அக்கரைப் பச்சை (சிறுகதை)

பாஸ்கர்

கிட்டத்தட்ட நாலு மணி நேர பயணம்.

கொஞ்சம் வண்டிய நிறுத்த சொல்லுப்பா

ஏன் பா.

இன்னும் பத்து நிமிஷ பிரயாணம் .அக்ரகாரம் வந்துடும்

இல்லடா, நீங்க போங்க.

கொஞ்ச நேரம் கண்மாயில உட்கார்ந்துட்டு வரேன்

இறங்கி வேட்டியை இறுக்க கட்டி கையில் இருந்த கைபேசியை மகனிடம் கொடுத்தேன்.

தலையில் முண்டாசு கட்டி கொண்டு நீ கிளம்பு.

நான் நடந்தே வரேன் என்றேன்.

சுமார் இருபது வருஷங்கள் முன்பு இங்கு வந்தது.

கட்டிடம் எல்லாம் மறந்தே போயின.

பஞ்சாயத் ஆபிஸ் மூன்று மாடி கட்டிடமாகி நிற்கிறது.

ஆனால் தெருக்கள் மாறவே இல்லை.

குளக்கரை படிக்கட்டுகள் எல்லாம் உடைந்து போய் நீர் மறந்து நின்றது.

யார் முகமும் சட்டென தெரியவில்லை .

வக்கீல் வீட்டு வாசல் ஊஞ்சலை காணவில்லை

தெருக்கிணறு பக்கம் நாலு வெண்கல குடங்கள்

தாறுமாறாய் இருந்தன.

அது பெரிய உறை கிணறு. நிச்சயம் நீர் இருக்கும் .

மஞ்சள் சாணம் தெளித்த செட்டியார் வீடு அப்படியே இருக்கிறது.

அப்புறம் போய் அரச மரத்தை பார்க்க வேண்டும்.

மாலை ஆறு மணிக்கு நானும் அவளும் அது சந்தித்து கொள்ளும் இடம்.

ஒரே நாளில் பிரிந்த உறவு.

அவளுக்கும் எனக்கும் ஒரே வயசு.

இதே போர்ட் ஸ்கூல் தான்.

வணக்கம் சார் என்றார் ஒருவர்.

யாரென தெரியவில்லை. உங்க பேரு அய்யா என கேட்டேன்.

சார் என்னா சார், நான் பச்சை என்றான்.

குழம்பி நின்றேன். சார் பேக்கடையை சுத்தம் செய்ய வருவேனா சார்.

மன்னிச்சுக்குப்பா.

எனக்கு உடனே பிடிபடவில்லை என்றேன்.

சிரித்தபடி சென்று விட்டான். இங்க இப்ப டீ கடை உண்டா?

இருக்கு சார். மூணாவது தெரு.

ஆனா பெஞ்ச் எல்லாம் இல்லை.

மல்லி காபி தான். பில்ல காபியெல்லாம் இல்லை

சரிப்பா

சார் எனக்கு சைக்கில் வாடகைக்கு கிடைக்குமா என எதிரில் இருந்த கடையில் கேட்டேன்.

உங்களை தெரியாதே என்றார் ஒருவர்.

பழைய தாசில்தார் வீடு. அவர் எங்க அப்பா தான்.

அய்யயோ, இந்தாங்க. இது அவர் கடை. எங்கப்பாவும் போயிட்டாரு.

உங்கப்பா போன நாலாம் மாசம்.

அச்சோ, அவர் பேரு என்ன?

மறந்து போயிட்டேன்.

பாளையம் சார் என்றார் .

வண்டிய ஓட்ட முடியவில்லை.

கொஞ்ச நேரம் தள்ளி கொண்டு போனேன்.

திரும்பவும் ஓட்ட முயற்சி செய்த போது மூச்சு வாங்கியது.

பையன் எதிரில் வந்து விட்டான்.

இதெல்லாம் எதுக்குபா? நீயே மாத்திரை போடற ஆள்.

லீவ் மீ. நான் இனிமே இங்க தான் இருக்க போறேண்டா.

அப்பா எட்டு நாள் மொத்த லீவு.

இத மாதிரி எதனா யோசிக்காதே.

நீ நடந்து போ.

எந்த பக்கம் கடை என கேட்டான்.

இரவு தூக்கம் எனக்கு பிடிபடவில்லை. மாத்திரை போட்டும்.

காலை எழுந்து முதலில் சென்றது வயக்காட்டுக்கு.

சுமார் இரண்டு மணி நேரம்.

வெயில் கம்மி

டீ கடை திறக்கவில்லை.

பேப்பர் கடை பக்கத்தில் இல்லை.

நடந்து சென்ற ஒரு கடையில் தினத்தந்தி மட்டும் இருந்தது.

கிங்க்ஸ் இல்லை. சார்ம்ஸ் தான் என்றார் கடைக்காரர். வேண்டாம் என்றேன்.

கைபேசியை எடுத்தால் சார்ஜும் கம்மி,

தொடர்பு இல்லாத இடமாய் இருந்தது.

வைபிக்கு வசதியும் இல்லை.

எங்கள் பழைய வீட்டில் வெஸ்டன் கழிப்பறை வசதியும் இல்லை.

அசதி வேறு. கொஞ்சம் தள்ளாமையில் நடந்து வந்தேன்.

வாப்பா சாப்பிடலாம் என்றான் மகன்.

இருக்கட்டும் , உனக்கு எப்படா லீவு முடியறது என கேட்டேன்.

ஏம்பா?

கிளம்பலாம் எப்பவேணாலும் .

About பாஸ்கர்

நான் சென்னை வாசி . ஆனால் வாசிப்பதில்லை . தொலை காட்சி தான் வாழ்க்கை . படித்தது பட்டம் . எல்லாம் மறந்து விட்டது . வயது அம்பத்து நான்கு . சு ரவி வாழ்ந்த மயிலை எனக்கு மூச்சு . கிரேசி மோகன் வாழும் மந்தவெளி எனக்கு சிந்து வெளி . சொந்தமாய் தொழில் . போட்டியான வாழ்க்கை . சிவாஜி பிடிக்கும் . மெல்லிசை மன்னர் என்றால் உயிர் . சுஜாதா எனக்கு பக்கத்து தெரு . பாலகுமாரன் கூப்பிடு தூரத்தில் . மணமானவன் . மனைவி தனியார் நிறுவனத்தில் பணி . விளக்கேற்றுவது நான் தான் ஒரு மகன் . கல்லூரியில் . கர்நாடக சங்கீதம் பயின்று கச்சேரியும் செய்து வருகிறான் .எழுத்து எனக்கு பிடிக்கும் .

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க