நேற்று இரவு சதாப்தி விரைவு ரயிலில் பயணம். கோவையிலிருந்து சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தோம். C3 பெட்டியில் எங்கள் இருக்கை. C4 பெட்டியில் சிரிப்பானந்தா இருந்தார். இருவரும் சற்றே எழுந்து வெளியே வந்தபோது எதிர்பாராமல் சந்தித்தோம். அதே வேகத்தில், ஓடும் ரயிலிலேயே அவருடன் ஒரு நேர்காணல்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.