திருப்பாவை – 15 | எல்லே இளங்கிளியே
திருப்பாவை – 15
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்
திருப்பாவை – 15 | எல்லே இளங்கிளியே | ஸ்வேதா குரலில்
மரபுக் கவிதைக்குள் உயிர்ப்புள்ள ஓர் உரையாடலை இயல்பாக அமைக்க முடியும், ஒரு காட்சியை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்ட முடியும் என்பதற்கு, திருப்பாவையின் 15ஆம் பாடல் ஓர் எடுத்துக்காட்டு.
வாசலில் நின்று அழைக்கும்போது, சற்றே உரக்க அழைப்போம். அப்படித் தோழியை உரக்கக் அழைக்கிறார். ஏய் என்பதன் அக்கால வடிவம், எல்லே. எல்லேஏஏஏ என்று அதை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டலாம். அவர்களின் உரையாடல் இப்படிப் போகிறது.
ஏடீ பொண்ணே இன்னுமா தூங்குறே?
சில்வண்டு போல் காதுகிட்ட ங்கொய்ய் என்று கூப்பிடாதீங்க, பெண்டுகளா. இதோ வந்துட்டேன்.
கதை விடுவதில் நீ கெட்டிக்காரி. உன் வாயளப்பு எல்லாம் எப்பவோ எங்களுக்குத் தெரியும்.
நீங்களே வல்லவர்களாக இருங்கள். நானே ஏமாற்றுக்காரியாக இருந்துட்டுப் போறேன்.
சீக்கிரமா வா. உனக்கு மட்டும் தனியா என்ன வேண்டியிருக்கு?
எல்லாரும் வந்தட்டாங்களா?
வந்துட்டாங்க, நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கோ. குவலய பீடம் என்ற யானையைக் கொன்றவனும் பகைவர்களை நேருக்கு நேர் சந்தித்து வென்றவனுமாகிய மாயக்கண்ணனைப் பாடுவதற்கு வாடீ, இளங்கிளியே.
இந்த இனிய உரையாடலை அழகிய கவிதையாய்ப் படைத்த ஆண்டாளின் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)