-மேகலா இராமமூர்த்தி

பண்டைத் தமிழரின் வாழ்வையும் வீரத்தையும் அறிந்துகொள்ள நமக்குப் பெருந்துணை புரிவது சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான புறநானூறு. அதில் தமிழரின் வாழ்வியலைப் பேசும் பாடல்கள் பல உள. எனினும், தமிழன் என்பவன் யார்? அவனுக்கான அடையாளம் என்ன? வழிபாட்டு முறை என்ன? என்பதை விளக்க மாங்குடி கிழார் என்ற புலவர் இயற்றிய புறநானூற்றின் 335ஆவது பாடலையே பலரும் எடுத்தாளுவது வழக்கம். மாங்குடி கிழாரே தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனால் புறநானூறு 72இல் சிறப்பிக்கப்பட்டவரும், அவன்மீது மதுரைக் காஞ்சி பாடியவருமான மாங்குடி மருதனார் ஆவார்.

மாங்குடியாரின் 335ஆவது புறநானூற்றுப் பாடல் தொல்தமிழரின் வாழ்வியலை அறிந்துகொள்ள எந்த அளவிற்கு உதவுகின்றது என்பதை ஆராய்வோம்.

அந்தப் பாடல்…

அடலருந் துப்பின் .. .. .. ..
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
                                 

இந்நான் கல்லது உணாவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
                      
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
(புறம்: 335 – மாங்குடி கிழார்) 

அடலருந் துப்பின் (வெல்லுதற்கரிய வலிமையுடைய) என்று தொடங்குகின்ற இப்பாடலில், அதனையடுத்துள்ள இரண்டு சொற்கள் சிதைந்துள்ளன. இரண்டாம் அடியிலிருந்துதான் பாடல் முழுமையாய்க் கிடைக்கின்றது. 

”குரவு, தளவு, குருந்து, முல்லை ஆகிய நான்கு மலர்களைத் தவிர வேறு மலர்கள் இல்லை; கரிய அடிப்பகுதியை உடைய வரகு, பெரிய கதிரினை உடைய தினை, சிறுகொடியில் விளையும் எள், புள்ளிகள் நிறைந்த அவரை இவை நான்கினைத் தவிர உணவுப்பொருட்களும் இல்லை; துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற இந்த நான்கல்லாத குடிகள் இல்லை; மனம் பொருந்தாப்  பகைவரின் முன்னே அஞ்சாமல் நின்று அவர் படையெடுப்பைத் தடுத்து, விளங்குகின்ற உயர்ந்த கோட்டினையுடைய யானைகளைக் கொன்றுத் தாமும் விழுப்புண்பட்டு வீழ்ந்து இறந்தவர்களின் நடுகல்லைத் தவிர யாம் நெல்தூவி வழிபடுவதற்கேற்ற வேறு கடவுளும் இல்லை.” என்பது இப்பாடலின் பொருள்.

இந்தப் பாடலில் பயின்றுவந்துள்ள மலர்கள், உணவுப்பொருட்கள் இவற்றை நோக்கினாலே புரியும் இவை முல்லைநிலத்தைச் சேர்ந்த மலர்களும் ஆங்குவிளையும் உணவுப் பொருட்களும் என்பது. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு அல்லாது வேறு குடியுமில்லை என்று சொல்லப்பட்டிருப்பதிலிருந்து குறிப்பிடப்பட்ட அந்த முல்லைநிலப் பகுதியில் இந்த நான்கு குடியினர் மட்டுமே வாழ்ந்திருந்தனர் என்பதை நாம் உய்த்துணரமுடிகின்றது.

இந்த நான்கு குடியினரும் போருக்குச் சென்று வெல்வதையும், வெல்ல இயலாதுபோயின் விழுப்புண்பட்டு வீரமரணம் அடைவதையும், போரோடு ஒட்டிய நிகழ்வுகளில் பங்கேற்பதையும் பெருமையாய்க் கருதும் மறக்குடியினர்; அதனால்தான் போரில் இறந்துபடும் தம்மினத்து வீரர்களின் நினைவாய் நடுகல் எழுப்பி, அதில் இறந்தோரின் பீடும் பெயரும் பொறித்து அக்கல்லை வழிபட்டிருக்கின்றனர்; வேறு தெய்வங்களைத் தாம் நெல் உகுத்து வழிபடுவதில்லை என்கின்றனர். (நெல் உகுத்தல் என்பது நெற்பொரியை உகுத்து வழிபடுவதைக் குறிக்கின்றது.)

இந்தப் பாடலின் திணை: போர் வெற்றியைக் கொண்டாடும் வாகைத் திணை.

துறை: மூதின் முல்லை. அதாவது மறக்குடியில் பிறந்த ஆடவரேயன்றி அக்குடியில் பிறந்த மகளிரும் மறத்தில் சிறந்துவிளங்குவதைப் பேசுவது இந்தத் துறை.

இவையனைத்தையும் தொகுத்துப் பார்க்கையில், இப்பாடல் முல்லைநிலத்துச் சிற்றூர் ஒன்றில் வாழ்ந்துவந்த துடியன், பாணன், பறையன், கடம்பன் எனும் நான்கு மறக்குடியினரின் வாழ்வியலைப் பேசுகின்ற பாடல் என்பது தெளிவாய்ப் புலப்படுகின்றது. இவர்களின் குரலாக ’மாங்குடி கிழார்’ இப்பாடலைப் பதிவுசெய்திருக்கின்றார். 

இந்தப் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல் அன்று தமிழ்நிலத்தில் வாழ்ந்தவர்கள் துடியன், பாணன், பறையன், கடம்பன் எனும் நான்கு குடியினரே; நடுகல் வழிபாடு ஒன்றே தமிழர் வழிபாடு; நெல் உகுத்துப் பிற தெய்வங்களைப் பரவுவது தமிழர் வழக்கமில்லை என்ற முடிவுக்கு வருவது அறிவார்ந்த செயலா? 

சங்க இலக்கியம் என்று சொல்லப்படுவதைத் ’திணை இலக்கியம்’ என்று குறிப்பிடுவதே பொருத்தமானது என்பார் தமிழண்ணல். ஏனெனில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனத் திணை வகுத்து அவற்றுக்கேற்ற துறைகளும் வகுத்து அவ் இலக்கியம் நமக்குப் பாடல்களை அளித்துள்ளது. 

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவர்களும், முல்லை நிலத்தவராக மேற்கண்ட பாடலில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் நான்கு குடியினரும், அவர்களைப் போலவே முல்லைநிலத்தில் வாழ்ந்த ஆயர்களும், மருத நிலத்தவரான உழவர்களும், நெய்தல் நிலத்தவரான பரதவரும், ஆறலை கள்வர்களாகப் பாலைவழிகளில் திரிந்து கொள்ளை கொலைகளில் ஈடுபட்ட எயினரும் தமிழரே.

குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த காந்தளும், குறிஞ்சியும், வேங்கையும், முல்லை நிலத்தில் மலர்ந்த குரவும், தளவும், குருந்தும், முல்லையும், கொன்றையும், மருத நிலத்தில் தழைத்த தாமரையும், குவளையும், கழுநீரும், நெய்தல் நிலத்தைச் சார்ந்த தாழையும், புன்னையும் இன்னபிறவும் தமிழ்நிலத்து மலர்களே! [தமிழ்நாட்டு மலராக நாம் குறிஞ்சிநிலத்துச் செங்காந்தள் மலரைத்தான் தெரிவுசெய்திருக்கின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.]

குறிஞ்சிநிலத்துச் சேயோனும், முல்லைநிலத்து மாயோனும், மருதநிலத்தவர் வேந்தன் என்று கொண்டாடிய இந்திரனும், நெய்தல் நிலமக்கள் சினைச் சுறாவின் கொம்பினை நட்டு வழிபட்ட வருணனும் தமிழ்த் தெய்வங்களே! 

“சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்…”
(பட்டினப்பாலை: 86-87)

இத்தெய்வங்களல்லாது, காடுகிழாள், கானமர் செல்வி, ஐயை என்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட வெற்றித் தெய்வமான கொற்றவையும் மறக்குடியினரால் வழிபடப்பட்டிருக்கின்றாள். இதனைத் தொல்காப்பியத்தின் ’கொற்றவை நிலை’ விளக்குகின்றது. சிலப்பதிகார ’வேட்டுவ வரி’ கொற்றவை வழிபாட்டை விரிவாய்ப் பேசுகின்றது.

ஐயை கோட்டத்தில் தெய்வம் ஏறப்பெற்ற சாலினி என்ற பெண், “கலையாகிய ஊர்தியில் அமர்ந்த கொற்றவை, தான் கொடுத்த வெற்றிக்கு விலையாக உயிர்ப்பலியை உண்டாலல்லது நும் வில்லிற்கு வெற்றியைக் கொடாள்; எனவே, வழிப்போக்கரின் வளத்தைப் பறித்துண்ணும் மறவர்களே! நீங்கள் கள்ளுண்டு களிக்கும் வாழ்க்கையினை விரும்புவீராயின் கொற்றவைக்கு நேர்த்திக் கடனைத் தாருங்கள்” என்று முழங்குவதை வேட்டுவ வரி காட்டுகின்றது நமக்கு.

”கலையமர் செல்வி கடனுணி னல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
கட்டுண் மாக்கள் கடந்தரு மெனவாங்கு…”
(சிலப்பதிகாரம்: வேட்டுவ வரி)

இவையல்லாமல், ஆல், அரசு, கடம்பு, வேம்பு போன்ற மரங்களையும், நீர்நிலைகளையும் தெய்வம் உறையும் இடங்களாக நம்பித் தொல்குடித் தமிழர் வணங்கினர். நாகங்களை வணங்கும் மரபும் தொன்றுதொட்டு நம்மவரிடம் இருந்தது. இவ்வாறு தமிழர் வழிபாடு விரிந்து பரந்தது; பல்வேறு படிநிலைகளை உள்ளடக்கியது.

இன்றைய தமிழ்நாட்டுக்குப் பொருந்தும் வகையில் சொல்வதானால்…ஆயிரக்கணக்கில் நம்மிடம் சாதிகள் உண்டு; அதனினும் அதிகமாய் உட்பிரிவுகள் (subsects) உண்டு. ஒவ்வோர் இனத்தாரின் பழக்கவழக்கங்களிலும், உணவு முறைகளிலும், தெய்வ நம்பிக்கைகளிலும் வேறுபாடுகள் உண்டு. எனினும், குறிப்பிட்ட ஒரு சாதியாரை மட்டுமா நாம் தமிழர் என்று அடையாளப்படுத்துகின்றோம்? இல்லையே! அனைத்துச் சாதியாரையும்…ஏன்…தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மதத்தினரையும் தமிழர் என்றுதானே அடையாளப்படுத்தி வருகின்றோம்!

அதுபோல், வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்தில் வாழ்ந்த அனைத்துத் திணை மாந்தரையும் உள்ளடக்கியதே அற்றைத் தமிழினம்; அவர்கள் அனைவரின் வாழ்க்கைமுறைகளும் நம்பிக்கைகளும் சேர்ந்ததே தமிழர் வாழ்வியல்.

எனவே, முல்லைநிலத்துச் சிற்றூரைச் சேர்ந்த மறக்குடியினர் சிலரின் வாழ்வியலையும் வீரவழிபாட்டையும் காட்சிப்படுத்தும் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு, அதனை அன்றைய தமிழினத்தையே ஒட்டுமொத்தமாய் அடையாளப்படுத்தும் பாடலாய்ப் பறைசாற்றுவது எப்படிச் சரியாகும்? அது தமிழர் வாழ்வியலின் ஒரு கூறு என்று கருதுவதுதானே பொருத்தமாய் இருக்கும்?

பன்மொழி பேசுவோரும் பல்லினத்தோரும் வாழும் இந்திய நாட்டை ஒரே நாடு ஒரே மொழி என்று சுருக்க நினைப்பது எப்படித் தவறான செயலோ அதுபோன்றதே பல்வேறு பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்வியலையும் கொண்ட அன்றைய தமிழ்க்குடியினரையும், நேரிய பார்வையோடும் சீரிய சிந்தனையோடும் நோக்காது, ஒரு குறுகிய அடையாளத்துக்குள் அடக்க நினைப்பது!

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. புறநானூறு மூலமும் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் உரையும்.
  2. தொல்காப்பியம் மூலமும் உரையும் – கு.வெ.பாலசுப்பிரமணியன்.
  3. புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு – தமிழண்ணல்.
  4. சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும்.
  5. பட்டினப்பாலை மூலமும் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரையும்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *