புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

பரிமேலழகர் உரையும் அருத்தாபத்தி அளவையும்

முன்னுரை

மக்கள் வழக்கே மொழிக்கு அடிப்படை. இலக்கியத்திற்கு மக்கள் வாழ்க்கையே அடிப்படையாகும். இது இயல்பானது. எந்த படைப்பிலக்கியம் ஆனாலும் புலவனின் சிந்தனையாலும் பட்டறிவாலும் வெளிப்படும் நீதி இலக்கியமே ஆனாலும் மக்கள் வாழ்க்கையின் தாக்கம் இல்லாமல் தனித்து அமைய முடியாது. இதற்குப் பல சான்றுகள் காட்ட முடியும். வெளிப்பாட்டு உத்திகளிலும் இத்தகைய சமுதாய தாக்கம் ஆங்காங்கே அமைந்து கற்பாரின் சிந்தனையைக் கூர்மையாக்கும். அவ்வுத்திகளில் ஒன்றுதான் ‘அருத்தாபத்தி’ என்பது. பொதுவாகக் கவிதை அல்லது செய்யுள் என்பது ஒன்றினைச் சொற்களால் விளக்குவது அன்று. ஒன்றினைக் காட்சிப்படுத்துவது. ஒரு அனுபவத்தைச் சொற்கள் வழிக் கற்பாருக்கு உணர்த்துவது. அந்தக் காட்சியை முழுமையாகக் காட்சிப்படுத்துவது படைப்பு நெறி ஆகாது. ஒரு பொருளின் ஒரு பக்கத்தைக் காட்டி ஏனைய பக்கங்களை உய்த்துணரச் செய்வதே படைப்பு நுட்பம். ‘அருத்தாபத்தி’ என்பது இத்தகையதே. ஒரு கருத்தினை விரிவாகச் சொல்லாமல் ஒன்றினைச் சொல்லி மற்றொன்றைப் பெற வைப்பது. ‘அவன் பணக்காரன் அல்லன்’ என்றால் ஏழை என்பது பெறப்படுவது போல. அருத்தாபத்தி என்பது சமயக்கோட்பாடுகளிலும் தத்துவ விசாரணைகளிலும் பயன்படுத்தப்படும் அளவையியல் (LOGIC) வகைகளில் ஒன்று. திருக்குறளில் அமைந்த அருத்தாபத்தி நுட்பங்களைப் பரிமேலழகர் கண்டுணர்த்தும் பாங்கினை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

அருத்தாபத்தி – ஒரு விளக்கம்

‘நல்லாற்றான் நாடி அருளாள்க’ (242) என்னும் குறட்பாத் தொடருக்குத் தாம் எழுதிய பொழிப்புரையில் ‘ஆறு’ என்பதற்கு விளக்கமளிக்கும் பரிமேலழகர் ‘அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும்’ என்று குறிப்பிடுகிறார்.  விளக்கவுரையில் அளவைகளின் வகைகளை நிரல்படக் கூறுகிறார்.

“பொறிகளால் காணும் காட்சியும், குறிகளால் உய்த்துணரும் அனுமானமும் கருத்தாமொழியாகிய ஆகமமும்’ என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும் இங்ஙனம் அன்றாயின் இது கூடாதென்று உணரும் அருத்தாபத்தியும்  உண்மைக்கு மாறாய இன்மையும்  என இவற்றையும் கூட்டி ஆறென்பாரும் உளர். இவையும் ஒருவாற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்றென்றலே கருத்து”

பரிமேலழகர் மேற்சுட்டிய விரிவான ஆறு அளவைகளுக்கும் விளக்கம் கூறுவது கட்டுரையின் பொருள் சிறக்க உதவக்கூடும்.  அளவைக்கு வடமொழியில் ‘தர்க்க சாஸ்திரம்’ என்று பெயர். அதாவது ஒரு பொருளின் உண்மையை அளவிட்டு அறிவதற்குக் கருவியான பிரமாணங்களையே தர்க்கம் என்னும் சொல்லால் குறிப்பிடுவர். வடமொழியில் பிரதியட்சம், அநுமானம், உபமானம், ஆகமம், அருத்தாபத்தி, அபாவம், ஐதிகியம், சம்பவம் என எட்டு வகையாக அழைக்கப்படும்.

  1. கண்ணால் காண்பது பிரதியட்சம்
  2. புகையைக் கண்டு நெருப்பு உண்டென்பது அநுமானம்.
  3. குயில் போலப் பாடுவாள் என்பது உபமானம்
  4. சான்றோர் சொல் ஆகமம்
  5. பகல் உண்ணான் பருத்திருப்பான் என்றால் ‘இரவில் ஒளித்துண்பான்’ என்பது அருத்தாபத்தி
  6. ‘நேற்றில்லை இன்றில்லை எனவே நாளையுமில்லை’ என்பது அபாவம்
  7. இம்மரத்தில் பேய் இருக்கிறது என்பது ஐதிகியம் (ஐதீகம்)
  8. ஆயிரத்தில் நூறு என்பது சம்பவம்

மேற்கண்டவற்றுள் ஐதிகியத்ததையும் சம்பவத்தையும் பலரும் கொள்ளார். எனவே பரிமேலழகர் கூறிய ஆறு மட்டுமே அளவைகள் எனக் கருதப்படும். இருப்பினும் பட்டியலில் காட்டிய எட்டனையும் காட்சி, அனுமானம், ஆகமம் என்னும் மூன்றனுள் அடக்குவர்.

  1. உபமானம் காட்சியில் அடங்கும் (2)
  2. அருத்தாபத்தி, சம்பவம் இரண்டும் அனுமானத்துள் அடங்கும் (3)
  3. ஐதிகியம் ஆகமத்தில் அடங்கும் (2)

எஞ்சியிருக்கும் அபாவம் காட்சி, அனுமானம், ஆகமம் என்னும் மூன்றனுள்ளும் அடங்கும். எனவே எட்டு மூன்றாயிற்று என்க.

அளவைகள் எட்டாயினும் ஆறாயினும் அவற்றுள் ‘அருத்தாபத்தி’ என்பது தவிர்க்க இயலாத ஒன்று. இந்த அருத்தாபத்தியைத்தான் முன்னுரையில் கூறியபடி மக்கள் வழக்கிலிருந்து வந்த இலக்கியக் கூறு என இக்கட்டுரை முன்னெடுக்கிறது. ‘அவன் நல்ல பழக்கம் உடையவன் அல்லன். அவனோடு சேராதே’ என்பது வழக்கு. இல்லாத நல்ல பழக்கம் செயல்பட முடியாது. சூனியம் செயல்படாது. வினைமுதலே செயல்படும். இவன் கெட்டுவிடுவான் என்றால் மற்றவனிடத்தில் இருக்கிற தீய பழக்கம் இவனைக் கெடுத்துவிடும் என்பது பொருள். எனவே ‘நல்லொழுக்கம் இல்லாதவன்’ என்றால் ‘தீயொழுக்கம் உண்டு’ என்பது பெறப்படும், அழுக்காறு என்பது போல. தீயொழுக்கம் செயல்படும். தீயொழுக்கம் அவனிடத்தில் இருக்கிறது என்று சொல்லாமல் அல்லது அவன் தீயவன் என்று சொல்லாமல் ‘நல்லொழுக்கம் இல்லாதவன்’ என்னும் சொல்லால் ‘தீயன பழகியவன்’ என்பதை உணர வைப்பதைச் சமுதாயத்திலிருந்து, சமுதாய வழக்கிலிருந்து பெறமுடிகிறதல்லவா? எனவே அருத்தாபத்தியின் மூலம் உலக வழக்கே! இந்த அருத்தாபத்தி திருக்குறளில் பயின்று வரும் இடங்களும் பரிமேலழகர் அதனைக் கண்டறியும் பாங்கும் தொடர்ந்து ஆராயப்படுகிறது.

விலங்காய்ப் பிறப்பதே மேல்

‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று அப்பர் பாடினார் என்றால் இப்பிறவியின் பெருமை நோக்கி என்க. இப்பிறவி பெருமை பெறவேண்டுமானால் புகழ் பெறவேண்டும். ஒருவனுடைய ‘பிறவி சிறந்தது’ என்பது அவனடைந்த புகழலால் அறியப்படும். திருவள்ளுவர் இல்லறவியலின் இறுதியில் ‘புகழ்’ என்னும் அதிகாரத்தில் இதனைச் சுட்டுகிறார்.

“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று” 236

என்னும் குறள் ‘வாழ்ந்தால் புகழோடு வாழ்க’ என்னும் பொருளை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறது. இதற்கு உரையெழுதிய பரிமேலழகர்,

“மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க, அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று”

என்று கூறுகிறார். பாட்டில் தோன்றின் புகழொடு தோன்றுக என்னும் தொடரில் உள்ள ‘தோன்றுக’ என்னும் வியங்கோளுக்கு எழுவாய் இல்லை. வியங்கோளுக்கான எழுவாய் மூவிடத்திலும் அமையலாம். ‘மக்களாய்ப் பிறக்கின்’ என உரை காண்பதற்குரிய சொல் குறட்பாவில் இல்லை. ஆனால் அழகர் எழுதுகிறார். எப்படி? அஃதிலார் (அப்படிப் பிறக்கமாட்டாதவர்) என உயர்திணையில் இருப்பதால் ‘தோன்றுக’ என்னும் வியங்கோளும் மக்களை நோக்கியதாகவே இருத்தல் வேண்டும் என்பதாக அனுமானிக்கிறார். எனவே   ‘மக்களாய்’ என்பதை வருவித்துக் கொள்கிறார். இனித், ‘தோன்றலின் தோன்றாமை நன்று’ என்பதற்குப் ‘பிறத்தலின் பிறவாமையே நன்று’ என்றுதான் உரை எழுதியிருக்க வேண்டும். அப்படி எழுதினால் பிறப்புக்குத் தடைசெய்வதுபோல ஆகிவிடும். அழகர் ‘மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று’ என்று எழுதுகிறார். ‘தோன்றுவதைவிடத் தோன்றாமையே நன்று’ எனக் குறட்பாவில் இருக்க ‘விலங்காய்ப் பிறத்தல் நன்று’ என்று அவர் எழுதுவதற்குத் துணையாக இருப்பதுதான் அருத்தாபத்தி அளவை. ‘தோன்றுக’ என்னும் உடன்பாட்டால் தோன்றாமை என்னும் எதிர்மறையும் உடன்பாடாகிறது. எபப்டி;? புகழோடு பிறக்க முடியுமென்றால் சரி. இல்லையாயின் பிறக்காதே என்னாமல் விலங்காய்ப் பிறப்பதே நல்லது என்கிறார். இது உலகியல் தழுவியது.  ‘செய்தால் இப்படிச் செய் இல்லையென்றால் அப்படிச் செய் என்பது உலக வழக்கு’ உலக வழக்கில் இருக்கின்ற இந்த அருத்தாபத்தி அளவையைப் பயன்படுத்திக் கொண்ட பரிமேலழகர்,

‘அஃதிலார் என்றமையின் மக்களாய்’ என்பதூஉம் மக்களாய்ப் பிறவாமை என்னும் அருத்தாபத்தியால் ‘விலங்காய்ப் பிறத்தல் என்பதூஉம் பெற்றாம்”

என்று எழுதுகிறார். பிறப்பைத் தடை செய்ய முடியாது அல்லவா?

தின்பது இல்லையானால் கொல்வதும்  இல்லை!

‘அருளல்லது யாதெனின்’ (254) என்னும் குறட்பாவினாலும் ‘உண்ணாமை உள்ளது’ (255) என்னும் குறட்பாவினாலும் (கொலைசெய்யாவிட்டாலும்) ஊன் தின்பவர்க்குக் ‘கொலைப்பாவம் உண்டு’ என்பது சொல்லப்படுகிறது. ‘கொலை செய்பவன் வேறொருவன் ஆதலின் அப்பாவம் அவனுக்கேயன்றி ஊன் உண்பவனுக்கு வராது’ என்பது ஒரு வாதம். இந்த வாதத்தை மறுத்துப் பின்வரும் குறட்பாவில் திருவள்ளுவர் தம் கருத்தினைப் பதிவு செய்கிறார்.

“தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யார்யார்க்கும்
விலைபொருட்டால் ஊன் தருவார் இல்” (256)

இந்தக் குறட்பாவிற்குப்,

“பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின் பொருள் காரணமாக ஊன் விற்பார் யாரும் இல்லை.”

எனக் கிடக்கை நிலையிலேயே எந்த மாற்றமும் இல்லாமல் பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார். இந்தப் பொழிப்புரைக்குப் பின்னால் அமையும் விளக்கவுரையில்தான் பரிமேலழகர் தம் உரைநுண்ணியத்தைக் காட்டுகிறார். ஈண்டு உரை நுண்ணியம் என்பது திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை. பாட்டுக்குள் கிடக்கும் ஆழமான பொருளை வெளிப்படுத்துவதாகவும் திருவள்ளுவரின் உள்ளம் அறியும் முயற்சியாகவும் அமைந்துள்ளது.

“பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம்  இன்மையின் தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணம் ஆதலைச் சாதித்தலின்”

“காரணம் காரியம் என்னும் இரண்டனுள் காரணம் முற்பட்டிருப்பதும் காரியம் பிற்பட்டிருப்பதும் யாவரும் ஒப்புக் கொள்ளும் இலக்கணமாம். ஆதலால், முன்னே செய்கின்ற கொலைத்தொழிலுக்குப் பின்னே மற்றொருவன் ஊன் தின்பது காரணமாகாது. ஆதலால் கொலைப்பாவம் கொன்றவனைச் சேராது. தானே கொன்று தின்னக் கூடாதேயன்றிப் பிறன் கொன்று விற்றதை விலைகொடுத்து வாங்கித் தின்னத் தடையில்லை” என்பது ஒரு வாதம். இவ்வாறு வாதம் செய்வானை நோக்கி, ‘இவன் வாங்குவான் என்னும் நம்பிக்கையே கொலைஞன் கொல்லுதற்குக் காரணம் ஆதலால், கொலைப்பாவம் கொன்றவனைச் சேரும் என்பது நியாயம். ஊனை வாங்குவார் இல்லையாயின் விற்பார் இல்லை என்னும் கருத்து இவன் தின்னுதற்கு வாங்குவான் இல்லையாயின் அவன் கொன்று விற்றல் செய்யான் என்பது அருத்தாபத்தி பிரமாணம். அதாவது காரணம் முன்னும் காரியம் பின்னுமாய் அமைவதே உலகியல்பு. இங்கே ஊன் தின்பதாகிய காரணம் பின்னிருக்கிறது. இக்காரணத்தின் விளைவு முன்னிருக்கிறது. இதனைத் தெளிவுபடுத்துகிறார் அழகர்.

இந்த விளக்கத்தை உள்ளடக்கிய பரிமேலழகரின் விளக்கவுரை அமையாதிருக்குமாயின் குறட்பாவில் அட்ங்கியிருக்கும் தர்க்க நியாயம் புலப்படாமல் போயிருக்கக்கூடும்.

நல்லவன் இல்லையென்றால் தீயவன் தானே!

கட்டுரையின் முன்னுரையில் கூறியவாறு இன்மை செயல்படாது. இன்மைக்கு மாறாய உண்மைதான் செயல்படும். ஒருவனை நேரடியாகக் குற்றம் சாட்டுதலறியாத பண்பாடு நோக்கிய தமிழியல் பதிவு இது. ஒழுக்கமுடையவளும் அது இல்லாதவளும் இணைந்து போனால் ஒழுக்கம் உடையவளுக்குத்தான் கேடு. உடன் செல்லும் ஒழுக்கமிலாதவளின் எதிர்மறைப் பண்புகளால் இவள் பாதிக்கப்படுவாள் என்பது நடப்பியல். ‘பெரியாரைத் துணைக் கோடல்’ என்று கூறிய திருவள்ளுவர் ‘சிற்றினம் சேராமை’ என்றதும் இது நோக்கியே. இது போன்ற குறிப்புக்களைத் திருவள்ளுவர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அவற்றுள் அருத்தாபத்தியைச் சார்ந்த சில குறட்பாக்கள் ஆராயப்படுகின்றன.

“பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது” (811)

என்பது ‘மாறாத மிக்க அன்பு கொண்டார்போல் பழகுவார் ஆயினும் தீய குணங்களை உடையவருடைய நட்பு வளர்வதைவிடத் தேய்தலே சிறந்தது., நன்மையைத் தரும் என்னும் பொருளைத் தரும் இந்தக் குறட்பாவிற்குக்,

“காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு வளர்தலின் தேய்தல் நன்று”

என்று பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். எழுதிக், குறட்பா, தான் தந்த பொழிப்புரை அவ்விரண்டனையும் கற்பாருக்குத் தோன்றும் ஐயம் ஆகிய அனைத்தையும் சிந்திக்கிறார். சிந்தித்த பிறகு குறட்பாவில் ‘பண்பிலார் கேண்மை’ என்னும் தொடரில் உள்ள ‘பண்பிலார்’ என்னும் சொல்லுக்குத் ‘தீக்குணம் உடையார்’ என்று தாம் எழுதியது சரியா என்பதற்கான விளக்கத்தையும் விளக்கவுரையில் தந்திருக்கிறார்.

“நற்குணமில்லார் எனவே தீக்குணம் உடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது.”

என்பதே அந்த விளக்கம். நற்குணம் இன்மையே ஒருவனிடம் செயல்படாது. அடையாளப்படுத்தாது. அதற்கு மாறாய தீக்குணமே செயல்படும். ஒருவனை அடையாளப்படுத்தும். பாட்டில் அவ்வாறு இல்லையே என்றால் அதற்குத்தான் அருத்தாபத்தி அளவை பயன்படுகிறது. கற்பாருக்குத் தெளிவையும் தருகிறது. இதனையொத்த வேறுசில குறட்பாக்களுக்கும் பரிமேலழகர் அருத்தாபத்தி அளவையைப் பயன்படுத்தி உரையெழுதியிருப்பதைக் காணமுடிகிறது.

“இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்” (851)

என்னும் குறட்பாவையும்,

“எல்லா உயிர்கட்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம் இகல் என்று சொல்லுவர் நூலோர்”

“நற்குணமின்மை அருத்தாபத்தியான் தீக்குணமாயிற்று”

என மேற்கண்ட குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுதியிருக்கும் பொழிப்புரை மற்றும் விளக்கவுரை ஆகியனவற்றைக் கற்பார் இதனைப் புரிந்து கொள்ள இயலும்.

தனிப்படர் மிகுதியும் தனிமைப் புலம்பலும்

காமத்துப்பால் அதிகாரங்களுள் ‘தனிப்படர் மிகுதி’ என்பதும் ஒன்று. தன்னைப் பிரிந்த தலைவனை எண்ணித் தலைமகள் தனிமையில் புலம்புதல். அதாவது தனிமைத் துன்பம். இது உலகியல் வழக்கும் புலனெறி வழக்குமாகும். ஆனால் புலனெறிவழக்கில் தலைவியைப பிரிந்த தலைவன் புலம்புதற்கு இலக்கியம் இல்லை. கற்பியலில் பிரிவு அறுவகைப்படும். ஓதற்பிரிவு, பொருள்வயின் பிரிவு, பரத்தையிற் பிரிவு என்னும் மூன்றனையும் தவிர, காவற்பிரிவு, பகைதணிவினைப் பிரிவு, வேந்தற்கு உற்றுழிப் பிரிவு’ என்ற மூன்றும் அறத்தை நோக்கிய பிரிவுகளாம். எனவே ‘அவன் புலம்பினான்’ என்று இலக்கியம் செய்தால் அது அறத்திற்கும் பொருளுக்கும் ஏலாதென்க. இதனைப் பரிமேலழகர். ”அறமும் பொருளும் நோக்கிப் பிரிதலின் அவன்கண் இல்லையாயிற்று’ என எழுதுகிறார்.

தலைவியின் புலம்பலில் ஒன்றினைச் சொல்கிறாள். தாம் விரும்பும் கணவனால் தாம் விரும்பப்படவில்லையெனின் தான் நல்வினை செய்யவில்லை என்றுதானே பொருள்?’ என்று வேதனைப்படுகிறாள். இதனை,

“வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்” (1194)

என்னும் குறளாலும் அதற்குப் பரிமேலழகர் எழுதிய,

“கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும் தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்”

என்னும் பொழிப்புரையாலும் அறியலாம். விளக்கவுரையில்,

‘கெழீயின்மை’ — நல்வினையின்மை அது அருத்தாபத்தியான தீ வினையுடைமை யாயிற்று”

என்று எழுதுகிறார். குறட்பாவில் உள்ள ‘கெழீஇயிலர்’ என்னும் சொல்லுக்கு  நல்வினை யின்மை’ என்பதுதான் பொருள். ‘கெழுதகை இன்மை’ என்பதாம் ஆனால் அழகர் ‘தீவினையாட்டியர்’ என உரைகாண்கிறார். காரணம் நல்வினை ‘இன்மை’ செயல்படாது. தீவினை ‘உண்மையே’ செயல்படும். அதாவது இவள் தீவினை காரணமாகவே கணவன் இவளை விரும்பவில்லையாம் என்பது மனைவியின் கருத்து.

புகழும் அழியாது! புகழுடையவனும் அழியமாட்டான்

‘அவன் யாரோடும் ஒட்டமாட்டான்’ என்பது உலகியல். பொருளதிகாரத்தில் இது இகல். அதாவது இரு மன்னர்களும் போர்க்களத்தில் தமது ஆற்றலை வீணாக்குவதற்கு ஏதுவான கருத்து மாறுபாடு அல்லது பகையுணர்வு. விட்டுக் கொடுத்தல் என்பது அதற்கு எதிர்மறை. இந்தப் பகையுணர்வை நீக்கியார்க்கு அழியாத புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். இந்தக் கருத்தினை உள்ளடக்கிய,

“இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின்  தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்” (853)

என்னும் குறட்பாவிற்குப் பரிமேலழகர்,

“மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்றும் நீக்குமாயின் அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கு  ஏதுவாய்ப் புகழைக் கொடுக்கும்”

என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். பாட்டில் அழிவில்லாத புகழைப் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘எஞ்ஞான்றும் உளன் ஆதற்கு ஏதுவாய’ என்பதற்கான சொற்கள் குறட்பாவில் இல்லை. ‘தவல் இல்லாமை’ என்பதற்கு ‘அழிதல் இல்லாமை’ என்பது பொருள். ‘எக்காலத்தும் உளதாதல் இன்றி ‘அழிதல் இல்லாமை’ கூடாது. எனவே ‘தவலில்லா’ என்னும் புகழுக்கான அடைமொழியால் ‘எக்காலத்தும் உளனாதற்கு ஏதுவாய’ என்னும் உரியவனுக்கான அடைமொழி அருத்தாபத்தியான் பெறப்பட்டது. அதாவது புகழுக்குரிய பண்படை புகழைச் செய்தவனுக்கும் அடையானது அருத்தாபத்தியின் பொருட்கொடை என்க. இதனைத்,

‘தவலில்லாமை அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று’

என்னும் தொடரால் விளங்க வைக்கிறார் பரிமேலழகர்.

மறந்தவர் தானே  நினைக்க முடியும்?

கண்ணதாசன் கண்ட தலைவி தன் மனத்தைப் பார்த்து ஒரு வினா தொடுக்கிறாள். அது ‘நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பதாகும். திருவள்ளுவர் கண்ட தலைவியோ உண்மையில் தன்னை எப்போதும் தன் நினைவில் வைத்திருந்த தலைவனை அவன் மறந்ததாகப் பொய்யாகக் கற்பித்து ஊடுகிறாள். காரணம் ஊடுதல் கூடுதலின் அடர்த்தியை அதிகரிக்கும் என்பது இருவருக்கும் தெரியும். குறிப்பாகத் தலைவிக்குத் தெரியும்.  கூடி மகிழாமல் இவ்வாறு ஊடிப் பொழுதை வீணாக்குவது ஏன் என்று வினவிய தோழியிடம் தலைவன் சொல்கிறான்,

“உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்றென்னை
புல்லாள் புலத்தக் கனள்” (1316)

என்பது தலைவன் கூற்று!

தலைவன் கருத்து (பரிமேலழகரின் பொழிப்புரை)

“பிரிந்த காலத்து நின்னை இடையீடின்றி நினைத்தேன் என்னும் கருத்தால் ‘உள்ளினேன் என்றேன்’ (என அதனை (அவ்வாறு நான் சொல்லியதனை) ஒரு கால் மறந்து பின்நினைந்தேன் என்றதாகக் கருதி) “என்னை இடையே ஏன் மறந்தீர் என்று சொல்லி முன் புல்லுதற்கு (கூடுதற்கு) அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு (ஊடுதற்கு)” அமைந்தாள்’

அருத்தாபத்தியால் அளந்த இடம்

காமத்துப்பால் முழுமையும் நாடக வழக்கு. திருவள்ளுவர் இந்த இருபத்தைந்து அதிகாரங்களிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டு அகத்திணை மாந்தர்களைப் பேச வைத்திருக்கிறார். இந்த நுட்பத்தை அறிந்த பரிமேலழகர் தலைமக்கள் மற்றும் தோழி கூற்றாகவே இந்த அதிகாரத்திற்கு உரை எழுதியிருக்கிறார். இந்தப் பாட்டில் அருத்தாபத்தி அளவையைப் பரிமேலழகர் நேரடியாகத் தான் கண்டதாகக் கூறாமல் தலைவி கண்டதாகக் கூறுகிறார். இது மிகப்பெரிய நுட்பம்.

தலைவன் “எப்பொழுதும் நினைத்தேன் என்கிறான். மறந்தால்தானே நினைக்க வேண்டி வரும்? அப்படியானால் என்னை மறந்தது ஏன்?’ என்று ஊடுகிறாளாம் தலைவி.

‘அவன் எழுந்தான்’ என்றால் விழுந்தது பெறப்படும் அல்லவா? குமரகுருபரர் பேசினார் என்றால் அதற்குமுன் அவர் ஊமையாக இருந்தார் என்பது பெறப்படும். அதுபோலத் தலைவன் ‘நினைத்தான்’ என்றவுடன் ‘ஏன் மறந்தீர்’ என்பது தலைவி தலைவனை அளந்த அருத்தாபத்தி. தலைவி ஊடுதற்கும் இந்த அருத்தாபத்தி உதவியிருக்கிறது என்பதுதான் சிறப்பு!.

நிறைவுரை

‘அருத்தாபத்தி’ என்னும் அளவை தத்துவ விசாரணைக்கும் சமயக் கோட்பாடுகளுக்குமானது. அதனை இலக்கிய உரையில் தேவையான இடத்தில் பயன்படுத்தி மூலப்பொருளைத் துல்லியமாக விளக்கியதுதான் பரிமேலழகரின் உரைத்திறன்!. திருக்குறளுக்கான ஏனைய உரைகளில் இவ்வாறு அளவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை அறிந்து சொல்வது கற்பார் கடன்!

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *