அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 25 (ஊர்ப் பெண்டிர்)

ச. கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை

பலதரப்பட்ட பெண்களைப் பற்றியதாக அமையும் இக்கட்டுரையுள்  நல்கூர்பெண்டிர், ஆளில் பெண்டிர், அரியல் பெண்டிர்,  சீறூர்ப்பெண்டிர், பேஎய் பெண்டிர், அயலில் பெண்டிர் ஆகிய அனைவரும் ஊர்ப்பெண்டிர் என்னும் தொகைப் பாத்திரத்துள் அடங்கி விடுகின்றனர்.

ஊர்ப்பெண்டிர் பண்புகள் 

தோழி, தாய், தலைவி ஆகியோரின் பேச்சில் ஊர்ப்பெண்டிர் வசைபாடப் பெறுகின்றனர்.

“கொடிது அறிபெண்டிர்” (அகம்.- 20);

“வெவ்வாய்ப் பெண்டிர்” (அகம்.- 50, 250; குறுந்.- 373; நற்.- 133);

“அலர்வாய் அயலில் பெண்டிர்” (நற்.- 378);

“நிரைய பெண்டிர்” (அகம்.- 95) எனவும்;

“தீவாய் … … …  பெண்டிர்” (அகம்.- 203);

என்ற சுட்டு முறைகளில் ஊர்ப்பெண்டிரின் பண்புகள் ஒரே தன்மையுடன்  பேசப்படுகின்றன. கொடுமையான செய்தியைப் பேசுபவர் என்றும்; துன்புறுத்தும் சொற்களையே பேசத் தெரிந்தவர் என்றும்; அலர் தூற்றுபவர் என்றும்; தீமை பயக்கும் பழியினைச் சுமத்துபவர் என்றும்; இழிந்த முறையில் புறம்பேசக்  கூடியவர் என்றும் ஒருசேரக் குறைகூறப் பெறுகின்றனர்.

ஊர்ப்பெண்டிரின் சிறுபாத்திரத் தகுதி  

ஊர்ப்பெண்டிர் பழி சுமத்துதல், கமுக்கமாக ஜாடை பேசுதல், ஆரவாரமாக அலர் தூற்றுதல் ஆகிய செயல்கள் உடையவராய்க் காட்சிப் படுத்தப்படுகின்றனர்.

“அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றிப்
புரையில் தீமொழி பயிற்றிய உரையெடுத்து
ஆனாக் கௌவைத்தாகத்
தான் என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே” (நற்.- 36)

என்பது தலைவியின் கேள்வி.  ‘தாழ்ச்சி உடைய தீய சொற்களை எப்போதும் பேசிப் பழி சுமத்தும் ஊர்ப்பெண்கள் கமுக்கமாக ஜாடை பேசுவதுடன்; ஆரவாரமாக வாய்விட்டுத் தூற்றும் அளவிற்கு இந்த ஊர் எதை இழந்து விட்டது?!’ என்ற தலைவியின் வியப்புக் கலந்த வினாவில் ஊர்ப்பெண்டிர் என்ன பேசினார்கள்; எப்படிப் பேசினார்கள் என அனைத்தும் இடம்பெற்று அவர்க்குச் சிறுபாத்திரத் தகுதியைக்  கொடுக்கிறது. பெண்டிர் தூற்றும் அலர் பற்றிப் பேசும் பிற பாடல்களும் உள (அகம்.- 70; நற்.- 143)

தலைவி கூற்றில் ஊர்ப்பெண்டிர்

குறிஞ்சித்தலைவி ஊர்ப்பெண்டிரின் அலர்தூற்றும்  வாயை அடைக்க இயலாது என்பதைக்;

“குறிஞ்சி நல் ஊர்ப்பெண்டிர்
இன்னும் ஓவார் என்திறத்து அலரே” (நற்.- 116)

எனத் தோழியிடம் குறைப்பட்டுக் கொள்கிறாள்.

தாய் கூற்றில் ஊர்ப்பெண்டிர்

தன் மகள் தலைவடன் போன பின்னர் நடந்ததை எல்லாம் எண்ணிப் பார்த்துப் பேசும் தாய்;

“அலர்வினை மேவல் அம்பல் பெண்டிர்” (அகம்.- 203)

பேச்சையும் சேர்த்தே நினைத்துப் பேசுகிறாள்.

தோழி கூற்றில் ஊர்ப்பெண்டிர்

பகற்குறி வந்த தலைவனிடம் ஏதம் கூறி; இரவுக்குறியும் வசதிப்படாது என உணர்த்தும் தோழி;

“…………………… ……… துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்து இவ்அம்பல் ஊரே” (நற்.- 223)

என்கிறாள்.

தலைவன் கூற்றில் ஊர்ப்பெண்டிர்  

தான் மையல் கொண்ட ஆயர் குலப்பெண் மோர் விற்றுக் கொண்டு வரும் போது; அவளிடம் மோர் வாங்கும் ஊர்ப்பெண்டிர் செயலையும் பேச்சையும்  விரிவாக எடுத்து உரைக்கிறான் தலைவன். அவளது அழகு யார்க்கும் அணங்காகித் துன்புறுத்தக் கூடியது என்று எண்ணியதால் வீட்டின் வாயிலை அடைத்துக் கொண்டு நின்று; தம் கணவர் காணாவண்ணம் அவளை விரைந்து அனுப்புவதே குறியாக ‘மாங்காய் நறுங்காடி கூட்டி உண்பேம்; நீ  உன் கிளையோடு சென்று சேர்வாயாக’ எனச் சொல்லி விலக்கியமையை நகை தோன்றக் கூறுகிறான் (கலி.- 109).

பேய்ப் பெண்டிர்

தொகையிலக்கியக் காலத்தில் ‘பேய்’ என்ற சொல்லின் பொருட்பரிமாணம்; இன்று வழங்கும் பொருளில் இருந்து மாறுபட்டது. பேஎய் என்று சுட்டப்பெறும் பெண்; தலைவி தனக்குத் தானே கூறிக் கொள்ளும் உவமையில் இடம் பெறுகிறாள். மகப்பேற்றின் போது  தலைவன் தன்னை விட்டு ஒதுங்கிப் புறத்தொழுக புனிறு நாறும் தன்னை விடுத்து; மணம் பொருந்திய பிற பெண்டிரை நாடிச் சென்ற அவனிடம்;

“பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே” (ஐங்.- 70)

என்கிறாள். இத்தலைவி பாசுபதநெறி சார்ந்தவள் எனலாம். இப்பாடலடியில் இடம் பெறும் ‘பேஎய்’ என்னும் சொல் எப்படிப்பட்ட பெண்ணைக் குறிக்கிறது என்பது நோக்கத்தக்கது.

‘பேஎய்ப் பெண்டிர்’ என்று பெயர் பெறுவோர் கணவனை இழந்த  பாசுபத சமயம் சார்ந்த பெண்டிர் ஆவர். இல்லற சுகம் நீத்து நீற்றுப்பூச்சுடன் எஞ்சிய வாழ்வைக் கழிக்கும் தன்மையால் தெய்வத்தன்மை பொருந்தியோர் என்னும் கருத்தில் பேய்ப்பெண்டிர் என்று பெயர் பெற்றமை தெரிகிறது.

“பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
காடு முன்னினனே கட்காமுறுநன்
தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
பாடுநர் கடும்பும் பையென்றனவே”  (புறம்.- 238).

என்று வெளிமான் இறந்த போது அவனது மகளிர் தொடி கழித்தமையும் பேஎய் ஆயம் என்று பெயர் பெற்றமையும் ஒருங்கே பாடப்பட்டுள்ளது.

சுடலைத் தீயே விளக்காகக் கணவனை இழந்து அழுத கண்ணீரால் தாம் பூசிய வெண்ணீறு அவிந்து விட அங்கிருந்த பெண்டிர் பேஎய்மகளிர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர் (புறம்.- 356).

சுடுகாட்டுக்  காட்சியைப் பாடுங்கால்;  இறந்துபட்ட கணவனைத் தழுவி அழுத பெண்கள் விளரூன் தின்று கால்பெயர்த்து ஆடும் பாசுபதத்தாரைக் கண்டு வெருவி நீங்கியமை;

“பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி……
ஈமவிளக்கின் வெருவரப் பேரும் காடு” (புறம்.- 359)

எனக் குறிப்பிடப் படுவதைக் காண்கிறோம்.

புண்பட்டுக் குருதி சோர இறந்த தம் கணவரின் உடலைத் தீண்டிச் சிவந்த கைகளால் கூந்தலை அலைத்து அழுத பெண்களைப் பேஎய்ப் பெண்டிர் என்றே சுட்டுவது நோக்கத்தக்கது (புறம்.- 62)

பாசுபதப் பெண்டிர் கணவனை இழந்த நிலையோடு; தன் நிலையை ஒப்பிட்டுப் பேசுகிறாள் தலைவி. ஏனெனில் இன்றும் கருவுயிர்த்த பெண்ணைப் பிறர் முன்னர் நடமாடவோ; உண்ணவோ;  பூச்சூடவோ அனுமதிக்க மாட்டார்கள். மீறினால் கண்பட்டு அப்பெண் நோயுறுவாள் என்று நம்புகின்றனர். அது போன்றே கருவுயிர்த்த பெண் கணவனுடன் தனித்திருப்பின் குழந்தைக்கு சீர் தைக்கும்; வயிற்றுப்போக்கு ஏற்படும் என்றும் நம்பிக்கை உள்ளது.

தான் தனித்திருக்க; புறத்தொழுகும் கணவனின் நடவடிக்கையைத் தாங்க மாட்டாதவளாய்ப்; ‘பாசுபத நெறியில் கணவனை இழந்த பேஎய்ப் பெண் போல நானிருக்கிறேன்’ என்று அங்கலாய்க்கிறாள் தலைவி.

பெண்டிரும் தொழிலும் 

கணவனை இழந்த பெண்டிர் தாமே தொழில் செய்து வாழ்ந்தமை அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் இடம்பெறுகிறது  (புறம்.- 125&326).

“ஆளில் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போலக்” (நற்.- 353)

கணங்கொள் மாமழை காட்சி அளித்தமை உவமையில் விளக்கம் பெறுகிறது.

தமது வறுமை காரணமாக சேவல்கள் கொத்திப் பிளந்து போட்ட பருத்திக்கொட்டைகளை உணவிற்காகச் சேர்த்து வைத்தமை; காட்டுவழியை வருணிக்கும் பின்புலத்தில் ‘நல்கூர் பெண்டிர்’ செய்கையாகப் புனையப்பட்டுள்ளது (அகம்.-129). பருத்தி விதையில் இருந்து எடுக்கப்படும் பாலுடன் இனிப்பு சேர்த்துக்கஞ்சி காய்ச்சும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. அது மிகுந்த மருத்துவ குணம் கொண்டதென்ற கொள்கையும் உள்ளது.

ஆனால் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் நற்றிணைக்கு எழுதிய உரையில்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் கரந்தைக் கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளையும் சேர்ந்து எழுதிய அகநானூற்று  உரையிலிருந்து மாறுபட்டு; நல்கூர் பெண்டிர் என்போர் ‘பெண் தன்மையில் குறையுடையோர்’ என்று பொருளுரைப்பது (நற்.- 90) ஏற்றுக் கொள்ளுமாப் போல இல்லை.

சில சேரிகள் சேர்ந்தமையும் வாழ்விடமாகிய சீறூர்ப் பெண்டிரின் வாழ்க்கைநிலை பின்தங்கியதாகக் காணப்படுகின்றது. காட்டுவழி பற்றிய வருணனையில் சீறூர்ப்பெண்டிர் இடம்பெறுகின்றனர். அவர்கள் விருந்தயர்வது;

“பல்கவர் மருப்பின் முதுமான் போக்கிச்
சில் உணா தந்த சீறூர் பெண்டிர்” (அகம்.- 283)

என்ற பாடலடிகளில் காட்டப்படுகிறது.  அவ்வுணவின் தன்மை பற்றிய அடைமொழி அவர்களது எளிய வாழ்வு முறையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. மான்களை விரட்டி விட்டுக் கொண்டுவந்த சிறிதளவு உணவு என்பது; மானுண்டு எஞ்சிய உணவு என்று விளக்கம் அளிக்கிறார் உரையாசிரியர்.

கள்விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்டிர் ‘அரியல் பெண்டிர்’ (அகம்.- 157) என்று சுட்டப்படுகின்றனர். அவர்கள் இடையில் சுமந்து வரும் விரிந்த பானையின் குவிந்த முனை சொரிந்த வடிகட்டிய கள்ளை அருந்தும்  பாலைநிலத்து மறவர் பற்றித் தலைவி பேசுகிறாள்.

விலைநலப் பெண்டிர் பொருள் உடைய செல்வந்தர்பால் சேர்ந்து வளம் பெற்ற செய்தி உவமையாகச் சொல்லப்படுகிறது (புறம்.- 365).

பெண்டிர் தகுதி

புறப்பாடல்கள் பெண்டிர் தகுதி பற்றிய ஆவணங்களாக உள்ளன.

கணவன் வினைநிமித்தம் அகன்று சென்றிருந்தாலும் மனைவி இரவலர்க்குப் பரிசில் வழங்கும் தகுதி பெற்று இருந்ததை கண்டீரக்கோன் நள்ளியின் மனையாள் செயல் மூலம் அறிகிறோம். நள்ளி தொலைதூரம் பிரிந்து போயிருந்தக்கால் பாணர்க்குப் பிடி யானைகளை அவள் பரிசளித்ததாகப் போற்றப்படுகிறாள்.

“கிழவன் சேட்புலம் படரின் இழை அணிந்து
புன்தலை மடப்பிடி பரிசிலாகப்
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீரக்கோன்” (புறம்.- 151)

என்று புகழும் புலவரின் நோக்கம் அந்த வேளாளனின் புகழ் பாடுவதே என்றாலும்; அவனது மனைவியின் தகுதிப்பாடு கூறி  இங்கே பெருமைப் படுத்தப்படுகிறான்.

முதுகுடிப் பெண்டிர் தாம் வாழ்ந்த சமுதாயத்திற்குத் தேவையான வீரத்தைத் தம் மக்களுக்கு ஊட்டித் தியாகம் செய்யத் தயாராக இருந்தமை;

“இன்ன விறலும் உள கொல் நமக்கு என
மூதிற் பெண்டிர் கசிந்து அழ நாணிக்
கூற்று” (புறம்.- 19)

கண்ணோடியது என்னும் புனைந்துரை மூலம் தெரிகிறது. கணவன், சகோதரன், மகன் என உறவுகள் அனைவரையும் போரில் பறிகொடுத்தும்; தம் வாழ்வாதாரம் காக்க வீரமரணம் அடைந்ததையே பெருமையெனக் கருதிக் கண்ணீர் விட்ட காட்சிக்கு மூதில் பெண்டிர் ஆதாரமாக அமைந்துள்ளனர்.

தலைவனின் தாயாகிய சீறூர் நல்கூர் பெண்டு

கற்புக்கடம் பூண்டு; தன் பிறந்த வீட்டிலிருந்து காதலனுடன் செல்லும் தலைவிக்குத் தம் மனையில் சிலம்புகழி நோன்பு நிகழ்த்தும் பண்பாடு பெண்டிரிடம் இருந்தது. வறுமை வாய்ப்பட்டு இருப்பினும் தலைவனையும் தலைவியையும் இல்லறத்தில் இணைக்கும் செயலைப் பெண்டிர் தயக்கமின்றிச் செய்தனர். ஓர் பசுவை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு; ஒரே ஒரு தூண் மட்டுமே நிற்கும் முற்றத்தை உடைய; நல்கூர் பெண்டிரின் ‘புல்வேய் குரம்பையில்’; தலைவனுடன் போன தன் மகளுக்குச் சிலம்புகழி நோன்பு நடக்குமே என நொந்து புலம்புகிறாள் செல்வக்குடியைச் சேர்ந்த தாய் (அகம்.- 369).

முடிவுரை

ஊர்ப்பெண்டிர் பழி சுமத்துதல், கமுக்கமாக ஜாடை பேசுதல், ஆரவாரமாக அலர் தூற்றுதல் ஆகிய செயல்கள் உடையவராய்ப்  பேசப்படுகின்றனர்; ஒருசேர வசைபாடப் பெறுகின்றனர்.

கணவனை இழந்த  பாசுபத சமயம் சார்ந்த பெண்டிர் பேஎய்மகளிர் என்றே குறிப்பிடப்பட்டனர். ஆளில் பெண்டிர் நூற்புத் தொழில் செய்து வாழ்ந்தனர். நல்கூர் பெண்டிர் பருத்திக்கொட்டைகளை அன்றாட உணவிற்காகச் சேகரித்தனர். சீறூர்ப் பெண்டிரின் வாழ்க்கைநிலை பின்தங்கி இருந்தது. கள்விற்கும் தொழிலிலும் பெண்கள் ஈடுபட்டனர். விலைநலப் பெண்டிர் பொருளுடைய  செல்வந்தரிடம் சேர்ந்து வளம் பெற்றனர்.

கணவன் வினைநிமித்தம் அகன்று சென்றிருந்தாலும் மனைவி இரவலர்க்குப் பரிசில் வழங்கும் தகுதி பெற்று இருந்தாள். முதுகுடிப் பெண்டிர் தாம் வாழ்ந்த சமுதாயத்திற்குத் தேவையான வீரத்தைத் தம் மக்களுக்கு ஊட்டித் தியாகம் செய்யத் தயாராக இருந்தனர்.

வறுமை வாய்ப்பட்டு இருப்பினும் பண்பாடு காத்துத் தலைவனையும் தலைவியையும் இல்லறத்தில் இணைக்கும் செயலைப் பெண்டிர் தயக்கமின்றிச் செய்தனர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *