எதிர்காலத்தில் மூளையும் கொந்தல் செய்யப்படுமா?
முனைவர். நடராஜன் ஸ்ரீதர்
ஆற்றல் அறிவியல் துறை
அழகப்பா பல்கலைக்கழகம் , காரைக்குடி
natarajangravity@gmail.com
முன்னுரை
சமீப காலங்களில் கணினிகள் கொந்தல் செய்யப்படுவது போல எதிர்காலத்தில் மனிதனின் மூளையும் கொந்தல் செய்யப்படுமா என்பது குறித்து இந்த கட்டுரை ஆய்வு செய்கிறது.
கணினி கொந்தல்
கணினிகள் கொந்தல் செய்யப்படுவது என்பது சமீப காலங்களில் வாடிக்கையாக ஒன்றாக அமைந்துவிட்டது. கணினிகள் நமது அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. நாம் பயன்படுத்தும் திறன்பேசி கூட கணினியாகவே செயல்படுகிறது. ஒரு காலத்தில் ஆய்வகங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கணினி இன்று பல்வேறு வகைகளில் நமது அன்றாட வாழ்வில் ஒன்றாகக் கலந்து விட்டது. பல்வேறு கணினி அமைப்புகளை பல்வேறு விதங்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். டிஜிட்டல் முறையில் நாம் பல்வேறு விஷயங்களைக் கையாள கணினிகள் அமைப்பைப் பயன்படுத்தி வருகிறோம்.
திறன்மை என்பது கணினிகளின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகிறது.
திறன்மையை அடிப்படையாகக் கொண்டு நமது அன்றாட வாழ்வில் பல்வேறு கருவிகளின் இயக்கங்கள் கட்டமைக்கப்படும் போது கொந்தல் என்பதும் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி வருகிறது. காரணம் இத்தகைய கருவிகள் கொந்தர்களுக்கு மிக எளிமையாக ஆட்கொள்ளும் விதமாக அமைந்து விடுகிறது. கொந்தர்கள் பல்வேறு வகைகளில் கணினிகளையும், கணினிகள் சார்ந்த கருவிகளையும் ஆட்கொண்டு விடுகின்றனர். அவ்வப்போது பல்வேறு தொழில் நிறுவனங்கள் கொந்தர்களால் தாக்கப்படுவது வழக்கமாகி வருகிறது சமீபகாலத்தில் ரான்சம்வேர் எனப்படும் கொந்தல் தாக்குதல் உலகிலுள்ள பல்வேறு கணினிகளில் மற்றும் கணினிகள் வலையமைப்பின் மீது தொடுக்கப்பட்டது. இத்தகைய தாக்குதலால் பல இணையதள சேவைகள் மற்றும் வர்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இந்த கொந்தல் தாக்குதல் நடத்தப்படும் விதமானது மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டது. ஒரு கணினியின் மீது அத்தகைய கொந்தல் மென்பொருள் தாக்குதல் நடத்தி அதன் கோப்புகளைப் பூட்டி விடுகிறது. இதை திறப்பதற்கான சாவியை வைத்துக்கொண்டு, தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் பணம் கேட்டு கொந்தர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இவ்வகையில் மிக அதிகமான தொகை கைமாறுகிறது. எனினும் இவ்வளவு தொகை கைமாறிய பிறகும் அத்தகைய கோப்புகள் மீண்டும் பழையபடி கிடைக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதேபோன்று பல்வேறு கொந்தல் தாக்குதல்கள் பல்வேறு கணினிகளில் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன.
இவற்றைத் தடுப்பதற்குப் பல்வேறு பாதுகாப்பு மென்பொருள்கள் மற்றும் கணினி மேம்படுத்தல்கள் ஆகியவை உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டே வருகின்றன. இவையெல்லாம் கணினி தொழில்நுட்பத்தில் நடக்கின்றன இதேபோன்று மனிதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் என்னவாகும்? மனிதன் மீது கொந்தல் தாக்குதல் நடத்தப்படுமா? படிக்கும் போது ஆச்சரியமாக உள்ளதல்லவா! வாருங்கள் இதைப் பற்றி மேலும் காணலாம் .
மூளையும் கணினியும்
மனித உடலில் மிகப்பெரும் சிந்திக்கும் அமைப்பான மூளையை நாம் பயன்படுத்தி வருகிறோம். மூளையின் திறமை அளவிட இயலாதது. மனிதனின் மூளையானது மிக சிக்கலான நரம்பு அமைப்புகளைக் கொண்டது. மனித மூளை பில்லியன் கணக்கிலான நரம்பணுக்களைக் கொண்டது. இந்த நரம்பணுக்களின் வாயிலாகச் சமிக்ஞைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு மூளையின் இயக்கமானது நடைபெறுகிறது. நாம் சிந்திப்பது, ஞாபகம் வைத்துக் கொள்வது மற்றும் முடிவெடுப்பது ஆகியவை இத்தகைய நரம்பணுக்களின் செயல்பாடுகளின் வாயிலாகவே நடக்கிறது. இத்தகைய நரம்பணுக்கள் சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொள்கின்றன. இந்த சமிக்ஞைகள் மின்காந்த அலைகளாக அமைகின்றன. இத்தகைய மின்காந்த அலைகளைப் படிப்பதன் மூலம் மூளையின் இயக்கத்தை தெரிந்துக் கொள்ள முடியும் என விஞ்ஞானம் நம்புகிறது. இதற்காகப் பல்வேறு முயற்சிகள் நவீன விஞ்ஞானத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய முயற்சிகளில் முன்னணியில் இருப்பது மற்றும் ஓரளவிற்கு வெற்றி கண்டிருப்பதுமான ஒரு தொழில்நுட்பம் நியூரலின்க் நிறுவனத்தால் முன்மொழியப்பட்டுள்ள தொழில்நுட்பம் ஆகும். நியூரலின்க் நிறுவனமானது, பல்வேறு துறைகளில் தொழில்நுட்பப் புரட்சிகளைச் செய்து வருகின்ற, எலான் மஸ்க் அவர்களின் நிறுவனமாகும். இந்நிறுவனம் மனித மூளையும், கணினியையும் ஒருங்கிணைக்கக் கூடிய வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
நியூராலிங்க்
மனித மூளையையும் , வெளிப்புறத்தில் உள்ள ஒரு கணினியையும் ஒன்றிணைக்கும் போது மனித மூளையில் நாம் எண்ணும் எண்ணங்களை கணினிகள் வாயிலாகப் படித்துக் கொள்ள முடியும் எனவும் மற்றும் மூளை பாதிக்கப்பட்டுள்ள அல்லது செயலிழந்த நபர்களுக்கு வெளியிலிருந்து சமிக்ஞைகளைக் கொடுத்து அவர்களிடமிருந்து தகவல்களை பெற வைக்கவோ அல்லது அவர்களது உடல் பாகங்களை இயங்கவைக்கவோ முடியும் எனவும் ஆழ்ந்த நோக்கங்களைக் கொண்டு நியூராலின்க் நிறுவனம் தமது ஆய்வுகளை நடத்தி வருகிறது [1]. இதற்கென இந்நிறுவனம் நடவி அமைப்பு ஒன்றைத் தயார் செய்து வைத்துள்ளது. இந்த அமைப்பு மூளையும் வெளிப்புறக் கணினியையும் தொடர்பாடச் செய்கிறது. இந்த அமைப்பில் இணைப்பான்கள் மற்றும் நரம்பணு இழைகள் ஆகியவை இருக்கும். இவை தலையின் மேல் பகுதி வாயிலாக மூளையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் இருக்கும். இந்த நடவி அமைப்பு மின்னேற்றம் செய்து கொள்ளக் கூடிய வகையிலும் வருகிறது. இதனுடன் மின்கலங்கள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த நடவி அமைப்பானது மூளையில் உள்ள மின் காந்த அலைகளைப் பெருக்கிக் கணினிக்குச் சமிக்ஞைகளாக அனுப்புகிறது. தகுந்த மென்பொருட்கள் வாயிலாக இந்த சமிக்ஞைகள் படிக்கப்பட்டு மூளையில் உள்ள தகவல்கள் ஆய்விற்குத் தரப்படுகிறது.
சமீபத்தில் நியூராலிங்க் நிறுவனம் இத்தகைய நடவி அமைப்பைப் பார்வையாளர்களுக்கு அரங்கேற்றம் செய்து காட்டியது. பன்றியின் மூளையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கணினிகள் வாயிலாக சமிக்ஞைகளாகப் பெற்று மூளையில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியும் என்று உலகிற்கு இந்நிறுவனம் வெளிப்படுத்தியது. இதுகுறித்து தமிழில் வெளிவந்துள்ள கட்டுரையை உசாத்துணை எண் [2] இல் காணலாம்.
மூளையும் கொந்தலும்
இவ்வாறு மூளையில் உள்ள தகவல்களைக் கணினியில் பெற்றுக் கொள்வதும் மேலும் கணினி வாயிலாகக் கட்டளைகளை மூளைக்குள் செலுத்த முடிவதையும் ஒரு பொதுவான கட்டமைப்பின் வாயிலாகக் காணும்போது, இவ்விணைப்பின் ஒட்டுமொத்த செயல்பாடும் கணினியினை, அடிப்படையாகக் கொண்டு செயல்படும் திறன்மைக் கருவிகளை ஒத்ததாக இருப்பதாக ஒரு பொதுவான கருத்துக்கு வரமுடியும்.
படம் 1 : எதிர்கால மூளை கொந்தல் . படம் உதவி : kaspersky ஆய்வகம்
திறன்மைக் கருவிகளை கொந்தர்கள் அவற்றின் அடிப்படைக் கணித அமைப்புகளை கொண்டு கொந்தல் செய்து விடுகின்றனர். திறன்மைக் கருவிகளில் உள்ள கம்பியில்லாத் தகவல்கள் பரிமாற்றம் வாயிலாகவும் மற்றும் இணைய வழிச் செயல்பாடுகள் வாயிலாகவும் பொதுவாக கொந்தலானது நடைபெறுகிறது. அதேபோல கணினிகளில் உள்ள பல்வேறு மென்பொருட்கள் மூலமும் கொந்தல் நடைபெறுகிறது. இத்தகைய கொந்தல் தாக்குதல்களானது திறன்பேசிகள் மற்றும் திறன் கருவிகளைத் தாக்கும்போது மூளையின் சமிக்ஞைகளைக் கையாளும் திறன் கருவிகளும் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியவருகிறது. அதேபோல திறன்மைக் கருவிகள் வாயிலாக அல்லது கணினிகள் வாயிலாக மூளைக்கு அனுப்பப்படும் சமிக்ஞைகளைக் கொந்தர்கள் கையாடல் செய்து விட முடியும் என ஊகிக்க முடிகிறது. மூளையின் சமிக்ஞைகள் கணினிக்கு அனுப்பப்படும் போது மூளையில் உள்ள ரகசியங்கள் கொந்தர்களுக்கு அக்கருவிகளக் கொந்தல் செய்வதன் மூலம் தெரியவரும் என்பது இதுவரை நடந்துள்ள உலகளாவிய கொந்தல் தாக்குதல்கள் நமக்கு அளிக்க வரும் செய்தியாகும். இதேபோல கணினிகள் கொந்தல்கள் செய்யப்பட்டு அவற்றில் மூலம் தவறான கட்டளைகள் மூளைக்குச் செலுத்தப்படும் அபாயமும் இதனுடன் சேர்ந்து கொள்கிறது. இதன் மூலம் ஒரு மனிதன் கொந்தர்களால் ஆளப்படும் நிலைகூட எதிர்காலத்தில் உருவாகிவிடும். மேலும் இவற்றுடன் செயற்கை நுண்ணறிவும் சேர்ந்து கொண்டால் நிலைமை இன்னும் விபரீதம் ஆகிவிடும். சமீபத்திய ஆய்வுக் குறிப்பு ஒன்று 2030 ஆம் ஆண்டு வாக்கில் முதல் மூளைக் கொந்தல் நடைபெறும் என்று தெரிவிக்கிறது[3]. எனவே எதிர்காலத்தில் மனித மூளையும் கொந்தல் செய்யப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது.
முடிவுரை
பிரபஞ்ச ரகசியங்களைப் புரிந்து கொள்வதிலும் மற்றும் மனித உடலின் ரகசியங்களை ஆழமாக உணர்ந்து கொள்வதிலும் மனிதனின் தேடல் எப்போதும் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறது. இவ்வகையில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்கள் மனித வாழ்வை மேம்படுத்தப்பட்ட நிலையை நோக்கி அழைத்துச் செல்கிறது. எனினும் சில சில தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதனின் அன்றாட வாழ்விற்கு ஊறு விளைவித்து விடக் கூடிய வகையில் அமைந்து விடுமோ என்ற அச்சம் விஞ்ஞானிகள் மத்தியில் தற்போது வெகுவாகத் தொற்றிக்கொண்டுள்ளது. இத்தகைய பயங்களைச் சரி செய்வதும் மற்றும் இவ்வாறான தவறுகள் ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதும் இத்தகைய தொழில்நுட்பத்தைக் கண்டறியும் விஞ்ஞானிகளின் தலையாய கடமையாக உள்ளது. எதிர்கால வாழ்வு இனிமையாக அமையும் என நம்புவோம்.
உசாத்துணைகள்
[1] https://neuralink.com/
[2] மனித மூளை கணினி நேர் தொடர்பு S Natarajan முழுமை அறிவியல் உதயம் 13 (11), 11114-11123, 2020
[3] https://www.rt.com/news/442800-brain-implants-hacking-security/
கலைச்சொற்கள்
கொந்தல் – Hacking
திறன்மை – Smartness
கொந்தர் – Hacker
நடவி – implant
இணைப்பான் – Link
நரம்பணு இழை – Neural Thread
மின்னேற்றி – Charger
மின்முனை – electrode
நரம்பணு – நியூரான்
சில்லு – Chip