அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 26 (வேலன்)
ச. கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
அகஇலக்கியச் சிறுபாத்திர வரிசையில் முத்தாய்ப்பாக இடம் பெறுபவன் வேலன். அவன் கூறியதாகத் தலைவியும் தோழியும் தம்முள்ளும்; தாயிடமும் தலைவனிடமும் பேசுகின்றனர். தலைவன் தேர்ப்பாகனிடம் பேசும் போது அமையும் பின்புலத்திலும் வேலன் இடம் பெறுகிறான்.
தலைவியும் தோழியும் நல்கும் சிறுபாத்திரத் தகுதி
“வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்” (நற்.- 34)
என்று தோழி பேசுங்கால் வேலன் வெறியாட்டின் போது அணங்காகிய முருகனிடம் வேண்டியமை பற்றிக் கூறுகிறாள். அதுபோல் வேலன் பொதுவாகச் சொல்லும் காரணம் பற்றியும் தலைவனிடம் பேசுகிறாள் (நற்.- 273, 322; குறு.- 111; ஐங்.- 246).
வெறியாட்டு நிகழ்ந்த நாளின் நள்ளிரவில் பிரிந்து சென்ற தலைவன் மீண்டு வந்து தலைவியுடன் கூட; நோய் நீங்கிய தலைவி;
“ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே” (அகம்.- 22)
சிரிக்கிறாள். அயலானாகிய வேலனின் பாட்டிற்கும் இசைக்கருவிகளின் தாளத்திற்கும் ஏற்பத் தன்னிலை இழந்து தான் ஆடியதை எண்ணி நகைதோன்றத் தோழியிடம் எடுத்துக் கூறுகிறாள். தலைவி கூறும் வேலனின் செயலும் பேச்சும் பிற பாடல்களிலும் உள்ளன (குறு.- 360).
“அறியா வேலன் வெறி எனக் கூறும்” (ஐங்.- 243)
என்று தோழி தாயிடம் கூறுவதாலும் வேலன் சிறுபாத்திரத்தகுதி பெறுகிறான். வேலன் வெறியாட்டை அடியொட்டி அமைந்துள்ள வெறிப்பத்துப் பாடல்களில் தோழி வெறி விலக்கி அறத்தொடு நிற்கும் போதெல்லாம் வேலன் இடம் பெறுகிறான். (ஐங்.- 241, 244, 249).
தலைவன் தேர்ப்பாகனிடம்; தன் மனைவி தோழியோடு பேசக்கூடியது பற்றி உரையாடும் போது; வேலன் வெறிக்களத்தில் பூக்கள் சிதறிக் கிடப்பது போன்ற மணம் மிகுந்த மழைக்காலத்துக் காடு பின்புலமாக வருணிக்கப்படுகிறது (அகம்.- 114).
வேலனின் சிறப்பு
“முதுவாய் வேலன்” (நற்.- 282; அகம்.- 388);
“ஊர்முது வேலன்” (ஐங்.- 245)
என்றெல்லாம்; அடைமொழிகளுடன் அழைக்கப்படுவது வேலனின் பாத்திரப்படைப்பைத் தெளிவாக்குகிறது. காலங்காலமாக அவன் முருகனுக்கு வெறி அயரும் தகுதி உடையவன் மட்டுமல்லன்; கழங்கு உருட்டிக்; கட்டுவிச்சியின் குறியாகிய ‘தலைவியின் நோய் முருகன் அணங்கியதால் நேர்ந்தது’ என்பதை முடிபாகக் கூறுபவன். அதனால்; ‘முது’, ‘முதுவாய்’ என்னும் அடைமொழிகளுக்கு உரியவன் ஆகிறான்.
“மெய்ம்மலி கழங்கின் வேலன்” (நற்.- 268)
என அவன் கழங்கு மூலம் நிறுவிய முருகணங்கு பற்றிப் பிற பாடல்களும் கூறுகின்றன (நற்.- 282; ஐங்.- 245, 248).
வெறியாட்டின் வருணனை
மலைப்புறத்துச் சிறுகுடியின் மன்றத்து வேங்கைமரம் பொன் வண்ணப் பூக்களை உதிர்த்திருக்கும் முற்றத்தில் விழா அயரும் குறவர் குடியின் மூத்த பெண்டிர் சேர்ந்து குரவையாடிய இடம் போன்று; வெறியாட்டிற்குரிய களம் மிகுந்த பூப்பலியால் பொலிந்து தோன்றும் எனத் தோழி தலைவியிடம் பேசுபவள் போலத் தலைவனிடம் பேசி; உடன் திருமண ஏற்பாடு செய்யத் தூண்டுகிறாள் (அகம்.- 232).
வேலன் வெறிக்களத்தில் மிகுந்த பூக்கள் சிதறிக் கிடப்பது உவமையிலும் எடுத்துரைக்கப்படுகிறது (அகம்.- 182).
இசைக்கருவிகள் அனைத்தும் சேர்ந்து ஒத்த இசையெழுப்ப; அவற்றுடன் இயையும்படி முருகப்பெருமானைப் புகழும் பாடலைப் பாடும் வேலன் வெண்போழ்கடம்பைச் சூடிக்கொண்டு; கைகளைப் பொருத்தமாக வீசி ஆட அகன்ற பந்தல் இடப்பட்டு இருந்தது (அகம்.- 98). மறியறுத்த குருதியளைந்து செந்தினை படைக்கப்பட்டது (அகம்.- 22). அத்துடன் செந்நெல் வெண்பொரியும் படைத்தனர் (குறு.- 53). முருகனுக்குரிய படிமமும் செய்து வைத்து வெறி ஆடியமை;
“கழங்கு மெய்ப்படுத்துக் கன்னம் தூக்கி” (ஐங்.- 245)
என்ற தோழியின் வருணிப்பில் இடம் பெறுகிறது. உரையாசிரியர் கன்னம் என்பதைப் படிமம் என்கிறார்.
உயிர்ப்பலித் தடுப்பும் வாதமும்
வேலனுக்கு உரிய வெறியாட்டுக் களத்தை அழகுபடுத்தி; முருகனைப் போற்றிப் பாடிப்; படையல்களும் அறுப்பதற்குரிய ஆடும் தயாராக இருக்க;
“… … … பல்பிரப்பு இரீஇ
அறியா வேலன் தரீஇ அன்னை
வெறியயர் வியன்களம் பொலிய ஏத்தி
மறி உயிர் வழங்கா அளவை” (அகம்.- 242)
விரைந்து இவளை மணந்து கொள் என்று தலைவனிடம் தோழி கூறும் போது; ஆட்டைப் பலியிடுவதன் முன்னர் செயல்படுவாயாக என்று தூண்டுகிறாள்.
அன்னை வெறியாட்டு நிகழ்த்த மிகுந்த பொருட்செலவு செய்தாள். சிறுமறியை முருகனுக்குப் பலியிடத் தயாராக வைத்திருந்தாள்.
“அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென்முறிச்
சிறுகுளகு அருந்து தாய்முலை பெறாஅ
மறி கொலைப்படுத்தல் வேண்டி வெறிபுரி
ஏதில் வேலன் கோதை துயல்வரத்
தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல்” (அகம்.- 292)
என்று தலைவி பகுத்தறிவுவாதி போலப் பேசுகிறாள். வெட்டிய ஆட்டை எடுத்துச் செல்லப் போகிறவன் வேலனே என்பது அவளது பதைப்பில் தெரிகிறது. தன்னுடைய களவொழுக்கம் பற்றி அறியாத அயலவனாகிய வேலன் ஒரு ஆட்டுக்குட்டிக்காக அதைத் தாயிடமிருந்து பிரித்துக் கொல்ல; தன் கழுத்தில் கோதை தொங்க ஆடிப் பாடி; ‘முருகு அணங்கினள்’ என்று சொல்லப்போவதை எண்ணி வெட்கப்படுவதாகக் கூறுவது நோக்கத்தக்கது.
வெறியாட்டில் பங்கேற்கும் தலைவியின் நிலை
மேற்சுட்டிய இசையும் தாளமும் பாடலும் ஒருங்கு ஒலிக்க; பூக்களும் பிற பலிகளும் படையலாக இருக்கத்; தனக்கே உரிய மாலையோடும் வேகத்தோடும் வேலன் ஆடத்; தன்வசமிழந்து; பொறி அமைந்த பொம்மை முடுக்கப்பட்டது போலத் தானும் ஆடி நிற்க வேண்டி வரும் என்று அச்சத்தோடு தலைவி வெறியாடலை எதிர்நோக்குவது பற்றித் தோழியிடம் கூறுகிறாள். தலைவி மட்டுமின்றிப் பிற பெண்களும் அந்த இசையால் தன்னிலை அழிந்தனர் என்பதை;
“…………………………………………..மயங்கிய
மையல் பெண்டிற்கு நொவ்வலாக
ஆடிய” (அகம்.- 98)
என்னும் அடிகள் உணர்த்துகின்றன.
வேலன் வெறியாடுங்கால் தாமும் கட்டுப்படுத்த இயலாமல் ஆடியது பற்றிய தலைவி கூற்று இக்கட்டுரையின் முன்னரும் உள்ளது (அகம்.- 22).
முடிவுரை
வேலன் கூறியதாகத் தலைவியும் தோழியும் தம்முள்ளும்; தாயிடமும் தலைவனிடமும் பேசுகின்றனர்; தலைவன் தேர்ப்பாகனிடம் பேசுகிறான். காலங்காலமாக வேலன் முருகனுக்கு வெறி அயரும் தகுதி உடையவன். கழங்கு உருட்டுவதன் மூலம்; கட்டுவிச்சியின் குறியை முடிபாகக் கூறுபவன் அதனால்; ‘முது’, ‘முதுவாய்’ என்னும் அடைமொழிகளுக்கு உரியவன் ஆகிறான்.
வெறியாட்டிற்குரிய களம் மிகுந்த பூப்பலியால் பொலிந்து தோன்றியது. இசைக்கருவிகள் எல்லாமாகச் சேர்ந்து ஒத்த இசையெழுப்ப; அவற்றுடன் இயையும்படி முருகப்பெருமானைப் புகழும் பாடலைப் பாடும் வேலன் கடம்பைச் சூடிக்கொண்டு; கைகளைப் பொருத்தமாக வீசி ஆட; அகன்ற பந்தல் இடப்பட்டு இருந்தது. மறியறுத்த குருதியுடன் அளைந்து செந்தினை படைக்கப்பட்டது. அத்துடன் செந்நெல் வெண்பொரியும் படைத்தனர். முருகனுக்குரிய படிமமும் செய்து வைத்து வெறி ஆடினர். உயிர்ப்பலித் தடுப்பில் ஈடுபடுபவளாகத் தோழி திகழ்கிறாள். வேலன் ஒரு ஆட்டுக்குட்டிக்காக; அதைத் தாயிடமிருந்து பிரித்துத்; தன் கழுத்தில் கோதை தொங்க ஆடிப் பாடி; ‘முருகு அணங்கினள்’ என்று சொல்லப்போவதை எண்ணி வெட்கப்படுகிறாள் தலைவி. பொறி அமைந்த பொம்மை முடுக்கப்பட்டது போலத் தலைவியும் வேலனோடு ஆடினாள். களத்திலிருந்த பிற பெண்களும் ஆடினர்.
பின்னுரை
2.1.2010 முதல் 11.1.2010 வரை பத்து நாட்கள் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் தமிழ்த்துறை; சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையோடு ‘பண்டை இலக்கியப் பாத்திரங்கள்’ என்ற தலைப்பில் மாணவர்க்கு ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தியது. இந்தத் தலைப்பும் அதற்குரிய திட்ட வரைவும் நல்கிய கோணம் அப்போதைய நிறுவன ஆய்வாளர்களை மிகவும் ஈர்த்தது. அதில் என் பங்காக ‘அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்’ என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினேன். ஒரு மணி நேரம் நான் ஆற்றிய உரைக்காகக் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள்; அதாவது கருத்தரங்கிற்கு அனுமதி கிடைத்த நாள் முதல் அது நடத்தப்பட்ட நாள் வரை; நேரம் கிடைக்கும் போதெல்லாம் அன்றாடம் அகஇலக்கியங்களைப் படித்துச் சேர்த்த பட்டியலில் பதின்மூன்று சிறுபாத்திரங்கள் இருந்தன. ஓய்வு பெற்ற பின்னர் அவ்வுரைச் செய்திகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிப்பிக்க நான் எடுத்த மூன்று முயற்சிகள் தோற்றன.
எட்டு மாத காலம் அகஇலக்கியத்தைப் பார்வையிட்டு உழவனும் குயவனும் ஒரே ஒரு பாடலில் தான் சிறுபாத்திரத் தகுதி பெறுகின்றனர் என்றும்; கூற்று நிகழ்த்தும் தகுதி உடைய பார்ப்பான் அகத்தொகை நூல்களில் பேசவே இல்லை என்றும்; கூற்று நிகழ்த்தும் தகுதி பெறாத பாகன் ஒரு பாடலில் நேரடியாகக் கூற்று நிகழ்த்துகிறான் என்றும்; நான் சொல்ல வந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் முன்னிலையாரும் சில மாதங்களாவது அகஇலக்கியமே குறியாகப் பயில வேண்டும் அல்லவா?! அதற்கு வழியில்லாமல் போனதால் தான் இதைத் தொடர் கட்டுரைகளாக எழுத முடிவு செய்தேன்.
வலை உலகில் நுழைந்த பிறகு http://tamilconcordance.in/TABLE-sang.html தளம் பற்றிய அறிமுகம் கிடைத்ததால் நான் சேகரித்திருந்த தரவுகளைச் சரிபார்க்க முடிந்ததுடன் மட்டுமன்றி; அப்பட்டியல் பதின்மூன்றிலிருந்து இருபத்தாறாக நீண்டது. இதுவே முடிபு; இதற்கு மேல் இல்லை என்று சொல்ல மாட்டேன். அதுகாறும் தெரிந்து கொள்ளாத புதுச்செய்திகள் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அத்தளத்திற்கு நன்றி.
விடுபட்ட முரண்பட்ட கருத்துகளும் உள்ளன. பாகனுக்குப் பேசும் வாய்ப்பைத் தொல்காப்பியம் கொடுக்கவில்லை. ஆனால் பாகன் கூற்றில் அமைந்த பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது (பா.- 121). தொல்காப்பியம் ஒரு சாராரின் கொள்கையே அன்றி அது ஒருமித்த விதிகளைச் சொல்லவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் அகவன்மகளைக் கட்டுவிச்சி என்று குறிப்பிடுவது தவறு. முதுவாய்ப் பெண்டு மட்டுமே கட்டுவிச்சி ஆவாள். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அகஇலக்கியத்தைப் படித்துப் பார்த்தால் வேறு சில புதுக்கருத்துகள் தோன்றலாம். பதிப்பித்து உதவிய வல்லமை ஆசிரியர்க்கும் நிர்வாகக் குழுவினர்க்கும் நன்றி.
முற்றும்