சேக்கிழார் பாடல் நயம் – 109 (மன்னும்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி

அடுத்து, சிவனடியார்களுள் சிறந்த ஒருவராகிய அமர்நீதி நாயனார் புராணம் அமைந்துள்ளது. சோழநாட்டின் பழையாறை நகரில் வாழ்ந்த அமர்நீதி நாயனாரை  திருத்தொண்டத்தொகை ,

“அல்லி மென் முல்லை அம்தார் அமர் நீதிக்கு அடியேன்”

என்று போற்றுகிறது. அவரைத்  திருத்தொண்டர் திருவந்தாதி,

“மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின்
முண்டம் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர்
கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமும் தன்னையுந்தன்
துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே! “

என்று பாடுகிறது. இச்சரிதத்தில் பழையாறை வணிகர் அமர்நீதி நாயனாரின் செல்வமும், வளமும், உளப்பாங்கும்,  அடியாரைப் போற்றும் சிறப்பும் கூறப் பெற்றன.

பாடல்:

மன்னும்  அப்பதி  வணிகர்தம்  குலத்தினில்  வந்தார்
பொன்னும்  முத்தும்நன்  மணிகளும்  பூந்துகில்  முதலா
எந்நி லத்தினும்   உள்ளன  வருவளத்  தியல்பால்
அந்நி   லைக்கண்  மிக்கவர்   அமர்நீதி   யாரென்பார்

பொருள்:

பழையாறை  என்னும் புகழ் நிலைத்த அந்தப் பதியிலே வணிகர்களுக்குரிய குலத்திலே வந்து அவதரித்தவர்; பொன்னும் முத்தும் ஏனைய நன்மணிகளும், பிற பூந்துகில் முதலியனவுமாக எல்லா நிலத்தினின்றும் வருகின்ற எல்லா வளங்களும் மிகுதியாய்ப் பெற்ற இயல்பினால் அவ்வாணிப நிலையிலே மிகுந்தவர் அமர்நீதியார் என்று போற்றப்படுபவர் வாழ்ந்தார்.

நயம் :

இப்பாடலில், மன்னும் அப்பதி – என்ற தொடர் பாரின் நீடிய பெருமை சேர் என்றபடி நிலைத்த புகழுடைய  அந்த ஊர். என்பதைக் குறித்தது.

வணிகர் தம் குலம் – என்பது தொடர்ந்து வாணிபம் செய்தற்குரியதாகிய அந்த மரபினைக் குறித்தது.

பொன்னும் முத்தும் நன்மணிகளும் பொன்னும் – பொன்வேறு; முத்துமுதலிய மணிகள் வேறு உம்மை அதனின் வேறாகிய என எச்சப் பொருள் குறித்தது.

முத்தும் நன்மணிகளும் முத்தும் நன்மணிகளில் ஒன்றாயினும் அவை பிறக்கும் பலவகையிடங்களினின்றும் தனித்தனி முழுமணிகளாகவே விடுபட்டுப் பிறத்தலானும், ஏனைய மணிகள்போல முறுக வாங்கிக் கடைதலானன்றி இயல்பானே ஒளி பரப்புதலானும், மற்றும் பலவகையானும் தனித்தன்மைப் படுதலின்.

நன்மணிகளும் என ஏனைய மணிகளை ஒன்று சேர்த்துத் தொகுத்து அத்தொகுதியினின்றும். முத்தினை உம்மை தந்து வேறு பிரித்துக் கூறினார்.

நன்மணிகளும் – இந்நாளிற் கண்ணாடியா லியன்று செயற்கையாற் காணும் பலவகை யிழிந்த போலி மணிகள் போலாது இயற்கையான் விளைந்து உயர்ந்த குணமுடையன என்பார் நன்மணி என்றார் .

பூந்துகில் – பட்டு முதலிய துகில் வருக்கங்கள்.  உம்மை தொக்கது. முதலா – பொன், மணி முதலியவற்றின் வாணிபம் ஒருபுறமும், பட்டு ஆடை முதலிய வேறு பலவகை வாணிபம் மற்றொரு புறமுமாக நடாத்தி அதனால் வளத்தில் மிக்கவர் என்க. பூந்துகில் முதலா என முதன்மைக் குறிப்புக் கொடுத்தோதியது இச்சரித நிகழ்ச்சிக் குறிப்பு.

எந்நிலத்தினும் வரும் வளம் – ஒவ்வோர் பொருள்கள் ஒவ்வோர் நிலத்துக் குரியனவாம். ஆயினும் அவை யாவும் வாணிபப் பொருட்டால் இங்கு வந்து கூடியன என்க. இவற்றினியல்பு பட்டினப்பாலை முதலிய நூல்களுட் காண்க.

எந்நிலம் என்றதனால் யவனம் முதலிய பிற நாடுகளும் கொள்க.

வளத்து இயல்பால் அந்நிலைக்கண் – அந்தந்த வளங்களின் தன்மைக் கேற்றவாறு அந்தந்த வாணிபநிலைமையிலே மிக்கவர் மிக்க திறமையையும் ஊதியத்தையும்  பெற்றுவிளங்கியவர்.

என்பார் எனப்படுவார். ‘இல்வாழ்வா னென்பான்’ என்ற குறளிற்போலக் கொள்க. செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது என்பர் பரிமேலழகர். எனப்படுவான் எனற்பாலது செயப்பாட்டு வினைப் பொருளுணர்த்தும் படு விகுதி தொக்கு என்பான் என நின்றது  என்பர் பிரயோக விவேக நூலார். தொல்காப்பியச் சூத்திர விருத்தியிலும் இவ்வாறே கூறினர். ‘எனப்போற்றப்படுவார்’, என்ற சிறப்புப் பொருளையும் காட்டுகிறது.

இப்பாடல்  அமர்நீதியார், பன்னாட்டு வாணிகம் செய்து புகழ் பெற்றதோடு சிவனடியார்களையும் பேணிக் காத்தார் என்பதையும் கூற வந்தது

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.