குறளின் கதிர்களாய்…(331)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(331)
இல்லதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ
னில்லவள் மாணாக் கடை.
– திருக்குறள் -53 (வாழ்க்கைத் துணைநலம்)
புதுக் கவிதையில்...
நல்ல குணமும்
நல்ல செயலும்
கொண்ட
மாண்புடையளாய் ஒருவனுக்கு
மனைவி அமைந்துவிட்டால்,
அவனுக்கு வாழ்க்கையில்
இல்லாதது எதுவுமில்லை..
மாண்பற்றவளாய் அவள்
அமைந்துவிட்டால்,
அவன் வாழ்வில்
உள்ளதென்பது
எதுவுமே இல்லை…!
குறும்பாவில்...
மாண்புடைய மனைவி அமைந்துவிட்டால்
வாழ்வில் ஒருவனுக்கு இல்லாதது எதுவுமில்லை,
அமையாவிடில் உள்ளதென்பது ஏதுமில்லை…!
மரபுக் கவிதையில்...
குணமது நல்லதாய்க் கொண்டவளாய்க்
குன்றிடா மாண்பது உடையவளாய்
அணங்கவள் மனைவியாய் அடைந்தவன்தான்
அவனியில் வாழ்வதில் விரும்புகின்ற
கணக்கிலாப் பேறெலாம் பெற்றேயவன்
கையினில் இலாதது எதுவுமில்லை,
பிணங்கிடும் மனைவியைப் பெற்றவன்தான்
பெற்றவை அனைத்துமே இலையெனாமே…!
லிமரைக்கூ..
வாய்த்தால் மாண்புடையவளாய் இல்லாள்,
அவனிடம் இல்லாதெதுவுமில்லை, உள்ளதென்பதும்
இல்லாததாகும் வந்தமைந்தால் பொல்லாள்…!
கிராமிய பாணியில்...
அமையணும் அமையணும்
நல்லதா அமையணும்,
வாழ்கத்தொண நல்லதா அமையணும்..
நல்ல கொணத்தோட
நல்லவளா பொஞ்சாதி அமைஞ்சவனுக்கு
வாழ்க்கயில
இல்லாதது எதுவுமே இல்ல..
அது அமையாதவனுக்கு
உள்ளதுங்கிறதும்
எதுவுமே இல்லதான்..
அதுக்கு
அமையணும் அமையணும்
நல்லதா அமையணும்,
வாழ்கத்தொண நல்லதா அமையணும்…!