருணை நிரம்பிய இராமன் கோபம்கொண்டு பிரமன் கணையைத் தொடுக்கும் தருணத்திலும் இந்த வருணன் வாராததைக் காண்கையில், இராமனோடு மாறுபாடு கொண்டவர்கள் அரக்கரே அல்லர் என்று கூறித் துன்பமடைந்தனர். இராமனை உணர்ந்துகொள்ளாத வருணனே உண்மையான அரக்கன் எனும் பொருள் இதனுள் தொக்கி நிற்கின்றது.

பிரமன் கணையை இராமன் தொடுத்ததினால் எங்கும் புகை மண்டிற்று; அதனால், வரும் வழியை அறிய முடியாதவனாய்த் தடுமாறியபடி அழுத கண்களோடு, “அண்ணலே! நீ என்னை அழைத்தபோது இந்தக் கடலின் முடிவில் நான் இருந்தமையால் உன் அழைப்பை அறிய முடியாதவனானேன்” என்று உரைத்தபடி இராம பாணங்கள் உமிழ்ந்த தீயினால் வெந்த உடலோடும் நொந்த மனத்தோடும் இராமன் எதிரில் வந்து தோன்றினான் கடலரசன் வருணன்.

இராமனைத் தொழுத அவன், பரவியிருக்கும் இருளைப் போக்குகின்ற தெய்வத்தன்மை வாய்ந்த சூரியனையும் பழிக்கும் ஒளிமிக்க மாலையொன்றைத் தனது பெரிய கரத்தால் இராமனுக்கு முன்பு காணிக்கையாக வைத்து, ”சிறியவர்கள் அறியாமையால் தீமை செய்தால் அத்தீமையைக் பொறுத்தருள்வது பெரியவர்களின் செய்கையாகும். ஆயிரம் திருநாமங்களை உடைய தலைவ! அடியேன் உனக்கு அடைக்கலம்!” என்று இராமனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.

பாய்இருள் சீய்க்கும் தெய்வப் பருதியைப் பழிக்கும் மாலை
மாஇருங் கரத்தால் மண்மேல் அடியுறையாக வைத்து
தீயன சிறியோர் செய்தால் பொறுப்பது பெரியோர் செய்கை
ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான்.
(கம்ப: வருணனை வழிவேண்டு படலம் – 6661)

சினந்தணிந்த இராமன் வருணனை நோக்கி, ”யான் உன்னை இரந்து வேண்டியபோது வாராத நீ, சீற்றங்கொண்டு கணை துரந்த பின்பு வந்த காரணமென்ன உரைப்பாய்!” என்று கேட்கவே, ”ஐயனே! உன்மீது ஆணையாகச் சொல்கின்றேன்! சீதைக்கு நேர்ந்த துயர் ஒன்றும் நான் அறிந்திலேன்; ஏனெனில், நான் இப்போது தேவலோகத்திலிருந்து வரவில்லை; ஏழாவது கடலில் சுறாமீன்களுக்குள் நிகழ்ந்த சண்டையை விலக்கப் போயிருந்தேன். அதனால் இடையில் நிகழ்ந்தவை எவற்றையும் அறிந்தேனில்லை” என்றான் வருணன் வருத்தத்தோடு.

அவன் நிலைகண்டு இரங்கிய இராமன், அது போகட்டும்! இனி நடக்கவேண்டியதைப் பார்ப்போம்! நான் பிரமனின் கணையை வில்லில் பூட்டிவிட்டேன் (வருணன்மீது எய்வதற்காகப் பூட்டப்பட்ட கணையது); அது வீணாதல் கூடாது; அதற்கு இலக்கு யாதென உரை!” என்றான்.

”அண்ணலே! மருகாந்தாரம் எனும் தீவு இக்கடல்நடுவே உள்ளது. அங்குள்ள அவுணர்கள் கொடியவர்கள்; உலகையே அழித்துப் புசிக்கக் கூடியவர்கள்; எனக்கும் தீங்குசெய்து வருகின்றனர்; அந்தக் கொடியவர்கள்மேல் உன் பாணத்தைச் செலுத்து” என்று வருணன் புகலவே, அவ்வாறே பிரமன் கணையை அவர்களை நோக்கிப் போக்கினான் இராமன். அவர்களை அழித்துவிட்டு இராமனிடம் மீண்டுவந்தது அப் பகழி.

”வருண! அரக்கர்கள் இந்தக் கடலரண் இருக்கும் துணிச்சலில் மகிழ்ச்சிக் கூத்தாடி வருகின்றார்கள்; அவர்களின் மகிழ்ச்சிக்கு முடிவுகட்டும் வகையில் நாங்கள் கடல்கடந்து இலங்கைசென்று சேர வேண்டும்; அதற்கொரு வழிகூறு” என்று கடலரசனிடம் வினவினான் கடல்வண்ணன் இராமன்.

”இந்தக் கடலின் ஆழமும் அகலமும் இதன் அரசனான என்னாலேயே அறியவொண்ணாதவை; ஆதலால், இதனை வற்றச்செய்து கடக்கலாம் என எண்ணினால் அதற்கு நெடுங்காலம் பிடிக்கும்; உம் வீரர்களும் தளர்வுறுவர்.

அதற்கு மாறாகக் கடல்நீரைக் கல்போல் கடினமாக்கி அதன்மீது நடந்துசெல்லலாம் என்றாலோ கடலிலுள்ள எண்ணற்ற உயிர்கள் மடியும்! ஆதலால் எந்தையே! என்னிடம் இட்டது எதுவும் கீழே ஒழுகாவண்ணம் (வீழாமல்) எல்லையில்லாத காலம் நான் ஏந்திக்கொண்டிருப்பேன்; என் தலையின் மீதாக அணை ஒன்றை (சேது) இயற்றி அதன்வழியே இனிதாகச் செல்வாயாக!” என எவ்வுயிர்க்கும் தீங்கு பயவாத யோசனையை வழங்கினான் வருணன்.

கல்லென வலித்து நிற்பின் கணக்குஇலா உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உலந்துவீயும் இட்டதுஒன்று ஒழுகாவண்ணம்
எல்லைஇல் காலம்எல்லாம் ஏந்துவென் இனிதின்எந்தாய்
செல்லுதி சேதுஎன்று ஒன்றுஇயற்றி என்சிரத்தின் மேலாய்.
(கம்ப: வருணனை வழிவேண்டு படலம் – 6672)

வருணனின் யோசனையை ஏற்றுக்கொண்ட இராமன், ”குன்றுகளைக் கடலின்மீது அடுக்கி அணை கட்டுவீர்” என்று வானரர்களைப் பணித்தான்; தன் பணி முடிந்ததால் வருணன் இராமனை வணங்கி விடைபெற்றான்.

யாரிடம் அணைகட்டும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது குறித்துக் குரக்கின அரசனான சுக்கிரீவன், வீடணன், அனுமன், அங்கதன், சாம்பன் முதலிய அறிஞர்களோடு ஆலோசித்து நளன் எனும் வானரனிடம் அப்பொறுப்பை ஒப்படைப்பது என்று முடிவுசெய்து அவனை அழைத்தான். நளன் என்பவன் தேவதச்சனான விசுவகர்மாவின் மகன்.

சுக்கிரீவனின் அழைப்பை ஏற்று அவனை நாடிவந்த நளனிடம் அணைகட்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு சுக்கிரீவன் பணிக்கவே, நளனும் அதற்கு உடன்பட்டு, ”அரசே! செறிகடலில் சிறப்புற அணைகட்டித் தருவேன்; கடலில் அடுக்குதற்கு மலைகளைக் கொண்டுவருமாறு வானரர்களை ஏவுக!” என்றான். உடனே வானர சேனை அப்பணியில் இறங்கியது.

பேர்த்தன மலை சில பேர்க்கப் பேர்க்க நின்று
ஈர்த்தன சில சில சென்னி ஏந்தின
தூர்த்தன சில சில தூர்க்கத் தூர்க்க நின்று
ஆர்த்தன சில சில ஆடிப் பாடின.
(கம்ப: சேதுபந்தனப் படலம் – 6679)

அவ் வானரங்களில்மலைகளைப் பேர்த்தன சில; பேர்த்தனவற்றை இழுத்தன சில; அம்மலைகளைத் தலைகளில் ஏந்தின சில; அம்மலைகளைக் கொண்டு கடலைத் தூர்த்தன சில; அவ்வாறு தூர்க்கத் தூர்க்க அது கண்டு ஆரவாரம் செய்தன சில; அம்மகிழ்ச்சியால் ஆடிப்பாடின சில.

மேகத்தை அளாவி நிற்கும் மலைகளைப் பெயர்த்து வானரங்கள் கடலில் எறியவே அவற்றைத் தன் மந்திர வித்தையால் நளன் ஒருவனே தாங்கினான். அச்செயலானது தஞ்சமென வருவோரைத் திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப வள்ளல் தாங்கும் தன்மைபோல் இருந்தது என்கின்றார் சடையர்பால் குன்றிடா அன்பும் குறைந்திடா நன்றியறிதலும் கொண்டவரான கம்பர்.

மஞ்சினில் திகழ்தரும் மலையை மாக் குரங்கு
எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே நளன்
விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில்
தஞ்சம் என்றோர்களைத் தாங்கும் தன்மைபோல்.
(கம்ப: சேதுபந்தனப் படலம் – 6682)

பெரு மலைகளையெல்லாம் அவற்றிலே சுற்றியிருந்த கொடிகளோடும் அவற்றில் வசித்த விலங்குகளோடும் பெயர்த்தெடுத்து வந்த வானரர்கள், அணை கட்ட அவற்றை இடையறாது வழங்கிக்கொண்டே இருந்தமையால் மூன்றே பகலில், திரிகூடமலையில் கட்டப்பட்டிருந்த, இலங்கை நகரை அடைய அணை கட்டிமுடிக்கப்பட்டது. அணை தயாரானது கண்டு மகிழ்ச்சிப் பெருக்கால் வானரர்கள் எழுப்பிய ஆரவாரம் வானைப் பிளந்தது.

அணை ஐந்து நாட்களில் கட்டி முடிக்கப்பட்டதாக வான்மீகி முனிவர் தம் காவியத்தில் குறிப்பிட, கம்பர் அது மூன்று நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்.

அணையின் தோற்றமானது ஆதிசேடன் கிடந்தது போலவும், இலங்கையாகிய பெண் தன் கைகளை நீட்டி இராமனை அன்போடு அழைப்பது போலவும், ஆகாய கங்கையே ஆறாய்க் கிடப்பது போலவும், இந்திர வில் போலவும் காட்சியளித்தது.

அணை கட்டிமுடிக்கப்பட்ட பின்பு சுக்கிரீவன் வீடணன் மற்றுமுள்ள வானரர்கள் இராமனிடம் சென்று நூறு யோசனை நீளமும் பத்து யோசனை அகலமும் கொண்ட அணை கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அச்செய்தியறிந்து நனிமகிழ்ந்த இராமன், வானரர்களை அன்போடு தழுவிக் கொண்டான். அவ் அணையைத் தன் கண்களால் காணவிரும்பி அணையை நெருங்கிய அவன், தன் ஆவியனைய சீதையையே கண்டதுபோன்ற மனநிலை கொண்டான்.

அடுத்து, அணையின்மீது வானரப் படையின் பயணம் இலங்கையை நோக்கித் தொடங்கியது. அணிவகுப்பின் முன்பகுதியில் அரக்கர் மன்னனாக முடிசூட்டப்பெற்ற வீடணன் செல்ல, பின்பகுதியில் அறநூல்களை ஆய்ந்துகற்ற அனுமன் வர, இளவல் இலக்குவன் பின்தொடரக் கருநிறக் களிறென இராமன் நடந்துசென்றான்.

நெற்றியின் அரக்கர்பதி செல்ல நிறைநல் நூல்
கற்றுஉணரும் மாருதி கடைக்குழை வரத் தன்
வெற்றிபுனை தம்பிஒரு பின்புசெல வீரப்
பொன்திரள் புயக் கருநிறக் களிறு போனான்.
(கம்ப: ஒற்றுக் கேள்விப் படலம் – 6750)

கடலைக் கடந்த வானரர் படை இராம இலக்குவரோடு சுவேல மலையில் தங்கிற்று; அங்கே அனைவர்க்கும் பாடிவீடமைத்துக் கொடுத்தான் நளன். 

அவ்வேளையில் வானர சேனையின் அளவு, திறன் முதலியவற்றை அறிந்துவருவதற்காக இரு அரக்க ஒற்றர்களை ஏவினான் இராவணன். அவ் ஒற்றர்களும் அரக்க வடிவில் சென்றால் ஆபத்து என்பதனை உணர்ந்து வானர வடிவத்தில் பாடிவீடுகளைச் சுற்றிவந்தபோதில் ஆராய்ச்சிவல்லானான வீடணனால் அடையாளம் காணப்பட்டனர். அவர்களைக் கட்டியிழுத்துச் சென்று இராமன் முன்பாக நிறுத்தி ”இவர்கள் இருவரும் அரக்கரினத்தைச் சேர்ந்தவர்கள்; இராவணனின் ஒற்றர்கள்” என்று அம்பலப்படுத்தினான் வீடணன். 

அவ் ஒற்றர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் தாங்கள் வானரர்களே என்றும் வீடணனே வஞ்சகன் என்றும் வாதிட்டனர். வீடணன் மந்திரமொன்றைச் செபித்து அவர்களைத் தம் உண்மை உருவுக்குக் கொண்டுவந்த பின்னர்தான் அவர்கள் தாம் இராவணனின் ஒற்றர்கள் என்பதை ஒத்துக்கொண்டனர்.

தம்முடைய ஒற்றறியும் செயலில் தோல்வி கண்டாலும், எதிரிகள் ஐயங்கொள்ளாத உருவொடும், பார்த்தவரின் கண்களுக்கு அஞ்சாமலும், எவ்விடத்திலும் மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமலும் இருப்பவனே ஒற்றன் எனும் வள்ளுவத்துக்கு ஏற்ப நடந்துகொண்ட இவ் ஒற்றர்களின் துணிச்சலான முயற்சி பாராட்டத்தக்கதே.

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
(குறள்: 585)

அந்த ஒற்றர்களை நோக்கிய இராமன், ”எங்கள் படையிருக்கும் இடங்களையெல்லாம் நீங்கள் சுற்றிப் பார்த்துள்ளீர்கள்; எனினும், நான் உங்களை ஆபத்தின்றி இங்கிருந்து போகவிடுகின்றேன். உங்கள் மன்னன் இராவணனிடம் சென்று, ”குறைவிலா தவம்புரிந்து வருகின்ற தையலான சீதை தனிமைச் சிறையில் வாடுமாறு நினைக்கத் தகாத வஞ்சனை புரிந்த அவனுடைய செல்வத்தையெல்லாம் அவன் தம்பியாகிய வீடணன் அடையச் செய்து, இராவணனையும் அவன் சுற்றத்தாரையும் எரிநரகம் எனப்படும் தப்பிவியலாச் சிறையில் வைப்பேன் என்று விளம்புவீர்” என்றான்.  

தாழ்வுஇலாத் தவத்துஓர் தையல் தனித்துஒரு சிறையில் தங்க
சூழ்வுஇலா வஞ்சம்சூழ்ந்த தன்னைத்தன் சுற்றத்தோடும்
வாழ்வுஎலாம் தம்பிகொள்ள வயங்குஎரி நரகம் என்னும்
வீழ்வுஇலாச் சிறையின் வைப்பென் என்பதும் விளம்புவீரால்.
(கம்ப: ஒற்றுக் கேள்விப் படலம் – 6782)

”நல்லவேளை உயிரோடு தப்பினோம்” என்று எண்ணிக்கொண்டு அங்கிருந்து அகன்றுசென்றனர் இராவணனின் ஒற்றர்கள்.

மறுபுறத்தில், அந்த இரவுப்பொழுதில், இலங்கை மன்னனான இராவணன் ஒலிக்கின்ற கடலின் அரசனான வருணன் இராமனிடம் அஞ்சிய அச்சத்தையும்; இராமனின் சேனைகள் வலிய கடலில் அணைகட்டிய திறத்தையும், அவ்வணை வழியே இராமன் இலங்கைக்கு வந்துள்ளமையையும் மனத்துள் எண்ணிச் சிந்தித்தவனாய்த் தனித்திருந்தான்.   

மீண்டும் மந்திராலோசனை செய்யவிரும்பி அறிஞர்களை அழைத்தான். அவர்கள் வந்துசேர்ந்ததும், ”மனிதர் இப்போது நமக்கு அணியர் (அண்மையர்) ஆயினர்; இனி நாம் துணிந்து செய்யவேண்டிய காரியம் யாது?” என்று அவர்களை வினவினான்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *