நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 67

ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு
இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா
பெருவரை நாட! சிறிதேனும் ‘இன்னாது
இருவர் உடனாடல் நாய்’. 

பழமொழி- ‘இன்னாது இருவர் உடனாடல் நாய்’.

இன்னிக்கு நடந்த கூட்டத்துல ஏதாவது முடிவு எடுத்தாங்களா. அப்பொழுதுதான் தில்லியின் பெயர்பெற்ற  சரோஜினி நகர் மார்க்கெட்டிலிருந்து கொண்டு வந்த பைகளை வைத்துவிட்டு உட்காருகிறாள் என் தோழி. அவள் கேட்ட கேள்வியில் என் கவனம் செல்ல மறுக்கிறது. எப்போதுமே அழகா செலக்ட் பண்ற அவள் இன்னிக்கு என்னவெல்லாம் வாங்கிட்டு வந்திருக்காளோ? பேசாம நானும் கூடப் போயிருக்கணும். கிளம்பறதுக்கு சோம்பேறித்தனம். அதுக்காக சொசைட்டி ஜெனரல்பாடி மீட்டிங் அட்டெண்ட் பண்ணணும்னு ஒரு காரணத்த சொல்லிவச்சேன். அதனாலதான் திரும்பிவந்தப்புறம் ஞாபகமா கேக்கறா.

மீட்டிங்ல பெரிசா ஒண்ணுமில்ல. அதே பிரச்சினைகள திரும்பத்திரும்ப பேசினாங்க. அதுக்கு பலபேர் எப்போதும் போல எதிர்ப்பு தெரிவிச்சாங்க. கடைசியில முழுசா எந்த முடிவும் எடுக்கல.

பாபி ஆகயா….. ஹிந்தியில்  கேட்டுக்கொண்டே என் எதிர்வீட்டு அரசி வரவே பேச்சு திசை திரும்புகிறது. அவளின் விருப்பத்திற்கிணங்க தான் வாங்கி வந்த துணிமணிகளை விரித்துப் பரப்பி காண்பிக்க ஆரம்பிக்கிறாள் கோமளா. ஆங்காங்கே பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருப்பதுபோல் வெள்ளை நூலினால் பின்னப்பட்ட சோபா கவர் அவளின் கவனத்தை ஈர்த்ததுபோல. அதன் விலையைக் கேட்கிறாள்.

கோமளா அதனை வாங்கிய நிகழ்வை எங்கள் மனக்கண் முன் கொண்டு வர முயலுகிறாள். அந்தக் கடைக்காரன் காண்பித்த எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லையாம். சற்றே தள்ளி அவன் பார்வைக்காக பரப்பி வைத்திருந்த இந்தக் கவர் அவளுக்குப் பிடித்ததால் விலை கேட்டாளாம். அதன் விலை இருநூறு ரூபாய் என்று சொன்னவுடன் வேறுபக்கம் நின்றிருந்த இரண்டு பெண்களில் ஒருத்தி இப்போதுதானே நூற்றைம்பது என்று சொன்னாய் அதற்குள் இவர்களுக்கு இருநூறு என்கிறாயே என ஆரபித்தாளாம். அவளுடன் வந்தவள் இதைப் பின்னுபவர்களுக்கு என்ன கூலி கொடுக்கிறாய் சொல். என்னை ஏமாற்ற முடியாது. எனக்கும் பின்னத்தெரியும் எனக் கூப்பாடு போட ஆரம்பித்தாளாம். கடைக்காரர் நீங்கள் பார்த்தது வேறு என ஏதோ சொல்ல ஆரம்பிப்பதற்குள் இதற்கெனவே காத்துக்கொண்டிருந்தது போல்அங்கு நின்று வேடிக்கை பார்த்த இருவர் இப்படி ஏமாற்றி வியாபாரம் செய்வது தவறு என ஆரம்பித்து மற்ற பொருட்களின் விலையைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

பின் பக்கத்துக் கடைக்காரர்தான் என்ன பேசுவதென்றாலும் ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே மறுத்துப் பேசுங்கள். ஒரே நேரத்தில் பல பேர் அவர் சொல்வதை மறுத்தால் எப்படிச் சமாளிக்க முடியும் என அனைவரையும் சமாதானப்படுத்தி அந்தக் கடைக்காரரைக் காப்பாற்றினாராம். அந்த நபர் நெற்றியில் திருநீறு அணிந்திருந்ததால் ஆர்வத்தில் அவரிடம் தமிழ் பேசுவீங்களானு கேட்டாளாம்.

ஆமாம்மா. எனக்கு ஊர் தமிழ் வளர்த்த மதுரைதான். பாவம் பக்கத்துக் கடைக்காரன். சுலபமா வந்து நின்னு விலைபேசி திட்டிட்டு நடந்து போயிடறீங்க. அவரப் பாருங்க. வெள்ளை நூலால பின்னின சோபா கவர், மேசை விரிப்பு, டி.வி கவர் இப்படி ஒண்ணொண்ணையா எடுத்துக் காட்டும்போதே அழுக்காகிடும். இருந்தாலும் அவருக்குப் பொறுமை அதிகம். வர பெண்களை வேடிக்கை பாத்துக்கிட்டே இருக்கறதால எனக்குத் தோணினத சொல்றேன். இந்தக் கடை வாசலில  ‘இன்னாது இருவர் உடனாடல் நாய்’ னு எழுதிவைக்கணும்னு தோணும். அப்டி எழுதி வச்சாலும் யாருக்கும் அதோட அர்த்தம் புரியப்போறது இல்லனு சொல்ல .

எனக்கே தெரியாது என்பதை நான்தயங்கித் தயங்கிச் சொன்னேன்.  அவர் அந்தப் பழமொழியை விளக்கினார். ஒருத்தன் தான் சொல்லவறதச் சொல்லும்போது அதுக்கு மாறுப்பட்ட கருத்து உள்ள இருவர் ஒரே சமயத்தில அவனுக்கு எதிரா வாதிடத் தொடங்கறது ஒரு நாயை வச்சிக்கிட்டே இரண்டு பேர் வேட்டையாடினா  எவ்வளவு துன்பம் தருமோ அதுக்குச் சமானம்னு..

பழமொழியைப் புரிஞ்சிக்கிட்ட நான் மன நிறைவோட திரும்ப அந்தக் கடைக்குப் போய் எனக்குப் பிடிச்ச இந்த விரிப்ப இருநூறு ரூபாய் குடுத்து வாங்கிட்டு அந்தக் கடைக்காரருக்கு நன்றி சொல்லிட்டு வந்தேன்.

அவருக்கு ஒண்ணும் புரியல பாவம். இந்தச்சின்ன கைக்குட்டை மாதிரி உள்ள விரிப்ப போன் மேல போட உபயோகியுங்கனு இலவசமாக் கொடுத்தார்.

அவள் பேசி முடித்தவுடன் நான் யோசித்தேன். காலையில நடந்த சொசைட்டி மீட்டிங்குக்கும் அந்தப் பழமொழி பொருந்தும். பாவம் பிரசிடெண்ட் வாக்கிங் போறதுக்காக புதுசா ஒரு பாதை போடலாம்னு சொன்னவொடனே எத்தனை பேர் ஒரே சமயத்தில கத்த ஆரம்பிச்சாங்க. பாவம் அவர் ஒவ்வொரு பிரச்சினையாச் சொல்லி அதுக்குப் பிறகு அனைவரையும் அமைதிப்படுத்தியே நேரம் கழிஞ்சிருச்சு. அப்படியும் விடாம குறித்த நேரத்தில மீட்டிங்க முடிக்கலனு பாதி படிச்ச மேதாவிங்க புலம்ப ஆரம்பிச்சதால ஒரு தீர்மானத்துக்கும் வரமுடியாம மீட்டிங்க முடிச்சார்.

பரவாயில்ல. நம்ம பழமொழிகள் எல்லாக் காலத்திலயும் எல்லாருக்கும் பொருந்துது. பின்ன… தமிழ்னா சும்மாவா. மனதுள் பெருமிதப்பட்டுக்கொண்டே வந்தவர்களுக்கு பருகுவதற்கு பழச்சாறு எடுத்துவர எழுந்தேன். .

பாடல் 68

விலங்கேயும் தம்மோ(டு) உடனுறைதல் மேவும்
கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா – இலங்கருவி
தாஅய இழியும் மலைநாட! ‘இன்னாதே
பேஎயோ டானும் பிரிவு’.

பழமொழி – ‘இன்னாதே பேயோடானும் பிரிவு’

என்னடா தூங்கி எழுந்திருச்சிட்டியா? வந்தவொடனே கேக்க வேண்டாம்னு பாத்தேன். யார் இந்தப் பொண்ணு? புது இடம்னு யோசிக்காம ஏதோ உரிமை இருக்குற மாதிரி சட்னு தூங்கிட்டா?

பெங்களூரிலிருந்து ஊருக்கு வந்திருக்கும் பேரனிடம் விசாரணையைத் தொடக்கினாள் பாட்டி. உங்க தாத்தா வேற ஏதோ பீதியக் கிளப்பி விட்டுட்டாரு.

எதையுமே கண்டுகொள்ளாமல் பேரன் சம்யுக்த் பாத்ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

விடிகாலை நாலு மணிக்கு அவர்கள் உள்ளே நுழைந்ததிலிருந்தே சலசலப்புதான். வந்தவுடன் ஒப்புக்கு அவளை என் பிரண்ட் ஸ்வேதா என அறிமுகப்படுத்திவிட்டு இருவரும் களைப்பு நீங்க தூங்கப் போய்விட்டனர்.

உடனேயே தாத்தா ஆரம்பித்தார். வந்திருக்கிறது யாரோ? எவளோ? தலையெழுத்து குலம் கோத்ரம் எல்லாம் விசாரிச்சு வை. இவன் அப்பன் அதுதான் நம்ம பிள்ளையாண்டானுக்கு புத்திமட்டு. சுதந்திரமா வளக்கறதாச் சொல்லி எப்டி செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்கான் பாரு. அதுவும் தைரியமா நம்ம வீட்டுக்கே கூட்டிண்டு வரான்.

பக்கத்தாத்து பரமசிவம் சொன்னான். இப்பயெல்லாம் குழந்தைகள் வெளி நாட்டுக்கு படிக்க வேலைபாக்கப் போறதால கேர்ள்பிரண்ட் கல்ச்சர் ஜாஸ்தி ஆயிடுத்துன்னு. ஒண்ண வச்சிண்டா சரி. தினமும் ஒருத்திகூட நின்னு போட்டோ எடுத்து பேஸ் புக்லலன்னா போடறதுகள். உனக்கெங்க புரியப்போறது. கலிகாலம்.

தாத்தா பேசியதிலிருந்தே பாட்டிக்கு அடிவயிறு கலங்கிக்கொண்டிருந்தது. பாக்கறதுக்கும் இந்தப்பொண்ணு வடக்கத்தி மாதிரி தெரியறது. தமிழ் தெரியுமோ என்னவோ?

நேரமாச்சு. பூஜைசாமான்கள அலம்பி வச்சிருக்கியா. நைவேத்தியத்துக்கு ரெடி பண்ணு. தாத்தாவின் குரல்.

ஆமா. இதுவொண்ணுதான் இந்தாத்துல குறைச்சல். பொலம்பிக்கொண்டே பூஜையறையை நோக்கி நடக்கலானாள் பாட்டி.

பாட்ஸ் நானும் ரெடி. இன்னிக்கு என்ன டிபன். சூடா டிபனக் கொடு. வேற எதுவும் இப்போ கேக்காத. பசி வயத்தக் கிள்ளறது.

ஆமாண்டா இந்தாத்துல நான் வாயில்லாப் பூச்சியா வளையவந்து எல்லாருக்கும் வேண்டிய சவுகரியம் மட்டும் பண்ணிக்குடுத்துடணும். ஆளாளுக்கு அதிகாரம் பண்ணுங்கோ. நான் அந்தப்பொண்ணப்பத்தி ஒண்ணும் கேக்கப்போறதில்லை. எக்கேடுகெட்டுப் போ. சொல்லிக்கொண்டே இட்லி சட்னியைப் பரிமாறி விட்டு சமயல் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள் பாட்டி. சம்யுக்த் தன் வேலையைப் பற்றின அனுபவங்களைப் பகிரத் தொடங்கினான்.

டேய் அந்தப் பொண்ண எழுப்புடா. வெறும் வயித்தோட எவ்ளோ நேரம் தூங்குவா. சமயலே முடியப்போறது. சொல்லிவிட்டு எழுப்பச்சென்ற பாட்டிக்கு ஆச்சரியம். ஸ்வேதா அங்கில்லை. நடைவாசல் பெஞ்சில் உட்கார்ந்து தாத்தாவுக்கு பேப்பர் வாசித்துக் கொண்டிருக்கிறாள். ஓலை விசிறியை வீசிக்கொண்டே தாத்தா கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பாருடா. இந்த மனுசன. அந்தப் பொண்ணு நுழஞ்சதிலேந்து என் உசிர வாங்கிட்டு இப்போ உறவு கொண்டாடிண்டிருக்கார்.

பாட்டி தாத்தா மேல தப்பில்ல. ஸ்வேதா அந்த மாதிரி. அவ எனக்கு ப்ரெண்டோ வெல் விஷரோ இல்ல. காரியக்காரி. இப்போ என் பிராஜக்ட் நல்லா போயிட்டிருக்கறதால என் பின்னாலயே சுத்தறா. எப்டி கழட்டி விடறதுனுதான் தெரியல. கொஞ்ச நேரத்துல ஏதாவது செஞ்சு உங்ககிட்டயும் நல்லபேர் வாங்கிடுவா பாருங்க. அதுக்காக இவள முழுசா நம்பவே முடியாது. போன மாசம் வரை என்னோட எதிர் டீம் கூட சுத்திக்கிட்டிருந்தா.

‘இன்னாதே பேயோடானும் பிரிவுனு’ பழமொழியே இருக்கு. பேயா இருந்தாலும் பழகிருச்சின்னா பிரிஞ்சிபோகவைக்கறது கஷ்டம்னு சொல்லுவாங்க. அதனால முதலிலேயே தகுதியானவங்க யாருனு பாத்து தெரிஞ்சுக்கிட்டு பழகு.  இந்தமாதிரி ஆளுங்கள எப்டி தூரத்துல வைக்கணும்னும் கத்துக்கோ. நான் தாத்தாவக் கூப்பிட்டு மெதுவா சொல்றேன் இவளப்பத்தி. சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தாள் பாட்டி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *