புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006. 
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

‘அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்!’

முன்னுரை

‘வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்’ என்பது உலக வழக்கு. ‘உரைவழக்கிற்கும்’ இது பொருந்தும். பொதுவாக நூல் ஒன்றிற்கு உரையெழுதுவார் பிற இலக்கிய இலக்கணங்களைத் தாம் கொள்கிற பொருளமைதிக்கும் கருத்துக்கும் வலிமை சேர்ப்பதற்காக எடுத்துக்காட்டுவது உண்டு. ஒரு சிலர் எந்த நூலுக்கு உரையெழுதுகிறார்களோ அந்த நூலிலிருந்தே எடுத்துக்காட்டுக்களையும் சான்றுகளையும் பெற்று எழுதுவர். அந்த சிலருள் அழகரும் ஒருவர். இக்கட்டுரையின் தலைப்பு திருமந்திரப் பாடலொன்றின் நான்கு வரிகளில் ஒன்று. “முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்!” என்று விளித்துத்தான் இந்த வரியை அவர் பாடுகிறார். முதல் வரியால் பெறப்படும் உண்மைகள் பல. 1. கண் புறத்தில் இருந்தாலும் பார்ப்பது புறத்தை மட்டுமே. 2. மனக்கண்ணைக் காண முடியாவிட்டாலும் பிறவற்றை உற்று நோக்கும். ‘காண்பது’ என்பதன் பொருள் அதுதான். ‘காண்பது அறிவு’ என்பது வள்ளுவம். அது எந்த இடத்திலும் ‘பார்ப்பது அறிவு’ எனச் சொன்னதில்லை. 3. ‘மனக்கண்’ என்று ஒன்று இருப்பதையும் அதனாலும் ஆழமாக நோக்க முடியும் என்பதையும் அறியாதவர்களையே மூடரென்று திருமூலர் விளிக்கின்றார். இதனை நன்குணர்ந்தவர் பரிமேலழகர். தமது உரைக்குப் புறநூல்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் குறளுரைக்குத் துணை நூலாகத் திருக்குறளையே பயன்படுத்திக் கொள்கிறார். அழகரின் திருக்குறள் உரையில் பொருள் விளக்கத்திற்காகத் திருக்குறள் பயன்பட்டிருக்கும் பாங்கினை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

தனக்குத் தானே விளக்கமான திருக்குறள்

பரிமேலழகர் திருக்குறளைத் தமது உரைக்கு இரு வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்.

  1. அதிகாரங்களின் பொருண்மை கூடுதல் துலக்கம் பெறுவதற்கு மற்றொரு திருக்குறளைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
  2. குறட்பாக்களின் சொற்பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

இவற்றைப் பயன்படுத்தி விளக்கமளிப்பதிலும் ஒரு நுட்பம் காணப்படுகிறது. முன்னால் உள்ள குறளுக்கு நூலின் பின்னால் உள்ள குறளாலும் பின்னால் உள்ள குறளுக்கு நூலின் முன்னால் உள்ள குறளாலும் விளக்கமளிக்கிறார். இது வியப்பான ஒன்று. என்ன வியப்பு? பல நூறு குறட்பாக்களை உள்ளடக்கிய ஒரு நூலை முற்றவும் கற்று மனத்திருத்தினாலன்றி இது கூடுமா? பரிமேலழகரைப் போகிற போக்கில் குறைசொல்வார் கவனிக்க வேண்டிய இடம் இது.

அதிகாரப் பொருண்மை விளக்கங்களில் குறள்

இல்லறவியலில் ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தைத் தொடர்ந்து ‘அன்புடைமை’ என்னும் அதிகாரம் அமைந்திருக்கிறது. இல்லறம் இனிது நடத்தற்கும் அதன் முதிர்ச்சியாகிய அருள் பிறத்தற்கும் அன்பு தேவை. முன்னதற்குச் கோவலனைப் பிரிந்த கண்ணகி இல்லறக் கடமைகளை ஆற்ற இயலாமையைச் சுட்டும் கண்ணகியின் வாய்மொழியைச் சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்துக்காட்டி விளக்கும் பரிமேலழகர், அன்பு அருளிற்குக் காரணம் என்பதை விளக்க அதனைப்போலப் புறத்தில் வேறொரு இலக்கியத்தை நாடாமல் திருக்குறளில் இருந்தே எடுத்துக்காட்டி விளக்குகிறார்.

“அதனான் (அன்பால்) அருள் பிறத்தல் அருளென்னும்
அன்பீன் குழவி (757) என்பதனானும் அறிக”

என்று எழுதி அன்பின் முதிர்ச்சி நிலை அன்பு என்பதைத் திருக்குறளே கூறியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னுமிவை அரசனுடைய அங்கங்கள். இவற்றின் செயல்பாடுகளுக்குத் தேவையானவை தூங்காமை, கல்வி, துணிவு. இவற்றுள் கல்வி ஆறு அங்கங்களுக்கும் உரியது. ஏனைய (தூங்காமை, துணிவு) வினைக்குரியன என்பதை முன்னரே (383) தெளிவுபடுத்திவிடும் பரிமேலழகர் அடுத்த அதிகாரமாகக் கல்வியை வைத்தமைக்கான காரணத்தைப் பதிவிடுகிறார்.

“மேல் ‘தூங்காமை கல்வி’ (குறள். 383) எனத் தோற்றுவாய் செய்த மாட்சியை விரித்துக் கூறுகின்றமையின், இஃது இறைமாட்சியின் பின் வைக்கப்பட்டது”

மேற்கண்ட குறள் விளக்கங்களில் பின்னது முந்தைய குறட்பாவைச் சுட்டியும் முன்னது அறுபத்தெட்டு அதிகாரங்களுக்குப் பின்னுள்ளதைச் சுட்டியும் கூறப்பட்டன என்பது நோக்கத்தக்கது.

பொருள் விளக்கத்திற்கு

‘பித்தத்திற்கு இஞ்சி நல்லது’ என்பது உலக வழக்கு. இவ்வாறு சொல்வது ‘பித்தம் வருவதற்கு இஞ்சி நல்லது’ என்று பொருளன்று, ‘பித்தம் தெளிவதற்கு இஞ்சி நல்லது’ என்றுதான் பொருள்.

“அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை” (76)

என்னும் குறட்பாவின் கருத்து அன்பு அறத்திற்குத் துணைசெய்யும். மறத்திற்கும் அந்த அன்பே துணையாகும்’ என்பது போல உள்ளது.  முன்னது சரி. ‘மறத்திற்கும் அன்பு துணையாகும்’ என்றால் அறத்திற்கு எதிரான மறத்தையும் அது வளர்க்குமா? என்னும் ஐயம் தோன்றும். அதனை விளக்கிக்காட்ட  காமத்துப்பாலில் உள்ள,

“துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி” (1299)

என்னும் குறட்பாவை எடுத்துக்காட்டி விளக்குகிறார் பரிமேலழகர். ‘துன்பத்திற்குத் துணை யாரோ?’ என்றால் அது வந்துழி அதனை நீக்குதற்கு அவருடைய நெஞ்சத்தையன்றி வேறு துணையில்லை என்பது பொருள். அதுபோல மறத்திற்கும் அன்பு துணை என்றால் அறத்திற்கு மாறான மறத்தை நீக்குதற்கும் அவ்வளவே துணை என்பது பொருளாம். எட்டாவது அதிகாரப் பாடலுக்கு நூற்று முப்பதாவது அதிகாரப் பாடலை எடுத்துக் கொண்டு வந்து பொருள் உரைக்கும் திறன் காண்க.

ஒழுக்கமிலாதவனின் சுற்றமும் கெடும்

உவமம் கூறுவதில் திருவள்ளுவர் ஒரு வேறுபட்ட ஆனால் சிறப்பான நெறியைப் பின்பற்றியிருக்கிறார். இந்த நெறி கலித்தொகை முதலிய இலக்கியங்களில் பின்பற்றிய மரபு சார்ந்த நெறியே. அதாவது கருத்துக்களையே உவமமாக்குவது. இதனால் உவமேயமான பொருளும் விளங்கும். உவமமாகச் சொல்லப்படும் கருத்தும் வலிமை பெறும். ‘வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்’ என்பதுபோல. இது ‘பொருளே உவமம் செய்தனர் ஆயினும்’ (1230) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் தழுவிக் கொள்ளப்படும்.

“அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்கமிலான் கண் உயர்வு” (135)

‘அழுக்காறு உடையவனுக்கு ஆக்கம் இல்லாதவாறு போல ஒழுக்கமிலாதவனுக்கு உயர்ச்சி இல்லை’ என்பது மட்டுமே எழுசீர்களில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் கருத்தாகும். ஆனால் பரிமேலழகர், ஒழுக்கமிலாதவனுடைய சுற்றத்திற்கும் உயர்ச்சியில்லை’ என்று கூறுகிறார். இது இந்தப் பாட்டில் சொல்லப்படாத கருத்து. ஆனால் வேறொரு இடத்தில் சொல்லப்பட்ட கருத்து. அது என்ன? அழுக்காறு உடையவனின் சுற்றமும் உண்பதும் உடுப்பதுமின்றித் துன்பப்படும் என்று,

“கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்” (166)

என்னும் குறட்பாவில் கூறியிருக்கிறார். கூறவே, இந்தப் பாட்டுக்குரியவன் மேற்பாட்டில் உவமமாகக் கூறப்பட்டுள்ளான். அழுக்காறுடையவனுக்கு ஆக்கம் இல்லையென்றால் அவன் சுற்றத்திற்கும் ஆக்கம் இல்லை. அதனால் பொருளான (உவமேயம்) ஒழுக்கமிலானுக்கு உயர்ச்சி இல்லையென்றால் அவனுடைய சுற்றத்தார்க்கும் உயர்ச்சி இல்லை’ என்னும் இந்த நுட்பத்தை,

“உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லையென்பது பெற்றாம். என்னை? “கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்ற”மும் (குறள். 166) நல்கூர்தலின்”

என்று எழுதுகிறார். உரையெழுதுவது பதினான்காவது அதிகாரப் பாடலுக்கு. எடுத்துக்காட்டி விளக்கும் பாடல் அமைந்திருப்பதோ பதினேழாவது அதிகாரத்தில்!

‘உரம்’ என்றால் அறிவு

பயிருக்கு இடுகின்ற உரம் வேறு. மனிதர்க்கு இருக்க வேண்டிய உரம் வேறு. முன்னது பயிருக்கு ஊட்டச்சத்து. பின்னது பிற உயிர்களினின்றும் மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது. உரமாகிய அறிவு இல்லாதவன் மரத்திற்கும் கீழானவன் என்னும் கருத்தினை,

“உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
மரம் மக்களாதலே வேறு” (600)

என்னும் குறட்பாவில் திருவள்ளுவர் கூறுகிறார்.

“ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதி. அவ்வூக்கமிகுதி இல்லாதார் மக்களாகார், மரங்களாவார். சாதி மரங்களோடு இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள் வடிவே: பிறிதில்லை. மக்கட்குள்ள நல்லறிவும் காரிய முயற்சியும் இன்மைபற்றி ‘மரம்’ என்றும், மரத்திற்குள்ள பயன்பாடு இன்மை பற்றி ‘மக்களாதலே வேறு’ என்றும் கூறினார். பயன், பழம் முதலியவும்; தேவர் கோட்டம் இல்லம், தேர், நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலியன”.

என்னும் பொழிப்புரையாலும் விளக்கவுரையாலும் பல நுண்ணிய கருத்துக்களைக் கண்டறிந்து கூறும் பரிமேலழகர், பாட்டில் பயின்றுவரும் ‘உரம்’ என்ற சொல் ‘அறிவு’ என்ற பொருளைத் தரும் என்பதற்கு,

‘உரம்’ என்பது அறிவாதல்; உரனென்னும் தோட்டியான் (24) என்பதனானும் அறிக.

என்று மற்றொரு குறட்பாத் தொடர்ப் பொருளையே எடுத்துக் காட்டுகிறார். இரண்டு பாட்டிற்குமான இடைவெளி ஏறத்தாழ அறுநூறு பாக்கள் நினைவாற்றல் என்பது முன்னால் படித்ததை நினைவிற் கொள்வது என்பது பொதுவான கருத்து. பரிமேலழகரோ படித்த அத்தனையையும் நினைவிற் கொள்கிறார். அதனால்தான் அறுநூறாவது பாட்டிற்கு உரையெழுதும் போது இருபத்து நான்காவது பாடற்பொருளை அவரால் நினைவுக்குக் கொண்டு வர முடிகிறது. அந்த நிலையிலும் குறட்பாவிற்கான பொருளைக் குறட்பாவிலேயே தேடிக் கண்டடையும் அவருடைய முயற்சி வெளிப்படுவதைக் காணலாம்.

ஆயிரம் பாடல் கடந்தாலும் ஆகுபெயர் ஆகுபெயரே

வேந்துவினை பொருட்டு மனை விட்டுப் பிரிந்தான் தலைமகன். ‘அவ்வேந்தனின் வினை விரைவில் தீருமாயின் இல்லம் சென்று மனைவியோடு கலந்து மாலைப்பொழுதினை இனிமையாக்கலாமே’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான். ‘அவர்வயின் விதும்பல்’ என்னும் அதிகாரத்தில் வினைமுடியா நிலையில் தலைமகளை நினைந்து விதுப்புறும் தலைமகன் தன் நெஞ்சிற்கு இவ்வாறு கூறுகிறான். இதனை,

“வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து” (1268)

என்னும் குறட்பாவில் காட்சிப்படுத்துகிறார் திருவள்ளுவர். பாட்டில் ‘மனைகலந்து’ என்பதற்கு ‘மனைவியைக் கலந்து’ என்பது பொருள். ‘மனை’க்கு  ‘வீடு’ என்பது பொருளாயினும் இங்கே அது மனைவியைக் குறித்தது. ‘மனைகலந்து’ என்றால் ‘வீட்டினை அணைத்து’ என்பது பொருளன்று. சரி அப்படியானால் இது ஆகுபெயரா? ஆம். இது ஆகுபெயரே. ‘மனை’ என்பது வேறு எந்தக் குறட்பாவில் ஆகுபெயராக வந்துள்ளது? இங்கேதான் பரிலேழகர் தன் நினைவாற்றலையும் குறட்புலமையையும் ஒருங்கே காட்டுகிறார். வீட்டை அழகுபடுத்துவதும் அது அழகாயிருப்பதும் வேறு. மனைவி பண்புநலன்களால் மங்கலமாக இருப்பது வேறு.

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு” (60)

என்னும் குறட்பாவில் ‘மங்கலம் என்ப மனைமாட்சி’ என்பதில் ‘மனை மாட்சி’ என்னும் சொல் மனைவியின் மாட்சிமைப்பட்ட பண்புகளைக் குறிக்குமே தவிர வீட்டுக்குப் பூசப்படும் வண்ணங்களைக் குறிக்காது. அந்தத் தொடரில் ‘‘மனை’ என்பதை ஆகுபெயராகச் சொன்னாராம் திருவள்ளுவர். அதனை நினைவூட்டி எழுதுகிறார் அழகர்.

தானம் பெரிதா? தவம் பெரிதா?

தவம் துறவறத்திற்குரியதெனினும் இல்லறத்தார், துறவறத்தார் என யாவருக்கும் பொதுவானது. காரணம் அது செய்வார்க்கு வேண்டியன நல்கும் சிறப்புடையது. இவ்வுண்மை தெரிந்தும் ‘இல்லறத்தார் ஏன் தவத்தை மறந்தனர்? என்பதற்குத் திருவள்ளுவர் தற்குறிப்பேற்றமாக ஒரு கருத்தினைப் பதிவு செய்கிறார். துறந்தார்க்குச் செய்யும் தானத்தின்மேல் உள்ள ஆர்வத்தால் அவர்கள் (இல்லறத்தார்) தவத்தினை மறந்து போனார்களாம். இதனைத்,

“துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்” (263)

என்னும் குறட்பாவில் பதிவு செய்திருக்கிறார். இந்தக் குறளில் தவத்தின் அருமையை விளக்க வந்த பரிமேலழகர் விளக்கவுரையில்,

“வேண்டிய வேண்டியாங்கு எய்தற் பயத்த தாகலின் யாவராலும் செய்யப்படும் தவத்தைத் தாம் செய்யும் தானத்தின் மேல் விருப்பமிகுதியான் மறந்தார்போலும். எனவே தானத்தினும் தவம் மிக்கதென்பது பெற்றாம்”

என்று எழுதியிருக்கிறார். தவத்தது சிறப்புப் பற்றிய அழகரின் குறிப்பு இதற்கு அடுத்து வரும் குறட்பாவாகிய,

“வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்” (265)

என்னும் குறட்பாவில் அமைந்துள்ளது. அந்தத் தொடரையே உரையாக்கும் பரிமேலழகர், அதிகாரக் கருத்துக்களை நிரல்பட நோக்குவதோடு முன்பின்னாக நோக்கி முன்னதற்கான விளக்கம் இருக்கும் பிந்தைய குறட்பாவின் தொடரைப் பொருத்தமான இடத்தில் வைத்து உரைகாணும் திறன் இது.

‘தள்ளாது’ என்றால் ‘தவறாது’

‘தள்ளாத வயது’ என்றால் முதுமை என்று பொருள். ‘வண்டியைத் தள்ளிவிட உதவுக’ என்றால் ‘நகர்த்துதல்’ என்று பொருள். ‘தள்ளுபடி’ விலையென்றால் தமிழகத்துப் பெண்களின் ஏமாற்றுக் களம் என்பது நமக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரியாது. திருக்குறளில் இந்தத் ‘தள்ளாது’ என்ற சொல் பயின்று வருகிற போது அதற்குப் பொருள் தவறாது, ‘மாறாது’ என்பதாகும்.

“கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு” (290)

என்ற குறட்பாவிற்குப், (‘கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும். கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது’ என்பது உரைநடை (PROSE ORDER)) பரிமேலழகர், கள்ளமனம் கொண்டார்க்கு  உடம்பு பாதிப்புக்கு ஆளாவது தவறாது. கள்ளமனம் இல்லார்க்கு வீட்டுலக இன்பம் தவறாது” என்று உரையெழுதுகிறார். ‘உடையார் துன்புறுவர். இல்லாதார் இன்றுவர்’ என்பது கருத்து. இந்தக் குறட்பாவில் பயின்றுள்ள தள்ளாது என்னும் சொல் ‘தவறாது’ என்ற பொருளைத் தருவதாகக் கூறும் அழகர், இதே சொல் இதே பொருளில் பயின்றுவரும் மற்றொரு இடத்தை எடுத்துக்காட்டித் தம் நினைவாற்றலையும் புலமைத் திறத்தையும் உறுதி செய்கிறார்.

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து” (596)

என்பது ஒரு குறட்பா. ‘முயற்சி உரிய பலனைக் கைகூட்டா விடினும் அம்முயற்சியைக் கைவிடாமல் இருப்பதே சான்றோரால் மதிக்கப்படும். இடைவிடாத முயற்சிக்கு என்றைக்கும் பயன் உண்டு. ஆதலின் முயற்சி பயனளிக்கத் தவறினும் அதனைத் தவறியதாகக் கருதாமல் உயர்ச்சியினைப் பெற்றார் போலச் சான்றோரால் மதிக்கப்படுவர். இது இந்தக் குறட்பாவின் பொருள். இந்தக் குறளில் ‘தள்ளினும் தள்ளாமை’ என்ற இரண்டு இடத்தும் அது ‘தவறுதல்’ – ‘தவறாமை’ என்னும் உடன்பாடு மற்றும் எதிர்மறைப் பொருள்களில் வந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறார் பரிமேலழகர்.

‘மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” என்புழியும் தள்ளுதல் இப்பொருட்டாதல் அறிக”

என்று எடுத்துக்காட்டி விளக்கும் அழகரின் அறிவாற்றலை முந்நூறு பாடல்கள் இடைவெளியில் காண்க.

கொல்லாமையா? பொய்யாமையா?

திருவள்ளுவர் ஒரு அதிகாரக் கருத்தினை வலியுறுத்துகிறபோது அதனை முன்னெடுத்து மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளுவதுபோல் தோன்றும். மதுவையும் புகைப்பிடிப்பதையும் பழக்கமாகக் கொண்டவனை நோக்கி “ஐயா! இந்த மதுவை மட்டும் விட்டுடு” என்று சொல்வது போன்றது அது. புகைபிடிப்பதைப் பிறகு கண்டிக்கலாம் என்பது கண்டிப்பவர் கருத்து என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அது மாதிரியான சூழல் திருவள்ளுவருக்கும் வருகிறது.

“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று” (323)

என்பது குறட்பாவாகும். திருவள்ளுவருக்கு என்ன சிக்கல் என்றால் இதற்கு முன்பாகப் பொய்யாமையை வலியுறுத்தும் போது,

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று” (297)

செய்தற்கு அருமையால் சில அறங்கள் தவறினாலும் அவை எல்லாவற்றின் பயனையும் தரவல்ல பொய்யாமையாகிய அறத்தையே மேற்கொள்ளுதல் சிறந்தது என்றெல்லாம் சிந்தித்தே திருவள்ளுவர் இதனை எழுதியிருக்கிறார்.  இவ்வளவு சிந்தித்து எழுதிய திருவள்ளுவர் மூன்று அதிகாரங்கள் கடந்து கொல்லாமையாகிய அறத்தினை வற்புறுத்துகிறபோது அவ்வளவு சிறப்புடைய பொய்யாமையை இரண்டாவதாக ஆக்கிக் கொல்லாமையை முதலிடத்திற்கு உயர்த்துகிறார்.  பொய்யாமைக்குத் தலைமைப் பதவி கொடுத்தவரும் அவர்தான். அதனைக் கொல்லாமைக்கு அடுத்த நிலையில் பதவியிறக்கம் செய்தவரும் அவர்தான். இப்போது திருவள்ளுவர் சொல்லியிருக்கும் நிரலில் கற்பாருக்கு ஐயம் தோன்றக்கூடும். இரண்டறங்களில் எது சிறந்தது? என்று ஐயத்தைக் களைய வேண்டிய பொறுப்பு உரையாசிரியர் பரிமேழகருக்கு நேரிடுகிறது. பரிமேலழகர் உரையெழுதிய அனைத்துக் குறட்பாக்களும் பொருள் துலக்கத்தில் சிறந்து விளங்கினும் ஒருசில குறட்பாக்களும் உரையாசிரியர் பிறர் எண்ணிப் பார்க்க இயலாத உரைகளைக் கூறியிருக்கிறார். அவற்றுள் ஒன்றுதான் மேலே காட்டிய “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்னும் குறட்பாவாகும்.

“நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை. அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நின்று”

என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகருக்கு மேற்பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் ஐயம் கற்பாருக்கு வருமே எனக் கவலைப்பட்டிருக்கிறார். அந்தக் கவலையை அவர் ‘அவர்மொழி’யில் பதிவு செய்திருக்கிறார்.

“அதிகாரம் கொல்லாமையாயினும் மேல் “பொய்யாமை பொய்யாமை ஆற்றின்” (297) எனவும், “யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை” (300) என்றும் கூறினாராகலின் இரண்டு அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே, அது நிகழாமை பொருட்டு ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று” என்றார். முற்கூறியதிற் பிற்கூறியது வலியுடைத்தாதலின். அதனைப் ‘பின்சார நன்று’ என்றது நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும் தீமை பயக்கும் வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்து வருதலான் என உணர்க”

திருக்குறளில் கருத்து முரண் என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக அழகர் எழுதிக்காட்டும் இந்த உரை நுட்பம் கட்டுரையாசிரியர் தரும் பின்வரும் விளக்கத்தால் தெளிவாகலாம்.

அழகர் உரைப்பன இவையே  

  1. அதிகாரக் கருத்தினை முன்னிறுத்தும் வழக்கம் திருவள்ளுவருக்கு இருப்பினும் இந்தப் பாடல் அத்தகையதன்று. ஒரு முரணைக் களைய முற்படுகிறது.
  1. பொய்யாமையை ஏனைய அறங்கள் எல்லாவற்றினும் சிறந்ததாக முன்னர்க் கூறிக் கொல்லாமையை இந்த அதிகாரத்தில் முன்னெடுத்தால் ‘மாறுகொளக் கூறல்’ என்னும் குற்றம் திருக்குறளுக்கு நேரும்.
  1. ‘முன்சொன்ன விதியினும் பின் சொல்லும் விதி’ சிறப்புடைத்தாதலின் பொய்யாமை, கொல்லாமைக்கு அடுத்த நல்ல அறமாகக் கொள்ளப்படும்
  1. ‘பொய்யாமை’ பின்னுக்குத் தள்ளப்பட்டதன் காரணம் என்ன? “வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமையிலாத சொலல்” (291) “பொய்ம்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்” (292) என்பதனால், ‘நிகழாதது கூறலும் நன்மை தந்தால்’ உண்மையெனவும், ‘நிகழ்ந்தது கூறலும் தீமை தந்தால் பொய்ம்மையெனவும் பயனை நோக்கி இவ்வாறு வாய்மையின் தன்மை மாறுபடும். கொல்லாமையோ அங்ஙனம் மாறுபடாதாதலின் பொய்யாமையினும் கொல்லாமை மேலானது காண்க.
  1. ‘கொலை’ பொய்போல நன்மை பயந்தாலும் குணமாகாது. குற்றமே! ‘கொல்லாமை’ தீமை பயந்தாலும் குற்றமாகாது குணமாம் என்க. இதனைப் பற்றி அது திரிந்து வருதலான் ‘திரியாத கொல்லாமை சிறந்தது’ என்க .
  1. ‘சான்றாண்மை’ என்னும் அதிகாரத்துக் ‘கொல்லா நலத்தது நோன்மை’ (984) என நோன்புக்கு அடையாளமே கொல்லாமை என நாயனார் கூறியதும் அறிக.

மேற்சொன்ன அத்தனைக் கருத்துக்களும் பரிமேலழகரின் பொழிப்புரையிலும் விளக்கவுரையிலும் அடங்கியிருக்கின்றன. ஒரு குறளுக்கு உரையெழுத அதிகாரம், இயல், பால் எனத் தமது எல்லை கடந்த அகநோக்கினால் பொருளெழுதும் அழகரின் உரைத்திறன் இது!.

நிறைவுரை

நூலுக்கு உரைசொல்லுவது என்பது தற்காலத்தில் ஒரு பொழுதுபோக்காகக் கருதப்படலாம். கருதப்படுகிறது. திருக்குறளுக்கு வெளிவந்திருக்கும் உரைகளிற் பல சொற்கோவைகளாகவே சோர்ந்து படுத்துவிட்டன. உரை, சிந்தனை வளர்ச்சியின் அடையாளம். பன்முகப் புலமையின் பந்தி. அது முன்னோர்களை விஞ்சியது என்னும் முனைப்பின் வெளிப்பாடாக அமைந்துவிடக்கூடாது. குறட்பா இருக்கிறது. அதற்குள் சீர்கள் இருக்கின்றன. பரிமேலழகர் அவற்றுக்குப் பொருளுரை தருகின்றார். தான் தந்த உரைக்கே விளக்கவுரை தருகின்றார். அந்த விளக்கத்திற்கான சான்றுகளைத் தருகிறார். அந்தச் சான்றுகளைப் புறத்தில் இருந்து காட்டுகிறார். தான் உரையெழுதும் நூலிலிருந்தே காட்டுகிறார். முன்னால் உள்ள குறளுக்குப் பின்னால் இருந்தும் பின்னால் உள்ள குறளுக்கு முன்னால் இருந்தும் எடுத்துக் கொள்கிறார். ஒரு நூலை அவர் எத்தனை முறைப் படித்திருந்தால் இந்த நினைவாற்றலை எட்டியிருப்பார்? மரச்சிலை செதுக்கும் சிற்பி உளிப்பிடியை மரத்திலேயே செய்துகொள்வது போன்றது அழகர் செயல். அவர் படித்தது கரும்பலகையிலோ கணிப்பொறியிலோ அல்ல. ஒலைச் சுவடியில்! எண்ணிப் பார்க்க வேண்டாமா?.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *