Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • பன்முக ஆளுமை கொண்ட பேரறிஞர்! 

    பன்முக ஆளுமை கொண்ட பேரறிஞர்! 

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழிலக்கிய வரலாறு படைத்த பேராசிரியர் மு. வரதராசனார் எனும் மு.வ.வை நம்மில் பலர் நன்கறிவோம். அதேசமயம் தமிழ் இலக்கிய வரலாற்றை மிக விரிவாக 9ஆம் நூற்றாண்டு தொடங்கி 17ஆம் நூற்றாண்டுவரை நூற்றாண்டு வாரியாக விரிவாகவும் விளக்கமாகவும் எழுதிய இலக்கிய வரலாற்றறிஞர் மு. அ. எனப்படும் மு. அருணாசலனாரை நம்மில் பலருக்குத் தெரியாது.

    அருணாசலனார் இலக்கிய வரலாற்றறிஞர் மட்டுந்தானா? இல்லை! கட்டுரையாளர், சொற்பொழிவாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், தமிழிசை ஆய்வாளர், சைவசமய அறிஞர், காந்தியச் செயற்பாட்டாளர் எனும் பன்முக ஆளுமை கொண்ட பேரறிஞராவார்.  அவரையும், அவருடைய செயற்கரிய பணிகளையும் இன்றைய தமிழ்மக்கள் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள சிற்றூரான திருச்சிற்றம்பலத்தில் 1909ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 29ஆம் நாள் முத்தையாப் பிள்ளை கௌரி இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் அருணாசலம். தொடக்கக் கல்வியைத் திருச்சிற்றம்பலத் திண்ணைப் பள்ளியில் முடித்துக் குத்தாலம் எனும் ஊரில் உயர்பள்ளிக் கல்வியை முடித்தார்.

    சிதம்பரம் மீனாட்சி கல்லூரியில் கணக்கியல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்து அதில் பட்டம்பெற்றார். இக்கல்லூரியே பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது என்பது குறிப்பிடத்தக்கது. புகுமுக (Intermediate) வகுப்பில் சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாகத் தேர்ந்தெடுத்துப் படித்திருந்ததால் கல்லூரிக் காலத்திலேயே தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் நல்ல புலமை பெற்றவராய்த் திகழ்ந்தார் அவர்.

    1930ஆம் ஆண்டு இராஜராஜேஸ்வரி எனும் அம்மையாரை மணம்புரிந்த அருணாசலனார், 1931இல் சென்னையில் அரசுப்பணி கிடைத்ததால் அங்கே குடிபெயர்ந்தார். சென்னை இடமாற்றம் அவர் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் விளைய வழிவகுத்தது.

    தியாகராய நகரில் அவர் குடியிருந்த இல்லத்துக்கு அருகில் மூதறிஞர் இராஜாஜி, இரசிகமணி டி.கே.சி, வே. சாமிநாத சர்மா போன்ற சிறந்த அறிஞர்கள் வசித்துவந்தனர். அவர்களுடன் பழகவும், உ.வே.சா., திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை போன்ற சிறந்த தமிழறிஞர்களுடன் நெருக்கமான உறவைப் பேணவும் சென்னை வாழ்க்கை அருணாசலனாருக்கு வாய்ப்பளித்தது.

    பட்டம்பெற்றது கணிதம்சார்ந்த துறையாக இருந்தபோதினும், தமிழிலக்கியங்கள்பால் தணியாத காதல் கொண்டிருந்த மு. அருணாசலனார், தமிழறிஞர்களின் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அங்குச் சென்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தமிழறிஞர்கள் பலருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டிருந்தாலும் 1933-34ஆம் ஆண்டுகளில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையுடன் ஏற்பட்ட தொடர்பே அவருடைய வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது.

    சென்னை மயிலையில் சைவசித்தாந்த சாத்திர நூலான சிவபிரகாசத்திற்கு வையாபுரிப்பிள்ளை பாடம் சொல்வதை அறிந்து அங்குச் சென்று வையாபுரியாரிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, அவர் அப்போது செய்துவந்த ’புறத்திரட்டு’ எனும் தொகைநூல் ஆராய்ச்சிப் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் அருணாசலனார். மேலும் சில தமிழ்நூல்கள் பதிப்புப்பணியிலும் வையாபுரிப் பிள்ளைக்கு உதவிய அவருக்குத் தமிழ் இலக்கியத் தளத்தில் பரந்த வாசிப்பை மேற்கொள்ளவேண்டும், தமிழ்க்கல்வியாளராகத் தம்மைத் தரம் உயர்த்திக்கொள்ளவேண்டும் என்ற வேட்கை எழுந்தது. அதனை நிறைவேற்றிக்கொள்ளுவதற்கு வசதியாக 1936இல் சென்னைப் பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையே பொறுப்பேற்கவும், அவரிடம் நேரடித் தமிழ் மாணவராக இணைந்த அருணாசலனார், 1940இல் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

    தம்முடைய பதிப்புப் பணியின் தொடக்கமாக 1940ஆம் ஆண்டு ’முக்கூடற்பள்ளு’ என்ற நூலைப் பதிப்பித்தார் அருணாசலனார். வையாபுரியாரின் பணிகளில் உதவிய அனுபவம் இதற்குப் பெரிதும் கைகொடுத்தது.

    வையாபுரிப்பிள்ளையின் தொடர்பு ஏற்பட்ட அதே காலக்கட்டத்திலேயே தம் இல்லத்திற்கு அருகில் குடியிருந்த இரசிகமணியுடனும் நெருங்கிய தொடர்பு அருணாசலனாருக்கு ஏற்பட்டது. அதன் பயனாய் மிகச்சிறந்த இலக்கிய இரசனை வாய்க்கப்பெற்றவரானார்.

    டி.கே.சி.யின் இல்லத்தில் வார இறுதிநாட்களில் நண்பர்கள் ஒன்றுகூடி தமிழிலக்கியங்கள் குறித்து விவாதிப்பர். அவ்வாறு வட்டமாக ஆர்வலர்கள் அமர்ந்து விவாதிக்கும் அக்குழுவுக்கு ’வட்டத்தொட்டி கூட்டம்’ என்று பெயர். இலக்கிய இரசனையில் புதிய நோக்கும் போக்கும் கொண்டவர்களை ’வட்டத்தொட்டி மரபினர்’ என்று அழைக்கும் வழக்கம் இலக்கிய வட்டத்தில் அப்போது ஏற்பட்டது.

    அருணாசலனார் படைத்த கட்டுரைகளான கன்னிமான், நடந்த காவேரி, சாதிப் பலாப்பழம், சிறு நெருஞ்சில் முதலியவற்றில் இரசிகமணி டி.கே.சி.யின் தொடர்பால் அவருக்கு ஏற்பட்ட இலக்கிய இரசனையின் வெளிப்பாட்டை நாம் தெளிவாய்க் காணமுடியும்.

    டி.கே.சி.யின்மீது மிகப்பெரிய மதிப்பும் அன்பும் கொண்டிருந்த அருணாசலனார் தம்முடைய ஒரே மகனுக்கு டி.கே.சி.யின் பெயரான சிதம்பரநாதனைச் சூட்டி அழகுபார்த்தார்.

    சைவ சித்தாந்த மகா சமாஜத்தைத் தோற்றுவித்த ஞானியாரடிகளுடன் அருணாசலனாருக்கு அப்போது தொடர்பு ஏற்பட்டது. அடிகள் நடத்திய சைவ சமய வகுப்புகளுக்குச் சென்று தம்முடைய சைவ சமயச் சாத்திர அறிவை மேம்படுத்திக்கொண்டார்.

    மும்மொழிப் புலமை, சைவ சித்தாந்தச் சாத்திரக் கல்வி, சைவ மடங்களுடனான தொடர்பு, தமிழில் முதுகலைப் பட்டம் போன்ற தகுதிகள் காரணமாகத் திருப்பனந்தாள் காசிமடத்தின் அறக்கட்டளை இருக்கையில் காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் (Banaras Hindu University) சைவ சித்தாந்தத் தத்துவவியல் துறையிலும், தமிழ்த்துறையிலும் பேராசிரியராக 1944இல் பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றார் அருணாசலனார்.

    பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தராக இருந்த  சர்வபள்ளி டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்களால் மு.அருணாசலனார் அப்பணியில் நியமிக்கப்பட்டார்.

    காசிப் பல்கலைக்கழக வாழ்க்கை அருணாசலனாரின் சிந்தனையை முற்றிலும் வேறொரு கோணத்திற்கு மாற்றியது. தமிழறிஞர்களின் தொடர்பிலிருந்து விடுபட்ட அவருடைய உள்ளத்தைக் காந்தியம் முற்றாய் ஆட்கொண்டது.  இயல்பிலேயே காந்தியவாதியான அருணாசலனார், காந்தியடிகளின் ஆதாரக் கல்வி, நிர்மாணத் திட்டம் முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு 1946இல் காசிப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து விலகி, மகாராட்டிர மாநிலத்திலுள்ள வர்தா நகர்  சேவா கிராமத்தில் ஆதாரக் கல்விப் பயிற்சி நிறுவனங்கள் அமைப்பதற்கான பயிற்சியை முறையாகப் பெற்றார். ஆதாரக் கல்வி சார்ந்து இயங்கிய பெருந்தகையாளர்களான ஜாகீர் ஹுசைன், வினோபா பாவே, ஆசாரியக் கிருபாளனி, ஜே. சி. குமரப்பா போன்றோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அருணாசலனாருக்கு அப்போது கிட்டியது.

    வர்தா நகரில் ஆதாரக் கல்விக்கான பயிற்சியைப் பெற்ற அவர், அக்கல்விமுறையைத் தம் சொந்த கிராமத்திலும் செயற்படுத்த விரும்பி திருச்சிற்றம்பலத்தில் ’காந்தி வித்யாலயம்’ என்ற பெயரில் நடுநிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றை ஏற்படுத்தினார்.

    பெண்களுக்கான தங்கும் விடுதி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அநாதை இல்லம், ஆடவர் பெண்டிருக்கு ஆசிரியர் பயிற்சிச் சாலை ஆகியவற்றைத் தொடங்கினார். ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலம் இக்கல்விப்பணியில் தம்மை முழுமையாக இணைத்துக்கொண்டார் அருணாசலனார். திருச்சிற்றம்பலத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்ந்த எளிய மக்கள் கல்விபெறுவதற்கு மு. அருணசாலனார் ஏற்படுத்திய கல்விக்கூடங்கள் பெருந்துணை புரிந்தன எனில் மிகையில்லை. அவர் தொடங்கிவைத்த கல்வி நிறுவனங்கள் தமிழக அரசின் பாடத்திட்டத்தின்கீழ் இன்றும் இயங்கிவருகின்றன; அவருடைய குடும்பத்தார் அவற்றை நிர்வகித்து வருகின்றனர்.

    கல்விப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டகாலத்திலும் எழுத்துப்பணிக்கு  ஓய்வளிக்கவில்லை அருணாசலனார். 1946 முதல் 1960 வரையிலான காலப்பகுதியில் அவர் எழுதிய கட்டுரைகளும் நூல்களும் காந்தியச் சிந்தனைகளை மையமாகக் கொண்டே அமைந்திருந்தன.

    1963ஆம் ஆண்டு ‘சித்தாந்தம்’ என்ற சைவ சமய இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று ஏறக்குறைய 19 ஆண்டுகள் அதில் பணியாற்றினார் அருணாசலனார். சைவ சமயம் சார்ந்த சிந்தனைகள், தத்துவங்கள், மரபுகள் தொடர்பான பல கட்டுரைகளை அவ்விதழில் தொடர்ந்து எழுதிவந்தார். 1969 முதல் 1977 வரையிலான காலக்கட்டதில் அவருடைய அருஞ்சாதனை என்று கருதத்தக்க தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களை நூற்றாண்டு வாரியாக எழுதிக் காந்தி வித்தியாலயம் வாயிலாக வெளியிட்டார்.

    தம் இலக்கிய வரலாற்றுப் பணிகளுக்கான ஆதாரங்கள் அனைத்தையும் தம் நூலகத்திலிருந்தே பெற்றுக்கொள்ளும் அளவுக்கு 15000க்கும் மேற்பட்ட அரிய நூல்கள், சுவடிகள், இதழ்களின் தொகுப்புகள் ஆகியவை அடங்கிய தகவல் களஞ்சியமாக அருணாசலனாரிடம் நூலகம் இருந்தது என்று வரலாற்றாய்வாளர் முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதி தெரிவிக்கும் செய்தி நம்மை வியப்பிலாழ்த்துகின்றது.

    9-ஆம் நூற்றாண்டு தொடங்கி 17-ஆம் நூற்றாண்டு வரையிலான இலக்கிய வரலாற்றைக் கால முறைப்படி மிக விளக்கமாக ஆராய்ந்து, பதினான்கு தொகுதிகளாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறைக்குப் புத்தொளி பாய்ச்சிய சாதனையாளர் அருணாசலனார்.  எந்த இலக்கிய வரலாற்று நூலுடனும் ஒப்பிடவியலாத வகையிலும் வேறெவராலும் செய்ய இயலாத முறையிலும் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ள இவ்வரலாற்று நூல்களின் வாயிலாகப் பலருக்கும் பெயர்கூடத் தெரியாத தமிழ் நூல்களைப் பற்றியும், தமிழ்ப்புலவர்களைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

    பரந்த வாசிப்புத் தளத்தில் நின்று ஆழ்ந்தும் அகன்றும் நுணுகியும் எழுதப்பட்டுள்ள இந்நூல்களை வெறும் இலக்கிய வரலாறு என்ற சிமிழிக்குள் நாம் அடைத்துவிட முடியாது. அதனையும் தாண்டி இலக்கியம் உருவாவதற்குக் காரணமான சமூக வரலாறாகவும் இவை விரிகின்றன.

    பதிப்புத் துறை முன்னோடிகளான உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை ஆகியோரின் தொடர்பு காரணமாக பதிப்புத்துறையிலும் ஆர்வத்தோடு திகழ்ந்த மு.அருணாசலனார், முக்கூடற்பள்ளு என்ற நூலை முதலில் பதிப்பித்ததைத் தொடர்ந்து, கூளப்ப நாயக்கன் காதல், திருவானைக்கா உலா, திருமலை முருகன் பள்ளு, அம்பிகாபதிக் கோவை, சிதம்பரக் குறிஞ்சி, தத்துவப் பிரகாசம், பிரபந்த மரபியல் உள்ளிட்ட பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

    செவ்வியல் இலக்கியங்களுக்கு முன்னோடியாகக் கருதத்தக்க வாய்மொழி இலக்கியம் குறித்த சிந்தனைகள் தமிழகத்தில் பரவலாக்கப்படாத 1940களிலேயே வாய்மொழிப் பாடல்களைத் தொகுக்கும் முயற்சியில் அருணாசலனார் ஈடுபட்டு அத்துறையின் முன்னோடியாகவும் திகழ்ந்திருக்கின்றார். காற்றிலே மிதந்த கவிதை, தாலாட்டு இலக்கியம், Ballad poetry போன்றவை அவர் வாய்மொழி இலக்கியம் சார்ந்து எழுதிய நூல்களாகும்.

    தோட்டக்கலையிலும் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்த மு.அ., காய்கறித் தோட்டம், பழத்தோட்டம், பூஞ்செடிகள், வாழைத்தோட்டம் போன்ற தலைப்புகளிலும் நூல்கள் படைத்துள்ளார். காய்கறித் தோட்டம் எனும் நூல் வெளிவந்த சில ஆண்டுகளுக்குள் மூன்று பதிப்புகள் கண்டு, விற்பனையில் சாதனை படைத்த நூலாகும். இந்து, தினமணி, சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், கல்கி போன்ற பத்திரிகைகள் இந்நூலைப் பாராட்டி மதிப்புரை எழுதியுள்ளன. தமிழக அரசின் பரிசையும் இந்நூல் வென்றுள்ளது.

    1974ஆம் ஆண்டு ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களால் தொடங்கப்பெற்ற தமிழ் சமஸ்கிருதம் மற்றும் பன்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று  ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அருணாசலனார் அங்கே பல்வேறு ஆய்வுக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

    கர்நாடக இசையாக இக்காலத்தில் வளர்ச்சிபெற்றுள்ள இசை, அன்றைய தமிழிசையே என்பதைச் சான்றுகாட்டி நிறுவும் வகையில் ’தமிழிசை இலக்கிய வரலாறு’ மற்றும் ’தமிழிசை இலக்கண வரலாறு’ எனும் இரு நூல்களை எழுதித் தமிழிசை ஆய்வாளராகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர் மு. அருணாசலனார்.

    தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோரே கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என்று அறியப்பட்ட வரலாற்றை மறுக்கும் வகையில் காலவரையறையுடன் கூடிய ஆராய்ச்சியை மேற்கொண்டு, அவர்களுக்கு முன்பே முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர் ஆதி மும்மூர்த்திகளாக இருந்துள்ளனர் என்பதை ‘கருநாடக சங்கீதம் தமிழிசை – ஆதி மும்மூர்த்திகள்’ என்ற தம் நூலில் நிறுவியுள்ளார்.

    காந்தியாரின் ஆதாரக்கல்வி சார்ந்து ஆங்கிலத்தில் வெளிவந்த பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தம்மைத் தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகவும் வெளிப்படுத்தியவர் அருணாசலனார்.

    எழுத்தோடு நில்லாது நாவீறு படைத்த பேச்சாளராகவும் பரிமளித்த அவர், தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் மடைதிறந்த வெள்ளமெனப் பேசும் ஆற்றலாளர். பன்முகச் செயற்பாடுகளில் அவர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டாலும் அவை அனைத்திற்கும் அடிநாதமாய் வெளிப்பட்டு நிற்பது அவருடைய ஆராய்ச்சி அணுகுமுறையே ஆகும்.

    அருணாசலனாரைச் சிறப்பிக்கும் வகையில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் 1981ஆம் ஆண்டு அவருக்குத் ’தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டத்தினை நல்கியது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு ’முதுமுனைவர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

    பன்முக ஆளுமையாகத் திகழ்ந்து தம்முடைய நிறைந்த அறிவாலும் குறையாத ஆர்வத்தாலும் அற்புதமான நூல்களைப் படைத்தளித்திருக்கின்றார் பேரறிஞர் மு. அருணாசலனார். அவருடைய அரிய உழைப்பின் விளைச்சல்களாய்க் கிடைத்திருக்கும் நூல்களைத் தமிழர்களாகிய நாம் தேடிக் கற்பது, தமிழின் விரிவான இலக்கிய வரலாறு குறித்தும், இசை வரலாறு குறித்தும் பல அரிய உண்மைகளை நாம் அறிய உதவும்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1.https://ta.wikipedia.org/wiki/ மு._அருணாசலம்
    2.https://www.dinamani.com/editorial-articles/ 2009/aug/16/ அறிஞர்களின்- அறிஞர்-முஅருணாசலம்-58762.html
    3.https://www.geotamil.com/pathivukal/images/magazine_puththakampesuthu_january2011.pdf

     

    Share
  • தாடி

    தாடி

    பாஸ்கர் சேஷாத்ரி

    இவர் தாடி கண்ணன். எண்பது வயது இளைஞர். எங்கள் குடும்ப தூரத்து உறவு. அம்பது வருஷத்துக்கும் மேலான நட்பு. திரிலோக சஞ்சாரி. பிரம்மச்சாரி. குடும்பக் குழந்தைகளுக்கு இவர் தாடி தாத்தா. எல்லாத் தகவல்களும் இவர் விரல் நுனியில். பழைய பீம்சிங்கில் ஆரம்பித்து இன்றைய பீ. சி. ஸ்ரீராம் வரை அவரிடம் தகவல் உண்டு..

    என் மேல் மகா ப்ரியம். அய்யா என்று என் குடும்பம் என்னை அழைக்கும். இவரும் அப்படி அழைக்கும் போது என் தந்தை நினைவு வரும். வாஞ்சைக்கும் அன்புக்கும் இவர்தான் கொள்முதல்.–ரேஷன் கடை பிரச்சனையா இவரிடம் சொன்னால் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்வார். என் கட்டுரை, கடிதம், புகைப்படம் தினசரியில் வந்தால் இவர் உடனே என்னை அழைத்து, தான் பார்த்து ரசித்ததைச் சொல்வார். அபார நினைவு. சில மாதங்கள் முன்பு காலை என் இல்லம் வந்து, கொஞ்சம் உணவருந்தி, பழைய நினைவுகளை அசை போட்டார். எதிர்பார்ப்பு இல்லாத உறவு. அன்பு. குணம்தான் தாடி கண்ணன்.

    சாலையில் செல்லும் போது இரைச்சலில் கூட அய்யா எனக் குரல் கேட்டால் அது தாடி தான். மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி இருப்பின் இவருக்கு நான் மகனாகப் பிறக்க வேண்டும். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது.

    பெரும்சுமை தலையில் அமிழ்த்துவது போல உணர்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு போன். சார் நீங்க பாஸ்கரா என எதிர்க் குரல் -ஆமாம் எனச் சொல்லி, தாடி தாத்தா என்கிற கண்ணன் மாமா, உங்கள் எண்ணைத் தான் நினைவு வைத்துக்கொண்டு இருக்கிறார் என்றார்.

    நீங்கள் யாரெனக் கேட்டேன். கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி எனச் சொல்லி வைத்துவிட்டார். அவர் உறவுக்கார்களைத் தேடித் தேடித் தகவல் சொன்னேன். யாரும் இங்கு சென்னை வந்து பார்க்கும் சூழலில் இல்லை. வயது, நோய்த்தொற்று எனப் பல காரணங்கள். அதற்கு ஒரு வாரம் முன்பு, பாஸ்கர் எனக்கு ஒரு கார் அனுப்பு எனத் தாடி (மற்றவர்களுக்கு தாத்தா) கேட்டார். ஆட்டோ அனுப்புகிறேன் எனச் சொல்லி உடன் சென்று வண்டியில் அனுப்பினேன்.

    ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்ந்தார். அன்றே நாங்கள் எல்லோரும் போய்ப் பார்த்தோம். அதிகாரியைப் பிடித்து, கொஞ்சம் குணப்படுத்தி, சாயங்காலம் வீட்டுக்கு அனுப்பினேன். அவருக்கு உறவென்று பலர் இருந்தாலும் யாரும் பக்கத்தில் இல்லை. சொந்த வீடு உண்டு எனப் பலர் சொல்லிக் கேட்டு இருக்கிறேன். விவரங்கள் பெரிதாக எதுவும் தெரியவில்லை. நிறையத் தகவல்களை அள்ளி வீசுவார்.

    பலமான நினைவாற்றல். ஒரு மெலிதான தொளதொள சட்டை. உடம்பில் ஓட்ட வேண்டுமே என்ற அலட்சியமயமான வேஷ்டி. தோள் அங்கவஸ்திரம். நெற்றியில் ஸ்ரீசூரணம். சிரித்துக்கொண்டே இருக்கும் முகம். தாடி எனக் குரல் கொடுத்தால் ஒய் என எதிர்க்குரல் உடன் கேட்கும். எண்பதைத் தாண்டிய வயது. சினிமா, அரசியல், கோயில் என எதை எடுத்துக்கொண்டாலும் அவருக்கு என்று ஒரு தனித் தகவல் உண்டு. இயக்குநர் ஜி. என். வேலுமணி எனச் சொன்னால் அது வேல்மணி எனத் திருத்துவார். ஆள்வார்பேட் வக்கீல் அடிகா என்றால் ஒரு முழு மங்களூர் கதை வரும்.

    அவ்வப்போது வழியில் பார்க்கும் போது, கொஞ்சம் பணம் கொடுப்பேன். தாத்தாச்சாரி டிரஸ்ட் பணத்தில் அவருக்கு மாதாமாதம் பணம் உண்டு. திடீரென இல்லம் வருவார். இந்தா இது ஆலப்பாக்கம் கன்னி கோயில் பிரசாதம் என்பார். அடுத்த வாரம் களத்தூர் ராமர் கோவில் குங்குமம் என்பார். அன்பின் மொத்த வடிவம் அவர்.

    நேற்று காலை அவர் காலமானார். நொறுங்கிப் போய் நிற்கிறேன். இந்த வலி இரண்டு நாளில் போகும். நினைவுகளைச் சுமந்துகொண்டு நான் அலைந்துகொண்டு இருக்க வேண்டியதுதான். உறவுகளின், அன்பின் வெளிப்பாடு இந்த வலி. எங்கோ பெய்த மழையில் என்றோ விளைந்த புல்லின் மேல் பாசம் வைப்பது போல மனித வாழ்க்கை. அடுத்த காற்றில் அல்லது பெருமழையில் அல்லது கால் பட்டு, புல் சிதைந்து போகும். மீண்டும் புல் முளைக்கும். இது வாழ்க்கை அமைப்பு. வாழ்க்கை பிடிபடாது, புரிபடாது இருக்கத்தான் இந்த நிலையாமை. அது உள்ளே ஊற ஊறத்தான் தெளிவு பிறக்கிறது. இதோ இன்று தீயுடன் வலி தெரியாமல் கலக்க இருக்கும் ஒரு முதிர் கிழம் அவர்.

    அவர் அறிவு, பசி, வலி, வேதனை, கலக்கம், ஏமாற்றம் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது.

    தினசரியில் எனது செய்தி வந்தால் உடனே போன் செய்து, சந்தோஷத்தை வெளிப்படுத்தி என்னைக் கொண்டாடும் தாடி இனி இல்லை. மரணம் ஞானப் புத்தகம். முடிவற்ற தொடர். பிறப்பும் மனிதன் வாழ்க்கையும் ஒன்றுமில்லை, எல்லாம் பெரும் அபத்தம் என்ற உயர் தத்துவத்தை இன்று உரைத்துச் சென்றுவிட்டார் தாடி. திடீரென சாலையில் அய்யா எனக் குரல் கேட்காதா என அபத்தமாய் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

    இவரைப் பற்றி நான் முகநூலில் எழுதியதை மாட வீதியில் படித்துக் காண்பிக்க, உங்கள் கண்களில் நீர் வந்ததை நான் அறிவேன். இப்போது என் கண்களில் வடியும் கண்ணீர் உமக்கு தெரியுமா ? நீயும் ஏமாற்றிவிட்டாய் தாடி.

    Share
  • ஆன்லைன் வகுப்புகளும் அதன் பாதகங்களும்

    ஆன்லைன் வகுப்புகளும் அதன் பாதகங்களும்

    செந்தில்குமார் தியாகராஜன்,
    பேராசிரியர், எக்ஸல் பிசியோதெரபி கல்லூரி,
    குமாரபாளையம், நாமக்கல்,
    மெயில் : senphysio1981@gmail.com

    கட்டுரைச் சுருக்கம்

    சமீப காலமாக தினமும் நாம் வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கையை வாழ முடியவில்லை அதாவது நாம் வாழ்ந்துகொண்டிருந்த அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்டு, அரசு கூறும் வாழ்க்கைமுறையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறைந்தது ஆறு மணியிலிருந்து எட்டு மணி நேரம் கணிப்பொறி முன்பு அமர்ந்து வேலை  செய்வதோ மற்றும் பள்ளி ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்களைக் கவனிப்பது இன்றைய சூழலில் கட்டாயமாகி இருக்கிறது. கணிப்பொறி முன் அமர்ந்து வெகு நேரம் வேலை செய்யும் பொழுது, அதேபோல் ஆன்லைன் வகுப்புகள் கவனிக்கும் பொழுது  பல்வேறு உடல் பிரச்சினைகள் ஏற்படுகிறது. எலும்பு தசை நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் மலச்சிக்கல், சிறுநீரகத்தில் / பித்தப்பையில் கல் ஏற்படுதல், சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று, அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் கணிப்பொறி முன்பே அமர்ந்திருப்பதால் இதுபோன்ற பெரிய பிரச்சனைகளும் ஏற்படும்பொழுது மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். நம் காலம் கணிப்பொறியோடு சேர்ந்துதான் கழிகிறது, கழித்ததாகத்தான் வேண்டும் அதனால் இதுபோன்ற பிரச்சனைகளை நாம் எப்படி தவிர்ப்பது என்பதைக் கண்டிப்பாக தெரிந்துகொள்ளலாம். அதற்குச் சில வழிமுறைகளையும் இங்கே பட்டியலிடுகிறேன். கணிப்பொறி வலியோடு வாழ நாம் பிறக்கவில்லை. வலி இல்லாமல் வாழ நமக்குத் தெரியும். தொடரும் வாழ்க்கை இனிமையாக அமைய, நல்ல வழிமுறைகள் உள்ளன.

    முன்னுரை

    நாம் தான் உலகை ஆண்டு கொண்டிருக்கிறோம் என்று மனிதன் நினைத்துக்கொண்டிருந்தபோது யாருமே எதிர்பாராத வண்ணம் இந்த உலகத்தையே மனிதர் கைக்கு அப்பால் இருந்து வெளிப்பட்ட வைரஸ் கிருமி இன்று நம்மைக் கடந்த சில மாதங்களாக ஆண்டுகொண்டிருக்கிறது. சமீப காலமாகத் தினமும் நாம் வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கையை வாழ முடியவில்லை அதாவது நாம் வாழ்ந்துகொண்டிருந்த அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்டு, அரசு கூறும் வாழ்க்கைமுறையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் அப்படி வாழ்வது தான் சிறப்பும் கூட. ஆன்லைன், ஒர்க் பிரம் ஹோம், லாக்டவுன், கரோனா, வைரஸ், சானிடைசர், முகக் கவசம், தனிமனித இடைவெளி இந்த வார்த்தைகளெல்லாம் நம் வாழ்க்கையில் ஊடுருவிவிட்டன. ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ந்து கவனிக்கும் பொழுது கழுத்து, முதுகுத் தசைகள் தேய்வடைகின்றன. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் 86% பேருக்கு கழுத்து, முதுகு தோள்பட்டை மற்றும் மூட்டு தசைகளில் வலி மற்றும் இறுக்கம் ஏற்படுவதாக ஆய்வு விளக்குகிறது[1]

    பொருளுரை மற்றும் கருத்து விளக்கம்

    உன் வேலையை உன்  வீட்டிலேயே நீ செய் என்று பெரும்பாலான பன்னாட்டு நிறுவனக் கணிப்பொறி ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்[2]. அதேபோல பள்ளி மாணவ மாணவியர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் இதே போன்ற வாழ்க்கைக்கு வாழ கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்,  குறைந்தது ஆறு மணியிலிருந்து எட்டு மணி நேரம் கணிப்பொறி முன்பு அமர்ந்து வேலை செய்வதோ மற்றும் பள்ளி ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்களைக் கவனிப்பதை இன்றைய சூழல் கட்டாயமாக்கி இருக்கிறது. இந்த வாழ்க்கை முறை மாற்றம் நம்மில் அனைவருக்குமே மிகவும் புதியதாக இருக்கும். செல்போனிலோ கணிப்பொறி முன்பு அமர்ந்து விளையாடுவது அல்லது அப்பா வேலை செய்துகொண்டிருந்தபோது கணிப்பொறி கடந்து செல்வது என்றிருந்த பள்ளிக் குழந்தைகள் இன்று ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.[3]

    இந்தக் காலச் சூழ்நிலை மாற்றம் நாம் மிகவும் எதிர்பாராத ஒன்றாக இருந்தாலும் நமது பொருளாதாரத்தைக் கட்டிக் காக்கவும் அதேபோல அலுவலக வேலைகளை முடிக்கவும் கணிப்பொறியோடு வாழும் வாழ்க்கை சாதாரணமாக மாறிவிட்டது. முன்பெல்லாம் நம் பிள்ளைகளைக்  கணிப்பொறி முன்பு அமர விடாத அப்பாக்களும் அம்மாக்களும் தங்கள் மகனையும் மகளையும் இன்று கணிப்பொறி முன்போ அல்லது செல்போன் முன்போ அமரக் கட்டாயப்படுத்துகின்றனர், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல ஆறு மணியிலிருந்து எட்டு மணிநேர ஆன்லைன் வகுப்புகளில் உள்ள அல்லது கணிப்பொறி வேளைகளில் மூழ்கி இருக்கும் பொழுது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. ஏம்மா  கம்ப்யூட்டரை பார்க்க வேணாம்னு சொல்லுவா அப்பல்லாம். இப்ப எல்லாம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார சொல்ற என்று கேள்வி கேட்கும் குழந்தைகளுக்குப் பதிலைத் தேடும் பெற்றோர்கள் ஏராளம்.  காலைல பல்லு தேய்ச்சியா பால் குடிச்சிட்டு போய் உட்காரு மேக்ஸ் டீச்சர் ஆன்லைன் கிளாஸ் போகுது பாரு என்று பெற்றோர்கள் குழந்தைகளை வருத்தும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது.[4]

    கணிப்பொறி முன் அமர்ந்து வெகு நேரம் வேலை செய்யும் பொழுது அதேபோல் ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்கும் பொழுது  பல்வேறு உடல் பிரச்சினைகள் ஏற்படுகின்ன்றன.[5] காலை 9 மணிக்கே தயாராகும் ஆன்லைன் வகுப்புகளை, குறைந்தது ஆறு மணி நேரம் தொடர்ந்து ஒரு குழந்தை கவனிக்கும் பொழுது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதில் மிக முக்கியமானவை முதுகு வலியும் கழுத்து வலியும் கைவிரல் வலியும். பொதுவாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இப்பொழுது ஏற்படும் சிறுசிறு கழுத்துவலி, முதுகுவலி பின்னாளில், நாள்பட்ட அதாவது தொடர் பிரச்சினையாக பூதமாக மாறலாம். முன்பெல்லாம் எலும்பு தேய்மானம் என்பது 55 வயதிற்கு மேலே இருப்பவர்களுக்கு ஏற்படுவதாக ஆராய்ச்சிகளில் எடுத்துக் கூறினர். ஆனால் கணிப்பொறிப் பயன்பாடும் செல்போன் பயன்பாடும் இந்த எலும்புத் தேய்மானம், தளர்ச்சியுறுதல் போன்று, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதைத் துரிதப்படுத்துகின்றன.[6]

    பொதுவான தொடர் கணிப்பொறி, செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

    1. கழுத்து வலி
    2. தோள்பட்டையில் ஏற்படும் வலி
    3. கணிப்பொறியில் இருக்கும் செயல்பாட்டை(மௌஸ்) கட்டுப்படுத்துவதால் கை விரல்களில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல்
    4. கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடு விரல்களில் உணர்ச்சி மாறுபட்டு உணருதல்
    5. முழங்கை மற்றும் மூட்டு வலி
    6. முதுகு வலி, தலை வலி, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல்
    7. அதிக நேரம் அமர்வதால் இடுப்பு தசைகளில் ஏற்படும் வலி
    8. முதுகு மற்றும் கால் பகுதி வரை மேலிருந்து கீழாக வலி வருதல்
    9. கால் விரல்கள் மரத்துப் போதல்
    10. உடம்பின் நிலைப்பாட்டு மாற்றம் (POSTURE) அதாவது உடம்பில் கூன் விழுதல்

    இதுபோன்ற எலும்பு, தசை, நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் மலச்சிக்கல், சிறுநீரகக் கல், பித்தப்பையில் கல் ஏற்படுதல், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று, அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் கணிப்பொறி முன்பே அமர்ந்திருப்பதால் இதுபோன்ற பெரிய பிரச்சனைகளும் ஏற்படும்பொழுது மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற பிரச்சினைகளை எப்படி தவிர்ப்பது அதற்காக ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்த்து விடலாமா, கணிப்பொறி முன் அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்த்து விடலாமா என்றால் கண்டிப்பாக அது நம்மால் முடியாது. அது சரியான தீர்வாகவும் இருக்காது. நம் காலம் கணிப்பொறியோடு சேர்ந்துதான் கழிகிறது, கழித்தாகத்தான் வேண்டும். அதனால் இதுபோன்ற பிரச்சனைகளை நாம் எப்படி தவிர்ப்பது என்பதைக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ளலாம். அதற்குச் சில வழிமுறைகளையும் இங்கே பட்டியலிடுகிறேன்.

    பெற்றோர்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்

    1. உங்கள் குழந்தைகளைக் கண்டிப்பாக காலையிலோ மாலையிலோ விளையாடச் சிறுசிறு விளையாட்டுகளைப் பழக்குங்கள் நீங்களும் அவர்களோடு விளையாடலாமே
    2. உங்கள் குழந்தைகளோடு பெற்றோர்களும் மட்டைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகள் விளையாடும் பொழுது மேற்குறிப்பிட்ட தசை, எலும்பு, நரம்பு சார்ந்த பிரச்சினைகளைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்
    3. உங்கள் குழந்தைகள், ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்கும் பொழுது, அவர்கள் இருக்கைகள் உள்ள அறை நல்ல காற்றோட்ட வசதி உள்ளதாகவும் அதேபோல நல்ல வெளிச்சம் உள்ளதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்
    4. ஒவ்வோர் ஆன்லைன் வகுப்பு முடியும் பொழுது இருக்கையிலிருந்து எழுந்து நடக்குமாறு உங்களின் குழந்தைகளுக்கு அறிவுறுத்தவும்.
    5. கணிப்பொறி முன் அமர்ந்து வேலை செய்யும் பொழுது, வயது வந்தவர்களும் தொடர்ந்து வெகுநேரம் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்த்து நேர இடைவெளியை அனுசரிக்கவும்.
    6. அதிக நீர் பருகுவதையும் சிறுநீர் வரும்பொழுது சிறுநீர் கழிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும். இப்படிச் செய்தால், சிறுநீரை அடக்கும் பொழுது சிறுநீரகக் கற்கள், நோய்தொற்று போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்
    7. பழங்கள் உண்பதையும் பழச்சாறுகள் குடிப்பதையும் குழந்தைகளுக்குப் பழக்கபடுத்துவதோடு பெரியவர்களும் பருகுவதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துக்களும் தாது சத்துக்களும் இதனால் கிடைத்துவரும்.
    8. நொறுக்குத்தீனிகள் உண்பதைக் கணிப்பொறி முன் இருக்கும் பொழுது தவிர்ப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்பருமன் போன்றவற்றையும் தவிர்க்கலாம்.

    சில உடற்பயிற்சிகள்

    கழுத்து முதுகு வலிகளை மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றைத் தவிர்க்க சில உடற்பயிற்சிகளை இங்கே உங்களுக்குத் தருகிறேன்.

    1. கழுத்துத் தசைகளை இலகுவாக்க, வானத்தை நோக்கிய நேர்கொண்ட பார்வை இருக்குமாறு ஒரு ஐந்து மணித்துளிகள் மேலே நோக்குதல், அதேபோல தரையை நோக்கியவாறு பார்த்து, கழுத்தை ஐந்து மணித்துளிகள் கீழ் நோக்கியவாறு பிடித்திருப்பது. இதுபோன்று காலை மாலை 10 முறை செய்துவருவது உங்களது கழுத்துத் தசைகளை இலகுவாக்கும்.
    2. அதேபோல கண்பார்வை இடதுபுறமும் திருப்பியவாறு, வலதுபுறமும் திருப்பியவாறு ஐந்து மணித்துளிகள் பிடித்திருப்பது இதுவும் 10 முறை செய்யலாம்.
    3. தோள்களை வானத்தை நோக்கியவாறு உயர்த்துவது, உயர்த்திய வண்ணம் ஐந்து மணித்துளிகள் பிடித்திருப்பது. இதுபோன்று 10 முறை செய்வது.
    4. கழுத்துத் தசைகளை இலகுவாக்க, உங்களது கையைப் பின்புறம் கட்டிக்கொண்டு உங்கள் கழுத்தை வலது புறமோ, இடப்பக்கமோ உங்கள் தலையில் கைவைத்து இழுக்கும் பொழுது, கழுத்துத் தசைப்பிடிப்புகளைத் தவிர்க்கலாம்.
    5. நின்றுகொண்டு நேராகக் குனிந்து, கட்டைவிரலைத் தொடுவதை தினமும் 10 முறை செய்வது முதுகுத் தசைகளை இலகுவாக்கும்.
    6. டைனிங் டேபிள் போன்றவற்றில் உண்ணாமல், முடிந்தவரை தரையில் அமர்ந்து உங்கள் குழந்தைகளோடு உணவு உண்ணுவது சிறப்பானது.
    7. அதேபோல மாலையிலும் சிறிது நேரம் உங்கள் குழந்தைகளோடு விளையாடுங்கள்.
    8. தினமும் எட்டு மணி நேர உறக்கத்தைக் கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள். உங்கள் உடல் தசைகளில் ஏற்படும் தளர்ச்சியை உறக்கம் தவிர்க்கும்.
    9. நீங்கள் படுத்துறங்கும் தலையணை மற்றும் படுக்கை ஆகியவற்றை, உங்களுக்கு நல்ல உறக்கத்தைக் கொடுக்கும் வகையில் அமைத்துக்கொள்ளுங்கள்.
    10. நிறைய நீர் அருந்த வேண்டும். அதேபோல நீங்கள் உங்கள் குழந்தையோடு ஆன்லைன் வகுப்புகளில் அமர்ந்து அல்லது அவர்கள் அருகில் இருப்பது நல்லது.

    முடிவுரை

    நாம் வாழும் வரை நோயில்லாமல் வாழவே எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் கால மாற்றம், பல்வேறு சூழல் சார்ந்த பிரச்சினைகள், நம் வாழ்வை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. மேலே குறிபிட்ட வழிமுறைகளை நீங்கள் பின்பற்றும் பொழுது உங்கள் குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் ஏற்படப்போகும் பல்வேறு பிரச்சினைகளை வருமுன் காப்பதோடு தவிர்க்கவும் முடியும். பொதுவாக, பிற்காலத்தில் ஏற்படப்போகும் கை கால் மூட்டு, கழுத்து, முதுகு வலிகள், ஒருபக்கத் தலைவலி, பார்வைக் குறைபாடு போன்றவற்றைத் தடுத்து நிறுத்தவதோடு நோயில்லா, வலியில்லா வாழ்க்கை வாழ்வதோடு மேற்குறிப்பிட்ட சிறு உடற்பயிற்சிகள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதோடு நீங்கள் செய்யும் வேலைகளையும் அதேபோல ஆன்லைன் வகுப்புகளையும் சிரமமில்லாமல் நல்ல ஊக்கத்தோடு கவனிக்கச் செய்ய முடியும்.

    References

    1. Parthibane S, Majumdar A, Kalidoss VK, Roy G. Prevalence and patterns of musculoskeletal pain among school students in Puducherry and its association with sociodemographic and contextual factors. Indian J Pain 2017;31:119-26
    2. Picavet HS, Schouten JS. Musculoskeletal pain in the Netherlands: prevalences, consequences and risk groups, the DMC (3)-study. Pain. 2003;102:167–78.
    3.  Dockrell S, Simms C, Blake C. Schoolbag carriage and schoolbag-related musculoskeletal discomfort among primary school children. Appl Ergon. 2015;51:281–90.
    4. “Neck pain: overview.” 17 December 2015. Pub Med Health, https://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0084213/#i2374.prevalenceandoutlook
    5. Viana MC, Lim CC, Pereira FG, Aguilar-Gaxiola S, Alonso J, Bruffaerts R, et al. Previous mental disorders and subsequent onset of chronic back or neck pain: findings from 19 countries. J Pain. 2018;19(1):99–110.
    6. San Francisco State University. “Computers can be a real pain in the neck.” ScienceDaily. ScienceDaily, 4 January 2019. <www.sciencedaily.com/releases/2019/01/190104131233.htm>.
    Share
  • கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப

    கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

    மதுரை தியாகராசர் கல்லூரி பல சிறப்புகளைக் கொண்டு தனக்கான ஆளுமையை உருவாக்கிக் கொண்டது. அதற்குப் பல அறிஞர்கள் காரணமாக இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பேராசிரியர் தொ.பரமசிவன். இக்கல்லூரியில் நான் 1995-2000 ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படித்துக்கொண்டு இருந்தேன். தியாகராசர் கல்லூரி சைவ மரபிற்கும் தமிழ் அறிஞர்களுக்கும் பெருமக்களுக்கும் பெயர்பெற்ற கல்லூரி. எப்போதுமே மரபின் ஆளுமையும் ஆதிக்கமும் மேலோங்கி நிற்கும். இப்படிப்பட்ட சூழலில் தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்தாக்கம் அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல் அறிவுத்தளத்திலும் தனது செல்வாக்கைச் செலுத்தியது. ஆக மரபுக்கும் புதுமைக்கும் இடையேயான இடைவெளி மாறத் தொடங்கியது. இது தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறையையும் பாதித்தது.

    பேராசிரியர் மாணிக்கம், பேரா. மாரியப்பன், பேரா. அருணகிரி, பேரா. காளிதாஸ் என்று மரபைப் போற்றும் சைவநெறி பின்பற்றும் பேராசிரியர்கள் ஒரு பகுதியாகவும் பேரா.சக்திவேல், பேரா. தொ.பரமசிவன், பேரா. கு. ஞானசம்பந்தன், பேரா. கருணாமூர்த்தி, பேரா. பேச்சிமுத்து என்று புதிய சிந்தனைகளோடு இருந்த பேராசிரியர்கள் ஒரு பகுதியாகவும் செயல்பட்டனர். இவ்வாறு மரபுக்கும் புதுமைக்கும் இடையே காணப்படும் அனைத்து முரண்பாடுகளும் இங்கும் காணப்பட்டன. பேரா தொ.ப அவர்கள் புதுமையின் அடையாளமாக வலம் வந்தார். இவரின் ஆய்வு மனப்பான்மையாலும் சிந்தனைத் தெரிப்பாலும் பலர் கவரப்பட்டனர். எப்போதும் நண்பர்கள் கூட்டம் மாணவர்கள் கூட்டம் என்று விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். மேற்கோள் காட்டும் நூல்களைப் படிக்க இவருக்கு எப்போது நேரம் கிடைக்கும் என்றும் எந்த வகையில் இத்தகைய நூல்களை அறிந்து கொள்கிறார் என்றும் பல நேரங்களில் வியந்தது உண்டு. ஏதேனும் கேள்விகள் கேட்டால் அதற்கான நேரடியான பதிலைக்கூறி இந்தப் புத்தகத்தை, சிறுபத்திரிக்கையைப் படி என்று கூறுவார். இவரின் ஆளுமையைத் தூரத்திலிருந்து வியந்த தருணங்கள் அனேகம். அப்போதெல்லாம் எனக்கு மனதில் தோன்றிய எண்ணம் படிக்க வேண்டும் என்பது தான். ஆனால் கோட்பாட்டுப் பார்வையோடு படிக்க வேண்டும் ஆராய வேண்டும் என்ற பார்வை எனக்கு ஏற்படவில்லை. என்றாலும் அவரின் தோற்றம் என்னையறியாமல் என்னுள் பதிந்தது. மண் சார்ந்த பண்பாட்டு ஈர்ப்பும் அவர் மேல் ஆழமான பற்றுதலை உருவாக்கியது.

    தொ.ப அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பொருளாதாரமும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தமிழும் கற்றார். இதன் பின்னர் ஆறு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 1976ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். முனைவர் பட்ட ஆய்வுக்காகப்  புதுமைப்பித்தன் குறித்து ஆய்வு செய்ய விரும்பினார். ஆனால், இவருடைய ஆய்வு நெறியாளர் மு. சண்முகம் பிள்ளை, கோயில் குறித்து ஆய்வுமேற்கொள்ளும்படி கூறவே, மதுரையில் உள்ள அழகர் கோயிலைத் தனது ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டார். இந்தக் கோயில் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வு, கோயில் குறித்த ஆய்வின் எல்லைகளை விரிவடையச் செய்தது. இவரது ஆய்வுக் கட்டுரையினை மதுரை காமராசர் பல்கலைக்கழம் “அழகர் கோயில்” என புத்தகமாக வெளியிட்டது. வழக்கமாக கோயில்கள் குறித்த ஆய்விலிருந்து இவரது அணுகு முறை முற்றிலும் மாறி, அழகர் கோயிலுக்கும் பல்வேறு சாதியினருக்கும் இடையிலான உறவு குறித்ததாக அமைந்தது. தமிழ் மொழியின் மீது பெரும் பற்றும் ஆர்வமும் கொண்டிருந்தவராக இருந்தபோதும் தன்னுடைய ஆய்வினைச் செம்மைப்படுத்தும் நோக்கில் சமஸ்கிருதமும் கற்றார்.

    சாக்கிர் உசைன் கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1998 முதல் 2008 இல் இளைப்பாறும் வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

    மக்கள் பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டவை. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளைக் காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர்.

    இவரின் நூல்கள் பலதரப்பட்ட பதிப்பகங்களின் வெளியீடாக வெளிவந்துள்ளன. அவை அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம், சமயங்களின் அரசியல், தொ.பரமசிவன் நேர்காணல்கள், விடு பூக்கள், உரைகல், இந்து தேசியம், நாள்மலர்கள், மானுடவாசிப்பு, பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், இதுவே சனநாயகம் போன்றவையாகும்.

    முதுகலை பயிலும் காலத்தில் பேரா. தொ.ப அவர்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குச் சென்று விட்டார். அக்காலத்தில் இவரின் ‘நாள் மலர்கள்’ புத்தகம் எங்களுக்கு பாடமாக வைக்கப்பட்டிருந்தது. புத்தகத்தைப் படித்துவிட்டுப் பாவை பதிப்பகத்தைத் தேடிய காலம் அது. ‘அழகர் கோயில்’ படித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் மதுரையில் இருந்து அழகர்மலை வரை நினைவுகளோடு பயணித்த காலம். கள்ளந்திரி, வைகை ஆற்றுக் கால்வாயில் குளித்து மகிழ்ந்த காலம் என்று வாழ்வோடு கலந்துவிட்டது. ‘பண்பாட்டு அசைவுகள்’ காலச்சுவடு வெளியிட்ட நூலில் பீட்டர் பாண்டியன் என்று அன்போடு அழைக்கப்படும் ஆங்கிலேய அதிகாரியின் வாழ்க்கைச் செய்திகளைத் தொ.ப எடுத்துக் கூறும் விதம் புதுமையானது. எந்த ஒப்பனைகளும் இல்லாமல் திருக்குறளை நினைவுபடுத்தும் சுருங்கச் சொல்லி சிந்திக்க வைக்கும் இவரின் கட்டுரை வடிவம் உவப்பானது, முன்மாதிரியானது. இவரின் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பற்றிய சிந்தனைகள் வியப்பானவை மற்றும் இன்றளவும் கண்டுகொள்ளப்படாதவை.

    இவர் இந்து நாளிதழில் அளித்துள்ள நேர்காணல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய தமிழாய்வு எப்படி சென்று கொண்டிருக்கிறது என்ற தனது கருத்துக்களை விரிவாகக் கூறியுள்ளார். “அவர்களைப் (நாட்டுப்புற மக்கள்) படிக்கிறதுதான் உண்மையாகவே தேசத்தைப் படிப்பதாகும். அவர்களுடைய வாழ்க்கை அசைவுகள் அர்த்தமுடையவை. இன்னும் சொல்லப்போனால், நாட்டார் என்று நாம் அடையாளங்காட்டும் ஒவ்வொருவரையும் ‘படிக்கப்பட வேண்டிய புத்தகங்கள்’ என்று சொல்லலாம். அந்தப் புத்தகங்களைத்தான் நான் ரொம்ப விரும்பிப் படிக்கிறேன். அவர்களிடம் இருக்கும் இயல்பான ஞானம், நம்ம நகர்ப்புறத்துக்காரங்கக்கிட்ட இல்லைங்கிறதுதான் சோகமான விஷயம்” என்று கூறுவதன் மூலம் தனது ஆய்வுக்களம் நாட்டார் மக்களிடமிருந்தே தொடங்குவதைக் காட்டுகிறார்.

    மேலும் “அப்படி நம்பிக்கையளிக்கக்கூடியவர்கள் யாரும் இல்லை. நாங்கள் நம்பிக்கையிழந்து போயிருக்கிறோம் என்பதுதான் இப்போதைய சோகம். நீங்கள் சொல்வது போல், வானமாமாலை, லூர்து போன்றவர்கள் முதல் தலை முறையினர். எங்களைப் போன்றவர்கள் அவர்களுக்கு அடுத்தத் தலைமுறை. மூன்றாவது தலைமுறைக்கு இப்போது ஆள் இல்லையென்பதுதான் உண்மை” என்று ஆய்வுத் தொடர்ச்சி அறுபட்டுப் போன சோகத்தை அவரின் இறுதி நாள் வரை காண முடிந்தது. 1990 களுக்குப் பிறகு ஏற்பட்ட பின் நவீனத்துவ மாற்றமும் 2000க்கு பிறகு ஏற்பட்ட கல்வி வணிகமயமானதும் தமிழாய்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக அறிவு சார்ந்த தேடுதல் மாற்றமடைந்து பதவி பெறுதல் சார்ந்த அறிவு தேடுதல் நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாகத் தன்னை இழந்து தமிழிலக்கியத்தை வளர்த்தெடுத்தத் தன்னார்வ உணர்வாளர்கள் தமிழ்ச் சூழலில் ஒதுங்கிக் கொண்டனர் அல்லது ஓரங்கட்டப்பட்டனர். இவ்வாறு தமிழாய்வு அறுபட்ட பட்டமாகக் காற்றில் திசையற்று அல்லாடிக்கொண்டு இருக்கிறது.

    மேலும் ஆய்வாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு “என்னைவிட, முத்துமோகனுக்கு சித்தாந்தத் தெளிவு நிறைய இருக்கிறது. அவருடைய ‘ஏகம், அநேகம், சாதியம்’ என்ற புத்தகத்துக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். என்னுடைய ‘தெய்வங்களும் சமூகமரபுகளும்’ என்ற புத்தகத்துக்கு அவர் முன்னுரை கொடுத்திருக்கிறார். நாங்கள் இருவரும் ஒரே படகில் பயணிப்பவர்கள்” என்று கூறியுள்ளது சிந்திக்கத் தக்கது.

    தொ.பவின் ஆய்வுப்போக்கைக் கீழ் கண்ட அவரின் வெளிபாட்டின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

    “பாளையங்கோட்டையைப் பற்றிய இதுபோன்ற நிறைய நுணுக்கமான சான்றுகள் அழிந்துவிட்டன. அதற்குப் பிறகுதான் நான் என் ஆய்வுகளைத் தொடங்கினேன். ஹென்றி பவரின் நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், ஹென்றி பவர் சிந்தாமணிக்கு ஒரு உரை எழுதியிருக்கிறார். சிந்தாமணியைப் பாடம் சொல்வதற்கு தமிழ் ஆசிரியர்கள் இப்போதும் பயப்படுவார்கள். ஆனால், ஹென்றி பவர் 1865-லேயே ‘நாமகள் இலம்பகம்’ பகுதிக்கு உ.வே.சாவிற்கு முன்னர் உரை எழுதியிருக்கிறார். ஆனால், உ.வே.சா அதைச் சொல்லவேயில்லை” என்பதன் மூலம் ஆய்வாளரின் அறத்தொடு நிற்றலைச் சிந்திக்கத் தூண்டுகிறார். எச்சார்பும் இல்லாமல் தமிழ்ச் சார்ந்து வாழ்ந்த தொ.ப பழுமரம். இலக்கியப்பறவைகளின் வாழ்விடம்.

    நன்றி: தமிழ் விக்கிப்பீடியா, இந்து தமிழ் நாளிதழ்.

    Share
  • எதிர்காலத்தில் மூளையும் கொந்தல் செய்யப்படுமா?

    எதிர்காலத்தில் மூளையும் கொந்தல் செய்யப்படுமா?

    முனைவர். நடராஜன் ஸ்ரீதர்
     ஆற்றல் அறிவியல் துறை
     அழகப்பா பல்கலைக்கழகம் , காரைக்குடி
     natarajangravity@gmail.com

    முன்னுரை

    சமீப காலங்களில் கணினிகள் கொந்தல் செய்யப்படுவது போல எதிர்காலத்தில் மனிதனின் மூளையும் கொந்தல் செய்யப்படுமா என்பது குறித்து இந்த கட்டுரை ஆய்வு செய்கிறது.

    கணினி கொந்தல்

    கணினிகள் கொந்தல் செய்யப்படுவது என்பது சமீப காலங்களில் வாடிக்கையாக ஒன்றாக அமைந்துவிட்டது. கணினிகள்  நமது அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. நாம் பயன்படுத்தும் திறன்பேசி கூட கணினியாகவே செயல்படுகிறது. ஒரு காலத்தில் ஆய்வகங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கணினி இன்று பல்வேறு வகைகளில் நமது அன்றாட வாழ்வில் ஒன்றாகக் கலந்து விட்டது. பல்வேறு கணினி அமைப்புகளை பல்வேறு விதங்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். டிஜிட்டல் முறையில் நாம் பல்வேறு விஷயங்களைக் கையாள கணினிகள் அமைப்பைப் பயன்படுத்தி வருகிறோம்.

    திறன்மை என்பது கணினிகளின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகிறது.

    திறன்மையை அடிப்படையாகக் கொண்டு நமது அன்றாட வாழ்வில் பல்வேறு கருவிகளின் இயக்கங்கள் கட்டமைக்கப்படும் போது கொந்தல் என்பதும் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி வருகிறது. காரணம் இத்தகைய கருவிகள் கொந்தர்களுக்கு மிக எளிமையாக ஆட்கொள்ளும் விதமாக அமைந்து விடுகிறது. கொந்தர்கள் பல்வேறு வகைகளில் கணினிகளையும், கணினிகள் சார்ந்த கருவிகளையும் ஆட்கொண்டு விடுகின்றனர். அவ்வப்போது பல்வேறு தொழில் நிறுவனங்கள் கொந்தர்களால் தாக்கப்படுவது வழக்கமாகி வருகிறது சமீபகாலத்தில் ரான்சம்வேர் எனப்படும் கொந்தல் தாக்குதல் உலகிலுள்ள பல்வேறு கணினிகளில் மற்றும் கணினிகள் வலையமைப்பின் மீது தொடுக்கப்பட்டது. இத்தகைய தாக்குதலால் பல இணையதள சேவைகள் மற்றும் வர்த்தகம் வெகுவாகப்  பாதிக்கப்பட்டன.  இந்த கொந்தல் தாக்குதல் நடத்தப்படும் விதமானது மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டது. ஒரு கணினியின் மீது அத்தகைய கொந்தல் மென்பொருள் தாக்குதல் நடத்தி அதன் கோப்புகளைப் பூட்டி விடுகிறது. இதை திறப்பதற்கான சாவியை வைத்துக்கொண்டு, தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் பணம் கேட்டு கொந்தர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.  இவ்வகையில் மிக அதிகமான தொகை கைமாறுகிறது. எனினும் இவ்வளவு தொகை கைமாறிய பிறகும் அத்தகைய கோப்புகள் மீண்டும் பழையபடி கிடைக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதேபோன்று பல்வேறு கொந்தல் தாக்குதல்கள் பல்வேறு கணினிகளில் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன.

    இவற்றைத் தடுப்பதற்குப் பல்வேறு பாதுகாப்பு மென்பொருள்கள் மற்றும் கணினி மேம்படுத்தல்கள் ஆகியவை உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டே வருகின்றன. இவையெல்லாம் கணினி தொழில்நுட்பத்தில் நடக்கின்றன இதேபோன்று மனிதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் என்னவாகும்?  மனிதன் மீது கொந்தல் தாக்குதல் நடத்தப்படுமா? படிக்கும் போது ஆச்சரியமாக உள்ளதல்லவா! வாருங்கள் இதைப்  பற்றி மேலும் காணலாம் .

    மூளையும் கணினியும்

    மனித உடலில் மிகப்பெரும் சிந்திக்கும் அமைப்பான மூளையை நாம் பயன்படுத்தி வருகிறோம். மூளையின் திறமை அளவிட இயலாதது. மனிதனின் மூளையானது மிக சிக்கலான நரம்பு அமைப்புகளைக் கொண்டது. மனித மூளை பில்லியன் கணக்கிலான நரம்பணுக்களைக் கொண்டது. இந்த நரம்பணுக்களின் வாயிலாகச் சமிக்ஞைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு மூளையின் இயக்கமானது நடைபெறுகிறது. நாம் சிந்திப்பது, ஞாபகம் வைத்துக் கொள்வது மற்றும் முடிவெடுப்பது ஆகியவை இத்தகைய நரம்பணுக்களின் செயல்பாடுகளின் வாயிலாகவே நடக்கிறது. இத்தகைய நரம்பணுக்கள் சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொள்கின்றன. இந்த சமிக்ஞைகள் மின்காந்த அலைகளாக அமைகின்றன. இத்தகைய மின்காந்த அலைகளைப் படிப்பதன் மூலம் மூளையின் இயக்கத்தை தெரிந்துக் கொள்ள முடியும் என விஞ்ஞானம் நம்புகிறது. இதற்காகப் பல்வேறு முயற்சிகள் நவீன விஞ்ஞானத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய முயற்சிகளில் முன்னணியில் இருப்பது மற்றும் ஓரளவிற்கு வெற்றி கண்டிருப்பதுமான ஒரு தொழில்நுட்பம் நியூரலின்க் நிறுவனத்தால் முன்மொழியப்பட்டுள்ள தொழில்நுட்பம் ஆகும். நியூரலின்க் நிறுவனமானது,  பல்வேறு துறைகளில் தொழில்நுட்பப் புரட்சிகளைச் செய்து வருகின்ற, எலான் மஸ்க் அவர்களின் நிறுவனமாகும். இந்நிறுவனம் மனித மூளையும், கணினியையும் ஒருங்கிணைக்கக் கூடிய வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

    நியூராலிங்க்

    மனித மூளையையும் , வெளிப்புறத்தில் உள்ள ஒரு கணினியையும் ஒன்றிணைக்கும் போது மனித மூளையில் நாம் எண்ணும் எண்ணங்களை கணினிகள் வாயிலாகப்  படித்துக் கொள்ள முடியும் எனவும் மற்றும் மூளை பாதிக்கப்பட்டுள்ள அல்லது செயலிழந்த  நபர்களுக்கு வெளியிலிருந்து சமிக்ஞைகளைக் கொடுத்து அவர்களிடமிருந்து தகவல்களை பெற வைக்கவோ அல்லது அவர்களது உடல் பாகங்களை இயங்கவைக்கவோ முடியும் எனவும் ஆழ்ந்த நோக்கங்களைக் கொண்டு நியூராலின்க் நிறுவனம் தமது ஆய்வுகளை நடத்தி வருகிறது [1]. இதற்கென இந்நிறுவனம் நடவி அமைப்பு ஒன்றைத் தயார் செய்து  வைத்துள்ளது. இந்த அமைப்பு மூளையும் வெளிப்புறக் கணினியையும் தொடர்பாடச் செய்கிறது. இந்த அமைப்பில் இணைப்பான்கள் மற்றும் நரம்பணு இழைகள் ஆகியவை இருக்கும். இவை தலையின் மேல் பகுதி வாயிலாக மூளையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் இருக்கும். இந்த நடவி அமைப்பு மின்னேற்றம் செய்து கொள்ளக் கூடிய வகையிலும் வருகிறது. இதனுடன் மின்கலங்கள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த நடவி அமைப்பானது மூளையில் உள்ள மின் காந்த அலைகளைப் பெருக்கிக் கணினிக்குச்  சமிக்ஞைகளாக அனுப்புகிறது. தகுந்த மென்பொருட்கள் வாயிலாக இந்த சமிக்ஞைகள் படிக்கப்பட்டு மூளையில் உள்ள தகவல்கள் ஆய்விற்குத் தரப்படுகிறது.

    சமீபத்தில் நியூராலிங்க் நிறுவனம் இத்தகைய நடவி அமைப்பைப் பார்வையாளர்களுக்கு அரங்கேற்றம் செய்து காட்டியது. பன்றியின் மூளையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கணினிகள் வாயிலாக சமிக்ஞைகளாகப் பெற்று மூளையில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியும் என்று உலகிற்கு இந்நிறுவனம் வெளிப்படுத்தியது. இதுகுறித்து தமிழில் வெளிவந்துள்ள கட்டுரையை உசாத்துணை எண் [2] இல் காணலாம்.

    மூளையும் கொந்தலும்

    இவ்வாறு மூளையில் உள்ள தகவல்களைக் கணினியில் பெற்றுக் கொள்வதும் மேலும் கணினி வாயிலாகக் கட்டளைகளை மூளைக்குள் செலுத்த முடிவதையும் ஒரு பொதுவான கட்டமைப்பின் வாயிலாகக் காணும்போது, இவ்விணைப்பின் ஒட்டுமொத்த செயல்பாடும் கணினியினை, அடிப்படையாகக் கொண்டு செயல்படும் திறன்மைக் கருவிகளை ஒத்ததாக  இருப்பதாக ஒரு பொதுவான கருத்துக்கு வரமுடியும்.

    படம் 1 : எதிர்கால மூளை கொந்தல் . படம் உதவி : kaspersky ஆய்வகம்

    திறன்மைக் கருவிகளை கொந்தர்கள் அவற்றின் அடிப்படைக் கணித அமைப்புகளை கொண்டு கொந்தல் செய்து விடுகின்றனர். திறன்மைக் கருவிகளில் உள்ள கம்பியில்லாத்  தகவல்கள் பரிமாற்றம் வாயிலாகவும் மற்றும் இணைய வழிச் செயல்பாடுகள் வாயிலாகவும் பொதுவாக கொந்தலானது நடைபெறுகிறது. அதேபோல கணினிகளில் உள்ள பல்வேறு மென்பொருட்கள் மூலமும் கொந்தல் நடைபெறுகிறது.  இத்தகைய கொந்தல் தாக்குதல்களானது திறன்பேசிகள் மற்றும் திறன் கருவிகளைத் தாக்கும்போது மூளையின் சமிக்ஞைகளைக் கையாளும்  திறன் கருவிகளும் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியவருகிறது. அதேபோல திறன்மைக் கருவிகள் வாயிலாக அல்லது கணினிகள் வாயிலாக மூளைக்கு அனுப்பப்படும் சமிக்ஞைகளைக் கொந்தர்கள் கையாடல் செய்து விட முடியும் என ஊகிக்க முடிகிறது. மூளையின் சமிக்ஞைகள் கணினிக்கு அனுப்பப்படும் போது மூளையில் உள்ள ரகசியங்கள் கொந்தர்களுக்கு அக்கருவிகளக்  கொந்தல் செய்வதன் மூலம் தெரியவரும் என்பது இதுவரை நடந்துள்ள உலகளாவிய கொந்தல் தாக்குதல்கள் நமக்கு அளிக்க வரும் செய்தியாகும். இதேபோல கணினிகள் கொந்தல்கள் செய்யப்பட்டு அவற்றில் மூலம் தவறான கட்டளைகள் மூளைக்குச்  செலுத்தப்படும் அபாயமும் இதனுடன் சேர்ந்து கொள்கிறது. இதன் மூலம் ஒரு மனிதன் கொந்தர்களால் ஆளப்படும் நிலைகூட எதிர்காலத்தில் உருவாகிவிடும். மேலும் இவற்றுடன் செயற்கை நுண்ணறிவும் சேர்ந்து கொண்டால் நிலைமை இன்னும் விபரீதம் ஆகிவிடும். சமீபத்திய ஆய்வுக் குறிப்பு ஒன்று 2030 ஆம் ஆண்டு வாக்கில் முதல் மூளைக் கொந்தல் நடைபெறும் என்று தெரிவிக்கிறது[3]. எனவே எதிர்காலத்தில் மனித மூளையும் கொந்தல் செய்யப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது.

    முடிவுரை

    பிரபஞ்ச ரகசியங்களைப் புரிந்து கொள்வதிலும் மற்றும் மனித உடலின் ரகசியங்களை ஆழமாக உணர்ந்து கொள்வதிலும் மனிதனின் தேடல் எப்போதும் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறது. இவ்வகையில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்கள் மனித வாழ்வை மேம்படுத்தப்பட்ட நிலையை நோக்கி அழைத்துச் செல்கிறது. எனினும் சில சில தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதனின் அன்றாட வாழ்விற்கு ஊறு  விளைவித்து விடக் கூடிய வகையில் அமைந்து விடுமோ என்ற அச்சம் விஞ்ஞானிகள் மத்தியில் தற்போது வெகுவாகத் தொற்றிக்கொண்டுள்ளது. இத்தகைய பயங்களைச் சரி செய்வதும் மற்றும் இவ்வாறான தவறுகள் ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதும் இத்தகைய தொழில்நுட்பத்தைக் கண்டறியும் விஞ்ஞானிகளின் தலையாய கடமையாக உள்ளது. எதிர்கால வாழ்வு இனிமையாக அமையும் என நம்புவோம்.

    உசாத்துணைகள்

    [1] https://neuralink.com/
    [2] மனித மூளை கணினி நேர் தொடர்பு S Natarajan முழுமை அறிவியல் உதயம் 13 (11), 11114-11123, 2020
    [3] https://www.rt.com/news/442800-brain-implants-hacking-security/

    கலைச்சொற்கள்

    கொந்தல் – Hacking
    திறன்மை – Smartness
    கொந்தர் – Hacker
    நடவி – implant
    இணைப்பான் – Link
    நரம்பணு இழை – Neural Thread
    மின்னேற்றி – Charger
    மின்முனை – electrode
    நரம்பணு  – நியூரான்
    சில்லு – Chip

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 23

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 23

    -மேகலா இராமமூர்த்தி

    சீதையை அவள் தங்கியிருந்த பன்னசாலையோடு பெயர்த்தெடுத்துக்கொண்டு தன் தேரில் ஏறிய இராவணன், தேரை விரைந்து செலுத்து என்று தேர்ப்பாகனுக்குக் கட்டளையிட்டான். இந்த அசம்பாவிதங்களைச் சிறிதும் எதிர்பாராத சீதை, தீயில் வீழ்ந்து வெந்தழியும் கொடிபோல் துடித்து எழுந்தாள்; அழுதாள்; அரற்றினாள்; அறமே என்னை இத்துன்பத்திலிருந்து விரைந்து காத்திடு என்று முறையிட்டுக் கதறினாள்.

    விடு தேர் என வெங் கனல்
         வெந்து அழியும்
    கொடிபோல் புரள்வாள்
         குலைவாள் அயர்வாள்
    துடியா எழுவாள்
         துயரால் அழுவாள்
    கடிதா அறனே இது
         கா எனுமால். (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3492)

    யாரும் தனக்குத் துணையில்லாத நிலையில் அறமே தன்னைக் காக்கும் என்றெண்ணிய சீதை என்னைக் காப்பாற்று என்று அறத்திடம் இறைஞ்சுகின்றாள். வழியில் தென்பட்ட மலையிடமும் மரத்திடமும் மயிலிடமும் குயிலிடமும் இவையொத்த இன்னபிற அஃறிணைப் பொருள்களிடமும் தன்னிலையை விளக்கி இராம இலக்குவரிடம் இதை உரைப்பீர் என்று புலம்பியவண்ணம் செல்கின்றாள்.

    தலைவனைப் பிரிந்த தலைவி பல பொருள்களைத் தலைவனிடம் தூதனுப்புவதுபோல் இங்கே சீதையும் தன் பரிதாப நிலையை கண்ணில்படுகின்ற அஃறிணைப் பொருள்களிடத்துச் சொல்லித் தன் தலைவன் இராமனிடம் உரைக்கச் சொல்லுகிறாள் என்று கொள்ளலாம்.

    சீதையின் புலம்பலைக் கேட்ட இராவணன் ”பெண்ணே! இராமன் என்னோடு போரிட்டு என்னைக் கொன்றபின் உன்னை மீட்டுச் செல்லட்டும்” என்று கூறிவிட்டு நகைத்தான். அதைக்கேட்டுச் சினமுற்ற சீதை, அவனோடு போரிட அஞ்சித்தானே என்னைத் திருட்டுத்தனமாய்க் கடத்திச் செல்கின்றாய்?” என்று சீறினாள்.

    “வலியற்ற மானுடர்களோடு பொருதல் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த என் வீரத்தோளுக்கு இழுக்காகும்” என்று இராவணன் அதற்குச் சொன்ன மறுமொழி சீதையின் சினத்தீயில் மேலும் எண்ணெய் வார்த்தது. 

    ”தம் குலப் பகைவரோடு போரிடப் போதல் குற்றம்; அவர்களோடு வாளேந்திப் பொருதல் நாணுதற்குரியது; ஆனால் கற்புடைய மகளிரை வஞ்சகமாகக் கவர்ந்துசெல்வது வலிமையைப் பறைசாற்றும் செயல்போலும்” என்று இராவணனின் ஈனச்செயலைப் பழித்துரைத்த சீதை, ”இரக்கமற்ற அரக்கர்க்கு பழிச்செயல் என்பதுதான் எதுவோ?” என்று கேட்டாள் எள்ளலோடு.

    பாவையும் அதனைக் கேளா தம்
         குலப் பகைஞர்தம்பால்
    போவது குற்றம் வாளின் பொருவது
         நாணம் போலாம்
    ஆவது கற்பினாரை வஞ்சிக்கும்
         ஆற்றலே ஆம்
    ஏவம் என் பழிதான் என்னே
         இரக்கம் இல் அரக்கர்க்கு என்றாள். (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3502)

    அவ்வேளையில் இராவணன் சீதையைத் தூக்கிச் செல்வதைக் கண்ணுற்றான் அப்பகுதியில் தங்கியிருந்த கழுகரசன் சடாயு. பொன்மலையொன்று வானில் பறந்துவருவதுபோல் வந்த அவன், ”அடே இராவணா! நீ உன் கிளையொடும் கெடுவாய்; அதிலிருந்து தப்ப வேண்டுமானால் சீதையை இப்போதே விடுவாய்!” என்று இராவணனைப் பார்த்துக் கர்ஜித்தான்.

    தொடர்ந்து பேசிய சடாயு, “விடையானிடம் நீ பெற்ற வரங்கள் யாவும் இராமன் உன் எதிரில் வந்து கணைதொடுக்கும் போழ்தில் விடைபெற்றுப் போய்விடும்; ஆதலால் அன்னை அனைய சீதையை விட்டுவிட்டு இங்கிருந்து ஓடிப் போய்விடு; இவளை நானே முன்பிருந்த இடத்தில் கொண்டு சேர்ப்பேன்!” என்றான்.

    அவன் கருத்தை ஏற்கமறுத்த இராவணன், ”உன் மார்பில் என் அம்பு ஊடுருவி அதனைப் பெரும்புண் ஆக்குதற்கு முன்பு நீ இங்கிருந்து அகன்றிடு! காய்ச்சிய இரும்பிலிட்ட நீர் மீண்டாலும் கரும்பனைய மொழியாள் சீதை என்னிடமிருந்து மீண்டிலள்” என்றுரைத்தான் தீர்மானமாக.

    வரும் புண்டரம் வாளி
         உன்மார்பு உருவிப்
    பெரும் புண் திறவாவகை
         பேருதி நீ
    இரும்பு உண்ட நீர்
         மீளினும் என்னுழையின்
    கரும்பு உண்ட சொல்
         மீள்கிலள் காணுதியால் (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3520)

    ”இரும்பு உண்ட நீர் மீளினும்” என்ற இச்சொற்றொடர் ஐயூர் மூலங்கிழாரின் பின்வரும் புறப்பாடல் அடிகளை நினைவூட்டுகின்றன.

     …கானப் பேரெயில்
    கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டி
    இரும்புண் நீரினும் மீட்டற்கு அரிதென
    வேங்கை மார்பன் இரங்க…
    (புறம்: 21)

    பாண்டியன் உக்கிரப் பெருவழுதிக்கும் கானப்பேரெயில் (இப்போதைய காளையார் கோயில்) எனும் ஊரையாண்ட குறுநில மன்னன் வேங்கை மார்பனுக்கும் நிகழ்ந்த போரில் கானப்பேரெயிலைக் கைப்பற்றினான் உக்கிரப் பெருவழுதி. அதுகண்ட வேங்கை மார்பன், கொல்லனின் செந்தீயில் மாட்டப்பட்ட இரும்பு உண்ட நீர் மீளுவதைவிட அரிதான செயல் என் கானப்பேரெயிலை வழுதியிடமிருந்து மீட்பது என்றெண்ணி இரங்கினான் என்கின்றார் புலவர்.

    ”கனலிரும்புண்ட நீரின் விடாது” (பெருங். 3.25.71) என்று பெருங்கதையில் கொங்குவேளிரும் இவ் உவமையைப் பயன்படுத்தியிருக்கக் காண்கின்றோம்.

    சான்றோர் பலராலும் எடுத்தாளப்பட்ட இவ் உவமை கல்விவல்லாரான கம்பரையும் கவர்ந்ததில் வியப்பில்லை.

    சடாயுவுக்கும் இராவணனுக்கும் கடும்போர் தொடங்கிற்று. சடாயு தன் அலகால் கொத்தியும் நகங்களால் பிறாண்டியும் இராவணனின் முத்தார மார்பில் இருந்த கவசங்களை நெகிழச் செய்தான். பதிலுக்கு இராவணனும் கணைகளால் சடாயுவின் மார்பைத் துளைத்தான். சடாயுவும் சளைக்காது இராவணனின் கையிலிருந்த வில்லைத் தன் பல்லால் பிடுங்கி எறிந்தான். சிச்சிலிப் பறவைபோல் இராவணனைப் பாய்ந்து தாக்கினான்.

    சடாயுவால் தன் படைக்கலங்கள் அனைத்தையும் இழந்த இராவணன் பொறுமையும் இழந்தவனாய்க் கயிலையைப் பெயர்த்தெடுக்க முனைந்த காலத்துச் சங்கரன் கொடுத்த தெய்வ வாளான சந்திரகாசத்தை எடுத்துச் சடாயுவை நோக்கி வீசவே சிறகுகளற்ற மலைபோல் மண்ணில் துவண்டு வீழ்ந்தான் புள்ளின் வேந்தன் சடாயு.

    தன்னைக் காக்கப் போராடிய ஒரே உயிரும் தோற்று மண்ணில் வீழ்ந்ததைக் கண்ட சீதை, ”அல்லலுற்ற என்னை அஞ்சேல் என்று காத்துநின்ற இந்த நல்லவன் தோற்பதேன்? நரகன் வெல்வதேன்? அறமென்ற ஒன்று இல்லையோ?” என்றெண்ணிக் குமைந்தாள்.

    அல்லல் உற்றேனை வந்து அஞ்சல்என்ற இந்
    நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே
    வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ
    இல்லையோ அறமென இரங்கி ஏங்கினாள்.
    (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3549)

    தடுப்பதற்கு வேறாரும் இன்மையால் சீதையோடு விரைந்து விண்ணில் ஏகிய இராவணன், அவளை அசோகவனம் எனுமிடத்தில் அரக்கியர் நடுவில் சிறைவைத்தான்.

    சீதையின் நிலை இவ்வாறிருக்க, இராமனைத் தேடிச்சென்ற இலக்குவன் அவனை வழியிலேயே சந்தித்தான். இலக்குவனை அங்கே எதிர்பாராத இராமன், ”சீதைக்குக் காவலாய் இரு என்ற என் சொல்லையும் மீறி இலக்குவன் இங்கு வந்த காரணமென்ன? ஒருவேளை அரக்கன் எழுப்பிய குரலை என் குரல் என்றெண்ணிச் சீதை இவனை அனுப்பியிருப்பாளோ?” என்று சிந்தித்தான். தன்னருகில் வந்த இலக்குவனை அன்போடு தழுவிய இராமன், இங்கு நீ வந்த காரணம் யாது என்று வினவ,

    “அண்ணா! உம் அபயக் குரலைக் கேட்ட சீதை, நீர் அபாயத்தில் சிக்கியிருக்கின்றீர் என்றெண்ணி உம்மைக் காக்க என்னைப் போகச் சொன்னாள்; நான் மறுத்தால் தீயில் வீழ்ந்து இறப்பேன் என்றாள். அதனால்தான் வேறு வழியின்றி நான் இவ்விடம் வந்தேன்” என்று தன் சங்கடமான சூழலை இராமனுக்கு விளக்கினான் இளவல்.

    அதனை ஏற்ற இராமன், “நீ மாய மான் என்று தடுத்தும் கேளாமல் அதன் பின்னால் நான் போனதால் நேர்ந்த சங்கடங்களே இவை” என்று வருந்தினான். பின்னர் இருவரும் சீதைக்கு ஏதேனும் தீங்கு நேராதிருக்க வேண்டுமே எனும் பதைபதைப்புடன் பன்னசாலை நோக்கி விரைந்தனர்.

    அங்கே கனங்குழையாள் சீதையைக் காணவில்லை! தான் பயன்படுத்திக் கொள்வதற்காக மண்ணில் புதைத்துவைத்த மாநிதியை வஞ்சனையார் கொள்ளையிட்டுச் சென்றதுபோன்ற வேதனையையும் ஏமாற்றத்தையும் அடைந்து நைந்தான் இராமன்.

    இராமன் நிலைகண்ட இலக்குவன், ”அண்ணா! தேர்ச்சக்கரங்களின் சுவடுகள் இங்கே தெரிகின்றன; சீதையைத் தீண்டுதற்கு அஞ்சி யாரோ பன்னசாலையோடு அவளைக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். எனவே இங்கேயே இருந்து வேதனைப்படுவதை விடுத்துச் சீதையைக் கொண்டுசென்றவர்கள் நெடுந்தூரம் செல்வதற்குமுன் நாம் அவர்களைத் தொடர்ந்துசென்று பிடிப்போம்” என்று சொன்னதை இராமன் ஏற்றுக்கொண்டான். இருவரும் தேர்ச்சக்கரச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லலானார்கள்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • கல்லூரிப் பொதுத்தமிழ்ப் பாடத்தைக் கற்கவும் கற்பிக்கவும் கணினிப் பயன்பாடு

    கல்லூரிப் பொதுத்தமிழ்ப் பாடத்தைக் கற்கவும் கற்பிக்கவும் கணினிப் பயன்பாடு

    Dr. ச. கண்மணி கணேசன் (ப.நி.)
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்
    ஸ்ரீகாளிஸ்வரி கல்லூரி, சிவகாசி. 626189, இந்தியா.
    kanmanitamilskc@gmail.com

    அறிமுகம் 

    பள்ளியிறுதித் தேர்வு முடித்துக் கல்லூரிக்கு வரும் மாணவர்  கற்றுக்  கொள்ள வேண்டிய பொதுத்தமிழைக் கணினி மூலம் எவ்வாறு கற்கலாம்; கற்பிக்கலாம் என்பதை அலசிப் பார்ப்பதே  இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். எழுதுவதற்கு மட்டுமே முதன்மை கொடுக்கும் போக்கு கல்லூரிக் கல்வியில் பல்லாண்டு காலமாக நிலைத்திருப்பதால்; தமிழ்க் கல்வியின் தரத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசரத்தேவை உள்ளது.

    கல்லூரியில் தமிழ் கற்பித்த அனுபவம் இக்கட்டுரையின் பரப்பும் எல்லையுமாக அமைய; தன்னாட்சியில் பாடத்திட்டம் தீட்டிய பயிற்சி சிக்கலுக்குத் தீர்வு  காண முனைகிறது. காரணகாரியத் தொடர்புடன் விளக்கும் மரபுவழிப்பட்ட ஆய்வாக அமைந்து; சிக்கலைக் கணினிப் பயன்பாட்டால்  தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கையை  அளிக்கிறது.

    கற்றல் கற்பித்தலுக்கு முன்னும் பின்னும்

    கற்பிக்கும் உத்திகள் பாடத்திட்டத்துடன் தொடர்புடையன. மாணவர் கற்ற பிறகு சோதனை செய்வது ஆசிரியப் பணியின் அடுத்த பொறுப்பு. கற்றல் கற்பித்தல் ஒருபுறம் பாடத்திட்டத்தில் காலூன்றி; மறுபுறம் தேர்வுமுறையை எட்டிப் பார்க்கும். அதனால் தான் பல்கலைக்கழக நதிநல்கைக் குழுவின் தேசீயத் தரநிர்ணய மதிப்பீட்டுக் குழுமம் (National Assessment and Accreditation Council) கல்வி நிறுவனங்களின் தகுதியை மதிப்பிடப் பாடத்தன்மைகளை (curricular aspects- 1st criterion) முதல் கூறாகவும்; கற்றல் கற்பித்தல் மதிப்பீடு செய்தலை (teaching learning and evaluation) அடுத்த கூறாகவும் வரையறுக்கிறது. எனவே இக்கட்டுரை பாடத் திட்டத்திலிருந்து தொடங்குகிறது.

    மொழியும் மொழிக்கல்வியும்

    மொழி என்னும் கருத்துப் பரிமாற்றத்திற்குரிய கருவி; பேசும் வரை மட்டுமே உயிர்த்திருக்கும். அன்றாட வாழ்வில் பேசாத மொழி காலப் போக்கில் அழிந்துவிடும். எனவே  மொழிக்கல்வி; எழுதக் கொடுக்கும் முக்கியத்துவத்தை வாய்த்திறனுக்கும் கொடுத்தல் நலம். மொழியின் அடிப்படை அலகு ஒலி. மொழிக் கல்வியிலும் இந்த அலகு சிறப்பிடம் பெறவேண்டும். பள்ளிக்கல்வியில் வாய்மொழிப்  பயிற்சியும் தேர்வும்  பாலர் பள்ளியில் மட்டுமே உள்ளன.

    இன்றைய சிக்கல்    

    பெரும்பாலான மாணவர் வாயாரத் தமிழ் வாசிக்கத் தடுமாறுகின்றனர். தட்டுத்தடுமாறி வாசிப்பவரின் தமிழில் /ல்,ள்,ழ்/,  /ர்,ற்/, /ன்,ண்/ ஆகியவற்றின் ஒலிப்பில் வேறுபாடு இல்லை. மேற்சுட்டிய ஒலிகள் பொருள் வேறுபாட்டிற்கு உரிய அடிப்படைக் காரணிகள். அவற்றை மாற்றி ஒலிப்பதும், எழுதுவதும் பெரும்பிழை ஆகும். ஒற்று மிகும் இடங்களை ஒலிக்கும்போது கொடுக்க வேண்டிய அழுத்தம் இன்றியமையாதது. நிறுத்தி வாசிக்க வேண்டிய இடம் எது? சேர்த்து வாசிக்க வேண்டிய இடம் எது? என்னும் வேறுபாடும், விளைவும் பற்றிய புரிதல் தேவை. இயந்திரத்தன்மையுடன் ஒரே சீராக ஏற்ற இறக்கங்களின்றி வாசிப்பதால்  பொருள் தெளிவுறாது. இந்நடைமுறைப்  பிரச்சினைகளைக்  கருத்தில் கொண்டு பாடத்திட்டம் அமைய வேண்டும்.

    பட்டப்படிப்பில் பொதுத்தமிழுக்குக்  கிடைக்கும் நேரம்

    ஒவ்வொரு பட்டப் படிப்பிற்கும்; முதல் நான்கு பருவங்களில்  (semesters) பொதுத்தமிழுக்கென ஒதுக்கப்படும்  (6×15=90)× 4= 360 மணி நேரத்தில் செய்யக்கூடியதை மட்டுமே நாம்  திட்டமிட இயலும். இந்தக் கால அளவில் மாற்றம் நிகழ வழியில்லை. ஏனெனில் இது பல்கலைக்கழக நதி நல்கைக் குழுவின் அங்கீகரிக்கப்பட்ட திட்டவரைவில் இடம்பெறும் பரிந்துரை ஆகும். ஒரு பருவத்திற்கு 90மணி நேரம் வீதம் நான்கு பருவங்களில் நடக்கும்   பொதுத்தமிழ் வகுப்புகள் இலக்கியம், இலக்கணம், இலக்கியவரலாறு ஆகிய பாடங்களை மட்டுமே இன்றுவரை கற்றுத்தருகின்றன. இவற்றுடன் வாய் விட்டுத் தமிழை வாசித்தலும் அதை மதிப்பீடு செய்வதும் சேர்த்துக் கொள்ள வேண்டியவை ஆகின்றன.

    தமிழைத் தாய்மொழியாகப் பெறாத மாணவர்களுக்கும், பள்ளியில் தமிழ் பயிலாத மாணவர்களுக்கும் அடிப்படைத் தமிழ் என்ற பெயரில் நடத்தும் பாடங்களுடனும் இதே பயிற்சியைச் சேர்ப்பதில் முட்டுப்பாடு ஏதுமில்லை. அவர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு மணி நேரம் என ஒரு பருவத்திற்கு 30மணி நேரம்; ஆக நான்கு பருவங்களில் (30×4=) 120மணி நேரம் தமிழ் வகுப்புகள் நடக்கும்.

    தமிழ்வகுப்பில் கணினிப் பயன்பாடு

    தொற்று நச்சில் காரணமாக உள்ளிருக்கும் இக்காலம் இதுநாள் வரை இருந்த பல நடைமுறைகளைக்  காலாவதி ஆக்கி விட்டது. பள்ளிக்   குழந்தைகளும்  தமது பாடங்களைக் கணினி மூலம் கற்கின்றனர். கல்வியாண்டின் ஒவ்வொரு பருவத் தொடக்கத்திலும் வகுப்பாசிரியர் தாம் எடுக்கவிருக்கும் பாடங்களைக்  காலஅட்டவணைக்கு  உட்படுத்தித் தலைமையிடத்தில் கணினி உபகரணங்களாகச் (notes of lesson) சமர்ப்பித்து விட வேண்டும். கல்லூரிப் பாடங்கள் தமிழ் உச்சரிப்புக்கு முதலிடம் கொடுத்து குறுந்தட்டுக்களாகவோ;  அது போன்ற வேறு பிற உபகரணங்களாகவோ ஒலிப்பதிவு செய்யப்பட்டு பருவத்தின் தொடக்கத்திலேயே மாணவர்க்கு வழங்கப்பட வேண்டும். மாணவர் அன்றாடம் அதைத் திரும்பத்திரும்ப வீட்டில் கேட்டு உடன்சேர்ந்து வாய் விட்டுப் பயில்வது அவசியம். அப்பதிவுகள் சரியான உச்சரிப்பில் அமைய வேண்டும் என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செய்வதன் மூலம் வகுப்பில் மாணவர் தமிழ் வாசிக்கத் தாராளமாக நேரம் கிடைக்கும். அவர்கள் வாசிப்பதும் சொல்வதும் கணினி உதவியுடன் மதிப்பிடப்பட வேண்டும். மொழியியல் சோதனைச் சாலைகளில் ஒலிகளைச் சரிவர அடையாளம் காணும் கருவிகள் உள்ளன. எனவே கணினித் துணையுடன் மாணவர் சொல்வதை மதிப்பிட இயலும். தமிழ்வகுப்புகளில் அதற்குரிய உபகரணங்கள் இருக்க வேண்டும்.

    வாசிப்புப் பயிற்சிக்குரிய பாடம்

    அந்தந்தப் பருவத்திற்குரிய பாடங்களே வாசிப்பதற்கு உரியனவாய் அமைவது தான் வசதியாகவும் பொருத்தமாகவும் இருக்கும். இதன் மூலம் பாடத்தை ஆழமாகவும் அகலமாகவும் பயின்று கொள்வதுடன்; மொழி உச்சரிப்பும் சீராகும்.

    முதல்பருவத்தில் அடிப்படை அலகாகிய ஒலிகளுக்கும் அவற்றைத் தவறின்றி  உச்சரிப்பதற்கும் முதலிடம் தந்து சொற்களை வாசிக்கும் பயிற்சி அளிக்கலாம். அவ்வாறு சொற்பயிற்சி அளிக்கப் பாடப்பகுதியில் காணும்  தொடர்புடைய சொற்களின் குறைஒலி இணைகளைத் (minimal pairs) தொகுத்துப் பாடமாக்கலாம். எடுத்துக்காட்டாக பாடப்பகுதியில் ‘முல்லை’ என்ற சொல் இருப்பின்;

    முல்லை  கொல்லை     கல்லை   வல்லை     புல்லை   சொல்லை
    முள்ளை  கொள்ளை கள்ளை  வள்ளை   புள்ளை     சொள்ளை

    என்ற போக்கில் 100சொல் தொகுதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலே காட்டியிருப்பது ஒரு சொல் தொகுதி மட்டுமே.

    இரண்டாம்பருவம்  சொற்றொடர்கள்  வாசிக்கும் பயிற்சியாக அமைய வேண்டும். /க், ச், த், ப்/ ஒற்று மிகும் இடங்களுக்குத் தகுந்த அழுத்தம் கொடுக்கப் பழக்க வேண்டும். சான்றாக;

    எடுத்துக்கொடுத்தான்          எடுத்துச்சொன்னான்
    எடுத்துத்தைத்தான்          எடுத்துப் பார்த்தான்

    இதுபோல் 100தொடர்த் தொகுதிகள் பாடப்பகுதியுடன் தொடர்புடையனவாய் அமைக்க வேண்டும்.

    மூன்றாவது பருவத்தில் முழுமையான தொடர்களை வாசிக்கும் பயிற்சி தரவேண்டும் நிறுத்தற்குறிகளுடன்; பாடத்தோடு தொடர்புடைய   100வாக்கியங்கள்  உருவாக்கப்பட வேண்டும். அவற்றைச் சரிவர நிறுத்தி வாசிக்கக் கற்றுத் தர வேண்டும்.

    நான்காவது பருவத்தில் ஒட்டுமொத்தத் திறனைப் பாடல் வாசிப்பின் மூலமும், உரைநடை வாசிப்பின் மூலமும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

    அடிப்படைத்தமிழ் மாணவர்க்கு விளம்பரப்பலகைகள், பேருந்துத்  தடஅறிவிப்பு, செய்தித்தாள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பத்திரிகை வாசித்தல் எனப் புதிய கோணங்களில் தமிழ் கற்றுக் கொடுப்பதே நல்லது. அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய திருக்குறள், நாலடியார், மூதுரை, கொன்றை வேந்தன் போன்ற பாடல்களை நான்காம் பருவத்தில் பாடமாக வைக்கலாம்.

    அகமதிப்பீடும் புறமதிப்பீடும் (internal and external assessments)      

    மதிப்பீடுகளைப் பங்கீடு செய்வதில் தன்னாட்சி நிறுவனங்களுக்குச்  சுதந்திரம் உள்ளது. 50% அகமதிப்பீடும் 50% புறமதிப்பீடும் முறையே பேசும் தமிழுக்கும் எழுதும் தமிழுக்கும் ஒதுக்கலாம். அகமதிப்பீட்டுக்கென நடைபெறும் மூன்று சுழல் தேர்வுகளில் (cycle tests) பாடத்தின் ஆழமான அறிவைத் துல்லியமாகச் சோதித்தறியும் வினாடிவினா, தானாக வடிவமைக்கக் கூடிய பயிற்சிக்கட்டுரைகள், தமிழ் வாசிப்பு என மூன்றும் இடம்பெற வேண்டும். எப்போது வாய்மொழித்தேர்வு மதிப்பிடும் முறைகளில் ஒன்றாக  ஆக்கப்படுகிறதோ; அப்போது தான் வாய்மொழிப் பயிற்சிக்கு உரிய சிறப்பிடம் கிடைக்கும். வாசிப்புப் பயிற்சியின் அகமதிப்பீட்டைக் கணினியே மதிப்பிடவேண்டும். புறமதிப்பீட்டில் எழுத்துத் தேர்வை (written exam) மட்டும்  வைத்துக் கொள்ளலாம்.

    பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னர் வாய்மொழிப் பயிற்சிகள் உள்ளன எனினும்; பள்ளியில் வாய்மொழிப் பயிற்சி முக்கியத்துவம் பெறவில்லை என்பது பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவர் மூலம் தெரிகிறது.

    முடிபும் பயனும்      

    செந்தமிழும் நாப்பழக்கம்’என்ற முதுமொழியின் படி வாய்மொழிப்பயிற்சிக்கும் தேர்வுக்கும் இடம் கொடுப்பது சிறந்தது. கற்றல் கற்பித்தல் மதிப்பிடுவதில் கணினிப் பயன்பாடு இடம்பெறும் போது; தமிழுக்கே உரிய சிறப்பு ஒலிகளை இறவாமல் பாதுகாக்க இயலும்.

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 22

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 22

    -மேகலா இராமமூர்த்தி

    இராவணனின் வீர பராக்கிரமங்களை இலைக்குடிலில் அமர்ந்திருக்கும் துறவியார் விதந்தோதுவதைக் கண்ட சீதை, அதனைச் சிறிதும் இரசிக்காது, ”ஐய! உடம்பையும் மிகையாகக் கருதும் இயல்புடைய துறவி நீர்! அப்படியிருக்க வேதங்களையும் வேதியர்களின் அருளையும் விரும்பாமல், மன்னுயிர்களைக் கொன்று புசிப்பவர்களும் பாதக வினைகளையே நன்றெனப் புரிபவர்களுமாகிய அரக்கர்தம் பதியில் வதியக் காரணம் என்ன?” என்றாள் வியப்போடு!

    வேதமும் வேதியர்
         அருளும் வெஃகலா
    சேதன மன்உயிர்
         தின்னும் தீவினைப்
    பாதக அரக்கர்தம்
         பதியின் வைகுதற்கு
    ஏது என் உடலமும் மிகை
         என்று எண்ணுவீர் (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3467)

    தீயாரைக் காண்பதுவும் தீதே திருஅற்ற
    தீயார் சொல் கேட்பதுவும் தீதே – தீயார்
    குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
    இணங்கி இருப்பதுவும் தீது.
    (மூதுரை – 9) என்பது ஆன்றோர் சொன்ன மூதுரையாயிருக்க, இத்துறவியோ தவநெறியின் நீங்கி அவநெறியில் வாழும் அரக்கரோடு இணங்கி வாழ்ந்திருக்கின்றாரே என்ற சிந்தனை எழுந்தது சீதையின் சிந்தையில்!

    தொடர்ந்து பேசியவள், “ஒன்று காட்டில் வாழும் முனிவர்களோடு நீவிர் வாழ்ந்திருக்க வேண்டும்; அல்லது நல்லவர்கள் வாழும் நாட்டிலாவது உறைந்திருக்க வேண்டும். இரண்டையும் விடுத்து அறநெறி வழுவியோரது ஊரின்கண் வாழ்ந்திருக்கின்றீர்! என்ன காரியம் செய்தீர்?!” என்று துறவியாரின் அறம்வழுவிய செயலுக்குத் தன் கண்டனத்தையும் தெரிவித்தாள்.

    அவள் கருத்தை மறுத்த போலித் துறவியார், ”எம்மைப் போன்றோர்க்கு தேவர் நிருதர் என்ற வேறுபாடில்லை. சொல்லப்போனால் தேவர்களைக் காட்டிலும் நிருதர்கள் நல்லவரே” என்றார்.

    சீதை அதை ஒப்புக்கொள்ளவில்லை. ”அரக்கர்கள் தீயரே! அவர்வழி சேருவோரும் நல்லாராய் இருக்கமுடியாது” என்றாள் தீர்மானமாக. அரக்கர்களைத் தொடர்ந்து புகழ்ந்தால் சீதை தன்மீது ஐயங்கொள்ள நேரும் என்றெண்ணிய இராவண சந்நியாசியார், பேச்சை மாற்ற விரும்பி, ”அம்மணி! தேவர் நாகர் மானுடர் ஆகியோர்க்கு வலிமையில் மிக்கவரான அரக்கர்வழி நிற்பதல்லாது வேறுவழி என்ன இருக்கின்றது நமக்கு?” என்றார்.

    சந்நியாசியாரின் கபட உள்ளத்தை உணராத மங்கை சீதை, ”அறந்தரு வள்ளலான என் நாயகன் இராமன் பாலைவழிகளில் திரிதரும் அரக்கர்கட்கோர் முடிவுகட்டுவான்; பின்பு இவ்வுலகிற்குத் துன்பமில்லை” என்றாள்.

    அரக்கரைச் சீதை இழித்துரைக்கக் கேட்ட இராவணன், ”மீனனைய கண்ணாளே! மானிடவர் அரக்கரை வெல்வர் என்று நீ உரைப்பது யானை இனத்தை இளமுயல் வெல்லும் என்பதற்கும் ஆண்சிங்கக் கூட்டத்தைச் சிறுமான் வெல்லும் என்பதற்கும் ஒப்பானது” என்றான். நெஞ்சில் துறவாது துறந்தான்போல் வஞ்சிக்கும் இராவணனின் உண்மை மனநிலை மெல்ல மெல்ல அவன் சொற்களில் வெளிப்படத் தொடங்குவதை இங்கே நாம் காணமுடிகின்றது.

    சீதையும் சளைக்கவில்லை. ”குற்றமில்லாதவரே” என்று இராவண சந்நியாசியை விளித்து, ”தாங்கள் குறிப்பிட்ட சிங்க ஏற்றைப் போன்றவர் இராமன்; அரக்கர்களோ மான் கணத்தவர். இராமனால் அவ் அரக்கர்கள் சுற்றத்தோடு மடிவதையும் தேவர்கள் ஆரவாரிப்பதையும் விரைவில் காண்பீர். தருமத்தை என்றேனும் பாவம் வெல்லுமோ?” என்று கேட்டாள்.

    வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதரானார்
    கேளொடு மடியுமாறும் வானவர் கிளருமாறும்
    நாளையே காண்டிர் அன்றே நவை இலிர் உணர்கிலீரோ
    மீளஅருந் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள்.
    (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3475)

    போலிச் சந்நியாசியார் அரக்கர்களை வானளாவப் புகழ்ந்தபின்னரும்கூட அவர் அரக்கராக இருக்கக்கூடும் என்ற ஐயம் தூயவளான சீதைக்குத் தோன்றவில்லை. காப்பியத்தின் பாவிகப் பண்புகளில் ஒன்றான ’அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்பதனை இங்கே காப்பியத் தலைவியின் வாயிலாகக் கம்பர் அழுத்தமாகப் பதிவுசெய்வது கருதத்தக்கது.

    அதுவரை சீதையின் சொற்களைப் பொறுத்திருந்த இராவணன், மானுட இராமன் அரக்கரினும் ஆற்றல் மிக்கவன் எனும் சீதையின் மொழிகளால் தன் இனத்துக்கு இழுக்கு நேர்ந்ததென்றெண்ணித் தன்மானம் ஓங்கிடப் பொங்கியெழுந்தான். ”இராவணனின் இருபது தோள்களின் வலியின்முன் சிறிய பூளைப் பூவைப்போல் இராமன் எனும் மானுடன் வீழ்வான்” என்றான் சீற்றத்தோடு.

    அத்தோடு விட்டானில்லை! ”பேதைப் பெண்ணே! மேருமலையைப் பெயர்க்க வேண்டுமா? வானத்தை இடிக்க வேண்டுமா? கடல்நீரைக் கலக்க வேண்டுமா? கடலிடை தோன்றும் வடவாமுகாக்கினி எனும் தீயை அவிக்க வேண்டுமா? உலகத்தைப் பெயர்த்தெடுக்க வேண்டுமா? இவ்வரிய செயல்கள் அனைத்தையும் எளிதாகச் செய்துமுடிக்கக் கூடிய வல்லவன் இராவணன். அவனை மிக எளியன் என்றா கருதிவிட்டாய்?” என்று கேட்டான்.

    மேருவைப் பறிக்க வேண்டின்
         விண்ணினை இடிக்க வேண்டின்
    நீரினைக் கலக்க வேண்டின்
         நெருப்பினை அவிக்க வேண்டின்
    பாரினை எடுக்க வேண்டின்
         பல வினை சில சொல் ஏழாய்
    யார் எனக் கருதிச் சொன்னாய்
         இராவணற்கு அரிது என் என்றான். (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3478)

    இப்பாடல் அடிகளை,

    ”மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே
    வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன்எனத் தான்
    முன்னிய துறைபோகலின்…”
    (பட்டின: 270-273) என்று திருமாவளவனின் ஆற்றல்சாற்றும் பட்டினப்பாலை அடிகளோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

    வாக்குவாதம் முற்றிக்கொண்டே சென்றது. இருபது தோள்கள் கொண்ட இராவணனை ஆயிரம் தோள்கள் கொண்ட கார்த்தவீர்யார்ச்சுனன் சிறை வைத்ததைச் சுட்டிக்காட்டிய சீதை, அவ் ஆயிரந்தோளுடையவனோ இரு தோளுடைய பரசுராமனின் மழுவால் வெல்லப்பட்டான்; அந்தப் பேராற்றலாளனான பரசுராமனோ மானுடன் இராமனுக்குத் தோற்றான். எனவே இராவணனை இராமன் வெல்வது உறுதி என்றாள்.

    அதைக் கேட்டதும் சினத்தின் உச்சிக்குச் சென்ற இராவணன் அதன்பின்னரும் தவசியாய் நடிக்கவிரும்பாமல் அச்சம்தரக்கூடிய தன் உண்மை வடிவத்தை எடுத்து நின்றான். ”இவர் உண்மையான துறவி அல்லர் போலிருக்கின்றதே” என்ற ஐயம் அப்போதுதான் சீதைக்கு எழுந்தது; உடனே நடுக்கம் கொண்டாள் அந்த நங்கை!

    இராவணன் சீதையைப் பார்த்து, ”பெண்ணே! தேவர்களை வென்ற என் வீரத்தை இகழ்கின்றாய்; புழுக்களையொத்த மானிடரைப் புகழ்கின்றாய்! நீ பெண் என்பதால் பிழைத்தாய்” என்றுரைத்தான். உடனே சீற்றம் தணிந்து,
    ”அன்னமே! என்னைக் கண்டு நடுக்கம் கொள்ளாதே! யாரையும் கும்பிட்டு வணங்காத என் தலைகளிலுள்ள மணிமுடிபோல் உன்னை நான் இன்பமாக வைத்துத் தாங்குவேன்! அரம்பையர்கள் உனக்கு ஏவல்செய்ய, பெரும் செல்வத்தில் திளைத்து என்னோடு மகிழ்ந்திருப்பாயாக!” என்றான்.

    ஒருகணம் கோபமும் மறுகணம் காமமுமாகச் சீதையிடம் இராவணனின் உள்ளம் காணும் ஊசலாட்டத்தைக் கம்ப நாடகம் இப்பாடல்களில் கவினுறக் காட்சிப்படுத்துகின்றது.

    ”இராமனின் அம்பில் சிக்கி உயிரை விடுவதற்குமுன் இங்கிருந்து ஓடிவிடு!” என்று சீதை இராவணனை எச்சரிக்க, ”மலைபோன்ற வடிவுகொண்ட என்மீது உன் கணவன் விடும் கணை வெறும் மலரம்பு போன்றது; அது என்னை ஏதும் செய்யாது” என்று அலட்சியமாகப் பதிலிறுத்த இராவணன், சீதையின் அடியின்கீழ் வீழ்ந்துவணங்கி என்னை ஏற்றுக்கொள் என்று அவளிடம் இறைஞ்சினான்.

    தம் மனைவியரிடம் புலவிக் காலத்தில்கூடத் தலை வணங்காதவன் என்று பெருமை பெற்றிருந்த இராவணன், சீதைமீது கொண்ட கழிகாமத்தால் தன் பெருமித நிலையினின்று பெரிதும் இழிந்துபோனதற்கு இச்செயல் சான்றாகின்றது.

    இராவணனின் அருவருக்கத்தக்க இச்செயலால் சீதை மேலும் திகில்கொண்டு, இராமனையும் இளவல் இலக்குவனையும் அழைத்து அரற்றவும், அவளைத் தன்னோடு தூக்கிச்செல்ல முடிவெடுத்த அத் தீயவன், தனக்கு பிரமன் இட்ட சாபத்தை நினைவுகூர்ந்து, சீதையைத் தொட்டுத் தூக்காமல் அவளைப் பன்னசாலையோடு ஒரு யோசனை தூரத்துக்கு நிலத்தொடு பெயர்த்தெடுத்தான் என்கிறார் கம்பர்.

    ஆண்டு ஆயிடை தீயவன் ஆயிழையைத்
    தீண்டான் அயன் மேல் உரை சிந்தைசெயா
    தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்
    கீண்டான் நிலம் யோசனை கீழொடு மேல்
    . (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3490)

    பிரமனிடம் அப்படி என்ன சாபம் பெற்றான் இராவணன்?

    ”எந்தப் பெண்ணிடமும் அவள் விருப்பமின்றி வல்லுறவில் ஈடுபட்டால் இராவணன் அழிவான்” என்ற சாபத்தை அவனுக்குப் பிரமன் அளித்திருந்தான். அதுபோலவே குபேரனின் அளகாபுரியில் அவன் மருமகள் அரம்பையை இராவணன் பாலியல் வன்புணர்வு செய்தபோது அவள் இராவணனுக்கு இட்ட சாபம் “வலிய ஒரு பெண்ணைத் தீண்டின் அவள் கற்புக் கனலால் எரிவாய்” என்பது. வேதவதி என்ற பெண்ணிடம் இராவணன் முறைகேடாக நடக்க
    முற்பட்டபோது அவளும் அவனுக்குச் சாபமளித்துத் தீயில் புகுந்தாள்.

    இவையல்லாமல் அரம்பையின் கணவனான நளகூபன், இராவணனால் வன்புணர்வு செய்யப்பட்ட மற்றொரு தேவலோகப் பெண்ணான புஞ்சிகத்தலை ஆகியோரிடமும் இராவணன் சாபம் பெற்ற வரலாறுகள் உண்டு!

    பிரமன் அளித்த சாபத்தை எண்ணிப்பார்த்த இராவணன், சீதையைத் தொடாமல் பன்னசாலையோடு பெயர்த்தெடுத்துச் சென்றான் என்று கம்பர் காப்பியம் பேசுகின்றது. சீதையை இராவணன் தொட்டுத் தூக்காமல் குடிலோடு எடுத்துச் சென்றான் என்று கம்பர் எழுதியமைக்கு இதைவிடவும் முக்கியக் காரணம் மணமான, கற்பிற் சிறந்த பெண்ணொருத்தியை அந்நிய ஆடவன் தொட்டுத் தூக்குவது அப்பெண்ணுக்கும் தமிழ் மரபுக்கும் இழுக்கு என்பதே.

    ஆனால் வான்மீகம் இராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிச்சென்றான் என்றே பேசுகின்றது. இராவணன் சீதையைத் தொட்டால் இறந்துபோவான் என்ற சாபமிருக்கும்போது அவன் சீதையை வலிந்து பற்றியபோதும் ஏன் இறக்கவில்லை என்ற வினாவைச் சிலர் எழுப்புவதுண்டு!

    பெண்ணைத் தொட்டாலே இறந்துபோவான் என்பதன்று அவன் பெற்ற சாபம்! பெண்ணிடம் வல்லுறவில் அவள் விருப்பமின்றி ஈடுபட்டால் இறந்துபோவான் என்பதே அவன்பெற்ற சாபம். தீண்டுதல், தொடுதல் என்பவை வன்புணர்வைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நாகரிகச் சொற்கள் என்பதை ஓர்க!

    சீதையைக் கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த பின்பும் இராவணன் அவளிடம் தவறாக நடந்துகொள்ளாமல் பல்வேறு உபாயங்களால் அவளை வயப்படுத்த முயன்றமைக்கு(ம்) அவன் பெற்ற சாபமே காரணம். மற்றபடி சீதையின் சம்மதத்தைப் பெற்ற பின்பே அவளைத் தொடவேண்டும் என்று கருதிய உத்தமனோ ஒழுக்கசீலனோ அல்லன் இலங்கையர்கோன்!

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 26 (வேலன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 26 (வேலன்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகஇலக்கியச் சிறுபாத்திர வரிசையில் முத்தாய்ப்பாக இடம் பெறுபவன் வேலன். அவன் கூறியதாகத் தலைவியும் தோழியும் தம்முள்ளும்;  தாயிடமும்  தலைவனிடமும் பேசுகின்றனர். தலைவன் தேர்ப்பாகனிடம் பேசும் போது அமையும் பின்புலத்திலும் வேலன் இடம் பெறுகிறான்.

    தலைவியும் தோழியும் நல்கும் சிறுபாத்திரத் தகுதி

    “வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்” (நற்.- 34)

    என்று தோழி பேசுங்கால் வேலன் வெறியாட்டின் போது அணங்காகிய முருகனிடம் வேண்டியமை பற்றிக் கூறுகிறாள். அதுபோல் வேலன் பொதுவாகச் சொல்லும் காரணம் பற்றியும் தலைவனிடம் பேசுகிறாள் (நற்.- 273, 322; குறு.- 111; ஐங்.- 246).

    வெறியாட்டு நிகழ்ந்த நாளின் நள்ளிரவில் பிரிந்து சென்ற தலைவன் மீண்டு வந்து தலைவியுடன் கூட; நோய் நீங்கிய தலைவி;

    “ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே” (அகம்.- 22)

    சிரிக்கிறாள். அயலானாகிய வேலனின் பாட்டிற்கும் இசைக்கருவிகளின் தாளத்திற்கும் ஏற்பத் தன்னிலை இழந்து தான் ஆடியதை எண்ணி நகைதோன்றத் தோழியிடம் எடுத்துக் கூறுகிறாள். தலைவி கூறும் வேலனின் செயலும் பேச்சும் பிற பாடல்களிலும் உள்ளன (குறு.- 360).

    “அறியா வேலன் வெறி எனக் கூறும்” (ஐங்.- 243)

    என்று தோழி தாயிடம் கூறுவதாலும் வேலன் சிறுபாத்திரத்தகுதி பெறுகிறான். வேலன் வெறியாட்டை அடியொட்டி அமைந்துள்ள வெறிப்பத்துப்  பாடல்களில் தோழி வெறி விலக்கி அறத்தொடு நிற்கும் போதெல்லாம்    வேலன் இடம் பெறுகிறான்.  (ஐங்.- 241, 244, 249).

    தலைவன் தேர்ப்பாகனிடம்; தன் மனைவி தோழியோடு பேசக்கூடியது பற்றி உரையாடும் போது; வேலன் வெறிக்களத்தில் பூக்கள் சிதறிக் கிடப்பது போன்ற மணம் மிகுந்த மழைக்காலத்துக் காடு பின்புலமாக வருணிக்கப்படுகிறது (அகம்.- 114).

    வேலனின் சிறப்பு

    “முதுவாய் வேலன்” (நற்.- 282; அகம்.- 388);

    “ஊர்முது வேலன்” (ஐங்.- 245)

    என்றெல்லாம்; அடைமொழிகளுடன் அழைக்கப்படுவது வேலனின் பாத்திரப்படைப்பைத் தெளிவாக்குகிறது. காலங்காலமாக அவன் முருகனுக்கு வெறி அயரும் தகுதி உடையவன் மட்டுமல்லன்; கழங்கு உருட்டிக்; கட்டுவிச்சியின் குறியாகிய  ‘தலைவியின் நோய் முருகன் அணங்கியதால் நேர்ந்தது’ என்பதை முடிபாகக் கூறுபவன். அதனால்; ‘முது’, ‘முதுவாய்’ என்னும் அடைமொழிகளுக்கு உரியவன் ஆகிறான்.

    “மெய்ம்மலி கழங்கின் வேலன்” (நற்.- 268)

    என அவன் கழங்கு மூலம் நிறுவிய  முருகணங்கு பற்றிப் பிற பாடல்களும் கூறுகின்றன (நற்.- 282; ஐங்.- 245, 248).

    வெறியாட்டின் வருணனை

    மலைப்புறத்துச் சிறுகுடியின் மன்றத்து வேங்கைமரம் பொன் வண்ணப் பூக்களை உதிர்த்திருக்கும் முற்றத்தில் விழா அயரும் குறவர் குடியின் மூத்த பெண்டிர் சேர்ந்து குரவையாடிய இடம் போன்று; வெறியாட்டிற்குரிய களம் மிகுந்த பூப்பலியால் பொலிந்து தோன்றும்   எனத் தோழி தலைவியிடம் பேசுபவள் போலத் தலைவனிடம் பேசி; உடன் திருமண ஏற்பாடு செய்யத் தூண்டுகிறாள் (அகம்.- 232).

    வேலன் வெறிக்களத்தில் மிகுந்த பூக்கள் சிதறிக் கிடப்பது உவமையிலும் எடுத்துரைக்கப்படுகிறது (அகம்.- 182).

    இசைக்கருவிகள் அனைத்தும் சேர்ந்து ஒத்த இசையெழுப்ப; அவற்றுடன் இயையும்படி முருகப்பெருமானைப்  புகழும் பாடலைப் பாடும் வேலன் வெண்போழ்கடம்பைச் சூடிக்கொண்டு; கைகளைப் பொருத்தமாக வீசி ஆட அகன்ற பந்தல் இடப்பட்டு இருந்தது (அகம்.- 98). மறியறுத்த குருதியளைந்து செந்தினை படைக்கப்பட்டது (அகம்.- 22). அத்துடன் செந்நெல் வெண்பொரியும் படைத்தனர் (குறு.- 53). முருகனுக்குரிய படிமமும் செய்து வைத்து வெறி ஆடியமை;

    “கழங்கு மெய்ப்படுத்துக் கன்னம் தூக்கி” (ஐங்.- 245)

    என்ற தோழியின் வருணிப்பில் இடம் பெறுகிறது. உரையாசிரியர் கன்னம் என்பதைப் படிமம் என்கிறார்.

    உயிர்ப்பலித் தடுப்பும் வாதமும் 

    வேலனுக்கு உரிய வெறியாட்டுக் களத்தை அழகுபடுத்தி; முருகனைப் போற்றிப் பாடிப்; படையல்களும்  அறுப்பதற்குரிய ஆடும்  தயாராக இருக்க;

    “… … … பல்பிரப்பு இரீஇ
    அறியா வேலன் தரீஇ அன்னை
    வெறியயர் வியன்களம் பொலிய ஏத்தி
    மறி உயிர் வழங்கா அளவை” (அகம்.- 242)

    விரைந்து இவளை மணந்து கொள் என்று தலைவனிடம் தோழி கூறும் போது; ஆட்டைப் பலியிடுவதன்  முன்னர் செயல்படுவாயாக என்று  தூண்டுகிறாள்.

    அன்னை வெறியாட்டு நிகழ்த்த மிகுந்த பொருட்செலவு செய்தாள். சிறுமறியை முருகனுக்குப் பலியிடத்  தயாராக வைத்திருந்தாள்.

    “அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென்முறிச்
    சிறுகுளகு அருந்து தாய்முலை பெறாஅ
    மறி கொலைப்படுத்தல் வேண்டி வெறிபுரி
    ஏதில் வேலன் கோதை துயல்வரத்
    தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல்” (அகம்.- 292)

    என்று தலைவி பகுத்தறிவுவாதி போலப் பேசுகிறாள். வெட்டிய ஆட்டை எடுத்துச் செல்லப் போகிறவன் வேலனே என்பது அவளது பதைப்பில் தெரிகிறது. தன்னுடைய  களவொழுக்கம் பற்றி அறியாத அயலவனாகிய வேலன் ஒரு ஆட்டுக்குட்டிக்காக அதைத் தாயிடமிருந்து பிரித்துக் கொல்ல; தன் கழுத்தில் கோதை தொங்க ஆடிப் பாடி; ‘முருகு அணங்கினள்’ என்று சொல்லப்போவதை எண்ணி வெட்கப்படுவதாகக் கூறுவது நோக்கத்தக்கது.

    வெறியாட்டில் பங்கேற்கும் தலைவியின் நிலை

    மேற்சுட்டிய இசையும் தாளமும் பாடலும் ஒருங்கு ஒலிக்க; பூக்களும் பிற பலிகளும் படையலாக இருக்கத்; தனக்கே உரிய மாலையோடும் வேகத்தோடும் வேலன் ஆடத்; தன்வசமிழந்து; பொறி அமைந்த பொம்மை முடுக்கப்பட்டது போலத் தானும் ஆடி நிற்க வேண்டி வரும் என்று அச்சத்தோடு தலைவி வெறியாடலை எதிர்நோக்குவது பற்றித் தோழியிடம் கூறுகிறாள். தலைவி மட்டுமின்றிப் பிற பெண்களும் அந்த இசையால் தன்னிலை அழிந்தனர் என்பதை;

    “…………………………………………..மயங்கிய
    மையல் பெண்டிற்கு நொவ்வலாக
    ஆடிய” (அகம்.- 98)

    என்னும் அடிகள் உணர்த்துகின்றன.

    வேலன் வெறியாடுங்கால் தாமும் கட்டுப்படுத்த இயலாமல் ஆடியது பற்றிய தலைவி கூற்று இக்கட்டுரையின் முன்னரும் உள்ளது (அகம்.- 22).

    முடிவுரை

    வேலன் கூறியதாகத் தலைவியும் தோழியும் தம்முள்ளும்;  தாயிடமும்  தலைவனிடமும் பேசுகின்றனர்; தலைவன் தேர்ப்பாகனிடம் பேசுகிறான். காலங்காலமாக வேலன் முருகனுக்கு வெறி அயரும் தகுதி உடையவன். கழங்கு உருட்டுவதன் மூலம்; கட்டுவிச்சியின் குறியை முடிபாகக் கூறுபவன் அதனால்; ‘முது’, ‘முதுவாய்’ என்னும் அடைமொழிகளுக்கு உரியவன் ஆகிறான்.

    வெறியாட்டிற்குரிய களம் மிகுந்த பூப்பலியால் பொலிந்து தோன்றியது. இசைக்கருவிகள் எல்லாமாகச் சேர்ந்து ஒத்த இசையெழுப்ப; அவற்றுடன் இயையும்படி முருகப்பெருமானைப் புகழும் பாடலைப் பாடும் வேலன் கடம்பைச் சூடிக்கொண்டு; கைகளைப் பொருத்தமாக வீசி ஆட; அகன்ற பந்தல் இடப்பட்டு இருந்தது. மறியறுத்த குருதியுடன் அளைந்து செந்தினை படைக்கப்பட்டது. அத்துடன் செந்நெல் வெண்பொரியும் படைத்தனர்.  முருகனுக்குரிய படிமமும் செய்து வைத்து வெறி ஆடினர். உயிர்ப்பலித் தடுப்பில் ஈடுபடுபவளாகத் தோழி  திகழ்கிறாள். வேலன் ஒரு ஆட்டுக்குட்டிக்காக; அதைத் தாயிடமிருந்து பிரித்துத்; தன் கழுத்தில் கோதை தொங்க ஆடிப் பாடி; ‘முருகு அணங்கினள்’ என்று சொல்லப்போவதை எண்ணி வெட்கப்படுகிறாள் தலைவி. பொறி அமைந்த பொம்மை முடுக்கப்பட்டது போலத் தலைவியும் வேலனோடு ஆடினாள். களத்திலிருந்த பிற பெண்களும் ஆடினர்.


    பின்னுரை

    2.1.2010 முதல் 11.1.2010 வரை பத்து நாட்கள் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் தமிழ்த்துறை; சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையோடு ‘பண்டை இலக்கியப் பாத்திரங்கள்’ என்ற தலைப்பில்  மாணவர்க்கு ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தியது. இந்தத் தலைப்பும் அதற்குரிய திட்ட வரைவும் நல்கிய கோணம் அப்போதைய நிறுவன ஆய்வாளர்களை மிகவும் ஈர்த்தது. அதில் என் பங்காக ‘அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்’ என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினேன். ஒரு மணி நேரம் நான் ஆற்றிய உரைக்காகக் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள்; அதாவது கருத்தரங்கிற்கு அனுமதி கிடைத்த நாள் முதல் அது நடத்தப்பட்ட நாள் வரை; நேரம் கிடைக்கும் போதெல்லாம் அன்றாடம் அகஇலக்கியங்களைப் படித்துச் சேர்த்த பட்டியலில் பதின்மூன்று சிறுபாத்திரங்கள் இருந்தன. ஓய்வு பெற்ற பின்னர் அவ்வுரைச் செய்திகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிப்பிக்க  நான் எடுத்த மூன்று முயற்சிகள் தோற்றன.

    எட்டு மாத காலம்  அகஇலக்கியத்தைப் பார்வையிட்டு உழவனும் குயவனும்  ஒரே ஒரு பாடலில் தான் சிறுபாத்திரத் தகுதி பெறுகின்றனர் என்றும்; கூற்று நிகழ்த்தும் தகுதி உடைய பார்ப்பான் அகத்தொகை நூல்களில் பேசவே இல்லை என்றும்; கூற்று நிகழ்த்தும் தகுதி பெறாத பாகன்  ஒரு பாடலில் நேரடியாகக் கூற்று நிகழ்த்துகிறான் என்றும்; நான் சொல்ல வந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் முன்னிலையாரும்  சில மாதங்களாவது அகஇலக்கியமே குறியாகப் பயில வேண்டும் அல்லவா?! அதற்கு வழியில்லாமல் போனதால் தான் இதைத் தொடர் கட்டுரைகளாக எழுத முடிவு செய்தேன்.

    வலை உலகில் நுழைந்த பிறகு http://tamilconcordance.in/TABLE-sang.html  தளம் பற்றிய அறிமுகம் கிடைத்ததால் நான் சேகரித்திருந்த தரவுகளைச் சரிபார்க்க முடிந்ததுடன் மட்டுமன்றி; அப்பட்டியல் பதின்மூன்றிலிருந்து இருபத்தாறாக நீண்டது. இதுவே முடிபு; இதற்கு மேல் இல்லை என்று சொல்ல மாட்டேன். அதுகாறும் தெரிந்து கொள்ளாத புதுச்செய்திகள் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அத்தளத்திற்கு நன்றி.

    விடுபட்ட முரண்பட்ட கருத்துகளும் உள்ளன. பாகனுக்குப் பேசும் வாய்ப்பைத் தொல்காப்பியம் கொடுக்கவில்லை. ஆனால் பாகன் கூற்றில் அமைந்த பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது (பா.- 121). தொல்காப்பியம் ஒரு சாராரின் கொள்கையே அன்றி அது ஒருமித்த விதிகளைச் சொல்லவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

    உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் அகவன்மகளைக் கட்டுவிச்சி என்று குறிப்பிடுவது தவறு. முதுவாய்ப் பெண்டு மட்டுமே கட்டுவிச்சி ஆவாள். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அகஇலக்கியத்தைப் படித்துப் பார்த்தால் வேறு சில புதுக்கருத்துகள் தோன்றலாம். பதிப்பித்து உதவிய வல்லமை ஆசிரியர்க்கும் நிர்வாகக்  குழுவினர்க்கும் நன்றி.

    முற்றும்

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 21

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 21

    -மேகலா இராமமூர்த்தி

    இராமன் பதற்றத்தோடும் கவலையோடும் இலக்குவனும் சீதையும் தங்கியிருக்கும் இலைக்குடில் நோக்கி விரைந்துவந்துகொண்டிருந்த வேளையில் ஆங்குச் சீதையின் நிலை என்ன என்பதைக் கவனிப்போம்.

    மாரீசன் இராமன் குரலில் ”சீதா! இலக்குவா!” என்று கத்திவிட்டு உயிர்நீத்ததால் சீதை கலக்கமடையக் கூடும் என்று இராமன் ஊகித்ததுபோலவேதான் நடந்தது. இராமனின் ஓலக்குரல் காதில் விழுந்ததும் துணுக்குற்ற சீதை, இராமனுக்கு ஏதோ பேராபத்து நேர்ந்துவிட்டது என்றெண்ணி மயங்கிக் கீழே விழுந்தாள்.

    இடியுண்ட நாகம்போல் துன்புற்ற அவள், மானைப் பிடித்து வா என்று ஏவி, கணவனோடு கூடிவாழும் நல்வாழ்வைப் பேதையாகிய நான் முடித்துக்கொண்டேனே என்று வருந்தினாள். அருகில் எவ்விதப் பதைபதைப்பும் இன்றி இலக்குவன் நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தவள் வெகுண்டாள்.

    ”எவ்விதக் குற்றமுமற்ற என் தலைவன் இராமன் அங்கே அரக்கரின் வஞ்சத்தால் வீழ்ந்துபட்டது கண்டும், அவருடைய தம்பியாம் நீ ஒருவனும் அசையாது நிற்கின்றாய்! என்று சீறினாள்.

    குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன்
    மற்று அவ் வாள் அரக்கன் புரி மாயையால்
    இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல்
    நிற்றியோ இளையோய் ஒரு நீ என்றாள்.
    (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3420)

    ”தன் கணவனுக்குத் துன்பம் நேர்வதை இலக்குவன் விரும்புகின்றான்” என்ற உட்பொருள் தொனிக்கும் வகையிலும் ”இவனும் இராமனுக்குத் தம்பி” என்ற எள்ளல் குறிப்போடும் இவ்விடத்தில் சீதையின் பேச்சை நுட்பமாக அமைத்திருக்கின்றார் கம்பர்.

    அதைக்கேட்ட இலக்குவன், ”அன்னையே!  அண்ணனை வெல்லக்கூடிய வலிமை வாய்ந்தோர் யாரும் இப்பூவுலகில் இல்லை; வீணாகக் கவலைப்படாதீர்கள்! அண்ணன் என்னை உங்களுக்குக் காவலாக இங்கேயே இருக்கச் சொல்லி ஆணையிட்டிருக்கிறார்; அவர் ஆணைப்படி நடப்பது என் கடமை!” என்று மொழிந்தான்.

    அதைக் கேட்டுக் கொதித்தெழுந்த சீதை, இலக்குவனின் நடத்தையைச் சந்தேகித்து அவனை மிக அநாகரிக மொழிகளில் ஏசத் தொடங்குகின்றாள் மூலநூலான வான்மீகத்தில்!

    ”சுமித்திரையின் மைந்தனே! இராமனின் தோழன்போல் பாசாங்கு செய்துகொண்டு எங்களோடு வனத்துக்கு வந்தாய். இப்போது என் கணவர் ஆபத்தில் சிக்கிக்கொண்டிருக்கும்போது அதை வரவேற்பவன்போல் நின்றுகொண்டிருக்கிறாய். ஏனென்று கேட்டால்… அவர் ஆணைப்படி இங்கேயே காத்திருப்பேன் என்று கூறுகின்றாய். உன் நோக்கம் எனக்குப் புரிந்துவிட்டது. என் கணவர் இறந்துபட்டதும் என்னை உனக்கு உரியவள் ஆக்கிக்கொள்வது உன் திட்டம்; அஃது ஒருநாளும் நிறைவேறாது! நீ மட்டும் இப்போது இங்கிருந்து புறப்பட்டு என் கணவரைக் காக்கப் போகாவிட்டால் நான் இப்போதே கோதாவரியில் குதித்து என்னை மாய்த்துக்கொள்வேன்!” என்கிறாள்.

    தமிழ் மரபுக்கேற்ற வகையில் தேவையான இடங்களிலெல்லாம் இராமகாதையில் மாற்றங்கள் செய்துவரும் கம்பர், இங்கே வரம்புகடந்து செல்லும் சீதையின் அநாகரிக மொழிகள் அவளுக்குப் பெருமை தரா என்று கருதி, அப்பேச்சின் நீளத்தைக் குறைத்ததோடல்லாமல் அவள் பேசுகின்ற சொற்கள் கோபத்திலும் நாகரிகத்தோடு வெளிப்படும் வகையில் மாற்றியமைத்துவிட்டார்.

    கம்பர் படைத்த சீதை இலக்குவனிடம்,

    ”ஒருநாள் பழகினவராயினும் உண்மையான அன்புடையார் தாம் பழகியவர்க்காகத் தம் உயிரையும் கொடுத்து உதவுவர். ஆனால் நீயோ ஆண்களில் சிறந்தவனான இராமனுக்குத் துன்பம் வந்திருக்கின்றது என்பதைக் காதால் கேட்டும் அதற்காகச் சிறிதும் அஞ்சவில்லை. இனி எனக்கு வேறொரு வழியும் தெரியவில்லை; நான் இவ்விடத்திலேயே எரியில் விழுந்து சாகின்றேன்!” என்கின்றாள்.

    ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்
    பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ
    வெருவலை நின்றனை வேறு என் யான் இனி
    எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா.
      (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3429)

    சீதையை நெருப்பில் விழாமல் காக்கும்பொருட்டு அவள் திருவடி தொழுத இலக்குவன், ”உங்கள் கட்டளையை ஏற்று நான் அண்ணனைத் தேடிப் போகின்றேன். விதி நம்மை மிகுந்த கோபத்தோடு சோதிக்கின்றது. நான் மனம் வெந்து, நெஞ்சு நொந்து இங்கிருந்து போகின்றேன்!” என்று கூறியவாறு புறப்பட்டான். சீதைக்கு ஏதேனும் தீங்குநேருமாயின் அப்பகுதியில் வசிப்பவனான கழுகரசன் சடாயு தன்னாலியன்ற அளவு காப்பான் என்ற எண்ணம் இலக்குவன் மனத்தில் தோன்றவே, அதைச் சீதையிடம் வெளிப்படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றான்.

    அதற்காகவே அங்கே மறைவாகக் காத்திருந்த இராவணன், திரிதண்டம் ஏந்திய தவசி வேடம்பூண்டு, தன் நெஞ்சகத்தில் குடியிருந்த வஞ்சக எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு இலைக்குடில் நோக்கி வந்தான்.

    திரிதண்டம் என்பது மூன்று தண்டுகளை உடையது. காமம் வெகுளி மயக்கம் எனும் மும்மலங்களையும் வென்றவர்கள் கையில் ஏந்துகின்ற முக்கோல் அது. அதனை ஏந்தியவர்களை ’முக்கோற் பகவர்’ என்று குறித்தனர் நம் முன்னோர்.

    போலி சந்நியாசியான இராவணன், முக்கோலுடன் இளைத்த மேனியனாய், பூணூல் அணிந்த மார்பினனாய், கூன்விழுந்த முதிய வடிவினனாய், சாம வேதம் இசைத்துக்கொண்டு, ஓர் அந்தணத் துறவி வடிவில் இலைக்குடிலின் வாயிலுக்கு வந்து “இங்கே இருப்பது யார்?” என்று நா நடுக்குற வினவினான்.

    முதிய சந்நியாசி ஒருவர் குடில் வாயிலில் நிற்பதுகண்ட சீதை, அவரை ”உள்ளே வாருங்கள்” என்று அன்போடு வரவேற்றாள்.   

    இதுவரை உருவெளியாகக் கண்டு வந்தவளின் திருவுருவை முதன்முறையாக நேரில் கண்டான் இராவணன். குயிலின் குரலோடும் தேவலோக மங்கையரினும் விஞ்சிய அழகோடும் நின்றிருந்த அவளைக் கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சியில் இராவணனின் வீரத்தோள்கள் ஒருகணம் பூரித்தன; மறுகணம் அவளை அடைவது எங்ஙனம் என்ற ஏக்கத்தில் மெலிந்தன என்கிறார் கம்பர்.

    தூங்கல்இல் குயில் கெழு
         சொல்லின் உம்பரின்
    ஓங்கிய அழகினாள்
         உருவம் காண்டலும்
    ஏங்கினன் மன நிலை யாது
         என்று உன்னுவாம்
    வீங்கின மெலிந்தன
         வீரத் தோள்களே. (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3443)

    சீதையின் அழகெனும் தேனை இராவணனின் கண்களாகிய வண்டுகள் அள்ளிப் பருகின. திருமகளையொத்த இவளைக் கண்டுமகிழ எனக்கு இருப்பவை இருபது கண்கள்தாமே; ஆயிரம் இல்லையே என்று வருந்தியது ஆசைக்கடலில் தத்தளித்த அவனுள்ளம்!

    அவன் வஞ்ச உள்ளத்தை ஓராத வஞ்சியாள் சீதை, அவனை வரவேற்று பிரம்பு இருக்கையில் அமரச்செய்தாள். அமர்ந்தவன் இந்த இலைக்குடிலில் உறைபவர்கள் யார் என்று அது குறித்துத் தான் ஏதுமறியாதவன்போல் சீதையை விசாரிக்கவே, ”பழைமையான இட்சுவாகு குலத்தில் தோன்றிய தயரதனின் மகன் தம் தம்பியோடு, தம் அன்னையின் விருப்பப்படி, இங்கே உறைகின்றார். அவரைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடுமே?” என்றாள் அவள்.

    ”கேள்விப்பட்டிருக்கின்றேன்; ஆனால் நேரில் கண்டதில்லை. மருதவளம் நிறைந்த அயோத்தி பக்கம் ஒருமுறை போயிருக்கிறேன்” என்றுரைத்த துறவு வேடத்தான், ”வாள்போலும் நீண்ட கண்களையுடையவளே! நீவிர் யாருடைய மாமகள்? வாழ்வின் அரிய நாட்களை ஏன் இந்தக் கொடிய காட்டிடை கழிக்கின்றீர்? என்று கேட்டான் சீதைக்காகத் தான் பெரிதும் வருந்துபவன்போல் காட்டிக்கொள்ள!

    நும்மையொத்த குற்றமிலாத் தவசீலர்களையே தெய்வமெனக் கருதும் சனகனின் மகள் நான்; என் பெயர் சானகி. காகுத்தன் மரபில் வந்த இராமனின் மனைவி என்று தன்னைப் பற்றிச் சொன்னாள் பொற்புடைக் கற்பினளாகிய சீதை.

    அனக மா நெறி படர்
         அடிகள் நும் அலால்
    நினைவது ஓர் தெய்வம் வேறு
         இலாத நெஞ்சினான்
    சனகன் மா மகள் பெயர்
         சனகி காகுத்தன்
    மனைவி யான் என்றனள்
         மறு இல் கற்பினாள் (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3455)

    சொல்லிவிட்டு, “பெருமூதாளராய் இருக்கும் நீவிர் இந்தக் கொடிய காட்டிற்கு எங்கிருந்து வருகின்றீர்?” என்று வந்திருந்தவரைப் பார்த்து வினவினாள் பரிவோடு.

    இராவண சந்நியாசி தான் அங்குவந்த காரணத்தை விளக்கத் தொடங்கி்னான்.

    ”இந்திரனுக்கு இந்திரனாகவும், ஓவியத்தில் எழுதவொண்ணாச் சுந்தரனாகவும், அனைத்து உலகங்களையும் வென்றவனாகவும் விளங்குகின்ற நான்முகன் மரபில் வந்த மாவீரன் ஒருவன் இருக்கின்றான். அவன் சிவனார் உறையும் கைலாய மலையைப் பெயர்த்தெடுக்கும் ஆற்றலான்; தேவர்கள் ஏவல்செய்யும் கடல்சூழ் இலங்கையை ஆளுகின்றவன்; நல்லொழுக்கமுடையவன்; விரிந்த வேதங்களை ஓதி உணர்ந்தவன்; அனைத்துலகிலுமுள்ள அழகிற் சிறந்த மங்கையரெல்லாம் அவன் அருளுக்காக ஏங்கி நிற்க, அவனோ தன் மனத்துக்கினியாளைத் தேடுகின்றான்.

    அந்த அற்புதத் தலைவன் ஆட்சிபுரிகின்ற இலங்கை மாநகரில் சிலகாலம் தங்கியிருக்கச் சென்றேன்; ஆனால் அவனைப் பிரிய மனமின்றி அங்கேயே நெடுங்காலம் தங்கிவிட்டேன்; பிறகு இங்கு வருகின்றேன்” என்று வேண்டிய அளவுக்கு இராவணனின் சிறப்புக்களை விதந்தோதி, சீதையின் மனத்தில் இராவணன் குறித்த நல்லெண்ணத்தை விதைக்க விழைந்தான் அந்தப் போலித் துறவி.

    ஆனால் சீதை அடுத்துத் தொடுத்த வினாவோ அந்தத் துறவியின் எண்ணத்திற்கு நேர்மாறாய் இருந்தது.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share
  • இன்று இராஜாஜியின் திருநாள்

    இன்று இராஜாஜியின் திருநாள்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    1961 மாசி நடுப்பகுதியில் தமிழரின் உரிமைக் கோரிக்கையை முன்வைத்து இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அரசு அலுவலகங்கள் முன்பு அறவழிப் போர் நிகழ்த்தினர் தமிழ் மக்கள்.

    அக்காலத்தில் சென்னையில் மாணவர்களாக இருந்த நாங்கள் தமிழ்நாட்டு அனைத்துத் தரப்பு அரசியல் தலைவர்களையும் சந்தித்தோம்.

    இராஜாஜியையும் சந்தித்தோம் அவர் தனது சுயராஜ்யா இதழில் இலங்கைத் தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டும் என எழுதினார். இராஜாஜி எழுதிய வரிகளைக் கீழே தந்துள்ளேன்.

    அறிஞர் அண்ணாதுரை சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தி ஆதரவு அளித்தார்.

    Remembering Rajaji on his day today

    A non violent campaign towards a rightfully Tamil political space in Sri Lanka by blocking public offices began around mid February 1961.

    As students in Chennai we drew the attention of all shades of Tamil Nadu political leadership.

    Rajaji supported us. He wrote an article in his Swarajya.

    Annadurai led a massive meeting at Marina.

    Below is the text of what Rajaji wrote:

    April 1961

    THE CEYLON STRUGGLE

    By

    C. RAJAGOPALACHARI

    The Ceylon Tamils (who are old Ceylonese and are as attached to their mother island as any other citizens of Ceylon) are asking for a federal form of government in which the Tamil speaking population of North and East Ceylon may have autonomy subject to the Federal Government of all Ceylon.  This will enable them to take pride in Ceylon nationality, without any bar-sinister of inferiority.

    The language issue is merely an outer symbol of the competition between the two nationalities.  It is a battle between communities, not at a battle of cultures or languages. Neither culture nor language is in danger.  Either can stand on its own strength and is not capable of being extinguished or even hurt in a substantial degree.  The question is whether the Tamil-speaking people are to be treated as equals or not. Equality will be ensured under a federal regime.  The unitary Government is necessarily leading up to place them on an inferior level.  This is the more unjust because the progress so far achieved and the present status of Ceylon as a whole depended not a little on the patriotic services of the eminent Tamilians of Ceylon.  The refusal to grant equal status on a federal basis to the Tamil population amounts to ingratitude.

    Let not the Tamil Northern and Eastern Ceylon population be confounded by superficial readers of news in India with the people of South Indian origin who have migrated to Ceylon when the plantations needed hard labour and who have settled down in and around the plantations as permanent but yet unrecognised citizens of Ceylon.  They are an entirely different group.  Their quarrel is a different one.

    Any sympathy from South India extended to the original Tamil speaking  people of Ceylon, who are fighting a tremendous battle for autonomy within a federal regime, can be easily mistaken for a Tamil conspiracy to bring Ceylon sovereignty and its integrity into jeopardy.  That is the reason why South Indian leaders have been patient and have not given too swift expression to their feelings of sympathy with those who fight a just battle in Ceylon on the language and federalist issues.  The present Ceylon Government party has been for sometime past pretending to see a great conspiracy between South Indian Tamils and Ceylon Tamils, which of course is mere myth born of an inferiority complex.

    The question of direct action and the advisability of continuing it is quite a different question and should be judged entirely by the leaders of the movement.  One who is at a distance and who is a votary of peace may be inclined to advise compromise if it could be had on honourable terms.  It is hard to believe that reason will not ultimately prevail.  We all hope in India, who have seen the lady-Premier of Ceylon, that she will bring her best emotions into play and succeed in controlling the extreme elements on the Sinhalese or Buddhist side (what ever name we may give it) and bring the protest movement to a suspension on honourable terms.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 25 (ஊர்ப் பெண்டிர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 25 (ஊர்ப் பெண்டிர்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    பலதரப்பட்ட பெண்களைப் பற்றியதாக அமையும் இக்கட்டுரையுள்  நல்கூர்பெண்டிர், ஆளில் பெண்டிர், அரியல் பெண்டிர்,  சீறூர்ப்பெண்டிர், பேஎய் பெண்டிர், அயலில் பெண்டிர் ஆகிய அனைவரும் ஊர்ப்பெண்டிர் என்னும் தொகைப் பாத்திரத்துள் அடங்கி விடுகின்றனர்.

    ஊர்ப்பெண்டிர் பண்புகள் 

    தோழி, தாய், தலைவி ஆகியோரின் பேச்சில் ஊர்ப்பெண்டிர் வசைபாடப் பெறுகின்றனர்.

    “கொடிது அறிபெண்டிர்” (அகம்.- 20);

    “வெவ்வாய்ப் பெண்டிர்” (அகம்.- 50, 250; குறுந்.- 373; நற்.- 133);

    “அலர்வாய் அயலில் பெண்டிர்” (நற்.- 378);

    “நிரைய பெண்டிர்” (அகம்.- 95) எனவும்;

    “தீவாய் … … …  பெண்டிர்” (அகம்.- 203);

    என்ற சுட்டு முறைகளில் ஊர்ப்பெண்டிரின் பண்புகள் ஒரே தன்மையுடன்  பேசப்படுகின்றன. கொடுமையான செய்தியைப் பேசுபவர் என்றும்; துன்புறுத்தும் சொற்களையே பேசத் தெரிந்தவர் என்றும்; அலர் தூற்றுபவர் என்றும்; தீமை பயக்கும் பழியினைச் சுமத்துபவர் என்றும்; இழிந்த முறையில் புறம்பேசக்  கூடியவர் என்றும் ஒருசேரக் குறைகூறப் பெறுகின்றனர்.

    ஊர்ப்பெண்டிரின் சிறுபாத்திரத் தகுதி  

    ஊர்ப்பெண்டிர் பழி சுமத்துதல், கமுக்கமாக ஜாடை பேசுதல், ஆரவாரமாக அலர் தூற்றுதல் ஆகிய செயல்கள் உடையவராய்க் காட்சிப் படுத்தப்படுகின்றனர்.

    “அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றிப்
    புரையில் தீமொழி பயிற்றிய உரையெடுத்து
    ஆனாக் கௌவைத்தாகத்
    தான் என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே” (நற்.- 36)

    என்பது தலைவியின் கேள்வி.  ‘தாழ்ச்சி உடைய தீய சொற்களை எப்போதும் பேசிப் பழி சுமத்தும் ஊர்ப்பெண்கள் கமுக்கமாக ஜாடை பேசுவதுடன்; ஆரவாரமாக வாய்விட்டுத் தூற்றும் அளவிற்கு இந்த ஊர் எதை இழந்து விட்டது?!’ என்ற தலைவியின் வியப்புக் கலந்த வினாவில் ஊர்ப்பெண்டிர் என்ன பேசினார்கள்; எப்படிப் பேசினார்கள் என அனைத்தும் இடம்பெற்று அவர்க்குச் சிறுபாத்திரத் தகுதியைக்  கொடுக்கிறது. பெண்டிர் தூற்றும் அலர் பற்றிப் பேசும் பிற பாடல்களும் உள (அகம்.- 70; நற்.- 143)

    தலைவி கூற்றில் ஊர்ப்பெண்டிர்

    குறிஞ்சித்தலைவி ஊர்ப்பெண்டிரின் அலர்தூற்றும்  வாயை அடைக்க இயலாது என்பதைக்;

    “குறிஞ்சி நல் ஊர்ப்பெண்டிர்
    இன்னும் ஓவார் என்திறத்து அலரே” (நற்.- 116)

    எனத் தோழியிடம் குறைப்பட்டுக் கொள்கிறாள்.

    தாய் கூற்றில் ஊர்ப்பெண்டிர்

    தன் மகள் தலைவடன் போன பின்னர் நடந்ததை எல்லாம் எண்ணிப் பார்த்துப் பேசும் தாய்;

    “அலர்வினை மேவல் அம்பல் பெண்டிர்” (அகம்.- 203)

    பேச்சையும் சேர்த்தே நினைத்துப் பேசுகிறாள்.

    தோழி கூற்றில் ஊர்ப்பெண்டிர்

    பகற்குறி வந்த தலைவனிடம் ஏதம் கூறி; இரவுக்குறியும் வசதிப்படாது என உணர்த்தும் தோழி;

    “…………………… ……… துஞ்சாக் கண்ணர்
    பெண்டிரும் உடைத்து இவ்அம்பல் ஊரே” (நற்.- 223)

    என்கிறாள்.

    தலைவன் கூற்றில் ஊர்ப்பெண்டிர்  

    தான் மையல் கொண்ட ஆயர் குலப்பெண் மோர் விற்றுக் கொண்டு வரும் போது; அவளிடம் மோர் வாங்கும் ஊர்ப்பெண்டிர் செயலையும் பேச்சையும்  விரிவாக எடுத்து உரைக்கிறான் தலைவன். அவளது அழகு யார்க்கும் அணங்காகித் துன்புறுத்தக் கூடியது என்று எண்ணியதால் வீட்டின் வாயிலை அடைத்துக் கொண்டு நின்று; தம் கணவர் காணாவண்ணம் அவளை விரைந்து அனுப்புவதே குறியாக ‘மாங்காய் நறுங்காடி கூட்டி உண்பேம்; நீ  உன் கிளையோடு சென்று சேர்வாயாக’ எனச் சொல்லி விலக்கியமையை நகை தோன்றக் கூறுகிறான் (கலி.- 109).

    பேய்ப் பெண்டிர்

    தொகையிலக்கியக் காலத்தில் ‘பேய்’ என்ற சொல்லின் பொருட்பரிமாணம்; இன்று வழங்கும் பொருளில் இருந்து மாறுபட்டது. பேஎய் என்று சுட்டப்பெறும் பெண்; தலைவி தனக்குத் தானே கூறிக் கொள்ளும் உவமையில் இடம் பெறுகிறாள். மகப்பேற்றின் போது  தலைவன் தன்னை விட்டு ஒதுங்கிப் புறத்தொழுக புனிறு நாறும் தன்னை விடுத்து; மணம் பொருந்திய பிற பெண்டிரை நாடிச் சென்ற அவனிடம்;

    “பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே” (ஐங்.- 70)

    என்கிறாள். இத்தலைவி பாசுபதநெறி சார்ந்தவள் எனலாம். இப்பாடலடியில் இடம் பெறும் ‘பேஎய்’ என்னும் சொல் எப்படிப்பட்ட பெண்ணைக் குறிக்கிறது என்பது நோக்கத்தக்கது.

    ‘பேஎய்ப் பெண்டிர்’ என்று பெயர் பெறுவோர் கணவனை இழந்த  பாசுபத சமயம் சார்ந்த பெண்டிர் ஆவர். இல்லற சுகம் நீத்து நீற்றுப்பூச்சுடன் எஞ்சிய வாழ்வைக் கழிக்கும் தன்மையால் தெய்வத்தன்மை பொருந்தியோர் என்னும் கருத்தில் பேய்ப்பெண்டிர் என்று பெயர் பெற்றமை தெரிகிறது.

    “பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
    காடு முன்னினனே கட்காமுறுநன்
    தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
    பாடுநர் கடும்பும் பையென்றனவே”  (புறம்.- 238).

    என்று வெளிமான் இறந்த போது அவனது மகளிர் தொடி கழித்தமையும் பேஎய் ஆயம் என்று பெயர் பெற்றமையும் ஒருங்கே பாடப்பட்டுள்ளது.

    சுடலைத் தீயே விளக்காகக் கணவனை இழந்து அழுத கண்ணீரால் தாம் பூசிய வெண்ணீறு அவிந்து விட அங்கிருந்த பெண்டிர் பேஎய்மகளிர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர் (புறம்.- 356).

    சுடுகாட்டுக்  காட்சியைப் பாடுங்கால்;  இறந்துபட்ட கணவனைத் தழுவி அழுத பெண்கள் விளரூன் தின்று கால்பெயர்த்து ஆடும் பாசுபதத்தாரைக் கண்டு வெருவி நீங்கியமை;

    “பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி……
    ஈமவிளக்கின் வெருவரப் பேரும் காடு” (புறம்.- 359)

    எனக் குறிப்பிடப் படுவதைக் காண்கிறோம்.

    புண்பட்டுக் குருதி சோர இறந்த தம் கணவரின் உடலைத் தீண்டிச் சிவந்த கைகளால் கூந்தலை அலைத்து அழுத பெண்களைப் பேஎய்ப் பெண்டிர் என்றே சுட்டுவது நோக்கத்தக்கது (புறம்.- 62)

    பாசுபதப் பெண்டிர் கணவனை இழந்த நிலையோடு; தன் நிலையை ஒப்பிட்டுப் பேசுகிறாள் தலைவி. ஏனெனில் இன்றும் கருவுயிர்த்த பெண்ணைப் பிறர் முன்னர் நடமாடவோ; உண்ணவோ;  பூச்சூடவோ அனுமதிக்க மாட்டார்கள். மீறினால் கண்பட்டு அப்பெண் நோயுறுவாள் என்று நம்புகின்றனர். அது போன்றே கருவுயிர்த்த பெண் கணவனுடன் தனித்திருப்பின் குழந்தைக்கு சீர் தைக்கும்; வயிற்றுப்போக்கு ஏற்படும் என்றும் நம்பிக்கை உள்ளது.

    தான் தனித்திருக்க; புறத்தொழுகும் கணவனின் நடவடிக்கையைத் தாங்க மாட்டாதவளாய்ப்; ‘பாசுபத நெறியில் கணவனை இழந்த பேஎய்ப் பெண் போல நானிருக்கிறேன்’ என்று அங்கலாய்க்கிறாள் தலைவி.

    பெண்டிரும் தொழிலும் 

    கணவனை இழந்த பெண்டிர் தாமே தொழில் செய்து வாழ்ந்தமை அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் இடம்பெறுகிறது  (புறம்.- 125&326).

    “ஆளில் பெண்டிர் தாளின் செய்த
    நுணங்கு நுண் பனுவல் போலக்” (நற்.- 353)

    கணங்கொள் மாமழை காட்சி அளித்தமை உவமையில் விளக்கம் பெறுகிறது.

    தமது வறுமை காரணமாக சேவல்கள் கொத்திப் பிளந்து போட்ட பருத்திக்கொட்டைகளை உணவிற்காகச் சேர்த்து வைத்தமை; காட்டுவழியை வருணிக்கும் பின்புலத்தில் ‘நல்கூர் பெண்டிர்’ செய்கையாகப் புனையப்பட்டுள்ளது (அகம்.-129). பருத்தி விதையில் இருந்து எடுக்கப்படும் பாலுடன் இனிப்பு சேர்த்துக்கஞ்சி காய்ச்சும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. அது மிகுந்த மருத்துவ குணம் கொண்டதென்ற கொள்கையும் உள்ளது.

    ஆனால் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் நற்றிணைக்கு எழுதிய உரையில்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் கரந்தைக் கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளையும் சேர்ந்து எழுதிய அகநானூற்று  உரையிலிருந்து மாறுபட்டு; நல்கூர் பெண்டிர் என்போர் ‘பெண் தன்மையில் குறையுடையோர்’ என்று பொருளுரைப்பது (நற்.- 90) ஏற்றுக் கொள்ளுமாப் போல இல்லை.

    சில சேரிகள் சேர்ந்தமையும் வாழ்விடமாகிய சீறூர்ப் பெண்டிரின் வாழ்க்கைநிலை பின்தங்கியதாகக் காணப்படுகின்றது. காட்டுவழி பற்றிய வருணனையில் சீறூர்ப்பெண்டிர் இடம்பெறுகின்றனர். அவர்கள் விருந்தயர்வது;

    “பல்கவர் மருப்பின் முதுமான் போக்கிச்
    சில் உணா தந்த சீறூர் பெண்டிர்” (அகம்.- 283)

    என்ற பாடலடிகளில் காட்டப்படுகிறது.  அவ்வுணவின் தன்மை பற்றிய அடைமொழி அவர்களது எளிய வாழ்வு முறையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. மான்களை விரட்டி விட்டுக் கொண்டுவந்த சிறிதளவு உணவு என்பது; மானுண்டு எஞ்சிய உணவு என்று விளக்கம் அளிக்கிறார் உரையாசிரியர்.

    கள்விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்டிர் ‘அரியல் பெண்டிர்’ (அகம்.- 157) என்று சுட்டப்படுகின்றனர். அவர்கள் இடையில் சுமந்து வரும் விரிந்த பானையின் குவிந்த முனை சொரிந்த வடிகட்டிய கள்ளை அருந்தும்  பாலைநிலத்து மறவர் பற்றித் தலைவி பேசுகிறாள்.

    விலைநலப் பெண்டிர் பொருள் உடைய செல்வந்தர்பால் சேர்ந்து வளம் பெற்ற செய்தி உவமையாகச் சொல்லப்படுகிறது (புறம்.- 365).

    பெண்டிர் தகுதி

    புறப்பாடல்கள் பெண்டிர் தகுதி பற்றிய ஆவணங்களாக உள்ளன.

    கணவன் வினைநிமித்தம் அகன்று சென்றிருந்தாலும் மனைவி இரவலர்க்குப் பரிசில் வழங்கும் தகுதி பெற்று இருந்ததை கண்டீரக்கோன் நள்ளியின் மனையாள் செயல் மூலம் அறிகிறோம். நள்ளி தொலைதூரம் பிரிந்து போயிருந்தக்கால் பாணர்க்குப் பிடி யானைகளை அவள் பரிசளித்ததாகப் போற்றப்படுகிறாள்.

    “கிழவன் சேட்புலம் படரின் இழை அணிந்து
    புன்தலை மடப்பிடி பரிசிலாகப்
    பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண்புகழ்க்
    கண்டீரக்கோன்” (புறம்.- 151)

    என்று புகழும் புலவரின் நோக்கம் அந்த வேளாளனின் புகழ் பாடுவதே என்றாலும்; அவனது மனைவியின் தகுதிப்பாடு கூறி  இங்கே பெருமைப் படுத்தப்படுகிறான்.

    முதுகுடிப் பெண்டிர் தாம் வாழ்ந்த சமுதாயத்திற்குத் தேவையான வீரத்தைத் தம் மக்களுக்கு ஊட்டித் தியாகம் செய்யத் தயாராக இருந்தமை;

    “இன்ன விறலும் உள கொல் நமக்கு என
    மூதிற் பெண்டிர் கசிந்து அழ நாணிக்
    கூற்று” (புறம்.- 19)

    கண்ணோடியது என்னும் புனைந்துரை மூலம் தெரிகிறது. கணவன், சகோதரன், மகன் என உறவுகள் அனைவரையும் போரில் பறிகொடுத்தும்; தம் வாழ்வாதாரம் காக்க வீரமரணம் அடைந்ததையே பெருமையெனக் கருதிக் கண்ணீர் விட்ட காட்சிக்கு மூதில் பெண்டிர் ஆதாரமாக அமைந்துள்ளனர்.

    தலைவனின் தாயாகிய சீறூர் நல்கூர் பெண்டு

    கற்புக்கடம் பூண்டு; தன் பிறந்த வீட்டிலிருந்து காதலனுடன் செல்லும் தலைவிக்குத் தம் மனையில் சிலம்புகழி நோன்பு நிகழ்த்தும் பண்பாடு பெண்டிரிடம் இருந்தது. வறுமை வாய்ப்பட்டு இருப்பினும் தலைவனையும் தலைவியையும் இல்லறத்தில் இணைக்கும் செயலைப் பெண்டிர் தயக்கமின்றிச் செய்தனர். ஓர் பசுவை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு; ஒரே ஒரு தூண் மட்டுமே நிற்கும் முற்றத்தை உடைய; நல்கூர் பெண்டிரின் ‘புல்வேய் குரம்பையில்’; தலைவனுடன் போன தன் மகளுக்குச் சிலம்புகழி நோன்பு நடக்குமே என நொந்து புலம்புகிறாள் செல்வக்குடியைச் சேர்ந்த தாய் (அகம்.- 369).

    முடிவுரை

    ஊர்ப்பெண்டிர் பழி சுமத்துதல், கமுக்கமாக ஜாடை பேசுதல், ஆரவாரமாக அலர் தூற்றுதல் ஆகிய செயல்கள் உடையவராய்ப்  பேசப்படுகின்றனர்; ஒருசேர வசைபாடப் பெறுகின்றனர்.

    கணவனை இழந்த  பாசுபத சமயம் சார்ந்த பெண்டிர் பேஎய்மகளிர் என்றே குறிப்பிடப்பட்டனர். ஆளில் பெண்டிர் நூற்புத் தொழில் செய்து வாழ்ந்தனர். நல்கூர் பெண்டிர் பருத்திக்கொட்டைகளை அன்றாட உணவிற்காகச் சேகரித்தனர். சீறூர்ப் பெண்டிரின் வாழ்க்கைநிலை பின்தங்கி இருந்தது. கள்விற்கும் தொழிலிலும் பெண்கள் ஈடுபட்டனர். விலைநலப் பெண்டிர் பொருளுடைய  செல்வந்தரிடம் சேர்ந்து வளம் பெற்றனர்.

    கணவன் வினைநிமித்தம் அகன்று சென்றிருந்தாலும் மனைவி இரவலர்க்குப் பரிசில் வழங்கும் தகுதி பெற்று இருந்தாள். முதுகுடிப் பெண்டிர் தாம் வாழ்ந்த சமுதாயத்திற்குத் தேவையான வீரத்தைத் தம் மக்களுக்கு ஊட்டித் தியாகம் செய்யத் தயாராக இருந்தனர்.

    வறுமை வாய்ப்பட்டு இருப்பினும் பண்பாடு காத்துத் தலைவனையும் தலைவியையும் இல்லறத்தில் இணைக்கும் செயலைப் பெண்டிர் தயக்கமின்றிச் செய்தனர்.

    Share
  • Online Teaching and Learning – Problems and Solutions

    Online Teaching and Learning – Problems and Solutions

    V. Tamilselvi
    Assistant Professor
    Department of Business Administration
    Parvathy’s Arts and Science College, Dinigul

    Introduction

    Online learning is education that takes place over the Internet. It is often referred to as “e- learning” among other terms. However, online learning is just one type of “distance learning” – the umbrella term for any learning that takes place across distance and not in a traditional classroom.

    Online learning is catalyzing a pedagogical shift in how we teach and learn. There is a shift away from top-down lecturing and passive students to a more interactive, collaborative approach in which students and instructor co-create the learning process. The Instructor’s role is changing from the “sage on the stage” to “the guide on the side.” Main advantages of online learning

    Convenience

    24/7 access from any online computer; accommodates busy schedules; no commuting, no searching for parking.

    Enhanced Learning

    Increased depth of understanding and retention of course content; more meaningful discussions; emphasis on writing skills, technology skills, and life skills like time management, independence, and self-discipline.

    Leveling of the Playing Field

    Students can take more time to think and reflect before communicating; shy students tend to thrive online; anonymity of the online environment.

    Interaction

    Increased student-to-teacher and student-to-student interaction and discussion;a more student-centered learning environment; less passive listening and more activelearning; a greater sense of connectedness, synergy.

    Innovative Teaching

    Student-centered approaches; increased variety and creativity of learning activities; address different learning styles; changes and improvements can translate to on-ground courses as well

    Improved Administration

    Time to examine student work more thoroughly;  ability to document and record online interactions; ability to manage grading online.

    Savings

    Accommodate more students; increased student satisfaction = higher retention and fewer repeats.

    Maximize Physical Resources

    Lessen demand on limited campus infrastructure; decrease congestion on campus and parking lots.

    Outreach

    Give students options; reach new student markets; appeal to current students  thus increasing enrollments.

    Online Learning Challenges Faced by Students

    1. Adaptability

    Students find it difficult to adapt to an online learning environment immediately after traditional classroom learning. Due to the sudden change, they are not able to adapt to the commuter based learning. Students who have been always studying in the traditional classroom mindset are not able to focus on online platforms. It is important for them to accept the new learning environment with an open mind.

    2. Technical Issues

    Many students are not well equipped with a high internet connection that is required for online learning. Due to this, they face problems in going live for virtual learning and other platforms that require internet connection. They face technical issues as they are not much aware of technology and computer applications. A slow and high internet connection can play an important role in how quickly you can attend the class and do not miss any live sessions. There is a possibility of poor connectivity if you find difficulty in downloading some information related to the subject, blurred videos, etc.

    You just need to find a high-speed internet connection at your home. And know where you can get technical support for your connection and other technical issues related to software and tools for effective learning.

    3. Computer Knowledge

    Lack of computer education is a major concern in today’s world. There are many students who still cannot operate basic computers with MS word and PowerPoint. And whenever some technical issues emerge, they find it difficult to solve the problem in such a scenario. They face difficulties with live classes, usage of appropriate icons, MS office, communication-related apps and websites, browsing study materials, etc. Sometimes they do not know technology proficiency like login, live classes, creating and submitting work, communicating with teachers and friends.

    4. Time Management

    In many cases students find difficulty in managing their time with online learning. Online learning is completely new for them and requires intensive work. They need a scheduled planner to manage their time in an effective manner. Online learning provides flexible time unlike traditional classrooms. But some face difficulties in adjusting to the time required for online learning.
    5. Self Motivation

    Students start losing hope once they find difficulty in online learning. It requires motivation to complete tasks and engage students with their learning. Lack of motivation is a common challenge for all students.

    6 . Distraction

    Learning from home is an amazing experience. You might expect things around you to be like a school campus. But at home things are different for example, you might want a massive classroom, parks, playgrounds, canteens, friends, teachers around you to guide and learn. But with online learning, you have to manage everything in one room with parents around you. You can be easily distracted by small things at home.

    7 . Learning Styles

    Most of the students have learned in the physical classroom. Online learning can make you adapt to different styles of learning. There are some students who can adapt to these styles quickly but what about the students who need time? In such cases, they lack concentration, inability to understand the live classes, difficulty in creating projects and assignments using technology.

    8. Communication

    Students lack effective communication skills during online learning. Teachers give assignments for improving reading and writing skills but there is a possibility that they might not be able to write so convincingly that educators understand the concept behind their assignments.

    There are some students who feel shy to communicate with their teachers and friends due to the new model of learning. It might happen due to lack of interest, poor technological skills with apps and video calls or unable to express themselves via live chats, emails or text messages.

    9. Virtual Engagement

    Online classes help teachers to provide reading material, assignments, communication via email, live chats or messages and delivering content by live sessions, presentations, recorded videos or lectures for the students.

    In spite of all these activities, still some students do not find engaging compared to a traditional one. Students find it difficult to communicate in person who struggles with understanding concepts. Many times these students do not even approach teachers to clear their doubts.

    10. Feedback

    Every student needs feedback for their performance during the learning process so that they can improve their learning abilities. They are not only observed during the tests or exams but also for each assignment and project. Research reveals that the students hardly visit their assignments to check their suggestions and comments. The feedback model with respect to online will be difficult for them to understand and implement.

    Solutions for the on line Learning

    Nowadays adaptive learning is using Artificial intelligence to adjust the content according to individual needs. It helps in providing personalised courses to identify their weaknesses and strengths for better learning outcomes.

    Need to find a high-speed internet connection at your home. And know where you can get technical support for your connection and other technical issues related to software and tools for effective learning.

    Students should be provided access to support devices that can help them solve technical problems via call, email or live chat. You should pay attention to your instructor during the process of solving the issues.

    Time management is the most important factor in online learning. It needs time and effort for better learning outcomes. You should know the factors that can affect your timings during the learning process such as

    A) Avoid Distractions – Try to avoid distractions that can affect your learning. There are many platforms that can engage you for entertainment and communication. But make sure that you set time for breaks and focus on learning as scheduled to avoid missing live classes or sessions.

    B) Create To-Do List – You can prepare a list of activities on an everyday basis. Try to break down large activities into smaller ones for better learning outcomes. Use this list to tackle each task. Make sure that you adhere to the list and establish the routine that can make time management practices easy.

    C) Seek Help – To manage time during online learning seek help from your parents, friends and families. So that you will not miss out on learning and at the same time work will be done.

    D) Avoid Multitasking – Do not try to take up multiple tasks at the same time. Complete one task at a time as it can make your work less effective and productive

    E) Involve Yourself – You should show up for all the activities and learning during the sessions. Make sure that you log in every day, check for the status and appear in all the sessions and discussions. Connect with your friends and teachers for asking and sharing information.

    F) Schedule Time for Learning – You have to stick to a study plan for effective learning. Take a break and resume back to learning with the same interest and enthusiasm.

    G) Stay Positive – Make sure that you are positive towards online learning. Make use of the time in the best way and gain knowledge for better learning outcomes.

    Inform the parents and friends about the time of online learning so that there will be no distractions from their side. Restrict the study area for others to come during live sessions and video calls. Make sure you relax in the breaks set in the time table. In this way, you will concentrate on learning and spend quality time with your friends and family.

    To get better learning outcomes, it is important to understand the learning styles. You can learn through interaction, visual presentations, audio classes or written notes. Follow your own learning style that helps in enhancing your learning experience.

    Become aware of the importance of communication for better learning. Online learning enhances your learning experience. It provides a platform for communication and interaction with others. In this way, you are able to learn from them and improve their knowledge and skills. If you have any issues in communication, then seek help from teachers and friends. Ask them tools that can help you improve your communication skills. You read, write and interact for better communication.

    Communicate with your teachers in private to clear doubts either through virtual learning platforms or calls. Your teachers might be able to help you out more clearly. And they can help you with some of the easy reading materials that are simple to understand. You can also take extra time with your teachers and friends after the online classes for a better understanding of the subject.

    You can approach your teachers for feedback related to your performance. Teachers can give your personalized guidance for improvement and identify your weaknesses and strengths. You can improve your learning pattern based on the feedback. Unless you receive feedback from teachers, there are chances of less improvement in your learning.

    Online Learning Challenges Faced by Teachers

    As education is going on online, many educators are being asked to teach their students from home. We know that all the teachers are not aware of online learning and their process as most of them are into traditional classroom teaching. It sometimes makes it difficult for them to change their way of teaching. Proper online training should be given to teachers before teaching students. With all the benefits of online learning still there are few challenges faced by teachers.

    There is a saying for every problem, there is a solution. So let us not only see the challenges but also find solutions to overcome them. Here are 10 challenges for teachers faced during the online learning process along with ways to overcome them

    1. Engaging students

    As students are moving towards online learning from traditional classrooms, it becomes difficult for teachers to adjust to a new learning platform. Teaching online may not influence and engage students for longer periods of time. They can easily get distracted and lose concentration during live sessions.

    Solution

    You need to understand that online learning has a lot of advantages with respect to tools and interesting platforms to engage students in learning. Try to include those tools and multiple types of learning approaches such as podcasts, videos ( teaching channel, own videos, live classes), discussions, various forms of text through articles and blogs, different assessment methods (tests, quizzes, assignments and projects) learning activities and collaboration for better learning outcomes.

    2. Time Commitment

    If the course content is thought in person then you might not really understand the time commitment. It is still difficult to convert those learning into effective online format. Teachers should be given some time for proper planning of the content and methods to deliver to the students. Teachers are not able to deliver the effective content in time. It said that teachers take more time in teaching online than face to face. If students exceed their deadline in submitting assignments or projects can lead to more work for you.

    Solution

    Use a friendly tone for communicating with your students to establish rapport. You can set reminders for assignments and projects in your learning management system. Send it to your students one week prior to the submission deadline

    3. Communication

    The more detailed the syllabus, the easier to communicate to the students. Sometimes teachers are not given enough time for the preparation of content for their students. And also there are students who avoid communication with teachers during online learning.

    Online teaching is like communicating without body language, so students might misunderstand and can result in their poor performance. Sometimes students might ask for an extension for their work or give any excuse for the delay

    Solution

    Give flexibility for the students when they ask for not making up to their deadlines. You must recognize the need of keeping in contact with the students and understand what kind of activities can accomplish your goal. Conduct discussions for specific content for the students with the opportunity to solve the problem and learning effectively.

     Also providing discussion on practical questions by the students that can reduce frustration, problem-solving skills and handling technical issues. You should provide a platform for the students in order to communicate and collaborate with other fellow classmates.

    4. Assessment

    Assessment is the most important part of online learning for students as well as teachers. And it causes stress to students at times. So whenever there are assignments or projects, teachers might face a lot of questions from the students. As there is less communication between students and teachers, expectation from the students’ performances also differs. Students are likely to experience less homework, less assignments or lack of examination at times. This can cause difficulties for teachers in assessments.

    Solution

    You must understand the type of questions students might ask and prepare FAQs for the common questions. Make sure that you give proper assignments and conduct tests at regular intervals. This can help you to assess them based on their performance.

    5. Feedback

    Every student needs feedback for their performance for improvement. Teachers find it difficult to give feedback to all students individually. Sometimes few students get benefited from it and others don’t. As students are not given proper feedback leading to poor performance. Teachers do not find proper methods of providing feedback to all the students.

    Solution

    You should understand how important it is to give feedback for the students for their growth and improvement. Make sure that you provide personalized guidance to all the students so that they can work on their learning abilities.

    6. Learning Management Systems

    Teachers experience a hard time in expressing their content to students, especially assignments and assessments. There have been problems with understanding the level of difficulty in terms of course content among students. According to teachers, the incident opportunities that happen face to face communication fail in online learning.

    Solution

    You should have an understanding of the strong learning management system and web technologies that can help your pedagogy. Think and take advantage of the training and workshops attended during teacher training. Apply the methods for effective teaching and management systems. You can also approach other teachers who know about the management system in online learning.

    7 . Teaching Methods

    We know that most of the teachers follow typical classroom-style teaching methods, as they use to teach with only blackboard and books. It becomes difficult for them to adopt new teaching methods that are completely virtual and technology-driven.

    Solution

    Most important thing is to get comfortable in a virtual classroom. Find out different kinds of tools that make teaching and assessment simple and easy. You can develop many teaching methods that can improve their learning such as conducting different activities, model making, debates, group activities, virtual tours, group discussions, role play etc.

    8. Fear of Cheating

    Sometimes teachers might feel concerned about the risk of cheating in online learning. They feel that students can cheat to get better results in the tests and assignments.

    Solution

    There are many reliable ways to enhance the integrity of online learning. You should allow students to take exams according to their convenience. Do not force for assignments or any tests unless they are ready.

    9. Technical Issues

    Many teachers struggle with technical issues that are unavoidable and cause stress. They become helpless if something technical errors come in the middle of the live session or communicating with students.

    Solution

    You should contact technical support for solving problems that can cause hindrance in the learning process. Make sure you upgrade your computer with apps and software that can help in an effective learning process with a high-speed internet connection.

    10. Course Content

    The course content was designed earlier with respect to traditional classrooms. But with the shift to online learning, it requires redesigning of course which can take a considerable amount of time and energy. It would have been successful when it started well in advance for better learning outcomes. Most of the cases, these courses work well in traditional classrooms but go flat in online learning. It happens when there are no content-related activities, assignments or projects that can be done online.

    Solution

    You must understand the course content and how to fit it into your online course. Make sure you modify some changes in terms of activities and assignments for a better understanding of the concepts

    Conclusion

    In this quarantine on line is the only way to continue our Teaching and Learning. Instead of talking about the Problems we have focus on the Solutions to Improve our Condition. Measures have to be Taken by the Government and Educational Institutions to Simplify the Process and Improve the Comfort Level of the Students.

    Share
  • இயற்கை மொழிச் செயலாக்கங்களின் தற்போதைய போக்குகள் & சவால்கள்

    இயற்கை மொழிச் செயலாக்கங்களின் தற்போதைய போக்குகள் & சவால்கள்

    முனைவர் மோ. ஜெயகார்த்திக்
    உதவி இயக்குநர் (கல்வி), தமிழ் இணையக் கல்விக்கழகம்,
    கோட்டூர், சென்னை – 25
    மின்னஞ்சல்: jeya_karthic@yahoo.com 

    முன்னுரை

    இயற்கை மொழிச் செயலாக்கம் (Natural Language Processing)  என்பது கணினி விஞ்ஞானத்தில் அதிக ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு துறையாகும். NLP, கணினிகள் மற்றும் மனித மொழிகளுக்கிடையில் ஒரு  பரஸ்பர தொடர்பினை ஏற்படுத்துகின்றது. இயற்கை மொழி ஆய்வுக் குறியீடுகள் மற்றும் செயற்பாட்டுத்  தொகுப்புகள் மற்றும் மாதிரி தரவுகள்  என்பனவற்றைத் தன்னகத்தே உள்ளடக்கி இருப்பதால் இயற்கை மொழிச் செயலாக்கத்தை (Natural Language Processing) எளிதில் நடைமுறைப்படுத்த  முடியும். பொதுவாக இயற்கை மொழி செயலாக்கத்திற்குத் (NLP) தேவையான முக்கிய செயற்பாடுகளைப் பற்றி விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

    தமிழில் இயற்கை மொழி ஆய்வுக்கான முன்னேற்பாடுகள்

    இந்திய மொழிகள் அனைத்தும் கணிப்பொறி அறிவியலில் உரிய இடத்தைப் பெறுவதற்காக நடுவண் அரசும் மாநில அரசும் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. நடுவண் அரசின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி (TDIL- Technology Development of Indian Language) என்ற திட்டத்தை உருவாக்கிச் செயல்பட்டு வருகிறது. இதற்காக  நாடு முழுவதும் 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, பல கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இந்திய மொழிகள் பலவற்றின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்திலும் மாநில அரசானது தமிழ்மொழியின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. தமிழ் மென்பொருள் வளர்ச்சிக்கான பல திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. இதனடிப்படையில் தமிழ் இணைய மாநாடுகள் நடைபெற்று, தமிழ் இணையக் கல்விக் கழகமும் நிறுவப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்களும் தமிழ் மென்பொருள் உருவாக்கத்திற்காக மானிய உதவியைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மொழி உருவாக்கம் (Language formulation)

    மொழியியல் என்பது மொழியை அறிவியல்பூர்வமாக ஆராய்வது. ஒலியனியல் நிலை, உருபனியல் நிலை, பொருண்மையியல் நிலை ஆகியப் படிநிலை அமைப்பில் வரும் மொழி அலகுகளாகப் பிரித்தாய்ந்து மொழியின் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளக் கணிப்பொறியைப் பயன்படுத்தலாம்.  மேலும், சிறிய மொழிக் கூறுகளிலிருந்து பெரிய மொழிக் கூறுகளை ஆக்கலாம். இதனை மொழிப் பகுப்பாய்வு என்றும் மொழி ஆக்கம் என்றும் அழைக்கலாம்.

    இலக்கண விதிகளை எளிமைப்படுத்திக் கணினிக்கு உணர வைக்க, மொழியியல் கோட்பாடுகள் அவசியமாகின்றன. இவை ஒரு சொல்லையோ அல்லது அதன் பகுதியையோ கணினி அறியப் பயன்படுகின்றது. கணினியுடன் தொடர்புகொள்வதற்குத் துணை நிற்பது நிரல்மொழி. ஜாவா, பேர்ல், சி, சி++, பைத்தான் போன்ற நிரல்களை இயற்கை மொழி ஆய்வுகளுக்கு ஆய்வாளர்கள் தேர்வு செய்கிறார்கள். இவற்றின் மூலம் உருபனியல் பகுப்பாய்வியை உருவாக்குவது என்பது எளிதாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் இதன் வெளியீடானது தொடரியல் பகுப்பாய்வுக்கு உள்ளீடாகக் கொடுக்கப்படுகிறது. இது  இயந்திர மொழிபெயர்ப்புக்கு உதவியாக அமைகின்றது.

    இயற்கை மொழி ஆய்வு

    கணிப்பொறி ஒரு மொழியாய்வுக் கருவி. செய்திகளை 1,0 என்ற எண்களால் ஆய்வது தான் கணிப்பொறி. மனித மூளை 0,1 என்ற அடிப்படை எண்களை வைத்துக்கொண்டு இயந்திர மொழி மூலம் எழுத்துகளும், எண்களும் தனித்தன்மையான குறியீடுகளும் (Special Symbols) உருப்படுத்தம் செய்யப்படுகின்றன. மொழியியலார் கணினியை மொழியின் கடினமான செயல்பாடுகளைச் செய்யும் கருவியாகப் பயன்படுத்தும் காலம் வந்துவிட்டது. மொழியியல் சார் கணிப்பொறி ஆய்வைக் கணினி மொழியியல் ஆய்வு அல்லது இயற்கை மொழி ஆய்வு என்பர். இவ்வாய்வுப் பேச்சைத் தெரிந்துகொள்ளுதல், பேச்சை உருவாக்குதல், உரைகளை பேச்சாக்குதல், பேச்சுகளை உரை ஆக்குதல், இயந்திர மொழிபெயர்ப்பு, விரிதரவுகளை ஆய்தல், உரைகளை ஆய்தல், மொழி அலகுகளைப் பகுப்பாய்வு செய்தல் என்பனவற்றை உள்ளடக்கும். மொழியாய்வு மொழியைப் புரிந்துகொள்ளுதல் என்பதுடன் உரை அல்லது பேச்சுச் செய்திகளைப் பொருள் கொண்டுப் புரிந்துகொள்ளுதல், மொழிபெயர்த்தல், உரைகள் அல்லது பேச்சுச் செய்திகளை உருவாக்குதல் முதலானவற்றையும் ஆய்வதாக அமைகின்றது.

    இயற்கை மொழி ஆய்வின் அணுகுமுறைகள்

    இயற்கை மொழிச் செயலாக்க அடிப்படையில் இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தலாம். 1. இயற்கை மொழிப் புரிதல் என்பது, இயற்கை மொழியில் கொடுக்கப்படுகின்ற உள்ளீட்டைப் பயனுள்ள அமைப்புகளாக அல்லது குறியீடுகளாகப் பொருத்துவது, மற்றும் மொழியின் பல்வேறு அம்சங்களைப் பகுப்பாய்வு செய்தல் என்பதைக் குறிக்கின்றது. 2. இயற்கை மொழி உருவாக்கம் என்பது இயற்கை மொழியின் உள்ளீட்டுக் குறியீடுகளிலிருந்து பொருண்மை பொதிந்த சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் உருவாக்கும் செயல்முறையாகும். இச்செயல்முறை  உரைத் திட்டமிடல், வாக்கியத் திட்டமிடல், உரை உணர்தல் என்ற உட்கூறுகளில் செயல்படுகிறது. மேலும், இயற்கை மொழியைப் புரிந்துகொள்ளுதல் என்பது இயற்கை மொழி உருவாக்கத்தைவிடக் கடினமானது ஆகும்.

    இயற்கை மொழி ஆய்வின் படிநிலைகள்

    இயற்கை மொழி ஆய்வில் ஐந்து படிநிலைகள் உள்ளன.

    1. சொல் பகுப்பாய்வு என்பது சொற்களையும் சொற்களஞ்சியத்தையும் உள்ளடக்கிய மொழி ஆய்வு ஆகும்.

    2. தொடரியல் பகுப்பாய்வு என்பது வாக்கியங்களைத் தொடர்களாகவும் சொற்களாகவும் பிரித்து அவற்றின் தொடரியல் மற்றும் சொல் வகையிலான பண்புகளை அடையாளப்படுத்தும் நடைமுறையாகும்.

    3. பொருண்மையியல் ஆய்வானது மொழியில் உள்ள சொற்களின் பொருண்மையை அறிவியல் நோக்கில் ஆராய்வதாகும்.

    4. சொல்லாடல் என்பது மொழியில் பொருண்மையைக் கொடுப்பதும் பெறுவதுமாக நிகழும் பரிமாற்றமாகும்.

    5.  சூழ்பொருளியல் ஆய்வானது சொற்றொடரின் பொருளுக்கும் பேசுபவரின் பொருளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய்வது.

    இயற்கை மொழி ஆய்வின் போக்குகள்

    இயற்கை மொழியை மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கும்போது, சிக்கலான மொழி பழக்கத்திற்கு உட்படுகின்றது. ஒலியனியல் பகுப்பாய்வு, உருபனியல் பகுப்பாய்வு, பொருண்மையியல் பகுப்பாய்வு, பயன்வழியியல் பகுப்பாய்வு, கருத்தாடல் பகுப்பாய்வு ஆகியவை கணினி மொழியியலுக்கு அடிப்படை ஆய்வுகளாகும்.

    ஒலியனியல் பகுப்பாய்வு, ஒலி அடையாளக் குறிகளிடமிருந்து அல்லது கேட்கும் அடையாளக் குறிகளிடமிருந்து சொற்களைப் பிரித்தெடுக்கும் பேச்சைத் தெரிந்துகொள்ளும்.

    ஒலிகள்   →   சொற்கள்

          /b/+/ɔ:/ +t ® bɔ:t/ ‘boat’

         க் + ஆ+ல்+அ+ம்                  காலம்

    உருபன்களிலிருந்து சொற்களைப் பெறல், சொற்களை உருபன்களாகப் பகுத்தல் என்பனவற்றை உள்ளடக்கும்.

    உருபன்கள்  →   சொற்கள்

    சிலை+கள்             சிலைகள்

    தொடரியல் பகுப்பாய்வில் சொற்களின் வரிசை அமைப்பிலிருந்து வாக்கிய அமைப்பைப் பெறுவது அல்லது  வாக்கியங்களைச் சொற்களாகப் பிரித்தல் என்பனவற்றை உள்ளடக்கும்.

    சொல்வரிசை    →    வாக்கிய அமைப்பு

    இராமன் சீதையை மணந்தான் என்ற சொல் வரிசையில்,

    இராமன் +  சீதை யை+  மணந்தான்

    (பெ.தொ.)  (வே.தொ.)  (வி.தொ.)

    (பெ.)+        (பெ.)+(வே.உ)+  (வி.)

    பொருண்மையியல் பகுப்பாய்வு என்பது வாக்கிய அமைப்பு சொற்பொருண்மையில் இருந்து வாக்கிய பொருண்மையைப் பெறலாம். எ.கா. இராமன் சீதையை மணந்தான் என்று பகுப்பில் இருந்து மணந்தான் இராமன், சீதை என்பதைப் பெறமுடியும்.

    பயன்மொழியியல் பகுப்பாய்வில் வாக்கியப்பொருள் மற்றும் சூழல் இவற்றிலிருந்து சரியான பொருளைப் பெறமுடியும். இது பொது அறிவையும் முன்னர் வந்த கூற்றின் அறிவையும் உள்ளடக்கும்.  எ.கா. அவன் சீதையை மணந்தான் என்ற வாக்கியத்தில் வரும் பதிலீட்டுப் பெயர் (அவன்) முன்னர் வந்த வாக்கியத்தின் அறிவால் அவன்= ராமன் என்று புரிந்துகொள்ளப்படும்.

    முடிவுரை

    மொழி ஆய்வில் கணினி பெரிதும் பயன்பட்டு வருகின்றது.  கணினியில் தமிழைக் கையாளுதல் என்பது சில சமயங்களில் சிக்கலுக்குரிய செயலாக உள்ளது. அச்சிக்கலைக் களைவதற்கு மொழியியல் அறிஞர்களும் கணினித் தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து செயல்பட்டால் இயற்கை மொழி ஆய்வில் ஏற்படும்  இடர்ப்பாடுகளைக் களையலாம்.

    பார்வை நூல்கள்

    1. Agesthialingom, S. 1967, Generative Grammar of Tamil, Annamalai University, Annamalai Nagar.
    2. Chomsky, N. 1965,   Aspects of theory of Syntax, MIT Press, Cambridge.
    3. அரங்கன், கி. 1975, தொடரியல் மாற்றிலக்கண அணுகுமுறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    4. இராசேந்திரன், ச. 2019, கணினி மொழியியலும் தமிழ்மொழியின் தொழில்நுட்ப வளர்ச்சியும், கோயம்புத்தூர்.
    5. சண்முகம், செ. 1998, சாம்ஸ்கியின் புது மாற்றிலக்கணம், கவிதா பதிப்பகம், சென்னை.
    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 20

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 20

    -மேகலா இராமமூர்த்தி

    சீதையைக் கவர்தல் உனக்கும் உன் குடிக்கும் கேடாய் முடியும் என்றுரைத்த மாரீசனைக் கடுஞ்சொற்களால் நிந்தித்த இராவணன், ”உன் அறிவுரை எனக்குத் தேவையில்லை மாமனே! எனக்கு நீ உதவினால் பிழைப்பாய்; இல்லையேல் என் வாளால் உனைக் கூறாக்கிவிட்டு யான் எண்ணியதை முடிப்பேன்” என்று உறுமவும், ”மனச் செருக்கோடு தருக்கித் திரிபவர் அழிவது உறுதி என்பது தத்துவ வார்த்தையன்றோ” என்று தன்னுள் எண்ணி, உருக்கிய செம்பின்மீது வார்த்தநீர் அடங்குதல்போல் அடங்கிய மாரீசன், ”இராவணா! உன்னுடைய நன்மைக்காகவே இத்தனையும் சொன்னேன்; என்னுடைய சாவுக்காக அஞ்சியன்று! என்ன செய்வது? அழிவு நெருங்கிவரும் காலத்தில் பிறர் நல்லது சொன்னாலும் அது தீமையாகத்தான் தோன்றும்; தீய நெறியில் செல்லத் தலைப்பட்டுவிட்டவனே! நான் என்ன செய்யவேண்டும்? புகல்வாய்!” என்றான்.

    உன்வயின் உறுதி நோக்கி உண்மையின்
         உணர்த்தினேன் மற்று
    என்வயின் இறுதி நோக்கி அச்சத்தால்
         இசைத்தேன் அல்லேன்
    நன்மையும் தீமை அன்றே நாசம்
         வந்து உற்ற போது
    புன்மையின் நின்ற நீராய்
         செய்வது புகல்தி என்றான். (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3366)

    அதைக் கேட்ட இராவணன் சினம் மாறி மாரீசனைத் தழுவிக்கொண்டு, மாமனே! காமன் அம்பால் சாவதைவிட இராமன் அம்பால் சாவதே மேல் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். காரணம், கட்டழகி சீதையின் நினைவால் இனிய தென்றலும் என்னைச் சுட்டிடுதே! ஆகவே, சீதையை எனக்காகக் கொண்டுவந்து தருவாய்!” என்றான்.

    என்றலும் எழுந்து புல்லி
         ஏறிய வெகுளி நீங்கி
    குன்று எனக் குவிந்த தோளாய்
         மாரவேள் கொதிக்கும் அம்பால்
    பொன்றலில் இராமன் அம்பால் பொன்றலே
         புகழ் உண்டு அன்றோ
    தென்றலைப் பகையைச் செய்த
         சீதையைத் தருதி என்றான் (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3367)

    இந்தப் பாடலிலேயே இராமனை எதிர்த்தால் தனக்குச் சாவு நேர்வது உறுதி என்பதை இராவணன் வாக்காலேயே உணர்த்திவிடுகின்றார் கம்பநாடர் என்பது கருதத்தக்கது.

    தன்னுடைய கட்டளையை நிறைவேற்றக் காத்திருந்த மாரீசனைப் பார்த்து, ”நாம் வஞ்சனையால்தான் அந்த வஞ்சியாளை வௌவ வேண்டும்; ஆதலால், நினைத்த வடிவெடுக்கும் ஆற்றல்வாய்ந்த நீ, மாயப் பொன் மானாய் மாறவேண்டும்; சீதையை மயக்க வேண்டும்” என்றான் இராவணன்.

    ”எப்படியும் தான் சாகப்போவது உறுதி! பிறன்மனை விழையும் இழிபிறப்பினனான இராவணன் கையால் சாவதைவிட இராமபாணம் பட்டுச் சாவதே மேல்; அஃது என்னை உயர்கதிக்கு எடுத்துச்செல்லும்” என்று எண்ணிய மாரீசன், இராவணனின் யோசனைக்கு இணங்கினான். காண்போர் சிந்தைகவர் விந்தை மானுருக் கொண்டு இராம இலக்குவரும் சீதையும் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் சென்றான்.

    அப்போது வைதேகி மலர்வனத்தில் பூக்கொய்து கொண்டிருந்தாள். அவள் பார்வையில் படும்வகையில் அந்தப் பொன்மான் அங்குமிங்கும் துள்ளி விளையாடிற்று. அந்த மாயமானின் வண்ணத்தையும் வடிவையும் கண்டுவியந்த சீதை, அதைப்பற்றிச் சொல்வதற்காக இராமனை நாடிச் சென்றாள். அவனைக் கண்டு,

    ”அன்பரே! நான் ஒரு மானைக் கண்டேன். அஃது ஆணிப் பொன்னால் ஆனது; அதன் மேனியொளியால் தொலைவில் நிற்கும்போதும் பளபளக்கின்றது; அதன் வலிய காதுகளும் கால்களும் சிவந்த மாணிக்கத்தால் ஆனவை; காண இனிய அழகுடையது” என்றுரைத்து இராமனை வணங்கினாள், அவன் தனக்கு அம்மானைப் பிடித்துத் தரவேண்டும் எனும் உளக் குறிப்போடு.

    ஆணிப் பொனின் ஆகியது
         ஆய் கதிரால்
    சேணில் சுடர்கின்றது திண்
         செவி கால்
    மாணிக்க மயத்து ஒரு
         மான் உளதால்
    காணத் தகும் என்றனள்
         கை தொழுவாள். (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3383)

    சீதையோடுவந்து அம்மானைக் கண்ட பெம்மானும் அதன் தோற்றத்தால் கவரப்பட்டான்; அதைப் பிடித்துவர ஆவல்கொண்டான்.

    இராமன் மானின் அழகில் மடம்பட்டிருந்த வேளையில் இலக்குவன் அவன் சிந்தையைத் தெளிவிக்க விரும்பி, ”அண்ணா! இந்த மானின் நிறமும் வடிவும் இயற்கையானதாக இல்லை; இது ஒருவகை மாயை என்றே எனக்குத் தோன்றுகின்றது” என்றான்.

    அவன் கருத்தை மறுத்த இராமன், ”இளையவனே! அறிவில் வல்லாரும் உணர்ந்துகொள்ள இயலாத வகையில் எண்ணிலாக் கோடிகளாய் உலகத்து உயிர்கள் விரிந்து பரந்துள்ளன. ஆகையால் இவ்வுலகில் இல்லாததொன்றில்லை என்றறிக” எனப் பதிலிறுத்தான்.

    நில்லா உலகின் நிலை நேர்மையினால்
    வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்தாம்
    பல் ஆயிரம்கோடி பரந்துளதால்
    இல்லாதன இல்லை இளங்குமரா! 
    (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3387)

    அதன் பிறகும் இலக்குவன் அதனை ஒப்பவில்லை. ”இந்த விசித்திரமான மானைப் பார்த்தால் விசுவாமித்திரர் தவத்துக்கு ஊறுசெய்ய முற்பட்ட வேளையில் உம்முடைய பாணத்தால் தாக்குண்டு கடலில் வீழ்த்தப்பட்ட மாரீசனே மானுருவில் வந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகின்றது. எனவே, மானைப் பிடிக்கவேண்டும் என்றால் நானேசென்று பிடித்து வருகின்றேன்; நீங்கள் செல்லவேண்டாம்!” என்று அண்ணனைத் தடுத்துப் பார்த்தான்.

    அவ்வேளையில் சீதையோ சிறுபிள்ளைத்தனமாய்த் தன் கணவனே மானைப் பிடித்துத் தரவேண்டும் என்று வற்புறுத்தினாள். இராமனும் மனையாளின் விருப்பத்துக்கு உடன்பட்டுப் புறப்பட்டான். போகும்போது இலக்குவனைச் சீதைக்குக் காவலாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு மானைப் பின்தொடர்ந்தான்.

    அந்த மாரீச மானோ இராமனுக்கு வசப்படுவதாயில்லை. ஒரு சமயம் அது மலையின் மீதேறும்; அடுத்த நொடி வான்முகில்களிடையே சென்று பாயும்; அருகில் சென்றால் விலகி ஓடும்; மெதுவாகச் சென்றால் அண்மையதாக வந்துநிற்கும். கொடுத்த பணத்துக்கேற்ப அன்புகாட்டும் மணமிகு மாலைசூடிய விலைமகளிரைப் போல் நிலையில்லா மனத்தோடு சென்றது அம்மான்!

    குன்றிடை இவரும் மேகக் குழுவிடைக்
         குதிக்கும் கூடச்
    சென்றிடின் அகலும் தாழின் தீண்டல்
         ஆம் தகைமைத்து ஆகும்
    நின்றதே போல நீங்கும்
         நிதிவழி நேயம் நீட்டும்
    மன்றல் அம் கோதை மாதர் மனம்
         எனப் போயிற்று அம்மா. (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3407)

    ஓரிடத்தில் நில்லாது அங்குமிங்கும் தாவிச்செல்லும் மானுக்கு நிலையில்லா மனங்கொண்ட விலைமகளிரை உவமையாக்கினார் கம்பர்.

    இவ்விலைமகளிரை, ”அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்” என்று அடையாளப்படுத்துவார் வள்ளுவர்.

    உண்மையான மானின் இயல்புக்கு மாறாக அம்மான் இயங்குவதையும், களைப்பென்பதையே அறியாத அது தன்னை வெகுதொலைவு இழுத்துக்கொண்டு வந்துவிட்டதையும் அறிந்த இராமன், இலக்குவன் சொன்னதுபோல் அது மாயமானே எனத் தெளிந்தான்.

    இராமன் சிந்தனை செய்வதைக் கவனித்த மான் வடிவினனான மாரீசன், அவன் இனித் தன்னைப் பற்ற முற்படமாட்டான்; பகழியால் கொல்லவே முற்படுவான் என்றுணர்ந்து வானை நோக்கி உயரப் பாய்ந்தான்.

    உடனே இராமன் தன் கணையை மானின் மார்பை நோக்கிச் செலுத்தவே மாரீசன், ”சீதா…! இலக்குவா…!” என்று இராமன் குரலில் கதறியபடித் தன் இயற்கை வடிவத்தோடு மலை வீழ்வதுபோல் கீழே வீழ்ந்திறந்தான்.

    தரையில் வீழ்ந்துகிடந்த மாரீசனின் உடலத்தைக் கண்ட இராமன், இலக்குவனின் நுண்மாண் நுழைபுலத்தை எண்ணி வியந்தான். அடுத்த கணம், மாரீசன் என் குரலில் அலறிக்கொண்டு வீழ்ந்தமையால் சீதை எனக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்றெண்ணிக் கவலுவாளே என வருந்தினான். இலக்குவன் துணையிருப்பதால் அவளைத் தெளிவிப்பான் என்ற எண்ணம் தோன்றியதால் சற்று ஆறுதலடைந்தான்.

    மாரீசனின் செயலைப் பார்த்தால் அவன் சாவதற்காக இங்கே வந்ததாகத் தெரியவில்லை; இதன் பின்னணியில் வேறு ஏதேனும் தீயநோக்கம் இருத்தல்கூடும் என்று சிந்தித்த இராமன், அதனைத் தடுக்கும் நோக்குடன் தன் இருப்பிடம் நோக்கி விரைந்தான்.

    [தொடரும்]

    *****
    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

     

    Share