தாடி

பாஸ்கர் சேஷாத்ரி
இவர் தாடி கண்ணன். எண்பது வயது இளைஞர். எங்கள் குடும்ப தூரத்து உறவு. அம்பது வருஷத்துக்கும் மேலான நட்பு. திரிலோக சஞ்சாரி. பிரம்மச்சாரி. குடும்பக் குழந்தைகளுக்கு இவர் தாடி தாத்தா. எல்லாத் தகவல்களும் இவர் விரல் நுனியில். பழைய பீம்சிங்கில் ஆரம்பித்து இன்றைய பீ. சி. ஸ்ரீராம் வரை அவரிடம் தகவல் உண்டு..
என் மேல் மகா ப்ரியம். அய்யா என்று என் குடும்பம் என்னை அழைக்கும். இவரும் அப்படி அழைக்கும் போது என் தந்தை நினைவு வரும். வாஞ்சைக்கும் அன்புக்கும் இவர்தான் கொள்முதல்.–ரேஷன் கடை பிரச்சனையா இவரிடம் சொன்னால் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்வார். என் கட்டுரை, கடிதம், புகைப்படம் தினசரியில் வந்தால் இவர் உடனே என்னை அழைத்து, தான் பார்த்து ரசித்ததைச் சொல்வார். அபார நினைவு. சில மாதங்கள் முன்பு காலை என் இல்லம் வந்து, கொஞ்சம் உணவருந்தி, பழைய நினைவுகளை அசை போட்டார். எதிர்பார்ப்பு இல்லாத உறவு. அன்பு. குணம்தான் தாடி கண்ணன்.
சாலையில் செல்லும் போது இரைச்சலில் கூட அய்யா எனக் குரல் கேட்டால் அது தாடி தான். மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி இருப்பின் இவருக்கு நான் மகனாகப் பிறக்க வேண்டும். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது.
பெரும்சுமை தலையில் அமிழ்த்துவது போல உணர்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு போன். சார் நீங்க பாஸ்கரா என எதிர்க் குரல் -ஆமாம் எனச் சொல்லி, தாடி தாத்தா என்கிற கண்ணன் மாமா, உங்கள் எண்ணைத் தான் நினைவு வைத்துக்கொண்டு இருக்கிறார் என்றார்.
நீங்கள் யாரெனக் கேட்டேன். கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி எனச் சொல்லி வைத்துவிட்டார். அவர் உறவுக்கார்களைத் தேடித் தேடித் தகவல் சொன்னேன். யாரும் இங்கு சென்னை வந்து பார்க்கும் சூழலில் இல்லை. வயது, நோய்த்தொற்று எனப் பல காரணங்கள். அதற்கு ஒரு வாரம் முன்பு, பாஸ்கர் எனக்கு ஒரு கார் அனுப்பு எனத் தாடி (மற்றவர்களுக்கு தாத்தா) கேட்டார். ஆட்டோ அனுப்புகிறேன் எனச் சொல்லி உடன் சென்று வண்டியில் அனுப்பினேன்.
ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்ந்தார். அன்றே நாங்கள் எல்லோரும் போய்ப் பார்த்தோம். அதிகாரியைப் பிடித்து, கொஞ்சம் குணப்படுத்தி, சாயங்காலம் வீட்டுக்கு அனுப்பினேன். அவருக்கு உறவென்று பலர் இருந்தாலும் யாரும் பக்கத்தில் இல்லை. சொந்த வீடு உண்டு எனப் பலர் சொல்லிக் கேட்டு இருக்கிறேன். விவரங்கள் பெரிதாக எதுவும் தெரியவில்லை. நிறையத் தகவல்களை அள்ளி வீசுவார்.
பலமான நினைவாற்றல். ஒரு மெலிதான தொளதொள சட்டை. உடம்பில் ஓட்ட வேண்டுமே என்ற அலட்சியமயமான வேஷ்டி. தோள் அங்கவஸ்திரம். நெற்றியில் ஸ்ரீசூரணம். சிரித்துக்கொண்டே இருக்கும் முகம். தாடி எனக் குரல் கொடுத்தால் ஒய் என எதிர்க்குரல் உடன் கேட்கும். எண்பதைத் தாண்டிய வயது. சினிமா, அரசியல், கோயில் என எதை எடுத்துக்கொண்டாலும் அவருக்கு என்று ஒரு தனித் தகவல் உண்டு. இயக்குநர் ஜி. என். வேலுமணி எனச் சொன்னால் அது வேல்மணி எனத் திருத்துவார். ஆள்வார்பேட் வக்கீல் அடிகா என்றால் ஒரு முழு மங்களூர் கதை வரும்.
அவ்வப்போது வழியில் பார்க்கும் போது, கொஞ்சம் பணம் கொடுப்பேன். தாத்தாச்சாரி டிரஸ்ட் பணத்தில் அவருக்கு மாதாமாதம் பணம் உண்டு. திடீரென இல்லம் வருவார். இந்தா இது ஆலப்பாக்கம் கன்னி கோயில் பிரசாதம் என்பார். அடுத்த வாரம் களத்தூர் ராமர் கோவில் குங்குமம் என்பார். அன்பின் மொத்த வடிவம் அவர்.
நேற்று காலை அவர் காலமானார். நொறுங்கிப் போய் நிற்கிறேன். இந்த வலி இரண்டு நாளில் போகும். நினைவுகளைச் சுமந்துகொண்டு நான் அலைந்துகொண்டு இருக்க வேண்டியதுதான். உறவுகளின், அன்பின் வெளிப்பாடு இந்த வலி. எங்கோ பெய்த மழையில் என்றோ விளைந்த புல்லின் மேல் பாசம் வைப்பது போல மனித வாழ்க்கை. அடுத்த காற்றில் அல்லது பெருமழையில் அல்லது கால் பட்டு, புல் சிதைந்து போகும். மீண்டும் புல் முளைக்கும். இது வாழ்க்கை அமைப்பு. வாழ்க்கை பிடிபடாது, புரிபடாது இருக்கத்தான் இந்த நிலையாமை. அது உள்ளே ஊற ஊறத்தான் தெளிவு பிறக்கிறது. இதோ இன்று தீயுடன் வலி தெரியாமல் கலக்க இருக்கும் ஒரு முதிர் கிழம் அவர்.
அவர் அறிவு, பசி, வலி, வேதனை, கலக்கம், ஏமாற்றம் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது.
தினசரியில் எனது செய்தி வந்தால் உடனே போன் செய்து, சந்தோஷத்தை வெளிப்படுத்தி என்னைக் கொண்டாடும் தாடி இனி இல்லை. மரணம் ஞானப் புத்தகம். முடிவற்ற தொடர். பிறப்பும் மனிதன் வாழ்க்கையும் ஒன்றுமில்லை, எல்லாம் பெரும் அபத்தம் என்ற உயர் தத்துவத்தை இன்று உரைத்துச் சென்றுவிட்டார் தாடி. திடீரென சாலையில் அய்யா எனக் குரல் கேட்காதா என அபத்தமாய் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.
இவரைப் பற்றி நான் முகநூலில் எழுதியதை மாட வீதியில் படித்துக் காண்பிக்க, உங்கள் கண்களில் நீர் வந்ததை நான் அறிவேன். இப்போது என் கண்களில் வடியும் கண்ணீர் உமக்கு தெரியுமா ? நீயும் ஏமாற்றிவிட்டாய் தாடி.