முனைவர் சொ. அருணன்,
உதவிப் பயிற்றுநர், தமிழ்த்துறை,,
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 3.

(கவிஞர் இரா. மீனாட்சியின் மூங்கில் கண்ணாடி – புதுக்கவிதை நூலை முன்வைத்து…)

அறிமுகம்

கவிஞர் இரா. மீனாட்சி சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ காலத்திலிருந்து தொடர்ந்து எழுதி வரும் தமிழின் மூத்த பெண் கவிஞர் ஆவார். கவியரசு கண்ணதாசன், கவிஞர் மீரா. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகிய ஆளுமைகளோடு எழுதத் தொடங்கியவர். எழுத்துப் பணி மட்டுமின்றி, சமூகப் பணியிலும் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது, கவிக்கோ அப்துல் ரகுமான் விருது, திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்ட விருதுகளோடு இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினையும் வென்றவர். தொடர்ந்து எழுத்துக் களத்தில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பவர். அவருடைய 2020ஆம் ஆண்டிற்கான படைப்பாகிய மூங்கில் கண்ணாடி என்னும் நூலிலிருந்து இக்கட்டுரை எழுகிறது.

கவிதையும் வரையறையும்

மொழியின் மிகவும் மூத்த குழந்தையாகிய கவிதைக்கு இன்னும் வரையறையை முழுமையாக யாராலும் வடிக்க இயலவில்லை. காலந்தோறும் புதிய புதிய இலக்கண வரையறைகள் கவிதைக்கு வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. காரணம், கவிதை காலத்தின் சாட்சியாக நின்று தன்னை வெளிப்படுத்திக் கொள்வதனாலேயாகும்.

‘கவிதை (Poiesis) என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம்’ (Poetry. Oxford Dictionaries. Oxford University Press (2013) என்று ஆக்ஸ்போர்ட் அகராதி உலகக் கவிதை குறித்து விளக்கம் தருகிறது.

‘உள்ளத்தின் அடியிலிருந்து வெளிப்படுகிற வேண்டுதலுக்கு ‘மந்திரம்’ என்று பெயர். அது பலிக்கும். ஆனால், அங்கிருந்து பிரார்த்தனை கொண்டு வருதல் எளிதன்று. அது பெரிய ஆழம். உள்ளத்தின். கடலடியை மானுடர் அளந்து பார்த்திருக்கிறார்கள். உள்ளத்தின் அடி காண்பது அதனினும் பலமடங்கு கஷடம். இருந்தாலும் சோர்வு பெற வேண்டா. ஒவ்வொருவனும் உள்ளக் கடலில் இயன்றவரை மூழ்கி அதிலிருந்து பொருள் கொண்டு வரலாம். எத்தனைக் கெத்தனை ஆழத்திலே போகிறாயோ, அத்தனைக்கத்தனை நல்ல முத்துக் கிடைக்கும்’ என்று கவிதைக்கான வரையறையை மற்றொரு முறையில் விளக்குகிறார் மகாகவி பாரதியார். (ஸ்ரீ, சி., சுப்பிரமணிய பாரதி, வேதரிஷிகளின் கவிதை, முன்னுரை.) மேலும்,

உள்ளத்தில் உண்மைஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் –
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார் (பாரதியார், தமிழ்)

என்று கவிதையிலேயே கவிதைக்கு வரையறையும் செய்துள்ளார். அதைப் போலவே புதுக்கவிதையைப் பற்றி,

“சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொல் புதிது, சோதி மிக்க
நவகவிதை, எந்நாளும் அழியாத மஹாகவிதை” (பாரதியார், பாரதியார் கவிதைகள், ஓலைத்தூக்கு)

புதுமையான விளக்கமும் தருகிறார். இந்த வரையறைகளைப் பின்பற்றியே பின்வந்த கவிஞர்களும் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை யாக்கத் தொடங்கினர்.       கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,

“உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்
உருவெடுப்பது கவிதை;
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து உரைப்பது கவிதை” (கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, எது கவிதை)

என்று புதுக்கவிதைக்கான விளக்கத்தை எளிய கவிதையாகவே முன்வைக்கிறார். இதுபோன்று பலரும் பலவிதங்களில் கவிதைக்கான வரையறையைச் செதுக்க முற்பட்டுள்ளனர். என்றாலும் அவை காலந்தோறும் புதுமை பெற்றே வந்திருக்கிறது என்பதை இதன்வாயிலாக அறிய முடிகிறது.

கவிஞர் இரா. மீனாட்சியும் கவிதையும்

கவிதையின் அடிப்படையாக விளங்குவது கனவு. அந்தக் கனவு, ‘மனித குலத்திற்கு வாய்த்த நல்அமுதம்,’ என்பதனால், ‘அறிவை மத்தாக்கி, மொழியை வாசுகியாக்கி வாழ்க்கைப் பாற்கடலைக் கடைந்தெடுத்து’க் கவிதையை ‘அமுதாய்’ ஆக்க முயன்றேன்’ என்று கவிஞர் இரா. மீனாட்சி தனது கவிதை முயற்சியைக் குறித்துத் தெளிவுபடுத்துகிறார். இந்த முயற்சியில் ஒரு பாற்கடல் கடையும் தொன்மம் தென்படுவதை நாம் உணர்ந்து கொள்ளலாம்..

மேலும், கவிதை கவிஞருக்கு உணர்வின் ஓவியமாகக் கனவுக் காட்சி தருகிறது. கவிதையை ‘நல்மொழி’ எனவும், ‘யாவர்க்கும் பொதுவான எதிர்காலம்’ எனவும், கவிதையைச் ‘சாவாக்கலை’ எனவும் இவரால் கொண்டாட முடிகிறது.

கவிஞரும் கால இயற்கையும்

இயற்கையை மிக இயல்பாய் ஏற்றுக் கொள்வது சாதாரண மனிதர்களின் இயல்பு எனில், இயற்கையைப் பேரதிசயமாய் ஏற்றுப் போற்றுவது கவிஞர்களின் இயல்பு. தான் வாழ்கிற சூழலை அதிலும் தன்னை மட்டும் காணிக்கிற அறிவாளிகளின் மத்தியில் தன்னை மறந்து இயற்கையைக் கவனிக்கிற உணர்வாளர்களின் கவனிப்பு கவிதையாகி விடுகிறது. இதற்குக் கவிதையே நல்ல சாட்சி.

தன்னுடைய காட்சிகளில் தென்படும் மரம், மரவட்டை, செடி, கொண்டலாத்திப் பறவை, அணில், புல், பூ என யாவுடனும் உறவு கொள்ளும் பெரும்பேறு அந்த உணர்வாளர்களுக்கே கிட்டுகிறது என்றாலும், அதைக் கவிதையாய் மொழிந்து விடுகிறவர்களுக்கே அது வசப்பட்டு விடுவது அதிசயம்தான். கவிஞர் இரா. மீனாட்சியின் கவிதைகளில் அத்தகைய கவிதை இலாகவம் தெற்றெனப் புலப்படுகிறது.

கவிஞர் இரா. மீனாட்சியைக் குறித்தும் அவர்தம் கவிதைப் பயணம் குறித்தும் கவிஞர் மீரா இப்படி அறிமுகப்படுத்துகிறார்.

“ஆரோவில் எனும் சர்வதேச நகரில் தம் கணவர் த்வான் வான்மேகனுடன் இணைந்து புதிய மனித சமுதாய அமைப்புப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள இலட்சிய நங்கை இரா.மீனாட்சி. பணம், புகழ், பதவி- இவற்றை விட்டு விலகி சுதந்திரமான சுகாதாரமான சூழலில் வாழும் இவருக்கு வாழ்வின் ரகசியங்களையும் அனுபவங்களையும் பரிந்து கொள்ளக் கிடைத்த ஒரு நல்ல தோழி – கவிதை. நெருஞ்சி, சுடுபூக்கள் என்னும் இருதொகுதிகளுக்குப் பிறகு வெளிவரும் இக்கவிதைகள் ஆத்மாவின் காயங்களுக்கு மருந்தாக அமைபவை.” எத்தனை அருமையான கவிதைப்பிடிப்பு இது.

மூங்கில் கண்ணாடியும் காலமும்

கவிதை இயற்கையின் கருவியாக விளங்குவதைப் போலவே  போராட்டத்திற்கான ஆயுதமாகவும் விளங்குகிறது. தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நிற்கும் பாமரர்களின் வாழ்வினில் புதிய வெளிச்சத்தையும் நம்பிக்கையையும் ஏற்றுவது கவிதைதான். கவிஞர் இரா. மீனாட்சி தனக்கான கவிதையையும் இவ்வாறே வரித்துக் கொள்கிறார் என்பதை,

எங்கெல்லாம்
யுத்தக் கைகள்
எம்மக்களின் குருதியைக் குழைத்துப்
பூசிக் கொள்கின்றனவோ
எங்கெல்லாம்
பெண்களின் எல்லா வயதினரும்
குழந்தைகளும் ஏலாதவர்களும்
இரும்பு முள்வேலிகளுக்குள்
வாழ்க்கையைச் சொட்டுச் சொட்டாக
இழந்து கொண்டிருக்கிறார்களோ
எங்கெல்லாம்
எளிய எம் ஆதிமக்கள்
கொள்கையற்ற ஆதாயக்காரர்களால்
வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ
அங்கெல்லாம்
நம் தாய்மொழிக்கவிதைகள்
அவர்களுக்கான
நிழலாகட்டும் நீராகட்டும்
உணவாகட்டும் உடையாகட்டும்
உணர்வாகட்டும்
விட்டுவிடுதலையாகிட
செம்மொழிச் சிறகுகளாகட்டும் (கவிஞர் இரா.மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, காணிக்கை)

என்று முன்மொழிந்து கொள்வதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். எல்லாக் காலத்திலும் அழுத்தப்படும் ஆதிக்கத்தின் கொடிய பாதங்களிலிருந்து அப்பாவி மக்களை மீட்டெடுக்கக் கவிதையே சிறந்த காலசாசனம் என்பதனை இந்தக் கவிதை உணர்த்துகிறது.

அதைப்போலவே மரத்தின் முதுகில் தெரியும் விரிசல் கோடுகள் அதன் வயதினை உணர்த்தும் என்பது அனுபவ வாக்கு. ஆனால், மரத்தை நாற்காலியாகச் செய்த தச்சனின் வயதும் சேர்த்து அந்த நாற்காலியில் புலப்படுவது கவிதை படிவிக்கும் காலம் அல்லவா?

ஒவ்வொருவரும் இந்த மேசை நாற்காலி
இணைபற்றிய
அவரவர் கதைகளைச் சொன்னார்கள்
எந்தக் காட்டிலிருந்து
யாரால் மரம்
வாள்கொண்டு அறுத்துக்கட்டப்பட்டதென
தாத்தா கூறிச்சென்ற
தலைமுறை வரலாறு
முதற்கோட்டிற்கான துவக்கப்புள்ளி
செய்துகொடுத்த உள்ளூர்த் தச்சனுக்கு
சிறுகச்சிறுகவே
கூலிகொடுத்துக் கழித்ததாக
சித்தப்பா சொன்னபோது
சுருக்கென தைத்தது என் வர்க்கஉணர்வு (இரா. மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, மேலும் தலைமுறைகள்)

என்று தலைமுறைகளின் காலத்தைத் துல்லியமாக அளவிடும் கவிதையையும் அவர் வடித்திருக்கிறார். அதே காலத்தை அவர் வண்ணச் சாயலாகவும் கவிதை வழியாக வடித்தெடுத்திருக்கிறார்.

சர்ச் மணி அழைத்தபோது
எனது காலம் வெண்கலமானது
வானத்து வெள்ளை மேகங்கள்
மெதுவே நகர்ந்தபோது வெள்ளி ஊற்றானது
செங்கல் தரையில் காலணிகள்
சப்தித்துச் சென்றபோது மத்தளலயமானது.
நீங்கள் கதவு திறந்து
மகிழ்ச்சியைக் கொணர்ந்தபோது
எனது காலம்
இளஞ்சிவப்பு ரோஜாவிலிருந்து
பொன்வண்ண சூரியகாந்திக்குத்
தாவி அணைத்துக்கொண்டது (இரா.மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, காலச் சாயல்கள்)
என்னும்போது கவிதையின் காலம் மிகச் சுலபமாகக் கவிஞருக்கு வசப்பட்டு விட்டது புரிகிறது.

கடவுளும் கவிதையும் காலமும்

வழிபாட்டின் பலநிலைகளில் இறைவன் தீர்த்தமாடுவதற்காக நீர்நிலைகளை நோக்கிச் செல்லும் மாசிமகத் திருவிழாவினைக் குறித்துப் பல கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற வகையில் இந்தத் தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும். முந்தைய காலங்களில் கட்டை வண்டிகளில் ஊர்வலமாகப் புறப்பட்ட தெய்வத் திருவுருவங்கள் தற்போது கனரக வாகனங்களில் அலங்கார மினனொளி விளக்குகளோடு மிகவும் ஆர்ப்பாட்டமாக ஊர்வலம் போகப் பழகி விட்டன. இதுவும் தீர்த்தவாரியின் ஒரு மாற்றம்தான் என்றாலும், கவிஞர் இரா.மீனாட்சியின் பார்வையில் தீர்த்தவாரி வேறாக அமைவது குறிப்பிடத்தக்கது. அவர்தம் கவிதையில் கடவுளும் கவிதையும் காலமும் ஒருசேரக் கைகோர்த்துத் தீர்த்தவாரி பண்பாட்டுச் சீரழிவாக மாறிவிட்டதை எள்ளி நகையாடத் தவறவில்லை.

மாசிமகம்
பௌர்ணமிப் பகலில்
பல்லக்குகளைக் காணோம்
யானை குதிரை மிகக்குறைவே
மாட்டுவண்டிச் சப்பரங்களும்
அருகிப் போய்விட்டன
டிராக்டர்களில் அமரவைத்து
குரலெழுப்பி அழைத்து வந்த
ஜெனரேட்டர் தெய்வங்கள்
அவரவர் ஜனங்களுக்குப்
படியளக்கத் தவறவில்லை
இரசாயனக் கற்பூரப் புகையயினூடே
இரசனையுடன் கடைக்கண்ணால்
ஆசிவழங்கவே செய்தார்கள்.

அழகழகாய் அலங்கரித்திருந்த
சாமி மூர்த்தங்களை
வீதி உலா வரச்செய்த
வாரிசுதாரர்கள் வீடு வீடாய் வந்து
மறக்காமல்
ஆசிவரி வசூலித்துப் போனார்கள்
நீர்மோரும் பானகமும்
பகிர்ந்துகொண்டார்கள்.
விசேஷமாய் எண்ணெய் மணத்தது
அண்டாக்களில்
சுண்டல் பிரசாதம்.
ஆறும் கடலும்
சாமியும் பக்தர்களும்
ஒன்றாகக் குளித்தெழுந்த
சமத்துவ நாள் இதில்
எங்கள் சந்தோஷங்களை
வண்ண வண்ண பலூன்களில்
அடைத்தெடுத்து
மண் உண்டியல் பரிசு வாங்கி
மூங்கில் குழல் ஊதி
ஊருக்கு எடுத்துப்போகிறோம்
பெரிய ஆண்கள் மட்டும்
பின்தங்கிவிட்டார்கள்
அது வேறு தீர்த்தவாரியாம் (கவிஞர் இரா.மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, தீர்த்தவாரியும் குழந்தைகள் நாங்களும்) என்று குழந்தைகளைக் கபளீகரம் செய்து விட்ட மது அரக்கன் உலாவுகிற தீர்த்தவாரியைக் காண்கிறபோது காலத்தின் கோலம் சற்றெனப் புலப்படுகிறது.

நிறைவாக

இவ்வாறு கவிதையின் ஒவ்வொரு முடிச்சிலும் காலத்தின் இழையை ஊடுபாவாக இணைத்துப் பின்னியிருக்கும் கவிஞர் இரா. மீனாட்சியின் கவிதையில் பெரும்பாலும் இயற்கை வந்து இயல்பாகத் தழுவிக் கொள்கிறது. ‘என்காலத்துப் பாரதி நான்’ என்று கவிமுண்டாசு கட்டிக் கொண்ட பெண்பாரதியாகவே உலாவரும் அவர், ‘சூடமுடியாத சூரியப் பூவே’ என்று பாரதியை அடையாளம் காட்டுகிறார். அதுமட்டுமின்றி, காலந்தோறும் அடிமைப்படுத்தப்படும் பெண்ணிய வாழ்வினைத் தனது சிறு கவிதையில் வலியோடு படம்பிடித்துக் காட்டுகிற பாங்கு அவருக்கே உரியது. ‘காலுக்குச் செருப்புத்தான் கேட்டேன் – இலாடமடிக்காதீர்கள். சொல்வதற்கு மன்னியுங்கள் வலிக்கிறது’ என்று தனது கவித்தடத்தில் இதுபோன்ற காலத்தடங்களையும் சேர்த்துப் பதிவிட்டிருக்கிற கவிஞர் இரா. மீனாட்சி இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறார். ஔவையார், ஆண்டாள் நாச்சியார், காரைக்காலம்மையார் என்னும் வரிசையில் தன்னையும் ஒரு பெண்கவிஞராக இணைத்துக் கொண்டு அவர் படைக்கும் அற்புதக் கவிதைகள் காலத்தின் சாட்சியாக என்றும் நின்று உலாவட்டும்.

துணைநூற்பட்டியல்

1. சுப்பிரமணிய பாரதி, ஸ்ரீ, சி., வேதரிஷிகளின் கவிதை, பாரதி பிரசுராலயம், திருவல்லிக்கேணி, சென்னை, மூ.ப. 1939.
2. கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, கவிமணி கவிதைகள், முழுத்தொகுப்பு, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தி.நகர். சென்னை – 17, மு.ப. 2003.
3. கவிஞர் இரா.மீனாட்சி, மூங்கில் கண்ணாடி, கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, மு.ப. 2020.
4. அ.மு.பரமசிவானந்தம், கவிதை உள்ளம், வள்ளியம்மாள் கல்வி அறம், சென்னை, மூ.ப.1978.
5. மீரா – பாலா, கவிதை ஒரு கலந்துரையாடல், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர், இ.ப.2006.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *