செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(332)

உற்றா னளவும் பிணியளவுங் காலமுங்
கற்றான் கருதிச் செயல்.

– திருக்குறள் – 949 (மருந்து)

புதுக் கவிதையில்...

மருத்துவ நூல்
நன்கு கற்ற மருத்துவர்,
நோயாளியின்
பிணிபோக்க முயல்கையில்,
நோயாளியின் வயது
நோய் வந்திருக்கும் காலம்,
குணப்படுத்தத் தேவையான
காலம் போன்றவற்றைக்
கருத்தில் கொண்டு
செயல்பட வேண்டும்…!

குறும்பாவில்...

பிணிபோக்கக் கற்ற மருத்துவர்
நோயாளியின் வயது நோய்வந்த தீரும் காலம்
போன்றவற்றை ஆராய்ந்து செயல்படுக…!

மரபுக் கவிதையில்...

மருத்துவ நூலெலாம் நன்குகற்ற
மருத்துவ ரொருவர் நோயாளிக்
கிருக்கும் நோயைக் குணப்படுத்த,
இவரின் வயது நோயதுதான்
இருந்த குணம்பெறும் காலமதை
எல்லாம் ஆராய்ந் தறிந்தபின்னே
மருந்து கொடுத்துக் குணமாக்கி
மாற்றும் செயலைத் தொடங்கிடுக…!

லிமரைக்கூ..

மருத்துவம் தொடங்கிடும் முன்னே
கற்றறிந்த மருத்துவர் செயல்படவேண்டும் நோயாளியின்
வயது நோய்க்காலம் ஆய்தறிந்த பின்னே…!

கிராமிய பாணியில்...

கொணமாக்கணும் கொணமாக்கணும்
நோயாளியக் கொணமாக்கணும்,
நல்லமொறயாக் கொணமாக்கணும்..

நல்லாப் படிச்ச மருத்துவரும்
நோய்க்கு மருந்துகுடுக்க
ஆரம்பிக்குமுன்னால
நோயாளி வயசு
நோயோட கொணம் காலமெல்லாம்
நல்லா அறிஞ்சி ஆராஞ்சி
அப்புறமா ஆரம்பிக்கணும்..

அதால
கொணமாக்கணும் கொணமாக்கணும்
நோயாளியக் கொணமாக்கணும்,
நல்லமொறயாக் கொணமாக்கணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *