புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006. 
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

இலக்கணமின்றி இலக்கியம் இல்லை…….?

முன்னுரை

‘கொட்டி கிழங்கோ கிழங்கெ’ன்று கூறித் தெருவில் நடந்த வணிகம் அருகிய காலம் இது. எல்லாம் ‘அங்காடி மயம்’ அல்லது ஆன்லைன் மயம். பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தெருவில் ஒருவர் காலை வேளையில் பற்பொடி விற்பனை செய்தார். அவர் இப்படிச் சொல்லித்தான் விற்பார். எப்படி? ‘பாடாவதி பற்பொடி வேணுமா?’ என்று. ‘பாடாவதி பற்பொடியை யாராவது வாங்குவார்களா?’ என அவரை வினவியபொழுது அவர் சொன்னார் ‘பற்பொடி பாடாவதி அல்ல. பல்லுதான் பாடாவதி. அதுதான் பூச்சிப்பிடித்துக் கெட்டிருக்கும். அதற்குத்தான் இந்தப் பொடி’ என்றார். அவர் சொன்ன விளக்கம் என்னவென்றால் ‘பாடாவதி பல்லுக்குப் பொடி’யாம். ‘பாடாவதி’ என்ற சொல்லைப் பற்பொடிக்கும் அடையாக்கலாம். பல்லுக்கும் அடையாக்கலாம். ஒரு தொடரை வேற்றுமையாகவும் பொருள் விரிக்கலாம். அல்வழியிலும் பொருள் விரிக்கலாம். இரண்டும் இரண்டு தனித்தனிப் பொருளைத் தரும். இதுபோலவே திருக்குறளில் சில சொற்கள், தொடர்கள். இவற்றிற்கு இலக்கண அமைதியைக் கூறுவதன் மூலம் அவற்றின் செம்பொருள் துலங்கவும், குழப்பத்தைத் தவிர்க்கவும் பரிமேலழகர் உரை உதவியிருக்கிறது. அது பற்றிய ஒரு சிறு விளக்கத்தைத் தருவதையே நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

ஏன் வேண்டும் இலக்கண விளக்கம்?

இனிமை வேண்டும் என்றால் இலக்கணம் வேண்டும்! ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் காதற்பெண்கள் கடைக்கண் பணியிலே’ என்பார் பாரதியார். ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்’ என்பார் பாரதிதாசன். பாரதிதாசன் வழக்கறிவார். பாரதியார் இலக்கணமறிவார். முன்னவர் வழக்கு நோக்கிக் ‘கடைக்கண்’ என்றார். பின்னவர் இலக்கணமறிந்துக் கண்ணின் கடை என்றார். எது சரி? இரண்டுமே சரி. பின்னதன் பொருளைத்தான் முன்னது தருகிறது. முன்னதன் கருத்தையே பின்னது காட்டுகிறது. இதுதான் இலக்கணம். எப்படி? கடைக்கண் என்று ஒன்றில்லை. ஏனென்றால் முதற்கண், இடைக்கண் என்று வேறு இல்லையாதலால்!. சொல் வழங்குகிறதே எனின் அதன் நோக்கம் கண்ணின் கடைப்பகுதியைக் குறிப்பதே!. எனவே ‘கடைக்கண்’ என்பதன் பொருள் கண்கடை என்பதே!. இது பாரதிக்கும் தெரியும் பாரதிதாசனுக்கும் தெரியும்.  அவரிருவருமே இலக்கணம் அறிந்தவர்கள். இந்த மக்களின் வழக்கும் உணர்ந்தவர்கள். எனவே கடைக்கண் என்பது ‘கண்ணினது கடைப்பகுதி’ என்னும் பொருளைத் தருகிறது. ‘அது’ என்பது ஆறாம் வேற்றுமை உருபு. ‘கண்ணினது கடை’ என்றிருந்தால் நெறி. கடைக்கண் என்றிருந்தால் அதனை முன்பின்னாகக் கொண்டு உருபை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது இலக்கணம். அதனால்தான்,

“நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்”  (476)

என்னும் குறட்பாவில் பயின்றுள்ள ‘நுனிக்கொம்பர்’ என்னும் சொல்லுக்கு இலக்கண அமைதி கூற வந்த பரிமேலழகர்,

‘நுனிக்கொம்பர் என்பது கடைக்கண் என்பதுபோல முன் பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை’

என்று எழுதுகிறார். கொம்பு என்றால் கிளை. கொம்பினது நுனி என்றால் கிளையினது நுனி என்பது பொருள். இப்படித்தான் பாட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று திருவள்ளுவரிடம் யாரும் சொல்லமுடியாது. அவர் எழுதியதற்குத்தான் நாம் விளக்கம் தரவேண்டும். எனவே ‘கொம்பினது நுனி’ என்பதைத்தான் ‘நுனிக்கொம்பு’ என்று எழுதியிருக்கிறார். கொம்பில் நுனிக்கொம்பு, இடைக்கொம்பு, கடைக்கொம்பு என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. ‘நுனிக்கரும்பு’, ‘நுனியிலை’ என்பதற்கும் இது பொருந்தும் ‘வாழையிலையின் அடி’ என்பார் பாரதிதாசன். பரிமேலழகரின் இந்த இலக்கண விளக்கத்தால் ‘கண்ணினது கடைப்பகுதி’, ‘கொம்பினது நுனி’ என்னும் பொருட்தெளிவும் கிட்டுகிறது. கிட்டவே பிற கண்களும் உளவோ? ‘பிற கொம்புகளும் உளவோ என்னும் குழப்பமும் வராமல் தடுக்கப்டுகின்றன. இதுபோன்று திருக்குறள் பரிமேலழகர் உரையில் வரும் சில இடங்களைத் தொடர்ந்து காணலாம்.

ஆறாம் வேற்றுமை பொருள் விளக்கம்

பெயர்ச்சொற்களின் வேற்றுமை பற்றி ஆராய்கிற தொல்காப்பியச் சொல்லதிகாரம் ஆறாம் வேற்றுமைப் பொருள் பற்றி,

“ஆறாகுவதே
அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் ‘இதனது இது’ எனும்
அன்ன கிளவிக் கிழமைத் ததுவே!” தொல் சொல் (79)

என்னும் நூற்பாவில் ஆராய்கிறார். ‘இதனது இது’ என்றால் ‘இதனுடைய உரிமை இது’ என்பது பொருள். ‘கிழமை’ என்றால் உரிமை. திங்களுக்கு உரியது திங்கட்கிழமை என்பதுபோல. இந்த உரிமை இரண்டு வகைப்படும். ஒன்று பொருளிலிருந்து பிரிக்க இயலாத உரிமை. பொருளிலிருந்து பிரிக்கக் கூடிய உரிமை. பிரிக்க இயலாத உரிமைக்குத் தற்கிழமை என்று பெயர். பிரிக்கக் கூடிய உரிமைக்குப் பிறிதின் கிழமை என்று பெயர். ‘பெண்ணினது அழகு’ ‘கண்ணினது பார்வை’ என்னும் தொடர்களில் பெண்ணையும் அழகையும் பிரிக்க இயலாது. கண்ணையும் பார்வையையும் பிரிக்க இயலாது. எனவே இவை தற்கிழமை. ‘பாரியது மலை’, ‘கபிலரது பாட்டு’ என்னும் தொடர்களில் பாரியையும் பறம்பையும் பிரிக்கலாம். கபிலரையும் பாட்டையும் பிரிக்கலாம். எனவே இவை பிறிதின் கிழமை.

இனி இந்தப் பிரிக்க இயலாத தற்கிழமை என்பது ஒன்றுபல குழீஇய தற்கிழமை, வேறுபல குழீஇய தற்கிழமை, ஒன்றியற் கிழமை, உறுப்பின் கிழமை மெய்திரிந்ததாய ஐந்து வகைப்படும்.

பிரிக்கக் கூடிய உரிமைகளாகிய பிறிதின் கிழமை, உடைமைக் கிழமை, முறைமைக்கிழமை, கருவிக்கிழமை, துணைக்கிழமை, கலக்கிழமை, முதற்கிழமை, செய்யுட்கிழமை எனப் பலவகைப்படும். இவற்றை விரிப்பின் பெருகுமெனினும் செய்யுட்கிழமையைப் பற்றிய ஒரு விளக்கம் தரப்படுகிறது.

செய்யுட் கிழமை என்றால் என்ன?

‘கபிலரது பாட்டு’ என்னுந் தொடரில் கபிலரும் அவர் எழுதிய பாட்டும் தனித்தனியாக இருந்து உடைமைப் பொருளை உணர்த்துகிறது. அதனால் இது பிறிதின் கிழமை. இனி, அந்தப் பாட்டு அவர் எழுதியதாலேயே அவர்க்கு அது உடைமையாயிற்று. பாட்டாகிய செய்யுள் அவ்வுடைமைக்குக் காரணமாதலின்  அது செய்யுட்கிழமை ஆயிற்று. எனவே செய்யுட்கிழமை என்பது ஆறாம் வேற்றுமைப் பொருளாகிய உடைமைப் பொருளை உணர்த்தும் இரண்டு முறைகளில் பிறிதின் கிழமையின் வகைகளுள் ஒன்று என்பது பெறப்படும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் பின்வரும் பாட்டின் இலக்கண நுட்பத்தைப் புரிந்து கொள்ள இயலும்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்” (6)

என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு,

“மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார், பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.”

என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். இந்தப் பொழிப்புரையைத் தொடர்ந்து வரும் விளக்கவுரையில்,

“ஒழுக்கநெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆறனுருபு செய்யுட்கிழமைக்கண் வந்தது ‘கபிலரது பாட்டு’ என்பது போல”

என்று ஒரு குறிப்பு வருகிறது. ஐந்தவித்தவன் இறைவன். ஐந்தவித்தான் ஆற்றல் என்றால் ஐந்தவித்தானது ஆற்றல் என்று பொருளன்று. ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல் என்பது பொருள். சொன்னவன் ஐந்தவித்தான். சொல்லப்பட்டவை ஐவகை ஆற்றல். இவ்வாற்றல் அவனோடு பிணிக்கப்பட்டது அன்று. பிரிந்து நிற்பது. எனவே ‘ஐந்தவித்தானது’ ஆற்றல்’ என்னும் ஆறாம் வேற்றுமை விரிக்கப்படினும் அது ‘அவனது ஆற்றல்’ என்னும் தற்கிழமையாகாது ‘அவனால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமையாய் நின்றதாம். எதுபோல? ‘கபிலரது பாட்டு’ என்பதுபோல!. ‘கபிலரது பாட்டு’ என்றால் ‘கபிலருடைய பாட்டு’ என்று பொருள் தந்தாலும் அவ்வுரிமைத்தொடர் கபிலரால் எழுதப்பட்ட பாட்டு’ என்று பிறிதின் கிழமையாகத்தான் அமையும். அதுபோல  ‘‘ஐந்தவித்தான் ஆற்றல்’ என்னும் தொடர் ஆறாம் வேற்றுமைக்குரியதாக விரிக்கப்படினும் அது ‘ஐந்தவித்தானது ஆற்றல் எனத்’ தற்கிழமையாக நில்லாது ‘ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமைப் பொருளினைத் தருவதைக் காணலாம்.

வேற்றுமை மயக்கம்

‘வேற்றுமை மயக்கம்’ இரண்டு வகைபப்டும். ஒன்று ‘பொருள் மயக்கம்’. மற்றொன்று ‘உருபு மயக்கம்’. வேற்றுமை உருபுகள் தமக்குரிய பொருள் வரையறை எல்லைகளைக் கடந்து வேறொரு வேற்றுமையின் பொருளை உணர்த்தி நிற்பதைப் ‘பொருள் மயக்கம்’ என்பர். பிறிதொரு வேற்றுமை உருபு நிற்க வேண்டிய இடத்தைத் தான் பிடித்துக் கொண்டு அதனை விரட்டி விடுவதை ‘உருபு மயக்கம்’ என்பர். இவ்வாறான மயக்கங்கள் இயல்பானதன்றிச் செயற்கையானதல்ல. புலவனின் உணர்ச்சி வேக வெளிப்பாட்டில் நிகழ்ந்துவிடும் ஒரு விபத்தாகவே கருதப்படலாம். திருவள்ளுவர்,

“உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு”. (261)

என்று எழுதியிருக்கிறார். இந்தப் பாட்டிற்குத்,

“தவத்தின் வடிவு உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிருக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும் தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று”

என்று பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார். ‘தவத்திற்கு இலக்கணம்’ (தவத்திற்கு உரு) என்று பாட்டு அமைந்திருக்கிறது. இப்படி அமைந்தால் ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபாகிப் பொருள் தெளிவிருக்காது. புலவனுக்குக் கொடுத்தான் என்றால் பெற்றவன் புலவன். தவத்திற்கு உரு என்றால் கொடைப்பொருளால் குழப்பம் உண்டாகும். உண்மையில் தவத்தினுடைய உரு என்றுதான் இருக்க வேண்டும். அதாவது பாட்டில் நான்காம் வேற்றுமை உருபு வந்திருந்தாலும் அது ஆறாம் வேறாம் வேற்றுமைக்குரிய உடைமைப் பொருளை உணர்த்தி நிற்கிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் நான்காம் வேற்றுமை உருபு தனக்குரிய கொடைப் பொருளை உணர்த்தாமல் தனக்கு உரிமையல்லாத ஆறாம் வேற்றுமை உடைமைப் பொருளை உணர்த்தி நிற்கிறது. இந்த இலக்கண நுட்பத்தை அறிந்த பரிமேலழகர்,

‘தவத்திற்கு உரு’ என்பது யானையது கோடு கூரிது என்பதனை ‘யானைக்குக் கோடு கூரிது’ என்றாற்போல ஆறாவது பொருட்கண் நான்காவது வந்த மயக்கம்.

என்று இலக்கண விளக்கம் தருகிறார். ‘யானைக்குக் கோடு கூர்மையானது’ என்பது ‘யானையினுடைய தந்தம் கூர்மையானது’ என்பதையே குறிக்கும்.  ஆனால் இலக்கியங்களில் ‘யானைக்குக் கோடு கூரிது’ என்று வருகிறது. அதனைப் போலவே ‘தவத்திற்கு உரு’ என இருந்தாலும் ‘‘தவத்தினுடைய உரு’ என்று கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். ஒவ்வொரு வேற்றுமைக்கும் தனித்தனிப் பொருள் வரையறை செய்யப்பட்டிருப்பதால் அதனுள் மாற்றம் வந்துவிடக்கூடாது என்னும் மொழிச் செப்பம் காக்கும் முயற்சி இது. வெள்ளாடு மட்டுமன்று வேற்றுமை உருபுகளும் வேலி தாண்டக்கூடாது என்பது இதனால் பெறப்படும்!

பொருத்தம் பொருளிலும் வேண்டும்

‘ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்’ என்பன மூன்றாம் வேற்றுமைக்குரிய உருபுகள் ஆகும். இந்த ஐந்து உருபுகளுள் ‘ஆல், ஆன்’ என்னும் இரண்டும் கருவிப்பொருளிலும் கருத்தாப் பொருளிலும் வரும். ‘மழையினால் குளம் நிறைந்தது’, ‘கோலால் எழுதினான்’, ‘இதனான் முடிக்கும்’, ‘கலைஞரால் கட்டப்பட்டது’, ‘சாமிநாத அய்யரால் பதிப்பிக்கப்பட்டவை’ என்பன போல. ‘ஆன்’ உருபு தற்போது வழக்கில் இல்லை’. ‘ஒடு, ‘ஓடு’, ‘உடன்’ என்னும் இரண்டும் உடன்நிகழ்ச்சிப் பொருளில் வரும். ‘அமைச்சரோடு உதவியாளர் சென்றார்’ ‘அமைச்சருடன் ஒப்பந்தக்காரர் சென்றார்’ என்பன போல. இவற்றால் ஐந்து உருபுகள் கொண்ட மூன்றாம் வேற்றுமை மூன்று பொருண்மைகளில் வரும் என்பது தெரியவரும். வந்தாலும் இவ்வைந்து உருபுகளும் மூன்றாம் வேற்றுமைக்குரியனவே என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

“அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழு மில”  (39)

என்ற குறட்பாவிற்கு,

‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது அதனோடு பொருந்தாது வருவனவெல்லாம் இன்பமாயினும் துன்பத்தினிடத்த., அதுவுமேயன்றிப் புகழுடைய அல்ல”

என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

“ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது. ‘தூங்கு கையால்’ ஓங்கு நடை என்புழிப்போல” (புறம் 22)

என்று விளக்கவுரை எழுதியிருக்கிறார். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்னும் தொடரில் பயின்று ‘ஆன்’ என்னும் வேற்றுமை உருபு அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தப் பாட்டில் சொல்லப்படுவது காம இன்பத்தினை. அது இல்லறத்தோடு இணைந்திருக்க வேண்டிய ஒன்று. ‘பிறன்மனை விழைதல்’ காம இன்பம் தருமெனினும் அது துன்பத்தைத் தரும் புகழைத் தராது. இருக்கின்ற புகழை அழிக்கும். இழிவைத்தரும். அந்த வேற்றுமை உருபிற்கு இலக்கண அடிப்படையில் கருவிப்பொருளைக் கொண்டால் ‘இல்லறத்தால் வருவது இன்பம்’ எனப் பொருள் மயக்கம் உண்டாகும். ‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே காம இன்பம்’ என்னும் பொருள் கிட்டாது. எனவே பரிமேலழகர் ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு உடன்நிகழ்ச்சிப் பொருள் தந்ததாகக் கருதி எழுதுகிறார். சரி, பரிமேலழகருக்காக வேற்றுமை இலக்கணம் மாறுபடுமா? என்றால் அவர் தான் கொண்ட பொருளை மற்றொருவரும் கொண்டிருக்கிறார் என்பதற்கான இலக்கியச் சான்றினைப் புறநானூற்றில் இருந்து எடுத்துக்காட்டுகிறார். அந்த எடுத்துக்காட்டில், யானையின் வரவு கூறப்பட்டுள்ளது. ஆடிவரும் அதன் துதிக்கையும் அசைநடையும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆனால் பாட்டு எப்படி அமைந்திருக்கிறது? ‘தூங்கு கையான் ஓங்கு நடைய’ என்றிருக்கிறது. ‘தூங்கு’ என்றால் ‘தொங்கு’ என்பது பொருள். ‘தொங்குகின்ற கையால் ஓங்கிய நடை’ என்று வராது. நடைக்குக் கை காரணமல்ல. கையொடு நடையாம். ‘கையான் நடை’ என்பதைக் ‘கையொடு நடை’ என மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். கொள்ளவே, ‘தூங்கு கையொடு ஓங்கு நடைய’ என்பது பெறப்படும். இங்கே ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு, உடன் நிகழ்ச்சிப் பொருளில் வந்தது. இவ்விரண்டு உருபுகளும் மூன்றனுக்குரியன எனினும் இலக்கியப் பொருள் நுட்பத்திற்காக மாறிய பொருள் தந்து அமைந்திருக்கிறது என்பதைப் பரிமேலழகர் உணர்த்தியிருக்கிறார்.

இங்கே இரு சொல் அங்கே ஒரு சொல்!

உலகவழக்கில் இயல்பாகப் பேசப்படும் சில தொடர்கள் நம் கவனத்தை ஈர்ப்பதுண்டு. ‘பார்த்துக் கேள்’, ‘கேட்டுப் பார்’, ‘போய்ப் பார்’, ‘பார்த்துப் போ’ என்னும் உலகவழக்கினையும் “புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை” என்பது திருவாசகத்தையும் நோக்குதற்குரியன. மேற்கண்ட சொற்களில் ‘பார்த்தல் என்பது ஒரு வினை. ‘கேட்டல்’ என்பது தனிவினை. ஆனால் ஒரு பொருளைத்தான் குறிக்கிறது. திருவாசகத்தில் வரும் ‘கேட்டல்’ என்பது தனிவினை. ‘அறியோம்’ என்பது தனிவினை. பொருளில் ‘உன்னைக் கண்டவர்களை நாங்கள் கேட்டதில்லை’ என்பது மட்டுமே உலகவழக்கிலும் இலக்கிய வழக்கிலும் அமைந்த இது மாதிரியான சொற்கள் ஆழமான கவனத்தைப் பெறுவதில்லை. ஆனால் உரையாசிரியப் பெருமக்கள் இலக்கியத்தின் பொருளாழம் கருதித் தம் நுண்ணோக்கினால் சில இலக்கண அமைதிகளைக் கூறுகின்றனர்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்” (314)

என்னும் குறட்பாவிற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

“தமக்கு இன்னா செய்தாரைத் துறந்தோர் ஒறுத்தலாவது அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்”

என்று கூறுகிறார். இக்குறட்பாவைச் சொல்லுகின்ற தமிழ்ப்பேராசிரியர் உட்பட அனைவரும் ‘பிறர் செய்த தீமையையும் நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுதல்’ என்று சரியாகச் சொன்னாலும் ‘மறந்துவிடுதல்’ என்பதற்கான வினைச்சொல் குறட்பாவில் இருக்கிறதா என்பதை எண்ணுவதே கிடையாது. அதாவது அவர்கள் கொள்கின்ற பொருளும் சொல்கின்ற பொருளும் சரியே. அதற்கான சொற்பயன்பாடு குறட்பாவில் இருக்க வேண்டுமல்லவா? இவர்கள் படாத கவலையைப் பரிமேலழகர் பட்டிருக்கிறார். தமது விளக்கவுரையில்,

‘செய்து அவ்விரண்டனையும் மறத்தல்’

என்ற ஒரு தொடரில் தமது உரைநுட்பத்தைப் பதிவு செய்திருக்கிறார். ‘விடல்’ என்பதைப் பகுதிப் பொருள் விகுதியாகக் கொள்ளாமல் அதாவது துணைவினையாகக் (Auxillary verb) கொள்ளாமல் தலைவினையாகவே (principal verb) கொண்டு உரையெழுதுகிறார். ‘செய்து’ என்பது தனி வினையெச்சம். ‘விடல்’ என்பது தொழிற்பெயர். ‘செய்து விடல்’ என்னும் தொடர் ‘செய்து’ என்றும் ‘விடல்’ என்றும் இரண்டாகக் கொள்ளப்பட்டது. இக்குறட்பாவில் ‘ஒறுத்தல்’, ‘விடல்’ என்னுமிரண்டும் தொழிற்பெயர்கள். முன்னது எழுவாய். பின்னது பயனிலை. ‘ஒறுத்தலாவது மறத்தல்’ என இயைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைந்திருக்கிறது. எனவே ‘விடல்’ என்பதன் பொருள் மறத்தல் என்பதாகும். பரிமேலழகர் இவ்வாறு ‘செய்துவிடல்’ என்பதனை இரு சொல்லாகக் கொண்டு உரையெழுதியிருக்காவிட்டால் ‘பிறர் செய்த தீமையையும் அதற்கு மறுதலையாகச் செய்யப்பட்ட நன்மையினையும்  மறத்தல்’ என்னும் பொருண்மை கிட்டாதாம் என்க.

ஒரு சொல்லை இரண்டாகப் பிரித்துக் காட்டி உரையெழுதிய பரிமேலழகர் வேறு சில இடங்களில் அது போன்ற சொற்களை ஒரு சொல்லாகவே காட்டியிருக்கிறார். அறிவுடையார், ‘உரிமை காரணமாகத் தம் நண்பர் செய்யும் பணியினை அச்செயலது தன்மை நோக்கி விரும்பி ஏற்றுக் கொள்வார்’ என்னும் பொருள்பட அமைந்த திருக்குறள்,

“விழைதகைமை வேண்டியிருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின்” (804)

என்பதாகும். இதற்குத்,

“தம் கருத்தை நட்டார் உரிமையால் கேளாது செய்தாராயின் அச்செயலது விழையப்படும் தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார்”

என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர், தமது விளக்கவுரையில் நடத்தியிருக்கும் சொல்லாராய்ச்சியில்,

“வேண்டியிருப்பர் என்பது எழுந்திருப்பர் என்பதுபோல ஒரு சொல் நீர்மைத்து”

என்று எழுதிக் காட்டுகிறார். ‘வேண்டுதல்’ என்றால் ‘விரும்புதல்’. ‘இருப்பர்’ என்றால் ‘வினையின்றி வாளா இருத்தல்’ ‘வேண்டியிருப்பர்’ என்பதற்கு இவ்வாறு பிரித்து உரைகண்டால் அவர் விரும்புவாரா? விரும்பி இருப்பாரா? என்னும் மயக்கம் ஏற்படும் இதனைக் களையவே ‘வேண்டியிருப்பர்’ என்னும் அச்சொல்லை ‘ஒருசொல் நீர்மைத்து’ என எழுதுகிறார். எதுபோல? ‘எழுந்திருப்பர்’ என்பதுபோல. ‘எழுந்திருப்பர்’ என்பதில் ‘எழுதல்’ ஒரு வினை. ‘இருத்தல்’ அதன் துணைவினை. ‘யானை எழுந்திருக்கும்’ என்றால் ‘யானை எழும்’ என்றுதான் பொருளே தவிர, ‘யானை முதலில் எழும். அப்புறம் இருக்கும்’ என்று பொருளன்று. அதுபோல ‘எழுந்திருப்பர்’ என்றால் ‘எழுவர்’ என்ற ஒருபொருளைத்தான் தரும். அதுபோலவே ‘வேண்டியிருப்பர்’ என்றால் ‘விரும்புவர்’ என்னும் ஒரு பொருளைத்தான் தரும் என்பது பரிமேலழகர் விளக்கம். ‘எழுந்திருப்பர்’ என்பது ‘எழுவர்’ எனப் பொருள்படுமிடத்து ஒருசொல் நீர்மைத்து. இங்கே ‘வேண்டியிருப்பர்’ என்பது ‘விரும்புவர்’ என்னும் பொருள்படுவதால் இதுவும் அதுபோல ஒருசொல் நீர்மைத்து. இதே விளக்கத்தைச்,

“சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.” (498)

என்னும் குறட்பாவுக்குப்,

“பெரும்படையுடைய அரசன் ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சேருமாயின் அவனால் தன் பெருமை அழியும்”

எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையில்,

“‘அழிந்துவிடும்’ என்பது ‘எழுந்திருக்கும்’ என்பதுபோல ஒருசொல்.”

எனக் கூறியிருப்பதை நோக்குக. ‘எழுந்திருக்கும்’ என்பது ‘எழும்’ என்று பொருள்படுவதுபோல ‘அழிந்து விடும்’ என்பது ‘அழியும்’ எனப் பொருள்பட்டு ஒரு சொல்லாகும்.

நிறைவுரை

மொழியிலக்கணம் அதற்கானதன்று. நமக்கானது. ‘கத்தி கொண்டு ஓடினான்’ என்பதற்கும் ‘கத்திக்கொண்டு ஓடினான்’ என்பதற்குமான வேறுபாடு ஓர் ஒற்றெழுத்தேயெனினும் பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் வேறுபடுத்திக் காட்டுவது காண்க. ‘இலக்கியம் கண்டதற்கே இலக்கணம்’ என்பது உண்மையே. ஆனால் அவ்விலக்கியத்தின் உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள இலக்கணப் புலமை இன்றிமையாத ஒன்று என்பது மேற்கண்ட பதிவுகளால் புலனாகலாம். பரிமேலழகர் இவ்வாறு விளக்கியன அவர் திறன் காட்டுதற்கன்று குறட்பாவின் பொருள் திறன் புலப்படுவதற்கே! உண்மையில் இலக்கணமின்றி இலக்கியம் இல்லை என்பது உண்மையே!

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.